Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரியுங்கள்’!

‘சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரியுங்கள்’!

அதிகாரம் பதின்மூன்று

‘சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரியுங்கள்’!

ஏசாயா 52:1-12

விடுதலை! கைதிகளாக இருப்போருக்கு இதைவிட சந்தோஷமான விஷயம் ஏதாவது இருக்குமா? விடுவிக்கப்பட்டு மீண்டும் நிலைநாட்டப்படுவதே ஏசாயா புத்தகத்தின் ஒரு முக்கிய கருத்து. எனவே, சங்கீதப் புத்தகத்திற்கு அடுத்ததாக, சந்தோஷத்தையும் களிகூருதலையும் குறிக்கும் வார்த்தைகள் இந்த புத்தகத்தில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கடவுளுடைய ஜனங்கள் ஆனந்தப்படுவதற்கான காரணத்தை ஏசாயா 52-⁠ம் அதிகாரம் முக்கியமாக விளக்குகிறது. அதில் அடங்கியிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் பொ.ச.மு. 537-⁠ல் எருசலேமின் மீது நிறைவேறுகின்றன. அதன் மற்றொரு நிறைவேற்றம் ‘மேலான எருசலேமில்’ நிறைவேறும். ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் இந்த பரலோக அமைப்பு, தாயாகவும் மனைவியாகவும் சில சமயம் வர்ணிக்கப்படுகிறது.​—கலாத்தியர் 4:26; வெளிப்படுத்துதல் 12:⁠1.

“சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்”

2ஏசாயா மூலமாக யெகோவா தம் அருமை நகரமாகிய சீயோனை அழைக்கிறார்: “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.” (ஏசாயா 52:1, 2) எருசலேம் ஜனங்கள் யெகோவாவின் கோபத்தைக் கிளறியதால், அவர்களது நகரம் எழுபது வருடங்கள் பாழாய் கிடக்கிறது. (2 இராஜாக்கள் 24:4; 2 நாளாகமம் 36:15-21; எரேமியா 25:8-11; தானியேல் 9:2) ஆனால், இப்போதோ நீண்ட கால பாழ்க்கடிப்பிலிருந்து அவர்கள் தட்டி எழுப்பப்பட வேண்டும்; விடுதலை எனும் அழகிய வஸ்திரத்தை உடுத்திக்கொள்ள வேண்டும். ‘சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியை’ விடுவிக்கும்படி கோரேசுவின் இருதயத்தை யெகோவா தூண்டியிருக்கிறார். எனவே, கைதிகளாக இருக்கும் எருசலேம் ஜனங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு திரும்பிவந்து, தூய வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்ட முடியும். விருத்தசேதனம் செய்யப்படாதவர்களோ, அசுத்தமானவர்களோ எருசலேமுக்குள் செல்ல முடியாது.​—எஸ்றா 1:1-4.

3ஏசாயாவின் வார்த்தைகள் கிறிஸ்தவ சபையிலும் நிறைவேறுகின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையை நவீன நாளைய “சீயோன் குமாரத்தி” என விவரிக்கலாம். ஏனென்றால், அதன் தாய் ‘மேலான எருசலேம். a அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பொய் மத போதனைகளிலிருந்தும் விசுவாச துரோக கோட்பாடுகளிலிருந்தும் விடுபட்டு, யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை காத்துக்கொள்ள வேண்டும். மாம்சத்தில் அல்ல, இருதயத்திலே விருத்தசேதனம் செய்வதன் மூலம் இந்த நிலைநிற்கையை காக்க வேண்டும். (எரேமியா 31:33; ரோமர் 2:25-29) யெகோவாவுக்கு முன்பாக ஆன்மீகத்திலும் மனதிலும் ஒழுக்கத்திலும் சுத்தமாக இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது.​—1 கொரிந்தியர் 7:19; எபேசியர் 2:⁠3.

4‘மேலான எருசலேம்’ ஒருபோதும் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் இருந்ததில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால், முதல் உலக யுத்தத்தின்போது, அதன் பூமிக்குரிய பிரதிநிதிகளான அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவாவின் சட்டங்கள் சிலவற்றை அறியாமல் மீறினர். ஏனென்றால், உண்மை கிறிஸ்தவர்கள் எடுக்க வேண்டிய நடுநிலைமைப் பற்றி அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதனால் கடவுளுடைய தயவை இழந்து, பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனில்’ ஆவிக்குரிய சிறையிருப்பை அனுபவித்தனர். (வெளிப்படுத்துதல் 17:5) இந்நிலை ஜூன் 1918-⁠ல் உச்சக்கட்டத்தை எட்டியது; உவாட்ச் டவர் சொஸைட்டியின் எட்டு உறுப்பினர்கள், பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அரசாங்கத்திற்கு எதிராக சதிசெய்தார்கள் என்பதும் அதில் ஒரு குற்றச்சாட்டு. அந்த சமயம் நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும், 1919-⁠ல் ஆவிக்குரிய விதத்தில் விழித்தெழுமாறு அழைப்பு முழங்கப்பட்டது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மகா பாபிலோனின் ஒழுக்க மற்றும் ஆன்மீக அசுத்தத்திலிருந்து இன்னும் முழுமையாக விலக ஆரம்பித்தனர். சிறையிருப்பின் புழுதியிலிருந்து அவர்கள் எழுந்தனர்; ‘பரிசுத்த நகரத்தின்’ அழகையும் வசீகரத்தையும் ‘மேலான எருசலேம்’ மீண்டும் பெற்றது. ஆவிக்குரிய அசுத்தத்திற்கு அங்கே இடமில்லை.

5பொ.ச.மு. 537-⁠லும் சரி பொ.ச. 1919-⁠லும் சரி, தம் ஜனங்களை விடுவிக்கும் முழு உரிமை யெகோவாவுக்கு இருந்தது. இதைத்தான் ஏசாயா விளக்குகிறார்: “விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 52:3) பூர்வ பாபிலோனும்சரி நவீன நாளைய மகா பாபிலோனும்சரி, கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களை அடிமைகளாக கொண்டு செல்லும்போது அவர்களுக்கு ஈடாக பணமோ பொருளோ எதையுமே கொடுக்கவில்லை. ஆகவே பண சம்பந்தமான எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லாததால் யெகோவாவே இன்னமும் அந்த ஜனங்களின் சட்டப்பூர்வ உரிமைக்காரராக இருந்தார். அவர் யாருக்காவது கடன்பட்டிருந்தாரா? இல்லவே இல்லை. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, சிறைபிடித்தவர்களுக்கு ஈடு ஏதும் கொடுக்காமலே தம் வணக்கத்தாரை மீட்டுக்கொள்ளும் உரிமை யெகோவாவுக்கு இருந்தது.​—ஏசாயா 45:⁠13.

6சரித்திர சம்பவங்களிலிருந்து யெகோவாவின் எதிரிகள் எந்த பாடத்தையுமே கற்றுக்கொள்ளவில்லை. நாம் வாசிக்கிறதாவது: “பூர்வகாலத்தில் [“முன்னாளில்,” பொ.மொ.] என் ஜனம் எகிப்துக்குப் போய் அங்கே அந்நியராய்த் தங்கினார்கள்; பிற்பாடு அசீரியரும் காரணமின்றி அவர்களை ஒடுக்கினார்கள் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” (ஏசாயா 52:4, தி.மொ.) விருந்தினர்களாக வந்து தங்கும்படி அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்களை எகிப்தின் அரசன் பார்வோன் அடிமைப்படுத்தினான். எனவே, பார்வோனையும் அவனுடைய சேனையையும் யெகோவா சிவந்த சமுத்திரத்திலே மூழ்கடித்தார். (யாத்திராகமம் 1:11-14; 14:27, 28) அசீரிய ராஜா சனகெரிப் எருசலேமை அச்சுறுத்தியபோது, அவனுடைய வீரர்களில் 1,85,000 பேரை யெகோவாவின் தூதன் அழித்தார். (ஏசாயா 37:​33-37) அதைப் போலவே, பூர்வ பாபிலோனும்சரி நவீன நாளைய மகா பாபிலோனும்சரி கடவுளுடைய ஜனங்களை ஒடுக்கியதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.

“என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்”

7யெகோவாவின் ஜனங்கள் சிறையிருப்பில் இருப்பது அவருடைய பெயருக்கே இழுக்கு. அதைத்தான் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது: “இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள் [“உரக்க சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்,” NW]; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 52:5, 6) இந்த சூழ்நிலையை மாற்றுவதில் யெகோவாவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? இஸ்ரவேலர்கள் பாபிலோனில் அடிமைகளாக இருப்பதால் அவருக்கென்ன கஷ்டம்? அவருடைய ஜனங்களை பாபிலோன் கைதிகளாக கொண்டு சென்றிருக்கிறது. தன் வெற்றியால் பெருமிதங்கொண்டு உரக்க சத்தமிடுகிறது. அப்படிப்பட்ட தற்பெருமையால் பாபிலோன் யெகோவாவின் பெயரையே அவமதிக்கிறது. எனவேதான், யெகோவா உடனடியாக செயல்பட வேண்டும். (எசேக்கியேல் 36:20, 21) யெகோவா தம் ஜனங்கள்மீது கோபங்கொண்டதே எருசலேமின் பாழ்க்கடிப்புக்குக் காரணம் என்பதை பாபிலோன் உணரத் தவறிவிடுகிறது. மாறாக, யூதர்களுடைய கடவுளுக்கு சக்தியில்லாததாலேயே அவர்கள் பாபிலோனில் கைதிகளாக இருப்பதாய் அவர்கள் கருதுகின்றனர். பாபிலோனில் துணை அரசனாக இருக்கும் பெல்ஷாத்சார் பாபிலோனிய தெய்வங்களின் புகழுக்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்து, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பாத்திரங்களைக் கொண்டுவரச் சொல்லி, அவற்றில் திராட்சரசம் குடித்து, யெகோவாவையே அவமதிக்கிறான்.​—தானியேல் 5:1-4.

8இவையனைத்தும் ‘மேலான எருசலேமுக்கு’ எப்படி பொருந்துகின்றன? கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டிக்கொண்டவர்கள் மத்தியில் விசுவாச துரோகம் வேர்விட்டது முதற்கொண்டு, ‘தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே [அவர்கள்] மூலமாய்த் தூஷிக்கப்பட்டது’ என சொல்லலாம். (ரோமர் 2:24; அப்போஸ்தலர் 20:29, 30) இது போதாதென, மூடநம்பிக்கைகள் காரணமாக யூதர்கள் இறுதியில் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதையும் தவிர்க்க ஆரம்பித்தனர். அப்போஸ்தலர்களின் மரணத்திற்கு பிறகு, விசுவாச துரோக கிறிஸ்தவர்களும் இதை பின்பற்றி, கடவுளுடைய பெயரை உச்சரிப்பதை அறவே நிறுத்திவிட்டனர். இப்படிப்பட்ட விசுவாச துரோகம் கடைசியில் மகா பாபிலோனின் முக்கிய பாகமாகிய கிறிஸ்தவமண்டலம் உருவாக காரணமானது. (2 தெசலோனிக்கேயர் 2:3, 7; வெளிப்படுத்துதல் 17:5) கிறிஸ்தவமண்டலத்தின் படுமோசமான ஒழுக்கக்கேடும் இரத்தப்பழியும் யெகோவாவின் பெயருக்கு இழுக்கை கொண்டு வந்திருக்கின்றன.​—2 பேதுரு 2:1, 2.

9பெரிய கோரேசுவாகிய இயேசு கிறிஸ்து, கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களை மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து 1919-⁠ல் விடுவித்தபோது அவர்கள் யெகோவாவின் கட்டளைகளை இன்னும் தெளிவாக புரிந்துகொண்டனர். புறமதத்திலிருந்து கிறிஸ்தவமண்டலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த, கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்து போதனைகளாகிய திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரகம் போன்றவற்றிலிருந்து அவர்கள் ஏற்கெனவே தங்களை சுத்தப்படுத்தியிருந்தனர். இப்போதோ, பாபிலோனிய பழக்கங்களிலிருந்தும் அவர்கள் முழுமையாக விடுபட பிரயாசப்பட்டனர். இந்த உலகின் அரசியல் விவகாரங்களில் நடுநிலைமை வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொண்டனர். என்னென்ன இரத்தப்பழிகளுக்கெல்லாம் சிலர் ஆளாகியிருந்தார்களோ அவை அனைத்திலிருந்தும் தங்களை துப்புரவாக்கிக் கொள்ளவும் விரும்பினர்.

10யெகோவாவினுடைய பெயரின் முக்கியத்துவத்தை கடவுளின் நவீன நாளைய ஊழியர்களும் தெளிவாக புரிந்துகொண்டனர். 1931-⁠ல், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இப்படியாக, யெகோவாவையும் அவருடைய பெயரையும் தாங்கள் முழுமையாக ஆதரிப்பதை பகிரங்கமாக அறிவித்தனர். மேலும், 1950-⁠லிருந்து புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை பிரசுரித்து வருகின்றனர்; இந்த பைபிளில் கடவுளுடைய பெயர் வரவேண்டிய எல்லா இடங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பெயரை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் யெகோவாவின் பெயரை மதிக்கின்றனர்; பூமியின் கடைமுனை வரைக்கும் அந்தப் பெயரை அறிவித்தும் வருகின்றனர்.

‘சுவிசேஷகன்’

11சீயோன் பாழாய் கிடக்கும் நிலைக்கே மறுபடியும் நம் கவனம் திருப்பப்படுகிறது. நற்செய்தியோடு ஒரு தூதுவன் வருகிறான்: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் [“மேம்பட்ட ஒன்றைக் குறித்த நற்செய்தியை,” NW] அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” (ஏசாயா 52:7) பொ.ச.மு. 537-⁠ல், சீயோனின் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார் என எப்படி சொல்ல முடியும்? யெகோவா எப்போதுமே ராஜாவாக இருக்கிறாரல்லவா? ஆம், அவர் “நித்தியத்தின் ராஜா”! (வெளிப்படுத்துதல் 15:3, NW) என்றாலும், பாபிலோனின் வீழ்ச்சியும் மெய் வணக்கத்தை மீண்டும் ஸ்தாபிக்க எருசலேம் ஆலயம் திரும்ப கட்டப்பட அரசு ஆணை பிறப்பிக்கப்படுதலும் யெகோவாவின் ராஜரிகத்தை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றன. எனவே, ‘உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்’ எனும் ஆர்ப்பரிப்பு பொருத்தமானதே.​—சங்கீதம் 97:⁠1.

12ஏசாயாவின் நாட்களில், எந்த தனிநபரோ அல்லது தொகுதியினரோ ‘சுவிசேஷகன்’ என அழைக்கப்படவில்லை. இன்றோ, சுவிசேஷத்தை சொல்லுவோர் யாரென தெளிவாக தெரிகிறது. இயேசு கிறிஸ்துவே யெகோவாவின் மிகப் பெரிய சமாதான தூதுவர். நோய் மற்றும் மரணம் உட்பட, ஆதாமின் பாவத்தால் வந்த எல்லா தீய விளைவுகளிலிருந்தும் விடுதலை இருக்கிறது எனும் சுவிசேஷத்தை அவர் பூமியில் இருந்தபோது பிரசங்கித்தார். (மத்தேயு 9:35) மேம்பட்ட ஒன்றைக் குறித்த நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிப்பதில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்தார். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களுக்கு பிரசங்கிக்க தமக்கு கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டார். (மத்தேயு 5:1, 2; மாற்கு 6:34; லூக்கா 19:1-10; யோவான் 4:5-26) அவருடைய முன்மாதிரியை சீஷர்களும் பின்பற்றினர்.

13ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஏசாயா 52:7-⁠ஐ மேற்கோள் காட்டி நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையின் அவசியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகிறார். “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?” என்பது உட்பட சிந்தனையைத் தூண்டும் பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கிறார். பின்னர், “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே” என சொல்கிறார். (ரோமர் 10:14, 15) ஏசாயா புத்தகத்தின் மூலப்பிரதியில் ‘சுவிசேஷகன்’ என ஒருமையில் குறிப்பிடப்பட்டிருக்க, பவுலோ ‘சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்கள்’ என பன்மையில் இங்கு குறிப்பிடுகிறார். இப்படியாக, ஏசாயா 52:7-⁠ஐ விரிவான அளவில் பவுல் பொருத்துகிறார். இயேசு கிறிஸ்துவைப் போலவே, எல்லா கிறிஸ்தவர்களும் சமாதானத்தின் நற்செய்திக்கு தூதுவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பாதங்கள் எப்படி ‘அழகாக’ இருக்கின்றன? அருகிலுள்ள யூதாவின் மலைகளிலிருந்து தூதுவன் எருசலேமை நோக்கி வருவதுபோல் ஏசாயா பேசுகிறார். தூரத்திலிருந்து தூதுவனின் பாதங்களை பார்ப்பதென்பது முடியாத காரியம். இங்கு தூதுவனுக்கே கவனம் செலுத்தப்படுவதால் பாதங்கள் என்பது அந்த தூதுவனையே குறிக்கின்றன. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தாழ்மை மனமுள்ள ஜனங்களுக்கு இயேசுவும் அவரது சீஷர்களும் அழகாக தோன்றினர். அதுபோலவே, ஜீவனைக் காக்கும் நற்செய்தியை செவிகொடுத்து கேட்கும் சாந்தகுணமுள்ளோருக்கு நவீன நாளைய சாட்சிகளும் அழகாக காட்சியளிக்கின்றனர்.

14‘உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்’ எனும் ஆர்ப்பரிப்பு நவீன காலங்களில் எப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது? 1919 முதல். அந்த வருடம், சீடர் பாய்ன்ட், ஒஹாயோவில் நடந்த மாநாட்டில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவராக அப்போது இருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டு, “உடன் பணியாட்களுக்கு உரை” என்ற தலைப்பில் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு பேச்சைக் கொடுத்தார். ஏசாயா 52:7, வெளிப்படுத்துதல் 15:2 ஆகிய வசனங்களின் அடிப்படையில் அந்த பேச்சு கொடுக்கப்பட்டது. பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபடும்படி அங்கு கூடியிருந்த அனைவரையும் அந்த பேச்சு உற்சாகப்படுத்தியது. இவ்வாறு, ‘அழகான பாதங்கள்,’ “மலைகளின்மேல்” காணப்பட ஆரம்பித்தன. முதலாவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும், அதன்பின் அவர்களது கூட்டாளிகளான “வேறே ஆடுகளும்” இந்த பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர். யெகோவா ராஜாவாகிவிட்டார் என்ற நற்செய்தியை அறிவித்தனர். (யோவான் 10:16) யெகோவா எப்படி ராஜாவானார்? 1914-⁠ல் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்தபோது, யெகோவா தம் அரசதிகாரத்தை புதிய விதத்தில் வெளிக்காட்டினார். 1919-⁠ல் ‘தேவனுடைய இஸ்ரவேலை’ மகா பாபிலோனிலிருந்து விடுவித்தபோது மறுபடியும் ஒருமுறை தம் அரசதிகாரத்தை வெளிப்படுத்தினார்.​—கலாத்தியர் 6:16; சங்கீதம் 47:8; வெளிப்படுத்துதல் 11:15, 17; 19:⁠6.

“உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்”

15‘உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்’ எனும் ஆர்ப்பரிப்பிற்கு ஏதேனும் பதில் உண்டா? ஆம். அதைத்தான் ஏசாயா பதிவு செய்கிறார்: “உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப் பண்ணும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள்.” (ஏசாயா 52:8) பொ.ச.மு. 537-⁠ல், யூதர்கள் தேசத்திற்கு திரும்பிவரும்போது, அவர்களை வரவேற்க எருசலேமில் எந்தவொரு ஜாமக்காரரும் சொல்லர்த்தமாக நிறுத்தப்படவில்லை. ஏனென்றால், தேசம் 70 வருடங்கள் பாழாய் கிடக்கிறது. (எரேமியா 25:11, 12) எனவே, உரக்க சத்தமிடும் ‘ஜாமக்காரர்’ யார்? சீயோன் மீண்டும் பழைய நிலைக்கு வருவதைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே கேள்விப்பட்டு, சீயோனின் மற்ற பிள்ளைகளுக்கு அதை அறிவிக்கும் இஸ்ரவேலர்களே இவர்கள். பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோன் கோரேசுவால் கைப்பற்றப்பட யெகோவா அனுமதிக்கிறார்; இதைப் பார்க்கும் ஜாமக்காரர், யெகோவா தம் ஜனங்களை விடுவிக்கிறார் என மிகத் தெளிவாக புரிந்து கொள்கின்றனர். தங்கள் சத்தத்தைக் கேட்டு நடக்கும் அனைவரோடும் சேர்ந்து இவர்கள் சந்தோஷத்தோடு உரக்க சத்தமிடுகின்றனர். நற்செய்தியை மற்றவர்களும் கேட்கும்படி ஏகமாய் கெம்பீரிக்கின்றனர்.

16உஷாராய் இருக்கும் ஜாமக்காரர் யெகோவாவை “கண்ணார” அல்லது முகமுகமாய் காண்பது போல், அவருடன் நெருங்கிய, தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (எண்ணாகமம் 14:14) யெகோவாவுடனும் தங்களுக்கு மத்தியிலும் அவர்கள் நெருக்கமாக இருப்பது, அவர்களது ஐக்கியத்தையும் அவர்களுடைய செய்தி ஆனந்தமளிக்கும் ஒன்று என்பதையும் சிறப்பித்துக் காட்டுகிறது.​—1 கொரிந்தியர் 1:⁠10.

17நவீன நாளைய நிறைவேற்றத்தில், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையே’ ஜாமக்கார வகுப்பார். ஏற்கெனவே கடவுளுடைய காணக்கூடிய அமைப்பில் இருப்பவர்கள் மட்டுமல்ல, வெளியே உள்ளவர்களும் கேட்கும்படி இந்த வகுப்பார் உரக்க சத்தமிடுகின்றனர். (மத்தேயு 24:45-47, NW) அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரைக் கூட்டிச்சேர்க்க 1919-⁠ல் ஓர் அழைப்பு கொடுக்கப்பட்டது. 1922-⁠ல், இந்த அழைப்பு இன்னும் தீவிரமாக்கப்பட்டது. அப்போது சீடர் பாய்ன்ட், ஒஹாயோவில் நடந்த மாநாட்டில், “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் “விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்ற அழைப்பு விடுவிக்கப்பட்டது. 1935 முதல், செம்மறியாடு போன்ற திரள்கூட்டத்தாரைக் கூட்டிச்சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10) சமீப வருடங்களில், யெகோவாவின் அரசதிகாரத்தைப் பற்றிய அறிவிப்பு மிகத் தீவிரமாக கொடுக்கப்பட்டு வருகிறது. எப்படி? 2000-⁠ல், 230-⁠க்கும் அதிகமான நாடுகளில், கிட்டத்தட்ட அறுபது லட்சம் பேர் யெகோவாவின் அரசதிகாரத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் வெகு மும்முரமாய் ஈடுபட்டனர். மேலும், ஜாமக்கார வகுப்பின் முக்கிய ஏதுவாகிய காவற்கோபுரம் பத்திரிகை, 130-⁠க்கும் அதிகமான பாஷைகளில் இந்த சந்தோஷமான செய்தியை அறிவிக்கிறது.

18இப்படிப்பட்ட ஒன்றிணைக்கும் வேலையில் ஈடுபட வேண்டுமானால், மனத்தாழ்மையும் சகோதர அன்பும் அவசியம். இந்த அழைப்பு சிறந்த வகையில் கொடுக்கப்பட வேண்டுமானால், எல்லாரும் ஒரே செய்தியை அறிவிக்க வேண்டும். யெகோவாவின் பெயர், அவருடைய பலியின் ஏற்பாடு, அவரது ஞானம், அன்பு, அவருடைய ராஜ்யம் என இதைத்தான் அனைவரும் அறிவிக்க வேண்டும். உலக முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் தோளோடு தோள் சேர்ந்து இந்த வேலையை செய்வதால், யெகோவாவுடன் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட பாசப்பிணைப்பு பலப்படுகிறது; எனவே, இந்த ஆனந்த செய்தியை ஏககுரலில் உரக்க அறிவிக்கின்றனர்.

19கடவுளுடைய ஜனங்கள் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பதால், அவர்கள் இருக்குமிடமும் மகிழ்ச்சியாக காட்சியளிக்கிறது. தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார் [“காட்டுவார்,” NW]; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.” (ஏசாயா 52:9, 10) பாபிலோனிலிருந்து கைதிகள் திரும்பி வரவே, துயரத்தோடு காட்சியளித்த பாழாக்கப்பட்ட எருசலேம் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு காணப்படுகிறது. ஏனென்றால், யெகோவாவின் மெய் வணக்கத்தை இப்போது மீண்டும் ஸ்தாபிக்க முடியும். (ஏசாயா 35:1, 2) இதில் யெகோவாவின் கரம் இருக்கிறதென்பது தெளிவாக தெரிகிறது. அவர் தம் ஜனங்களை காக்கும் வேலைக்கு தயாராக, தம் சட்டையின் கையை சுருட்டி விட்டுக்கொள்வது போல தம் “பரிசுத்த புயத்தை” காட்டியுள்ளார்.​—எஸ்றா 1:2, 3.

20இந்தக் “கடைசி நாட்களில்,” யெகோவா தம் பரிசுத்த புயத்தை மறுபடியும் காட்டியுள்ளார். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ‘இரண்டு சாட்சிகளை,’ அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரை மீண்டும் செயல்பட வைப்பதற்காக தம் புயத்தை காட்டியுள்ளார். (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 11:3, 7-13) 1919 முதல், இவர்கள் ஆவிக்குரிய பரதீஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்; இந்த ஆவிக்குரிய தேசத்திற்குள் இப்போது அவர்களுடைய கூட்டாளிகளாகிய வேறே ஆடுகளும் லட்சக்கணக்கில் வந்துள்ளனர். தம் ஜனங்களை இரட்சிக்க ‘அர்மகெதோனில்’ கடைசியாக ஒருமுறை யெகோவா தம் பரிசுத்த புயத்தை காட்டுவார். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அப்போது, “பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.”

உடனடியாக செய்ய வேண்டியது

21எருசலேமுக்கு திரும்பி செல்வதற்காக பாபிலோனை விட்டு வெளியே வருகிறவர்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும். ஏசாயா எழுதுகிறார்: “அகலுங்கள், அகலுங்கள், அவ்விடம் விட்டுப்போங்கள்; அசுத்தமான எதையும் தொடாதிருங்கள்; யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். நீங்கள் விரைந்து [“கலக்கத்தோடு,” NW] புறப்படுவதில்லை; தப்பி ஓடிப்போவதுபோல் போவதுமில்லை; யெகோவா உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் கடவுள் உங்கள் பின்னாக வந்து காப்பார்.” (ஏசாயா 52:11, 12, தி.மொ.) பாபிலோனிய பொய் வணக்கத்தின் கறைபடிந்த எதையும் இஸ்ரவேலர்கள் அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும். எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட யெகோவாவின் பாத்திரங்களை சுமப்பதால் அவர்கள் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். வெளித்தோற்றத்தில் அல்லது சடங்காச்சாரப்படி மட்டுமல்ல, முக்கியமாக இருதயத்திலே சுத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (2 இராஜாக்கள் 24:11-13; எஸ்றா 1:7) மேலும், யெகோவா அவர்களுக்கு முன்பாக செல்வதால், அவர்கள் எதற்கும் கலக்கமடைய வேண்டியதில்லை. இரத்தவெறி கொண்ட எதிரிகள் பின்னாலே துரத்திக்கொண்டு வருவதுபோல தலைதெறிக்க ஓடவும் வேண்டியதில்லை. ஏனென்றால், இஸ்ரவேலின் தேவன் அவர்களுக்கு பின்னாக வந்து காப்பார்.​—எஸ்றா 8:21-23.

22சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டியதைப் பற்றிய ஏசாயாவின் வார்த்தைகள், ‘மேலான எருசலேமின்’ பிள்ளைகள் மீது பெரிய அளவில் நிறைவேறுகின்றன. அவிசுவாசிகளோடு பிணைத்துக் கொள்ள வேண்டாம் என கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் புத்திமதி கூறியபோது ஏசாயா 52:11-ஐ மேற்கோளாக காட்டினார்: “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (2 கொரிந்தியர் 6:14-17) பாபிலோனிலிருந்து தாயகம் திரும்பிய இஸ்ரவேலர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் பாபிலோனிய பொய் வணக்கத்தின் எந்த கறையும் இல்லாதிருக்க வேண்டும்.

23குறிப்பாக, இயேசுவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்கள் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது. 1919-⁠ல் இவர்கள் மகா பாபிலோனிலிருந்து வெளியேறினர். பொய் வணக்கத்தின் எந்தவொரு சுவடுமின்றித் தங்களைப் படிப்படியாக சுத்தப்படுத்திக் கொண்டனர். (ஏசாயா 8:19, 20; ரோமர் 15:4) ஒழுக்க ரீதியாக தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் அதிகமதிகமாக உணர்ந்தனர். யெகோவாவின் சாட்சிகள் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை எப்போதுமே பின்பற்றி வந்தது உண்மைதான்; என்றபோதிலும், சபையை சுத்தமாக வைப்பதற்காக ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிட்சிக்கப்பட வேண்டுமென 1952-⁠ல் வெளியான காவற்கோபுர கட்டுரைகள் வலியுறுத்தின. மேலும், தவறு செய்தவர் உண்மையான மனந்திரும்புதலைக் காட்ட வேண்டிய அவசியத்தை உணரவும் இப்படிப்பட்ட சிட்சை உதவும்.​—1 கொரிந்தியர் 5:6, 7, 9-13; 2 கொரிந்தியர் 7:8-10; 2 யோவான் 10, 11.

24அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் திரள் கூட்டத்தாரும், ஆவிக்குரிய விதத்தில் தங்களை அசுத்தப்படுத்தும் எந்தவொரு பொருளையும் தொடாதிருக்க உறுதியாய் இருக்கிறார்கள். இவ்விதமாக, சுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பதால், ‘யெகோவாவின் பாத்திரங்களை’ சுமக்க​—⁠அதாவது வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பைபிள் படிப்பிலும் பரிசுத்த சேவையின் இன்னும் பல அம்சங்களிலும் ஈடுபட கடவுள் செய்திருக்கும் மதிப்புமிக்க ஏற்பாடுகளில் பங்குபெற​—⁠தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு தூய்மையை காத்துக்கொள்வதால், யெகோவா அவர்களுக்கு வழிகாட்டியாக முன்னேயும் பலத்த பாதுகாவலராக பின்னேயும் தொடர்ந்து வருவார் என அவர்கள் இன்று நம்பிக்கையோடு இருக்கலாம். கடவுளுடைய சுத்தமான ஜனங்களாக, ‘ஏகமாய்க் கெம்பீரித்துப் பாட’ அவர்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன!

[அடிக்குறிப்பு]

a ‘மேலான எருசலேமுக்கும்’ அதன் பூமிக்குரிய அபிஷேகம் செய்யப்பட்ட பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றிய இன்னுமதிக விளக்கத்திற்கு இந்தப் புத்தகத்தில் 15-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

[கேள்விகள்]

1. ஏசாயா 52-⁠ம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் ஏன் சந்தோஷத்திற்கு காரணமாக இருக்கின்றன, அவற்றிற்கு என்ன இரண்டு நிறைவேற்றங்கள் உண்டு?

2. சீயோன் எப்போது எழுந்திருக்கிறது, இது எப்படி நடக்கிறது?

3. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை ஏன் “சீயோன் குமாரத்தி” என அழைக்கப்படலாம், எந்த விதத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்?

4. ‘மேலான எருசலேம்’ ஒருபோதும் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் இராதபோதிலும், பூர்வ எருசலேம் குடிகளைப் போலவே இதன் பூமிக்குரிய பிரதிநிதிகள் எதை அனுபவித்தனர்?

5. சிறைபிடித்தவர்களுக்கு ஈடு ஏதும் கொடுக்காமலேயே தம் ஜனங்களை மீட்கும் முழு உரிமை யெகோவாவுக்கு ஏன் உண்டு?

6. யெகோவாவின் எதிரிகள் சரித்திர சம்பவங்களிலிருந்து என்ன பாடங்களை கற்றுக்கொள்ள தவறினர்?

7. யெகோவாவின் ஜனங்கள் சிறையிருப்பில் இருப்பதால் அவருடைய பெயருக்கு என்ன ஏற்படுகிறது?

8. அப்போஸ்தலர்களின் மரணம் முதற்கொண்டு, யெகோவாவின் பெயர் எப்படி பாவிக்கப்பட்டிருக்கிறது?

9, 10. நவீன நாளைய கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள், யெகோவாவின் பெயரையும் அவரது தராதரங்களையும் எப்படி தெளிவாக புரிந்து கொண்டனர்?

11. பொ.ச.மு. 537-⁠ல் நடந்த சம்பவங்களைப் பொருத்தவரை, ‘உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறார்’ எனும் ஆர்ப்பரிப்பு ஏன் பொருத்தமானது?

12. ‘நற்செய்தியை அறிவிப்பதில்’ யார் முன்நின்றது, எப்படி?

13. (அ) “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” எனும் வாக்கியத்தின் அர்த்தத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எப்படி விரிவான அளவில் பொருத்துகிறார்? (ஆ) தூதுவர்களின் பாதங்கள் ‘அழகாக’ இருக்கின்றன என ஏன் சொல்லலாம்?

14. நவீன காலங்களில் யெகோவா எப்படி ராஜாவாகியிருக்கிறார், இது எப்போதிலிருந்து எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது?

15. பொ.ச.மு. 537-⁠ல் உரக்க சத்தமிடும் ‘ஜாமக்காரர்’ யார்?

16. ஜாமக்காரர் யாரை “கண்ணாரக்” காண்கின்றனர், எந்த அர்த்தத்தில்?

17, 18. (அ) நவீன நாளைய ஜாமக்கார வகுப்பார் எப்படி உரக்க சத்தமிடுகின்றனர்? (ஆ) எந்த அர்த்தத்தில் ஜாமக்கார வகுப்பார் ஏககுரலில் அழைப்பு விடுக்கின்றனர்?

19. (அ) ‘எருசலேமின் பாழான ஸ்தலங்கள்’ எப்படி மகிழ்ச்சியில் கெம்பீரிக்கின்றன? (ஆ) எந்த அர்த்தத்தில் யெகோவா தம் ‘பரிசுத்த புயத்தை காட்டியிருக்கிறார்’?

20. நவீன காலங்களில், யெகோவா தம் பரிசுத்த புயத்தை காட்டியதால் என்ன ஏற்பட்டிருக்கிறது, எதிர்காலத்தில் என்ன ஏற்படப் போகிறது?

21. (அ) ‘யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களிடம்’ என்ன எதிர்பார்க்கப்படுகிறது? (ஆ) பாபிலோனிலிருந்து திரும்பும் யூதர்கள் ஏன் கலக்கமடைய வேண்டியதில்லை?

22. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை பவுல் எப்படி வலியுறுத்துகிறார்?

23. இன்று யெகோவாவின் ஊழியர்கள் எந்த விதங்களில் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல்கின்றனர்?

24. (அ) நவீன காலங்களில், ‘யெகோவாவின் பாத்திரங்கள்’ யாவை? (ஆ) யெகோவா தங்களுக்கு வழிகாட்டியாக முன்னேயும் பலத்த பாதுகாவலராக பின்னேயும் தொடர்ந்து வருவார் என கிறிஸ்தவர்கள் இன்று ஏன் நம்பிக்கையாய் இருக்கலாம்?

[பக்கம் 183-ன் படம்]

சிறையிருப்பிலிருந்து சீயோன் விடுவிக்கப்படும்

[பக்கம் 186-ன் படம்]

1919 முதல், ‘அழகான பாதங்கள்’ மறுபடியும் “மலைகளின்” மேல் காணப்படுகின்றன

[பக்கம் 189-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள் ஏககுரலில் பேசுகின்றனர்

[பக்கம் 192-ன் படம்]

‘யெகோவாவின் பாத்திரங்களைச் சுமப்பவர்கள்’ ஆன்மீகத்திலும் ஒழுக்கத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்