Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நான் சிருஷ்டிப்பவற்றில் என்றும் மகிழ்ந்திருங்கள்’

‘நான் சிருஷ்டிப்பவற்றில் என்றும் மகிழ்ந்திருங்கள்’

அதிகாரம் இருபத்து ஆறு

‘நான் சிருஷ்டிப்பவற்றில் என்றும் மகிழ்ந்திருங்கள்’

ஏசாயா 65:1-25

அநியாயத்திற்கும் துன்பத்திற்கும் முடிவை நாம் என்றாவது காண்போமா? 1,900 வருடங்களுக்கும் முன்பு அப்போஸ்தலனாகிய பேதுரு இந்த உறுதியளிக்கும் வார்த்தைகளை எழுதினார்: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) அக்கிரமமும் ஒடுக்குதலும் வன்முறையும் நீங்கி, நீதி வாசம்பண்ணும் அந்த மகத்தான நாளுக்காக பேதுருவும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் அநேகரும் பல நூற்றாண்டுகளாகவே எதிர்நோக்கி இருந்தனர். அந்த வாக்குறுதி நிறைவேறும் என நாம் உறுதியாக நம்பலாமா?

2ஆம், நாம் நம்பலாம்! ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ பற்றி பேதுரு சொல்கையில் அவர் ஒரு புதிய கருத்தை அறிமுகப்படுத்தவில்லை. சுமார் 800 வருடங்களுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக யெகோவா இதேபோன்ற வார்த்தைகளை சொன்னார். அந்த வாக்குறுதி, பொ.ச.மு. 537-⁠ல் சிறிய அளவில் நிறைவேறியது. அச்சமயத்தில் யூதர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்பட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்பிச் சென்றார்கள். ஆனால், ஏசாயா தீர்க்கதரிசனம் இன்றைய காலத்தில் மிகப் பெரிய அளவில் நிறைவேறுகிறது; வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் இதைவிட வியக்கத்தக்க அளவிலும் நிறைவேறுவதைக் காண நாம் ஆவலாய் எதிர்பார்த்து இருக்கிறோம். சொல்லப்போனால் ஏசாயா மூலமாக கொடுக்கப்பட்ட மனதைத் தொடும் இந்தத் தீர்க்கதரிசனம், தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு கடவுள் கொடுக்கவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றிய சுருக்கமான காட்சியை அளிக்கிறது.

‘முரட்டாட்டமான ஜனங்களிடம்’ யெகோவா வேண்டுகிறார்

3ஏசாயா 63:15–64:12 வரையான வசனங்களில் இடம்பெற்றிருக்கும் ஜெபத்தை​—⁠பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களின் சார்பாக ஏசாயா ஏறெடுத்த தீர்க்கதரிசன ஜெபத்தை​—⁠நினைவுபடுத்திப் பாருங்கள். ஏசாயாவின் வார்த்தைகள் தெளிவாக காட்டுகிறபடி, யூதர்கள் பலரும் யெகோவாவை முழு ஆத்துமாவுடன் வணங்குகிறதில்லை, ஆனால் சிலரோ மனந்திரும்பி அவரிடம் வந்திருக்கிறார்கள். இப்போது, மனந்திரும்பின அந்த ஜனங்கள் நிமித்தம் தேசத்தை மீண்டும் நிலைநாட்டுவாரா? இதற்கான விடையை ஏசாயா 65-⁠ம் அதிகாரத்தில் நாம் காணலாம். ஆனால், உண்மையோடிருந்த விசுவாசமுள்ள யூதர்கள் சிலருக்கு விடுதலையைக் குறித்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பாக, விசுவாசமற்ற அநேகருக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றி யெகோவா விவரிக்கிறார்.

4தம்முடைய ஜனங்களின் ஓயாத கலகத்தனத்தை யெகோவா சகித்து வந்திருக்கிறார். இருந்தாலும், அவர்களை எதிரிகளிடம் ஒப்புவித்து மற்றவர்களை தம் பக்கமாக தயவுடன் வரவேற்கும் சமயம் வரும். ஏசாயாவின் மூலமாக யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்; என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்; என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, “இதோ நான், இதோ நான்” என்றேன்.” (ஏசாயா 65:1, பொ.மொ.) இது யெகோவாவுடைய உடன்படிக்கையின் ஜனங்களைக் குறித்த பரிதாபகரமான அறிவிப்பு; மற்ற தேசத்தார் யெகோவாவிடம் வருவார்கள், ஆனால் முரட்டாட்டம் பிடித்த யூத தேசமோ யெகோவாவிடம் வர மறுக்கும். முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத புறதேசத்து ஜனங்களை முடிவில் கடவுள் தேர்ந்தெடுப்பார் என முன்னறிவிப்பது ஏசாயா தீர்க்கதரிசி மட்டுமல்ல. (ஓசியா 1:10; 2:23) ‘விசுவாசத்தினாலாகும் நீதியை’ யூதர்களாகவே பிறந்தவர்கள் தேட மறுத்தாலும்கூட புறஜாதியார் அந்நீதியைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நிரூபிக்க அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 65:1, 2 வசனங்களை செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டினார்.​—ரோமர் 9:30; 10:20, 21.

5தம்முடைய ஜனங்கள் பெருந்துன்பத்தை அனுபவிக்கும்படி அவர் ஏன் அனுமதிப்பார் என்பதை யெகோவா விளக்குகிறார். “பயனற்ற வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டு ஜனத்தை நோக்கி நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.” (ஏசாயா 65:2, NW) ஒருவர் தன் கைகளை நீட்டுவது ஓர் அழைப்பை அல்லது வேண்டுதலை குறிக்கிறது. யெகோவா தமது கைகளை கொஞ்ச நேரத்திற்கு மட்டுமல்ல நாள் முழுவதுமாக நீட்டியிருக்கிறார். யூதா தம்மிடம் திரும்பிவர வேண்டும் என்பதே அவருடைய உள்ளப்பூர்வமான விருப்பம். இருந்தாலும், இந்த முரட்டாட்டம் பிடித்த ஜனங்களோ அவருக்கு கீழ்ப்படிய மறுத்துவிடுகின்றனர்.

6யெகோவாவின் வார்த்தைகளிலிருந்து எப்பேர்ப்பட்ட, நெஞ்சைத் தொடும் பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்! அவர் அணுகத்தக்க கடவுளாக இருப்பதால், மனிதர் தம்மிடம் நெருங்கி வரும்படி விரும்புகிறார். (யாக்கோபு 4:8) இந்த வார்த்தைகள் யெகோவா தாழ்மையுள்ளவர் என்பதையும் காட்டுகின்றன. (சங்கீதம் 113:5, 6) அதுமட்டுமல்ல, தம்முடைய ஜனங்களின் முரண்டு பிடிக்கிற குணம் அவரை ‘விசனப்படுத்துகிற’ போதிலும், அவர் அடையாள அர்த்தத்தில் தொடர்ந்து தம் கைகளை நீட்டி தம்மிடம் திரும்பும்படி வேண்டுகிறார். (சங்கீதம் 78:40, 41) பல நூற்றாண்டுகளாக தயவுடன் வேண்டிக்கொண்ட பின்னரே கடைசியாக அவர்களை விரோதிகளிடம் விட்டுவிடுகிறார். அதற்குப் பின்பும்கூட அவர்களில் தாழ்மையானவர்களை அவர் ஒதுக்கிவிடவில்லை.

7முரட்டாட்டம் பிடித்த யூதர்கள் தங்களுடைய அவமரியாதையான நடத்தையால் எப்போதுமே யெகோவாவுக்கு கோபமுண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய அருவருப்பான செயல்களைக் குறித்து யெகோவா இவ்வாறு விவரிக்கிறார்: “அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்; தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்; கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்; பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்; தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர். இவ்வாறிருந்தும், “எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன் [“பரிசுத்தமானவன்,” NW] என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள் முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.” (ஏசாயா 65:3-5, பொ.மொ.) பக்திமான்களாகக் காட்டிக்கொள்ளும் இந்த ஜனங்கள் யெகோவாவை ‘அவருடைய கண் எதிரேயே’ விசனப்படுத்துகிறார்கள். இந்த சொற்றொடர், துடுக்குத்தனத்தையும் அவமரியாதையையும் அர்த்தப்படுத்தலாம். அவர்கள் தங்கள் அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களை மறைக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கீழ்ப்படிதலையும் கனத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரமானவருக்கு முன்பாகவே இப்படி பாவங்களைச் செய்வது பெருங்குற்றம் அல்லவா?

8ஆனால் சுய நீதிமான்களாகிய இந்தப் பாவிகளோ மற்ற யூதர்களிடம், ‘எட்டி நில், நான் உன்னைவிட பரிசுத்தமானவன்’ என்பதுபோல் சொல்லிக் கொள்கிறார்கள். எவ்வளவு பாசாங்குத்தனம்! இந்த “பக்திமான்கள்” கடவுளுடைய நியாயப்பிரமாணம் கண்டனம் செய்திருந்த பொய் தெய்வங்களுக்கு பலிகளை செலுத்தி தூபவர்க்கம் எரிக்கிறார்கள். (யாத்திராகமம் 20:2-6) அவர்கள் கல்லறைகளுக்கு நடுவே உட்காருகிறார்கள். நியாயப்பிரமாணத்தின்படி இது அவர்களை அசுத்தமானவர்களாக ஆக்குகிறது. (எண்ணாகமம் 19:14-16) அவர்கள் அசுத்தமான உணவாகிய பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள். a (லேவியராகமம் 11:7) இருந்தாலும், அவர்களுடைய மத பழக்கவழக்கங்கள் மற்ற யூதர்களைக் காட்டிலும் பரிசுத்தவான்களாக அவர்களை உணரச் செய்கின்றன. மற்றவர்கள் தங்களிடமிருந்து விலகியிருக்கும்படி விரும்புகிறார்கள்; ஏனென்றால் தங்களோடு வெறுமனே கூட்டுறவு கொண்டாலே அவர்களும் பரிசுத்தமாக அல்லது சுத்தமாக ஆகிவிடுவார்கள் என நினைக்கிறார்கள். என்றாலும் “தனிப்பட்ட பக்தியை” கேட்கிற கடவுள் காரியங்களை இதுபோல் நோக்குவதே இல்லை!​—உபாகமம் 4:24, NW. 

9இந்த சுய நீதிமான்களை பரிசுத்தமானவர்களாக கருதுவதற்கு பதிலாக, இவர்கள் ‘என் மூக்கிலிருந்து வெளிப்படும் புகை’ என யெகோவா கூறுகிறார். ‘மூக்கு’ என்பதற்கான எபிரெய வார்த்தை அடையாள அர்த்தத்தில் அடிக்கடி கோபத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. புகையும்கூட யெகோவாவின் பற்றியெரிகிற கோபத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. (உபாகமம் 29:20) அருவருக்கத்தக்க விக்கிரக வழிபாட்டிற்குள் ஜனங்கள் வீழ்ந்து விட்டிருப்பது, யெகோவாவின் பற்றியெரியும் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

10வேண்டுமென்றே பாவம் செய்யும் இவர்களை யெகோவா தம்முடைய நீதியின்படி தண்டியாமல் விடமுடியாது. ஏசாயா இவ்வாறு எழுதுகிறார்: “இதோ, அது எனக்குமுன் எழுதி வைத்திருக்கிறது, நான் மவுனமாயிரேன், அவர்களுக்குரிய பலனைக் கொடுப்பேன், மடிநிறையக் கொடுப்பேன். உங்கள் அக்கிரமங்களுக்கும் அதோடுகூட மலைகளில் தூபங்காட்டிக் குன்றுகளின் மேல் என்னைத் தூஷித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கபடியே கொடுப்பேன்; அவர்கள் முற்காலத்திலே செய்தவைகளின் பலனையும் மடியிலே அளந்து கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.” (ஏசாயா 65:6, 7, தி.மொ.) பொய் வணக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்த யூதர்கள் யெகோவாவுக்கு நிந்தையைக் கொண்டுவந்திருக்கின்றனர். மெய்க் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய வணக்கம், தங்களைச் சுற்றியுள்ள புறஜாதியாரின் வணக்கத்தைவிட எந்த விதத்திலும் மேம்பட்டதாக இல்லை என தோன்றும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கின்றனர். விக்கிரகாராதனை, ஆவிக்கொள்கை உட்பட ‘அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தக்கபடியே’ அவர்கள் “மடியிலே” யெகோவா சரிக்கட்டுவார். “மடி” என்பது, பை போல இருக்கும் மேலாடையின் மடிப்பைக் குறிக்கிறது. இதில் விற்பனையாளர்கள் விளைப்பொருட்களை அளந்து போடுவர். (லூக்கா 6:38) விசுவாசதுரோக யூதர்கள் இதன் அர்த்தத்தை​—⁠யெகோவா தங்களுக்கு “பலனை” அல்லது தண்டனையை கொடுப்பார் என்பதை​—⁠தெளிவாக அறிந்திருக்கிறார்கள். நீதியான கடவுள் தண்டனையை வழங்குவார். (சங்கீதம் 79:12; எரேமியா 32:18) யெகோவா மாறாதவராதலால், உரிய காலத்தில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கும் இதேவிதமாக தண்டனை கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.​—மல்கியா 3:6.

“என் ஊழியக்காரரினிமித்தம்”

11தம்முடைய ஜனங்களில் உண்மையோடு நடந்துகொள்பவர்களுக்கு யெகோவா இரக்கத்தைக் காட்டுவாரா? ஏசாயா இவ்வாறு விளக்குகிறார்: “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக் குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன். யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.” (ஏசாயா 65:8, 9) யெகோவா, தம்முடைய ஜனங்களை திராட்சைக் குலைக்கு ஒப்பிடுவதன் மூலம் அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் உதாரணத்தை பயன்படுத்துகிறார். திராட்சை அந்தத் தேசத்தில் மிகுதியாக விளைகிறது; அதிலிருந்து எடுக்கப்படும் ரசம் மனிதருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. (சங்கீதம் 104:15) நல்ல திராட்சைகள் சில மட்டுமே உள்ள குலையைப் பற்றி இங்கு சொல்லப்படுவதாக தெரிகிறது. அல்லது ஒரு குலை மட்டுமே நல்லதாக இருப்பதையும், மற்றவை காயாக அல்லது அழுகியதாக இருப்பதையும் குறிக்கலாம். எதுவாக இருந்தாலும்சரி, திராட்சை தோட்டக்காரர் நல்ல பழங்களை அழித்துவிட மாட்டார். அவ்வாறே இந்த தேசத்தை முற்றிலுமாக அழித்துவிடாமல் உண்மையுள்ள மீதியானோரை பாதுகாப்பதாக யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு உறுதியளிக்கிறார். தயவைப் பெற்ற இந்த மீதியானோர் தம் ‘மலைகளை,’ அதாவது தமக்குச் சொந்தமானது என உரிமையுடன் சொன்ன குன்றுகள் நிறைந்த யூத தேசத்தையும் எருசலேமையும் சுதந்தரித்துக்கொள்வார்கள் என யெகோவா குறிப்பிடுகிறார்.

12இந்த உண்மையுள்ள மீதியானோருக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன? யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “என்னை தேடுகிற என் ஜனங்களுக்கு சாரோன் சமவெளி செம்மறியாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கு மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருக்கும்.” (ஏசாயா 65:10, NW) மந்தைகள் அநேக யூதர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏராளமான மேய்ச்சலிடங்கள் சமாதானமான காலங்களின் செழுமையைக் குறிக்கின்றன. சமாதானத்தையும் செழுமையையும் சித்தரித்துக் காட்டுவதற்காக யெகோவா தேசத்தின் இரண்டு எல்லைகளை குறிப்பிடுகிறார். அழகுக்கும் செழுமைக்கும் பெயர்பெற்ற சாரோன் சமவெளி மேற்கே மத்தியத்தரை கடற்கரை ஓரமாக பரந்து காணப்படுகிறது. ஆகோர் பள்ளத்தாக்கு தேசத்தின் வடகிழக்கு எல்லையின் பாகமாகிறது. (யோசுவா 15:7) வரவிருக்கும் சிறையிருப்பின்போது தேசத்தின் மற்ற பகுதிகளோடுகூட இவையும் பாழாய்ப்போம். என்றாலும், சிறையிருப்பிலிருந்து மீதியானோர் திரும்பி வரும்போது இந்த இடங்கள் மீண்டும் அழகான மேய்ச்சலிடங்களாக மாறும் என யெகோவா வாக்குக் கொடுக்கிறார்.​—ஏசாயா 35:2; ஓசியா 2:15.

‘அதிஷ்டம் என்னும் தேவதையை’ நம்புதல்

13யெகோவாவை விட்டுவிட்டு விக்கிரக வழிபாட்டில் மூழ்கியிருப்போரிடமாக ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இப்போது மறுபடியும் கவனத்தைத் திரும்புகிறது. அது இவ்வாறு கூறுகிறது: “யெகோவாவைவிட்டு என் பரிசுத்த பர்வதத்தை மறந்தவர்களே, நீங்கள் அதிஷ்டம் என்னும் தேவதைக்குப் படைப்புப்போட்டு, விதி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை வார்க்கிறீர்கள்.” (ஏசாயா 65:11, தி.மொ.) வழுவிச் செல்லும் இந்த யூதர்கள், ‘அதிஷ்டம் என்னும் தேவதைக்கும் . . . விதி என்னும் தெய்வத்துக்கும்’ முன்பாக பந்தியையும் பானத்தையும் ஆயத்தப்படுத்துவதன் மூலம் புறஜாதியாரின் விக்கிரக வழிபாட்டு பழக்கவழக்கங்களில் வீழ்ந்து விட்டிருக்கின்றனர். b இந்தத் தெய்வங்களைப் பற்றி முன்பின் தெரியாமல் அவற்றில் யாரேனும் நம்பிக்கை வைத்தால் வரும் விளைவு என்ன?

14அவர்களை யெகோவா நேரடியாகவே எச்சரிக்கிறார்: “பட்டயமே உங்களுக்கு விதியாகச் செய்வேன், நீங்கள் அனைவரும் கொல்லப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் பதிலுரைக்கவில்லையே, நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லையே; என் பார்வையில் தீமையானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததை விரும்பித் தெரிந்துகொண்டீர்கள்.” (ஏசாயா 65:12, தி.மொ.) மூல எபிரெய மொழியில் விதி என்ற தெய்வத்தின் பெயரையே சிலேடையாக பயன்படுத்தி, இந்தப் பொய் தெய்வத்தை வணங்குபவர்கள் ‘பட்டயத்துக்கு விதியாகிவிடுவர்’ அதாவது, அழிந்துவிடுவர் என யெகோவா சொல்கிறார். மனந்திரும்பும்படி தீர்க்கதரிசிகள் மூலமாக யெகோவா இவர்களை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனால், அவர்களோ அவரை அசட்டை செய்து அவருடைய பார்வையில் தீமையானதை செய்யவே தெரிந்துகொண்டுள்ளனர். கடவுளுக்கு எப்பேர்ப்பட்ட அவமரியாதையை காட்டுகிறார்கள்! கடவுளுடைய எச்சரிப்பின் நிறைவேற்றமாக, பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிப்பதற்காக பாபிலோனியர்களை யெகோவா அனுமதிக்கும்போது அவர்கள் பெரும் இன்னலை சந்திப்பார்கள். அந்த சமயத்தில், ‘அதிஷ்டம் என்னும் தேவதையால்’ யூதாவிலும் எருசலேமிலுமுள்ள அதன் பக்தர்களை காப்பாற்ற முடியாது.​—2 நாளாகமம் 36:17.

15இன்று உண்மை கிறிஸ்தவர்கள் ஏசாயா 65:11, 12-⁠ல் காணப்படும் எச்சரிப்புக்கு செவிசாய்க்கின்றனர். ஏதோ மீமானிட சக்தி போல ‘அதிஷ்டத்தால்’ பல ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என அவர்கள் அதில் நம்பிக்கை வைப்பதில்லை. ‘அதிஷ்டம் என்னும் தேவதையை’ திருப்திப்படுத்துவதற்காக தங்களுடைய பொருட்செல்வத்தை வீணடிக்க மறுத்து, எல்லா விதமான சூதாட்டத்தையும் தவிர்க்கிறார்கள். இந்தத் தேவதையில் நம்பிக்கை வைப்பவர்கள் முடிவில் எல்லாவற்றையும் இழந்துவிடுவர் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஏனெனில், “பட்டயமே உங்களுக்கு விதி” என அப்படிப்பட்டவர்களிடம் யெகோவா சொல்கிறார்.

“இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள்”

16யெகோவாவை புறக்கணித்தவர்களை கண்டிக்கும் வகையில், அவரை உண்மையோடு வணங்குபவர்களுக்கும் பாசாங்குத்தனத்தோடு வணங்குபவர்களுக்கும் காத்திருக்கும் வித்தியாசமான பலனை தீர்க்கதரிசனம் கூறுகிறது: “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே [“நல்ல இருதய நிலையின் காரணமாக மகிழ்ந்து,” NW] கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.” (ஏசாயா 65:13, 14) யெகோவா தம் உண்மையுள்ள ஊழியர்களை ஆசீர்வதிப்பார். மகிழ்ச்சிப் பெருக்கினால் அவர்கள் கெம்பீரிப்பார்கள். புசித்தல், குடித்தல், சந்தோஷப்படுதல் போன்ற வார்த்தைகள், தம்முடைய வணக்கத்தாரின் தேவைகளை யெகோவா நிறைவாக திருப்தி செய்வார் என்பதையே அர்த்தப்படுத்துகின்றன. அதற்கு நேர்மாறாக யெகோவாவை புறக்கணித்தவர்கள் ஆவிக்குரிய ரீதியில் பசியாகவும் தாகமாகவும் இருப்பார்கள். அவர்களுடைய தேவைகள் திருப்தி செய்யப்படுவதில்லை. அவர்களுக்கு நேரிடப்போகும் கடுந்துயரத்தாலும் வேதனையாலும் அலறி புலம்புவார்கள்.

17இன்று கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொள்வோரின் ஆவிக்குரிய நிலையை யெகோவாவின் வார்த்தைகள் அழகாக விவரிக்கின்றன. கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் துயரத்திலும் வேதனையிலும் அவதியுறும்போது யெகோவாவின் ஜனங்களோ மகிழ்ச்சியினால் கெம்பீரிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைவதற்கு தகுந்த காரணமும் இருக்கிறது. அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் நன்கு போஷிக்கப்படுகிறார்கள். பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள் வாயிலாகவும் கிறிஸ்தவ கூட்டங்கள் வாயிலாகவும் ஆவிக்குரிய உணவை யெகோவா அவர்களுக்கு ஏராளமாக அளிக்கிறார். உண்மையில், கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஊக்கமூட்டும் சத்தியங்களும் ஆறுதலளிக்கும் வாக்குறுதிகளுமே நமக்கு ‘நல்ல இருதய நிலையைத்’ தருகின்றன!

18தம்மை புறக்கணித்தவர்களைக் குறித்து யெகோவா தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாப வார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார். அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.” (ஏசாயா 65:15, 16) யெகோவாவை புறக்கணித்தவர்களின் பெயர் மட்டுமே இறுதியில் மிஞ்சும்; அதுவும் ஆணையிடும் போதோ சாப வார்த்தையாகவோ மட்டுமே பயன்படுத்தப்படும். ஆணையிடுபவர்கள், ‘நான் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனால், அந்த விசுவாச துரோகிகள் பெற்ற அதே தண்டனையை நானும் அனுபவிப்பேனாக’ என சொல்வதை இது அர்த்தப்படுத்தலாம். பொல்லாதவர்களை கடவுள் தண்டித்ததற்கு அடையாளமாக சோதோம் கொமோராவின் பெயர் பயன்படுத்தப்படுவது போலவே அவர்களுடைய பெயரும் பயன்படுத்தப்படும் என்பதையும் இது அர்த்தப்படுத்தலாம்.

19கடவுளுடைய ஊழியர்களின் நிலை எந்தளவுக்கு வித்தியாசப்படும்! அவர்கள் மற்றொரு பெயரில் அழைக்கப்படுவர். தாயகத்திற்கு திரும்பிய பிறகு அவர்கள் அனுபவிக்கப் போகும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையையும் கீர்த்தியையுமே அப்பெயர் குறிக்கிறது. அவர்கள் எந்தப் பொய்க் கடவுளின் ஆசீர்வாதத்தையும் நாட மாட்டார்கள், உயிரற்ற எந்த விக்கிரகத்தின்பேரில் ஆணையிடவும் மாட்டார்கள். மாறாக, அவர்கள் ஒருவரை ஒருவர் ஆசீர்வதிக்கையிலோ ஆணையிடுகையிலோ சத்திய தேவன் பேரில் அவ்வாறு செய்வார்கள். (ஏசாயா 65:16, NW அடிக்குறிப்பு) தேசத்தார் கடவுளை முழுமையாக நம்புவதற்கு தகுந்த காரணம் இருக்கும்; ஏனென்றால் கடவுள் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக நிரூபித்திருப்பார். c தாயகத்தில் பத்திரமாக இருக்கும் யூதர்கள் விரைவில் கடந்தகால கஷ்டங்களையெல்லாம் மறந்துவிடுவர்.

“நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்”

20பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தாயகம் திரும்பும் மனந்திரும்பிய மீதியானோரை திரும்ப நிலைநாட்டுவதாக தாம் கொடுத்த வாக்குறுதியை யெகோவா இப்போது விரிவாக விளக்குகிறார். ஏசாயா மூலமாக அதை யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17) திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறித்த யெகோவாவின் வாக்குறுதி நிறைவேறுவது உறுதி. ஆகவே வருங்காலத்தில் நிகழவிருக்கும் நிலைநாட்டப்படுதல் ஏற்கெனவே நடந்துகொண்டிருப்பதுபோல் பேசுகிறார். இத்தீர்க்கதரிசனம் ஆரம்பத்தில் பொ.ச.மு. 537-⁠ல் யூத மீதியானோர் எருசலேமில் திரும்ப நிலைநாட்டப்பட்ட சமயத்தில் நிறைவேறியது. அச்சமயத்தில் ‘புதிய வானம்’ எதை அர்த்தப்படுத்தியது? எருசலேமை மையமாக கொண்டு பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் ஆதரவோடு செருபாபேல் ஆளுநராக சேவை செய்ததையே அர்த்தப்படுத்தியது. அந்த ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து தேசத்தில் தூய வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்டிய சுத்திகரிக்கப்பட்ட சமுதாயத்தினராகிய யூத மீதியானோரே “புதிய பூமி” ஆவர். (எஸ்றா 5:1, 2) திரும்ப நிலைநாட்டப்பட்டதன் மகிழ்ச்சி, அவர்கள் முன்பு அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் விஞ்சிவிட்டது; முன்பு பட்ட வேதனைகள் மனதிலே நினைக்கப்படவுமில்லை.​—சங்கீதம் 126:1, 2.

21என்றாலும், பேதுரு ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை குறிப்பிட்டு அதற்கு எதிர்கால நிறைவேற்றமும் இருந்ததென காண்பித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்த அப்போஸ்தலன் இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) நெடுநாளாய் எதிர்பார்க்கப்பட்ட புதிய வானங்கள் 1914-⁠ல் உண்டாயின. அந்த வருடத்திலிருந்து ஸ்தாபிக்கப்பட்ட மேசியானிய ராஜ்யம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது, முழு பூமியையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை யெகோவா அதற்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 2:6-8) கிறிஸ்துவும் அவருடைய 1,44,000 உடன் அரசர்களும் ஆளும் இந்த ராஜ்ய அரசாங்கமே புதிய வானங்கள்.​—வெளிப்படுத்துதல் 14:1.

22புதிய பூமி என்பது என்ன? பூர்வ நிறைவேற்றத்தின்படியே, புதிய பூமி என்பது புதிய பரலோக அரசாங்கத்தின் ஆட்சிக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படியும் ஜனங்களை குறிக்கும். இப்போதும்கூட நல்மனமுடைய லட்சக்கணக்கானோர் இந்த அரசாங்கத்திற்கு தங்களைக் கீழ்ப்படுத்தி, பைபிளிலுள்ள சட்டதிட்டங்களை பின்பற்ற கடினமாக உழைக்கிறார்கள். எல்லா தேசத்திலிருந்தும் மொழியிலிருந்தும் இனத்திலிருந்தும் வரும் இவர்கள் ஒன்று சேர்ந்து, இப்போது ஆட்சி செய்துவரும் அரசர் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறார்கள். (மீகா 4:1-4) தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை கடந்து போனபின், இந்த வகுப்பார் புதிய பூமியின் மையக்கரு ஆவார்கள். இவர்களே முடிவில், கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியை சுதந்தரிக்கிற கடவுள் பயமுள்ள உலகளாவிய சமுதாயமாவர்.​—மத்தேயு 25:34.

23வரவிருக்கும் யெகோவாவின் நாளைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட தரிசனத்தை வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. அச்சமயத்தில் இந்தக் காரிய ஒழுங்குமுறை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும். அதற்குப்பின், சாத்தான் அபிஸிற்குள் தள்ளப்படுவான். (வெளிப்படுத்துதல் 19:11–20:3) அந்த விவரிப்பைத் தொடர்ந்து, ஏசாயா கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளை யோவான் எடுத்துரைத்து இவ்வாறு எழுதுகிறார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்.” இந்த மகத்தான தரிசனத்தை பற்றிய தொடர்ந்து வரும் வசனங்கள், இந்தப் பூமியை யெகோவா முற்றிலுமாக மேம்பட்ட நிலைக்கு மாற்றப்போகும் காலத்தைப் பற்றி கூறுகின்றன. (வெளிப்படுத்துதல் 21:1, 3-5) “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” குறித்த ஏசாயாவின் வாக்குறுதி, கடவுளுடைய புதிய பூமியில் மகத்தான விதத்தில் நிறைவேறும் என்பது தெளிவாகிறது. புதிய அரசாங்கமாகிய வானத்தின்கீழ் புதிய பூமிக்குரிய சமுதாயம் ஆவிக்குரிய மற்றும் சொல்லர்த்தமான பரதீஸை அனுபவித்து மகிழும். “முந்தினவைகள் [வியாதி, துன்பம் மற்றும் மனிதர் எதிர்ப்படும் இன்னபிற கஷ்டங்கள்] இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்ற வாக்குறுதி உண்மையிலேயே ஆறுதலளிப்பதாய் இருக்கிறது. இன்று அநேகருடைய இருதயங்களை வேதனைகள் பாரமாக்குகின்றன; ஆனால் புதிய உலகில் நாம் நினைவில் வைத்திருக்கும் எதுவும் நம் மனதை ஆழமாக புண்படுத்துவதாகவோ அல்லது வேதனை தருவதாகவோ இருக்காது.

24ஏசாயாவின் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “நான் சிருஷ்டிப்பவற்றிலே நீங்கள் என்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிப்பாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமில் களிகூர்ந்து என் ஜனத்தில் மகிழுவேன், அழுகுரலும் அலறுசத்தமும் அதில் இனிக் கேட்பதில்லை.” (ஏசாயா 65:18, 19, தி.மொ.) யூதர்கள் மீண்டும் தாயகத்தில் நிலைநாட்டப்பட்டதைக் குறித்து யூதர்கள் மட்டுமல்ல கடவுளும் மகிழ்ச்சியடைவார். ஏனெனில் எருசலேமை அழகுபடுத்தி அதை மீண்டும் பூமியிலே மெய் வணக்கத்தின் மையமாக விளங்கச் செய்வார். பல பத்தாண்டுகளுக்கு முன்பு அழிவின் காரணமாக நகரத்தின் வீதிகளில் கேட்கப்பட்ட அழுகையின் சத்தம் இனி ஒருபோதும் கேட்கப்படாது.

25இன்றும்கூட எருசலேமை யெகோவா “களிப்பாக” ஆக்குகிறார். எப்படி? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, 1914-⁠ல் உருவான புதிய வானங்களில் 1,44,000 உடன் அரசர்களும் இருப்பார்கள். பரலோக அரசாங்கத்தில் அவர்களும் பங்கு வகிப்பர். அவர்கள் ‘புதிய எருசலேம்’ என தீர்க்கதரிசனமாக அழைக்கப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 21:2) இந்த புதிய எருசலேமைக் குறித்துத்தான் கடவுள் இவ்வாறு கூறுகிறார்: “இதோ, எருசலேமைக் களிப்பாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.” கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு ஏராளமான ஆசீர்வாதங்களை பொழிவதற்காக இந்த புதிய எருசலேமை கடவுள் பயன்படுத்துவார். அழுகையின் சத்தமோ கூக்குரலின் சத்தமோ இனிக் கேட்கப்படாது. ஏனெனில், “[நம்] இருதயத்தின் வேண்டுதல்களை” யெகோவா பூர்த்தி செய்வார்.​—சங்கீதம் 37:3, 4.

26ஆகவே, இன்று நாம் களிகூருவதற்கு உண்மையிலேயே நியாயமான காரணங்கள் உண்டு. யெகோவா சீக்கிரத்தில் விரோதிகளை அழிப்பதன் மூலம் தம் மகத்தான பெயரை பரிசுத்தப்படுத்துவார். (சங்கீதம் 83:17, 18) அப்போது புதிய வானம் முழு அதிகாரம் செலுத்தும். கடவுள் சிருஷ்டிப்பவற்றில் என்றென்றும் களிகூர்ந்து மகிழ்வதற்கு எத்தனை எத்தனை காரணங்கள்!

பாதுகாப்பான எதிர்காலம் பற்றிய வாக்குறுதி

27முதல் நிறைவேற்றத்தின்போது, திரும்பிவரும் யூதர்களுக்கு புதிய வானங்களின்கீழ் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில் நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் [“சிறுவனாகக்,” NW] கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.” (ஏசாயா 65:20, பொ.மொ.) நாடுகடத்தப்பட்டோர் திரும்ப நிலைநாட்டப்பட்ட தங்கள் தாயகத்தில் அனுபவிக்க இருக்கும் பாதுகாப்பிற்கு எப்பேர்ப்பட்ட அழகான வருணனை! புதிதாய்ப் பிறந்த பச்சிளம் குழந்தையின்மீது அகால மரணம் உரிமை கொண்டாடாது. ஆயுட்காலம் பூரணமாகாத முதியவரின் உயிரையும் மரணம் வாரிக்கொள்ளாது. யூதாவுக்குத் திரும்பிச் செல்லும் யூதர்களுக்கு ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வளவாய் உறுதியளிக்கின்றன! தேசத்தில் பாதுகாப்பாக இருக்கும் இந்த ஜனங்கள், விரோதிகள் தங்கள் குழந்தைகளை தங்களிடமிருந்து பறித்துச் செல்வர் என்றோ தங்களை கொலை செய்துவிடுவர் என்றோ பயப்பட வேண்டியதில்லை.

28வரப்போகும் புதிய உலகில் வாழ்க்கையைப் பற்றி யெகோவாவின் வார்த்தைகள் நமக்கு என்ன சொல்கின்றன? கடவுளுடைய ராஜ்யத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலம் இருக்கும். கடவுள் பயமுள்ள ஒருவரின் உயிர்த்துடிப்புமிக்க பிராயத்தில் அவர்மீது மரணம் ஒருபோதும் செல்வாக்கு செலுத்துவதில்லை. மாறாக, கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் பயமின்றியும், பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்க்கையை அனுபவித்து மகிழும். கடவுளுக்கு விரோதமாக யாரேனும் கலகம் செய்தால்? அவர்கள் தங்கள் ஜீவனை இழந்து விடுவர். மீறிநடக்கிற பாவி “நூறாண்டு” வாழ்ந்தவராயினும் இறந்துவிடுவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மரணமில்லா வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதனோடு ஒப்பிடுகையில் அவர் ‘சிறுவனாகவே’ இருப்பார்.

29மீண்டும் நிலைநாட்டப்பட்ட யூத தேசத்தில் நிலவும் நிலைமைகளைப் பற்றி யெகோவா தொடர்ந்து விளக்குகிறார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:21, 22) பாழாக்கப்பட்ட யூத தேசத்திற்குத் திரும்பி வரும்போது அங்கே கடவுளுடைய கீழ்ப்படிதலுள்ள ஜனங்களுக்கு வீடுகளும் திராட்சை தோட்டமும் இருக்காது என்பது தெரிந்த விஷயம். அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் வாழ்ந்து தங்களுடைய திராட்சை தோட்டத்தின் பலனை அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய வேலையை கடவுள் ஆசீர்வதிப்பார். அவர்களுடைய ஆயுசு நாட்கள் மரத்தின் நாட்களைப் போல நீடித்ததாக இருக்கும். அதிலும் அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவித்து மகிழுவார்கள். d

30இந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய நாளிலும் நிறைவேறியிருக்கிறது. 1919-⁠ல் யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று தங்கள் ‘தேசத்தை,’ அதாவது செயல்படும் பிராந்தியத்தையும் வணக்கத்தையும் மீண்டும் நிலைநாட்ட துவங்கினர். அங்கே அவர்கள் சபைகளை ‘நாட்டி’ ஆவிக்குரிய கனிகளை அறுவடை செய்தார்கள். அதன் விளைவாக, இன்றும் யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய பரதீஸையும் தேவ சமாதானத்தையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். அப்படிப்பட்ட சமாதானம் சொல்லர்த்தமான பரதீஸிலும் தொடர்ந்து இருக்கும் என நாம் உறுதியாக நம்பலாம். புதிய உலகில், உழைக்கும் கரங்களையும் மனதையும் உடைய தம்முடைய வணக்கத்தாரை யெகோவா எப்படி பயன்படுத்துவார் என்பது இப்போது நம் கற்பனைக்கு எட்டாத விஷயம். உங்களுக்கென ஒரு வீடு கட்டி அதில் குடியிருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! ராஜ்ய ஆட்சியின்கீழ் திருப்தியளிக்கும் வேலைக்கு பஞ்சமேயிருக்காது. உங்களுடைய உழைப்பின் “நன்மையைப் பார்ப்பது” எப்போதுமே எவ்வளவு திருப்தியளிப்பதாக இருக்கும்! (பிரசங்கி 3:13, NW) நம்முடைய கைகளின் கிரியைகளை முழுவதுமாக அனுபவிப்பதற்கு போதுமான காலம் இருக்குமா? அதில் சந்தேகமேயில்லை! உண்மையுள்ள மனிதரின் முடிவற்ற வாழ்க்கை “விருட்சத்தின் நாட்களைப் போல”​—⁠ஆயிரக்கணக்கான வருடங்களும், அதற்கும் அதிகமாகவும்​—⁠இருக்கும்!

31சிறையிருப்பிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு காத்திருக்கும் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களைப் பற்றி யெகோவா சொல்கிறார்: “அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.” (ஏசாயா 65:23) திரும்ப நிலைநாட்டப்பட்ட யூதர்கள் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவதால், அவர்களுடைய உழைப்பு வீண்போவதில்லை. சீக்கிரத்தில் பறிகொடுப்பதற்கென பெற்றோர் பிள்ளைகளை பெற்றெடுப்பதில்லை. திரும்ப நிலைநாட்டப்படுதலின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கப் போகிறவர்கள் சிறையிருப்பில் இருந்தவர்கள் மட்டுமல்ல; அவர்களுடைய சந்ததியாரும் அவர்களோடு இருப்பர். தம்முடைய ஜனங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு கடவுள் அதிக ஆவலாக இருக்கிறார். ஆகவே அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.”​—ஏசாயா 65:24.

32வரவிருக்கும் புதிய உலகில் இந்த வாக்குறுதிகளை யெகோவா எப்படி நிறைவேற்றுவார்? அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். யெகோவா எல்லா விஷயத்தையும் விலாவாரியாக விளக்கவில்லை. ஆனால், விசுவாசமுள்ளவர்கள் ‘விருதாவாக உழைக்க மாட்டார்கள்’ என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அர்மகெதோனை தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தாருக்கும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நீடித்த, திருப்தியளிக்கும் வாழ்க்கை​—⁠நித்திய ஜீவன்​—⁠என்ற எதிர்பார்ப்பு இருக்கும்! உயிர்த்தெழுந்து வந்து கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ தெரிவுசெய்பவர்களும் புதிய உலகில் மகிழ்ச்சியைக் கண்டடைவர். யெகோவா அவர்களுடைய தேவைகளுக்குச் செவிசாய்த்து அவற்றை நிறைவு செய்வார், அவற்றை முன்னதாகவே அறிந்தும் செயல்படுவார். சொல்லப்போனால், யெகோவா தமது கையைத் திறந்து “உயிருள்ள ஒவ்வொன்றின் [நியாயமான] வாஞ்சையையும்” திருப்தியாக்குவார்.​—சங்கீதம் 145:16, NW.

33வாக்குறுதி அளிக்கப்பட்ட சமாதானமும் பாதுகாப்பும் எந்தளவுக்கு இருக்கும்? இந்தத் தீர்க்கதரிசன பகுதியை யெகோவா இவ்வாறு முடிக்கிறார்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (ஏசாயா 65:25) உண்மையுள்ள யூத மீதியானோர் தங்கள் தாயகத்திற்குத் திரும்பிச் செல்கையில், அவர்கள் யெகோவாவின் அரவணைப்பில் இருப்பர். சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்; யூதர்களுக்கோ அவர்களுடைய மிருகங்களுக்கோ அது தீங்கு செய்யாது. இந்த வாக்குறுதி உண்மையானது, ஏனெனில் “யெகோவா சொல்லுகிறார்” என்ற வார்த்தைகளுடன் இது முடிவடைகிறது. அவருடைய வார்த்தை எப்போதுமே நிறைவேறும்!​—ஏசாயா 55:10, 11.

34யெகோவாவின் வார்த்தைகள் இன்று உண்மை வணக்கத்தாரின் மத்தியில் மெய்சிலிர்க்க வைக்கும் அளவில் நிறைவேற்றமடைவதைக் காண முடிகிறது. 1919 முதற்கொண்டு, கடவுள் தம்முடைய ஜனங்களின் ஆவிக்குரிய தேசத்தை ஆவிக்குரிய பரதீஸாக மாற்றி ஆசீர்வதித்திருக்கிறார். இந்த ஆவிக்குரிய பரதீஸுக்குள் வருபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நம்ப முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்கிறார்கள். (எபேசியர் 4:22-24) ஒரு சமயம் மிருகத்தனமான குணங்களைக் கொண்டிருந்தவர்கள்​—⁠ஒருவேளை தங்கள் சக மனிதரை மோசமாக நடத்தியவர்கள் அல்லது துன்புறுத்தியவர்கள்​—⁠கடவுளுடைய ஆவியின் உதவியால் அப்படிப்பட்ட ஆகாத குணங்களை கட்டுப்படுத்த ஆரம்பிக்கின்றனர். அதன் விளைவாக, சக விசுவாசிகளுடன் சேர்ந்து அவர்களும் சமாதானத்தையும் வணக்கத்தில் ஐக்கியத்தையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரிய பரதீஸில் இப்போது அனுபவித்துவரும் ஆசீர்வாதங்கள் சொல்லர்த்தமான பரதீஸிலும் தொடர்ந்திருக்கும். அங்கு மனிதரிடையே சமாதானம் நிலவியிருப்பதுபோல் மிருகங்களிடையேயும் சமாதானம் நிலவியிருக்கும். கடவுளுடைய உரிய காலத்தில், ஆதியில் அவர் மனிதனுக்குக் கொடுத்த இந்த பொறுப்பு சரிவர நிறைவேற்றப்படும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்: “[பூமியைக்] கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”​—ஆதியாகமம் 1:28.

35“புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிப்பதாக யெகோவா வாக்குறுதி அளித்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றி கடன்பட்டிருக்கிறோம்! அந்த வாக்குறுதி பொ.ச.மு. 537-⁠ல் நிறைவேறியது, இன்றும் நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது. கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை இந்த இரண்டு நிறைவேற்றங்களும் சுட்டிக்காட்டுகின்றன. தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு வழங்கவிருக்கும் ஆசீர்வாதங்களை யெகோவா தயவோடு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மூலமாக நமக்கு சுருக்கமாக காண்பித்திருக்கிறார். உண்மையில், பின்வரும் யெகோவாவின் வார்த்தைகளுக்கு கூர்ந்து கவனம் செலுத்துவதற்கு நமக்கு தகுந்த காரணம் உள்ளது: “நான் சிருஷ்டிப்பவற்றிலே நீங்கள் என்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்”!​—ஏசாயா 65:18, தி.மொ.

[அடிக்குறிப்புகள்]

a இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே இந்த பாவிகள் கல்லறைகளண்டையில் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுவது விக்கிரக வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருக்கலாம்.

b இந்த வசனத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோம் (பொ.ச. நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர்), விக்கிரகத்தை வழிபட்டவர்கள் வருடத்தின் கடைசிநாளில் அனுசரித்த ஒரு பூர்வகால பழக்கத்தைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “விளைச்சலில் கடந்த வருடத்தில் அதிஷ்டம் அடித்ததற்காக அல்லது வரவிருக்கும் வருடத்தில் அதிஷ்டம் அடிக்க வேண்டும் என்பதற்காக பல்சுவை உணவுகளும் மதுரமான திராட்ச ரசம் கலந்த பானமும் நிறைந்த பந்தியை அவர்கள் ஆயத்தம் செய்வர்.”

c எபிரெய மசோரிட்டிக் வாசகத்தின்படி, ஏசாயா 65:16-⁠ல் யெகோவா “ஆமெனின் கடவுள்” என குறிப்பிடப்பட்டுள்ளார். ‘ஆமென்’ என்பதற்கு “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே நடக்கட்டும்” என்பது அர்த்தம். உண்மையான ஒன்று அல்லது உண்மையாகவே நடக்கப்போகும் ஒன்று என்பதை உறுதிப்படுத்துவதாகவோ உத்தரவாதமளிப்பதாகவோ அது இருக்கிறது. யெகோவா தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் தாம் சொல்வது உண்மை என்பதை காண்பிக்கிறார்.

d தீர்க்காயுசுக்கு மரங்கள் பொருத்தமான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. ஏனெனில் நீண்ட நாட்கள் வாழ்பவற்றில் அவையும் ஒன்று. உதாரணத்திற்கு, ஓர் ஒலிவ மரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் கனிகளை தந்து ஆயிரம் வருடம் வரை உயிர்வாழலாம்.

[கேள்விகள்]

1. உறுதியளிக்கும் என்ன வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார், என்ன கேள்வி எழும்புகிறது?

2. ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ பற்றி சொன்ன தீர்க்கதரிசி யார், அந்தப் பூர்வ தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றங்கள் யாவை?

3. என்ன கேள்விக்கு ஏசாயா 65-⁠ம் அதிகாரத்தில் விடையளிக்கப்படுகிறது?

4. (அ) யெகோவாவின் கலகக்கார ஜனங்களைப் போலில்லாமல் யார் அவரைத் தேடுவார்கள்? (ஆ) ஏசாயா 65:1, 2-ஐ அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வாறு பொருத்தினார்?

5, 6. (அ) என்ன உள்ளப்பூர்வமான விருப்பத்தை யெகோவா வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் அவருடைய ஜனங்கள் எப்படி பிரதிபலித்திருக்கின்றனர்? (ஆ) யெகோவா யூதாவிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

7, 8. என்ன வழிகளில், யெகோவாவின் முரட்டாட்டம் பிடித்த ஜனங்கள் அவருக்கு கோபமூட்டியிருக்கிறார்கள்?

9. சுய நீதிமான்களாகிய பாவிகளை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?

10. யூதாவில் உள்ளவர்களின் பாவங்களுக்குத் தக்கதாக யெகோவா எவ்வாறு பலன் அளிப்பார்?

11. உண்மையுள்ள மீதியானோரை பாதுகாப்பதாக யெகோவா எப்படி உறுதியளிக்கிறார்?

12. உண்மையுள்ள மீதியானோருக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?

13, 14. கடவுளுடைய ஜனங்கள் அவரை விட்டுவிட்டார்கள் என்பதை எந்த பழக்கவழக்கங்கள் காட்டுகின்றன, அதன் விளைவாக அவர்களுக்கு என்ன நேரிடும்?

15. ஏசாயா 65:11, 12-⁠ல் காணப்படும் எச்சரிப்புக்கு இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வழியில் செவிசாய்க்கின்றனர்?

16. தம் உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா எவ்வழிகளில் ஆசீர்வதிப்பார், ஆனால் அவரை புறக்கணித்தவர்களுக்கு என்ன நேரிடும்?

17. இன்று கடவுளுடைய ஜனங்கள் மகிழ்ச்சியால் கெம்பீரிப்பதற்குக் காரணம் என்ன?

18. யெகோவாவை புறக்கணித்தவர்களைப் பொறுத்ததில் எது மிஞ்சும், ஆணையிடுகையில் அவர்களுடைய பெயரை பயன்படுத்துவது எதை அர்த்தப்படுத்தலாம்?

19. கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு மற்றொரு பெயரில் அழைக்கப்படுவர், சத்திய தேவன்மேல் அவர்கள் ஏன் நம்பிக்கை வைப்பர்? (அடிக்குறிப்பையும் காண்க.)

20. “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய யெகோவாவின் வாக்குறுதி பொ.ச.மு. 537-⁠ல் எவ்வாறு நிறைவேறியது?

21. எந்த புதிய வானங்கள் 1914-⁠ல் உண்டானது?

22. புதிய பூமியின் பாகமாகிறவர்கள் யார், அதன் மையக்கருவாக விளங்குவதற்கு இப்போதும்கூட ஜனங்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகிறார்கள்?

23. “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய என்ன தகவலை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நாம் காண்கிறோம், இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்?

24. எருசலேம் திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறித்து யெகோவா ஏன் மகிழ்ச்சியடைவார், நகரத்தின் வீதிகளில் எது இனிமேலும் கேட்கப்படாது?

25, 26. (அ) நம்முடைய காலத்தில் எருசலேமை யெகோவா எவ்வாறு “களிப்பாக” ஆக்குகிறார்? (ஆ) புதிய எருசலேமை யெகோவா எப்படி பயன்படுத்துவார், நாம் ஏன் இன்று களிகூரலாம்?

27. தாயகத்திற்குத் திரும்பிச் செல்லும் யூதர்கள் அனுபவிக்கப்போகும் பாதுகாப்பை ஏசாயா எப்படி விவரிக்கிறார்?

28. தம்முடைய ராஜ்யத்தின்கீழ் புதிய உலகில் அனுபவிக்கப் போகும் வாழ்க்கையைப் பற்றி யெகோவாவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?

29. (அ) மீண்டும் நிலைநாட்டப்பட்ட யூத தேசத்தில் கடவுளுடைய கீழ்ப்படிதலுள்ள ஜனங்கள் எவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்? (ஆ) தீர்க்காயுசுக்கு மரங்கள் ஏன் பொருத்தமான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன? (அடிக்குறிப்பைக் காண்க.)

30. இன்று யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழலை அனுபவிக்கிறார்கள், புதிய உலகில் அவர்கள் எதை அனுபவித்து மகிழ்வார்கள்?

31, 32. (அ) சிறையிருப்பிலிருந்து திரும்பி வருபவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்? (ஆ) விசுவாசமுள்ளவர்களுக்கு புதிய உலகில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்?

33. யூதர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லும்போது என்ன கருத்தில் மிருகங்கள் சமாதானமாக இருக்கும்?

34. யெகோவாவின் வார்த்தைகளுக்கு இன்றும் புதிய உலகிலும் என்ன மெய்சிலிர்க்க வைக்கும் நிறைவேற்றம் இருக்கிறது?

35. நாம் ‘என்றைக்கும் மகிழ்ந்து களிகூருவதற்கு’ ஏன் தகுந்த காரணம் உள்ளது?

[பக்கம் 389-ன் படம்]

கடவுளுடைய புதிய பூமியில் நம்முடைய கைகளின் பலனை முழுவதுமாக அனுபவிப்பதற்கு போதுமான காலம் இருக்கும்