Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்

எதிர்காலம் என்றாலே மக்களுக்கு ஆர்வம் உண்டு. சீதோஷணம் முதல் சீரான பொருளாதாரம் வரை பல விஷயங்களை சுட்டிக்காட்டும் நம்பகமான முன்கணிப்புகளை அவர்கள் நாடித் தேடுகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட முன்கணிப்புகளை நம்பி அவர்கள் செயல்படும்போது, அடிக்கடி ஏமாந்து போகிறார்கள். பைபிளில் பல முன்கணிப்புகள் அல்லது தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அத்தகைய தீர்க்கதரிசனங்கள் எந்தளவுக்கு நம்பகமானவை? அவை நடப்பதற்கு முன்பே எழுதப்பட்ட விவரங்களா? அல்லது அவை நடந்தேறிய பிறகு, தீர்க்கதரிசனமாக ஜோடனை செய்யப்பட்டவையா?

ரோம அரசியல் மேதை காடோ (பொ.ச.மு. 234-149) இவ்வாறு சொன்னதாக சொல்லப்படுகிறது: “குறிசொல்லும் ஒருவன் மற்றொரு குறிசொல்பவனை கண்டால் கேலியாக சிரிப்பதில்லை என்பதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” 1உண்மையில், குறிசொல்பவர்கள், ஜோதிடர்கள், மற்ற முன்கணிப்பாளர்கள் ஆகியோர்மீது இன்று அநேக மக்களுக்கு சந்தேகம் வருகிறது. பெரும்பாலும் இவர்களது முன்கணிப்புகள் தெளிவற்ற வார்த்தைகளால் விவரிக்கப்படுகின்றன. அதனால், அத்தகைய முன்கணிப்புகளுக்கு இன்னும் பல விதங்களில் விளக்கங்கள் தரப்படுகின்றன.

ஆனால், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றியென்ன? சந்தேகப்படுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? அல்லது நம்பிக்கை வைப்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?

வெறும் அறிவின் அடிப்படையிலான ஊகங்கள் அல்ல

நிலவரங்களின் போக்கைப் பார்த்தே, எதிர்காலத்தைப் பற்றி திருத்தமான ஊகங்களை செய்ய அறிவுஜீவிகள் அநேகமாக முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லா சமயங்களிலும் அவை சரியாக இருக்காது. எதிர்கால அதிர்ச்சி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒவ்வொரு சமுதாயமும், அநேகமாக நடைபெறலாம் என்ற அடுத்தடுத்து வரும் எதிர்காலங்களை மாத்திரம் அல்ல, ஆனால் நடைபெறக்கூடிய பல எதிர்காலங்களையும், பெரிதும் விரும்பும் எதிர்காலங்கள் என்பதன்மீதான சச்சரவையும் எதிர்ப்படுகிறது.” அது மேலும் இவ்வாறு கூறுகிறது: “உண்மைதான், முழுமையான கருத்தில் எதிர்காலத்தைப் பற்றி எவருமே ‘அறிந்துகொள்ள’ முடியாது. இது இப்படி நடக்கலாம், அது அப்படி நடக்கலாம் என்ற ஊகங்களை மாத்திரம் தரமுடியும். அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்த மாத்திரம் முடியும். ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம் என்ற சாத்திய கூறுகளை மாத்திரம் சொல்ல முடியும்.” 2

ஆனால், பைபிள் எழுத்தாளர்கள், எதிர்காலத்தைப் பற்றிய “ஊகங்களுக்கு” வெறும் ‘சாத்திய கூறுகளை மாத்திரம் சொல்லவில்லை.’ அல்லது அவர்களுடைய முன்கணிப்புகளை தெளிவற்ற கூற்றுகள் என்றும், அவற்றிற்கு பலதரப்பட்ட விளக்கங்களை தரலாம் என்றும் தள்ளிவிட முடியாது. அதற்கு மாறாக அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் அபாரமாக தெள்ளத்தெளிவாக இருக்கின்றன. அவை ஆச்சரியம் தரும் விதத்தில் துல்லியமாக இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்ததற்கு அப்படியே நேர் எதிராக முன்னுரைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, பண்டைய பாபிலோன் நகரத்திற்கு என்ன நேரும் என்று பைபிள் முன்கூட்டி சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள்.

“சங்காரம் என்னும் துடப்பத்தால் பெருக்க”ப்படும்

பண்டைய பாபிலோன், ‘ராஜ்யங்களுக்குள் அலங்காரமாய்’ திகழ்ந்தது. (ஏசாயா 13:19) பாரசீக வளைகுடா முதல் மத்தியதரைக்கடல் வரை அமைந்த வாணிப மார்க்கத்தில் பரந்துவிரிந்து கிடந்த இந்த நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது. இது கிழக்கத்தியரும் மேற்கத்தியரும் நில மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வியாபாரம் செய்யும் ஒரு ஸ்தலமாக இருந்தது.

பாபிலோனியா பேரரசின் தலைநகரான பாபிலோன், கைப்பற்றவே முடியாது என்று தோன்றும் அளவிற்கு பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டிற்குள் உயர்ந்தோங்கியது. யூஃப்ரடீஸ் நதியில் அமைந்திருந்த அந்நகரைச் சுற்றி, நதியின் தண்ணீரால் பரந்துவிரிந்த, ஆழமான அகழி உண்டாக்கப்பட்டிருந்தது. கிளைக் கிளையாக கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. கூடுதலாக, அந்நகரம் மாபெரும் இரட்டை சுவர்களால் பாதுகாக்கப்பட்டன. எதிரிகளை தாக்குவதற்கென்றே, சுவரில் ஆங்காங்கே எண்ணற்ற கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் குடிமக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை.

ஆனாலும்கூட, மகிமையின் சிகரத்தை பாபிலோன் எட்டிப்பிடிக்கும் முன்பே, பாபிலோன் ‘சங்காரம் என்னும் துடப்பத்தினால் பெருக்கப்படும்’ என்று பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்துவிட்டார். (ஏசாயா 13:19; 14:22, 23) பாபிலோனின் வீழ்ச்சி எவ்விதமாக இருக்கும் என்பதையும் ஏசாயா விவரித்துவிட்டார். படையெடுத்து வருபவர்கள் அதன் நதிகளை, அதாவது அரணாக நின்றிருக்கும் அகழியின் மூலத்தை ‘வற்றிப்போக பண்ணுவார்கள்.’ அதனால் நகரம் எளிதில் தாக்கப்படும். அதைப் கைப்பற்றுபவரின் பெயர் “கோரேசு,” பெர்ஸியாவின் மாபெரும் மன்னன் என்ற தகவலையும், அவருக்குமுன், ‘வாசல்கள் பூட்டப்படாதிருக்கும், கதவுகள் திறந்துவைக்கப்பட்டிருக்கும்’ என்ற தகவலையும்கூட ஏசாயா தந்துவிட்டார்.​—ஏசாயா 44:27–45:⁠2.

இவை தைரியமான முன்கணிப்புகள். ஆனால், அவை நிறைவேறினவா? பதிலை வரலாறு தருகிறது.

‘ஒரு போர்கூட இல்லாமல்’

ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசனத்தைப் பதிவுசெய்து முடித்து, இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொ.ச.மு. 539, அக்டோபர் 5-⁠ம் தேதி இரவு, மகா கோரேசுவின் தலைமையில் மேதிய பெர்ஸிய படைகள் பாபிலோனுக்கு பக்கத்தில் முகாம் இட்டன. ஆனால், பாபிலோனியர்கள் தன்னம்பிக்கையோடு இருந்தார்கள். கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடொடஸ் (பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு) சொன்னப்பிரகாரம், அவர்கள் பல வருடங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்களை சேமித்து வைத்திருந்தார்கள்.3அவர்களை பாதுகாக்க யூஃப்ரடீஸ் நதியும், வான் உயரத்திற்கு நின்றிருந்த பாபிலோன் சுவர்களும் இருந்தன. ஆனாலும், நபோனிடஸ் கல்வெட்டு சொல்கிறபடி, ஒரே இரவில் “கோரேசின் படை போரிடாமலே பாபிலோனுக்குள் நுழைந்தது.” 4அது எப்படி நடந்தேறியது?

அந்த நகரத்திற்குள் இருந்த மக்கள், “நடனமாடிக்கொண்டும், கும்மாளம் போட்டுக்கொண்டும் சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்” என்று ஹெரோடொடஸ் விளக்கம் தருகிறார்.5ஆனால், வெளியே, யூஃப்ரடீஸின் தண்ணீரை திசை மாற்றி கோரேசு வேறுபக்கம் வெட்டிவிட்டார். தண்ணீரின் அளவு குறைய குறைய, அவருடைய படை, நதியின் படுகையின் ஓரமாகவே, தொடையளவு தண்ணீரில் நடந்து முன்னேறி வந்தது. ஹெரோடொடஸ் “நதியில் திறந்திருந்த கதவுகள்” என்று அழைத்த அந்தக் கதவுகள் அஜாக்கிரதையாக அம்போவென்று திறந்துகிடக்க, அவற்றின் வழியே, உயரமாக நின்றிருந்த மதில்களை கடந்து படை உள்ளே போனது.6 (ஒப்பிடுக: தானியேல் 5:1-4; எரேமியா 50:24; 51:31, 32.) பாபிலோன் திடீரென்று கோரேசின் கைகளில் விழுந்தது என்ற உண்மையை வரலாற்று ஆசிரியர் ஜென்னாஃபான் (பொ.ச.மு. சுமார் 431-லிருந்து சுமார் 352 வரை) உட்பட மற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஊர்ஜிதம் செய்தனர். மேலும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த ஆப்பு எழுத்து பலகைகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.7

இவ்வாறாக, பாபிலோனைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ஒருவேளை அது தீர்க்கதரிசனமாக இல்லாதிருக்குமோ? ஒருவேளை சம்பவம் நடந்த பிறகு, தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டிருக்குமோ? உண்மையில், இதே கேள்விகள் மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் பொருந்தும்.

வரலாறே தீர்க்கதரிசனமாக ஜோடிக்கப்பட்டதா?

ஏசாயா உட்பட, எல்லா பைபிள் தீர்க்கதரிசிகளும் வரலாற்றையே தீர்க்கதரிசனமாக மாற்றி எழுதியிருந்தால், இந்த ஆட்கள் பயங்கரமான ஏமாற்றுப்பேர்வழிகளாகத்தான் இருக்க முடியும். ஆனால், இப்படி ஏமாற்றுவதால் அவர்களுக்கு என்னதான் லாபம்? மெய் தீர்க்கதரிசிகளை லஞ்சம் கொடுத்தாலும் அசைக்க முடியாது என்பதை அவர்கள் கொஞ்சமும் தயங்காமல் வெளிக்காட்டினார்கள். (1 சாமுவேல் 12:3; தானியேல் 5:17) பைபிள் எழுத்தாளர்கள் (அவர்களில் பலர் தீர்க்கதரிசிகள்) நம்பகமான ஆட்களாக இருந்தார்கள் என்பதற்கு வலிமையான நிரூபணத்தை ஏற்கெனவே நாம் பார்த்தோம். தங்களை தர்மசங்கடத்தில் மாட்டிவிடும் சொந்த தவறுகளையும் வெளிப்படுத்த அவர்கள் எவ்வித தயக்கமும் காட்டவில்லை. இப்படிப்பட்ட ஆட்கள், வரலாற்றையே தீர்க்கதரிசனமாக மாற்றி சொல்லும் அளவுக்கு ஏமாற்று வேலையில் ஈடுபட அவர்கள் மனம் இடம் தராது என்றே தோன்றுகிறது.

சிந்திப்பதற்கு வேறு விஷயமும் இருக்கிறது. பல பைபிள் தீர்க்கதரிசனங்களில், அந்தத் தீர்க்கதரிசிகளுடைய சொந்த தேசத்து மக்களை பயங்கரமாக கண்டனம் செய்த செய்திகளும் உள்ளன. அத்தகைய கண்டன செய்திகள் ஆசாரியர்களுக்கும் ராஜாக்களுக்கும் சேர்த்தே தரப்பட்டன. உதாரணத்திற்கு ஏசாயா, தன் நாளிலிருந்த இஸ்ரவேல் தலைவர்களும், மக்களும் படுமோசமாக ஒழுக்கங்கெட்டு நடந்துகொண்டதால், இரு சாராரையும் கண்டனம் செய்தார். (ஏசாயா 1:2-10) மற்ற தீர்க்கதரிசிகள் ஆசாரியர்களுடைய பாவங்களை வன்மையாக கண்டித்து, வெட்டவெளிச்சம் ஆக்கினார்கள். (செப்பனியா 3:4; மல்கியா 2:1-9) இவ்வளவு கடுமையான நியாயத்தீர்ப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனங்களை அவர்கள் எதற்காக தங்களுடைய சொந்த மக்களுக்கு எதிராக கற்பனை செய்து, கதைக்கட்டிவிட வேண்டும் என்பதும், அதற்கு ஏன் அந்த ஆசாரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதும் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டமாக உள்ளது.

கூடுதலாக, அந்தத் தீர்க்கதரிசிகள் வெறும் ஏமாற்றுப்பேர்வழிகளாக இருந்திருந்தால், இந்த ஏமாற்றுவேலையை அவர்களால் எப்படி செய்ய முடிந்தது? இஸ்ரவேலில் கல்வி கற்க ஊக்கம் தரப்பட்டது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்பட்டன. (உபாகமம் 6:6-9) வேதவசனங்களைத் தனிப்பட்ட முறையில் படிப்பதற்கும் ஊக்கம் அளிக்கப்பட்டது. (சங்கீதம் 1:2) ஜெப ஆலயங்களில், வாரந்தோறும் ஓய்வுநாட்களில் வேதவசனங்கள் பொதுப்படையாக வாசிக்கப்படும். (அப்போஸ்தலர் 15:21) கல்வி அறிவு பெற்ற முழு தேசத்தாரையும், வேதவசனங்களை நன்கு கற்றிருந்த மக்களையும் அப்படிப்பட்ட ஒரு மோசடியால் ஏமாற்ற முடியும் என்பது நம்பமுடியவில்லை.

மேலும், பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் இன்னும் அதிகம் இருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தில் ஒரு விவரம் அடங்கியுள்ளது. தீர்க்கதரிசனம் நிறைவேறிய பிறகு அதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை.

“இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்கமாட்டார்கள்”

பாபிலோன் வீழ்ச்சி அடைந்த பிறகு அதற்கு என்ன ஆகும்? ஏசாயா இவ்வாறு முன்னுரைத்தார்: “இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்; அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்; அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்; ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.” (எசாயா 13:20, பொ.மொ.) நல்ல ஸ்திரமான நிலைமையில் இருந்த ஒரு நகரத்தைப் பார்த்து, அதில் இனி நிரந்தரமாக யாருமே வசிக்கமாட்டார்கள் என்று கொஞ்சம்கூட கூட்டிக் குறைக்காமல் முன்னுரைத்தது ஒருவேளை விநோதமாக தோன்றலாம். பாபிலோன் பாழ்நிலமாக ஆனதைப் பார்த்தப் பிறகே ஏசாயாவின் வார்த்தைகள் எழுதப்பட்டனவா?

கோரேசு கைப்பற்றிய பின்பும், வீழ்ச்சியடைந்த நிலையிலிருந்த அந்த பாபிலோனில் மக்கள் தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு குடியிருந்தனர். சவக்​கடல் சுருள்களில், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஏசாயா புத்தகம் முழுமையாக இருந்த ஒரு பிரதியும் இருந்தது என்பதை சற்று ஞாபகத்திற்கு கொண்டுவாருங்கள். அந்தச் சுருள் பிரதி எடுத்து முடிக்கப்படவிருந்த சமயத்தில், பாபிலோன் பார்தியரின் (Parthians) கைகளுக்குள் வந்தது. பொ.ச. முதல் நூற்றாண்டில் சில யூதர்கள் பாபிலோனில் குடியேறி இருந்தார்கள், பைபிள் எழுத்தாளராகிய பேதுரு அங்குப் போய் பார்த்துவிட்டு வந்தார். (1 பேதுரு 5:13) அதற்குள்ளாக, ஏசாயாவின் சவக்கடல் சுருள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே, பொ.ச. முதல் நூற்றாண்டு வரையாக, பாபிலோன் முழுமையாக பாழ்நிலமாக ஆகிவிடவில்லை. ஆனால் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே ஏசாயாவின் புத்தகம் எழுதி முடிந்தாயிற்று a

[அடிக்குறிப்புகள்]

a பொ.ச. முதலாம் நூற்றாண்டிற்கு ரொம்ப முந்தியே, ஏசாயாவின் புத்தகம் உட்பட்ட, எல்லா எபிரெய வேதாகம புத்தகங்களும் எழுதி முடிக்கப்பட்டன என்பதற்கு உறுதியான நிரூபணம் இருக்கிறது. வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் (பொ.ச. முதல் நூற்றாண்டு), அவர் வாழ்ந்த காலத்திற்கு வெகு நாட்களுக்கு முன்பே எபிரெய வேதாகமங்களின் நம்பகத்தன்மை ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டன என்பதை தன்னுடைய புத்தகத்தில் சுட்டிக்காட்டினார்.8 கூடுதலாக, எபிரெய வேதாகமம் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது; இந்த கிரேக்க செப்டுவஜன்ட், பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் துவங்கி, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குள் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது.

முன்னுரைத்தபடியே, பாபிலோன் மெல்ல மெல்ல வெறும் ‘மண்மேடாக’ ஆனது. (எரேமியா 51:37) எபிரெய அறிஞர் ஜெரோம் (பொ.ச. நான்காம் நூற்றாண்டு) சொன்னபடி, அவருடைய காலத்திற்குள் பாபிலோன் வேட்டையாடும் ஓர் இடமாக ஆனது, அதில் ‘எல்லாவிதமான மிருகங்களும்’ அலைந்துதிரிந்தன.9இந்நாள் வரையாக பாபிலோன் பாழ்நிலமாக இருக்கிறது.

பாபிலோன் வசிப்பதற்கு லாயக்கற்ற இடமாக ஆனதை பார்க்க ஏசாயா உயிரோடு இல்லை. ஆனால், இன்றைய ஈராக்கிலுள்ள பாக்தாத்திலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு காலத்தில் சக்திபடைத்த நகரமாக திகழ்ந்த பாபிலோனின் எஞ்சிய இடிபாடுகள் மாத்திரம் உள்ளன. “இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்கமாட்டார்கள்” என்ற ஏசாயாவின் வார்த்தைகள் நிறைவேறின என்பதை இந்த இடிபாடுகள் மௌனமாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. சுற்றுலா பயணத்திற்கு ஏற்ற கவர்ச்சி மிக்க ஓர் இடமாக மாற்றுவதற்காக பாபிலோனில் செய்யப்படும் புதுப்பிக்கும் பணி, சுற்றுலா பயணிகளை வேண்டுமென்றால் கவர்ந்திழுக்கலாம். ஆனால், பாபிலோனின் ‘வழிமரபினரும் வழித்தோன்றலும் இல்லாது’ என்றென்றைக்குமாக ஒழிந்துபோனார்கள்.​—ஏசாயா 13:20; 14:22, 23.

இவ்வாறாக, ஏதாவது ஓர் எதிர்கால சம்பவத்திற்கு பொருந்தும் வகையில், தெளிவில்லாத முன்கணிப்புகளை ஏசாயா சொல்லவில்லை. அல்லது வரலாற்றை அப்படியே மாற்றிபோட்டு தீர்க்கதரிசனமாகவும் அவர் எழுதவில்லை. இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: ஓர் ஏமாற்றுப்பேர்வழி, கொஞ்சமும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்தைப்பற்றி, அதாவது சக்தி​படைத்த பாபிலோனில் இனி எவருமே ஒருபோதும் குடியிருக்க மாட்டார்கள் என்ற விஷயத்தைப் பற்றி ‘தீர்க்கதரிசனம் சொல்ல’ ஏன் முயற்சிக்க வேண்டும்?

பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் பைபிளிலிருந்து காட்டப்பட்ட ஒரேவொரு உதாரணம் மட்டுமே b மனிதனைவிட மேலான ஓர் ஊற்றுமூலத்திலிருந்தே பைபிள் வந்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக அதன் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை அநேக மக்கள் நோக்குகிறார்கள். குறைந்தபட்சம், இந்தத் தீர்க்கதரிசனப் புத்தகம் ஆராய்ந்து பார்ப்பதற்கு தகுதியானதே என்பதை அநேகமாக நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஒரு விஷயம் மாத்திரம் அதிநிச்சயம்: இன்றைய நவீன காலத்து குறிசொல்பவர்கள் சொல்லும் தெளிவற்ற அல்லது பரபரப்பான முன்கணிப்புகளுக்கும் தெளிவான, நிதானமான, குறிப்பான பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் இடையே ரொம்ப வித்தியாசம் இருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

b பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் அவற்றின் நிறைவேற்றத்தை ஊர்ஜிதம் செய்யும் வரலாற்று உண்மைகளைப் பற்றியும் இன்னும் கூடுதலான கலந்தாராய்ச்சிக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, பைபிள்​—⁠கடவுளின் வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தின் பக்கங்கள் 117-33 வரை தயவுசெய்து பார்க்கவும்.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

பைபிள் எழுத்தாளர்கள் நம்பகமான தீர்க்கதரிசிகளா அல்லது தந்திரமான ஏமாற்றுப் பேர்வழிகளா?

[பக்கம் 29-ன் படம்]

பண்டைய பாபிலோனின் எஞ்சியிருக்கும் இடிபாடுகள்