Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பாவும் அடங்கா பிள்ளைகளும்

அப்பாவும் அடங்கா பிள்ளைகளும்

அதிகாரம் இரண்டு

அப்பாவும் அடங்கா பிள்ளைகளும்

ஏசாயா 1:2-9

பாசமிக்க எல்லா தந்தைமாரையும் போலவே இந்தத் தந்தையும் தன்னுடைய பிள்ளைச் செல்வங்களுக்கு தேவையானதெல்லாம் வாரிவழங்கினார். பல ஆண்டுகளாக உண்ண உணவளித்தார், உடுக்க உடையளித்தார், இருக்க இடமளித்தார். அவசியமான சமயத்தில் அவர்களை கண்டிக்கவும் செய்தார். ஆனாலும் தண்டனை ஒருபோதும் தறிகெட்டுப் போனதில்லை; எப்போதும் ‘மட்டாகவே தண்டித்தார்.’ (எரேமியா 30:11) “நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினார்கள்” என்ற வார்த்தைகளை விளம்பும்போது, இந்த அன்புத் தகப்பன் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார் என்பதை நாம் கற்பனையில்தான் காண முடியும்!​ ஏசாயா 1:2ஆ.

2இங்கே குறிப்பிடப்படும் கலகத்தனமிக்க பிள்ளைகள் யார்? யூதாவின் ஜனங்கள். வேதனையில் துவண்டிருக்கும் தகப்பன்? யெகோவா தேவன். என்னே ஒரு அவலம்! யூதேயர்களை யெகோவா போஷித்து, சகல தேசத்தாரையும்விட உயர்ந்த நிலையில்​—⁠மணிமகுடத்தில்​—⁠வைத்திருக்கிறார். “பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலனிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்” என எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் பிற்பாடு அவர் நினைப்பூட்டுகிறார். (எசேக்கியேல் 16:10, பொது மொழிபெயர்ப்பு) இருந்தாலும், யெகோவா செய்ததை யூதாவின் ஜனங்களில் பெரும்பாலானோர் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மாறாக, கலகம்தான் செய்கிறார்கள்.

3கலகத்தனமிக்க தம்முடைய பிள்ளைகளைப் பற்றி குறிப்பிடுவதற்கு முன்பு நியாயமான காரணத்தோடுதான் இந்த வார்த்தைகளை யெகோவா உரைக்கிறார்: “வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவாவே பேசுகிறார்.” (ஏசாயா 1:2அ, திருத்திய மொழிபெயர்ப்பு) கீழ்ப்படியாமையால் வரும் விளைவுகளைப் பற்றி வெண்கல மணியோசை போன்ற எச்சரிக்கைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டதை​—⁠அடையாள அர்த்தத்தில்​—⁠வானமும் பூமியும் கேட்டதே. மோசே சொன்னார்: “நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்.” (உபாகமம் 4:26) இப்பொழுது ஏசாயாவின் நாளில், யூதாவின் கலகத்தனத்திற்கு சாட்சி சொல்ல யெகோவா வானத்தையும் பூமியையும் அழைக்கிறார்.

4நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே விஷயத்தை நேரடியாகவே சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட மோசமான நிலைமையிலும், யெகோவா அவர்களிடம் ஓர் அன்பான தகப்பனைப் போலவே பேசுகிறார், அவர்களை விலைக்கு வாங்கிய எஜமானரை போல அல்ல. இது இதயத்திற்கு எவ்வளவு இதமளிக்கிறது! எதற்கும் அடங்காத பிள்ளைகளை நினைத்து வேதனையில் குமுறும் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் வைத்து இதை சிந்தித்துப் பார்க்கும்படி யெகோவா அவர்களிடம் கெஞ்சிக் கேட்கிறார். யூதாவிலுள்ள தகப்பன்மார்களே இப்படிப்பட்ட இக்கட்டான நிலையை புரிந்துகொண்டு ஜனங்களுக்கு உணர்த்தக்கூடும், இந்த ஒப்புமையால் அவர்களுடைய மனம் இளகக்கூடும். எது எப்படியிருந்தாலும், யூதாவிற்கு எதிராக யெகோவா தம்முடைய வழக்கை கொண்டுவரப் போகிறார்.

வாயில்லா ஜீவன்களே விசுவாசமாக இருக்கின்றன

5“மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது” என உள்ளத்தை உருக வைக்கும் விதத்தில் யெகோவா சொல்கிறார். (ஏசாயா 1:3) a காளைகளும் கழுதைகளும் பாரமிழுக்க பயன்படுத்தப்படும் விலங்குகள் என்பது மத்திய கிழக்கிலுள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமான விஷயம். சொல்லப்போனால், வாயில்லா இந்த ஜீவன்களே விசுவாசமாக இருப்பதை, ஓர் எஜமானருக்கு சொந்தமென நன்கு அறிந்திருப்பதை யூதேயர்கள் இம்மியும் மறுக்க மாட்டார்கள். இதன் சம்பந்தமாக, பைபிள் அறிஞர் ஒருவர் மத்திய கிழக்கிலுள்ள ஒரு நகரத்தில் பொழுதடையும் வேளையில் பார்த்ததை இங்கே சொல்கிறார், கேளுங்கள்: “மந்தை சாய்ந்ததும் எருதுகள் சீக்கிரத்தில் வீடு வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றும் தன்னுடைய எஜமானையும் வீட்டுக்கு வரும் வழியையும் நன்றாக அறிந்திருந்தது. நிறைய சந்து பொந்துகள் இருந்தும் அவை கொஞ்சங்கூட குழம்பிப்போகவில்லை. கழுதையோ நேரே அந்த வீட்டு கதவண்டைக்கே, ‘எஜமானுடைய கொட்டிலுக்கே’ வந்துநின்றது.”

6இப்படிப்பட்ட காட்சிகள் ஏசாயாவின் நாளில் சர்வசாதாரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே யெகோவாவின் செய்தி, பொட்டில் அடித்தாற்போல சுருக்கென்று இருக்கிறது: பகுத்தறிவில்லாத ஜீவனே தன் எஜமானரையும் தொழுவத்தையும் அறியுமானால், யெகோவாவை விட்டுவிலகிய யூதா ஜனங்களால் என்ன சாக்குப்போக்கு சொல்ல முடியும்? உண்மையிலேயே அவர்கள் ‘உணர்வில்லாமல்’ இருக்கிறார்கள். தாங்கள் அனுபவிக்கும் செழுமை, ஏன், உயிரே யெகோவாவின் தயவால்தான் என்பதை உணராமல் இருக்கிறார்கள். இன்னும் அவர்களை ‘என் ஜனம்’ என யெகோவா அழைப்பது அவர்கள் மீது அவருக்கு இருக்கும் இரக்கத்தையே பறைசாற்றுகிறது.

7யெகோவா நமக்கு செய்த எல்லாவற்றையும் மதிக்கத் தவறி நாம் ஒருபோதும் மதிகெட்டு நடந்துகொள்ள விரும்ப மாட்டோம்! மாறாக, இவ்வாறு சொன்ன சங்கீதக்காரன் தாவீதை நாம் பின்பற்ற வேண்டும்: “என் முழு இருதயத்தாலும் யெகோவாவைத் துதிப்பேன்; உமது அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.” (சங்கீதம் 9:1, தி.மொ.) தொடர்ந்து யெகோவாவின் அறிவை பெறுவது இந்த விஷயத்தில் நமக்கு உற்சாகமூட்டும். ஏனெனில் “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 9:10, தி.மொ.) யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுதினமும் தியானிப்பது நன்றியுடன் இருப்பதற்கும் நம்முடைய பரம பிதாவை அசட்டை செய்யாமல் இருப்பதற்கும் உதவும். (கொலோசெயர் 3:15) “ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன்” என்று யெகோவா சொல்கிறார்.​—சங்கீதம் 50:⁠23.

‘இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு’ பெரும் அவமதிப்பு

8யூதா தேசத்தாரிடம் கடும் சொற்களால் ஏசாயா தொடர்ந்து செய்தியை தெரிவிக்கிறார்: “ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை [“யெகோவாவை,” NW] விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.” (ஏசாயா 1:4) கனமான பாரத்தைப் போல அழுத்தும் அளவுக்கு துன்மார்க்க செயல்கள் பெருகலாம். ஆபிரகாமின் நாளில் சோதோம் கொமோராவின் பாவங்கள் ‘மிகவும் பாரமாயிருந்ததாக’ யெகோவா விவரித்தார். (ஆதியாகமம் 18:20, NW) இப்போது, யூதா ஜனங்களுடைய விஷயத்திலும் இது போலவே சம்பவிக்கிறது. ஏனெனில் ‘அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனம்’ என ஏசாயா இவர்களை குறிப்பிடுகிறார். அதோடு, ‘பொல்லாதவர்களின் சந்ததி, கேடு உண்டாக்குகிற புத்திரர்’ என அவர்களை அழைக்கிறார். ஆம், யூதேயர்கள் அடங்காத பிள்ளைகளைப் போல இருக்கிறார்கள். அவர்கள் “பின்வாங்கிப்போனார்கள்,” அல்லது நியூ ரிவைஸ்டு ஸ்டேன்டர்டு வர்ஷன் சொல்கிறபடி, தங்களுடைய தகப்பனிடம் வைத்திருந்த பந்தத்தை ‘முற்றிலும் முறித்துக்கொண்டார்கள்.’

9யூதாவின் ஜனங்கள் தங்களுடைய தான்தோன்றித்தனமான போக்கினால், ‘இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு’ அவமரியாதையைக் காண்பிக்கிறார்கள். ஏசாயா புத்தகத்தில் 25 இடத்தில் இடம்பிடித்துள்ள இந்தச் சொற்றொடரின் முக்கியத்துவம் என்ன? பரிசுத்தமாயிருப்பது என்பது சுத்தமாயும் தூய்மையாயும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவே மகா பரிசுத்தர். (வெளிப்படுத்துதல் 4:8) பிரதான ஆசாரியனுடைய தலைப்பாகையில் மின்னும் தங்கத்தகட்டில் ‘பரிசுத்தம் யெகோவாவுக்குரியது’ என பொறிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை இஸ்ரவேலர் கவனிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் இது அவர்களுக்கு நினைப்பூட்டப்படுகிறது. (யாத்திராகமம் 39:30, NW) ஆகவே, ‘இஸ்ரவேலரின் பரிசுத்தர்’ என யெகோவாவை குறிப்பிடுவதன் மூலம், யூதாவின் பாவம் எந்தளவு கொடியது என்பதை ஏசாயா கோடிட்டுக் காண்பிக்கிறார். “நான் பரிசுத்தர்; ஆகையால், . . . உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக” என்று முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையையே இந்தக் கலகக்காரர்கள் அப்பட்டமாக மீறுகிறார்களே!​—லேவியராகமம் 11:⁠44.

10‘இஸ்ரவேலின் பரிசுத்தரை’ அவமதித்த யூதாவை ஒருபோதும் பின்பற்றாதிருக்க கிறிஸ்தவர்கள் எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும். அவர்கள் யெகோவாவின் பரிசுத்தத்தைப் பின்பற்ற வேண்டும். (1 பேதுரு 1:15, 16) மேலும், அவர்கள் ‘தீமையை வெறுக்க வேண்டும்.’ (சங்கீதம் 97:10) பாலியல் ஒழுக்கக்கேடு, விக்கிரகாராதனை, திருட்டு, குடிவெறி ஆகிய அசுத்தமான பழக்கங்கள் கிறிஸ்தவ சபையை கறைபடுத்தும். அதனால்தான் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களை விட்டொழிக்க மறுப்பவர்கள் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இறுதியில், மனந்திரும்பாமல் அசுத்தமான செயலிலேயே அமிழ்ந்து கிடப்பவர்கள் கடவுளுடைய அரசாங்கம் கொண்டுவரும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதிலிருந்து விலக்கப்படுவார்கள். உண்மையில், இப்படிப்பட்ட பொல்லாத செயல்கள் ‘இஸ்ரவேலரின் பரிசுத்தருக்கு’ பெரும் அவமதிப்பை கொண்டுவருகின்றன.​—ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 5:6-11; 6:9, 10.

உச்சி முதல் உள்ளங்கால் வரை வியாதி

11அடுத்து, யூதா ஜனங்களின் நோய்வாய்ப்பட்ட நிலைமையை சுட்டிக்காட்டி அவர்களிடம் நியாயங்காட்டி பேச ஏசாயா முயலுகிறார். அவர் சொல்கிறார்: “இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே [“கலகம் செய்கிறீர்களே,” NW].” ‘நீங்கள் இவ்வளவு துன்பப்பட்டது போதாதா? கலகத்திற்கு மேல் கலகம் பண்ணி நீங்கள் ஏன் பொல்லாப்பை வருவித்துக்கொள்கிறீர்கள்?’ என அவர் கேட்பதைப் போல இருக்கிறது. ஏசாயா தொடர்கிறார்: “தலையெல்லாம் வியாதி, இருதயமெல்லாம் தளர்ந்ததே; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை.” (ஏசாயா 1:5, 6அ, தி.மொ.) யூதா அருவருக்கத்தக்கதாக, ஆவிக்குரிய விதத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கிறது. உண்மையிலேயே கவலைக்குரிய மருத்துவ அறிக்கை!

12யூதாவுக்காக நாம் வருந்த வேண்டுமா? அவசியமே இல்லை! கீழ்ப்படியாமைக்கான தண்டனையைப் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னரே முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் பின்வரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது: “உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.” (உபாகமம் 28:35) யூதா தன்னுடைய பிடிவாதமான போக்கின் இந்த விளைவுகளை அடையாள அர்த்தத்தில் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. யூதாவின் ஜனங்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இவற்றை தவிர்த்திருக்கலாம்.

13யூதாவின் பரிதாபகரமான நிலையை ஏசாயா தொடர்ந்து விவரிக்கிறார்: “காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.” (ஏசாயா 1:6ஆ, பொ.மொ.) இங்கே தீர்க்கதரிசி மூன்று வகையான காயங்களைக் குறிப்பிடுகிறார்: காயங்கள் (பட்டயத்தால் அல்லது கத்தியால் ஏற்படும் வெட்டுக்காயங்கள்), கன்றிப்போன வடுக்கள் (அடிப்பதால் உண்டாகும் வீக்கம்), சீழ்வடியும் புண்கள் (குணப்படுத்த முடியாததுபோல தோன்றும் வெம்புண்கள்). உடம்பில் ஒரு இடம்கூட பாக்கியில்லாமல், கற்பனை செய்ய முடிகிற எல்லா விதங்களிலும் கடுமையாக தண்டிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய எண்ணத்தையே இது நமக்கு கொடுக்கிறது. உண்மையிலேயே யூதா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது!

14யூதாவின் வருந்தத்தக்க நிலைமை யெகோவாவிடம் திரும்பும்படி அதை உந்துவிக்கிறதா? இல்லை! “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் [“குணப்படுத்தப்படாமல்,” NW] சடிதியில் நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 29:1-⁠ல் விவரிக்கப்பட்டுள்ள கலகக்காரனைப் போல யூதா இருக்கிறது. இந்தத் தேசம் குணப்படுத்த முடியாதது போல் தோன்றுகிறது. ஏசாயா சொல்கிறபடி, அதன் காயங்கள் “சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. b ஒரு கருத்தில், குணப்படுத்தப்படாத, கட்டுப்போடப்படாத, உடம்பு பூராவும் பரவியுள்ள புண்ணைப் போல யூதா இருக்கிறது.

15யூதாவிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நாமும் ஆவிக்குரியப் பிரகாரமான நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சரீரப் பிரகாரமான நோயைப் போல, அது நம்மில் யாரையும் பாதிக்கலாம். சொல்லப்போனால், நம்மில் யார்தான் மாம்ச இச்சைகளால் இழுப்புண்டு போகவில்லை? பேராசையும் மிதிமிஞ்சிய இன்பத்திற்கான ஆசையும் நம்முடைய இருதயத்தில் வேர்விடலாம். ஆகவே, “தீமையை வெறுத்து” “நன்மையைப் பற்றிக்கொண்டிரு”க்க நம்மை பயிற்றுவிக்க வேண்டும். (ரோமர் 12:9) மேலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுளுடைய ஆவியின் கனிகளையும் வளர்க்க வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) அப்படி செய்வதால், யூதாவை தொற்றிய வியாதியிலிருந்து​—⁠அதாவது, ஆவிக்குரியப் பிரகாரமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய்வாய்ப்படுவதிலிருந்து​—⁠பாதுகாக்கப்படுவோம்.

பாழான தேசம்

16ஏசாயா இப்பொழுது மருத்துவ ரீதியிலான ஒப்புமையிலிருந்து யூதாவின் பூகோள ரீதியிலான நிலைமைக்கு கவனத்தைத் திருப்புகிறார். யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட சமபூமியை உற்றுப் பார்ப்பது போல சொல்கிறார்: “உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம் போல் இருக்கிறது.” (ஏசாயா 1:7) இந்த வார்த்தைகள் ஏசாயா புத்தகத்தின் ஆரம்பத்தில் காணப்படுகிறபோதிலும், அந்தத் தீர்க்கதரிசியின் ஊழிய காலத்திற்குப் பிற்பாடு, ஒருவேளை பொல்லாதவனாகிய ஆகாஸ் அரசனின் ஆட்சிகாலத்தில் இவை உரைக்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் சிலர் சொல்கின்றனர். உசியாவின் ஆட்சிகாலம் அவ்வளவு செழிப்பாக இருந்ததால் இப்படிப்பட்ட பாழான விவரிப்புக்கு பொருந்தாது என அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஏசாயா புத்தகம் காலக்கிரமப்படி தொகுக்கப்பட்டதா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது என்பது உண்மைதான். ஆனால், பாழ்க்கடிப்பை பற்றிய ஏசாயாவின் வார்த்தைகள் ஒருவேளை தீர்க்கதரிசன அர்த்தமுடையதாக இருக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட கூற்றை உரைக்கையில், பைபிளின் மற்ற பாகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓர் உத்தியை​—⁠அதாவது எதிர்கால சம்பவத்தை ஏற்கெனவே நடந்ததைப் போல விவரிப்பதை​—⁠ஏசாயாவும் ஒருவேளை பயன்படுத்தியிருக்கலாம். ஆகவே, இது ஒரு தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் நிச்சயத்தை வலியுறுத்திக் காட்டுகிறது.​—வெளிப்படுத்துதல் 11:15-ஐ ஒப்பிடுக.

17எப்படியிருந்தபோதிலும், யூதாவின் பாழ்க்கடிப்பை பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பு பிடிவாதமுள்ள, கீழ்ப்படியாத இந்த ஜனங்களுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டியதில்லை. கலகம் செய்தால் என்ன சம்பவிக்கும் என்பதை நூற்றாண்டுகளுக்கு முன்னரே யெகோவா அவர்களிடம் எச்சரித்தார். அவர் சொன்னார்: “நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள். ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.”​—லேவியராகமம் 26:32, 33; 1 இராஜாக்கள் 9:6-8.

18ஏசாயா 1:7, 8-⁠ல் உள்ள வார்த்தைகள் அசீரியா படையெடுத்து வரும் சமயத்தில் நிறைவேறுவதாக தெரிகிறது. அதனால் இஸ்ரவேல் அழிக்கப்படுகிறது, யூதாவிலும் அழிவும் வேதனையும் பரவுகிறது. (2 இராஜாக்கள் 17:5, 18; 18:11, 13; 2 நாளாகமம் 29:8, 9) ஆனால் யூதா முற்றிலும் அழிக்கப்படுவதில்லை. ஏசாயா சொல்கிறார்: “சீயோன் குமாரத்தி திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சு போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசை போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு பட்டணம் போலவும் மீந்திருக்கிறாள்.”​—ஏசாயா 1:⁠8.

19இந்தப் பாழ்க்கடிப்புகளின் மத்தியிலும் “சீயோன் குமாரத்தி,” அதாவது எருசலேம் தொடர்ந்திருக்கும். ஆனால் அது எளிதில் கைப்பற்றப்படும் நிலையில்​—⁠திராட்சத் தோட்டத்திலுள்ள ஒரு குச்சு போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடில் போலவும்​—⁠தோன்றுகிறது. நைல் நதியில் தெற்கு நோக்கி பயணம் செய்கையில், 19-⁠ம் நூற்றாண்டு அறிஞர் ஒருவருக்கு இதுபோன்ற குடில்கள் கண்ணில் பட்டபோது ஏசாயாவின் வார்த்தைகளே நினைவுக்கு வந்தன. அதை அவர், “வாடைக் காற்றிலிருந்து பாதுகாப்பு தரமுடியாத ஒரு வேலிபோல” என விவரிக்கிறார். யூதாவில் அறுவடை முடியும்போது, இந்தக் குடில்கள் சின்னாபின்னமாகும்படி அவற்றை அப்படியே விட்டுவிடுவார்கள். இருப்பினும், எதையும் விட்டுவைக்காமல் வெற்றிவாகை சூடிவரும் அசீரிய சேனைக்கு முன்பு எருசலேம் பலவீனமாக தோன்றினாலும் அது தப்பிப்பிழைக்கும்.

20இந்தத் தீர்க்கதரிசன கூற்றை ஏசாயா இவ்வாறு முடிக்கிறார்: “சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப் போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.” (ஏசாயா 1:9) c இறுதியில், பலத்த அசீரியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க யூதாவுக்கு யெகோவா உதவிக்கரம் நீட்டுவார். சோதோம் கொமோராவைப் போல யூதா முற்றிலும் அழிக்கப்படாது. அது தப்பிப்பிழைக்கும்.

21நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, யூதா மீண்டும் அச்சுறுத்தப்பட்டது. அசீரியா கொடுத்த “அடியிலிருந்து” இந்த ஜனங்கள் பாடம் பயிலவில்லை. “அவர்களோ கடவுளின் ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய திருவார்த்தைகளை அசட்டைசெய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தார்கள்.” அதனால், “யெகோவாவின் கோபம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் [“குணப்படுத்தப்படாமல்,” NW] போயிற்று.” (2 நாளாகமம் 36:16, தி.மொ.) பாபிலோனின் சக்கரவர்த்தி நேபுகாத்நேச்சார் யூதாவை வென்றார், இந்தத் தடவை, ‘திராட்சத் தோட்டத்திலுள்ள குச்சுபோல’ எதுவும் விடப்படவில்லை. எருசலேமும் அழிக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:17-21) என்றபோதிலும் யெகோவா சிலரை, அதாவது ‘கொஞ்சம் மீதியை விட்டுவைத்தார்.’ 70 ஆண்டு கால சிறையிருப்பில் யூதா இருந்தபோதிலும், அந்த ஜனம் தொடர்ந்திருக்கும், முக்கியமாக தாவீதின் வம்சம் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை பிறப்பிக்கும் என்று யெகோவா உறுதியளித்தார்.

22முதல் நூற்றாண்டில், கடவுளுடைய உடன்படிக்கை செய்யப்பட்ட தேசமாகிய இஸ்ரவேல் இறுதிக்கட்ட நெருக்கடியை சந்தித்தது. இயேசு வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக வந்தபோது, அத்தேசம் அவரை ஒதுக்கித் தள்ளியது. அதனால், யெகோவா அவர்களை ஒதுக்கித் தள்ளினார். (மத்தேயு 21:43; 23:37-39; யோவான் 1:11) பூமியில் யெகோவாவின் விசேஷித்த தேசம் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை. ஏசாயா 1:9-⁠க்கு மற்றொரு நிறைவேற்றம் இருக்கிறது என்பதை அப்போஸ்தலன் பவுல் காண்பித்தார். செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காண்பித்து, அவர் இவ்வாறு எழுதினார்: “அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.”​—ரோமர் 9:⁠29.

23இந்தத் தடவை தப்பிப்பிழைத்தவர்கள், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள். ஆரம்பத்தில் இவர்கள் யூத விசுவாசிகளே. பிற்பாடு, புறஜாதியாரைச் சேர்ந்த விசுவாசிகளும் இவர்களோடு சேர்ந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் புதிய இஸ்ரவேலை, அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலை’ உண்டுபண்ணினர். (கலாத்தியர் 6:16; ரோமர் 2:29) இந்த ‘வித்து,’ பொ.ச. 70-⁠ல் யூத ஒழுங்குமுறைக்கு நேரிட்ட அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தது. சொல்லப்போனால், ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ இன்றைக்கும் நம்முடன் இருக்கிறார்கள். விசுவாசிக்கும் லட்சக்கணக்கானோரும் இவர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள், இவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.”​—வெளிப்படுத்துதல் 7:⁠9.

24விரைவில் இந்த உலகம் அர்மெகதோன் யுத்தத்தை சந்திக்கும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) யூதாவுக்கு எதிராக வந்த அசீரிய அல்லது பாபிலோனிய படையெடுப்பைக் காட்டிலும், பொ.ச. 70-⁠ல் யூதேயாவை ரோமர் பாழ்ப்படுத்தியதைக் காட்டிலும்கூட இது பெரிய நெருக்கடியாக இருக்கும். என்றாலும், தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:14) அப்படியானால், யூதாவுக்கு சொல்லப்பட்ட ஏசாயாவின் வார்த்தைகளை அனைவரும் கவனமாக ஆராய்வது எவ்வளவு இன்றியமையாதது! அப்போது வாழ்ந்த உண்மையுள்ள ஜனங்களுக்கு அது தப்பிப்பிழைத்தலை அர்த்தப்படுத்தியது. இன்றுள்ள விசுவாசிகளுக்கும் அது தப்பிப்பிழைத்தலை அர்த்தப்படுத்தும்.

[அடிக்குறிப்புகள்]

a இந்தச் சூழமைவில், ‘இஸ்ரவேல்’ என்பது இரண்டு கோத்திர யூத ராஜ்யத்தைக் குறிக்கிறது.

b ஏசாயாவின் வார்த்தைகள் அவருடைய நாளில் கடைப்பிடிக்கப்பட்ட மருத்துவ பழக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. பைபிள் ஆராய்ச்சியாளர் இ. எச். ப்ளம்ப்டர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சீழ்க்கட்டிய காயத்தை ‘மூடுவது’ அல்லது ‘பிதுக்குவது,’ ஒழுகிக்கொண்டிருக்கும் சீழை நீக்குவதற்கு முதலில் செய்யப்படும் வைத்தியம். அப்படியானால், எசேக்கியாவுக்கு செய்யப்பட்டதைப் போல (அதி. xxxviii. 21), அது துணியால் ‘கட்டுப்போடப்பட்டு,’ பிறகு எண்ணெய் அல்லது களிம்பு போடப்பட்டது, லூக்கா x. 34 சொல்கிறபடி, சீழ்ப்புண்ணை சுத்தப்படுத்துவதற்கு ஒருவேளை எண்ணெயும் திராட்சரசமும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.”

c சி. எஃப். கைல் மற்றும் எஃப். டெலிட்ஷ் என்பவர்களால் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் விளக்கவுரை (ஆங்கிலம்) என்ற நூல் இவ்வாறு சொல்கிறது: “இந்த இடத்தில் அந்தத் தீர்க்கதரிசியின் பேச்சு ஒரு முடிவுக்கு வருகிறது. இங்கு அது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை 9-⁠ம் வசனத்திற்கும் 10-⁠ம் வசனத்திற்கும் உள்ள இடைவெளி சுட்டிக்காட்டுகிறது. இடம் விட்டிருப்பதன் மூலமோ அல்லது வாக்கியத்தைப் பிரிப்பதன் மூலமோ இப்படி பெரிய அல்லது சிறிய பகுதிகளைப் பிரிப்பது, வினைச்சொற்களுக்குரிய குறிகளுக்கும் அசை அழுத்தக் குறிகளுக்கும் பழமையானவை, மிகவும் பண்டைய கால பாரம்பரியத்தின் அடிப்படையிலானவை.”

[கேள்விகள்]

1, 2. கலகத்தனமான பிள்ளைகளை எப்படி யெகோவா பெற்றார் என்பதை விளக்குங்கள்.

3. யூதாவின் கலகத்தனத்திற்கு ஏன் யெகோவா வானத்தையும் பூமியையும் சாட்சியாக அழைக்கிறார்?

4. யெகோவா தம்மை எப்படிப்பட்ட ஒரு நபராக யூதாவுக்கு காண்பிக்கிறார்?

5. இஸ்ரவேலரைப் போலல்லாமல், எவ்வாறு காளையும் கழுதையும் விசுவாசத்தைக் காட்டுகின்றன?

6. யூதா ஜனங்கள் எவ்வாறு உணர்வோடு நடந்துகொள்ள தவறுகிறார்கள்?

7. யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு நாம் போற்றுதல் காண்பிப்பதற்கு சில வழிகள் யாவை?

8. “பாவமுள்ள ஜாதி” என யூதா ஜனங்களை ஏன் அழைக்கலாம்?

9. ‘இஸ்ரவேலின் பரிசுத்தர்’ என்ற சொற்றொடரின் முக்கியத்துவம் என்ன?

10. ‘இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு’ அவமரியாதை காட்டுவதை நாம் எப்படி தவிர்க்கலாம்?

11, 12. (அ) யூதாவின் மோசமான நிலைமையை விவரிக்கவும். (ஆ) யூதாவுக்காக நாம் ஏன் மனம் வருந்தக்கூடாது?

13, 14. (அ) யூதாவுக்கு ஏற்பட்ட காயங்கள் யாவை? (ஆ) யூதாவுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அதன் கலகத்தனமான போக்கை மீண்டும் எண்ணிப்பார்க்க செய்கிறதா?

15. ஆவிக்குரிய வியாதியிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

16. (அ) யூதா தேசத்தின் நிலைமையை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இந்த வார்த்தைகள் ஆகாஸ் ஆட்சி காலத்தில் உரைக்கப்பட்டிருக்கலாம் என ஏன் சிலர் சொல்கின்றனர், ஆனால் நாம் அதை எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?

17. பாழ்க்கடிப்பை பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பு ஏன் யூதாவின் ஜனங்களுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டியதில்லை?

18-20. ஏசாயா 1:7, 8-⁠ல் உள்ள வார்த்தைகள் எப்பொழுது நிறைவேறின, இந்த சமயத்தில் யெகோவா எந்த விதத்தில் ‘கொஞ்சம் மீதியை வைத்திருக்கிறார்’?

21. எருசலேமை பாபிலோன் அழித்தப்பின், யெகோவா ஏன் ‘கொஞ்சம் மீதியை வைத்திருந்தார்’?

22, 23. முதல் நூற்றாண்டில், யெகோவா ஏன் ‘கொஞ்சம் மீதியை வைத்தார்’?

24. மனிதகுலத்திற்கு வரப்போகும் மிகப் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைக்க விரும்பினால், எதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்?

[பக்கம் 20-ன் படம்]

சோதோம் கொமோராவை போல யூதா என்றுமாக குடியிருப்பில்லாமல் போகாது