முகவுரை
அன்புள்ள வாசகருக்கு:
“என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கிறிஸ்து இன்றும் நம்மை அன்போடு அழைக்கிறார். (மாற்கு 10:21) அவருடைய அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி ஏற்றுக்கொண்டால், அது உங்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்?
மனிதகுலத்தைப் பாவத்திலிருந்து விடுதலை செய்ய யெகோவா தமது ஒரே மகனை இம்மண்ணில் தோன்றச் செய்தார். (யோவான் 3:16) அந்த மகன் நமக்காக உயிரையே கொடுத்ததோடு, வாழ்வதற்கான வழியையும் வகுத்துக் கொடுத்தார். வாழ்வில் அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் அவரது உத்தமத்தைப் பறைசாற்றியது; அவருடைய தகப்பனின் இதயத்தை மகிழ்வித்தது. தம் தகப்பனைப் பின்பற்றுவதற்கும் இயேசு நமக்கு வழி காட்டினார். தகப்பனுடைய வழிகளையும் அவருடைய விருப்பத்தையும் மகன் தமது சொல்லிலும் செயலிலும் பூரணமாய்ப் பிரதிபலித்தார்.—யோவான் 14:9.
‘தன்னுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக [இயேசு நமக்கு] ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:21) நாம் யெகோவாவிடம் நெருங்கி வர விரும்பினால்... இப்போதே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ விரும்பினால்... முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் நிலைத்திருக்க விரும்பினால்... கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும்.
இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு, முதலில் இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக, இயேசுவைப் பற்றி பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்களை நாம் கவனமாய் ஆராய வேண்டும். இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் குறித்து தியானிப்பதும், அவரை நம்முடைய சொல்லிலும் செயலிலும் எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் குறித்து சிந்திப்பதும் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க நமக்குத் துணை புரியும்.
இயேசு மீதும் யெகோவா மீதும் அன்பை வளர்த்துக்கொள்வதற்கு இப்புத்தகம் உங்களுக்கு உதவி செய்வதாக. இயேசுவின் அடிச்சுவடுகளை நீங்கள் நெருக்கமாகப் பின்பற்றி நடக்க அந்த அன்பு உங்களை உந்துவிப்பதாக. யெகோவாவுக்கு இன்றும் என்றும் புகழ் சேர்ப்பீர்களாக!
பிரசுரிப்போர்