Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்

நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்

அதிகாரம் பதினெட்டு

நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்

ஏசாயா 57:1-21

“உயர்ந்தவரும் உன்னதமானவரும் நித்தியத்திற்கும் இருப்பவரும் பரிசுத்தர் என்கிற பெயரை உடையவருமாகியவர் கூறுவது இதுவே: ‘உயர்ந்த, பரிசுத்தமான இடத்திலே நான் குடியிருக்கிறேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் இருக்கிறேன்; நலிந்த நெஞ்சத்தினருக்கு புத்துயிரூட்டவும் நொறுங்கிய உள்ளத்தினரை திடப்படுத்தவுமே அவர்களோடு இருக்கிறேன்.’” (ஏசாயா 57:15, NW) பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் தீர்க்கதரிசி ஏசாயா இப்படி எழுதினார். அப்போது யூதாவில் எப்படிப்பட்ட நிலைமை நிலவியதால் இந்த செய்தி மிகுந்த உற்சாகம் அளித்தது? ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவுகின்றன? ஏசாயா 57-⁠ம் அதிகாரத்தை சிந்திப்பது இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.

“மனிதரே, . . . இங்கே அருகில் வாருங்கள்”

2ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதி, அவருடைய நாட்களுக்கே பொருந்துவதாக தெரிகிறது. துன்மார்க்கம் எந்தளவு புரையோடியிருக்கிறது என்பதை சற்று கவனியுங்கள்: “நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதை சிந்திப்பார் இல்லை. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.” (ஏசாயா 57:1, 2) நீதிமானுக்கு தீங்கு ஏதேனும் ஏற்பட்டால், யாரும் பொருட்படுத்துவதில்லை. அவன் அகால மரணமடைந்தாலும் அது கவனிக்கப்படாமல் போகிறது. மரண நித்திரை அவனுக்கு சமாதானத்தைத் தருகிறது, அதோடு கடவுள் பக்தியற்றோரால் வரும் துன்பங்களில் இருந்து விடுதலையையும் வேதனைகளிலிருந்து விடிவையும் தருகிறது. கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட தேசம் மிக இழிவான நிலைக்கு சென்று விட்டிருக்கிறது. ஆனால், விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள், நடந்துகொண்டிருப்பவற்றை யெகோவா பார்ப்பது மட்டுமல்லாமல் தங்களுக்கு ஆதரவும் அளிப்பார் என்பதை அறிந்து எந்தளவு உற்சாகம் பெறலாம்!

3யூதாவின் துன்மார்க்க சந்ததியாருக்கு பின்வருமாறு யெகோவா அழைப்பு விடுக்கிறார்: “மனிதரே, குறிசொல்கிறவளின் மகன்களே, விபசாரனின், விபசாரியின் வாரிசே, இங்கே அருகில் வாருங்கள்.” (ஏசாயா 57:⁠3, NW) அவர்கள், குறிசொல்கிறவளின் மகன்கள் எனவும் விபசாரன், விபசாரியின் வாரிசு எனவும் வெட்கக்கேடான பெயர்களை சம்பாதித்திருக்கின்றனர். அருவருப்பான விக்கிரகாராதனை, ஆவிகளோடு தொடர்பு கொள்ளுதல் மற்றும் ஒழுக்கக்கேடான பாலுறவுப் பழக்கங்கள் அடங்கிய பொய் வணக்கத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். எனவே, அந்தப் பாவிகளை யெகோவா பின்வருமாறு கேட்கிறார்: “நீங்கள் யாரைப் பரியாசம் பண்ணுகிறீர்கள்? [“மதிக்காமல் களியாட்டம் பண்ணுகிறீர்கள்?” NW] யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம் பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? நீங்கள் [“பெரிய மரங்களின் கீழும்,” NW] பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.”​—ஏசாயா 57:4, 5.

4யூதாவின் துன்மார்க்க ஜனங்கள் படுமோசமான பொய் வணக்கப் பழக்கங்களில் வெளிப்படையாய் ஈடுபட்டு, ‘களியாட்டம் பண்ணுகின்றனர்.’ அவர்களைத் திருத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கும் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை அவமதித்து, ஏளனம் செய்கின்றனர். மரியாதை சிறிதுமின்றி, நாக்கை வெளியே நீட்டி வெட்கமில்லா தோரணையில் பழித்துக்காட்டுகின்றனர். ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கிறபோதிலும், அவர்களுடைய கலகத்தனமான போக்கால் துரோகம் பண்ணுகிற பிள்ளைகளாயும் கள்ளச் சந்ததியாராகவும் நிரூபிக்கின்றனர். (ஏசாயா 1:4; 30:9; யோவான் 8:39, 44) நாட்டுப்புறத்திலுள்ள பெரிய மரங்களின்கீழ் சிலைகளை உண்டாக்கி பொய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கின்றனர். அதுமட்டுமா, தங்கள் பிள்ளைகளையும் பலி கொடுக்கின்றனர். என்ன குரூரமான வழிபாடு! அந்த தேசத்திலிருந்து யெகோவா விரட்டிவிட்ட ஜனங்களின் அருவருக்கத்தக்க பழக்கங்களையே இவர்களும் பின்பற்றுகின்றனர்!​—1 இராஜாக்கள் 14:23; 2 இராஜாக்கள் 16:3, 4; ஏசாயா 1:⁠29.

கற்களுக்கு பானபலியை வார்த்தல்

5யூதாவின் குடிமக்கள் விக்கிரகாராதனையில் எந்தளவு மூழ்கியிருக்கின்றனர் என்பதை சற்று கவனியுங்கள்: “நீரோடை பாயும் இடங்களிலுள்ள வழுவழுப்பான கற்களே உன் பங்கு; அவைகள், அவைகளே, உனக்கு விழுந்த பங்கு; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகள் எனக்குத் திருப்தியாகுமோ [“ஆறுதலளிக்குமோ,” NW]?” (ஏசாயா 57:⁠6, தி.மொ.) யூதர்கள் கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள். இருந்தாலும், அவரை வணங்குவதற்குப் பதிலாக, ஆற்றுப்படுகையிலிருந்து கற்களை எடுத்து சிலைகளை வடிக்கின்றனர். யெகோவாவே தன் பங்கு என தாவீது குறிப்பிட்டார்; ஆனால், அந்தப் பாவிகளோ, உயிரற்ற கற்களாலான விக்கிரகங்களைத் தங்கள் பங்காக தேர்ந்தெடுக்கின்றனர். அவற்றிற்கு பானபலியையும் வார்க்கின்றனர். (சங்கீதம் 16:5; ஆபகூக் 2:19) தம் பெயரை தாங்கிய ஜனங்களே இப்படி வழிபாட்டில் நெறி தவறி போவதில் யெகோவா என்ன ஆறுதலைப் பெற முடியும்?

6பெரிய மரங்களின்கீழும், பள்ளத்தாக்குகளிலும், மலைகளிலும், பட்டணங்களிலும் என ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் யூதா விக்கிரகங்களை உண்டாக்கி வணங்குகிறது. ஆனால், யெகோவா இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். யூதாவின் இழி நிலையை ஏசாயா மூலமாக வெட்டவெளிச்சமாக்குகிறார்: “நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்.” (ஏசாயா 57:7-8அ) சகல மேடான இடங்களிலும், ஆவிக்குரிய அசுசியின் மஞ்சத்தை யூதா விரிக்கிறது. அங்கு புறமதக் கடவுட்களுக்கு பலியிடுகிறது. a வீடுகளில்கூட, கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

7யூதா ஏன் இவ்வளவு அசுத்தமான வணக்கத்தில் ஈடுபட்டிருக்கிறது என சிலர் யோசிக்கலாம். யெகோவாவை விட்டுவிடும்படி ஏதேனும் பலமான சக்தி அவர்களை வற்புறுத்தியிருக்கிறதா? இல்லை. யூதா தானாகவே மனப்பூர்வமாக அந்தப் பாவத்தை செய்கிறது. யெகோவா சொல்லுகிறார்: “நீ என்னை விட்டுவிட்டாய், உன் ஆடையைக் கழற்றி மஞ்சத்திலேறினாய், அதில் பிறர்க்கு இடங்கொடுத்து அவர்களோடு ஒப்பந்தம் பண்ணினாய்; அவர்களோடு மஞ்சத்திலிருக்கப் பிரியங்கொண்டாய், அவர்கள் அவமானத்தைக் [“ஆண்குறியை,” NW] கண்டாய்.” (ஏசாயா 57:8ஆ, தி.மொ.) பொய்க் கடவுட்களோடு யூதா ஓர் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அவற்றோடு தகாத உறவை வைத்துக்கொள்ளவே அது பிரியப்படுகிறது. அந்தக் கடவுட்களின் வணக்கத்தில் பிரத்தியேகமாய் விளங்கும் ஒழுக்கக்கேடான பாலுறவு பழக்கங்களை​—⁠ஒருவேளை ஆண்குறி அடையாளங்களை பயன்படுத்துவது உட்பட்ட பழக்கங்களை​—⁠அது முக்கியமாக விரும்புகிறது!

8மிக ஒழுக்கக்கேடான, குரூரமான விக்கிரக வணக்கத்தைப் பற்றிய இந்த விவரிப்பு, யூதாவின் துன்மார்க்க அரசர்கள் பலரைப் பற்றி நாம் அறிந்திருப்பதோடு மிகவும் பொருந்துகிறது. உதாரணமாக, மனாசேயை எடுத்துக்கொள்ளுங்கள். மேடைகளையும் பாகாலுக்கு பலிபீடங்களையும் கட்டினான். ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் பொய் கடவுட்களுக்கு பலிபீடங்களை நிறுவினான். தன் குமாரர்களை பொய்க் கடவுட்களுக்கு நெருப்பில் பலி செலுத்தினான்; மாயமந்திரங்களில் ஈடுபட்டான்; அஞ்சனம் பார்த்தான்; ஆவியுலக தொடர்புடைய பழக்கங்களை முன்னேற்றுவித்தான். அரசனாகிய மனாசே தான் உருவாக்கிய பரிசுத்த கம்பத்தை யெகோவாவின் ஆலயத்தில் வைத்தான். b “யெகோவா அழித்த பிற தேசத்தாரைவிட அதிகமாக தீயதை” செய்வதற்கு யூதாவை மனாசே ஏவினான். (2 இராஜாக்கள் 21:2-9, NW) ஏசாயாவை மனாசேதான் கொல்ல ஆணையிட்டான் என்பதாக சிலர் கருதுகின்றனர். என்றாலும், ஏசாயா 1:1-⁠ல் மனாசேயின் பெயர் காணப்படவில்லை.

‘உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பினாய்’

9பொய்க் கடவுட்களை வணங்குவதோடு யூதாவின் பாவம் நின்றுவிடவில்லை. ஏசாயா மூலம் யெகோவா இப்படி சொல்கிறார்: “நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் [“மேலேக்,” NW] போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்.” (ஏசாயா 57:⁠9) விசுவாசமற்ற யூத ராஜ்யம், ‘மேலேக்கிடம்’ செல்கிறது. மேலேக் என்ற பதம் எபிரெயுவில் “ராஜா”​—⁠ஒருவேளை வேற்று தேசத்து ராஜா​—⁠என்ற அர்த்தத்தைத் தருகிறது. தைலம், நறுமணப் பரிமளங்களால் அடையாளப்படுத்தப்படும் கவர்ச்சிமிக்க, விலையுயர்ந்த பரிசுகளை யூதா மேலேக்கிடம் கொடுக்கிறது. தொலைதூர நாடுகளுக்கும் யூதா தன் ஸ்தானாபதிகளை அனுப்புகிறது. ஏன்? தன்னோடு அரசியல் கூட்டுறவு வைத்துக்கொள்வதற்கு புற தேசங்களை இணங்கச் செய்யவே. யெகோவாவை புறக்கணித்துவிட்டு, வேற்று தேசத்து ராஜாக்களை நம்புகிறது.

10ஆகாஸ் ராஜாவின் நாட்களில் நடக்கும் சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இஸ்ரவேலும் சீரியாவும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. இதைக் கேள்விப்பட்டு பயந்த, விசுவாசமற்ற யூதாவின் ராஜா அசீரியாவின் அரசன் மூன்றாம் திகிலாத்பிலேசரிடத்திற்கு தூதர்களை அனுப்பி: “நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும்” என்று சொல்லச் சொல்கிறான். அசீரியாவின் ராஜாவுக்கு லஞ்சமாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறான். இதற்கு உடன்பட்டு, அசீரியா ராஜா சீரியாவின்மேல் கடும் தாக்குதல் நடத்துகிறான். (2 இராஜாக்கள் 16:7-9) புற தேசத்தாருடன் உறவு வைத்துக்கொள்வதற்காக, “பாதாளமட்டும்” யூதா தன்னை தாழ்த்துகிறது. இதனால், அது மரணத்தையே சந்திக்கும். அதாவது தனக்கென ஒரு ராஜாவை உடைய தனிநாடாக இனியும் இருக்காது.

11யூதாவிடம் யெகோவா தொடர்ந்து சொல்வதாவது: “உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய் [“பல வழிகளில் நீ கடுமையாய் முயன்றாய்,” NW]; ஆயினும், ‘இது வீண்’ என்று நீ சொல்லவில்லை; உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்; ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.” (ஏசாயா 57:10, பொ.மொ.) விசுவாசதுரோக வழிகளில் தேசம் கடுமையாய் உழைத்திருக்கிறது; ஆனாலும் தன் வழிகள் அனைத்தும் வீணென உணரத் தவறுகிறது. அதற்கு மாறாக, தன்னுடைய சொந்த ஆற்றலில் வெற்றி பெறலாம் என தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது. புதுத்தெம்போடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதாக உணருகிறது. என்னே மடத்தனம்!

12ஏசாயாவின் நாட்களிலிருந்த யூதாவைப் போன்றே இன்றும் ஓர் அமைப்பு நடந்துகொள்கிறது. கிறிஸ்தவமண்டலம் இயேசுவின் பெயரை பயன்படுத்துகிறது; ஆனால், தேசங்களோடு ஒப்பந்தங்களையும் நாடுகிறது. தன் வணக்க ஸ்தலங்கள் முழுவதையும் விக்கிரகத்தால் நிரப்பியிருக்கிறது. அதன் உறுப்பினர்கள் தங்கள் வீடுகளிலும் விக்கிரகங்களை வைத்திருக்கின்றனர். தேசங்களுக்கு இடையேயான போர்களில் இளைஞர் அநேகரை கிறிஸ்தவமண்டலம் பலி கொடுத்திருக்கிறது. “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கும் மெய்க் கடவுளுக்கு இவை அனைத்தும் எத்தனை வேதனை அளிக்கும்! (1 கொரிந்தியர் 10:14) அரசியலில் ஈடுபடுவதால், கிறிஸ்தவமண்டலம் இந்த ‘பூமியின் ராஜாக்களோடே வேசித்தனம் செய்கிறது.’ (வெளிப்படுத்துதல் 17:1, 2) சொல்லப்போனால், ஐக்கிய நாட்டு சங்கத்திற்கு முக்கிய ஆதரவளிப்பது கிறிஸ்தவமண்டலமே. இந்த மத வேசிக்கு என்ன காத்திருக்கிறது? இதற்கு படமாய் இருந்த விசுவாசமற்ற யூதாவிடம், முக்கியமாக அதைப் பிரதிநிதித்துவம் செய்த அதன் தலைநகராகிய எருசலேமிடம் யெகோவா என்ன சொல்கிறார்?

‘நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்காது’

13“யாருக்கு அஞ்சி நடுநடுங்கிப் பொய் சொல்லுகிறாய்?” (NW) என யெகோவா கேட்கிறார். பொருத்தமான கேள்விதான்! யூதாவுக்கு கடவுள் பயமே இல்லை. யெகோவாவிடம் உண்மையான பயமில்லை. அப்படி இருந்திருந்தால், அந்த தேசத்தார் பொய்யர்களாகவும் பொய்க் கடவுட்களின் வணக்கத்தாராகவும் மாறியிருக்க மாட்டார்கள். யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: “நீ என்னை நினைவுகூரவில்லை; என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?” (ஏசாயா 57:11, பொ.மொ.) யெகோவா அமைதியாக இருந்திருக்கிறார்; யூதா செய்த பாவங்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கவில்லை. இதை யூதா மதிக்கிறதா? இல்லை. கடவுளது பொறுமையை மதித்துணருவதற்கு பதிலாக, அவர் கண்டுங்காணாமல் மெத்தனமாக இருப்பதாக நினைக்கிறது. கடவுள் பயம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது.

14என்றாலும், கடவுளின் நீடிய பொறுமையின் காலம் முடிவுறும். அந்த காலத்தைக் குறித்து யெகோவா அறிவிக்கிறார்: “உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்; அவை உனக்கு உதவா. நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! [“விடுவிக்காது!,” NW] காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்; வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்.” (ஏசாயா 57:12, 13அ, பொ.மொ.) யூதாவின் போலித்தனமான நேர்மையை யெகோவா அம்பலமாக்குவார். அதன் மாய்மாலமான செயல்கள் ஏதும் உதவா. அது “திரட்டிய சிலைகள்” அனைத்தும் அதை விடுவிக்க மாட்டா. அழிவு வருகையில், அது நம்பியிருக்கும் கடவுட்கள் அனைத்தையும் வெறும் மூச்சே ஊதித் தள்ளிவிடும்.

15பொ.ச.மு. 607-⁠ல், யெகோவாவின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. அப்போதுதான், பாபிலோனிய ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமை அழித்து, அதன் ஆலயத்தை சுட்டெரித்து, பெரும்பாலான ஜனங்களை கைதிகளாக கொண்டு செல்கிறான். “இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டு போகப்பட்டார்கள்.”​—2 இராஜாக்கள் 25:1-21.

16அதைப்போலவே, கிறிஸ்தவமண்டலம் திரட்டியிருக்கும் பெரும் எண்ணிக்கையான விக்கிரகங்களும், யெகோவாவின் கோபத்தின் நாளிலே அதை விடுவிக்க மாட்டா. (ஏசாயா 2:19-22; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ பாகமாக இருக்கும் மற்ற மதங்களோடு சேர்ந்து கிறிஸ்தவமண்டலமும் அழிக்கப்படும். அடையாள அர்த்தமுடைய சிவப்பு நிற மூர்க்க மிருகமும் அதன் பத்து கொம்புகளும், ‘[மகா பாபிலோனை] பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடும்.’ (வெளிப்படுத்துதல் 17:3, 16, 17) “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்ற கட்டளைக்கு கீழ்ப்படிந்ததற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! (வெளிப்படுத்துதல் 18:4, 5) அவளிடமோ அல்லது அவளுடைய வழிகளிடமோ ஒருபோதும் மீண்டும் செல்லாமல் இருப்போமாக.

“என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்”

17ஏசாயா தீர்க்கதரிசனத்தில் அடுத்து வரும் வார்த்தைகளைப் பற்றியதென்ன? “என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் திருமலையை [“பரிசுத்த மலையை,” NW] உடைமையாய்ப் பெறுவர்.” (ஏசாயா 57:13ஆ, பொ.மொ.) யெகோவா இப்போது யாரிடம் பேசுகிறார்? வர இருக்கும் அழிவுக்குப் பின் நடக்கப்போவதை அவர் சொல்கிறார். தம் ஜனங்கள் பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்படுவதையும், அவருடைய பரிசுத்த மலையாகிய எருசலேமிலே மெய் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதையும் அவர் முன்னறிவிக்கிறார். (ஏசாயா 66:20; தானியேல் 9:16) விசுவாசத்தில் நிலைத்திருக்கும் எந்தவொரு யூதனுக்கும் இந்த வார்த்தைகள் எவ்வளவு உற்சாகத்தை அளிக்கும்! மேலும், யெகோவா சொல்கிறார்: “வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.” (ஏசாயா 57:14) கடவுள் தம் ஜனங்களை விடுவிக்கும் நேரம் வரும்போது, பாதை தயாராக இருக்கும். எல்லா தடைகளும் அறவே நீக்கப்படும்.​—2 நாளாகமம் 36:22, 23.

18இந்த சந்தர்ப்பத்தில்தான், ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளை ஏசாயா தீர்க்கதரிசி உரைக்கிறார்: “உயர்ந்தவரும் உன்னதமானவரும் நித்தியத்திற்கும் இருப்பவரும் பரிசுத்தர் என்கிற பெயரையும் உடையவராகியவர் கூறுவது இதுவே: ‘உயர்ந்த, பரிசுத்தமான இடத்திலே நான் குடியிருக்கிறேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் இருக்கிறேன்; நலிந்த நெஞ்சத்தினருக்கு புத்துயிரூட்டவும் நொறுங்கிய உள்ளத்தினரை திடப்படுத்தவுமே அவர்களோடு இருக்கிறேன்.’” (ஏசாயா 57:15, NW) யெகோவாவின் சிங்காசனம் வானாதி வானங்களில் இருக்கிறது. இதைவிட உயர்வான அல்லது மேன்மையான இடம் எதுவுமே இல்லை. இவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்து அவர் எல்லாவற்றையும், துன்மார்க்கரின் பாவங்களை மட்டுமல்ல, தம்மை சேவிக்க விரும்புவோரின் நீதியான செயல்களையும் பார்க்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (சங்கீதம் 102:20; 103:6) மேலும், ஒடுக்கப்படுவோரின் முனகலை கேட்கிறார்; நொறுங்கிய உள்ளத்தினரை திடப்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் பூர்வ காலத்தில் மனந்திரும்பிய யூதர்களின் நெஞ்சை நிச்சயம் தொட்டிருக்கும். இன்றும் அவை நம் நெஞ்சை வருடுகின்றன.

19யெகோவா தொடர்ந்து சொல்லும் வார்த்தைகளும் ஆறுதல் அளிக்கின்றன: “நான் எப்போதும் வழக்காட மாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.” (ஏசாயா 57:16) யெகோவாவின் கோபம் முடிவில்லாமல் நிலைத்திருந்தால், அவருடைய சிருஷ்டிகள் எதுவுமே தப்ப முடியாது. ஆனால், கடவுளுடைய கோபம் குறிப்பிட்ட காலத்திற்கே என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவருடைய கோபத்தின் நோக்கம் நிறைவேறியதும் அது மறைந்துவிடுகிறது. ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் அளிக்கும் உட்பார்வை, யெகோவா தம் படைப்புகளிடம் காட்டும் அன்பை நாம் மதித்துப் போற்ற பெரிதும் உதவுகின்றன.

20யெகோவா தொடர்ந்து பேசுகையில், இதைப் பற்றி இன்னும் அதிகமான உட்பார்வையை நாம் பெறுகிறோம். முதலாவது அவர் சொல்கிறார்: “நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.” (ஏசாயா 57:17) பேராசையால் செய்யப்படும் எல்லா அக்கிரமங்களும் நிச்சயமாகவே கடவுளுடைய கோபத்தை கிளறுகின்றன. ஒருவருடைய இருதயம் மாறுபாடாய் இருக்கும் வரையில், யெகோவாவின் கடுங்கோபமும் நிலைக்கும். ஆனால், அந்த நபர் சிட்சைக்கு செவிகொடுக்கையில்? அப்போது, யெகோவாவும் தம் அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறார்: “அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.” (ஏசாயா 57:18) சிட்சை கொடுத்த பிறகு, தன் பாவங்களுக்காக மனம் வருந்தும் நபரை யெகோவா குணப்படுத்துகிறார்; அவருக்கும் அவரோடு சேர்ந்து துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிக்கிறார். எனவேதான், பொ.ச.மு. 537-⁠ல், யூதர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடிந்தது. அதன் பிறகு யூதா, தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாவால் ஆளப்பட்ட தனிநாடாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். இருந்தாலும், எருசலேமில் இருந்த ஆலயம் திரும்பக் கட்டப்பட்டது; மெய் வணக்கமும் மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

21‘உயர்ந்தவரும் உன்னதமானவருமாகிய’ யெகோவா, 1919-⁠ல் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரின் நலனுக்காக பரிவு காட்டினார். தவறுகளுக்காக மனம் வருந்தும் தாழ்மையான மனநிலையை அவர்கள் காட்டியதால், மகா உன்னத கடவுளாகிய யெகோவா அவர்கள் பட்ட கஷ்டங்களை இரக்கத்தோடு கவனித்து, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை அளித்தார். சுத்தமான வணக்கத்தை தமக்கு செலுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த எல்லா தடைகளையும் நீக்கி அவர்களுக்கு விடுதலை கொடுத்தார். இப்படியாக அந்த சமயத்திலும், ஏசாயா மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகள் நிறைவேறின. அந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் நித்தியகால நியமங்கள் நம் ஒவ்வொருவருக்குமே பொருந்துபவை. தாழ்மை மனதுடையவர்களுடைய வணக்கத்தையே யெகோவா ஏற்றுக்கொள்கிறார். கடவுளுடைய ஊழியக்காரரில் எவரேனும் பாவம் செய்தால், அவர் உடனடியாக தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, சிட்சையை ஏற்று தன் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். யெகோவா தாழ்மையுள்ளவர்களை குணப்படுத்தி ஆறுதல் அளிக்கிறார், ஆனால் “பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” என்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போமாக.​—யாக்கோபு 4:⁠6.

“தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம்”

22தங்கள் துன்மார்க்க வழியிலே உழன்று கொண்டிருப்போரின் எதிர்காலத்திற்கும் மனந்திரும்புவோரின் எதிர்காலத்திற்கும் இடையே இருக்கும் மலையளவு வித்தியாசத்தைக் குறித்து யெகோவா அறிவிக்கிறார்: “தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் . . . துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் [“கடற் பாசியையும் சகதியையும்,” NW] கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை.”​—ஏசாயா 57:19-21.

23கடவுளுக்கு செலுத்தும் துதியின் பலியே, அதாவது அவருடைய பெயரை வெளியரங்கமாக அறிவித்தலே உதடுகளின் பலனாகும். (எபிரெயர் 13:15) வெளியரங்கமான இந்த அறிவிப்பை யெகோவா எப்படி ‘சிருஷ்டிக்கிறார்’? துதியின் பலியை ஒருவர் செலுத்த வேண்டுமானால், முதலில் அவர் கடவுளைப் பற்றி கற்க வேண்டும்; அதன்பின் அவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும். கடவுளுடைய ஆவியின் கனியாகிய விசுவாசம், கற்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லும்படி அவரைத் தூண்டுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர் கடவுளைக் குறித்து வெளியரங்கமாக அறிக்கை பண்ணுகிறார். (ரோமர் 10:13-15; கலாத்தியர் 5:22) தமது மகிமையை அறிவிக்கும்படியான கட்டளையை தமது ஊழியர்களுக்குக் கொடுத்தவர் யெகோவாவே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட துதியின் பலியை செலுத்துவதற்கு தம் ஜனங்களை விடுவிப்பவரும் அவரே. (1 பேதுரு 2:9) எனவே, உதடுகளின் இந்தப் பலனை சிருஷ்டிப்பவர் யெகோவாவே என சொல்வது பொருத்தமானதே.

24யெகோவாவிற்கு துதி பாடியவாறு நாடு திரும்பும் யூதர்கள், எத்தனை சந்தோஷமாக உதடுகளின் பலனை செலுத்தியிருப்பார்கள்! கடவுளுடைய சமாதானத்தை அனுபவிப்பதில் எல்லையில்லா ஆனந்தம் அடைந்திருப்பர். யூதாவிலிருந்து ‘தூரமாக’ இருக்கிறவர்களும் சரி​—⁠அதாவது, மீண்டும் தங்கள் தேசத்திற்கு திரும்ப காத்திருக்கிறவர்களும் சரி​—⁠‘சமீபமாக’ இருக்கிறவர்களும் சரி​—⁠அதாவது ஏற்கெனவே தங்கள் தேசத்திற்கு வந்துவிட்டவர்களும் சரி​—⁠அனைவருமே கடவுளுடைய சமாதானத்தை அனுபவித்து களித்திருப்பர். ஆனால் துன்மார்க்கரின் நிலைமையோ இதற்கு முற்றிலும் மாறானது! யெகோவாவின் சிட்சைக்கு செவிகொடுக்க மறுக்கும் துன்மார்க்கர் எங்கே இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கொஞ்சமும் சமாதானம் இராது. அவர்கள் கொந்தளிக்கும் கடலைப் போல குமுறிக் கொண்டிருப்பர். உதடுகளின் பலனையல்ல, மாறாக “கடற் பாசியையும் சகதியையும்” போன்ற அசுத்தமானவற்றை மட்டுமே அவர்கள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

25இன்றும், யெகோவாவின் வணக்கத்தார் எல்லா இடங்களிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றனர். தூரத்திலும் சமீபத்திலுமுள்ள கிறிஸ்தவர்கள் 230-⁠க்கும் அதிகமான நாடுகளில் உதடுகளின் பலனை செலுத்துகின்றனர்; ஒரே மெய்யான கடவுளுக்கு துதிகளை ஏறெடுக்கின்றனர். அவர்கள் பாடும் துதிகள் ‘பூமியின் கடையாந்தரம்’ வரை கேட்கிறது. (ஏசாயா 42:10-12) அவர்களுடைய அறிவிப்புகளை செவிகொடுத்து கேட்பவர்கள், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள், ‘சமாதானத்தின் தேவனை’ சேவிப்பதால் கிடைக்கும் சமாதானத்தை அனுபவிக்கின்றனர்.​—ரோமர் 16:⁠20.

26ராஜ்ய செய்திக்கு துன்மார்க்கர் செவிகொடுக்க மாட்டார்கள் என்பது சரியே. என்றாலும் விரைவில், நீதிமான்களின் சமாதானத்தைக் கெடுத்துப் போடுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்” என யெகோவா வாக்குறுதி கொடுக்கிறார். யெகோவாவிடம் அடைக்கலம் புகுவோரோ, அற்புதமான வகையில் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வர். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11, 29) அப்போது இந்த பூமி எவ்வளவு அழகிய இடமாக இருக்கும்! நித்தியத்திற்கும் கடவுளுக்கு துதி பாடும்படி, அவரது சமாதானத்தை ஒருபோதும் இழக்காதிருக்க நாம் அனைவரும் தீர்மானமாய் இருப்போமாக.

[அடிக்குறிப்புகள்]

a ‘மஞ்சம்’ என்ற பதம் பொய் வணக்கத்தின் இடத்தையோ பலிபீடத்தையோ குறிக்கலாம். அதை மஞ்சம் எனக் குறிப்பிடுவது, அப்படிப்பட்ட வழிபாடு ஆவிக்குரிய வேசித்தனம் என்பதை நினைவுபடுத்துகிறது.

b பரிசுத்த கம்பங்கள் பெண்குறியையும், பரிசுத்த தூண்கள் ஆண்குறியையும் குறித்திருக்கலாம். விசுவாசமற்ற யூதாவின் குடிகள் இவை இரண்டையுமே பயன்படுத்தின.​—⁠2 இராஜாக்கள் 18:4; 23:⁠14; NW.

[கேள்விகள்]

1. என்ன உறுதியை யெகோவா அளித்தார், அவருடைய வார்த்தைகள் என்ன கேள்விகளை எழுப்புகின்றன?

2. (அ) ஏசாயா 57-⁠ம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகள் எந்தக் காலப்பகுதிக்கு பொருந்துவதாக தோன்றுகின்றன? (ஆ) ஏசாயாவின் நாட்களில் இருந்த நீதிமான்களின் நிலை என்ன?

3. யூதாவின் துன்மார்க்க சந்ததியாரை யெகோவா என்னவென்று அழைக்கிறார், ஏன்?

4. யூதாவின் துன்மார்க்க ஜனங்கள் என்ன குற்றங்களை செய்கின்றனர்?

5, 6. (அ) யூதாவின் குடிமக்கள், யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக என்ன செய்கின்றனர்? (ஆ) யூதாவின் விக்கிரக வணக்கம் எந்தளவு வெளிப்படையாகவும் பரவலாகவும் இருக்கிறது?

7. யூதா என்ன மனநிலையோடு ஒழுக்கக்கேடான வணக்கத்தில் ஈடுபடுகிறது?

8. குறிப்பாக, எந்த அரசனின் ஆட்சியில் யூதாவில் விக்கிரகாராதனை செழித்தோங்கியது?

9. யூதா ஏன் ஸ்தானாபதிகளை “தூரத்துக்கு” அனுப்புகிறது?

10. (அ) அசீரிய ராஜாவின் கூட்டுறவை ஆகாஸ் ராஜா எப்படி நாடுகிறான்? (ஆ) யூதா எப்படி தன்னை ‘பாதாளமட்டும் தாழ்த்துகிறது’?

11. என்ன போலியான பாதுகாப்பு உணர்வை யூதா காட்டுகிறது?

12. யூதாவிலிருந்த என்ன நிலைமைகள் கிறிஸ்தவமண்டலத்திலும் இருக்கின்றன?

13. யூதா என்ன கருத்தில் “பொய்” சொல்கிறது, யெகோவாவின் பொறுமையை என்னவாக நினைக்கிறது?

14, 15. யூதாவின் செயல்களையும் அது ‘திரட்டிய சிலைகளையும்’ குறித்து யெகோவா என்ன சொல்கிறார்?

16. கிறிஸ்தவமண்டலத்திற்கும் ‘மகா பாபிலோனின்’ பாகமாக இருக்கும் மற்ற மதங்களுக்கும் என்ன காத்திருக்கிறது?

17. ‘யெகோவாவிடம் அடைக்கலம் புகுவோருக்கு’ என்ன வாக்குறுதி கொடுக்கப்படுகிறது, இது எப்போது நிறைவேறுகிறது?

18. யெகோவாவின் உன்னதத் தன்மை எவ்வாறு விவரிக்கப்படுகிறது, என்றாலும் எப்படிப்பட்ட அன்பையும் கரிசனையையும் அவர் காட்டுகிறார்?

19. யெகோவாவின் கோபம் எப்போது தீரும்?

20. (அ) மனந்திரும்பாத துன்மார்க்கனை யெகோவா என்ன செய்கிறார்? (ஆ) தவறுக்காக மனம் வருந்தும் நபருக்கு யெகோவா எந்த விதத்தில் ஆறுதல் அளிக்கிறார்?

21. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு 1919-⁠ல் யெகோவா எப்படி புத்துயிரளித்தார்? (ஆ) என்ன குணத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்?

22. என்ன விதமான எதிர்காலத்தை (அ) மனந்திரும்புவோருக்கும், (ஆ) துன்மார்க்கருக்கும் யெகோவா முன்னறிவிக்கிறார்?

23. உதடுகளின் பலன் என்ன, இந்த பலனை யெகோவா எந்த விதத்தில் ‘சிருஷ்டிக்கிறார்’?

24. (அ) கடவுளுடைய சமாதானத்தை யார் அனுபவிப்பர், என்ன பலன்களோடு? (ஆ) யாருக்கு சமாதானம் இல்லை, அவர்களுடைய முடிவு என்ன?

25. தூரத்திலும் சமீபத்திலும் உள்ள அநேகர் எப்படி சமாதானத்தை அறிகின்றனர்?

26. (அ) துன்மார்க்கருக்கு என்ன காத்திருக்கிறது? (ஆ) சாந்த குணமுடையோருக்கு என்ன மகத்தான வாக்குறுதி கொடுக்கப்படுகிறது, நம் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

[பக்கம் 263-ன் படம்]

பச்சையான சகல மரத்தின்கீழும் யூதா ஒழுக்கக்கேடான வணக்கத்தில் ஈடுபடுகிறது

[பக்கம் 267-ன் படம்]

தேசமெங்கும் பலிபீடங்களை யூதா கட்டுகிறது

[பக்கம் 275-ன் படம்]

“உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்”