Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ஜனங்களுக்கு ஆறுதல்

கடவுளுடைய ஜனங்களுக்கு ஆறுதல்

அதிகாரம் பன்னிரண்டு

கடவுளுடைய ஜனங்களுக்கு ஆறுதல்

ஏசாயா 51:1-23

எழுபது வருடங்கள்​—⁠மனிதனின் சராசரி வாழ்நாள் காலம் அது. யூதாவின் குடிகள் பாபிலோனில் கைதிகளாக இருக்கப்போவதும் இதே காலப்பகுதிக்குத்தான். (சங்கீதம் 90:10; எரேமியா 25:11; 29:10) கைதிகளாக கொண்டுபோகப்படும் இஸ்ரவேலர்களில் பெரும்பாலானோர் வயதாகி, பாபிலோனிலேயே மரிப்பர். அவர்களுடைய எதிரிகளின் ஏளன, பழிச் சொற்கள் அவர்களுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின் பெயரைத் தாங்கிய அந்த நகரம் அவ்வளவு காலம் பாழாய் கிடப்பதால், அவருக்கு ஏற்படும் நிந்தையையும் சற்று யோசித்துப் பாருங்கள். (நெகேமியா 1:9; சங்கீதம் 132:13; 137:1-3) சாலொமோனால் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது கடவுளுடைய மகிமையால் நிரப்பப்பட்ட அருமையான ஆலயமும் இனி இராது. (2 நாளாகமம் 7:1-3) எப்பேர்ப்பட்ட இருண்ட எதிர்காலம்! ஆனால், மீண்டும் நிலைநாட்டுதல் பற்றிய தீர்க்கதரிசனத்தை ஏசாயா மூலமாக யெகோவா கொடுக்கிறார். (ஏசாயா 43:14; 44:26-28) ஏசாயா 51-⁠ம் அதிகாரத்தில், ஆறுதல் மற்றும் உறுதியளித்தல் சம்பந்தமாக இன்னும் சில தீர்க்கதரிசனங்களை நாம் வாசிக்கிறோம்.

2தங்கள் இருதயங்களை தம்மிடம் திருப்பும் யூதாவின் குடிகளுக்கு யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் [“யெகோவாவை,” NW] தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.” (ஏசாயா 51:1அ) ‘நீதியைப் பின்பற்றுதல்’ என்பது செயல்படுவதைக் குறிக்கிறது. ‘நீதியைப் பின்பற்றுவோர்,’ தாங்கள் கடவுளுடைய ஜனங்கள் என வெறுமனே பெருமை பாராட்டிக்கொள்ள மாட்டார்கள். நீதியைக் கடைப்பிடிப்பதற்காகவும் கடவுளுடைய சித்தத்திற்கிசைய வாழ்வதற்காகவும் வைராக்கியமாக செயல்படுவார்கள். (சங்கீதம் 34:15; நீதிமொழிகள் 21:21) யெகோவாவையே நீதிக்கு ஆதாரமாக நம்புவார்கள்; அவர்கள் ‘யெகோவாவைத் தேடுவார்கள்.’ (சங்கீதம் 11:7; 145:17) யெகோவா யாரென்றோ அவரிடம் எப்படி ஜெபிப்பது என்றோ இதுவரை அவர்களுக்கு தெரியாது என்பதல்ல இதன் அர்த்தம். மாறாக, அவரை வணங்கி, அவரிடம் ஜெபம் செய்து, தங்களுடைய செயல்கள் எல்லாவற்றிலும் அவருடைய உதவியை நாடுவதன் மூலம் அவரிடம் நெருங்கி வர முயல்வார்கள் என்பதையே இது குறிக்கிறது.

3என்றாலும், உண்மையில் நீதியைப் பின்பற்றுகிறவர்கள் யூதாவில் வெகு சிலரே. இது அவர்களை உற்சாகமிழக்கவும் மனந்தளரவும் செய்யலாம். எனவே, கற்சுரங்கத்தின் உதாரணத்தை சொல்லி, யெகோவா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்: “நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.” (ஏசாயா 51:1ஆ, 2) ஆபிரகாம் எனும் ‘கன்மலையிலிருந்தே’ யூதர்கள் வெட்டி எடுக்கப்பட்டனர். சரித்திர புருஷராகிய இவரைக் குறித்து இஸ்ரவேல் தேசம் பெருமையடித்துக்கொள்கிறது. (மத்தேயு 3:9; யோவான் 8:33, 39) இவர் அத்தேசத்தின் முற்பிதா. சாராளே “துரவின் குழி.” அவளுடைய கர்ப்பத்திலிருந்து இஸ்ரவேலின் தகப்பனாகிய ஈசாக்கு பிறந்தார்.

4ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளைகள் இல்லை. இருவருமே, குழந்தை பிறப்பிக்கும் வயதை கடந்தவர்களாக இருந்தனர். என்றாலும், ஆபிரகாமை ஆசீர்வதித்து, ‘மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவதாக’ யெகோவா வாக்குறுதி அளித்தார். (ஆதியாகமம் 17:1-6, 15-17) பிள்ளை பிறப்பிக்கும் சக்தியை ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் கடவுள் மீண்டும் அருளியதால் வயதான காலத்தில் அவர்கள் ஒரு பிள்ளையை பெற்றெடுத்தனர். அந்தப் பிள்ளையிலிருந்துதான் கடவுளுடைய உடன்படிக்கையின் தேசம் உருவானது. யெகோவா அந்த ஒரே மனிதனை பெரிய தேசத்திற்கே தகப்பனாக ஆக்கினார். அத்தேசத்தார் வானத்தின் நட்சத்திரங்களைப்போல் திரளாக பெருகினர். (ஆதியாகமம் 15:5; அப்போஸ்தலர் 7:5) தூரதேசத்திலிருந்து ஆபிரகாமை அழைத்துவந்து, அவரை மிகப் பெரிய தேசமாக்க யெகோவாவினால் முடிந்தது. அப்படியென்றால், உண்மையுள்ள சிலரை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தாயகத்திற்கு அழைத்துவந்து, மறுபடியும் ஒரு பெரிய தேசமாக உருவாக்குவதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவும் அவரால் நிச்சயம் முடியும். ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறின. அதுபோலவே, கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றுவார்.

5ஏசாயா 51:1, 2-⁠ல் அடையாளமாக சொல்லப்பட்டுள்ள கற்சுரங்கம் மற்றொரு விதத்திலும் பொருத்தப்படலாம். இஸ்ரவேலை ஜெநிப்பித்த “கன்மலை” எனவும், ‘[இஸ்ரவேலைப்] பெற்ற தேவன்’ எனவும் உபாகமம் 32:18-⁠ல் யெகோவா அழைக்கப்படுகிறார். இந்த வசனத்தில் இரண்டாவதாக சொல்லப்பட்ட சொற்றொடரில் உள்ள எபிரெய வினைச்சொல்தான் ஏசாயா 51:2-⁠லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாராள் இஸ்ரவேலை பெற்றெடுத்தாள் என்பதை குறிக்கும் சொல் அது. எனவே, தீர்க்கதரிசன மாதிரியில் ஆபிரகாம், பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவிற்குப் படமாக இருக்கிறார். ஆபிரகாமின் மனைவி சாராளோ, ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் சர்வலோக பரலோக அமைப்பிற்கு படமாக இருக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் கடவுளுடைய மனைவியாக அல்லது ஸ்திரீயாக இது குறிப்பிடப்படுகிறது. (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:1, 5) ஏசாயா தீர்க்கதரிசனத்தில் வரும் இந்த வார்த்தைகளின் இறுதி நிறைவேற்றத்தில், அந்தக் ‘கன்மலையிலிருந்து’ உருவானது ‘தேவனுடைய இஸ்ரவேல்.’ பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று உருவான, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையே இது. இந்த புத்தகத்தின் முந்தைய அதிகாரங்களில் சிந்தித்ததுபோல, இந்த தேசம் 1918-⁠ல் பாபிலோனிய சிறையிருப்பிற்குள் சென்றது. ஆனால் 1919-⁠ல் ஆவிக்குரிய செழிப்பான நிலைமைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.​—கலாத்தியர் 3:26-29; 4:28; 6:⁠16.

6எருசலேம் அல்லது சீயோனை ஒரு பெரிய தேசமாக்குவதாக வாக்குறுதி அளிப்பதன் மூலமாக மட்டுமே யெகோவா ஆறுதல் தருவதில்லை. அதைத்தான் அடுத்ததாக வாசிக்கிறோம்: “கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தர வெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீத சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.” (ஏசாயா 51:3) 70 வருட பாழ்க்கடிப்பின்போது யூத தேசம் முட்புதர்களும் கள்ளிச்செடிகளும் மற்ற காட்டுச் செடிகளும் மண்டிக்கிடக்கும் வனாந்தரமாகும். (ஏசாயா 64:10; எரேமியா 4:26; 9:10-12) ஆனால் அந்த எழுபது வருடங்கள் முடிந்த பிறகோ நீர் வளம் பொருந்திய விளைச்சல் மிக்க நிலங்களும் பழத்தோட்டங்களும் நிறைந்த ஏதேன் தோட்டமாக தேசம் மாற்றப்படும். எனவே, மீண்டும் நிலைநாட்டுதல் என்பது யூதாவை வெறுமனே குடியிருப்புள்ள இடமாக்குவதை மட்டுமல்ல, அதன் நிலத்தை வளமாக்குவதையும் குறிக்கிறது. அப்போது நிலம் களிகூருவதுபோல் தோன்றும். சிறையிருப்பின் காலத்தில் இருந்த பாழான நிலையோடு ஒப்பிட, அப்போது நிலம் பரதீஸாக காட்சியளிக்கும். தேவனுடைய இஸ்ரவேலின் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1919-⁠ல் ஆவிக்குரிய கருத்தில் இப்படிப்பட்ட பரதீஸில்தான் பிரவேசித்தனர்.​—ஏசாயா 11:6-9; 35:1-7.

யெகோவாவை நம்புவதற்கு காரணங்கள்

7இன்னும் கவனமாக செவிகொடுக்க வேண்டியதை உணர்த்தி, யெகோவா சொல்கிறார்: “என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் [“சட்டம்,” NW] என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.”​—ஏசாயா 51:4, 5.

8செவிகொடுங்கள் என யெகோவா அழைப்பது, அவருடைய செய்தியை வெறுமனே கேட்க வேண்டுமென அர்த்தப்படுத்துவதில்லை. கேட்பதன்படி நடக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு உன்னிப்பாக கேட்பதையே அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 49:1; 78:1) ஆலோசனை, நீதி, இரட்சிப்பு ஆகிய அனைத்திற்கும் பிறப்பிடம் யெகோவாவே என்பதை அந்த தேசம் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீக அறிவொளியின் ஊற்றுமூலம் அவர் ஒருவரே. (2 கொரிந்தியர் 4:6) மனிதகுலத்தின் மகா நியாயாதிபதியும் அவரே. யெகோவாவிடமிருந்து வரும் சட்டங்களையும் பிரமாணங்களையும் பின்பற்றுவோருக்கு அவை வெளிச்சமாக இருக்கின்றன.​—சங்கீதம் 43:3; 119:105; நீதிமொழிகள் 6:⁠23.

9இவை அனைத்தும் கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களுக்கு மட்டுமல்ல, தீவுகள் உட்பட, பூமியின் எல்லா திக்கிலும் இருக்கும் நேர்மை இருதயமுள்ளோருக்கும் பொருந்தும். யெகோவாவிலும், உண்மையுள்ள தம் ஊழியர்களின் சார்பாக நடவடிக்கை எடுத்து அவர்களைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் திறமையிலும் அவர்கள் வைக்கும் நம்பிக்கை பொய்த்துப்போகாது. அவருடைய சக்தி அல்லது வல்லமையை குறிக்கும் அவரது புயம் உறுதியானது; யாரும் அதை தடுத்து நிறுத்த முடியாது. (ஏசாயா 40:10; லூக்கா 1:51, 52) இன்றும், தேவனுடைய இஸ்ரவேலில் மீதியாய் இருப்பவர்களின் மும்முரமான பிரசங்கிப்பு வேலையால் சமுத்திரத்தின் கடைமுனையிலிருக்கும் தீவுகளிலிருப்போர் உட்பட லட்சக்கணக்கானோர் யெகோவாவிடமாக திரும்பி, அவரில் விசுவாசம் வைத்திருக்கின்றனர்.

10பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மையைப் பற்றி யெகோவா அடுத்தபடியாக குறிப்பிடுகிறார். பூமியிலோ பரலோகத்திலோ உள்ள எதுவுமே யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாது. (தானியேல் 4:34, 35) நாம் வாசிக்கிறதாவது: “உங்கள் கண்களை வானங்களுக்கு ஏறெடுத்துப் பாருங்கள், கீழே இருக்கிற பூமியையும் பாருங்கள். வானங்கள் புகையைப்போல் கலைந்துபோகும், பூமி உடையைப்போல் நைந்துபோகும்; அதன் குடிமக்கள் வெறும் கொசுவைப்போல் சாவார்கள். ஆனால் என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும், என் நீதி குலைக்கப்படாது.” (ஏசாயா 51:6, NW) கைதிகளை மறுபடியும் தாயகம் அனுப்புவதற்கு பாபிலோனிய பேரரசர்களின் சட்டம் இடமளிப்பதில்லை. இருந்தபோதிலும், யெகோவா தம் ஜனங்களை இரட்சிப்பதை எதுவுமே தடுக்க முடியாது. (ஏசாயா 14:16, 17) பாபிலோனிய “வானங்கள்” அல்லது அரசாங்கங்கள் தோல்வியைத் தழுவும். பாபிலோனிய ‘பூமியோ,’ அதாவது அந்த அரசாங்கங்களின்கீழ் இருக்கும் குடிமக்களோ படிப்படியாக அழிந்து போவார்கள். ஆம், அப்போது இருந்ததிலேயே மிகவும் வலிமை வாய்ந்த பேரரசும்கூட யெகோவாவின் வல்லமையை எதிர்த்து நிற்கவோ, அவரது இரட்சிப்பின் செயல்களை தடுத்து நிறுத்தவோ முடியாது.

11இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறின என்பதை அறிவது இன்று கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறதல்லவா! ஏன்? ஏனென்றால், எதிர்கால நிகழ்ச்சி ஒன்றை குறிப்பதற்காக இதேபோன்ற பதங்களை அப்போஸ்தலனாகிய பேதுருவும் பயன்படுத்தியுள்ளார். மிக விரைவில் வர இருக்கும் யெகோவாவின் நாளைப் பற்றி அவர் சொன்னார். அந்த நாளில், “வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” எனவும் சொன்னார். (2 பேதுரு 3:12, 13; ஏசாயா 34:4; வெளிப்படுத்துதல் 6:12-14) வலிமை படைத்த தேசங்களும் நட்சத்திரம் போன்ற உயர்வான அதன் ராஜாக்களும் யெகோவாவுக்கு எதிராக வரலாம்; ஆனால், உரிய காலத்தில் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்​—⁠ஒரு கொசுவை நசுக்குவதுபோல் நசுக்கிவிடுவார். (சங்கீதம் 2:1-9) நீதியை நேசிக்கும் மனித சமுதாயத்தை கடவுளுடைய நீதியான அரசாங்கம் மட்டுமே என்றென்றும் ஆளும்.​—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:1-4.

12‘நீதியைப் பின்பற்றுவோரிடம்’ பேசிக் கொண்டிருக்கும் யெகோவா இப்போது சொல்வதாவது: “நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். பொட்டுப்பூச்சி [“அந்துப்பூச்சி,” NW] அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு [“அந்துப்பூச்சி,” NW] அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.” (ஏசாயா 51:7, 8) யெகோவாவில் நம்பிக்கை வைத்து, அவருடைய நீதியை தைரியமாக பின்பற்றுவோர் பழிதூற்றப்படுவர், தூஷிக்கப்படுவர்; ஆனால், இதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அவர்களை நிந்திப்பவர்கள் அழியப் போகிறவர்கள்; ஆட்டுமயிர் அல்லது கம்பளி ஆடையை அந்துப்பூச்சி அரித்துவிடுவதுபோல, இந்த எதிரிகளும் ‘அரிக்கப்பட்டு’ அழிந்துபோவார்கள். a விசுவாசமுள்ள யூதர்களைப் போலவே, இன்றும் உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை எதிர்க்கும் எவருக்குமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நித்தியத்தின் கடவுளாகிய யெகோவாவே அவர்கள் இரட்சிப்பு. (சங்கீதம் 37:1, 2) யெகோவாவின் ஜனங்கள் அவரது எதிரிகளால் நிந்திக்கப்படுவது, அவருடைய ஆவியைப் பெற்றிருப்பதற்கு நிரூபணம்.​—மத்தேயு 5:11, 12; 10:24-31.

13கைதிகளாக இருக்கும் தம் ஜனங்கள் சார்பாக செயல்படும்படி யெகோவாவை அழைப்பதுபோல் ஏசாயா சொல்கிறார்: “எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் [“சமுத்திர மிருகத்தை குத்தியதும்,” NW] நீதானல்லவோ? மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப் பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?”​—ஏசாயா 51:9, 10.

14ஏசாயா மிகவும் பொருத்தமான சரித்திர சம்பவங்களை குறிப்பிடுகிறார். தேசம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும், சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்ததும் ஒவ்வொரு இஸ்ரவேலனும் நன்கு அறிந்திருக்கும் சம்பவங்கள். (யாத்திராகமம் 12:24-27; 14:26-31) இஸ்ரவேலரை தேசத்திலிருந்து அனுப்ப மறுத்த பார்வோனின் ஆட்சியிலிருந்த எகிப்தையே, ‘இராகாபு,’ ‘சமுத்திர மிருகம்’ எனும் பதங்கள் குறிக்கின்றன. (சங்கீதம் 74:13; 87:4; ஏசாயா 30:7; NW) பூர்வ எகிப்து பிரமாண்டமான ஒரு சர்ப்பத்தைப்போல இருந்தது. நைல் நதியின் டெல்டா பகுதி அதன் தலைபோலவும், அதிலிருந்து செழிப்பான நைல் பள்ளத்தாக்கு வரை பல நூறு மைலுக்கு நீண்ட உடல்போலவும் காட்சி அளித்தது. (எசேக்கியேல் 29:3, NW) ஆனால், யெகோவா இதன்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்தபோது, இந்த மிருகம் துண்டிக்கப்பட்டது. சிவந்த சமுத்திரத்தில் அதன் படை அழிக்கப்பட்டபோது அது குத்தப்பட்டு, படுமோசமாக காயப்படுத்தப்பட்டு, பெலனற்று போனது. எகிப்தை யெகோவா தண்டித்து தமது கரத்தின் பலத்தைக் காட்டினார். அப்படியானால், பாபிலோனில் சிறைப்பட்டிருக்கும் தம் ஜனங்களுக்காக கடவுள் போரிடாமல் இருப்பாரா?

15பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்படுவதை குறித்து தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக் களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” (ஏசாயா 51:11) பாபிலோனில் எவ்வளவுதான் துயரமான நிலையில் இருந்தாலும், யெகோவாவின் நீதியை தேடுபவர்களுக்கு ஆனந்தமான எதிர்காலம் காத்திருக்கிறது. சஞ்சலமோ தவிப்போ இல்லாத காலம் வரும். விடுவிக்கப்பட்டவர்களின் அல்லது மீட்கப்பட்டவர்களின் உதடுகளில் ஆனந்தக் களிப்பும் மகிழ்ச்சியும் சந்தோஷமும்தான் ஒலிக்கும். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளின் நவீன நாளைய நிறைவேற்றமாக, 1919-⁠ல் தேவனுடைய இஸ்ரவேலர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தங்களுடைய ஆவிக்குரிய தேசத்திற்கு ஆனந்தக் களிப்போடே திரும்பினார்கள். அந்தக் களிப்பு இதுநாள் வரையாக நீடித்திருக்கிறது.

16யூதர்களை மீட்பதற்காக கொடுக்கப்படும் கிரயம் என்ன? யெகோவா மீட்கும்பொருளாக எதைக் கொடுப்பார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது: “உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.” (ஏசாயா 43:1-4) இது பிறகு நடக்கும். பாபிலோனை வென்று, கைதிகளாக இருக்கும் யூதர்களை பெர்சிய பேரரசு விடுவிக்கும். அதன் பிறகு, எகிப்து, எத்தியோப்பியா, சேபா ஆகிய தேசங்களை அது வெல்லும். இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக இந்த தேசங்கள் அதற்குக் கொடுக்கப்படும். நீதிமொழிகள் 21:18-⁠ல் சொல்லப்பட்டுள்ள நியமத்திற்கு இது இசைவாக உள்ளது: “நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.”

மேலுமான உறுதி

17யெகோவா மேலுமாக தம் ஜனங்களுக்கு உறுதியளிக்கிறார்: “நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? இடுக்கண் செய்கிறவன் [“சுற்றி வளைக்கிறவன்,” NW] அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? [உன்னை] இடுக்கண் செய்கிறவனுடைய [“சுற்றி வளைக்கிறவனுடைய,” NW] உக்கிரம் எங்கே?” (ஏசாயா 51:12, 13) பல ஆண்டுகால சிறையிருப்பு அவர்களுக்கு காத்திருக்கிறது. இருந்தாலும், பைபிள் பதிவின்படி மூன்றாம் உலக வல்லரசாகிய பாபிலோனின் சீற்றத்தைக் கண்டு அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அந்த தேசம் கடவுளுடைய ஜனங்களை வென்று, அவர்களை ‘சுற்றி வளைக்க’ அல்லது அவர்கள் தப்பிக்க முடியாதபடி வழியை மறிக்க முயலும் என்பது உண்மைதான். என்றாலும், கோரேசின் படைக்கு பாபிலோன் இரையாகும் என யெகோவா முன்னறிவித்திருப்பது உண்மையுள்ள யூதர்களுக்கு தெரியும். (ஏசாயா 44:8, 24-28) படைப்பாளராகிய யெகோவா நித்தியத்தின் கடவுள். ஆனால் பாபிலோனின் குடிகளோ, வறட்சியான காலத்தில் சுள்ளென அடிக்கும் சூரியனின் கதிர்கள் பட்டு உலர்ந்துபோகும் புல்லைப் போன்றவர்கள். அப்போது அவர்களுடைய சீற்றமும் பயமுறுத்தலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டிருக்கும். ஆகவே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய யெகோவாவை மறந்துவிட்டு, மனிதனுக்கு பயப்படுவது எவ்வளவு முட்டாள்தனம்!

18யெகோவாவின் ஜனங்கள் சிறிது காலத்திற்கு “சங்கிலிகளால் கட்டுண்டு குனிந்திருப்பவன்” போல கைதிகளாக இருப்பார்கள். என்றாலும், அவர்களுடைய விடுதலை திடீரென வரும். ஷியோலில்​—⁠படுகுழியிலே​—⁠உயிரற்றவர்களாக விடப்பட மாட்டார்கள்; அதாவது, பாபிலோனிலேயே கைதிகளாக கொல்லப்பட மாட்டார்கள் அல்லது பட்டினியால் மடிந்துபோக மாட்டார்கள். (சங்கீதம் 30:3; 88:3-5) யெகோவா அவர்களுக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “சங்கிலிகளால் கட்டுண்டு குனிந்திருப்பவன் விரைவில் விடுவிக்கப்படுவது நிச்சயம், ஆகவே அவன் செத்து படுகுழிக்கு போகமாட்டான், அவனுக்கு அப்பம் இல்லாமல் போகாது.”​—ஏசாயா 51:⁠14, NW.

19சீயோனை மேலுமாக ஆறுதல்படுத்தி, யெகோவா தொடருகிறார்: “உன் தேவனாயிருக்கிற கர்த்தர் [“யெகோவா,” NW] நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய்ச் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] என்கிற நாமமுள்ளவர். நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.” (ஏசாயா 51:15, 16) சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தி அடக்கும் வல்லமை கடவுளுக்கு இருப்பதைப் பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. (யோபு 26:12; சங்கீதம் 89:9; எரேமியா 31:35) இயற்கை சக்திகளை அவர் முழுவதுமாக கட்டுப்படுத்த வல்லவர். எகிப்திலிருந்து தம் ஜனங்களை விடுவித்தபோது இதை நிரூபித்துக் காட்டினார். அப்படிப்பட்ட வல்லமைமிக்க ‘சேனைகளின் யெகோவாவோடு’ எந்த விதத்திலாகிலும் யாரையாவது ஒப்பிட முடியுமா?​—சங்கீதம் 24:10, NW.

20யூதர்கள் இன்னும் கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களாகவே இருக்கின்றனர். எனவே, தாயகத்திற்குத் திரும்பிவந்து, மறுபடியும் தமது சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வார்கள் என யெகோவா அவர்களுக்கு உறுதியளிக்கிறார். அப்போது அவர்கள் எருசலேம் நகரத்தையும் அதன் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவார்கள். மேலும், மோசே மூலம் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையில் உட்பட்டுள்ள எல்லா பொறுப்புகளையும் மறுபடியும் ஏற்று செய்வார்கள். நாடு திரும்பும் இஸ்ரவேலர்களும் அவர்களுடைய கால்நடைகளும் மறுபடியும் தேசத்தில் குடியேறும்போது, ஒரு “புதிய பூமி” உருவாகும். அதை ‘புதிய வானங்கள்’ அதாவது புதிய அரசாங்கம் ஆளும். (ஏசாயா 65:17-19; ஆகாய் 1:1, 14) அப்போது, “நீ என் ஜனமென்று” யெகோவா மீண்டும் சீயோனிடம் சொல்வார்.

செயல்பட ஓர் அழைப்பு

21சீயோனுக்கு உறுதியளித்த பிறகு, செயல்படும்படி அதற்கு ஓர் அழைப்பையும் யெகோவா விடுக்கிறார். துயரங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவை அந்த தேசம் ஏற்கெனவே அடைந்துவிட்டதுபோல, அவர் சொல்கிறார்: “எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.” (ஏசாயா 51:17) இக்கட்டின் நிலையிலிருந்து எருசலேம் எழும்ப வேண்டும்; மீண்டும் தன் பழைய நிலையையும் செழிப்பையும் பெற வேண்டும். தெய்வீக கடிந்துகொள்ளுதலின் அடையாள அர்த்தமுள்ள பாத்திரத்திலிருந்து எல்லாவற்றையும் உறிஞ்சி குடித்து முடித்துவிடும் காலம் வரும். அதன்மேல் கடவுளுக்கு இருந்த கோபமெல்லாம் தீர்ந்துவிட்டிருக்கும்.

22என்றாலும், எருசலேம் தண்டிக்கப்படும்போது, அதன் ‘குமாரர்,’ அதாவது அதன் குடிமக்கள் எவருமே அதைத் தடுக்க முடியாது. (ஏசாயா 43:5-7; எரேமியா 3:14) தீர்க்கதரிசனம் சொல்கிறதாவது: “அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.” (ஏசாயா 51:18) அத்தேசத்தின் குடிகளை பாபிலோனியர்கள் வாட்டிவதைப்பர்! “இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல் செய்வேன்? உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல், எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன் தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.”​—ஏசாயா 51:19, 20.

23என்ன பரிதாபமான நிலை எருசலேமுக்கு! ‘பாழ்க்கடிப்பையும், சங்காரத்தையும், பஞ்சத்தையும், பட்டயத்தையும்’ அது அனுபவிக்கும். அதன் “குமாரர்” அதை வழிநடத்தவும் பலப்படுத்தவும் முடியாமல் காப்பாற்ற சக்தியின்றி, நிர்க்கதியாக நிற்பர். தாக்க வரும் பாபிலோனியர்களை விரட்டியடிக்க பலமில்லாமல் தளர்ந்திருப்பர். தெருமுனையிலே, எல்லாரும் பார்க்கும் விதமாக பலமின்றி, சோர்வுற்று, மயங்கி விழுவர். (புலம்பல் 2:19; 4:1, 2) கடவுளுடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அப்போது குடித்திருப்பார்கள்; எனவே, வலையில் சிக்குண்ட மிருகத்தைப்போல பலமிழந்து கிடப்பார்கள்.

24ஆனாலும் இந்த துயர நிலை முடிவுக்கு வரும். ஏசாயா ஆறுதலளிக்கும் விதத்தில் சொல்கிறார்: “ஆகையால், சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள். கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.” (ஏசாயா 51:21-23) எருசலேமை சிட்சித்த பிறகு, யெகோவா அதை மன்னித்து, இரக்கத்தோடே நடத்த தயாராக இருக்கிறார்.

25யெகோவா தம் உக்கிரத்தை இப்போது எருசலேமிடமிருந்து திருப்பி, பாபிலோன்மேல் ஊற்றுவார். பாபிலோன் எருசலேமை இழிவுபடுத்தி, தரைமட்டமாக்கி இருக்கும். (சங்கீதம் 137:7-9) ஆனால், பாபிலோனின் அல்லது அதன் கூட்டாளிகளின் கைகளில் அப்படிப்பட்ட பாத்திரத்திலிருந்து எருசலேம் மறுபடியும் குடிக்க வேண்டி இருக்காது. மாறாக, உக்கிரத்தின் பாத்திரம் எருசலேமிடமிருந்து நீங்கி, அதன் அழிவைப் பார்த்து ஆனந்தம் அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும். (புலம்பல் 4:21, 22) முழுக்க முழுக்க குடித்து வெறித்த நிலையில் பாபிலோன் விழும். (எரேமியா 51:6-8) இதற்கிடையே, சீயோன் எழும்பும்! எப்பேர்ப்பட்ட தலைகீழ் மாற்றம்! இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு நிச்சயம் சீயோனுக்கு ஆறுதலளிக்க வேண்டும். யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமையால் அவருடைய பெயர் பரிசுத்தப்படும் என்பதை அவரது ஊழியர்கள் உறுதியாக நம்பலாம்.

[அடிக்குறிப்பு]

a வெப்பிங் க்ளாத் மாத் எனும் ஒருவகை அந்துப்பூச்சி இங்கு குறிப்பிடப்படுவதாக தெரிகிறது. குறிப்பாக, கிடைக்கும் எதையும் அரித்து தின்றுவிடும் லார்வா பருவத்திலிருக்கும் பூச்சியை இது சுட்டிக்காட்டுகிறது.

[கேள்விகள்]

1. எருசலேமுக்கும் அதன் குடிகளுக்கும் என்ன இருண்ட எதிர்காலம் காத்திருக்கிறது, இருந்தாலும் என்ன நம்பிக்கை கொடுக்கப்படுகிறது?

2. (அ) ஏசாயா மூலம் ஆறுதலின் செய்தியை யெகோவா யாருக்கு கொடுக்கிறார்? (ஆ) உண்மையுள்ள யூதர்கள் எப்படி ‘நீதியை பின்பற்றுகிறார்கள்’?

3, 4. (அ) யூதர்கள் எந்தக் ‘கன்மலையிலிருந்து’ வெட்டி எடுக்கப்பட்டனர், எந்தத் ‘துரவின் குழியிலிருந்து’ தோண்டி எடுக்கப்பட்டனர்? (ஆ) பூர்வீகத்தை நினைவுகூருவது ஏன் யூதர்களுக்கு ஆறுதல் தரும்?

5. (அ) ஆபிரகாமும் சாராளும் யாருக்கு படமாக இருக்கின்றனர்? விளக்கவும். (ஆ) இறுதி நிறைவேற்றத்தில், அந்தக் ‘கன்மலையிலிருந்து’ உருவானது யார்?

6. (அ) யூதா தேசத்திற்கு என்ன காத்திருக்கிறது, மீண்டும் நிலைநாட்டப்படுதல் எதையும் குறிக்கிறது? (ஆ) என்ன நவீன நாளைய நிலைநாட்டுதலை ஏசாயா 51:3 நமக்கு நினைவுபடுத்துகிறது?

7, 8. (அ) தமக்கு செவிகொடுக்க வேண்டும் என யெகோவா அழைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) யெகோவாவுக்கு யூதா செவிகொடுப்பது ஏன் அவசியம்?

9. கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களைத் தவிர, யெகோவாவின் இரட்சிக்கும் செயல்களால் யார் நன்மையடைவர்?

10. (அ) என்ன உண்மையை அரசன் நேபுகாத்நேச்சார் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்? (ஆ) முடிவுக்கு கொண்டு வரப்படும் ‘வானங்களும்,’ ‘பூமியும்’ எவை?

11. பாபிலோனிய ‘வானங்களும்,’ ‘பூமியும்’ முடிவுக்கு கொண்டுவரப்படும் என்ற தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியது ஏன் கிறிஸ்தவர்களுக்கு இன்று உற்சாகத்தை அளிக்கிறது?

12. கடவுளுடைய ஜனங்களை எதிரிகள் பழிதூற்றுகையில் அவர்கள் ஏன் பயப்பட வேண்டாம்?

13, 14. ‘இராகாபு,’ ‘சமுத்திர மிருகம்’ எனும் பதங்கள் எதைக் குறிக்கின்றன, அது எவ்வாறு ‘துண்டிக்கப்பட்டது,’ ‘குத்தப்பட்டது’?

15. (அ) சீயோனின் சஞ்சலமும் தவிப்பும் எப்போது, எப்படி விலகும்? (ஆ) நவீன காலங்களில், தேவனுடைய இஸ்ரவேலின் சஞ்சலமும் தவிப்பும் எப்போது விலகியது?

16. யூதர்களை மீட்பதற்காக கொடுக்கப்படும் கிரயம் என்ன?

17. சீற்றத்தோடு வரும் பாபிலோனைப் பார்த்து யூதர்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

18. சிறிது காலத்திற்கு தம் ஜனங்கள் கைதிகளாக இருப்பார்கள் என்றாலும் யெகோவா என்ன உறுதியளிக்கிறார்?

19. உண்மையுள்ள யூதர்கள் யெகோவாவின் வார்த்தைகளை ஏன் முழுமையாக நம்பலாம்?

20. யெகோவா சீயோனை மீண்டும் நிலைநாட்டும்போது என்ன ‘வானங்களும்,’ ‘பூமியும்’ உருவாகும், என்ன ஆறுதலின் வார்த்தைகளை அவர் சொல்வார்?

21. செயல்படுவதற்கான என்ன அழைப்பை யெகோவா கொடுக்கிறார்?

22, 23. யெகோவாவின் உக்கிரத்தின் பாத்திரத்திலிருந்து குடிக்கும்போது எருசலேமுக்கு என்ன நேரிடும்?

24, 25. (அ) எருசலேமின்மேல் எது மீண்டும் வராது? (ஆ) எருசலேமுக்குப் பிறகு, யெகோவாவின் உக்கிரத்தின் பாத்திரத்தை குடிக்கப்போவது யார்?

[பக்கம் 167-ன் படம்]

பெரிய ஆபிரகாமாகிய யெகோவா என்ற ‘கன்மலையிலிருந்து’ அவருடைய ஜனங்கள் ‘வெட்டி எடுக்கப்பட்டனர்’

[பக்கம் 170-ன் படம்]

அந்துப்பூச்சிகளால் துணி அரிக்கப்படுவது போல, கடவுளுடைய ஜனங்களின் எதிரிகள் இல்லாமல் போவர்

[பக்கம் 176177-ன் படம்]

இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் தம் வல்லமையை யெகோவா நிரூபித்துள்ளார்

[பக்கம் 178-ன் படம்]

உக்கிரத்தின் பாத்திரத்திலுள்ளதை எருசலேம் குடித்த பிறகு, அதை பாபிலோனும் அதன் கூட்டாளிகளும் குடிக்கும்