Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேசங்கள்மீது யெகோவா தம் கோபத்தை ஊற்றுகிறார்

தேசங்கள்மீது யெகோவா தம் கோபத்தை ஊற்றுகிறார்

அதிகாரம் இருபத்து ஏழு

தேசங்கள்மீது யெகோவா தம் கோபத்தை ஊற்றுகிறார்

ஏசாயா 34:1-17

விசுவாசமுள்ள தம் ஊழியர்களிடத்தில் மட்டுமல்ல, தம் எதிரிகளிடத்திலும் யெகோவா தேவன் பொறுமையை காண்பிக்கிறார். அவருடைய நோக்கத்திற்கிசைவாக இருக்கும்போது அவ்வாறு செய்கிறார். (1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 3:15) யெகோவாவின் எதிரிகள் அவருடைய பொறுமையை ஒருவேளை போற்றாமல் இருக்கலாம். உடனடியாக செயல்பட அவருக்கு சக்தியில்லை என்றோ அல்லது இஷ்டமில்லை என்றோ நினைக்கலாம். என்றபோதிலும், ஏசாயா 34-⁠ம் அதிகாரம் காட்டுகிறபடி, முடிவில் யெகோவா தம் எதிரிகளிடம் கணக்குக் கேட்பார். (செப்பனியா 3:8) எந்தவித தடையுமின்றி ஏதோமும் மற்ற தேசங்களும் தம் மக்களை எதிர்க்க யெகோவா சிறிது காலம் அனுமதித்தார். ஆனால், அதற்கான தண்டனையை நிறைவேற்ற யெகோவா குறித்த காலத்தை நிர்ணயித்திருந்தார். (உபாகமம் 32:35) அதுபோலவே, உரிய காலத்தில், தம் அரசுரிமையை மதிக்காமல் எதிர்க்கும் இந்த ஒழுங்குமுறையின் எல்லா அமைப்புகளையும் யெகோவா நிச்சயம் பழிவாங்குவார்.

2கடவுள் பழிவாங்குவதன் முக்கிய நோக்கம் என்ன? தம் அரசுரிமையை நிரூபிக்கவும் தம் பெயரை மகிமைப்படுத்தவுமே. (சங்கீதம் 83:13-18) அதுமட்டுமல்ல, அவரது உண்மையான பிரதிநிதிகள், அவருடைய ஊழியர்களே என்பதையும் அது நிலைநாட்டுகிறது. அதோடு, சாதகமற்ற எந்த சூழ்நிலைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறது. மேலும், யெகோவாவின் பழிவாங்குதல் எப்போதுமே அவருடைய நியாயத்திற்கு இசைவாக இருக்கிறது.​—சங்கீதம் 58:10, 11.

தேசங்களே, செவிகொடுங்கள்

3ஏதோமுக்கு எதிராக தம்முடைய பழிவாங்குதலை அறிவிப்பதற்கு முன், ஏசாயா மூலமாக ஓர் அழைப்பை எல்லா தேசங்களுக்கும் யெகோவா கொடுக்கிறார்: “தேசங்களே, நெருங்கி வந்து கேளுங்கள்; தேசத்துப் பிரிவுகளே, செவிகொடுங்கள்; பூமியும் அதில் வாழும் யாவும், வையகமும் அதில் தோன்றும் யாவும் கேட்கட்டும்.” (ஏசாயா 34:1, NW) தேவபக்தியற்ற தேசங்களுக்கு எதிராக தீர்க்கதரிசி மறுபடியும் மறுபடியும் எச்சரிக்கைகளை கொடுக்கிறார். இப்போது, அந்த தேசங்களுக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகளை சுருக்கமாக அறிவிக்கப் போகிறார். இந்த எச்சரிக்கைகளுக்கு நம் நாளில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

4இந்த எச்சரிக்கைகளுக்கு நம் நாளில் அர்த்தம் இருக்கிறது. சர்வலோகப் பேரரசருக்கு, கடவுள் பக்தியற்ற இந்த ஒழுங்குமுறையின் எல்லா அமைப்புகளோடும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு விவாதம் இருக்கிறது. அதனால்தான், யெகோவா அறிவிக்கும் பைபிள் செய்தியைக் கேட்க ‘தேசத்து பிரிவுகளுக்கும்,’ ‘பூமிக்கும்’ அழைப்பு விடுக்கப்படுகிறது. பூமி முழுவதிலுமுள்ள தேசங்கள் அனைத்தும் இந்த செய்தியை கேட்கும். இது, சங்கீதம் 24:1-⁠ல் உள்ள வார்த்தைகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. இந்த தீர்க்கதரிசனம் நம் நாட்களில் நிறைவேற்றம் அடைந்து வருகிறது. “பூமியின் கடைசிபரியந்தமும்” யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்து வருகின்றனர். (அப்போஸ்தலர் 1:8) என்றாலும், தேசங்கள் இந்த செய்தியை செவிகொடுத்து கேட்பதில்லை. அவற்றிற்கு வரப்போகிற அழிவைக் குறித்து சொல்லப்படும் எச்சரிக்கையை அசட்டை செய்கின்றன. ஆனால் யெகோவா, தம் வார்த்தையை நிறைவேற்றுவதிலிருந்து இது எந்தவிதத்திலும் தடை செய்யப்போவதில்லை.

5கடவுள் பக்தியற்ற தேசங்களுக்கு வரவிருக்கும் ஓர் இருண்ட எதிர்காலத்தைப் பற்றி இப்போது தீர்க்கதரிசனம் விவரிக்கிறது. ஆனால், கடவுளுடைய மக்களின் பிரகாசமான எதிர்கால நம்பிக்கையைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் விவரித்துள்ளதற்கு இது முற்றிலும் முரணாக இருக்கிறது. (ஏசாயா 35:1-10) தீர்க்கதரிசி சொல்கிறார்: “சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடும்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர்களிலே கொலை செய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டு கிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்.”​—ஏசாயா 34:2, 3.

6அடுத்ததாக, தேசங்களின் இரத்தப்பழிக்கு கவனம் திருப்பப்படுகிறது. எல்லா நாடுகளையும்விட கிறிஸ்தவமண்டல நாடுகள் இன்று அளவுக்கதிகமாக இரத்தம் சிந்தியிருக்கின்றன. இரண்டு உலக யுத்தங்களாலும் மற்றும் பல சிறுசிறு கலவரங்களாலும் இந்த பூமியை மனித இரத்தத்தால் அவர்கள் நனைத்திருக்கிறார்கள். இந்த எல்லா இரத்தப்பழிக்கும் கணக்கு கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? ஜீவனுக்கெல்லாம் ஊற்றுமூலராகிய படைப்பாளரைத் தவிர வேறு யார் இதைக் கேட்க முடியும்! (சங்கீதம் 36:9) இதற்கான நியதியை யெகோவாவின் நியாயப்பிரமாணச் சட்டம் வகுத்திருக்கிறது: “ஜீவனுக்கு ஜீவன் . . . கொடுக்க வேண்டும்.” (யாத்திராகமம் 21:23-25; ஆதியாகமம் 9:4-6) இந்த சட்டத்திற்கு இசைவாக, இரத்தப்பழி நிறைந்த தேசங்களின் இரத்தம் பெருகி ஓடும்படி கடவுள் செய்வார். அதாவது அவர்களை அழிப்பார். அவர்களுடைய பிரேதங்கள் அடக்கம் பண்ணப்படமாட்டா. அவற்றிலிருந்து வரும் துர்நாற்றம் காற்றையே அசுத்தமாக்கும். எவ்வளவு வெட்கக்கேடான மரணம்! (எரேமியா 25:33) பழிவாங்கும் நாளில் மலைகளையே உருக்குமளவுக்கு அல்லது கரைக்குமளவுக்கு இரத்தம் பெருக்கெடுத்து ஓடும். (செப்பனியா 1:17) ராணுவ தளவாடங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தங்கள் அரசாங்கங்கள் அனைத்தும் மடமடவென சரிந்து வீழ்வதை உலக நாடுகள் காணும். பைபிள் தீர்க்கதரிசனங்களில் இந்த அரசாங்கங்கள் சில சமயம் மலைகளாக உருவகப்படுத்திப் பேசப்படுகின்றன.​—தானியேல் 2:35, 44, 45; வெளிப்படுத்துதல் 17:⁠9.

7மறுபடியும் அடையாள அர்த்தத்தில், ஏசாயா தொடர்ந்து கூறுகிறார்: “வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச் செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.” (ஏசாயா 34:4) “வானத்தின் சர்வ சேனையும்” என்ற பதம், சொல்லர்த்தமான நட்சத்திரங்களையோ, கோள்களையோ குறிப்பதில்லை. ‘வானங்களில்’ நியாயத்தீர்ப்பின் பட்டயம் இரத்தத்தில் நனைந்திருப்பதாக வசனங்கள் 5, 6 சொல்கின்றன. எனவே, இது மனிதகுலத்தின் அமைப்புகளில் ஏதோவொன்றை குறிக்கும் அடையாளமாகத்தான் இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 15:50) மனித சமுதாயத்தை ஆளும் அரசாங்கங்கள் வானங்களுக்கு ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன. உயர்வாக, மேட்டிமையாக இருப்பதால் இந்த மேலான அதிகாரங்கள் வானங்கள் என சொல்லப்படுகின்றன. (ரோமர் 13:1-4) எனவே, “வானத்தின் சர்வ சேனை” என்பது மனித அரசாங்கங்கள் அனைத்தையும் குறிக்கின்றன.

8இந்த ‘சேனை,’ அழிந்துபோகும் ஒரு பொருளைப்போல ‘கரைந்துபோகும்.’ வேறு வார்த்தையில் சொன்னால் கந்தலாகி, கிழிந்துபோகும். (சங்கீதம் 102:26; ஏசாயா 51:6) வெறும் கண்களால் பார்த்தால், நமக்கு மேலே இருக்கும் வானம் வளைந்த, பழங்கால புஸ்தகச்சுருள் போல் தோற்றமளிக்கிறது. சுருளில், பெரும்பாலும் அதன் உட்பக்கத்தில்தான் எழுத்துக்கள் இருக்கும். அந்த எழுத்துக்களை ஒருவர் வாசித்து முடித்ததும், அந்தச் சுருளை சுருட்டி வைத்துவிடுவார். அதுபோலவே, மனித அரசாங்கங்களாகிய ‘வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்படும்.’ அதாவது, அவை அனைத்தும் அழிக்கப்படும். இந்த அரசாங்கங்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கை சரிதையின் கடைசி பக்கத்திற்கு வந்துவிட்டன; எனவே, அவை அர்மகெதோனில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மலைபோல கம்பீரமாக காட்சியளிக்கும் அவற்றின் ‘சேனைகள்,’ திராட்சச் செடியின் இலைகள் உதிருகிறதுபோல அல்லது “அத்திமரத்தின் காய்கள்” உதிருகிறதுபோல வீழ்ச்சியடையும். அவற்றின் காலக்கெடு முடிந்து விட்டிருக்கும்.​—வெளிப்படுத்துதல் 6:12-14-ஐ ஒப்பிடவும்.

பதிலளிக்கும் நாள்

9ஏசாயாவின் நாட்களில் இருந்த ஒரு தேசமாகிய ஏதோமைக் குறித்து தீர்க்கதரிசனம் தனியாக சொல்லப்படுகிறது. அப்பத்துக்காகவும் பயற்றங்கூழுக்காகவும் தலைமகன் பிறப்புரிமையை தன் தம்பி யாக்கோபுக்கு விற்றுப்போட்ட ஏசாவின் (ஏதோமின்) வம்சத்தாரே ஏதோமியர்கள். (ஆதியாகமம் 25:24-34) தலைச்சன் பிள்ளை உரிமையை எடுத்துக்கொண்ட யாக்கோபை ஏசா பகைத்தான். இரட்டை சகோதரர்களின் வம்சத்தாராக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்தாரும் ஏதோம் தேசத்தாரும் எதிரிகளானார்கள். கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராக ஏதோம் காட்டிய பகையால், அது யெகோவாவின் கோபாக்கினைக்கு ஆளாகியது. எனவேதான், யெகோவா சொல்கிறார்: “வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும். போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும் [“பலி,” பொ.மொ.] ஏதோம் தேசத்திலே மகா சங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் [சிறுநீரகக்] கொழுப்பினாலும் திருப்தியாகும்.”​—ஏசாயா 34:5, 6.

10ஏதோம், உயர்வான மலைப்பகுதியில் இருக்கிறது. (எரேமியா 49:16; ஒபதியா 8, 9, 19, 21) என்றாலும், யெகோவா தம் நியாயத்தீர்ப்பின் பட்டயத்தை ‘வானங்களில்’ செயல்படுத்துகையில், இந்த எல்லா இயற்கை அரண்களாலும் எந்தவிதப் பிரயோஜனமும் இருக்காது. மிகவும் மேட்டிமையான நிலையில் இருக்கும் ஏதோமின் ஆட்சியாளர்கள் கீழே தள்ளப்படுவார்கள். பலத்த ராணுவப் பாதுகாப்பு உடைய பட்டணமாய் ஏதோம் இருக்கிறது. வலிமை வாய்ந்த அதன் படைகள், உயரமான மலைகள் நிறைந்த எல்லைப்பகுதிகளை அயராது காத்துவருகின்றன. இவ்வளவு பலம் வாய்ந்த நாடாக இருக்கையிலும், பாபிலோனின் படைகள் யூதாவை தாக்கும்போது ஏதோம் எந்த உதவியும் செய்வதில்லை. அதற்கு மாறாக, யூதா ராஜ்யம் கவிழ்வதைப் பார்த்து, ஏதோம் கைகொட்டிச் சிரிக்கிறது. அதுமட்டுமா, அழித்துப்போடுங்கள், தரைமட்டமாக்குங்கள் என எதிரிகளைத் தூண்டிவிடுகிறது. (சங்கீதம் 137:7) தலை தப்பினால் போதும் என உயிருக்காக ஓடும் யூதர்களை துரத்திப் பிடித்து, பாபிலோனியர்களிடம் ஒப்படைக்கிறது. (ஒபதியா 11-14) கைவிடப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை அபகரித்துக்கொள்ள ஏதோம் திட்டமிடுகிறது. மேலும், யெகோவாவுக்கு எதிராக பெருமையாக பேசுகிறது.​—எசேக்கியேல் 35:10-15.

11சகோதர பாசமில்லாமல் ஏதோமியர் நடந்துகொள்கின்றனர். இதை யெகோவா கண்டுங்காணாமல் விட்டுவிடுவாரா? இல்லை. மாறாக, ஏதோமைக் குறித்து அவர் முன்னறிவிக்கிறார்: “அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்; எருதுகளுடன் காளைகளும் மடியும், அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்; தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.” (ஏசாயா 34:7, பொ.மொ.) தேசத்திலுள்ள வலிமை மிக்கவர்களையும் வலிமையற்றவர்களையும் காட்டெருதுகள் மற்றும் காளைகள் எனவும் இளம் ஆட்டுக்கடாக்கள் மற்றும் வெள்ளாட்டுக்கடாக்கள் எனவும் யெகோவா அடையாள மொழியில் குறிப்பிடுகிறார். யெகோவா தம் நியாயத்தீர்ப்பின் ‘பட்டயத்தை’ செயல்படுத்துகையில், இரத்தப்பழி நிறைந்த இந்த தேசங்கள் அனைத்தும் அவற்றின் மக்களுடைய இரத்தத்தாலேயே நனைக்கப்படும்.

12சீயோன் என்றழைக்கப்படும், கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பிற்கு ஏதோம் நிறைய தீங்கிழைத்து வருகிறது. அதற்காக கடவுள் அதை தண்டிக்க நோக்கம் கொண்டிருக்கிறார். தீர்க்கதரிசனம் சொல்கிறது: “அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.” (ஏசாயா 34:8) பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமின் அழிவுக்குப் பின் சிறிது காலத்திலேயே, யெகோவா தம் நீதியின் பழிவாங்குதலை ஏதோமின்மேல் நிறைவேற்ற ஆரம்பிக்கிறார். இதை பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் மூலமாக நிறைவேற்றுகிறார். (எரேமியா 25:15-17, 21) பாபிலோனியப் படைகள் ஏதோமுக்கு எதிராக செல்கையில், ஏதோமியர்களை எதுவுமே காப்பாற்ற முடியாது! அந்த மலைப்பாங்கான தேசம் ‘பதிலளிக்க வேண்டிய வருஷம்’ அது. தீர்க்கதரிசி ஒபதியா மூலம் யெகோவா முன்னறிவிக்கிறார்: “நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போவாய். . . . நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.”​—ஒபதியா 10, 15; எசேக்கியேல் 25:12-14.

கிறிஸ்தவமண்டலத்தின் இருண்ட எதிர்காலம்

13நவீன காலங்களில், ஏதோமைப் போலவே நடந்துகொள்ளும் ஓர் அமைப்பு இருக்கிறது. எந்த அமைப்பு? நவீன கால யெகோவாவின் ஊழியர்களை வசை பாடுவதிலும் துன்புறுத்துவதிலும் முதலில் நிற்பது யார்? கிறிஸ்தவமண்டலமும் அதன் குருமார்களும் அல்லவா? ஆம்! இந்த உலக விவகாரங்களில் மலைபோல் கம்பீரமாக தன்னை கிறிஸ்தவமண்டலம் உயர்த்தியுள்ளது. மனிதகுலத்தின் அமைப்புகளில் மேட்டிமையான இடத்தை அது பிடித்திருக்கிறது. அதன் மதங்கள், மகா பாபிலோனில் முக்கிய பாகம் வகிக்கின்றன. ஆனால், இந்த நவீன கால ஏதோமுக்கு எதிராக “பதிலளிக்கும் வருஷம்” ஒன்றை யெகோவா குறித்திருக்கிறார். ஏன்? ஏனென்றால், அவருடைய மக்களை, அதாவது அவரது சாட்சிகளை அளவுக்கு மீறி அது வதைத்திருக்கிறது.

14எனவே, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியில் மீதமுள்ள வசனங்களை சிந்திக்கையில், அந்த வார்த்தைகள் பூர்வ ஏதோமுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவமண்டலத்திற்கும் பொருந்தும் என்பது தெளிவாகிறது. “அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம். இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்.” (ஏசாயா 34:9, 10அ) ஏதோம் தேசம் ஈரப்பதமின்றி அவ்வளவு காய்ந்து வறண்டு கிடப்பதால், அதன் புழுதி கந்தகமாக மாறியிருக்கிறது; அதன் பெருக்கெடுத்து ஓடும் பள்ளத்தாக்கு நீரோடைகள் தண்ணீரால் அல்ல, நிலக்கீலால் நிரம்பி இருக்கிறது. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் இந்தப் பொருட்கள் கடைசியில் தீக்கே இரையாக்கப்படுகின்றன!​—வெளிப்படுத்துதல் 17:⁠16-ஐ ஒப்பிடுக.

15நெருப்பு, நிலக்கீல், கந்தகம் ஆகியவற்றைக் குறித்து சொல்லப்படுவதால், வாதனை மிகுந்த எரிநரகம் இருப்பதற்கு இது ஓர் அத்தாட்சி என சிலர் கருதுகின்றனர். ஆனால், எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு நரகத்தில் ஏதோம் தள்ளப்படவில்லை. மாறாக, அது அழிக்கப்பட்டு விடுகிறது. நெருப்பாலும் கந்தகத்தாலும் எரிக்கப்பட்டு விடுகிறது. உலக சரித்திரத்திலேயே இனி ஒருபோதும் இல்லாதபடிக்கு முற்றிலுமாக மறைந்து போகிறது. அதன் முடிவைப் பற்றி தீர்க்கதரிசனம் விவரிப்பது, நித்திய வாதனையை அல்ல; ஆனால், ‘வெட்டவெளியையும் . . . வெறுமையையும் . . . சூனியத்தையுமே’ குறிக்கிறது. (ஏசாயா 34:11, 12) அதன் “புகை என்றென்றைக்கும் எழும்பும்” என்பது இதை மிக தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு வீடு எரிந்து, நெருப்பு அவிந்த பிறகும், சிறிது நேரத்திற்கு அதன் சாம்பலிலிருந்து புகை வந்துகொண்டே இருக்கும். அந்த வழியே போகிறவர்கள் அனைவருக்கும் ஏதோ பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்பதை அது பறை சாற்றும். அதுபோலவே, ஏதோமின் அழிவிலிருந்து இன்றும் கிறிஸ்தவர்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொள்வதால் அதிலிருந்து இன்னும் புகை வந்துகொண்டிருக்கிறது அல்லது புகை எழும்பிக்கொண்டிருக்கிறது.

16ஏதோமை மக்கள் நிரப்புவதற்கு பதிலாக காட்டு மிருகங்கள் நிரப்பும். அதாவது, ஏதோம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனம் தொடர்ந்து முன்னறிவிக்கிறது. ‘தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை. நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார். ராஜ்யபாரம்பண்ண அதின்மேல் மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள். அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும். அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும். அங்கே, வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரிக்கும்.’​—ஏசாயா 34:10ஆ-15. a

17ஏதோம் வெறுமையாக்கப்படும். காட்டு மிருகங்களும், பறவைகளும், பாம்புகளும் குடியிருக்கும் பாழான தேசமாகும். வசனம் 10 குறிப்பிடுவது போல, வறட்சியான இந்த நிலை ‘சதாகாலம் சதாகாலமாக’ தொடரும். அது மறுபடியும் பழைய நிலைக்கு வரவே வராது.​—ஒபதியா 18.

யெகோவாவின் வார்த்தை நிச்சயம் நிறைவேறும்

18நவீன நாளைய ஏதோமாகிய கிறிஸ்தவமண்டலத்திற்கு எவ்வளவு நம்பிக்கையற்ற எதிர்காலத்தை இது சுட்டிக்காட்டுகிறது! யெகோவா தேவனின் மாபெரும் எதிரியாக அது தன்னை நிரூபித்திருக்கிறது. அவருடைய சாட்சிகளை படுமோசமாக துன்புறுத்தி வருகிறது. யெகோவா தம் வார்த்தையை நிச்சயம் நிறைவேற்றுவார். எந்த சமயத்திலுமே, தீர்க்கதரிசனத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் யாராவது ஒப்பிட்டு பார்த்தால், இரண்டும் நூற்றுக்கு நூறு ஒத்திருப்பதை தெரிந்துகொள்வர். பாழாக்கிவிடப்பட்ட ஏதோம் தேசத்தில் குடியிருக்கும் மிருகங்களும் பறவைகளும் தங்கள்தங்கள் ‘ஜோடியோடு’ சேருவது எந்தளவு உறுதியோ, தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமும் அந்தளவு உறுதியாக இருக்கும். பைபிள் தீர்க்கதரிசனத்தை எதிர்காலத்தில் படிக்கப்போகும் மாணாக்கர்களுக்கு ஏசாயா எழுதுவதாவது: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். அவரே அவைகளுக்குச் சீட்டுப் போட்டார். அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.”​—ஏசாயா 34:16, 17.

19கிறிஸ்தவமண்டலத்திற்கு வெகு சீக்கிரத்தில் வரப் போகிற அழிவைக் குறித்து ‘யெகோவாவுடைய புஸ்தகம்’ முன்னறிவித்திருக்கிறது. எதற்கும் இணங்கிவராத, ஒத்துப்போகாத தம் எதிரிகளையும் தம் மக்களை எதிர்க்கும் மனந்திரும்பாத பொல்லாதவர்களையும் யெகோவா எப்படி நியாயந்தீர்க்கப் போகிறார் என்ற விவரங்களை இந்த ‘யெகோவாவின் புஸ்தகம்’ அளிக்கிறது. பூர்வ ஏதோமைக் குறித்து சொன்ன அனைத்தும் நிறைவேறியது. அதுபோலவே, அந்த ஏதோமுக்கு இணையான நவீன நாளைய கிறிஸ்தவமண்டலத்தைக் குறித்து சொல்லப்பட்ட அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம் நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது. ஆவிக்குரிய விதத்தில் மரித்த நிலையில் இருக்கும் இந்த அமைப்பு நிச்சயம் பாழான, வெறுமையான தேசமாகும் என்பதை ‘அளவுநூல்,’ அதாவது யெகோவாவின் நீதி உறுதி செய்கிறது.

20தன் அரசியல் கூட்டாளிகளை பிரியப்படுத்த தன்னால் முடிந்த எல்லாவற்றையும் கிறிஸ்தவமண்டலம் செய்கிறது. ஆனால், அதனால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை! வெளிப்படுத்துதல் 17, 18-⁠ம் அதிகாரங்களின்படி, கிறிஸ்தவமண்டலம் உட்பட, மகா பாபிலோனுக்கு எதிராக அதன் அரசியல் கூட்டாளிகள் எழும்பும்படியான யோசனையை அவர்களின் இருதயத்திலே சர்வ வல்ல தேவனாகிய யெகோவா கொடுப்பார். உலகம் முழுவதிலும் இருக்கும் போலி கிறிஸ்தவத்தை துடைத்தழிக்க இது உதவும். ஏசாயா 34-⁠ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற இருண்ட எதிர்காலம்தான் கிறிஸ்தவமண்டலத்திற்கு காத்திருக்கிறது. ‘சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தின்போது’ கிறிஸ்தவமண்டலம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்! (வெளிப்படுத்துதல் 16:14) பூர்வ ஏதோமைப்போல, கிறிஸ்தவ மண்டலம் பூமியிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். ‘என்றென்றைக்குமாக’ அழிக்கப்பட்டு விடும்.

[அடிக்குறிப்பு]

a மல்கியாவின் நாட்களின்போது, இந்த தீர்க்கதரிசனம் ஏற்கெனவே நிறைவேற்றம் அடைந்திருந்தது. (மல்கியா 1:⁠3) பாழாக்கிவிடப்பட்ட தங்கள் தேசத்தை மறுபடியும் சுதந்தரிக்கலாம் என ஏதோமியர் நம்பிக்கொண்டிருந்ததாக மல்கியா குறிப்பிடுகிறார். (மல்கியா 1:⁠4) எனினும், யெகோவாவின் சித்தம் அதுவல்ல. ஏதோமியர்களின் தேசமாக இருந்த பகுதியைப் பின்னர் நபட்டீயர்கள் என்ற மற்றொரு ஜனம் ஆக்கிரமித்தது.

[கேள்விகள்]

1, 2. (அ) யெகோவாவின் பழிவாங்குதலில் எதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்? (ஆ) பழிவாங்குவதன்மூலம் கடவுள் எதை நிறைவேற்றுகிறார்?

3. யெகோவா என்ன அழைப்பை ஏசாயா மூலமாக தேசங்களுக்கு கொடுக்கிறார்?

4. (அ) ஏசாயா 34:1-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, தேசங்கள் என்ன செய்யும்படி அழைக்கப்படுகின்றன? (ஆ) தேசங்கள்மீது யெகோவா கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவரை ஒரு கொடூரமான கடவுளாக நிரூபிக்கின்றனவா? (பக்கம் 363-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

5, 6. (அ) தேசங்கள் எதற்காக கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்? (ஆ) “அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்” என்பது எப்படி உண்மையாகும்?

7. “வானங்கள்” என்பது என்ன, “வானத்தின் சர்வ சேனை” என்ன?

8. அடையாள அர்த்தமுள்ள வானங்கள் எப்படி “புஸ்தகச்சுருளைப் போல்” இருக்கின்றன, அவற்றின் ‘சேனைகளுக்கு’ என்ன நேரிடும்?

9. (அ) ஏதோம் தேசம் எப்படி உருவானது, இஸ்ரவேலுக்கும் ஏதோமுக்கும் இடையே என்ன உறவு இருந்தது? (ஆ) ஏதோமைக் குறித்து யெகோவா என்ன நியாயத்தீர்ப்பை சொல்கிறார்?

10. (அ) யெகோவா, தம் பட்டயத்தை ‘வானங்களில்’ செயல்படுத்துகையில், எதை அழிக்கிறார்? (ஆ) யூதாவை பாபிலோன் தாக்கியபோது, ஏதோம் என்ன மனப்பான்மையைக் காட்டுகிறது?

11. ஏதோமியரின் வஞ்சக செயலுக்கு யெகோவா எப்படி பதிலளிப்பார்?

12. (அ) ஏதோமை தண்டிக்க யெகோவா யாரை பயன்படுத்துகிறார்? (ஆ) ஏதோமைக் குறித்து ஒபதியா தீர்க்கதரிசி என்ன முன்னறிவிக்கிறார்?

13. இன்று ஏதோம் போல் இருப்பது யார், ஏன்?

14, 15. (அ) ஏதோமுக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கும் என்ன நேரிடும்? (ஆ) எரிகிற கீல், என்றென்றும் எழும்பும் புகை எதை அர்த்தப்படுத்துகின்றன, எதையல்ல?

16, 17. ஏதோம் என்னவாகும், அந்த நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

18, 19. ‘யெகோவாவுடைய புஸ்தகம்’ எது, கிறிஸ்தவமண்டலத்திற்கு என்ன நேரிடும் என்பதை இந்தப் ‘புஸ்தகம்’ தெரிவிக்கிறது?

20. பூர்வ ஏதோமைப்போல, கிறிஸ்தவமண்டலத்திற்கு என்ன நேரிடும்?

[பக்கம் 363-ன் பெட்டி]

கோபமான கடவுளா?

ஏசாயா 34:2-7 வரையுள்ள வசனங்களில் வரும் வார்த்தைகளின்படியும், எபிரெய வேதாகமம் விவரிக்கிறபடியும், யெகோவா கொடூரமான, கடுங்கோபமுள்ள கடவுள் என பலர் நினைக்கின்றனர். அது உண்மையா?

இல்லை. கடவுள் சில சமயங்களில் தம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அவருடைய கோபம் எப்போதுமே நியாயமானது. அவரது கோபம் நீதியான நியமங்களின் அடிப்படையிலானது. அது கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியின் வெளிக்காட்டல்ல. மேலும், படைப்பாளராக தனிப்பட்ட பக்தியை கேட்கும் அவரது உரிமையிலும், சத்தியத்தை நிலைநிறுத்தும் அவரது உறுதியிலுமே அது சார்ந்தது. நீதிக்கான அவருடைய அன்பும், அவருடைய நீதியை கடைப்பிடிப்பவர்களுக்காக அவர் காட்டும் அன்பும் அவரது கோபத்திற்கு காரணம். ஒரு விஷயத்தில் என்னென்ன விவாதங்கள் உட்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தையும் யெகோவா ஆராய்கிறார். எந்தவொரு சூழ்நிலையைக் குறித்தும் முழுமையாக அறிந்திருக்கிறார். அதைப் பற்றி அளவிலா அறிவுள்ளவராகவும் இருக்கிறார். (எபிரெயர் 4:13) நம் இருதயத்தில் என்ன இருக்கிறதென்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும்; தெரியாமலோ, கவனக்குறைவாலோ அல்லது வேண்டுமென்றோ செய்யும் தவறுகளை அவரால் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மேலும், அவர் பாரபட்சம் இன்றி செயல்படுகிறவர்.​—⁠உபாகமம் 10:17, 18; 1 சாமுவேல் 16:7; அப்போஸ்தலர் 10:34, 35.

எனினும், யெகோவா தேவன், “நீடிய சாந்தமும், மகா தயையும்” உடையவர். (யாத்திராகமம் 34:⁠6) அவருக்கு பயந்து, நீதியை செய்ய முயலுவோர் இரக்கத்தைப் பெறுவர். மனிதன் அபூரணமானவன் என்பதை சர்வ வல்லவர் அறிந்திருப்பதால் அவனிடம் இரக்கம் காட்டுகிறார். இயேசுவின் பலியின் அடிப்படையில் கடவுள் இதை இன்று காட்டுகிறார். (சங்கீதம் 103:13, 14) பாவங்களுக்காக மனந்திரும்பி, அவரை உண்மையாக சேவிக்கும்போது உரிய நேரத்தில் யெகோவாவின் கோபம் நீங்குகிறது. (ஏசாயா 12:⁠1) அடிப்படையில், யெகோவா கோபமுள்ள கடவுள் அல்ல, சந்தோஷமுள்ள கடவுள். அணுக முடியாத கடவுளல்ல, எளிதில் அணுகக்கூடிய கடவுள். சமாதானமானவர்; தகுந்த முறையில் அவரை அணுகும் அனைவரிடமும் சாந்தமாக இருப்பவர். (1 தீமோத்தேயு 1:11) இரக்கமற்ற, கொடூரமான தோற்றத்தையும் பண்புகளையும் உடைய பொய்க் கடவுட்களுக்கு இவர் முற்றிலும் முரணானவர்.

[பக்கம் 362-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தாண்

கலிலேயாக் கடல்

மெகிதோ

யோர்தான் நதி

கீலேயாத்திலுள்ள ராமோத்

சமாரியா

எருசலேம்

பெயெர்செபா

கிராரேசேத்

காதேஸ்பர்னேயா

பெருங்கடல்

மோவாப்

ஏதோம்

உப்புக்கடல்

தீரு

ரப்பா

அம்மோன்

லாகீஸ்

யூதா

போஸ்றா

தேமான்

பெலிஸ்தியா

இஸ்ரவேல்

சீதோன்

தமஸ்கு

லிப்னா

[பக்கம் 359-ன் படங்கள்]

கிறிஸ்தவமண்டலம் பூமியை இரத்தத்தால் நனைத்திருக்கிறது

[பக்கம் 360-ன் படம்]

‘வானங்கள் புஸ்தகச்சுருளைப் போல் சுருட்டப்படும்’