Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தூய வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

தூய வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

அதிகாரம் இருபத்து ஏழு

தூய வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

ஏசாயா 66:1-14

ஏசாயாவின் கடைசி அதிகாரத்தில் அந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் சில முக்கியமான விஷயங்கள் மகத்தான உச்சக்கட்டத்தை எட்டுகின்றன. முக்கியமான பல கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. இங்கு சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்களாவன: யெகோவாவின் மேன்மை, பாசாங்குத்தனத்தின் மீது அவர் காட்டும் வெறுப்பு, பொல்லாதவர்களை தண்டிப்பதில் அவர் காட்டும் உறுதியான தீர்மானம், உண்மையுள்ளவர்களிடம் அவர் காட்டும் அன்பும் கரிசனையும். அதோடு பின்வரும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது: மெய் வணக்கத்தையும் பொய் வணக்கத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது எது? தங்களை பரிசுத்தமானவர்களாக காட்டிக்கொண்டு, அதே சமயத்தில் கடவுளுடைய ஜனங்களை ஒடுக்கும் பாசாங்குக்காரர்களை யெகோவா தண்டிப்பார் என்பதில் நாம் எவ்வாறு உறுதியாக இருக்கலாம்? யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பவர்களை அவர் எவ்வாறு ஆசீர்வதிப்பார்?

தூய வணக்கத்தின் திறவுகோல்

2யெகோவாவின் மேன்மையை வலியுறுத்தி, இந்தத் தீர்க்கதரிசனம் ஆரம்பிக்கிறது: “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?” (ஏசாயா 66:1) தாயகத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்ட யூதர்கள் யெகோவாவுக்கு ஆலயத்தை மறுபடியும் கட்டாதபடி அவர்களுடைய ஆர்வத்தை குன்றச் செய்ய இந்தத் தீர்க்கதரிசி முயல்கிறார் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல; ஆலயத்தை மறுபடியும் கட்டும்படி யெகோவாவே கட்டளையிடுவார். (எஸ்றா 1:1-6; ஏசாயா 60:13; ஆகாய் 1:7, 8) அப்படியானால் இந்த வசனம் எதை அர்த்தப்படுத்துகிறது?

3பூமி யெகோவாவின் “பாதபடி” என ஏன் சொல்லப்படுகிறது என்பதை நாம் முதலில் கவனிக்கலாம். இது மதிப்புக் குறைவான வார்த்தை அல்ல. அண்டத்திலுள்ள கோடாகோடி விண்வெளிக் கோள்களில் பூமிக்கு மட்டுமே இப்படிப்பட்ட சிறப்புப் பெயர் வழங்கப்படுகிறது. நமது கோளம் என்றைக்கும் ஒப்பற்று விளங்கும். ஏனெனில் யெகோவாவின் ஒரேபேறான குமாரன் மீட்கும் பலியை செலுத்தியதும் இங்குதான்; மேசியானிய ராஜ்யத்தின் மூலமாக யெகோவா தம்முடைய அரசதிகாரமே சரியானது என்பதை நிரூபிக்கப்போவதும் இங்குதான். ஆகவே, பூமியை யெகோவாவின் பாதபடி என அழைப்பது எவ்வளவு பொருத்தமானது! ஓர் அரசன் தன்னுடைய உயர்ந்த சிங்காசனத்தில் ஏறுவதற்கு இப்படிப்பட்ட பாதபடியை பயன்படுத்தலாம், அதற்குப்பின் தன் கால்களை வைப்பதற்கும் அதைப் பயன்படுத்தலாம்.

4உண்மையில் ஓர் அரசன் தன்னுடைய பாதபடியில் வாசம் செய்வதில்லை, அவ்வாறே யெகோவாவும் பூமியில் வாசம் செய்வதில்லை. ஏன், பிரமாண்டமான சொல்லர்த்த வானங்களும் அவரைக் கொள்ளாதே! அப்படியிருக்க பூமியிலுள்ள எந்தக் கட்டிடத்திலாவது யெகோவா சொல்லர்த்தமாகவே வாசம் செய்வது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். (1 இராஜாக்கள் 8:27) யெகோவாவின் சிங்காசனமும் அவருடைய வாசஸ்தலமும் ஆவி பிரதேசத்தில் இருக்கின்றன; இதுதான் ஏசாயா 66:1-⁠ல் “வானம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வசனம் இந்த விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது: “என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 66:2அ) “இவைகளையெல்லாம்”​—⁠வானத்திலும் பூமியிலுமுள்ளவை எல்லாம்​—⁠என தமது கைகளை அகல விரித்து யெகோவா கூறுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள். (ஏசாயா 40:26; வெளிப்படுத்துதல் 10:7) அண்டம் முழுவதற்கும் மகத்தான சிருஷ்டிகர் என்ற நிலையில், அவருக்கென ஒரு கட்டிடம் கட்டப்படுவதைவிட அதிகத்தைப் பெற அவர் தகுதியானவர். சம்பிரதாய வணக்கமுறையைவிட அதிகத்தைப் பெற தகுதியானவர்.

5சர்வலோக உன்னத பேரரசருக்கு எப்படிப்பட்ட வணக்கம் பொருத்தமானது? அதைப் பற்றி அவரே நமக்குச் சொல்கிறார்: “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்.” (ஏசாயா 66:2ஆ) ஆம், தூய வணக்கத்திற்கு அத்தியாவசியமான ஒன்று, நல்ல இருதயநிலை. (வெளிப்படுத்துதல் 4:11) யெகோவாவை வணங்குபவர் ‘சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டவராய்’ இருக்க வேண்டும். இது நாம் மகிழ்ச்சியற்றவராய் இருக்க வேண்டும் என யெகோவா விரும்புவதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, அவர் ‘நித்தியானந்த தேவன்.’ தம்மை வணங்குபவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11; பிலிப்பியர் 4:4) என்றாலும், நாம் எப்போதுமே பாவம் செய்கிறவர்களானபடியால் நம்முடைய பாவங்களை அற்பமானவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படிப்பட்ட பாவங்களின் நிமித்தம் நம்மை ‘சிறுமைப்படுத்துவது’ அவசியம்; யெகோவாவின் நீதியான தராதரங்களை தவற விடுகிறோம் என வருந்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். (சங்கீதம் 51:17) நாம் ‘ஆவியில் நொறுங்குண்டவர்கள்’ என்பதைக் காட்டுவதற்கு, மனந்திரும்ப வேண்டும்; நம்முடைய பாவ சிந்தைகளுக்கு எதிராக போராட வேண்டும்; மன்னிப்பிற்காக யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.​—லூக்கா 11:4; 1 யோவான் 1:8-10.

6அதோடு, ‘தம் வசனத்துக்கு நடுங்குகிறவனையும்’ யெகோவா நோக்கிப் பார்க்கிறார். அப்படியானால், அவருடைய பிரகடனங்களை வாசிக்கும்போதெல்லாம் நாம் அஞ்சி நடுங்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் என்றா அர்த்தம்? இல்லை, மாறாக அவர் சொல்லும் காரியங்களை பயபக்தியுடன் யோசித்துப் பார்க்கும்படி அவர் விரும்புகிறார். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவருடைய ஆலோசனையை வழிகாட்டியாக பயன்படுத்துவதற்காக, அதை உள்ளப்பூர்வமாக நாடுகிறோம். (சங்கீதம் 119:105) கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவோமோ, மனித பாரம்பரியங்களால் அவருடைய சத்தியத்தை கறைப்படுத்திவிடுவோமோ, அல்லது அதை துச்சமாக எடுத்துக்கொள்வோமோ என்று நினைத்து பயப்படுவதன் கருத்திலும் நாம் ‘நடுங்கலாம்.’ அப்படிப்பட்ட தாழ்மையான மனநிலையே தூய வணக்கத்திற்கு இன்றியமையாதது; ஆனால், இன்றைய உலகில் இதை மருந்துக்குக்கூட காண்பது அரிது என்பதே வருந்தத்தக்க விஷயம்.

பாசாங்குத்தன வணக்கத்தை யெகோவா வெறுக்கிறார்

7தன்னுடைய காலத்தில் வாழ்பவர்களைப் பற்றி ஏசாயா சிந்தித்துப் பார்க்கையில் அவர்களில் அநேகருக்கு, யெகோவா எதிர்பார்க்கும் குணம் இல்லை என்பதை நன்கு அறிகிறார். ஆகவே, விசுவாசதுரோக எருசலேமுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு தகுதியானதே. அதன் வணக்கமுறையை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதை கவனியுங்கள்: “மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.”​—ஏசாயா 66:3.

8இந்த வார்த்தைகள் ஏசாயா முதலாம் அதிகாரத்திலுள்ள யெகோவாவின் வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. தம் வணக்கத்தார் பாசாங்குக்காரராக இருந்ததன் காரணமாக, அவர்களுடைய சம்பிரதாய வழிபாட்டு முறைகள் தம்மை பிரியப்படுத்தாமல் போனதோடுகூட தம் நியாயமான கோபத்தையும் கிளறிவிட்டதாக அந்த ஏறுமாறான ஜனங்களிடம் யெகோவா சொன்னதை அவ்வசனங்கள் காட்டுகின்றன. (ஏசாயா 1:11-17) அவ்வாறே இப்போதும் அவர்களுடைய பலிகளை கொடிய குற்றங்களுக்கு யெகோவா ஒப்பிடுகிறார். அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய மாட்டை பலிசெலுத்தினாலும் அது மனிதனை வெட்டி வீழ்த்துவதற்கு ஒப்பாகவே இருக்கிறது, எவ்விதத்திலும் யெகோவாவை சாந்தப்படுத்தாது. அவர்களுடைய மற்ற பலிகளோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி பலி செலுத்துவதற்கு பொருத்தமற்ற அசுத்தமான மிருகங்களாகிய நாய் அல்லது பன்றியை பலியிடுவதற்கு ஒப்பாக இருக்கின்றன. (லேவியராகமம் 11:7, 27) இப்படிப்பட்ட மத பாசாங்குத்தனத்தை யெகோவா தண்டியாமல் விட்டுவிடுவாரா?

9இப்போது யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்; அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச் செய்வேன்; ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை; நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை; என் கண் முன்னே தீயவற்றைச் செய்தார்கள்; நான் விரும்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.” (ஏசாயா 66:4, பொ.மொ.) ஏசாயாவால் இந்த வார்த்தைகளை மன உறுதியோடு சொல்ல முடிகிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் தம்முடைய ஜனங்களை ‘அழைத்து’ ‘பேசுவதற்கு’ பல வருடங்களாகவே யெகோவா அவரை பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே, இதுவரையிலும் பெரும்பாலானோர் காது கொடுக்கவில்லை என்பது தீர்க்கதரிசிக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தொடர்ந்து பொல்லாப்பானதையே செய்து வந்ததால், அவர்களுக்கு தண்டனை நிச்சயம். யெகோவா விசுவாச துரோகிகளை நிச்சயமாகவே தண்டித்து, அச்சம் தரும் சம்பவங்களை அவர்கள் மீது வரப்பண்ணுவார்.

10நவீன கால கிறிஸ்தவமண்டலமும் இதுபோலவே யெகோவாவுக்குப் பிரியமல்லாத காரியங்களை செய்து வந்திருக்கிறது. அதன் சர்ச்சுகளில் விக்கிரக வழிபாடு செழித்தோங்குகிறது; சர்ச் பிரசங்க பீடங்களில் வேதப்பூர்வமல்லாத தத்துவங்களும் பாரம்பரிய நம்பிக்கைகளும் புகழ்ந்து பேசப்படுகின்றன; அரசியல் அதிகாரத்திற்கான நாட்டம், உலக தேசங்களோடு ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஆழ்ந்துவிடும் அளவுக்கு அதை வழிநடத்தியுள்ளது. (மாற்கு 7:13; வெளிப்படுத்துதல் 18:4, 5, 9) பூர்வ எருசலேமைப் போன்றே கிறிஸ்தவமண்டலத்திற்கும் தகுதியான தண்டனை​—⁠“அஞ்சுகின்ற” காரியம்​—⁠வருகிறது; அதிலிருந்து தப்ப முடியாது. கடவுளுடைய ஜனங்களிடம் கிறிஸ்தவமண்டலம் நடந்துகொண்டிருக்கும் விதம்தானே இந்தத் தண்டனைக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

11ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “யெகோவாவின் வார்த்தைக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அகற்றிவிடுகிற உங்கள் சகோதரர், நாங்கள் உங்கள் சந்தோஷத்தைக் காணும்படி யெகோவா தமது மகிமை விளங்கச் செய்யட்டும் என்கிறார்களே, அவர்களே வெட்கத்துக்குள்ளாவார்கள்.” (ஏசாயா 66:5, தி.மொ.) ஏசாயாவின் சொந்த நாட்டாராகிய அவருடைய “சகோதரர்,” யெகோவா தேவனை பிரதிநிதித்துவம் செய்து அவருடைய அரசதிகாரத்திற்கு கீழ்ப்பட்டு நடக்க வேண்டிய பொறுப்பை அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். அதைச் செய்யத் தவறுவது உண்மையில் பெரும் பாவம். அதே சமயத்தில், ஏசாயாவைப் போன்ற உண்மையுள்ள, தாழ்மையான மனிதரிடம் காட்டும் பகை அவர்களுடைய பாவத்தை மேலும் கூட்டுகிறது. இந்த உண்மையுள்ளோர் யெகோவா தேவனை உண்மையோடு பிரதிநிதித்துவம் செய்வதன் காரணமாக இவர்களை விசுவாச துரோகிகள் வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்தக் கருத்திலேயே ‘கடவுளுடைய நாமத்தினிமித்தம்’ இவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். அதே சமயத்தில் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக்கொள்ளும் இந்த போலி ஊழியர்கள் பக்தி வேஷத்துடன் ‘யெகோவா தமது மகிமை விளங்கச் செய்வாராக’ என சொல்கிறார்கள். a

12தூய வணக்கத்தை பின்பற்றுவோரை பொய் மதம் பகைப்பது புதிதல்ல. இது ஆதியாகமம் 3:15-⁠ன் மேலுமான நிறைவேற்றமாகும். சாத்தானுடைய வித்துக்கும் கடவுளுடைய ஸ்திரீயின் வித்துக்கும் இடையிலான நெடுநாள் பகையை அத்தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் தங்களுடைய ஜனத்தாரால் துன்புறுத்தப்படுவார்கள் என இயேசு சொன்னார். அவர்களை ஜெப ஆலயங்களிலிருந்து புறம்பாக்கி, துன்புறுத்தி, கொலையும் செய்வார்கள் என்றார். (யோவான் 16:2) நவீன காலங்களில்? ‘கடைசி நாட்களின்’ ஆரம்பத்தில் இதேபோன்ற துன்புறுத்துதல் தங்களுக்கு வரும் என்பதை கடவுளுடைய ஜனங்கள் கண்டனர். (2 தீமோத்தேயு 3:1) 1914-⁠ல், ஏசாயா 66:5-ஐ குறிப்பிட்டு காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு சொன்னது: “கடவுளுடைய ஜனங்களுக்கு நேரிட்ட ஏறக்குறைய எல்லா துன்புறுத்துதல்களும் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்பவரிடமிருந்து வந்தவையே.” அதே கட்டுரை மேலுமாக இவ்வாறு சொன்னது: “நம் நாளில் கடவுளுடைய ஜனங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் அளவுக்கு, அவர்களது அமைப்பைக் கலைக்கும் அளவுக்கு, ஒருவேளை அவர்களை கொலையே செய்யும் அளவுக்கும் சென்று விடுவார்களா என்று நமக்குத் தெரியாது.” அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாகி விட்டன! அக்கட்டுரை வெளிவந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே, முதல் உலகப் போரின்போது குருவர்க்கத்தினரால் தூண்டிவிடப்பட்ட துன்புறுத்துதல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால், முன்னறிவித்தபடியே கிறிஸ்தவமண்டலம் அவமானம் அடைந்தது. எப்படி?

வேகமாக, திடீரென திரும்ப நிலைநாட்டப்படுதல்

13ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறார்: “நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] சத்தந்தானே.” (ஏசாயா 66:6) முதல் நிறைவேற்றத்தில் இந்த ‘நகரம்’ யெகோவாவின் ஆலயம் அமைந்திருக்கும் எருசலேமைக் குறிக்கிறது. ‘அமளியின் இரைச்சல்’ யுத்தத்தின் ஆரவாரத்தைக் குறிக்கிறது. பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனிய படைகள் அதனை தாக்குகிறபோது இச்சத்தம் கேட்கப்படுகிறது. அப்படியானால், நவீன கால நிறைவேற்றம் என்ன?

14ஏசாயாவின் இந்த வார்த்தைகள் மற்ற இரண்டு தீர்க்கதரிசனங்களோடு ஒத்திருக்கின்றன. ஒன்று எசேக்கியேல் 43:4, 6-9-லும் அடுத்தது மல்கியா 3:1-5-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யெகோவா தேவன் தம் ஆலயத்திற்கு வரும் காலத்தை எசேக்கியேலும் மல்கியாவும் முன்னறிவிக்கின்றனர். மல்கியாவின் தீர்க்கதரிசனம், தூய வணக்கத்திற்குரிய ஆலயத்தை பரிசோதனை செய்து புடமிடுவதற்காக யெகோவா வருவதாகவும் தம்மை தவறாக பிரதிநிதித்துவம் செய்பவர்களை புறக்கணிப்பதாகவும் காட்டுகிறது. எசேக்கியேலின் தரிசனம், யெகோவா ஆலயத்திற்குள் நுழைந்து ஒழுக்கக்கேட்டையும் விக்கிரகாராதனையையும் முற்றிலுமாக அகற்றிப் போடும்படி கட்டளையிடுவதை சித்தரித்துக் காட்டுகிறது. b இத்தீர்க்கதரிசனங்களின் நவீன கால நிறைவேற்றத்தில், யெகோவாவின் வணக்கம் சம்பந்தமாக 1918-⁠ல் பரலோகத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. தூய வணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்ததாக உரிமை பாராட்டிய அனைவரையும் யெகோவாவும் இயேசுவும் பரிசோதனை செய்தார்கள். அப்பரிசோதனையின் விளைவாக, போலியான கிறிஸ்தவமண்டலம் இறுதியில் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோ சிறிது காலத்திற்கு புடமிடப்பட்டு, 1919-⁠ல் வெகு விரைவில் ஆவிக்குரிய விதத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டார்கள்.​—1 பேதுரு 4:17.

15இந்த நிலைநாட்டப்படுதல் ஏசாயாவின் பின்வரும் வசனங்களில் சரியாகவே சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது: “பிரசவ வேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.” (ஏசாயா 66:7, 8) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்களிடத்தில் இந்த தீர்க்கதரிசனம் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் முதலில் நிறைவேறுகிறது. மறுபடியுமாக இங்கு சீயோன் அல்லது எருசலேம், பிள்ளை பெறும் ஸ்திரீயைப் போல சித்தரித்துக் காட்டப்படுகிறது. ஆனால் இது ஓர் அசாதாரண பிறப்பு! அவ்வளவு வேகமாகவும் திடீரெனவும், கர்ப்ப வேதனை வருமுன்னரே நிகழ்கிறது! இது ஒரு பொருத்தமான சித்தரிப்பே. பொ.ச.மு. 537-⁠ல் கடவுளுடைய ஜனங்கள் ஒரு விசேஷித்த தேசமாக மறுபடியும் பிறப்பது அவ்வளவு வேகமாகவும் திடீரெனவும் நிகழ்வதால் அற்புதம் போல் தோன்றுகிறது. ஆம், அடிமைத்தனத்தினின்று யூதர்களை கோரேசு விடுவித்து சில மாதங்களுக்குள் அவர்கள் தங்களுடைய தாயகத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்! இஸ்ரவேல் தேசத்தின் முதல் பிறப்பிற்கு வழிநடத்தின சம்பவங்களோடு ஒப்பிட இது எப்பேர்ப்பட்ட மாறுதல்! தங்களை அனுப்பி விடுவதற்கு எதிரி அரசனிடம் கெஞ்ச வேண்டிய அவசியமோ விரோதிகளின் சேனையிடமிருந்து தப்பி ஓடிவர வேண்டிய அவசியமோ 40 வருடங்களை வனாந்தரத்தில் கழிக்க வேண்டிய அவசியமோ பொ.ச.மு. 537-⁠ல் ஏற்படுவதில்லை.

16நவீன கால நிறைவேற்றத்தில் சீயோன், யெகோவாவின் பரலோக ‘ஸ்திரீயை,’ அதாவது ஆவி சிருஷ்டிகள் கொண்ட பரலோக அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. தன்னுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரர் 1919-⁠ல் பூமியில் ‘ஒரு ஜாதியாக,’ ஒழுங்கமைக்கப்பட்ட ஜனமாக பிறந்ததைக் கண்டு அந்த “ஸ்திரீ” மகிழ்ச்சியடைந்தாள். இவ்வாறு மறுபடியுமாக பிறப்பது மிக வேகமாகவும் திடீரெனவும் நடந்தது. c அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் சில மாதங்களுக்குள் ஒரு தொகுதியாக, மரணத்திற்கு ஒத்த செயலற்ற நிலையிலிருந்து விடுபட்டு தங்களுடைய ‘தேசத்தில்,’ அதாவது ஆவிக்குரிய விதமாக செயல்படுவதற்கு கடவுள் கொடுத்த பிராந்தியத்தில் மீண்டும் உயிர்பெற்று, சுறுசுறுப்புடன் செயல்படும் நிலைக்கு வந்தார்கள். (வெளிப்படுத்துதல் 11:8-12) 1919-⁠ன் இலையுதிர் காலத்திற்குள்ளாக, காவற்கோபுரம் பத்திரிகையோடு மற்றொரு பத்திரிகை வெளியிடப் போவதையும் அறிவித்தார்கள். பொற்காலம் (தற்போது விழித்தெழு!) என அழைக்கப்பட்ட இந்த புதிய பத்திரிகை, கடவுளுடைய ஜனங்கள் புது பலம் பெற்று தங்களுடைய சேவைக்காக மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக இருந்தது.

17ஆவிக்குரிய பிரகாரமாக இவ்வாறு மறுபடியும் பிறப்பதை இந்த அண்டத்தின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதை, அடுத்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது: “பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.” (ஏசாயா 66:9) பிரசவம் ஆரம்பித்துவிட்டபின் அதை யாராலும் தடுக்க முடியாததைப் போலவே ஆவிக்குரிய இஸ்ரவேல் மறுபடியும் பிறப்பது ஆரம்பித்தபின் அதை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர்களுக்கு எதிர்ப்பு இருந்தது உண்மைதான், வருங்காலத்தில் இன்னும் அதிகமான எதிர்ப்பை எதிர்பார்க்கலாம். யெகோவா ஆரம்பித்து வைக்கும் ஒன்றை அவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும், ஆனால் அவர் ஒருபோதும் அவ்வாறு தடுப்பதில்லை! அப்படியானால் மறுபடியும் உயிர்ப்பூட்டப்பட்ட இந்த ஜனங்களை யெகோவா எப்படி நடத்துகிறார்?

யெகோவாவின் கனிவான பராமரிப்பு

18அடுத்து வரும் நான்கு வசனங்கள் யெகோவாவின் கனிவான பராமரிப்பை மனதைத் தொடும் வண்ணம் சித்தரித்துக் காட்டுகின்றன. முதலாவதாக ஏசாயா இவ்வாறு கூறுகிறார்: “எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக் குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள். நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்.” (ஏசாயா 66:10, 11) தன் குழந்தைக்குப் பாலூட்டும் ஒரு ஸ்திரீயை யெகோவா இங்கு உவமையாக பயன்படுத்துகிறார். குழந்தைக்குப் பசியெடுக்கும்போது அது விடாமல் அழுகிறது. ஆனால், பாலூட்டுவதற்கு தாய் குழந்தையை மார்போடு சேர்த்துக் கொள்ளும்போது, அதன் அழுகையெல்லாம் அடங்கி சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைகிறது. அவ்வாறே பாபிலோனிலுள்ள உண்மையான யூதர்களில் மீதியானோர் விடுதலை பெற்று மீண்டும் நிலைநாட்டப்படும் சமயம் வருகையில் அவர்கள் துயருற்ற நிலையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியும் திருப்தியுமான நிலைக்கு வெகு விரைவில் கொண்டு வரப்படுவர். அவர்கள் பேரானந்தம் அடைவர். எருசலேம் மறுபடியுமாக கட்டப்பட்டு குடியேற்றப்படுவதால் அது மீண்டும் மகிமையைப் பெறும். நகரத்தின் மகிமையை அதன் உண்மையுள்ள குடிமக்களும் பெறுவர். அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆசாரியர்களால் மறுபடியுமாக ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படுவார்கள்.​—எசேக்கியேல் 44:15, 23.

19ஆவிக்குரிய இஸ்ரவேலும் 1919-⁠ல் மீண்டும் நிலைநாட்டப்பட்ட பின், ஏராளமான போஷாக்கைப் பெற்றது. அது முதற்கொண்டு, ஆவிக்குரிய உணவு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாக ஒரே சீராக அளிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:45-47, NW) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு இது ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்குமான சமயமாக இருந்தது. ஆனால் மேலுமான ஆசீர்வாதங்களும் இருந்திருக்கின்றன.

20தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.” (ஏசாயா 66:12) பெருக்கெடுத்துவரும் ‘நதியையும்’ ‘புரண்டு ஓடுகிற ஆற்றையும்’ போன்ற அபரிமிதமான ஆசீர்வாதங்களோடு இங்கு பாலூட்டுதல் இணைத்து பேசப்படுகிறது. எருசலேம், யெகோவாவிடமிருந்து வரும் அபரிமிதமான சமாதானத்தால் மட்டுமின்றி கடவுளுடைய ஜனங்களிடமாக பாய்ந்து வந்து அவர்களை ஆசீர்வதிக்கிற ‘தேசங்களின் மகிமையாலும்’ ஆசீர்வதிக்கப்படும். புறதேசத்தினர் யெகோவாவின் ஜனங்களிடத்திற்குத் திரண்டு வருவார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. (ஆகாய் 2:7) பூர்வ நிறைவேற்றத்தில் பல்வேறு தேசத்தார் இஸ்ரவேலுடன் சேர்ந்து கொண்டு யூத மதத்திற்கு மாறினார்கள். ஆனால் இன்றோ இது மிகப் பெரிய அளவில் நிறைவேறியிருக்கிறது. “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்”—⁠உண்மையிலேயே ‘புரண்டு ஓடும்’ மக்கள் திரள்​—⁠ஆவிக்குரிய யூதர்களில் மீதியானோரிடம் சேர்ந்து கொண்டுள்ளனர்.​—வெளிப்படுத்துதல் 7:9; சகரியா 8:23.

21ஏசாயா 66:12, குழந்தையை முழங்காலில் வைத்துத் தாலாட்டி இடுப்பில் வைத்து சுமப்பதைப் போன்ற தாயின் அன்பைப் பற்றியும் பேசுகிறது. அடுத்த வசனம் இதேபோன்ற விஷயத்தை வித்தியாசமான கோணத்தில் எடுத்துரைக்கிறது: “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.” (ஏசாயா 66:13) இப்போது குழந்தை வளர்ந்து பெரியவனாகி விடுகிறான். ஆனாலும் அவனுக்கு துன்பம் நேரிடுகையில் ஆறுதல்படுத்த வேண்டும் என்ற ஆவல் அந்தத் தாய்க்கு இன்னும் இருக்கிறது.

22யெகோவா தம் ஜனங்களிடம் காட்டும் அன்பின் வலிமையையும் கனிவையும் இவ்வாறு மனதைக் கவரும் வண்ணம் விளக்குகிறார். மிகவும் பலமான தாய் பாசம்கூட உண்மையுள்ள ஜனங்களிடம் யெகோவா காட்டும் ஆழ்ந்த அன்பின் ஒரு சிறிய வெளிக்காட்டே. (ஏசாயா 49:15) அப்படியானால், கிறிஸ்தவர்கள் அனைவரும் பரலோகத் தகப்பனின் இந்தப் பண்பை வெளிக்காட்டுவது எந்தளவுக்கு முக்கியமானது! அப்போஸ்தலனாகிய பவுல் இதை வெளிக்காட்டினார், இவ்வாறு கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களுக்கு அவர் ஒரு சிறந்த மாதிரியை வைத்தார். (1 தெசலோனிக்கேயர் 2:7) சகோதர அன்பே தம்முடைய சீஷர்களுக்கு தலைசிறந்த அடையாளம் என இயேசு சொன்னார்.​—யோவான் 13:34, 35.

23தம் அன்பை யெகோவா செயலில் காட்டுகிறார். ஆகவே, அவர் இவ்வாறு சொல்கிறார்: “இதை நீங்கள் [“நிச்சயமாகவே,” NW] காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் [“கரத்தை,” NW] தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.” (ஏசாயா 66:14, பொ.மொ.) “நீங்கள் நிச்சயமாகவே காண்பீர்கள்” என்ற சொற்றொடர், திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்திற்குத் திரும்பும் நாடுகடத்தப்பட்டோர் பார்க்கும் இடமெல்லாம் “மகிழ்ச்சியையே காண்பார்கள்” என்பதை குறிக்கிறது என எபிரெய மொழியின் இலக்கண பண்டிதர் ஒருவர் கூறுகிறார். மீண்டும் தங்களுடைய பிரியமான தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதால் அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் எல்லையே இருக்காது. இளவேனில் காலத்து பசும்புல் செழித்து காணப்படுவதுபோல் அவர்களுடைய எலும்புகள் மீண்டும் வலுவடைந்து புத்துயிர் அளிக்கப்பட்டதைப் போன்று உணருவார்கள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலை எந்த மனித முயற்சியாலும் அல்ல, ஆனால் ‘கடவுளுடைய கரத்தால்’ வந்தது என்பதை எல்லாரும் அறிவர்.

24யெகோவாவின் கரம் இன்று அவருடைய ஜனங்களிடையே செயல்படுவதை நீங்கள் உணருகிறீர்களா? எந்த மனிதனாலும் தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முடிந்திருக்காது. அருமையான ஆயிரக்கணக்கானோர் உண்மையான மீதியானோரோடு ஆவிக்குரிய தேசத்தில் சேர்ந்து கொள்வதற்கு எல்லா தேசங்களிலிருந்தும் திரண்டு வந்திருப்பது எந்த மனித முயற்சியாலும் அல்ல. யெகோவாவால் மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியும். யெகோவாவுடைய அன்பின் இத்தகைய வெளிக்காட்டுதல்கள் நம் உள்ளப்பூர்வமான மகிழ்ச்சிக்கு காரணங்களாக இருக்கின்றன. ஆகவே அவருடைய அன்பை நாம் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ளாதிருப்போமாக. தொடர்ந்து ‘அவருடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களாக’ இருப்போமாக. பைபிள் நியமங்களுக்கு இசைய வாழ்ந்து யெகோவாவை சேவிப்பதில் மகிழ்ச்சியை கண்டடைவதே நம் தீர்மானமாக இருப்பதாக.

[அடிக்குறிப்புகள்]

a இன்று கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பலர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த மறுக்கிறார்கள், எண்ணற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அப்பெயரை அகற்றவும் செய்கிறார்கள். கடவுளுடைய ஜனங்கள் அவருடைய பெயரை பயன்படுத்துவதால் சிலர் கேலி செய்கிறார்கள். ஆனாலும், இவ்வாறு கேலி செய்பவர்களில் பலர் பக்திக்கு அடையாளமாக “அல்லேலூயா” என்ற வார்த்தையை சொல்கிறார்கள். அதன் அர்த்தம் “யாவைத் துதி” என்பதாகும்.

b எசேக்கியேல் 43:7, 9-⁠ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ராஜாக்களின் பிரேதங்கள்’ என்ற சொற்றொடர் விக்கிரகங்களைக் குறிக்கிறது. எருசலேமின் கலகக்கார ஆட்சியாளர்களும் ஜனங்களும் கடவுளுடைய ஆலயத்தை விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தி, அவற்றை ராஜாக்களாகவே ஆக்கியிருந்தனர்.

c இங்கு தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ள பிறப்பும் வெளிப்படுத்துதல் 12:1, 2, 5-⁠ல் சொல்லப்பட்டுள்ள பிறப்பும் ஒன்றல்ல. வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள “ஆண் பிள்ளை” 1914 முதல் செயல்பட ஆரம்பித்த மேசியானிய ராஜ்யத்தை சித்தரித்துக் காட்டுகிறது. என்றாலும் இரண்டு தீர்க்கதரிசனங்களிலும் சொல்லப்பட்டுள்ள “ஸ்திரீ” ஒன்றே.

[கேள்விகள்]

1. ஏசாயா புத்தகத்தின் கடைசி அதிகாரத்தில் என்ன விஷயங்கள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன, என்ன கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுகிறது?

2. தம்முடைய மேன்மையைக் குறித்து யெகோவா என்ன உரைக்கிறார், இது எதை அர்த்தப்படுத்தாது?

3. பூமியை யெகோவாவின் “பாதபடி” என அழைப்பது ஏன் பொருத்தமானது?

4. (அ) பூமியிலுள்ள எந்தக் கட்டிடத்திலும் யெகோவா தேவன் வாசம் செய்வது ஏன் முடியாத விஷயம்? (ஆ) “இவைகளையெல்லாம்” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது, யெகோவாவை வணங்குவதைக் குறித்ததில் நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்?

5. ‘சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டவர்கள்’ என்பதை நாம் எவ்வாறு காட்ட முடியும்?

6. என்ன கருத்தில் உண்மை வணக்கத்தார் ‘கடவுளுடைய வசனத்துக்கு நடுங்க’ வேண்டும்?

7, 8. மத பாசாங்குக்காரர்களின் சம்பிரதாய வழிபாட்டை யெகோவா எப்படி கருதுகிறார்?

9. ஏசாயா மூலமாக யெகோவா கொடுத்த நினைப்பூட்டுதல்களுக்கு யூதர்கள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள், அவர்கள் என்ன விளைவை கண்டிப்பாக அனுபவிப்பர்?

10. யூதாவிடம் யெகோவா செயல்பட்ட விதம் கிறிஸ்தவமண்டலத்தை குறித்ததில் அவருடைய நோக்குநிலையைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?

11. (அ) ஏசாயாவின் காலத்து விசுவாச துரோகிகளின் பாவத்தை எது கூட்டுகிறது? (ஆ) ஏசாயாவின் காலத்து ஜனங்கள் உண்மையுள்ளோரை என்ன கருத்தில் ‘கடவுளுடைய நாமத்தினிமித்தம்’ வெறுத்து ஒதுக்குகிறார்கள்?

12. மத பாசாங்குக்காரரால் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர் அனுபவித்த துன்புறுத்துதலுக்கு சில உதாரணங்கள் யாவை?

13. முதல் நிறைவேற்றத்தில் ‘நகரத்திலிருந்து கேட்கப்படும் அமளியின் இரைச்சல்’ என்ன?

14. (அ) யெகோவா தம் ஆலயத்திற்கு வருவதைக் குறித்து மல்கியா என்ன முன்னறிவித்தார்? (ஆ) எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின்படி யெகோவா ஆலயத்திற்கு வந்தபோது என்ன நிகழ்ந்தது? (இ) யெகோவாவும் இயேசுவும் ஆவிக்குரிய ஆலயத்தை பரிசோதனை செய்தது எப்போது, தூய வணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமை பாராட்டியவர்களுக்கு என்ன நேரிட்டது?

15. என்ன விதமான பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது, பொ.ச.மு. 537-⁠ல் இது எவ்வாறு நிறைவேறுகிறது?

16. ஏசாயா 66:​7, 8-⁠ன் நவீன கால நிறைவேற்றத்தில் சீயோன் எதை சித்தரித்துக் காட்டுகிறது, அதன் பிள்ளைகள் மறுபடியும் பிறந்தது எப்படி?

17. ஆவிக்குரிய இஸ்ரவேல் சம்பந்தமாக தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் எதுவும் தம்மை தடுப்பதில்லை என்பதை தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா எவ்வாறு உறுதிப்படுத்துகிறார்?

18, 19. (அ) மனதைத் தொடும் என்ன உவமையை யெகோவா பயன்படுத்துகிறார், நாடுகடத்தப்பட்ட ஜனங்களுக்கு இது எவ்வாறு பொருந்துகிறது? (ஆ) இன்றைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் இந்த அன்பான போஷாக்கிலிருந்தும் பராமரிப்பிலிருந்தும் எவ்வாறு நன்மையடைந்திருக்கின்றனர்?

20. பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் எருசலேம் எவ்வாறு ‘புரண்டு ஓடுகிற ஆற்றால்’ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது?

21. என்ன விதமான ஆறுதல் மனதைக் கவரும் வார்த்தைகளில் முன்னுரைக்கப்படுகிறது?

22. தம்முடைய அன்பின் வலிமையையும் கனிவையும் யெகோவா எவ்வாறு காட்டுகிறார்?

23. மீண்டும் நிலைநாட்டப்பட்ட யெகோவாவுடைய ஜனங்களின் மகிழ்ச்சியான நிலையை விளக்கவும்.

24. (அ) இன்று யெகோவாவின் ஜனங்களை உட்படுத்தும் சம்பவங்களை சிந்திக்கையில் நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? (ஆ) நம் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

[பக்கம் 395-ன் படம்]

‘என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்தது’

[பக்கம் 402-ன் படம்]

“தேசங்களின் மகிமையை” யெகோவா சீயோனுக்கு அருளுவார்