Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிருள்ள மொழிகளில் “பேசும்” ஒரு புத்தகம்

உயிருள்ள மொழிகளில் “பேசும்” ஒரு புத்தகம்

உயிருள்ள மொழிகளில் “பேசும்” ஒரு புத்தகம்

ஒரு புத்தகம் எழுதப்பட்ட மொழி அழிந்துபோனால், அதோடு அப்புத்தகமும் மெல்ல மெல்ல அழிந்துவிடும். பைபிள் எழுதப்பட்ட மூல மொழியை இன்று ஒருசிலரால் மாத்திரம் படிக்க முடியும். இருந்தாலும் இன்னமும் பைபிள் உயிரோடு இருக்கிறது. அது இன்றுவரை நிலைத்திருக்கிறது. மனிதர் பேசிக்கொண்டிருக்கும் உயிருள்ள மொழிகளில் எல்லாம் அது “பேசக் கற்றுக்கொண்டதுதான்” இதற்கான காரணம். அதற்கு மற்ற மொழிகளில் பேச “சொல்லித்தந்த” மொழிபெயர்ப்பாளர்கள் எல்லாரும், மேற்கொள்ளவே இயலாது என்று தோன்றிய இடையூறுகளையெல்லாம் சில நேரங்களில் எதிர்ப்பட்டார்கள்.

பைபிளை மொழிபெயர்ப்பது என்றால், அதிலுள்ள 1,100-க்கும் மேற்பட்ட அதிகாரங்களையும் 31,000-க்கும் மேற்பட்ட வசனங்களையும் மொழிபெயர்ப்பது என்றால், உண்மையில் ஒரு பிரமாண்டமான வேலையே. ஆனால், பல நூற்றாண்டுகளின் ஊடே, தங்களையே அர்ப்பணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து இந்த வேலையை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் பலர் தாங்கள் எடுத்துக்கொண்ட வேலைக்காக இடையூறுகளால் கஷ்டப்படவும், உயிரை இழக்கவும்கூட மனமுள்ளவர்களாக இருந்தார்கள். மனிதர் பேசும் மொழிகளிலெல்லாம் எப்படி பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது என்ற வரலாறு, விடாமுயற்சிக்கும் அறிவுக்கூர்மைக்கும் உள்ள ஒரு வியப்பூட்டும் பதிவு ஆகும். கவனத்தை ஈர்க்கும் இந்த உண்மை விவரத்தின் ஒரு சிறு பகுதியைச் சற்றே சிந்திக்கலாம்.

மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்ப்பட்ட சவால்கள்

எழுத்து வடிவில் இல்லாத மொழியில் ஒரு புத்தகத்தை எப்படி நீங்கள் மொழிபெயர்ப்பீர்கள்? இதே சவாலை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் எதிர்ப்பட்டனர். உதாரணத்திற்கு, பொ.ச. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த உல்ஃபலாஸை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் அன்று நவீன மொழியாக இருந்த, ஆனால் எழுத்துவடிவில் இல்லாத காத்திக் மொழியில் பைபிளை மொழிபெயர்க்க இறங்கிவிட்டார். உல்ஃபலாஸ், காத்திக் மொழியில் 27 எழுத்துக்களை உருவாக்கி, எதிர்ப்பட்ட சவாலை வென்றுவிட்டார். அவர் இந்த எழுத்துக்களை, முக்கியமாக கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். பொ.ச. 381-க்கு முன்னரே, அவர் கிட்டத்தட்ட முழு பைபிளையும் காத்திக் மொழியில் மொழிபெயர்த்து முடித்துவிட்டார்.

ஒன்பதாம் நூற்றாண்டில், கிரேக்க மொழி பேசிய இரு சகோதரர்கள் கிரில் (உண்மையான பெயர் கான்ஸ்டன்டைன்) மற்றும் மெத்தடீஸ் என்பவர்கள். இருவருமே சிறந்த அறிஞர்கள், பன்மொழி வல்லுநர்கள். இவர்கள் சிலாவக் மொழி பேசிய மக்களுக்காக பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் சிலாவக் மொழிக்கு—இன்றைய சிலாவக் மொழிகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்த மொழிக்கு—எழுத்து வடிவம் இருக்கவில்லை. ஆகவே, பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இரு சகோதரர்களும் எழுத்துக்களை உருவாக்கினார்கள். இவ்வாறாக, சிலாவக் மொழி பேசும் உலகில், அநேக மக்களிடம் இப்போது பைபிளால் “பேச” முடிந்தது.

16-ம் நூற்றாண்டில், பைபிளை மூல மொழிகளிலிருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்க்க வில்லியம் டின்டேல் துணிந்து இறங்கிவிட்டார். ஆனால் சர்ச்சிலிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் வந்த பயங்கரமான எதிர்ப்பை அவர் எதிர்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற டின்டேலுக்கு ‘ஏர் உழுகிற சிறுவனும்’ புரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு மொழிபெயர்ப்பை உண்டாக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.1இதை நிறைவேற்ற அவர் ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். அங்கே, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்த “புதிய ஏற்பாடு” 1526-ல் அச்சடிக்கப்பட்டது. பிரதிகள் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டபோது, அதிகாரிகளுக்கோ பயங்கர கோபம். கோபத்தின் உச்சியில் இருந்த அவர்கள் பிரதிகளையெல்லாம் பகிரங்கமாக கொளுத்தினார்கள். பிறகு, யாரோ டின்டேலை காட்டிக்கொடுத்து விட்டார்கள். கழுத்தை நெரித்து அவரைக் கொல்வதற்குமுன், அவரது உடலை எரிப்பதற்கு சற்று முன்பு, அவர் மிகுந்த சத்தத்தோடு இவ்வார்த்தைகளை உதிர்த்தார்: “கர்த்தாவே, இந்த இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்!”2

பைபிள் மொழிபெயர்ப்பு தொடர்ந்தது. மொழிபெயர்ப்பாளர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. 1800-க்குள், பைபிளின் பகுதிகளாவது வெளிவந்த வண்ணம் இருந்தன. அன்றே 68 மொழிகளில் பைபிள் “பேசக் கற்றுக்கொண்டது.” அதற்குப்பின், பைபிள் சங்கங்கள் அமைக்கப்பட்டதால், குறிப்பாக 1804-ல் பிரிட்டிஷ் மற்றும் ஃபாரின் பைபிள் சொஸைட்டி அமைக்கப்பட்டதால், இன்னும் அநேக புதிய மொழிகளை பைபிள் விரைவாக “கற்றுக்கொண்டது.” நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள், வெளிநாடுகளுக்குச் சென்று மிஷனரி ஊழியம் செய்வதற்காக மனமுவந்து திரண்டு வந்தார்கள். பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்பதே பலருக்கு முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்த்தல்

ஆப்பிரிக்காவில், 1800-ல், சுமார் ஒரு டஜன் மொழிகள் மாத்திரம் எழுத்து வடிவில் இருந்தன. ஆதலால், வெறும் பேச்சு வடிவில் இருந்த நூற்றுக்கணக்கான மற்ற மொழிகள் எல்லாம் யாராவது வந்து தங்களுக்கும் எழுத்து முறையை உருவாக்க மாட்டார்களா என்று காத்துக்கொண்டிருந்தன. அப்போது, மிஷனரிகள் வந்தார்கள். தொடக்கப் பாடப்புத்தகத்தின் துணையோ அகராதிகளின் உதவியோ இன்றி அவர்கள் மொழிகளைக் கற்றார்கள். பிறகு, அவர்கள் எழுத்து வடிவங்களை உருவாக்க கடினமாக உழைத்தார்கள். அதற்குப்பிறகு எழுத்துக்களை படிக்க மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ஒருகாலத்தில், மக்கள் தங்களுடைய சொந்த மொழியிலேயே பைபிளை படிக்க வழி செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படியெல்லாம் பாடுபட்டார்கள்.3

அத்தகைய ஒரு மிஷனரிதான் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் மாஃபெட் என்பவர். 1821-ல், மாஃபெட் தன்னுடைய 25-ம் வயதில் மிஷனரி ஊழியத்திற்கு பயணமானார். அவர் தென் ஆப்பிரிக்காவில், ட்ஸ்வானா மொழிபேசும் மக்களிடம் வந்து சேர்ந்தார். எழுதப்படாத அவர்களது மொழியைக் கற்றுக்கொள்வதற்காக அவர் அந்த மக்களோடு மக்களாய் கலந்து பழகினார். சில சமயங்களில், அவர்கள் மத்தியில் குடியிருப்பதற்காக ஊருக்கு வெகுதொலைவில் இருக்கும் இடத்திற்கும் பயணப்பட்டு போவார். பிற்காலத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “மிகவும் தயவான மக்கள் அவர்கள். நான் பேசும்போது செய்த தப்பும்தவறும் அவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. [நான்] எப்படி பேசுகிறேனோ அதேபோல் அவர்களால் ரொம்ப நன்றாக பேசிக்காட்ட முடியும். ஆனாலும், மற்றவர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்பதற்காக [நான் பேசியதிலிருந்து] ஒரு வார்த்தையையாவது அல்லது ஒரு வாக்கியத்தையாவது ஒருதடவைகூட ஒருவரும் திருத்தியது இல்லை.”4மாஃபெட் விடாமுயற்சியோடு உழைத்தார். கடைசியில் அம்மொழியை நன்றாக கற்றுக்கொண்டார். அதற்கு எழுத்து வடிவத்தையும் உருவாக்கினார்.

1829-ல், எட்டு வருடங்களாக ட்ஸ்வானா மக்கள் மத்தியில் உழைத்தபின் லூக்காவின் சுவிசேஷத்தை மாஃபெட் மொழிபெயர்த்து முடித்தார். அதை அச்சடிப்பதற்காக அவர் சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்தை மாட்டு வண்டியில் கடந்து, கடற்கரையை வந்து சேர்ந்தார். பிறகு, கப்பல் ஏறி கேப் டெளனுக்குப் போனார். அங்கே, அரசு அச்சகத்தை பயன்படுத்திக்கொள்ள கவர்னர் அவருக்கு அனுமதி தந்தார். ஆனால் மாஃபெட் அவராகவே அச்சுக்கோர்க்க வேண்டும், அவரே அச்சடிக்க வேண்டும். கடைசியாக அவர் 1830-ல் அந்தச் சுவிசேஷத்தை வெளியிட்டார். முதல் முறையாக, பைபிளின் ஒரு பகுதியை, தங்களுடைய சொந்த மொழியில் ட்ஸ்வானா மக்களால் வாசிக்க முடிந்தது. 1857-ல், முழு பைபிளையும் ட்ஸ்வானா மொழியில் மொழிபெயர்த்து முடித்துவிட்டார் மாஃபெட்.

லூக்காவின் சுவிசேஷம் முதன்முதலில் ட்ஸ்வானா மக்களுக்கு கிடைத்தபோது அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள் என்பதை மாஃபெட் பிறகு விவரித்தார். அவர் குறிப்பிட்டார்: “செயின்ட் லூக்காவின் பிரதிகளைப் பெறுவதற்காக, பல நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து ஆட்கள் வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. . . . செயின்ட் லூக்காவின் பகுதிகளை அவர்கள் பெற்றுக்கொண்டபோது, அதற்காக அவர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். அவற்றை தங்கள் மார்போடு சேர்த்தணைத்துக் கொள்வார்கள், நன்றி மிகுதியால் அவர்கள் கண்களிலிருந்து வரும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். அப்போது நான் ‘அழுது அழுது உங்களுடைய புத்தகத்தை பாழாக்கிவிடப்போகிறீர்கள்’ என்று இரண்டொரு பேரிடம் மட்டுமல்ல, பல பேரிடம் சொல்லியிருக்கிறேன்.5

தன்னையே அர்ப்பணம் செய்த மாஃபெட் போன்ற பல மொழிபெயர்ப்பாளர்கள், பல ஆப்பிரிக்க மக்களுக்கு—அம்மக்களில் ஒரு சிலர் எழுத்து வடிவ மொழி அவசியமில்லை என்று முதலில் நினைத்தார்கள்—முதல் முறையாக எழுத்து வடிவில் பேச்சுத்தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால், ஆப்பிரிக்க மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்ததைவிட பைபிளை அவர்களுடைய சொந்த மொழியில் அளித்ததுதான் மிக உயர்வான பரிசு என்று மொழிபெயர்ப்பாளர்கள் நினைத்தார்கள். இன்று, பைபிள் முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ 600-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகளில் “பேசுகிறது.”

ஆசிய மொழிகளைக் கற்றுக்கொள்ளுதல்

ஆப்பிரிக்காவில் மொழிபெயர்ப்பாளர்கள், பேச்சு வடிவில் இருந்த மொழிகளுக்கு எழுத்து வடிவங்களை உருவாக்க போராடினார்கள் என்றால், அக்கரையில் இருந்த மற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேறு விதமான கஷ்டம் இருந்தது. அதாவது சிக்கலான எழுத்துக்களை ஏற்கெனவே கொண்டிருந்த மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். ஆசிய மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்தவர்கள் இப்படிப்பட்ட சவாலையே எதிர்பட்டனர்.

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வில்லியம் கேரி என்பவரும் ஜாசுவா மார்ஸ்மேன் என்பவரும் இந்தியா வந்தார்கள். எழுத்து வடிவில் இருந்த பல இந்திய மொழிகளை அவர்கள் கற்றார்கள். பைபிளின் சில பகுதிகளை சுமார் 40 மொழிகளில் அவர்கள் மொழிபெயர்த்து, வில்லியம் வார்டு என்ற அச்சாளரின் உதவியோடு வெளியிட்டார்கள்.6வில்லியம் கேரியை பற்றி ஆசிரியர் ஜே. ஹர்பர்ட் கெனி விளக்கம் தருகிறார்: “அவர் [வங்காள மொழியில்] அழகான, சரளமான பேச்சு நடையை உருவாக்கினார். இலக்கிய நடையில் இருந்த பழைய வங்க மொழியை இது மாற்றீடு செய்தது. இதனால் வங்க மொழி, நவீன வாசகருக்கு தெளிவாக புரிந்ததோடு, மனதைக் கவருவதாகவும் இருந்தது.”7

ஐக்கிய மாகாணங்களில் பிறந்து வளர்ந்து, பர்மாவுக்கு பயணமாகி, 1817-ல் பைபிளை பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் அடெனிரம் ஜட்ஸ்சன். பைபிளை மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆசிய மொழி ஒன்றை நன்றாக கற்பதில் உள்ள கஷ்டத்தை அவர் இவ்வாறு எழுதினார்: ‘பூமி உருண்டையின் மறுபுறம் இருக்கும் மக்களின் மொழி ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றால், அவர்கள் யோசிக்கும் விதத்திற்கும் நாம் யோசிக்கும் விதத்திற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது. மொழியை உச்சரிக்கும் விதமோ நமக்கு முற்றிலும் புதியது. அதன் எழுத்துக்களும் வார்த்தைகளும் நமக்கு இதுவரை தெரிந்த எந்தவொரு மொழியோடும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லை. அகராதியின் உதவியோ அர்த்தம் சொல்லும் ஒருவரின் உதவியோ இல்லையென்றால், நாம் உள்ளூர் மொழி பேசும் ஆசிரியரின் உதவியை நாட வேண்டும். அந்த உதவியை பெறுவதற்கு முன்பு நமக்கு கொஞ்சமாவது அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்.—அப்படியென்றால் அதற்காக நாம் உழைக்க வேண்டும்!’8

இதற்காக ஜட்ஸ்சன் சுமார் 18 வருடம் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. பர்மீஸ் மொழி பைபிளின் கடைசி பகுதி, 1835-ல் அச்சடிக்கப்பட்டது. ஆனால், அவர் பர்மாவில் தங்கி இருக்கையில், பல துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. அவர் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்துகொண்டிருக்கையில், அவர் உளவு பார்த்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு வருட காலத்தை கொசுக்கள் நிறைந்திருந்த சிறைச்சாலையில் கழிக்க நேர்ந்தது. அவர் விடுதலை ஆன கொஞ்ச நாளுக்குள், அவரது மனைவியும் மகளும் ஜுரம் வந்து இறந்துபோனார்கள்.

1807-ல், ராபர்ட் மாரிசன்னுக்கு 25 வயதிருக்கையில் சீனாவுக்கு வந்துசேர்ந்தார். பயங்கர கஷ்டமான வேலையை அவர் ஏற்றுக்கொண்டார். அதாவது மொழிகளிலேயே மிகவும் சிக்கலான, சீன மொழியில் பைபிளை மொழிபெயர்க்க இறங்கிவிட்டார். அவருக்கு சீன மொழி கொஞ்சம் தெரியும், அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் படிக்க ஆரம்பித்திருந்தார். சீன நாட்டை மற்ற நாடுகளிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்த அந்நாட்டு சட்டத்தையும் மாரிசன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சீன மக்கள் தங்களுடைய மொழியை வெளிநாட்டவருக்கு கற்றுத்தரக்கூடாது என்ற தடை உத்தரவின்கீழ் இருந்தார்கள். அதை மீறினால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும். வெளிநாட்டவர் ஒருவர் பைபிளை சீன மொழியில் மொழிபெயர்ப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாயிருந்தது.

மாரிசன் அஞ்சா நெஞ்சம் உடையவராய், ஆனால் ஜாக்கிரதையோடு அம்மொழியை தொடர்ந்து படித்தார், வேக வேகமாக அதை கற்றுக்கொண்டார். இரண்டு வருடத்திற்குள் கிழக்கு இந்திய கம்பெனியில் ஒரு மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். பகல் நேரத்தில் அவர் கம்பெனிக்காக வேலைசெய்தார். ஆனால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும்கூட மிக ரகசியமாக பைபிள் மொழிபெயர்ப்பை அவர் தொடர்ந்து செய்தார். அவர் சீனாவுக்கு வந்துசேர்ந்து ஏழு வருடங்களுக்குப்பின், 1814-ல், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை அச்சிட தயாராக்கிவிட்டார்.9இதையடுத்து, ஐந்து வருடங்களுக்குப்பின், வில்லியம் மில்லன் என்பவரின் உதவியால் அவர் எபிரெய வேதாகமத்தையும் முடித்தார்.

இது ஒரு மாபெரும் சாதனையே. உலகில் எந்த ஒரு மொழியைக்காட்டிலும், அதிகமான மக்கள் பேசும் மொழியாகிய சீன மொழியில் இப்போது பைபிள் “பேசியது.” திறமைசாலியான மொழிபெயர்ப்பாளர்களின் உதவியால் இன்னும் வேறு பல ஆசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு தொடர்ந்தது. இன்று, பைபிளின் பகுதிகள் 500-க்கும் அதிகமான ஆசிய மொழிகளில் கிடைக்கின்றன.

டின்டேல், மாஃபெட், ஜட்ஸ்சன், மாரிசன் போன்றோர் தங்களுக்கு முன்பின் தெரியாத மக்களுக்காக, சில சந்தர்ப்பங்களில் எழுத்து வடிவம் இல்லாத மொழியை உடைய மக்களுக்காக ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்காக ஏன் வருடக்கணக்கில் கடினமாக உழைத்தார்கள்? சிலர் உயிரையும் பணயம் வைத்தார்களே, ஏன்? நிச்சயம் புகழுக்காகவோ பணத்துக்காகவோ இல்லை. பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அது மக்களுடன் “பேச” வேண்டும்—எல்லா மக்களுடன் பேச வேண்டும்—அதுவும் அவர்களுடைய சொந்த மொழியில் பேச வேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள்.

பைபிளை கடவுளின் வார்த்தை என்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆனால் தங்களையே அர்ப்பணம் செய்துகொண்ட அந்த மொழிபெயர்ப்பாளர்கள் காட்டிய இப்பேர்ப்பட்ட தியாக மனப்பான்மையை இன்றைய உலகில் காண்பது அரிது என்பதை அநேகமாக ஒத்துக்கொள்வீர்கள். ஒருவரின் உள்ளத்தில் இத்தகைய தன்னலமற்ற மனப்பான்மையைத் தூண்டிவிடும் ஒரு புத்தகத்தை ஆராய்ந்து பார்ப்பது தகுதியானது அல்லவா?

[பக்கம் 10-ன் படம்]

டின்டேல் பைபிளை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.

[பக்கம் 11-ன் படம்]

ராபர்ட் மாஃபெட்

[பக்கம் 12-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

1800-ம் வருடம் முதற்கொண்டு பைபிளின் பகுதிகள் அச்சிடப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை

68 107 171 269 367 522 729 971 1,199 1,762 2,123

1800 1900 1995

[பக்கம் 12-ன் படம்]

அடெனிரம் ஜட்ஸ்சன்

[பக்கம் 13-ன் படம்]

ராபர்ட் மாரிசன்