Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நீங்களே என் சாட்சிகள்”!

“நீங்களே என் சாட்சிகள்”!

அதிகாரம் நான்கு

“நீங்களே என் சாட்சிகள்”!

ஏசாயா 43:1-28

வருங்காலத்தை முன்னறிவிக்கும் திறமை உண்மை கடவுளை மற்ற எல்லா பொய்க் கடவுட்களிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒன்று. ஆனால் தாமே மெய்க் கடவுள் என்பதை நிரூபிக்கும் ஒரே குறிக்கோளோடு யெகோவா தீர்க்கதரிசனம் உரைப்பதில்லை. ஏசாயா 43-⁠ம் அதிகாரத்தில் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளபடி, மெய்க் கடவுள் என்பதற்கு மட்டுமல்ல, தம் உடன்படிக்கையின் ஜனங்களை நேசிப்பதற்கு நிரூபணமாகவும் யெகோவா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். நிறைவேறிய இந்தத் தீர்க்கதரிசனங்களை அறிந்த அவருடைய ஜனங்களோ அதைக் குறித்து பேசாமல் இருந்துவிடக் கூடாது. அவர்கள் கண்ணாரக் கண்டதை சாட்சி பகர வேண்டும். ஆம், அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்க வேண்டும்!

2வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், ஏசாயாவின் காலத்திற்குள் இஸ்ரவேலரின் நிலைமை படுமோசமாக ஆகிவிடுவதால் யெகோவா அவர்களை ஆவிக்குரிய விதத்தில் ஊனமுற்றோராக கருதுகிறார். “கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.” (ஏசாயா 43:8) ஆவிக்குரிய ரீதியில் குருடராயும் செவிடராயும் இருப்பவர்கள் எப்படி யெகோவாவுக்கு உயிருள்ள சாட்சிகளாக சேவை செய்ய முடியும்? அதற்கு ஒரேவொரு வழியே இருக்கிறது. அவர்களுடைய கண்களும் காதுகளும் அற்புதகரமாக திறக்கப்பட வேண்டும். யெகோவா அவர்களுடைய கண்களையும் காதுகளையும் திறக்கிறார்! எப்படி? முதலாவதாக, யெகோவா அவர்களுக்கு கடுமையான சிட்சை அளிக்கிறார்​—⁠இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் பொ.ச.மு. 740-லும், யூதாவைச் சேர்ந்தவர்கள் பொ.ச.மு. 607-லும் சிறைப்பட்டுப்போக அனுமதிக்கிறார். பிற்பாடு, ஆவிக்குரிய விதத்தில் புதுப்பெலன் பெற்ற மனந்திரும்பிய மீதியானோரை விடுவித்து, பொ.ச.மு. 537-⁠ல் அவர்களுடைய தாயகத்திற்கு அழைத்து வருவதன் மூலம் தம்முடைய ஜனங்களின் சார்பாக யெகோவா வல்லமையுடன் செயல்படுகிறார். சொல்லப்போனால், இந்த விஷயத்தில் தம்முடைய நோக்கத்தை எதுவுமே தடுக்க முடியாது என்பதில் யெகோவா உறுதியாக இருக்கிறார். ஆகவேதான் இஸ்ரவேலரை விடுவிப்பதைப் பற்றி சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக சொல்லுகையில், அது ஏற்கெனவே நடந்து முடிந்ததுபோல் பேசுகிறார்.

3“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்லுகிறதைக் கேள்: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன் மேலே பற்றாது. நானே யெகோவா, உன் கடவுள், இஸ்ரவேலின் பரிசுத்தர், உன் ரட்சகர்.”​—ஏசாயா 43:1-3அ, தி.மொ.

4இஸ்ரவேல் மீது யெகோவாவுக்கு விசேஷித்த அக்கறை இருக்கிறது, ஏனென்றால் அத்தேசம் யெகோவாவுக்குச் சொந்தமானது. ஆபிரகாமிய உடன்படிக்கையின் நிறைவேற்றமாக யெகோவாவே உருவாக்கிய தேசம் அது. (ஆதியாகமம் 12:1-3) ஆகவேதான், சங்கீதம் 100:3 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” யெகோவா இஸ்ரவேலரின் சிருஷ்டிகரும் மீட்பருமாக இருப்பதால், தம்முடைய ஜனங்களை அவர்களுடைய தாயகத்திற்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய முற்பிதாக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்கையில், தண்ணீரும் பெருக்கெடுத்து வரும் ஆறுகளும் அனல் பறக்கும் வனாந்தரங்களும் அவர்களுக்கு தடையாக இருக்கவில்லை. அது போலவே, இவர்களுக்கும் இவை தடையாகவோ தீங்கு விளைவிப்பவையாகவோ இருக்காது.

5நவீன நாளைய ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீந்திருப்பவர்களுக்கும் யெகோவாவின் வார்த்தைகள் ஆறுதலளிக்கின்றன. இவர்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட ‘புதுச்சிருஷ்டியாக’ இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:17) மனிதகுலம் எனும் ‘தண்ணீர்களுக்குள்’ தைரியமாக அடியெடுத்து வைத்திருக்கும் இவர்கள், அடையாள அர்த்தமுள்ள வெள்ளத்திலிருந்து கடவுளுடைய அன்பான பாதுகாப்பை அனுபவித்திருக்கிறார்கள். எதிரிகளிடமிருந்து வந்த அக்கினி பரீட்சை அவர்களை சுட்டுப் பொசுக்குவதற்கு பதிலாக புடமிட உதவி செய்திருக்கிறது. (சகரியா 13:9; வெளிப்படுத்துதல் 12:15-17) கடவுளுடைய ஆவிக்குரிய தேசத்தாருடன் சேர்ந்துகொண்ட ‘வேறே ஆடுகளின்’ பாகமான ‘திரள்கூட்டத்தினரும்’ யெகோவாவின் கரிசனையான கவனிப்பைப் பெற்றனர். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது அவர்களோடு வந்த ‘பல ஜாதியான ஜனங்களும்’ நாடுகடத்தப்பட்டவர்களை பாபிலோனிலிருந்து விடுவித்தபோது அவர்களுடன் வந்த யூதரல்லாதவர்களும் இந்தத் திரள்கூட்டத்தினருக்கு படமாக இருந்தனர்.​—யாத்திராகமம் 12:38; எஸ்றா 2:1, 43, 55, 58.

6மேதிய பெர்சிய சேனையை பயன்படுத்தி தம்முடைய ஜனங்களை பாபிலோனிலிருந்து விடுவிப்பதாக யெகோவா வாக்குறுதி கொடுக்கிறார். (ஏசாயா 13:17-19; 21:2, 9; 44:28; தானியேல் 5:28) யெகோவா நீதியுள்ள கடவுளாக இருப்பதால், இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு தகுந்த மீட்கும் பொருளை மேதிய பெர்சிய “ஊழியர்களுக்கு” கொடுப்பார். “உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.” (ஏசாயா 43:3ஆ, 4) கடவுள் முன்னறிவித்தபடியே, பெர்சிய வல்லரசு எகிப்தையும் எத்தியோப்பியாவையும் அருகிலுள்ள சேபாவையும் வென்றது என சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 21:18) அதைப் போலவே, 1919-⁠ல் இயேசு கிறிஸ்துவை பயன்படுத்தி யெகோவா ஆவிக்குரிய இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எனினும் அவர்களை விடுவித்ததற்காக இயேசுவுக்கு எந்த வெகுமதியும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் ஒரு புறமத அரசர் அல்ல. அவர் தம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களைத்தான் விடுவித்தார். அதோடு, ஏற்கெனவே 1914-⁠ல் ‘ஜாதிகளை அவருக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை அவருக்குச் சொந்தமாகவும்’ யெகோவா கொடுத்திருந்தார்.​—சங்கீதம் 2:8.

7பாபிலோனிலிருந்து மீட்டுக்கொண்டவர்களிடம் தமக்கிருக்கும் கனிவான உணர்ச்சிகளை யெகோவா எப்படி வெளிப்படையாக கூறுகிறார் என்பதை கவனியுங்கள். அவர்கள் தமக்கு ‘அருமையானவர்கள்,’ ‘கனம்பெற்றவர்கள்’ என்றும் தாம் அவர்களை ‘சிநேகிப்பதாகவும்’ கூறுகிறார். (எரேமியா 31:3) இன்றும் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடம் அதே விதமாக​—⁠சொல்லப்போனால் இன்னும் அதிகமாக​—⁠தம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய உறவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிறப்பிலேயே அப்படிப்பட்ட உறவுக்குள் வரவில்லை; ஆனால், சிருஷ்டிகருக்கு தங்களை தனிப்பட ஒப்புக்கொடுத்தபின் கடவுளுடைய ஆவி தங்களில் கிரியை செய்வதன் மூலம் இந்த உறவுக்குள் வந்திருக்கிறார்கள். யெகோவா இவர்களை தம்மிடமாகவும், தம்முடைய குமாரனிடமாகவும் கவர்ந்திழுத்திருக்கிறார். தம்முடைய சட்டங்களையும் நியமங்களையும் அவர்களுடைய கீழ்ப்படிதலுள்ள இருதயங்களில் எழுதியிருக்கிறார்.​—எரேமியா 31:31-34; யோவான் 6:44.

8நாடுகடத்தப்பட்டவர்களுக்கு இன்னுமதிக உறுதிமொழிகளை யெகோவா கொடுக்கிறார்: “பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பேன். நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.” (ஏசாயா 43:5-7) யெகோவா தம் குமாரரையும் குமாரத்திகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வரும் நேரத்தில், பூமியின் தொலைதூர இடம்கூட அவருக்கு எட்டாத இடமாக இருக்காது. (எரேமியா 30:10, 11) கடந்த காலத்தில், இத்தேசத்தினர் எகிப்திலிருந்து பெற்ற விடுதலையோடு ஒப்பிட இது அவர்களுக்கு மாபெரும் விடுதலையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.​—எரேமியா 16:14, 15.

9இஸ்ரவேல் தம்முடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனம் என்பதை நினைப்பூட்டுவதன் மூலம் அவர்களுக்கு விடுதலை அளிப்பதைப் பற்றிய தம் வாக்குறுதியை யெகோவா உறுதிப்படுத்துகிறார். (ஏசாயா 54:5, 6) அதோடு விடுதலையைக் குறித்த வாக்குறுதிகளுடன் யெகோவா தம்முடைய பெயரையும் இணைக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும்போது மகிமை தமக்கே சேரும்படி பார்த்துக்கொள்கிறார். உயிருள்ள ஒரே கடவுளுக்குச் செல்ல வேண்டிய புகழ் பாபிலோனை வெற்றி கொள்பவருக்குக்கூட வழங்கப்படுவதில்லை.

விசாரணைக் கூண்டில் கடவுட்கள்

10இஸ்ரவேலரை விடுவிப்பதைக் குறித்த தம் வாக்குறுதியை அடிப்படையாக வைத்து தேசங்களின் கடவுட்களை யெகோவா சர்வலோக நீதிமன்ற விசாரணைக் கூண்டில் நிறுத்துகிறார். அதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; [அவர்களுடைய கடவுட்களில்] இப்படிப்பட்டவைகளை அறிவிப்பது யார்? முன் அறிவித்திருக்கிறவைகளை இப்போது சொல்பவன் யார்? கேட்பவர்கள் உண்மையென்று சொல்லும்படி அவர்கள் [அவர்களுடைய கடவுட்கள்] தங்கள் சாட்சிகளைக் கொண்டு வந்து தங்களைக் குற்றமற்றவர்களென்று காட்டட்டும்.” (ஏசாயா 43:9, தி.மொ.) இவ்வுலக தேசங்களுக்கு முன்பு யெகோவா மிகப் பெரிய சவாலை வைக்கிறார். அதாவது, ‘உங்களுடைய கடவுட்கள் வருங்காலத்தை குறித்து திருத்தமாக முன்னறிவித்து உண்மையான கடவுட்கள் என்பதை நிரூபிக்கட்டும்’ என அவர் சொல்கிறார். மெய்க் கடவுளால் மட்டுமே திருத்தமாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமாதலால் இந்தச் சோதனை அவர்களுடைய பொய்ப் பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்திவிடும். (ஏசாயா 48:5) ஆனால் சர்வவல்லவர் மற்றுமொரு சட்ட நிபந்தனையையும் விதிக்கிறார்: உண்மை கடவுட்கள் என்று சொல்லிக்கொள்பவை தாங்கள் முன்னறிவித்தவற்றிற்கும் அவற்றின் நிறைவேற்றத்திற்கும் சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். நியாயமாகவே, யெகோவாவும் இந்தச் சட்ட நிபந்தனையிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ளவில்லை.

11இந்தப் பொய்க் கடவுட்களுக்கு எந்த வல்லமையும் இல்லாததால் அவற்றால் சாட்சிகளை கொண்டுவர முடியாது. ஆகவே விசாரணைக் கூண்டில் சாட்சி சொல்ல யாருமின்றி தர்மசங்கடமான நிலையில் அவை இருக்கின்றன. இப்போது, தாமே உண்மையான கடவுள் என்பதை யெகோவா நிரூபிக்கும் கட்டம் வருகிறது. தம்முடைய ஜனங்களைப் பார்த்து அவர் இவ்வாறு கூறுகிறார்: “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன் [“ஊழியன்,” NW], . . . நானே அவரென்று நீங்கள் அறிந்து நம்பி உணர வேண்டும்; எனக்கு முன் உண்டான தெய்வம் இல்லை; எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா; ரட்சிப்பவர் என்னைத் தவிர இல்லை. அறிவித்தவரும் இரட்சித்தவரும் சொன்னவரும் நானே; இப்படியெல்லாம் செய்தது உங்களிலுள்ள அந்நிய தெய்வமல்ல, ஆகவே நீங்களே என் சாட்சிகள், நானே கடவுள்; . . . இந்நாள் முதல் இருக்கப்போகிறவரும் நானே, என் கையினின்று விடுப்பவன் இல்லை, [என் கையைத்] தடுப்பவன் யார்?”​—ஏசாயா 43:10-13, தி.மொ.

12யெகோவாவின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் மகிழ்ச்சியுள்ள சாட்சிகளின் கூட்டத்தால் விசாரணைக் கூண்டு நிரம்பி வழிகிறது. அவர்களுடைய சாட்சி தெளிவானதாகவும், மறுக்க முடியாததாகவும் இருக்கிறது. யோசுவா சொன்ன விதமாகவே இவர்களும், ‘[யெகோவா] சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. . . . அவைகளெல்லாம் நிறைவேறின’ என்று சொல்கிறார்கள். (யோசுவா 23:14) யூதா நாடுகடத்தப்படுவதையும், சிறையிருப்பிலிருந்து அற்புதமாக விடுதலை பெற்று திரும்பி வருவதையும் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், மற்ற தீர்க்கதரிசிகளும்கூட ஒன்றுபோல முன்னறிவித்தது யெகோவாவின் ஜனங்களுடைய காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. (எரேமியா 25:11, 12) யூதாவை விடுவிக்கப் போகிறவராகிய கோரேசின் பெயர் அவர் பிறப்பதற்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டதே!​—ஏசாயா 44:26–45:1.

13இந்தக் காரியங்களுக்கு இமாலய சான்றுகள் இருக்க, யெகோவா மட்டுமே மெய்க் கடவுள் என்பதை யார்தான் மறுக்க முடியும்? யெகோவா புறமதக் கடவுட்களைப் போன்றவர் அல்ல, அவர் சிருஷ்டிக்கப்படாதவர்; அவர் மட்டுமே மெய்க் கடவுள். a இதன் காரணமாக, யெகோவாவின் பெயர் தாங்கிய ஜனங்கள், வருங்கால சந்ததியினருக்கும் அவரைப் பற்றி அறிய ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் அவருடைய அற்புதமான செயல்களை அறிவிக்கும் ஒப்பற்ற ஆர்வமூட்டும் நியமிப்பை பாக்கியமாக பெற்றிருக்கிறார்கள். (சங்கீதம் 78:5-7) அதேபோல் யெகோவாவின் நவீன நாளைய சாட்சிகளும் யெகோவாவின் பெயரை பூமி முழுவதும் அறிவிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். 1920-களில் பைபிள் மாணாக்கர்கள் யெகோவா என்ற கடவுளுடைய பெயரின் உட்கருத்தை அதிகமாக அறிய ஆரம்பித்தனர். அதற்குப் பின் 1931, ஜூலை 26-⁠ல் ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த மாநாட்டின்போது, சொஸைட்டியின் தலைவர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்டு “புதிய பெயர்” என்ற ஒரு தீர்மானத்தை வெளியிட்டார். “நாம் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால் அழைக்கப்படவும் அறியப்படவும் விரும்புகிறோம்” என்று சொன்னவுடன் மாநாட்டுக்கு கூடிவந்திருந்தவர்கள் “ஆம்!” என உணர்ச்சிப்பொங்க ஒருமனதாக அத்தீர்மானத்தை ஆமோதித்தார்கள். அப்போதிலிருந்து, யெகோவாவின் பெயர் உலகமுழுவதும் பிரஸ்தாபமாகி வருகிறது.​—சங்கீதம் 83:17.

14தம்முடைய பெயரை மதிப்புடன் தரித்திருக்கும் ஜனங்களை யெகோவா பராமரித்து வருகிறார், அவர்களை தமது “கண்மணியைப்” போலவும் கருதுகிறார். அவர், இஸ்ரவேலரை எப்படி எகிப்திலிருந்து விடுவித்து வனாந்தரத்தில் பத்திரமாக வழிநடத்தினார் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இதை நினைப்பூட்டுகிறார். (உபாகமம் 32:10, 12) அந்த சமயத்தில் அவர்கள் எந்த அந்நிய கடவுட்களையும் வணங்கவில்லை. ஏனெனில், எகிப்தியரின் பொய்க் கடவுட்களுக்கு ஏற்பட்ட படுமோசமான தலைக்குனிவை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். ஆம், எகிப்திய கடவுட்களின் சேனையால் எகிப்தைக் காப்பாற்றவும் முடியவில்லை, இஸ்ரவேலர் அங்கிருந்து புறப்படுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. (யாத்திராகமம் 12:12) அதுபோலவே வலிமையான பாபிலோன் நகரில் பொய்க் கடவுட்களுக்கென்று கிட்டத்தட்ட 50 கோவில்கள் இருந்தாலும், சர்வவல்லமையுள்ளவர் தம்முடைய ஜனங்களை அங்கிருந்து விடுவிக்கும்போது அவற்றால் அவருடைய கையை தடுத்து நிறுத்த முடியாது. யெகோவாவைத் தவிர, ‘ரட்சிப்பவர் இல்லை.’

போர்க்குதிரைகள் விழுகின்றன, சிறைகள் திறக்கப்படுகின்றன

15“உங்கள் மீட்பரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறதாவது: ‘நான் உங்கள் பொருட்டு சிறைகளின் கம்பிகள் தகர்ந்து விழவும் கல்தேயர் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களை பாபிலோனுக்கு அனுப்புவேன். நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவா, இஸ்ரவேலின் சிருஷ்டிகர், உங்கள் ராஜா.’ சமுத்திரத்திலே வழியையும், வலுவான தண்ணீர்களிலே பாதையையும் அமைத்து போர் இரதத்தையும் குதிரையையும், இராணுவத்தையும் வலிமைமிக்கோரையும் ஒன்று போல் புறப்பட பண்ணுகிற யெகோவா சொல்கிறதாவது: ‘அவை வீழ்ந்து விடும். அவை எழுந்திருக்காது. அவை நிச்சயமாகவே அணைந்து விடும். ஒரு திரி அணைகிறது போல் அவை அணைத்துப் போடப்படும்.’”​—ஏசாயா 43:14-17, NW.

16நாடுகடத்தப்பட்டவர்களுக்கு பாபிலோன் சிறை போன்று இருக்கிறது; ஏனெனில், எருசலேமுக்கு திரும்பவிடாமல் தடுக்கிறது. இதற்கு முன்பு, சமுத்திரத்திலே [சிவந்த சமுத்திரத்திலே] வழியையும் வலுவான தண்ணீர்களிலே [யோர்தானிலே] பாதையையும் அமைத்த’ சர்வவல்லமையுள்ளவருக்கு பாபிலோனின் இராணுவம் ஒரு பெரிய விஷயமே அல்ல. (யாத்திராகமம் 14:16; யோசுவா 3:13) அவ்விதமாகவே, யெகோவாவின் பிரதிநிதியாகிய கோரேசு தன்னுடைய படைகள் நகரத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக ஐப்பிராத்து மகா நதியின் நீர்மட்டத்தை குறையச் செய்வார். பாபிலோனின் கால்வாய் வழியே​—⁠ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல்களுக்கும் பாபிலோனியக் கடவுட்களைச் சுமந்து சென்ற படகுகளுக்கும் நீர்மார்க்கமாக அமைந்த கால்வாய் வழியே​—⁠பயணிக்கும் கல்தேய வியாபாரிகள் தங்கள் வலிமையான தலைநகரம் வீழ்ச்சியடைகையில் அழுது புலம்புவார்கள். சிவந்த சமுத்திரத்தில் பார்வோனின் இரதங்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் பாபிலோனின் பாய்ந்துவரும் இரதங்களுக்கும் ஏற்படும். அவை பாபிலோனை காப்பாற்றாது. விளக்கின் திரியை அணைப்பது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிதாக பாபிலோனை பாதுகாக்க வருபவர்களை படையெடுப்பவர் அழித்துவிடுவார்.

யெகோவா தமது ஜனங்களை பத்திரமாக தாயகத்திற்கு வழிநடத்துகிறார்

17தம்முடைய பூர்வகால மீட்பின் செயல்களை இப்போது நடப்பிக்கப்போகும் செயல்களோடு ஒப்பிட்டு யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம் பண்ணும். இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்.”​—ஏசாயா 43:18-21.

18“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்” எனச் சொல்லும்போது கடந்த காலங்களில் தாம் நடப்பித்த இரட்சிப்பின் செயல்களை தம்முடைய ஊழியர்கள் மறந்துவிடும்படி யெகோவா அறிவுரை கூறவில்லை. சொல்லப்போனால், இந்த இரட்சிப்பின் செயல்களில் பல தேவ ஆவியால் ஏவப்பட்ட இஸ்ரவேலின் சரித்திர பதிவுகளின் பாகமாக இருக்கின்றன. எகிப்திலிருந்து வெளியேறியதை வருடாவருடம் பஸ்கா பண்டிகையின்போது நினைவுகூர வேண்டும் எனவும் யெகோவா கட்டளையிட்டார். (லேவியராகமம் 23:5; உபாகமம் 16:1-4) எனினும், தம்முடைய ஜனங்கள் இப்போது ‘புதிய காரியத்தின்,’ அதாவது அவர்கள் நேரடியாக எதிர்ப்படவிருக்கும் காரியத்தின் நிமித்தம் தம்மை மகிமைப்படுத்தும்படி யெகோவா விரும்புகிறார். அவர்கள் பாபிலோனிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல ஒருவேளை நேரடிப் பாதையான வனாந்தரத்தின் வழியே அற்புதமாக தங்கள் தாயகத்திற்கு பிரயாணம் செய்வதும் இதில் உட்பட்டிருக்கிறது. அந்தப் பொட்டல் காட்டில் அவர்களுக்கு யெகோவா “வழியை” உண்டாக்குவார். மோசேயின் நாளில் இஸ்ரவேலருக்கு செய்ததை நினைப்பூட்டும் விதத்தில் அற்புதங்களை செய்வார்​—⁠வனாந்தரம் வழியாக திரும்பி வருவோருக்கு உணவளித்து, ஆறுகளால் அவர்களுடைய தாகத்தைப் போக்குவார். யெகோவா அந்தளவுக்கு அபரிமிதமாக வாரிவழங்குவார் என்பதால் காட்டு மிருகங்களும் அவரை கனப்படுத்தி ஜனங்களை தாக்காமல் இருக்கும்.

19அவ்வாறே 1919-⁠ல் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோர் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றபின், யெகோவா அவர்களுக்கு ஆயத்தம் செய்திருந்த “பரிசுத்த வழி”யில் நடக்க ஆரம்பித்தனர். (ஏசாயா 35:8) இஸ்ரவேலரைப் போன்று அனல்வீசும் வனாந்தரம் வழியாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்கவில்லை. அதுமட்டுமல்ல இஸ்ரவேலர் சில மாதங்களில் எருசலேம் வந்து சேர்ந்ததுபோல் இவர்களுடைய பயணம் குறுகியதாக இருக்கவில்லை. இருந்தாலும், இந்தப் “பரிசுத்த வழி” அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோரை ஆவிக்குரிய பரதீஸிற்கு வழிநடத்தியது. இவர்கள் இன்னும் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், அந்தப் “பரிசுத்த வழி”யில்தான் நிலைத்திருக்கிறார்கள். அந்தப் பெரும் பாதையில் நடக்கும் வரையில், அதாவது சுத்தத்தையும் பரிசுத்தத்தையும் பற்றிய கடவுளுடைய தராதரங்களை கைக்கொள்ளும் வரையில் அவர்கள் ஆவிக்குரிய பரதீஸில் நிலைத்திருக்கிறார்கள். “இஸ்ரவேலரல்லாத” திரள்கூட்டத்தார் அவர்களுடன் சேர்ந்து கொள்வதில் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! சாத்தானின் ஒழுங்குமுறையை நம்பியிருப்பவர்களுக்கு நேர்மாறாக, இந்த மீதியானோரும் அவர்களுடைய கூட்டாளிகளும் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் ஆவிக்குரிய விருந்தை தொடர்ந்து அனுபவித்து மகிழ்கிறார்கள். (ஏசாயா 25:6; 65:13, 14) மிருக குணம் படைத்த அநேகர், யெகோவா தம் ஜனங்களை ஆசீர்வதிப்பதைப் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை மாற்றி மெய்க் கடவுளை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள்.​—ஏசாயா 11:6-9.

யெகோவா தம் மன வேதனையைத் தெரிவிக்கிறார்

20ஏசாயாவின் நாளில் இருந்த பொல்லாத சந்ததியோடு ஒப்பிட, திரும்ப நிலைநாட்டப்பட்ட மீதியானோர் மனம் மாறிய ஜனங்களாக இருக்கிறார்கள். ஏசாயாவின் நாளைச் சேர்ந்த பொல்லாத சந்ததியினரைப் பற்றி யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக் குறித்து மனஞ்சலித்துப் போனாய். உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம் பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி [“சாம்பிராணி காட்டும்படி,” NW] உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.” (ஏசாயா 43:22, 23) “நீ எனக்குப் பணத்தைக் கொண்டு சுகந்த பட்டையை வாங்காமலும், உன் பலிகளின் கொழுப்பால் என்னைத் திருப்தி செய்யாமலும், உன் பாவங்களினால் நான் உனக்கு சேவை செய்ய என்னை கட்டாயப்படுத்தினாய்; உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.”​—ஏசாயா 43:24, NW.

21‘காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், சாம்பிராணி காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்’ என யெகோவா சொல்லும்போது, பலியும் சாம்பிராணியும் (பரிசுத்த தூபவர்க்கத்தின் பாகம்) தேவையில்லை என சொல்லவில்லை. உண்மையில், நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி இவையாவும் மெய் வணக்கத்தின் முக்கிய பாகமாகும். அதேவிதமாக “பட்டை”யும் முக்கியமானது. இந்தப் பட்டை பரிசுத்த அபிஷேக தைலத்தின் நறுமணக் கலவையான சுகந்த வசம்பைக் குறிக்கிறது. இஸ்ரவேலர்கள் ஆலய சேவையில் இவற்றை பயன்படுத்த தவறியிருக்கிறார்கள். ஆனால் இந்தத் தேவைகள் பாரமானவையா? இல்லவே இல்லை! பொய்க் கடவுட்கள் கேட்கும் காரியங்களோடு ஒப்பிட யெகோவா கேட்கும் காரியங்கள் மிக எளிதானவை. உதாரணமாக, பொய்க் கடவுளாகிய மோளேகு பிஞ்சுக் குழந்தைகளை பலியிடும்படி கேட்டது. இப்படியொரு பலியை யெகோவா ஒருபோதும் கேட்டதில்லையே!​—உபாகமம் 30:11; மீகா 6:3, 4, 8.

22இஸ்ரவேலர்களுக்கு ஆவிக்குரிய உணர்வு இருந்திருந்தால் ஒருபோதும் ‘யெகோவாவைக் குறித்து மனஞ்சலித்துப் போயிருக்க’ மாட்டார்கள். அவருடைய சட்டத்திற்கு கவனம் செலுத்தினால், அவர் தங்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து பலியின் மிகச் சிறந்த பாகமான ‘கொழுப்பை’ அவருக்கு மகிழ்ச்சியுடன் அளிப்பார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் பேராசையுடன் அந்தக் கொழுப்பை தாங்களே வைத்துக்கொள்கிறார்கள். (லேவியராகமம் 3:9-11, 16) இந்தப் பொல்லாத ஜனங்கள் தங்களுடைய பாவங்களால் எந்தளவுக்கு யெகோவாவை வருத்தப்படுத்துகிறார்கள். உண்மையில், தங்களை சேவிக்கும்படி யெகோவாவை கட்டாயப்படுத்துகிறார்கள்!​—நெகேமியா 9:28-30.

சிட்சைக்கு பலன் கிடைக்கிறது

23யெகோவா கொடுக்கும் சிட்சை கடுமையானதாக இருந்தாலும் அது தகுதியானதே; அது அவர் விரும்பிய பலன்களை அளிக்கிறது, இரக்கத்தை காட்டுவதற்கு வாய்ப்பளிக்கிறது. “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். உன் ஆதி தகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் [“விளக்கம் சொல்பவர்கள்,” NW அடிக்குறிப்பு] எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள். ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, யாக்கோபை சாபத்துக்கும் [“அழிவுக்கும்,” NW] இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.” (ஏசாயா 43:25-28) உலகிலுள்ள எல்லா ஜனங்களையும் போலவே இஸ்ரவேலரும் ‘ஆதி தகப்பனாகிய’ ஆதாமிலிருந்து வந்தவர்கள். ஆகவே, எந்த இஸ்ரவேலனும் தன்னை “நீதிமானாக” நிரூபிக்க முடியாது. இஸ்ரவேலில் “முன்னின்று பேசுகிறவர்களும்”​—⁠நியாயப்பிரமாணத்தை போதிப்பவர்களும் அல்லது விளக்கம் சொல்பவர்களும்​—⁠யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்து, பொய்யானவற்றை போதித்தார்கள். ஆகவே, அந்த முழு தேசத்தையும் ‘அழித்து, நிந்தனைக்கு’ ஒப்புக்கொடுப்பார். அவருடைய “பரிசுத்த ஸ்தலத்தின்” அல்லது வாசஸ்தலத்தின் தலைவர்களையும் பரிசுத்த குலைச்சலாக்கிவிடுவார்.

24இஸ்ரவேலர் தங்களுடைய தவறை உணர்வதால் மட்டுமே தெய்வீக இரக்கத்தைப் பெற மாட்டார்கள்; ஆனால் யெகோவா தம் நிமித்தமாக இரக்கத்தைக் காட்டுவார் என்பதை கவனியுங்கள். ஆம், அவருடைய பெயர் அதில் உட்பட்டிருக்கிறது. இஸ்ரவேலரை நாடுகடத்தப்பட்டவர்களாக அப்படியே விட்டுவிட்டால், அதைப் பார்க்கும் மற்றவர்கள் அவருடைய பெயரையே நிந்திப்பார்கள். (சங்கீதம் 79:9; எசேக்கியேல் 20:8-10) அதுபோலவே இன்றும் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதும், அவருடைய அரசதிகாரம் உண்மையென நிரூபிக்கப்படுவதுமே முதலிடம் பெறுகின்றன; அவற்றிற்கு அடுத்ததே மனிதரின் இரட்சிப்பு. இருந்தாலும், யெகோவா தரும் சிட்சையை அப்படியே ஏற்று, அவரை ஆவியோடும் உண்மையோடும் வழிபடுபவர்களை அவர் நேசிக்கிறார். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, வேறே ஆடுகளாக இருந்தாலும் சரி, அவர்களுடைய மீறுதல்களை கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் துடைத்து நீக்குவதன் மூலம் தம்முடைய அன்பை மெய்ப்பித்துக் காட்டுகிறார்.​—யோவான் 3:16; 4:23, 24.

25மேலுமாக, திரள் கூட்டத்தினரான உண்மை வணக்கத்தாரை ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ விடுவித்து சுத்தமாக்கப்பட்ட “புதிய பூமி”க்குள் அழைத்துச் சென்று அவர்களுக்காக புதிய காரியத்தை செய்வதன் மூலம் மிக விரைவில் தம்முடைய அன்பை மெய்ப்பித்துக் காட்டுவார். (வெளிப்படுத்துதல் 7:14; 2 பேதுரு 3:13) இதுவரை கண்டிராத யெகோவாவுடைய வல்லமையின் மிகவும் வியக்கத்தக்க வெளிக்காட்டுதல்களை மனிதர் அப்போது காண்பார்கள். அந்த சம்பவத்தைக் குறித்த நிச்சயமான எதிர்பார்ப்பு அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கும் திரள்கூட்டத்தாருக்கும் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. அதோடு, “நீங்களே என் சாட்சிகள்” என்ற உன்னத நியமிப்பிற்கு இசைய ஒவ்வொரு நாளும் வாழ வழிவகுக்கிறது.​—ஏசாயா 43:10, தி.மொ.

[அடிக்குறிப்பு]

a புற தேசத்தாருடைய புராண இலக்கியங்களில், பல கடவுட்களுக்கு “பிறப்பு” இருந்ததாகவும் “பிள்ளைகள்” இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

[கேள்விகள்]

1. தீர்க்கதரிசனத்தை யெகோவா எதற்காக பயன்படுத்துகிறார், நிறைவேறிய தீர்க்கதரிசனத்திற்கு அவருடைய ஜனங்கள் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?

2. (அ) ஏசாயாவின் காலத்தில் இஸ்ரவேலரின் ஆவிக்குரிய நிலை என்ன? (ஆ) தம்முடைய ஜனங்களின் கண்களை யெகோவா எப்படி திறக்கிறார்?

3. வருங்காலத்தில் நாடுகடத்தப்படுவோருக்கு யெகோவா தரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்ன?

4. யெகோவா இஸ்ரவேலரின் சிருஷ்டிகராக இருப்பது எப்படி, தாயகம் திரும்புவதைக் குறித்து தம்முடைய ஜனங்களுக்கு என்ன உறுதியளிக்கிறார்?

5. (அ) யெகோவாவின் வார்த்தைகள் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு எவ்வாறு ஆறுதலளிக்கின்றன? (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு சேர்ந்துகொள்பவர்கள் யார், இவர்களுக்கு படமாக இருந்தவர்கள் யார்?

6. மீட்கும் பொருள் சம்பந்தமாக​—⁠(அ) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரிடத்தில் (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலரிடத்தில்​—⁠யெகோவா எப்படி தம்மை நீதியுள்ள கடவுளாக காட்டுகிறார்?

7. பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் யெகோவா தம்முடைய ஜனங்களிடம் எப்படி தம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார்?

8. நாடுகடத்தப்பட்டவர்களுக்கு யெகோவா தரும் உறுதிமொழி என்ன, தங்களுடைய விடுதலையை பற்றி அவர்கள் எப்படி உணர்வார்கள்?

9. எந்த இரண்டு வழிகளில் மீட்பின் செயல்களைப் பற்றிய வாக்குறுதியை யெகோவா தம் பெயரோடு சம்பந்தப்படுத்துகிறார்?

10. தேசங்களுக்கும் அவற்றின் கடவுட்களுக்கும் முன்பாக யெகோவா என்ன சவாலை வைக்கிறார்?

11. தம்முடைய ஊழியனுக்கு யெகோவா என்ன பொறுப்பளிக்கிறார், தம்முடைய தெய்வத்துவத்தைப் பற்றி யெகோவா என்ன தெரியப்படுத்துகிறார்?

12, 13. (அ) ஏராளமான என்ன சாட்சியத்தை யெகோவாவின் ஜனங்கள் கொண்டிருக்கிறார்கள்? (ஆ) நவீன காலங்களில் யெகோவாவின் பெயர் எப்படி முன்னிலைக்கு வந்திருக்கிறது?

14. இஸ்ரவேலருக்கு யெகோவா எதை நினைப்பூட்டுகிறார், இந்த நினைப்பூட்டுதல் ஏன் காலத்திற்கு ஏற்றது?

15. பாபிலோனைப் பற்றி யெகோவா என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?

16. பாபிலோனுக்கும், கல்தேய வியாபாரிகளுக்கும், பாபிலோனை பாதுகாக்க வருபவர்களுக்கும் என்ன நடக்கும்?

17, 18. (அ) என்ன “புதிய” காரியத்தை யெகோவா தீர்க்கதரிசனம் உரைக்கிறார்? (ஆ) எவ்வழியில் இந்த ஜனங்கள் முந்தின காரியங்களை நினைக்காதிருப்பார்கள், ஏன்?

19. ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோரும் அவர்களுடைய கூட்டாளிகளும் எப்படி “பரிசுத்த வழி”யில் நடக்கிறார்கள்?

20. ஏசாயாவின் நாளில் இஸ்ரவேலர் எப்படி யெகோவாவுக்கு சேவை செய்ய தவறியிருக்கின்றனர்?

21, 22. (அ) யெகோவாவின் தேவைகள் பாரமானவை அல்ல என நாம் ஏன் சொல்ல முடியும்? (ஆ) தங்களை சேவிக்கும்படி அந்த ஜனங்கள் எப்படி யெகோவாவை கட்டாயப்படுத்துகிறார்கள்?

23. (அ) யெகோவா கொடுக்கும் சிட்சை ஏன் தகுதியானது? (ஆ) இஸ்ரவேலருக்கு கடவுள் சிட்சை அளிப்பதில் உட்பட்டிருப்பது என்ன?

24. எந்த முக்கிய காரணத்திற்காக பண்டைய காலத்திலும் நவீன நாளிலும் தம்முடைய ஜனங்களை யெகோவா மன்னிப்பார், ஆனாலும் அவர்களிடம் அவர் என்ன உணர்ச்சிகளை காண்பிக்கிறார்?

25. வெகு சீக்கிரத்தில் என்ன வியக்கத்தக்க காரியங்களை யெகோவா செய்து முடிப்பார், இதற்கு நம்முடைய போற்றுதலை இப்போது எப்படி மெய்ப்பித்துக் காட்டலாம்?

[பக்கம் 4849-ன் படம்]

எருசலேமுக்குச் செல்லும் வழியில் யூதர்களுக்கு யெகோவாவே உற்ற துணை

[பக்கம் 52-ன் படங்கள்]

தங்கள் கடவுட்களுக்கு சாட்சிகளை கொண்டுவரும்படி தேசங்களிடம் யெகோவா சவால்விடுகிறார்

1. பாகாலின் செம்பு சிலை 2. அஸ்தரோத்தின் சிறு களிமண் உருவங்கள் 3. எகிப்திய திரித்துவமான ஹோரஸ், ஆஸிரிஸ், ஐஸிஸ் 4. கிரேக்க கடவுட்களான அத்தேனாவும் (இடது) ஆஃபிரோடைட்டும்

[பக்கம் 58-ன் படங்கள்]

“நீங்களே என் சாட்சிகள்.”​—⁠ஏசாயா 43:⁠10, தி.மொ.