Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபத்திலும் யெகோவாவை அண்டியிருங்கள்

ஆபத்திலும் யெகோவாவை அண்டியிருங்கள்

அதிகாரம் ஒன்பது

ஆபத்திலும் யெகோவாவை அண்டியிருங்கள்

ஏசாயா 7:1–8:⁠18

ஏசாயா புத்தகத்தின் 7, 8 அதிகாரங்கள், வேறுபட்ட இரண்டு உதாரணங்களைத் தருகின்றன. ஏசாயா, ஆகாஸ் ஆகிய இருவருமே யெகோவாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்தவர்கள்; இருவருமே கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள், ஒருவர் தீர்க்கதரிசி, மற்றவர் யூதாவின் ராஜா; இருவருக்குமே, எருசலேமை முற்றுகையிடவிருந்த எதிரிகளை சமாளிக்க வேண்டிய நெருக்கடி. ஆனால் ஒருவர் யெகோவாவின் மீது நம்பிக்கையோடு செயல்படுகிறார், மற்றவரோ பயத்திற்கு பணிந்துவிடுகிறார். இதில் மட்டும் ஏன் வித்தியாசம்? ஏசாயாவின் 7, 8 அதிகாரங்கள் இதற்கு பதில் சொல்கின்றன, பல பாடங்களும் சொல்கின்றன. எதிரிகளால் சூழப்பட்டிருக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பயனளிக்கும் பாடங்கள் அவை.

எடுக்க வேண்டிய தீர்மானம்

2ஒரு ஓவியர் சித்திரத்தைத் தீட்ட முதலில் சில கோடுகள் போடுவது போலவே, ஏசாயா முதலாவதாக, தான் விவரிக்கப்போகும் சம்பவங்களின் ஆரம்பத்தையும் முடிவையும் சில வரிகளில் குறிப்பிடுகிறார்: “உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதா தேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம் பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று.”​—ஏசாயா 7:⁠1.

3காலம், பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டு. யோதாமுக்குப் பிறகு அவன் குமாரன் ஆகாஸ் யூதாவின் ராஜாவாக அரியணை ஏறியிருக்கிறான். சீரியாவின் ராஜா ரேத்சீனும் இஸ்ரவேலின் வட ராஜ்யத்தின் ராஜா பெக்காவும் யூதா மீது படையெடுக்கின்றனர். ஆக்ரோஷமாக தாக்கும் அவர்களது படைகள் இறுதியில் எருசலேமையே முற்றுகையிடும். ஆனால் முற்றுகை தோல்வியடையும். (2 இராஜாக்கள் 16:5, 6; 2 நாளாகமம் 28:5-8) ஏன்? பிற்பாடு ஏசாயா அளிக்கும் விவரங்கள் இதற்கு பதிலளிக்கும்.

4போர் ஆரம்பித்த சமயத்தில், “சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.” (ஏசாயா 7:⁠2) சீரியர்களும் இஸ்ரவேலர்களும் கைகோர்த்துக்கொண்டு, எருசலேமைத் தாக்க எப்பிராயீமின் (இஸ்ரவேலின்) நிலத்தில் கூடாரம் அமைத்துவிட்டனர் என்ற செய்தி ஆகாஸின் காதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றுவது போல இருக்கிறது. அதுவும் எதிரிகள் எருசலேமின் எல்லையை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நெருங்கும் தூரத்தில்! அவனும் அவனுடைய ஜனங்களும் பீதியடைகின்றனர்.

5‘நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசி மட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டு போக வேண்டும்’ என ஏசாயாவிடம் யெகோவா சொல்கிறார். (ஏசாயா 7:⁠3) சற்று யோசித்துப் பாருங்கள்! இப்படிப்பட்ட இக்கட்டான சமயத்தில் ராஜாதான் யெகோவாவின் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்று உதவி கேட்க வேண்டும், ஆனால் இங்கே தீர்க்கதரிசி ராஜாவை தேடிச் செல்ல வேண்டிய நிலை! இது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் யெகோவாவின் சொல்லுக்கு மறுபேச்சில்லாமல் ஏசாயா கீழ்ப்படிகிறார். அவரைப் போலவே இன்றும் யெகோவாவின் ஊழியர்கள், இந்த உலகினால் நெருக்கப்பட்டு பீதியடைந்திருப்போரை தாங்களே தேடிச் செல்கின்றனர். (மத்தேயு 24:6, 14) இவர்கள் சொல்லும் நற்செய்திக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் செவிமடுத்து, யெகோவாவின் உதவிக்கரத்தை பற்றியிருப்பது மனநிறைவளிக்கிறது!

6ஆகாஸை எருசலேமின் மதில்களுக்கு வெளியே ஏசாயா சந்திக்கிறார். அங்கே முற்றுகையை முன்னிட்டு நகரின் நீர்நிலையை ஆகாஸ் மேற்பார்வையிட்டுக்கொண்டு இருக்கிறார். அப்போது யெகோவாவின் செய்தியை ஏசாயா தெரிவிக்கிறார்: ‘நீ கலங்காமல் அமர்ந்திருக்கப்பார்; புகைகிற இந்த இரண்டு கொள்ளிக்கட்டைகளைக் கண்டு, சீரியரோடே வந்த ரேத்சீனும் ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரகோபத்தினிமித்தம் நீ பயப்பட வேண்டாம், உன் இருதயம் துவள வேண்டாம்.’ (ஏசாயா 7:⁠4, தி.மொ.) முன்னர் யூதாமீது படையெடுக்கையில் எதிரிகளின் கோபம் நெருப்பாய் கனன்றது. ஆனால் இப்போதோ அவர்கள், முழுவதும் எரிந்துபோன வெறும் ‘புகைகிற இரண்டு கொள்ளிக்கட்டைகள்.’ ஆகவே ஆகாஸ், சீரிய ராஜா ரேத்சீனைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை, ரெமலியாவின் மகனான இஸ்ரவேல் ராஜா பெக்காவைக் கண்டும் நடுங்க வேண்டியதில்லை. அந்த எதிரிகளை இன்றைய கிறிஸ்தவமண்டல குருமார்களோடு ஒப்பிடலாம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக இந்த குருமார்கள் மெய் கிறிஸ்தவர்களை நெருப்பாய் சுட்டனர். இப்போதோ புகைகிற கொள்ளிக்கட்டைகளாக வலுவிழந்திருக்கின்றனர். அவர்களது மங்கிய சுடரும் அவிந்து, புகை அடங்க இன்னும் வெகு காலம் இல்லை!

7ஆகாஸின் நாட்களில், ஏசாயா சொன்ன செய்தி மட்டுமல்ல, ஏசாயாவின் பெயர்கூட, ஏன் அவரது மகனின் பெயர்கூட யெகோவாவின் ஜனங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது. ஏசாயா என்பதற்கு “யெகோவாவின் இரட்சிப்பு” என்று அர்த்தம். ஆகவே யூதா ஆபத்தில் இருந்தாலும் யெகோவா இரட்சிப்பை அருளுவார் என்ற நம்பிக்கையை அது அளிக்கிறது. ஏசாயா தன்னுடைய மகன் சேயார்யாசூபுவையும் அழைத்துச் செல்ல வேண்டுமென யெகோவா சொல்கிறார். சேயார்யாசூபு என்பதற்கு “மீதியானோர் மட்டுமே திரும்புவர்” என்று அர்த்தம். யூதா ராஜ்யம் முடிவில் அழிக்கப்பட்டாலும் யெகோவா யூதர்கள்மீது இரக்கங்காட்டி அவர்களில் மீந்திருப்பவர்களை தேசத்திற்கு திரும்பச் செய்வார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

தேசப் போர் மட்டுமல்ல

8“நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய் அதற்குத் திகில் விளைத்து நமக்கென அதைப் பிடித்துக்கொண்டு அதிலே தாபெயலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம்” என்று யூதாவின் எதிரிகள் சதித்திட்டம் தீட்டுவதை ஏசாயாவைக் கொண்டு யெகோவா அம்பலப்படுத்துகிறார். (ஏசாயா 7:5, 6, தி.மொ.) சீரிய-இஸ்ரவேல கூட்டணி, யூதாவை கைப்பற்றி, தாவீதின் குமாரன் ஆகாஸுக்குப் பதிலாக தங்கள் விருப்பத்திற்கேற்றவரை ராஜாவாக்க சதி செய்கிறது. அப்படியென்றால், இரு தேசங்களுக்கு இடையே மட்டும் போர் மூளவில்லை, சாத்தானுக்கும் யெகோவாவிற்குமே போர் மூண்டிருக்கிறது! அது எப்படி? யெகோவா தேவன் தாவீது ராஜாவோடு உடன்படிக்கை செய்து, அவரது குமாரர்களே தம் மக்களை ஆளுவார்கள் என உறுதியளித்திருந்தார். (2 சாமுவேல் 7:11, 16) ஆக, எருசலேமின் அரியணையில் வேறு அரசர்களை அமர்த்திவிட்டால் சாத்தானுக்கு மகத்தான வெற்றிதான்! தாவீதின் நிரந்தர வாரிசான “சமாதானப் பிரபு” உதிப்பதையும் அவன் தடை செய்து யெகோவாவின் நோக்கத்தை குலைத்துவிடலாமே.​—ஏசாயா 9:6, 7.

யெகோவாவின் அன்பான உறுதிமொழிகள்

9சீரியாவும் இஸ்ரவேலும் போடும் திட்டம் பலிக்குமா? “அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது” என்கிறார் யெகோவா. (ஏசாயா 7:⁠7, பொ.மொ.) எருசலேமின் முற்றுகை தோல்வியுறும் என்று மட்டுமல்ல, “இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்” என்றும் ஏசாயா மூலம் யெகோவா சொல்கிறார். (ஏசாயா 7:⁠8) ஆம், அறுபத்தைந்தே ஆண்டுகளில் இஸ்ரவேல் அடியோடு அழிக்கப்படும். a குறிப்பான காலத்தை சொல்லி இவ்வாறு யெகோவா அளிக்கும் உறுதி, ஆகாஸுக்கு தைரியமளிக்க வேண்டும். அதேவிதமாக இன்றும், சாத்தானின் உலகிற்கு விரைவில் அழிவு வரும் என்ற உறுதி கடவுளது மக்களுக்கு தைரியமளிக்கிறது.

10ஆகாஸின் முகத்தில் சந்தேக ரேகை படர்ந்திருக்கலாம். ஆகவேதான் “நீங்கள் விசுவாசிக்காவிட்டால் நிலைநிற்க மாட்டீர்கள்” என ஏசாயாவின் மூலம் யெகோவா சொல்கிறார். அதன் பின்னரும் பொறுமையின் உருவான யெகோவா “ஆகாஸிடம் தொடர்ந்து பேசினார்.” (ஏசாயா 7:9, 10, NW) பொறுமைக்கு என்னே இலக்கணம்! இன்றும் அநேகர் ராஜ்ய செய்திக்கு உடனடியாக செவிசாய்க்காமல் இருக்கலாம். ஆனால் நாம் அவர்களை மீண்டும் மீண்டும் சந்தித்து, யெகோவாவைப் போலவே “தொடர்ந்து” பேசலாம். யெகோவா அடுத்ததாக ஆகாஸிடம் சொல்வதைக் கேளுங்கள்: “நீ உன் கடவுளாகிய யெகோவாவினிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டுக்கொள்; ஆழத்திலிருந்தாகிலும் உன்னதத்திலிருந்தாகிலும் அது வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்.” (ஏசாயா 7:10, 11, தி.மொ.) ஆகாஸ் ஓர் அடையாளத்தைக் கேட்கலாம்; தாவீதின் வீட்டை காப்பதற்கு உத்தரவாதமாக அந்த அடையாளத்தை யெகோவா செய்து காட்டுவார்.

11‘நீ உன் கடவுளிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டுக்கொள்’ என யெகோவா சொன்னதை கவனித்தீர்களா? அவருக்குத்தான் எவ்வளவு கருணை! ஆகாஸ் பொய்க் கடவுட்களுக்கு மண்டியிட்டு அருவருப்பான பொய்மத பழக்கங்களில் ஈடுபட்டு வருகிறான். (2 இராஜாக்கள் 16:3, 4) அப்படியிருந்தும், அவன் சந்தேகத்தையும் பயத்தையும் காட்டுகிறபோதும், யெகோவா இன்னமும் தம்மை ஆகாஸின் கடவுள் என்கிறார். ஆக, யெகோவா எடுத்ததற்கெல்லாம் நம்மை நிராகரித்துத் தள்ளுபவர் அல்ல என இது காட்டுகிறது. தவறு செய்தாலும் விசுவாசத்தில் குறைவுபட்டாலும் அவர் மனமுவந்து உதவிக்கரம் நீட்டுகிறார். யெகோவா ஆகாஸை இன்னமும் நேசிப்பதாக உறுதியளித்த பிறகாவது அவன் அவரது கரத்தைப் பற்றிக்கொள்வானா?

சந்தேகத்தால் சொல் மீறுகிறான்

12‘நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்’ என ஆகாஸ் அகம்பாவத்தோடு சொல்கிறான். (ஏசாயா 7:12) ‘உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக’ என்ற சட்டத்திற்கு ஆகாஸ் கீழ்ப்படிகிறான் என நாம் நினைத்தால், அது தவறு. (உபாகமம் 6:16) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது இயேசு அதே சட்டத்தைக் குறிப்பிட்டார். (மத்தேயு 4:⁠7) ஆனால் ஆகாஸ் அதைக் குறிப்பிடும் விதமே வேறு. உண்மை வணக்கத்திற்குத் திரும்பும்படி யெகோவா அவனை அழைத்தும், அவன் விசுவாசத்தைப் பலப்படுத்த ஓர் அடையாளத்தைக் காட்டுவதாக சொல்லியும், ஆகாஸ் மசியவில்லை. அவன் யெகோவாவின் உதவியை உதறித்தள்ளி வேறு உதவியை நாடுகிறான். இச்சமயத்திலேயே, அவன் அசீரிய ராஜாவுக்கு பெரும் தொகையை அனுப்பி, வடக்கிலிருந்து வரும் எதிரிகளை வெல்ல உதவி கேட்டிருக்கலாம். (2 இராஜாக்கள் 16:7, 8) இதற்கிடையில், சீரிய-இஸ்ரவேல படை எருசலேமை முற்றுகையிடுகிறது.

13ராஜாவின் விசுவாசம் மங்கிவிட்டதை மனதில்கொண்டு ஏசாயா இப்படி கேட்கிறார்: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?” (ஏசாயா 7:13, பொ.மொ.) சதா முரண்டுபிடித்தால் யெகோவா சலித்துப்போகாமலா இருப்பார்? இன்னொரு மாற்றத்தை கவனித்தீர்களா? தீர்க்கதரிசி இம்முறை ‘உன் கடவுள்’ என சொல்லாமல் ‘என் கடவுள்’ என சொல்கிறார். ஆம், இனி கேடுகாலம்தான்! என்று மறைமுகமாக கூறுகிறார். ஆகாஸ் யெகோவாவை உதாசீனப்படுத்திவிட்டு அசீரியாவை நாடும்போது, மீண்டும் யெகோவாவிடம் நெருங்கிவரும் அருமையான வாய்ப்பை இழந்துவிடுகிறார். தற்காலிக ஆதாயங்களுக்காக வேதப்பூர்வ நம்பிக்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் கடவுளோடு உள்ள பந்தத்தை நாம் ஒருபோதும் அறுத்துக்கொள்ளாதிருப்போமாக.

இம்மானுவேலின் அடையாளம்

14தாவீதோடு செய்த உடன்படிக்கையை யெகோவா உண்மையோடு காக்கிறார். ஓர் அடையாளத்தைக் கேட்க யெகோவா வாய்ப்பு கொடுத்தார், அந்த அடையாளத்தை கொடுத்தே தீருவார்! ஏசாயா தொடர்ந்து சொல்வதை கவனியுங்கள்: “ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்கு முன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.”​—ஏசாயா 7:14-16.

15தாவீதின் ராஜ வம்சத்திற்கு எதிரிகள் முடிவு கட்டுவார்கள் என பயப்படுபவர்களுக்கு இது நற்செய்தி. “இம்மானுவேல்” என்பதற்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என அர்த்தம். ஆகவே கடவுள் யூதாவோடு இருக்கிறார், தாவீதோடு செய்த உடன்படிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற உறுதி கிடைக்கிறது. யெகோவா என்ன செய்வார் என்பது மட்டுமல்ல எப்போது செய்வார் என்பதும் ஆகாஸுக்கும் அவன் மக்களுக்கும் சொல்லப்படுகிறது. இம்மானுவேல் நல்லது கெட்டதை அறியும் வயதை எட்டும் முன்பே, எதிரி தேசம் அழிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. அது அச்சுப்பிசகாமல் நிறைவேறுகிறது!

16இம்மானுவேல் யாருடைய பிள்ளை என்பதை பைபிள் சொல்வதில்லை. ஆனால் இம்மானுவேல் ஓர் அடையாளமாக சேவிக்கப் போவதாக சொல்லப்படுவதையும், ஏசாயா தன்னையும் தன் பிள்ளைகளையும் “அடையாளங்களாக” பிற்பாடு குறிப்பிடுவதையும் பார்க்கும்போது, அவர் ஏசாயாவின் மகன்களில் ஒருவராக இருக்கலாம் என தெரிகிறது. (ஏசாயா 8:18) ஆகாஸின் நாட்களில் இம்மானுவேலின் அடையாளத்தை யெகோவா தெளிவுபடுத்தாமல் விட்டதற்கு நல்ல காரணம் இருந்திருக்கும். ஒருவேளை பிற்பாடு வரும் சந்ததிகள் ‘பெரிய இம்மானுவேலுக்கு’ முக்கியத்துவம் கொடுக்க இது தடையாகி விடக்கூடாது என நினைத்திருக்கலாம். யார் இந்தப் பெரிய இம்மானுவேல்?

17ஏசாயா புத்தகத்தைத் தவிர, ஒரேவொரு இடத்தில்தான் பைபிள் இம்மானுவேல் என்ற பெயரை குறிப்பிடுகிறது. அது மத்தேயு 1:23. இம்மானுவேலின் பிறப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம், இயேசுவின் பிறப்பில் நிறைவேறியதாக எழுதும்படி யெகோவா மத்தேயுவை ஏவினார். இயேசுவே தாவீதின் சிங்காசனத்திற்கு உரிமையுள்ள வாரிசாவார். (மத்தேயு 1:18-23) முதல் இம்மானுவேலின் பிறப்பு, கடவுள் தாவீதின் வீட்டை கைவிடவில்லை என்பதற்கு அடையாளமாக இருந்தது. அதேபோல், பெரிய இம்மானுவேலான இயேசுவின் பிறப்பு, கடவுள் மனிதவர்க்கத்தை அல்லது தாவீதின் வீட்டாரோடு செய்த ராஜ்ய உடன்படிக்கையை கைவிடவில்லை என்பதற்கு அடையாளமாக இருந்தது. (லூக்கா 1:31-33) யெகோவாவின் தலைமை பிரதிநிதி மனிதவர்க்கத்தின் மத்தியில் இருந்ததால், “தேவன் நம்மோடிருக்கிறார்” என மத்தேயு சொன்னது எவ்வளவு கச்சிதம். இன்று இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆட்சிசெய்து வருகிறார், பூமியிலுள்ள தம் சபையோடும் இருக்கிறார். (மத்தேயு 28:20) நிச்சயமாகவே இன்றும் கடவுளது மக்கள், “தேவன் நம்மோடிருக்கிறார்” என தைரியமாக சொல்ல முடியும்!

கீழ்ப்படியாமையின் கேடுகள்

18ஆறுதல் சொல்லி முடித்ததும் முடிக்காததுமாய் ஏசாயா அடுத்ததாக குலைநடுங்க வைக்கும் விஷயங்களைச் சொல்கிறார்: “எப்பிராயீம் யூதாவை விட்டுப் பிரிந்த நாள் முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன் மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.” (ஏசாயா 7:17) அழிவு வாசலருகே வந்துவிட்டது, அதுவும் அசீரிய ராஜாவின் ரூபத்தில். கொடூரமே உருவான அசீரியர்கள் இனி தங்களை ஆட்டிப்படைப்பார்கள் என்ற எண்ணமே ஆகாஸுக்கும் அவன் மக்களுக்கும் கொடுங்கனவாய் இருந்திருக்கும். அசீரியாவின் பக்கம் சேர்ந்துவிட்டால் இஸ்ரவேலிடமிருந்தும் சீரியாவிடமிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்றல்லவா ஆகாஸ் கணக்குப்போட்டிருக்கிறான். ஒருவிதத்தில் அவன் கணக்கு பலிக்கும்தான். ஏனெனில் அசீரிய ராஜா ஆகாஸின் வேண்டுகோளுக்கு இணங்கி இஸ்ரவேலையும் சீரியாவையும் தாக்குவார். (2 இராஜாக்கள் 16:9) இதனால் பெக்காவும் ரேத்சீனும் முற்றுகையை கைவிடும் கட்டாயத்திற்கு ஆளாவார்கள். இவ்வாறு சீரிய-இஸ்ரவேல கூட்டணி எருசலேமை பிடிக்க முடியாமல் போகும். (ஏசாயா 7:⁠1) ஆனால் இப்போதோ, உயிர்காப்பான் என அவர்கள் நம்பிய அசீரியனே அவர்கள் உயிரை வாங்குவான் என்று சொல்லி அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் ஏசாயா!​—நீதிமொழிகள் 29:25-ஐ ஒப்பிடுக.

19இந்த உண்மை சம்பவம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பாடம் புகட்டுகிறது. சோதனைகள் வரும்போது கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுத்துவிட மனம் தூண்டும். யெகோவாவின் பாதுகாப்புக் கரங்களை விட்டு விலகச் சொல்லும். ஆனால் வேண்டாம் இந்த விபரீதம்! அதற்கு மட்டும் நாம் இடம்கொடுத்துவிட்டால், தற்கொலைக்கு தயாராகிவிட்டோம் என அர்த்தம். இதைத்தான் ஏசாயாவின் அடுத்த வார்த்தைகள் காட்டுகின்றன. அசீரியா படையெடுத்து வரும்போது அந்தத் தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் என்னவாகும் என்பதை தீர்க்கதரிசி விவரிக்கிறார்.

20ஏசாயா தன் அறிவிப்பை நான்கு பாகங்களாக பிரித்துச் சொல்கிறார். “அந்நாளில்” அதாவது அசீரியா யூதாவை தாக்கும் அந்த நாளில் என்ன நடக்கும் என்பதை அவை ஒவ்வொன்றும் முன்னறிவிக்கின்றன. “அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும், அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்; உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைகள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.” (ஏசாயா 7:18, 19, பொ.மொ.) எகிப்திய படைகளும் அசீரிய படைகளும் ‘ஈக்களையும்’ ‘தேனீக்களையும்’ போல பெருங்கூட்டமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மொய்க்கும். அவை வெறுமனே படையெடுத்துச் செல்லாமல், தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் நிரந்தரமாக வந்திறங்கும்.

21“அந்நாளில், நதியின் பகுதியில் கூலிக்கு வாங்கப்பட்ட சவரக் கத்தியினால், அதாவது அசீரிய ராஜாவினால், யெகோவா தலைமயிரையும் கால்மயிரையும் சிரைத்துவிடுவார். அக்கத்தி தாடியையும் சவரம் செய்துவிடும்” என்றும் ஏசாயா சொல்கிறார். (ஏசாயா 7:20, NW) இம்முறை முக்கிய எதிரியாகிய அசீரியாவை மாத்திரமே குறிப்பிடுகிறார். சீரியாவையும் இஸ்ரவேலையும் ‘சிரைக்க’ ஆகாஸ் அசீரிய ராஜாவை கூலிக்கு அமர்த்துகிறான். ஆனால் ஐப்பிராத்து பகுதியிலிருந்து ‘கூலிக்கு வாங்கப்பட்ட இந்த சவரக் கத்தி’ யூதாவின் “தலைமயிரை” மொட்டையடித்து, தாடியையும் விட்டுவைக்காமல் சுத்தமாக சவரம் செய்துவிடும்!

22இதன் விளைவு என்ன? “அக்காலத்தில் [“அந்நாளில்,” NW] ஒருவன் ஒரு இளம் பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால்கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.” (ஏசாயா 7:21, 22) அசீரியர்கள் தேசத்தை ‘சிரைத்த’ பிறகு சில ஆட்களே மீந்திருப்பார்கள். ஆகவே ஒருசில மிருகங்களே உணவுக்கு தேவைப்படும். அவர்கள் ‘வெண்ணெயையும் தேனையுமே’ சாப்பிடுவார்கள், திராட்சரசத்திற்கும் அப்பத்திற்கும் தானியங்களுக்கும் வழியே இருக்காது. மதிப்புமிக்க, வளமிக்க நிலமெங்கும் இப்போது வெறும் முட்புதரும் களைகளுமே மண்டிக்கிடக்கும் என மூன்று முறை சொல்வதன்மூலம் தேசத்தின் அழிவு மிக பயங்கரமாக இருக்கும் என்பதை ஏசாயா வலியுறுத்துகிறார். புதர்களுக்குள் காட்டு மிருகங்கள் பதுங்கியிருப்பதால் கிராமத்திற்குள் செல்வோர் “அம்புகளையும் வில்லையும்” எடுத்துச் செல்ல வேண்டும். வயல்கள் யாவும் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும் ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாகும். (ஏசாயா 7:23-25) ஆகாஸின் நாட்களிலேயே இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பிக்கிறது.​—2 நாளாகமம் 28:⁠20.

துல்லியமான முன்னறிவிப்புகள்

23இப்போது ஏசாயா நிகழ்காலத்திற்கு வருகிறார். சீரிய-இஸ்ரவேல் கூட்டணி இன்னும் எருசலேமை முற்றுகையிட்டிருந்த சமயத்தில் இப்படிச் சொல்கிறார்: “கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை [“பலகையை,” NW] எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார். அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.” (ஏசாயா 8:1, 2) மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்பதற்கு, “கொள்ளையடிக்க விரைகிறான், சூறையாட துரிதமாக வந்திருக்கிறான்” என அர்த்தம். இதை எழுதியது உண்மை என்பதை பிற்பாடு நிரூபிக்க, சமுதாயத்தில் மதிப்புமிக்க இருவரை சாட்சிக்கு அழைக்கிறார். இந்த அடையாளத்தை நிரூபிக்க இன்னொரு அடையாளமும் கொடுக்கப்படும்.

24ஏசாயா அந்த இரண்டாவது அடையாளத்தைப் பற்றி சொல்வதாவது: “நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு. இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.” (ஏசாயா 8:3, 4) ஆக, யூதாவின் எதிரியான சீரியாவையும் இஸ்ரவேலையும் அசீரியா விரைவில் சூறையாடும் என்பதற்கான அடையாளங்கள், பெரிய பலகையும் புதிதாய் பிறக்கும் பாலகனுமே. அசீரியா எவ்வளவு விரைவில் சூறையாடும்? அம்மழலை, “அப்பா,” “அம்மா” என முதல் வார்த்தைகளை சொல்லும் முன்னேயே சூறையாடும். இவ்வளவு குறிப்பாக தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டது, ஒன்று யெகோவாவின்மீது இன்னுமதிக நம்பிக்கையை வளர்க்க வேண்டும் அல்லது ஏசாயாவையும் அவர் மகன்களையும் ஏளனத்திற்கு ஆளாக்க வேண்டும். எப்படியோ, ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறுகின்றன.​—2 இராஜாக்கள் 17:1-6.

25ஏசாயா மீண்டும் மீண்டும் விடுத்த எச்சரிக்கைகள் கிறிஸ்தவர்களுக்கும் பாடம் சொல்கின்றன. ஏசாயா இயேசு கிறிஸ்துவையும் ஏசாயாவின் மகன்கள் இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களையும் பிரதிநிதித்துவம் செய்தனர் என அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 2:10-13) இயேசு, இந்தக் கொடிய காலங்களில் ‘விழித்திருக்க’ வேண்டிய அவசியத்தை உண்மை கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டி வருகிறார். பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட தம் சீஷர்கள் மூலம் இதைச் செய்கிறார். (லூக்கா 21:34-36) அதேசமயம், பரிகாசத்தின் மத்தியிலும், மனந்திரும்பாதவர்களுக்கு அழிவு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. (2 பேதுரு 3:3, 4) காலத்தை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனங்கள் ஏசாயாவின் நாட்களில் நிறைவேறின, இவ்வாறு நம் நாளிலும் ‘அவை நிச்சயம் நிறைவேறும், அவை தாமதிப்பதில்லை’ என்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.​—ஆபகூக் 2:3, NW.

அடித்துச் செல்லும் வெள்ளம்

26ஏசாயா தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறார்: “இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின் மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள் மேலும் புரண்டு, யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.”​—ஏசாயா 8:5-8.

27“இந்த ஜனம்,” அதாவது இஸ்ரவேலின் வட ராஜ்யம், யெகோவா தாவீதோடு செய்த உடன்படிக்கையை உதாசீனப்படுத்துகிறது. (2 இராஜாக்கள் 17:16-18) அவர்களுக்கு அந்த உடன்படிக்கை எருசலேமிற்குள் இலேசாக பாயும் சீலோவா கால்வாயைப் போல் வலுவற்று தெரிகிறது. யூதாவுக்கு எதிராக போர் தொடுப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் இந்த அவமதிப்பிற்காக தக்க தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். யெகோவா, சீரியாவையும் இஸ்ரவேலையும் அசீரியா ‘பிரவாகிக்கும்படி’ செய்வார். அதேபோல் இன்றைய பொய் மதங்களை அரசியல் அமைப்பு ‘பிரவாகிக்கும்படி’ செய்வார். (வெளிப்படுத்துதல் 17:16; ஒப்பிடுக: தானியேல் 9:26.) அடுத்ததாக, ‘திரளான ஆற்றுநீர்’ புரண்டு வந்து, “யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து” “கழுத்துமட்டும்,” அதாவது எருசலேம் மட்டும் வரும் என்கிறார் ஏசாயா. b எருசலேமிலேயே யூதாவின் தலை (ராஜா) ஆட்சி செய்கிறார். நம் நாளில், பொய் மதங்களை அழிக்கும் அரசியல் அமைப்பு அதேவிதமாக யெகோவாவின் ஊழியர்களை தாக்க நெருங்கி, “கழுத்துமட்டும்” சூழ்ந்துகொள்ளும். (எசேக்கியேல் 38:2, 10-16) அதன் பின் என்ன நடக்கும்? ஏசாயாவின் காலத்தில் என்ன நடக்கிறது? அசீரியர்கள் நகரின் மதில்களைத் தாண்டி கடவுளது மக்களை பிரவாகித்து செல்கிறார்களா? இல்லை. ஏனெனில் தேவன் அவர்களோடு இருக்கிறார்.

அஞ்ச வேண்டாம்​—⁠‘தேவன் நம்மோடிருக்கிறார்’!

28ஏசாயா இப்படி எச்சரிக்கிறார்: “ஜனங்களே [கடவுளது உடன்படிக்கை மக்களை எதிர்ப்போரே] நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக் கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.” (ஏசாயா 8:9, 10) சில வருடங்களுக்குப் பிற்பாடு, ஆகாஸின் மகனான உத்தம எசேக்கியாவின் ஆட்சியில் இவ்வார்த்தைகள் நிறைவேறுகின்றன. அசீரியர்கள் எருசலேமை அச்சுறுத்துகையில் யெகோவாவின் தூதர் 1,85,000 பேரை வீழ்த்துகிறார். தேவன் தம் மக்களோடும் தாவீதின் அரச வம்சத்தோடும் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (ஏசாயா 37:33-37) வரவிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தில் யெகோவா பெரிய இம்மானுவேலை அனுப்பி, தம் எதிரிகள் அனைவரையும் நொறுக்குவார். அதுமட்டுமல்ல தம்மை நம்புவோரையும் காப்பார்.​—சங்கீதம் 2:2, 9, 12.

29எசேக்கியா காலத்து யூதர்களைப் போல் ஆகாஸ் காலத்து யூதர்கள் யெகோவாவின் பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கவில்லை. சீரிய-இஸ்ரவேல கூட்டணியை எதிர்த்து நிற்க, அசீரியர்களோடு கூட்டுச்சேர்வதே, அல்லது “சதித்திட்டம்” (பொ.மொ.) தீட்டுவதே அவர்கள் விருப்பம். இருந்தாலும் ‘இந்த ஜனத்தின் வழியைக்’ குறித்து அல்லது போக்கைக் குறித்து எச்சரிக்கும்படி யெகோவாவின் “கரம்” ஏசாயாவை ஏவுகிறது. அதன்படி ஏசாயா எச்சரிப்பதாவது: “அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.” (ஏசாயா 8:11-13) இதை மனதில் வைத்தே, இன்று யெகோவாவின் ஊழியர்கள் மத அமைப்புகளிலும் அரசியல் அமைப்புகளிலும் சேர்வதை அல்லது அவற்றில் நம்பிக்கை வைப்பதை தவிர்க்கின்றனர். கடவுள் பாதுகாப்பு அளிப்பார் என்பதில் யெகோவாவின் ஊழியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ‘யெகோவா நம் பட்சத்தில் இருக்கையில், மனுஷன் நம்மை என்ன செய்ய முடியும்?’​—சங்கீதம் 118:6, தி.மொ.

30யெகோவா தம்மை நேசிப்போருக்கு ‘பரிசுத்த ஸ்தலமாக,’ அதாவது பாதுகாப்பாக இருப்பார் என்பதை ஏசாயா மீண்டும் வலியுறுத்துகிறார். அவரை உதாசீனப்படுத்துவோரோ, “இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்”—⁠யெகோவாவின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு ஏற்படவிருக்கும் கதியைத் துல்லியமாக விவரிக்கும் ஐந்து வார்த்தைகள்! (ஏசாயா 8:14, 15) முதல் நூற்றாண்டில் இயேசுவை புறக்கணித்தவர்களும் அதேவிதமாக இடறி விழுந்தார்கள். (லூக்கா 20:17, 18) இப்போது பரலோகத்தில் முடிசூட்டப்பட்டிருக்கும் இயேசுவிற்கு உத்தமத்தைக் காட்டாதவர்களுக்கு அதே கதிதான் காத்திருக்கிறது.​—சங்கீதம் 2:5-9.

31ஏசாயாவின் நாட்களில் அனைவருமே இடறவில்லை. அவர் சொல்கிறார்: “சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு . . . நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.” (ஏசாயா 8:16, 17) அநேகர் யெகோவாவை நம்ப மறுப்பதால் அவர் தம் முகத்தை அவர்களிடமிருந்து மறைக்கிறார். ஆனால் ஏசாயாவும் அவருக்கு செவிகொடுப்போரும் கடவுளது சட்டதிட்டங்களை புறக்கணிக்காமல் யெகோவாவையே எப்போதும் நம்பியிருக்கிறார்கள். நாம் அவர்களைப் பின்பற்றி உண்மை வணக்கத்தை அண்டியிருக்க தீர்மானமாய் இருப்போமாக!​—தானியேல் 12:4, 9; மத்தேயு 24:45; ஒப்பிடுக: எபிரெயர் 6:11, 12.

‘அடையாளங்களும் அற்புதங்களும்’

32ஏசாயா இப்போது சொல்வதாவது: “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.” (ஏசாயா 8:18) யூதாவிற்கான யெகோவாவின் நோக்கங்களுக்கு ஏசாயாவும் சேயார்யாசூபும் மகேர்-சாலால்-அஷ்-பாஸும் அடையாளங்கள். இன்று இயேசுவும் அவரது அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களும் அதேபோல் அடையாளங்களாக சேவிக்கின்றனர். (எபிரெயர் 2:11-13) அவர்களோடு ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தாரும்’ சேர்ந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14; யோவான் 10:16) சுற்றியிருப்பவற்றிலிருந்து தனித்துத் தெரியும்போதுதான் ஓர் அடையாளம் அல்லது சின்னம் அதன் நோக்கத்தை சேவிக்கும். அதேவிதமாக கிறிஸ்தவர்களும் இவ்வுலகிலிருந்து தனித்து வாழும்போதுதான் சிறந்த அடையாளங்களாக சேவிப்பர். அவர்கள் யெகோவாவின் மீது முழு நம்பிக்கை வைத்து அவரது நோக்கங்களை தைரியமாக அறிவிக்க வேண்டும்.

33ஆக, நாம் அனைவரும் உலகைப் பின்பற்றாமல் கடவுளது தராதரங்களைப் பின்பற்றக்கடவோம். அடையாளங்களாக தைரியமாய் தனித்து விளங்கக்கடவோம். ‘அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூற வேண்டும்’ என பெரிய ஏசாயாவாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு நாமும் இணங்கி நடப்போமாக. (ஏசாயா 61:1, 2; லூக்கா 4:17-21) நவீன நாளைய அசீரிய வெள்ளம் பூமியை பிரவாகித்து கழுத்துவரை வந்துவிட்டாலும் உண்மை கிறிஸ்தவர்கள் அழிய மாட்டார்கள். நாம் ஸ்திரமாக நிற்போம், ஏனெனில் ‘தேவன் நம்மோடிருக்கிறார்.’

[அடிக்குறிப்புகள்]

a இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பற்றிய மேலுமான விவரங்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 62, 758-ஐக் காண்க.

b அசீரியா ஒரு பறவையாகவும், அதன் ‘செட்டைகளின் விரிவு தேசத்தின் விசாலத்தை மூடும்’ என்பதாகவும்கூட சொல்லப்பட்டது. ஆகவே தேசம் முழுவதையும் அசீரிய படை ஆக்கிரமிக்கும்.

[கேள்விகள்]

1. ஏசாயா 7, 8 அதிகாரங்களை ஆராய்வதால் கிறிஸ்தவர்கள் ஏன் இன்று பயனடையலாம்?

2, 3. முதலாவதாக ஏசாயா எதை சுருக்கமாக குறிப்பிடுகிறார்?

4. ஆகாஸும் அவன் மக்களும் பீதியடைய காரணமென்ன?

5. இன்று யெகோவாவின் ஜனங்கள் எந்த விதத்தில் ஏசாயாவைப் பின்பற்றுகிறார்கள்?

6. (அ) ஆகாஸ் ராஜாவிடம் என்ன ஆறுதலான செய்தியை ஏசாயா சொல்கிறார்? (ஆ) இன்றைய நிலைமை என்ன?

7. ஏசாயாவின் பெயரும் அவர் மகனின் பெயரும் எவ்வாறு நம்பிக்கை அளிக்கின்றன?

8. இரு தேசங்களுக்கு இடையே மட்டும் போர் மூளவில்லை என எப்படிச் சொல்லலாம்?

9. என்ன உறுதி ஆகாஸுக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் தைரியமளிக்க வேண்டும்?

10. (அ) உண்மை கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு யெகோவாவைப் பின்பற்றலாம்? (ஆ) எதைக் கேட்கும்படி ஆகாஸிடம் யெகோவா சொல்கிறார்?

11. ‘உன் கடவுள்’ என யெகோவா சொன்னது எதை உறுதிப்படுத்துகிறது?

12. (அ) ஆகாஸ் எவ்வாறு அகம்பாவத்தோடு நடந்துகொள்கிறான்? (ஆ) யெகோவாவிடம் திரும்புவதற்குப் பதிலாக ஆகாஸ் யாருடைய உதவியை நாடுகிறான்?

13. வசனம் 13-⁠ல் என்ன மாற்றத்தைக் கவனிக்கிறோம், இது எதைக் குறிக்கிறது?

14. தாவீதோடு செய்த உடன்படிக்கையை யெகோவா எவ்வாறு உண்மையோடு காக்கிறார்?

15. இம்மானுவேலைப் பற்றிய தீர்க்கதரிசனம் என்ன இரு விஷயங்களைச் சொல்கிறது?

16. ஆகாஸின் நாட்களில் இம்மானுவேலின் அடையாளத்தை யெகோவா என்ன காரணத்திற்காக தெளிவுபடுத்தாமல் விட்டிருக்கலாம்?

17. (அ) பெரிய இம்மானுவேல் யார், அவரது பிறப்பு எதைக் குறித்தது? (ஆ) இன்று கடவுளது மக்கள், “தேவன் நம்மோடிருக்கிறார்” என ஏன் சொல்ல முடியும்?

18. (அ) ஏசாயா அடுத்ததாக சொல்வது ஏன் குலைநடுங்க வைக்கிறது? (ஆ) விரைவில் என்ன தலைகீழ் மாற்றம் ஏற்படும்?

19. இந்த உண்மை சம்பவம் இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன பாடம் புகட்டுகிறது?

20. ‘ஈக்களும்’ ‘தேனீக்களும்’ எவை, அவை என்ன செய்யும்?

21. அசீரிய ராஜா என்ன விதத்தில் சவரக் கத்தியைப் போல் இருப்பார்?

22. அசீரிய படையெடுப்பின் விளைவை என்ன உதாரணங்களால் ஏசாயா விவரிக்கிறார்?

23. (அ) இப்போது எதைச் செய்யும்படி ஏசாயா கட்டளையிடப்படுகிறார்? (ஆ) பலகையின் அடையாளம் எவ்வாறு உறுதிசெய்யப்படுகிறது?

24. மகேர்-சாலால்-அஷ்-பாஸ் பற்றிய அடையாளம் யூதா மக்களை எவ்வாறு பாதிக்கும்?

25. ஏசாயாவின் நாட்களை நம் நாட்களோடு எவ்வாறு ஒப்பிடலாம்?

26, 27. (அ) ஏசாயா என்ன சம்பவங்களை முன்னறிவிக்கிறார்? (ஆ) ஏசாயாவின் வார்த்தைகள் இன்று யெகோவாவின் மக்களுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?

28. எதிரிகள் யூதாவை அழிக்க தீவிரமாக முயன்றாலும் யெகோவா அளிக்கும் உறுதி என்ன?

29. (அ) ஆகாஸ் காலத்து யூதர்களுக்கும் எசேக்கியா காலத்து யூதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (ஆ) மத, அரசியல் அமைப்புகளோடு இன்று யெகோவாவின் ஊழியர்கள் ஏன் சேர்வதில்லை?

30. யெகோவாவின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு என்ன கதி ஏற்படும்?

31. இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஏசாயாவையும் அவருக்கு செவிகொடுத்தவர்களையும் பின்பற்றலாம்?

32. (அ) இன்று யார் “அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும்” சேவிக்கின்றனர்? (ஆ) கிறிஸ்தவர்கள் ஏன் உலகிலிருந்து தனித்திருக்க வேண்டும்?

33. (அ) உண்மை கிறிஸ்தவர்கள் எதை செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்? (ஆ) உண்மை கிறிஸ்தவர்கள் ஸ்திரமாக நிற்க காரணமென்ன?

[பக்கம் 103-ன் படங்கள்]

ஆகாஸிடம் யெகோவாவின் செய்தியை அறிவிக்க சென்றபோது சேயார்யாசூபுவை ஏசாயா அழைத்துச் சென்றார்

[பக்கம் 111-ன் படம்]

ஏசாயா பெரிய பலகையில் “மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என எழுதக் காரணமென்ன?