Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அகங்கார நகரை அழிக்கிறார் யெகோவா

அகங்கார நகரை அழிக்கிறார் யெகோவா

அதிகாரம் பதினான்கு

அகங்கார நகரை அழிக்கிறார் யெகோவா

ஏசாயா 13:1–14:⁠23

ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகம் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், அதாவது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அசீரியா கைப்பற்றிய சமயத்தில் எழுதப்பட்டது. சென்ற அதிகாரங்களில் பார்த்த பிரகாரமாக, நடக்கவிருக்கும் சம்பவங்களை ஏசாயா புத்தகம் மிகத் துல்லியமாக முன்னறிவிக்கிறது. இருந்தாலும், அசீரியா உலக வல்லரசாக விளங்கும் காலத்தை பற்றி மட்டுமே அது பேசுவதில்லை. நாடுகடத்தப்பட்ட யெகோவாவின் மக்கள் பாபிலோனின் பகுதியாகிய சிநேயாரிலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் திரும்பிவருவதைக்கூட அது முன்னறிவிக்கிறது. (ஏசாயா 11:11) ஏசாயா 13-ஆம் அதிகாரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தீர்க்கதரிசனத்தை விவரிக்கிறது. இது நிறைவேறுகையில், அவர்கள் திரும்புவதற்கான வழி பிறக்கும். அந்தத் தீர்க்கதரிசனம் இப்படி ஆரம்பமாகிறது: “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தரிசனத்தில் கண்ட, பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பு.”​—ஏசாயா 13:⁠1, NW.

‘அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணுவேன்’

2ஏசாயாவின் காலத்தில் யூதாவிற்கும் பாபிலோனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. எசேக்கியா ராஜா கடும் வியாதியுற்று, பின் குணமடைகிறார். பாபிலோனிலிருந்து தூதுவர்கள் வந்து, அவர் குணமடைந்ததைக் குறித்து வாழ்த்துகின்றனர். அசீரியாவிற்கு எதிராக போர் தொடுக்க எசேக்கியாவோடு சேர்ந்து கூட்டணி அமைக்கும் தந்திர நோக்கத்தோடு ஒருவேளை அவர்கள் இப்படி வாழ்த்திப் பேசியிருக்கலாம். எசேக்கியா ராஜா, முட்டாள்தனமாக அவர்களிடம் எல்லா பொக்கிஷங்களையும் காட்டிவிடுகிறார். அதன் காரணமாக, அவர் இறந்த பிறகு அந்த எல்லா பொக்கிஷங்களும் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்படும் என ஏசாயா அவரிடம் சொல்கிறார். (ஏசாயா 39:1-7) இது பொ.ச.மு. 607-⁠ல் நிறைவேறுகிறது. அப்போது எருசலேம் அழிக்கப்பட்டு, தேசத்தார் நாடுகடத்தப்படுகின்றனர். இருந்தாலும், கடவுளது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பாபிலோனிலேயே என்றென்றும் இருந்துவிட மாட்டார்கள். அவர்கள் தாயகம் திரும்ப வழிசெய்யப் போவதைப் பற்றி யெகோவா முன்னறிவிக்க ஆரம்பிக்கிறார்: “உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.” (ஏசாயா 13:⁠2) அந்தக் “கொடி,” உருவாகிக்கொண்டிருக்கும் உலக வல்லரசு. ‘உயர்ந்த பர்வதத்தின்மேல் உயர்த்தப்படவிருக்கும்’ அது, வெகு தூரத்திலிருந்தும் தெளிவாக தெரியும். அப்புதிய உலக வல்லரசு, பாபிலோனைத் தாக்க கட்டளை பெற்று, “பிரபுக்களின் வாசல்களுக்குள்,” அதாவது அந்த மகா நகரத்தின் மதில்களுக்குள் நுழைந்து அதை வென்று வீழ்த்தும். இவ்வாறு பாபிலோனை மகிமையான ஸ்தானத்திலிருந்து கவிழ்க்கும்.

3இப்போது யெகோவா சொல்வதாவது: “பரிசுத்தமாக்கப்பட்ட என் ஜனத்திற்கு நான் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் மேன்மையாய் களிகூரும் என் வீரர்கள். கேளுங்கள்! மலைகளிலே பெருங்கூட்டமான மக்களின் இரைச்சல்! கேளுங்கள்! ஒன்றுகூட்டப்பட்ட தேசங்களின், ராஜ்யங்களின், அமளியான இரைச்சல்! சேனைகளின் யெகோவா யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார்.” (ஏசாயா 13:3, 4, NW) கர்வம் பிடித்த பாபிலோனை தாழ்த்தப் போகும் இந்த ‘பரிசுத்தமாக்கப்பட்ட ஜனம்’ யார்? தேசங்களின் ஒருமித்த படையினரான ‘ஒன்றுகூட்டப்பட்ட தேசத்தாரே’ அவர்கள். பாபிலோனுக்கு எதிராக தொலைதூர மலைப்பிரதேசத்திலிருந்து அவர்கள் இறங்கி வருகின்றனர். “தொலைநாட்டிலிருந்தும் தொடு வானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்.” (ஏசாயா 13:5, பொ.மொ.) அவர்கள் எந்த கருத்தில் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறார்கள்? நிச்சயம், தூய்மையாக இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல. ஏனெனில், யெகோவாவின் சேவைக்கு கொஞ்சமும் மதிப்பு காட்டாத புறமத படையினர் அவர்கள். இருந்தாலும், எபிரெய வேதவாக்கியங்களில், ‘பரிசுத்தமாக்கப்படுதல்’ என்பதற்கு ‘கடவுளால் ஒரு சேவைக்காக ஒதுக்கப்படுதல்’ என அர்த்தம். இந்தக் கருத்தில் தேசங்களின் படைகளை யெகோவா பரிசுத்தமாக்கி, தமது கோபத்தை வெளிக்காட்ட அவற்றின் சுயநலத்தை சாதகமாக்கிக்கொள்வார். அசீரியாவை அவர் இப்படித்தான் பயன்படுத்தினார். இப்போது பாபிலோனையும் இவ்வாறு பயன்படுத்துவார். (ஏசாயா 10:5; எரேமியா 25:9) அதன்பிறகு பாபிலோனை தண்டிக்க மற்ற தேசங்களைப் பயன்படுத்துவார்.

4பாபிலோன் இன்னும் உலக வல்லரசாகவில்லை. இருந்தாலும், அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அது வரும் என்பதை அறிந்தவராக யெகோவா, அதன் வீழ்ச்சியையும் முன்னறிவிக்கிறார். ஏசாயாவின் மூலம் பின்வரும் அறிவிப்பை செய்கிறார்: “அலறுங்கள், கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.” (ஏசாயா 13:6) பாபிலோனின் பெருமைப் பேச்சு போய், அழுகையும் ஒப்பாரியும் கேட்கும். எதனால்? ‘யெகோவாவின் நாளினால்.’ அதாவது யெகோவா அவளுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப்போகும் அந்த நாளின் நிமித்தம்.

5பாபிலோனை சங்காரம் செய்வது எப்படி சாத்தியமாகும்? இதற்குரிய யெகோவாவின் சமயம் வரும்போது அந்நகரம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதுபோல் தோன்றும். தாக்கவரும் படைகள் பல சவால்களை சந்திக்க வேண்டும். முதலில் ஐப்பிராத்து நதியை கடக்க வேண்டும். நகரின் நடுவே பாய்ந்து குடிநீர் வழங்கும் இது, ஆழமான அகழியை நிரப்பி இயற்கை தற்காப்பும் அளிக்கிறது. அதன்பின் எவராலும் அசைக்க முடியாதபடி கம்பீரமாக நிற்கும் மகா இரட்டை மதில்களை வெல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, நகரில் ஏராளமான உணவு சேகரித்து வைக்கப்பட்டிருப்பதும் தாக்கவரும் படைக்கு சவாலாக இருக்கும். பாபிலோனின் கடைசி அரசரான நபோனிடஸ், “நகரெங்கும் எக்கச்சக்கமாக உணவுப் பொருட்களை சேகரித்து வைக்க அரும்பாடு பட்டார். இருபது ஆண்டுகளுக்கு உணவுப் பஞ்சமே வராதளவுக்கு அவர் சேகரித்து வைத்ததாய் கருதப்படுகிறது” என டெய்லி பைபிள் இல்லஸ்ட்ரேஷன்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.

6எனினும் தோற்றங்கள் ஏமாற்றமளிக்கலாம். ஏசாயா சொல்வதாவது: “ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.” (ஏசாயா 13:7, 8) நகரம் தாக்கப்படும்போது, மக்களின் அமைதி குலைந்து, பிள்ளை பெறுகிறவளுக்கு ஏற்படுவது போல திடீரென கடும் வேதனை உண்டாகும். பயத்தால் அவர்களது இருதயம் கரைந்துபோகும். எதிர்த்துத் தாக்க முடியாதபடி அவர்கள் கைகள் நெகிழ்ந்து போகும். பயத்தாலும் கடும் துயரத்தாலும் அவர்கள் முகங்கள் ‘நெருப்பாகும்.’ தங்கள் மகா நகரமா அழியப் போகிறது என நம்ப முடியாமல் ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பார்கள்.

7ஆனால் பாபிலோனுக்கு அழிவு நிச்சயம். பாபிலோன் கணக்குக்கொடுக்க வேண்டிய நாள் வரத்தான் செய்யும். ‘யெகோவாவின் அந்த நாள்’ வேதனைமிக்க நாள். உன்னத நியாயாதிபதி தமது கோபத்தை வெளிக்காட்டி, பாபிலோனின் பொல்லாத மக்களுக்கு தகுந்த தண்டனை அளிப்பார். தீர்க்கதரிசனம் சொல்வதாவது: “இதோ, தேசத்தைப் பாழாக்கி அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிர கோபமுமாய் வருகிறது.” (ஏசாயா 13:9) பாபிலோனுக்கு இருள்மிகுந்த காலம் காத்திருக்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எதுவுமே ஒளி தராததுபோன்ற நிலைமை ஏற்படும். “வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளிகொடாதிருக்கும்.”​—ஏசாயா 13:⁠10.

8பெருமைமிக்க இந்த நகருக்கு ஏன் இந்தக் கதி? யெகோவா சொல்வதாவது: “பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.” (ஏசாயா 13:11) கடவுளது மக்களை கொடூரமாக நடத்தியதற்காக பாபிலோனுக்கு தண்டனை வழங்கவே யெகோவா தம் கோபத்தைப் பொழிவார். பாபிலோனியர்களின் பொல்லாத்தனத்தால் முழு தேசமும் துன்பம் அனுபவிக்கும். இனியும் தலைக்கனம் பிடித்த கொடியர் யெகோவாவை பழிக்க முடியாது!

9யெகோவா சொல்வதாவது: “புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.” (ஏசாயா 13:12) ஆம், எவரும் குடியிருக்க முடியாதபடி நகரம் பாழாக்கப்படும். யெகோவா தொடர்ந்து சொல்வதாவது: “இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.” (ஏசாயா 13:13) பாபிலோனின் ‘வானம்,’ அதாவது அதன் தெய்வங்கள் அனைத்தும் அதிரும்; நகரம் உதவிக்காக தவிக்கும் சமயத்தில் உதவ முடியாமல் அவை கலங்கிப்போகும். பாபிலோனிய சாம்ராஜ்யமாகிய “பூமி,” தன்னிடத்தைவிட்டு நீங்கும். அழிந்துபோன சாம்ராஜ்யங்களில் இன்னொன்றாக சரித்திரத்தில் புதைந்துபோகும். “துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.” (ஏசாயா 13:14) பாபிலோனுக்கு ஆதரவளித்த அண்டை தேசத்தார் அனைவரும் அதைக் கைவிட்டு, புதிதாய் உருவாகிக்கொண்டிருந்த உலக வல்லரசோடு கூட்டு சேர்ந்துகொள்ள ஓடிப்போவார்கள். பாபிலோன் கொடிகட்டிப் பறந்த சமயத்தில் பல நகரங்களை கைப்பற்றி கடும் துயரில் ஆழ்த்தியது, இறுதியில் பாபிலோனே கைப்பற்றப்பட்டு கடும் துயரில் ஆழ்த்தப்படும்: “அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான். அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.”​—ஏசாயா 13:15, 16.

அழிப்பதற்காக கடவுள் பயன்படுத்தும் கருவி

10பாபிலோனை வீழ்த்த யெகோவா யாரைப் பயன்படுத்துவார்? கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்னதாகவே யெகோவா இதற்கு பதில் தருகிறார்: “இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை. ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.” (ஏசாயா 13:17-19) சீர்சிறப்புமிக்க பாபிலோன் சீரழியும். இதை நிறைவேற்ற யெகோவா, தொலைதூரத்திலிருக்கும் மேதிய மலைப்பிரதேசத்தின் படைகளை பயன்படுத்துவார். a இறுதியில், படுமோசமான சோதோம் கொமோராவைப் போலவே பாபிலோனும் பாழாக்கப்படும்.​—ஆதியாகமம் 13:13; 19:13, 24.

11ஏசாயாவின் நாட்களில், மேதியாவும் சரி பாபிலோனும் சரி அசீரியாவின் ஆதிக்கத்திலேயே இருக்கின்றன. சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, பொ.ச.மு. 632-⁠ல், இரண்டும் கூட்டு சேர்ந்துகொண்டு அசீரியாவின் தலைநகரான நினிவேயை வீழ்த்துகின்றன. இவ்வாறு பாபிலோன் உலக வல்லரசாவதற்கு வழி பிறக்கிறது. ஆனால் நூறே வருடங்களில் மேதியாவால் அழிவு வரும் என பாபிலோன் கற்பனையும் செய்திருக்காது! இப்படிப்பட்ட துணிச்சலான முன்னறிவிப்பை யெகோவா தேவனைத் தவிர எவரால் அளிக்க முடியும்!

12அழிப்பதற்கு தாம் பயன்படுத்தப்போகும் மேதிய படைகளைக் குறித்து யெகோவா சொல்கையில், அவை “வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்” இருக்கும் என்கிறார். எப்பொழுதும் படையெடுத்து கொள்ளையடித்து பழக்கப்பட்டுப்போன போர்வீரர்களுக்கு பொருந்தாத குணம்போல் தெரிகிறதே! பைபிள் அறிஞரான ஆல்பர்ட் பார்ன்ஸ் சொல்வதாவது: “கொள்ளைப்பொருட்களை அள்ளிச்செல்லும் ஆசை இல்லாமல் படையெடுப்பவர்களைக் காண்பது அரிதே.” அப்படியென்றால் மேதிய படைகளைப் பற்றி யெகோவா சொன்னது உண்மையா? உண்மைதான். ஜே. க்ளென்ட்வர்த் பட்லர் எழுதிய த பைபிள்-வர்க் சொல்வதைக் கவனியுங்கள்: “போர் புரிந்த தேசங்களிலேயே மேதியாவும், முக்கியமாக பெர்சியாவும்தான் பொன்னையும் வெள்ளியையும்விட வெற்றியையும் பேர் புகழையும் உயர்வாக மதித்தன. b பெர்சிய அரசன் கோரேசு, நாடுகடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலர்களை விடுதலை செய்தபோது, நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து கொள்ளையடித்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொன், வெள்ளி பாத்திரங்களை அவர்களிடம் கொடுத்தனுப்பியது ஏன் என இப்போது இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?​—எஸ்றா 1:7-11.

13மேதிய பெர்சிய வீரர்களுக்கு பொருளாசை இல்லாவிட்டாலும், பேரும் புகழும் பெற கொள்ளை ஆசை. எப்போதும் முதலிடத்தில் இருக்கவே விருப்பம் கொள்கிறார்கள். அதோடு, யெகோவா அவர்கள் இருதயங்களில் ‘சங்காரத்தின்’ நினைவை விதைக்கிறார். (ஏசாயா 13:6) ஆகவே உலோகத்தால் ஆன தங்கள் வில்களால் பாபிலோனை வெல்ல உறுதிபூண்டிருக்கிறார்கள். இந்த வில்களைக் கொண்டு அவர்கள் அம்புகள் எய்வது மட்டுமல்லாமல், பாபிலோனிய ஸ்திரீகளின் புத்திரர்களான எதிரி வீரர்களை அடித்தும் நொறுக்குவார்கள்.

14மேதிய-பெர்சிய படைகளின் தலைவரான கோரேசு பாபிலோனின் கோட்டைகளைக் கண்டு அஞ்சுவதில்லை. பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6 இரவு, ஐப்பிராத்து நதியை திசைதிருப்ப அவர் ஆணையிடுகிறார். தண்ணீர் மட்டம் குறைய குறைய, முழங்காலளவு தண்ணீரில் வீரர்கள் நடந்து சென்று, நகருக்குள் இரகசியமாக புகுந்துவிடுகின்றனர். கொஞ்சமும் எதிர்பார்த்திராத அச்சமயத்தில் பாபிலோனிய குடிமக்களை திடீரென தாக்குகின்றனர், பாபிலோனும் வீழ்ச்சியடைகிறது. (தானியேல் 5:30) இந்தச் சம்பவங்களை முன்னறிவிக்கும்படி யெகோவா தேவன் ஏசாயாவை ஏவுகிறார். இவ்வாறு, அவரே காரியங்களை வழிநடத்துகிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

15பாபிலோன் முற்றிலும் அழிக்கப்படுமா? யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்: “இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறை தோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை. காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும். அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின் காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது.” (ஏசாயா 13:20-22) ஆக, நகரம் முற்றிலும் பாழாக்கப்படும்.

16இது பொ.ச.மு. 539-⁠ல் உடனடியாக நிறைவேறவில்லை. இருந்தாலும் பாபிலோனைக் குறித்து ஏசாயா சொன்ன அனைத்தும் உண்மை என்பது இன்று தெள்ளத் தெளிவாகிவிட்டது. “பாபிலோன் பல நூற்றாண்டுகளாக, இன்றுவரையும், பயங்கர பாழ்க்கடிப்புக்கு சின்னமாக, இடிபாடுகளின் குவியலாக காட்சியளிக்கிறது. இந்தக் கோலத்தை பார்த்த பிறகும் ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசனங்கள் அச்சுப் பிசகாமல் நிறைவேறியதை எப்படித்தான் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியும்” என்கிறார் ஒரு பைபிள் விமர்சகர். பாபிலோன் வீழ்ச்சியடைந்து பாழாக்கப்படும் என்பதை ஏசாயாவின் நாட்களில் எந்த மனிதனாலும் சுயமாக முன்னறிவித்திருக்க முடியாது. ஏனெனில், ஏசாயா தனது புத்தகத்தை எழுதி சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனை வீழ்த்தினர்! இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே பாபிலோன் முற்றிலும் பாழாக்கப்பட்டது. பைபிள் உண்மையில் கடவுளால் ஏவப்பட்டதுதான் என்பதில் நம் விசுவாசத்தை இது அதிகரிக்கிறதல்லவா? (2 தீமோத்தேயு 3:16) மேலும், கடந்த காலங்களில் யெகோவா தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார் என்பதால் எதிர்காலத்திலும் மற்ற தீர்க்கதரிசனங்களை ஏற்ற சமயத்தில் நிறைவேற்றுவார் என முழுமையாக நம்பலாம்.

‘துக்கத்திலிருந்து இளைப்பாறுதல்’

17பாபிலோனின் வீழ்ச்சி இஸ்ரவேலுக்கு நிம்மதியைத் தரும். அவர்கள் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பும் வாய்ப்பளிக்கும். ஆகவே ஏசாயா இப்போது சொல்வதாவது: “கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள். ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.” (ஏசாயா 14:1, 2) இங்கே “யாக்கோபு” என்பது இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் குறிக்கிறது. இத்தேசத்தை நாடு திரும்ப அனுமதிப்பதன் மூலம் யெகோவா “யாக்கோபுக்கு” இரக்கம் காட்டுவார். ஆயிரக்கணக்கான அந்நியர்களும் அவர்களோடு வருவர். அவர்களில் அநேகர் ஆலய பணியாட்களாக இஸ்ரவேலர்களை சேவிப்பார்கள். இஸ்ரவேலர்களில் சிலர் தங்களை முன்பு சிறைப்படுத்தியவர்களை ஆளவும் செய்வார்கள். c

18நாடுகடத்தப்பட்டவர்களாக அவர்கள் பட்ட பாடுகளுக்கெல்லாம் முடிவு வரும். இப்போது யெகோவா ‘[அவர்கள்] துக்கத்தையும், [அவர்கள்] தத்தளிப்பையும், [அவர்கள்] அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி [அவர்களை] இளைப்பாறப்பண்ணுவார்.’ (ஏசாயா 14:⁠3) இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் இனியும் ஒடுக்கப்பட மாட்டார்கள். பொய் வணக்கத்தாரோடு வாழும் துக்கமும் தத்தளிப்பும் இனியும் கிடையாது. (எஸ்றா 3:1; ஏசாயா 32:18) பைபிள் தேசங்களும் மக்களும் என்ற ஆங்கில புத்தகம் இதைக் குறித்து சொல்வதாவது: “பாபிலோனியர்களின் தெய்வங்கள் அவர்களையே உரித்து வைத்திருந்தன. கோழைத்தனம், குடிகாரத்தனம், முட்டாள்தனம் என அவர்களது எல்லா கெட்ட குணங்களும் தெய்வங்களுக்கும் இருந்தன.” இப்படிப்பட்ட மட்டரகமான மத சூழலிலிருந்து விடுபட்டது எப்பேர்ப்பட்ட நிம்மதி!

19இருந்தாலும் யெகோவாவின் மக்கள், அவரால் கடுமையாக தண்டிக்கப்பட்டதற்குக் காரணமான அவர்களது பொல்லாப்பை விட்டு மனந்திரும்ப வேண்டும். அப்போது மட்டுமே அவரது இரக்கத்தைப் பெறுவார்கள். (எரேமியா 3:25) அவர்கள் மனந்திறந்து இதயப்பூர்வமாக பாவங்களை அறிக்கை செய்தால், யெகோவா மன்னிப்பை அருளுவார். (காண்க: நெகேமியா 9:6-37; தானியேல் 9:5.) இதே நியமம் இன்றும் பொருந்துகிறது. ‘பாவஞ்செய்யாத மனுஷனே இல்லை’ என்பதால் நம் அனைவருக்கும் யெகோவாவின் இரக்கம் தேவை. (2 நாளாகமம் 6:36) பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, இனியும் தவறுசெய்யாமல் குணப்படும்படி நம்மை அன்பாக அழைக்கிறார், இரக்கமுள்ள தேவனாகிய யெகோவா. (உபாகமம் 4:31; ஏசாயா 1:18; யாக்கோபு 5:16) அவ்வாறு செய்தால் அவரது தயவை பெறுவோம், ஆறுதலையும் பெறுவோம்.​—சங்கீதம் 51:1; நீதிமொழிகள் 28:13; 2 கொரிந்தியர் 2:⁠7.

பாபிலோனுக்கு எதிரான ‘ஏளனப் பாடல்’

20பாபிலோன் உலக வல்லரசாக உயர்ந்தோங்குவதற்கு 100 வருடங்களுக்கும் முன்பாகவே, அதன் வீழ்ச்சியைக் கண்டு உலகம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை ஏசாயா முன்னறிவிக்கிறார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுபடப்போகும் இஸ்ரவேலர்களுக்கு முன்கூட்டியே இவ்வாறு கட்டளையிடுகிறார்: “பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக்கூறு: ‘ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே! தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார். அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்; பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.’” (ஏசாயா 14:4-6, பொ.மொ.) மற்ற தேசங்களை படையெடுத்து வென்று, சுதந்தர ஜனங்களை அடிமைப்படுத்துவதற்கே பாபிலோன் பெயர்பெற்றது. அதன் வீழ்ச்சி, ‘ஏளனப் பாடலோடு’ கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! அதுவும், நேபுகாத்நேச்சார் முதற்கொண்டு நபோனிடஸ்/பெல்ஷாத்சார் வரை, பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் பொன்னான காலத்தில் அரசாண்டோருக்கு குறிப்பாக ஏறெடுக்கப்படும் பாடல் இது!

21அதன் வீழ்ச்சியால் என்னே மாற்றம் உண்டாகும்! “பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள். தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்துகிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.” (ஏசாயா 14:7, 8) பாபிலோனிய அரசர்கள் மற்ற தேசத்து ராஜாக்களை மரங்களைப் போல் வெட்டி இஷ்டப்படி ஆட்டிப்படைத்தனர். இப்போதோ அவர்கள் ஆட்டமெல்லாம் அடங்கிவிட்டது. பாபிலோனே மரம்போல் வெட்டப்பட்டு சாய்ந்திருக்கிறது!

22பாபிலோனின் வீழ்ச்சியைக் கண்டு பிரேதக் குழிக்கே ஆச்சரியம்! “கீழேயுள்ள பாதாளம் உன்னிமித்தம் விழித்தெழுந்து நீ வரும்போது எதிர்கொள்ளும்படி மரித்தோரை, பூமியில் அதிபதியாக இருந்தவரையெல்லாம் எழுப்பி ஜாதிகளின் சகல ராஜாக்களையும் சிங்காசனங்கள்விட்டு எழுந்திருக்கப் பண்ணுகிறது. அவர்களெல்லாரும் உன்னைக் காணவே: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயே! [“வலுவிழந்து போனாயே!,” பொ.மொ.] எங்களுக்குச் சமானமானாயே! என்று சொல்லுவார்கள். உன் ஆடம்பரமும் உன் வாத்திய முழக்கமும் பாதாளத்திலே தள்ளுண்டுபோயின; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.” (ஏசாயா 14:9-11, தி.மொ.) என்னே கருத்தாழமிக்க வர்ணனை! பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு முந்தைய அரசர்களையெல்லாம் பிரேதக் குழி எழுப்புவதுபோல் காட்டப்படுகிறது. பாபிலோனிய அரசவம்சத்தை வரவேற்க எழுந்திருக்கும் அந்த அரசர்கள் அதை பரிகாசம் செய்கிறார்கள். விலையுயர்ந்த மெத்தைக்கு பதிலாக புழுக்களின் மீதும் விலையேறப்பெற்ற போர்வைக்கு பதிலாக பூச்சிகளை போர்த்திக்கொண்டும் நாதியற்று கிடக்கும் அதைப் பார்த்து பரிகாசம் செய்கிறார்கள்.

‘காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போல்’

23ஏசாயா ஏளனப் பாடலைத் தொடர்கிறார்: “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!” (ஏசாயா 14:12) சுயநலத்தாலும் கர்வத்தாலும் பாபிலோனிய ராஜாக்கள் தங்களை எல்லாருக்கும் மேலாக உயர்த்த முற்படுகிறார்கள். அதிகாலையில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போல் அவர்கள் செருக்குடன் அதிகாரம் செலுத்துகிறார்கள். முக்கியமாக, அசீரியாவினால் சாதிக்க முடியாததை சாதித்துவிட்ட தலைக்கனம் நேபுகாத்நேச்சாருக்கு! அதாவது எருசலேமை வென்றுவிட்ட மகா செருக்கு. கர்வம் மிகுந்த பாபிலோனிய அரசகுலம் இப்படிச் சொல்வதாக ஏளனப் பாடல் விவரிக்கிறது: “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே [“சந்திப்பு மலையிலே,” NW] வீற்றிருப்பேன் . . . நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன்.” (ஏசாயா 14:13, 14) இதைவிட மட்டுக்குமீறிய செயல் வேறு ஏதேனும் உண்டோ!

24தாவீதின் அரச வம்சத்து ராஜாக்களை நட்சத்திரங்களுக்கு ஒப்பிடுகிறது பைபிள். (எண்ணாகமம் 24:17) தாவீது முதற்கொண்டு அந்த ‘நட்சத்திரங்கள்’ சீயோன் மலையிலிருந்து ஆட்சிபுரிந்தன. சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டிய பிறகு, முழு நகரமும் சீயோன் என அழைக்கப்பட்டது. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ், இஸ்ரவேல் ஆண்கள் அனைவரும் ஆண்டுக்கு மூன்று முறை சீயோனுக்கு பிரயாணம் செய்யுமாறு கட்டளையிடப்பட்டனர். இவ்வாறு அது “சந்திப்பு மலை” ஆனது. யூதேய ராஜாக்களை வென்று அம்மலையிலிருந்து அவர்களை நீக்கும் தீர்மானத்தோடு நேபுகாத்நேச்சார், அந்த ‘நட்சத்திரங்களுக்கு’ மேலாக தன்னை உயர்த்துவதாக அறிவிக்கிறார். அவர்களை வென்றதற்குரிய பெருமையை அவர் யெகோவாவிற்கு சேர்ப்பதில்லை. மாறாக, யெகோவாவிற்கு மட்டுமே சேர வேண்டிய புகழையும் கனத்தையும் அகம்பாவத்தோடு தனக்கு சேர்த்துக்கொள்கிறார்.

25அகம்பாவ பாபிலோனிய அரச வம்சத்திற்கு எப்பேர்ப்பட்ட மாறுதல் ஏற்படப் போகிறது! கடவுளது நட்சத்திரங்களுக்கும் மேலாக உயர பாபிலோன் கட்டிய மனக்கோட்டை சரியும். யெகோவா சொல்வதாவது: “நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும்செய்து, உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.” (ஏசாயா 14:15-17) பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படும் இந்த அரசவம்சமும், மற்ற எந்த மனுஷனையும் போலவே ஹேடீஸுக்கு (பாதாளத்திற்கு) தள்ளப்படும்.

26அப்படியென்றால், ராஜ்யங்களை வென்று, உலகை வனாந்தரமாக்கி, கணக்குவழக்கில்லாத நகரங்களை அழித்த வல்லரசின் நிலை என்ன? மக்களை சிறைபிடித்துச் சென்று, விடுதலைக்கு பேச்சே இல்லாதபடி நிரந்தரமாக சிறை வைத்த உலக வல்லரசின் கதி என்ன? பாபிலோனிய அரசவம்சத்திற்கு மரியாதைக்குரிய அடக்கமும் கிடைக்காது என யெகோவா சொல்கிறார்: “ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். நீயோ அழுகிப்போன கிளையைப் போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப் போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப் போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப் போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் [“கல்லறையில்லாதவனாய்,” தி.மொ.] எறிந்து விடப்பட்டாய். நீ அவர்களோடே அடக்கம் பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமை செய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.” (ஏசாயா 14:18-20) பண்டைய காலத்தில், ராஜாக்கள் மதிப்புக்குரிய விதத்தில் அடக்கம் செய்யப்படவில்லை என்றால் அவமானமாக கருதப்பட்டது. பாபிலோனின் அரசகுலத்தைப் பற்றியென்ன? ஒவ்வொரு அரசரும் மரியாதைக்குரிய விதத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நேபுகாத்நேச்சார் முதற்கொண்டு தோன்றிய அரச வம்சம், மொத்தத்தில் “அழுகிப்போன கிளையைப்போல” அப்புறப்படுத்தப்படுகிறது. அது போர்க்களத்தில் கொலையுண்ட படைவீரனைப் போல் கல்லறையில்லாமல் எறியப்படுகிறது. எப்பேர்ப்பட்ட அவமானம்!

27இறுதியில், ஏளனப் பாடல், படையெடுத்துவரும் மேதிய பெர்சியர்களுக்கு கட்டளைகளைக் கொடுக்கிறது: “மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்; நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது; பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது.” (ஏசாயா 14:21, பொ.மொ.) பாபிலோன் அழிவிலிருந்து மீளவே முடியாது. பாபிலோனிய அரசவம்சம் வேரோடு பிடுங்கப்படும். மறுமலர்ச்சி என்ற பேச்சிற்கே இடமில்லை. பாபிலோனியர்களின் எதிர்கால சந்ததிகள் ‘மூதாதையரின் தீச்செயல்களால்’ துன்பப்படும்.

28பாபிலோனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நமக்கு நல்ல பாடம் புகட்டுகிறது. பாபிலோனிய ராஜாக்களின் பாவங்களுக்கு அடிப்படை காரணமே மேன்மேலும் சிறப்படைய வேண்டுமென்ற அவர்களது வெறிதான். (தானியேல் 5:23) அதிகாரத்திற்கும் பதவிக்குமே அவர்கள் மனம் துடித்தது. மற்றவர்களை அடக்கி ஆளவே விரும்பினர். (ஏசாயா 47:5, 6) கடவுளுக்கு மட்டுமே உரிய மகிமையை தாங்கள் பெற்றுக்கொள்ள துடித்தனர். (வெளிப்படுத்துதல் 4:11) அதிகாரத்திலுள்ளவர்கள் அனைவருக்கும்​—⁠கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களுக்குக்கூட⁠—⁠இது எச்சரிக்கை அளிக்கிறது. தேசங்களாகட்டும் தனி நபர்களாகட்டும், மேன்மையடைய வேண்டுமென்ற வெறியையும் சுயநலத்தையும் ஆணவத்தையும் யெகோவா பொறுத்துக்கொள்ள மாட்டார்.

29“இப்பிரபஞ்சத்தின் தேவனான” பிசாசாகிய சாத்தானின் குணங்களில் ஒன்றே, பாபிலோனிய அரசர்கள் காட்டிய கர்வம். (2 கொரிந்தியர் 4:4) அவனும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அலைகிறான், யெகோவா தேவனைவிட உன்னதமடைய துடிக்கிறான். பாபிலோனிய ராஜாவின் ஆதிக்கத்தால் அவதியுற்ற மக்களைப் போலவே சாத்தானின் கெட்ட ஆசையால் மனிதவர்க்கம் முழுவதும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவிக்கிறது.

30வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மற்றொரு பாபிலோனைப் பற்றி வாசிக்கிறோம். அதுவே “மகா பாபிலோன்.” (வெளிப்படுத்துதல் 18:2) பொய் மத உலகப் பேரரசாகிய இது, ஆணவத்திற்கும் கொடூரத்திற்கும் ஒடுக்குதலுக்கும் பெயர்பெற்றிருக்கிறது. இதன் காரணமாக, மகா பாபிலோனும் ஏற்ற காலத்தில் ‘யெகோவாவின் நாளை’ சந்திக்க வேண்டும், அழிய வேண்டும். (ஏசாயா 13:6) 1919 முதற்கொண்டு, ‘பாபிலோன் மகா நகரம் விழுந்தது!’ என்ற செய்தி உலகெங்கும் அறிவிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 14:8) கடவுளுடைய ஜனங்கள் அதன் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவதை தடுக்க முடியாதபோது அது வீழ்ந்தது. விரைவில் அது முழுமையாக அழிக்கப்படும். பூர்வ பாபிலோனைக் குறித்து யெகோவா கட்டளையிட்டதாவது: “அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.” (எரேமியா 50:29; யாக்கோபு 2:13) மகா பாபிலோனுக்கும் அதே நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது.

31ஆகவே, ஏசாயா புத்தகத்தின் இந்த தீர்க்கதரிசனத்தினுடைய கடைசி பகுதி, பூர்வ பாபிலோனுக்கு மட்டுமல்ல மகா பாபிலோனுக்கும் பொருந்தும்: ‘நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் . . . பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பெளத்திரனையும் சங்கரிப்பேன் . . . அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன்.’ (ஏசாயா 14:22, 23) பூர்வ பாபிலோனின் இடிபாடுகள், மகா பாபிலோனுக்கு நேரிடப்போகும் கதியை படம்பிடித்துக் காட்டுகின்றன. உண்மை வணக்கத்தை நேசிப்போருக்கு என்னே ஆறுதல்! சாத்தானிய குணங்களான தற்பெருமையும் அகம்பாவமும் கொடூரமும் நம்மை அண்டாதபடி பார்த்துக்கொள்ள என்னே ஊக்குவிப்பு!

[அடிக்குறிப்புகள்]

a ஏசாயா மேதியர்களை மட்டுமே பெயர்சொல்லி குறிப்பிடுகிறார். ஆனால் மேதியரும் பெர்சியரும் ஏலாமியரும் மற்ற சிறு தேசத்தினரும் சேர்ந்தே பாபிலோனைத் தாக்குவர். (எரேமியா 50:9; 51:24, 27, 28) மேதியர்களையும் பெர்சியர்களையும் சேர்த்து ‘மேதியர்’ என்றே அண்டை தேசத்தார் அழைக்கின்றனர். மேலும் ஏசாயாவின் நாட்களில் மேதியாவே வல்லரசாக இருக்கிறது. கோரேசின் காலத்தில்தான் பெர்சியா அதிக ஆதிக்கம் பெறுகிறது.

b ஆனால் பிற்பாடு மேதியர்களும் பெர்சியர்களும் மிகுந்த பொருளாசையை வளர்த்துக்கொண்டதாக தெரிகிறது.​—⁠எஸ்றா 1:1-7.

c உதாரணத்திற்கு, தானியேல் மேதிய பெர்சியர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாபிலோனில் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுமார் 60 வருடங்களுக்குப் பிற்பாடு எஸ்தர், பெர்சிய அரசர் அகாஸ்வேருவின் ராணியானாள். மொர்தெகாய், பெர்சிய சாம்ராஜ்யம் முழுவதற்கும் தலைமை மந்திரி ஆனார்.

[கேள்விகள்]

1. ஏசாயா புத்தகம் எந்தக் காலம் வரையாக முன்னறிவிக்கிறது?

2. (அ) எசேக்கியாவிற்கு எவ்வாறு பாபிலோனோடு தொடர்பு ஏற்படுகிறது? (ஆ) ஏற்றப்படவிருக்கும் “கொடி” எது?

3. (அ) யெகோவா எழுப்பப்போகும் ‘பரிசுத்தமாக்கப்பட்ட ஜனம்’ யார்? (ஆ) புறமத படைகள் என்ன கருத்தில் ‘பரிசுத்தமாக்கப்பட்டுள்ளன’?

4, 5. (அ) பாபிலோனைக் குறித்து யெகோவா முன்னறிவிப்பது என்ன? (ஆ) பாபிலோனைத் தாக்குவோர் என்ன சவால்களை சந்திக்க வேண்டும்?

6. முன்னறிவிக்கப்பட்டபடியே பாபிலோன் தாக்கப்படுகையில் என்ன எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்?

7. வரவிருக்கும் ‘யெகோவாவின் நாள்’ எது, அந்நாளில் பாபிலோனுக்கு என்ன நேரிடும்?

8. பாபிலோனை யெகோவா வீழ்த்தப்போவது ஏன்?

9. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் பாபிலோனுக்கு காத்திருப்பது என்ன?

10. பாபிலோனை வீழ்த்த யெகோவா யாரைப் பயன்படுத்துவார்?

11, 12. (அ) மேதியா எவ்வாறு உலக வல்லரசாகிறது? (ஆ) மேதிய படைகளின் என்ன அபூர்வ குணத்தை தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது?

13, 14. (அ) கொள்ளைப்பொருட்களை விரும்பாதபோதிலும் மேதிய பெர்சிய வீரர்கள் எதற்கு ஆசைப்படுகின்றனர்? (ஆ) பாபிலோனின் பெருமைக்குரிய அரண்களை கோரேசு எவ்வாறு சமாளிக்கிறார்?

15. பாபிலோனுக்கு என்ன நேரிடும்?

16. பாபிலோனின் இன்றைய நிலை நமக்கு என்ன நம்பிக்கையளிக்கிறது?

17, 18. பாபிலோனின் வீழ்ச்சியால் இஸ்ரவேலுக்கு என்ன நன்மை உண்டாகும்?

19. யெகோவாவின் மன்னிப்பைப் பெற இஸ்ரவேல் என்ன செய்ய வேண்டும், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20, 21. பாபிலோனின் வீழ்ச்சியைக் கண்டு மற்ற தேசங்கள் எவ்வாறு களிகூருகின்றன?

22. பாபிலோனிய அரசவம்சத்தின் வீழ்ச்சிக்கு பாதாளம் எவ்வாறு பிரதிபலிப்பதாக வர்ணிக்கப்படுகிறது?

23, 24. பாபிலோனிய ராஜாக்கள் எவ்வாறு மட்டுக்குமீறிய அகம்பாவத்தைக் காட்டுகின்றனர்?

25, 26. பாபிலோனிய அரசகுலத்திற்கு எவ்வாறு அவமானமான முடிவு ஏற்படுகிறது?

27. மூதாதையரின் தீச்செயல்களால் பாபிலோனின் எதிர்கால சந்ததிகள் எவ்வாறு துன்பம் அனுபவிக்கும்?

28. பாபிலோனிய ராஜாக்களின் பாவங்களுக்கு அடிப்படை காரணம் எது, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?

29. பாபிலோனிய அரசர்களின் கர்வமும் பதவி ஆசையும் யாருக்குரிய குணங்கள்?

30. வேறு எந்த பாபிலோனைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது, அது என்ன குணங்களை வெளிக்காட்டியிருக்கிறது?

31. மகா பாபிலோனுக்கு விரைவில் சம்பவிக்கப்போவது என்ன?

[பக்கம் 178-ன் படம்]

பாபிலோன் காட்டு விலங்குகளின் வசிப்பிடமாகும்

[பக்கம் 186-ன் படங்கள்]

பூர்வ பாபிலோனைப் போல், மகா பாபிலோனும் இடிபாடுகளின் குவியலாகும்