பூர்வ தீர்க்கதரிசியின் எழுதுகோலில் நவீன செய்தி
அதிகாரம் ஒன்று
பூர்வ தீர்க்கதரிசியின் எழுதுகோலில் நவீன செய்தி
மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு விடிவு வராதா என ஏங்கித் தவிக்காத நெஞ்சமுண்டோ? ஆனால் நம்முடைய ஆசைகள் நிராசைகளாகின்றன, ஏக்கங்களோ ஏப்பங்களாக போய்விடுகின்றன! சமாதான புறாவை பறக்க விடுகிறோம், ஆனால் போர் நம்மை ஆட்டிப்படைக்கிறது. சட்டம் ஒழுங்கை நேசிக்கிறோம், ஆனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எண்ணிக்கை பீறிட்டு வருவதை அணைபோட முடியவில்லை. அண்டை அயலவரை நம்ப விரும்புகிறோம், ஆனால் நம்முடைய கதவுகளுக்கு கவசமிட வேண்டியதாயிருக்கிறது. நம்முடைய மழலை செல்வங்களை சீராட்டி பாராட்டி பக்குவப்படுத்தி, நன்னெறி விதைகளை மனதில் விதைக்கிறோம், ஆனால் அவர்களுடைய சகாக்கள் அவற்றை கொத்திக்கொண்டு போகையில் நிராதரவற்று நிற்கிறோம்!
2நீர்க்குமிழி போல கனப்பொழுதில் மறைந்துவிடும் மனித வாழ்க்கை ‘சஞ்சலம் நிறைந்ததாயிருக்கிறது’ என்று சொன்ன யோபுவின் வார்த்தைகளை நாம் ஒப்புக்கொள்வோம். (யோபு 14:1) இது நம்முடைய நாளிற்கு நன்றாக பொருந்துகிறது. ஏன் அப்படி சொல்கிறோம்? நம்முடைய நாளில்தான் சரித்திரம் காணாத சீரழிவை சந்திக்கிறது நம் சமுதாயம்! அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார்: “இப்போது பனிப்போர் ஓய்ந்துவிட்டது, ஆனால் இந்த உலகம் இப்போது இனப் பகைமையையும் மதப் பகைமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் வளர்க்கும் நாற்றங்காலாக மாறியிருப்பது வேதனையான விஷயம். . . . நம்முடைய இளைஞர்கள் குழப்பத்தில் தடுமாறும் அளவுக்கு ஒழுக்க தராதரங்களின் வலிமையைக் குறைத்து விட்டோம். இதனால் அவர்கள் சோர்ந்துபோயிருக்கிறார்கள், மீளமுடியா தொல்லையில் சிக்கியிருக்கிறார்கள். பெற்றோரின் அசட்டை, மணவிலக்கு, குழந்தை துஷ்பிரயோகம், டீனேஜ் கருத்தரிப்பு, பள்ளிக்கு மட்டம்போடுதல், சட்ட விரோதமான போதைப்பொருட்கள், தெருக்களில் வன்முறை —இவற்றைத்தான் கடைசியில் நாம் அறுவடை செய்கிறோம். நமது வீடு பனிப்போர் எனும் பெரும் பூகம்பத்திலிருந்து தப்பி, இப்போது கரையான்கள் அரித்து தின்னும் நிலைக்கு வந்ததுபோல் இருக்கிறது.”
3ஆனால், நாம் நம்பிக்கையின்றி நட்டாற்றில் தவிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் சுமார் 2,700 வருஷங்களுக்கு முன்பு, நம்முடைய நாளுக்கு விசேஷ அர்த்தமுடைய தீர்க்கதரிசனங்களை உரைப்பதற்கு மத்திய கிழக்கில் வாழ்ந்த ஒரு மனிதரை கடவுள் ஏவினார். இவை ஏசாயா என்ற அந்தத் தீர்க்கதரிசியின் பெயரிலேயே பைபிள் புத்தகத்தில் பதிவாகியுள்ளன. ஏசாயா யார், ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் உரைத்த தீர்க்கதரிசனம் இன்று மனித குலத்திற்கு ஒளிவிளக்காக திகழ்கிறது என நாம் எவ்வாறு சொல்லலாம்?
கொந்தளிக்கும் காலங்களில் காலம் தள்ளிய ஒரு நீதிமான்
4புத்தகத்தின் முதல் வசனத்திலேயே ‘ஆமோத்சின் குமாரன்’ a என ஏசாயா தன்னை அறிமுகப்படுத்துகிறார். “யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில்” வாழ்ந்த கடவுளுடைய தீர்க்கதரிசி என தனது சரிதையை சரமாக தொடுக்கிறார். (ஏசாயா 1:1) அப்படியானால், குறைந்தது 46 ஆண்டுகளாவது யூதா தேசத்திற்கு கடவுளுடைய தீர்க்கதரிசியாக அவர் இருந்திருக்க வேண்டும்; ஒருவேளை உசியாவின் ஆட்சி அஸ்தமிக்கையில், அதாவது சுமார் பொ.ச.மு. 778-ல் தனது சேவையை ஆரம்பித்திருக்கலாம்.
5மற்ற தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அறிந்த அளவுக்கு ஏசாயாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. தெரிந்ததெல்லாம் இவைதான்: இவர் மணமானவர், இவருடைய மனைவி ‘தீர்க்கதரிசினி.’ (ஏசாயா 8:3, NW) இந்தப் பட்டப்பெயர் எதை சுட்டிக்காட்டுகிறது? ஏசாயாவின் மண வாழ்க்கை “அவருடைய சேவைக்கு பொருத்தமாக இருந்தது மட்டுமல்லாமல், அந்த சேவையோடு மிகவும் பின்னிப்பிணைந்திருந்தது” என மெக்ளின்டாக் அண்டு ஸ்ட்ராங்ஸ் சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல், அண்டு எக்லிஸியாஸ்டிக்கல் லிட்ரேச்சர் சொல்கிறது. பூர்வ காலத்தில் வாழ்ந்த தேவபக்திமிக்க சில பெண்டிரை போல, ஏசாயாவின் மனைவியும் தீர்க்கதரிசனம் உரைக்கும் சேவை செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.—நியாயாதிபதிகள் 4:4; 2 இராஜாக்கள் 22:14.
6ஏசாயாவுக்கு குறைந்தபட்சம் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள், ஒவ்வொருவருக்கும் தீர்க்கதரிசன அர்த்தம் பொதிந்த பெயர் சூட்டப்பட்டது. பொல்லாத அரசனாகிய ஆகாஸுக்கு கடவுளுடைய செய்தியை அறிவிக்கும்போது, ஏசாயாவுடன் அவருடைய தலைப்பிள்ளை சேயார்யாசூப் சென்றார். (ஏசாயா 7:3) ஆகவே, ஏசாயாவும் அவருடைய மனைவியும் கடவுளது சேவைக்கே முதலிடம் கொடுத்தனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவர்கள் இன்றைய தம்பதியினருக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு!
7ஏசாயாவும் அவருடைய மனைவியும் யூதாவின் சரித்திரத்தில் கொந்தளிக்கும் காலத்தில் வாழ்ந்து வந்தனர். அரசியல் அட்டகாசங்கள் அன்றாடங்காட்சி, விசாரணை மன்றங்களில் லஞ்ச கறை, மதம் எனும் ஆடையில் மாய்மால கிழிசல்கள். மலைமுகடுகளை பொய் தேவர்களின் பலிபீடங்கள் ஆக்கிரமித்திருந்தன. அரசர்களில் சிலரும்கூட பொய் வணக்கத்தை படு விமர்சையாக்கினர். உதாரணமாக, ஆகாஸை எடுத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய தேசத்து குடிமக்கள் விக்கிரகாராதனையில் வீழ்ந்து கிடந்ததை பொறுத்துக் கொண்டதோடு மட்டுமின்றி, அவரே அதில் ஈடுபட்டார். மோளேக்கு என்ற கானானிய தெய்வத்திற்கு பலிசெலுத்தும் பண்டிகையின்போது தன்னுடைய வாரிசையே ‘அக்கினியின் நடுவே நடக்கப்பண்ணினார்.’ b (2 இராஜாக்கள் 16:3, 4, NW; 2 நாளாகமம் 28:3, 4) இவையெல்லாம் யெகோவாவுடன் உடன்படிக்கை செய்திருந்த மக்கள் மத்தியில்!—யாத்திராகமம் 19:5-8.
8ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த சிலர்—ஆட்சியாளர்கள் சிலரும்கூட— மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க முயன்றது பாராட்டத்தக்க விஷயம். அவர்களில் ஒருவர்தான் அரசர் உசியா; இவர் ‘யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ என்றபோதிலும், அவருடைய ஆட்சியில் “ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.” (2 இராஜாக்கள் 15:3, 4) அரசர் யோதாமும் ‘யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ ஆனாலும், “ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.” (2 நாளாகமம் 27:2) ஆம், கிட்டத்தட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட காலம் பூராவும் யூதா ராஜ்யம் ஆன்மீகத்திலும் ஒழுக்கத்திலும் வருந்தத்தக்க நிலையில் இருந்தது. மொத்தத்தில், அரசர்களிடமிருந்து வந்த எந்தவொரு நல்ல காரியத்தையும் அந்த ஜனங்கள் அசட்டை செய்தனர். முரண்டும் ரகளையும் பண்ணின இந்த ஜனங்களுக்கு கடவுளுடைய செய்தியை தெரிவிப்பது உண்மையிலேயே சாமானியமான காரியமாக இருந்திருக்காது. ஆனால், “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்ற கேள்வியை யெகோவா கேட்டபோது ஏசாயா சற்றும் தயங்கவில்லை. “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என குரல் கொடுத்தார்.—ஏசாயா 6:8.
இரட்சிப்பின் செய்தி
9ஏசாயா என்ற பெயரின் அர்த்தம், “யெகோவாவின் இரட்சிப்பு” என்பதாகும். இதுவே அவருடைய செய்தியின் கருப்பொருள் என சொல்லலாம். ஏசாயா உரைக்கும் தீர்க்கதரிசனங்களில் நியாயத்தீர்ப்பு செய்திகள் சில இருப்பது உண்மைதான். இருந்தாலும், அவற்றில் இரட்சிப்பின் செய்தி கணீரென்று தொனிக்கிறது. எப்படி ஏற்ற சமயத்தில் பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா விடுதலை செய்வார் என்பதையும், அவர்களில் மீதியானோரை சீயோனுக்கு திரும்ப அழைத்து வந்து முன்னாளைய மகிமையை அத்தேசத்திற்கு மகுடமாக சூட்டுவார் என்பதையும் ஏசாயா அடிக்கடி விவரித்தார். ஏசாயாவின் நெஞ்சை விட்டு
நீங்கா எருசலேம் திரும்பவும் புதுப்பொலிவுறுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை உரைக்கவும் எழுத்தில் வடிக்கவும் கிடைத்த பாக்கியமே அவருக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது என்பதில் சந்தேகமில்லை!10ஆனால் நியாயத்தீர்ப்பையும் இரட்சிப்பையும் பற்றிய இந்த செய்திகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யத்தின் நன்மைக்காக மட்டும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. அவருடைய செய்திகள் நம்முடைய நாளுக்கும் அதிக முக்கியத்துவமுடையவை. கடவுளுடைய ராஜ்யம் நமது பூமியில் பொழியப்போகும் மகத்தான ஆசீர்வாதங்களைப் பற்றிய மகிமையான காட்சியை ஏசாயா வர்ணிக்கிறார். இதன் சம்பந்தமாக, ஏசாயாவின் எழுத்துக்களில் பெரும்பாலானவை மேசியாவை முன்னறிவிப்பதில் கவனம் செலுத்துகின்றன. இந்த மேசியாவே கடவுளுடைய ராஜ்யத்தில் அரசராக ஆளுகை செய்வார். (தானியேல் 9:25; யோவான் 12:41) இயேசுவின் பெயரும் ஏசாயாவின் பெயரும், “யெகோவாவின் இரட்சிப்பு” என்ற ஒரே அர்த்தத்தைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை.
11ஏசாயாவின் காலத்திலிருந்து சுமார் ஏழு நூற்றாண்டுகள் கழித்தே இயேசு பிறந்தார். ஆனால் ஏசாயா புத்தகத்திலுள்ள மேசியானிய தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையை கண்டதைப் போல மிக நுணுக்கமாக விவரிக்கின்றன—மிகத் துல்லியமாகவும் இருக்கின்றன. இதனால்தான் ஏசாயா புத்தகம் “ஐந்தாம் சுவிசேஷம்” என சிலசமயம் அழைக்கப்படுவதாக ஓர் ஆதார ஏடு குறிப்பிட்டது. ஆகவே, மேசியாவை தெளிவாக அடையாளம் காட்டுவதற்கு இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அடிக்கடி ஏசாயா புத்தகத்தை மேற்கோள் காட்டியது ஆச்சரியமல்லவே.
12‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’ பற்றிய காட்சியை ஏசாயா மிக அழகாக சித்தரிக்கிறார். அங்கே “ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;” பிரபுக்களும் நியாயமாக ஆளுவார்கள். (ஏசாயா 32:1, 2; 65:17, 18; 2 பேதுரு 3:13) சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நம்பிக்கையை—இதயத்திற்கு இதமளிக்கும் நம்பிக்கையை—ஏசாயா புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. ‘யெகோவாவால் வரும் இரட்சிப்பை’ மகிழ்ச்சியோடு எதிர்நோக்கி ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாழிகையும் வாழ்வது நமக்கு எப்பேர்ப்பட்ட ஊக்கமளிக்கிறது! (ஏசாயா 25:9; 40:28-31) அப்படியானால், ஏசாயா புத்தகத்திலுள்ள பொன்னான செய்தியை ஆர்வத்தோடு ஆராய்வோமாக. அப்படி ஆராய்ந்தால், கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்முடைய நம்பிக்கை மிகவும் பலப்படுத்தப்படும். அதோடு, யெகோவாவே நம்முடைய இரட்சிப்பின் தேவன் என்ற நம்பிக்கையும் வளரும்.
[அடிக்குறிப்புகள்]
a ஏசாயாவின் தகப்பன் ஆமோத்ஸ் என்பவரை ஆமோஸ் என்பவரோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. உசியாவினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார், இவரும் ஒரு பைபிள் புத்தகத்தை எழுதினார், அது அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.
b ‘அக்கினியின் நடுவே நடப்பது’ வெறுமனே சுத்திகரிப்பு சடங்குதான் என சிலர் சொல்கின்றனர். ஆனால், இந்தச் சொற்றொடர் பலியையே குறிக்கிறது என்பதை சூழமைவு காட்டுகிறது. கானானியர்களும் விசுவாசதுரோக இஸ்ரவேலரும் குழந்தைகளை நரபலி செலுத்தினர் என்பதில் துளிகூட சந்தேகமில்லை.—உபாகமம் 12:31; சங்கீதம் 106:37, 38.
[கேள்விகள்]
1, 2. (அ) இன்றைய உலகில் நாம் காணும் பரிதாபகரமான நிலை என்ன? (ஆ) சமுதாயம் சீரழிந்து வருவதை அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வாறு விவரிக்கிறார்?
3. முக்கியமாக, எதிர்கால நம்பிக்கையை கொடுக்கும் பைபிள் புத்தகம் எது?
4. ஏசாயா யார், அவர் எப்பொழுது யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவித்தார்?
5, 6. ஏசாயாவின் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது, ஏன்?
7. ஏசாயாவின் நாளில் யூதாவில் நிலவிய நிலைமையை விவரிக்கவும்.
8. (அ) அரசர்களாகிய உசியா மற்றும் யோதாம் எப்படிப்பட்ட முன்மாதிரி வைத்தனர், அவர்களுக்கு ஜனங்கள் கீழ்ப்படிந்தார்களா? (ஆ) கலகத்தனமிக்க ஜனங்கள் மத்தியில் எவ்வாறு ஏசாயா தைரியத்தை காண்பித்தார்?
9. ஏசாயா என்ற பெயரின் அர்த்தம் என்ன, அவருடைய புத்தகத்தின் பொருளோடு இது எப்படி ஒத்திருக்கிறது?
10, 11. (அ) ஏசாயா புத்தகம் இன்று நமக்கு ஏன் அக்கறைக்குரியது? (ஆ) ஏசாயா புத்தகம் எவ்வாறு மேசியாவிடம் நம் கவனத்தைத் திருப்புகிறது?
12. நாம் ஏன் ஆர்வத்தோடு ஏசாயா புத்தகத்தின் ஆராய்ச்சியில் இறங்கலாம்?
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
ஏசாயா யார்?
பெயரின் அர்த்தம்: “யெகோவாவின் இரட்சிப்பு”
குடும்பம்: மணமானவர், குறைந்தது இரண்டு குமாரர்கள்
வசிப்பிடம்: எருசலேம்
சேவை செய்த ஆண்டுகள்: குறைந்தது 46 ஆண்டுகள், சுமார் பொ.ச.மு. 778 முதல் பொ.ச.மு. 732-க்குப் பின்பு வரை
யூதாவின் சமகாலத்து அரசர்கள்: உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா
சமகாலத்து தீர்க்கதரிசிகள்: மீகா, ஓசியா, ஓதேத்
[பக்கம் 6-ன் படம்]
ஏசாயாவும் அவருடைய மனைவியும் கடவுளுடைய சேவைக்கே முதலிடம் கொடுத்தனர்