Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீண்டும் பரதீஸ்!

மீண்டும் பரதீஸ்!

அதிகாரம் இருபத்து எட்டு

மீண்டும் பரதீஸ்!

ஏசாயா 35:1-10

“மனித மனங்களில் ஓயாது வட்டமிடுவது பரதீஸுக்கான ஏக்கமே. ஏக்கங்களிலேயே மனிதனை மிகவும் வாட்டியெடுக்கும் ஏக்கம் இதுவே. மதம் சார்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதாவதொரு விதத்தில் பரதீஸுக்கான ஆவல் இருக்கிறது” என த என்ஸைக்ளோபீடியா ஆஃப் ரிலிஜன் குறிப்பிடுகிறது. நோயோ, மரணமோ இல்லாத அழகிய தோட்டத்தில், அதாவது பரதீஸில்தான் மனித வாழ்க்கை ஆரம்பித்தது என பைபிள் சொல்கிறது. அதனால், மனிதனுக்கு இப்படிப்பட்ட ஏக்கம் இருப்பது இயற்கையே. (ஆதியாகமம் 2:8-15) எனவே, ஏதோவொரு வகையான பரதீஸில் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை பல உலக மதங்கள் போதிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

2பைபிளில் பல இடங்களில், எதிர்கால பரதீஸுக்கான மெய்யான நம்பிக்கையைப் பற்றி நாம் வாசிக்கிறோம். (ஏசாயா 51:3) உதாரணமாக, வறண்ட பாலைவனம் பூத்துக்குலுங்கும் பூங்காக்களாகவும் அமோக விளைச்சலைத் தரும் வயல்களாகவும் மாற்றப்படும் என அதிகாரம் 35-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஏசாயா தீர்க்கதரிசனம் விவரிக்கிறது. குருடர் பார்வையடைகின்றனர், ஊமையர் பேசுகின்றனர், செவிடர் கேட்கின்றனர். வாக்குப்பண்ணப்பட்ட இந்த பரதீஸில், துக்கமோ அல்லது ஏக்கப் பெருமூச்சோ இருக்காது, மரணமும் இருக்காது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. என்னே அருமையான வாக்குறுதி! இந்த வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வது? இன்று நமக்கும் அதே நம்பிக்கையை அவை அளிக்கின்றனவா? ஏசாயா புத்தகத்தின் இந்த அதிகாரத்தை ஆராய்ந்தால், இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.

பாழான தேசம் களிகூருதல்

3மீண்டும் பரதீஸ் நிலைநாட்டப்படுவது சம்பந்தமான ஏசாயாவின் இந்த தீர்க்கதரிசனம் பின்வரும் வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.”​—ஏசாயா 35:1, 2.

4ஏசாயா இந்த வார்த்தைகளை கிட்டத்தட்ட பொ.ச.மு. 732-⁠ல் எழுதுகிறார். அதற்கு சுமார் 125 வருடங்கள் கழித்து, பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கின்றனர். யூதாவின் மக்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுகின்றனர். அவர்கள் தேசம் மனித சஞ்சாரமின்றி குடியற்று போகிறது, பாழாக்கப்படுகிறது. (2 இராஜாக்கள் 25:8-11, 21-26) இஸ்ரவேல் ஜனங்கள் உண்மையற்றவர்களாக நிரூபித்தால் அடிமைகளாக கொண்டு போகப்படுவார்கள் என்ற யெகோவாவின் எச்சரிக்கை இவ்விதமாக நிறைவேறுகிறது. (உபாகமம் 28:15, 36, 37; 1 இராஜாக்கள் 9:6-8) அந்நிய நாட்டில் கைதிகளாக இஸ்ரவேல் தேசத்தார் கொண்டு போகப்படுவதால், நீர் வளம் பொருந்திய அவர்களது வயல்களும் பழத்தோட்டங்களும் 70 வருடங்கள் கவனிப்பாரின்றி வனாந்தரமாகின்றன.​—ஏசாயா 64:10; எரேமியா 4:23-27; 9:10-12.

5என்றாலும், தேசம் நிரந்தரமாக பாழாய்விடப்பட மாட்டாது என ஏசாயா தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது. அது மீண்டும் பரதீஸாக மாற்றப்படும். “லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும்” அதற்கு கொடுக்கப்படும். a எப்படி? சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து, மறுபடியும் தங்கள் தேசத்தில் பயிரிடுவர், வயல்களை வளமாக்குவர். அவர்களுடைய தேசம் மீண்டும் செழிப்படைந்து, பழைய நிலைக்கு வந்துவிடும். பரதீஸ்போன்ற நிலைமைகளை யூதர்கள் அனுபவிப்பர். இதற்கான பெருமை யெகோவாவையே சாரும். அவருடைய சித்தத்தாலும் அவரது உதவியாலும் ஆசீர்வாதத்தாலுமே இது நிறைவேற்றப்படும். வியக்கத்தக்க மாற்றத்தை தங்கள் தேசம் யெகோவாவின் கரத்தால் பெற்றதென மக்கள் புரிந்துகொள்கையில், அவர்கள் ‘யெகோவாவுடைய மகிமையையும், [அவர்களது] தேவனுடைய மகத்துவத்தையும்’ காண்பார்கள்.

6இருந்தாலும், மீண்டும் வளமாக்கப்பட்ட இஸ்ரவேல் தேசத்தில், ஏசாயாவின் வார்த்தைகள் இன்னும் முக்கியமான விதத்தில் நிறைவேற இருக்கின்றன. ஆவிக்குரிய விதத்தில், இஸ்ரவேல் பல வருடங்களாக வறண்ட, பாலைவனம் போன்ற நிலையில் இருக்கிறது. யூதர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கையில், மெய் வணக்கம் முடங்கிக்கிடந்தது. ஆலயம் இல்லை, பலிபீடம் இல்லை, ஒழுங்கமைக்கப்பட்ட ஆசாரியத்துவம் இல்லை. தினந்தோறும் அளிக்கப்படும் பலிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், இதற்கு முற்றிலும் எதிர்மாறான நிலைமைகளை ஏசாயா இப்போது தீர்க்கதரிசனமாக சொல்கிறார். செருபாபேல், எஸ்றா, நெகேமியா ஆகியோரின் தலைமையின்கீழ், இஸ்ரவேலின் 12 கோத்திரத்திலிருந்தும், அதாவது எல்லா கோத்திரத்திலிருந்தும் பிரதிநிதிகள் எருசலேமுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் ஆலயத்தை மீண்டும் கட்டி, சுதந்திரமாக யெகோவாவை வணங்குகின்றனர். (எஸ்றா 2:1, 2) இதுவே ஆவிக்குரிய பரதீஸ்!

உற்சாக ஆவி

7ஏசாயா 35-⁠ம் அதிகாரத்தின் வார்த்தைகளில் சந்தோஷத்தின் இழை உள்ளது. மனந்திரும்பிய தேசத்தாருக்கு பிரகாசமான எதிர்காலத்தை தீர்க்கதரிசி அறிவிக்கிறார். உறுதியோடும் நம்பிக்கையோடும் பேசுகிறார். இரண்டு நூற்றாண்டுகளுக்குப்பின், அத்தேசம் புதுப்பிக்கப்பட இருந்த சமயத்தில், நாடு கடத்தப்பட்ட யூதர்களுக்கு அதே உறுதியும் நம்பிக்கையும் தேவைப்பட்டது. ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, யெகோவா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்: “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.”​—ஏசாயா 35:3, 4.

8நீண்ட கால சிறையிருப்பின் முடிவில் அவர்கள் செயல்பட வேண்டிய காலம் வருகிறது. பெர்சிய ராஜா கோரேசு, பாபிலோனுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பை செயல்படுத்தும் கருவியாக செயல்படுகிறார். எருசலேமில் யெகோவாவின் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும் என அறிவிக்கிறார். (2 நாளாகமம் 36:22, 23) பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு செல்ல வேண்டிய ஆபத்து நிறைந்த பயணத்திற்கு ஆயிரக்கணக்கான எபிரெயக் குடும்பங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டியது அவசியம். எருசலேமுக்கு வந்து சேர்ந்ததும், வீடுகளைக் கட்ட வேண்டும்; ஆலயத்தையும் நகரத்தையும் திரும்ப கட்டும் அந்த சிறப்பான வேலைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். பாபிலோனிலுள்ள சில யூதர்களுக்கு, இவை அனைத்தையும் செய்வது மலைப்பாய் தோன்றியிருக்கலாம். என்றாலும், கோழைகள் போல் பயப்படுவதற்கோ, தயங்குவதற்கோ அது நேரமல்ல. யூதர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, யெகோவாவில் நம்பிக்கை வைக்க வேண்டிய சமயம் அது. அவர்கள் நிச்சயம் காக்கப்படுவார்கள் என யெகோவா உறுதி கூறுகிறார்.

9பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், களிகூருவதற்கான நல்ல காரணங்கள் இருக்கும். எருசலேமுக்கு திரும்பியதும் அவர்களுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏசாயா முன்னறிவிக்கிறார்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”​—ஏசாயா 35:5, 6அ.

10தம் மக்களுடைய ஆவிக்குரிய நிலையைப் பற்றியே யெகோவா மிகவும் அக்கறையாய் இருக்கிறார். அவர்களுடைய விசுவாச துரோகத்திற்காக 70 வருடங்கள் நாடு கடத்தப்பட்டு, தண்டனையை அனுபவிக்கின்றனர். இருந்தாலும், அவர்களை குருடர்களாகவோ, ஊமைகளாகவோ, செவிடர்களாகவோ, முடவர்களாகவோ ஆக்கி யெகோவா தண்டிக்கவில்லை. எனவே, இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, சரீரக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எதை இழந்தார்களோ அதையே, அதாவது ஆவிக்குரிய ஆரோக்கியத்தையே மறுபடியும் யெகோவா அவர்களுக்கு கொடுக்கிறார்.

11மனந்திரும்பிய யூதர்கள் குணமடைகின்றனர். அதாவது ஆவிக்குரிய உணர்வைப் பெறுகின்றனர். ஆவிக்குரிய அறிவையும், யெகோவாவின் வார்த்தையை கேட்டு, பேசி, கீழ்ப்படியும் உணர்வையும் பெறுகின்றனர். யெகோவாவிடமாக நெருங்கி இருப்பதன் அவசியத்தை புரிந்துகொள்கின்றனர். நல்ல நடத்தையால், தங்கள் கடவுளை சந்தோஷத்தோடே ‘கெம்பீரித்து’ துதிக்கின்றனர். ‘முடவராக’ இருந்தவர்கள், யெகோவாவின் வணக்கத்தில் ஆர்வத்தோடும் மும்முரமாகவும் ஈடுபடுகின்றனர். அடையாள அர்த்தத்தில், அவர்கள் ‘மானைப்போல் குதிப்பர்.’

யெகோவா தம் மக்களுக்கு புத்துணர்வு அளிக்கிறார்

12தண்ணீரில்லாத பரதீஸா! நினைத்துக்கூட பார்க்க முடியாதல்லவா! ஆதியில் பரதீஸாக திகழ்ந்த ஏதேனில் தண்ணீருக்கு பஞ்சமே இல்லை. (ஆதியாகமம் 2:10-14) இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட தேசம், “பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்.” (உபாகமம் 8:7) எனவேதான், ஏசாயா புத்துயிரளிக்கும் வாக்குறுதியை அளிக்கிறார்: “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.” (ஏசாயா 35:6ஆ, 7) இஸ்ரவேலர்கள் மறுபடியும் நிலத்தை பராமரிக்கையில், நரிகள் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பாழான இடங்கள் எல்லாம் பச்சைப் பசேலென, செழிப்பான பயிர்கள் தழைத்தோங்கும் வளமான இடமாய் மாறும். வறண்ட, புழுதிபடிந்த நிலம், நாணல் மற்றும் பலவிதமான கோரைப்புற்கள் வளரும் ‘சேறான’ இடமாகும்.​—யோபு 8:⁠11.

13நாடு திரும்பிய யூதர்கள், மிக முக்கியமாக, சத்தியத்தின் ஆவிக்குரிய தண்ணீரை அபரிமிதமாக பெறுவார்கள். அவருடைய வார்த்தையின் மூலமாக அறிவையும் உற்சாகத்தையும் ஆறுதலையும் யெகோவா அளிப்பார். அதோடு, விசுவாசமுள்ள மூப்பர்களும் பிரபுக்களும் “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக” இருப்பர். (ஏசாயா 32:1, 2) தூய வணக்கத்தை வளர்ப்பதில் முன்நின்ற எஸ்றா, ஆகாய், யெசுவா, நெகேமியா, சகரியா, செருபாபேல் போன்றவர்கள், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு உயிருள்ள சான்றுகளாக இருப்பர்.​—எஸ்றா 5:1, 2; 7:6, 10; நெகேமியா 12:⁠47.

“பரிசுத்த வழி”

14இப்படிப்பட்ட சரீர, ஆவிக்குரிய பரதீஸான நிலைமைகளை நாடு திரும்பும் யூதர்கள் அனுபவிக்கப்போவது உறுதி. ஆனால், அதற்கு முன்னால், பாபிலோனிலிருந்து எருசலேம் செல்லும் நீண்ட மற்றும் ஆபத்துகள் நிறைந்த பயணத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். நேர் வழியில் செல்வதென்றால், சுமார் 800 கிலோமீட்டர் வறண்ட, தரிசான நிலப்பகுதியை கடக்க வேண்டும். ஆனால், இதைவிட கொஞ்சம் சுலபமான பாதையில் செல்வதென்றால், 1,600 கிலோமீட்டர் பிரயாணம் செய்ய வேண்டும். எந்த வழியாக இருந்தாலும்சரி, அது பல மாதங்கள் பிரயாணத்தை உட்படுத்தும். அதுமட்டுமல்ல, மோசமான சீதோஷ்ண நிலையை எதிர்ப்பட வேண்டும்; காட்டு மிருகங்களிடமிருந்தும் மிருகத்தனமான மனிதர்களிடமிருந்தும் வரும் ஆபத்தையும் அவர்கள் எதிர்ப்பட வேண்டும். என்றபோதிலும், ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நம்பியவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஏன்?

15ஏசாயா மூலமாக யெகோவா உறுதியளிக்கிறார்: “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.” (ஏசாயா 35:8, 9) யெகோவா தம் மக்களை மறுபடியும் மீட்டுக்கொண்டிருக்கிறார்! அவரால் ‘மீட்கப்பட்டவர்கள்’ அவர்கள். தங்கள் நாட்டுக்கு திரும்புகையில் நிச்சயம் பாதுகாப்பு கொடுப்பதாக யெகோவா அவர்களுக்கு உறுதியளிக்கிறார். அப்படியானால், பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு செல்ல நிஜமாகவே தார்போட்ட, உயரமான, பாதுகாப்பான சாலை இருக்கிறதா? இல்லை. யெகோவாவின் மக்களுக்கு அவர்களுடைய பிரயாணத்தில் அவரது பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும் என்பதால், அவர்கள் நெடுஞ்சாலையில் செல்வதுபோல் இருக்கும்.​—சங்கீதம் 91:1-16-ஐ ஒப்பிடுக.

16ஆவிக்குரிய அபாயங்களிலிருந்தும் யூதர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். “பரிசுத்த வழி,” என்பது அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்ட நெடுஞ்சாலை. பரிசுத்த காரியங்களை அவமதிப்பவர்களும் ஆவிக்குரிய விதத்தில் அசுத்தமாக இருப்பவர்களும் இந்தப் பாதையில் செல்ல தகுதியற்றவர்கள். புதுப்பிக்கப்பட்ட தேசத்தில் இவர்களுக்கு இடமில்லை. சரியான உள்நோக்கம் உடையவர்களே, இதில் வாழ அனுமதிக்கப்படுவர். நாட்டுப்பற்று காரணமாகவோ அல்லது சொந்த நலன் கருதியோ அவர்கள் யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பிப் போகவில்லை. அந்த தேசத்தில் யெகோவாவின் தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதே முக்கியம் என்பதை ஆவிக்குரிய நாட்டமுள்ள யூதர்கள் அறிந்திருக்கிறார்கள்.​—எஸ்றா 1:1-3.

யெகோவாவின் மக்கள் களிகூருதல்

17ஏசாயா 35-⁠ம் அதிகாரம் மகிழ்ச்சியான ஒரு குறிப்போடு முடிகிறது: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” (ஏசாயா 35:10) சிறையிருப்பில் இருக்கும் யூதர்கள், ஆறுதலுக்கும் நம்பிக்கைக்கும் இந்த தீர்க்கதரிசனத்தையே எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், அதன் விவரங்கள் அனைத்தும் எப்படி துல்லியமாக நிறைவேறும் என அவர்கள் யோசித்திருக்கலாம். அந்த தீர்க்கதரிசனத்தின் பல அம்சங்களை அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும், அவர்கள் ‘திரும்பவும் சீயோனுக்கு வருவார்கள்’ என்பதில் சந்தேகமே இல்லை.

18எனவே, பொ.ச.மு. 537-⁠ல், பெண்கள் பிள்ளைகளோடுகூட, சுமார் 50,000 ஆண்கள் (7,000-⁠க்கும் அதிகமான அடிமைகள் உட்பட) அந்தப் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர். யெகோவாவில் முழு நம்பிக்கையோடு, எருசலேமுக்கு திரும்பி செல்லும் அந்த நான்கு மாத பிரயாணத்தை ஆரம்பிக்கின்றனர். (எஸ்றா 2:64, 65) ஒருசில மாதங்களில், யெகோவாவின் பலிபீடம் திரும்பிக் கட்டப்படுகிறது. ஆலயம் மீண்டும் முழுமையாக கட்டப்படுவதற்கான அடிக்கல்லாக இது அமைகிறது. 200 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. பாபிலோனிலிருக்கையில் அத்தேசத்தார் அனுபவித்த துக்கமும் ஏக்கமும், மீண்டும் புதுப்பிக்கப்பட்ட தேசத்தில் சந்தோஷமும் களிப்புமாக மாறுகிறது. யெகோவா தம் வாக்குறுதிகளை நிறைவேற செய்கிறார். சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் பரதீஸ் மீண்டும் பெறப்படுகிறது!

புதிய தேசத்தின் பிறப்பு

19பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், ஏசாயா 35-⁠ம் அதிகாரம் முழுமையான நிறைவேற்றம் அடையவில்லை. நாடு திரும்பிய யூதர்கள் அனுபவித்த பரதீஸிய நிலைமைகள் நிரந்தரமாக இருக்கவில்லை. காலப்போக்கில், பொய்மதப் போதகங்களும் நாட்டுப்பற்றும் மெய் வணக்கத்தை கறைப்படுத்துகின்றன. ஆவிக்குரிய விதத்தில், யூதர்கள் மறுபடியும் துக்கத்திலும் ஏக்கத்திலும் ஆழ்ந்துவிடுகின்றனர். முடிவில், யெகோவா அவர்களை நிராகரித்து விடுகிறார். (மத்தேயு 21:43) மறுபடியும் கீழ்ப்படியாமல் போனதால், அவர்களுடைய சந்தோஷம் நிரந்தரமாக இருக்கவில்லை. ஏசாயா 35-⁠ம் அதிகாரத்தின் பெரிய அளவு நிறைவேற்றம் இனிமேல்தான் என்பதை இவை அனைத்தும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

20உரிய காலத்தில், மற்றொரு இஸ்ரவேலை அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலை யெகோவா நிறுவினார். (கலாத்தியர் 6:16) பூமியில் தம் ஊழிய காலத்தில் இந்தப் புதிய இஸ்ரவேலை ஸ்தாபிப்பதற்கான அஸ்திபாரத்தை இயேசு நாட்டினார். மெய் வணக்கத்தை அவர் மீண்டும் நிலைநாட்டினார். அவருடைய போதகங்களால், சத்தியத்தின் தண்ணீர் மறுபடியும் பாய ஆரம்பித்தது. சரீர மற்றும் ஆவிக்குரிய நோயில் வாடியவர்களை குணப்படுத்தினார். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்படுகையில் களிகூருதலின் கூக்குரல் எழும்பியது. இயேசு, மரித்து உயிர்த்தெழுந்து ஏழு வாரங்களுக்குப் பின், மகிமைப்படுத்தப்பட்டவராக கிறிஸ்தவ சபையை நிறுவினார். இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தினால் மீட்கப்பட்ட யூதர்களும் மற்றவர்களும் அடங்கியதே இந்த ஆவிக்குரிய இஸ்ரவேல். இவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாகவும் இயேசுவின் சகோதரர்களாகவும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள்.​—அப்போஸ்தலர் 2:1-4; ரோமர் 8:16, 17; 1 பேதுரு 1:18, 19.

21இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினர்களுக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 35:3-ஐ மேற்கோள் காட்டினார்: ‘நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்துங்கள்.’ (எபிரெயர் 12:12) எனவே, பொ.ச. முதல் நூற்றாண்டில், ஏசாயா 35-⁠ம் அதிகாரத்தின் வார்த்தைகள் மறுபடியும் நிறைவேற்றம் அடைந்தன. குருடர் பார்வையடைந்தனர்; செவிடர் கேட்டனர். ‘முடவர்’ நடந்தனர்; ஊமையர் மறுபடியும் பேசினர். சொல்லர்த்தமாகவே, இயேசுவும் அவரது சீஷர்களும் இந்த அற்புதங்களைச் செய்தனர். (மத்தேயு 9:32; 11:5; லூக்கா 10:9) மிக முக்கியமாக, நேர்மை இருதயமுள்ள மக்கள் பொய் மதத்திலிருந்து வெளியே வந்தனர். கிறிஸ்தவ சபைக்குள் ஆவிக்குரிய பரதீஸை அனுபவித்தனர். (ஏசாயா 52:11; 2 கொரிந்தியர் 6:17) பாபிலோனிலிருந்து திரும்பிவந்த யூதர்களைப் போலவே, நம்பிக்கையான தைரியமான மனநிலை மிக அவசியம் என்பதை இவர்களும் உணர்ந்தார்கள்.​—ரோமர் 12:⁠11.

22நம்முடைய நாட்களைப் பற்றியதென்ன? ஏசாயா தீர்க்கதரிசனத்திற்கு மற்றொரு நிறைவேற்றம் இருக்கிறதா? இன்றுள்ள கிறிஸ்தவ சபையில் இது முழுமையாக நிறைவேறுமா? ஆம். அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட உண்மை கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. “களைகள்” அதாவது பொய்க் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் செழித்தோங்கினர். (மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர் 20:30; 2 பேதுரு 2:1-3) 19-⁠ம் நூற்றாண்டிலும், உண்மை மனதுள்ள ஆட்கள் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து பிரிந்து, மெய் வணக்கத்தை நாட ஆரம்பித்தனர். இருந்தாலும், அவர்களது பைபிள் அறிவு, வேதப்பூர்வமற்ற போதகங்களால் கறைபடிந்திருந்தது. 1914-⁠ல், இயேசு மேசியானிய ராஜாவாக பொறுப்பேற்றார். ஆனால், அதைத் தொடர்ந்து நிலைமைகள் மிகவும் மோசமாயின. சத்தியத்தை நாடும் உண்மை மனதுடையோருக்கு சூழ்நிலை மிகவும் இருண்டு காணப்பட்டது. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, தேசங்கள் ‘அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்தன.’ நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக இந்த உண்மை கிறிஸ்தவர்கள் எடுத்த முயற்சிகள் தடைசெய்யப்பட்டன. இதன் விளைவாக, அவர்கள் பாபிலோனிய சிறையிருப்பிற்குள் சென்றனர்.​—வெளிப்படுத்துதல் 11:7, 8.

23ஆனால், 1919-⁠ல் நிலைமைகள் மாறின. யெகோவா தம் மக்களை சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டு வந்தார். தங்கள் வணக்கத்தை அதுவரை கறைப்படுத்தி வந்த பொய்ப் போதகங்களை அவர்கள் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தனர். அதன் விளைவாக, அவர்கள் குணப்படுத்துதலை அனுபவித்தனர். ஆவிக்குரிய பரதீஸுக்குள் வந்தனர். இது இன்று உலகம் முழுவதிலும் தொடர்ந்து பரவி வருகிறது. ஆவிக்குரிய அர்த்தத்தில், குருடர் பார்வை அடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர். கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை முழுவதுமாக புரிந்துகொள்கின்றனர். எனவே, தொடர்ந்து யெகோவாவோடு நெருங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணர்ந்திருக்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 5:6; 2 தீமோத்தேயு 4:5) உண்மை கிறிஸ்தவர்கள் இனியும் ஊமைகளாக இருக்க மாட்டார்கள். பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கு ‘ஆனந்தக்களிப்போடே’ அறிவிப்பதில் இவர்கள் ஆர்வமாய் இருக்கின்றனர். (ரோமர் 1:15, NW) ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக அல்லது ‘முடமாக’ இருந்தவர்கள், இப்போது சந்தோஷத்தோடும் வைராக்கியத்தோடும் இருக்கின்றனர். அடையாள அர்த்தத்தில் சொன்னால், அவர்கள் ‘மானைப்போல் குதிக்கின்றனர்.’

24ஆவிக்குரிய விதத்தில் மீட்கப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் ‘பரிசுத்த வழியில்’ நடக்கின்றனர். ஆவிக்குரிய விதத்தில் சுத்தமாக இருக்கும் வணக்கத்தார் எல்லாருக்கும் இந்த “வழி” திறந்திருக்கிறது. மகா பாபிலோனிலிருந்து ஆவிக்குரிய பரதீஸுக்குள் இது கொண்டு செல்கிறது. (1 பேதுரு 1:13-16) இதில் நடப்பவர்கள், பாதுகாப்புக்காக யெகோவாவையே நம்பி இருக்கின்றனர். எனவே, மெய் வணக்கத்தை பூண்டோடு ஒழிக்க சாத்தான் எடுக்கும் மிருகத்தனமான எந்த தாக்குதலும் நிச்சயம் வெற்றி பெறாது என்பதில் முழு நம்பிக்கையாய் இருக்கின்றனர். (1 பேதுரு 5:8) கீழ்ப்படியாதவர்களும், கொடிய, மூர்க்கமான காட்டு மிருகங்களைப் போல நடக்கும் எவருமே கடவுளுடைய பரிசுத்த பாதையில் செல்வோரைக் கறைப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். (1 கொரிந்தியர் 5:11) இப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலில் யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள், அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் “வேறே ஆடுகளும்” உண்மையான ஒரே கடவுளை சேவிப்பதில் மகிழ்ச்சி காண்கின்றனர்.​—யோவான் 10:⁠16.

25எதிர்காலத்தைப் பற்றியதென்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சொல்லர்த்தமாகவும் நிறைவேற்றம் அடையுமா? ஆம். முதல் நூற்றாண்டில் இயேசுவும் அவரது சீஷர்களும் செய்த அற்புதமான குணப்படுத்துதல்கள் இதற்கு உறுதியளிக்கின்றன. எதிர்காலத்தில் மிக பிரமாண்டமான அளவில் இப்படிப்பட்ட சுகப்படுத்துதல்களை செய்ய யெகோவாவுக்கு விருப்பமும் சக்தியும் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பூமியில் சமாதானமான நிலைமைகளில் நித்திய ஜீவனை அனுபவிக்கலாம் என பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட சங்கீதங்கள் குறிப்பிடுகின்றன. (சங்கீதம் 37:9, 11, 29) இயேசுவும் இப்படிப்பட்ட பரதீஸ் வாழ்க்கையை வாக்குறுதி அளித்திருக்கிறார். (லூக்கா 23:43) பரதீஸுக்கான நம்பிக்கையை, பைபிளின் முதல் புத்தகத்திலிருந்து கடைசி புத்தகம் வரை காண முடிகிறது. அது பூமியில் ஸ்தாபிக்கப்படும்போது, குருடர், செவிடர், முடவர், ஊமையர் நிரந்தரமாக குணமாக்கப்படுவர். துக்கமோ ஏக்கமோ எல்லாம் பறந்துவிடும். களிகூருதல் என்றென்றைக்கும் இருக்கும்.​—வெளிப்படுத்துதல் 7:9, 16, 17; 21:3, 4.

26சொல்லர்த்தமான பரதீஸிய பூமிக்காக உண்மை கிறிஸ்தவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், இப்போதே அவர்கள் ஆவிக்குரிய பரதீஸில் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகின்றனர். சோதனைகளையும் துயரங்களையும், நம்பிக்கையான மனநிலையோடே சந்திக்கின்றனர். யெகோவாவில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்; மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்” என்ற இந்த புத்திமதிக்கும் கீழ்ப்படிந்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகின்றனர். இந்த தீர்க்கதரிசன வாக்குறுதிகளை முழுமையாக நம்புகின்றனர்: “இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்.”​—ஏசாயா 35:3, 4.

[அடிக்குறிப்பு]

a செழுமையான காடுகளும் கம்பீரமான கேதுருக்களும் நிறைந்த ஏதேன் தோட்டத்திற்கு இணையான செழிப்பான தேசமாக பூர்வ லீபனோனை பைபிள் விவரிக்கிறது. (சங்கீதம் 29:5; 72:16; எசேக்கியேல் 28:11-13) பாய்ந்தோடும் நீரோடைகளுக்கும் ஓக் மரக்காடுகளுக்கும் பெயர்போனது சாரோன்; திராட்சத் தோட்டங்களுக்கும், பழத்தோட்டங்களுக்கும், மலர்க்கம்பளம் விரிக்கப்பட்ட மலைச்சரிவுகளுக்கும் பிரபலமானது கர்மேல்.

[கேள்விகள்]

1. பரதீஸில் வாழ்க்கை எனும் நம்பிக்கையை ஏன் பல மதங்கள் போதிக்கின்றன?

2. எதிர்கால பரதீஸுக்கான மெய்யான நம்பிக்கையை நாம் எங்கே காணலாம்?

3. ஏசாயா தீர்க்கதரிசனத்தின்படி, தேசம் எப்படி மாற்றப்படும்?

4. எப்படி, எப்போது யூதா தேசம் வனாந்தரமாக காட்சியளிக்கிறது?

5. (அ) தேசம் மீண்டும் எப்படி பரதீஸ் போன்ற நிலைக்கு மாற்றப்படும்? (ஆ) ‘யெகோவாவுடைய மகிமையை’ மக்கள் எந்த அர்த்தத்தில் காண்பார்கள்?

6. ஏசாயாவின் வார்த்தைகள் என்ன முக்கியமான கருத்தில் நிறைவேற்றம் அடைகின்றன?

7, 8. நாடு கடத்தப்பட்ட யூதர்களுக்கு ஏன் நம்பிக்கையான மனநிலை தேவை, ஏசாயாவின் வார்த்தைகள் எப்படி உற்சாகத்தை அளிக்கின்றன?

9. நாடு திரும்பும் யூதர்களுக்கு என்ன மகத்தான வாக்குறுதி காத்திருக்கிறது?

10, 11. நாடு திரும்பும் யூதர்களுக்கு, ஏசாயாவின் வார்த்தைகள் ஏன் ஆவிக்குரிய அர்த்தத்தை அளிக்கின்றன, அதன் பொருள் என்ன?

12. யெகோவா எந்தளவுக்கு தேசத்தின் நீர்வளத்தை பெருக்குவார்?

13. மீண்டும் நிலைநாட்டப்பட்ட தேசத்தில் என்ன ஆவிக்குரிய தண்ணீர் அபரிமிதமாக இருக்கும்?

14. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கவும்.

15, 16. (அ) நாடு திரும்பும் விசுவாசமுள்ள யூதர்களுக்கு யெகோவா என்ன வகையான பாதுகாப்பை கொடுக்கிறார்? (ஆ) வேறு என்ன அர்த்தத்தில், பாதுகாப்பான நெடுஞ்சாலையை யெகோவா யூதர்களுக்கு கொடுக்கிறார்?

17. நீண்ட சிறையிருப்பில் இருக்கும் விசுவாசமுள்ள யூதர்களுக்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படி ஆறுதல் அளிக்கிறது?

18. பாபிலோனிலிருக்கையில் அனுபவித்த துக்கமும் ஏக்கமும், மீண்டும் புதுப்பிக்கப்பட்ட தேசத்தில் எப்படி சந்தோஷமும் களிப்புமாக மாறுகிறது?

19. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறவில்லை என எப்படி சொல்லலாம்?

20. பொ.ச. முதல் நூற்றாண்டில் என்ன புதிய இஸ்ரவேல் ஸ்தாபிக்கப்பட்டது?

21. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் சில அம்சங்களின் நிறைவேற்றமாக என்ன நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்?

22. சத்தியத்தை நாடிய உண்மை மனதுடைய நவீன கால கிறிஸ்தவர்கள் எப்படி பாபிலோனிய சிறையிருப்பிற்குள் சென்றனர்?

23, 24. ஏசாயாவின் வார்த்தைகள் 1919 முதற்கொண்டு கடவுளுடைய மக்களிடம் என்ன வழிகளில் நிறைவேற்றம் அடைந்திருக்கின்றன?

25. ஏசாயா 35-⁠ம் அதிகாரம் சொல்லர்த்தமாக நிறைவேறுமா? விளக்கவும்.

26. ஏசாயாவின் வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களை எப்படி பலப்படுத்துகின்றன?

[பக்கம் 370-ன் முழுபக்க படம்]

[பக்கம் 375-ன் படங்கள்]

நாணலும் கோரைப் புற்களும் வளரும் நீர்வளம் கொழிக்கும் இடமாக வனாந்தரம் மாறுகிறது

[பக்கம் 378-ன் படம்]

சரீர மற்றும் ஆவிக்குரிய நோயில் வாடியவர்களை இயேசு சொஸ்தப்படுத்தினார்