Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சி

மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சி

அதிகாரம் பதிமூன்று

மேசியாவின் ஆட்சி​—⁠இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சி

ஏசாயா 11:1–12:6

ஏசாயாவின் காலத்தில், கடவுளின் உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களின் ஆவிக்குரிய நிலைமை மோசமாக இருந்தது. உத்தமத்தில் சீலர்களாக விளங்கிய உசியா, யோதாம் போன்ற மன்னர்களின் ஆட்சியிலும் அநேகர் பொய் கடவுட்களை வணங்கி வந்தனர். (2 இராஜாக்கள் 15:1-4, 34, 35; 2 நாளாகமம் 26:1, 4) எசேக்கியா அரியணையில் அமர்ந்தபோது, பாகால் பலிபீடங்களையும் சிலைகளையும் அடியோடு அழிக்கும் படலம் அவருக்குமுன் காத்திருந்தது. (2 நாளாகமம் 31:1) ஆகவே, யெகோவா அவர்களை பரிவோடு அழைப்பதிலும் அவர்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுப்பதிலும் வியப்பேதுமில்லை!

2ஆனால் அனைவருமே கலகக்காரர்களாக மாறிவிடவில்லை. யெகோவாவை உண்மையோடு சேவித்த தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு செவிகொடுத்த சில யூதர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஏசாயாவின் வாயிலாக ஆறுதல் மொழிகளை யெகோவா அள்ளி வழங்கினார். அசீரியா யூதாவின்மீது படையெடுத்து அதை சூறையாடப் போவதை விவரித்த பிற்பாடு, மேசியாவின் ஆட்சி அருளும் அருமையான ஆசீர்வாதங்களை பதிவுசெய்யும்படி கடவுள் அவரை ஏவினார். a பைபிளிலுள்ள வாக்கியங்களிலேயே முத்தான வாக்கியங்கள் இவை. இவை விவரிக்கும் ஆசீர்வாதங்களில் சில, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து சிறகடித்து வெளிவந்தபோது சிறிய அளவில் நிறைவேறின. ஆனால் இந்த தீர்க்கதரிசனம் பெரிய அளவில் நிறைவேறுவது இன்றுதான். ஏசாயாவும் உண்மையுள்ள யூதர்களும் இந்த ஆசீர்வாதங்களைக் கண்ணார காண இன்று உயிரோடு இல்லைதான். ஆனால் விசுவாசக் கண்களால் அன்றே கண்டார்கள், மீண்டும் உயிர்த்தெழுந்து வருகையில் மெய்யாகவும் காண்பார்கள்.​—⁠எபிரெயர் 11:35.

3இன்றும் யெகோவாவின் ஜனங்களுக்கு உற்சாகம் தேவைப்படுகிறது. ஒழுக்க நெறிமுறைகள் பிறழ்ந்துகொண்டே போவதாலும் ராஜ்ய செய்தி தீவிரமாக எதிர்க்கப்படுவதாலும் சொந்த பலவீனங்களாலும்கூட அவர்கள் ஒவ்வொருவரும் அல்லல்படுகின்றனர். மேசியாவையும் அவரது ஆட்சியையும் பற்றிய ஏசாயாவின் அருமையான வார்த்தைகள் அவர்களுடைய உள்ளத்திற்கு உரமூட்டும், சவால்களை சமாளிக்கவும் உதவும்.

மேசியா​—⁠திறமைவாய்ந்த தலைவர்

4ஏசாயாவின் நாட்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, இஸ்ரவேலில் மேசியா தோன்றுவார் என பைபிளின் மற்ற எபிரெய எழுத்தாளர்கள் முன்னறிவித்தார்கள். (ஆதியாகமம் 49:10; உபாகமம் 18:18; சங்கீதம் 118:22, 26) இப்போது யெகோவா, தாம் அனுப்பப்போகும் அந்த உண்மையான தலைவரைப் பற்றி ஏசாயாவின் மூலம் இன்னும் பல விவரங்களை தருகிறார். ஏசாயா எழுதுவதாவது: “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” (ஏசாயா 11:1; ஒப்பிடுக: சங்கீதம் 132:11, 12ஆ.) “துளிர்,” “கிளை” ஆகிய இரண்டு வார்த்தைகளுமே, ஈசாயின் வம்சத்தில் மேசியா தோன்றுவார் என சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரவேலின் ராஜாவாக தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட ஈசாயின் குமாரனான தாவீதின் வம்சத்தில் மேசியா தோன்றவிருந்தார். (1 சாமுவேல் 16:13; எரேமியா 23:5; வெளிப்படுத்துதல் 22:16) தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த உண்மையான மேசியா வரும் காலமே, “கிளை” செழித்து நன்கு கனிதரப்போகும் காலமாகும்.

5இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா. இயேசு “நசரேயன்” என அழைக்கப்பட்டது, தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடியே நிறைவேறியது என சுவிசேஷ எழுத்தாளர் மத்தேயு குறிப்பிட்டார். அவர் ஏசாயா 11:1-ஐ மனதில் கொண்டே அவ்வாறு குறிப்பிட்டார். ஏனெனில், நசரேயன் என்ற வார்த்தை, ஏசாயா 11:1-⁠ல் “கிளை” என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டதாகும். b இயேசு நாசரேத்து ஊரில் வளர்க்கப்பட்டதால் நசரேயன் என அழைக்கப்பட்டார்.​—மத்தேயு 2:23, NW அடிக்குறிப்பு; லூக்கா 2:39, 40.

6மேசியா எப்படிப்பட்ட அரசராக இருப்பார்? இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வட ராஜ்யத்தை அழித்த கொடூரமான அசீரியனைப் போல் இருப்பாரா? நிச்சயமாக இல்லை. மேசியாவைப் பற்றி ஏசாயா சொல்வதாவது: “அவர்மேல் யெகோவாவின் ஆவி தங்கும்; அது ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவுரைத் திறனையும் வல்லமையையும் யெகோவாவைப் பற்றிய அறிவையும் பயத்தையும் அருளும் ஆவியாம். யெகோவாவுக்குப் பயப்படுவதே அவருக்கு மிகவும் சந்தோஷமானது.” (ஏசாயா 11:2, 3அ, NW) மேசியா தைலத்தால் அல்ல, ஆனால் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படுகிறார். இது, இயேசு முழுக்காட்டப்பட்ட சமயத்தில் நடக்கிறது; பரிசுத்த ஆவி புறா வடிவில் அவர்மீது இறங்குவதை யோவான் பார்க்கிறார். (லூக்கா 3:22) யெகோவாவின் ஆவி இயேசுமீது ‘தங்குகிறது.’ இதற்கு அத்தாட்சியளிக்கும் வண்ணம் அவர் ஞானத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் அறிவுரைத் திறனோடும் வல்லமையோடும் அறிவோடும் நடந்துகொள்கிறார். செம்மையான அரசருக்குரிய செவ்விய குணங்கள் அன்றோ!

7இயேசுவின் சீஷர்களும் பரிசுத்த ஆவியைப் பெற முடியும். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என இயேசு ஒருமுறை சொன்னார். (லூக்கா 11:13) ஆகவே கடவுளிடம் பரிசுத்த ஆவியைக் கேட்க நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது. அதேசமயத்தில், பரிசுத்த ஆவியின் அருமையான கனிகளாகிய “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவற்றை எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) பிரச்சினைகளை சமாளிக்க ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தைக்’ கேட்கும் இயேசுவின் சீஷர்களுக்கு கண்டிப்பாக அதை அருளுவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்.​—யாக்கோபு 1:5; 3:⁠17.

8மேசியா என்ன அர்த்தத்தில் யெகோவாவிற்கு பயப்படுகிறார்? கடவுளைக் கண்டு குலைநடுங்குகிறார், அவரது நியாயத்தீர்ப்பிற்கு அஞ்சுகிறார் என நிச்சயம் அர்த்தப்படுத்தாது. மாறாக, கடவுள்மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம், அன்பினால் பயபக்தியோடு நடந்துகொள்கிறார். தெய்வ பக்தியுள்ளவர், இயேசுவைப் போல கடவுளுக்கு ‘பிரியமானவைகளையே’ எப்போதும் செய்ய விரும்ப வேண்டும். (யோவான் 8:29) ஆரோக்கிய பயத்தில் தினந்தினம் யெகோவாவை சேவிப்பதைவிட அதிக ஆனந்தம் வேறில்லை என்பதை இயேசு சொல்லாலும் செயலாலும் கற்பித்தார்.

நீதியும் இரக்கமும் நிறைந்த நியாயாதிபதி

9மேசியாவின் குணங்களை ஏசாயா தொடர்ந்து முன்னறிவிக்கிறார்: “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும் இருப்பார்.” (ஏசாயா 11:3ஆ) உங்கள் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றால், இப்படிப்பட்ட ஒரு நீதிபதியைத்தானே எதிர்பார்ப்பீர்கள்! மனிதவர்க்கத்தையே நியாயந்தீர்க்கும் நீதிபதியான மேசியாவிடம், பொய் வாதங்களும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் வதந்திகளும், ஏன் செல்வமும் செல்வாக்கும்கூட பலிக்காது. வஞ்சனையை உடனடியாக கண்டுகொள்கிறார், வெளித்தோற்றத்தைப் பார்க்காமல் ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை’ அல்லது ‘மறைவான மனிதனை’ காண்கிறார். (1 பேதுரு 3:4, NW அடிக்குறிப்பு) கிறிஸ்தவ சபையில் நியாயந்தீர்க்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இயேசு தலைசிறந்த முன்மாதிரி!​—1 கொரிந்தியர் 6:1-4.

10மேசியாவின் தலைசிறந்த குணங்களை எவ்வாறு அவரது நியாயத்தீர்ப்புகளில் காணலாம்? இதோ, ஏசாயா கூறுவதை கேளுங்கள்: “நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.”​—ஏசாயா 11:4, 5.

11தேவையான சமயத்தில் இயேசு தமது சீஷர்களை சிட்சிக்கிறார், அதுவும் அவர்களுக்கு மிகுந்த நன்மையளிக்கும் விதத்தில் சிட்சிக்கிறார். இது கிறிஸ்தவ மூப்பர்களுக்கு அருமையான மாதிரி. பொல்லாதவர்களின் விஷயத்திலோ இயேசு கடும் நடவடிக்கை எடுப்பார். இந்த உலகம் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டிய காலம் வரும். அப்போது மேசியா தமது அதிகாரப்பூர்வ தொனியால் ‘பூமியை அடித்து,’ துன்மார்க்கர் அனைவர்மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். (சங்கீதம் 2:9; வெளிப்படுத்துதல் 19:15-ஐ ஒப்பிடுக.) இறுதியில், சமாதானத்தையும் அமைதியையும் குலைத்துப்போட பொல்லாதவன் ஒருவனும் இருக்க மாட்டான். (சங்கீதம் 37:10, 11) நீதியையும் சத்தியத்தையும் அரைக்கட்டாகவும் இடைக்கச்சையாகவும் அணிந்திருக்கும் இயேசுவிற்கு இதை சாதிக்கும் வல்லமை உண்டு.​—சங்கீதம் 45:3-7.

பூமியில் தலைகீழ் மாற்றங்கள்

12எருசலேமுக்குத் திரும்பிச் சென்று ஆலயத்தை கட்ட வேண்டுமென்ற கோரேசின் ஆணையைக் கேட்டவுடன் இஸ்ரவேலருக்கு எப்படி இருந்திருக்கும்? பாபிலோனில் சுகஜீவிதத்தை விட்டுவிட்டு நீண்ட நெடிய பயணத்தை விரும்புவார்களா? 70 வருடங்கள் மனித சஞ்சாரமற்று பாழாய் கிடந்த இஸ்ரவேல் எங்கும் இப்போது முட்செடிகளும் புல்பூண்டுகளும் புதர்களாக மண்டிக்கிடக்கின்றன. சிறுத்தைகளும் சிங்கங்களும் ஓநாய்களும் கரடிகளும் வலம் வரும் வனங்களாகிவிட்டிருக்கின்றன. நாகப்பாம்புகளின் நடமாட்டத்திற்கும் பஞ்சமே இல்லை. திரும்பி வரும் யூதர்களுக்கோ உணவுக்கும் உடைக்கும் ஆடு மாடுகள் வேண்டும், உழவுக்கு எருதும் வேண்டும். ஆனால் பிழைப்புக்கு தேவையான இந்த மிருகங்களை காட்டு விலங்குகள் கபளீகரம் செய்துவிட்டால்? பாலகரை பாம்புகள் தீண்டிவிட்டால்? அல்லது போகும் வழியிலேயே போக்கிரிகளின் கையில் மாட்டிக்கொண்டால்?

13கடவுள் கொண்டுவரப் போகும் நிலைமைகளை ஏசாயா வர்ணிப்பதை மனத்திரையில் பாருங்கள்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடி மேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வலையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:6-9) இதயத் தடாகத்தில் இன்ப வெள்ளம் பொங்குகிறதல்லவா? யெகோவாவைப் பற்றிய அறிவே இந்த சமாதானப் பூங்காவிற்கு காரணம் என்பதை கவனியுங்கள். ஆகவே மூர்க்க மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மட்டுமே இவ்வார்த்தைகள் வர்ணிப்பதில்லை. ஏனெனில் யெகோவாவைப் பற்றிய அறிவு மிருகங்களை அல்ல, மனிதர்களையே மாற்றும். அப்படியென்றால் இஸ்ரவேலர்கள் நாடு திரும்பும்போதும் சரி, திரும்பிய பிறகும் சரி, மூர்க்க மிருகங்களைக் குறித்தோ மிருக குணம் படைத்த மனிதர்களைக் குறித்தோ அஞ்ச வேண்டியதில்லை.​—எஸ்றா 8:21, 22; ஏசாயா 35:8-10; 65:⁠25.

14இதே தீர்க்கதரிசனத்திற்கு பெரிய நிறைவேற்றமும் உண்டு. 1914-⁠ல் பரலோக சீயோன் மலையில் மேசியாவாகிய இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டார். 1919-⁠ல் ‘தேவனுடைய இஸ்ரவேலரில்’ மீதியானோர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி, உண்மை வணக்கத்தை மீண்டும் தழைக்கச் செய்தனர். (கலாத்தியர் 6:16) இதன் காரணமாக, பரதீஸ் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நவீன நாளில் நிறைவேறுவதற்கு வழி பிறந்தது. யெகோவாவைப் பற்றிய “திருத்தமான அறிவு” மக்களின் இயல்பை மாற்றியிருக்கிறது. (கொலோசெயர் 3:9, 10, NW) சண்டைக்காரர்களும் சாந்தம் அடைந்திருக்கிறார்கள். (ரோமர் 12:2; எபேசியர் 4:17-24) லட்சக்கணக்கானோரின் வாழ்வு இவ்வாறு மேம்பட்டிருக்கிறது, ஏனெனில் ஏசாயாவின் தீர்க்கதரிசனம், எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் பூமிக்குரிய நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. (சங்கீதம் 37:29; ஏசாயா 60:22) கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தின்படியே முழு பூமியும் சமாதானமும் பாதுகாப்பும் செழித்தோங்கும் பரதீஸாக மாறப்போகும் சமயத்திற்காக காத்திருக்க அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.​—மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:⁠13.

15வரப்போகும் பரதீஸில் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இன்னும் பெரிய அளவில், சொல்லர்த்தமாக நிறைவேறுமா? நிறைவேறும் என்றே எதிர்பார்க்கலாம். தாயகம் திரும்பிய இஸ்ரவேலருக்கு கொடுத்த அதே உறுதியையே மேசியாவின் ஆட்சியில் வாழப்போகும் அனைவருக்கும் இந்தத் தீர்க்கதரிசனம் தருகிறது; அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் எவ்வித தீங்கும் வராது​—⁠மனிதர்களிடமிருந்தும் சரி மிருகங்களிடமிருந்தும் சரி. மேசியானிய ராஜ்யத்தின்கீழ் பூமியில் வாழும் அனைவரும், ஆதாமும் ஏவாளும் ஏதேனில் அனுபவித்தது போன்ற சமாதானத்தை அனுபவித்து மகிழ்வர். ஏதேனில் வாழ்க்கை எப்படியிருந்தது அல்லது பரதீஸில் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் குறித்து பைபிள் எல்லா விவரங்களையும் அளிப்பதில்லைதான். இருந்தாலும் ஞானமும் அன்பும் நிறைந்த அரசராகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில், எல்லாமே மிகவும் நேர்த்தியாக இருக்கும் என முழுமையாக நம்பலாம்.

மேசியாவால் மெய் வணக்கம் நிலைநாட்டப்படுதல்

16சாத்தான், ஏதேனில் ஆதாமையும் ஏவாளையும் யெகோவாவிற்கு விரோதமாக செயல்பட வைத்தபோது மெய் வணக்கம் முதன்முதலாக தாக்கப்பட்டது. எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரை கடவுளிடமிருந்து பிரிப்பதற்கான முயற்சியில் சாத்தான் இந்நாள்வரை கொஞ்சமும் தளரவில்லை. ஆனால் மெய் வணக்கம் பூமியிலிருந்து ஒரேடியாக அழிக்கப்படுவதை யெகோவா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ஏனெனில் அது அவரது பெயரோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; அதுமட்டுமல்ல, தம்மை நேசிப்பவர்கள்மீது அவருக்கு அதிக அக்கறையும் உண்டு. ஆகவே ஏசாயாவின் மூலம் இந்தக் குறிப்பிடத்தக்க வாக்குறுதியை அளிக்கிறார்: “அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் [“வசிப்பிடம்,” NW] மகிமையாயிருக்கும்.” (ஏசாயா 11:10) பொ.ச.மு. 537-⁠ல், தாவீதால் தலைநகராக்கப்பட்ட எருசலேமே கொடியாக நின்றது. அதாவது, ஆலயத்தை கட்ட திரும்பிவரும்படி, சிதறடிக்கப்பட்ட யூதர்களில் உண்மையுள்ளவர்களை அழைத்த கொடிக்கம்பமாக அல்லது சின்னமாக விளங்கியது.

17இருந்தாலும் அந்தத் தீர்க்கதரிசனத்தில் இன்னும் அநேக விஷயங்கள் பொதிந்துள்ளன. ஏற்கெனவே பார்த்த வண்ணமாக, அது சகலருக்கும் ஒரே உண்மையான தலைவராகிய மேசியாவின் ஆட்சியைப் பற்றி பேசுகிறது. புறஜாதியாரும் கிறிஸ்தவ சபையில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதைக் காட்ட அப்போஸ்தலன் பவுல் இந்த வசனத்தின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.” (ரோமர் 15:12) பவுலின் நாட்களில் மட்டுமல்ல, நம் நாளிலும் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. இன்றும் சகல தேசத்து மக்களும் மேசியாவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களை ஆதரிப்பதன் மூலம் யெகோவாவின் மீதான அன்பை வெளிக்காட்டுகின்றனர்.​—ஏசாயா 61:5-9; மத்தேயு 25:31-40.

18ஏசாயா குறிப்பிட்ட ‘அக்காலம்,’ நவீன காலத்தில் எப்போது நிறைவேற ஆரம்பித்தது? கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக 1914-⁠ல் மேசியா அமர்த்தப்பட்டபோது அது ஆரம்பித்தது. (லூக்கா 21:10; 2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 12:10) அதுமுதல் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் நீதியுள்ள அரசாங்கத்திற்காக ஏங்கும் எல்லா தேசத்து மக்களுக்கும் இயேசு கிறிஸ்து தெளிவான கொடியாக அல்லது கொடிக்கம்பமாக இருந்துவருகிறார். மேசியா முன்னறிவித்தபடியே, அவரது வழிநடத்துதலின்கீழ் ராஜ்யத்தின் நற்செய்தி எல்லா தேசத்தாருக்கும் அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு 24:14; மாற்கு 13:10) இந்த நற்செய்தியின் பலன் என்ன? இதனால், ‘ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்கள்,’ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரோடு சேர்ந்து மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டு, மேசியாவிற்குக் கீழ்ப்படிகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9) இவ்வாறு அநேக புதியவர்கள் யெகோவாவின் ஆவிக்குரிய ‘ஜெப வீட்டில்’ மீதியானோரோடு சேர்ந்துகொள்கையில், மேசியாவின் ‘வசிப்பிடமான’ கடவுளுடைய மகா ஆவிக்குரிய ஆலயத்திற்கு மகிமை சேருகிறது.​—ஏசாயா 56:7; ஆகாய் 2:⁠7.

யெகோவாவை சேவிக்கும் ஒன்றுபட்ட மக்கள்

19பலம்படைத்த எதிரியால் இஸ்ரவேல் தேசம் ஒடுக்கப்பட்டபோது யெகோவா இரட்சிப்பை அருளினார் என்பதை ஏசாயா அடுத்ததாக நினைப்பூட்டுகிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து யெகோவா இஸ்ரவேலரை விடுவித்த அக்காலகட்டம், உண்மையுள்ள யூதர்கள் ஒவ்வொருவருடைய நெஞ்சைவிட்டு நீங்காத அனுபவம். ஏசாயா எழுதுவதாவது: “அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும் எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம் விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிகளுக்கு ஒரு கொடியை [“தேசங்களுக்கு ஒரு கொடிக்கம்பத்தை,” NW] ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.” (ஏசாயா 11:11, 12) கையைப் பிடித்து கூட்டிச்செல்வதுபோல், யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்த உண்மையுள்ள மீதியானோரை சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து தாயகத்திற்கு பாதுகாப்பாக அழைத்துவருவார். இது பொ.ச.மு. 537-⁠ல் சிறிய அளவில் நிறைவேறுகிறது. அதன் பெரிய நிறைவேற்றமோ அதைக் காட்டிலும் அதிக சிறப்புவாய்ந்தது! 1914-⁠ல், இயேசு கிறிஸ்துவை யெகோவா ராஜாவாக்கி, ‘தேசங்களுக்கு ஒரு கொடிக்கம்பமாக’ நிறுத்தினார். மெய் வணக்கத்தில் ஈடுபடும் ஆர்வத்தோடு, 1919 முதற்கொண்டு ‘தேவனுடைய இஸ்ரவேலரில்’ மீதியானோர் இந்தக் கொடிக்கம்பத்திடம் திரண்டு சென்றிருக்கின்றனர். தனித்தன்மை வாய்ந்த இந்த ஆவிக்குரிய தேசத்தினர், “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வருகிறவர்கள்.​—வெளிப்படுத்துதல் 5:⁠9.

20திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்தின் ஒற்றுமையை ஏசாயா இப்போது விவரிக்கிறார். வட ராஜ்யத்தை எப்பிராயீம் என்றும் தென் ராஜ்யத்தை யூதா என்றும் குறிப்பிட்டு இப்படிச் சொல்கிறார்: “எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான். அவர்கள் இருவரும் ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.” (ஏசாயா 11:13, 14) பாபிலோனிலிருந்து திரும்பும் யூதர்கள் இனியும் இரு தேசங்களாக பிரிந்திருக்க மாட்டார்கள். இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் ஒன்றுபட்டவர்களாக தாயகத்திற்குத் திரும்புவார்கள். (எஸ்றா 6:17) இனியும் அவர்களிடையே பகைமையும் வெறுப்பும் இருக்காது. சுற்றியுள்ள எதிரி தேசங்களை ஒன்றுபட்ட மக்களாக ஜெயங்கொள்வர்.

21இதைக் காட்டிலும் அதிசயத்தக்கது, ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ ஐக்கியம். ஆவிக்குரிய இஸ்ரவேலின் 12 அடையாளப்பூர்வ கோத்திரத்தாரும் சுமார் 2,000 ஆண்டுகளாக ஒற்றுமையை அனுபவித்து வருகின்றனர். கடவுள் மீதும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் மீதும் அன்பு காட்டுவதில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். (கொலோசெயர் 3:14; வெளிப்படுத்துதல் 7:4-8) இன்று உலகெங்குமுள்ள யெகோவாவின் ஜனங்கள்​—⁠ஆவிக்குரிய இஸ்ரவேலரும் சரி திரள் கூட்டத்தாரும் சரி​—⁠மேசியாவின் ஆட்சியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மகிழ்ந்து அனுபவிக்கிறார்கள். இவற்றை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் அறியா. யெகோவாவின் சாட்சிகள், தங்கள் வணக்கத்தை தடைசெய்ய சாத்தான் எடுக்கும் முயற்சிகளை ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள். ஒரே தொகுதியாக, இயேசுவின் கட்டளைப்படி ராஜ்யத்தின் நற்செய்தியை சகல தேசங்களிலும் பிரசங்கிக்கிறார்கள், கற்பிக்கிறார்கள்.​—மத்தேயு 28:19, 20.

தடைகள் தகர்க்கப்படும்

22இஸ்ரவேலர்கள் தாயகம் திரும்பாதபடி அநேக தடைகள் சொல்லர்த்தமாகவும் அடையாளப்பூர்வமாகவும் ஏற்படுகின்றன. அவை எப்படி நீங்கும்? ஏசாயா சொல்வதாவது: “எகிப்தின் சமுத்திர முனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால் நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.” (ஏசாயா 11:15) தம்முடைய ஜனங்கள் திரும்பி வருவதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் யெகோவாவே நீக்குவார். கடப்பதற்குக் கடினமான செங்கடலின் முனையளவுக்கு (சூயஸ் வளைகுடா போன்ற அளவுக்கு) அல்லது ஐப்பிராத்து மகா நதி அளவுக்கு மாபெரும் தடை ஏற்பட்டாலும் அதை வற்றச் செய்வார். கால்கள்கூட நனையாமல் கடக்கச் செய்வார்!

23மோசேயின் நாட்களில், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல யெகோவா வழிசெய்தார். அதேபோல் இப்போதும் செய்வார்: ‘இஸ்ரவேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.’ (ஏசாயா 11:16, பொ.மொ.) நாடுகடத்தப்பட்ட யூதர்களை நெடுஞ்சாலையில் அழைத்து வருவதுபோல் யெகோவா தாயகத்திற்கு அழைத்துவருவார். எதிரிகள் யூதர்களை தடுக்க முயல்வர், ஆனால் அவர்களுடைய தேவன் யெகோவா அவர்களோடு இருப்பார். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் இன்றுகூட அதேவிதமான கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள், ஆனால் தைரியமாக வெற்றிநடை போடுகிறார்கள்! அவர்கள் நவீன அசீரியாவிலிருந்து, அதாவது சாத்தானின் உலகிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மற்றவர்களும் வெளியேற உதவுகிறார்கள். மெய் வணக்கமே ஜெயங்கொள்ளும்; எந்த மனிதனும் அல்ல, கடவுளே அதை உயர்ந்தோங்கச் செய்வார் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மேசியாவின் ஆட்சியில் முடிவில்லா மகிழ்ச்சி

24கடவுளுடைய வார்த்தை நிறைவேறியதைக் குறித்து யெகோவாவின் ஜனங்கள் மனமகிழ்வதை இன்பம் பொங்கும் வார்த்தைகளால் ஏசாயா வர்ணிக்கிறார்: “அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.” (ஏசாயா 12:1) கீழ்ப்படியாமல்போன மக்களை யெகோவா கடுமையாக கண்டிக்கிறார். ஆனால் எந்த நோக்கத்திற்காக அவர் கண்டிக்கிறாரோ அந்த நோக்கம் நிறைவேறுகிறது. அவர்கள் அவரை நாடிவந்து, மீண்டும் மெய் வணக்கத்தை ஸ்தாபிக்கின்றனர். யெகோவா அவர்களை காப்பதாக உறுதியளிக்கிறார். இதன் காரணமாகவே அவர்கள் அவரை போற்றித் துதிக்கின்றனர்!

25தாயகத்தில் காலடி வைத்த இஸ்ரவேலர்களுக்கு இப்போது யெகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது. ஆகவே இவ்வாறு மகிழ்ச்சி பொங்க சொல்கின்றனர்: “இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா [“யா யெகோவா,” NW] என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.” (ஏசாயா 12:2, 3) யெகோவா “கீதமுமானவர்” என 2-⁠ம் வசனத்தில் குறிப்பிடப்படுகிறார். ‘கீதம்’ என்பதை செப்டுவஜின்ட் ‘துதி’ என மொழிபெயர்த்திருக்கிறது. ஆகவே, “யா யெகோவா” தந்த இரட்சிப்பிற்காக அவரது வணக்கத்தார் அவரை ஆனந்தமாக துதித்துப் பாடுகின்றனர். யெகோவா என்பதன் சுருக்கமான “யா,” துதி மற்றும் போற்றுதலின் உச்சத்தைக் காட்ட பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. “யா யெகோவா” என தெய்வீக பெயரை இருமுறை குறிப்பிடுவது, அந்தத் துதியை இன்னும் பன்மடங்கு மேலோங்கச் செய்கிறது.

26யெகோவாவின் உண்மை வணக்கத்தார் சந்தோஷத்தை தங்களுக்குள்ளே வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஏசாயா முன்னறிவிப்பதாவது: “அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.” (ஏசாயா 12:4, 5) 1919 முதற்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்​—⁠பிற்பாடு ‘வேறே ஆடுகளின்’ உதவியோடு​—⁠‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவித்து’ வருகின்றனர். அவர்கள் இந்த நோக்கத்திற்காக “தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததியினர், . . . பரிசுத்த தேசத்தினர்.” (யோவான் 10:16; 1 பேதுரு 2:9, NW) யெகோவாவின் பரிசுத்த நாமம் மணிமகுடமாக திகழ்கிறது என்பதை அவர்கள் உலகெங்கும் முழங்குகின்றனர். ஏசாயா சொல்லும் விதமாகவே, இரட்சிப்பிற்கான ஏற்பாட்டில் மகிழும்படி யெகோவாவின் வணக்கத்தார் அனைவருக்கும் வழிகாட்டுகின்றனர்: “சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.” (ஏசாயா 12:6) இஸ்ரவேலின் பரிசுத்தர் யெகோவா தேவனே.

எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குங்கள்!

27‘தேசங்களுக்கு கொடிக்கம்பமான,’ தேவனுடைய ராஜ்யத்தின் ராஜாவாக முடிசூட்டப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவிடம் இன்று லட்சக்கணக்கானோர் திரண்டு வந்திருக்கின்றனர். அவரது ராஜ்யத்தின் குடிமக்களாக இருப்பதில் மகிழ்கின்றனர்; யெகோவா தேவனையும் அவரது குமாரனையும் அறிவதில் பூரிப்படைகின்றனர். (யோவான் 17:3) உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்வதில் அவர்கள் அதிக மகிழ்ச்சி காண்கின்றனர். யெகோவாவின் உண்மையான ஊழியர்களுக்கு அடையாளமான சமாதானத்தைக் காத்துக்கொள்ள கடினமாக உழைக்கின்றனர். (ஏசாயா 54:13) யா யெகோவா வாக்குறுதிகளை வாய்க்கப் பண்ணும் கடவுள் என்பதை முழுமையாக நம்புகின்றனர். ஆகவே எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர், அதைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்வதில் ஈடில்லா மகிழ்ச்சியுமடைகின்றனர். யெகோவாவை வணங்கும் நாம் ஒவ்வொருவரும் நம் முழு பலத்தையும் அவரது சேவைக்காக தொடர்ந்து பயன்படுத்துவோமாக. அவரை சேவிக்க மற்றவர்களுக்கும் உதவுவோமாக. ஏசாயாவின் வார்த்தைகளை மனதார ஏற்று, மேசியாவின் மூலம் வரும் இரட்சிப்பில் அகம் மகிழ்வோமாக!

[அடிக்குறிப்புகள்]

a “மேசியா” என்பதற்கான எபிரெய வார்த்தை மாஷையாக் (ma·shiʹach) என்பதாகும். அதன் அர்த்தம், “அபிஷேகம் செய்யப்பட்டவர்.” அதற்கான கிரேக்க வார்த்தை, கிரைஸ்டாஸ் (Khri·stosʹ), அல்லது “கிறிஸ்து.”​—⁠மத்தேயு 2:4, NW அடிக்குறிப்பு.

b “கிளை” என்பதற்கான எபிரெய வார்த்தை நெட்ஸர் (ne’tser) என்பதாகும். “நசரேயன்” என்பதற்கான வார்த்தை நாட்ஸ்ரை (Nots·riʹ) என்பதாகும்.

[கேள்விகள்]

1. ஏசாயாவின் நாட்களில் கடவுளின் உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களின் ஆவிக்குரிய நிலைமை எப்படி இருந்தது?

2, 3. பெரும்பாலானோர் கலகம் செய்தபோதும் தம்மை சேவிக்க விரும்பும் சிலருக்கு யெகோவா எவ்வாறு உற்சாகம் அளிக்கிறார்?

4, 5. மேசியாவின் வருகையைக் குறித்து ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார், அதை மனதில் வைத்து மத்தேயு குறிப்பிட்டது என்ன?

6. மேசியா எப்படிப்பட்ட அரசர் என முன்னறிவிக்கப்பட்டது?

7. உண்மையுள்ள சீஷர்களுக்கு இயேசு என்ன வாக்குறுதி அளித்தார்?

8. யெகோவாவிற்கு பயப்படுவதில் இயேசு எவ்வாறு சந்தோஷம் காண்கிறார்?

9. கிறிஸ்தவ சபையில் நியாயந்தீர்க்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இயேசு எவ்வாறு தலைசிறந்த முன்மாதிரி?

10, 11. (அ) இயேசு என்ன விதத்தில் தம் சீஷர்களை சிட்சிக்கிறார்? (ஆ) இயேசு பொல்லாதவர்களை எவ்வாறு நியாயந்தீர்ப்பார்?

12. தாயகம் திரும்ப நினைத்த யூதர்களுக்கு என்னென்ன கவலைகள் இருந்திருக்கும்?

13. (அ) இதயத்திற்கு இதமளிக்கும் என்ன விவரிப்பை ஏசாயா அளிக்கிறார்? (ஆ) ஏசாயா விவரிக்கும் சமாதானம், காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பை மட்டும் குறிப்பதில்லை என எப்படி சொல்லலாம்?

14. ஏசாயா 11:6-9-⁠ன் பெரிய நிறைவேற்றம் எது?

15. ஏசாயாவின் வார்த்தைகள் புதிய உலகில் சொல்லர்த்தமாக நிறைவேறும் என நாம் எதிர்பார்க்கலாமா? விளக்குங்கள்.

16. பொ.ச.மு. 537-⁠ல் கடவுளுடைய ஜனங்களுக்கு கொடியாக நின்றது எது?

17. இயேசு முதல் நூற்றாண்டிலும் நம் நாளிலும் எவ்வாறு ‘புறஜாதியாரை ஆளும்படி எழும்பினார்’?

18. நம் நாளில் இயேசு எவ்வாறு கொடியாக விளங்குகிறார்?

19. என்ன இரு சந்தர்ப்பங்களில், சிதறடிக்கப்பட்ட தம் மக்களில் மீதியானோரை யெகோவா கூட்டிச்சேர்க்கிறார்?

20. பாபிலோனிலிருந்து திரும்பும் கடவுளது மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டிருப்பார்கள்?

21. இன்று கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் ஐக்கியம் எவ்வாறு தனிச்சிறப்பு மிக்கது?

22. யெகோவா எவ்வாறு ‘எகிப்தின் சமுத்திர முனையை முற்றிலும் அழித்து,’ ‘நதியின்மேல் தமது கையை நீட்டுவார்’?

23. எந்த விதத்தில் ‘அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்’?

24, 25. யெகோவாவின் மக்கள் எவ்வாறு நன்றிபொங்க துதி செலுத்துவார்கள்?

26. கடவுளது நோக்கங்களை எல்லா தேசங்களுக்கும் இன்று அறிவிப்பது யார்?

27. நல்ல எதிர்காலத்திற்காக காத்திருக்கையில் கிறிஸ்தவர்கள் எதில் நம்பிக்கை வைக்கின்றனர்?

[பக்கம் 158-ன் படங்கள்]

மேசியா, ஈசாயின் குமாரனான தாவீது ராஜாவின் வம்சத்தில் தோன்றிய “துளிர்”

[பக்கம் 162-ன் முழுபக்க படம்]

[பக்கம் 170-ன் படம்]

ஏசாயா 12:4, 5-⁠ன் சவக்கடல் சுருள்கள் (கடவுளது பெயர் வரும் இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன)