Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

களங்கம் சுமத்தப்பட்ட ஒரு புத்தகம்

களங்கம் சுமத்தப்பட்ட ஒரு புத்தகம்

களங்கம் சுமத்தப்பட்ட ஒரு புத்தகம்

“பூமி அதன் அச்சில் சுழல்கிறது, அது சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோட்பாடு பொய். பரிசுத்த வேதாகமத்திற்கு முற்றிலும் முரணானது.” ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் படிக்கக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சபை 1616-ல் மேற்கண்ட முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டது.1 அறிவியல் உண்மைகளோடு நிஜமாகவே பைபிள் ஒத்துப்போவதில்லையா? அல்லது அதன்மீது களங்கம் சுமத்தப்பட்டதா?

அந்தக் காலம் 1609-க்கும் 1610-க்கும் இடைப்பட்ட பனிக்காலம், தான் புதிதாக கண்டுபிடித்த தொலைநோக்கியை கலீலியோ கலீலி வானத்தை நோக்கித் திருப்பினார். வியாழன் (ஜூபிடர்) கிரகத்தை நான்கு நிலாக்கள் வட்டமிடுவதை அவர் கண்டார். அதுவரை, பூமியைச் சுற்றித்தான் மற்ற விண்கோள்களும் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன என்ற நம்பிக்கை நிலவி வந்தது. அவர் பார்த்த காட்சி, அந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது. அதற்குமுன் 1543-ல் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் என்ற போலந்து நாட்டு வானவியல் நிபுணரும் சூரியனைச் சுற்றியே கோள்கள் வருகின்றன என்ற கோட்பாட்டை உருவாக்கியிருந்தார். இது அறிவியல் உண்மையே என்று கலீலியோ நிரூபித்துக் காட்டினார்.

ஆனால், கத்தோலிக்க பாதிரிமார்களை பொருத்தமட்டில் இது ஒரு மதபேதமுள்ள கருத்து. இப்பிரபஞ்சத்திற்கு பூமிதான் மையம் என்ற கருத்தை நீண்டகாலமாக சர்ச் கொண்டிருந்தது. 2‘பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் அஸ்திவாரங்கள்மேல் அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது’ என்று காட்டும் வேதவசனங்களை சொல்லர்த்தமாக புரிந்துகொண்டதால் உருவானதே இக்கருத்து. (சங்கீதம் 104:5, த ஜெரூசலம் பைபிள்) ரோமில், கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றத்திற்குமுன் வந்து ஆஜராகும்படி கலீலியோவுக்கு அழைப்பாணை தரப்பட்டது. அவரை கொடூரமாக விசாரணை செய்து, அவருடைய கண்டுபிடிப்புகளை மறுத்துவிடும்படி அவரைக் கட்டாயப்படுத்தினர். மீதமிருந்த வாழ்நாளை அவர் வீட்டுக்காவலில் கழித்தார்.

கலீலியோ இறந்துபோய் கிட்டத்தட்ட 350 வருடங்களுக்குப்பின், 1992-ல் அவர் சொன்னது சரியே என்பதை வேறு வழியின்றி கடைசியில் சர்ச் ஒத்துக்கொண்டது. 3கலீலியோ சொன்னது உண்மையென்றால், பைபிள் சொன்னது தவறா?

பைபிள் பகுதிகளின் உண்மையான அர்த்தத்தை காணுதல்

பைபிள் சொல்வது உண்மை என்பதை கலீலியோ நம்பினார். அக்காலத்தில் சில பைபிள் வசனங்களுக்கு சொல்லப்பட்ட அர்த்தத்திலிருந்து தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வேறுபட்டபோது, அந்தப் பாதிரிமார்கள்தான் பைபிள் பகுதிகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள தவறுகிறார்கள் என்று அவர் நியாயங்காட்டினார். பார்க்கப்போனால், அவர் இவ்வாறு எழுதினார்: “இரண்டு உண்மைகள் என்றுமே ஒன்றோடு ஒன்று முரண்படாது.” 4அறிவியலின் துல்லியமான வார்த்தைகள், பைபிள் பயன்படுத்தியிருக்கும் சாதாரண வார்த்தைகளிலிருந்து முரண்படாது என்பதை அவர் குறிப்பிட்டார். ஆனால், அவர் சொன்னதை கேட்க பாதிரிமாருக்கு மனமில்லை. பூமியைப் பற்றி பைபிள் குறிப்பிடும் கூற்றுகள் அனைத்தையும் அப்படியே சொல்லர்த்தமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் ஒற்றைக்காலில் நின்றார்கள். அதன் விளைவாக அவர்கள் கலீலியோவின் கண்டுபிடிப்புகளை மாத்திரமா புறக்கணித்தார்கள், இத்தகைய வேதாகம வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தையும் அல்லவா தவறவிட்டார்கள்.

“பூமியின் நான்கு திசைகளிலும்” என்று பைபிள் குறிப்பிடுகையில், பைபிள் எழுத்தாளர்கள் நிஜமாகவே பூமி சதுர வடிவில் இருப்பதாக புரிந்துகொண்டனர் என்ற முடிவுக்கு நாம் உடனே வரக்கூடாது என்பதை நம்முடைய சாதாரண அறிவே உணர்த்த வேண்டுமே. (வெளிப்படுத்துதல் 7:1) பாமர மக்கள் பேசிய மொழியில் பைபிள் எழுதப்பட்டது, தெள்ளத்தெளிவான உருவக அணியும் அதில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஆகவே, பூமிக்கு ‘நான்கு திசைகளும்’ உறுதியான ‘அடித்தளமும்’ ‘தூண்களும்’ ‘மூலைக்கல்லும்’ இருப்பதாக அது கூறும்போது, பூமியை அறிவியல் ரீதியில் ஒன்றும் பைபிள் விவரிக்கவில்லை. தெரிந்தவிதமாகவே, அது உருவக அணியில் பேசுகிறது. நாம்கூட அன்றாடம் பேசும்போது அடிக்கடி அவ்விதமே பேசுகிறோம். aஏசாயா 51:13; யோபு 38:6; பொது மொழிபெயர்ப்பு.

வாழ்க்கைசரிதை எழுதுபவராகிய எல். கேமோனாட் என்பவர், கலீலியோ கலீலி என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பைபிளை காரணம் காட்டி அறிவியலை கட்டுப்படுத்த விரும்பிய குறுகிய மனப்பான்மை கொண்ட பாதிரிமார்கள் உண்மையில் பைபிளுக்குத்தான் அவமரியாதையைக் கொண்டுவருவார்கள்.” 5உண்மையில் அவர்கள் அதையே செய்தார்கள். பார்க்கப்போனால், அறிவியலுக்கு தேவையில்லாத கட்டுப்பாடுகளை போட்டது அந்த பாதிரிமார்கள் அளித்த விளக்கமே ஒழிய பைபிள் தந்த விளக்கம் அல்ல.

அதேபோல், பூமியானது 24 மணிநேரம்கொண்ட ஆறே நாட்களில் படைக்கப்பட்டது என்று இன்றும் மத அடிப்படைவாதிகள் (fundamentalists) வலியுறுத்துவதன் மூலம் அவர்கள் பைபிளை திரித்துக்கூறுகிறார்கள். (ஆதியாகமம் 1:3-31) இப்படிப்பட்ட ஒரு கருத்து அறிவியலோடும் ஒத்துப்போவதில்லை பைபிளோடும் ஒத்துப்போவதில்லை. பைபிளில், அன்றாட பேச்சில் பயன்படுத்தப்பட்ட “நாள்” என்ற வார்த்தை வித்தியாசமான கால அளவுகளை தெரிவிக்கும் ஒரு சொல்லாக இருக்கிறது. ஆதியாகமம் 2:4-ல், சிருஷ்டிப்பின் ஆறு நாட்களும் மொத்தமாக சேர்த்து ஒரு ‘நாள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பைபிளில், “நாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை வெறுமனே ‘நீண்ட ஒரு காலப்பகுதியை’ அர்த்தப்படுத்துகிறது.6ஆகவே, சிருஷ்டிப்பின் நாட்கள் ஒவ்வொன்றும் 24 மணிநேரங்களை கொண்டவை என்பதை வலியுறுத்த எந்த பைபிள் ஆதாரமும் இல்லை. இதற்கு முரணாக போதிப்பதன் மூலம், அடிப்படைவாதிகள் பைபிளுக்கு களங்கத்தைக் கொண்டுவருகிறார்கள்.—2 பேதுரு 3:8-ஐயும் காண்க.

வரலாறு முழுவதிலும் இந்தப் பாதிரிமார்கள் அடிக்கடி பைபிளை தவறாக எடுத்துரைத்திருக்கிறார்கள். பைபிள் சொல்வதை கிறிஸ்தவமண்டல மதங்கள் திரித்துக்கூறும் வேறு சில விதங்களைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்.

மதம் களங்கம் சுமத்துகிறது

பைபிள் தங்கள் வசம் இருப்பதாக மார்தட்டிக்கொண்டு, அதைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஆட்களின் செயல்களே அடிக்கடி பைபிளின் புகழுக்கு கரியைப் பூசியிருக்கின்றன. பெயரளவு கிறிஸ்தவர்கள் கடவுள் பெயரைச் சொல்லி சொல்லியே ஒருவரை ஒருவர் கொன்றுகுவித்திருக்கிறார்கள். ஆனால், “ஒருவரிலொருவர் அன்பாயிருங்க—யோவான் 13:34, 35; மத்தேயு 26:52.

சில பாதிரிமார்கள் தங்கள் மந்தையின் ஆட்களை ஏமாற்றி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம் இவர்கள் நைசாக பேசி பேசியே கறந்துவிடுகிறார்கள். இச்செயல் பின்வரும் வேதாகம கட்டளையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது: “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.”—மத்தேயு 10:8; 1 பேதுரு 5:2, 3.

தெளிவாகவே, வெறுமனே பைபிளை மேற்கோள் காட்டும் அல்லது அதை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஆட்களின் வார்த்தைகளையும் செயல்களையும் அடிப்படையாக கொண்டு பைபிளுக்கு முத்திரை குத்த முடியாது. ஆகவே, பரந்த மனப்பான்மை உள்ள ஒரு நபர், பைபிளில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதையும், ஏன் அது அந்தளவுக்கு குறிப்பிடத்தக்க ஒரு புத்தகமாக இருக்கிறது என்பதையும் அவராகவே கண்டுபிடிக்க விரும்பலாம்.

[அடிக்குறிப்புகள்]

a உதாரணத்திற்கு, உள்ளதை உள்ளபடி பொருள்கொள்ளும் வானவியல் நிபுணர்களும்கூட, சூரியன், நட்சத்திரங்கள், விண்மீன் குழுக்களைப் பற்றி குறிப்பிடும்போது “உதயமாகின்றன” “மறைகின்றன” என்றே சொல்வார்கள். ஆனால் உண்மையென்னவென்றால், பூமி சுழற்சியின் காரணமாக அவை நகர்வதுபோல் வெறுமனே தோன்றுகின்றன.

[பக்கம் 4-ன் படம்]

கலீலியோவிடமிருந்த தொலைநோக்கிகளில் இரண்டு

[பக்கம் 5-ன் படம்]

விசாரணையாளர்களை கலீலியோ எதிர்ப்படுகிறார்