Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அசீரியருக்கு அஞ்சாதே

அசீரியருக்கு அஞ்சாதே

அதிகாரம் பன்னிரண்டு

அசீரியருக்கு அஞ்சாதே

ஏசாயா 10:5-34

பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திபம். அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான நினிவேயிற்குள் துணிந்து நுழைந்தார் யோனா. எபிரெய தீர்க்கதரிசியான இவர், அமித்தாயின் குமாரன். கடும் எச்சரிக்கையை அளிக்கவே அங்கு சென்றார். “நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது” என யெகோவா அவரிடம் சொல்லியிருந்தார்.​—யோனா 1:2, 3.

2முதலில் அதைக் கேட்டவுடன் யோனா எதிர்திசையில் தர்ஷீசுக்கு ஓடிப்போனார். மனித கண்ணோட்டத்தில் யோனா செய்தது நியாயமாக தோன்றலாம். ஏனெனில் அசீரியர்கள் கொடூரர்கள். அசீரிய ராஜா ஒருவர் எதிரிகளை எந்தளவு கொடூரமாக நடத்தினார் என்பதை அவர் வாயாலேயே சொன்னார்: “அதிகாரிகளின் கால்களை கண்டந்துண்டமாக்கினேன் . . . மக்கள் அநேகரை உயிரோடு சிறைபிடித்துச் சென்றேன், இன்னும் அநேகரை உயிரோடு கொளுத்தினேன். சிலரது கைகளையும் விரல்களையும் துண்டித்தேன், சிலரது மூக்கையே அறுத்துப் போட்டேன்.” இப்படிப்பட்ட கொடூரர்கள் என்றாலும் யோனா இறுதியில் யெகோவாவின் செய்தியை அறிவித்தபோது பாவங்களிலிருந்து மனந்திரும்பினார்கள்! ஆகவே யெகோவா நினிவே பட்டணத்தை அப்போது அழிக்கவில்லை.​—யோனா 3:3-10; மத்தேயு 12:⁠41.

யெகோவா ‘கோலை’ எடுக்கிறார்

3யோனா இஸ்ரவேலருக்கும்தான் பிரசங்கிக்கிறார். அவர்களும் மனந்திரும்புகிறார்களா? (2 இராஜாக்கள் 14:25) அதுதான் இல்லை. அவர்கள் உண்மை வணக்கத்திற்கு துரோகம் செய்கிறார்கள். சொல்லப்போனால், ‘வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவிக்கிறார்கள்.’ அதுமட்டுமா, ‘அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போடுகிறார்கள்.’ (2 இராஜாக்கள் 17:16, 17) யெகோவா தீர்க்கதரிசிகளை அனுப்பி எச்சரித்தும் நினிவேயினரைப் போல் இஸ்ரவேலர் மனந்திரும்புவதில்லை. ஆகவே கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கிறார் யெகோவா.

4யோனா நினிவேயில் பிரசங்கித்த பிறகு கொஞ்ச காலத்திற்கு அசீரியர்களின் போர் வெறி தணிகிறது. a இருந்தாலும் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அசீரியா மீண்டும் படையெடுப்பதில் மும்முரமாகிறது. யெகோவா அதை ஆச்சரியமான விதத்தில் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்திற்கு யெகோவாவின் இந்த எச்சரிப்பை அளிக்கிறார் ஏசாயா தீர்க்கதரிசி: “என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளை கொடுப்பேன்.”​—ஏசாயா 10:5, 6.

5இஸ்ரவேலருக்கு என்னே வெட்கக்கேடு! அவர்களை தண்டிக்கும் ‘கோலாக’ கடவுள் ‘அசீரியனை,’ அதாவது புறமத தேசமான அசீரியாவை பயன்படுத்துகிறார். பொ.ச.மு. 742-⁠ல் அசீரிய ராஜா ஐந்தாம் சல்மனாசார் விசுவாச துரோக இஸ்ரவேல் தேசத்தின் தலைநகரான சமாரியாவை முற்றுகையிடுகிறார். சுமார் 90 மீட்டர் உயர குன்றின்மீது பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் சமாரியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு எதிரியை சமாளித்துவிடுகிறது. ஆனால் எவ்வித ராஜதந்திரமும் கடவுளது நோக்கத்தை தடைசெய்ய முடியாது. பொ.ச.மு. 740-⁠ல் சமாரியா வீழ்ந்து, அசீரிய கால்களால் மிதிபடுகிறது.​—2 இராஜாக்கள் 18:⁠10.

6யெகோவா தம் மக்களுக்கு பாடம் கற்பிக்க அசீரியாவை பயன்படுத்துகிறார். என்றாலும் அசீரியர்கள் யெகோவாவை மதிப்பதில்லை. ஆகவேதான் யெகோவா தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “அவனோ [அசீரியன்] அப்படி எண்ணுகிறதுமில்லை அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.” (ஏசாயா 10:⁠7) அசீரியனை தம் நோக்கத்தை நிறைவேற்றும் கருவியாக பயன்படுத்தவே யெகோவா எண்ணுகிறார். ஆனால் அசீரியனது எண்ணமே வேறு. அவன் இருதயம் இன்னும் பெரிய லட்சியம் கொள்கிறது. அப்போதைய உலகையே வளைத்துப் பிடிக்க திட்டமிடுகிறது!

7இஸ்ரவேல் அல்லாத அநேக நகரங்களை அசீரியன் கைப்பற்றியிருந்தான். முன்பு அந்நகரங்களை ஆண்டுவந்த ராஜாக்கள் இப்போது அசீரிய ராஜாவின் சிற்றரசர்களாக அல்லது பிரபுக்களாக சேவிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, “என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?” என அசீரியன் பெருமை பேசுகிறான். (ஏசாயா 10:⁠8) முக்கிய நகரங்களின் பொய் கடவுட்களால் தங்கள் வணக்கத்தாரை அழிவிலிருந்து காக்க முடியவில்லை. சமாரிய குடிமக்கள் வணங்கும் பாகால், மோளேக்கு, பொன் கன்றுக்குட்டிகள் போன்ற எவையும் நகரை பாதுகாக்க முடியாது. யெகோவாவை விட்டு நீங்கிய சமாரியா இனி அவர் உதவியை எதிர்பார்க்கவே முடியாது. இன்று யெகோவாவை விட்டு நீங்குவோர், சமாரியாவுக்கு ஏற்பட்ட கதியை நினைவில் கொள்ளட்டும்! இந்த சமாரியாவையும் மற்ற நகரங்களையும் கைப்பற்றிய அசீரியன் இப்படி பெருமை பேசுவதில் ஆச்சரியமில்லை: “கல்னோ பட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப் போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப் போலானதில்லையோ?” (ஏசாயா 10:⁠9) அசீரியனைப் பொறுத்தவரை இந்த எல்லா நகரங்களும் சமமே, அவை அனைத்தும் வாரிச்செல்ல வேண்டிய கொள்ளைப்பொருட்களே.

8இருந்தாலும் அசீரியன் இப்படி அளவுக்கு மிஞ்சி பெருமையடிக்கிறான்: “எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ.” (ஏசாயா 10:10, 11) அசீரியன் ஏற்கெனவே தோற்கடித்த ராஜ்யங்களின் விக்கிரகங்களோடு ஒப்பிட, எருசலேமிலும் சமாரியாவிலும் இருக்கும் விக்கிரகங்கள் வெகு குறைவு. ‘சமாரியாவையே வீழ்த்திவிட்டேன், இப்போது எருசலேம் எம்மூலைக்கு?’ என அவன் கணக்கிட்டிருக்கலாம்.

9வீண்பெருமைக்காரன்! எருசலேமைக் கைப்பற்ற யெகோவா அவனை விடமாட்டார். யூதா உண்மை வணக்கத்தில் எவ்வித குற்றங்குறையில்லாமல் இருக்கிறது என சொல்ல முடியாதுதான். (2 இராஜாக்கள் 16:7-9; 2 நாளாகமம் 28:24) சொல்லப்போனால் விசுவாச துரோகத்தின் காரணமாக அசீரிய படையெடுப்பின்போது யூதாவுக்கு மிகுந்த கேடுண்டாகும் என யெகோவா எச்சரித்துள்ளார். ஆனால் எருசலேமோ அழியாது. (ஏசாயா 1:7, 8) அசீரியர்கள் படையெடுத்து வரும்போது எருசலேமை ஆண்டுவருபவர் எசேக்கியா. அவர் தன் தகப்பன் ஆகாஸைப் பின்பற்றுவதில்லை. ஆட்சி செய்ய ஆரம்பித்து ஒரே மாதத்தில் எசேக்கியா ஆலய கதவுகளை திறந்து உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுகிறார்!​—2 நாளாகமம் 29:3-5.

10ஆக, எருசலேமை தாக்க அசீரியன் போடும் திட்டத்தை யெகோவா ஆதரிப்பதில்லை. கர்வம்பிடித்த அந்த உலக வல்லரசை கணக்குக் கேட்பதாக அவர் உறுதியளிக்கிறார்: “ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும் போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.”​—ஏசாயா 10:⁠12.

யூதாவும் எருசலேமும் தாக்கப்படுகின்றன!

11பொ.ச.மு. 740-⁠ல் வட ராஜ்யம் வீழ்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய அசீரிய ராஜா சனகெரிப் எருசலேமுக்கு எதிராக படையெடுக்கிறார். அவர் தலைக்கனத்தோடு தீட்டும் திட்டத்தை ஏசாயா கவிதை நடையில் விவரிக்கிறார்: “நான் ஜனங்களின் எல்லைகளை அகற்றுவேன், அவர்கள் பண்டகசாலைகளை சூறையாடுவேன், வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்துவேன். ஒரு குருவிக்கூட்டை எடுப்பதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியை எடுக்கும்; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொள்வேன், ஒருவரும் செட்டையை அசைப்பதுமில்லை, வாயைத் திறப்பதுமில்லை, கீச்சென்று சப்தமிடுவதுமில்லை.” (ஏசாயா 10:13, 14, NW) சமாரியாவும் மற்ற நகரங்களுமே வீழ்ந்துவிட்டன, இனி எருசலேம் விழுவதா கஷ்டம் என சனகெரிப் நினைத்திருக்கலாம். நகரம் அரைமனதோடு எதிர்தாக்குதல் செய்யலாம், ஆனால் கீச் என்ற சிறு சப்தமும்கூட எழுப்புவதற்கு முன்பாகவே குடியினர் அடக்கப்படுவர். அவர்கள் ஆஸ்தி, கைவிடப்பட்ட கூட்டிலுள்ள முட்டைகளைப் போல் சுலபமாக வாரிக்கொள்ளப்படும்.

12இருந்தாலும் சனகெரிப் ஒரு விஷயத்தை மறுந்துவிட்டார். சமாரியா வீழ்ந்ததற்கு காரணம், அதன் விசுவாச துரோகமே. துரோகத்திற்கு தக்க தண்டனையையே அது பெற்றது. ஆனால் இப்போது எருசலேமோ, எசேக்கியா ராஜாவின் ஆட்சியில் மீண்டும் உண்மை வணக்கத்தின் கோட்டையாக திகழ்கிறது. ஆகவே எருசலேம் மீது கை வைக்க துணியும் எவரையும் யெகோவா பஸ்பமாக்கிவிடுவார்! சீற்றத்தோடு ஏசாயா இப்படிக் கேட்கிறார்: “வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத்தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?” (ஏசாயா 10:15, பொ.மொ.) அசீரிய சாம்ராஜ்யம் யெகோவாவின் கைக்கருவி மட்டுமே. மரம் அறுப்போரும் தச்சரும் மேய்ப்பரும் கோடரியை, ரம்பத்தை, கைத்தடியை, அல்லது கோலை வைத்திருப்பது போலத்தான் அசீரியாவை யெகோவா கையில் வைத்திருக்கிறார். அவரை எதிர்த்து மேன்மை பாராட்ட கோலுக்கு என்னே துணிச்சல்!

13அசீரியனுக்கு என்னவாகும்? “சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை [“பாழாக்கும் கொள்ளைநோயை,” NW] அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப் போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும். காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.” (ஏசாயா 10:16-19) யெகோவா அசீரிய ‘கோலை’ மட்டம் தட்டிவிடுவார்! அசீரிய படையின் ‘கொழுத்தவர்கள்,’ அதாவது பலம்பொருந்திய வீரர்கள் ‘பாழாக்கும் கொள்ளை நோயால்’ பீடிக்கப்படுவார்கள். அவர்கள் வலிமையிழந்து போவார்கள்! முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் போல அவன் தரைப்படைகள் இஸ்ரவேலின் ஒளியாகிய யெகோவா தேவனால் தகிக்கப்படும். அவனுடைய ‘வனத்தின் மகிமையான’ படைத் தளபதிகள் அழிவர். அசீரியனை யெகோவா தீர்த்துக்கட்டிய பிறகு மீந்திருக்கும் அதிகாரிகளை ஒரு சிறுபிள்ளையே விரல்விட்டு எண்ணிவிடுவான்!​—ஏசாயா 10:33, 34-ஐயும் காண்க.

14இருந்தாலும், பொ.ச.மு. 732-⁠ல் எருசலேமில் வாழ்ந்துவரும் யூதர்களுக்கு அசீரியா தோல்வியடையும் என்பதை நம்ப முடிவதில்லை. அசீரியர்கள் படைதிரண்டு நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றனர். ஏற்கெனவே அவர்கள் கையில் சிக்கிய யூத நகரங்களின் பட்டியலைப் பாருங்கள்: ‘ஆயாத் . . . மிக்ரோன் . . . மிக்மாசு . . . கேபா . . . ராமா . . . சவுலின் ஊராகிய கிபியா . . . காலீம் . . . ஆனதோத் . . . லாயீஷ் . . . மத்மேனா . . . கேபிம் . . . நோபு.’ (ஏசாயா 10:28-32அ) b இந்தப் படையினர் எருசலேமிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த லாகீசையே எட்டிவிடுகின்றனர். விரைவில், மாபெரும் அசீரிய படை நகரை அச்சுறுத்துகிறது. “சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுகிறான்.” (ஏசாயா 10:32ஆ) இனியும் அசீரியனுக்கு ஏது தடை?

15அரண்மனையில் எசேக்கியா ராஜா கலக்கமடைகிறார். தன் வஸ்திரங்களைக் கிழித்து இரட்டு உடுத்துக்கொள்கிறார். (ஏசாயா 37:1) யூதாவின் சார்பாக யெகோவாவை விசாரித்துக் கேட்கும்படி ஆட்களை ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்புகிறார். “பயப்பட வேண்டாம் . . . நான் நிச்சயமாக இந்நகரை காத்தருள்வேன்” என்ற யெகோவாவின் பதிலோடு அவர்கள் விரைந்து வருகிறார்கள். (ஏசாயா 37:6, 35, NW) எனினும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு திரண்டிருக்கும் அசீரிய படை பீதியை கிளப்புகிறது.

16விசுவாசத்தால் மட்டுமே எசேக்கியா ராஜா இந்தக் கடும் சோதனையை எதிர்ப்பட முடியும். விசுவாசம் என்பது ‘காணப்படாதவைகளின் நிச்சயம்.’ (எபிரெயர் 11:⁠1) கண்ணுக்கு புலப்படாதவற்றை நம்புவதைக் குறிக்கிறது. அதேசமயம் அறிவின் அடிப்படையில் நம்புவதைக் குறிக்கிறது. ஆகவே யெகோவா முன்னதாகவே சொன்ன இந்த ஆறுதலான வார்த்தைகள் எசேக்கியாவின் மனதில் இருந்திருக்கும்: “சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; . . . இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பி வரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.” (ஏசாயா 10:24-26) c கடவுளது மக்கள் இக்கட்டில் தத்தளித்த சமயங்கள் இருந்திருக்கின்றன. எசேக்கியாவின் மூதாதையர் செங்கடலில் எகிப்திய பெரும் படையால் துடைத்தழிக்கப்படும் தறுவாயில் இருந்தனர். நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிதியோன் காலத்தில் மீதியானிய அமலேக்கிய படைகள் இஸ்ரவேலுக்கு எதிராக மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் திரண்டு வந்தன. ஆனாலும் அந்த இரு சந்தர்ப்பங்களிலுமே யெகோவா தம் மக்களைக் காப்பாற்றினார்.​—யாத்திராகமம் 14:7-9, 13, 28; நியாயாதிபதிகள் 6:33; 7:21, 22.

17அந்தச் சந்தர்ப்பங்களைப் போலவே இப்போதும் யெகோவா தம் மக்களைக் காப்பாற்றுவாரா? ஆம் என அவரே சொல்கிறார்: “அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் [“தைலத்தின் காரணமாக நிச்சயமாகவே,” NW] நுகம் முறிந்துபோம்.” (ஏசாயா 10:27) கடவுளின் மக்களது தோளிலிருந்தும் கழுத்திலிருந்தும் அசீரிய நுகம் நீக்கப்படும். சொல்லப்போனால் அது ‘முறிக்கப்படும்.’ ஆம், அது முறிக்கப்படுகிறது! 1,85,000 அசீரியர்களை யெகோவாவின் தூதன் ஒரே இரவில் கொன்று குவிக்கிறார். இவ்வாறு அசீரியர்களின் அச்சுறுத்துதல் முடிவுக்கு வருகிறது, அவர்கள் மீண்டும் யூதாவின் மண்ணில் கால் வைக்க துணிவதே இல்லை. (2 இராஜாக்கள் 19:35, 36) ஏன்? “தைலத்தின் காரணமாக.” தாவீதின் வம்சத்தில் வந்த எசேக்கியா ராஜாவை அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்ட தைலத்தை இது குறிக்கலாம். இவ்வாறு, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன்” என்ற வாக்குறுதியை யெகோவா காப்பாற்றுகிறார்.​—2 இராஜாக்கள் 19:⁠34.

18இந்த அதிகாரத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட ஏசாயாவின் பதிவுகள் 2,700 ஆண்டுகளுக்கும் முன்பு யூதாவில் நடந்த சம்பவங்களை விவரிக்கின்றன. ஆனால் அந்த சம்பவங்கள் இன்றைக்கும் மிகுந்த அர்த்தமுள்ளவை. (ரோமர் 15:4) அப்படியென்றால் மெய்சிலிர்க்க வைக்கும் இந்த உண்மைக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு​—⁠சமாரிய குடிமக்கள், எருசலேம் மக்கள், அசீரியர்கள் ஆகியோருக்கு​—⁠ஒத்தவர்கள் இன்று உண்டா? ஆம் உண்டு. கிறிஸ்தவமண்டலம் யெகோவாவை வணங்குவதாக சொல்லிக்கொண்டாலும் விக்கிரகங்களை வணங்கிய சமாரியாவைப் போல் பச்சை துரோகம் செய்கிறது. ஆண்டாண்டுகளாக கிறிஸ்தவமண்டலம் பயன்படுத்தியிருக்கும் தூபம், மெழுகுவர்த்தி, புனித நீர், பாதிரியார் அங்கி, விக்கிரகம் ஆகிய “அனைத்தும் புறமதங்களில் தோன்றியவை” என கிறிஸ்தவ கோட்பாடு தோன்றிய வரலாறு என்ற ஆங்கில புத்தகத்தில் ரோமன் கத்தோலிக்கரான ஜான் ஹென்றி கார்டினல் நியூமான் சொல்கிறார். சமாரியாவின் விக்கிரகாராதனையை யெகோவா எந்தளவுக்கு வெறுத்தாரோ அந்தளவுக்கு கிறிஸ்தவமண்டலத்தின் பொய் வணக்கத்தையும் வெறுக்கிறார்.

19யெகோவாவின் கோபத்தைக் குறித்து அவரது சாட்சிகள் பல ஆண்டுகளாக கிறிஸ்தவமண்டலத்தை எச்சரித்து வந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, “‘உலகத்தின் ஒளி’ கிறிஸ்தவமண்டலமா கிறிஸ்தவமா?” என்ற பொதுப் பேச்சு 1955-⁠ல் உலகெங்கும் கொடுக்கப்பட்டது. உண்மையான கிறிஸ்தவ போதகத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு வழிவிலகிச் சென்றுவிட்டது என அந்தப் பேச்சு தெளிவாக காட்டியது. அதன்பின் காரசாரமான இப்பேச்சின் பிரதிகள் அநேக நாடுகளைச் சேர்ந்த குருமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஓர் அமைப்பாக கிறிஸ்தவமண்டலம் எச்சரிக்கையை அசட்டை செய்துவிட்டது. அதை ‘கோலால்’ தண்டிப்பதைத் தவிர யெகோவாவிற்கு வேறு வழியில்லை.

20கலகக்கார கிறிஸ்தவமண்டலத்தை தண்டிக்க யெகோவா யாரைப் பயன்படுத்துவார்? வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரம் பதிலளிக்கிறது. “மகா பாபிலோன்” என்ற வேசியைப் பற்றி அது சொல்கிறது. கிறிஸ்தவமண்டலம் உட்பட உலக பொய் மதங்கள் அனைத்தையும் குறிக்கும் இந்த வேசி, ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடைய சிவப்புநிற மிருகத்தின்மேல் சவாரி செய்வதாக சொல்லப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 17:3, 5, 7-12) அந்த மிருகம் ஐக்கிய நாட்டு அமைப்பைக் குறிக்கிறது. d பூர்வ அசீரியன் சமாரியாவை அழித்ததுபோலவே இந்த சிவப்புநிற மிருகம், ‘வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடும்.’ (வெளிப்படுத்துதல் 17:16) ஆகவே நவீனநாளைய அசீரியர்கள் (ஐநா-வில் அங்கம் வகிக்கும் தேசங்கள்), கிறிஸ்தவமண்டலத்தை ஒரே வீச்சில் துடைத்தழிப்பர்.

21மகா பாபிலோன் அழிகையில் யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளும் அழிவார்களா? நிச்சயம் அழிய மாட்டார்கள். கடவுளுக்கு அவர்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை. உண்மை வணக்கம் ஒருபோதும் அழியாது. இருந்தாலும் மகா பாபிலோனை அழிக்கும் மூர்க்க மிருகம் யெகோவாவின் மக்களையும் பேராசையோடு விழுங்கப் பார்க்கும். இவ்வாறு கடவுளுடைய யோசனையை அல்ல, வேறொருவனது யோசனையை அது நிறைவேற்றும். அந்த வேறொருவன் யார்? பிசாசாகிய சாத்தானே.

22சாத்தான் கர்வத்தோடு தீட்டும் சதித்திட்டத்தை யெகோவா இப்படி அம்பலப்படுத்துகிறார்: “அந்நாளிலே . . . உன் [சாத்தானின்] இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், [பாதுகாப்பு] மதில்களில்லாமல் . . . நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன் . . . என்பாய்.” (எசேக்கியேல் 38:10-12) சாத்தான் இப்படித்தான் மனக்கணக்கு போடுவான்: ‘யெகோவாவின் சாட்சிகளை தாக்க தேசங்களை தூண்டிவிட்டால் என்ன, அவர்கள்தான் அரசியல் செல்வாக்கு ஏதுமில்லாமல் பாதுகாப்பின்றி இருக்கிறார்களே. எதிர்க்க திராணியில்லாத மக்கள் அவர்கள். கைவிடப்பட்ட கூட்டிலிருக்கும் முட்டைகளைப் போல் சுலபமாக அவர்களை வாரிக்கொள்ளலாம்!’

23ஆனால் தேசங்களே, ஜாக்கிரதை! யெகோவாவின் மக்கள்மீது கை வைத்தால், யெகோவாவின் கோபத்தை சந்திக்க நேரிடும்! யெகோவா தம் மக்களை நேசிக்கிறார். ஆகவே எசேக்கியாவின் நாட்களில் எருசலேமுக்காக சண்டையிட்டது போலவே நிச்சயம் இப்போதும் தம் மக்களுக்காக சண்டையிடுவார். நவீன நாளைய அசீரியன் யெகோவாவின் மக்களை அழிக்க முயலும்போது, உண்மையில் யெகோவா தேவனோடும் ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவோடுமே போரிடுவான். அப்போரில் அசீரியனுக்கு தோல்வி நிச்சயம். “ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்” என்கிறது பைபிள். (வெளிப்படுத்துதல் 17:14; ஒப்பிடுக: மத்தேயு 25:40.) அந்நாளைய அசீரியனைப் போலவே சிவப்புநிற மூர்க்க மிருகமும் ‘நாசமடையும்.’ அதைக் கண்டு அஞ்சி நடுங்க அவசியம் இருக்காது.​—வெளிப்படுத்துதல் 17:⁠11.

24உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவோடு மிகவும் நெருங்கியிருந்து அவரது சித்தத்திற்கு முதலிடம் தந்தால், பயமின்றி எதிர்காலத்தை சந்திக்கலாம். (மத்தேயு 6:33) அப்போது அவர்கள் எந்த ‘பொல்லாப்புக்கும் பயப்பட வேண்டி இருக்காது.’ (சங்கீதம் 23:4) மேலும், கடவுளது வலிமைமிக்க கரம் தண்டிப்பதற்காக அல்ல, ஆனால் எதிரிகளிடமிருந்து தங்களை காப்பதற்காகவே உயர்ந்திருப்பதை விசுவாசக் கண்களால் காண்பார்கள். அவர்கள் காதுகளோ, “பயப்படாதே” என்ற நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை கேட்கும்.​—ஏசாயா 10:⁠24.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கம் 203-ஐக் காண்க.

b தெளிவான புரிந்துகொள்ளுதலுக்காக, ஏசாயா 10:28-32 வசனங்கள், ஏசாயா 10:20-27-⁠க்கு முன்பாகவே கலந்தாலோசிக்கப்படுகின்றன.

c ஏசாயா 10:20-23 வசனங்களின் விளக்கத்திற்கு பக்கம் 155-⁠ல் “ஏசாயா இன்னும் தொலைவான எதிர்காலத்தை கணிக்கிறார்” என்ற பகுதியைக் காண்க.

d வேசியையும் சிவப்புநிற மிருகத்தையும் பற்றி கூடுதலான விளக்கத்திற்கு வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 34, 35-ஐக் காண்க. இது உவாட்ச் டவர் பைபிள் அண்டு ட்ராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[கேள்விகள்]

1, 2. (அ) யோனா அசீரியர்களிடம் பிரசங்கிக்காமல் ஓடிப்போனது மனித கண்ணோட்டத்தில் ஏன் நியாயமாக தோன்றலாம்? (ஆ) நினிவே பட்டணத்தார் யோனாவின் செய்திக்கு எப்படி பிரதிபலித்தனர்?

3. யெகோவாவின் தீர்க்கதரிசிகள் கொடுக்கும் எச்சரிப்புக்கு இஸ்ரவேலர்கள் எவ்வாறு நினிவே பட்டணத்தார் போல பிரதிபலிப்பதில்லை?

4, 5. (அ) ‘அசீரியன்’ யார், யெகோவா அவனை எவ்வாறு ‘கோலாக’ பயன்படுத்துகிறார்? (ஆ) சமாரியா எப்போது வீழ்ச்சியடைகிறது?

6. அசீரியன் எவ்வாறு யெகோவாவின் எண்ணத்தை மீறி செயல்பட லட்சியம் கொள்கிறான்?

7. (அ) “என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?” என்ற வாக்கியத்தை விளக்குக. (ஆ) யெகோவாவை விட்டு நீங்குவோர் எந்த உதாரணத்தை இன்று நினைவில் கொள்ள வேண்டும்?

8, 9. எருசலேமைக் கைப்பற்ற அசீரியன் போடும் திட்டம் ஏன் வரம்புக்கு மீறியது?

10. அசீரியனைக் குறித்து யெகோவா என்ன உறுதியளிக்கிறார்?

11. எருசலேமை சுலபமாக வீழ்த்தலாம் என அசீரியன் நினைக்கக் காரணம் என்ன?

12. அசீரியனின் பெருமை பேச்சைக் குறித்ததில், யெகோவா சொல்வது என்ன?

13. இவற்றையும் இவற்றிற்கு ஏற்பட்ட கதியையும் விளக்குக: (அ) ‘கொழுத்தவர்கள்.’ (ஆ) ‘முட்செடிகளும் நெரிஞ்சில்களும்.’ (இ) “அவனுடைய வனத்தின் மகிமை.”

14. பொ.ச.மு. 732-⁠ல் யூதாவை அசீரியா படிப்படியாக கைப்பற்றியதை விவரியுங்கள்.

15, 16. (அ) எசேக்கியா ராஜாவுக்கு ஏன் பலமான விசுவாசம் தேவை? (ஆ) எதன் அடிப்படையில் யெகோவா உதவிக்கு வருவார் என எசேக்கியா நம்புகிறார்?

17. அசீரிய நுகம் எவ்வாறு ‘முறிக்கப்படுகிறது,’ ஏன்?

18. (அ) ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு இன்னொரு நிறைவேற்றம் உண்டா? விளக்குக. (ஆ) இன்று எந்த அமைப்பு பூர்வ சமாரியாவிற்கு ஒத்திருக்கிறது?

19. எதைக் குறித்து கிறிஸ்தவமண்டலம் எச்சரிக்கப்பட்டிருக்கிறது, யாரால்?

20. (அ) நவீன நாளைய அசீரியனாக செயல்படப்போவது எது, அது எவ்வாறு கோலாக பயன்படுத்தப்படும்? (ஆ) கிறிஸ்தவமண்டலம் எந்தளவு தண்டிக்கப்படும்?

21, 22. கடவுளுடைய மக்களைத் தாக்குமாறு மூர்க்க மிருகத்தை தூண்டிவிடப் போவது யார்?

23. நவீன நாளைய அசீரியன் கிறிஸ்தவமண்டலத்திற்கு செய்யப்போவதை கடவுளுடைய மக்களுக்கு ஏன் செய்ய முடியாது?

24. (அ) எதிர்காலத்தை பயமின்றி சந்திக்க உண்மை கிறிஸ்தவர்கள் எதைச் செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்? (ஆ) ஏசாயா எவ்வாறு இன்னும் தொலைவான எதிர்காலத்தை கணிக்கிறார்? (பக்கம் 155-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

[பக்கம் 155156-ன் பெட்டி/படங்கள்]

ஏசாயா இன்னும் தொலைவான எதிர்காலத்தை கணிக்கிறார்

ஏசாயா 10:20-23

இஸ்ரவேலை தண்டிக்கவும் எருசலேமை காப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் யெகோவா எவ்வாறு அசீரியனை பயன்படுத்துவார் என்பதை ஏசாயா 10-ஆம் அதிகாரம் சிறப்பித்துக் காட்டுகிறது. 20 முதல் 23 வசனங்கள் இத்தீர்க்கதரிசனத்தின் மத்திபத்தில் வருவதால், அதே காலப்பகுதியில் அவை பொதுவான நிறைவேற்றத்தைக் கொண்டிருந்ததாக எடுத்துக்கொள்ளலாம். (ஏசாயா 1:7-9-ஐ ஒப்பிடுக.) இருந்தாலும் பிற்பட்ட காலப்பகுதியையே அவை குறிப்பாக சுட்டிக்காட்டுகின்றன என்பது அவ்வசனங்களின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. அந்த பிற்பட்ட காலப்பகுதி, எருசலேமும் அதன் குடிமக்களின் பாவங்களுக்காக பதில்சொல்ல வேண்டிய காலப்பகுதி.

ஆகாஸ் ராஜா தன் பாதுகாப்பிற்காக அசீரியாவின் உதவியை நாடுகிறார். எதிர்காலத்தில் இஸ்ரவேல் வீட்டாரில் மீதியானோர் அப்படிப்பட்ட அறிவீனத்தை செய்யவே மாட்டார்கள் என ஏசாயா முன்னறிவிக்கிறார். அவர்கள் “இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்” என ஏசாயா 10:20 சொல்கிறது. எனினும் 21-ஆம் வசனம் காண்பிக்கிறபடி வெகு சிலரே, அதாவது ‘மீதியாயிருப்பவர்களே திரும்புவார்கள்.’ இது ஏசாயாவின் குமாரன் சேயார்யாசூபுவை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஏனெனில் இஸ்ரவேலில் அடையாளமாக விளங்கிய அவரது பெயரின் அர்த்தம், “மீதியானோர் மட்டுமே திரும்புவர்.” (ஏசாயா 7:⁠3) தீர்மானிக்கப்பட்ட ஒரு “அழிவு” வரவிருப்பதைக் குறித்து பத்தாம் அதிகாரத்தின் 22-ஆம் வசனம் எச்சரிக்கிறது. அது நீதியுள்ளதாக இருக்கும், ஏனெனில் கலகக்கார மக்கள் மட்டுமே நியாயப்படி அழிக்கப்படுவர். ஆகவே, ‘சமுத்திரத்தின் மணலத்தனையாயிருக்கும்’ திரளான தேசத்தாரில் மீதியாயிருப்பவர்கள் மட்டுமே திரும்புவார்கள். வரவிருக்கும் இந்த அழிவு முழு தேசத்தையும் பாதிக்கும் என 23-ஆம் வசனம் எச்சரிக்கிறது. ஆக, எருசலேம் இம்முறை தப்பாது.

பொ.ச.மு. 607-⁠ல் யெகோவா பாபிலோனிய சாம்ராஜ்யத்தை தமது ‘கோலாக’ பயன்படுத்தியபோது என்ன நிகழ்ந்தது என்பதை இவ்வசனங்கள் நன்கு விவரிக்கின்றன. அப்போது எருசலேம் உட்பட முழு தேசமும் எதிரிகளின் கையில் வீழ்ந்தது. யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபிடித்து செல்லப்பட்டனர். 70 ஆண்டுகளுக்கு பிறகு சிலர்​—⁠‘மீதியாயிருந்தவர்கள்’ மட்டுமே என்றாலும்​—⁠உண்மை வணக்கத்தை நிலைநாட்ட எருசலேமுக்கு திரும்பினர்.

ஏசாயா 10:20-23 வசனங்களில் உள்ள தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் மீண்டும் நிறைவேறியதை ரோமர் 9:27, 28 காட்டுகிறது. (ஒப்பிடுக: ஏசாயா 1:9; ரோமர் 9:29.) ஆவிக்குரிய கருத்தில் பொ.ச. முதல் நூற்றாண்டு யூதர்களில் ‘மீதியானோர்’ யெகோவாவிடம் ‘திரும்பியதாக’ பவுல் விளக்குகிறார். அப்போது உண்மையுள்ள யூதர்களில் சிலர் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகி யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்க ஆரம்பித்தனர். (யோவான் 4:24) அதன்பின்பு புறஜாதியாரில் சிலரும் விசுவாசிகளாகி இவர்களோடு சேர்ந்துகொண்டனர். இவர்கள் ஆவிக்குரிய தேசமாகிய ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ ஆயினர். (கலாத்தியர் 6:16) இச்சந்தர்ப்பத்திலேயே ஏசாயா 10:20 நிறைவேறியது: யெகோவாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசம் ‘பின்னொருபோதும்’ அவரை விட்டுவிலகி மனித ஆதரவைத் தேடிச் செல்லவில்லை.

[பக்கம் 147-ன் படம்]

கூட்டிலிருக்கும் முட்டைகளைப் போல் தேசங்களை எளிதில் வாரிக்கொள்ளலாம் என சனகெரிப் கணக்கிடுகிறார்