Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசமின்மை கற்பிக்கும் பாடங்கள்

விசுவாசமின்மை கற்பிக்கும் பாடங்கள்

அதிகாரம் பதினெட்டு

விசுவாசமின்மை கற்பிக்கும் பாடங்கள்

ஏசாயா 22:1-25

முற்றுகை இடப்பட்டிருக்கும் பூர்வ நகரம் ஒன்றிற்குள் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். நகரத்தின் மதில்களுக்கு வெளியே பராக்கிரமமும் கொடூரமுமான எதிரிகள் இருக்கின்றனர். மற்ற நகரங்கள் ஏற்கெனவே எதிரிகளின் தாக்குதலால் தரைமட்டமாகிவிட்டன என்பதும் உங்களுக்கு தெரியும். இப்போதோ, உங்கள் பட்டணத்தை வென்று, கொள்ளையடிக்கவும், பெண்களை கற்பழிக்கவும், நகரத்தாரை கொல்லவும் வருகிறார்கள். அவர்கள் அவ்வளவு பலவான்களாக இருப்பதால், அவர்களை எதிர்த்து போரிடுவது கூடாத காரியம். நகரத்தின் மதில்கள்தான் உங்களுடைய ஒரே பாதுகாப்பு. மதில்களுக்கு வெளியே நீங்கள் நோட்டம்விடுகையில், எதிரிகளால் அமைக்கப்பட்ட முற்றுகை கோபுரங்களைப் பார்க்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பு அரண்களை தவிடுபொடியாக்கும் பெரிய பெரிய பாறைகளை ஏவும் கருவிகளை வைத்திருக்கிறார்கள். உங்கள் மதிற்சுவர்களை தகர்த்தெறியும் யந்திரங்களையும் மதில்கள்மேல் ஏறுவதற்கான ஏணிகளையும் இரதங்களையும் அம்பு எய்கிறவர்களையும் திரளான வீரர்களையும் பார்க்கிறீர்கள். நடுநடுங்க வைக்கும் காட்சியல்லவா!

2ஏசாயா 22-⁠ம் அதிகாரத்தில், இப்படிப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றித்தான் நாம் வாசிக்கிறோம். எருசலேமுக்கு எதிரான முற்றுகை அது. எப்போது நடக்கிறது? சொல்லப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட முற்றுகையின்போது நிறைவேறியது என சொல்ல முடியாது. ஆனால், நமக்கிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், எருசலேமை சூழ்ந்த பல முற்றுகைகளின் பொதுவான ஒரு விவரிப்பே இந்த தீர்க்கதரிசனம். எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றிய ஒரு பொதுவான எச்சரிப்பே.

3ஏசாயா விவரித்துள்ள அந்த முற்றுகையின் சமயத்தில், எருசலேமின் குடிகள் என்ன செய்கின்றனர்? கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களாக, தங்களைக் காக்கும்படி யெகோவாவிடம் மன்றாடுகிறார்களா? இல்லை. இன்று, கடவுளை வணங்குவதாக பெருமை பாராட்டும் அநேகரிடம் இருக்கும் ஞானமற்ற ஒரு மனநிலையைத்தான் அவர்களும் வெளிக்காட்டுகிறார்கள்.

முற்றுகையிடப்பட்ட நகரம்

4ஏசாயா 21-⁠ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மூன்று நியாயத்தீர்ப்பு செய்திகளும் “தீர்ப்பு” என்று சொல்லியே ஆரம்பிக்கின்றன. (ஏசாயா 21:1, 11, 13, NW) அதிகாரம் 22-⁠ம் அதே விதத்தில் துவங்குகிறது: “காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு [“தீர்ப்பு,” NW]: வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே, உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?” (ஏசாயா 22:1, பொ.மொ.) ‘காட்சிப் பள்ளத்தாக்கு’ எருசலேமைக் குறிக்கிறது. அந்த நகரம் உயரமான இடத்தில் இருந்தபோதிலும், அதைச் சுற்றிலும் இன்னும் உயரமான மலைகள் இருந்ததால், அது பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. பல தெய்வீக தரிசனங்களும், வெளிப்படுத்துதல்களும் அங்கே கொடுக்கப்பட்டதால், அது ‘காட்சியோடு’ சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. இந்த காரணத்திற்காகவாவது, அந்த நகரத்தின் குடிகள் யெகோவாவின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்திருக்க வேண்டும். மாறாக, அவர்கள் அவரை புறக்கணிக்கின்றனர்; பொய் வணக்கத்தில் வழிமாறி செல்கின்றனர். ஆகவே, அவர்களைத் தண்டிக்க, எதிரிகள் அந்நகரத்தை முற்றுகையிடும்படி யெகோவா அனுமதிக்கிறார். தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற, எதிரிகளை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்.​—உபாகமம் 28:45, 49, 50, 52.

5எருசலேமின் குடிகள் ‘அனைவரும் தங்கள் வீட்டுக்கூரைகளின் மேல் ஏறியிருக்கிறார்கள்’ என்பதை சற்று கவனியுங்கள். பூர்வ காலங்களில், இஸ்ரவேலில் வீட்டுக்கூரைகள் சமதளமாக இருந்தன. குடும்பங்கள் அங்கு ஒன்றுகூடுவது வழக்கம். இந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் ஏன் அவ்வாறு வீட்டுக்கூரைகளுக்கு சென்றார்கள் என ஏசாயா சொல்கிறதில்லை. ஆனால், அந்த செயல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொய்க் கடவுட்களை ஆராதிக்க ஒருவேளை அவர்கள் வீட்டுக்கூரைகளுக்கு சென்றிருக்கலாம். பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமின் அழிவுக்கு முன்னான வருடங்களில் இதுதான் அவர்களது பழக்கம்.​—எரேமியா 19:13; செப்பனியா 1:⁠5.

6ஏசாயா தொடருகிறார்: “சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.” (ஏசாயா 22:2) ஜனங்கள் திரண்டு வந்திருக்கின்றனர், நகரமே சந்தடியாய் இருக்கிறது. தெருக்களில் ஜனங்கள் பயத்தோடும் ஆரவாரத்தோடும் உள்ளனர். என்றாலும், சிலர் குதூகலமாக இருக்கின்றனர். அவர்கள் ஒருவேளை பாதுகாப்பாக உணர்ந்திருக்கலாம் அல்லது ஆபத்து கடந்துவிடும் என நினைத்திருக்கலாம். a இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குதூகலமாக இருப்பது முட்டாள்தனமே. பட்டயத்தால் கொலையுண்டு சாவதைவிட மிகக் குரூரமாக அநேகர் சாக இருக்கின்றனர். முற்றுகையிடப்பட்டிருக்கும் ஒரு நகரத்திற்குள் வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் வர வாய்ப்பு கிடையாது. நகரத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பட்டினியும் ஜனநெருக்கமும் சேர்ந்து கொள்ளைநோயை பரப்பும். ஆகவே, எருசலேமில் உள்ளோர் அநேகர் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் இறப்பர். இது பொ.ச.மு. 607-⁠லும் பொ.ச. 70-⁠லும் நடக்கிறது.​—2 இராஜாக்கள் 25:3; புலம்பல் 4:9, 10. b

7இந்த இக்கட்டான சூழ்நிலையில், எருசலேமின் அதிபதிகள் என்ன செய்கின்றனர்? ஏசாயா பதிலளிக்கிறார்: “உங்கள் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்; அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்; உன்னிடத்தில் இருந்தவர் யாவரும் வெகு தொலைவிற்குத் தப்பியோடியும் ஒருசேரக் கைதானார்கள்.” (ஏசாயா 22:3, பொ.மொ.) அதிபதிகளும் பலவான்களும் ஓட்டமெடுத்தாலும் பிடிபட்டு போகிறார்கள்! அவர்களுக்கு எதிராக அம்பு ஏதும் எய்யப்படாமலே பிடிபடுகிறார்கள்; கைதிகளாக கொண்டு செல்லப்படுகிறார்கள். இது பொ.ச.மு. 607-⁠ல் நடக்கிறது. எருசலேமின் மதில்கள் தகர்க்கப்பட்டதும், சிதேக்கியா ராஜாவும் அவனுடைய பராக்கிரமசாலிகளும் இரவுநேரத்தில் ஓட்டம் பிடிக்கிறார்கள். எதிரிகள் இதை அறிந்து, அவர்களைத் துரத்தி எரிகோவின் சமனான பூமியிலே பிடிக்கிறார்கள். அவனுடைய பராக்கிரமசாலிகள் அனைவரும் சிதறி ஓடவே, சிதேக்கியா பிடிபடுகிறான். அவனுடைய கண்களை குருடாக்கி, வெண்கல விலங்குகளைப் போட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகிறார்கள். (2 இராஜாக்கள் 25:2-7) விசுவாசமின்மையின் சோக முடிவு இதுதான்!

அழிவைக் குறித்த திகில்

8இந்த தீர்க்கதரிசனம் ஏசாயாவை வெகுவாக பாதிக்கிறது. அவர் சொல்கிறார்: “என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப் போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள்.” (ஏசாயா 22:4) மோவாபுக்கும் பாபிலோனுக்கும் வர இருந்த அழிவின் தீர்க்கதரிசனத்தைக் குறித்து ஏசாயா மனம் வருந்தினார். (ஏசாயா 16:11; 21:3) ஆனால், இப்போதோ தன் ஜனங்கள் மீதே வரப்போகிற நாசத்தைக் குறித்து அவர் மிகவும் மனங்கலங்கி, புலம்புகிறார். அவரை தேற்ற வழியே இல்லை. ஏன்? “ஏனெனில் அமளியும் திகிலும் நிறைந்த நாள் அது; மக்கள் மிதிபடும் நேரம் அது. காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது; மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன; மலையை நோக்கி அபயக்குரல் எழுகிறது.” (ஏசாயா 22:5, பொ.மொ.) எருசலேம் சந்தடியும் குழப்பமுமாய் இருக்கும். என்ன செய்வதென தெரியாமல், பயத்தில் ஜனங்கள் பதட்டமாய் திரிவர். எதிரிகள் நகரத்தின் மதிற்சுவர்களை தகர்க்க ஆரம்பிக்கையில், “மலையை நோக்கி அபயக்குரல்” எழுப்புவர். அப்படியென்றால், மோரியா மலையிலுள்ள பரிசுத்த ஆலயத்திற்கு சென்று கடவுளை நோக்கி ஜனங்கள் மன்றாடுவார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இருந்திருக்கலாம். என்றாலும், அவர்களுடைய விசுவாசமின்மையை கருத்தில்கொள்கையில், அவர்களுடைய திகிலின் கூக்குரல் சுற்றியுள்ள மலைகளில் எல்லாம் எதிரொலித்திருக்கும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

9எருசலேமை எப்படிப்பட்ட எதிரி அச்சுறுத்துகிறான்? ஏசாயா சொல்கிறார்: “ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரை வீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.” (ஏசாயா 22:6) எதிரிகள் பலத்த ஆயுதங்களோடே உள்ளனர். அவர்களுடைய அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைய உள்ளன. வீரர்கள் தங்களுடைய கேடகங்களை யுத்தத்திற்காக ஆயத்தமாக வைத்திருக்கின்றனர். இரதங்களும் யுத்தத்திற்காக பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகளும் உள்ளன. இப்போது பெர்சிய வளைகுடா என அறியப்படும் பகுதிக்கு வடக்கிலிருந்த ஏலாமைச் சேர்ந்த வீரர்களும் படையில் உள்ளனர். மேலும், ஏலாமுக்கு வெகு அருகில் இருந்த கீர் தேசத்திலிருந்தும் வீரர்கள் வருகின்றனர். வெகு தொலைவிலிருந்து படைகள் வருவதை இந்த தேசங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு, எசேக்கியாவின் நாட்களில் எருசலேமை அச்சுறுத்திய படையிலும் ஏலாமைச் சேர்ந்த அம்பு எய்கிறவர்கள் இருந்திருப்பார்கள் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

பாதுகாப்பு முயற்சிகள்

10அங்கு நிகழப்போகும் சம்பவங்களை ஏசாயா விவரிக்கிறார்: “மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர் வாசல்கள் மட்டும் வந்து அணிவகுத்து நிற்பார்கள். அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்.” (ஏசாயா 22:7, 8அ) எருசலேம் நகரத்திற்கு வெளியே இருந்த சமநிலத்தை இரதங்களும் குதிரைகளும் நிரப்புகின்றன. நகரத்தின் கதவுகளைத் தகர்க்க அவை தயாராக உள்ளன. நீக்கப்பட்ட ‘யூதாவின் மறைவு’ என்ன? நகரத்தின் கதவாக அது இருந்திருக்கலாம். அது கைப்பற்றப்படுவது, நகரத்தை காக்க முயலுவோருக்கு நாசத்தின் அறிகுறியாகும். c அந்தப் பாதுகாப்பு அரண் நீக்கப்பட்டதும், நகரம் எதிரிகளின் வசம் வீழ்ந்துவிடும்.

11ஜனங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை அடுத்ததாக ஏசாயா விவரிக்கிறார். அவர்களுடைய முதல் யோசனை, ஆயுதங்கள்தான்! “அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய். தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை நீங்கள் கண்டீர்கள்; கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்.” (ஏசாயா 22:8ஆ, 9, பொ.மொ.) வனமாளிகையாகிய ஆயுதசாலையிலே ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதசாலை சாலொமோனால் கட்டப்பட்டது. லீபனோனிலிருந்து கொண்டுவரப்பட்ட கேதுருக்களால் அது கட்டப்பட்டதால், “லீபனோன் வனம் என்னும் மாளிகை” என அறியப்பட்டது. (1 இராஜாக்கள் 7:2-5) நகரத்தின் மதில்களில் இருந்த பிளவுகள் பரிசோதிக்கப்படுகின்றன. மிக முக்கியமான பாதுகாப்பு செயலாக, தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. ஏனென்றால், மக்கள் உயிரோடிருப்பதற்கு தண்ணீர் அவசியம். இல்லையென்றால், நகரம் தாக்குப்பிடிக்க முடியாது. என்றாலும், விடுதலைக்காக யெகோவாவை அவர்கள் நோக்குகிறார்கள் என்பதாக சொல்லப்படவே இல்லை. மாறாக, தங்களுடைய சொந்த திட்டங்களில்தான் நம்பிக்கை வைக்கின்றனர். நாம் ஒருபோதும் அப்படிப்பட்ட தவறை செய்யாதிருப்போமாக!​—சங்கீதம் 127:⁠1.

12நகரத்தின் மதிற்சுவர்களில் உள்ள பிளவுகளைப் பற்றியதென்ன? ‘எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்தார்கள்.’ (ஏசாயா 22:10) பிளவுகளை அடைப்பதற்கு போதிய அளவு பொருட்கள் எந்த வீடுகளை இடித்தால் கிடைக்கும் என கணக்குப் பார்க்கிறார்கள். மதிற்சுவரை எதிரிகள் முழுமையாய் தகர்த்தெறிவதை தடுக்க எடுக்கும் முயற்சி இது.

விசுவாசமற்ற மக்கள்

13“இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.” (ஏசாயா 22:11) தண்ணீரை சேமித்து வைப்பதற்கான முயற்சிகளைப் பற்றி இந்த வசனத்திலும் 9-வது வசனத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. அசீரியப் படைகளுக்கு எதிராக நகரத்தை காக்க எசேக்கியா ராஜா எடுத்த முயற்சிகளை இது நினைவுபடுத்துகிறது. (2 நாளாகமம் 32:2-5) என்றாலும், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியில் சொல்லப்படும் நகரத்தின் மக்கள் முழுக்க முழுக்க விசுவாசமற்றவர்கள். எசேக்கியா செய்ததற்கு எதிர்மாறாக, நகரத்தின் பாதுகாப்புக்காக முயற்சி செய்யும்போது அவர்கள் படைப்பாளரைப் பற்றி ஒருதுளிகூட யோசிக்கவில்லை.

14ஏசாயா மேலும் தொடருகிறார்: “சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார். நீங்களோ, சந்தோஷித்துக் களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்ச ரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.” (ஏசாயா 22:12, 13) யெகோவாவுக்கு எதிராக செய்த கலகத்தைக் குறித்து எருசலேமின் குடிகளுக்கு சிறிதும் மனம் உறுத்தவில்லை. அவர்கள் அழவில்லை, முடியை வெட்டிக்கொள்ளவில்லை, அல்லது மனந்திரும்புதலின் அறிகுறியாக இரட்டு உடுத்திக்கொள்ளவில்லை. அவர்கள் அப்படி செய்திருந்தால், வர இருந்த பயங்கரங்களிலிருந்து யெகோவா அவர்களை ஒருவேளை காப்பாற்றியிருப்பார். மாறாக, அவர்கள் சிற்றின்பங்களில் திளைக்கவே விரும்புகின்றனர். கடவுளில் விசுவாசம் வைக்காத அநேகர் இன்று அதே மனநிலையைத்தான் காட்டுகின்றனர். மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் இருக்கிறது அல்லது பரதீஸிய பூமியில் எதிர்கால வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று சொல்லி சிற்றின்பங்களையே தேடும் வாழ்க்கைப் போக்கை கொண்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 15:32) எவ்வளவு குறுகிய நோக்குநிலை! யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களுக்கு நித்திய வாழ்க்கைக்கான நம்பிக்கை இருந்திருக்கும்!​—சங்கீதம் 4:6-8; நீதிமொழிகள் 1:⁠33.

15முற்றுகையிடப்பட்ட எருசலேமின் குடிகளுக்கு பாதுகாப்பு என்பதே கிடைக்காது. ஏசாயா சொல்கிறார்: “மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.” (ஏசாயா 22:14) மக்களுடைய கடின இருதயத்தின் காரணமாக, அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. சாவு நிச்சயம். அது நிச்சயம் நிறைவேறும். ஏனென்றால், அதைச் சொல்லியது சர்வ சேனைகளின் கர்த்தராகிய யெகோவா. ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேற்றமாக, விசுவாசமற்ற எருசலேமின்மேல் நாசம் இருமுறை வருகிறது. பாபிலோனிய சேனைகள் அதை அழிக்கின்றன; அடுத்ததாக ரோம சேனைகளும் அதை அழிக்கின்றன. அதுபோலவே, விசுவாசமற்ற கிறிஸ்தவமண்டலத்தின் மேலும் நாசம் வரும். அவர்கள் கடவுளை வணங்குவதாக பெருமை பாராட்டிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் செயல்களால் அதை மறுதலிக்கின்றனர். (தீத்து 1:16) கடவுளுடைய நீதியின் வழிகளை அவமதிக்கும், கிறிஸ்தவமண்டலத்தின் பாவங்களும் உலகின் மற்ற மதங்களின் பாவங்களும் ‘வானபரியந்தம் எட்டியிருக்கிறது.’ விசுவாச துரோக எருசலேமின் பாவத்தைப் போலவே இவர்களுடைய பாவமும் நிவர்த்தி செய்ய முடியாதது.​—வெளிப்படுத்துதல் 18:5, 8, 21.

தன்னலமிக்க விசாரிப்புக்காரன்

16விசுவாசமற்ற தேசத்திலிருந்து விசுவாசமற்ற தனிநபருக்கு ஏசாயா இப்போது தன் கவனத்தை திருப்புகிறார். ஏசாயா எழுதுகிறார்: “சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்ல வேண்டியது என்னவென்றால், உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல், நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?”​—ஏசாயா 22:15, 16.

17செப்னா ‘அரமனை விசாரிப்புக்காரன்.’ எசேக்கியா ராஜாவின் அரண்மனை அதிகாரியாக இருந்திருக்கலாம். அது மிகவும் செல்வாக்குமிக்க பதவி. ராஜாவுக்கு அடுத்தபடியாக அவன் இருக்கிறான். அதனால், அவனிடம் அதிக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 4:2) இருப்பினும், தேசத்தின் நலனுக்கு முக்கிய கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக, செப்னா தன் சொந்த மகிமைக்கான காரியங்களை செய்கிறான். ராஜாக்களுக்கு இருப்பது போன்ற, ஆடம்பரமான கல்லறையை, உயர்வான ஒரு பாறையிலே தனக்காக வெட்டுகிறான். இதைப் பார்த்த யெகோவா, அந்த விசுவாசமற்ற விசாரிப்புக்காரனுக்கு எச்சரிப்பை தரும்படி ஏசாயாவை பரிசுத்த ஆவியால் ஏவுகிறார்: “இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார். அவர் உன்னை உருண்டையைப்போல [“பந்தைப்போல,” NW] அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும். உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்.” (ஏசாயா 22:17-19) சுயநலக்காரனாய் இருப்பதால், எருசலேமின் சாதாரண கல்லறையில்கூட அவனுடைய பிரேதம் அடக்கம்பண்ணப்பட மாட்டாது. மாறாக, பந்து போல வீசி எறியப்பட்டு, தூர தேசத்திலே சாவான். கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் பொறுப்பு வகிக்கும் அனைவருக்குமே இது ஓர் எச்சரிக்கையாகும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, அதிகாரத்தை இழப்பதிலும் இறுதியில் கடவுளுடைய தயவை இழப்பதிலும்தான் முடிவடையும்.

18செப்னா எப்படி தன் நிலையிலிருந்து நீக்கப்படுவான்? ஏசாயா வாயிலாக யெகோவா விவரிக்கிறார்: “அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான். தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.” (ஏசாயா 22:20-22) செப்னாவுக்கு பதிலாக, எலியாக்கீமுக்கு அரண்மனை விசாரிப்புக்காரனின் வஸ்திரம் உடுத்தி, தாவீதுடைய வீட்டின் திறவுகோலும் கொடுக்கப்படும். அதிகாரத்தை, செல்வாக்கை அல்லது அரசாங்கத்தை அடையாளப்படுத்த ‘திறவுகோல்’ என்ற பதம் பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. (மத்தேயு 16:19-ஐ ஒப்பிடுக.) பூர்வ காலங்களில், ராஜாவின் ஆலோசகர் பொறுப்பில் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன. அரண்மனையை நிர்வகிப்பது, ராஜாவின் சேவையில் ஆட்களை அமர்த்துவது போன்ற முக்கியமான தீர்மானங்களை அவர் செய்வார். (வெளிப்படுத்துதல் 3:7, 8-ஐ ஒப்பிடுக.) எனவே, விசாரிப்புக்காரனின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. அவனிடத்தில் அதிகமும் எதிர்பார்க்கப்படுகிறது. (லூக்கா 12:48) செப்னா தன் பொறுப்புகளை திறமையாக நிர்வகித்திருக்கலாம்; ஆனால் அவன் விசுவாசமற்றவனாக நிரூபிப்பதால், யெகோவா அவனைத் தள்ளிவிடுவார்.

அடையாளப்பூர்வ இரு ஆணிகள்

19இறுதியாக, செப்னாவிடமிருந்த பொறுப்பு எலியாக்கீமுக்கு மாற்றப்படும் என்பதை யெகோவா அடையாள மொழியில் விளக்குகிறார்: “அவனை [எலியாக்கீம்] உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பெளத்திரருடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கிவைப்பார்கள். உறுதியான இடத்திலே கடாவப்பட்டிருந்த ஆணி [செப்னா] அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.”​—ஏசாயா 22:23-25.

20இந்த வசனங்களில் குறிப்பிட்டுள்ள முதல் ஆணி எலியாக்கீம். தன் தகப்பன் இல்க்கியாவின் வீட்டுக்கு “மகிமையான சிங்காசனமாக” அவர் விளங்குவார். செப்னாவைப்போல, அவர் தன் தகப்பனின் வீட்டிற்கோ அல்லது நற்பெயருக்கோ பங்கம் விளைவிக்க மாட்டார். வீட்டின் மற்ற பாத்திரங்களுக்கும், அதாவது ராஜாவின் சேவையில் இருக்கும் மற்றவர்களுக்கும் எலியாக்கீம் ஆதரவாய் இருப்பார். (2 தீமோத்தேயு 2:20, 21) இதற்கு மாறாக, இரண்டாவது ஆணி செப்னாவைக் குறிக்கிறது. பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாலும், அவன் நீக்கப்படுவான். அவனை நம்பியிருக்கும் அனைவரும் விழுவார்கள்.

21கடவுளை வணங்குவதாக உரிமை பாராட்டிக்கொள்பவர்களும், பரிசுத்த சேவையின் சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்பவர்களும், தங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கு நன்மை செய்யவும் யெகோவாவுக்கு துதி சேர்க்கவுமே பயன்படுத்த வேண்டும் என்பதை செப்னாவின் அனுபவம் நினைப்பூட்டுகிறது. தங்களுக்கு பொருள் சேர்த்துக்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட முக்கியத்துவத்தைத் தேடவோ, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக, நியமிக்கப்பட்ட விசாரிப்புக்காரனாக, அதாவது இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய பிரதிநிதியாக, கிறிஸ்தவமண்டலம் பல காலமாக தன்னைத்தானே உயர்த்தியுள்ளது. என்றாலும், சுய மகிமையைத் தேடி செப்னா எப்படி தன் தகப்பனுக்கு வெட்கக்கேட்டை கொண்டுவந்தானோ, அப்படித்தான் கிறிஸ்தவமண்டலத்தின் தலைவர்களும் தங்களுக்காக செல்வத்தையும் அதிகாரத்தையும் அளவுக்கதிகமாக தேடி படைப்பாளருக்கு அவமதிப்பை காட்டி வருகின்றனர். எனவே, 1918-⁠ல் நியாயத்தீர்ப்பு “தேவனுடைய வீட்டிலே” துவங்கியபோது, யெகோவா கிறிஸ்தவமண்டலத்தை அதன் ஸ்தானத்திலிருந்து நீக்கினார். மற்றொரு விசாரிப்புக்காரன், அதாவது “உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன்” அடையாளம் கண்டுகொள்ளப்பட்டான். இயேசுவின் பூமிக்குரிய ஆஸ்திகளின்மேல் விசாரிப்புக்காரனாய் நியமிக்கப்பட்டான். (1 பேதுரு 4:17; லூக்கா 12:42-44) தாவீதினுடைய வீட்டாருக்குரிய ராஜரீக ‘திறவுகோலை’ ஏற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்களாக இந்த வகுப்பார் தங்களை நிரூபித்துள்ளனர். நம்பிக்கைக்குரிய “ஆணி” போல, வித்தியாசமான பல ‘பானபாத்திரங்களுக்கும்’ அதாவது வித்தியாசமான பொறுப்புகளையுடைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆவிக்குரிய உணவின் உறுதியான ஆதாரமாக நிரூபித்துள்ளனர். பூர்வ எருசலேமின் ‘வாசல்களுக்குள் இருந்த அந்நியர்களை’ போல, ‘வேறே ஆடுகளும்’ இந்த “ஆணி” மீது, அதாவது நவீன நாளைய எலியாக்கீம் மீது சார்ந்திருக்கின்றனர்.​—யோவான் 10:⁠16; உபாகமம் 5:14.

22சனகெரிப்பும் அவனுடைய படைகளும் எருசலேமை அச்சுறுத்திக் கொண்டிருந்த சமயத்தில், செப்னாவுக்கு பதில் எலியாக்கீம் பொறுப்பேற்றார். அதுபோலவே, இந்தக் கடைசி நாட்களில் “உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன்” நியமிக்கப்பட்டுள்ளான். ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ மீதும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய வேறே ஆடுகள் மீதும், சாத்தானும் அவனது பேய்களும் கடைசி தாக்குதலை கொண்டு வரும்போது இந்தக் கடைசி நாட்கள் முடிவடையும். அதுவரை, இந்த வகுப்பார் விசாரிப்புக்காரராக சேவிப்பர். (கலாத்தியர் 6:16) எசேக்கியாவின் நாட்களில் நடந்ததுபோலவே, அந்தக் கடைசி தாக்குதல், நீதியின் எதிரிகளுடைய அழிவில் முடிவடையும். யூதாவை அசீரியப் படைகள் தாக்கியபோது, எருசலேமின் விசுவாசமுள்ள குடிகள் தப்பிப்பிழைத்ததுபோல, ‘உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருக்கும் ஆணியாகிய’ விசுவாசமுள்ள விசாரிப்புக்காரனை ஆதரிப்பவர்கள் தப்பிப்பிழைப்பர். அப்படியென்றால், நற்பெயரைக் கெடுத்துக்கொண்ட, கிறிஸ்தவமண்டலம் எனும் ‘ஆணியை’ பற்றிக்கொள்ளாதிருப்பது எவ்வளவு ஞானமான செயல்!

23செப்னாவுக்கு என்ன சம்பவிக்கிறது? ஏசாயா 22:18-⁠ல் உள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது என்பதற்கான பதிவு நம்மிடம் இல்லை. தன்னைத்தானே அவன் உயர்த்தி, அதனால் நற்பெயரைக் கெடுத்துக்கொண்டபோது, கிறிஸ்தவமண்டலத்தை போன்றிருக்கிறான். ஆனால், தனக்கு கிடைத்த சிட்சையினால் நல்ல ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்கலாம். இந்த விஷயத்தில், அவன் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து வித்தியாசப்பட்டவனாய் இருக்கிறான். அசீரிய தளபதி ரப்சாக்கே எருசலேமை சரணடையும்படி கேட்கும்போது, எசேக்கியாவின் புதிய விசாரணைக்காரன் எலியாக்கீம்தான் அந்தப் பிரதிநிதிகளின் குழுவை தலைமை தாங்கி செல்கிறார். என்றாலும், ராஜாவின் காரியதரிசியாக செப்னா அவரோடு செல்கிறான். ஆகவே, செப்னா இன்னும் அரசவையில்தான் சேவிக்கிறான் என தோன்றுகிறது. (ஏசாயா 36:2, 22) கடவுளுடைய அமைப்பில் ஊழிய சிலாக்கியங்களை இழப்பவர்களுக்கு என்ன சிறந்த பாடம்! மனக்கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துக்கொள்ளாமல், யெகோவா எந்த சிலாக்கியத்தில் சேவிக்க அனுமதிக்கிறாரோ அதில் தொடர்ந்து சேவிக்க மனமுடையவர்களாய் இருக்க வேண்டும். (எபிரெயர் 12:6) அப்படி செய்வதனால், கிறிஸ்தவமண்டலத்திற்கு வர இருக்கும் நாசத்திலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம். நித்தியத்திற்கும் யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

a பொ.ச. 66-⁠ல், எருசலேமை முற்றுகையிட்டிருந்த ரோம படைகள் திரும்பிச் சென்றபோது, அநேக யூதர்கள் குதூகலித்தனர்.

b முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர் ஜோஸிஃபஸின் கருத்துப்படி, பொ.ச. 70-⁠ல், எருசலேமில் பஞ்சம் அவ்வளவு கொடுமையாக இருந்ததால், மக்கள் தோல், புல், வைக்கோல் ஆகியவற்றை சாப்பிட்டனர். ஒரு தாய் தன் மகனையே சுட்டு சாப்பிட்டதாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

c இன்னொரு அர்த்தத்தில், ‘யூதாவின் மறைவு’ என்பது ஆயுதக் கிடங்குகளும் வீரர்கள் தங்குமிடமும் அடங்கிய பாதுகாப்பு கோட்டைகளைக் குறித்திருக்கலாம்.

[கேள்விகள்]

1. முற்றுகையிடப்பட்டிருக்கும் பூர்வ நகரம் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்டால் உங்கள் நிலை எப்படியிருந்திருக்கும்?

2. ஏசாயா 22-⁠ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முற்றுகை எப்போது நடக்கும்?

3. ஏசாயா விவரிக்கிற முற்றுகையின் சமயத்தில், எருசலேமின் குடிகள் என்ன செய்கிறார்கள்?

4. (அ) ‘காட்சிப் பள்ளத்தாக்கு’ என்பது என்ன, அதற்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது? (ஆ) எருசலேமின் குடிகளுடைய ஆவிக்குரிய நிலை எப்படி இருக்கிறது?

5. தங்கள் வீட்டுக்கூரைகளின் மேல் மக்கள் எதற்காக ஏறியிருக்கலாம்?

6. (அ) எருசலேம் நகரத்திற்குள் நிலைமைகள் எப்படி இருக்கின்றன? (ஆ) ஏன் சிலர் குதூகலமாக இருக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?

7. முற்றுகையின்போது எருசலேமின் அதிபதிகள் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன நேரிடுகிறது?

8. (அ) எருசலேமின் மேல் வரும் நாசத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்திற்கு ஏசாயா எப்படி பிரதிபலிக்கிறார்? (ஆ) எருசலேமில் நிலைமை எப்படியிருக்கும்?

9. எருசலேமை அச்சுறுத்தும் படையை விவரிக்கவும்.

10. என்ன நிகழ்ச்சி நகரத்திற்கு நாசத்தின் அறிகுறியாக விளங்குகிறது?

11, 12. எருசலேமின் குடிகள் என்ன பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கின்றனர்?

13. தண்ணீரை சேமிக்க மக்கள் என்ன முயற்சிகள் எடுக்கின்றனர், ஆனால் யாரை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்?

14. யெகோவா எச்சரிப்பின் செய்தியை கொடுத்தும், என்ன முட்டாள்தனமான மனப்போக்கை மக்கள் காட்டுகின்றனர்?

15. (அ) எருசலேமுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தி என்ன, அவருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவது யார்? (ஆ) எருசலேமைப் போலவே கிறிஸ்தவமண்டலமும் ஏன் அழிவை எதிர்ப்பட வேண்டும்?

16, 17. (அ) யெகோவாவிடமிருந்து எச்சரிப்பின் செய்தியை இப்போது பெறுவது யார், ஏன்? (ஆ) மேட்டிமையான எண்ணங்களால், செப்னாவுக்கு என்ன நேரிடும்?

18. செப்னாவுக்கு பதிலாக யாருக்கு பொறுப்பு அளிக்கப்படும், செப்னாவின் வஸ்திரமும் தாவீதுடைய வீட்டின் திறவுகோலும் கொடுக்கப்படும் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

19, 20. (அ) எலியாக்கீம் எப்படி தன் ஜனங்களுக்கு ஓர் ஆசீர்வாதமாய் விளங்குவார்? (ஆ) செப்னாவை நம்பியிருக்கும் அனைவருக்கும் என்ன நேரிடும்?

21. நவீன காலங்களில், செப்னாவைப்போல யார் நீக்கப்பட்டது, யாரால், ஏன்?

22. (அ) விசாரிப்புக்காரனாக இருந்த செப்னாவை மாற்றியது ஏன் காலத்திற்கேற்றது? (ஆ) நவீன காலங்களில், ‘உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரனை’ நியமித்தது ஏன் காலத்திற்கேற்றது?

23. முடிவில், செப்னாவிற்கு என்ன சம்பவிக்கிறது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

[பக்கம் 231-ன் படம்]

சிதேக்கியா தப்பியோடும்போது பிடிபட்டு குருடாக்கப்படுகிறான்

[பக்கம் 232233-ன் படம்]

எருசலேம் நகரத்திற்குள் சிக்கியிருந்த யூதர்களுக்கு எதிர்காலம் இருண்டிருக்கிறது

[பக்கம் 239-ன் படம்]

எலியாக்கீமை எசேக்கியா “உறுதியான இடத்திலே கடாவப்பட்டிருந்த ஆணி”யாக்குகிறார்

[பக்கம் 241-ன் படம்]

செப்னாவைப்போல், கிறிஸ்தவமண்டலத்தின் தலைவர்களில் அநேகர் தங்களுக்காக செல்வத்தை சேர்த்து, படைப்பாளரை அவமதிக்கின்றனர்

[பக்கம் 242-ன் படங்கள்]

நவீன காலங்களில், இயேசுவின் ஆஸ்திகளின் மீது விசுவாசமுள்ள விசாரிப்புக்கார வகுப்பு நியமிக்கப்பட்டுள்ளது