Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”

அதிகாரம் மூன்று

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”

ஏசாயா 1:10-31

ஏசாயா 1:1-9-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள கண்டனத் தீர்ப்புகளை காதில் கேட்டவுடன் எருசலேம் வாசிகள் தங்களுடைய செயல்களை நியாயப்படுத்த நினைக்கலாம். அவர்கள் யெகோவாவுக்கு செலுத்தும் பலிகளைப் பற்றி பெருமையோடு பீற்றிக்கொள்ள விரும்புவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், 10 முதல் 15 வரையான வசனங்களில் யெகோவா தரும் பதில் இப்படிப்பட்ட மனப்பான்மையை மடிவுறச் செய்கிறது. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது: “சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.”​—ஏசாயா 1:⁠10.

2சோதோம் கொமோரா அழிக்கப்பட்டது நெறிமுறையற்ற பாலியல் பழக்கங்களுக்காக மட்டுமல்ல, அந்த ஜனங்களுடைய கல்நெஞ்சத்திற்காகவும் கர்வத்திற்காகவும்தான். (ஆதியாகமம் 18:20, 21; 19:4, 5, 23-25; எசேக்கியேல் 16:49, 50) சபிக்கப்பட்ட பட்டணங்களோடு தங்களை ஒப்பிட்டதற்காக ஏசாயாவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். a ஆனால் யெகோவா தம்முடைய ஜனங்களை அப்படிப்பட்டவர்களாகத்தான் கருதுகிறார், அவர்களுடைய ‘காதுக்கு இதமாக இருப்பதற்காக’ கடவுளுடைய செய்தியின் வலிமையை ஏசாயா குறைத்துச் சொல்வதில்லை.​—2 தீமோத்தேயு 4:⁠3, NW.

3தம்முடைய ஜனங்கள் சம்பிரதாயத்திற்காக செய்யும் வணக்கத்தைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார் என்பதை கவனியுங்கள். “‘எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?’ என்கிறார் ஆண்டவர். ‘ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.’” (ஏசாயா 1:11, பொ.மொ.) அவர்களுடைய பலிகளின் மீது யெகோவா சார்ந்தில்லை என்பதை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். (சங்கீதம் 50:8-13) மனிதர்கள் செலுத்தும் பலிகள் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஆகவே, அரை மனதோடு செலுத்தும் பலிகளால் யெகோவாவுக்கு தயவுகாட்டுவதாக அந்த ஜனங்கள் நினைத்தால், அது அவர்களுடைய தவறு. யெகோவா இங்கே வலிமைமிக்க அணிநடையை பயன்படுத்துகிறார். “போதுமென்றாகிவிட்டன” என்பதை “அருவருப்பாகிவிட்டன” அல்லது “திகட்டிவிட்டன” என்றும் மொழிபெயர்க்கலாம். அளவுக்குமீறி சாப்பிட்ட பிறகு அதிகமான உணவை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும் அல்லவா? அந்தப் பலிகளையும் யெகோவா அப்படித்தான் பார்க்கிறார்​—⁠ஒரே அருவருப்பாக!

4தொடர்ந்து யெகோவா சொல்கிறார்: “நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்க வேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?” (ஏசாயா 1:12) யெகோவாவின் ‘சந்நிதிக்கு’ முன்பு, அதாவது எருசலேமிலுள்ள ஆலயத்திற்கு வரும்படி அவருடைய சட்டமே சொல்லவில்லையா? (யாத்திராகமம் 34:23, 24) ஆம், ஆனால் அவர்கள் தூய உள்ளெண்ணமின்றி வெறும் சம்பிரதாயத்திற்காக, ஏதோ தூய வணக்கத்தின் ஆசாரங்களை செய்வதற்காக அங்கே வருகிறார்கள். யெகோவாவை பொறுத்தவரை, அவர்கள் எண்ணற்ற தடவை அவருடைய பிரகாரத்திற்கு வருவது அதை ‘மிதிப்பதற்கு’ சமம், அது தரையைத்தான் தேய்ந்துபோக செய்யுமே தவிர வேறொன்றையும் சாதிக்கப் போவதில்லை.

5யெகோவா இன்னும் கடுஞ்சொற்களை பயன்படுத்துவதில் ஆச்சரியமில்லை! “இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே [“மாய சக்தியோடு,” NW] ஆசரிக்கிற மாதப் பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக் கூட்டத்தையும் நான் இனிச் சகிக்க மாட்டேன். உங்கள் மாதப் பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது [“சுமையாயின,” பொ.மொ.]; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.” (ஏசாயா 1:13, 14) போஜன பலிகள், தூபங்காட்டுதல், ஓய்வுநாட்கள், பயபக்திக்குரிய கூட்டங்கள் ஆகிய அனைத்தும் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் அங்கம் வகிக்கின்றன. ‘மாதப் பிறப்புகளை’ பொறுத்தமட்டில், அதை அனுசரிக்க வேண்டும் என்று மட்டுமே நியாயப்பிரமாணம் சொல்கிறது, ஆனால் ஆரோக்கியமான பாரம்பரியங்கள் படிப்படியாக இந்த ஆசரிப்போடு ஒட்டிக்கொண்டுவிட்டன. (எண்ணாகமம் 10:10; 28:11) மாதப்பிறப்பு ஓய்வு நாளாக்கப்படுகிறது, அந்தச் சமயத்தில் ஜனங்கள் வேலை செய்யாமல் இருக்கிறார்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்களிடமிருந்து போதனைகளைப் பெறுவதற்காக ஒன்றுகூடியும் வருகிறார்கள். (2 இராஜாக்கள் 4:23; எசேக்கியேல் 46:3; ஆமோஸ் 8:6) இப்படிப்பட்ட ஆசரிப்புகளில் தவறேதுமில்லை. அவற்றை வெளி வேஷத்திற்காக செய்ததில்தான் பிரச்சினையே. மேலும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை ஆசரிப்பதோடுகூட ‘மாய சக்தியை,’ அதாவது ஆவியுலக பழக்க வழக்கங்களை இந்த யூதர்கள் நாடுகிறார்கள். b இதனால் அவர்களுடைய வணக்க செயல்கள் யெகோவாவுக்கு ‘சுமையாக’ இருக்கின்றன.

6ஆனால் யெகோவா எப்படி ‘இளைத்துப்போக’ முடியும்? அவரிடம் ‘மகா பெலமும், மகா வல்லமையும் இருக்கிறதே. . . . அவர் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லையே.’ (ஏசாயா 40:26, 28) யெகோவாவின் உணர்ச்சிகளை நாம் புரிந்துகொள்வதற்கு அவர் தத்ரூபமான அணிநடையை பயன்படுத்துகிறார். நீங்கள் வெகுதூரம் ஒரு சுமையை சுமந்துவந்து மிகவும் களைப்படைந்துவிடுகையில், அதை எப்பொழுது கீழே இறக்கி வைப்போமோ என ஏங்கிக் கொண்டிருப்பீர்கள் அல்லவா? தம்முடைய ஜனங்களின் மாய்மால வணக்கத்தையும் யெகோவா அப்படித்தான் கருதுகிறார்.

7இப்பொழுது, வணக்க செயல்களிலேயே மிகவும் அந்தரங்கமான, தனிப்பட்ட செயலைக் குறித்து யெகோவா சொல்கிறார்: “நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களை விட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 1:15) கைகளை விரிப்பதும், உள்ளங்கை மேல்நோக்கி விரிந்திருக்க இருகரங்களையும் உயர்த்தி பிடிப்பதும் விண்ணப்பம் செய்வதற்கான அடையாளம். யெகோவாவுக்கு இப்படிப்பட்ட செயல்கள் அர்த்தமற்றதாகிவிட்டன, ஏனெனில் இந்த ஜனங்களுடைய கைகள் முழுவதும் இரத்தக்கறை படிந்திருக்கிறது. தேசத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. எளியோர் ஒடுக்கப்படுவது எங்கும் நடக்கும் செயல். துஷ்பிரயோகம் செய்கிற, சுயநலமிக்க இப்படிப்பட்ட ஜனங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்து அவருடைய ஆசீர்வாதத்திற்காக கேட்பது அருவருக்கத்தக்கது. எனவே, ‘நான் கேளேன்’ என யெகோவா சொல்வதில் ஆச்சரியமே இல்லை!

8நம்முடைய நாளில், இதைப் போலவே கிறிஸ்தவமண்டலமும் எண்ணற்ற வீண் ஜெபங்களின் நிமித்தமும் வேறுசில மத ‘கிரியைகளின்’ நிமித்தமும் கடவுளுடைய தயவைப் பெற தவறிவிட்டது. (மத்தேயு 7:21-23) அதே கண்ணியில் விழுந்துவிடாமலிருக்க நாம் கவனமாயிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு கிறிஸ்தவன் எப்பொழுதாவது வினைமையான பாவத்தில் வீழ்ந்துவிடலாம்; பிறகு தான் செய்வதை மறைத்துவிட்டு கிறிஸ்தவ சபையில் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்தால், எப்படியாவது தன்னுடைய தவறை ஈடுகட்டிவிடலாம் என தனக்குத்தானே நியாயம் கற்பிக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சம்பிரதாய கிரியைகள் யெகோவாவை பிரியப்படுத்தாது. ஆவிக்குரிய வியாதிக்கு ஒரேவொரு சுகப்படுத்தலே இருக்கிறது, அதைத்தான் ஏசாயாவின் அடுத்த வசனங்கள் காண்பிக்கின்றன.

ஆவிக்குரிய வியாதிக்கு சுகப்படுத்துதல்

9இரக்கமே உருவான யெகோவா இப்பொழுது கனிவான, இனிமையான தொனியில் பேசுகிறார்: ‘[“உங்களைக் கழுவுங்கள்; உங்களைச் சுத்திகரியுங்கள்;” NW] உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவி[டுங்கள்], தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்; நன்மை செய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரி[யுங்கள்], திக்கற்றப் பிள்ளைக்கு நியாயம் [வழங்குங்கள்], விதவையின் வழக்கை விசாரியுங்கள்.’ (ஏசாயா 1:16, 17) இங்கே அடுக்கடுக்காக வரும் ஒன்பது ஏவல்களை அல்லது கட்டளைகளை கவனிக்கிறோம். முதல் நான்கு கட்டளைகள் எதிர்மறையானவை, அவை பாவத்தை நீக்குவதைப் பற்றி சொல்கின்றன; கடைசி ஐந்து கட்டளைகள் நேர்மறையானவை, இவை யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு வழிநடத்துகின்றன.

10கழுவுவதும் சுத்திகரிப்பதும் தூய வணக்கத்தில் எப்பொழுதும் முக்கிய பாகம் வகித்திருக்கின்றன. (யாத்திராகமம் 19:10, 11; 30:20; 2 கொரிந்தியர் 7:1) ஆனால் சுத்திகரிப்பு விஷயத்தில் தம்முடைய வணக்கத்தார் மேலோட்டமாக இல்லாமல் இன்னும் ஆழமாக இருதயத்தை சுத்திகரிக்கும்படி யெகோவா விரும்புகிறார். ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய சுத்திகரிப்பே மிக முக்கியம், இதைத்தான் யெகோவா குறிப்பிடுகிறார். 16-⁠ம் வசனத்திலுள்ள முதல் இரண்டு கட்டளைகள் வெறுமனே திரும்ப உரைக்கப்பட்டவை அல்ல. “உங்களைக் கழுவுங்கள்” என முதலில் குறிப்பிடப்படுவது ஆரம்பத்தில் செய்யப்படும் சுத்திகரிப்பை குறிக்கிறது, ஆனால் “உங்களைச் சுத்திகரியுங்கள்” என இரண்டாவதாக குறிப்பிடப்படுவது அந்தச் சுத்திகரிப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளைக் குறிக்கிறது என எபிரெய இலக்கண கர்த்தாக்கள் சொல்கின்றனர்.

11யெகோவாவிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. (யோபு 34:22; நீதிமொழிகள் 15:3; எபிரெயர் 4:13) ஆகவே, “உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவி[டுங்கள்]” என்ற கட்டளை தீமை செய்வதை விட்டுவிடுவதையே அர்த்தப்படுத்துகிறது. அதாவது, வினைமையான பாவங்களை மறைக்க முயற்சி செய்யக் கூடாது என்பதை அர்த்தப்படுத்துகிறது, ஏனெனில் அப்படி செய்வதும் பாவமே. நீதிமொழிகள் 28:13 இவ்வாறு எச்சரிக்கிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”

12ஏசாயா 1-⁠ம் அதிகாரம் வசனம் 17-⁠ல் யெகோவா கொடுக்கும் நேர்மறையான கட்டளைகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். வெறுமனே “நன்மை செய்”யுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் ‘நன்மை செய்யப் படியுங்கள்’ என்று சொல்வதை கவனியுங்கள். கடவுளுடைய பார்வையில் நன்மை எது என்பதை புரிந்துகொள்வதற்கும் அதை செய்ய விரும்புவதற்கும் கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பது அவசியம். மேலும், யெகோவா வெறுமனே ‘நியாயத்தைச் செய்யுங்கள்’ என்று சொல்லவில்லை, ஆனால் ‘நியாயத்தைத் தேடுங்கள்’ என்று சொல்கிறார். அனுபவமிக்க மூப்பர்களும்கூட சிக்கலான சில விஷயங்களில் சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு கடவுளுடைய வார்த்தையை தீர ஆராய்வது அவசியம். அடுத்து யெகோவா கட்டளையிடுகிறபடி, ‘ஒடுக்கப்பட்டவனை ஆதரிப்பதும்’ அவர்களுடைய கடமை. இந்தக் கட்டளைகள் இன்றைய கிறிஸ்தவ மேய்ப்பர்களுக்கு முக்கியமானவை, ஏனெனில் அவர்கள் ‘கொடிதான ஓநாய்களிடமிருந்து’ மந்தையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.​—அப்போஸ்தலர் 20:28-30.

13கடைசி இரண்டு கட்டளைகள் கடவுளுடைய ஜனங்களில் மிகவும் அவல நிலையில் இருப்பவர்களை, அதாவது அநாதைகளையும் விதவைகளையும் உட்படுத்துகின்றன. இப்படிப்பட்டவர்களை சுரண்டிப் பிழைப்பதற்கு இந்த உலகம் தயாராக இருக்கிறது; ஆனால் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் இப்படிப்பட்ட செயல்கள் இருக்கக் கூடாது. சபையிலுள்ள தகப்பனில்லா பையன்களுக்கும் பெண்களுக்கும் அன்பான மூப்பர்கள் ‘நியாயம் வழங்குகின்றனர்;’ இவர்களை சுரண்டிப் பிழைத்து சீரழிக்கிற இந்த உலகில் நீதியையும் பாதுகாப்பையும் பெற உதவி செய்கின்றனர். விதவையின் வழக்கை மூப்பர்கள் ‘விசாரணை செய்கின்றனர்,’ அல்லது அந்த எபிரெய வார்த்தை அர்த்தப்படுத்துகிறபடி, அவளுக்காக “போராடுகின்றனர்.” நம் மத்தியில் இருக்கும் ஏழைகள் யெகோவாவுக்கு அருமையானவர்களாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் அனைவரும் இவர்களுக்கு புகலிடமாகவும் ஆறுதல் அளிப்பவர்களாகவும் நீதி வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும்.​—மீகா 6:8; யாக்கோபு 1:⁠27.

14இந்த ஒன்பது கட்டளைகள் வாயிலாக யெகோவா எப்பேர்ப்பட்ட உறுதியான, நம்பிக்கையான செய்தியை கொடுக்கிறார்! பாவத்திற்கு பலியாகிறவர்களில் சிலர் சரியானதைச் செய்வது தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டது என நினைத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒருவரின் உற்சாகத்தை குலைத்துப்போடும், அவை தவறானதும்கூட. யெகோவாவின் உதவியால், எந்தவொரு பாவியும் தன் பாவமுள்ள போக்கை நிறுத்தி, அதைவிட்டு திரும்பிவந்து சரியானதைச் செய்ய முடியும் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார்​—⁠நாமும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இரக்கமான, நியாயமான முறையீடு

15யெகோவாவின் தொனி இப்பொழுது இன்னும் அதிக கனிவாகவும் இரக்கமானதாகவும் இருக்கிறது. “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” (ஏசாயா 1:18) இந்த அழகிய வசனத்தின் ஆரம்பத்தில் விடுக்கப்படும் அழைப்பு அடிக்கடி தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. உதாரணமாக, த நியூ இங்லிஷ் பைபிள் சொல்கிறது: “நாம் வாதாடுவோம்,” அதாவது இருதரப்பினரும் ஒத்துப்போவதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுபோல மொழிபெயர்க்கிறது. ஆனால் அப்படியல்ல! கலகத்தனமிக்க, மாய்மாலமான ஜனங்களோடு கொண்ட செயல் தொடர்புகளில் யெகோவாவை துளிகூட குறைகூற முடியாது. (உபாகமம் 32:4, 5) இந்த வசனம், சம அந்தஸ்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது போன்ற உரையாடலை பற்றி பேசுவதில்லை, ஆனால் நீதியை நிலைநாட்டுவதற்கு வழக்காடுவதைப் பற்றி பேசுகிறது. நீதிமன்ற வழக்கிற்கு வரும்படி யெகோவா இஸ்ரவேலரிடம் சவால்விடுவதைப் போலவே இது இருக்கிறது.

16இது கிலியூட்டுவதாக இருக்கலாம், ஆனால் யெகோவா கருணையும் இரக்கமும் நிறைந்த நியாயாதிபதி. அவருடைய மன்னிக்கும் திறமை ஈடிணையற்றது. (சங்கீதம் 86:5, NW) ‘சிவேரென்ற’ இஸ்ரவேலரின் பாவங்களை அவர் மாத்திரமே ‘உறைந்த மழையைப் போல வெண்மையாக்கி’ சுத்திகரிக்க முடியும். எந்த மனித முயற்சியோ சட்டங்களோ சம்பிரதாயங்களோ பலிகளோ ஜெபங்களோ பாவத்தின் கறையை நீக்க முடியாது. யெகோவாவின் மன்னிப்பே பாவத்தை கழுவ முடியும். இப்படிப்பட்ட மன்னிப்பை தாம் வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில், அதாவது இருதயப்பூர்வமான, உண்மையான மனந்திரும்புதலின் அடிப்படையில் கடவுள் தருகிறார்.

17இது அவ்வளவு முக்கியமாக இருப்பதால், பாவம் ‘இரத்தாம்பர சிவப்பில்’ இருந்தாலும் சாயமேற்றப்படாத புதிய வெண் பஞ்சைப் போலாகும் என்று யெகோவா திரும்பவும் கவிதை நடையில் சொல்கிறார். நாம் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினால், நம்முடைய பாவங்களை, வினைமையான பாவங்களையும்கூட, அவரே மன்னிக்கிறவர் என்பதை நாம் அறிந்துகொள்ளும்படி யெகோவா விரும்புகிறார். தங்களுடைய விஷயத்தில் இது உண்மை என்பதை நம்புவதற்கு கஷ்டமாக காண்பவர்கள் மனாசேயின் உதாரணத்தை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. அவர் பல வருஷங்களாக பயங்கரமான பாவம் செய்துவந்தார். இருந்தாலும், மனந்திரும்பியதால் மன்னிக்கப்பட்டார். (2 நாளாகமம் 33:9-16) நாமனைவரும், வினைமையான பாவங்கள் செய்தவர்களும்கூட, அவரோடு ‘வழக்காட’ முடியாத அளவுக்கு காலம் கடந்துவிடவில்லை என்பதை அறியும்படி யெகோவா விரும்புகிறார்.

18தம்முடைய ஜனங்களுக்கு முன் ஒரு தெரிவு இருப்பதை யெகோவா நினைப்பூட்டுகிறார். “நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” (ஏசாயா 1:19, 20) இங்கே மனப்பான்மைகளைப் பற்றி யெகோவா வலியுறுத்திக் காட்டுகிறார். தாம் சொல்ல வந்த குறிப்பை கோடிட்டு காண்பிப்பதற்கு உயிரூட்டமான மற்றொரு அணிநடையை யெகோவா பயன்படுத்துகிறார். இதுவே யூதாவுக்கு முன்பாக இருக்கும் தெரிவு: பசியாறு அல்லது பலியாகு. யெகோவாவுக்கு மனப்பூர்வமாக செவிகொடுத்து கீழ்ப்படியும் மனப்பான்மை அவர்களுக்கு இருந்தால், தேசத்தின் நலமானதை உண்டு பசியாறுவார்கள். ஆனால், தங்களுடைய கலகத்தனமான மனப்பான்மையில் விடாப்பிடியாக இருந்தால், சத்துருக்களின் பட்டயத்திற்கு பலியாவார்கள்! கடவுளின் இரக்கத்திற்கும் தாராளமாக மன்னிக்கும் குணத்திற்கும் பதிலாக சத்துருக்களின் பட்டயத்தையே ஜனங்கள் தெரிந்தெடுப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக தெரிகிறது. இருந்தாலும், இதுவே எருசலேமின் விஷயத்தில் நடக்கிறது, ஏசாயாவின் பின்வரும் வசனங்கள் இதைத்தான் காட்டுகின்றன.

நேசத்திற்குரிய நகரத்திற்காக புலம்பல்

19இந்தச் சமயத்தில் எருசலேமின் துன்மார்க்கம் உச்ச அளவில் இருப்பதை ஏசாயா 1:21-23-⁠ல் நாம் காண்கிறோம். ஏசாயா இப்பொழுது புலம்பல் அல்லது ஒப்பாரி நடையில் ஏவப்பட்ட கவிதையை ஆரம்பிக்கிறார்: “உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப் போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.”​—ஏசாயா 1:21.

20எருசலேம் நகரம் எப்படி வீழ்ந்துவிட்டது! ஒரு காலத்தில் அவள் கற்புள்ள மனைவி, இப்பொழுதோ வேசியாக மாறிவிட்டாள். யெகோவாவுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தையும் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் இதைவிட வேறெப்படி அதிக வலிமையுடன் சொல்ல முடியும்? அந்த நகரத்தில் ‘நீதி குடிகொண்டிருந்தது.’ எப்பொழுது? இஸ்ரவேலர் தோன்றுவதற்கு முன்பே, ஆபிரகாமின் நாளிலேயே இந்த நகரம் சாலேம் என அழைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், ராஜாவாகவும் ஆசாரியராகவும் இருந்த ஒருவர் இதை ஆண்டு வந்தார். அவருடைய பெயர்தான் மெல்கிசெதேக்; அதன் அர்த்தம் ‘நீதியின் ராஜா,’ அது நிச்சயமாகவே அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. (எபிரெயர் 7:2; ஆதியாகமம் 14:18-20) மெல்கிசெதேக்கிற்கு சுமார் 1,000 வருஷங்களுக்குப் பிறகு, தாவீது மற்றும் சாலொமோன் ராஜ்யபாரம் செய்த சமயத்தில் எருசலேம் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தது. முக்கியமாக அதன் ராஜாக்கள் யெகோவாவின் வழிகளில் நடந்து தங்களுடைய மக்களுக்கு சிறந்த முன்மாதிரி வகித்த சமயத்தில் “நீதி அதில் குடிகொண்டிருந்தது.” ஆனால் ஏசாயாவின் நாளிற்குள், இப்படிப்பட்ட காலங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நிலைமைகள் மாறிவிட்டன.

21இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியிலுள்ள தலைவர்களே என தெரிகிறது. ஏசாயா தொடர்ந்து இவ்வாறு புலம்புகிறார்: “உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் [“பிடிவாதமுள்ளவர்களும்,” NW] திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித் திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.” (ஏசாயா 1:22, 23) இரண்டு உயிரூட்டமான உதாரணங்கள் அடுத்து சொல்லப்போகும் விஷயத்திற்கு வாசகருடைய மனதை தயார்படுத்துகின்றன. கொல்லன் உலைக் களத்தில் வெள்ளியிலிருந்து களிம்பை அகற்றி அதை வீசியெறிகிறான். இஸ்ரவேலின் பிரபுக்களும் நியாயாதிபதிகளும் வெள்ளியைப் போல் அல்ல, ஆனால் இந்தக் களிம்பைப் போலவே இருக்கிறார்கள். அவர்கள் வீசியெறிப்பட வேண்டியவர்கள். தண்ணீரால் கலப்படமான திராட்சரசத்தைப் போல சுவையிழந்து இருப்பதால் அவர்களால் எந்தப் பிரயோஜனமுமில்லை. இத்தகைய பானம் தரையில் கொட்டப்படுவதற்கே லாயக்கானது!

22அந்தத் தலைவர்கள் இத்தகைய வர்ணனைக்கு ஏன் தகுதியானவர்கள் என்பதை 23-⁠ம் வசனம் காட்டுகிறது. மோசேயின் நியாயப்பிரமாணம் கடவுளுடைய ஜனங்களை மற்ற தேசத்தாரிலிருந்து தனியாக பிரித்து அவர்களை மேம்பட்டவர்களாக்கியது. உதாரணமாக, அநாதைகளையும் விதவைகளையும் பாதுகாக்க கட்டளையிடுவதன் மூலம் அது அவர்களை மேம்பட்டவர்களாக்கியது. (யாத்திராகமம் 22:22-24) ஆனால் ஏசாயாவின் நாளில், திக்கற்ற பிள்ளைக்கு சாதகமான நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. விதவையோ தன்னுடைய வழக்கை கேட்பதற்குக்கூட யாரையும் அழைக்க முடியவில்லை, அவளே தனக்காக போராட வேண்டியதாயிருக்கிறது. இந்த நியாயாதிபதிகளும் தலைவர்களும் தங்களுடைய சொந்த நலனிலேயே, அதாவது லஞ்சம் வாங்குதல், அன்பளிப்பை ஆசித்தல், திருடர்களுக்கு துணைபோதல், பலியானவர்களை தவிக்க விட்டுவிட்டு குற்றவாளிகளுக்கு தஞ்சமளித்தல் போன்றவற்றிலேயே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் தங்களுடைய தவறான போக்கில் ‘பிடிவாதமுள்ளவர்களாக,’ அல்லது ஊறிப்போனவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு வருந்தத்தக்க நிலைமை!

யெகோவா தம்முடைய ஜனங்களை சுத்திகரிப்பார்

23இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகத்தை யெகோவா என்றென்றும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய [“உண்மையான,” NW] ஆண்டவரிடமிருந்து வரும் தெய்வ வாக்கைக் கேளுங்கள்: இதோ, [“ஓகோ”] நான் என் சத்துருக்களைத் தண்டித்து மனதாறுவேன். என் பகைஞர்மேல் பழிதீர்ப்பேன்.” (ஏசாயா 1:24, தி.மொ.) இங்கே யெகோவாவுக்கு மூன்று பட்டப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இவை அவருக்கே உரிய கர்த்தத்துவத்தையும் அவர் வகிக்கும் மாபெரும் அதிகாரத்தையும் வலியுறுத்திக் காட்டுகின்றன. “ஓகோ” என்ற வியப்புச் சொல் எதை காட்டுகிறது? இப்பொழுது யெகோவாவின் இரக்கம் கோபத்துடன் செயல்படுவதற்கு உறுதிபூண்டிருப்பதோடு கலந்திருப்பதை காட்டலாம். நிச்சயமாகவே இதற்கு காரணம் இருக்கிறது.

24யெகோவாவின் சொந்த ஜனங்களே அவருக்கு சத்துருக்களாக மாறிவிட்டார்கள். இவர்கள் தெய்வீக பழிவாங்குதலுக்கு முற்றிலும் தகுதியானவர்களே. யெகோவா அவர்களை விட்டொழித்து ‘மனதாறுவார்.’ தம்முடைய பெயர் தரிக்கப்பட்ட ஜனங்களை முற்றிலும், நிரந்தரமாக அழித்துவிடுவதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, ஏனெனில் யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: “நான் என் கையை உன்மீது திருப்பி, காரத்தால் உன் களிம்பை சுத்திகரித்து, கழிவுப் பொருட்களை நீக்குவேன்.” (ஏசாயா 1:25, NW) இப்பொழுது, சுத்திகரிக்கும் முறையை யெகோவா உதாரணமாக பயன்படுத்துகிறார். பூர்வ காலங்களில், சுத்திகரிப்பவர் பெரும்பாலும் காரத்தை சேர்த்து விலையேறப்பெற்ற உலோகத்திலிருந்து களிம்பை பிரித்தெடுத்தார். அதைப் போலவே, தம்முடைய ஜனங்களை முற்றிலும் பொல்லாதவர்களாக கருதாத யெகோவா, அவர்களை ‘தகுந்த அளவில் கண்டிப்பார்.’ அவர்கள் மத்தியிலிருந்து “கழிவுப் பொருட்களை” மட்டுமே, அதாவது கற்றுக்கொள்ளவும் கீழ்ப்படியவும் மறுக்கும் பிடிவாதமுள்ள, விரும்பத்தகாதவர்களை மட்டுமே நீக்குவார். c (எரேமியா 46:28, NW) இந்த வார்த்தைகளால், சரித்திரத்தை முன்கூட்டியே எழுதும் சிலாக்கியத்தை ஏசாயா பெறுகிறார்.

25உண்மையிலேயே யெகோவா தம்முடைய ஜனங்களை புடமிட்டு, பொல்லாத தலைவர்கள் மற்றும் கலகக்காரர்கள் எனும் களிம்பை நீக்கினார். பொ.ச.மு. 607-⁠ல், ஏசாயா வாழ்ந்த வெகுகாலத்திற்குப் பின்பு, எருசலேம் அழிக்கப்பட்டது, அதன் குடிகளோ 70 ஆண்டுகள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இது, வெகுகாலத்திற்குப் பிறகு கடவுள் எடுத்த நடவடிக்கையோடு சில விதங்களில் ஒத்திருக்கிறது. கடவுள் மீண்டும் புடமிடுவார் என்பதை பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்கு வெகுகாலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட மல்கியா 3:1-5-⁠ல் உள்ள தீர்க்கதரிசனம் காண்பித்தது. யெகோவா தேவன் ‘உடன்படிக்கையின் தூதுவராகிய’ இயேசு கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய ஆலயத்திற்கு வருவார் என்பதை இது சுட்டிக்காட்டியது. இது, முதல் உலகப் போரின் முடிவில் சம்பவித்தது. கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிய அனைவரையும் ஆய்வுசெய்து, பொய்யிலிருந்து மெய்யை யெகோவா பிரித்தெடுத்தார். அதன் விளைவு என்ன?

26யெகோவா பதிலளிக்கிறார்: “உன் நியாயாதிபதிகளை முன்னிருந்தது போலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர் பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பி வருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.” (ஏசாயா 1:26, 27) இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தை பூர்வ எருசலேம் கண்டது. நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள் பொ.ச.மு. 537-⁠ல் தங்களுடைய நேசத்திற்குரிய நகரத்திற்குத் திரும்பி வந்தப்பின், கடந்த காலத்தைப் போலவே மீண்டும் உண்மையுள்ள நியாயாதிபதிகளும் ஆலோசனைக்காரர்களும் அங்கே இருந்தார்கள். தீர்க்கதரிசிகளாகிய ஆகாய், சகரியா, ஆசாரியனாகிய யோசுவா, வேதபாரகனாகிய எஸ்றா, ஆளுநராகிய செருபாபேல் ஆகிய அனைவரும், திரும்பிவந்த உண்மையுள்ள மீதியானோர் கடவுளுடைய பாதையில் நடப்பதற்கு வழிகாட்டினார்கள். ஆனால், 20-⁠ம் நூற்றாண்டில் இதைவிட முக்கியத்துவம் வாய்ந்த நிறைவேற்றம் நிகழ்ந்தது.

27யெகோவாவின் நவீனகால ஜனங்கள் 1919-⁠ல் சோதனை காலகட்டத்திலிருந்து வெளியே வந்தார்கள். பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள மீதியானோருக்கும் கிறிஸ்தவமண்டலத்தின் விசுவாசதுரோக குருமாருக்கும் இடையே வித்தியாசம் தெளிவானது. கடவுள் மீண்டும் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக ‘நியாயாதிபதிகளையும் ஆலோசனைக்காரரையும்’ நியமித்தார். மனித பாரம்பரியத்தின்படி அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையின்படி அவருடைய ஜனங்களுக்கு அறிவுரை வழங்கிய உண்மையுள்ள ஆண்கள் இவர்களே. இன்று, குறைந்துவரும் “சிறுமந்தை”யிலும் லட்சங்களாக அதிகரித்துவரும் “வேறே ஆடுகளாகிய” அவர்களுடைய தோழர்கள் மத்தியிலும் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்கள் இருக்கின்றனர்.​—லூக்கா 12:32; யோவான் 10:16; ஏசாயா 32:1, 2; 60:17; 61:3, 4.

28ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சபையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் தவறு செய்கிறவர்களை திருத்துவதற்கும் சில சந்தர்ப்பங்களில் தாங்கள் ‘நியாயாதிபதிகளாக’ செயல்படுவதை மூப்பர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். கடவுளுடைய இரக்கத்தையும் சமநிலையான நீதியையும் பின்பற்றி, காரியங்களை அவர் வழியில் செய்ய மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் ‘ஆலோசனைக்காரராக’ சேவை செய்கிறார்கள். ஆனால் பிரபுக்களையோ அடக்குமுறையாளர்களையோ அவர்கள் கொஞ்சமும் பின்பற்றுவதில்லை; ‘சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்கள்’ என்ற தோற்றத்தைக்கூட கொடுக்காமலிருப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள்.​—1 பேதுரு 5:⁠3.

29ஏசாயா தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட ‘களிம்பை’ பற்றியென்ன? கடவுளுடைய சுத்திகரிக்கும் முறையிலிருந்து பயனடைய மறுக்கிறவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? ஏசாயா தொடர்ந்து கூறுகிறார்: “துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டு போவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். நீங்கள் விரும்பின கர்வாலி மரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.” (ஏசாயா 1:28, 29) எச்சரிக்கை செய்திகளை அசட்டை பண்ணி யெகோவாவுக்கு விரோதமாக கலகமும் பாவமும் செய்கிறவர்கள், நிச்சயமாகவே “நொறுங்குண்டு போவார்கள்,” “நிர்மூலமாவார்கள்.” இது பொ.ச.மு. 607-⁠ல் சம்பவிக்கிறது. ஆனால், மரங்களும் தோப்புகளும் எதை அர்த்தப்படுத்துகின்றன?

30யூதேயர்கள் எப்பொழுதும் விக்கிரகாராதனையில் திளைத்திருக்கின்றனர். மரங்கள், தோப்புகள் ஆகியவை பெரும்பாலும் அவர்களுடைய இழிவான பழக்க வழக்கங்களில் உட்பட்டுள்ளன. உதாரணமாக, வறட்சி காலத்தில் பாகாலும் அதன் துணைவியாகிய அஸ்தரோத்தும் இறந்து அடக்கம் பண்ணப்பட்டுவிடுகின்றனர் என அவற்றை வழிபடுகிறவர்கள் நம்புகின்றனர். அவற்றை விழித்தெழ வைத்து இணைசேர தூண்டி அத்தேசத்தை செழிப்படையச் செய்வதற்கு, தோப்புகளில் “புனித” மரங்களின்கீழ் நெறியற்ற பாலின பழக்கங்களை நடப்பிப்பதற்காக விக்கிரகாராதனைக்காரர்கள் கூடிவருகின்றனர். மழைபெய்து அத்தேசம் செழிப்படையும்போது, இந்தப் பொய் கடவுட்கள் பாராட்டையும் புகழையும் பெறுகின்றன; இந்த விக்கிரகாராதனைக்காரர்கள் தங்களுடைய மூடநம்பிக்கைகள் உண்மையானவை என நம்புகின்றனர். ஆனால் இந்தக் கலகக்கார விக்கிரகாராதனைக்காரர்களை யெகோவா சுக்குநூறாக்கும்போது, எந்த விக்கிரக கடவுட்களும் அவர்களை காப்பாற்றுகிறதில்லை. சக்தியற்ற இந்த மரங்களையும் தோப்புகளையும் குறித்து இந்தக் கலகக்காரர்கள் ‘வெட்கப்படுகின்றனர்.’

31ஆனால், விக்கிரகாராதனைக்காரர்களாகிய யூதேயர்கள் வெட்கத்தைவிட மிக மோசமானதை எதிர்ப்படுகிறார்கள். அதே உதாரணத்தைப் பயன்படுத்தி, யெகோவா இப்பொழுது அந்த விக்கிரகாராதனைக்காரரையே ஒரு மரத்திற்கு ஒப்பிடுகிறார். “இலையுதிர்ந்த கர்வாலி மரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.” (ஏசாயா 1:30) மத்திய கிழக்கில் வெப்பமும் வறட்சியுமிக்க காலத்தில், இந்த உதாரணம் மிகப் பொருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து சீராக தண்ணீர் பாயவில்லையென்றால், எந்த மரமும் அல்லது தோப்பும் நீண்ட நாளைக்கு நிலைக்காது. காய்ந்துவிட்டால், விசேஷமாக இத்தகைய தாவரங்கள் சீக்கிரத்தில் தீக்கு இரையாகிவிடும். ஆகவே, 31-⁠ம் வசனத்திலுள்ள உதாரணம் இதைத் தொடர்வது பொருத்தமானது.

32“வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்; அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும்; அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்; நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.” (ஏசாயா 1:31, பொ.மொ.) இந்த “வலிமை மிக்கவன்” யார்? இந்த எபிரெய வார்த்தை பலத்தையும் செல்வத்தையும் அர்த்தப்படுத்துகிறது. இது பொய் கடவுட்களைப் பின்பற்றும் செல்வந்தரை, தன்னம்பிக்கை உடையவரைக் குறிக்கிறது. நம்முடைய நாளைப் போலவே, ஏசாயாவின் நாளில், யெகோவாவையும் அவருடைய தூய வணக்கத்தையும் புறக்கணிக்கிற ஆட்களுக்கு குறைச்சலே இல்லை. சிலர் வெற்றி பெற்றவர்களாகவே தோன்றுகிறார்கள். என்றபோதிலும், இப்படிப்பட்டவர்கள் ‘சணற்கூளத்தைப் போல,’ அதாவது தீ வாடை பட்டதுமே துண்டுதுண்டாக போய்விடும் அளவுக்கு நொய்ந்தும் காய்ந்தும் இருக்கும் மென்சணல் நார்களைப் போல இருப்பார்கள் என யெகோவா எச்சரிக்கிறார். (நியாயாதிபதிகள் 16:8, 9) விக்கிரகாராதனைக்காரனுடைய கிரியையால் உருவாக்கப்படும் பொருள்​—⁠அது விக்கிரக கடவுட்களாகவோ செல்வமாகவோ அல்லது யெகோவாவுக்குப் பதிலாக வணங்கும் வேறெதுவாக இருந்தாலும்சரி​—⁠பற்றிக்கொள்ளும் ‘தீப்பொறியைப்’ போல இருக்கும். தீப்பொறியும் சணற்கூளமும் பஸ்பமாகிவிடும், ஒருவராலும் அணைக்க முடியாத தீயால் அழிக்கப்பட்டுவிடும். யெகோவாவின் பரிபூரண நியாயத்தீர்ப்புகளை இந்த அண்டத்திலுள்ள எந்த அதிகாரமும் மாற்ற முடியாது.

33இந்தக் கடைசி செய்தி, வசனம் 18-⁠ல் இரக்கத்தையும் மன்னிப்பையும் பற்றி சொல்லப்பட்டுள்ள செய்தியோடு முரண்படுகிறதா? நிச்சயமாகவே இல்லை! இத்தகைய எச்சரிக்கைகளை தம்முடைய ஊழியர்கள் எழுதி வைக்கவும் அவற்றை அறிவிக்கவும் யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார், ஏனென்றால் அவர் இரக்கமுள்ளவர். சொல்லப்போனால், “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று” விரும்புகிறார். (2 பேதுரு 3:9) கடவுளுடைய எச்சரிப்பு செய்திகளை மனிதவர்க்கத்திற்கு தெரிவிப்பது ஒவ்வொரு மெய் கிறிஸ்தவருக்கும் கிடைத்திருக்கும் பாக்கியம். அப்படி தெரிவிக்கும்போதுதான் மனந்திரும்புகிறவர்கள் அவருடைய தாராள மன்னிக்கும் குணத்தால் பயனடைந்து என்றென்றும் வாழ்வார்கள். காலம் கடப்பதற்கு முன்பே ‘வழக்காட’ மனிதகுலத்திற்கு வாய்ப்பளிப்பது யெகோவாவுக்கு இருக்கும் எப்பேர்ப்பட்ட தயவை எடுத்துக்காட்டுகிறது!

[அடிக்குறிப்புகள்]

a ஏசாயாவை வாளால் அறுப்பதற்கு பொல்லாத அரசனாகிய மனாசே கட்டளை பிறப்பித்ததாக பண்டைய யூத பாரம்பரியம் சொல்கிறது. (எபிரெயர் 11:37-ஐ ஒப்பிடுக.) இந்த மரண தண்டனையை அவர் மீது விதிப்பதற்காக, ஏசாயாவுக்கு எதிராக பொய் தீர்க்கதரிசி ஒருவன் பின்வரும் குற்றச்சாட்டை கூறியதாக ஓர் ஆதார ஏடு சொல்கிறது: “எருசலேமை சோதோம் என்று அழைத்தான், யூதாவின் பிரபுக்களையும் எருசலேமின் பிரபுக்களையும் கொமோராவின் ஜனங்கள் என்று அறிவித்தான்.”

b ‘மாய சக்தி’ என்பதற்கான எபிரெய வார்த்தை “தீங்கானது,” “இயற்கை மீறியது,” “தவறானது” என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. “அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் இழைக்கப்படும் தீமையை” கண்டனம் செய்வதற்கு இந்த வார்த்தையை எபிரெய தீர்க்கதரிசிகள் பயன்படுத்தினர் என பழைய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) சொல்கிறது.

c “நான் என் கையை உன்மீது திருப்பி” என்ற சொற்றொடர், யெகோவா தம்முடைய ஜனங்களை ஆதரிப்பதை விட்டுவிட்டு அவர்களை கண்டிப்பார் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

[கேள்விகள்]

1, 2. எருசலேம் மற்றும் யூதாவிலுள்ள ஆட்சியாளர்களையும் ஜனங்களையும் யெகோவா யாருக்கு ஒப்பிடுகிறார், இது ஏன் நியாயமானது?

3. ஜனங்கள் செலுத்திய பலிகள் “போதுமென்றாகிவிட்டன” என்று சொல்லும்போது யெகோவா எதை அர்த்தப்படுத்துகிறார், ஏன் இந்த நிலை?

4. ஜனங்கள் எருசலேம் ஆலயத்தில் கூடிவருவது வீணே என்பதை ஏசாயா 1:12 எப்படி அம்பலப்படுத்துகிறது?

5. யூதர்களுடைய வணக்க செயல்கள் சில யாவை, இவை ஏன் யெகோவாவுக்கு “சுமையாயின”?

6. எந்த அர்த்தத்தில் யெகோவா ‘இளைத்துப்போயிருக்கிறார்’?

7. தம்முடைய ஜனங்களின் ஜெபங்களுக்கு செவிசாய்ப்பதை யெகோவா ஏன் நிறுத்திவிட்டார்?

8. இன்று கிறிஸ்தவமண்டலம் என்ன தவறை செய்கிறது, கிறிஸ்தவர்களில் சிலர் எப்படி இதுபோன்ற கண்ணியில் விழுகின்றனர்?

9, 10. யெகோவாவின் வணக்கத்தில் சுத்தம் எவ்வளவு முக்கியம்?

11. பாவத்தை எதிர்த்து போராடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், ஆனால் எதை ஒருபோதும் செய்யக்கூடாது?

12. (அ) ‘நன்மை செய்ய படிப்பது’ ஏன் முக்கியம்? (ஆ) ‘நியாயத்தைத் தேடுங்கள்,’ ‘ஒடுக்கப்பட்டவனை ஆதரியுங்கள்’ என்ற அறிவுரையை முக்கியமாக மூப்பர்கள் எவ்வாறு பொருத்தலாம்?

13. திக்கற்ற பிள்ளை மற்றும் விதவை சம்பந்தமான கட்டளைகளை நாம் எவ்வாறு இன்று பொருத்தலாம்?

14. ஏசாயா 1:16, 17-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையான செய்தி என்ன?

15. “வழக்காடுவோம் வாருங்கள்” என்ற சொற்றொடர் எவ்வாறு சில சமயங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது, ஆனால் அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது?

16, 17. யெகோவா வினைமையான பாவங்களையும் மன்னிக்க மனமுள்ளவராயிருக்கிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?

18. கலகத்தனமிக்க தம்முடைய ஜனங்களுக்கு முன்பு யெகோவா வைக்கும் தெரிவு என்ன?

19, 20. (அ) தமக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை யெகோவா எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? (ஆ) எந்த விதத்தில் ‘எருசலேமில் நீதி குடிகொண்டிருந்தது’?

21, 22. வெள்ளிக் களிம்பு, தண்ணீர் கலந்த திராட்சரசம் ஆகியவை எதை குறிக்கின்றன, யூதாவின் தலைவர்கள் இப்படிப்பட்ட விவரிப்புக்கு ஏன் தகுதியானவர்கள்?

23. தம்முடைய பகைவர் மீது எப்படிப்பட்ட உணர்ச்சியை யெகோவா காட்டுகிறார்?

24. தம்முடைய ஜனங்களுக்காக என்ன சுத்திகரிப்பு முறையை யெகோவா வைத்திருக்கிறார்?

25. (அ) பொ.ச.மு. 607-⁠ல் யெகோவா எவ்வாறு தம்முடைய ஜனங்களை சுத்திகரித்தார்? (ஆ) நவீன காலங்களில் யெகோவா எப்பொழுது தம்முடைய ஜனங்களை சுத்திகரித்தார்?

26-28. (அ) ஏசாயா 1:26-⁠ன் ஆரம்ப நிறைவேற்றம் என்ன? (ஆ) இத்தீர்க்கதரிசனம் எவ்வாறு நம்முடைய நாளில் நிறைவேற்றம் அடைந்திருக்கிறது? (இ) இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு மூப்பர்களுக்கு உதவலாம்?

29, 30. (அ) சுத்திகரிப்பு முறையிலிருந்து பயனடைய மறுக்கிறவர்களுக்கு யெகோவா என்ன உரைக்கிறார்? (ஆ) தங்களுடைய மரங்களையும் தோப்புகளையும் குறித்து என்ன கருத்தில் ஜனங்கள் ‘வெட்கப்படுகிறார்கள்’?

31. வெட்கத்தைவிட என்ன மோசமான நிலைமையை விக்கிரகாராதனைக்காரர்கள் எதிர்ப்படுகிறார்கள்?

32. (அ) 31-⁠ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “வலிமை மிக்கவன்” யார்? (ஆ) என்ன அர்த்தத்தில் அவன் ‘சணற்கூளமாவான்,’ அவனை பற்றிக்கொள்ளும் “தீப்பொறி” என்ன, அதன் விளைவு என்ன?

33. (அ) வரப்போகும் நியாயத்தீர்ப்பை பற்றிய கடவுளுடைய எச்சரிக்கை எவ்வாறு அவருடைய இரக்கத்தையும் காட்டுகிறது? (ஆ) மனிதகுலத்திற்கு இப்பொழுது யெகோவா தரும் வாய்ப்பு என்ன, இது எவ்வாறு நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது?