Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்

வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்

அதிகாரம் பதினாறு

வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்

ஏசாயா 20:1-6

இந்தப் புத்தகத்தின் முந்தின அதிகாரங்களில் சிந்தித்தபடி, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், படுபயங்கரமான அச்சுறுத்தலை கடவுளுடைய மக்கள் எதிர்ப்படுகின்றனர். இரத்தவெறிகொண்ட அசீரியர்கள், ஒன்றன்பின் ஒன்றாக பல தேசங்களை சூறையாடுகின்றனர். தென்திசை ராஜ்யமாகிய யூதாவை தாக்குவதற்கும் தயாராக இருக்கின்றனர். அப்படியென்றால், தேசத்தின் குடிகள் பாதுகாப்பிற்காக யாரிடம் செல்வர்? அவர்கள் யெகோவாவோடு ஓர் உடன்படிக்கை செய்திருந்ததால் உதவிக்காக அவரையே சார்ந்திருக்க வேண்டும். (யாத்திராகமம் 19:5, 6) தாவீது ராஜா அதைத்தான் செய்தார். ‘யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்’ என அவர் ஒத்துக்கொண்டார். (2 சாமுவேல் 22:2) ஆனால், பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர், யெகோவாவை தங்களுடைய கோட்டையாக நம்பவில்லை. அவர்கள் உதவிக்காக எகிப்தையும் எத்தியோப்பியாவையுமே எதிர்பார்க்கின்றனர். அச்சுறுத்தும் அசீரியப் படையெடுப்பின்போது தங்களுக்கு பாதுகாப்பு அரணாக இந்த இரு தேசங்களும் இருக்குமென அவர்கள் நம்புகின்றனர். ஆனால், அவர்கள் நினைப்பது தவறு.

2எகிப்திடமோ அல்லது எத்தியோப்பியாவிடமோ புகலிடம் தேடிப் போவது, நாசத்திற்கே வழிவகுக்கும் என யெகோவா தம் தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலமாக எச்சரிக்கிறார். தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதுகிறார். அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவை நல்ல பாடத்தைக் கற்பிக்கின்றன. அதுபோலவே இன்றும், யெகோவாவில் நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியம் என்ற மதிப்புமிக்க பாடத்தை அவை நமக்கு கற்பிக்கின்றன.

இரத்தப்பழி நிறைந்த தேசம்

3ராணுவ பலத்திற்கு பெயர்போனவர்கள் அசீரியர்கள். அவர்களைப் பற்றி பூர்வ நகரங்கள் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுவதாவது: “ஆற்றலின் உருவாக விளங்கியவற்றை வழிபட்டனர். சக்தி, தைரியம், வெற்றி ஆகியவற்றின் சின்னங்களாக திகழ்ந்த, பெரிய கால்களையும் கழுகுகளின் செட்டைகளையும் மனித தலைகளையும் உடைய கல்லால் செய்யப்பட்ட, மிக பிரமாண்டமான சிங்கங்கள் மற்றும் காளைகளின் விக்கிரகங்களை நோக்கியே அவர்களது ஜெபங்கள் சொல்லப்பட்டன. சண்டை என்பது அந்த தேசத்தின் கைவந்த கலை. அதன் ஆசாரியர்கள் ஓயாமல் போரை தூண்டிவிட்டனர்.” பைபிள் தீர்க்கதரிசியாகிய நாகூம், அசீரியாவின் தலைநகராகிய நினிவேயை ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என விவரித்திருப்பது பொருத்தமானதே.​—நாகூம் 3:⁠1.

4அசீரியர்களின் போர் முறைகள் மிக மிக குரூரமானவை. அசீரிய மாவீரர்கள், போர் கைதிகளுடைய மூக்கிலோ அல்லது உதட்டிலோ கொக்கி மாட்டி இழுத்துச் செல்வதை அந்தக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் காணலாம். சில கைதிகளுடைய கண்களை ஈட்டியால் நோண்டியெடுத்து குருடாக்கினர். ஒரு போரில் கைதிகளுடைய அங்கங்களை வெட்டி, தலைகளை ஒரு குவியலாகவும், கை கால்களை ஒரு குவியலாகவும் நகரத்திற்கு வெளியே கொட்டி குவித்தனர் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. கைதிகளுடைய பிள்ளைகளையோ தீயில் சுட்டெரித்தனர். இப்படிப்பட்ட குரூரச் செயல்கள் அசீரியர்களுடைய எதிரிகளின் மனங்களில் கிலியை உண்டுபண்ணின. இது அவர்களுடைய ராணுவத்திற்கு அனுகூலமாக இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய படைக்கு எதிராக வருவதற்கு யாருக்குமே அது துணிவைத் தரவில்லை.

அஸ்தோத்துக்கு எதிரான போர்

5ஏசாயாவின் நாட்களில், சர்கோன் ராஜாவின் ஆட்சியின்கீழ் அசீரியப் பேரரசு வலிமையின் சிகரத்தை எட்டியது. a பல வருடங்களுக்கு, இப்படி ஒரு ராஜா இருந்தாரா என்பதையே பல விமர்சகர்கள் சந்தேகப்பட்டனர். ஏனென்றால், உலக சரித்திரப் பதிவுகள் எதிலுமே இந்த ராஜாவுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. என்றாலும், காலப்போக்கில், சர்கோனின் அரண்மனை இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அது பைபிளின் பதிவை மெய்யென நிரூபித்தது.

6சர்கோனின் ராணுவ திட்டங்களை ஏசாயா சுருக்கமாக விவரிக்கிறார்: “தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே.” (ஏசாயா 20:1) b பெலிஸ்தர்களுடைய நகரமாகிய அஸ்தோத்தின்மேல் படையெடுக்கும்படி ஏன் சர்கோன் ஆணை பிறப்பிக்கிறார்? ஒரு காரணம், பெலிஸ்தியா எகிப்தின் கூட்டாளி. மேலும், எகிப்திலிருந்து பாலஸ்தீனா வரை செல்லும் கடலோரப் பாதையில் அஸ்தோத் அமைந்திருக்கிறது. அங்குதான் தாகோனின் கோவில் இருக்கிறது. எனவே, அந்த நகரம் அவர்கள் கைப்பற்றுவதற்கு மிகவும் சாதகமான இடத்தில் இருக்கிறது. அதைப் பிடிப்பது, எகிப்தை வெல்லுவதற்கு ஓர் ஆரம்பப் படியாக கருதலாம். அதோடு, அஸ்தோத்தின் ராஜா அஸுரி, அசீரியாவுக்கு எதிராக சதி செய்தான் என அசீரியப் பதிவுகள் அறிவிக்கின்றன. எனவே, கலகம் செய்த ராஜாவை நீக்கிவிட்டு, அந்த ராஜாவின் தம்பி அஹிமிடியை ராஜாவாக சர்கோன் நியமிக்கிறார். அப்படியிருந்தும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. மறுபடியும் இன்னொரு கலகம் தலைதூக்குகிறது. இந்த முறை சர்கோன் திட்டவட்டமான ஒரு நடவடிக்கை எடுக்கிறார். அஸ்தோத்தின்மேல் படையெடுக்க ஆணை பிறப்பிக்கிறார், அந்த நகரம் முற்றுகையிடப்பட்டு, வெற்றிகொள்ளப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைத்தான் ஏசாயா 20:1 ஒருவேளை குறிப்பிட்டிருக்கலாம்.

7அஸ்தோத்தின் வீழ்ச்சி, அதைச் சுற்றியிருந்த நாடுகளுக்கு அச்சத்தை தருகிறது. மிக முக்கியமாக யூதாவுக்கு திகில் ஏற்படுகிறது. ‘மாம்ச புயமாகிய’ எகிப்தையோ அல்லது தெற்கிலுள்ள எத்தியோப்பியாவையோதான் தம் மக்கள் நாடுவார்கள் என்பது யெகோவாவுக்கு தெரியும். எனவே, ஓர் எச்சரிப்பின் செய்தியை நடித்துக்காட்டும்படி யெகோவா ஏசாயாவுக்கு கட்டளையிடுகிறார்.​—2 நாளாகமம் 32:7, 8.

‘வஸ்திரமில்லாமலும் வெறுங்காலோடும்’

8யெகோவா ஏசாயாவிடம் சொல்கிறார்: “நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை [“சாக்கு உடையை,” பொ.மொ.] அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று.” ஏசாயா யெகோவாவின் கட்டளைக்கிணங்க செய்கிறார். ‘அவர் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தார்.’ (ஏசாயா 20:2) இரட்டு உடுப்பு அல்லது சாக்கு உடை என்பது மொடமொடவென முரடாக இருக்கும் அங்கி. பொதுவாக தீர்க்கதரிசிகளால் அணியப்பட்ட ஆடை. சில சமயங்களில், எச்சரிப்பின் செய்தியை அடையாளப்படுத்தும் உடையாக அணியப்பட்டு வந்தது. இடுக்கண் நிறைந்த காலத்தில் அல்லது துயரச் செய்தியை கேட்டதும் அணியப்பட்ட ஆடை அது. (2 இராஜாக்கள் 19:2; சங்கீதம் 35:13; தானியேல் 9:3) அப்படியானால் ஏசாயா துணி ஏதுமில்லாமல் நிர்வாணமாக நடக்கிறாரா? இல்லை. ஒருவர் அரைகுறையான அல்லது மிகக் குறைந்த ஆடையில் இருப்பதையும், ‘வஸ்திரமில்லாமல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை குறிக்கிறது. (1 சாமுவேல் 19:24; NW அடிக்குறிப்பு) எனவே, ஏசாயா தன் வெளி ஆடையை அல்லது வஸ்திரத்தை எடுத்துவிட்டு, உடலோடு ஒட்டினாற்போல் இறுக்கமாக இருக்கும் சிறிய அங்கி போன்ற உள்ளாடையை அணிந்திருக்கலாம். அசீரிய கல்வெட்டுகள் பலவற்றில் ஆண் கைதிகள் இப்படித்தான் செதுக்கப்பட்டுள்ளனர்.

9ஏசாயாவின் இந்த நூதனமான நடிப்பின் அர்த்தம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விவரிக்கப்படுகிறது: ‘ஆண்டவர் கூறினார்: நம் ஊழியக்காரனாகிய இசையாஸ் [ஏசாயா] வஸ்திரமின்றியும் வெறுங்காலோடும் மூன்றாண்டுகள் நடமாடினது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஓர் அடையாளமும் முன்குறியும் ஆகும்; (எவ்வாறெனில்) அசீரியாவின் அரசன் எகிப்தியரையும் எத்தியோப்பியரையும் சிறைபிடித்து, இளைஞரையும் முதியோரையும் வஸ்திரமின்றியும் வெறுங்காலோடும் மறைக்கப்படாத பிட்டத்தினராய் நாடு கடத்துவான். இது எகிப்துக்கு மானக்கேடாய் இருக்கும்.’ (ஏசாயா 20:3, 4, கத்.பை.) எகிப்தியரும் எத்தியோப்பியரும் வெகு சீக்கிரத்தில் கைதிகளாக கொண்டு போகப்படுவார்கள். ஒருவருமே தப்ப முடியாது. ‘இளைஞரும் முதியோரும்’ அதாவது பிள்ளைகளும் வயோதிபரும், தங்கள் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, கைதிகளாக நாடு கடத்தப்படுவர். நம்பிக்கை இழக்கச் செய்யும் காட்சியல்லவா! இதன் மூலம், எகிப்தின்மீதோ எத்தியோப்பியாவின்மீதோ நம்பிக்கை வைப்பதில் பிரயோஜனமில்லை என்பதையே யூதாவின் குடிகளுக்கு எச்சரிக்கையாக யெகோவா தருகிறார். இந்த தேசங்களின் வீழ்ச்சி, அவை ‘வஸ்திரமில்லாமல்’ போவதை, அதாவது முழுமையாக தாழ்த்தப்படுவதை குறிக்கிறது!

நம்பிக்கை சரிதல், அழகு மங்குதல்

10அடுத்ததாக, தம் மக்கள் அடைக்கலமாக நம்பியிருந்த எகிப்தும் எத்தியோப்பியாவும் அசீரியர்களுக்கு முன்பாக சக்தியற்றுப் போனால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் யெகோவா தீர்க்கதரிசனமாக விவரிக்கிறார். “அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக் குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக் குறித்தும் கலங்கி வெட்கி: இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள்.”​—ஏசாயா 20:5, 6.

11எகிப்து, எத்தியோப்பியாவின் வலிமைக்கு ஒப்பிட்டால், யூதா வெறுமனே குறுகலான ஒரு கடலோரப்பகுதிதான். இந்த ‘கடற்கரைக்குடிகளில்’ சிலர் எகிப்தின் அழகில் மயங்கி இருக்கின்றனர். அதன் கம்பீரமான பிரமிடுகளும், உயரமான கோயில்களும், பூந்தோட்டங்களும் பழத்தோட்டங்களும் குளங்களும் சூழ்ந்த விஸ்தாரமான மாளிகைகளும் அவர்கள் மனதைக் கவர்கின்றன. மிக நேர்த்தியான எகிப்தின் கட்டடக்கலை, அதன் உறுதிக்கும் நிரந்தரத்தன்மைக்கும் சான்றாய் விளங்குவதாக தோன்றுகிறது. அந்த தேசத்தை யாராலுமே வெல்ல முடியாததுபோல தோன்றுகிறது! எத்தியோப்பியாவின் இரதங்களும் அம்பு எய்கிறவர்களும் குதிரைவீரர்களும்கூட யூதர்களின் மனதை ஆக்கிரமிக்கின்றனர்.

12கடவுளுடைய மக்கள் என பெருமை பாராட்டிக்கொண்டு எகிப்தின்மீதும் எத்தியோப்பியாவின்மீதும் நம்பிக்கை வைப்பவர்கள், ஏசாயா நடித்துக் காட்டிய எச்சரிப்பின் செய்தியையும் யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் மறுபடியும் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். மனிதன்மீது நம்பிக்கை வைப்பதைவிட, யெகோவாவில் நம்பிக்கை வைப்பது எவ்வளவு சிறந்தது! (சங்கீதம் 25:2; 40:4) காலப்போக்கில், அசீரிய ராஜாவால் யூதா படுதோல்வியை தழுவுகிறது. பின்னர், அதன் ஆலயமும் தலைநகரமும் பாபிலோனால் அழிக்கப்படுகிறது. என்றாலும், பெரிய மரத்தின் அடிமரத்தைப்போல, ‘பத்தில் ஒரு பங்கும்,’ ‘பரிசுத்த வித்தும்’ மீதிவிடப்படுகிறது. (ஏசாயா 6:13) காலம் வருகையில், யெகோவாவில் தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் அந்த சிறு தொகுதியினரின் விசுவாசத்தை ஏசாயாவின் செய்தி பலப்படுத்தும்!

யெகோவாவில் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்

13எகிப்தின்மீதும் எத்தியோப்பியாவின்மீதும் வைத்த நம்பிக்கை வீணானது என்பதைப் பற்றிய ஏசாயாவினுடைய எச்சரிக்கையின் நிறைவேற்றம், நடந்து முடிந்த வெறும் சரித்திரம் மட்டுமே அல்ல. நம் நாட்களுக்கும் நடைமுறையான பயன்களை உடையது. நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1) நிதி நெருக்கடி, எங்கும் பரவலாக இருக்கும் வறுமை, அரசியல் அமைதியின்மை, உள்நாட்டுக் கலவரம், சிறிய அல்லது பெரிய அளவில் நடக்கும் போர்கள் ஆகிய அனைத்தும் கடவுளுடைய ஆட்சியை எதிர்ப்பவர்கள்மீது மட்டுமல்ல, யெகோவாவின் வணக்கத்தார்மீதும் படுநாசகரமான விளைவுகளை கொண்டுவருகின்றன. எனவே, ‘உதவிக்காக நான் யாரிடம் போவேன்?’ என்பதே நாம் ஒவ்வொருவரும் எதிர்ப்படும் கேள்வி.

14மனிதனின் அதிபுத்திசாலித்தனத்தாலும் அவன் வளர்த்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தாலும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என இன்றைய பண முதலைகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் பெருமை அடித்துக்கொள்கின்றனர். இன்றும் இவர்கள்மீது சிலர் தங்கள் நம்பிக்கையை வைக்கக்கூடும். என்றாலும், “பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர்பேரில் [“யெகோவாவில்,” NW] பற்றுதலாயிருப்பதே நலம்” என பைபிள் மிகத் தெளிவாக சொல்கிறது. (சங்கீதம் 118:9) சமாதானத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் மனிதன் போடும் எல்லா திட்டங்களும் தோல்வியடையும். இதற்கான காரணத்தை எரேமியா தீர்க்கதரிசி மிக அழகாக விவரிக்கிறார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”​—எரேமியா 10:⁠23.

15எனவே, இந்த உலகத்தில் மிக வலிமை வாய்ந்ததாகவோ, அதி புத்திசாலித்தனமாகவோ தோன்றும் எதன்மீதும் கடவுளுடைய ஊழியர்கள் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைக்காமலிருப்பது மிக மிக அவசியம். (சங்கீதம் 33:10; 1 கொரிந்தியர் 3:19, 20) இக்கட்டில் இருக்கும் மனிதகுலத்திற்கான நம்பிக்கை படைப்பாளராகிய யெகோவா ஒருவர்மேல் மட்டுமே சார்ந்திருக்கிறது. அவரில் நம்பிக்கை வைக்கும் எவரும் இரட்சிக்கப்படுவார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் எழுதியதுபோல, “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”​—1 யோவான் 2:⁠17.

[அடிக்குறிப்புகள்]

a இந்த ராஜாவை சரித்திராசிரியர்கள் இரண்டாம் சர்கோன் என குறிப்பிடுகின்றனர். ஏனென்றால், அதற்கு முன்பு ஆண்ட ராஜா “முதலாம் சர்கோன்” என குறிப்பிடப்படுகிறார். இவர் அசீரியனல்ல, பாபிலோனைச் சேர்ந்தவர்.

b “தர்த்தான்” என்பது பெயரல்ல, அசீரியப் படைத் தலைவனுக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயர். இவர் அசீரியப் பேரரசில் அரசனுக்கு அடுத்தபடியாக பதவி வகித்திருக்கலாம்.

[கேள்விகள்]

1, 2. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், கடவுளுடைய மக்கள் என்ன ஆபத்தை எதிர்ப்படுகின்றனர், அவர்களில் பலர் பாதுகாப்பிற்காக யாரை நாடுகின்றனர்?

3. ராணுவ பலத்தின்மீது அசீரியா வைத்திருந்த நம்பிக்கையை விவரிக்கவும்.

4. அசீரியர்கள் மற்ற தேசங்களின் இருதயங்களில் திகிலை எப்படி உண்டாக்கினர்?

5. ஏசாயாவின் நாட்களில் இருந்த வலிமை மிக்க அசீரியா ராஜா யார், அந்த ராஜாவைப் பற்றிய பைபிள் பதிவு எவ்வாறு மெய்யென நிரூபிக்கப்பட்டது?

6, 7. (அ) என்ன காரணங்களுக்காக, அஸ்தோத்தின்மேல் படையெடுக்க சர்கோன் ஆணை பிறப்பித்திருக்கலாம்? (ஆ) அஸ்தோத்தின் வீழ்ச்சி, பெலிஸ்தியாவின் அண்டை நாடுகளை எப்படி பாதிக்கிறது?

8. ஆவியால் ஏவப்பட்ட என்ன தீர்க்கதரிசன செயலை ஏசாயா நடித்துக் காட்டுகிறார்?

9. ஏசாயா நடித்துக்காட்டுவதன் தீர்க்கதரிசன அர்த்தம் என்ன?

10, 11. (அ) அசீரியாவின் முன்பு எகிப்தும் எத்தியோப்பியாவும் வலிமையற்றுப்போகும் என்பதை அறியும்போது யூதா எப்படி பிரதிபலிக்கும்? (ஆ) எகிப்திலும் எத்தியோப்பியாவிலும் தங்கள் நம்பிக்கையை வைக்கும்படி யூதாவின் குடிகள் ஏன் நாட்டம்கொள்கின்றனர்?

12. யூதா யார்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்?

13. விசுவாசிகள், அவிசுவாசிகள் அனைவரையுமே இன்று என்ன பிரச்சினைகள் பாதிக்கின்றன?

14. யெகோவாவில் மட்டுமே நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?

15. இக்கட்டில் இருக்கும் மனிதகுலத்திற்கான நம்பிக்கை யார்மீது மட்டுமே சார்ந்திருக்கிறது?

[பக்கம் 209-ன் படம்]

கைதிகளில் சிலரை குருடாக்குவது அசீரியர்களின் வழக்கம்

[பக்கம் 213-ன் படங்கள்]

மனிதனுடைய சாதனைகளில் சிலர் மதிமயங்கலாம், ஆனால் யெகோவாவில் நம்பிக்கை வைப்பதே சாலச்சிறந்தது