Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பிரபுக்களை நம்பாதேயுங்கள்’

‘பிரபுக்களை நம்பாதேயுங்கள்’

அதிகாரம் பதினொன்று

‘பிரபுக்களை நம்பாதேயுங்கள்’

ஏசாயா 50:1-11

“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். . . . யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கினவர்.” (சங்கீதம் 146:3-6) ஏசாயாவின் நாளில் வாழும் யூதர்கள் சங்கீதக்காரனின் இந்தப் புத்திமதியின்படி நடந்தால் எவ்வளவு நலமாக இருக்கும்! அவர்கள் எகிப்தின் மீதோ வேறெந்த புறதேசத்தார் மீதோ நம்பிக்கை வைக்காமல், “யாக்கோபின் தேவனை” நம்பினால் எவ்வளவு சிறந்ததாக இருக்கும்! அப்படி செய்தால், எதிரிகள் யூதாவைத் தாக்க வருகையில் யெகோவா பாதுகாப்பு அளிப்பார். ஆனால் யூதாவோ உதவிக்காக யெகோவாவிடம் திரும்ப மறுத்துவிடுகிறது. ஆகவே, எருசலேம் அழிக்கப்படவும், அதன் குடிகள் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்படவும் யெகோவா அனுமதிப்பார்.

2யூதா தன்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. யெகோவா தனக்கு துரோகம் செய்துவிட்டதால் அல்லது தன்னோடு செய்த உடன்படிக்கையை அசட்டை செய்துவிட்டதால் தனக்கு அழிவு வந்ததென யூதா பழிசுமத்த முடியாது. படைப்பாளர் உடன்படிக்கையை மீறுபவரே அல்ல. (எரேமியா 31:32; தானியேல் 9:27; வெளிப்படுத்துதல் 15:4, NW) இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில், யூதர்களிடம் யெகோவா இவ்வாறு கேட்கிறார்: “உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே?” (ஏசாயா 50:1அ, பொ.மொ.) மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி, மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் அதற்குரிய மணமுறிவுச் சீட்டை அவளுக்குத் தரவேண்டும். அப்போது அவள் வேறு ஒருவனின் மனைவியாகலாம். (உபாகமம் 24:1, 2) அடையாள அர்த்தத்தில், யூதாவின் உடன் ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்கு யெகோவா இப்படிப்பட்ட ஒரு சீட்டை கொடுத்திருக்கிறார்; ஆனால் யூதாவுக்கோ கொடுக்கவில்லை. a யெகோவா இன்னும் யூதாவின் ‘நாயகராகவே’ இருக்கிறார். (எரேமியா 3:8, 14) எனவே, புறமத தேசங்களோடு கூட்டுச்சேர யூதாவுக்கு நிச்சயமாகவே அனுமதியில்லை. யூதாவோடு யெகோவா வைத்திருக்கும் உறவு, “ஷைலோ [மேசியா] வரும்வரையில்” தொடரும்.​—ஆதியாகமம் 49:10, NW.

3யெகோவா யூதாவை இப்படியும் கேட்கிறார்: “உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்?” (ஏசாயா 50:1ஆ, பொ.மொ.) யெகோவா ஏதோ கடன்பட்டிருந்ததுபோல் அதை அடைப்பதற்காக யூதர்கள் பாபிலோனுக்கு கைதிகளாக அனுப்பப்படவில்லை. கடனைத் தீர்ப்பதற்காக தன் பிள்ளைகளை அடிமைகளாக விற்றுப்போடும் ஓர் ஏழை இஸ்ரவேலனைப் போல் யெகோவா இல்லை. (யாத்திராகமம் 21:7) மாறாக, தம்முடைய ஜனங்கள் அடிமைகளாக போவதற்குரிய உண்மையான காரணத்தை யெகோவா சுட்டிக்காட்டுகிறார்: “இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.” (ஏசாயா 50:1இ) யூதர்களை யெகோவா கைவிடவில்லை, அவர்கள்தான் அவரை விட்டுவிலகினர்.

4யெகோவா தம்முடைய ஜனங்களிடம் வைத்திருக்கும் அன்பை அவருடைய அடுத்த கேள்வி தெளிவாக காட்டுகிறது: “நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில்தர எவனும் இல்லாததேன்?” (ஏசாயா 50:2அ, பொ.மொ.) தம்மிடத்தில் முழு இருதயத்தோடு திரும்பி வரும்படி தம்முடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகள் மூலம் ஜனங்களை யெகோவா கெஞ்சிக் கேட்கிறார். இது அவர்களுடைய வீடுகளுக்கு அவரே வந்து கேட்பதுபோல இருக்கிறது. ஆனால் அவர்களோ பதில் சொல்வதில்லை. அந்த யூதர்கள் உதவிக்காக மற்ற மனிதர்களிடம் செல்லவே விரும்புகின்றனர். சில சமயங்களில், எகிப்திடமாகவும் அடைக்கலம் தேடுகின்றனர்.​—ஏசாயா 30:2; 31:1-3; எரேமியா 37:5-7.

5இரட்சிப்பளிப்பதில் யெகோவாவைவிட எகிப்து அதிக நம்பிக்கைக்குரியதா? பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் தேசம் உருவாவதற்கு காரணமாயிருந்த சம்பவங்களை அந்த விசுவாசமற்ற யூதர்கள் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. யெகோவா அவர்களிடம் இவ்வாறு கேட்கிறார்: “மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப் போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது. நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.”​—ஏசாயா 50:2ஆ, 3.

6பொ.ச.மு. 1513-⁠ல், எகிப்து கடவுளுடைய ஜனங்களை விடுவிக்கும் மீட்பனாக அல்ல, அவர்களை ஒடுக்கிய கொடுங்கோலனாகவே இருந்தது. அந்தப் புறதேசத்திலே இஸ்ரவேலர் அடிமைகளாக இருந்தனர். ஆனால் யெகோவா அவர்களை விடுவித்தார். அது மெய்சிலிர்க்க வைக்கும் விடுதலை! முதலில், அந்தத் தேசத்தின்மீது பத்து வாதைகளை யெகோவா கொண்டு வந்தார். குறிப்பாக, அழிவுண்டாக்கிய பத்தாவது வாதையைத் தொடர்ந்து, இஸ்ரவேலரை நாட்டைவிட்டுப் போகும்படி பார்வோன் அவசரப்படுத்தினான். (யாத்திராகமம் 7:14–12:31) ஆனால் அவர்கள் போனவுடனே, பார்வோனின் மனம் மாறியது. தன் படைகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, இஸ்ரவேலரை மறுபடியும் எகிப்திற்கு அடிமைகளாக கொண்டுவர விரைந்து சென்றான். (யாத்திராகமம் 14:5-9) பெருந்திரளான எகிப்திய வீரர்கள் பின்புறமும், சிவந்த சமுத்திரம் முன்புறமும் இருக்க இஸ்ரவேலர் வசமாக சிக்கிக்கொண்டனர்! ஆனால், அவர்களுக்காக போரிட யெகோவா இருந்தார்.

7எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே ஒரு மேகஸ்தம்பத்தை நிறுத்தி, இருந்த இடத்தைவிட்டு எகிப்தியர் ஒரு அடிகூட முன்னால் வராதபடி யெகோவா செய்துவிட்டார். அந்த மேகஸ்தம்பம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரவேலருக்கு ஒளியாகவும் இருந்தது. (யாத்திராகமம் 14:20) பிறகு யெகோவா எகிப்திய படைகளை இருந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, “இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்.” (யாத்திராகமம் 14:21) தண்ணீர் பிரிந்ததும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட அனைவரும் சிவந்த சமுத்திரத்தைப் பாதுகாப்பாக கடந்தனர். தம்முடைய ஜனங்கள் அனைவரும் மறுகரைக்கு அருகில் சென்றதும், யெகோவா மேகஸ்தம்பத்தை நீக்கினார். எகிப்தியர் உடனடியாக அவர்களை துரத்திக்கொண்டு ஆவேசத்துடன் சமுத்திர பாதைக்குள் பாய்ந்தனர். தம்முடைய ஜனங்கள் எல்லாரும் பத்திரமாக கரை சேர்ந்ததும், சுவர்போல் நின்றிருந்த தண்ணீரை யெகோவா விடுவித்தார். பார்வோனும் அவனுடைய வீரர்களும் சமுத்திரத்திலேயே சமாதியாயினர். இப்படியாக யெகோவா தம் ஜனங்களுக்காக போரிட்டார். இன்று கிறிஸ்தவர்களுக்கு இது என்னே உற்சாகத்தை அளிக்கிறது!​—யாத்திராகமம் 14:23-28.

8இந்தத் தெய்வீக வெற்றி கிட்டிய சமயத்திலிருந்து ஏசாயாவின் நாட்கள் வரை எழுநூறு வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. யூதா இப்பொழுது தனி தேசமாக விளங்குகிறது. சிலசமயங்களில் அசீரியா, எகிப்து போன்ற அந்நிய தேசங்களோடு ஒப்பந்தங்களை செய்து கொள்கிறது. ஆனால், இந்தப் புறமத தேசங்களின் தலைவர்களை நம்ப முடியாது. சுயநலத்தைத்தான் அவர்கள் பெரிதாக நினைக்கிறார்களே தவிர, யூதாவோடு செய்த எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் மதிக்கிறதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களை நம்ப வேண்டாமென யெகோவாவின் நாமத்தில் பேசும் தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றனர். ஆனால், இந்த எல்லா எச்சரிக்கைகளும் செவிடன் காதில் ஊதின சங்குபோல ஆகின்றன. கடைசியில், யூதர்கள் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு 70 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருப்பர். (எரேமியா 25:11) என்றாலும், யெகோவா தம்முடைய ஜனங்களை மறக்க மாட்டார்; அவர்களை நிரந்தரமாக ஒதுக்கித் தள்ளிவிடவும் மாட்டார். உரிய காலத்தில் அவர்களை நினைவுகூர்ந்து, தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தாயகம் திரும்ப வழி திறப்பார். என்ன நோக்கத்தோடு? எல்லா ஜனங்களுடைய கீழ்ப்படிதலையும் பெற தகுதியான ஷைலோவின் வருகைக்காக ஆயத்தங்கள் செய்யவே!

ஷைலோவின் வருகை

9நூற்றாண்டுகள் செல்கின்றன. ‘காலம் நிறைவேறும்போது,’ ஷைலோ என்றழைக்கப்படும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலக அரங்கில் தோன்றுகிறார். (கலாத்தியர் 4:5; எபிரெயர் 1:1, 2) தம் சார்பில் யூதர்களிடம் பேச, தமது மிக நெருங்கிய நண்பனையே யெகோவா அனுப்புகிறார். தம்முடைய ஜனங்கள் மீது அவர் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. யெகோவாவின் சார்பாக பேசுவதில் இயேசு எப்படிப்பட்டவராக திகழ்கிறார்? தலைசிறந்தவராக திகழ்கிறார்! கடவுள் சார்பாக பேசும் பிரதிநிதியாக மாத்திரமல்ல, மிகச் சிறந்த போதகராகவும் விளங்குகிறார். இதில் ஆச்சரியப்பட ஏதுமே இல்லை. ஏனென்றால் அவருடைய போதகர் வேறு யாருமல்ல, மகத்தான போதகராகிய யெகோவா தேவனே. (யோவான் 5:30; 6:45; 7:15, 16, 46; 8:26) ஏசாயா மூலம் இயேசு தீர்க்கதரிசனமாக உரைக்கும் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் [“யெகோவா,” NW] எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.”​—ஏசாயா 50:4. b

10இயேசு பூமிக்கு வருவதற்கு முன், பரலோகத்தில் தம் தகப்பனோடு வேலை செய்துவந்தார். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை நீதிமொழிகள் 8:30 (NW) கவிதை நடையில் விவரிக்கிறது: “நான் [யெகோவா] அருகே தேர்ச்சிபெற்ற வேலையாளாக இருந்தேன், . . . எப்பொழுதும் அவர் முன்பாக மகிழ்ந்திருந்தேன்.” தம் தகப்பனின் போதகத்தைக் கேட்டது இயேசுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ‘மனுஷ குமாரர்கள்’ மீது தம் தகப்பன் காட்டிய அதே அன்பை அவரும் காட்டினார். (நீதிமொழிகள் 8:31, NW) இயேசு பூமிக்கு வருகையில், ‘இளைப்படைந்தோருக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை’ பேசுகிறார். ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து ஆறுதல் அளிக்கும் ஒரு பகுதியை வாசித்து தம் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவி என் மேலிருக்கிறது; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர் என்னை அபிஷேகம் பண்ணினாரே. . . . நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் . . . என்னை அனுப்பினார்.” (லூக்கா 4:18; ஏசாயா 61:1; தி.மொ.) இது ஏழைகளுக்கு நற்செய்தி! சோர்வுற்றோருக்கு புத்துணர்ச்சி! அந்த அறிவிப்பை ஜனங்கள் கேட்டு எவ்வளவு மனம் குளிர வேண்டும்! சிலர் உண்மையிலேயே களிகூருகின்றனர்; ஆனால் எல்லாருமல்ல. இயேசு, யெகோவாவால் போதிக்கப்பட்டவர் என்ற சான்றுகளை அநேகர் ஏற்க மறுக்கின்றனர்.

11இருந்தாலும், சிலர் அவரிடம் அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கின்றனர். இயேசுவின் இதயங்கனிந்த இந்த அழைப்பை அவர்கள் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கின்றனர்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] கிடைக்கும்.” (மத்தேயு 11:28, 29) இயேசுவிடம் நெருங்கி வருபவர்களில் சிலர் அவருடைய அப்போஸ்தலர்கள் ஆகிறார்கள். இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்வதென்பது கடின உழைப்பை உட்படுத்தும் என்பதை அவர்கள் அறிவர். மற்ற காரியங்களோடு, பூமியின் கடைமுனை மட்டும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதையும் அது குறிக்கிறது. (மத்தேயு 24:14) இந்த பிரசங்கிப்பு வேலையில் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் ஈடுபடுகையில், அது தங்களுக்கு உண்மையிலேயே புத்துணர்ச்சி அளிப்பதை உணருகின்றனர். இன்றும், உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் அதே வேலை செய்யப்பட்டு வருகிறது. இயேசுவின் சீஷர்கள் அனுபவித்ததுபோன்ற சந்தோஷத்தையே இவர்களும் பெறுகின்றனர்.

அவர் எதிர்க்கவில்லை

12கடவுளுடைய சித்தத்தை செய்யவே பூமிக்கு வந்திருப்பதை இயேசு ஒருபோதும் மறக்கவில்லை. அவரது மனப்பான்மை ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது: “கர்த்தராகிய ஆண்டவர் [“யெகோவா,” NW] என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.” (ஏசாயா 50:5) இயேசு எப்போதுமே கடவுளுக்கு கீழ்ப்படிதலைக் காட்டுகிறார். எனவேதான் அவர் இப்படியும் சொல்கிறார்: “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.” (யோவான் 5:19) பூமிக்கு வருவதற்குமுன், லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகள் இயேசு தம் தகப்பனோடு வேலை செய்துவந்தார். பூமிக்கு வந்த பின்னும், யெகோவாவின் அறிவுரைகளைத் தொடர்ந்து பின்பற்றுகிறார். அப்படியென்றால், கிறிஸ்துவைப் பின்பற்றும் அபூரணர்களாகிய நாம் யெகோவாவின் வழிகளில் நடக்க இன்னும் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும்!

13யெகோவாவின் ஒரேபேறான மகனை ஏற்றுக்கொள்ளாத சிலர் அவரை துன்புறுத்துகின்றனர், இதுவும் முன்னறிவிக்கப்படுகிறது: “அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்; நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.” (ஏசாயா 50:6, பொ.மொ.) இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, எதிரிகளால் அவமானத்தையும் வேதனையையும் மேசியா அனுபவிப்பார். இது இயேசுவுக்கு தெரியும். இந்த துன்புறுத்துதல் எந்தளவுக்கு போகும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இருந்தாலும், அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவு நெருங்குகையில் அவரிடம் பயத்திற்கான சுவடே சிறிதும் இல்லை. கற்பாறைபோல் உறுதியான தீர்மானத்தோடு எருசலேமுக்கு​—⁠தம் பூமிக்குரிய வாழ்க்கை முடிவடையப்போகும் இடத்திற்கு​—⁠பயணப்படுகிறார். வழியில் தம்முடைய சீஷர்களிடம் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்.” (மாற்கு 10:33, 34) இயேசுவே மேசியா என தீர்க்கதரிசனங்கள் வாயிலாக நன்கு அறிந்திருக்க வேண்டிய பிரதான ஆசாரியர்களும் வேதபாரகருமே இப்படிப்பட்ட துர்ச்செயல்களை தூண்டிவிடுவர்.

14பொ.ச. 33, நிசான் 14-⁠ம் தேதி இரவு, இயேசு தம் சீஷர்கள் சிலரோடு கெத்செமனே தோட்டத்தில் இருக்கிறார். அப்போது அவர் ஜெபித்துக்கொண்டிருக்கிறார். திடீரென ஒரு கூட்டம் அவரை சூழ்ந்து, கைது செய்கிறது. அவரோ துளியும் பயப்படுவதில்லை. யெகோவா தமக்கு பக்கபலமாக இருப்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். திகிலடைந்த தம் அப்போஸ்தலர்களுக்கு இயேசு தைரியம் சொல்கிறார். தாம் வேண்டிக்கொண்டால், தம்மைக் காப்பாற்ற பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை தம் தகப்பனால் அனுப்ப முடியும் என சொல்கிறார். ஆனால் அப்படிச் செய்தால், “வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” என்றும் கேட்கிறார்.​—மத்தேயு 26:36, 47, 53, 54.

15மேசியாவின் பாடுகளையும் மரணத்தையும் குறித்து முன்னறிவிக்கப்பட்ட எல்லா வார்த்தைகளும் நிறைவேறுகின்றன. நியாய சங்கத்தின் சூழ்ச்சியான விசாரணைக்குப் பிறகு, பொந்தியு பிலாத்து அவரை விசாரிக்கிறான். அந்த விசாரணைக்குப் பிறகு, இயேசுவுக்கு சாட்டை அடி கொடுக்க சொல்கிறான். ரோம வீரர்கள் அவரைச் ‘சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்புகிறார்கள்.’ இப்படியாக, ஏசாயாவின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. (மாற்கு 14:65; 15:19; மத்தேயு 26:67, 68) இயேசுவின் தாடியில் கொஞ்சம் சொல்லர்த்தமாகவே பிடுங்கப்பட்டதாக பைபிளில் எந்த குறிப்பும் இல்லை என்றாலும், ஏசாயா முன்னறிவித்தபடி, வெறுப்பின் உச்சக்கட்ட செயலான இதுவும் நிறைவேறுகிறது. c​—⁠நெகேமியா 13:⁠25.

16பிலாத்துவிற்கு முன் இயேசு நிற்கையில், தமக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென யாசிப்பதில்லை. ஆனால், வேத வார்த்தைகள் நிறைவேற தாம் சாக வேண்டுமென்பதை அறிந்தவராக அமைதியையும் கண்ணியத்தையும் காத்துக்கொள்கிறார். இயேசுவை மரண தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கவோ விடுவிக்கவோ தனக்கு அதிகாரம் இருக்கிறது என ரோம அதிபதி சுட்டிக்காட்டுகிறபோது, இயேசு தைரியமாக இவ்வாறு பதிலளிக்கிறார்: “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது.” (யோவான் 19:11) பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை கொடூரமாக நடத்துகின்றனர், ஆனால் அவரை அவமானப்படுத்த முடியவில்லை. அவர் ஏன் அவமானப்பட வேண்டும்? அவர் எந்த பாவமும் செய்யவில்லையே! மாறாக, நீதிக்காகவே அவர் துன்புறுத்தப்படுகிறார். இந்த வகையில், ஏசாயாவின் அடுத்துவரும் தீர்க்கதரிசன வார்த்தைகளும் நிறைவேறுகின்றன: “கர்த்தராகிய ஆண்டவர் [“யெகோவா,” NW] எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப் போலாக்கினேன்.”​—ஏசாயா 50:⁠7.

17யெகோவாவின் மீதிருக்கும் முழு நம்பிக்கையே, இயேசுவின் தைரியத்திற்கு அடிப்படை காரணம். அவர் நடந்துகொள்ளும் விதம் ஏசாயாவின் வார்த்தைகளோடு முழுமையாக இசைந்திருக்கிறது: “என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். இதோ, கர்த்தராகிய ஆண்டவர் [“யெகோவா,” NW] எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப் போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.” (ஏசாயா 50:8, 9) இயேசு முழுக்காட்டுதல் பெறுகையில், தம்முடைய ஆவிக்குரிய குமாரனான அவரை நீதிமான் என யெகோவா அறிவிக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில், கடவுளே இதைச் சொல்கிறார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரை அங்கீகரிக்கிறேன்.” (மத்தேயு 3:17, NW) அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுறும் தறுவாயில், கெத்செமனே தோட்டத்தில் இயேசு முழங்காற்படியிட்டு ஜெபிக்கிறார். அப்போது, ‘வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை பலப்படுத்துகிறான்.’ (லூக்கா 22:41-43) ஆகவே தம் பூமிக்குரிய வாழ்க்கையை தம் தகப்பன் அங்கீகரிக்கிறார் என்பதை இயேசு அறிகிறார். கடவுளுடைய இந்தப் பரிபூரண மகன் எந்த பாவமும் செய்யவில்லை. (1 பேதுரு 2:22) ஓய்வுநாள் கட்டளையை மீறுபவர், குடிப்பவர், பேய்பிடித்தவர் என எதிரிகள் அவர்மீது அபாண்டமாக பழிசுமத்துகின்றனர். ஆனால் இந்தப் பொய்கள் எதுவுமே அவருக்கு அவமானத்தைக் கொண்டுவருவதில்லை. கடவுள் அவர் பட்சம் இருக்கிறார், எனவே யார் அவருக்கு விரோதமாக நிற்க முடியும்?​—லூக்கா 7:34; யோவான் 5:18; 7:20; ரோமர் 8:31; எபிரெயர் 12:⁠3.

18இயேசு தம் சீஷர்களை இவ்வாறு எச்சரிக்கிறார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) விரைவில் இது உண்மையாகிறது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில், இயேசுவின் உண்மையுள்ள சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்படுகிறது. அப்போது கிறிஸ்தவ சபை பிறக்கிறது. ‘ஆபிரகாமின் வித்தின்’ பாகமாக இயேசுவோடு சேர்ந்திருக்கும், கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் செய்யும் பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு மதத் தலைவர்கள் உடனடியாக முயல்கிறார்கள். (கலாத்தியர் 3:26, 29; 4:4, 6) முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக உறுதியாக நின்றிருக்கின்றனர்; அதேசமயம், இயேசுவின் எதிரிகளிடமிருந்து வரும் பொய்யான வதந்திகளையும் கடும் துன்புறுத்துதலையும் எதிர்ப்பட்டு வந்திருக்கின்றனர்.

19இருந்தாலும், இயேசுவின் உற்சாகமளிக்கும் இந்த வார்த்தைகளை அவர்கள் மறக்கவில்லை: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11, 12) எனவே, மிகக் கொடுமையான தாக்குதல் மத்தியிலும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். எதிரிகள் என்ன சொன்னாலும் சரி, கடவுள் தங்களை நீதிமான்களாக அறிவித்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவருடைய பார்வையில், “மாசற்றோராகவும், குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும்” இருக்கின்றனர்.​—கொலோசெயர் 1:21, 22, பொ.மொ.

20நவீன காலங்களில், ‘திரள்கூட்டமான’ ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தோர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை ஆதரிக்கின்றனர். இவர்களும் நீதிக்காக உறுதியாக போராடுகின்றனர். இதனால், அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களோடு சேர்ந்து இவர்களும் துன்புறுத்துதல்களை அனுபவித்திருக்கின்றனர். இவர்களும் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருக்கின்றனர். ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்க தகுதியுள்ளவர்கள் என்ற கருத்தில் இவர்களை நீதிமான்களென யெகோவா அறிவித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15; யோவான் 10:16; யாக்கோபு 2:23) இவர்களுடைய எதிரிகள் இப்போது பலமுள்ளவர்களாக தோன்றினாலும், கடவுளின் உரிய காலத்தில், பொட்டுப் பூச்சிகளால் அரிக்கப்பட்ட வஸ்திரத்தைப் போல் தூக்கியெறியப்படுவதற்கே தகுதியானவர்களாக இருப்பார்கள் என ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்கிறது. இதற்கிடையில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் “வேறே ஆடுகளும்” தங்களை பலப்படுத்திக்கொள்ள தவறாமல் ஜெபம் செய்து, கடவுளுடைய வார்த்தையை படித்து, வணக்கத்திற்காக ஒன்று கூடிவருகிறார்கள். இவ்வாறு அவர்கள் யெகோவாவால் கற்பிக்கப்பட்டு, கல்விமானின் நாவில் பேசக் கற்றுக்கொள்கின்றனர்.

யெகோவாவின் நாமத்தில் நம்பிக்கை வைத்தல்

21இப்போது முக்கியமான ஒரு வித்தியாசத்தை கவனியுங்கள்: “உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசன் [“ஊழியன்,” NW] சொல்வதைக் கேட்பானாகில், அவன் வெளிச்சங் காணாமல் இருளிலே நடந்தாலும் யெகோவாவின் நாமத்தில் நம்பிக்கை வைத்துத் தன் கடவுளைச் சார்ந்துகொள்ளட்டும்.” (ஏசாயா 50:10, தி.மொ.) கடவுளுடைய ஊழியராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்கு செவிகொடுப்போர் வெளிச்சத்தில் நடக்கின்றனர். (யோவான் 3:21) யெகோவாவின் பெயரை பயன்படுத்துவதோடு, அந்தப் பெயரை தரித்திருப்பவரிலும் நம்பிக்கை வைக்கின்றனர். ஒரு காலத்தில் இருளில் நடந்திருந்தாலும் இப்போது மனிதர்களைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை. அவர்கள் கடவுள் மீது சார்ந்திருக்கின்றனர். இருளில் தொடர்ந்து நடப்பவர்களையோ மனித பயம் ஆட்டிவைக்கிறது. பொந்தியு பிலாத்துவின் விஷயத்தில் இதுதான் நடக்கிறது. இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், அவர் குற்றமற்றவர் என்றும் பொந்தியு பிலாத்துவுக்கு தெரியும். இருந்தாலும், இயேசுவை விடுதலை செய்யாதபடி மனித பயம் அந்த ரோம அதிபதியை தடுக்கிறது. கடவுளுடைய குமாரனை ரோம வீரர்கள் கொலை செய்கின்றனர்; ஆனால் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டுகிறார். பிலாத்துவுக்கு என்ன நேரிடுகிறது? இயேசுவின் மரணத்திற்குப் பிறகு நான்கே ஆண்டுகளில், பிலாத்து ரோம அதிபதி என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டான் என்றும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல ரோமுக்கு வரும்படி கட்டளையிடப்பட்டான் என்றும் யூத சரித்திராசிரியர் ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார். இயேசுவின் மரணத்திற்கு காரணமாயிருந்த யூதர்களுக்கு என்ன சம்பவிக்கிறது? நாற்பது ஆண்டுகளுக்குள், ரோம சேனை எருசலேமை அழித்து, அதன் ஜனங்களை கொன்றுபோட்டது அல்லது அடிமைகளாக கொண்டு சென்றது. இருளை விரும்புகிறவர்களுக்கு பிரகாசமான ஒளியே கிடைக்காது!​—யோவான் 3:⁠19.

22இரட்சிப்புக்காக மனிதனை நம்புவது படுமுட்டாள்தனம். ஏன் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் விளக்குகிறது: “இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப் பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜுவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.” (ஏசாயா 50:11) மனித ஆட்சியாளர்கள் வரலாம், போகலாம். வசீகரிக்கும் திறமையுள்ள சிலர் ஜனங்களின் மனங்களை சில காலம் கவரலாம். ஆனால் மிகவும் நல்மனம் படைத்த மனிதனால்கூட நினைத்ததை முழுமையாக சாதிக்க முடிவதில்லை. வெளிச்சம் தர, அக்கினி ஜுவாலையை மூட்டுவார்கள் என அவர்களுடைய ஆதரவாளர்கள் ஒருவேளை எதிர்பார்க்கலாம். ஆனால், அவர்கள் பற்ற வைப்பதோ சில ‘பொறிகளையே.’ அது சிறிது நேரம் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தந்துவிட்டு அணைந்துவிடும். மறுபட்சத்தில் ஷைலோவில், அதாவது கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a ஏசாயா 50-⁠ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில், யூத தேசம் முழுவதையும் தம் மனைவியாகவும், அதன் ஒவ்வொரு குடிமக்களையும் அதன் பிள்ளைகளாகவும் யெகோவா குறிப்பிடுகிறார்.

b நான்காம் வசனத்திலிருந்து இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் வரை, எழுத்தாளர் தன்னைக் குறித்து சொல்வதுபோல இருக்கிறது. இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சோதனைகளில் சிலவற்றை ஒருவேளை ஏசாயா அனுபவித்திருக்கலாம். என்றாலும், முழுமையான அர்த்தத்தில், இந்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.

c ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவெனில், செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் ஏசாயா 50:6 இவ்வாறு கூறுகிறது: “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாக்குபவர்களுக்கு என் கன்னங்களையும் காட்டினேன்.”

[கேள்விகள்]

1, 2. (அ) ஆவியால் ஏவப்பட்ட எந்த புத்திமதியின்படி யூதர்கள் நடக்க தவறுகின்றனர், அதன் விளைவு என்ன? (ஆ) “மணமுறிவுச் சீட்டு எங்கே?” என யெகோவா ஏன் கேட்கிறார்?

3. என்ன காரணத்திற்காக யெகோவா தம்முடைய ஜனங்களை ‘விற்றுவிடுகிறார்’?

4, 5. யெகோவா தம்முடைய ஜனங்கள் மீது எவ்வாறு அன்பு காட்டுகிறார், ஆனால் யூதா அதற்கு எப்படி பிரதிபலிக்கிறது?

6, 7. தம்முடைய ஜனங்களை எகிப்தியர் அச்சுறுத்தியபோது யெகோவா எவ்வாறு தம் இரட்சிக்கும் வல்லமையை காட்டினார்?

8. என்ன எச்சரிக்கைகளை அசட்டை செய்ததால், யூதாவின் குடிகள் கைதிகளாக கொண்டு போகப்படுகின்றனர்?

9. ஷைலோ யார், அவர் எப்படிப்பட்ட போதகர்?

10. யெகோவா தம்முடைய ஜனங்கள் மீது வைத்திருக்கும் அன்பை இயேசு எப்படி காட்டுகிறார், இயேசுவை ஜனங்கள் ஏற்கின்றனரா?

11. இயேசுவோடு யார் நுகத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் எதை அனுபவிக்கிறார்கள்?

12. இயேசு தம் பரலோகத் தகப்பனுக்கு எந்த விதங்களில் கீழ்ப்படிதலை காட்டுகிறார்?

13. இயேசு எதிர்ப்பட வேண்டியவை என்ன, இருந்தாலும் அவர் எப்படி தைரியத்தை வெளிக்காட்டுகிறார்?

14, 15. இயேசு அடிக்கப்பட்டு, அவமதிக்கப்படுவார் என்ற ஏசாயாவின் வார்த்தைகள் எப்படி நிறைவேறுகின்றன?

16. மிக இக்கட்டான சமயத்திலும் இயேசு எப்படி நடந்துகொள்கிறார், அவர் ஏன் வெட்கப்படுவதில்லை?

17. இயேசுவின் ஊழிய காலம் முழுவதும் என்னென்ன விதங்களில் யெகோவா அவருக்கு துணை நிற்கிறார்?

18, 19. இயேசுவைப் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் என்ன சோதனைகளை எதிர்ப்பட்டிருக்கின்றனர்?

20. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை யார் ஆதரிக்கின்றனர், அவர்கள் எதை அனுபவித்திருக்கின்றனர்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் “வேறே ஆடுகளும்” எப்படி கல்விமானின் நாவைப் பெற்றிருக்கின்றனர்?

21. (அ) வெளிச்சத்தில் நடக்கிறவர்கள் யார், அவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது? (ஆ) இருளில் நடக்கிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது?

22. இரட்சிப்புக்காக மனிதனை நம்புவது ஏன் படுமுட்டாள்தனம்?

[பக்கம் 155-ன் படம்]

யூதர்கள் யெகோவாவை நம்புவதற்கு பதிலாக மனித ஆட்சியாளர்களையே நம்புகின்றனர்

[பக்கம் 156157-ன் படம்]

சிவந்த சமுத்திரத்தில், யெகோவா தம் ஜனங்களை பாதுகாக்க அவர்களுக்கும் எகிப்தியருக்கும் மத்தியில் ஒரு மேகஸ்தம்பத்தை நிறுத்தினார்