Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்

தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்

அதிகாரம் பத்தொன்பது

தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்

ஏசாயா 23:1-18

‘பேரழகும், பல திரண்ட செல்வங்களும்’ உடைய நகரமாய் திகழ்ந்தது. (எசேக்கியேல் 27:4, 12, கத்.பை.) பல தூரதேசங்களுக்கு செல்லும் அதன் கப்பல்கள் அணி அணியாய் கடலில் வலம்வந்தன. “கடல் நடுவில் மகிமையடைந்து” காணப்பட்டது அந்நகரம்; அதன் ‘பெரும் செல்வத்தால் மண்ணுலகின் மன்னர்களைச் செல்வர்’ ஆக்கியது. (எசேக்கியேல் 27:25, கத்.பை., 33, பொ.மொ.) பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில், தீரு நகரத்தின் நிலை இதுதான். மத்தியதரைக் கடலின் கிழக்குமுனையில் இருந்த பெனிக்கே நகரம் அது.

2என்றாலும், அந்நகரத்தின் அழிவு மிக அருகில் இருந்தது. எசேக்கியேல் அந்த நகரத்தைக் குறித்து விவரிப்பதற்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னதாகவே, அரணான இந்த பெனிக்கே பட்டணத்தின் அழிவையும் அதை நம்பியிருந்தோரின் துக்கத்தையும் ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். மேலும், சிறிது காலத்திற்கு பிறகு அந்த பட்டணம் மறுபடியும் செல்வ செழிப்போடு பழைய நிலைக்கு வர கடவுள் அனுமதிப்பார் என்பதையும் ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்தார். தீர்க்கதரிசியின் வார்த்தைகள் எப்படி நிறைவேறின? தீருவுக்கு நேர்ந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அதற்கு நேர்ந்த கதியையும் அதற்கான காரணங்களையும் சரியாக புரிந்துகொண்டால், யெகோவாவிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் நம் விசுவாசம் பலப்படும்.

“தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்”

3தீர் நாட்டைக் குறித்த தீர்ப்பு” (NW) என்ற தலைப்பில் ஏசாயா அறிவிக்கிறார்: “தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது.” (ஏசாயா 23:1அ) கிழக்கு மத்தியதரைக் கடலில் இருந்த தீரு நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஸ்பெய்னின் பாகமாக தர்ஷீஸ் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. a இருப்பினும், தீரு பட்டணத்தாரும் கப்பலோட்டுவதில் வல்லவர்கள். அவர்களுடைய கப்பல்கள் பெரியவையாகவும் வலிமை வாய்ந்தவையாகவும் இருந்தன. சந்திரனுக்கும் அலைகளுக்கும் இருந்த தொடர்பை முதன்முதலில் கண்டுபிடித்ததும் கடல் பிரயாணத்திற்கு வானசாஸ்திரத்தை ஓர் ஏதுவாக பயன்படுத்தியதும் இந்த தேசத்தாரே என சில சரித்திராசிரியர்கள் நம்புகின்றனர். எனவே, தீரு நகரத்தாருக்கு தர்ஷீஸ் தூரத்தில் இருந்தது வர்த்தகத்திற்கு ஒரு தடையாகவே இருந்திருக்காது.

4ஏசாயாவின் நாட்களில், தீருவின் வணிகப் பொருட்களுக்கு தூரத்திலிருந்த தர்ஷீஸில் கிராக்கி அதிகம். சொல்லப்போனால், தீருவின் சரித்திரத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், அதன் செல்வத் திரட்சிக்கு முக்கிய காரணம் தர்ஷீஸே. வெள்ளி, இரும்பு, தகரம், மற்ற உலோக சுரங்கங்கள் ஸ்பெய்னில் அதிக அளவில் உள்ளன. (ஒப்பிடுக: எரேமியா 10:9; எசேக்கியேல் 27:12.) ‘தர்ஷீஸின் கப்பல்கள்’ அதாவது, தர்ஷீஸோடு வியாபாரம் செய்த தீருவின் வணிகக் கப்பல்கள், புலம்பி ‘அலறும்.’ ஏன்? அவற்றின் வணிகத்திற்கு தாயகமாக திகழ்ந்த தீரு அழிக்கப்படுவதே காரணம்.

5தீருவின் அழிவைக் குறித்து கடலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த மாலுமிகள் எப்படி தெரிந்துகொள்வர்? ஏசாயா பதிலளிக்கிறார்: “இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.” (ஏசாயா 23:1ஆ) பெனிக்கே கடற்கரையின் மேற்கில் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சைப்ரஸ் தீவை, ‘கித்தீம் தேசம்’ குறிக்கலாம். தர்ஷீஸிலிருந்து கிழக்கு நோக்கி வரும் கப்பல்கள் தீருவை வந்து சேருவதற்கு முன் நிறுத்தப்படுகிற கடைசி துறைமுகம் இதுதான். எனவே, சைப்ரஸில் கப்பல்களை நிறுத்தும்போது, தங்கள் அருமை தாயகம் வீழ்ந்துவிட்டது என்ற செய்தியை மாலுமிகள் தெரிந்துகொள்வர். எப்படிப்பட்ட அதிர்ச்சி அவர்களுக்கு! துக்கம் தொண்டையை அடைக்க, அவர்கள் பயத்தில் ‘அலறுவர்.’

6பெனிக்கே கடற்கரையிலுள்ள மக்களையும் நடுக்கம் பிடித்துக்கொள்ளும். தீர்க்கதரிசி சொல்கிறார்: “தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள். சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது.” (ஏசாயா 23:2, 3) தீருவின் அழிவைப் பார்த்து, ‘தீவுக்குடிகள்’ அதாவது, தீருவின் அண்டை தேசங்கள் திகைத்து, மெளனமாகிவிடுவர். இந்த தீவுக்குடிகளை வர்த்தகப் பொருட்களால் “நிரப்பி” செல்வந்தர்களாக்கிய “சீதோனின் வர்த்தகர்” யார்? தீருவுக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கடற்கரைப் பட்டணமாகிய சீதோனின் குடியேற்ற நாடாகவே முதலில் தீரு இருந்தது. சீதோன் தன் நாணயங்களில் தீருவின் தாய் என தன் அடையாளத்தை பொறித்திருக்கிறது. செல்வத் திரட்சியில் தீரு சீதோனை மிஞ்சிய போதிலும், “சீதோன் குமாரத்தி” என்றே தீரு அழைக்கப்படுகிறது. அதன் குடிகள் தங்களை சீதோனியர்கள் என்றே அழைத்துக்கொள்கின்றனர். (ஏசாயா 23:12) எனவே, “சீதோனின் வர்த்தகர்” என்ற பதம் தீருவின் வர்த்தக குடிகளையே குறிக்கக்கூடும்.

7செல்வ செழிப்புமிக்க சீதோனிய வர்த்தகர்கள், வியாபாரத்திற்காக மத்தியதரைக் கடலில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்கின்றனர். நைல் நதியின் கிழக்கு முனையிலுள்ள எகிப்தின் கழிமுகப்பகுதியாகிய சீகோரின் தானியங்களையும் விதைகளையும் பல இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். (எரேமியா 2:18-ஐ ஒப்பிடுக.) “ஆற்றங்கரையின் அறுப்பு” எகிப்தின் மற்ற விளைபொருட்களையும் உள்ளடக்கியது. இப்படிப்பட்ட பொருட்களைக் கொண்டு பண்டமாற்று முறையில் வியாபாரம் செய்வது சீதோனின் வர்த்தகர்களுக்கும் அவர்களோடு வர்த்தகம் செய்கிறவர்களுக்கும் அதிக லாபத்தை கொடுக்கிறது. சீதோனின் வர்த்தகர்கள் தீருவை செல்வத்தால் நிரப்புகின்றனர். எனவே, அதனுடைய அழிவைக் கண்டு அவர்கள் வெகுவாக துக்கிப்பர்!

8அடுத்தபடியாக, சீதோனிடம் பின்வரும் வார்த்தைகளை ஏசாயா சொல்கிறார்: “சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.” (ஏசாயா 23:4) தீரு நகரம் இருந்த இடம், அதன் அழிவிற்கு பிறகு பாழும் அவாந்தரமுமாய் ஆகும். பிள்ளையை பறிகொடுத்த தாய் குமுறுவதுபோல, கடல் குமுறி பொங்கும். வேதனையின் உச்சத்தில், தனக்குப் பிள்ளைகளே இல்லை என சொல்லும் தாயைப்போல அது ஆகும். தன் மகளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து சீதோன் வெட்கி, நாணமடையும்.

9தீருவின் அழிவு குறித்த செய்தி பல இடங்களிலும் துயரத்தை உண்டுபண்ணும். ஏசாயா சொல்கிறார்: “எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் வேதனை உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் மிகுந்த வேதனை உண்டாகும்.” (ஏசாயா 23:5, NW) தீருவின் அழிவைக் குறித்து துக்கிப்பவர்களின் வேதனை, எகிப்தைக் குறித்த செய்தியை கேட்டதினால் உண்டான வேதனைக்கு ஒப்பாயிருக்கும். எந்த செய்தியை இங்கு தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்? ஏற்கெனவே அவர் சொன்ன ‘எகிப்தைக் குறித்த தீர்ப்பின்’ நிறைவேற்றத்தை ஒருவேளை அர்த்தப்படுத்தி இருக்கலாம். b (ஏசாயா 19:1-25) அல்லது மோசேயின் நாட்களில், பார்வோனின் சேனை அழிக்கப்பட்டதை குறித்த அதிக பரபரப்பும் திகிலுமூட்டிய செய்தியையும் தீர்க்கதரிசி அர்த்தப்படுத்தி இருக்கலாம். (யாத்திராகமம் 15:4, 5, 14-16; யோசுவா 2:9-11) எதுவாக இருந்தாலும், தீருவின் அழிவைப் பற்றிய செய்தியைக் கேட்கும் அனைவரும் மிகுந்த வேதனைப்படுவர். புகலிடம் தேடி தூரத்திலுள்ள தர்ஷீஸுக்கு ஓடிப்போகும்படி அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. தங்களுடைய துக்கத்தை பெருஞ்சத்தத்தோடே தெரிவிக்க அவர்களுக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது: “கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.”​—ஏசாயா 23:⁠6.

“பூர்வ நாட்கள் முதல்” களிகூர்ந்திருத்தல்

10தீரு ஒரு பழங்கால நகரம் என்பதை நினைவுபடுத்தி, ஏசாயா கேட்கிறார்: “பூர்வ நாட்கள் முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா?” (ஏசாயா 23:7அ) செல்வ செழிப்புமிக்க தீருவின் சரித்திரம், யோசுவாவின் நாட்களுக்கு நம்மை கொண்டு செல்கிறது. (யோசுவா 19:29) வருடங்களினூடே, உலோகப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஊதா நிறச் சாயம் ஆகியவை தயாரிக்கும் நகரமாக தீரு பிரபலமாகி உள்ளது. தீருவின் ஊதா வண்ண அங்கிகள் விலையுயர்ந்தவை. அரச குடும்பத்தார் போன்ற உயர்வகுப்பு மக்களே இவற்றை விரும்பி வாங்குகின்றனர். (எசேக்கியேல் 27:7, 24-ஐ ஒப்பிடுக.) நிலமார்க்கமாய் சென்ற பயணக்கூட்டங்களுக்கும் தீரு வர்த்தக மையமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல, முக்கியமான ஏற்றுமதி-இறக்குமதி கிடங்காகவும் விளங்குகிறது.

11மேலும், ராணுவ ரீதியாகவும் இந்த நகரம் பலமாக விளங்குகிறது. எல். ஸ்பிரேக் டீ காம்ப் எழுதுகிறார்: “அவர்கள் வர்த்தகர்களே, வீரர்களல்ல. இருந்தாலும், தங்களுடைய நகரத்தை காக்க அந்த பெனிக்கேயர்கள், தைரியத்தோடும் துணிச்சலோடும் விடாப்பிடியாக போரிட்டனர். இந்த குணங்களும் கப்பலோட்டும் திறமையும், அப்போது இருந்த வலிமைமிக்க அசீரிய படைகளுக்கு எதிராக போரிட தீரு தேசத்தாருக்கு உதவின.”

12மத்தியதரைக் கடல் நாடுகளிலேயே மிகவும் பிரதானமாக விளங்குவது தீரு. “தொலை நாடுகளுக்குச் சென்று குடியேற இந்த நகரத்தார் கிளம்பினார்களே!” (ஏசாயா 23:7ஆ, கத்.பை.) இந்த பெனிக்கேயர்கள் பல தூரதேசங்களுக்கு சென்று வர்த்தக மையங்களையும் துறைமுகங்களையும் அமைக்கின்றனர். அவற்றில் சில காலப்போக்கில் குடியிருப்புகளாக மாறுகின்றன. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் வடக்கு கரையோரத்திலுள்ள கார்த்தேஜ் பட்டணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது தீருவின் குடியேற்ற நகரமாகும். காலப்போக்கில், அது தீருவையே மிஞ்சும். அதுமட்டுமல்ல, மத்தியதரைக் கடல் நாடுகளிடையே செல்வாக்கு பெற ரோமுக்கு எதிராக போட்டியிடும்.

அதன் அகந்தை அழிக்கப்படும்

13தீருவின் பழமையையும் செல்வத்தையும் கருத்தில்கொண்டால், அடுத்துவரும் கேள்வி வெகு பொருத்தமானது: “கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதன் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.” (ஏசாயா 23:8) அதன் குடியேற்றங்களிலும் மற்ற இடங்களிலும் உயர் அதிகாரமுடைய பதவிகளில் ஆட்களை இந்த நகரம் நியமித்திருக்கிறது. இப்படியாக, அது “கிரீடம் தரிப்பிக்கும்” நகரமாகிறது. அப்படிப்பட்ட நகரத்தை எதிர்த்து யார் பேச முடியும்? பிரபுக்களாகிய அதன் வர்த்தகர்களும், கனவான்களாகிய அதன் வியாபாரிகளும் நிறைந்த அத்தீவின் பெரும் பட்டணங்களுக்கு எதிராக யார் பேச முடியும்? லெபனானிலுள்ள பெய்ரூட் நேஷனல் மியூசியத்தின் பழமை சின்னங்கள் பிரிவின் முன்னாள் இயக்குநர் மோரீஸ் ஷேஹாப் பின்வருமாறு சொன்னார்: “இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லண்டனுக்கு இருந்த பெருமையையும் செல்வாக்கையும், கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தீரு பெற்றிருந்தது.” எனவே, இப்படிப்பட்ட ஒரு நகரத்தை எதிர்த்து யார் பேச முடியும்?

14கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு கொடுக்கப்பட்ட பதில், தீருவில் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தும். ஏசாயா சொல்கிறார்: “சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.” (ஏசாயா 23:9) செல்வ செழிப்பு மிக்க, இந்த பழங்கால நகரத்திற்கு எதிராக ஏன் யெகோவா நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவிக்கிறார்? பொய்க் கடவுளாகிய பாகாலின் வணக்கத்தாராக அதன் குடிகள் இருப்பதினாலா? இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபை மணந்த, யெகோவாவின் தீர்க்கதரிசிகளை கொன்று குவித்த யேசபேல், சீதோனுக்கும் தீருவுக்கும்கூட ராஜாவாகிய எத்பாலின் மகள் என்பதனாலா? (1 இராஜாக்கள் 16:29, 31; 18:4, 13, 19) இந்த இரண்டு கேள்விகளுக்குமே பதில், இல்லை என்பதுதான். தீருவின் செருக்குமிக்க அகந்தையே அது அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம். இஸ்ரவேலர்கள் உட்பட, மற்ற ஜனங்களை வாட்டி வதைத்து அது செல்வ செழிப்போடு விளங்குகிறது. பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில், தீருவுக்கும் மற்ற தேசங்களுக்கும் தீர்க்கதரிசி யோவேல் மூலமாக யெகோவா சொன்னதாவது: “யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.” (யோவேல் 3:6) வர்த்தகப் பொருட்களைப்போல தம் உடன்படிக்கையின் மக்களை படுமோசமாக நடத்தும் தீருவை கடவுள் கண்டுங்காணாமல் விட்டுவிடுவாரா?

15நூறு வருடங்கள் கடந்து சென்றாலும், தீருவின் நிலையில் எந்த மாற்றமும் வராது. பொ.ச.மு. 607-ல், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாரின் படைகள் எருசலேமை அழிக்கும்போது, தீரு களிகூரும்: ‘ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டது, என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன்.’ (எசேக்கியேல் 26:2) எருசலேமின் அழிவிலிருந்து தான் நன்மையடைலாம் என நினைத்து தீரு மகிழும். யூதாவின் தலைநகரம் இனிமேலும் போட்டியாக இருக்காது என்பதால், தனக்கு வர்த்தகம் பெருகுமென எதிர்பார்க்கும். தம் மக்களின் எதிரிகளோடு கைகோர்த்து, ‘கனவான்களாக’ தங்களை பெருமை பாராட்டிக்கொண்டு அகந்தையாக செயல்படுவோரை யெகோவா நிச்சயம் நியாயந்தீர்ப்பார்.

16தீருவுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பை ஏசாயா தொடருகிறார்: “தர்ஷீஸின் குமாரத்தியே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்து போ, உனக்கு அணையில்லை. கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் [“பெனிக்கேயின்,”NW] அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளை கொடுத்து: ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.”​—ஏசாயா 23:10-12.

17“தர்ஷீஸின் குமாரத்தி” என ஏன் தீரு அழைக்கப்படுகிறது? தீரு தோல்வியடைந்த பிறகு, தர்ஷீஸ் அதைக் காட்டிலும் வலிமைவாய்ந்ததாக ஒருவேளை ஆகலாம். c வெள்ளப் பெருக்கெடுக்கும் ஆறு, அதன் கரையை மீறி எல்லா இடங்களிலும் பாய்ந்தோடுவதுபோல, பாழாக்கப்பட்ட தீருவின் குடிகள் எல்லா திசைகளிலும் சிதறிப்போவர். “தர்ஷீஸின் குமாரத்தி”க்கு என ஏசாயா சொன்ன செய்தி, தீருவுக்கு நேரும் கதியை சுட்டிக்காட்டுகிறது. யெகோவா தாமே தம் கையை நீட்டி, கட்டளையைக் கொடுக்கிறார். எனவே, அதை எவருமே மாற்ற முடியாது.

18‘கன்னியாகிய சீதோனின் குமாரத்தி’ என தீருவை ஏசாயா குறிப்பிடுகிறார். அதுவரை அந்நியர்களால் கைப்பற்றப்படாமல், சூறையாடப்படாமல், அந்நிய நுகத்தின்கீழ் அடிமைகளாக வராமல் தீரு தனித்து விளங்குகிறதென்பதை அது சுட்டிக்காட்டுகிறது. (ஒப்பிடுக: 2 இராஜாக்கள் 19:21; ஏசாயா 47:1; எரேமியா 46:11.) ஆனால் இப்போதோ, அந்த நகரம் அழிக்கப்படவிருக்கிறது. பெனிக்கே குடியிருப்பாகிய கித்தீம் தேசத்திற்கு அதன் குடிகளில் சிலர் அகதிகளாக செல்வர். என்றாலும், பொருளாதார செல்வாக்கை இழந்துவிட்டதால், அவர்கள் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது.

கல்தேயர் அதை பாழாக்குவர்

19தீருவின் மேல் வரவிருந்த யெகோவாவின் நியாயத்தீர்ப்பை எந்த பேரரசு நிறைவேற்றும்? ஏசாயா அறிவிக்கிறார்: “இதோ, கல்தேயர் நாட்டைப் பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது. தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.” (ஏசாயா 23:13, 14, பொ.மொ.) அசீரியர்களல்ல, கல்தேயர்களே தீருவை அழிப்பர். முற்றுகை கோபுரங்களை அமைத்து, தீருவின் வீடுகளையும் அரமனைகளையும் தரைமட்டமாக்கி, அரணான தர்ஷீஸின் கப்பல்களை பாழாக்கி, மண்மேடாக்குவர்.

20இந்த தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, எருசலேமின் அழிவிற்கு பிறகு சிறிது காலத்திலேயே, தீரு பாபிலோனுக்கு எதிராக கலகம் செய்கிறது. எனவே, அந்த நகரத்தை நேபுகாத்நேச்சார் முற்றுகையிடுகிறான். தன்னை யாருமே அசைக்க முடியாது என நம்பி, தீரு எதிர்க்கிறது. முற்றுகையின் சமயத்தில், தலைச்சீரா உரசி உரசி பாபிலோனிய வீரர்களின் தலை ‘மொட்டையாகிறது.’ முற்றுகை வேலைகளுக்காக பொருட்களை சுமந்து சுமந்து, அவர்களுடைய தோள்பட்டையின் தோலும் ‘உரிந்துபோகிறது.’ (எசேக்கியேல் 29:18) இந்த முற்றுகை நேபுகாத்நேச்சாருக்கு ஏகப்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தீரு நகரம் அழிக்கப்பட்டபோதும், அதன் செல்வங்களை அவனால் கொள்ளையிட முடிவதில்லை. தீருவின் பொக்கிஷங்கள் அனைத்தும், அங்கிருந்து சுமார் 0.8 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு சிறிய தீவிற்கு கொண்டு செல்லப்பட்டு விடுகிறது. உறுதியான கப்பல்கள் அவர்கள் வசம் இல்லாததால், அந்த தீவை கல்தேய ராஜாவால் கைப்பற்ற முடிவதில்லை. 13 வருடங்களுக்கு பிறகு, தீரு சரணடைகிறது. ஆனால், அந்த நகரத்தைப் பற்றி சொல்லப்பட்ட இன்னும் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றம் அடைவதைப் பார்க்கவே அது அழிவிலிருந்து தப்பும்.

‘தன் முன்னைய தொழிலுக்கே’

21ஏசாயா தொடர்ந்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்.” (ஏசாயா 23:15அ) பாபிலோனியர்கள் தீருவின் முக்கியப் பகுதியை அழித்தபின், அதன் தீவுப்பட்டணம் “மறக்கப்பட்டிருக்கும்.” இந்த தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, “ஒரு ராஜாவுடைய” நாட்களின்படி, அதாவது பாபிலோனிய பேரரசின் சமயத்தில், தீவுப்பட்டணமாகிய தீரு முக்கியமான நகரமாக விளங்காது. தம் கோபத்தின் மதுவைக் குடிக்கும்படி சொல்லப்பட்ட தேசங்களில் தீருவும் இருக்கும் என யெகோவா எரேமியா மூலம் சொன்னார். “இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.” (எரேமியா 25:8-17, 22, 27) தீவுப்பட்டணமாகிய தீரு பாபிலோனின்கீழ் 70 ஆண்டுகள் முழுமையாக அடிமையாக இல்லை என்பது உண்மையே. ஏனென்றால், பொ.ச.மு. 539-ல் பாபிலோன் பேரரசு வீழ்ச்சி அடைகிறது. ‘தேவனுடைய நட்சத்திரங்களுக்கும்’ மேலாக பாபிலோனிய அரசர்கள் தங்கள் சிங்காசனத்தை உயர்த்திய காலப்பகுதியையே, அதாவது பாபிலோன் உலக வல்லரசாக செல்வாக்கோடு இருந்த காலப்பகுதியையே அந்த 70 வருடங்கள் குறிக்கின்றன. (ஏசாயா 14:13) அது செல்வாக்கோடு இருக்கும் காலப்பகுதியில், பல தேசங்கள் அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கின்றன. ஆனால், அந்த 70 வருடக் காலப்பகுதியின் முடிவில், அதன் செல்வாக்கு இருந்த இடம் தெரியாமல் போகும். அப்போது தீருவுக்கு என்ன நேரிடும்?

22ஏசாயா மேலும் தொடருகிறார்: “எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும். மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு. எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்குத் [“தன் முன்னைய தொழிலுக்குத்,” பொ.மொ.] திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம் பண்ணும்.”​—ஏசாயா 23:15ஆ-17.

23பொ.ச.மு. 539-ல் பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பிறகு, பெனிக்கே, மேதிய-பெர்சிய பேரரசின் மாகாணமாகிறது. பெர்சிய பேரரசர் மகா கோரேசு, பெருந்தன்மைமிக்க அரசராக விளங்குகிறார். அவருடைய ஆட்சியில், தீரு மீண்டும் தன் பழைய நிலைக்கு வரும். தன் வாடிக்கையாளர்களை இழந்த, மறக்கப்பட்ட வேசி ஒருத்தி புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க, வீணையை மீட்டி பாட்டுப்பாடி, நகரம் முழுவதும் சுற்றித்திரிவதுபோல, உலக வர்த்தக மையமாக அறியப்பட தீரு அதிகம் பிரயாசப்படும். தீரு வெற்றிகாணுமா? ஆம். யெகோவா அதன் பிரயாசத்திற்கு பலனை அளிப்பார். காலப்போக்கில், தீவுப்பட்டணம் மிக செல்வ செழிப்பான நகரமாகும். எனவேதான், பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டின் முடிவில், தீர்க்கதரிசி சகரியாவால் இவ்வாறு சொல்ல முடியும்: “தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.”​—சகரியா 9:3.

‘அவள் வருவாய் பரிசுத்தமாக்கப்படும்’

24பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை! “அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும் [“பரிசுத்தமாக்கப்படும்,” NW]. அது சேமித்து வைக்கப்படுவதில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.” (ஏசாயா 23:18, பொ.மொ.) தீருவின் செல்வங்கள் எப்படி பரிசுத்தமாக்கப்படுகிறது? யெகோவா தம்முடைய சித்தத்திற்கிசைய அவற்றை பயன்படுத்துகையில் பரிசுத்தமாக்கப்படுகிறது. தம்முடைய மக்கள் சாப்பிட்டு திருப்தியடையவும், உடுத்தி மகிழவும் அதை பயன்படுத்துகிறார். பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர்கள் திரும்பி வருகையில் இது நிறைவேறுகிறது. ஆலயத்தை மறுபடியும் கட்ட, கேதுரு மரங்களை தீருவின் குடிகள் கொடுத்து உதவுகின்றனர். மேலும், எருசலேம் நகரத்தோடு மறுபடியும் வர்த்தகத்தை துவங்குகின்றனர்.​—எஸ்றா 3:7; நெகேமியா 13:16.

25இருந்தபோதிலும், தீருவுக்கு எதிராக மற்றொரு நியாயத்தீர்ப்பு செய்தியை யெகோவா அறிவிக்கிறார். மீண்டும் செல்வ செழிப்பான நாடாகிற தீவுப்பட்டணத்தைக் குறித்து சகரியா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.” (சகரியா 9:4) பொ.ச.மு. 332, ஜூலை மாதத்தில், செருக்கு மிகுந்த அந்த கடல் சீமாட்டியை மகா அலெக்சாந்தர் அழிக்கையில் இது நிறைவேறுகிறது.

பொருளாசையையும் அகந்தையையும் தவிருங்கள்

26அகந்தையாக இருந்ததால் தீருவை யெகோவா நியாயந்தீர்த்தார். யெகோவா வெறுக்கும் குணம் இது. யெகோவா வெறுக்கும் ஏழு காரியங்களில், “இறுமாப்புள்ள பார்வை” முதலாவது சொல்லப்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 6:16-19, பொ.மொ.) பெருமை என்ற இந்த குணத்தை பிசாசாகிய சாத்தானோடு இணைத்து பவுல் பேசினார். கர்வம் மிக்க தீருவைப் பற்றி எசேக்கியேல் கொடுத்த விவரிப்பு சாத்தானுக்கு வெகுவாக பொருந்துகிறது. (எசேக்கியேல் 28:13-15; 1 தீமோத்தேயு 3:6) தீரு ஏன் பெருமையாக இருந்தது? தீருவிடம் எசேக்கியேல் சொல்கிறார்: “உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.” (எசேக்கியேல் 28:5) வர்த்தகம் செய்வதிலும் பணத்தை திரட்டுவதிலுமே அந்த நகரம் முனைப்பாய் இருந்தது. வியாபாரத்தில் வெற்றிகண்டது அதை அதிக மேட்டிமையாக்கியது. “உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன்” என்பதாக சொல்லுகிறாய் என ‘தீருவின் அதிபதிக்கு’ எசேக்கியேல் மூலமாக யெகோவா சொன்னார்.​—எசேக்கியேல் 28:2.

27தேசங்கள் பெருமைக்கும், செல்வத்திற்கும் அடிமைகளாகி விடலாம். இது தனிநபருக்கும் பொருந்தும். இந்த கண்ணி எவ்வளவு தந்திரமானது என்பதை சுட்டிக்காட்ட, இயேசு ஓர் உவமையை கொடுத்தார். அமோக விளைச்சலை தந்த நிலங்களையுடைய ஓர் ஐசுவரியவானைப் பற்றி அவர் சொன்னார். அகமகிழ்ந்த அந்த ஐசுவரியவான், தன் தானியங்களை சேமிக்க பெரிய களஞ்சியங்களைக் கட்ட திட்டமிட்டான். இப்படியாக, சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கலாம் என சந்தோஷமாக இருந்தான். ஆனால், அது நடக்கவில்லை. கடவுள் அவனிடம் சொன்னார்: “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்.” ஆம், அவன் இறந்தான்; அவன் சொத்துக்களால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.​—லூக்கா 12:16-20.

28இயேசு அந்த உவமையை இப்படியாக முடிக்கிறார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” (லூக்கா 12:21) பணக்காரராயிருப்பதில் எந்த தவறும் இல்லை, நல்ல விளைச்சல் தரும் நிலங்களுக்கு சொந்தக்காரராயிருப்பதிலும் எந்த பாவமுமில்லை. ஆனால், இவற்றையே வாழ்க்கையில் முக்கிய காரியங்களாக்கியதே அந்த மனிதனின் தவறு. அவன் செல்வங்கள் மீதே தன் நம்பிக்கையை வைத்தான். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கையில், யெகோவா தேவனை அவன் சிறிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

29இதே கருத்தை யாக்கோபும் வலியுறுத்தினார். அவர் சொன்னார்: “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்ல வேண்டும்.” (யாக்கோபு 4:13-15) செல்வத்திற்கும் அகந்தைக்கும் உள்ள தொடர்பை விளக்கி, யாக்கோபு மேலும் தொடர்ந்து சொல்கிறார்: “இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது.”​—யாக்கோபு 4:16, பொ.மொ.

30வியாபாரத்தில் ஈடுபடுவது பாவமல்ல. ஆனால், செல்வத்தினால் உண்டாகும் பெருமை, அகங்காரம், அளவுக்குமீறிய தன்னம்பிக்கை ஆகிய இவையே பாவம். எனவேதான், பூர்வ பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.” வறுமை வாழ்க்கையை எட்டிப்போல் கசப்பாக்கிவிடும். ஆனால், அதே சமயம் ஐசுவரியமோ, “தேவனை மறுதலித்து, ‘யெகோவா யார்?’ என கேட்கும்படி” ஒருவரை வழிநடத்தக்கூடும்.​—நீதிமொழிகள் 30:8, 9, NW.

31பேராசைக்கும் தன்னலத்திற்கும் இன்று அநேகர் அடிமைகளாகி இருக்கின்றனர். இப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழ்கிறோம். இன்றைய வணிக உலகில், பணத்திற்கும் செல்வத்திற்கும்தான் அதிக மதிப்பு. எனவே, வர்த்தக நகரமாகிய தீரு எந்த படுகுழியில் வீழ்ந்ததோ அதே படுகுழியில் வீழ்ந்துவிடாதிருக்க ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னைத்தானே சோதித்தறிய பின்வரும் கேள்விகளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஐசுவரியத்திற்கு அடிமையாகி, பொருள் ஈட்டுவதிலேயே என் நேரம், சக்தி அனைத்தையும் செலவழிக்கிறேனா? (மத்தேயு 6:24) என்னைவிட அதிகமாக அல்லது விலையுயர்ந்த உடைமைகளை வைத்திருப்பவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேனா? (கலாத்தியர் 5:26) நான் செல்வந்தனாயிருப்பதால், மற்றவர்களைவிட எனக்கு அதிக மரியாதையும் பொறுப்புகளும் தரவேண்டும் என கர்வமாக எதிர்பார்க்கிறேனா? (யாக்கோபு 2:1-9-ஐ ஒப்பிடுக.) இல்லையென்றால், எந்த வழியிலாவது பொருள் சேர்த்து, ‘ஐசுவரியவானாக விரும்புகிறேனா?’ (1 தீமோத்தேயு 6:9) வியாபார விஷயங்களிலேயே மூழ்கி, கடவுளுடைய சேவைக்கு என் வாழ்க்கையில் சிறிது இடமே ஒதுக்குகிறேனா? (2 தீமோத்தேயு 2:4) பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்து, வியாபார விஷயங்களில் கிறிஸ்தவ நியமங்களை அசட்டை செய்கிறேனா?​—1 தீமோத்தேயு 6:10.

32நம் பொருளாதார சூழ்நிலை எதுவாயிருந்தாலும்சரி, கடவுளுடைய ராஜ்யத்தை நம் வாழ்க்கையில் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளை நாம் எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15) இந்த உலகின் பொருளாதார அமைப்பு, நம் வாழ்க்கைக்கு தேவையே. (2 தெசலோனிக்கேயர் 3:10) எனவே, இந்த ‘உலக செல்வத்தை பயன்படுத்துகிறோம்.’ இருந்தாலும், அதில் “முழுமையாக” ஈடுபடுவதில்லை. (1 கொரிந்தியர் 7:31, பொ.மொ.) உலகத்தின்மீது, அதாவது பொருள்மீது மிதமிஞ்சிய ஆசை வைத்தால், நமக்கு யெகோவாவில் அன்பில்லை என்பதையே காட்டுகிறது. ‘மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை’ ஆகிய இவற்றையே நாடுவது, கடவுளுடைய சித்தத்தை செய்வோருக்கு பொருத்தமற்ற காரியம். d கடவுளுடைய சித்தத்தை செய்வதே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.​—1 யோவான் 2:16, 17.

33எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் ஈட்டுவதையே பெரிதாக நினைக்கும் படுகுழியில் தீரு வீழ்ந்தது. பொருள் சம்பந்தமாக தீரு வெற்றிகண்டதென்னவோ உண்மைதான். ஆனால், அதன் அகந்தை மட்டுக்குமீறிச் சென்றது; அதனால் அது தண்டிக்கப்பட்டது. இன்றிருக்கும் தேசங்களுக்கும் தனிநபர் அனைவருக்குமே அதன் உதாரணம் எச்சரிக்கையாக இருக்கிறது. ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதியை பின்பற்றுவது எவ்வளவு சிறந்தது! “இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை” வைக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.​—1 தீமோத்தேயு 6:17.

[அடிக்குறிப்புகள்]

a மேற்கு மத்தியதரைக் கடலில் உள்ள சார்டீனியா என்ற தீவைத்தான் தர்ஷீஸ் என சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், சார்டீனியாவும் தீருவிலிருந்து அதிக தொலைவில் இருந்தது.

b இந்தப் புத்தகத்தில், அதிகாரம் 15, பக்கங்கள் 200-207-ஐக் காண்க.

c இன்னொரு வார்த்தையில் சொன்னால், “தர்ஷீஸின் குமாரத்தி” என்பது தர்ஷீஸின் குடிகளையே குறித்திருக்கலாம். “எல்லா திசைகளிலும் பாய்ந்தோடும் நைல் நதியைப்போலவே, தர்ஷீஸின் குடிகளும் இப்போது இன்னும் அதிக இடங்களுக்கு பயணம் செய்து, வர்த்தகம் செய்யலாம்” என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. என்றாலும், தீருவின் அழிவால் ஏற்படும் படுபயங்கரமான விளைவுகளே இங்கு வலியுறுத்தப்படுகின்றன.

d அலஸோனையா என்ற கிரேக்க பதத்தின் மொழிபெயர்ப்பே ‘ஜீவனத்தின் பெருமை’ என்பது. “உலக காரியங்கள் நிலையானவை என நம்பும் கடவுள் பக்தியற்ற, வீணான எண்ணம்” என இது விளக்கப்படுகிறது.​—⁠த நியூ தேயர்ஸ் கிரீக்-இங்லீஷ் லெக்ஸிகன்.

[கேள்விகள்]

1, 2. (அ) பூர்வ தீரு எப்படிப்பட்ட நகரம்? (ஆ) தீருவுக்கு என்ன நேரிடும் என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார்?

3, 4. (அ) தர்ஷீஸ் எங்கே இருந்தது, தீருவிற்கும் தர்ஷீஸிற்கும் என்ன தொடர்பு இருந்தது? (ஆ) தர்ஷீஸோடு வணிகம் செய்த மாலுமிகள் ஏன் புலம்பி ‘அலறுவர்’?

5. தர்ஷீஸிலிருந்து வரும் மாலுமிகள் தீருவின் வீழ்ச்சியைக் குறித்து எங்கே அறிய வருவர்?

6. தீருவுக்கும் சீதோனுக்கும் இடையேயான தொடர்பை விளக்கவும்.

7. சீதோனிய வர்த்தகர்கள் செல்வத்தை எப்படி விருத்தி செய்கின்றனர்?

8. தீருவின் அழிவு, சீதோனின்மேல் என்ன விளைவுகளை கொண்டு வரும்?

9. தீருவின் அழிவிற்குப் பிறகு ஜனங்களின் துயரத்தை, பரபரப்பும் திகிலுமூட்டிய வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கு ஒப்பிடலாம்?

10-12. தீருவின் செல்வத்தையும் பழமையையும் அதன் செல்வாக்கையும் விளக்குங்கள்.

13. தீருவுக்கு எதிராக நியாயத்தீர்ப்பின் செய்தியை யார் கொடுக்க முடியும் என்ற கேள்வி ஏன் எழும்புகிறது?

14. தீருவின் நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிப்பது யார், ஏன்?

15. நேபுகாத்நேச்சார் எருசலேமை அழிக்கும்போது தீரு என்ன செய்யும்?

16, 17. தீரு நகரம் வீழ்ச்சியடையும்போது, அதன் குடிகளுக்கு என்ன நேரிடும்? (அடிக்குறிப்பைக் காண்க.)

18. “கன்னியாகிய சீதோன் குமாரத்தி” என ஏன் தீரு அழைக்கப்படுகிறது, அதன் நிலை எப்படி மாறும்?

19, 20. தீருவை வெல்லப்போவது யார் என தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது, அந்த தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுகிறது?

21. எந்த விதத்தில் தீரு “மறக்கப்பட்டிருக்கும்,” எவ்வளவு காலத்திற்கு?

22, 23. பாபிலோனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும்போது தீரு எப்படி ஆகும்?

24, 25. (அ) தீருவின் வருவாய் எப்படி யெகோவாவுக்கு பரிசுத்தமாக்கப்படுகிறது? (ஆ) கடவுளுடைய மக்களுக்கு தீரு உதவுகிறபோதிலும், அதைக் குறித்து என்ன தீர்க்கதரிசனத்தை யெகோவா அறிவிக்கிறார்?

26. கடவுள் ஏன் தீருவை நியாயந்தீர்த்தார்?

27, 28. எந்த படுகுழியில் மனிதன் விழ வாய்ப்பிருக்கிறது, இதை இயேசு எவ்வாறு விளக்கினார்?

29, 30. அளவுக்குமீறிய தன்னம்பிக்கை குறித்து யாக்கோபு எப்படி எச்சரித்தார்?

31. ஒரு கிறிஸ்தவன் தன்னைத்தானே என்ன கேள்விகள் கேட்டுக்கொள்ளலாம்?

32. யோவான் என்ன எச்சரிக்கையை கொடுத்தார், அதை நாம் எவ்வாறு பொருத்தலாம்?

33. தீருவை சிக்க வைத்த படுகுழியை கிறிஸ்தவர்கள் எப்படி தவிர்க்கலாம்?

[பக்கம் 256-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஐரோப்பா

ஆசியா

ஸ்பெயின்

சார்டீனியா

மத்தியதரைக் கடல்

சைப்ரஸ்

சீதோன்

தீரு

எகிப்து

ஆப்பிரிக்கா

(தர்ஷீஸ் இருந்த இடம்)

[பக்கம் 250-ன் படம்]

அசீரியாவுக்கல்ல, பாபிலோனுக்கே தீரு அடிமையாகும்

[பக்கம் 256-ன் படம்]

தீருவின் முக்கிய கடவுளாகிய மெல்கார்ட்டின் உருவம் பொறித்த நாணயம்

[பக்கம் 256-ன் படம்]

பெனிக்கே நாட்டு கப்பலின் மாதிரி