Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையற்ற திராட்சத்தோட்டத்திற்கு ஐயோ!

உண்மையற்ற திராட்சத்தோட்டத்திற்கு ஐயோ!

அதிகாரம் ஏழு

உண்மையற்ற திராட்சத்தோட்டத்திற்கு ஐயோ!

ஏசாயா 5:1-30

“மிக அழகிய மொழிநடையில் வெகு சிறப்பாக செய்தியைத் தெரிவிப்பதில் இந்த உவமை ஒப்பற்றது.” ஏசாயா ஐந்தாம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களைக் குறித்து இப்படிச் சொன்னார் ஒரு பைபிள் அறிஞர். இந்த உவமை, எழுத்து நடையில் தனித்து விளங்குவதோடு, கருத்திலும் மனதைத் தொடுகிறது. ஏனெனில் யெகோவா தம் மக்களை எந்தளவு கரிசனையோடு பராமரிக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. அதேசமயத்தில், அவருக்கு பிரியமில்லாத காரியங்களைக் குறித்தும் நம்மை எச்சரிக்கிறது.

2ஏசாயாவின் உவமை இப்படி ஆரம்பமாகிறது: “இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து [“கொத்திவிட்டு,” NW], அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை [“திராட்சக்கொடியை,” NW] நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.”​—ஏசாயா 5:1, 2; ஒப்பிடுக: மாற்கு 12:⁠1.

திராட்சத்தோட்ட பராமரிப்பு

3இந்த உவமையை ஏசாயா உண்மையிலேயே பாட்டாக பாடுகிறாரோ இல்லையோ, அது நிச்சயம் கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. திராட்சத்தோட்டத்தை அமைக்கும் வேலையைக் குறித்து பெரும்பான்மையர் அறிந்திருக்கின்றனர். ஆகவே ஏசாயாவின் விவரிப்பு தத்ரூபமாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறது. இன்றுபோல் அன்றைய திராட்சத் தோட்டக்காரர்கள் திராட்ச விதைகளை விதைக்கவில்லை. மாறாக, “நற்குல,” அதாவது உயர்தர ‘திராட்சக்கொடியை’​—⁠மற்றொரு திராட்சக்கொடியின் ஒரு கிளையை​—⁠நட்டனர். “மகா செழிப்பான மேட்டிலே” இந்தத் திராட்சத்தோட்டம் அமைக்கப்படுவது மிகப் பொருத்தம். ஏனெனில் அங்கு அது செழிக்கும்.

4கடினமாக உழைத்தால்தான் திராட்சத்தோட்டம் நன்கு கனி கொடுக்கும். தோட்டத்தின் சொந்தக்காரர் நிலத்தை ‘கொத்திவிட்டு கற்களை பொறுக்கி’ எறிந்ததாக ஏசாயா விவரிக்கிறார். மிகுந்த சிரமமெடுத்து பாடுபட வேண்டிய வேலை இது! ஒருவேளை அதிலுள்ள பெரிய கற்களை ‘கோபுரம் கட்ட’ அவர் பயன்படுத்தியிருக்கலாம். பண்டைய காலங்களில், அப்படிப்பட்ட கோபுரங்களில் காவற்காரர் நின்று பயிர்களை திருடர்களிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் காத்தனர். a சொந்தக்காரர், திராட்சத் தோட்டத்தைச் சுற்றி ஒரு கற்சுவரையும் கட்டுகிறார். (ஏசாயா 5:5, NW) இது பொதுவாக, அத்தியாவசியமான மேற்பரப்பு மண் அரிக்கப்படாதபடி கட்டப்பட்டது.

5திராட்சத்தோட்டத்தைப் பாதுகாக்க சொந்தக்காரர் இவ்வளவு கடினமாக உழைத்திருக்க, அது கனிதர வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு அவருக்கு சகல உரிமையும் உண்டு. இந்த எதிர்பார்ப்புடன் அவர் ஓர் ஆலையை அமைக்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி அறுவடை செய்ய முடிகிறதா? இல்லை, திராட்சத்தோட்டம் கசப்பான பழங்களைத் தருகிறது.

திராட்சத்தோட்டமும் அதன் சொந்தக்காரரும்

6திராட்சத்தோட்டம் எது, அதன் சொந்தக்காரர் யார்? இந்தக் கேள்விகளுக்கு அதன் சொந்தக்காரரே இப்படி பதிலளிக்கிறார்: “எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள். நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் [“கற்சுவரைத்,” NW] தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.”​—ஏசாயா 5:3-5.

7ஆம் யெகோவாவே திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரர். அவர் அடையாள அர்த்தத்தில் தம்மையே ஒரு நீதிமன்றத்தில் நிறுத்தி, தமக்கும் தமக்கு ஏமாற்றமளித்த திராட்சத்தோட்டத்திற்கும் நியாயந்தீர்க்குமாறு கேட்கிறார். அப்படியென்றால் திராட்சத்தோட்டம் எது? சொந்தக்காரர் இவ்வாறு விளக்குகிறார்: “சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே.”​—ஏசாயா 5:7அ.

8திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரரான யெகோவாவை ‘என் நேசர்’ என ஏசாயா அழைக்கிறார். (ஏசாயா 5:1) கடவுளோடு அவ்வளவு அன்னியோன்னியமாக இருப்பதாலேயே ஏசாயா இந்தப் பதத்தை உபயோகிக்கிறார். (ஒப்பிடுக: யோபு 29:4; சங்கீதம் 25:14; NW.) ஆனாலும் கடவுள் தம் ‘திராட்சத்தோட்டத்தின்’ மீது​—⁠அவர் ‘நட்ட’ தேசத்தின் மீது​—⁠வைத்திருக்கும் அன்பிற்கு பக்கத்தில், தீர்க்கதரிசி கடவுள்மீது வைத்திருக்கும் அன்பு ஒன்றுமே இல்லை.​—⁠ஒப்பிடுக: யாத்திராகமம் 15:17; சங்கீதம் 80:8, 9.

9யெகோவா தம் மக்களை கானான் தேசத்தில் ‘நட்டி’ தமது சட்டதிட்டங்களைக் கொடுத்தார். மற்ற தேசங்களால் கறைபடாதிருக்கும்படி இவை ஒரு சுவர்போல அவர்களை காத்தன. (யாத்திராகமம் 19:5, 6; சங்கீதம் 147:19, 20; எபேசியர் 2:14) மேலும், நியாயாதிபதிகளையும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நியமித்து அவர்கள் மூலம் யெகோவா போதனை அளித்தார். (2 இராஜாக்கள் 17:13; மல்கியா 2:7; அப்போஸ்தலர் 13:20) இஸ்ரவேல் தேசம் எதிரிகளின் படைகளால் அச்சுறுத்தப்பட்ட போது அவர் மீட்பர்களை எழுப்பினார். (எபிரெயர் 11:32, 33) ஆகவே, “நான் என் திராட்சத் தோட்டத்திற்கெனச் செய்யாத வேலையொன்றுமில்லையே, இனிச் செய்வதென்ன?” (தி.மொ.) என்ற நியாயமான கேள்வியைக் கேட்கிறார்.

இன்று கடவுளுடைய திராட்சத்தோட்டத்தை அடையாளம் காணுதல்

10ஏசாயாவின் வார்த்தைகளை மனதில் வைத்தே கொலைகார தோட்டக்காரர்களைப் பற்றிய இந்த உவமையை இயேசு சொல்லியிருக்கலாம்: “வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.” வருத்தகரமாக தோட்டக்காரர்கள் திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரருக்கு துரோகம் செய்து அவர் குமாரனையும் கொன்றுவிடுகின்றனர். அதன்பின், “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து [சொல்லர்த்தமான இஸ்ரவேலரிடத்திலிருந்து] நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் [“தேசத்திற்குக்,” NW] கொடுக்கப்படும்” என இயேசு சொன்னார். இவ்வாறு, சொல்லர்த்தமான இஸ்ரவேலருக்கு மட்டுமே இந்த உவமை பொருந்தவில்லை என்பதை காட்டினார்.​—மத்தேயு 21:33-41, 43.

11அந்தப் புதிய ‘தேசம்’ ஓர் ஆவிக்குரிய தேசமாகும். அதில், 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்குவர். இவர்களே ‘தேவனுடைய இஸ்ரவேலராவர்.’ (கலாத்தியர் 6:16; 1 பேதுரு 2:9, 10; வெளிப்படுத்துதல் 7:3, 4) இயேசு, இவர்களை கிளையாகவும் தம்மை ‘மெய்யான திராட்சக்கொடியாகவும்’ ஒப்பிட்டுப் பேசினார். இந்தக் கிளைகள் கனிதர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. (யோவான் 15:1-5, NW) அவர்கள் கிறிஸ்துவைப் போன்ற குணங்களைக் காட்டி, ‘ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்க’ வேண்டும். (மத்தேயு 24:14; கலாத்தியர் 5:22, 23) ஆனால் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் இறந்தது முதற்கொண்டு, ‘மெய்யான திராட்சக்கொடியின்’ கிளைகளென சொல்லியிருக்கிற பெரும்பான்மையர் போலிகளாக நிரூபித்திருக்கின்றனர். நல்ல கனிகளுக்குப் பதிலாக கசப்பான கனிகளைத் தந்திருக்கின்றனர்.​—மத்தேயு 13:24-30, 38, 39.

12ஆகவே, யூதா மீது ஏசாயா அறிவித்த கண்டனம் இன்று கிறிஸ்தவமண்டலத்திற்கும் பொருந்துகிறது. யுத்தங்கள், சிலுவைப் போர்கள், ஒடுக்குமுறை விசாரணைகள் என அதன் சரித்திரத்தை ஆராய்கையில், எவ்வளவு கசப்பான கனிகளை தந்திருக்கிறது! இருந்தாலும் உண்மையான திராட்சத்தோட்டத்தைச் சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களது கூட்டாளிகளான ‘திரள் கூட்டத்தினரும்’ ஏசாயாவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 7:9) திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரரை பிரியப்படுத்த வேண்டுமானால், அவர்கள் தனிப்பட்ட விதமாகவும் ஒன்றுசேர்ந்தும் அவருக்குப் பிரியமான கனிகளைக் கொடுக்க வேண்டும்.

‘கசப்பான பழங்கள்’

13திராட்சத்தோட்டத்தைப் பராமரித்து வளமூட்டுவதற்கு யெகோவா மிகுந்த சிரமமெடுத்திருக்கிறார். ஆகவே அது ‘மிகுதியான திராட்சரசம் தரும் திராட்சத்தோட்டமாக’ வேண்டுமென நியாயமாகவே எதிர்பார்க்கிறார். (ஏசாயா 27:2) இருந்தாலும் பயன்மிக்க கனிதருவதற்குப் பதிலாக, அது கசப்பான ‘காட்டுப் பழங்களை,’ சொல்லர்த்தமாக “துர்நாற்றமிக்க,” “அழுகிய கனிகளை” தருகிறது. (ஏசாயா 5:2, NW அடிக்குறிப்பு; எரேமியா 2:21) ஆகவே தேசத்தைச் சுற்றியுள்ள தமது பாதுகாப்பு ‘வேலியை’ அகற்றப்போவதாக யெகோவா அறிவிக்கிறார். தேசம் ‘பாழாக்கப்படும்,’ அது கைவிடப்பட்டு வறண்டுபோகும். (ஏசாயா 5:6-ஐ வாசியுங்கள்.) கடவுளது சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் இவை எல்லாம் நடக்கும் என மோசே எச்சரித்திருந்தார்.​—உபாகமம் 11:17; 28:63, 64; 29:22, 23.

14கடவுள் தேசத்திடமிருந்து நல்ல கனிகளை எதிர்பார்க்கிறார். ஏசாயாவின் காலத்தில் வாழும் மீகா இப்படிச் சொல்கிறார்: “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” (மீகா 6:8; சகரியா 7:9) இருந்தாலும் தேசம் யெகோவாவின் சொல்லை கேட்க மறுத்துவிடுகிறது. “[கடவுள்] நியாயத்துக்குக் காத்திருந்தார், ஆனால், இதோ! சட்டமீறுதல்; நீதிக்குக் காத்திருந்தார், ஆனால், இதோ! கூக்குரல்.” (ஏசாயா 5:7ஆ, NW) இந்த உண்மையற்ற தேசம் ‘சோதோமின் திராட்சக்கொடியைப்’ போல் நச்சுத் திராட்சைகளை கொடுக்கும் என மோசே முன்னறிவித்திருந்தார். (உபாகமம் 32:32) ஆகவே கடவுளுடைய சட்டத்தை மீறியதில், ஓரினப்புணர்ச்சி உட்பட, பாலியல் ஒழுக்கக்கேடும் அடங்கியிருந்தது. (லேவியராகமம் 18:22) “சட்டமீறுதல்” என்ற பதம் “இரத்தம் சிந்துதல்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். அப்படிப்பட்ட கொடூர செயலால் பாதிக்கப்பட்டவர்கள் ‘கூக்குரலிடுகின்றனர்.’ இந்தக் கூக்குரல் திராட்சத்தோட்டத்தை அமைத்தவரின் காதுகளை எட்டுகிறது.​—யோபு 34:27-ஐ ஒப்பிடுக.

15யெகோவா தேவன் ‘நீதியிலும் நியாயத்திலும் பிரியமுள்ளவர்.’ (சங்கீதம் 33:5) அவர் யூதர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.” (லேவியராகமம் 19:15) ஆகவே நாம் பட்சபாதம் பாராமல் எல்லாரையும் ஒரேவிதமாக நடத்த வேண்டும். இனம், வயது, பணக்காரர், ஏழை போன்றவற்றை வைத்து மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது. (யாக்கோபு 2:1-4) குறிப்பாக, கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ‘பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாதிருக்க’ கவனமாயிருப்பது அவசியம். அவர்கள் நியாயந்தீர்க்கும் முன்பு இரு சாரார் சொல்வதையும் கவனமாகக் கேட்க வேண்டும்.​—1 தீமோத்தேயு 5:21; நீதிமொழிகள் 18:⁠13.

16நீதியற்ற உலகில் வாழ்வதால் கிறிஸ்தவர்களும் எளிதில் தெய்வீக சட்டதிட்டங்களை எதிர்க்க அல்லது வெறுக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சட்டங்களுக்கு ‘கீழ்ப்படிய தயாராக’ இருக்க வேண்டும். (யாக்கோபு 3:17, NW) இந்தப் ‘பொல்லாத பிரபஞ்சத்தில்’ பாலியல் ஒழுக்கக்கேடும் வன்முறையும் தலைவிரித்தாடினாலும், அவர்கள் “ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ள” வேண்டும். (கலாத்தியர் 1:4; எபேசியர் 5:15) கட்டுப்பாடற்ற பாலுறவை ஆதரிக்கும் கருத்துக்களை அறவே வெறுத்து ஒதுக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் எழும்போது, ‘கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம்’ ஆகிய எதுவுமின்றி அவற்றை தீர்க்க வேண்டும். (எபேசியர் 4:31) நீதியை வளர்த்துக்கொள்வதன் மூலம் உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளை மகிமைப்படுத்தி அவரது தயவைப் பெறலாம்.

பேராசையின் விலை

17வசனம் 8-⁠ல், ஏசாயா இனியும் யெகோவாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டவில்லை. மாறாக, யூதாவில் விளைந்த சில ‘கசப்பான பழங்களை’ கண்டனம் செய்து, ஆறு ‘ஐயோ’க்களில் முதலாவதை இப்படி தானாகவே அறிவிக்கிறார்: “தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ! சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும். பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒருகல விதை ஒரு குறுணி விளையும்.”​—ஏசாயா 5:8-10.

18பூர்வ இஸ்ரவேலில் எல்லா நிலமும் யெகோவாவிற்கே சொந்தமாக இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடவுள் நிலத்தை ஒதுக்கியிருந்தார். அதை அவர்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கொடுக்கலாம், ஆனால் ஒருபோதும் ‘நிரந்தரமாக விற்றுவிட’ கூடாது. (லேவியராகமம் 25:23, NW) இந்தச் சட்டம், நிலத்தின்மீது ஒருவரே ஏகபோக உரிமை கொள்வதை தடுத்தது. குடும்பங்கள் பரம ஏழைகள் ஆவதையும் தவிர்த்தது. இருந்தாலும் யூதாவிலிருந்த சிலர், பேராசையின் காரணமாக, சொத்து சம்பந்தப்பட்ட கடவுளுடைய சட்டங்களை மீறினர். மீகா இவ்வாறு எழுதினார்: “வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!” (மீகா 2:2) நீதிமொழிகள் 20:21 இவ்வாறு எச்சரிக்கிறது: “ஆரம்பத்திலே துரிதமாகக் [“பேராசையால்,” NW] கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.”

19இந்தப் பேராசைக்காரர் தகாத முறையில் பெற்ற செல்வத்தை பறிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். இவர்கள் அச்சுறுத்திக் கைப்பற்றிய வீடுகள் “குடியில்லாதிருக்கும்.” இவர்கள் பேராசையோடு பறித்துக்கொண்ட நிலங்கள் வழக்கத்திற்கும் வெகு குறைவான விளைச்சலே தரும். எப்படி, எப்போது இந்த சாபம் நிறைவேறும் என்பது திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை அந்தத் தீர்க்கதரிசனம்​—⁠அதன் சில பகுதிகளாவது​—⁠எதிர்காலத்தில் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுகையில் ஏற்படும் நிலைமையைக் குறிக்கலாம்.​—ஏசாயா 27:⁠10.

20அன்று சில இஸ்ரவேலர்கள் காட்டிய பேராசையை இன்று கிறிஸ்தவர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். (நீதிமொழிகள் 27:20) பொருளாதார விஷயங்களுக்கு நம் வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் தரும்போது, குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கவும் எளிதில் துணிந்துவிடுவோம். நேர்மையற்ற வியாபாரங்களில் அல்லது திடீர் கோடீஸ்வரராகலாம் என ஆசைகாட்டும் போலி திட்டங்களில் எளிதில் சிக்கிக்கொள்வோம். “ஐசுவரியவானாகிறதற்கு விரைபவன் குற்றமற்றவனாக இருக்க மாட்டான்.” (நீதிமொழிகள் 28:20, NW) ஆகவே, போதுமென்ற மனம் எவ்வளவு அவசியம்!​—1 தீமோத்தேயு 6:⁠8.

பொழுதுபோக்கு என்னும் கண்ணி

21இப்போது இரண்டாவது ‘ஐயோ’வை ஏசாயா அறிவிக்கிறார்: “சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.”​—ஏசாயா 5:11, 12.

22யெகோவா ‘நித்தியானந்த தேவன்.’ (1 தீமோத்தேயு 1:11) ஆகவே அவரது ஊழியர்கள் அளவோடு பொழுதுபோக்கில் ஈடுபடும்போது அவர் எரிச்சலடைவதில்லை. இஸ்ரவேல் மக்களோ இன்பத்தையே நாடி வரம்பையெல்லாம் மீறிவிடுகிறார்கள்! “குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்” என்கிறது பைபிள். (1 தெசலோனிக்கர் 5:7, பொ.மொ.) ஆனால் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் குடிவெறியர்களோ அதிகாலையிலிருந்து இருட்டிப் போகுமளவும் குடித்து வெறித்திருக்கிறார்கள்! கடவுள் என்று ஒருவர் இல்லாதது போலவும் தங்கள் நடத்தைக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதது போலவும் நடந்துகொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்காலம் இருண்டிருக்கும் என ஏசாயா முன்னுரைக்கிறார். “என் ஜனங்கள் அறிவில்லாமையால் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பட்டினி கிடப்பார்கள், பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள்.” (ஏசாயா 5:13NW) மெய்யான அறிவின்படி நடக்க மறுப்பதால் கடவுளுடைய உடன்படிக்கையின் மக்கள்​—⁠பெரியோரும் சரி சிறியோரும் சரி​—⁠ஷியோலுக்கு செல்வர்.​—ஏசாயா 5:14-17-ஐ வாசியுங்கள்.

23முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ‘வெறிகள்’ அல்லது ‘காட்டுத்தனமான பார்ட்டிகள்’ ஒரு பிரச்சினையாக இருந்தது. (கலாத்தியர் 5:21; பையிங்டன்; 2 பேதுரு 2:13) ஆகவே இன்றும்கூட சில கிறிஸ்தவர்கள் பார்ட்டி என்ற பெயரில் வரம்பு மீறி நடந்திருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. மதுபானங்களை மிதமிஞ்சி அருந்தியதால் சிலர் காட்டுக்கூச்சல் போட்டு அமளி ஏற்படுத்தியிருக்கின்றனர். (நீதிமொழிகள் 20:1) இன்னும் சிலர் குடிபோதையில் ஒழுக்கக்கேடாக நடந்திருக்கின்றனர். சில பார்ட்டிகள் விடிய விடிய நடந்திருக்கின்றன, இதனால் அடுத்த நாள் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போயிருக்கிறது.

24இருந்தாலும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் தெய்வீக கனிகளைக் கொடுக்கின்றனர். வரம்புக்கு உட்பட்ட மிதமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கின்றனர். ரோமர் 13:13-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள பவுலின் இந்தப் புத்திமதிக்கு செவிசாய்க்கின்றனர்: “களியாட்டும் வெறியும் . . . உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.”

பாவத்தை வெறுத்து சத்தியத்தை நேசித்தல்

25ஏசாயா அறிவிக்கும் மூன்றாவது, நான்காவது ‘ஐயோ’க்களை இப்போது கேளுங்கள்: “மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டுவந்து, நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ! தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!”​—ஏசாயா 5:18-20.

26இவ்வார்த்தைகள் பாவம் செய்வோரை எவ்வளவு தெளிவாக விவரிக்கின்றன! விலங்குகள் பாரவண்டியோடு இணைக்கப்பட்டிருப்பது போல் அவர்கள் பாவத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள் வரும் என்ற பயமே இந்தப் பாவிகளுக்கு இல்லை. ‘[கடவுளுடைய கிரியை] சமீபித்து வரட்டும்’ என்று ஏளனமாய் சொல்கிறார்கள். கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர்கள் உண்மைகளை திரித்து, “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” அறிவிக்கிறார்கள்.​—⁠ஒப்பிடுக: எரேமியா 6:15; 2 பேதுரு 3:3-7.

27இன்று கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட மனப்பான்மையை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, வேசித்தனமும் ஓரினப்புணர்ச்சியும் தவறல்ல என்ற உலகக் கருத்தை அவர்கள் ஏற்கக்கூடாது. (எபேசியர் 4:18, 19) கிறிஸ்தவன் ‘ஒரு குற்றத்தில் அகப்பட்டு’ மிக மோசமான பாவத்தைக்கூட ஒருவேளை செய்துவிடலாம். (கலாத்தியர் 6:1) அப்படி பாவம் செய்வோருக்கு உதவ சபையிலுள்ள மூப்பர்கள் தயாராக இருக்கிறார்கள். (யாக்கோபு 5:14, 15) ஜெபங்களாலும் பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளாலும் ஆவிக்குரிய விதத்தில் குணமாவது சாத்தியமே. இல்லையேல், ‘பாவத்திற்கு அடிமையாகும்’ ஆபத்து உண்டு. (யோவான் 8:34) கடவுளை பரிகசித்து நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து அலட்சியமாக இருப்பதற்கு பதிலாக, கிறிஸ்தவர்கள் யெகோவாவிற்கு முன்பு ‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்’ எப்போதும் இருக்க முயலுகிறார்கள்.​—2 பேதுரு 3:14; கலாத்தியர் 6:7, 8.

28பொருத்தமாகவே, ஏசாயா இந்தக் கடைசி ‘ஐயோ’க்களை கூறுகிறார்: “தங்கள் பார்வையில் ஞானிகளும், தங்கள் நினைவில் உணர்வுள்ளவர்களுமாயிருப்போருக்கு ஐயோ கேடாம்! திராட்சரசம் குடிப்பதில் பராக்கிரமசாலிகளும் மதுவைக் கலப்பதில் சமர்த்தருமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடாம்! இவர்கள் பரிதானம் வாங்கிக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்க்கிறார்கள், நீதிமானின் நீதியை அவனிடமிருந்து அகற்றுகிறார்கள்.” (ஏசாயா 5:21-23, தி.மொ.) நீதிபதிகளாக சேவித்தோருக்கு இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கலாம். இன்று சபை மூப்பர்கள் ‘தங்கள் பார்வையில் ஞானிகளாக’ இருப்பதை தவிர்க்கிறார்கள். உடன் மூப்பர்களுடைய ஆலோசனைகளை தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு அமைப்பு சம்பந்தப்பட்ட அறிவுரைகளை கவனமாக பின்பற்றுகின்றனர். (நீதிமொழிகள் 1:5; 1 கொரிந்தியர் 14:33, NW) சபை பொறுப்புகளை நிறைவேற்றும் முன் மதுபானங்களை அருந்தவே மாட்டார்கள், மற்ற சமயங்களிலும் மிதமாகவே அருந்துவார்கள். (ஓசியா 4:11) பட்சபாதம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம்கூட மற்றவர்களுக்கு எழாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். (யாக்கோபு 2:9) இவர்களுக்கும் கிறிஸ்தவமண்டல குருமார்களுக்கும் என்னே வித்தியாசம்! இந்தக் குருமார்கள் தங்கள் மத்தியில் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த நபர்கள் செய்யும் பாவங்களை பூசி மறைக்கின்றனர். இது ரோமர் 1:18, 26, 27; 1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:3-5 ஆகிய வசனங்களில் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த எச்சரிக்கைகளுக்கு நேர் எதிர்மாறானது.

29“யெகோவாவுடைய போதகத்தை அலட்சியஞ்செய்து” நீதியுள்ள கனிகளை கொடுக்கத் தவறியவர்களுக்கு வரவிருக்கும் பேரழிவை விவரிப்பதன் மூலம் ஏசாயா தனது தீர்க்கதரிசன செய்தியை முடிக்கிறார். (ஏசாயா 5:24, 25, NW; ஓசியா 9:16; மல்கியா 4:1) அவர் அறிவிக்கிறதாவது: “[யெகோவா] தூரத்திலுள்ள ஜாதியாருக்கு [“மாபெரும் தேசத்திற்கு,” NW] ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி [“சீழ்க்கை ஒலியால்,” பொ.மொ.] அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.”​—ஏசாயா 5:26; உபாகமம் 28:50; எரேமியா 5:⁠15.

30பூர்வ காலங்களில் உயர்ந்த மேடான பகுதியில் ஒரு கம்பம் ‘கொடியாக’ நாட்டப்பட்டது. இது, மக்களையோ படைகளையோ ஒன்றுகூடிவரும்படி அழைக்கும் சின்னமாக சேவித்தது. (ஒப்பிடுக: ஏசாயா 18:3; எரேமியா 51:27.) இப்போது யெகோவாதாமே, தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு, அடையாளப்பூர்வமாக ‘கொடியை’ நாட்டி, பெயர் குறிப்பிடப்படாத அந்த ‘மாபெரும் தேசத்தை’ கூடிவரச் செய்வார். b அவர் அதை ‘சீழ்க்கை ஒலியால் அழைத்து,’ கைப்பற்றுவதற்கு ஏற்றவர்கள் இதோ என வழிதவறிப்போன தமது மக்களைக் காட்டுவார். சிங்கம்போன்ற இந்த வீரர்கள் விரைந்துவந்து பயங்கரமான தாக்குதல் நடத்தி, கடவுளுடைய தேசமாகிய “இரையைப் பிடித்து” சிறையிருப்பிற்கு “எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்” என்று தீர்க்கதரிசி அடுத்ததாக விவரிக்கிறார். (வாசியுங்கள்: ஏசாயா 5:27-30அ.) யெகோவாவின் மக்களது தேசத்திற்கு என்னே பரிதாப நிலை! “தேசத்தைப் பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோம்.”​—ஏசாயா 5:30ஆ.

31ஆம், கடவுள் அவ்வளவு அன்போடு பராமரித்த திராட்சத்தோட்டம் வெறுமையாக, அழிவிற்கு மாத்திரமே தகுந்ததாக நிரூபிக்கிறது. இன்று யெகோவாவை சேவிக்கும் அனைவருக்கும் ஏசாயாவின் வார்த்தைகள் என்னே சக்திவாய்ந்த பாடம் அளிக்கின்றன! அவர்கள் யெகோவாவிற்கு துதியுண்டாவதற்காகவும் சொந்த இரட்சிப்பிற்காகவும் எப்போதும் நீதியுள்ள கனிகளையே பிறப்பிப்பார்களாக!

[அடிக்குறிப்புகள்]

a கற்கோபுரங்களைவிட கூடாரங்கள் அல்லது குடிசைகள் போன்ற மலிவான, தற்காலிக கட்டமைப்புகளே பெரும்பாலும் கட்டப்பட்டன என சில அறிஞர்கள் சொல்கின்றனர். (ஏசாயா 1:⁠8) அப்படியென்றால் கோபுரம் கட்டப்பட்டது, சொந்தக்காரர் தன் ‘திராட்சத்தோட்டத்தை’ எந்தளவு சிரமமெடுத்து பராமரித்தார் என்பதைக் காட்டுகிறது.

b மற்ற தீர்க்கதரிசனங்களில், யூதாவின் மீது யெகோவாவின் கடும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப்போகும் தேசம் பாபிலோனே என ஏசாயா குறிப்பிட்டுள்ளார்.

[கேள்விகள்]

1, 2. ‘நேசர்’ எதை நாட்டுகிறார், அது எவ்வாறு ஏமாற்றமளிக்கிறது?

3, 4. திராட்சத்தோட்டம் எவ்வாறு கரிசனையோடு பராமரிக்கப்படுகிறது?

5. திராட்சத்தோட்ட சொந்தக்காரர் எதை எதிர்பார்க்கிறார், ஆனால் என்ன நடக்கிறது?

6, 7. (அ) திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரர் யார், அவரது திராட்சத்தோட்டம் எது? (ஆ) எதை நியாயந்தீர்க்குமாறு சொந்தக்காரர் கேட்கிறார்?

8. யெகோவாவை ‘என் நேசர்’ என ஏசாயா அழைப்பது ஏன் குறிப்பிடத்தக்கது?

9. யெகோவா தம் தேசத்தை மதிப்புமிக்க திராட்சத்தோட்டம் போல எவ்வாறு நடத்தியிருக்கிறார்?

10. திராட்சத்தோட்டத்தைக் குறித்த என்ன உவமையை இயேசு கொடுத்தார்?

11. முதல் நூற்றாண்டில் எவ்விதமான ஆவிக்குரிய திராட்சத்தோட்டம் இருந்தது, ஆனால் அப்போஸ்தலர்கள் இறந்த பின்னர் என்ன நடந்தது?

12. ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தை கண்டனம் செய்கின்றன, உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?

13. திராட்சத்தோட்டம் கெட்ட பழங்களைக் கொடுப்பதால் யெகோவா அதை என்ன செய்வார்?

14. யெகோவா தமது தேசத்திடமிருந்து என்ன கனியை எதிர்பார்க்கிறார், ஆனால் அது என்ன கனியைத் தருகிறது?

15, 16. இஸ்ரவேலைப் போல் கெட்ட கனிகள் கொடுப்பதை உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?

17. ஏசாயா அறிவிக்கும் முதல் ‘ஐயோ’ என்ன பொல்லாத நடத்தையை கண்டனம் செய்கிறது?

18, 19. சொத்து சம்பந்தப்பட்ட யெகோவாவின் சட்டங்களை ஏசாயா காலத்து மக்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர், அவர்களுக்கு என்ன ஏற்படும்?

20. பேராசை காட்டிய சில இஸ்ரவேலர்களை இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு பின்பற்றாதிருக்கலாம்?

21. ஏசாயா அறிவிக்கும் இரண்டாவது ‘ஐயோ’வில் என்ன பாவங்கள் கண்டனம் செய்யப்படுகின்றன?

22. இஸ்ரவேலில் என்ன கட்டுப்பாடற்ற செயல் நடக்கிறது, இதனால் தேசத்தாருக்கு என்ன சம்பவிக்கும்?

23, 24. கிறிஸ்தவர்கள் எதில் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்?

25, 26. மூன்றாவது, நான்காவது ‘ஐயோ’க்களை அறிவிக்கையில் இஸ்ரவேலரின் என்ன பொல்லாத நினைவை ஏசாயா அம்பலப்படுத்துகிறார்?

27. இஸ்ரவேலரின் மனப்பான்மையை இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?

28. ஏசாயா அறிவிக்கும் கடைசி ‘ஐயோ’க்களில் என்ன பாவங்கள் கண்டனம் செய்யப்படுகின்றன, இப்படிப்பட்ட பாவங்களை கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு தவிர்க்கலாம்?

29. யெகோவாவின் திராட்சத்தோட்டமாகிய இஸ்ரவேலுக்கு என்ன பேரழிவு காத்திருக்கிறது?

30. யெகோவாவின் மக்களுக்கு எதிராக யார் ‘மாபெரும் தேசத்தை’ கூட்டிச்சேர்ப்பார், அதன் விளைவு என்ன?

31. யெகோவாவின் திராட்சத்தோட்டமாகிய இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?

[பக்கம் 83-ன் படங்கள்]

விலங்குகள் பாரவண்டியோடு இணைக்கப்பட்டிருப்பது போல் பாவிகள் பாவத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்

[பக்கம் 85-ன் முழுபக்க படம்]