Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘என் மக்களை தேற்றுங்கள்’

‘என் மக்களை தேற்றுங்கள்’

அதிகாரம் முப்பது

‘என் மக்களை தேற்றுங்கள்’

ஏசாயா 40:1-31

யெகோவா ‘ஆறுதலின் தேவன்.’ அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குறுதிகள் வாயிலாக அவர் நமக்கு ஆறுதலளிக்கிறார். (ரோமர் 15:4, 5) உதாரணமாக, உங்களுக்கு மிகவும் அருமையான ஒருவருடைய மரணத்தின்போது, உங்களுக்கு எது ஆறுதல் தரும்? அவரை கடவுளுடைய புதிய பூமியில் மறுபடியும் பார்க்கலாம் என்ற நம்பிக்கைதானே! (யோவான் 5:28, 29) வெகு சீக்கிரத்தில் துன்மார்க்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இந்த பூமி பரதீஸாக மாற்றப்படும் எனும் யெகோவாவின் வாக்குறுதியைப் பற்றியதென்ன? வரப்போகும் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து, பரதீஸில் மரிக்காமல் எப்போதுமே வாழலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஆறுதல் அளிக்கிறதல்லவா?​—சங்கீதம் 37:9-11, 29; வெளிப்படுத்துதல் 21:3-5.

2கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்தையும் நாம் உண்மையிலேயே நம்பலாமா? நிச்சயமாக! நூற்றுக்கு நூறு நம்பலாம். ஏனென்றால், இந்த வாக்குறுதிகளை அளித்தவர் முழுக்க முழுக்க நம்பத்தகுந்தவர். எனவே, தம் வார்த்தையை நிறைவேற்றும் விருப்பம், சக்தி ஆகிய இரண்டுமே கடவுளிடம் இருக்கின்றன. (ஏசாயா 55:10, 11) இந்த உண்மை மிகத் தெளிவாக நிரூபித்துக் காட்டப்பட்டது. எப்படி? எருசலேமில் மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாக ஏசாயாவின் வாயிலாக கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றியதன் மூலமாக. அந்த தீர்க்கதரிசனத்தை சற்று ஆராய்வோமாக! இது ஏசாயா 40-⁠ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராகிய யெகோவாவின்மேல் நம் விசுவாசத்தை இது பலப்படுத்தும்.

ஆறுதலளிக்கும் வாக்குறுதி

3யெகோவாவின் மக்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படும் ஆறுதலின் வார்த்தைகளை தீர்க்கதரிசி ஏசாயா பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் பதிவு செய்கிறார். மிக விரைவில் வரப்போகும் எருசலேமின் அழிவைப் பற்றியும் யூத மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படப் போவதையும் எசேக்கியா ராஜாவுக்கு சொன்ன உடனே, மீண்டும் நிலைநாட்டுவதற்கான யெகோவாவின் வார்த்தைகளை ஏசாயா விவரிக்கிறார்: “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அசைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.”​—ஏசாயா 40:1, 2.

4ஏசாயா 40-⁠ம் அதிகாரத்தின் முதல் வசனத்திலேயே ‘ஆறுதல்’ என்ற வார்த்தை வருகிறது. ஏசாயா புத்தகத்தின் மற்ற பகுதிகளிலும் அடங்கியுள்ள, ஒளி மற்றும் நம்பிக்கையின் செய்தியை இது மிகத் தெளிவாக விவரிக்கிறது. யூதா, எருசலேமின் குடிகள் விசுவாச துரோகிகளாக மாறியதால், பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போவார்கள். ஆனால், அந்த யூதர்கள் பாபிலோனியர்களுக்கு அடிமைகளாய் நிரந்தரமாக சேவிக்கப் போவதில்லை. அவர்களுடைய பாவம் “நிவிர்த்தி” செய்யப்படும் வரையில் தான் அவர்களுடைய அடிமைத்தனம் நீடிக்கும். எவ்வளவு காலத்திற்கு? எரேமியா தீர்க்கதரிசியின்படி, 70 ஆண்டுகள். (எரேமியா 25:11, 12) அதன் பிறகு, மனந்திரும்பிய சிலரை பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு யெகோவா மறுபடியும் கொண்டு வருவார். எருசலேமுடைய பாழ்க்கடிப்பின் 70-வது வருடத்தில், வாக்குக் கொடுக்கப்பட்ட அவர்களுடைய விடுதலை வெகு அருகில் இருக்கிறது என்பதை அந்தக் கைதிகள் உணர்ந்தபோது, அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் அளித்திருக்கும்!​—தானியேல் 9:1, 2.

5பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு நேர் பாதையில் சென்றால் 800 கிலோமீட்டர், சுற்றுப்பாதையில் சென்றாலோ 1,600 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். இந்த நீண்ட பயணம் கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? நிச்சயமாக இல்லை! ஏசாயா எழுதுகிறார்: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.”​—ஏசாயா 40:3-5.

6அக்காலத்தில், கிழக்கத்திய அரசர்கள் ஒரு பயணத்தை மேற்கொள்வதற்குமுன், அவர்களுக்காக பாதையை செப்பனிட ஆட்களை அனுப்புவார்கள். இவர்கள் பாதையின் குறுக்கே இருக்கும் பெரிய பெரிய கற்களை அகற்றி, பாலம் அமைத்து, மேடு பள்ளங்களை நிரப்பி, குண்டும்குழியும் இல்லாமல் பாதையை சீரமைப்பார்கள். நாடு திரும்பும் யூதர்களுடைய பாதையில் இருக்கும் இடையூறுகளை அகற்ற, யெகோவாவே முன்செல்வது போல இது இருக்கிறது. யெகோவாவின் பெயரைத் தாங்கிய மக்கள் அல்லவா அவர்கள்! மேலும், அவர்களது தேசத்தில் மீண்டும் அவர்களை கொண்டு சேர்ப்பதாக யெகோவா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் மற்ற தேசத்தாருக்கு முன்பாக அவருடைய மகிமை உயர்த்தப்படும். மற்ற தேசத்தாரின் மனநிலை எப்படியிருந்தாலும் சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் யெகோவாவே என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்வார்.

7பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், யூதர்கள் மறுபடியும் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்தபோது, இத்தீர்க்கதரிசனம் முழுமையாய் நிறைவேற்றம் அடைந்துவிடவில்லை. பொ.ச. முதல் நூற்றாண்டில், மற்றொரு நிறைவேற்றமும் இருந்தது. ஏசாயா 40:5-⁠ன் நிறைவேற்றமாக, ‘வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்’ முழுக்காட்டுபவராகிய யோவானின் குரலே. (லூக்கா 3:1-6) பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், ஏசாயாவின் வார்த்தைகளை யோவான் தனக்கு பொருத்தினார். (யோவான் 1:19-23) பொ.ச. 29 முதல் யோவான், இயேசு கிறிஸ்துவுக்காக பாதையை செவ்வைப்படுத்த ஆரம்பித்தார். a யோவான் முன்னதாகவே அறிவித்ததால், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை மக்கள் ஆவலோடே எதிர்பார்த்தனர். அவர் போதிப்பவற்றை கேட்டு, அவரைப் பின்பற்றவும் ஆவலாய் இருந்தனர். (லூக்கா 1:13-17, 76) கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே கொடுக்கக்கூடிய விடுதலையை, அதாவது பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையை, மனந்திரும்பும் ஆட்கள் இயேசு மூலமாக பெற முடியும். இதற்கான ஏற்பாட்டை யெகோவா செய்திருந்தார். (யோவான் 1:29; 8:32) ஏசாயாவின் வார்த்தைகள் 1919-⁠ல் மிகப் பெரிய அளவில் நிறைவேற்றம் அடைந்தன. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானவர்கள் மகா பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டபோதும் மீண்டும் மெய் வணக்கத்தில் நிலைநாட்டப்பட்டபோதும் இது நிறைவேற்றம் அடைந்தது.

8பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்கள் இந்த வாக்குறுதியின் முதல் நிறைவேற்றத்தால் பயனடைய இருக்கின்றனர். அவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? தங்களுக்கு அருமையாக இருந்த தேசத்திற்கு மறுபடியும் திரும்பிப் போகலாம் என்ற யெகோவாவின் வாக்குறுதியை அவர்கள் உண்மையிலேயே நம்பலாமா? நிச்சயமாகவே நம்பலாம்! யெகோவா தம் வார்த்தையை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதை முழுமையாக ஏன் நம்பலாம் என்பதற்கான முக்கிய காரணங்களை, அன்றாட வாழ்க்கையின் உதாரணங்களாலும் தத்ரூபமான வார்த்தைகளாலும் ஏசாயா அளிக்கிறார்.

கடவுளுடைய வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்

9முதலாவது, மீண்டும் நிலைநாட்டப்படும் என வாக்குக் கொடுத்தவரின் வார்த்தை ஒருபோதும் தவறாது. ஏசாயா எழுதுகிறார்: “பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப் போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ [“வார்த்தையோ,” NW] என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.”​—ஏசாயா 40:6-8.

10புல் வெகு காலம் நிலைத்திருக்காது என்பது இஸ்ரவேலர்கள் நன்கு அறிந்த விஷயமே. வறட்சியான காலத்தில், சுட்டெரிக்கும் வெயிலால் பச்சைப் பசேல் என்றிருக்கும் புல், காய்ந்து உலர்ந்துபோகும். சில விஷயங்களில், மனிதனுடைய வாழ்க்கையும் புல்லைப் போன்றதே. அது நிரந்தரமற்றது. (சங்கீதம் 103:15, 16; யாக்கோபு 1:10, 11) மனிதனின் நிலையற்ற அற்ப வாழ்க்கைக்கும் கடவுளுடைய ‘வார்த்தையின்’ அல்லது நோக்கத்தின் நிரந்தரத்தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஏசாயா குறிப்பிடுகிறார். ‘நமது தேவனுடைய வார்த்தையோ’ என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவா பேசும்போது, அவரது வார்த்தைகளை எதுவும் வீணாக்க முடியாது அல்லது அவற்றின் நிறைவேற்றத்தை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.​—யோசுவா 23:⁠14.

11யெகோவாவின் நோக்கங்களை பைபிளாக எழுத்து வடிவில் இன்று பெற்றிருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக, பைபிள் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அஞ்சா நெஞ்சம் படைத்த மொழிபெயர்ப்பாளர்களும் மற்றவர்களும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பைபிளைக் காத்திருக்கின்றனர். இருந்தாலும், அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே பைபிள் காப்பாற்றப்படவில்லை. அதற்கான எல்லா பெருமையும், ‘என்றென்றைக்கும் நிற்பவரும் ஜீவனுள்ள கடவுளும்,’ அவரது வார்த்தையை காக்கிறவருமாகிய யெகோவாவையே சாரும். (1 பேதுரு 1:23-25) இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: எழுதப்பட்ட தம் வார்த்தையை இதுவரை காத்துவந்த யெகோவா அதில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பது நம்ப முடியாததா?

தம் ஆடுகளை பரிவோடு காக்கும் வல்லமையுள்ள கடவுள்

12மீண்டும் நிலைநாட்டப்படும் வாக்குறுதியை ஏன் நம்பலாம் என்பதற்கு இரண்டாவது காரணத்தை ஏசாயா அளிக்கிறார். யெகோவா வாக்குறுதியை தரும் கடவுள். அதோடு, தம் ஆடுகளை பரிவோடு காக்கும் வல்லமையுள்ள கடவுள். ஏசாயா தொடருகிறார்: “சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக [“பராக்கிரமத்தோடே,” NW அடிக்குறிப்பு] வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே [“மார்பிலே,” பொ.மொ.] சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”​—ஏசாயா 40:9-11.

13பைபிள் காலங்களில், பெண்கள் வெற்றியைக் கொண்டாடுவது வழக்கம். வெற்றியின் நற்செய்தியை அல்லது வரப்போகும் விடுதலையை உரத்த சத்தமாக சொல்லுவர் அல்லது பாடுவர். (1 சாமுவேல் 18:6, 7; சங்கீதம் 68:11) கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு நற்செய்தி இருக்கிறது எனவும், அது பயமின்றி உரத்த சத்தமாக மலையுச்சியிலிருந்தும் சொல்லும் செய்தி எனவும் ஏசாயா தீர்க்கதரிசன வார்த்தைகளால் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் அருமையாய் நேசிக்கும் எருசலேமுக்கு மறுபடியும் தம் மக்களை யெகோவா கொண்டு செல்வார் என்பதை குறிப்பிடுகிறார்! யெகோவா ‘பராக்கிரமத்தோடு’ வருவார்; எனவே, அவர்கள் நம்பிக்கையாய் இருக்கலாம். தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து எதுவுமே அவரை தடுக்க முடியாது.

14என்றாலும், பராக்கிரமமும் வல்லமையும் படைத்த இந்தக் கடவுளுக்கு மென்மையான குணமும் உண்டு. தம் மக்களை அவர்களுடைய தேசத்திற்கு யெகோவா எவ்விதம் கொண்டு செல்வார் என்பதை ஏசாயா உணர்ச்சிப் பொங்க விவரிக்கிறார். யெகோவா கரிசனைமிக்க, அன்பான மேய்ப்பர். தம் ஆடுகளைப் பரிவோடு கூட்டிச் சேர்த்து, தம் “மார்பிலே” சுமந்து செல்கிறார். “மார்பிலே” என்ற பதம் இங்கு, ஆடையில் மார்புப் பகுதியில் இருக்கும் மடிப்புகளை குறிக்கிறது. மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத, புதிதாக பிறந்த குட்டிகளை சில சமயங்களில் மேய்ப்பர்கள் இங்குதான் பத்திரமாக வைத்து, தூக்கிச் செல்வர். (2 சாமுவேல் 12:3) மேய்ப்பர்களுடைய வாழ்க்கையிலிருந்து மனதைத் தொடும் ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுவது, நாடு கடத்தப்பட்ட நிலையில் இருக்கும் மக்களுக்கு யெகோவாவின் அன்பையும் பரிவையும் துளிகூட சந்தேகமின்றி உறுதிப்படுத்துகிறது. பராக்கிரமமும் வல்லமையும் படைத்த, ஆனால் பரிவுமிக்க கடவுள் தாம் வாக்குக் கொடுத்திருக்கிற அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என உறுதியாய் நம்பலாம்!

15ஏசாயாவின் வார்த்தைகள் அனைத்தும் நம் நாளில் தீர்க்கதரிசன அர்த்தம் உடையவை. 1914-⁠ல், யெகோவா “பராக்கிரமத்தோடே” வந்து, பரலோகங்களில் தம் ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, ‘அவருக்காக ஆட்சி புரியும் புயம்.’ அவரைத்தான் ராஜாவாக பரலோக சிங்காசனத்தில் யெகோவா பதவியில் அமர்த்தியுள்ளார். 1919-⁠ல், பூமியிலுள்ள தம் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை மகா பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து யெகோவா விடுவித்தார். ஜீவனுள்ள, உண்மை கடவுளின் தூய வணக்கத்தை மீண்டும் முழுமையாக நிலைநாட்டும் பணிக்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார். பயமின்றி அறிவிக்கப்பட வேண்டிய நற்செய்தி இது. மலையுச்சியிலிருந்து உரத்த சத்தமாய் கத்துவதுபோல அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. அப்போதுதான் இந்த அறிவிப்பு எல்லா திசைகளிலும் எட்டும். பூமியில் மெய் வணக்கத்தை யெகோவா தேவன் மீண்டும் ஸ்தாபித்துள்ளார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும்படி நாமும் நம் குரலை உயர்த்தி, தைரியமாக அறிவிப்போமாக!

16ஏசாயா 40:10, 11-⁠ல் உள்ள வார்த்தைகள் நடைமுறைக்கு ஒத்த பல பயன்களை இன்றும் உடையவை. யெகோவா தம் மக்களை பரிவோடு நடத்தும் முறை ஆறுதல் அளிக்கிறது. உதாரணமாக, ஒவ்வொரு ஆட்டுக்கும் என்ன தேவையோ அதை மேய்ப்பன் அறிந்திருக்கிறான். குட்டியாக இருந்தால் அது மற்ற ஆடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பது உட்பட எல்லா தேவைகளையும் மேய்ப்பன் அறிந்திருக்கிறான். அதுபோலவே, தம் உண்மையுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவருடைய குறைகளையும் யெகோவா அறிந்திருக்கிறார். அதோடு, பரிவான மேய்ப்பராக யெகோவா தேவன், கிறிஸ்தவ மேய்ப்பர்களுக்கு மிகச் சிறந்த உதாரணத்தை வைக்கிறார். மூப்பர்கள் மந்தையை பரிவோடு நடத்த வேண்டும். யெகோவா எப்படி அன்போடும் கரிசனையோடும் நடத்துகிறாரோ, அதை அவர்களும் பின்பற்ற வேண்டும். “தேவன் தம்முடைய [குமாரனின்] சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட” சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரையும் குறித்து யெகோவா எப்படி நினைக்கிறாரோ, அப்படியே மூப்பர்களும் நினைக்க வேண்டும்.​—அப்போஸ்தலர் 20:⁠28.

அபார வல்லமை, அபார ஞானம்

17கடவுள் சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் படைத்தவராக இருப்பதால், மீண்டும் நிலைநாட்டும் அவருடைய வாக்குறுதியை கைதிகளாக இருக்கும் யூதர்கள் உறுதியாய் நம்பலாம். ஏசாயா சொல்கிறார்:தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?”​—ஏசாயா 40:12-14.

18கைதிகளாக இருக்கும் யூதர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை. பொங்கிவரும் கடல் அலைகளை மனிதன் அணை போட்டு தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது! ஆனால் யெகோவாவின் பார்வையில், நிலத்தை சூழ்ந்திருக்கும் கடல்நீர், உள்ளங்கையிலுள்ள ஒரு துளித் தண்ணீருக்கு சமம். b கோடிக்கணக்கான நட்சத்திரங்களை அள்ளி தெளித்தாற்போல இருக்கும் பரந்த வானத்தை அற்ப மனிதன் அளக்க முடியுமா? அல்லது பூமியின் மலைகளையும் குன்றுகளையும் எடை போட முடியுமா? முடியாதே. என்றாலும், மனிதன் கையால் ஜாண்போட்டு ஒரு பொருளை அளப்பதுபோல, மிக எளிதாக யெகோவா வானங்களை அளக்கிறார். கையை விரித்து வைத்தால், கட்டைவிரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே உள்ள தூரமே ஜாண். சொல்லப்போனால், மலைகளையும் குன்றுகளையும் தராசில் எடைபோடுவது போல கடவுளால் அளக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதையோ அல்லது எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதையோ, அதிபுத்திசாலியான எந்த மனிதனாவது கடவுளுக்கு சொல்ல முடியுமா? நிச்சயமாகவே முடியாது!

19பூமியின் வல்லமை மிக்க தேசங்களைப் பற்றியதென்ன? கடவுள் தம் நோக்கங்களை நிறைவேற்றுகையில் அவை எதிர்த்து நிற்க முடியுமா? அந்த தேசங்களை வருணித்து, ஏசாயா பதிலளிக்கிறார்: “இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளி [“வாளியிலிருக்கும் நீர்த்துளி,” பொ.மொ.] போலவும், தராசிலே படியும் தூசி போலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது. சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.”​—ஏசாயா 40:15-17.

20யெகோவாவுக்கு, தேசங்கள் அனைத்தும் ஒரு வாளியிலிருந்து விழும் ஒரு துளித் தண்ணீர்போல இருக்கிறது. தராசிலே படியும், ஒன்றுக்கும் உதவாத தூசிபோல்தான் இருக்கிறது. c உதாரணமாக, ஒருவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டி, அதற்கு தேவையான விறகுக்காக லீபனோனின் மலைகளை மூடியிருக்கும் எல்லா மரங்களையும் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மலைகளில் மேயும் எல்லா மிருகங்களையும் பலியாக செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இருந்தாலும், இப்படிப்பட்ட பலி ஏதும் யெகோவாவுக்கு உகந்ததல்ல. இதுவரை உபயோகப்படுத்திய உதாரணங்கள் போதாது என்பதுபோல, அவற்றைவிட இன்னும் உறுதியான வார்த்தைகளை ஏசாயா சொல்கிறார். யெகோவாவின் பார்வையில், எல்லா தேசங்களும் “சூனியத்தில் சூனியமாகவும்” எண்ணப்படுகின்றன.​—ஏசாயா 40:⁠17.

21யெகோவா ஈடு இணையற்றவர். இதை மேலும் வலியுறுத்த, வெள்ளியாலும் பொன்னாலும் அல்லது மரத்தாலும் விக்கிரகங்களை செய்வோரின் முட்டாள்தனத்தை ஏசாயா விவரிக்கிறார். ‘பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவரும்,’ அதன் குடிகளின்மேல் அதிகாரம் உடையவருமாகிய யெகோவாவை எந்த ஒரு சொரூபத்தோடும் ஒப்பிடுவது எவ்வளவு மடத்தனம்!ஏசாயா 40:18-24-ஐ வாசிக்கவும்.

22தத்ரூபமான இந்த எல்லா விவரிப்புகளும் ஒரு முடிவுக்கு நம்மை கொண்டு செல்கின்றன. சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் படைத்த ஈடு இணையற்ற கடவுளாகிய யெகோவா தேவன், தம் நோக்கங்களை நிறைவேற்றுவதிலிருந்து எதுவும் அவரை தடுத்து நிறுத்த முடியாது. பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்ப ஆவலாய் காத்திருந்தனர். அவர்களுக்கு ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலையும் தைரியத்தையும் அளித்திருக்கும்! நம் எதிர்காலத்திற்காக யெகோவா கொடுத்திருக்கும் எல்லா வாக்குறுதிகளும் மெய்யாகும் என்பதை நாமும் உறுதியாய் நம்பலாம்.

“அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?”

23கைதிகளாக இருக்கும் யூதர்கள் தைரியமாக இருப்பதற்கான மற்றொரு காரணமும் உண்டு. எல்லாவற்றையும் படைத்தவரும் எல்லா சக்திக்கும் ஊற்றுமூலருமாகிய படைப்பாளரே விடுதலையை வாக்குக் கொடுத்தவர். மலைப்பூட்டும் தம் சக்தியை வலியுறுத்த, படைப்புகளில் வெளிப்படும் அவருடைய ஒப்பிலா திறமைக்கு யெகோவா கவனத்தைத் திருப்புகிறார்: “இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும் [“எல்லையற்ற ஆற்றலினாலும்,” NW], அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.”​—ஏசாயா 40:25, 26.

24இஸ்ரவேலின் பரிசுத்தர் தமக்காக பேசுகிறார். தாம் ஈடு இணையற்ற தேவன் என்பதை வலியுறுத்த, வானங்களின் நட்சத்திரங்களுக்கு யெகோவா தம் கவனத்தை திருப்புகிறார். ராணுவத் தலைவர், தன் படைகளை அந்தந்த பிரிவு வாரியாக நிறுத்துவதுபோல, யெகோவாவும் நட்சத்திரங்களை வரிசையாக நிறுத்துகிறார். அவற்றையெல்லாம் ஒன்றாக கூட்டினாலும், ‘அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கும்.’ நட்சத்திரங்களின் எண்ணிக்கை அவ்வளவு திரளாக இருந்தபோதிலும், அவை ஒவ்வொன்றையும் அதன் பெயராலோ அல்லது சுட்டுப்பெயராலோ அவர் அழைக்கிறார். கட்டளைக்கு கீழ்ப்படியும் ராணுவ வீரர்களைப்போலவே, இந்த நட்சத்திரங்களும் தங்கள் தங்கள் இடத்திலும் ஒழுங்கான, சரியான நிலையிலும் செயல்படுகின்றன. ஏனென்றால், அவற்றின் தலைவர் ‘எல்லையற்ற ஆற்றலும், மகா வல்லமையும்’ உடையவர். எனவே, கைதிகளாக இருக்கும் யூதர்கள் நம்பிக்கையாய் இருப்பதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. நட்சத்திரங்களை இயக்கும் படைப்பாளர், தம் ஊழியர்களை நடத்தும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்.

25ஏசாயா 40:26-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள, “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” என்ற தெய்வீக அழைப்பை நம்மில் யாராவது அசட்டை பண்ண முடியுமா? நவீன நாளைய வானாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் அற்புதங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் மிகத் தெளிவாக காட்டுகின்றன. இது, ஏசாயாவின் நாட்களில் வெறும் கண்களுக்குத் தோன்றியதைவிட பலமடங்கு அற்புதமானது. சக்திவாய்ந்த தங்களுடைய டெலஸ்கோப்புகளால் இந்த ஆராய்ச்சியாளர்கள் வான்வெளியை துருவி ஆராய்கிறார்கள். கண்ணுக்கு தென்படுகிற இந்த வானமண்டலத்தில் 12,500 கோடி பால்மண்டலங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இவற்றில் ஒன்றே, பால்வீதி மண்டலம். சில கணக்கீடுகளின்படி, இதில் மட்டுமே 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது! இதை அறிவது, நம் படைப்பாளர்மீது பயபக்தியையும் அவருடைய வாக்குறுதிகளில் முழுமையான நம்பிக்கையையும் நம் இருதயங்களில் வளர்த்திட வேண்டும்.

26பல வருடங்கள் கைதிகளாக இருப்பதால், அந்த யூதர்களின் உற்சாகம் குன்றிப்போகும் என்பதை அறிந்து, உறுதியளிக்கும் வார்த்தைகளை முன்னதாகவே பதிவு செய்யும்படி ஏசாயாவை பரிசுத்த ஆவியால் யெகோவா ஏவுகிறார். “யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.”​—ஏசாயா 40:27, 28. d

27தங்கள் தேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் பாபிலோனில் கைதிகளாக இருப்பவர்களின் உணர்ச்சிகளை விவரிக்கும் யெகோவாவின் வார்த்தைகளை ஏசாயா பதிவு செய்கிறார். தங்கள் “வழி,” அதாவது வாழ்க்கையில் அவர்கள் படும்பாடு கடவுளுக்கு தெரியாது அல்லது அவர் அதைப் பார்க்க மாட்டார் என்றே சிலர் நினைக்கின்றனர். தாங்கள் அனுபவிக்கும் எல்லா அக்கிரமங்களையும் யெகோவா கண்டுங்காணாமல் இருக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எனவே, அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் அவர்களுக்கு நினைப்பூட்டப்படுகின்றன. இந்த விஷயங்களை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அறிந்துகொள்ள தவறிவிடுகின்றனர். எனவேதான், எழுதப்பட்ட வார்த்தைகளின் மூலம் அவர்கள் நினைப்பூட்டப்படுகிறார்கள். தம் மக்களை விடுவிக்கும் விருப்பமும் சக்தியும் யெகோவாவுக்கு உண்டு. அவரே நித்தியத்தின் கடவுள், பூமியிலுள்ள சகலத்தையும் படைத்தவர் அவரே. எனவே, படைப்பின்போது அவருக்கிருந்த சக்தி, வல்லமை இப்போதும் அவருக்கிருக்கிறது. வல்லமை வாய்ந்த பாபிலோனும் அவருடைய சக்தியால் தவிடுபொடியாகிவிடும். அப்படிப்பட்ட கடவுள் சோர்ந்துபோக மாட்டார். தம் மக்களை கைவிடவும் மாட்டார். யெகோவாவின் கிரியைகளை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அவருடைய ஞானம்​—⁠அல்லது உட்பார்வை, விவேகம், புரிந்துகொள்ளுதல்​—⁠அவர்களுடைய புத்திக்கும் அப்பாற்பட்டது.

28நிர்க்கதியாக இருந்த கைதிகளுக்கு ஏசாயா மூலமாக யெகோவா உற்சாகத்தை தொடர்ந்து அளிக்கிறார்: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”​—ஏசாயா 40:29-31.

29சோர்ந்து போகிறவர்களுக்கு பெலன் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து பேசுகையில், கைதிகளாக இருந்த யூதர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்புவதற்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான பிரயாணத்தை ஒருவேளை யெகோவா மனதில் கொண்டிருந்திருக்கலாம். அவருடைய உதவிக்காக நோக்கும் களைப்படைந்தோர் யாவருக்கும் யெகோவா உதவும் தன்மை படைத்தவர் என்பதை தம் மக்களுக்கு நினைப்பூட்டுகிறார். எவ்வளவுதான் பலசாலிகளாக இருந்தாலும், மனுஷர் அதாவது, ‘இளைஞரும் வாலிபரும்’ களைத்து துவண்டு விடலாம், சோர்வினால் தடுமாறலாம். என்றாலும், அவரை நம்புவோருக்கு சக்தியையும் பெலனையும் தருவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். நடக்கவும், ஓடவும் எப்போதுமே குறையாத பலத்தை தருகிறார். தம் ஊழியர்களை யெகோவா எவ்விதம் பலப்படுத்துகிறார் என்பதற்கு கழுகு உதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. அதிக சக்திபடைத்த இந்தப் பறவை, மணிக்கணக்கில் உயர வானத்தில் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். அது வானத்தில் வட்டமிட்டு பறப்பது, எந்தவித சிரமமும் இல்லாமல் வானத்தில் மிதப்பதுபோல் தோன்றலாம். e இப்படிப்பட்ட தெய்வீக உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையால், கைதிகளாக இருக்கும் யூதர்கள் சோர்ந்து துவண்டுபோக வேண்டிய அவசியமே இல்லை.

30இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழும் உண்மை கிறிஸ்தவர்களுக்கு தேவையான ஆறுதலின் வார்த்தைகள், ஏசாயா 40-⁠ம் அதிகாரத்தின் முடிவான வசனங்களில் உள்ளன. சோர்வூட்டும் பிரச்சினைகளும் இடையூறுகளும் நிறைய இருப்பதால், நாம் சகிக்கும் அத்தனை சோதனைகளையும் அக்கிரமங்களையும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது உண்மையிலேயே நமக்கு தெம்பளிக்கிறது. அனைத்தையும் உருவாக்கிய படைப்பாளர் அவரே. ‘அளவில்லாத அறிவு’ படைத்த அவர், எல்லா அநியாயங்களையும் சரி செய்வார். அதை உரிய நேரத்தில், அவருக்கே உரிய வழியில் சரிப்படுத்துவார். (சங்கீதம் 147:5, 6) இதற்கிடையே, நாம் நம் சொந்த பலத்தையே நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. கொடுக்க கொடுக்க குறையாத வல்லமையுடைய யெகோவாவால், தம் ஊழியர்கள் சோதனையில் அவதிப்படும்போது, “இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்தியை” நிச்சயமாகவே அளிக்க முடியும்.​—2 கொரிந்தியர் 4:7, NW.

31பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால், அவர்கள் அருமையாய் நேசித்த எருசலேம் அழிக்கப்பட்டு, ஆலயம் பாழாய் கிடக்கிறது. அவர்களுக்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம், ஆவிக்குரிய ஒளியையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆறுதலான வாக்குறுதி அடங்கியதாய் இருந்தது. தங்கள் தேசத்திற்கு மீண்டும் யெகோவா தங்களை கொண்டு செல்வார் என்பதே அந்த ஆறுதல்! பொ.ச.மு. 537-⁠ல், யெகோவா தம் மக்களை அவர்கள் தேசத்திற்கு கொண்டு சென்றார். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்பதையும் அவர் நிரூபித்தார். நாமும் யெகோவாவில் முழுமையாய் நம்பிக்கை வைக்கலாம். ஏசாயா தீர்க்கதரிசனத்தில் வெகு அழகாக விவரிக்கப்பட்டுள்ள, அவருடைய ராஜ்ய வாக்குறுதிகள் யாவும் உண்மையாகும். அது நற்செய்தியல்லவா? மனிதகுலத்திற்கு ஒளியின் செய்தி!

[அடிக்குறிப்புகள்]

a யெகோவாவுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவதைக் குறித்து ஏசாயா முன்னறிவிக்கிறார். (ஏசாயா 40:⁠3) என்றாலும், இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக முழுக்காட்டுபவராகிய யோவான் வழியை ஆயத்தப்படுத்தியதற்கு இந்த தீர்க்கதரிசனத்தை சுவிசேஷங்கள் பொருத்துகின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலினாலேயே இவ்வாறு பொருத்தினர். ஏனென்றால், இயேசு தம் பிதாவை பிரதிநிதித்துவம் செய்தார். மேலும், பிதாவுடைய நாமத்தில்தான் அவர் வந்தார்.​—⁠யோவான் 5:43; 8:⁠29.

b “சமுத்திரத்தின் மொத்த நிறை கிட்டத்தட்ட 13,500,00,00,000,00,00,000 (1.35×1018) மெட்ரிக் டன் அல்லது பூமியின் மொத்த நிறையில் சுமார் 1/4400 ஆகும்.”​—⁠என்கார்ட்டா 97 என்ஸைக்ளோப்பீடியா.

c த எக்ஸ்போஸிடர்ஸ் பைபிள் கமெண்டரி சுட்டிக்காட்டுவதாவது: “கிழக்கத்திய நாட்டு சந்தைகளில் மாமிசத்தையோ அல்லது பழத்தையோ எடை போடும்போது, அளக்கும் கூடையில் இருக்கும் தண்ணீர்த் துளியோ அல்லது தராசுத் தட்டிலே ஒட்டியிருக்கும் தூசியோ ஒரு பொருட்டாக எண்ணப்படுவதில்லை.”

d ஏசாயா 40:28-⁠ல் உள்ள “அநாதி” என்ற பதம் “என்றென்றும்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. ஏனென்றால், யெகோவா ‘நித்தியத்தின் தேவன்.’​—⁠1 தீமோத்தேயு 1:⁠17.

e மணிக்கணக்கில், வானத்தில் வட்டமிட கழுகிற்கு குறைந்தபட்ச சக்தியே போதும். ‘தெர்மல்’ அல்லது மேலெழும்பும் வெப்பக்காற்றை மிகத் திறமையாக பயன்படுத்தி, வட்டமிட்டுப் பறக்கிறது.

[கேள்விகள்]

1. யெகோவா நமக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு வழி எது?

2. கடவுளுடைய வாக்குறுதிகளை நாம் ஏன் நம்பலாம்?

3, 4. (அ) கடவுளுடைய மக்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படும் என்ன ஆறுதலின் வார்த்தைகளை ஏசாயா பதிவு செய்துள்ளார்? (ஆ) யூதா, எருசலேமின் குடிகள் பாபிலோனுக்கு ஏன் சிறைப்பட்டு போவார்கள், அவர்களுடைய அடிமைத்தனம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

5, 6. (அ) பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு செல்ல வேண்டிய நீண்ட பயணம், கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை ஏன் தடைசெய்யாது? (ஆ) யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்திற்கு திரும்பி செல்வது, மற்ற தேசங்களின்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

7, 8. (அ) ஏசாயா 40:5-⁠ல் உள்ள வார்த்தைகள், முதல் நூற்றாண்டில் என்ன நிறைவேற்றத்தை அடைந்தன? (ஆ) ஏசாயா தீர்க்கதரிசனம், 1919-⁠ல் எப்படி மிகப் பெரிய அளவில் நிறைவேறியது?

9, 10. மனிதனின் நிலையற்ற அற்ப வாழ்க்கைக்கும் கடவுளுடைய ‘வார்த்தையின்’ நிரந்தரத்தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஏசாயா எப்படி விவரிக்கிறார்?

11. எழுதப்பட்ட வார்த்தையிலிருக்கும் தம் வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றுவார் என நாம் ஏன் நம்பலாம்?

12, 13. (அ) மீண்டும் நிலைநாட்டப்படும் வாக்குறுதியை ஏன் நம்பலாம்? (ஆ) கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு என்ன நற்செய்தி இருக்கிறது, அதை அவர்கள் ஏன் நம்பலாம்?

14. (அ) யெகோவா தம் மக்களை பரிவாக நடத்துவார் என்பதை ஏசாயா எப்படி விவரிக்கிறார்? (ஆ) மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எப்படி பரிவோடு கவனிக்கின்றனர் என்பதை என்ன உதாரணம் படம்பிடித்துக் காட்டுகிறது? (பக்கம் 405-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

15. (அ) யெகோவா எப்போது “பராக்கிரமத்தோடே” வந்தார், ‘அவருக்காக ஆட்சி புரியும் புயம்’ யார்? (ஆ) என்ன நற்செய்தி பயமின்றி அறிவிக்கப்பட வேண்டும்?

16. யெகோவா தம் மக்களை இன்று எந்த விதத்தில் வழிநடத்துகிறார், இது என்ன சிறந்த உதாரணத்தை அளிக்கிறது?

17, 18. (அ) கைதிகளாக இருந்த யூதர்கள், மீண்டும் நிலைநாட்டப்படும் வாக்குறுதியில் ஏன் நம்பிக்கை வைக்கலாம்? (ஆ) சிந்தனையைத் தூண்டும் என்ன கேள்விகளை ஏசாயா கேட்கிறார்?

19, 20. யெகோவாவின் மகத்துவத்தை வலியுறுத்த, என்ன தத்ரூபமான வார்த்தைகளை ஏசாயா பயன்படுத்துகிறார்?

21, 22. (அ) யெகோவா ஈடு இணையற்ற தேவன் என்பதை ஏசாயா எப்படி வலியுறுத்துகிறார்? (ஆ) ஏசாயாவின் தத்ரூபமான விவரிப்புகள் என்ன முடிவுக்கு நம்மை கொண்டு செல்கின்றன? (இ) அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட என்ன விஷயத்தை தீர்க்கதரிசி ஏசாயா பதிவு செய்கிறார்? (பக்கம் 412-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

23. கைதிகளாக இருக்கும் யூதர்கள் தைரியமாயிருக்க என்ன காரணம் இருக்கிறது, யெகோவா தம்மைப் பற்றி இப்போது எதை வலியுறுத்துகிறார்?

24. ஈடு இணையற்ற தேவன் என தம்மைக் குறித்தே யெகோவா எப்படி விவரிக்கிறார்?

25. ஏசாயா 40:26-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள தெய்வீக அழைப்பிற்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும், என்ன விளைவுகளோடு?

26, 27. பாபிலோனில் கைதிகளாக இருப்பவர்களின் உணர்ச்சிகள் எப்படி விவரிக்கப்பட்டுள்ளன, என்ன விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்?

28, 29. (அ) சோர்ந்து போகிறவர்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதை யெகோவா எப்படி தம் மக்களுக்கு நினைப்பூட்டுகிறார்? (ஆ) தம் ஊழியர்களை யெகோவா எப்படி பலப்படுத்துகிறார் என்பதை விவரிக்க என்ன உதாரணம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

30. ஏசாயா 40-⁠ம் அதிகாரத்தின் முடிவான வசனங்களிலிருந்து இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படி ஆறுதலைப் பெறலாம்?

31. பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசனம் என்ன ஒளியின் வாக்குறுதியை அளித்தது, நாம் எதில் முழுமையான நம்பிக்கை வைக்கலாம்?

[பக்கம் 404405-ன் பெட்டி/படம்]

அன்பான மேய்ப்பராகிய யெகோவா

ஆட்டுக்குட்டிகளை தன் மார்பில் சுமந்து செல்லும் அன்பான மேய்ப்பனுக்கு யெகோவாவை ஏசாயா ஒப்பிடுகிறார். (ஏசாயா 40:10, 11) மேய்ப்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த அருமையான உதாரணத்தை ஏசாயா கொடுக்கிறார். மத்திய கிழக்கில் உள்ள எர்மோன் மலைகளின் சரிவில் வாழும் மேய்ப்பர்களைக் கவனித்த நவீன நாளைய ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்கிறார்: “தன் மந்தை எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு மேய்ப்பனும் வெகு உன்னிப்பாக கவனிப்பார். புதிதாக பிறந்த ஒரு குட்டி தாயோடு சேர்ந்து நடக்க முடியாமல் துவளுவதைக் கண்டால், தன் நீளமான அங்கியின் . . . மடிப்புகளில் வைத்து சுமப்பார். மார்புப் பகுதியிலுள்ள மடிப்பில் இடமில்லையென்றால், ஆட்டுக்குட்டிகளை கழுத்தைச் சுற்றி தன் தோளில் போட்டு, அதன் கால்களை பிடித்துக்கொள்வார். அல்லது பையிலோ அல்லது கூடையிலோ வைத்து கழுதைமேல் எடுத்துச் செல்வார். தாயோடு சேர்ந்து நடக்கும் பருவம் வரும்வரை இப்படி செய்வார்.” தம் மக்களுக்காக இப்படிப்பட்ட பரிவும் கரிசனையும் உள்ள கடவுளை நாம் சேவிக்கிறோம் என்பது ஆறுதல் அளிக்கிறதல்லவா?

[பக்கம் 412-ன் பெட்டி/படம்]

பூமியின் வடிவம் என்ன?

பூர்வ காலங்களில், பூமி தட்டை என பொதுவாக மக்கள் நம்பினார்கள். என்றாலும், பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, கிரேக்க தத்துவஞானி பிதாகரஸ், பூமி உருண்டை வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என சொன்னார். இதற்கு இரு நூற்றாண்டுகளுக்கும் முன்னே, ஏசாயா தீர்க்கதரிசி தெள்ளத் தெளிவாகவும் மிக உறுதியாகவும் சொன்னார்: ‘அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.’ (ஏசாயா 40:22, NW) “உருண்டை” என இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய பதம் க்யூக். இதை “கோளம்” எனவும் மொழிபெயர்க்கலாம். ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவெனில், கோள வடிவில் உள்ள பொருள் மட்டுமே எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் உருண்டையாக தெரியும். f அறிவியல் அந்தளவு முன்னேற்றம் அடையாத அந்த சமயத்திலேயே, இப்போது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட, பூர்வ கட்டுக்கதைகளை சாராத உண்மையை ஏசாயா தீர்க்கதரிசி பதிவு செய்துள்ளார்.

[அடிக்குறிப்பு]

f நுணுக்கமாக சொன்னால், மேலும் கீழும் சிறிது தட்டையாக இருக்கும் கோள வடிவம் உடையது பூமி. பூமியின் இரு துருவங்களிலும் அது சற்று தட்டையாக இருக்கிறது.

[பக்கம் 403-ன் படம்]

“வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய” குரல், முழுக்காட்டுபவராகிய யோவானுடையதே