Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ஒரு புதிய பெயர்’

‘ஒரு புதிய பெயர்’

அதிகாரம் இருபத்து மூன்று

‘ஒரு புதிய பெயர்’

ஏசாயா 62:1-12

உறுதி, ஆறுதல், மீண்டும் நிலைநாட்டப்படும் நம்பிக்கை​—⁠பாபிலோனில் மனமொடிந்த நிலையில் இருக்கும் யூதர்களுக்கு தேவைப்படுவது இவையே. எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாபிலோனிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் யூதா பாழாய்க் கிடக்கிறது. யூதர்களை யெகோவா மறந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. அவர்களுடைய நிலைமையை எது சரிப்படுத்தும்? அவர்களை மறுபடியும் தாயகத்திற்கே அழைத்துவந்து, மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதாக யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளே. அப்போது, “கைவிடப்பட்டவள்,” “பாழான” போன்ற விவரிப்புகளுக்கு பதிலாக கடவுளுடைய அங்கீகாரத்தை குறிக்கும் பெயர்கள் கொடுக்கப்படும். (ஏசாயா 62:4; சகரியா 2:12) ஏசாயா 62-⁠ம் அதிகாரத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளே நிறைந்துள்ளன. என்றாலும், மீண்டும் நிலைநாட்டப்படுதல் பற்றிய மற்ற வாக்குறுதிகளைப் போலவே, இந்த அதிகாரமும் பாபிலோனிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்படுவதைப் பற்றிய விஷயத்தை மட்டுமல்லாமல் இன்னும் அதிகமானவற்றையும் குறிப்பிடுகிறது. இதன் பெரிய நிறைவேற்றத்தில், யெகோவாவின் ஆவிக்குரிய தேசமாகிய ‘தேவனுடைய இஸ்ரவேல்’ இரட்சிப்படையும் என ஏசாயா 62-⁠ம் அதிகாரம் உறுதியளிக்கிறது.​—கலாத்தியர் 6:⁠16.

யெகோவா அமைதியாயிரார்

2பொ.ச.மு. 539-⁠ல், பாபிலோன் வீழ்ச்சியுறுகிறது. அதற்குப் பிறகு பெர்சிய அரசனாகிய கோரேசு ஓர் ஆணை பிறப்பிக்கிறார். அதன்படி, கடவுள் பயமுள்ள யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பி யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட அனுமதி வழங்குகிறார். (எஸ்றா 1:2-4) பொ.ச.மு. 537-⁠ல், முதலாவதாக நாடு திரும்பும் யூதர்கள் எருசலேமை அடைகின்றனர். மீண்டும் அந்த நகரத்தின்மீது யெகோவா தம்முடைய தயவை காண்பிக்கிறார். அன்பாக அருளப்படும் பின்வரும் தீர்க்கதரிசன அறிவிப்பு அதை தெரிவிக்கிறது: “சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப் போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன் [“அமைதியாயிரேன்,” பொ.மொ.].”​—ஏசாயா 62:⁠1.

3பொ.ச.மு. 537-⁠ல், சீயோனை அல்லது எருசலேமை மீண்டும் நிலைநாட்டும் தம் வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். அதன் ஜனங்கள் அவராலே இரட்சிக்கப்பட்டனர்; அவர்களுடைய நீதி பிரகாசித்தது. என்றபோதிலும், பிற்பாடு மீண்டும் மெய் வணக்கத்திலிருந்து அவர்கள் விலகிச் சென்றனர். இறுதியில், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர். எனவே யெகோவாவும் தம் தெரிந்தெடுக்கப்பட்ட தேசத்தினராக இராதபடி கடைசியில் அவர்களை புறக்கணித்தார். (மத்தேயு 21:43; 23:38; யோவான் 1:9-13) புதிய தேசமாகிய ‘தேவனுடைய இஸ்ரவேலை’ யெகோவா பிறப்பித்தார். இந்தப் புதிய தேசம் அவருடைய விசேஷ ஜனமாகியது. முதல் நூற்றாண்டில், இதன் அங்கத்தினர்கள் அப்போது அறியப்பட்ட உலகம் எங்கும் நற்செய்தியை வைராக்கியமாய் பிரசங்கித்தனர். (கலாத்தியர் 6:16; கொலோசெயர் 1:23) அப்போஸ்தலருடைய மரணத்திற்குப் பின் மெய் மதம் கறைபடிய ஆரம்பித்தது வருத்தத்திற்குரியது. அதன் விளைவாக, விசுவாச துரோக கிறிஸ்தவம் வளர்ந்து இன்றைய கிறிஸ்தவமண்டலமாக உருவானது. (மத்தேயு 13:24-30, 36-43; அப்போஸ்தலர் 20:29, 30) நூற்றாண்டுகளாக யெகோவாவின் பெயருக்கு பெரும் நிந்தையை வருவிப்பதற்கு கிறிஸ்தவமண்டலம் அனுமதிக்கப்பட்டது. என்றாலும், இறுதியாக 1914-⁠ல் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பாகம் பெரிய அளவில் நிறைவேறியதோடு யெகோவாவின் ‘அநுக்கிரக வருஷம்’ ஆரம்பமானது.​—ஏசாயா 61:⁠2.

4சீயோனை மீண்டும் நிலைநாட்டும் யெகோவாவின் வாக்குறுதி, ‘மேலான எருசலேமாகிய’ யெகோவாவின் பரலோக அமைப்பின் மீது இன்று நிறைவேறி வருகிறது. இது, அதன் பூமிக்குரிய பிள்ளைகளாகிய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. (கலாத்தியர் 4:26) யெகோவாவின் பரலோக அமைப்பு இவர்களுக்கு முழுமையாக உதவி அளிக்கிறது; விழிப்புடனும், அன்புடனும், கடின உழைப்புடனும் உதவி அளிக்கிறது. 1914-⁠ல் அது மேசியானிய ராஜ்யத்தை பிறப்பித்தது என்னே சந்தோஷமான சம்பவம்! (வெளிப்படுத்துதல் 12:1-5) குறிப்பாக 1919 முதல், அதன் நீதியையும் இரட்சிப்பையும் குறித்து அதன் பூமிக்குரிய பிள்ளைகள் தேசங்களுக்கு பிரசங்கித்து வந்திருக்கின்றனர். ஏசாயா முன்னறிவித்தது போலவே, இந்தப் பிள்ளைகள் தீவட்டியைப் போல் காரிருளைப் போக்கும் சுடர்களாக பிரகாசமாக ஒளி வீசியிருக்கின்றனர்.​—மத்தேயு 5:15, 16; பிலிப்பியர் 2:⁠14ஆ, 15.

5யெகோவா தம் வணக்கத்தார்மீது ஆழ்ந்த அக்கறை உள்ளவர்; ஆகவே சீயோனுக்கும் அதன் பிள்ளைகளுக்கும் தாம் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் அவர் ஓயமாட்டார் அல்லது அமைதியாய் இரார். அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரும் அவர்களுடைய கூட்டாளிகளாகிய “வேறே ஆடுகளும்”கூட அமைதியாய் இருக்க மறுக்கிறார்கள். (யோவான் 10:16) சொல்லப்போனால், அவர்கள் பெரும் சத்தமாய் இரட்சிப்பின் ஒரே வழியை ஜனங்களுக்கு சொல்லி வருகிறார்கள்.​—ரோமர் 10:⁠10.

யெகோவா கொடுத்த ‘ஒரு புதிய பெயர்’

6பூர்வ எருசலேம் பிரதிநிதித்துவம் செய்த பரலோக ‘ஸ்திரீயாகிய’ சீயோனுக்காக யெகோவா என்ன செய்யப் போகிறார்? அவர் சொல்கிறார்: “ஸ்திரீயே, தேசங்கள் உன் நீதியையும், ராஜாக்கள் அனைவரும் உன் மகிமையையும் நிச்சயம் காண்பார்கள்; யெகோவா தம் வாயால் சொல்லும் ஒரு புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.” (ஏசாயா 62:2, NW) இஸ்ரவேல் தேசத்தார் நீதியாக செயல்படுவதை மற்ற தேசங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. யெகோவா எருசலேமை பயன்படுத்துகிறார் என்பதை ராஜாக்களும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றனர். அதுமட்டுமல்ல, யெகோவாவின் ராஜ்யத்தோடு ஒப்பிட, தங்கள் ஆட்சி எதுவுமே பயனற்றது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.​—ஏசாயா 49:⁠23.

7சீயோனுக்கு புதிய பெயரைக் கொடுப்பதால் அதன் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை யெகோவா இப்போது உறுதி செய்கிறார். பொ.ச.மு. 537 முதல் சீயோனின் பூமிக்குரிய பிள்ளைகள் அனுபவித்த ஆசீர்வதிக்கப்பட்ட, மகிமையான ஸ்தானத்தை அந்தப் புதிய பெயர் குறிக்கிறது. a சீயோன் தமக்குரியது என யெகோவா ஒப்புக்கொள்வதையும் இது காட்டுகிறது. இன்று, தேவனுடைய இஸ்ரவேலர் யெகோவாவின் ஆனந்தத்திற்கு இவ்விதத்தில் காரணமாக இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களோடு சேர்ந்து வேறே ஆடுகளும் களிகூருகின்றனர்.

8சீயோனுக்கு புதிய பெயரைக் கொடுத்த பிறகு யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “நீ யெகோவாவின் கையில் அலங்காரமான கிரீடமாவாய், உன் கடவுளின் கரத்தில் ராஜபாகையாவாய்.” (ஏசாயா 62:⁠3, தி.மொ.) அடையாள அர்த்தமுடைய தம் மனைவியாகிய பரலோக சீயோன் போற்றிப் புகழப்படுவதற்காக யெகோவா அதை உயர்த்துகிறார். (சங்கீதம் 48:2; 50:2) பரலோக சீயோன் மகிமையாலும் அதிகாரத்தாலும் முடி சூட்டப்பட்டிருப்பதை அலங்காரமான கிரீடம் மற்றும் “ராஜபாகை” எனும் பதங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (சகரியா 9:16) பரலோக சீயோனை அல்லது ‘மேலான எருசலேமை’ பிரதிநிதித்துவம் செய்யும் தேவனுடைய இஸ்ரவேல், யெகோவாவின் கரத்தின், அதாவது அவருடைய செயல்படும் வல்லமையின் தனிச்சிறப்புமிக்க வெளிப்பாடாகும். (கலாத்தியர் 4:26) யெகோவாவின் உதவியோடு, உத்தமத்தன்மைக்கும் பயபக்திக்கும் தலைசிறந்த பதிவை அந்த ஆவிக்குரிய தேசம் ஏற்படுத்தியுள்ளது. அபிஷேகம் செய்யப்பட்டோரும் வேறே ஆடுகளும் உட்பட, லட்சக்கணக்கானோர் இப்படிப்பட்ட சிறப்புமிக்க விசுவாசத்தையும் அன்பையும் காட்ட பலப்படுத்தப்படுகின்றனர். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில், மகிமைக்குரிய பரலோக வெகுமதியை பெற்ற அபிஷேகம் செய்யப்பட்டோர், வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் சிருஷ்டி நித்திய ஜீவனைப் பெறுவதற்கு உதவுவதில் யெகோவாவின் கருவிகளாக பயன்படுத்தப்படுவர்.​—ரோமர் 8:20-22; வெளிப்படுத்துதல் 22:⁠2.

“யெகோவா உன்னில் பிரியமானார்”

9பூமிக்குரிய பிள்ளைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பரலோக சீயோனுக்குப் புதிய பெயர் கொடுக்கப்படுவது அதன் விரும்பத்தக்க மாற்றங்களுள் ஒன்று. நாம் வாசிக்கிறோம்: “இனி நீ கைவிடப்பட்டவள் என்னப்பட மாட்டாய், இனி உன் தேசம் பாழான தேசம் என்னப்படாது; நீ, எனக்குப் பிரியமானவள் என்றும் உன் தேசம், கணவனையுடையாள் என்றும் சொல்லப்படுவாய்; யெகோவா உன்னில் பிரியமானார், உன் தேசம் கணவனைப் பெறும்.” (ஏசாயா 62:⁠4, தி.மொ.) பூமிக்குரிய சீயோன், பொ.ச.மு. 607-⁠ல் அழிக்கப்பட்டதிலிருந்து பாழாய்க் கிடக்கிறது. என்றாலும், அந்தத் தேசத்தை மீண்டும் நிலைநாட்டி, குடியேற்றுவதாக யெகோவா உறுதியளிக்கிறார். ஒரு சமயம் பாழாக்கப்பட்ட சீயோன் இனிமேலும் கைவிடப்பட்ட ஸ்திரீபோல் இருப்பதில்லை. இனியும் அந்தத் தேசம் பாழாய் கிடக்கும்படி விடப்படாது. பொ.ச.மு. 537-⁠ல், எருசலேம் மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அதன் முந்தைய பாழான நிலையை ஒப்பிடுகையில் அது முற்றிலும் ஒரு புதிய நிலையை குறிக்கிறது. சீயோன் “எனக்குப் பிரியமானவள்” என்றும், அதன் தேசம் “கணவனையுடையாள்” என்றும் அழைக்கப்படும் என யெகோவா அறிவிக்கிறார்.​—ஏசாயா 54:1, 5, 6; 66:8; எரேமியா 23:5-8; 30:17; கலாத்தியர் 4:27-31.

10இதே விதமான மாற்றத்தை 1919 முதல் தேவனுடைய இஸ்ரவேல் அனுபவித்தது. முதல் உலக யுத்தத்தின்போது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை கடவுள் கைவிட்டுவிட்டது போலவே தோன்றியது. ஆனால் 1919-⁠ல் கடவுளுடைய தயவிற்குள் அவர்கள் மீண்டும் வந்தனர்; அவர்களுடைய வணக்கமும் சுத்திகரிக்கப்பட்டது. இது, அவர்களுடைய போதனைகளையும் அமைப்பையும் வேலையையும் பாதித்தது. தேவனுடைய இஸ்ரவேல் அதன் செயல்படும் எல்லைக்குள் அல்லது ஆவிக்குரிய ‘தேசத்திற்குள்’ வந்தது.​—ஏசாயா 66:7, 8, 20-22.

11தம்முடைய ஜனங்களின் புதிய, ஆதரவான நிலையை வலியுறுத்தி யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் [“குமாரர்கள்,” NW] உன்னை விவாகம் பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.” (ஏசாயா 62:⁠5) சீயோனின் “குமாரர்கள்,” அதாவது யூதர்கள் எப்படி தங்கள் தாயை மணவாட்டியாக ஏற்றுக்கொள்கின்றனர்? பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பும் சீயோனின் குமாரர்கள் தங்களுடைய பழைய தலைநகரத்திற்கு வந்து மீண்டும் குடியேறுகின்றனர். ஆகவே சீயோன் இனிமேலும் பாழாய் இருக்காது; மாறாக, குமாரர்களால் நிரம்பியிருக்கும்.​—எரேமியா 3:⁠14.

12அதைப் போலவே, 1919 முதல் பரலோக சீயோனின் பிள்ளைகள் தங்களுடைய ஆவிக்குரிய தேசத்தை சுதந்தரித்துக் கொண்டிருக்கின்றனர். “கணவனையுடையாள்” என்பதே அந்த ஆவிக்குரிய தேசத்தின் தீர்க்கதரிசன பெயர். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அந்தத் தேசத்தில் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது, அவர்கள் ‘[யெகோவாவின்] நாமத்திற்கான ஒரு ஜனம்’ என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறது. (அப்போஸ்தலர் 15:14) இந்தக் கிறிஸ்தவர்கள் மீது யெகோவா மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதற்கு, அவர்கள் ராஜ்ய கனிகளைப் பிறப்பிப்பதும் அவருடைய பெயரை அறிவிப்பதுமே சான்று. கடவுள் தம்மோடு மிக உறுதியாக ஐக்கியப்பட்டிருக்கும் அமைப்பின் பாகமாக அவர்கள் இருக்கின்றனர் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். இந்தக் கிறிஸ்தவர்களை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்திருக்கிறார்; ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுவித்திருக்கிறார்; எல்லா மனுஷருக்கும் ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்க இவர்களை உபயோகித்து வருகிறார்; மணவாளன் மணவாட்டியைக் குறித்து களிகூருவது போல, இந்தக் கிறிஸ்தவர்களைக் குறித்து யெகோவாவும் களிகூருகிறார் என்பதை இந்த விதங்களில் நிரூபித்துள்ளார்.​—எரேமியா 32:⁠41.

“அமைதியாய் இராதேயுங்கள்”

13யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்திருக்கும் அடையாள அர்த்தமுள்ள ஒரு புதிய பெயரால் அவர்கள் பாதுகாப்பாக உணருகின்றனர். அவர் தங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தாங்கள் அவருடைய உடைமை என்பதையும் அவர்கள் அறிவர். இப்போது வித்தியாசமான வேறொரு உதாரணத்தைப் பயன்படுத்தி, மதில் சூழ்ந்த பட்டணத்துடன் பேசுவதுபோல் யெகோவா தம்முடைய ஜனங்களிடம் பேசுகிறார்: “எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது [“அமைதியாய் இராதேயுங்கள்,” NW]. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்க [“அமைதியாயிருக்க,” NW] விடாதிருங்கள்.” (ஏசாயா 62:6, 7) விசுவாசமுள்ள மீதியானவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிய பின் யெகோவாவின் உரிய காலத்தில், எருசலேம் ‘பூமியிலே புகழ்ச்சியாகிறது.’ அதாவது, மதில் சூழ்ந்த பட்டணமாக தன் குடிகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இந்த மதில்கள்மேல் இரவும் பகலும் காவல் காக்கும் காவல்காரர்கள், அந்தப் பட்டணத்திற்கு பாதுகாவலாக இருப்பர்; அதோடு, குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்திகளையும் கொடுத்துக் கொண்டிருப்பர்.​—நெகேமியா 6:15; 7:3; ஏசாயா 52:⁠8.

14நவீன காலங்களில், பொய் மதத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறும் வழியை சாந்தகுணமுள்ளவர்களுக்கு காண்பிக்க அபிஷேகம் செய்யப்பட்ட காவற்காரரை யெகோவா பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய அமைப்புக்குள் வர அவர்களும் அழைக்கப்படுகின்றனர். அங்கே அவர்கள் ஆவிக்குரிய கறைகள், தேவ பக்தியற்ற செயல்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பை பெறுகின்றனர், யெகோவாவின் வெறுப்பிற்கும் ஆளாகாமல் இருக்கின்றனர். (எரேமியா 33:9; செப்பனியா 3:19) இப்படிப்பட்ட பாதுகாப்பை பெறுவதில் ‘உண்மையும் விவேகமுள்ள அடிமையாகிய’ காவற்கார வகுப்பார் முக்கிய பாகம் வகிக்கின்றனர். இவர்கள் ஆவிக்குரிய ‘உணவை ஏற்றவேளையில்’ அளிக்கின்றனர். (மத்தேயு 24:45-47, NW) சீயோனை ‘பூமியில் புகழ்ச்சியாக்குவதில்’ காவற்கார வகுப்பாரோடு சேர்ந்து ‘திரள் கூட்டமான’ ஜனங்களும் உழைக்கின்றனர்.​—வெளிப்படுத்துதல் 7:⁠9.

15காவற்கார வகுப்பார் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுடைய சேவை இன்றும் தொடருகிறது! அவர்கள் முழுமனதோடு சேவை செய்கின்றனர். விசுவாசமுடைய லட்சக்கணக்கானோர் ஈடுபடும் வைராக்கியமான ஊழியத்தில் இது புலப்படுகிறது. பிரயாணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும், யெகோவாவின் சாட்சிகளுடைய பல்வேறு பெத்தேல் இல்லங்களிலும் அச்சகங்களிலும் சேவை செய்யும் வாலண்டியர்களும், மிஷனரிகளும், விசேஷித்த பயனியர்கள், ஒழுங்கான பயனியர்கள், துணைப் பயனியர்கள் ஆகியோரும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், புதிய ராஜ்ய மன்றங்களை கட்டுவதிலும், வியாதிப்பட்டவர்களை போய் பார்ப்பதிலும், மருத்துவ சிகிச்சைகளில் சிக்கல்களை எதிர்ப்படுவோருக்கு உதவி செய்வதிலும், இயற்கை சேதங்களிலும் விபத்துக்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு சரியான நேரத்தில் உதவி அளிப்பதிலும் அவர்கள் கடினமாக உழைக்கின்றனர். சுயதியாக மனப்பான்மையை காண்பிக்கும் இவர்களில் அநேகர் பல சமயங்களில் சொல்லர்த்தமாகவே “இரவும் பகலும்” சேவை செய்கின்றனர்!​—வெளிப்படுத்துதல் 7:14, 15.

16கடவுளுடைய ‘சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதற்கு’ இடைவிடாமல் ஜெபிக்கும்படி யெகோவாவின் ஊழியர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (மத்தேயு 6:​9, 10; 1 தெசலோனிக்கேயர் 5:17) மெய் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதைக் குறித்த ஆசைகளும் நம்பிக்கைகளும் நிறைவேறும் வரைக்கும் ‘[யெகோவாவை] அமைதியாயிருக்க விடாதேயுங்கள்’ என அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இடைவிடாமல் ஜெபிக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்தினார்; ‘இரவும் பகலும் [கடவுளை] நோக்கி கூப்பிடும்படி’ தம்மை பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தினார்.​—லூக்கா 18:1-8.

கடவுளுக்கு செய்யும் சேவைக்கு பலனுண்டு

17யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கும் புதிய பெயர், அவர்களுடைய முயற்சிகள் எதுவுமே வீண் போகாது என உறுதியளிக்கிறது. “யெகோவா தமது வலதுகரத்தின் மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின் மேலும் ஆணையிட்டு: இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; நீ உழைத்து விளைவித்த திராட்சரசத்தை அந்நியர் குடிப்பதில்லை, அதை அறுத்துச் சேர்த்தவர்களே அதைப் புசித்து யெகோவாவைத் துதிப்பார்கள்; அதைப் பறித்துச் சேர்த்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிரகாரங்களில் அதைக் குடிப்பார்கள் [என்கிறார்].” (ஏசாயா 62:8, 9, தி.மொ.) யெகோவாவின் வலதுகரமும் வல்லமையுள்ள புயமும் அவருடைய பெலத்திற்கும் சக்திக்கும் அடையாளமாக இருக்கின்றன. (உபாகமம் 32:40; எசேக்கியேல் 20:5, NW) இவற்றின்மேல் ஆணையிடுவது அவர் சீயோனின் நிலையை மாற்ற தீர்மானமாயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பொ.ச.மு. 607-⁠ல், சீயோனை அதன் எதிரிகள் அழிக்கவும் அதன் உடைமைகளைக் கொள்ளையிடவும் யெகோவா அனுமதிக்கிறார். (உபாகமம் 28:33, 51) ஆனால் இப்போதோ, சீயோனின் உடைமைகள் அனைத்தையும் உரிமை உள்ளோர் மட்டுமே அனுபவிப்பர்.​—உபாகமம் 14:22-27.

18இந்த வாக்குறுதியின் நவீன நாளைய நிறைவேற்றத்தில், மீண்டும் நிலைநாட்டப்பட்ட யெகோவாவின் ஜனங்கள் அபரிமிதமான ஆவிக்குரிய செழிப்பை அனுபவிக்கின்றனர். அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாய் அனுபவிக்கின்றனர். அதாவது கிறிஸ்தவ சீஷர்களின் அதிகரிப்பையும் அபரிமிதமான ஆவிக்குரிய உணவையும் அனுபவிக்கின்றனர். (ஏசாயா 55:1, 2; 65:14) தம்முடைய ஜனங்கள் விசுவாசத்தோடு இருப்பதால் அவர்களுடைய ஆவிக்குரிய செழிப்பை எதிரிகள் தடை செய்யாதபடி அல்லது முழுமனதோடு அவர்கள் செய்யும் சேவையின் பலனை கெடுத்துப் போடாதபடி யெகோவா பார்த்துக்கொள்கிறார். யெகோவாவின் சேவையில் செய்யும் எந்த வேலையுமே வீண் போகாது.​—மல்கியா 3:10-12; எபிரெயர் 6:⁠10.

19புதிய பெயர் நேர்மை இருதயமுடைய ஜனங்களை யெகோவாவின் அமைப்பினிடம் கவர்ந்திழுக்கிறது. திரளானோர் இந்த அமைப்பிற்குள் வருகின்றனர், அவர்களுக்காக வழி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சொல்கிறது: “செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்; மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்; அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்; கற்களை அகற்றுங்கள்; மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.” (ஏசாயா 62:10, பொ.மொ.) முதல் நிறைவேற்றத்தில், எருசலேமுக்கு திரும்பி வருவதற்காக பாபிலோனிய நகரங்களின் வாயில்களைக் கடந்து வருவதை ஒருவேளை இந்த அழைப்பு குறிக்கலாம். தாய்நாடு திரும்பி வருவோர் பயணத்தை சுலபமாக்க பாதையிலுள்ள கற்களை அகற்ற வேண்டும்; வழியை அடையாளம் காண்பிக்க கொடியைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.​—ஏசாயா 11:⁠12.

20கடவுளுடைய சேவைக்காக அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1919 முதல் தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அவர்கள் ‘பரிசுத்த வழியிலே’ நடக்கின்றனர். (ஏசாயா 35:8) மகா பாபிலோனை விட்டு வெளியே வந்து, ஆவிக்குரிய நெடுஞ்சாலையில் முதலாவது நடந்தவர்கள் இவர்களே. (ஏசாயா 40:3; 48:20) தம் வல்லமையான செயல்களை அறிவிப்பதிலும் பரிசுத்த வழியை மற்றவர்களுக்கு காண்பிப்பதிலும் முன்நின்று செயல்படும் சிலாக்கியத்தை கடவுள் இவர்களுக்கு கொடுத்தார். முக்கியமாக அவர்களது நன்மைக்காகவே பாதையிலிருந்து கற்கள், அதாவது தடையாக இருக்கும் எல்லா முட்டுக்கட்டைகளும் நீக்கப்பட்டன. (ஏசாயா 57:14) கடவுளுடைய நோக்கங்களையும் போதனைகளையும் அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஜீவனுக்கு போகும் பாதையில் தடைக்கற்களாக இருப்பது பொய் நம்பிக்கைகளே. ஆனால், யெகோவாவின் வார்த்தையோ ‘கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.’ இதன் உதவியால், யெகோவாவை சேவிக்க விரும்பும் ஜனங்களை தடுமாறி விழச் செய்யும் தடைக்கற்களை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நொறுக்கினர்.​—எரேமியா 23:⁠29.

21பொ.ச.மு. 537-⁠ல், யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்புவதற்கும் மறுபடியும் ஆலயத்தைக் கட்டுவதற்கும் எருசலேம் கொடியாய் அல்லது அடையாளமாய் இருந்தது. (ஏசாயா 49:22) 1919-⁠ல், அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் பொய் மத அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டபோது, நோக்கம் ஏதுமின்றி அவர்கள் அலையவில்லை. அவர்கள் போய் சேர வேண்டிய இடத்தை நன்கு அறிந்திருந்தார்கள். ஏனென்றால், யெகோவா அவர்களுக்காக ஓர் கொடியை நிறுத்தியிருந்தார். அது என்ன? அது, ஏசாயா 11:10-⁠ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள அதே கொடிதான். அது இவ்வாறு அறிவிக்கிறது: “அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்.” இந்த வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவுக்குப் பொருத்துகிறார். (ரோமர் 15:8, 12) ஆம், பரலோக சீயோன் மலையிலே ராஜாவாக ஆளுகை செய்யும் கிறிஸ்து இயேசுவே அந்தக் கொடி!​—எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:⁠1.

22மகா உன்னத கடவுளை ஐக்கியமாக வணங்குவதற்காக, அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் திரள் கூட்டத்தாரும் இயேசு கிறிஸ்துவிடம் கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர். அவருடைய ஆட்சி யெகோவாவின் சர்வலோக அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்கிறது. அதுமட்டுமல்ல, பூமியின் எல்லா தேசங்களிலிருந்தும் வரும் நேர்மை இருதயமுள்ள ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தைப் பொழிகிறது. நாம் ஒவ்வொருவரும் அவரைப் போற்றி துதிப்பதில் சேர்ந்துகொள்ள இது நல்ல காரணமல்லவா?

“உன் இரட்சிப்பு வருகிறது”!

23மனைவி போன்ற தம் அமைப்புக்கு யெகோவா கொடுக்கும் புதிய பெயர், அதன் பிள்ளைகளுடைய நித்திய இரட்சிப்போடு சம்பந்தப்பட்டது. ஏசாயா எழுதுகிறார்: “நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்.” (ஏசாயா 62:11) பாபிலோன் வீழ்ச்சியுற்றபோது யூதர்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது; அவர்கள் தாயகம் திரும்பினர். ஆனால் இந்த வார்த்தைகள் இதைவிடப் பெரிய நிறைவேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன. யெகோவாவின் அறிவிப்பு, எருசலேமைக் குறித்து சகரியா உரைத்த தீர்க்கதரிசனத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது: “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.”​—சகரியா 9:⁠9.

24இயேசு தண்ணீரில் முழுக்காட்டுதல் பெற்று, கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, எருசலேமுக்கு சென்று ஆலயத்தை சுத்திகரித்தார். (மத்தேயு 21:1-5; யோவான் 12:14-16) இன்று, கடவுள் மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் யெகோவாவிடமிருந்து இரட்சிப்பை அருளுபவர் இயேசு கிறிஸ்துவே. 1914-⁠ல், அரசுரிமையைப் பெற்றதிலிருந்து யெகோவாவின் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியாகவும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறவராகவும் இருப்பவர் இயேசுவே. இதற்கு மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 1918-⁠ல், பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தை அவர் சுத்திகரித்தார். (மல்கியா 3:1-5) இயேசு ஒரு கொடியாக உயர்த்தப்பட்டது, மேசியானிய ராஜ்யத்திற்கு ஆதரவாக பூமியின் எல்லா பாகங்களிலிருந்தும் ஜனங்கள் திரளாக கூட்டிச் சேர்க்கப்பட ஆரம்பித்ததை குறித்தது. பூர்வ நாட்களில் நடந்தது போலவே, 1919-⁠ல் தேவனுடைய இஸ்ரவேல் மகா பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டபோது “இரட்சிப்பு” வந்தது. சுயதியாக மனப்பான்மையோடு உழைக்கும் இந்த அறுவடையின் வேலையாட்களுக்கு காத்திருக்கும் “பலன்” அல்லது “பிரதிபலன்,” பரலோகத்தில் அழியாமைக்குரிய வாழ்க்கை அல்லது பூமியில் நித்திய ஜீவன். விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும் அனைவரும் “கர்த்தருக்குள் . . . படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று” நம்பிக்கையாக இருக்கலாம்.​—1 கொரிந்தியர் 15:⁠58.

25யெகோவாவின் பரலோக அமைப்புக்கும் அதன் அபிஷேகம் செய்யப்பட்ட பூமிக்குரிய பிரதிநிதிகளுக்கும் அவர்களுடன் கூட்டுறவு கொள்ளும் எல்லாருக்கும் எப்படிப்பட்ட பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது! (உபாகமம் 26:19) ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “பரிசுத்த ஜனமென்றும் யெகோவாவினால் மீட்கப்பட்டவர்களென்றும் அவர்களுக்குப் பெயரிடுவார்கள். நீயோ தேடிக்கொள்ளப்பட்டவள் என்றும் கைவிடப்படாத நகரம் என்றும் பெயர்பெறுவாய்.” (ஏசாயா 62:12, தி.மொ.) தேவனுடைய இஸ்ரவேலால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ‘மேலான எருசலேம்’ ஒருசமயம் கைவிடப்பட்டதுபோல உணர்ந்தது. ஆனால், இனி ஒருபோதும் அவ்வாறு உணராது. யெகோவாவின் ஜனங்கள் எப்போதும் அவருடைய பாதுகாப்பை பெறுவர்; அவருடைய அங்கீகார புன்முறுவலை தொடர்ந்து அனுபவிப்பர்.

[அடிக்குறிப்பு]

a பைபிள் தீர்க்கதரிசனத்தில், புதிய ஸ்தானத்தையோ அல்லது சிலாக்கியத்தையோ ‘புதிய பெயர்’ அர்த்தப்படுத்தலாம்.​—⁠வெளிப்படுத்துதல் 2:17; 3:⁠12.

[கேள்விகள்]

1. ஏசாயா 62-⁠ம் அதிகாரத்தில் என்ன உறுதி பதிவு செய்யப்பட்டிருக்கிறது?

2. எந்த விதத்தில் சீயோனுக்கு மறுபடியும் யெகோவா தயவு காண்பிக்கிறார்?

3. (அ) கடைசியில் பூமிக்குரிய சீயோனை யெகோவா ஏன் புறக்கணித்தார், அந்த இடத்தை எது நிரப்பியது? (ஆ) மெய் மதத்திற்கு என்ன நேரிடுகிறது, எப்போது நேரிடுகிறது, நாம் இப்போது எந்த காலப்பகுதியில் வாழ்கிறோம்?

4, 5. (அ) சீயோனும் அதன் பிள்ளைகளும் இன்று யாருக்கு அடையாளமாக இருக்கின்றனர்? (ஆ) சீயோனை யெகோவா எந்த விதத்தில் பயன்படுத்தி, அதன் ‘இரட்சிப்பை எரிகிற தீவட்டியாக்கி’ இருக்கிறார்?

6. சீயோனுக்காக யெகோவா என்ன செய்யப் போகிறார்?

7. சீயோனின் புதிய பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது?

8. சீயோனை எந்த விதங்களில் யெகோவா மகிமைப்படுத்தியிருக்கிறார்?

9. சீயோனுக்கு ஏற்படும் மாற்றத்தை விவரிக்கவும்.

10. (அ) தேவனுடைய இஸ்ரவேல் எப்படி மாற்றப்பட்டது? (ஆ) தேவனுடைய இஸ்ரவேலின் “தேசம்” எது?

11. யூதர்கள் எப்படி தங்கள் தாயை மணவாட்டியாக ஏற்றுக்கொள்கின்றனர்?

12. (அ) அபிஷேகம் செய்யப்பட்டோரும் தம்முடைய மணவாட்டி சபையின் பாகமாக இருக்கின்றனர் என்பதை யெகோவா எந்த விதங்களில் நிரூபித்திருக்கிறார்? (ஆ) யெகோவா தம்முடைய ஜனங்களிடம் நடந்துகொள்ளும் விதம் திருமண ஏற்பாட்டிற்கு இன்று எப்படி ஒப்பற்ற மாதிரியாக இருக்கிறது? (பக்கம் 342-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

13, 14. (அ) பூர்வ காலங்களில், எருசலேம் எவ்வாறு பாதுகாப்பளிக்கும் பட்டணமாக ஆகிறது? (ஆ) நவீன காலங்களில், சீயோன் எவ்வாறு ‘பூமியில் புகழ்ச்சியாகி’ உள்ளது?

15. காவற்கார வகுப்பாரும் அவர்களுடைய கூட்டாளிகளும் எவ்வாறு இடைவிடாமல் யெகோவாவுக்கு சேவை செய்கின்றனர்?

16. யெகோவாவின் ஊழியர்கள் எந்த விதத்தில் ‘அவரை அமைதியாயிருக்க விடமாட்டார்கள்’?

17, 18. (அ) சீயோனின் குடிகள் தங்கள் உழைப்பின் பலனை எந்த விதத்தில் அனுபவிக்கலாம்? (ஆ) இன்று யெகோவாவின் ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை எவ்வாறு அனுபவிக்கின்றனர்?

19, 20. (அ) எருசலேமுக்குத் திரும்பும் யூதர்களுக்கு எப்படி பாதை சரி செய்யப்படுகிறது? (ஆ) நவீன காலங்களில், யெகோவாவின் அமைப்புக்குள் வரும் சாந்தகுணமுடையோருக்கு எப்படி பாதை சரி செய்யப்பட்டிருக்கிறது?

21, 22. பொய் மதத்தை விட்டு வெளியே வருவோருக்கு என்ன கொடியை யெகோவா உயர்த்தியுள்ளார், அது நமக்கு எப்படி தெரியும்?

23, 24. கடவுளில் விசுவாசம் வைப்போருக்கு இரட்சிப்பு எப்படி கிடைக்கிறது?

25. யெகோவாவின் ஜனங்களுக்கு என்ன உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது?

[பக்கம் 342-ன் பெட்டி]

விவாகத்திற்கு ஒப்பற்ற மாதிரி

விவாகம் செய்துகொள்வோருக்கு, அந்த உறவைக் குறித்து சொந்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் கடவுளுடைய எதிர்பார்ப்புகள் என்ன? விவாகம் எனும் ஏற்பாடே கடவுளால் ஆரம்பிக்கப்பட்டது. அப்படியானால், அதற்கான அவருடைய நோக்கம் என்ன?

விவாகத்தை கடவுள் எப்படி கருதுகிறார் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு காரியம், இஸ்ரவேல் தேசத்தோடு அவர் வைத்திருந்த உறவாகும். அதை விவாக உறவிற்கு ஒப்பிட்டு ஏசாயா குறிப்பிடுகிறார். (ஏசாயா 62:1-5) யெகோவா தேவன் ஒரு ‘கணவனாக’ தம் ‘மணவாட்டிக்கு’ என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அவளை பாதுகாத்து பரிசுத்தம் பண்ணுகிறார். (ஏசாயா 62:6, 7, 12) அவளைக் கனப்படுத்தி, மதிக்கிறார். (ஏசாயா 62:3, 8, 9) அவளில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்; அவளுக்கு புதிய பெயர்களை கொடுப்பதிலிருந்து இது தெரிகிறது.​—⁠ஏசாயா 62:4, 5, 12.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், கிறிஸ்துவுக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கும் இருக்கும் உறவை கணவன் மனைவிக்கு இடையே நிலவும் உறவுக்கு ஒப்பிட்டு பவுல் எழுதுகிறார். யெகோவாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே இருந்த உறவை விளக்கும் ஏசாயாவின் விவரிப்பையே பவுலின் இந்த வார்த்தைகளும் எதிரொலிக்கின்றன.​—⁠எபேசியர் 5:21-27.

இயேசுவுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் இருக்கும் உறவையே தங்கள் விவாக உறவிலும் பின்பற்றுமாறு பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். யெகோவா இஸ்ரவேலிடமாகவும் கிறிஸ்து சபையிடமாகவும் காண்பித்த அன்பிலும் மிகுதியான அன்பு வேறே ஏதும் இருக்க முடியாது. கிறிஸ்தவர்களுக்கிடையே இருக்க வேண்டிய வெற்றிகரமான, சந்தோஷமான உறவுக்கு இந்த அடையாள அர்த்தமுள்ள உறவுகள் ஒப்பற்ற மாதிரியாக இருக்கின்றன.​—⁠எபேசியர் 5:28-33.

[பக்கம் 339-ன் படம்]

பரலோக சீயோனை புதிய பெயரால் யெகோவா அழைப்பார்

[பக்கம் 347-ன் படங்கள்]

நவீன காலங்களில், யெகோவாவின் காவற்கார வகுப்பார் அமைதியாயிருக்கவில்லை