Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் ஆலயம் மணிமகுடமாகிறது

யெகோவாவின் ஆலயம் மணிமகுடமாகிறது

அதிகாரம் நான்கு

யெகோவாவின் ஆலயம் மணிமகுடமாகிறது

ஏசாயா 2:1-5

“அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; தேசத்தாருக்கு விரோதமாக தேசத்தார் பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” நியூ யார்க் நகரிலுள்ள ஐக்கிய நாட்டு சபையின் சதுக்கத்தில் இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மேற்கோள் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது பல ஆண்டுகளாக அறியப்படாமலே இருந்தது. உலக சமாதானத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகளின் லட்சியம் என்பதால், 1945-⁠ல் ஐநா-வை ஸ்தாபித்தவர்களே இந்த வார்த்தைகளை வடித்தவர்கள் என்று எளிதாக முடிவெடுக்கப்பட்டது.

2ஆனால் 1975-⁠ல், மேற்குறிப்பிடப்பட்ட மேற்கோளுக்குக் கீழே ஏசாயா என்ற பெயர் பொறிக்கப்பட்டது. அந்த வார்த்தைகள் நவீன காலத்தில் உதயமாகவில்லை என்பது அப்போது அம்பலமானது. சொல்லப்போனால், இப்பொழுது ஏசாயா புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் உள்ள இந்தத் தீர்க்கதரிசனம் 2,700 வருடங்களுக்கும் முன்பு பதிவு செய்யப்பட்டது. ஏசாயா முன்னுரைத்தவை எப்படி, எப்பொழுது சம்பவிக்கும் என்பதை ஆயிரம் ஆண்டுகளாகவே சமாதான பிரியர்கள் ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றனர். ஆனால் இனிமேலும் அதைப் பற்றி திகைத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தப் பூர்வீக தீர்க்கதரிசனம் அதிசயக்கத்தக்க விதத்தில் நிறைவேறி வருவதை இன்று நாம் கண்ணார காண்கிறோம்.

3பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாக அடிக்கும் அந்தத் தேசத்தார் யார்? அவர்கள் நவீனகால அரசியல் தேசங்களோ அரசாங்கங்களோ அல்ல என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஏனென்றால் இதுவரை உலக தேசங்கள் பட்டயங்களை அல்லது போராயுதங்களை தயாரித்திருக்கின்றன. எதற்காக? சண்டை செய்வதற்கும் படைபலத்தால் “சமாதானத்தை” பாதுகாப்பதற்குமே. சொல்லப்போனால், கலப்பைக் கொழுக்களை பட்டயங்களாக அடிப்பதே எப்பொழுதும் இந்தத் தேசங்களின் வேலையாக இருந்திருக்கிறது! ஆகவே, எல்லா தேசங்களிலிருந்தும் வரும் பிரதிநிதிகள், அதாவது ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவாவை வணங்கும் மக்கள் மத்தியில் ஏசாயா தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை காண்கிறோம்.​—பிலிப்பியர் 4:⁠9.

தூய வணக்கத்தை நோக்கி திரண்டுவரும் தேசத்தார்

4ஏசாயா 2-⁠ம் அதிகாரம் இவ்வாறு ஆரம்பிக்கிறது: “யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோத்சின் மகனாகிய ஏசாயா கண்ட தரிசனம்: இது கடைசி நாட்களில் கட்டாயம் சம்பவிக்கும்; யெகோவாவின் ஆலயமாகிய மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாக ஸ்தாபிக்கப்படும்; அது நிச்சயம் எல்லா குன்றுகளுக்கும் மேலாக உயர்த்தப்படும்; சகல தேசத்தாரும் அதற்கு திரண்டு வருவார்கள்.”​—ஏசாயா 2:1, 2, NW.

5ஏசாயா முன்னறிவித்தது வெறும் ஊகமல்ல என்பதை கவனியுங்கள். “கட்டாயம் சம்பவிக்கும்” நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யுமாறு ஏசாயாவுக்கு யெகோவா கட்டளையிடுகிறார். எவையெல்லாம் செய்வதற்கு யெகோவா நோக்கம் கொள்கிறாரோ அவையெல்லாம் ‘நிச்சயம் நிறைவேறும்.’ (ஏசாயா 55:11, NW) தம்முடைய வாக்குறுதியின் நம்பகத்தன்மையை வலியுறுத்திக் காட்டுவதற்கு, ஏசாயா 2:2-4-⁠ல் உரைக்கப்பட்டுள்ள அதே தீர்க்கதரிசனத்தை ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த மீகா என்ற தீர்க்கதரிசியும் பதிவு செய்வதற்கு கடவுள் அவரை ஏவினார்.​—மீகா 4:1-3.

6ஏசாயா தீர்க்கதரிசனம் எப்பொழுது நிறைவேறும்? “கடைசி நாட்களில்.” இந்தக் காலப்பகுதியை அடையாளம் காட்டும் அம்சங்களை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முன்னறிவித்தது. போர்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள், உணவுப் பற்றாக்குறைகள், “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்” ஆகியவையே அந்த அடையாளங்கள். a (2 தீமோத்தேயு 3:1-5, NW; லூக்கா 21:10, 11) நாம் “கடைசி நாட்களில்,” அதாவது தற்போதைய உலக ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு இப்படிப்பட்ட தீர்க்கதரிசன நிறைவேற்றம் ஏராளமான அத்தாட்சிகளை அளிக்கிறது. அப்படியானால், ஏசாயா முன்னறிவித்தவை நம்முடைய நாளில் நிறைவேறும் என நாம் எதிர்பார்ப்பது நியாயமானதே.

மலை​—⁠வழிபாட்டு ஸ்தலம்

7தீர்க்கதரிசன மாதிரியை இரத்தினச் சுருக்கமாக, ஆனால் தத்ரூபமாக ஏசாயா வர்ணிக்கிறார். கம்பீரமான ஒரு மலையை நாம் காண்கிறோம், அங்கே யெகோவாவின் மகிமையான ஆலயம் மணிமகுடமாக வீற்றிருக்கிறது. இந்த மலை சுற்றுவட்டாரத்திலுள்ள குன்றுகளையும் மலைகளையும்விட கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. ஆனால் அது கெட்ட அறிகுறியாகவோ அச்சமூட்டுவதாகவோ இல்லை. அது கண்ணுக்கு கவர்ச்சியூட்டுகிறது. யெகோவாவின் ஆலயம் வீற்றிருக்கும் மலையில் ஏறுவதற்கு சகல ஜனங்களும் ஏங்குகிறார்கள்; அங்கே அலைகடலென திரண்டு வருகிறார்கள். இதை மனத்திரையில் பார்ப்பது சுலபம், ஆனால் இது எதை அர்த்தப்படுத்துகிறது?

8ஏசாயா காலத்தில், குன்றுகளும் மலைகளும் பெரும்பாலும் வழிபாட்டோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. உதாரணமாக, இவை விக்கிரக வழிபாட்டு ஸ்தலங்களாகவும் பொய் தேவர்களின் புனித ஸ்தலங்களாகவும் விளங்குகின்றன. (உபாகமம் 12:2; எரேமியா 3:6) ஆனால், யெகோவாவின் ஆலயமோ எருசலேமில் வீற்றிருக்கும் மோரியா மலை முகட்டை அலங்கரிக்கிறது. உண்மையுள்ள இஸ்ரவேலர் ஆண்டுக்கு மூன்று முறை எருசலேமுக்கு சென்று, மெய் தேவனை வழிபடுவதற்கு மோரியா மலையில் ஏறுகிறார்கள். (உபாகமம் 16:16) ஆகவே, ‘யெகோவாவின் ஆலயமாகிய மலைக்கு’ தேசத்தார் திரண்டு வருவது அநேக ஜனங்கள் மெய் வணக்கத்தின் பக்கமாக கூடிவருவதை படமாக சித்தரித்துக் காட்டுகிறது.

9ஆனால் இன்றைக்கு கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தைக் கொண்ட ஒரு மலையில் கடவுளுடைய ஜனங்கள் கூடிவருவதில்லை. பொ.ச. 70-⁠ல் யெகோவாவின் ஆலயம் ரோம சேனைகளால் அழிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, எருசலேமில் இருந்த ஆலயமும் அதற்கு முன்பிருந்த ஆசரிப்புக் கூடாரமும் ஒரு படமாகவே இருந்தன என்பதை அப்போஸ்தலன் பவுல் தெளிவாக்கினார். ஆகவே, அவை ஆவிக்குரிய கருத்தில் மெய்மையடையும் மகத்தான ஒன்றை, அதாவது ‘மனுஷரால் அல்ல, [யெகோவாவால்] ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்தை’ பிரதிநிதித்துவம் செய்தன. (எபிரெயர் 8:2) இயேசு கிறிஸ்துவினுடைய கிரய பலியின் அடிப்படையில் யெகோவாவை வணங்குவதற்கு அவரை அணுகும் ஏற்பாடே இந்த ஆவிக்குரிய கூடாரம். (எபிரெயர் 9:2-10, 23) இதற்கு இசைவாக, ஏசாயா 2:2-⁠ல் குறிப்பிடப்படும் “யெகோவாவின் ஆலயமாகிய மலை,” நம்முடைய நாளில் யெகோவாவின் தூய வணக்கம் மணிமகுடமாக திகழ்வதை படமாக சித்தரித்துக் காட்டுகிறது. அன்று இஸ்ரவேலர் எருசலேம் ஆலயத்தில் கூடிவந்தது போல, இன்று தூய வணக்கத்தை தழுவுகிறவர்கள் எந்தவொரு தனிப்பட்ட இடத்திலும் கூடிவருவதில்லை; மாறாக, அவர்கள் ஒன்றுபட்ட வணக்கத்தில் கூடிவருகிறார்கள்.

தூய வணக்கம் மணிமகுடமாதல்

10“யெகோவாவின் ஆலயமாகிய மலை,” அல்லது தூய வணக்கம், ‘மலைகளுக்கும் மேலாக உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டு, குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்’ என தீர்க்கதரிசி சொல்கிறார். ஏசாயாவின் காலத்திற்கு வெகுமுன்னரே, எருசலேமிலுள்ள சீயோன் மலைக்கு உடன்படிக்கையின் பெட்டியை தாவீது ராஜா கொண்டுவந்தார்; இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் அமைந்திருந்தது. மோரியா மலையில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படும் வரை அந்தப் பெட்டி அங்கேயே இருந்தது. (2 சாமுவேல் 5:7; 6:14-19; 2 நாளாகமம் 3:1; 5:1-10) இவ்வாறாக, ஏசாயாவின் நாளிற்குள் இந்தப் பரிசுத்தப் பெட்டி ஏற்கெனவே உயர்ந்த இடத்தில், பொய் வணக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட சுற்றியுள்ள மலைகளைவிட மேலான நிலையில், ஆலயத்தில் இருந்தது.

11ஆவிக்குரிய கருத்தில், பொய் தேவர்களை வழிபட்டு வந்தவர்களுடைய மதப் பழக்க வழக்கங்களைவிட யெகோவாவின் வணக்கம் எப்பொழுதுமே மிகவும் சிறந்து விளங்கியிருக்கிறது. ஆனால் நம்முடைய நாளில், யெகோவா தம்முடைய வணக்கத்தை வானளாவ உயர்த்தியிருக்கிறார். பரிசுத்தமற்ற எல்லா வகையான வழிபாட்டிற்கும் மேலாக, எல்லா ‘குன்றுகளுக்கும்’ ‘மலைகளுக்கும்’ மேலாக உயர்த்தியிருக்கிறார். எப்படி? அவரை ‘ஆவியோடும் உண்மையோடும்’ வழிபட விரும்புகிறவர்களை ஒன்றுகூட்டி சேர்ப்பதன் மூலமாகவே.​—யோவான் 4:⁠23.

12இந்த ‘உலகத்தின் முடிவை’ அறுவடையின் சமயம் என கிறிஸ்து இயேசு குறிப்பிட்டார். இந்தச் சமயத்தில் ‘ராஜ்யத்தின் புத்திரரை,’ அதாவது பரலோக மகிமையில் இயேசுவுடன் ஆட்சி செய்யும் நம்பிக்கையுள்ளவர்களை தேவதூதர்கள் கூட்டிச் சேர்ப்பார்கள். (மத்தேயு 13:36-43) இந்த அறுவடை வேலையில் தேவதூதர்களோடு இந்தப் புத்திரரில் ‘மீதியானோரும்’ பங்குகொள்வதற்கு 1919 முதல் யெகோவா இவர்களுக்கு வல்லமை அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 12:17) எனவே, இயேசுவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களாகிய ‘ராஜ்யத்தின் புத்திரரே’ முதலில் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். பின்பு இவர்கள் கூடுதலான கூட்டிச்சேர்க்கும் வேலையில் பங்குகொள்கிறார்கள்.

13அறுவடையின் இந்தச் சமயத்தில், அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த மீதியானோர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளை புரிந்துகொள்வதற்கும் அதை பொருத்தி பிரயோகிப்பதற்கும் யெகோவா படிப்படியாக உதவி செய்திருக்கிறார். இதுவும் தூய வணக்கம் உயர்த்தப்படுவதற்கு பங்களித்திருக்கிறது. ‘இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும்,’ யெகோவாவால் சுத்திகரிக்கப்பட்டு புடமிடப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்டோர் மனிதகுலத்தின் மத்தியில் ‘சுடர்களைப் போல பிரகாசிக்கின்றனர்.’ (ஏசாயா 60:2; பிலிப்பியர் 2:14, 15) ‘எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் [“புரிந்துகொள்ளுதலோடும்,” NW] அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட்டிருக்கிற’ ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட இவர்கள், ‘தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிக்கிறார்கள்.’​—கொலோசெயர் 1:⁠9; மத்தேயு 13:43.

14மேலும், மற்றவர்களும் ‘யெகோவாவின் ஆலயமாகிய மலைக்கு’ திரண்டு வந்திருக்கிறார்கள்; இவர்களை ‘வேறே ஆடுகள்’ என இயேசு அழைக்கிறார்; பூத்துக்குலுங்கும் பூங்காவனம் போன்ற பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 21:3, 4) 1930-⁠களில், எண்ணிக்கையில் இவர்கள் சில ஆயிரங்களாக இருந்தார்கள், பிறகு பல ஆயிரங்களாக உயர்ந்து, இப்பொழுதோ லட்சங்களாக அதிகரித்திருக்கிறார்கள்! அப்போஸ்தலன் யோவானுக்கு அருளப்பட்ட தரிசனத்தில், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களாக’ இவர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள்.​—வெளிப்படுத்துதல் 7:⁠9.

15இந்தத் திரள் கூட்டத்தார் திரண்டுவருவதை ஆகாய் தீர்க்கதரிசி முன்னுரைத்தார். அவர் எழுதினார்: “சேனைகளின் யெகோவா சொல்கிறார்: ‘கொஞ்சக் காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப் பண்ணுவேன். சகல தேசத்தாரையும் அசையப் பண்ணுவேன், சகல தேசத்தாரிலுமிருந்தும் விரும்பப்பட்டவைகள் கட்டாயம் வரும் [அதாவது, தூய வணக்கத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களோடு சேர்ந்துகொள்பவர்கள் வருவார்கள்]; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்’ என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.” (ஆகாய் 2:6, 7, NW) தொடர்ந்து அதிகரித்துவரும் இந்தத் திரள் கூட்டத்தாரும் அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுடைய தோழர்களும் யெகோவாவின் ஆலயத்தில் தூய வணக்கத்தை உயர்த்துகிறார்கள், ஆம் மகிமைப்படுத்துகிறார்கள். மெய் தேவனுடைய வணக்கத்தில் முன்னொருபோதும் இவ்வளவு பேர் ஒன்றுபட்டதாக சரித்திரம் இல்லை. இது யெகோவாவுக்கும் அரியணையில் அமர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கும் மகிமை சேர்க்கிறது. சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதினார்: “ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை.”​—நீதிமொழிகள் 14:⁠28.

ஜனங்களின் வாழ்க்கையில் வழிபாடு மணிமகுடமாகிறது

16நம்முடைய காலத்தில் தூய வணக்கத்தை மணிமகுடமாக்கியதற்கான எல்லா புகழும் யெகோவாவுக்கே உரியது. இருப்பினும், அவரை அண்டி வருபவர்கள் இந்தப் பணியில் பங்குகொள்வதற்கு பாக்கியம் பெற்றவர்கள். மலையேறுவதற்கு முயற்சி தேவை, அதைப் போலவே கடவுளுடைய நீதியான தராதரங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அதற்கேற்ப வாழ்வதற்கும் முயற்சி தேவை. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, இன்று கடவுளுடைய ஊழியர்களும் தூய வணக்கத்திற்குப் பொருத்தமில்லா வாழ்க்கை பாணிகளையும் பழக்க வழக்கங்களையும் ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள். வேசித்தனக்காரரும் விக்கிரகாராதனைக்காரரும் விபச்சாரக்காரரும் திருடரும் பேராசைக்காரரும் குடிவெறியரும் ஏனைய பலரும் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு கடவுளுடைய பார்வையில் ‘கழுவப்பட்டிருக்கிறார்கள்.’​—1 கொரிந்தியர் 6:9-11.

17ஒரு பெண்ணின் அனுபவம் இதற்கு ஓர் உதாரணம். அவள் இவ்வாறு எழுதினாள்: “நான் ஒரு காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தேன். ஒழுக்கயீனமான வாழ்க்கை நடத்தி வந்தேன். எப்பொழுது பார்த்தாலும் ஒரே குடிதான். எனக்கு பால்வினை நோய்களும் இருந்தன. போதைப் பொருட்களும் விற்றுவந்தேன், நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.” பைபிளை படித்தப் பிறகு, கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய வாழ்வதற்காக அவள் பெரும் மாற்றங்களை செய்தாள். இப்பொழுது அவள் சொல்கிறாள்: “எனக்கு இப்பொழுது மனநிம்மதியும் சுயமரியாதையும் இருக்கிறது, ஓர் அருமையான குடும்பமும் எதிர்கால நம்பிக்கையும் இருக்கிறது. எல்லாவற்றையும்விட நம்முடைய தகப்பனாகிய யெகோவாவுடன் நல்ல உறவும் இருக்கிறது.”

18யெகோவாவுடைய பார்வையில் அங்கீகரிக்கப்பட்டவர்களாக மாறிய பிறகும்கூட, வாழ்க்கையில் தூய வணக்கத்தை முதலிடத்தில் வைப்பதன் மூலம் அனைவரும் அதை மணிமகுடமாக்க வேண்டும். மிக ஆர்வத்துடன் தூய வணக்கத்தை வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கும் திரளான ஜனங்கள் இன்று இருப்பார்கள் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயாவின் வாயிலாக யெகோவா தெரிவித்தார். அவர்களில் நீங்களும் ஒருவரா?

யெகோவாவின் வழியில் போதிக்கப்பட்ட ஒரு ஜனம்

19இன்று தூய வணக்கத்தை தழுவுகிறவர்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை ஏசாயா நமக்கு எடுத்துரைக்கிறார். அவர் கூறுகிறார்: “திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் [“யெகோவாவின் மலைக்கும்,” NW], யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] வசனமும் வெளிப்படும்.”​—ஏசாயா 2:⁠3.

20தம்முடைய ஜனங்கள் வழிதவறிய ஆடுகளைப் போல அலைந்து திரிய யெகோவா அனுமதிப்பதில்லை. பைபிள் மற்றும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள் வாயிலாக, தம்முடைய வழிகளை கற்றுக்கொள்வதற்கு ‘வேதத்தையும்,’ ‘வசனத்தையும்’ அருளுகிறார். இந்த அறிவு ‘அவருடைய பாதைகளில் நடப்பதற்கு’ அவர்களை தகுதியாக்குகிறது. அவர்கள் போற்றுதலால் நிரம்பி வழியும் இதயத்தோடும் தெய்வீக வழிநடத்துதலுக்கு இசைவாகவும், யெகோவாவின் வழிகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள். கடவுளுடைய வழிகளை செவிகொடுத்துக் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் பெரிய மாநாட்டு திடல்களிலும் சிறிய தொகுதிகளாக ராஜ்ய மன்றங்களிலும் வீடுகளிலும் ஒன்றுகூடி வருகிறார்கள். (உபாகமம் 31:12, 13) இவ்வாறு, ‘அன்பிலும் நற்கிரியையிலும்’ பெருகும்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும் தூண்டுவதற்கும் ஒன்றுகூடி வந்த பூர்வ கிறிஸ்தவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.​—எபிரெயர் 10:24, 25.

21மணிமகுடமாக விளங்கும் யெகோவா தேவனுடைய வணக்கத்திற்கு “போவோம் வாருங்கள்” என மற்றவர்களையும் இவர்கள் அழைக்கிறார்கள். இயேசு பரலோகத்திற்கு ஏறிச்செல்வதற்கு சற்று முன்பு தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையோடு இது எவ்வளவு நன்றாக பொருந்துகிறது! அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்படிதலுடன் உலகம் முழுவதும் சென்று, தெய்வீக ஆதரவுடன் மக்களுக்கு கற்பித்து, சீஷராக்கி, முழுக்காட்டுதல் கொடுக்கிறார்கள்.

பட்டயங்கள் கலப்பைக் கொழுக்களாக

22நாம் இப்பொழுது அடுத்த வசனத்திற்கு வருகிறோம், இதன் ஒரு பகுதிதான் ஐநா சபையின் சதுக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏசாயா எழுதுகிறார்: “அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, பல தேசத்தாருக்குத் தீர்ப்பு செய்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு [“தேசத்தாருக்கு,” NW] விரோதமாய் ஜாதி [“தேசத்தார்,” NW] பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”​—ஏசாயா 2:⁠4, தி.மொ.

23இதை சாதிப்பது சாமானிய விஷயமல்ல. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பின் இயக்குநர் ஃபெட்ரிக்கோ மேயர் இவ்வாறு சொன்னார்: “போரினால் அநேக நாசமோசங்கள் ஏற்பட்டிருக்கின்றன, இவற்றை நம்முடைய நாட்களில் ஆடியோ-வீடியோ சாதனங்கள் வீட்டில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன; அப்படியிருந்தும் பெரிய பெரிய போர் தளவாடங்களை ஏற்படுத்தி அதை பல நூற்றாண்டுகளாக பராமரித்து வருவது நின்றபாடில்லை. தற்போதைய சந்ததியார் பைபிள் கட்டளைக்கு இசைவாக ‘பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாக அடித்து,’ தொன்றுதொட்டே இருந்துவரும் போருக்கான குணத்திலிருந்து சமாதானத்திற்கான குணத்திற்கு மாறுவார்கள் என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத காரியம். இதை சாதிப்பதே இந்த உலகம் செய்யத்தக்க மிகவும் சிறந்த செயல், மெச்சத்தகுந்த செயல்; இதுவே வருங்கால சந்ததியாருக்கு விட்டுச்செல்லும் மிகச் சிறந்த ஆஸ்தி.”

24இந்த உயர்ந்த லட்சியத்தை தேசங்கள் ஒருகாலும் அடைய முடியாது. இது அவர்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டது. தூய வணக்கத்தில் ஒன்றுசேரும் அநேக தேசங்களைச் சேர்ந்த தனி நபர்கள் மீது ஏசாயாவின் வார்த்தைகள் நிறைவேற்றமடைகின்றன. அவர்கள் மத்தியில் யெகோவா ‘வழக்காடியிருக்கிறார்,’ அல்லது ‘காரியங்களை சீராக்கியிருக்கிறார்.’ (NW) தம்முடைய ஜனங்கள் ஒருவரோடொருவர் சமாதானமாக வாழ கற்பித்திருக்கிறார். பிளவுபட்ட, சண்டை சச்சரவுகளால் பீடிக்கப்பட்ட ஓர் உலகில், அடையாள அர்த்தத்தில், உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய “பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடி”த்திருக்கிறார்கள். எப்படி?

25தேசங்கள் நடத்தும் போர்களில் அவர்கள் எந்தப் பக்கத்தையும் ஆதரிப்பதில்லை. இயேசுவின் மரணத்திற்குச் சற்று முன்பு, ஆயுதம் தாங்கிய மனிதர்கள் அவரை கைது செய்ய வந்தனர். அப்பொழுது பேதுரு தன்னுடைய எஜமானரை பாதுகாக்க ஒரு பட்டயத்தை உருவி விளாசினார். அப்போது இயேசு அவரிடம் சொன்னார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (மத்தேயு 26:52) அதுமுதல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோர் தங்களுடைய பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாக அடித்திருக்கிறார்கள். சகமனிதரை கொலை செய்ய ஆயுதங்களை எடுப்பதிலிருந்து அல்லது வேறுவிதத்தில் போர் நடவடிக்கைகளை ஆதரிப்பதிலிருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் ‘யாவரோடும் சமாதானமாயிருக்க நாடுகிறார்கள்.’​—எபிரெயர் 12:⁠14.

சமாதான வழிகளை நாடுதல்

26கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் சமாதானம் யுத்தத்தில் ஈடுபட மறுப்பதால் மட்டுமே அல்ல. அவர்கள் 230-⁠க்கும் அதிகமான நாடுகளில் வாழ்கிறார்கள், பல்வேறு மொழிகளிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள், என்றாலும் அவர்கள் ஒருவரோடொருவர் சமாதானத்தில் திளைக்கிறார்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என முதல் நூற்றாண்டு சீஷர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகளின் நவீனகால நிறைவேற்றத்தை இவர்கள் மத்தியில் காணலாம். (யோவான் 13:35) இன்று கிறிஸ்தவர்கள் “சமாதானம் பண்ணுகிறவர்கள்.” (மத்தேயு 5:9) இவர்கள் ‘சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடருகிறார்கள்.’ (1 பேதுரு 3:11) ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவா இவர்களை தாங்குகிறார்.​—ரோமர் 15:⁠33.

27சமாதானம் பண்ணுவதற்கு கற்றுக்கொண்டவர்களைப் பற்றிய உள்ளத்தை உருக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி ஒரு வாலிபன் இவ்வாறு எழுதுகிறார்: “என்னை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை வேதனையான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். அது என்னை முரடனாக மாற்றியது, வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிரச்சினைகள் எப்பொழுதும் கைகலப்பில்தான் முடியும். ஒவ்வொரு நாளும் அக்கம் பக்கத்திலுள்ள பையன்களிடம் சண்டை போடுவேன், சிலசமயங்களில் முஷ்டியால் தாக்குவேன், சிலசமயங்களில் கல்லால் அல்லது பாட்டிலால் தாக்குவேன். நான் மிகவும் கொடூரனாக வளர்ந்து வந்தேன்.” ஆனால் சிலகாலத்திற்குப் பின், ‘யெகோவாவின் ஆலயமாகிய மலைக்குப்’ போவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவன் ஏற்றுக்கொண்டான். கடவுளுடைய வழிகளை அறிந்துகொண்டு, பிற்பாடு கடவுளுடைய சமாதான ஊழியனாக அவன் மாறினான்.

28பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான பின்னணியைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால், தயவு காட்டுவது, மன்னிப்பது, பரிவு காட்டுவது போன்ற சிறிய விஷயங்களிலும் மற்றவர்களுடன் சமாதானமாக இருப்பதற்குப் போராடுகிறார்கள். அபூரணராக இருந்தாலும், “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையை வாழ்க்கையில் கடைப்பிடிக்க கடினமாக முயலுகிறார்கள்.​—கொலோசெயர் 3:⁠13.

சமாதான எதிர்காலம்

29இந்தக் ‘கடைசி நாட்களில்’ யெகோவா மகத்தான காரியத்தை செய்திருக்கிறார். அவருக்கு சேவை செய்ய விரும்பும் ஜனங்களை எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிச் சேர்த்திருக்கிறார். தம்முடைய வழிகளில், அதாவது சமாதானமான வழிகளில் நடக்க அவர்களுக்கு கற்பித்திருக்கிறார். இவர்களே ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைத்து, போர் வாடையே இல்லாத சமாதானமான புதிய உலகில் பிரவேசிப்பார்கள்.​—வெளிப்படுத்துதல் 7:⁠14.

30வாள்கள்​—⁠போர்த் தளவாடங்கள்​—⁠இனி ஒருபோதும் இரா. அப்படிப்பட்ட காலத்தைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” (சங்கீதம் 46:8, 9) இப்பேர்ப்பட்ட எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கையில், “யாக்கோபின் வீட்டாரே, நாம் யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்” என்ற ஏசாயாவின் புத்திமதி அன்றைக்கு பொருத்தமாக இருந்தது போலவே இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. (ஏசாயா 2:5, NW) ஆம், யெகோவாவின் தீபம் நம் பாதைக்கு வெளிச்சத்தைப் பரப்பட்டும், சதா காலங்களுக்கும் நாம் அவருடைய பாதையில் நடப்போமாக.​—மீகா 4:⁠5.

[அடிக்குறிப்பு]

a நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் “இவை கடைசி நாட்கள்!” என்ற 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க. இது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[கேள்விகள்]

1, 2. ஐக்கிய நாட்டு சபையின் சதுக்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது, அது எதிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது?

3. பட்டயங்களை கலப்பைக் கொழுக்களாக அடிக்கும் தேசத்தார் யார்?

4, 5. ஏசாயா இரண்டாம் அதிகாரத்தின் ஆரம்ப வார்த்தைகள் எதை முன்னறிவிக்கின்றன, இந்த வார்த்தைகளின் நம்பகத்தன்மையை எது வலியுறுத்திக் காட்டுகிறது?

6. ஏசாயா தீர்க்கதரிசனம் எப்பொழுது நிறைவேற்றமடைகிறது?

7. என்ன தீர்க்கதரிசன மாதிரியை ஏசாயா வர்ணிக்கிறார்?

8. (அ) ஏசாயாவின் நாளில் குன்றுகளும் மலைகளும் எதோடு தொடர்புபடுத்தப்படுகின்றன? (ஆ) ‘யெகோவாவின் ஆலயமாகிய மலைக்கு’ தேசத்தார் திரண்டு வருவது எதை அடையாளப்படுத்துகிறது?

9. “யெகோவாவின் ஆலயமாகிய மலை” எதைக் குறிக்கிறது?

10, 11. என்ன கருத்தில் யெகோவாவின் வணக்கம் இன்று உயர்த்தப்பட்டிருக்கிறது?

12. ‘ராஜ்யத்தின் புத்திரர்’ யார், எப்படிப்பட்ட கூட்டிச் சேர்க்கும் வேலை நடந்திருக்கிறது?

13. அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை யெகோவா எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?

14, 15. ‘ராஜ்யத்தின் புத்திரர்’ கூட்டிச் சேர்க்கப்படுவதோடு, வேறென்ன கூட்டிச் சேர்ப்பும் நடந்திருக்கிறது, இது எவ்வாறு ஆகாயினால் முன்னறிவிக்கப்பட்டது?

16-18. யெகோவாவை அங்கீகரிக்கத்தக்க விதத்தில் வணங்குவதற்கு சிலர் என்ன மாற்றங்களை செய்திருக்கின்றனர்?

19, 20. கடவுளுடைய ஜனங்களுக்கு எது போதிக்கப்படுகிறது, எங்கே?

21. யெகோவாவின் ஊழியர்கள் என்ன வேலையில் பங்குகொள்கிறார்கள்?

22, 23. ஏசாயா 2:4 எதை முன்னறிவிக்கிறது, இதைப் பற்றி ஐநா அதிகாரி ஒருவர் என்ன சொன்னார்?

24, 25. ஏசாயாவின் வார்த்தைகள் யார் மீது நிறைவேற்றமடைந்திருக்கின்றன, எந்த விதத்தில்?

26, 27. எவ்வாறு கடவுளுடைய ஜனங்கள் ‘சமாதானத்தைத் தேடி அதை பின்தொடருகிறார்கள்’? உதாரணம் கொடுங்கள்.

28. சமாதானத்தை நாடுவதற்கு கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?

29, 30. பூமியில் எப்படிப்பட்ட மாற்றம் வரப்போகிறது?