Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதானப் பிரபு பற்றிய வாக்குறுதி

சமாதானப் பிரபு பற்றிய வாக்குறுதி

அதிகாரம் பத்து

சமாதானப் பிரபு பற்றிய வாக்குறுதி

ஏசாயா 8:19–9:7

சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூவுலகில் முதன்முறையாக ஒரு குழந்தை பிறந்தது. முதல் மனிதனும் மனுஷியும், தேவதூதர்களும், ஏன் கடவுளும்கூட கண்ணார கண்ட முதல் குழந்தை அது! மிக விசேஷமான இக்குழந்தைக்கு காயீன் என பெயர் சூட்டப்பட்டது. இப்பச்சிளம் குழந்தை சாபம் பெற்ற மனிதகுலத்திற்கு ஆசீர்வாதமாக அமைந்திருக்கலாம். ஆனால், அவன் வளர்ந்து ஒரு கொலைகாரனானபோது அந்த நம்பிக்கை குலைந்துபோனது! (1 யோவான் 3:12) அது முதற்கொண்டு கணக்குவழக்கில்லாத உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. கெட்டதையே நாடும் மனம் கொண்ட மனிதர்களுக்கு தங்களுக்கிடையேயும் சமாதானம் இல்லை, கடவுளோடும் சமாதானம் இல்லை.​—ஆதியாகமம் 6:5; ஏசாயா 48:⁠22.

2காயீன் பிறந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அதிசயமான குழந்தை பிறந்தது. கன்னி வயிற்றில் பரிசுத்த ஆவியால் புதுமையாக பிறந்த அக்குழந்தை இயேசுவே. சரித்திரத்திலேயே சாதனை படைத்த அவரது பிறப்பின்போது, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என எண்ணற்ற தேவதூதர்கள் ஆனந்தத்தோடு துதிபாடினர். (லூக்கா 2:13, 14) இவரோ காயீனைப் போல கொலைகாரனாகவில்லை. மாறாக, மனிதர் கடவுளோடு சமாதானமாவதற்கும் நித்திய வாழ்வைப் பெறுவதற்கும் வழிசெய்தார்.​—யோவான் 3:16; 1 கொரிந்தியர் 15:⁠55.

3இயேசு “சமாதானப் பிரபு” என அழைக்கப்படுவார் என்பதாக ஏசாயா முன்னுரைத்தார். (ஏசாயா 9:⁠6) அவர் மனிதகுலத்திற்காக தம் உயிரையே கொடுத்து பாவங்களிலிருந்து மன்னிப்பை அருளுவார் என்றும் சொன்னார். (ஏசாயா 53:11) இன்று இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் வைத்தால் கடவுளோடு சமாதானத்தையும், பாவங்களுக்கு மன்னிப்பையும் பெற முடியும். ஆனால் இந்த ஆசீர்வாதங்கள் தானாக வராது. (கொலோசெயர் 1:21-23) அவற்றைப் பெற வேண்டுமானால் யெகோவா தேவனுக்கு கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும். (1 பேதுரு 3:11; ஒப்பிடுக: எபிரெயர் 5:8, 9.) ஏசாயாவின் நாட்களிலோ இஸ்ரவேலும் யூதாவும் இதைச் செய்யத் தவறின.

பிசாசுகளை நாடி

4ஏசாயாவின் காலத்தவர்கள் கீழ்ப்படியாமையால் தரங்கெட்ட நிலையில், ஆவிக்குரிய அதலபாதாளத்தின் கும்மிருட்டில் கிடக்கின்றனர். கடவுளுடைய ஆலயம் அமைந்துள்ள யூதாவின் தென் ராஜ்யத்திலும் சமாதானம் அறவே இல்லை. யூதா மக்கள் உத்தமம் தவறிவிட்டதால், கேடு காலம் காத்திருக்கிறது. அசீரியர்கள் படையெடுக்க தயாராயிருக்கின்றனர். இப்போது யூதா மக்கள் உதவிக்கு யாரிடம் செல்கின்றனர்? அநேகர் யெகோவாவிடம் செல்லாமல் சாத்தானிடம் செல்கின்றனர். சாத்தானை பெயர்சொல்லி வழிபடாவிட்டாலும் சவுல் ராஜாவைப் போல் ஆவியுலகோடு தொடர்பு கொள்கின்றனர். இறந்தவர்களோடு பேசி பிரச்சினைகளைத் தீர்க்க பார்க்கின்றனர்.​—1 சாமுவேல் 28:1-20.

5சிலர், மற்றவர்களையும் இப்பழக்கத்தில் ஈடுபட வைக்கின்றனர். இப்படிப்பட்ட விசுவாச துரோகத்தைச் சுட்டிக்காட்டி ஏசாயா சொல்கிறார்: “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும் போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?” (ஏசாயா 8:19) குறி சொல்பவர்கள், வாயசைக்காமல் பேசும் வென்ட்ரிலாக்கிஸ்ட் கலையைப் பயன்படுத்தி வேறொருவர் பேசுவதுபோல் குரலெழுப்பலாம். இவ்வாறு, ‘முணுமுணுவென்று ஓதி,’ இறந்தவர்களுடைய ஆவி பேசுவதுபோல் பாசாங்கு செய்து மக்களை வஞ்சிக்கலாம். சிலசமயங்களில் பேய்களேகூட இறந்தவர்களைப் போல பேசி நடிக்கின்றன. சவுல் எந்தோரில் அஞ்சனம் பார்க்கும் ஒரு சூனியக்காரியிடம் சென்றபோது இப்படித்தான் நடந்தது.​—1 சாமுவேல் 28:8-19.

6நியாயப்பிரமாண சட்டத்தில் யெகோவா ஆவியுலக தொடர்பை பொல்லாத பாவமென தடை செய்திருந்தும் யூதாவில் இந்த நிலை! அதில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. (லேவியராகமம் 19:31; 20:6, 27; உபாகமம் 18:9-12) யெகோவாவின் விசேஷ சொத்தாகிய ஜனம் ஏன் இந்தப் பொல்லாத பாவத்தைச் செய்கிறது? யெகோவாவின் சட்டதிட்டங்களை உதறித்தள்ளிய அவர்கள் இருதயம் “பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு” போயிருக்கிறது. (எபிரெயர் 3:13) அது ‘கொழுப்பேறி சொரணையற்று போயிருக்கிறது.’ அவர்கள் தங்கள் கடவுளுக்கு அந்நியமாகி விட்டார்கள்.​—சங்கீதம் 119:70, NW. a

7‘அசீரியர்கள் இன்றோ நாளையோ படையோடு வந்துவிடுவார்கள், இப்போது யெகோவாவின் சட்டத்தை நினைத்து என்ன பயன்?’ என அவர்கள் நினைக்கலாம். இந்த நெருக்கடியிலிருந்து உடனடியாக அதுவும் சுலபமாக தப்ப வேண்டும் என்பதுதான் அவர்கள் மனதில் இருக்கிறது. யெகோவா நடவடிக்கை எடுக்கும்வரை காத்திருக்க மனமில்லை. நம் நாளிலும் அநேகர் யெகோவாவின் சட்டத்தை புறக்கணித்து பிரச்சினைகளைத் தீர்க்க ஆவியுலக மத்தியஸ்தர்களிடம் செல்கின்றனர், ஜாதகம் பார்க்கின்றனர், மற்ற மாயமந்திர பழக்கங்களிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், இறந்தவர்களிடம் குறிகேட்பது அன்றுபோலவே இன்றும் பொல்லாத பாவம். அப்படிப்பட்ட காரியங்களை செய்வோர் மனந்திரும்பாவிட்டால், ‘கொலைபாதகரையும், விபசாரக்காரரையும், . . . விக்கிரகாராதனைக்காரரையும், பொய்யர் அனைவரையும்’ போலவே அழிவை சந்திப்பார்கள். அவர்களுக்கு உயிர்த்தெழுதலே கிடையாது.​—வெளிப்படுத்துதல் 21:⁠8.

கடவுளுடைய ‘வேதமும் சாட்சி ஆகமமும்’

8ஆவியுலக தொடர்பை கண்டனம் செய்யும் சட்டங்களும் மற்ற சட்டங்களும் யூதாவின் அழிவோடு அழிந்துவிடவில்லை. அவை எழுத்துவடிவில் பாதுகாக்கப்பட்டு இன்றும் கிடைக்கின்றன. சொல்லப்போனால் கடவுளுடைய வார்த்தை முழுமையாக இன்று கிடைக்கிறது. அதுதான் பைபிள். தெய்வீக சட்டதிட்டங்களை மட்டுமல்லாமல் கடவுள் தம் மக்களை கையாண்ட விதங்களையும் அது பதிவு செய்திருக்கிறது. யெகோவாவின் நடவடிக்கைகளை விவரிக்கும் பைபிளின் இந்தப் பகுதி ஒரு சாட்சியாக அல்லது சான்றாக, யெகோவாவின் சுபாவத்தையும் குணங்களையும் வெளிக்காட்டுகிறது. இஸ்ரவேலர்கள் உதவிக்காக இறந்தவர்களை தேடிச் செல்லாமல் எங்கு செல்ல வேண்டும்? “வேதத்திடமும் சாட்சி ஆகமத்திடமும்” என்கிறார் ஏசாயா. (ஏசாயா 8:20NW) ஆக, உண்மையிலேயே அறிவொளி பெற விரும்புகிறவர்கள் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையிடம் செல்ல வேண்டும்.

9ஆவியுலகோடு தொடர்புகொள்ளும் இஸ்ரவேலர்களில் சிலர் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை மதிப்பதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது வெறும் வாய்வார்த்தைதான், போலியானதும்கூட. ஏசாயா சொல்கிறார்: “இந்த வாக்கியத்தின்படியே அவர்கள் நிச்சயம் சொல்லிக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.” (ஏசாயா 8:20, NW) எந்த வாக்கியத்தைப் பற்றி ஏசாயா இங்கே சொல்கிறார்? ஒருவேளை, ‘வேதத்திடமும் சாட்சி ஆகமத்திடமும்’ என்ற வாக்கியமாக இருக்கலாம். விசுவாச துரோக இஸ்ரவேலர்கள் சிலர், இன்றைய விசுவாச துரோகிகளையும் மற்றவர்களையும் போலவே கடவுளுடைய வார்த்தையை மேற்கோள் காட்டி பேசியிருக்கலாம். ஆனால் வாயளவில்தான் இதெல்லாம். வேதவசனங்களை மேற்கோள் காட்டிவிட்டால் மட்டும் ‘விடியற்காலத்து வெளிச்சம்,’ அதாவது யெகோவாவிடமிருந்து அறிவொளி கிடைக்காது. யெகோவாவின் சித்தத்தைச் செய்து அசுத்தமான பழக்கவழக்கங்களை விட்டொழித்தால் மட்டுமே அவர் அறிவொளி அளிப்பார். b

‘ஆகாரக் குறைவினால் உண்டாகாத பஞ்சம்’

10யெகோவாவிற்கு கீழ்ப்படியாமல் போனால் மனம் இருளடையும். (எபேசியர் 4:17-18) யூதா மக்கள் ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இல்லாமல் குருடாகியிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 2:14) “[ஒவ்வொருவரும்] இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்து போவார்கள்” என ஏசாயா விவரிக்கிறார். (ஏசாயா 8:21அ) யூதா செய்யும் துரோகத்தால்​—⁠முக்கியமாக ஆகாஸ் ராஜாவின் ஆட்சியில் செய்யும் துரோகத்தால்​—⁠அது சுதந்திரத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கிறது. தேசம் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது. அசீரிய படை யூத நகரங்களை ஒவ்வொன்றாக தாக்குகிறது. நிலமெல்லாம் பாழாக்கப்பட்டு உணவு பஞ்சம் ஏற்படுகிறது. அநேகர் ‘இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும்’ இருக்கிறார்கள். அதேசமயம் இன்னொரு விதமான பசியும் தேசத்தை வாட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆமோஸ் இப்படி தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்: “இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” (ஆமோஸ் 8:11) ஆமோஸ் முன்னுரைத்த இதே ஆன்மீக பஞ்சத்தின் கொடூர பிடியில்தான் சிக்கித் தவிக்கிறது யூதா!

11யூதா படிப்பினையை கற்றுக்கொண்டு யெகோவாவிடம் திரும்புமா? அதன் மக்கள் ஆவியுலக தொடர்பையும் விக்கிரகாராதனையையும் விட்டு ‘வேதத்திடமும் சாட்சி ஆகமத்திடமும்’ திரும்புவார்களா? இவற்றிற்கான பதிலை யெகோவா முன்னறிவிக்கிறார்: “அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறி கொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள். அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள்.” (ஏசாயா 8:21ஆ, 22அ) அநேகர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய மனித ராஜாக்கள்மீது குற்றம் சுமத்துவார்கள். சிலர் முட்டாள்தனமாக தங்கள் கஷ்டங்களுக்கெல்லாம் யெகோவாமீதே பழிபோடுவார்கள்! (எரேமியா 44:15-18-ஐ ஒப்பிடுக.) இன்றும் அநேகர் இதைத்தான் செய்கிறார்கள்; மனிதனின் பொல்லாத போக்கினால் விளையும் துன்பங்களுக்கு கடவுளை குற்றப்படுத்துகிறார்கள்.

12கடவுளை தூஷிப்பதால் யூதாவின் மக்களுக்கு சமாதானம் உண்டாகுமா? உண்டாகாது. “பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்” என ஏசாயா முன்னறிவிக்கிறார். (ஏசாயா 8:22) கடவுளை தூற்ற வானத்தை அண்ணாந்து பார்த்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமியை, தங்கள் நம்பிக்கையற்ற நிலையை பார்க்கிறார்கள். அவர்கள் கடவுளைவிட்டு விலகியதால் பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 19:3) அப்படியென்றால் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கடவுள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகும்? (ஆதியாகமம் 22:15-18; 28:14, 15) யெகோவா வார்த்தை தவறுவாரா? அசீரிய படைகளோ வேறு படைகளோ யூதா மற்றும் தாவீதின் அரச வம்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? (ஆதியாகமம் 49:8-10; 2 சாமுவேல் 7:11-16) இஸ்ரவேலர்கள் என்றென்றும் அந்தகாரத்திலே தள்ளப்படுவார்களா?

‘ஈனப்படுத்தப்பட்ட நாடு’

13ஆபிரகாமின் சந்ததியாருக்கு வரவிருக்கும் மிகக் கொடிய அழிவை ஏசாயா இப்போது குறிப்பிடுகிறார்: “இப்பொழுது இக்கட்டிருக்குமிடத்தில் இனி இருளிருப்பதில்லை; முற்காலத்திலே அவர் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் ஈனப்படுத்தினார். இனிவருங்காலத்திலோ கடற்கரைப் பாதையிலும் யோர்தான் நதிக்கப்புறத்திலுமுள்ள புறஜாதியார் நாட்டை அவர் மகிமைப்படுத்துவார்.” (ஏசாயா 9:1, தி.மொ.) கலிலேயா இஸ்ரவேலின் வட ராஜ்யத்தில் அமைந்திருக்கிறது. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில், ‘செபுலோன் நாடும் நப்தலி நாடும்’ ‘கடற்கரைப் பாதையும்’ கலிலேய பகுதிகளைக் குறிக்கின்றன. இந்தக் “கடற்கரைப் பாதை,” கலிலேயா கடற்கரை நெடுக மத்தியதரை கடலை நோக்கிச் செல்லும் பழங்காலத்து சாலையைக் குறிக்கிறது. ஏசாயாவின் நாட்களில் கலிலேயாவின் அநேக நகரங்களில் புறஜாதியார் குடியிருப்பதால், அது ‘புறஜாதியார் நாடு’ என அழைக்கப்படுகிறது. c எவ்வாறு இந்நாடு ‘ஈனப்படுத்தப்படுகிறது’? புறஜாதியாரான அசீரியர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றி, இஸ்ரவேலர்களை நாடுகடத்திச் சென்று, அப்பகுதி முழுவதிலும் ஆபிரகாமின் சந்ததியார் அல்லாத புறஜாதியாரை குடியமர்த்துகின்றனர். இவ்வாறு, பத்துக் கோத்திர வட ராஜ்யம் சரித்திரத்திலிருந்து மறைகிறது!​—2 இராஜாக்கள் 17:5, 6, 18, 23, 24.

14யூதாவும் அசீரியர்களால் அச்சுறுத்தப்படுகிறது. செபுலோனும் நப்தலியும் அடையாளப்படுத்தும் பத்துக் கோத்திர ராஜ்யத்தைப் போலவே இதுவும் நிரந்தர ‘இருளில்’ மூழ்குமா? மூழ்காது. ‘இனிவருங்காலத்தில்’ யூதாவின் தென் ராஜ்யத்திற்கும் முன்னாளைய வட ராஜ்ய பகுதிகளுக்கும்கூட யெகோவா ஆசீர்வாதங்களைப் பொழிவார். எவ்வாறு?

15அப்போஸ்தலனாகிய மத்தேயு, இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தைப் பற்றிய ஏவப்பட்ட பதிவில் இக்கேள்விக்கு பதிலளிக்கிறார். அந்த ஊழியத்தின் ஆரம்ப காலத்தை விவரிக்கையில் அவர் சொல்வதாவது: “நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து [இயேசு] வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.”​—மத்தேயு 4:13-16.

16ஆக, ‘இனிவருங்காலம்’ என ஏசாயா குறிப்பிட்டது இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் காலமாகும். இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் காலம் கழித்தார். அங்குதான் அவர் தம் ஊழியத்தை ஆரம்பித்து, “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என அறிவிக்க துவங்கினார். (மத்தேயு 4:17) அங்குதான் அவர் புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தை அளித்தார், அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார், முதல் அற்புதத்தை நடப்பித்தார், உயிர்த்தெழுதலுக்குப் பின் சுமார் 500 சீஷர்கள் முன் தோன்றினார். (மத்தேயு 5:1–7:27; 28:16-20; மாற்கு 3:13, 14; யோவான் 2:8-11; 1 கொரிந்தியர் 15:6) இவ்விதத்தில் இயேசு “செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும்” மகிமைப்படுத்தி ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். ஆயினும் அவர் கலிலேயா மக்களுக்கு மட்டுமே பிரசங்கிக்கவில்லை. யூதா உட்பட, இஸ்ரவேல் தேசம் முழுவதிலும் நற்செய்தியைப் பிரசங்கித்து, அதை ‘மகிமைப்படுத்தினார்.’

‘பெரிய வெளிச்சம்’

17கலிலேயாவில் ‘பெரிய வெளிச்சம்’ என மத்தேயு எதைக் குறிப்பிட்டார்? இதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் மேற்கோளே. ஏசாயா எழுதியதாவது: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசாயா 9:⁠2) பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள் சத்திய ஒளி புறமத பொய்களால் மறைக்கப்பட்டிருந்தது. போதாததற்கு யூத மதத் தலைவர்கள் தங்கள் பாரம்பரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து ‘கடவுளுடைய வார்த்தையை பயனற்றதாக்கினார்கள்.’ (மத்தேயு 15:6, பொ.மொ.) சாதாரண மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘குருட்டு வழிகாட்டிகளை’ பின்பற்றி குழம்பிப் போனார்கள். (மத்தேயு 23:2-4, 16) மேசியாவாகிய இயேசு தோன்றியபோது, தாழ்மையுள்ள மக்கள் அநேகரது அறிவுக் கண்கள் அற்புதமாக திறக்கப்பட்டன. (யோவான் 1:9, 12) இயேசு பூமியில் இருக்கும்போது செய்த ஊழியமும் அவர் அளித்த பலியின் ஆசீர்வாதங்களும் ஏசாயா தீர்க்கதரிசனத்தில் ‘பெரிய வெளிச்சம்’ என பொருத்தமாகவே குறிப்பிடப்படுகின்றன.​—யோவான் 8:⁠12.

18இந்த வெளிச்சத்திற்கு பிரதிபலித்தோர் மிகுந்த சந்தோஷம் கண்டனர். ஏசாயா சொல்கிறார்: “அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறது போலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறது போலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.” (ஏசாயா 9:⁠3) இயேசுவும் அவரது சீஷர்களும் பிரசங்கித்ததால், நேர்மையுள்ளவர்கள் யெகோவாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்க ஆவலோடு முன்வந்தனர். (யோவான் 4:24) நான்கே ஆண்டுகளுக்குள் திரளானவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றனர். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று மூவாயிரம் பேர் முழுக்காட்டப்பட்டனர். விரைவில் ‘அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமானது.’ (அப்போஸ்தலர் 2:41; 4:4) சீஷர்கள் இன்னும் வைராக்கியமாக ஒளியை பிரகாசிக்கச் செய்ததால் “சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.”​—⁠அப்போஸ்தலர் 6:⁠7.

19அமோக விளைச்சலை காண்போரை போலவும் போரில் மகத்தான வெற்றி பெற்று கொள்ளைப் பொருட்களை அள்ளி எடுப்போரை போலவும் இயேசுவின் சீஷர்கள் அதிகரிப்பைக் கண்டு மகிழ்ந்தனர். (அப்போஸ்தலர் 2:46, 47) அதன்பின் யெகோவா புறஜாதியார் மீதும் ஒளியைப் பிரகாசிக்க செய்தார். (அப்போஸ்தலர் 14:27) ஆகவே யெகோவாவை அணுகுவதற்கான வழி திறக்கப்பட்டதைக் குறித்து எல்லா இனத்தாரும் மகிழ்ந்தனர்.​—அப்போஸ்தலர் 13:⁠48.

“மீதியானியரின் நாளில் நடந்ததுபோல”

20மேசியாவினுடைய நடவடிக்கையின் பலன்கள் நிரந்தரமானவை என்பதை ஏசாயாவின் அடுத்த வார்த்தைகள் காட்டுகின்றன: “மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின் மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.” (ஏசாயா 9:⁠4) ஏசாயாவின் நாட்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், மீதியானியரும் மோவாபியரும் சதிசெய்து இஸ்ரவேலரை வஞ்சித்து அவர்களை பாவம்செய்ய வைத்தனர். (எண்ணாகமம் 25:1-9, 14-18; 31:15, 16) அதன்பின் மீதியானியர்கள் ஏழு ஆண்டுகளுக்கு இஸ்ரவேலரின் கிராமங்களையும் பண்ணைகளையும் படையெடுத்து கொள்ளையிட்டனர். (நியாயாதிபதிகள் 6:1-6) ஆனால் யெகோவா தம் ஊழியரான கிதியோனின் மூலம் மீதியானிய படைகளை வீழ்த்தினார். ‘மீதியானியரின் அந்த நாளுக்கு’ பிறகு யெகோவாவின் மக்கள் மீண்டும் மீதியானியரது கைகளில் சிக்கியதாக எந்த அத்தாட்சியும் இல்லை. (நியாயாதிபதிகள் 6:7-16; 8:28) விரைவில் பெரிய கிதியோனாகிய இயேசு கிறிஸ்து, யெகோவாவின் மக்களது நவீன கால எதிரிகளை வீழ்த்துவார். (வெளிப்படுத்துதல் 17:14; 19:11-21) அப்போது, மனித வல்லமையால் அல்ல, ஆனால் யெகோவாவின் வல்லமையால், “மீதியானியரின் நாளில் நடந்ததுபோல” முழுமையான நிரந்தர வெற்றி கிடைக்கும். (நியாயாதிபதிகள் 7:2-22) கடவுளுடைய மக்கள் ஒடுக்கப்பட்டு தவிக்கும் காலம் மீண்டும் வராது!

21கடவுள் தம் வல்லமையால் எதிரிகளை அழிப்பது, போரை ஊக்குவிக்கிறார் என அர்த்தப்படுத்தாது. மாறாக, சமாதானப் பிரபுவாகிய உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு எதிரிகளை அழிப்பதால் நிரந்தர சமாதானத்தையே கொண்டுவருவார். ராணுவ தளவாடங்கள் முழுமையாக சுட்டெரிக்கப்படுவதாக ஏசாயா இப்போது சொல்கிறார்: “அமளியுற்ற போர்க்களத்தில் போர் வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.” (ஏசாயா 9:⁠5, பொ.மொ.) திரண்டுவரும் வீரர்களின் காலணிகளால் உண்டாகும் அமளி இனியும் ஏற்படாது. போர் செய்து கடினப்பட்டுப் போன வீரர்களின் இரத்தக் கறைபடிந்த ஆடைகள் இனியும் தென்படாது. இனி போர் என்பது சகாப்தத்திலேயே கிடையாது!​—சங்கீதம் 46:⁠9.

‘அருமையான ஆலோசனைக் கர்த்தா’

22அற்புதமாக பிறந்த மேசியா, இயேசு என பெயரிடப்பட்டார். அதன் அர்த்தம், “யெகோவாவே இரட்சிப்பு.” அவர் ஆற்றவிருந்த பங்கை பொறுத்து அல்லது வகிக்கவிருந்த ஸ்தானத்தைப் பொறுத்து அவருக்கு மற்ற தீர்க்கதரிசன பெயர்களும் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் இம்மானுவேல். அதன் அர்த்தம், “தேவன் நம்மோடிருக்கிறார்.” (ஏசாயா 7:14, NW அடிக்குறிப்பு) இப்போது மற்றொரு தீர்க்கதரிசன பெயரை ஏசாயா விவரிக்கிறார்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான [“அருமையான,” NW] ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதான பிரபு எனப்படும்.” (ஏசாயா 9:6, தி.மொ.) இந்த பன்முக தீர்க்கதரிசன பெயரின் ஆழமான அர்த்தத்தை சிந்திக்கலாம்.

23ஆலோசனைகளை அல்லது அறிவுரைகளை வழங்குபவரே ஆலோசகர். இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் அருமையான ஆலோசனைகளை வழங்கினார். “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என பைபிள் சொல்கிறது. (மத்தேயு 7:29) அவர் ஞானமும் பரிவும் நிறைந்த ஆலோசகர். மனித இயல்பை நுணுக்கமாக அறிந்தவர். அவர் எப்போதும் கடுமையாக கண்டித்து அல்லது தண்டித்து திருத்துபவர் அல்ல. பெரும்பாலும், நல்ல அறிவுரைகளை அன்போடு எடுத்துச் சொல்லியே திருத்துகிறார். அவரது ஆலோசனைகள் அருமையானவை, ஏனெனில் அவை எப்போதும் ஞானமுள்ளவை, பரிபூரணமானவை, தவறாதவை. அவற்றைப் பின்பற்றினால், நித்திய ஜீவனைப் பெறலாம்.​—யோவான் 6:⁠68.

24சொந்த புத்திக்கூர்மையால் மட்டுமே இயேசு சிறந்த அறிவுரைகளை வழங்குகிறார் என சொல்ல முடியாது. ‘என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது’ என்று அவரே ஒப்புக்கொள்கிறார். (யோவான் 7:16) சாலொமோனுடைய ஞானத்தைப் போலவே இயேசுவின் ஞானத்திற்கும் ஊற்றுமூலர் யெகோவா தேவனே. (1 இராஜாக்கள் 3:7-14; மத்தேயு 12:42) கிறிஸ்தவ சபையிலுள்ள போதகர்களும் ஆலோசகர்களும் கிறிஸ்துவைப் போலவே கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அறிவுரை வழங்க வேண்டும்.​—நீதிமொழிகள் 21:⁠30.

“வல்லமையுள்ள கடவுள்,” “நித்திய பிதா”

25இயேசு “வல்லமையுள்ள கடவுள்” என்றும் “நித்திய பிதா” என்றும் அழைக்கப்படுகிறார். அதற்காக அவர் ‘நம்முடைய பிதாவாகிய தேவன்’ யெகோவாவின் அதிகாரத்தையும் ஸ்தானத்தையும் கைப்பற்றிவிட்டார் என அர்த்தமாகாது. (2 கொரிந்தியர் 1:2) ‘அவர் [இயேசு] . . . தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை.’ (பிலிப்பியர் 2:6) அவர் வல்லமையுள்ள கடவுள் என்றாலும் சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல. இயேசு ஒருபோதும் தன்னை சர்வவல்லமையுள்ள கடவுளாக எண்ணவில்லை. அவர் தம் பிதாவை ‘ஒன்றான மெய் தேவன்’ என அழைத்தார். அதாவது, வழிபட வேண்டிய ஒரே கடவுள் என்றார். (யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 4:11) வேதவாக்கியங்களில், ‘கடவுள்’ என்ற வார்த்தை ‘வல்லமையுள்ளவர்’ அல்லது ‘பலம்படைத்தவர்’ என அர்த்தப்படுத்தலாம். (யாத்திராகமம் 12:12; சங்கீதம் 8:5; NW; 2 கொரிந்தியர் 4:4) இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, ஒரு ‘கடவுளாயிருந்தார்,’ அதாவது ‘கடவுளுடைய ரூபமாயிருந்தார்.’ உயிர்த்தெழுதலுக்குப் பின் அவர் அதைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தை பரலோகத்தில் பெற்றார். (யோவான் 1:1; பிலிப்பியர் 2:6-11; தி.மொ.) இயேசு ‘கடவுள்’ என அழைக்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இஸ்ரவேல நியாயாதிபதிகள் கடவுட்கள் அல்லது ‘தேவர்கள்’ என அழைக்கப்பட்டனர், இயேசுவே ஒருமுறை அப்படித்தான் அவர்களை அழைத்தார். (சங்கீதம் 82:6; யோவான் 10:35) இயேசுவும் யெகோவாவால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியே. அவர் ‘உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்’ போகிறவர். (2 தீமோத்தேயு 4:1; யோவான் 5:30) ஆகவே அவரை “வல்லமையுள்ள கடவுள்” என அழைப்பது மிக பொருத்தமே.

26“நித்திய பிதா” என்ற பட்டப்பெயர், மனிதர்களுக்கு பூமியில் நித்திய வாழ்க்கையை வழங்க மேசியானிய ராஜா அதிகாரமும் வல்லமையும் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. (யோவான் 11:25, 26) நம் முதல் தந்தையான ஆதாம் மரணத்தையே நமக்கு சுதந்திரமாக அளித்தார். கடைசி ஆதாமான இயேசு ‘உயிர்ப்பிக்கிற ஆவியானார்.’ (1 கொரிந்தியர் 15:22, 45; ரோமர் 5:12, 18) நித்திய பிதாவாகிய இயேசு என்றென்றும் வாழ்வார், ஆகவே கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கமும் அவருடைய பிள்ளைகளாக நித்திய ஆசீர்வாதங்களை பெறும்.​—ரோமர் 6:⁠9.

“சமாதான பிரபு”

27மனிதனுக்கு தேவைப்படுவது நித்திய ஜீவன் மட்டுமல்ல. கடவுளோடும் சக மனிதரோடும் சமாதானமும் தேவை. ‘சமாதானபிரபுவின்’ ஆட்சிக்கு கீழ்ப்படிவோர் இன்றே ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள்.’ (ஏசாயா 2:2-4) தேசம், இனம், அரசியல், பொருளாதாரம் ஆகிய எந்த வேறுபாடுகளுக்காகவும் அவர்கள் வெறுப்பை வளர்த்துக் கொள்வதில்லை. ஒரே மெய் தேவனாகிய யெகோவாவின் வணக்கத்தில் அவர்கள் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். சபையில் உள்ளவர்களோடும் சரி மற்றவர்களோடும் சரி சமாதானமாக வாழவே முயல்கிறார்கள்.​—கலாத்தியர் 6:10; எபேசியர் 4:2, 3; 2 தீமோத்தேயு 2:⁠24.

28கடவுளின் ஏற்ற காலத்தில் கிறிஸ்து பூமியெங்கும் சமாதானத்தை நிரந்தரமாக நிலைநாட்டுவார். (அப்போஸ்தலர் 1:7) “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:7அ) சமாதானப் பிரபுவான இயேசு கொடுங்கோல் ஆட்சி செய்ய மாட்டார். அவரது குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படாது, எக்காரணங்களுக்காகவும் பலவந்தம் செய்யப்பட மாட்டார்கள். மாறாக, இயேசு அனைத்தையும் ‘நியாயத்தினாலும்’ ‘நீதியினாலும்’ செய்வார். என்னே அருமையான மாற்றம்!

29இயேசுவின் தீர்க்கதரிசன பெயரின் இந்த அருமையான அர்த்தங்களை கருத்தில் கொள்கையில், ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசனத்தினுடைய கடைசி வாக்கியம் உள்ளத்தை சிலிர்க்க வைக்கிறது: “சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” (ஏசாயா 9:7ஆ, தி.மொ.) ஆம், யெகோவா வைராக்கியத்தோடு செயல்படுகிறார். அவர் எதையுமே அரை மனதோடு செய்வதில்லை. வாக்குறுதி அளித்திருக்கும் அனைத்தையும் அவர் முழுமையாக நிறைவேற்றுவார் என்பது நிச்சயம். ஆகவே நித்திய சமாதானத்தை பெற விரும்பும் எவரும் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்க வேண்டும். யெகோவா தேவனையும் சமாதானப் பிரபுவாகிய இயேசுவையும் போலவே கடவுளது ஊழியர்கள் அனைவரும் ‘நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமாக’ இருக்கக்கடவர்கள்.​—தீத்து 2:⁠14.

[அடிக்குறிப்புகள்]

a எசேக்கியா தான் அரசராவதற்கு முன்பு சங்கீதம் 119-ஐ எழுதினார் என அநேகர் நம்புகின்றனர். அது உண்மை என்றால் ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்ன சமயத்திலேயே அதுவும் எழுதப்பட்டிருக்கலாம்.

b ‘இந்த வாக்கியம்’ என ஏசாயா 8:20 குறிப்பிடுவது, முந்தைய வசனமான 19-⁠ல் ஆவியுலக தொடர்பின் சார்பாக சொல்லப்படும் வாக்கியத்தையும் குறிக்கலாம். அப்படியென்றால், யூதாவில் ஆவியுலகோடு தொடர்புகொள்வதை சிலர் தொடர்ந்து ஊக்குவிப்பார்கள், இதனால் யெகோவாவிடமிருந்து அறிவொளியைப் பெற மாட்டார்கள் என்று ஏசாயா அர்த்தப்படுத்தியிருக்கலாம்.

c தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு சாலொமோன் அளிக்க முன்வந்த 20 கலிலேய பட்டணங்களும் புறஜாதியார் குடியிருந்த பட்டணங்கள் என்பதாக சிலர் சொல்கின்றனர்.​—⁠1 இராஜாக்கள் 9:10-13.

[கேள்விகள்]

1. காயீனின் காலம் முதற்கொண்டு மனிதவர்க்கத்தின் நிலை என்ன?

2, 3. இயேசு கிறிஸ்து எதற்கு வழிசெய்தார், நாம் எவ்வாறு இந்த ஆசீர்வாதங்களைப் பெறலாம்?

4, 5. ஏசாயாவின் நாட்களில் என்ன நிலை ஏற்படுகிறது, சிலர் உதவிக்கு யாரிடம் செல்கின்றனர்?

6. இஸ்ரவேலர்கள் ஆவியுலக தொடர்புகொள்வது ஏன் பொல்லாத பாவம்?

7. ஏசாயா காலத்து இஸ்ரவேலர்களைப் போன்று இன்று அநேகர் எதைச் செய்கின்றனர், மனந்திரும்பாவிட்டால் அவர்களுக்கு என்ன ஏற்படும்?

8. பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடி நாம் செல்ல வேண்டிய ‘வேதமும் சாட்சி ஆகமமும்’ எது?

9. மனந்திரும்பாத பாவிகள், பைபிளை மேற்கோள் காட்டி பேசுவதால் பிரயோஜனம் உண்டா?

10. யெகோவாவை புறக்கணித்ததால் யூதா எவ்வாறு வேதனைப்படுகிறது?

11. யூதா படிப்பினையைக் கற்றுக்கொள்ளுமா?

12. (அ) யூதா கடவுளிடமிருந்து விலகியதால் என்ன ஏற்பட்டுள்ளது? (ஆ) என்ன முக்கியமான கேள்விகள் எழும்புகின்றன?

13. ‘புறஜாதியார் நாடு’ என்பது என்ன, அது எவ்வாறு ஈனப்படுத்தப்படுகிறது?

14. யூதாவின் ‘இருள்’ எந்த விதத்தில் பத்துக் கோத்திர ராஜ்யத்தைப் போன்ற நிரந்தர இருளாக இருக்காது?

15, 16. (அ) ‘செபுலோனுக்கும் நப்தலிக்கும்’ நிலைமை மாறும் ‘காலம்’ எது? (ஆ) ஈனப்படுத்தப்பட்ட நாடு எவ்வாறு மகிமைப்படுத்தப்படுகிறது?

17. கலிலேயாவில் எவ்வாறு ‘பெரிய வெளிச்சம்’ பிரகாசிக்கிறது?

18, 19. வெளிச்சத்திற்கு பிரதிபலித்தோர் என்ன காரணங்களால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்?

20. (அ) என்ன விதங்களில் மீதியானியர்கள் இஸ்ரவேலுக்கு எதிரிகளாக நிரூபித்தனர், யெகோவா எவ்வாறு அவர்களுக்கு ஒரு முடிவை கொண்டுவந்தார்? (ஆ) “மீதியானியரின் நாளில்” நடந்தது போலவே விரைவில் இயேசு எவ்வாறு கடவுளுடைய மக்களின் எதிரிகளை வீழ்த்துவார்?

21. போரைக் குறித்து ஏசாயா முன்னுரைப்பது என்ன?

22. ஏசாயா புத்தகத்தில் இயேசுவிற்கு தரப்படும் பன்முக தீர்க்கதரிசன பெயர் என்ன?

23, 24. (அ) இயேசு என்ன அர்த்தத்தில் ‘அருமையான ஆலோசனை கர்த்தா’? (ஆ) இன்றைய கிறிஸ்தவ ஆலோசகர்கள் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?

25. “வல்லமையுள்ள கடவுள்” என்ற பெயர் பரலோக இயேசுவைப் பற்றி என்ன காட்டுகிறது?

26. இயேசுவை ஏன் “நித்திய பிதா” என அழைக்கலாம்?

27, 28. ‘சமாதான பிரபுவின்’ குடிமக்களுக்கு இன்றும் எதிர்காலத்திலும் என்ன அருமையான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

29. நித்திய சமாதானத்தைப் பெற விரும்பினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 122-ன் தேசப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கோராசின்

கப்பர்நகூம்

பெத்சாயிதா

கெனேசரேத்து சமவெளி

கலிலேயா கடல்

மக்தலா

திபேரியா

யோர்தான்

நதி

கெதரா

கெதரா

[பக்கம் 119-ன் படங்கள்]

காயீனின் பிறப்பும் இயேசுவின் பிறப்பும் மிகவும் விசேஷித்தவை. ஆனால் இயேசுவின் பிறப்பால் மட்டுமே மிகுந்த பயன் உண்டானது

[பக்கம் 121-ன் படம்]

ஆகாரத்திற்கான பசியையும் தண்ணீருக்கான தாகத்தையும் விட கொடுமையான பஞ்சம் உண்டாகும்

[பக்கம் 127-ன் படம்]

இயேசு தேசத்தில் வெளிச்சமாக இருந்தார்