Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேட்டிமையானவர்களை யெகோவா சிறுமைப்படுத்துகிறார்

மேட்டிமையானவர்களை யெகோவா சிறுமைப்படுத்துகிறார்

அதிகாரம் ஐந்து

மேட்டிமையானவர்களை யெகோவா சிறுமைப்படுத்துகிறார்

ஏசாயா 2:6–4:1

எருசலேம் மற்றும் யூதாவின் நிலைமையைக் கண்டு வெறுப்படைந்த ஏசாயா தீர்க்கதரிசி, இப்பொழுது யெகோவா தேவனை நோக்கி இவ்வாறு அறிவிக்கிறார்: “யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்.” (ஏசாயா 2:6அ, பொ.மொ.) தமக்கென்று “தனிச் சொத்தாக” தேர்ந்தெடுத்த இந்த ஜனங்களை கடவுளே கைவிடும் அளவுக்கு அவரை தூண்டியது எது?​—உபாகமம் 14:⁠2, பொ.மொ.

2ஏசாயா தன்னுடைய நாளில் வாழ்ந்த யூதர்களை கண்டனம் செய்வது நமக்கு அக்கறைக்குரிய விஷயம். ஏன்? ஏனென்றால் ஏசாயா காலத்து ஜனங்களின் நிலைமையே இன்றைய கிறிஸ்தவமண்டலத்திலும் நிலவுகிறது. இதற்கு யெகோவா வழங்கும் நியாயத்தீர்ப்பும் அப்படியே இருக்கும். ஏசாயாவின் பிரகடனத்திற்கு கூர்ந்த கவனம் செலுத்துவது, கடவுள் கண்டனம் செய்வதை தெளிவாக புரிந்துகொள்ள நமக்கு உறுதுணை புரியும். அவருக்குப் பிடிக்காத பழக்க வழக்கங்களை அறவே விட்டொழிக்கவும் நமக்கு உதவும். அப்படியானால், ஏசாயா 2:6–4:1-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையை மிகுந்த ஆவலோடு ஆராய்வோமாக.

இறுமாப்புடன் பணிந்துகொள்கிறார்கள்

3ஜனங்களின் தவறுகளை அறிக்கையிட்டு ஏசாயா இவ்வாறு சொல்கிறார்: “கீழைநாட்டு வழக்கங்கள் அவர்களுக்குள் மிகுந்துள்ளன, அவர்கள் பெலிஸ்தியரைப் போல் சகுனம் பார்க்கிறார்கள், அந்நிய நாட்டு பிள்ளைகள் நிறைந்திருக்கிறார்கள்.” (ஏசாயா 2:6ஆ,NW) சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஜனத்தாருக்கு யெகோவா இவ்வாறு கட்டளை பிறப்பித்திருந்தார்: “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.” (லேவியராகமம் 18:24) தம்முடைய தனிச் சொத்தாக தெரிந்தெடுத்திருந்தவர்களைப் பற்றி இவ்வாறு உரைப்பதற்கு யெகோவா பிலேயாமை நிர்ப்பந்தப்படுத்தியிருந்தார்: ‘கன்மலையுச்சியிலிருந்து நான் அவர்களைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.’ (எண்ணாகமம் 23:9, 12) ஆனால் ஏசாயாவின் நாளிற்குள், யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களை சூழ்ந்திருந்த தேசத்தாருடைய அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களை ஆராதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்; “கீழைநாட்டு வழக்கங்கள் அவர்களுக்குள் மிகுந்துள்ளன.” யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் வைப்பதற்கு மாறாக, அவர்கள் “பெலிஸ்தியரைப் போல் சகுனம் பார்க்கிறார்கள்.” புறதேசத்தாரை விட்டு புறம்பே நிற்பதற்குப் பதிலாக, இப்பொழுது அத்தேசம் ‘அந்நிய நாட்டு பிள்ளைகளால்,’ அதாவது தேவபக்தியற்ற பழக்க வழக்கங்களை கடவுளுடைய ஜனங்களுக்கு அறிமுகப்படுத்துகிறவர்களால் ‘மிகுந்துள்ளது.’

4அரசனாகிய உசியாவின் தலைமையிலான யூதாவின் தற்போதைய பொருளாதார செழுமையையும் படை பலத்தையும் கவனித்து, ஏசாயா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.” (ஏசாயா 2:7) இவ்வளவு செல்வத்திற்கும் படை பலத்திற்கும் அந்த ஜனங்கள் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறார்களா? (2 நாளாகமம் 26:1, 6-15) துளிகூட இல்லை! மாறாக, செல்வத்தின் மீதே நம்பிக்கை வைத்து, அதற்கு மூலகாரணராகிய யெகோவா தேவனை விட்டுவிட்டார்கள். விளைவு? “அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன; தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்; தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர். இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்; மக்கள் சிறுமை அடைவார்கள்; ஆண்டவரே! இவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்.” (ஏசாயா 2:8, 9, பொ.மொ.) ஜீவனுள்ள தேவனைவிட்டு ஜீவனற்ற விக்கிரகங்களை பணிந்துகொள்கிறார்கள்.

5பணிந்துகொள்வது மனத்தாழ்மைக்கு அடையாளமாக இருக்கலாம். ஆனால் ஜீவனற்ற பொருட்கள் முன் பணிந்துகொள்வதோ பயனற்றது, அது விக்கிரகாராதனைக்காரரை “சிறுமை” அடையச்செய்து சீர்கேடுறச் செய்கிறது. இப்படிப்பட்ட பாவத்தை எப்படி யெகோவா மன்னிப்பார்? யெகோவா அவர்களிடம் கணக்கு கேட்கும்போது இந்த விக்கிரகாராதனைக்காரர் என்ன செய்வர்?

“மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும்”

6ஏசாயா தொடர்கிறார்: “யெகோவாவின் பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப் பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையினுள் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.” (ஏசாயா 2:10, தி.மொ.) ஆனால் சர்வ வல்லவராகிய யெகோவாவிடமிருந்து அவர்களை பாதுகாப்பதற்கோ மறைப்பதற்கோ போதுமான பெரிய கன்மலை எதுவுமே இல்லை. கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வரும்போது, “மானிடரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும், யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.”​—ஏசாயா 2:⁠11, தி.மொ.

7‘சேனைகளின் யெகோவாவின் நாள்’ வருகிறது. கடவுள் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்தும் தருணம் அது. “பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின் மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின் மேலும், லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின் மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும், உன்னதமான எல்லாப் பர்வதங்களின் மேலும், உயரமான எல்லா மலைகளின் மேலும், உயர்ந்த எல்லாக் கோபுரத்தின் மேலும், அரணான எல்லா மதிலின் மேலும், தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின் மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின் மேலும் வரும்.” (ஏசாயா 2:12-16) ஆம், பெருமைக்கு சின்னமாக மனிதனால் ஸ்தாபிக்கப்பட்ட எல்லா அமைப்பின் மீதும் தேவபக்தியற்ற அனைவர் மீதும் யெகோவாவின் சீற்றத்தின் நாளில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, “மானிடரின் மேட்டிமை தாழ்ந்து மனுஷரின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.”​—ஏசாயா 2:⁠17, தி.மொ.

8முன்னுரைக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு நாள், பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமை அழிக்கும் சமயத்தில், அதாவது பொ.ச.மு. 607-⁠ல் யூதர்கள் மீது வருகிறது. எருசலேமின் குடிகள் தங்களுடைய நேசத்திற்குரிய நகரம் ஜூவாலித்து எரிவதையும், பெருமைக்குரிய கட்டடங்கள் நொறுங்கி விழுவதையும், பலத்த மதில் சுவர்கள் சுக்குநூறாவதையும் கண்ணார காண்கிறார்கள். யெகோவாவின் ஆலயம் தவிடுபொடியாக்கப்படுகிறது. அவர்களுடைய பொக்கிஷமோ அவர்களுடைய இரதங்களோ ‘சேனைகளின் யெகோவாவின் நாளில்’ கைகொடுக்கிறதில்லை. அவர்களுடைய விக்கிரகங்களைப் பற்றியென்ன? ஏசாயா முன்னறிவித்தபடியே சம்பவிக்கிறது: “விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.” (ஏசாயா 2:18) யூதர்களில் பிரபுக்களும் பலசாலிகளும்கூட பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுகிறார்கள். எருசலேமோ எழுபது ஆண்டுகளுக்கு பாழாக கிடக்கும்.

9கிறிஸ்தவமண்டலத்தின் நிலைமை ஏசாயாவின் நாளில் இருந்த எருசலேமுக்கும் யூதாவுக்கும் எவ்வளவு ஒத்திருக்கிறது! கிறிஸ்தவமண்டலம் இவ்வுலக தேசங்களோடு நெருங்கிய உறவை வளர்த்திருக்கிறது. இதுவே ஐக்கிய நாடுகளை மிக ஊக்கமாக ஆதரிக்கிறது, தன்னுடைய வீட்டை விக்கிரகங்களாலும் வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களாலும் நிரப்பியிருக்கிறது. அதைப் பின்பற்றுபவர்கள் பொருளாசைக்காரராக இருக்கின்றனர், தங்களுடைய நம்பிக்கையை இராணுவ பலத்தில் வைத்திருக்கின்றனர். அவர்கள் பாதிரிமாருக்கு பட்டங்களையும் புகழ்மாலையையும் சூட்டி, பிரபலங்களைப் போல கௌரவிக்கிறார்கள் அல்லவா? கிறிஸ்தவமண்டலத்தின் மேட்டிமை மண்ணை கவ்வும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எப்பொழுது?

வரப்போகும் ‘யெகோவாவின் நாள்’

10‘யெகோவாவின் நாளை’ வேதவசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன, அது பூர்வ எருசலேம் மற்றும் யூதாவின் மீது வந்த நியாயத்தீர்ப்பைவிட அதிக முக்கியத்துவமுடையதாக இருக்கும். வரப்போகும் ‘யெகோவாவின் நாளை’ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தோடு தொடர்புபடுத்தி அப்போஸ்தலன் பவுல் ஏவுதலினால் பேசினார். (2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW) பேதுரு அந்த நாளை ‘நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியும் புதிய வானமும்’ ஸ்தாபிக்கப்படுவதோடு தொடர்புபடுத்தி பேசினார். (2 பேதுரு 3:10-13) கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் முழு பொல்லாத ஒழுங்குமுறையின் மீதும் யெகோவா தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாள் அதுவே.

11“ஐயோ, என்ன நாள்!” என யோவேல் தீர்க்கதரிசி சொல்கிறார்; ஏனெனில் “யெகோவாவின் நாள் சமீபம்; அது சர்வவல்லவரிடமிருந்து வரும் சங்காரம் போன்றது.” அது விரைவில் வரப்போவதால், அந்த மகா பயங்கரமான நாளில் பாதுகாப்பை குறித்து எல்லாரும் கவலைப்பட வேண்டும் அல்லவா? “அதைச் சகிப்பவன் யார்?” என யோவேல் கேட்கிறார். அவரே பதிலளிக்கிறார்: “யெகோவா தமது ஜனத்துக்கு அடைக்கலம்.” (யோவேல் 1:15; 2:11; 3:16; தி.மொ.) மேட்டிமையானவர்களுக்கும் செல்வத்திலும் படை பலத்திலும் மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுட்களிலும் நம்பிக்கை வைப்பவர்களுக்கும் யெகோவா தேவன் அடைக்கலமாயிருப்பாரா? ஒருகாலும் மாட்டார்! முற்காலத்தில் இப்படி நடந்துகொண்ட தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களையே யெகோவா கைவிட்டு விட்டாரே. ஆகவே, கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் ‘நீதியை தேடுவதும், மனத்தாழ்மையை தேடுவதும்’ தங்களுடைய வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கம் வகிக்கும் பாகத்தைப் பற்றி ஆழ்ந்து ஆராய்வதும் எவ்வளவு இன்றியமையாதது!​—செப்பனியா 2:2, 3.

“அகழ் எலிகளுக்கும் வௌவால்களுக்கும்”

12விக்கிரகங்களை வணங்குபவர்கள் யெகோவாவின் மகா நாளில் தங்களுடைய விக்கிரகங்களை எப்படி கருதுவர்? ஏசாயா பதிலளிக்கிறார்: “பூமியைத் தத்தளிக்கப்பண்ண யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப் பிரதாபத்திற்கும் விலகிக் கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குழிகளிலும் புகுந்துகொள்ளத் தனக்குச் செய்திருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும் தன் பொன் விக்கிரகங்களையும் அந்நாளிலே அகழ் எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவேன். பூமியை தத்தளிக்கப்பண்ண யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும் அவருடைய மகிமை பிரதாபத்திற்கும் விலகிக் கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளுவான். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; அவனை ஒருபொருளென மதிக்கலாமோ!”​—ஏசாயா 2:19-22, தி.மொ.

13அகழ் எலிகள் வளைகளுக்குள் வாழ்கின்றன, வௌவால்கள் இருட்டிலும் பாழடைந்த குகைகளிலும் தங்குகின்றன. எங்கே பெருங்கூட்டமாக வௌவால்கள் இருக்கின்றனவோ அங்கே நாற்றமும் வீசும், எச்சங்களும் குவிந்து கிடக்கும். விக்கிரகங்களை அங்கே எறிவது மிகவும் பொருத்தமானதே. இருட்டும் அசுத்தமும் அதற்கு தகுதியானவையே. யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் ஜனங்கள் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் அடைக்கலம் தேடுவார்கள். ஆகவே விக்கிரகங்களுக்கும் அதை வணங்குபவர்களுக்கும் அதே கதிதான். ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, ஜீவனற்ற விக்கிரகங்களால் தங்களுடைய வணக்கத்தாரையும் காப்பாற்ற முடியவில்லை, பொ.ச.மு. 607-⁠ல் நேபுகாத்நேச்சாரிடமிருந்து எருசலேமையும் காப்பாற்ற முடியவில்லை.

14கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் பொய் மத உலகப் பேரரசின் மற்ற அங்கங்களின் மீதும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது ஜனங்கள் என்ன செய்வார்கள்? சீரழிந்து வரும் உலகளாவிய நிலைமைகளை எதிர்ப்படுகையில், தங்களுடைய விக்கிரகங்கள் மதிப்பற்றவை என்பதை பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள். அதற்குப் பதிலாக, ஆன்மீகம் சாராத பூமிக்குரிய அமைப்புகளிடம்​—⁠ஒருவேளை வெளிப்படுத்துதல் 17-⁠ம் அதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள ‘சிவப்புநிற மிருகமாகிய’ ஐக்கிய நாட்டு சங்கத்திடமும்​—⁠அடைக்கலம் புகுவார்கள், பாதுகாப்பை நாடுவார்கள். ‘பத்துக் கொம்புகளை உடைய’ அடையாளப்பூர்வ இந்த மூர்க்க மிருகமே கிறிஸ்தவமண்டலம் முக்கிய அங்கம் வகிக்கும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனை அழிக்கும்.​—வெளிப்படுத்துதல் 17:3, 8-12, 16, 17.

15மகா பாபிலோன் பாழாக்கப்படுவதும் சுட்டெரிக்கப்படுவதும் அடையாள அர்த்தமுள்ள அந்தப் பத்துக் கொம்புகளின் செயலாக இருந்தாலும், உண்மையில் அது யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றமே. மகா பாபிலோனை பற்றி வெளிப்படுத்துதல் 18:8 இவ்வாறு சொல்கிறது: “ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.” ஆகவே பொய் மதத்தின் ஆதிக்கத்திலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான புகழ் சர்வ வல்லவராகிய யெகோவா தேவனுக்கே சேர்கிறது. ஏசாயா சொல்கிற விதமாக, ‘யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். . . . [அது] சேனைகளின் யெகோவாவின் நாள்.’​—ஏசாயா 2:11ஆ, 12அ, தி.மொ.

‘உன்னை நடத்துகிறவர்கள் மோசம்போக்குகிறார்கள்’

16மனித சமுதாயம் ஸ்திரமாக இருப்பதற்கு, ‘ஊன்றுகோலும் ஆதரவும்’​—⁠அதாவது அத்தியாவசிய தேவைகளான உணவும் தண்ணீரும், மிக முக்கியமாக, மக்களை வழிநடத்தி சமுதாயத்தில் ஒழுங்கை காத்துவருவதற்கு நம்பகமான தலைவர்களும்​—⁠வேண்டும். ஆனால், பூர்வ இஸ்ரவேலைப் பற்றி ஏசாயா இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் ஊன்றுகோலையும் ஆதரவையும், உணவு, தண்ணீர் ஆகிய சகல ஆதாரங்களையும், பராக்கிரமசாலியையும் யுத்தவீரனையும் நியாயாதிபதியையும் தீர்க்கதரிசியையும் குறிசொல்வோனையும் முதியனையும் ஐம்பதின்மாருக்கு அதிபதியையும் மதிப்புள்ளவனையும் ஆலோசனைக்காரனையும் தொழில் சாமர்த்தியசாலியையும் மந்திரவாதியையும் விலக்குவார்.” (ஏசாயா 3:1-3, தி.மொ.) சிறு பையன்களும் பிரபுக்களாவார்கள், மனம்போன போக்கில் ஆளுவார்கள். மக்களை ஒடுக்குகிறவர்கள் ஆளுகிறவர்கள் மட்டுமே அல்ல, ஆனால் “மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவர்; . . . இளைஞர் முதியோருக்கு விரோதமாகவும், கீழ்மக்கள் மேன்மக்களுக்கு விரோதமாகவும் எழும்புவர்.” (ஏசாயா 3:4, 5, NW) வயோதிபருக்கு எதிராக வாலிபர் ‘எழும்புவது’ அவர்கள் மீது மரியாதை இல்லாததை குறிக்கிறது. ஆகவே, ஆளத் தகுதியில்லாத ஒருவனைப் பார்த்து மற்றொருவன், “நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்; நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக; பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக” என்று சொல்லுமளவுக்கு வாழ்க்கைத் தரம் மோசமாக இருக்கும். (ஏசாயா 3:6, பொ.மொ.) ஆனால் அவ்வாறு அழைக்கப்பட்டவர்களோ மறுத்துவிடுவார்கள்; தேசத்தின் காயத்தை குணப்படுத்தும் திறமையும் இல்லை, பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு செல்வமும் இல்லை என்று ஆணித்தரமாக கூறிவிடுவார்கள். அவர்கள் இவ்வாறு சொல்வார்கள்: “நான் காயத்திற்கு கட்டுப்போடுகிறவன் அல்ல; இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை; மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்.”​—ஏசாயா 3:⁠7, பொ.மொ.

17ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.” (ஏசாயா 3:8, 9) கடவுளுடைய ஜனங்கள் சொல்லிலும் செயலிலும் மெய் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்திருக்கிறார்கள். வெட்கங்கெட்ட, மனம்வருந்தாத முகப்பார்வை அவர்களுடைய பாவங்களை அம்பலப்படுத்துகிறது; அவை சோதோமைப் போல அருவருப்பாக இருக்கின்றன. அவர்கள் யெகோவா தேவனுடன் உடன்படிக்கை செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்காக தம்முடைய தராதரங்களை அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். “உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். பிள்ளைகள் [“வேலை வாங்குபவர்கள்,” NW] என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.”​—ஏசாயா 3:10-12.

18யூதாவின் மூப்பர்களுக்கும் பிரபுக்களுக்கும் எதிராக யெகோவா ‘வழக்காட எழுந்திருந்து நியாயந்தீர்க்க நிற்கிறார்’: “இந்தத் திராட்சத் தோட்டத்தைப் பட்சித்துப் போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள்கள் வீடுகளில் இருக்கிறது. நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்ன”? (ஏசாயா 3:13-15) ஜனங்களின் நலனுக்காக வேலை செய்வதற்குப் பதிலாக, இந்தத் தலைவர்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தங்களை செல்வந்தராக்கிக்கொள்வதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணுகிறார்கள், ஏழை எளியோரிடமிருந்து உடைமைகளைப் பறித்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமையானவர்களை ஒடுக்கியதற்காக சேனைகளின் யெகோவாவுக்கு இந்தத் தலைவர்கள் பதில்சொல்ல வேண்டும். இன்று உத்தரவாதமுள்ள ஸ்தானங்களில் இருப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட எச்சரிக்கை! அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் கவனமாக இருப்பார்களாக.

19கிறிஸ்தவமண்டலம்​—⁠குறிப்பாக அதன் குருமார்களும் முதன்மையான அங்கம் வகிப்பவர்களும்​—⁠பொது மக்களுக்குரியதை மோசடி செய்து வாங்கியிருக்கிறது, அவர்களை ஒடுக்கியிருக்கிறது, தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டும் வருகிறது. அது கடவுளுடைய ஜனங்களையும் அடித்திருக்கிறது, துன்புறுத்தியிருக்கிறது, மோசமாக நடத்தியிருக்கிறது, யெகோவாவின் நாமத்தின் மீது பெரும் நிந்தையையும் கொண்டுவந்திருக்கிறது. தகுந்த நேரத்தில் அதற்கு எதிராக யெகோவா நியாயந்தீர்க்க எழுந்து நிற்பார்.

‘அழகுக்குப் பதிலாக மானக்கேடு’

20தலைவர்களுடைய தவறுகளை கண்டனம் செய்த பிறகு, சீயோனின் அல்லது எருசலேமின் ஸ்திரீகளிடம் யெகோவா கவனத்தை திருப்புகிறார். அழகுநயம் மிளிர்வதற்காக “சீயோன் மகளிர்” “கால் சிலம்பு” அணிகிறார்கள், அது மெல்லிசை போன்று காதில் இனிமையாக ஒலிக்கிறது. அந்த ஸ்திரீகள் வேகமாக காலடியெடுத்து வைக்காமல், ‘ஒய்யார நடை நடக்கிறார்கள்.’ இது பெண்மைக்குரிய நளினத்தை தருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? இந்த ஸ்திரீகளின் மனப்பான்மையே தவறுக்கு காரணம். யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்; தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கிறார்கள்.” (ஏசாயா 3:16, பொ.மொ.) இப்படிப்பட்ட அகந்தைக்கு தக்க தண்டனை கிடைக்காமல் போகாது.

21ஆகவே, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு அத்தேசத்தின்மீது வருகையில், செருக்குமிக்க இந்த “சீயோன் மகளிர்” எல்லாவற்றையும்​—⁠அவர்கள் பெருமைக்குரியதாக கருதும் அழகையும்​—⁠இழந்துவிடுவார்கள். யெகோவா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை வருவிப்பார்; வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்; ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார். அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால் சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள், ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள், கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள், காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள், வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைத்துவிடுவார்.” (ஏசாயா 3:17-23, பொ.மொ.) எப்பேர்ப்பட்ட சோகமான விளைவு!

22அந்தத் தீர்க்கதரிசன செய்தி தொடர்ந்து சொல்கிறது: “நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்; கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்; வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்; ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள்.” (ஏசாயா 3:24, பொ.மொ.) பொ.ச.மு. 607-⁠ல், செருக்குமிக்க எருசலேம் ஸ்திரீகள் செல்வச் செழிப்பிலிருந்து வாட்டும் வறுமைக்கு வந்துவிடுகிறார்கள். தங்களுடைய சுதந்திரத்தை இழந்து, அடிமைத்தனம் எனும் ‘மானக்கேட்டை’ பெறுகிறார்கள்.

‘அவள் எல்லாம் இழந்துவிடுவாள்’

23இப்பொழுது எருசலேம் பட்டணத்தை நோக்கி பேசுகையில், யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்; வலிமைமிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள். சீயோனின் வாயில்கள் புலம்பி அழும்; அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.” (ஏசாயா 3:25, 26, பொ.மொ.) எருசலேமின் ஆண்கள், அதனுடைய பலவான்களும்கூட, யுத்தத்தில் கொலை செய்யப்படுவார்கள். அந்தப் பட்டணம் தரைமட்டமாக்கப்படும். அதன் ‘வாயில்களுக்கு,’ “புலம்பி அழும்” நேரமாக அது இருக்கும். எருசலேம் ‘எல்லாம் இழந்து’ பாழாய் கிடக்கும்.

24ஆண்கள் வாளுக்கு இரையாவதால் எருசலேமின் ஸ்திரீகளுக்கு ஏற்படும் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும். தீர்க்கதரிசன புத்தகத்தின் இந்தப் பகுதியை முடிப்பவராக ஏசாயா இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, ‘நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்; எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்வோம்; உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக’ என்பார்கள்.” (ஏசாயா 4:1, பொ.மொ.) மணமுடிக்கும் வயதுடைய ஆண்கள் இல்லாததால், ஓர் ஆண்மகனை பல பெண்கள் பற்றிக்கொண்டு, அவனுடைய பெயரால் அழைக்கப்படுவார்கள், அதாவது அவனுடைய மனைவியாக வெளிப்படையாக அறிவிப்பார்கள், இதனால் கணவன் இல்லை என்ற அவமானத்தை நீக்கிப்போடுவார்கள். கணவன் தன்னுடைய மனைவிக்குத் தேவையான உணவையும் உடையையும் கொடுக்க வேண்டும் என மோசேயின் நியாயப்பிரமாணம் சொல்கிறது. (யாத்திராகமம் 21:10) ஆனால், ‘தங்களுடைய சொந்த உணவை உண்டு, சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ள’ ஒப்புக்கொள்வதால், இந்த ஸ்திரீகள் அந்த ஆண்மகனை அவனுடைய சட்டப்பூர்வ கடமைகளிலிருந்து விடுவிக்கிறார்கள். ஒருகாலத்தில் செருக்குடன் விளங்கிய ‘சீயோன் மகளிருக்கு’ எப்பேர்ப்பட்ட பரிதாபகரமான நிலை!

25மேட்டிமையானவர்களை யெகோவா சிறுமைப்படுத்துகிறார். பொ.ச.மு. 607-⁠ல், தேர்ந்தெடுக்கப்பட்ட தம்முடைய ஜனங்களின் அகந்தையை அவர் உண்மையிலேயே ‘தாழ்வாக்குகிறார்,’ அவர்களுடைய ‘வீறாப்பை’ சிறுமைப்படுத்துகிறார். ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’ என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மறவாதிருப்பார்களாக.​—யாக்கோபு 4:⁠6.

[கேள்விகள்]

1, 2. ஏசாயா தன்னுடைய நாளில் வாழ்ந்த யூதர்களுக்கு கொடுத்த தீர்க்கதரிசன செய்தி ஏன் நமக்கு அக்கறைக்குரியது?

3. தன்னுடைய ஜனங்கள் செய்யும் என்ன தவறுகளை ஏசாயா அறிக்கையிடுகிறார்?

4. யெகோவாவுக்கு நன்றிசெலுத்த தூண்டுவதற்குப் பதிலாக, செல்வமும் படை பலமும் எவ்வாறு யூதர்களை பாதிக்கின்றன?

5. விக்கிரகங்களுக்கு முன் பணிந்துகொள்வது ஏன் பணிவுக்கு அடையாளம் அல்ல?

6, 7. (அ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் மேட்டிமையானவர்களுக்கு என்ன நேரிடும்? (ஆ) எவற்றின் மீதும் எவர்கள் மீதும் யெகோவா தம்முடைய சீற்றத்தை வெளிப்படுத்துகிறார், ஏன்?

8. முன்னுரைக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு நாள் எவ்வாறு பொ.ச.மு. 607-⁠ல் எருசலேம் மீது வருகிறது?

9. என்ன விதத்தில் கிறிஸ்தவமண்டலத்தின் நிலைமை ஏசாயாவின் நாளில் இருந்த எருசலேம் மற்றும் யூதாவின் நிலைமைக்கு ஒத்திருக்கிறது?

10. அப்போஸ்தலர்கள் பவுலும் பேதுருவும் சுட்டிக்காட்டிய ‘யெகோவாவின் நாள்’ எது?

11. (அ) வரப்போகும் ‘யெகோவாவின் நாளை’ “சகிப்பவன்” யார்? (ஆ) எவ்வாறு நாம் யெகோவாவை நமது அடைக்கலமாக கொண்டிருக்கலாம்?

12, 13. யெகோவாவின் நாளில் விக்கிரக வணக்கத்தார் தங்களுடைய தெய்வங்களை “அகழ் எலிகளுக்கும் வௌவால்களுக்கும்” எறிந்துவிடுவது ஏன் பொருத்தமானது?

14. பொய் மத உலகப் பேரரசின் மீது வரும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில், உலக சிந்தையுள்ள மனிதர் என்ன செய்வார்கள்?

15. எவ்வாறு யெகோவா மாத்திரமே நியாயத்தீர்ப்பு நாளில் “உயர்ந்திருப்பார்”?

16. (அ) மனித சமுதாயத்தின் ‘ஊன்றுகோலும் ஆதரவும்’ எவை? (ஆ) அந்த ‘ஊன்றுகோலும் ஆதரவும்’ நீக்கப்படுகையில் ஏசாயாவின் ஜனங்கள் எவ்வாறு பாதிப்படைவார்கள்?

17. (அ) என்ன கருத்தில் எருசலேம் மற்றும் யூதாவின் பாவம் “சோதோம் ஊராரைப் போல” இருந்தது? (ஆ) ஜனங்களின் இந்த நிலைமைக்கு ஏசாயா யாரை குறைகூறுகிறார்?

18. (அ) ஏசாயாவின் நாளில் வாழ்ந்த மூப்பர்களுக்கும் பிரபுக்களுக்கும் என்ன நியாயத்தீர்ப்பை யெகோவா வழங்குகிறார்? (ஆ) மூப்பர்களுக்கும் பிரபுக்களுக்கும் யெகோவா அளித்த நியாயத்தீர்ப்பிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?

19. எப்படிப்பட்ட ஒடுக்குமுறைக்கும் துன்புறுத்துதலுக்கும் கிறிஸ்தவமண்டலம் குற்றப்பழியுடையது?

20. ‘சீயோன் மகளிரை’ யெகோவா ஏன் கண்டனம் செய்கிறார்?

21. எருசலேம் மீது யெகோவா கொண்டுவரும் நியாயத்தீர்ப்பு யூத ஸ்திரீகளை எவ்வாறு பாதிக்கிறது?

22. எருசலேமின் ஸ்திரீகள் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்களோடு வேறெதையும் இழக்கிறார்கள்?

23. எருசலேமைப் பற்றி யெகோவா என்ன அறிவிக்கிறார்?

24. ஆண்கள் வாளுக்கு இரையாவதால் எருசலேமின் ஸ்திரீகளுக்கு ஏற்படும் பயங்கரமான விளைவுகள் யாவை?

25. மேட்டிமையானவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது?

[பக்கம் 50-ன் படம்]

விக்கிரகங்கள், செல்வங்கள், படைபலங்கள் ஆகியவை யெகோவாவின் நாளில் எருசலேமை தப்புவிக்காது

[பக்கம் 55-ன் படம்]

‘யெகோவாவின் நாளில்’ பொய் மத உலகப் பேரரசு பாழாக்கப்படும்