Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பாபிலோன் விழுந்தது”!

“பாபிலோன் விழுந்தது”!

அதிகாரம் பதினேழு

“பாபிலோன் விழுந்தது”!

ஏசாயா 21:1-17

மிகச் சிறப்பான, அருமையான ஒரு பாடலுக்கு பைபிளை ஒப்பிடலாம். அந்தப் பாடலில் முக்கியமான கருத்து ஒன்று இருந்தாலும், அதைச் சிறப்புப்படுத்தும் பல்வேறு உபகருத்துக்கள் இருக்கின்றன. அதுபோலவே, மேசியானிய ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் சர்வலோக அரசுரிமை நிலைநாட்டப்படுதலே பைபிளின் முக்கிய கருத்து என்றாலும், இதைச் சிறப்புப்படுத்தும் பல உபகருத்துக்கள் திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பாபிலோனின் வீழ்ச்சி.

2அந்த உபகருத்தை ஏசாயா 13, 14-⁠ம் அதிகாரங்கள் அறிமுகப்படுத்துகின்றன. 21, 44, 45 ஆகிய அதிகாரங்களில் அது மீண்டும் சொல்லப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அதே கருத்தை எரேமியா விரிவாக எடுத்துரைக்கிறார். வெளிப்படுத்துதல் புத்தகமோ அதே கருத்தை மிகச் சிறப்பாக முடிக்கிறது. (எரேமியா 51:60-64; வெளிப்படுத்துதல் 18:1–19:4) முக்கியமான இந்த உபகருத்திற்கு, பைபிளைப் படிக்கும் அனைவருமே ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில், ஏசாயா அதிகாரம் 21 மிகவும் உதவுகிறது. அந்த உலக மகா வல்லரசின் வீழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் மனதைக் கவரும் விவரங்களை அந்த அதிகாரம் கொடுக்கிறது. இதே அதிகாரம் மற்றொரு முக்கியமான கருத்தையும் வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவர்களாக இன்று எவ்வளவு விழிப்புள்ளவர்களாக இருக்கிறோம் என நம்மை நாமே எடை போட்டு பார்க்க உதவும் ஒரு கருத்தை வலியுறுத்துகிறது. இதைப் பற்றி பிறகு கலந்தாராய்வோம்.

“கொடிய தரிசனம்”

3வர இருக்கும் பேரிடரை முன்னறிவிக்கும் ஒரு குறிப்போடு ஏசாயா 21-⁠ம் அதிகாரம் துவங்குகிறது: “கடல் வனாந்தரத்திற்கு எதிரான தீர்ப்பு: தெற்கிலிருந்து சுழல்காற்று வீசுவதுபோல, வனாந்தரத்திலிருந்து, அச்சம்தரும் தேசத்திலிருந்து அழிவு வருகிறது.” (ஏசாயா 21:1, NW) பாபிலோன் நகரம், ஐப்பிராத்து நதியின் இரு கரைகளிலும் பரவி இருக்கிறது. அதன் கிழக்குப் பகுதி, ஐப்பிராத்து, டைகிரிஸ் ஆகிய இரு பெரிய நதிகளுக்கு நடுவே இருக்கிறது. இந்தப் பகுதி கடலிலிருந்து தூரமாகத்தான் இருக்கிறது. அப்படியானால், ‘கடல் வனாந்தரம்’ என அது ஏன் அழைக்கப்படுகிறது? ஏனென்றால், அந்தப் பகுதி வருடாவருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால், பரந்த, சதுப்பான ‘கடலை’ ஏற்படுத்துகிறது. என்றாலும், வெள்ளப்பெருக்கெடுக்கும் இந்த ‘வனாந்தரத்தையும்’ பாபிலோனியர்கள் வெறுமனே விட்டுவிடவில்லை. அகழிகள், மதகுகள், கால்வாய்கள் போன்றவை அமைத்து, நகரத்தின் பாதுகாப்பிற்காக புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றனர். இருந்தாலும், மனிதனின் எந்தவொரு முயற்சியும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து பாபிலோனை காப்பாற்ற முடியாது. வனாந்தரமாக இருந்த பாபிலோன், வனாந்தரமாகத்தான் மறுபடியும் ஆகும். நாசம் அந்த நகரத்தை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. தென்திசையிலுள்ள அச்சந்தரும் வனாந்தரத்திலிருந்து இஸ்ரவேல்மேல் சில சமயங்களில் கடும்சீற்றத்தோடு வீசும் சுழல்காற்றுபோல, பாபிலோனைத் தாக்க அழிவு உருவாகிக் கொண்டிருக்கிறது.​—சகரியா 9:14-ஐ ஒப்பிடுக.

4இந்தப் புத்தகத்தின் 14-வது அதிகாரத்தில் கற்றபடி, பூர்வ பாபிலோனுக்கு இணையாக நவீன காலத்திலும் ஒரு பாபிலோன் உள்ளது. இது, பொய்மத உலகப் பேரரசாகிய “மகா பாபிலோன்” ஆகும். வெளிப்படுத்துதல் புத்தகம், மகா பாபிலோனையும் ‘வனாந்தரத்திற்கும்,’ ‘தண்ணீர்களுக்கும்’ சம்பந்தப்படுத்தி பேசுகிறது. மகா பாபிலோனைப் பார்க்க, அப்போஸ்தலனாகிய யோவான் வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். ‘ஜனங்களையும் கூட்டங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும்’ குறிக்கும் ‘திரளான தண்ணீர்கள்மேல் அவள் உட்கார்ந்திருப்பதாக’ அவருக்கு சொல்லப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 17:1-3, 5, 15) பொதுமக்களின் ஆதரவால்தான் பொய்மதம் எப்போதுமே தழைத்தோங்கி வந்திருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட “தண்ணீர்கள்” கடைசியில் அதை காப்பாற்ற முடியாது. பூர்வ பாபிலோனைப்போலவே, இதுவும் வெறுமையாக்கப்படும், புறக்கணிக்கப்படும், பாழாக்கப்படும்.

5ஏசாயாவின் நாட்களிலே, பாபிலோன் உலக வல்லரசாக ஆகவில்லை. ஆனால், உலக வல்லரசாகி தன் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்யும் என்பதை யெகோவா ஏற்கெனவே அறிந்திருக்கிறார். ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம் பண்ணி, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்.” (ஏசாயா 21:2அ) யூதாவையும் வெற்றிகொள்ளும் மற்ற எல்லா தேசங்களையும் பாபிலோன் சூறையாடி, துரோகம் பண்ணும். எருசலேமைப் பாழாக்கி, அதன் ஆலயத்தை கொள்ளையிடும். அந்த ஜனங்களை கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டு செல்லும். அங்கே, இந்தக் கைதிகள் மோசமாக நடத்தப்படுவர், அவர்களுடைய விசுவாசத்திற்காக ஏளனம் செய்யப்படுவர். தங்கள் தேசத்திற்கு திரும்பி வரும் நம்பிக்கையே இல்லாது இருப்பர்.​—2 நாளாகமம் 36:17-21; சங்கீதம் 137:1-4.

6ஆம், மிகக் கடினமான காலங்களைக் குறிக்கும் இந்தக் “கொடிய தரிசனம்” பாபிலோன் நகரத்திற்கு ஏற்றதுதான். ஏசாயா மேலும் தொடருகிறார்: “ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் [“ஏக்கப் பெருமூச்சுகளையெல்லாம்,” NW] ஒழியப்பண்ணினேன்.” (ஏசாயா 21:2ஆ) துரோகியான இந்தப் பேரரசால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி. கடைசியில், அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சுகளுக்கு ஒரு முடிவு! (சங்கீதம் 79:11, 12) இந்த விடுதலை எப்படி வரும்? பாபிலோனைத் தாக்கும் இரு தேசங்களை ஏசாயா குறிப்பிடுகிறார்: ஏலாம், மேதியா. இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொ.ச.மு. 539-⁠ல் மேதிய-பெர்சிய படைகள் பெர்சியனாகிய கோரேசுவின் தலைமையின்கீழ் பாபிலோனுக்கு எதிராக செல்லும். ஆனால், பொ.ச.மு. 539-⁠க்கு முன்பாகவே பெர்சிய பேரரசர்கள் ஏலாமின் ஒரு பகுதியையாவது கைப்பற்றுவர். a எனவே, பெர்சிய படையில் ஏலாமியர்களும் இருப்பர்.

7அந்தக் காட்சி தன்னை பாதித்ததை ஏசாயா எப்படி விவரிக்கிறார் என்பதை கவனியுங்கள்: “ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன். என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.” (ஏசாயா 21:3, 4) மாலை மங்கி, இருள் சூழும் நேரம், அமைதியாக தியானிக்க மிக ரம்மியமான நேரம். அந்த நேரத்தை தீர்க்கதரிசி வெகுவாக ரசித்து வருகிறார். ஆனால், இப்போதோ காரிருள் சூழ்ந்து, அதன் ரம்மியம் நீங்கி, வேதனையும் பயமும் திகிலுமே அவரை ஆட்டிப்படைக்கின்றன. பிரசவ வேதனையிலிருக்கும் ஒரு பெண்ணைப்போல, கடும்வேதனையை அவர் அனுபவிக்கிறார். அவர் ‘இருதயம் திகைக்கிறது.’ ஒரு நிபுணர் இந்தப் பதங்களை, “என் இருதயம் மிக வேகமாக படபடவென அடித்துக்கொள்கிறது” என மொழிபெயர்த்துள்ளார். இது “காய்ச்சலையும் சீரற்ற நாடித்துடிப்பையும்” குறிப்பதாக அவர் சொல்கிறார். ஏன் இப்படிப்பட்ட நிலை? ஆதாரங்கள் காட்டுகிறபடி, ஏசாயாவின் உணர்ச்சிகள் அனைத்தும் தீர்க்கதரிசன அர்த்தம் உடையவை. பொ.ச.மு. 539, அக்டோபர் 5/6 இரவில், பாபிலோனியர் இதே மாதிரியான பயத்தையும் திகிலையும் அனுபவிப்பர் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது.

8தீங்கு முன்னறிவிக்கப்பட்ட அந்த நாளில், இருள் சூழ ஆரம்பிக்கையில், பாபிலோனியர்களின் மனதில் பயம் என்ற பேச்சிற்கே இடமில்லை. சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஏசாயா முன்னறிவிக்கிறார்: “மேஜையை ஆயத்தமாக்கட்டும், இருக்கைகளை தயார் செய்யட்டும், புசிக்கட்டும், குடிக்கட்டும்!” (ஏசாயா 21:5அ, NW) செருக்குமிக்க ராஜா பெல்ஷாத்சார் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்கிறான். உயர் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கும், அவனுடைய மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. (தானியேல் 5:1, 2) நகரத்தின் மதில்களுக்கு வெளியே எதிரிகளின் படைகள் சூழ்ந்திருப்பது அந்தக் குடிவெறியர்களுக்கு தெரியும். இருந்தாலும், அவர்களுடைய நகரத்தை எவராலுமே வெல்ல முடியாது என்ற பெருமிதத்தில் இருக்கின்றனர். பிரமாண்டமான மதில்களையும் மிக ஆழமான அகழியையும் கடந்து வந்து நகரத்தை கைப்பற்றுவது கூடாத காரியமாக தோன்றியது. அதுமட்டுமா! அந்த தேசத்தின் கடவுட்கள் இருக்கும்போது அது நடக்காத காரியம் என்றே நினைக்கின்றனர். எனவே, அவர்கள் “புசிக்கட்டும், குடிக்கட்டும்!” பெல்ஷாத்சாரும் குடித்து வெறித்திருக்கிறான். அவன் மட்டுமல்ல, அவனுடைய விருந்தாளிகளும்! அவனுடைய உயர் அதிகாரிகள் மதுவினால் மதிமயங்கி மந்த நிலையில் இருப்பதால், அவர்கள் தட்டியெழுப்பப்பட வேண்டும் என அடுத்தபடியாக வரும் ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் உணர்த்துகின்றன.

9“பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு [“கேடயத்திற்கு,” பொ.மொ.] எண்ணெய் பூசுங்கள்.” (ஏசாயா 21:5ஆ) திடீரென விருந்து நிறுத்தப்படுகிறது. பிரபுக்கள் உடனடியாக எழுந்திருக்க வேண்டும்! வயதான தீர்க்கதரிசி தானியேல் அழைக்கப்படுகிறார். ஏசாயாவால் விவரிக்கப்பட்டபடி, பாபிலோனிய ராஜா பெல்ஷாத்சாரை எப்படி பயத்திலும் நடுக்கத்திலும் யெகோவா தள்ளுகிறார் என்பதை தானியேல் கண்கூடாக பார்க்கிறார். மேதிய, பெர்சிய, ஏலாமியப் படைகள் நகரத்தின் மதில்களையும் மீறி உள்ளே வரவே, ராஜாவின் விருந்தாளிகள் எல்லாரும் திகைத்து பதறுகின்றனர். பாபிலோன் வெகு விரைவில் வீழ்கிறது! அப்படியானால், ‘கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்’ என்பதன் அர்த்தம் என்ன? ஒரு தேசத்தின் ராஜாவை அதன் கேடயமாக பைபிள் சில சமயங்களில் குறிப்பிடுகிறது. ஏனென்றால், தேசத்திற்காக போரிட்டு காக்கும் பாதுகாவலர் அவரே. b (சங்கீதம் 89:18) எனவே, ஒரு புதிய ராஜா தேவை என்பதை ஏசாயாவின் இந்த வசனம் முன்னறிவிக்கிறது. ஏன்? ஏனென்றால், “அன்று இராத்திரியிலே” பெல்ஷாத்சார் கொல்லப்படுகிறான். எனவே, ‘கேடயத்திற்கு எண்ணெய் பூச’ அல்லது புதிய ஒரு ராஜாவை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.​—தானியேல் 5:1-9, 30.

10மெய் வணக்கத்தை நேசிக்கும் எல்லாருமே இந்தப் பதிவிலிருந்து ஆறுதலைப் பெறலாம். நவீன நாளைய பாபிலோன், அதாவது மகா பாபிலோன், பூர்வ பாபிலோனைப் போலவே துரோகியாகவும் பாழாக்குகிறதாகவும் நிரூபித்துள்ளது. இதுநாள் வரையாக, யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்தவும், அவர்களுடைய வேலையை தடை செய்யவும், அநியாயமாக வரி விதிக்கவும் மதத் தலைவர்கள் கூட்டுச்சதி செய்து வந்திருக்கின்றனர். ஆனால், இந்த தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, இந்த எல்லா துரோகச் செயல்களையும் யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதற்கான தண்டனையை கொடுக்காமல் விடமாட்டார். அவரை தவறாக பிரதிநிதித்துவம் செய்து, அவருடைய மக்களை மோசமாக நடத்தும் எல்லா மதங்களையும் முடிவுக்கு கொண்டு வருவார். (வெளிப்படுத்துதல் 18:8) இது சாத்தியமா? பூர்வ பாபிலோன் மற்றும் மகா பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய கடவுளின் எச்சரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேறி உள்ளன என்பதை ஆராய்வது நம் விசுவாசத்தை பலப்படுத்த உதவும்.

“வீழ்ச்சியடைந்து விட்டது”!

11யெகோவா இப்போது தீர்க்கதரிசியிடம் பேசுகிறார். ஏசாயா அறிவிக்கிறார்: “ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை [“காவல்காரனை,” NW] வை என்றார்.” (ஏசாயா 21:6) இந்த வார்த்தைகள், ஏசாயா 21-⁠ம் அதிகாரத்தின் மற்றொரு முக்கியமான கருத்தை சுட்டிக்காட்டுகின்றன. ஜாமக்காரன் அல்லது காவல்காரனைப் பற்றியதே அக்கருத்து. “விழித்திருங்கள்” என இயேசு தம்மை பின்பற்றுபவர்களுக்கு அறிவுரை கூறினார். எனவே, காவல்காரன் என்ற இந்தப் பதம் இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாருடைய ஆர்வத்தையும் தூண்டுகிறது. ஊழல் நிறைந்த இந்த உலகில் இருக்கும் ஆபத்துக்களையும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கி வருவதையும் பற்றி தாங்கள் என்னவெல்லாம் அறிந்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் சொல்வதை “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒருபோதும் நிறுத்தவில்லை. (மத்தேயு 24:42, 45-47, NW) ஏசாயாவின் தரிசனத்தில் வரும் காவல்காரன் எதைப் பார்க்கிறான்? ‘அவன் ஒரு இரதத்தையும், ஜோடுஜோடான குதிரைவீரரையும், ஜோடுஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய் கவனித்துக்கொண்டே இருந்தான்.’ (ஏசாயா 21:7) இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள இரதம், படையெடுப்பின்போது காற்று வேகத்தில் பறக்கும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட போர்க்குதிரைகளையும் இரதங்களையும் ஒருவேளை குறிக்கலாம். கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் வரும் வீரர்கள், ஒன்றிணைந்து தாக்கவரும் மேதிய-பெர்சிய பேரரசுகளைக் குறிக்கின்றனர். மேலும், பெர்சிய படை போர்களில் கழுதைகளையும் ஒட்டகங்களையும் பயன்படுத்தியதை சரித்திரப் பதிவுகள் உறுதி செய்கின்றன.

12பிறகு, காவல்காரன் ஓர் அறிக்கையை தர வேண்டும். “ஆண்டவரே [“யெகோவாவே,” NW], நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். இதோ, ஒரு ஜோடு குதிரைபூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற மனுஷன் வருகிறான்.” (ஏசாயா 21:8, 9அ) அந்தக் காட்சியில் வரும் காவல்காரன், “சிங்கத்தைப்போல்” தைரியமாக சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். பாபிலோன் போன்ற வெல்வதற்கு அரிய ஒரு பேரரசுக்கு எதிராக நியாயத்தீர்ப்பின் செய்தியை சத்தமாக சொல்வதற்கு தைரியம் மிக அவசியம். தைரியத்தோடு சகிப்புத்தன்மையும் அவசியம். ஒரு இமைப்பொழுதும்கூட தன் கவனத்தை சிதற விடாமல், பகலோ, இரவோ எப்போதும் காவல்காரன் தன் காவலிடத்திலே நிற்கிறான். அதுபோலவே, இந்த கடைசி நாட்களிலும், காவல்கார வகுப்பிற்கு தைரியமும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம். (வெளிப்படுத்துதல் 14:12, NW) உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே இந்த பண்புகள் அவசியம்.

13ஏசாயாவின் காட்சியில் வரும் காவல்காரன் போர் இரதம் ஒன்று வருவதைக் காண்கிறான். என்ன செய்தி வருகிறது? ‘பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது; அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறுகிறான். (ஏசாயா 21:9ஆ, பொ.மொ.) மெய்சிலிர்க்க வைக்கும் அறிவிப்பு அல்லவா இது! கடைசியில், கடவுளுடைய மக்களை கொள்ளையடித்து தேசத்தை பாழாக்கிய அந்த துரோகி வீழ்ந்து விடுகிறது! c அப்படியானால், பாபிலோனின் விக்கிரகங்களும் சிலைகளும் எந்த அர்த்தத்தில் உடைக்கப்படுகின்றன? மேதிய-பெர்சிய படைகள், பாபிலோனின் கோயில்களுக்குள் புகுந்து, கணக்கிலடங்கா அதன் விக்கிரகங்களை நொறுக்கிப் போடுமா? இல்லை. அப்படிப்பட்ட செயல் தேவையே இல்லை. பாபிலோன் நகரத்தை காப்பதற்கு அவற்றிற்கு சக்தியில்லை என்பது நிரூபிக்கப்படும் அர்த்தத்தில், அந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுப் போகும். கடவுளுடைய மக்களை ஒடுக்க சக்தியிழந்து போகையில், பாபிலோன் வீழ்ச்சியுறும்.

14மகா பாபிலோனைப் பற்றியதென்ன? முதல் உலக யுத்தத்தின்போது, கடவுளுடைய மக்களுக்கு எதிராக ஒடுக்குதலை தூண்டிவிட்டதன்மூலம், அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு அது சிறையிருப்பில் வைத்திருந்தது. அந்த சமயத்தில் அவர்களுடைய பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றேவிட்டது. உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவரும் மற்ற முக்கிய பிரமுகர்களும் பொய்யான குற்றச்சாட்டுகளின்பேரில் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால், 1919-⁠ல் அதிசயிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர், தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது, பிரசங்க வேலை மறுபடியும் துவக்கப்பட்டது. எனவே, கடவுளுடைய மக்கள்மீது மகா பாபிலோன் வைத்திருந்த அதிகாரம் முறிந்தது. இப்படியாக, அது வீழ்ச்சியடைந்தது. d ஏசாயா 21:9-⁠ல் உள்ள வார்த்தைகளையே பயன்படுத்தி, இந்த வீழ்ச்சியை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஒரு தூதன் இருமுறை அறிவிக்கிறான்.​—வெளிப்படுத்துதல் 14:8; 18:⁠2.

15தன் ஜனத்தாரைப் பற்றிய கனிவான குறிப்போடு இந்த தீர்க்கதரிசன செய்தியை ஏசாயா முடிக்கிறார். அவர் சொல்கிறார்: “போரடிக்கப்பட்டவர்களே, என் போரடிக்கும் களத்தின் குமாரரே, இஸ்ரவேலின் கடவுளாகிய சேனைகளின் யெகோவா எனக்குச் சொன்னதை நான் உங்களுக்கு அறிவித்தேன்.” (ஏசாயா 21:10, NW) பைபிளில், போரடித்தல் என்பது கடவுளுடைய மக்களை சிட்சித்து, புடமிடுவதை அடையாளப்படுத்துகிறது. கடவுளுடைய உடன்படிக்கையின் மக்கள், ‘போரடிக்கும் களத்தின் குமாரர்களாக’ ஆவார்கள். போரடிக்கும் களத்திலே, கதிர்கள் அடிக்கப்பட்டு உமியிலிருந்து கோதுமை பிரித்தெடுக்கப்படுகிறது; இதனால் சுத்தமாக்கப்பட்ட, விரும்பத்தக்க கோதுமை மணிகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிட்சையைக் குறித்து ஏசாயா அகம் மகிழவில்லை. மாறாக, எதிர்காலத்தில் ‘போரடிக்கும் களத்தின் குமாரர்களாகப்’ போகிறவர்களுக்காக பரிவு காட்டுகிறார். இவர்களில் சிலர், தங்கள் வாழ்நாள் முழுவதையுமே, அந்நிய தேசத்திலே கைதிகளாக கழிக்க வேண்டியிருக்கும்.

16இது நம் அனைவருக்குமே பயனுள்ள நினைப்பூட்டுதலாக இருக்கிறது. இன்று கிறிஸ்தவ சபையில், தவறு செய்தவர்களிடமாக கரிசனையில்லாமல் சிலர் நடந்துகொள்ளலாம். சிட்சை பெறுபவர்களும் அதிக எரிச்சலடையலாம். என்றாலும், தம் மக்களை புடமிடவே யெகோவா சிட்சிக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். அப்படி செய்தோமானால், சிட்சையையும் அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்பவர்களையும் அற்பமாக நினைக்க மாட்டோம்; அதோடு, சிட்சை கொடுக்கப்படும்போது, எதிர்க்காமல் ஏற்றுக்கொள்வோம். தெய்வீக சிட்சையை, கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டாக நாம் ஏற்றுக்கொள்வோமாக.​—எபிரெயர் 12:⁠6.

காவல்காரனை விசாரித்தல்

17ஏசாயா அதிகாரம் 21-⁠ன் இரண்டாவது தீர்க்கதரிசன செய்தி காவல்காரனை முன்னிலையில் கொண்டு வருகிறது. அச்செய்தி இவ்விதமாக ஆரம்பிக்கிறது: “தூமாவைப் பற்றிய தீர்ப்பு: சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு கேட்பதாவது: ‘காவல்காரனே, இராக்காலத்தைப் பற்றி என்ன? காவல்காரனே, இராக்காலத்தைப் பற்றி என்ன?’” (ஏசாயா 21:11NW) இந்த தூமா எங்கே இருக்கிறது? பைபிள் காலங்களில், இந்தப் பெயரில் பல பட்டணங்கள் இருந்ததாக ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆனால், இங்கு அதில் எவற்றையுமே குறிக்கவில்லை. சேயீர் என்ற மறுபெயர் கொண்ட ஏதோமில் தூமா இல்லை. என்றாலும், “தூமா” என்பதன் அர்த்தம் “அமைதி.” ஆகவே, முந்தைய தீர்ப்புச் செய்தியில் சொன்னதுபோலவே, இது அந்தப் பகுதியின் எதிர்காலத்தை குறிக்கும் ஒரு பெயராகும். கடவுளுடைய மக்களை பழிவாங்கும் எதிரியாக ஏதோம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அது அமைதியாக போகிறது. அதாவது, மரணத்தில் அமைதியாக போகிறது. இருந்தாலும், அந்த முடிவு வருவதற்குமுன், அதனுடைய எதிர்காலத்தைப் பற்றி சிலர் ஆர்வத்தோடு விசாரிப்பர்.

18ஏசாயா இந்தப் புத்தகத்தை எழுதியபோது, வலிமை மிக்க அசீரியப் படைகளின் ஒடுக்குதலின்கீழ் ஏதோம் இருக்கிறது. ஏதோமில் இருப்பவர்களில் சிலர், ஒடுக்குதலின் இரவு நேரம் எப்போது முடிவடையும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். பதில்? “அதற்கு ஜாமக்காரன் [“காவல்காரன்,” NW]: விடியற்காலமும் வருகிறது, இராக்காலமும் வருகிறது . . . என்று சொல்லுகிறான்.” (ஏசாயா 21:12அ) ஏதோமுக்கு நல்ல ஓர் எதிர்காலத்தை இது முன்னறிவிக்கவில்லை. காலைப்பொழுது வருவதற்கான மங்கிய ஒளி தொடுவானத்தில் தோன்றுகிறது. ஆனால், அது கணப்பொழுதில் மறைந்துவிடும் பொய்த்தோற்றமே. மறுபடியும் இரவுதான், அதாவது ஒடுக்குதலின் இருண்ட காலம்தான் வரப்போகிறது; அந்த இரவு, காலை நேரத்தைத் தொடர்ந்து மிக விரைவில் வரப்போகிறது. ஏதோமின் எதிர்காலத்தை விளக்கும் என்ன அருமையான காட்சி! அசீரிய ஒடுக்குதல் முடிவுறும்; ஆனால், அசீரியாவைத் தொடர்ந்து பாபிலோன் உலக வல்லரசாக வந்து, ஏதோமை முற்றிலுமாக தரைமட்டமாக்கும். (எரேமியா 25:17, 21; 27:2-8) இந்த ஒடுக்குதல் ஒன்றன்பின் ஒன்றாக தொடரும். பாபிலோனிய ஒடுக்குதலுக்கு பிறகு பெர்சியர்களும், அதற்கு பிறகு கிரேக்கர்களும் அதை ஒடுக்குவர். அதன் பிறகு, ரோமர்களின் காலத்தில், குறுகிய “விடியற்கால” நேரம் வரும். ஏதோமிய வம்சத்தை சேர்ந்த ஏரோது ராஜாக்கள் எருசலேமில் அதிகாரத்தை பெறும் காலம் அது. ஆனால், அந்த “விடியற்கால” நேரமும் சிறிது காலத்திற்கே. முடிவில், ஏதோம் நிரந்தரமாக அமைதியாக்கப்படும், சரித்திரத்தின் ஏடுகளிலிருந்தே முற்றிலுமாக நீக்கப்படும். தூமா என்ற பெயர் அப்போது அதற்கு வெகு பொருத்தமாக அமையும்.

19தன் சுருக்கமான செய்தியை காவல்காரன் பின்வரும் வார்த்தைகளோடு முடிக்கிறான்: “நீங்கள் கேட்க மனதானால், கேளுங்கள். திரும்ப வரலாம்!” (ஏசாயா 21:12ஆ, NW) “திரும்ப வரலாம்” என்ற பதம், ஏதோமின்மேல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வரவிருக்கும் ‘இராக்காலங்களை’ குறிக்கலாம். அந்தப் பதம் “திரும்பி வாருங்கள்” எனவும் மொழிபெயர்க்கப்படலாம். அப்படியானால், ஏதோமுக்கு வர இருக்கும் நாசத்திலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பும் எவரும் மனந்திரும்பி, யெகோவாவிடம் “திரும்பி” வரவேண்டும் என்பதையும் தீர்க்கதரிசி அர்த்தப்படுத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும், அதிகமாக கேட்கும்படி காவல்காரன் அழைப்பு விடுக்கிறான்.

20நவீன கால யெகோவாவின் மக்களுக்கு இந்த சுருக்கமான அறிவிப்பு அதிக அர்த்தத்தை உடையது. e மனிதகுலம் இன்று ஆவிக்குரிய காரிருளிலும் கடவுளிடமிருந்து தூர விலகியும் இருக்கிறது. இது இந்த ஒழுங்குமுறை அழிக்கப்படுவதற்கே வழிவகுக்கிறது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். (ரோமர் 13:12; 2 கொரிந்தியர் 4:4) இந்த இரவு நேரத்தில், சமாதானத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அநேக நம்பிக்கை வாக்குறுதிகளை மனிதகுலம் கொடுக்கிறது; இவை அனைத்தும் விடியற்பொழுதை அறிவிப்பதைப் போன்ற பொய்யான, மங்கிய ஒளிக்கு இணையாக இருக்கின்றன. ஆனால், இன்னும் இருண்ட காலங்கள்தான் தொடர்ந்து வர இருக்கின்றன. உண்மையான விடியற்பொழுதோ, அதாவது இந்த பூமியின்மீது கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் விடியலோ மிக விரைவில் வருகிறது. ஆனால், இரவு நேரம் நீடித்திருக்கும்வரை, ஆவிக்குரிய விதத்தில் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். அதோடு, ஊழல் நிறைந்த இந்த ஒழுங்குமுறையின் அழிவு மிக அருகில் இருக்கிறதென்பதை தைரியத்தோடு அறிவிக்க வேண்டும். இப்படி செய்வதன்மூலம் காவல்கார வகுப்பின் தலைமைக்கு கீழ்ப்பட்டு நடக்கிறோம் என்பதை நிரூபிக்கலாம்.​—1 தெசலோனிக்கேயர் 5:6.

பாலைவனத்தின்மேல் இரவு கவிகிறது

21ஏசாயா 21-⁠ம் அதிகாரத்தின் கடைசி தீர்ப்பு “பாலைவனத்திற்கு” எதிராக சொல்லப்பட்டுள்ளது. “பாலைவனத்திற்கு எதிரான தீர்ப்பு: திதானியரின் வணிகக்கூட்டங்களே, நீங்கள் இரவில் பாலைவனத்தின் காடுகளில் தங்குவீர்கள்.” (ஏசாயா 21:13, NW) இங்கு குறிப்பிடப்படும் ‘பாலைவனம்’ அரபியாவைக் குறிக்கும், ஏனெனில் அரபியாவின் பல இனப்பிரிவுகளுக்கே இத்தீர்ப்பு சொல்லப்படுகிறது. ‘பாலைவனம்’ என்பது சில சமயங்களில் “மாலை” எனவும் மொழிபெயர்க்கப்படுகிறது. ஏனெனில் இவற்றிற்குரிய எபிரெய வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒத்தவை. இவ்வாறு வார்த்தை ஜாலம் புரிந்திருப்பது, இருள் சூழும் மாலை நேரம் அல்லது இக்கட்டின் காலம் அந்தப் பகுதியின்மேல் வரப்போவதை குறிக்கிறது என சிலர் கருதுகின்றனர். இரவு நேரக் காட்சியை தந்து அந்தத் தீர்ப்பு துவங்குகிறது. அரபியாவின் முக்கிய இனப்பிரிவினரான திதானியரின் வணிகக்கூட்டத்தாரைக் குறித்து பேசுகிறது. பொதுவாக இந்த வணிகக்கூட்டத்தார், வாசனைப் பொருட்களையும் முத்துக்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு பாலைவனச்சோலையிலிருந்து மற்றொரு பாலைவனச்சோலைக்கு வழக்கமான பாதையில் செல்கின்றனர். ஆனால், அப்படி பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி, இரவு நேரங்களில் ஒளிந்துகொள்ளும்படி இந்தக் கூட்டத்தாருக்கு இங்கு சொல்லப்படுகிறது. ஏன்?

22ஏசாயா விளக்குகிறார்: “தேமா தேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும் [“வாளுக்கும்,” பொ.மொ.], நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.” (ஏசாயா 21:14, 15) போரின் கொடுமை, இந்த அரபிய இனப்பிரிவுகளைத் தாக்கும். அந்தப் பகுதியிலுள்ள நீர்வளம் பொருந்திய சோலையில் அமைந்திருப்பதே தேமா. நிர்க்கதியாக தப்பியோடும் அகதிகளுக்கு அது அப்பத்தையும் தண்ணீரையும் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான நிலை எப்போது வரும்?

23ஏசாயா மேலும் தொடருகிறார்: “என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] இதை உரைத்தார்.” (ஏசாயா 21:16, பொ.மொ., 17) அரபியாவின் இனப்பிரிவுகளிலேயே மிகவும் பிரதானமாக விளங்குவது கேதார். எனவே, சில சமயங்களில், அரபியாவின் எல்லா இனப்பிரிவுகளையும் குறிக்க கேதார் பயன்படுத்தப்படுகிறது. இந்த இனப்பிரிவின் வில்வீரர்களிலும் பராக்கிரமசாலிகளிலும் சொற்ப எண்ணிக்கையினரே மீதியாய் இருப்பார்கள் என யெகோவா நிர்ணயித்திருக்கிறார். இது எப்போது நிறைவேறும்? “ஓராண்டிற்குள்.” அதாவது, ஒரு கூலியாள் தனக்கு கிடைக்கும் கூலிக்காக மட்டுமே கணக்கிட்டு வேலை செய்யும் அந்த காலத்திற்குள். இவையனைத்தும் எப்படித் துல்லியமாக நிறைவேறியது என்பது நமக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம். ஆனால், இரண்டாம் சர்கோன், சனகெரிப் ஆகிய இரு அசீரிய அரசர்கள், அரபியாவை வெற்றிகொண்டதாக பெருமையடித்துக் கொண்டனர். முன்னறிவித்தபடி, இந்த இரண்டு அரசர்களுமே ஒருவேளை கர்வம் பிடித்த அரபியாவின் இனப்பிரிவுகளை அழித்து, தேசத்தை தரைமட்டமாக்கியிருக்கலாம்.

24என்றாலும், இந்த தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப்பிசகாமல் நிறைவேறியிருந்திருக்கும் என நாம் உறுதியாய் நம்பலாம். அந்தத் தீர்ப்பின் முடிவான வார்த்தைகளே இதற்கு மிகச் சிறந்த நிரூபணம். ‘இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.’ பாபிலோன் அசீரியாவுக்கு மேலாக எழும்பும் என்பதும் குடித்து வெறித்து, களித்திருக்கும் ஒரே இரவில் அதிகாரம் இழந்து சீரழிந்துபோகும் என்பதும் ஏசாயாவின் நாட்களில் இருந்த மக்களுக்கு ஒருவேளை நடக்க முடியாத காரியமாக தோன்றியிருக்கலாம். வலிமை மிக்க ஏதோம் மரண அமைதியில் வீழ்ந்துபோகும் என்பதோ, செல்வ செழிப்பான அரபிய இனப்பிரிவினர் நாதியற்று இக்கட்டின் இரவால் சூழப்படுவர் என்பதோ எதிர்பார்க்க முடியாத காரியமாகவும் இருக்கலாம். ஆனால், அது நடக்கும் என்று யெகோவா சொல்கிறார்; அப்படியே நடக்கிறது. இன்றும், பொய் மத உலகப் பேரரசு வீழ்ச்சியடையும் என யெகோவா சொல்கிறார். இது நடந்தாலும் நடக்கலாம் என்பதல்ல; நிச்சயம் நடக்கும். ஏனென்றால், யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்!

25எனவே, நாம் காவல்காரனைப் போல் இருப்போமாக. வர இருக்கும் ஆபத்தை தூரத்திலேயே பார்க்க வசதியாக, உயரமான காவல்கோபுரத்தின்மேல் நிற்பதுபோல, எப்போதும் எச்சரிக்கையாய் இருப்போமாக. இன்று பூமியில் மீதியாய் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட, உண்மையுள்ள காவல்கார வகுப்பாரோடு நெருங்கிய கூட்டாளிகளாக இருப்போமாக. பரலோகத்திலே கிறிஸ்து ஆட்சி செய்கிறார் என்பதற்கான உறுதியான அத்தாட்சிகளையும், கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனிதகுலத்தின் நீண்ட, காரிருள் சூழ்ந்த இரவிற்கு வெகு சீக்கிரத்தில் முடிவை கொண்டு வருவார் என்பதையும், அதன்பின் பரதீஸிய பூமியின்மேல் ஆயிரவருட ஆட்சியை, அதாவது உண்மையான விடியலை ஆரம்பிப்பார் என்பதையும் தைரியத்தோடு சொல்லுவதில் அவர்களோடு சேர்ந்துகொள்வோமாக!

[அடிக்குறிப்புகள்]

a பெர்சிய அரசனாகிய கோரேசு சில சமயங்களில் “ஆன்ஷனின் ராஜா” என அழைக்கப்பட்டார். ஆன்ஷன் ஏலாமின் ஒரு பட்டணமாக அல்லது ஒரு பகுதியாக இருந்தது. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், அதாவது ஏசாயாவின் நாட்களில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு பெர்சியர்களைப் பற்றி ஒருவேளை தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஏலாமைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார்கள். எனவேதான், ஏசாயா இங்கு பெர்சியா என்பதற்கு பதிலாக ஏலாம் என குறிப்பிடுகிறார்.

b ‘கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்’ என்பது போருக்கு முன் தோலால் ஆன கேடயங்களுக்கு எண்ணெய் பூசும் பழங்கால ராணுவ பழக்கத்தைக் குறிப்பதாக பைபிள் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதனால், எதிரிகள் எய்யும் அம்பு கேடயத்தில் பட்டு, வேறே திசையில் போய்விடும். இந்தக் கருத்து சரியானதாக இருந்தாலும், பாபிலோன் நகரம் வீழ்ந்த அந்த இரவில் நடந்தவற்றில் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பு உள்ளது. போர் செய்வதற்கான நேரமே இல்லாதபோது, அவர்கள் எப்படி தங்கள் கேடயங்களுக்கு எண்ணெய் பூசி தயாராக முடியும்!

c பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவ்வளவு துல்லியமாக இருப்பதால், அந்த வீழ்ச்சிக்குப் பிறகே அது எழுதப்பட்டிருக்க வேண்டுமென பைபிள் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடக்கப்போகும் சம்பவங்களை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட ஒரு தீர்க்கதரிசி முன்னறிவிக்க முடியும் என நாம் ஏற்றுக்கொண்டோமானால், இப்படிப்பட்ட ஊகங்களுக்கே இடமில்லை என எபிரெய மொழி நிபுணர் எஃப். டீலிட்ஷ் குறிப்பிடுகிறார்.

d வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 164-9 வரை காண்க.

e காவற்கோபுர பத்திரிகை பிரசுரிக்க ஆரம்பித்து 59 வருடங்களாக, அதன் அட்டையில் ஏசாயா 21:11 குறிப்பிடப்பட்டது. இந்த வசனத்தை பொருளாக வைத்தே, உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் தலைவரான சார்ல்ஸ் டி. ரஸல் தன் கடைசி பிரசங்கத்தை எழுதினார். (படத்தை முந்தின பக்கத்தில் காண்க.)

[கேள்விகள்]

1, 2. (அ) பைபிளின் முக்கிய கருத்து என்ன, ஆனால் ஏசாயாவில் என்ன முக்கியமான உபகருத்து சொல்லப்படுகிறது? (ஆ) பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய உபகருத்தை பைபிள் எப்படி விவரிக்கிறது?

3. ‘கடல் வனாந்தரம்’ என ஏன் பாபிலோன் அழைக்கப்படுகிறது, அதனுடைய எதிர்காலத்தைக் குறித்து அந்தப் பெயர் எதை முன்னறிவிக்கிறது?

4. வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள “மகா பாபிலோன்” குறித்த காட்சி, ‘வனாந்தரத்தையும்,’ ‘தண்ணீர்களையும்’ எப்படி உட்படுத்துகிறது, “தண்ணீர்கள்” எதைக் குறிக்கிறது?

5. “துரோகி,” “பாழாக்குகிறவன்” என்ற பெயர்களை பாபிலோன் எப்படி பெறுகிறது?

6. (அ) என்ன ஏக்கப் பெருமூச்சுகளை யெகோவா முடிவுக்கு கொண்டுவருவார்? (ஆ) பாபிலோனை எந்த தேசங்கள் தாக்கும் என முன்னறிவிக்கப்படுகிறது, இது எப்படி நிறைவேறுகிறது?

7. ஏசாயா கண்ட காட்சி அவர்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதன் அர்த்தம் என்ன?

8. தீர்க்கதரிசனத்திற்கு இசைய, மதில்களுக்கு வெளியே எதிரிகள் சூழ்ந்திருந்தபோதும் பாபிலோனியர்கள் என்ன செய்கின்றனர்?

9. ‘கேடயத்திற்கு எண்ணெய் பூச’ வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது?

10. துரோகியைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்திலிருந்து யெகோவாவின் வணக்கத்தார் என்ன ஆறுதலைப் பெறலாம்?

11. (அ) காவல்காரனின் பொறுப்பு என்ன, இன்று காவல்காரனைப்போல சுறுசுறுப்பாக இருப்பது யார்? (ஆ) கழுதைகள், ஒட்டகங்களின்மேல் வரும் வீரர்கள் எதை குறிக்கின்றனர்?

12. ஏசாயாவின் காட்சியில் வரும் காவல்காரன் என்ன பண்புகளை காண்பிக்கிறான், இன்று இந்தப் பண்புகள் யாருக்கு அவசியம்?

13, 14. (அ) பூர்வ பாபிலோனுக்கு என்ன நேரிடுகிறது, அதின் விக்கிரகங்கள் என்ன அர்த்தத்தில் உடைக்கப்படுகின்றன? (ஆ) அதேமாதிரியான வீழ்ச்சி எப்போது, எப்படி மகா பாபிலோனுக்கு நேரிட்டது?

15, 16. எந்த அர்த்தத்தில் ஏசாயாவின் ஜனங்கள் ‘போரடிக்கப்பட்டவர்கள்,’ இவர்களைக் குறித்த ஏசாயாவின் மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

17. ஏதோம், “தூமா” என பெயரிடப்பட்டிருப்பது ஏன் பொருத்தமானது?

18. “விடியற்காலமும் வருகிறது, இராக்காலமும் வருகிறது” என்ற தீர்ப்பு எப்படி பூர்வ ஏதோமின்மீது நிறைவேறுகிறது?

19. “நீங்கள் கேட்க மனதானால், கேளுங்கள். திரும்ப வரலாம்!” என காவல்காரன் சொல்கையில் எதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்?

20. ஏசாயா 21:11, 12-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு, இன்று யெகோவாவின் மக்களுக்கு ஏன் முக்கியமானது?

21. (அ) “பாலைவனத்திற்கு எதிரான தீர்ப்பு” என்ற வாக்கியத்தில் என்ன வார்த்தை ஜாலம் பயன்படுத்தப்பட்டுள்ளது? (ஆ) திதானியரின் வணிகக்கூட்டங்கள் அர்த்தப்படுத்துவது என்ன?

22, 23. (அ) படுமோசமான என்ன தாக்குதல் அரபியாவின் இனப்பிரிவுகளை பாதிக்க இருக்கிறது, என்ன விளைவுகளோடு? (ஆ) இந்த நாசம் எவ்வளவு விரைவாக வரும், எவரால்?

24. அரபியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப் பற்றி நாம் எப்படி உறுதியாய் இருக்கலாம்?

25. காவல்காரனுடைய உதாரணத்தை நாம் எப்படி பின்பற்றலாம்?

[பக்கம் 219-ன் படம்]

“புசிக்கட்டும், குடிக்கட்டும்!”

[பக்கம் 220-ன் படம்]

காவல்காரன் “சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்”

[பக்கம் 222-ன் படம்]

‘நான் பகல்முழுதும், . . . இராமுழுதும் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன்’