யெகோவாவுக்காக காத்திருங்கள்
அதிகாரம் இருபத்து மூன்று
யெகோவாவுக்காக காத்திருங்கள்
துன்மார்க்கருக்கு எதிரான இன்னும் சில தெய்வீக அறிவிப்புகளை ஏசாயா 30-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். என்றபோதிலும், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த பாகம், எச்சரிப்பின் செய்திகளோடு நிறைவடைவதில்லை. இருதயத்துக்கு இதமான யெகோவாவின் சில குணங்களையும் இது சிறப்பித்துக் காட்டுகிறது. இந்தப் பகுதி, யெகோவாவின் பண்புகளை அவ்வளவு தத்ரூபமாக வருணிப்பதால், நம்முடன் இருந்து அவர் நமக்கு ஆறுதல் அளிப்பதுபோல இருக்கிறது; அதோடு, அவரது வழிகாட்டும் பரிவான குரலை கேட்கவும், குணமளிக்கும் இதமான, மென்மையான வருடலை உணரவும் நம்மால் முடிகிறது.—ஏசாயா 30:20, 21, 26.
2இருந்தாலும், ஏசாயாவின் மக்கள், அதாவது யூதாவின் விசுவாச துரோக குடிமக்கள், யெகோவாவிடம் திரும்பிவர மறுக்கின்றனர். அவர்கள் மனிதர்மேல் நம்பிக்கை வைக்கின்றனர். இதை யெகோவா எப்படி கருதுகிறார்? ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பாகம், யெகோவாவுக்காக காத்திருக்க இன்று கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவுகிறது? (ஏசாயா 30:18) அதைப் பற்றி ஆராய்வோமா?
மடமையும் அதன் விளைவும்
3அசீரியாவின் அடிமைத்தன நுகத்தின்கீழ் வர யூதாவின் தலைவர்கள் விரும்பவில்லை. எனவே, அதை தவிர்ப்பதற்காக இரகசிய திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால், அவர்கள் செய்துகொண்டிருந்த எல்லா காரியங்களையும் யெகோவா பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களுடைய இரகசிய திட்டத்தை அம்பலமாக்குகிறார்: “கலக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்; என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்; இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர். என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.”—ஏசாயா 30:1, 2அ, பொ.மொ.
சங்கீதம் 27:1; 36:7) ஆனால், இப்போதோ அவர்கள் “பார்வோனின் ஆற்றலில் அடைக்கலம் பெறவும், எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும்” போகின்றனர். (ஏசாயா 30:2ஆ, பொ.மொ.) கடவுளுக்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை எகிப்திற்கு கொடுக்கின்றனர்! கடவுளுக்கெதிரான எப்படிப்பட்ட துரோகம்!—ஏசாயா 30:3-5-ஐ வாசிக்கவும்.
4தங்கள் இரகசிய திட்டங்கள் அம்பலமாக்கப்படுவது அந்தத் தலைவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாய் இருந்திருக்கும்! எகிப்திற்குச் சென்று அந்த நாட்டோடு அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற திட்டம், அசீரியாவிற்கு எதிராக போரில் ஈடுபடுவதை மட்டும் குறிக்கவில்லை. அது யெகோவா தேவனுக்கு எதிரான கலகமாகும். தாவீது ராஜாவின் நாட்களில், யெகோவாவையே அரணாகவும் கோட்டையாகவும் தேசம் கருதியது. ‘அவருடைய செட்டைகளின் நிழலிலே’ அவர்கள் அடைக்கலம் புகுந்தனர். (5எந்தவித முன்யோசனையோ, திட்டமோ இல்லாமல் திடீரென, தற்செயலாக இந்த தூதுக்குழு எகிப்திற்கு செல்கிறதா? இல்லை என்பதை நிரூபிக்கவே ஏசாயா மேலும் பல தகவல்களைத் தருகிறார். ‘தெற்கிலுள்ள மிருகங்களைப் பற்றிய அறிக்கை: கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது; கோபத்தோடு உறுமும் சிங்கமும் சிறுத்தையும், விரியனும் கொள்ளிவாய்ச்சர்ப்பமும் உள்ள நாடு அது; இந்த நாட்டின் வழியே, கழுதைகளின் முதுகின்மேல் தங்கள் செல்வங்களையும் ஒட்டகங்களின் திமில்கள்மேல் தங்கள் வளங்களையும் ஏற்றிச் செல்கின்றனர்.’ (ஏசாயா 30:6அ, NW) அது நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற பயணம் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. பொதுவாக தூதுவர் குழுவில், கழுதை மற்றும் ஒட்டகங்களின் கூட்டம் வரிசையாக செல்லும். அப்படிப்பட்ட பயணம்தான் யூதாவின் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. விலையுயர்ந்த பொருட்களை ஒட்டகங்கள், கழுதைகளின்மேல் ஏற்றி, கோபத்தோடு உறுமும் சிங்கங்களும் விஷமுள்ள பாம்புகளும் நிறைந்த பாழும் வனாந்தரத்தின் வழியாக எகிப்துக்கு செல்கின்றனர். ஒருவழியாக, செல்ல வேண்டிய இடத்திற்கு அந்தக் குழு சென்று சேர்கிறது. அரும்பொருட்களும் எகிப்தியர் கையில் சேர்க்கப்படுகின்றன. எனவே, பாதுகாப்பை விலைகொடுத்து வாங்கி விட்டதாக நினைக்கின்றனர். ஆனால், யெகோவா இப்படி சொல்கிறார்: “தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டு போகிறார்கள். எகிப்தியர் சகாயம் பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆதலால் நான் அவர்களைப் ‘பயனற்ற ராகாபு’ என அழைத்தேன்.” (ஏசாயா 30:6ஆ, 7, NW) “ராகாபு” அதாவது “கொடிய சமுத்திர மிருகம்” எகிப்தை அடையாளப்படுத்துகிறது. (ஏசாயா 51:9, 10) எல்லாவற்றையும் சாதிப்பதாக உறுதி கொடுக்கிறது, ஆனால் ஒன்றையுமே செய்வதில்லை. அதனோடு யூதாவின் அரசியல் ஒப்பந்தம், அழிவுக்கு வழிநடத்தும் குற்றம்.
6இந்த தூதுக்குழுவின் பயணத்தை ஏசாயா வருணிக்கையில், மோசேயின் நாட்களில் மேற்கொண்ட இதேமாதிரியான பயணம்தான் அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். அந்த ‘பயங்கரமான வனாந்தரம்’ வழியாகத்தான் அவர்களுடைய மூதாதையர் பிரயாணம் செய்தனர். (உபாகமம் 8:14-16) மோசேயின் நாட்களிலோ, இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சென்றனர். ஆனால் இந்த முறையோ, தூதுவர்குழு எகிப்திற்கு, அதுவும் அடிமைத்தனத்திற்கு பிரயாணப்பட்டு செல்கிறது. என்னே மடத்தனம்! நாம் ஒருபோதும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்காதிருப்போமாக! நம்முடைய ஆவிக்குரிய சுதந்திரத்தை அடிமைத்தனத்திற்கு விற்றுப்போடாமல் இருப்போமாக!—கலாத்தியர் 5:1-ஐ ஒப்பிடுக.
தீர்க்கதரிசியின் செய்திக்கு எதிர்ப்பு
7செய்தியை எழுதும்படி யெகோவா ஏசாயாவிடம் சொல்கிறார். ‘வருங்காலத்திற்கென, என்றுமுள்ள சான்றாக விளங்கும்படி’ அதை எழுத சொல்கிறார். (ஏசாயா 30:8, பொ.மொ.) யெகோவாவின்மேல் சார்ந்திருப்பதைவிட அரசியல் ஒப்பந்தங்களில் அதிக நம்பிக்கை வைப்பதை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்கால சந்ததியாரின் நன்மைக்காக இது பதிவு செய்யப்பட வேண்டும். இன்று, நம்முடைய சந்ததியாரையும் இது உட்படுத்துகிறது. (2 பேதுரு 3:1-4) ஆனால் உடனடியாக எழுதி வைப்பது அவசியமாய் இருக்கிறது. ஏன்? “இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.” (ஏசாயா 30:9) கடவுளுடைய ஆலோசனையை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். எனவேதான், அந்த வார்த்தைகள் எழுதி வைக்கப்பட வேண்டியதாயிற்று. தகுந்த எச்சரிக்கை பெற்றதை அவர்கள் பிறகு மறுக்க முடியாதல்லவா!—நீதிமொழிகள் 28:9; ஏசாயா 8:1, 2.
ஏசாயா 30:10) ‘யதார்த்தமானதை’ அல்லது சத்தியத்தை சொல்ல வேண்டாம் என உண்மையுள்ள தீர்க்கதரிசிகளுக்கு கட்டளையிடுகின்றனர். அதற்கு மாறாக, ‘இதமானவைகளையும், மாயமானவைகளையும்’ அல்லது பொய்யானவற்றையுமே பேசும்படி சொல்கின்றனர். தங்கள் காதுகளுக்கு இனிமையான இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்கவே யூதாவின் தலைவர்கள் விரும்புகின்றனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கண்டன வார்த்தைகளை கேட்க அவர்கள் விரும்பவில்லை; புகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கவே விரும்புகின்றனர். அவர்களுடைய கருத்தில், அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப தீர்க்கதரிசனம் சொல்ல ஒத்துவராத எந்த தீர்க்கதரிசியும் “வழியைவிட்டு, பாதையினின்று விலகி”விட வேண்டும். (ஏசாயா 30:11அ) ஒன்று அவர்களுடைய காதுக்கு இனிமையான வார்த்தைகளை பேச வேண்டும்; இல்லையென்றால் பிரசங்கிப்பதையே அடியோடு நிறுத்திவிட வேண்டும்!
8ஜனங்களின் கலகத்தனமான மனப்பான்மைக்கு ஓர் உதாரணத்தை ஏசாயா இப்போது கொடுக்கிறார். இவர்கள் “தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள்” என்றும் சொல்கின்றனர். (9ஏசாயாவின் எதிராளிகள் அவரை இவ்வாறு வற்புறுத்துகின்றனர்: “இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள்.” (ஏசாயா 30:11ஆ) ‘இஸ்ரவேலின் பரிசுத்தராகிய’ யெகோவாவின் நாமத்தில் ஏசாயா பேசுவதை நிறுத்தட்டும்! ‘இஸ்ரவேலின் பரிசுத்தர்’ என்ற இந்தப் பட்டம் அவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது. ஏனென்றால், யெகோவாவின் உன்னதமான தராதரங்கள் அவர்களுடைய இழிவான நிலையை வெட்டவெளிச்சமாக்குகின்றன. அதற்கு ஏசாயா எப்படி பிரதிபலிக்கிறார்? அவர் அறிவிக்கிறார்: “இஸ்ரவேலின் பரிசுத்தர் சொன்னது இதுவே.” (ஏசாயா 30:12அ, NW) எந்தவித தயக்கமும் இன்றி, தன்னுடைய எதிரிகள் எந்த வார்த்தைகளைக் கேட்க வெறுத்தார்களோ அந்த வார்த்தைகளையே ஏசாயா பேசுகிறார். அவர் பயந்துவிடமாட்டார். நமக்கு எவ்வளவு சிறந்த உதாரணம்! கடவுளுடைய செய்தியை அறிவிக்கையில், எதிர்ப்புகள் வந்தாலும் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பயந்து இணங்கிவிடக்கூடாது. (அப்போஸ்தலர் 5:27-29) ஏசாயாவைப் போலவே, நாமும் ‘யெகோவா சொன்னது இதுதான்!’ என தொடர்ந்து அறிவிக்க வேண்டும்.
கலகத்தின் விளைவு
10கடவுளுடைய வார்த்தையை யூதா ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. பொய்யை நம்புகிறது, ‘தாறுமாறானதையே’ சார்ந்திருக்கிறது. (ஏசாயா 30:12) விளைவு என்ன? யெகோவா தங்களுடைய விஷயங்களில் தலையிடாமல் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆனால், நிச்சயம் அத்தேசத்தை அவர் அழிப்பார்! அது திடீரென்றும் முழுமையாகவும் நிறைவேறும். இதை ஓர் உதாரணத்தோடு ஏசாயா விளக்குகிறார். அந்த தேசத்தின் கலகத்தனம் “உயர்ந்த மதிற்சுவரில் இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல்” இருக்கிறது. (ஏசாயா 30:13, பொ.மொ.) உயர்ந்த சுவரில் ஏற்பட்டுள்ள வெடிப்பு பெரிதாகி, பெரிதாகி முழு சுவரையுமே இடிந்துவிழச் செய்யும். அதுபோலவே, ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கலகத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து முடிவில் முழு தேசமுமே அழியும்நிலை ஏற்படும்.
11வரவிருக்கும் அழிவு எப்படி முழுமையாக இருக்கும் என்பதை இன்னொரு உதாரணத்தின்மூலம் ஏசாயா விளக்குகிறார்: “அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.” (ஏசாயா 30:14) யூதா முழுமையாக அழிக்கப்படும். மதிப்புள்ள பொருள் ஒன்றுமே அங்கு இருக்காது. அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும் சேறு நிறைந்த குளத்திலிருந்து தெளிவான தண்ணீரை எடுப்பதற்கும் நொறுங்கின துண்டுகளில் ஒரு ஓடுகூட இருக்காது. என்னே வெட்கக்கேடான முடிவு! இன்றும் உண்மை வணக்கத்தை எதிர்க்கும் அனைவருக்கும் வரவிருக்கிற முடிவு அதைப் போலவே திடீரென்றும் முழுமையாகவும் இருக்கும்.—எபிரெயர் 6:4-8; 2 பேதுரு 2:1.
யெகோவாவின் அழைப்பு நிராகரிக்கப்படுதல்
12ஆனால், ஏசாயாவின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கோ, அழிவு தவிர்க்க முடியாததல்ல. தப்பிக்கொள்ள வழியுண்டு. அதை தீர்க்கதரிசி விளக்குகிறார்: ‘நீங்கள் மனந்திரும்பி அமைதியுற்றால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் [“அமைதி,” பொ.மொ.] நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.’ (ஏசாயா 30:15அ) தம் மக்களை காப்பாற்ற யெகோவா எப்போதும் தயாராக இருக்கிறார். விசுவாசத்தோடு ‘அமைதியாய்’ இருந்தால் அல்லது அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பைப் பெறும் முயற்சியை கைவிட்டுவிட்டால், யெகோவா தம் மக்களை காக்க தயாராக இருக்கிறார். ‘அமைதியாய்’ இருப்பதால் அல்லது பயத்திற்கு இடம் கொடுக்காமல் கடவுளுடைய காக்கும் வல்லமையில் நம்பிக்கையை காட்டுவதால் யெகோவாவின் உதவியை அவர்கள் பெற முடியும். ஆனால், ‘நீங்களோ அப்படிச் செய்ய மனதாயில்லை’ என ஏசாயா ஜனங்களிடம் சொல்லுகிறார்.—ஏசாயா 30:15ஆ.
13ஏசாயா மேலும் விளக்குகிறார்: “அப்படியல்ல, குதிரைகளின் மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவாம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்.” (ஏசாயா 30:16) தங்களுடைய இரட்சிப்புக்காக யெகோவாவின்மேல் சார்ந்திருப்பதைவிட, காற்றாய் பறக்கும் குதிரைகளையே யூதர்கள் நம்புகிறார்கள். (உபாகமம் 17:16; நீதிமொழிகள் 21:31) என்றாலும், அவர்களுடைய நம்பிக்கை வீணே, எதிரிகள் அவர்களை தோற்கடிப்பார்கள் என தீர்க்கதரிசி திட்டவட்டமாக சொல்கிறார். எவ்வளவு பெரும் எண்ணிக்கையான ஆட்கள் வந்தாலும் பயனில்லை. “ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.” (ஏசாயா 30:17ஆ) எதிரிகளில் கொஞ்சம் பேருடைய சத்தத்திற்கே, யூதாவின் படையினர் பயந்து சிதறி ஓடுவார்கள். a முடிவில், ஒருசிலரே தப்புவார்கள். “மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும்” வெகுசிலரே மீந்திருப்பார்கள். (ஏசாயா 30:17அ) இந்த தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுகையில் வெகுசிலரே தப்பிப்பிழைக்கின்றனர்.—எரேமியா 25:8-11.
கண்டனத்திற்கு மத்தியிலும் ஆறுதல்
14துயரம் மிகுந்த இந்த வார்த்தைகள் ஏசாயாவின் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தவர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்போதே, அவருடைய செய்தியின் தொனி மாறுகிறது. அழிவுக்கான அச்சுறுத்துதல், ஆசீர்வாதத்தின் வாக்குறுதியாக மாறுகிறது. “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி யெகோவா காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; யெகோவா நியாயத்தீர்ப்பின் கடவுள்; அவருக்குக் ஏசாயா 30:18, NW) எவ்வளவு இதமான வார்த்தைகள்! யெகோவா கருணை மிகுந்தவர். தன் பிள்ளைகளுக்கு உதவ ஆவலாய் காத்திருக்கும் ஒரு தகப்பனைப்போல யெகோவா தம் பிள்ளைகளுக்கு உதவ ஆவலாய் இருக்கிறார். இரக்கம் காட்டுவதில் அவர் மகிழ்கிறவர்.—சங்கீதம் 103:13; ஏசாயா 55:7.
காத்திருக்கிற அனைவரும் சந்தோஷமுள்ளவர்கள்.” (15பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுகிறது; அப்போது ஒருசில யூதர்களுக்கே தப்பிப்பிழைக்க இரக்கம் காண்பிக்கப்படுகிறது. அதுபோலவே, பொ.ச.மு. 537-ல் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஒருசிலர் திரும்பி வருகின்றனர். இவர்களுக்கே இந்த நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் பொருந்துகின்றன. என்றாலும், தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களுக்கும் ஆறுதலை அளிக்கின்றன. இந்த துன்மார்க்க உலகிற்கு முடிவு கொண்டுவருவதன் மூலம், நம் சார்பாக யெகோவா நிச்சயம் “எழுந்திருப்பார்” என்பதையே இது நமக்கு நினைவுபடுத்துகிறது. உண்மையுள்ள வணக்கத்தார் ‘நியாயத்தீர்ப்பின் கடவுளாகிய’ யெகோவாவை முழுமையாக நம்பலாம். சாத்தானின் உலகை நீடிக்கும்படி அவர் அனுமதிக்க மாட்டார். நீதி தேவைப்படுத்துவதற்கு மேல் ஒருநாள்கூட அனுமதிக்க மாட்டார். எனவே, ‘அவருக்காக காத்திருப்பவர்கள்’ சந்தோஷமாக இருக்க அநேக காரணங்கள் இருக்கின்றன.
ஜெபங்களுக்கு பதிலளித்து, தம் மக்களுக்கு யெகோவா ஆறுதலளிக்கிறார்
16இருந்தாலும், தாங்கள் நினைத்த மாதிரி விடுதலை சீக்கிரம் வரவில்லையே என சிலர் ஒருவேளை மனந்தளரலாம். (நீதிமொழிகள் 13:12; 2 பேதுரு 3:9) ஏசாயாவின் அடுத்துவரும் வார்த்தைகளிலிருந்து அவர்கள் ஆறுதலை பெறட்டும். இது யெகோவாவினுடைய குணங்களின் சிறப்பான அம்சங்களை வலியுறுத்திக்காட்டுகிறது. “சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறு உத்தரவு அருளுவார்.” (ஏசாயா 30:19) இந்த வார்த்தைகளை ஏசாயா மிகவும் பரிவோடு சொல்கிறார். 18-ம் வசனத்தில் ‘உங்கள்’ என பன்மையில் குறிப்பிட்டவர் 19-ம் வசனத்தில் ‘உன்’ என ஒருமையில் குறிப்பிடுகிறார். துன்பத்திலும் துயரத்திலும் வாடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே யெகோவா ஆறுதல் அளிக்கிறார். மனம் தளர்ந்து இருக்கும் மகனை, ‘உன் தம்பி மாதிரி ஏன் தைரியமாக இருக்கமாட்டேன் என்கிறாய்?’ என ஒரு அபூரண தகப்பன் கேட்கக்கூடும். ஆனால், யெகோவாவோ அப்படி கேட்க மாட்டார். (கலாத்தியர் 6:4) அதற்கு மாறாக, ஒவ்வொருவர் சொல்வதையும் பொறுமையாக செவிகொடுத்து கேட்கிறார். சொல்லப்போனால், “அதைக் கேட்டவுடனே . . . மறுஉத்தரவு அருளுவார்.” நம்பிக்கையூட்டும் வார்த்தைகளல்லவா இவை! மனம் தளர்ந்திருப்போர், யெகோவாவிடம் ஜெபித்தால் நிச்சயமாக பலப்படுத்தப்படுவர்.—சங்கீதம் 65:2.
கடவுளுடைய வார்த்தையை வாசித்து அவருடைய வழிகாட்டும் குரலைக் கேளுங்கள்
17துயரம் வரும் என்ற செய்தியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஏசாயா பின்வருமாறு நினைப்பூட்டுகிறார். ஜனங்கள் “துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும்” பெறுவார்கள். (ஏசாயா 30:20அ) பகைவர் சுற்றிவளைத்து முற்றுகையிடும்போது அவர்கள் அனுபவிக்க இருக்கும் துன்பமும் ஒடுக்குதலும், அப்பத்தையும் தண்ணீரையும்போல வழக்கமாக நிகழ்கிற நிகழ்ச்சியாகிவிடும். அப்படியிருந்தாலும், நேர்மை இருதயமுள்ளவர்களை மீட்க யெகோவா தயாராய் இருக்கிறார். “உங்கள் மகா போதகர் இனி ஒருபோதும் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் கண்கள் உங்கள் மகா போதகரைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”—ஏசாயா 30:20ஆ NW, 21. b
18யெகோவாவே ‘மகா போதகர்.’ ஆசானாக யாரும் அவருக்கு இணையாக முடியாது. அப்படியென்றால், ஜனங்கள் அவரை எப்படி ‘காண்பார்கள்,’ ‘கேட்பார்கள்’? தம்முடைய தீர்க்கதரிசிகள் வாயிலாக யெகோவா தம்மைக் குறித்து வெளிப்படுத்துகிறார். இவர்களுடைய வார்த்தைகள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (ஆமோஸ் 3:6, 7) இன்று, உண்மை வணக்கத்தார் பைபிளை வாசிக்கும்போது, பரிவான தகப்பனாகிய கடவுளுடைய குரலைக் கேட்கின்றனர். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை சொல்லி, கடவுளுடைய வழியில் செல்ல என்ன மாற்றங்களை செய்ய வேண்டுமோ அவற்றை செய்யவும் அந்தக் குரல் அவர்களைத் தூண்டுகிறது. பைபிளின் பக்கங்கள் வாயிலாகவும் “உண்மையும் விவேகமுள்ள அடிமை” அளிக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள் வாயிலாகவும் யெகோவா பேசும்போது ஒவ்வொரு கிறிஸ்தவனும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். (மத்தேயு 24:45-47, NW) எனவே, நாம் ஒவ்வொருவரும் பைபிள் வாசிப்பை தவறாமல் செய்வோமாக! அது நமக்கு ‘ஜீவனைக் குறிக்கிறது.’—உபாகமம் 32:46, 47; ஏசாயா 48:17.
எதிர்கால ஆசீர்வாதங்களை மனதில் அசைபோடுங்கள்
19மகா போதகரின் குரலுக்கு செவிகொடுப்போர் அனைவரும் தங்கள் சுரூபங்களையும் விக்கிரகங்களையும் தூக்கி எறிந்துவிடுவர். அவற்றை அருவருப்பானதாக கருதுவர். (ஏசாயா 30:22-ஐ வாசிக்கவும்.) இவ்வாறு கீழ்ப்படிபவர்கள் அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பர். இவை ஏசாயாவால் மிகவும் விளக்கமாக வருணிக்கப்படுகின்றன. இது ஏசாயா 30:23-26 வரையுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறிக்கும் சந்தோஷமளிக்கும் தீர்க்கதரிசனம் இது. பொ.ச.மு. 537-ல் யூதர்களில் ஒருசிலர் மட்டும் சிறையிருப்பிலிருந்து திரும்பிவருகையில், அது இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம். இன்றும் இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் கண்கூடாக காண்கிறோம். இனி வரவிருக்கும் சொல்லர்த்தமான பரதீஸிலும் இப்போது நாம் இருக்கும் ஆவிக்குரிய பரதீஸிலும் மேசியா அளிக்கும் மகத்தான ஆசீர்வாதங்களை இந்த தீர்க்கதரிசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது.
20“அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான ஏசாயா 30:23, 24) ‘கொழுமையும் புஷ்டியுமான’ அப்பம், அதாவது சத்துள்ள உணவே, மனிதனின் தினசரி உணவாகும். தேசத்தில் விளைச்சல் அவ்வளவு அமோகமாக இருப்பதால், மிருகங்களும் பயனடையும். “ருசியுள்ள கப்பி” கால்நடைகளுக்கு கொடுக்கப்படும். எப்போதாவது ஒருசில சந்தர்ப்பங்களில் மட்டுமே கொடுக்கப்படும் சுவையுள்ள தீவனம் அது. மனிதர்கள் உணவுக்காக பயன்படுத்தும் தானியங்களை தூற்றுவதுபோலவே இந்த தீவனமும் தூற்றப்படுகிறது. உண்மையுள்ள மனிதகுலத்தின்மீது யெகோவா பொழியும் அபரிமிதமான ஆசீர்வாதங்களை எவ்வளவு அருமையாக ஏசாயா இங்கு விளக்குகிறார்!
மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்; நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.” (21“உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகல மேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.” (ஏசாயா 30:25ஆ) c யெகோவாவின் ஆசீர்வாதங்கள் எந்தளவுக்கு முழுமையாக இருக்கும் என்பதை ஏசாயா விலாவாரியாக வருணிக்கிறார். தண்ணீருக்கு பஞ்சமே இல்லை. மதிப்புமிக்க இந்த நீர், தாழ்வான பகுதிகளில் மட்டுமல்ல, “உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகல மேடுகளின்மேலும்” பாய்ந்தோடும். பட்டினி என்றால் என்ன என்பதே தெரியாது. (சங்கீதம் 72:16) மேலும், தீர்க்கதரிசியின் கவனம் மலைகளைவிட உயரமான வேறொன்றின்மேல் திரும்புகிறது. “கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.” (ஏசாயா 30:26) அருமையான இந்த தீர்க்கதரிசனத்திற்கு என்னே கிளர்ச்சியூட்டும் முடிவு! கடவுளுடைய மகிமை, மிகப் பிரகாசமாய் ஜொலிக்கும். கடவுளுடைய உண்மையுள்ள வணக்கத்தாருக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள் அபரிமிதமாக இருக்கும். ஏழு மடங்கு அதிகமாக இருக்கும். இதுவரை அவர்கள் அனுபவித்திராத அளவுக்கு அளவிலா ஆசீர்வாதமாக இருக்கும்.
நியாயத்தீர்ப்பும் மகிழ்ச்சியும்
22ஏசாயாவினுடைய செய்தியின் தொனி மறுபடியும் மாறுகிறது. தன் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை கவரும் வகையில் அவர் “இதோ!” என சொல்லி தொடருகிறார். “யெகோவாவுடைய நாமம் தூரத்திலிருந்து வருகிறது, அவருடைய எரிகிற கோபத்தோடும் கருத்த மேகங்களோடும் வருகிறது. அவருடைய உதடுகள் கண்டனத் தீர்ப்பால் நிறைந்திருக்கின்றன, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கிறது.” (ஏசாயா 30:27, NW) இதுவரையாக, யெகோவா தலையிடாமல், தம் மக்களுடைய எதிரிகளின் போக்கிலேயே அவர்களை விட்டுவிடுகிறார். ஆனால் இப்போதோ, இடியும் மின்னலும் சேர்ந்த புயல்போல, தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற நெருங்கி வருகிறார். “நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.” (ஏசாயா 30:28) ‘ஆற்று வெள்ளத்தால்’ கடவுளுடைய எதிரிகள் சூழ்ந்துகொள்ளப்படுவார்கள். ‘சல்லடையிலே அரிக்கப்படுவதுபோல’ கடுமையாக அசைக்கப்படுவார்கள். ‘கடிவாளத்தால்’ அடக்கப்படுவார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
ஏசாயா 30:29) சாத்தானின் உலகத்துக்கு வெகு சீக்கிரத்தில் நியாயத்தீர்ப்பு வருகிறது; ‘இரட்சணியக் கன்மலையாகிய’ யெகோவா, தம் மக்களுக்கு பாதுகாப்பைத் தருகிறார்; ராஜ்ய ஆசீர்வாதங்கள் விரைவில் வர இருக்கின்றன. இவற்றைப் பற்றி நினைக்கையில், இன்று உண்மை கிறிஸ்தவர்களும் இஸ்ரவேலர்களைப் போலவே ‘மகிழுகின்றனர்.’—சங்கீதம் 95:1.
23மறுபடியும் ஏசாயாவின் தொனி மாறுகிறது. உண்மையுள்ள வணக்கத்தார் ஒருநாள் தங்களுடைய தேசத்திற்கு திரும்பிவரும் சந்தோஷமான நிலையை இப்போது விவரிக்கிறார். “பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப் போக நாகசுரத்தோடே [“குழலிசையோடே,” பொ.மொ.] நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.” (24சந்தோஷமான இந்த வார்த்தைகளை சொல்லிய பிறகு, நியாயத்தீர்ப்பு பற்றி திரும்பவும் விவரிக்கிறார். அதோடு, கடவுளுடைய கோபத்துக்கு ஆளாகப்போகும் தேசத்தையும் ஏசாயா அடையாளப்படுத்துகிறார். “யெகோவா தமது மகத்துவமான சத்தத்தைக் கேட்கப்பண்ணுவார்; உக்கிரகோபம், பட்சிக்கிற அக்கினிஜுவாலை, வெள்ளம், பெருமழை, கல்மழை இவற்றினால் தமது புயத்தின் அடி காணப்படும்படி செய்வார். அப்பொழுது யெகோவாவின் சத்தத்தினாலே அசீரியன் திகில்படுவான், அவர் அவனைத் தடியினால் அடிப்பார்.” (ஏசாயா 30:30, 31, தி.மொ.) இந்த விளக்கமான வருணனையின் வாயிலாக, அசீரியாவின்மேல் வரவிருந்த கடவுளுடைய நியாயத்தீர்ப்பை ஏசாயா வலியுறுத்திக் காண்பிக்கிறார். மொத்தத்தில், அசீரியா கடவுளுக்கு எதிராக நிற்கிறது; அவரது நியாயத்தீர்ப்பின் ‘புயத்தைக்’ கண்ட மாத்திரத்திலேயே நடுநடுங்குகிறது.
25தீர்க்கதரிசி மேலும் தொடருகிறார்: “கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார். தோப்பேத் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.” (ஏசாயா 30:32, 33) இன்னோம் பள்ளத்தாக்கில் இருந்த தோப்பேத் என்னும் ஸ்தலம், நெருப்பு எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் ஓர் இடத்திற்கு அடையாளமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. அசீரியா அங்கே அழிக்கப்படும் என சொல்லி, அந்த தேசத்தின்மேல் திடீரெனவும் முழுமையாகவும் வரப்போகிற அழிவை ஏசாயா இங்கு வலியுறுத்துகிறார்.—2 இராஜாக்கள் 23:10-ஐ ஒப்பிடுக.
26நியாயத்தீர்ப்பின் இந்த செய்தி அசீரியாவுக்கு எதிராக சொல்லப்பட்டபோதிலும், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த முக்கிய குறிப்பு பிற்காலத்திற்கும் பொருந்துகிறது. (ரோமர் 15:4) தம் மக்களை ஒடுக்கி வருத்துவோரை வெள்ளத்தால் சூழவும், கடுமையாக அசைக்கவும், கடிவாளத்தால் அடக்கவும் தூரத்திலிருந்து வருவதுபோல யெகோவா மிக விரைவில் மறுபடியும் வருவார். (எசேக்கியேல் 38:18-23; 2 பேதுரு 3:7; வெளிப்படுத்துதல் 19:11-21) அந்த நாள் சீக்கிரம் வரட்டும்! அதுவரையில், விடுதலையின் நாளுக்காக கிறிஸ்தவர்கள் ஆவலாய் காத்திருப்பர். ஏசாயா 30-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வருணனையை மனதில் அசைபோடுவதன்மூலம் அவர்கள் பெலமடைவர். ஜெபம் எனும் அருமையான பாக்கியத்தை பொக்கிஷமாக கருதவும், பைபிளை தவறாமல் வாசிக்கவும், வர இருக்கிற ராஜ்ய ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிக்கவும் இந்த வார்த்தைகள் கடவுளுடைய ஊழியர்களுக்கு உற்சாகம் அளிக்கின்றன. (சங்கீதம் 42:1, 2; நீதிமொழிகள் 2:1-6; ரோமர் 12:12) நாம் அனைவருமே யெகோவாவுக்காக காத்திருக்கும்படி ஏசாயாவின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன.
[அடிக்குறிப்புகள்]
a யூதா உண்மையோடு நிலைத்து இருந்திருந்தால், இதற்கு முற்றிலும் எதிரிடையான சம்பவம்தான் நிகழ்ந்திருக்கும் என்பதை கவனியுங்கள்.—லேவியராகமம் 26:7, 8.
b பைபிளில் இந்த ஒரு இடத்தில்தான் யெகோவா ‘மகா போதகர்’ என அழைக்கப்படுகிறார்.
c ஏசாயா 30:25-ன் முதற்பகுதி வாசிப்பதாவது: “கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே.” பாபிலோனின் வீழ்ச்சியே இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றமாக இருக்கலாம். ஏசாயா 30:18-26 வரையுள்ள வசனங்களில் முன்னறிவிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை இஸ்ரவேலர்கள் அனுபவிக்கும்படி வழியை திறந்தது இதுவே. (19-வது பத்தியைக் காண்க.) அர்மகெதோன் அழிவையும் இது குறிக்கலாம். புதிய உலகில் இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் நிறைவேற்றம் அடைய இது வழிவகுக்கும்.
[கேள்விகள்]
1, 2. (அ) ஏசாயா 30-ம் அதிகாரத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் யாவை? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?
3. என்ன இரகசிய திட்டத்தை யெகோவா அம்பலமாக்குகிறார்?
4. கடவுளுடைய கலகத்தனமான ஜனங்கள், அவருக்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை எவ்வாறு எகிப்துக்கு கொடுக்கின்றனர்?
5, 6. (அ) எகிப்தோடு கூட்டுறவு வைப்பது ஏன் அழிவுக்குரிய குற்றம்? (ஆ) கடவுளுடைய ஜனங்கள் எகிப்துக்கு மேற்கொள்ளும் பிரயாணத்தின் முட்டாள்தனத்தை எந்த முந்தைய பிரயாணம் அறிவுறுத்திக் காட்டுகிறது?
7. யூதாவுக்கு கொடுத்த எச்சரிக்கையை எழுதிவைக்கும்படி யெகோவா ஏன் ஏசாயாவிடம் சொல்கிறார்?
8, 9. (அ) யெகோவாவின் தீர்க்கதரிசிகளை கறைப்படுத்த யூதாவின் தலைவர்கள் எந்த விதத்தில் முயல்கின்றனர்? (ஆ) தான் பயப்பட மாட்டார் என்பதை ஏசாயா எப்படி காட்டுகிறார்?
10, 11. யூதாவின் கலகத்தால் ஏற்படும் விளைவு என்ன?
12. யூதாவின் மக்கள் எப்படி அழிவைத் தவிர்க்க முடியும்?
13. யூதாவின் தலைவர்கள் எதன்மேல் நம்பிக்கை வைக்கின்றனர், அந்த நம்பிக்கை பலன் அளிக்கிறதா?
14, 15. ஏசாயா 30:18-ல் உள்ள வார்த்தைகள் பூர்வ காலங்களில் யூதாவின் குடிமக்களுக்கும் இன்று உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் என்ன ஆறுதலைத் தருகின்றன?
16. மனம் தளர்ந்தவர்களுக்கு யெகோவா எப்படி ஆறுதல் அளிக்கிறார்?
17, 18. நெருக்கடியான காலங்களில்கூட, யெகோவா எப்படி வழிநடத்துதலை அளிக்கிறார்?
19, 20. மகா போதகரின் குரலுக்கு செவிகொடுப்போருக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
21. வர இருக்கிற ஆசீர்வாதத்தின் முழுமையை விளக்கவும்.
22. உண்மையுள்ளவர்களுக்கு வர இருக்கிற ஆசீர்வாதங்களுக்கு முற்றிலும் எதிர்மாறாக, துன்மார்க்கருக்காக யெகோவா என்ன வைத்திருக்கிறார்?
23. இன்று கிறிஸ்தவர்களுக்கு ‘மகிழ்வூட்டுபவை’ எவை?
24, 25. அசீரியாவின் மேல் நிச்சயம் நியாயத்தீர்ப்பு வர இருக்கிறது என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படி வலியுறுத்துகிறது?
26. (அ) அசீரியாவுக்கு எதிராக யெகோவா கொடுத்த நியாயத்தீர்ப்பு அறிக்கைகள், நவீன காலத்தில் எந்த விதத்தில் பொருந்துகின்றன? (ஆ) இன்று கிறிஸ்தவர்கள் எப்படி யெகோவாவுக்காக காத்திருக்கின்றனர்?
[பக்கம் 305-ன் படம்]
மோசேயின் நாட்களில், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுபட்டு வந்தனர். ஏசாயாவின் நாட்களிலோ, யூதா உதவிக்காக எகிப்தினிடமாக செல்கிறது
[பக்கம் 311-ன் படம்]
‘உயரமான சகல மேடுகளின் மேலும் ஆறுகள் உண்டாகும்’
[பக்கம் 312-ன் படம்]
“கோபத்தோடும் கருத்த மேகங்களோடும்” யெகோவா வருவார்