Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்

நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்

நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்

ஆலோசனையை அள்ளி வழங்கும் புத்தகங்கள் இன்றைய உலகில் மிகப் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் அவை காலத்திற்கு ஒத்துவராமல் போய்விடுவதால், விரைவிலேயே மாற்றம் செய்யப்படுகின்றன அல்லது மாற்றீடு செய்யப்படுகின்றன. பைபிளைப் பற்றி என்ன? சுமார் 2,000 வருடங்களுக்குமுன் அது எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், அதில் அடங்கியுள்ள மூல விஷயங்களில் முன்னேற்றமோ காலத்திற்கு ஏற்ற மாற்றமோ ஒருபோதும் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தில் நம் நாளுக்கு ஏற்ற நடைமுறையான ஆலோசனை இருக்க வாய்ப்பு உள்ளதா என்ன?

இல்லை என்கிறார்கள் சிலர். டாக்டர் ஈலை எஸ். செஸ்சன் என்பவர், பைபிளை காலத்திற்கு ஒத்துவராத ஒரு புத்தகமாகத் தான் நினைப்பதற்கு காரணத்தை விளக்கி, இவ்வாறு எழுதினார்: “1924-ல் வெளியிடப்பட்ட வேதியியல் பாட [புத்தகத்தை] இன்றைய வேதியியல் வகுப்பில் பயன்படுத்தும்படி யாருமே சொல்ல மாட்டார்கள்.”1மேலோட்டமாகப் பார்த்தால், இந்த விவாதம் அறிவுக்கு ஏற்றதாக தோன்றும். உண்மையில், பைபிள் எழுதி முடிக்கப்பட்ட பிறகு, மன நலத்தைப் பற்றியும் மனித நடத்தையைப் பற்றியும் எவ்வளவோ கற்றுக்கொண்டுவிட்டான் மனிதன். ஆகவே, இவ்வளவு பழைய புத்தகம் எப்படி நவீன வாழ்க்கைக்கு ஒத்துவரும்?

கால வரம்பற்ற நியமங்கள்

காலங்கள் மாறிவிட்டன என்பது உண்மைதான், ஆனால் மனிதனின் அடிப்படை தேவைகள் அப்படியே இருக்கின்றன. அன்புக்காகவும் பாசத்துக்காகவும் மனிதருக்கு உள்ள வேட்கை காலம் காலமாக இருந்தவண்ணமே இருக்கின்றன. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க துடிக்கிறார்கள். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். பொருளாதார அழுத்தங்களை சமாளிப்பது எப்படி, திருமணத்தை வெற்றிகரமாக ஆக்குவது எப்படி, ஒழுக்கம் மற்றும் தார்மீக மதிப்பீடுகளை தங்கள் பிள்ளைகளின் மனங்களில் ஊன்றச்செய்வது எப்படி போன்ற ஆலோசனைகள் இன்றும் மக்களுக்கு தேவைப்படுகின்றன. அத்தகைய அடிப்படை தேவைகளை எடுத்துக்கூறும் ஆலோசனை பைபிளில் உள்ளது.—பிரசங்கி 3:12, 13; ரோமர் 12:10; கொலோசெயர் 3:18-21; 1 தீமோத்தேயு 6:6-10.

பைபிளின் ஆலோசனை, மனித இயல்பைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வை வழங்குகிறது. பைபிளின் குறிப்பான, கால வரம்பற்ற நியமங்கள் சிலவற்றைச் சற்று பார்க்கலாம். அவை நவீன வாழ்க்கைக்கு நடைமுறையானவை.

திருமணத்திற்கு நடைமுறையான வழிகாட்டி

“[குடும்பம்] என்பது மனித சமுதாயத்தின் மிகவும் பழமையான, அதி முக்கியமான அடிப்படைக்கூறாக இருக்கிறது; சந்ததிகளின் இடையே இருக்கும் மிக முக்கியமான ஒரு இணைப்பாகவும் இது இருக்கிறது” என்று குடும்பத்தைப் பற்றி யுஎன் க்ரானிக்கல் என்ற பத்திரிகை சொல்கிறது. ஆனால் இந்த ‘முக்கியமான இணைப்பு’ பயப்படும் அளவில் துண்டுதுண்டாக ஆகிக்கொண்டிருக்கிறது. “இன்றைய உலகில், பயமுறுத்தும் பிரச்சினைகளை அநேக குடும்பங்கள் எதிர்ப்படுகின்றன. [இப்பிரச்சினைகள்] குடும்பங்கள் செயல்படும் திறனை செயலிழக்க செய்வதோடு, உண்மையில், தாக்குப்பிடிக்குமா என்ற அச்சத்தையும் தருகின்றன” என்பதாக க்ரானிக்கல் குறிப்பிடுகிறது.2குடும்பம் என்னும் இந்த அடிப்படைக்கூறு நிலைத்திருக்க பைபிள் தரும் ஆலோசனை என்ன?

முதலாவதாக, கணவன்மாரும் மனைவிமாரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்தவேண்டும் என்பதற்கு பைபிள் ஏராளமான ஆலோசனையை வழங்குகிறது. உதாரணமாக, கணவர்களுக்கு அது இவ்வாறு சொல்கிறது: ‘புருஷர்கள் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; . . . தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.’ (எபேசியர் 5:28, 29) மனைவிக்கு இவ்வாறு அறிவுரை சொல்லப்பட்டது: ‘புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்க வேண்டும்.’—எபேசியர் 5:33, NW.

இப்படிப்பட்ட பைபிள் அறிவுரையை வாழ்க்கையில் பொருத்தும்போது, அதில் என்ன என்ன உட்படுகின்றன என்பதை சற்று சிந்தியுங்கள். மனைவியை ‘தன் சொந்தச் சரீரமாக’ பாவித்து நடத்தும் ஒரு கணவன், அவளிடத்தில் வெறுப்பை காட்டமாட்டான் அல்லது மிருகத்தனமாக நடந்துகொள்ள மாட்டான். அவளை அடித்து உதைக்க மாட்டான், அவளைத் திட்டமாட்டான் அல்லது அவளது உணர்ச்சியை நோகடிக்க மாட்டான். அதற்கு பதிலாக, தனக்குக் கொடுக்கும் அதே மதிப்பையும் கரிசனையையும் அவளுக்கும் அளிப்பான். (1 பேதுரு 3:7) ஆகவே, அவனுடைய மனைவி தான் நேசிக்கப்படுவதையும் திருமண பந்தத்தில் அவள் பாதுகாப்பாக இருப்பதையும் உணருவாள். இவ்வாறாக, பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியை வைக்கிறார். மறுபட்சத்தில், தன் கணவனிடத்தில் ‘ஆழ்ந்த மரியாதை’ வைத்திருக்கும் ஒரு மனைவி, எப்பப்பார்த்தாலும் அவரைக் குற்றம் சொல்லிக்கொண்டு, சிறுமைப்படுத்திக்கொண்டு அவருடைய மானத்தை கப்பலேற்ற மாட்டாள். கணவரை மனைவி மதிக்கும்பொழுது, கணவர் தான் நம்பப்படுகிறவராகவும், ஏற்றுக்கொள்ளப்படுகிறவராகவும், மதிக்கப்படுகிறவராகவும் உணருவார்.

இத்தகைய அறிவுரை இந்த நவீன உலகில் நடைமுறைக்கு ஒத்துவருமா? இன்று குடும்பங்களைப் பற்றி ஆய்வு செய்வதை தொழிலாக கொண்டுள்ளவர்களும் இதேமாதிரியான முடிவுக்கு வந்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. குடும்ப ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தும் ஒரு அதிகாரி இவ்வாறு குறிப்பிட்டார்: “எனக்குத் தெரிந்தமட்டும், சிறந்த குடும்பங்களில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நல்ல உறுதியான, அன்பான உறவு இருக்கிறது. . . . இந்த முதன்மையான, வலிமைமிக்க உறவுதான் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு என்ற உணர்வை ஊன்றி வளர்ப்பதாக தோன்றுகிறது.”3

திருமணத்தின்பேரில் பைபிள் தரும் அறிவுரை, நல்லெண்ணம் கொண்ட குடும்ப ஆலோசகர்கள் எத்தனையோ பேர் தந்த ஆலோசனையைவிட ரொம்பவும் நம்பகமாக இருப்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பார்க்கப்போனால், மகிழ்ச்சியற்ற திருமணத்திலிருந்து விடுபட வேண்டுமா, அதற்கு விரைவான, ஓர் எளிய வழி விவாகரத்தே என்று பல வல்லுநர்கள் கொஞ்ச காலத்திற்கு முன்புதான் குரலெழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று, அப்படிச் சொன்ன பலரும் திருமண உறவு நீடித்திருக்க முடிந்தளவுக்கு உழைக்கும்படி ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அநேக குடும்பங்களுக்கு பயங்கரமான பாதிப்புகள் இழைக்கப்பட்ட பிறகே அவர்களுக்கு இந்த ஞானோதயம் வந்தது.

இதற்கு மாறாக, திருமணம் என்ற தலைப்பில் நம்பகமான, சமநிலையான ஆலோசனையை பைபிள் தருகிறது. சில மிதமிஞ்சிய சந்தர்ப்பங்களில் விவாகரத்து அளிப்பதை அது ஒத்துக்கொள்கிறது. (மத்தேயு 19:9) அதே சமயத்தில், தொட்டதற்கெல்லாம் காரணம் காட்டி விவாகரத்து செய்வதை கண்டனம் செய்கிறது. (மல்கியா 2:14-16) மேலும், மணவாழ்க்கையில் துரோகம் செய்வதை அது கொஞ்சமும் பொறுக்காது. (எபிரெயர் 13:4) திருமணத்துடன் இணைந்து வரும் பொறுப்பை இவ்வாறு விளக்குகிறது: ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் [‘ஒட்டிக்கொண்டிருப்பான்,’ NW]; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். aஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5, 6.

திருமணத்தின்பேரில் பைபிள் தரும் அறிவுரை பைபிள் எழுதப்பட்ட அன்று எப்படி பொருந்தியதோ அதேபோல் இன்றும் பொருந்துகிறது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தும்போதும், திருமண உறவு என்பது அவர்களுக்கு மாத்திரம் சொந்தம் என கருதும்போதும் அனேகமாக அவர்களின் திருமணம் நிலைத்திருக்கலாம். அதோடுகூட குடும்பமும் உருக்குலையாமல் தப்பித்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

பெற்றோர்களுக்கு நடைமுறையான வழிகாட்டி

பல பத்தாண்டுகளுக்குமுன், “பிள்ளையை சிட்சிக்கக்கூடாது” என்பது போன்ற பிள்ளை வளர்ப்பைப் பற்றிய ‘புதிய கருத்துக்களால்’ பெற்றோர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.8பிள்ளைகளுக்கு வரம்புகளை விதித்தால், மன உளைச்சலையும் வெறுப்பையும் உண்டாக்கும் என அவர்கள் பயந்தார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் மிதமாக கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிள்ளை வளர்ப்பில் நல்லெண்ணம் கொண்ட ஆலோசகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், சிட்சை வகிக்கும் பங்கைப் பற்றி இப்போது அதே ஆலோசகர்கள் பலரும் மறுபரிசீலனை செய்கிறார்கள். இந்தப் பொருளின்பேரில் கொஞ்சம் தெளிவான விளக்கம் கிடைக்காதா என்று அக்கறையுள்ள பெற்றோர்கள் தேடோ தேடென்று அலைகிறார்கள்.

ஆனால், பிள்ளை வளர்ப்பைப் பற்றி தெளிவான, நியாயமான அறிவுரையை இவ்வளவு காலமாக பைபிள் அளித்து வந்துள்ளது. சுமார் 2,000 வருடங்களுக்குமுன் அது இவ்வாறு சொன்னது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) “சிட்சை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பெயர்ச்சொல்லின் அர்த்தம், “வளர்த்தல், பயிற்சி அளித்தல், போதனை வழங்குதல்.”9இப்படிப்பட்ட சிட்சை அல்லது போதனையானது பெற்றோர் காட்டும் பாசத்தின் அடையாளம் என்பதாக பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:24, NW) ஒழுக்கம் சம்பந்தமாக தெள்ளத்தெளிவான விதிமுறைகளும், எது சரி எது தவறு என்ற உணர்வும் இருந்தால் பிள்ளைகள் நன்கு செழித்தோங்கி வளருவார்கள். பெற்றோர் தங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பதையும், எப்படிப்பட்டவர்களாக அவர்கள் வளருகிறார்கள் என்பதையும் சிட்சையானது பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும்.

ஆனால், பெற்றோர் தங்கள் வசம் வைத்திருக்கும் “சிட்சையின் பிரம்பு” என்னும் அதிகாரத்தை பயன்படுத்தும்போது, ஒருநாளும் தவறாக பயன்படுத்தக் கூடாது. b (நீதிமொழிகள் 22:15, NW; 29:15) பெற்றோரை பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “உங்கள் பிள்ளைகளை அளவுக்கு மிஞ்சி கண்டிக்காதீர்கள், அல்லது அவர்கள் மனதை நீங்கள் தளர்ந்துபோக செய்வீர்கள்.” (கொலோசெயர் 3:21, பிலிப்ஸ்) சரீரப்பிரகாரமான தண்டனை அளிப்பது எப்போதும் பயன்தரும் ஒரு போதனா முறை அல்ல என்பதையும் பைபிள் ஒத்துக்கொள்கிறது. நீதிமொழிகள் 17:10 சொல்கிறது: “மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.” இதைத்தவிர வரும்முன் தடுக்கும் சிட்சையை பைபிள் பரிந்துரைசெய்கிறது. பிள்ளைகளின் மனங்களில் ஒழுக்க மதிப்பீடுகளை ஊன்றவைப்பதற்கு, தற்செயலாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தும்படி உபாகமம் 11:19-ல் பெற்றோர்களுக்கு ஊக்கம் தரப்படுகிறது.—உபாகமம் 6:6, 7-ஐயும் காண்க.

பெற்றோருக்கு பைபிள் அளிக்கும் கால வரம்பற்ற அறிவுரை தெளிவாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு சீரான மற்றும் அன்பான சிட்சை அவசியம் தேவை. அத்தகைய ஆலோசனை உண்மையில் பலனளிக்கிறது என்பதை நடைமுறை அனுபவம் காட்டுகிறது. c

மக்களை பிரிக்கும் சுவர்களை உடைத்தெறிதல்

குலம், தேசம், இனம் என்னும் சுவர்களால் இன்று மக்கள் பிளவுபட்டுள்ளனர். இவ்வாறு எழுந்துள்ள இந்தச் செயற்கை சுவர்கள், உலகெங்கிலும் போர் என்னும் போர்வையில் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதில் பங்கு வகித்துள்ளன. நடந்து முடிந்த வரலாற்றை எடுத்துப்பார்த்தால், வெவ்வேறு இன ஆண்களையும் பெண்களையும் சமமாக கருதி நடத்துவார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சங்கூட இல்லை. இதற்கு “தீர்வு நம் மனங்களே” என்று ஆப்பிரிக்க அரசியல்மேதை ஒருவர் கூறுகிறார்.11ஆனால், மனித மனங்களை மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும், பைபிள் செய்தி எவ்வாறு மக்கள் மனங்களை கவர்ந்திழுத்து, சமத்துவம் என்னும் மனப்பான்மைகளை அவர்களுக்குள் போற்றி வளர்க்கிறது என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

கடவுள் ‘ஒரே ஆளிலிருந்து . . . மக்களினம் அனைத்தையும் படைத்தார்’ என்ற பைபிளின் போதனை, ஒரு குலம் மற்றொன்றைக் காட்டிலும் சிறந்தது என்ற எண்ணத்தையே தள்ளிவிடுகிறது. (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 17:26, பொ.மொ.) உண்மையில் ஒரே ஒரு குலம் தான் இருக்கிறது, அதுவே மனிதகுலம் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. மேலும் ‘தேவனைப் பின்பற்றும்படி’ பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. கடவுளைப் பற்றி அது இவ்வாறு சொல்கிறது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (எபேசியர் 5:1; அப்போஸ்தலர் 10:34, 35) இந்த அறிவு, பைபிளை கருத்தாய் ஏற்றுக்கொண்டு, அதன் போதனைகளின்படி வாழ உண்மையில் முயற்சிக்கும் ஆட்களிடத்தில் ஒற்றுமைப்படுத்தும் நல் விளைவை கொண்டுள்ளது. இது மனித மனதிற்குள் ஆழமாக பாய்ந்து சென்று, மனிதரை பிரிக்க மனிதன் உண்டாக்கிய சுவர்களையெல்லாம் உடைத்து தவிடுபொடியாக்கிவிடுகிறது. ஓர் உதாரணத்தைக் காண்க.

ஐரோப்பா முழுவதும் ஹிட்லர் போர் தொடுத்தபோது, ஒரே ஒரு கிறிஸ்தவ குழு மாத்திரம்—யெகோவாவின் சாட்சிகள்—அப்பாவி மக்களின் உயிரை கொன்று குவிப்பதில் சேரமாட்டோம் என்று உறுதியாக மறுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் உடன் மனிதருக்கு எதிராக “பட்டயம் எடுப்பதில்லை.” கடவுளை பிரியப்படுத்தவேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் இந்த நிலைநிற்கையை எடுத்தனர். (ஏசாயா 2:3, 4; மீகா 4:3, 5) எந்த ஒரு தேசத்தாரும், குலத்தாரும் எவ்வகையிலும் ஒருவரைக் காட்டிலும் மற்றவர் உயர்ந்தவர் அல்ல என்று பைபிள் போதிப்பதை அவர்கள் உண்மையில் நம்பினார்கள். (கலாத்தியர் 3:28) சமாதானத்தை விரும்பி, நிலைநிற்கை எடுத்ததற்காக யெகோவாவின் சாட்சிகளைத்தான் முதலில் சித்திரவதை முகாம்களில் போட்டார்கள்.—ரோமர் 12:18.

ஆனால், பைபிளைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொண்ட எல்லாரும் இதே நிலைநிற்கையை எடுக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து சிறிது காலத்திற்குப் பிறகு, மார்ட்டின் நிமலர் என்ற பிரபல ஜெர்மன் புராட்டஸ்டண்ட் பாதிரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “[போருக்காக] கடவுளைக் குற்றம்சாட்ட விரும்புபவர்கள் எவரும் கடவுளுடைய வார்த்தையை அறியாதவர்கள், அல்லது அறிய விரும்பாதவர்கள். . . . காலங்காலமாக, போர்களையும் படைகளையும் படைக்கருவிகளையும் ஆசீர்வதிப்பதற்கு கிறிஸ்தவ சர்ச்சுகள் அடிக்கடி தங்களை மனமுவந்து அளித்திருக்கின்றன . . . போரில் தங்களுடைய எதிரிகள் அழிக்கப்படுவதற்காக கொஞ்சம்கூட கிறிஸ்தவ தன்மையே இல்லாமல் ஜெபம் செய்திருக்கின்றன. இவையனைத்தும் நம்முடைய தவறு, நம்முடைய முன்னோர்களின் தவறு, எவ்விதத்திலும் கடவுளை குற்றம்சாட்ட முடியாது. இன்றைய கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு மத உட்பிரிவு என்று தவறுதலாக அழைக்கப்படுகிற ஊக்கமிக்க பைபிள் மாணாக்கர்களுக்கு (Earnest Bible Students) [யெகோவாவின் சாட்சிகள்] முன்பு, வெட்கத்தோடு தலைகுனிந்து நிற்கிறோம்; இராணுவ சேவை செய்ய மறுத்ததினாலும் மனிதர்களைச் சுட்டுக்கொல்ல மறுத்ததினாலும் அவர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் சித்திரவதை முகாம்களுக்குச் சென்றனர், மரிக்க[வும்] செய்தனர்.”12

இன்றுவரையாக, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்திற்காக புகழ்பெற்று விளங்குகிறார்கள். இதுவே அரேபியர்களையும் யூதர்களையும், குரோஷியர்களையும் செர்பியர்களையும், ஹூட்டுக்களையும் டுட்ஸிகளையும் ஒன்றாக இணைக்கிறது. இருப்பினும், மற்றவர்களை காட்டிலும் அவர்கள் மேம்பட்டவர்கள் என்பதால் இத்தகைய ஒற்றுமை உதயமாகவில்லை, ஆனால் பைபிள் செய்தியின் வல்லமையால் தூண்டப்படுவதாலேயே இது உதயமாகிறது என்று எந்த தயக்கமுமின்றி சாட்சிகள் ஒத்துக்கொள்கிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13.

மனநலத்தை முன்னேற்றுவிக்கும் நடைமுறையான வழிகாட்டி

ஒரு நபரின் மனநிலையும் உணர்ச்சிப்பூர்வமான நிலையும் அவரது உடல் நலத்தை அடிக்கடி பாதிக்கின்றன. உதாரணமாக, கோபத்தால் விளையும் கெட்ட பாதிப்புகளை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ரெட்ஃபார்டு வில்லியம்ஸும் அவருடைய மனைவி வெர்ஜினியா வில்லியம்ஸும் கோபம் கொல்லுகிறது என்ற அவர்களுடைய ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்கள்: “எதற்கெடுத்தாலும் சுரீர் சுரீர் என்று கோபப்படும் ஆட்கள்தான் இருதய வியாதிக்கும் (மற்ற அநேக வியாதிகளுக்கும்) பலியாகிறார்கள் என்பதை கைவசம் இருக்கும் பெரும்பாலான அத்தாட்சி காட்டுகிறது. அவர்களுக்கு வியாதி வர பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட சில காரணங்கள்: நண்பர்களின் எண்ணிக்கை குறைதல், கோபம் வரும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்தல், உயிருக்கு ஆபத்து தரும் பொருட்களை அதிகமாக சாப்பிடுதல் முதலியவை.”13

இப்படிப்பட்ட அறிவியல் ஆய்வுகளை செய்வதற்கு முன் எத்தனையோ ஆயிர வருடங்களுக்கு முன்பே, நம் உணர்ச்சிகளுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பை எளிமையாக, ஆனால் தெளிவாக சொல்லிவிட்டது பைபிள்: “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30; 17:22) பைபிள் இவ்வாறு ஞானமாக அறிவுரை தந்தது: “வெஞ்சினம் கொள்ளாதே.” “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே.”—சங்கீதம் (திருப்பாடல்கள்) 37:8, பொ.மொ.; பிரசங்கி 7:9.

கோபத்தை அடக்குவதைப் பற்றியும்கூட அறிவுக்கேற்ற நல்ல ஆலோசனை பைபிளில் உள்ளது. எடுத்துக்காட்டாக, நீதிமொழிகள் 19:11-ல் சொல்கிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” “விவேகம்” என்ற இந்த வார்த்தை, ஏதோ ஒரு விஷயத்துக்கான ‘காரணகாரியங்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவை’ குறிக்கும் எபிரெய வினைச் சொல்லிலிருந்து வருகிறது.14ஞானமுள்ள ஆலோசனை என்னவென்றால்: “செய்யும் முன் யோசி.” மற்ற ஆட்கள் பேசும் விதத்திற்கும் அல்லது நடந்துகொள்ளும் விதத்திற்கும் அடிப்படையான காரணத்தை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்வாறு முயற்சிப்பது ஒருவர் அதிக பொறுமையோடு இருப்பதற்கும் அடிக்கடி கோபப்படாமல் இருப்பதற்கும் உதவலாம்.—நீதிமொழிகள் 14:29.

மற்றொரு நடைமுறையான அறிவுரை கொலோசெயர் 3:13-ல் (NW) காணப்படுகிறது, அது சொல்கிறது: “ஒருவரை ஒருவர் தொடர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள், ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.” எரிச்சல் தரும் சிறு சிறு விஷயங்கள் நடப்பது வாழ்க்கையில் சகஜம்தான். ‘பொறுத்துக்கொள்ளுதல்’ என்ற சொற்றொடர் மற்றவர்களிடத்தில் நமக்கு பிடிக்காத விஷயங்களைக்கூட பொறுத்துக்கொள்வதை குறிப்பிடுகிறது. “மன்னிப்பது” என்பதன் அர்த்தம் மனக்கசப்பை விட்டொழித்தல் என்பதாகும். சில நேரங்களில் நம் மனக்கசப்புகளை மனதிற்குள்ளேயே வைத்து வெதும்புவதைவிட வெளியே கொட்டிவிடுதல் நல்லது. கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பது நம் சுமையை இன்னும் அதிகரிக்கும்.—“மனித நல்லுறவுக்கு நடைமுறையான வழிகாட்டி” என்ற பெட்டியைக் காண்க.

இன்று, ஆலோசனையும் வழிநடத்துதலும் கிடைக்கும் மூலங்கள் பல இருக்கின்றன. ஆனாலும், பைபிள் உண்மையில் ஈடு இணையற்றது. அதன் ஆலோசனை வெறும் கோட்பாடு அல்ல. அதன் அறிவுரை ஒருபோதும் நமக்குத் தீங்கு விளைவிப்பது அல்ல. இதற்குமாறாக, அதன் ஞானம் “உண்மையுள்ளவைகள்” என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. (சங்கீதம் 93:5) இன்னும் கூடுதலாக, பைபிளின் ஆலோசனை கால வரம்பற்றது. அது எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2,000 வருடங்கள் கடந்துசென்றாலும், அதன் வார்த்தைகள் இன்றும் பொருந்துகின்றன. அவை எந்நாட்டவருக்கும் எந்நிறத்தவருக்கும் ஒன்றுபோல பலனைத் தருகின்றன. பைபிள் வார்த்தைகள் சக்திவாய்ந்தவையும்கூட, அதாவது மக்களை நல்லவிதமாக மாற்றிவிடும் சக்திபடைத்தவை. (எபிரெயர் 4:12) இவ்வாறாக, அந்தப் புத்தகத்தை படிப்பதும், அதன் நியமங்களைப் பொருத்துவதும் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்பட்டதாக ஆக்கும்.

[பக்கம் 23-ன் பெட்டி]

நல்ல குடும்பங்களின் பண்புகள்

கல்வியாளராகவும் குடும்ப நிபுணராகவும் இருந்த ஒருவர் ஒரு பரவலான சுற்றாய்வை பல வருடங்களுக்கு முன் மேற்கொண்டார். அதில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ஆலோசனை நிபுணர்களை பேட்டிகண்டார். “நல்ல” குடும்பங்களில் கண்ட பண்புகளைப் பற்றி சொல்லும்படி அவர்களிடம் அவர் கேட்டார். இதில் அக்கறைதரும் விஷயம் என்னவென்றால், சகஜமாக காணப்பட்ட பண்புகள் என்று அவர்கள் பட்டியலிட்டு சொன்ன அனைத்தையும் ஏற்கெனவே பைபிள் ரொம்ப காலத்திற்கு முன் பரிந்துரை செய்துவிட்டது என்பதுதான்.

பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ளும் பழக்கங்களுக்கு பட்டியலில் முதலிடம் தரப்பட்டது. இதில் கருத்துவேறுபாடுகள் இருந்தால் அதை தீர்த்துக்கொள்ளும் முறைகள் உட்பட்டிருந்தன. ஆரோக்கியமான குடும்பங்களில் பொதுவாகவே, “யாரும், ஒருவர்மேல் ஒருவர் கோபம் கொண்டு படுக்கைக்குப் போகாமல்,” இருக்கும் பழக்கத்தை ஆய்வு நடத்திய ஆசிரியை கண்டார்.6 ஆனால், 1,900-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பே, பைபிள் இவ்வாறு அறிவுரை தந்தது: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” (எபேசியர் 4:26) பைபிள் காலங்களில், சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை நாட்களை கணக்கிடுவார்கள். ஆகவே, நவீன நிபுணர்கள் குடும்பங்களைப் பற்றி ஆய்வுசெய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே பைபிள் ஞானமாக அறிவுரை தந்திருக்கிறது: பிரிவிணை உண்டாக்கும் விஷயங்களை உடனே, அதாவது அந்த நாள் முடிந்து, மறுநாள் துவங்கும் முன்பே பேசித் தீர்க்க வேண்டும்.

நல்ல குடும்பங்கள், “சச்சரவை உண்டாக்கும் விஷயங்களை வெளியே புறப்படுவதற்கு முன்போ படுக்கைக்கு போவதற்கு முன்போ பேசமாட்டார்கள்” என்பதை அந்த ஆசிரியை கண்டார். “‘சரியான நேரம்’ என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் சொல்வது என் காதில் விழுந்தது.”7 அத்தகைய குடும்பங்கள் அவர்களுக்கே தெரியாமல் பைபிளில் 2,700 வருடங்களுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட நீதிமொழியை பின்பற்றினார்கள்: ‘ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.’ (நீதிமொழிகள் 15:23; 25:11) பைபிள் காலங்களில், வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட, பழங்களின் வடிவில் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், விலையுயர்ந்த, அழகான உடைமைகளாக கருதப்பட்டன என்பதை இந்த உவமை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இது, ஏற்ற சமயத்தில் சொல்லப்படும் வார்த்தைகளின் மதிப்பையும் அழகையும் சித்தரிக்கிறது. மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைமைகளில், சரியான நேரத்தில் சொல்லப்படும் சரியான வார்த்தைகள் மதிப்பு மிக்கவை.—நீதிமொழிகள் 10:19.

[பக்கம் 26-ன் பெட்டி]

மனித நல்லுறவுக்கு நடைமுறையான வழிகாட்டி

“நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” (சங்கீதம் 4:4) அநேக சந்தர்ப்பங்களில், மனதைப் புண்படுத்தும் சின்ன சின்ன விஷயங்கள் உட்பட்டிருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் இருப்பதே புத்தியுள்ள செயல். இவ்வாறு சச்சரவை தவிர்த்துவிடலாம்.

“பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.” (நீதிமொழிகள் 12:18) நீங்கள் பேசுவதற்குமுன் யோசியுங்கள். யோசிக்காமல் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை புண்படுத்துவதோடு, நட்புறவுகளையும் அழித்துவிடும்.

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை யெழுப்பும்.” (நீதிமொழிகள் 15:1) சாந்தமாக பிரதிபலிப்பதற்கு தன்னடக்கம் தேவை. ஆனால், அவ்வாறு செய்வது, பெரும்பாலும் பிரச்சினைகளைத் தணித்துவிட்டு, அமைதியான உறவுகளை முன்னேற்றுவிக்கிறது.

“சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.” (நீதிமொழிகள் 17:14) உங்களுக்கு கோபத்தைக் கிளறிவிடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும்போதே அவ்விடத்தை விட்டு நீங்கள் போய்விடுவது புத்திசாலித்தனம்.

“உள்ளத்தில் வன்மத்திற்கு இடங்கொடாதே; மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 7:9, பொ.மொ.) செயல்களுக்கு முன்னே பெரும்பாலும் உணர்ச்சிகளே முந்திக்கொள்கின்றன. சுருக் சுருக்கென்று எரிச்சல்படும் ஒரு ஆள் முட்டாளாகத்தான் இருப்பார். ஏனென்றால் அவரது போக்கு, வெடுக்கென்று வார்த்தைகளை கொட்டவோ, திடுதிப்பாக செயல்களை செய்யவோ அவரை வழிநடத்தும்.

[அடிக்குறிப்புகள்]

a இங்கே “ஒட்டிக்கொள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள தாவெக் என்ற எபிரெய வார்தை, “ஒருவரை பாசத்தோடும் பற்றுறுதியோடும் பற்றிக்கொண்டிருத்தல் என்ற கருத்தைத் தருகிறது,”4மத்தேயு 19:5-ல் சொல்லப்பட்டிருக்கும் “ஒட்டிக்கொள்வான்” என்ற கிரேக்க வார்த்தை, “பசைபோட்டு ஒட்டு,” “சிமெண்ட்போட்டு ஒட்டு,” “இரண்டையும் நெருக்கமாக இணைத்திடு” போன்ற அர்த்தம் தரும் வார்த்தையோடு தொடர்புடையது.5

b பைபிள் காலங்களில், “பிரம்பு” என்ற வார்த்தை (எபிரெய மொழியில் ஷெவத்) மேய்ப்பன் பயன்படுத்திய “கோலை” அல்லது “தடியை” குறிப்பிட்டது.10 இந்தச் சூழமைவில் அதிகாரம் என்னும் பிரம்பு, அன்பான வழிநடத்துதலையே குறிக்கிறது, பயங்கர கொடூரமாக நடத்துவதை அல்ல.—சங்கீதம் 23:4-ஐ ஒப்பிடுக.

c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பின்வரும் அதிகாரங்களைக் காண்க: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்,” “அடங்காத பிள்ளை ஒன்று வீட்டில் இருக்கிறதா?” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்.”

[பக்கம் 24-ன் படம்]

குடும்ப வாழ்க் கையைப் பற்றி பைபிள் தெளிவான, நியாயமான ஆலோசனையை வழங்குகிறது

[பக்கம் 25-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள்தான் முதலில் சித்திரவதை முகாம்களில் போடப்பட்டார்கள்