Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொய் மதம் —திடீர் முடிவின் முற்காட்சி

பொய் மதம் —திடீர் முடிவின் முற்காட்சி

அதிகாரம் எட்டு

பொய் மதம்—⁠திடீர் முடிவின் முற்காட்சி

ஏசாயா 47:1-15

“மதம் மீண்டும் தலைதூக்குகிறது.” த நியூ யார்க் டைம்ஸ் மேகஸீனில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அறிவிக்கப்பட்ட செய்தியே இது. மதம் லட்சோபலட்ச இதயங்களையும் மனங்களையும் இன்னும் உடும்பு போல் பிடித்திருப்பதாக தெரிகிறது என அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இப்படியிருக்க, இந்த உலகின் மதங்களுக்கு பெரும் மாற்றம் நிகழவிருப்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த மாற்றத்தைக் குறித்துத்தான் ஏசாயா 47-⁠ம் அதிகாரம் குறிப்பிடுகிறது.

2ஏசாயாவின் வார்த்தைகள் 2,500 வருடங்களுக்கு முன்னரே நிறைவேறின. இருந்தாலும், ஏசாயா 47:8-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டு, எதிர்காலத்தில் நிறைவேறுமென கூறப்படுகிறது. ‘மகா பாபிலோன்’ என அழைக்கப்படும் வேசியைப் போன்ற அமைப்பின்​—⁠பொய் மத உலக பேரரசின்​—⁠முடிவைக் குறித்து பைபிள் முன்னறிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:19) இவ்வுலக பொய் மதங்களுக்கு ‘பாபிலோன்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டிருப்பது பொருத்தமானதே. ஏனென்றால், பூர்வ பாபிலோனில்தான் பொய் மதம் உதயமானது. அங்கிருந்தே பொய் மதம் உலகின் நான்கு திக்குகளிலும் பரவியது. (ஆதியாகமம் 11:1-9) கிறிஸ்தவமண்டலம் உட்பட, கிட்டத்தட்ட எல்லா மதங்களின் பொதுவான நம்பிக்கைகளாகிய ஆத்துமா அழியாமை, எரிநரகம், திரியேக தெய்வ வழிபாடு போன்றவை பாபிலோனிலிருந்து தோன்றியவையே. a மதத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் ஏதாவது வெளிப்படுத்துகிறதா?

பாபிலோன் மண் மட்டும் தாழ்த்தப்படும்

3உணர்ச்சியைத் தூண்டும் இந்த தெய்வீக அறிவிப்பை கவனியுங்கள்: “பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை, நீ செருக்குக்காரியும் [“மென்மையானவளும்,” NW] சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.” (ஏசாயா 47:1) பல வருடங்களாகவே பாபிலோன் உலக வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அவள் “ராஜ்யங்களுக்குள் அலங்கார”மாக​—⁠மதம், வர்த்தகம் மற்றும் இராணுவ மையமாக செழித்தோங்கி​—⁠இருந்திருக்கிறாள். (ஏசாயா 13:19) பாபிலோன் புகழின் உச்சியில் இருக்கையில் அவளுடைய பேரரசு தெற்கே எகிப்தின் எல்லை மட்டும் விரிவடைகிறது. பொ.ச.மு. 607-⁠ல் எருசலேமை அழிக்கும்போது, கடவுளால்கூட அவளுடைய வெற்றியை தடுக்க முடியவில்லை என்பதுபோல் தோன்றுகிறது. இவ்வாறு அவள் தன்னை “குமாரத்தியாகிய கன்னிகை”யாக, அதாவது மற்ற தேசத்தார் தன்னை கைப்பற்ற முடியாது என நினைக்கிறாள். b

4இருந்தாலும், வெல்ல முடியாத உலக வல்லரசாக இருந்த இந்த செருக்கு வாய்ந்த “கன்னிகை” சிங்காசனத்திலிருந்து இறக்கப்பட்டு அவமானப்படும் விதத்தில் ‘மண்ணிலே உட்கார’ வைக்கப்பட போகிறாள். (ஏசாயா 26:5) ராணிபோல் தலையில் தூக்கிவைக்கப்பட்டவள் இனிமேல் “மென்மையானவளும் சுகசெல்வியும்” என கருதப்பட மாட்டாள். ஆகவே, யெகோவா இவ்வாறு கட்டளையிடுகிறார்: “ஏந்திரக் கல்லை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; மேலாடையைக் களைந்துவிடு, கால்தெரிய ஆறுகளைக் கடந்துபோ.” (ஏசாயா 47:2, NW) யூத தேசம் முழுவதையும் அடிமைப்படுத்தின பாபிலோனே இப்போது அடிமையாக நடத்தப்படுவாள்! அவளை அதிகார ஸ்தானத்திலிருந்து கீழே தள்ளுகிற மேதியர்களும் பெர்சியர்களும் தங்களுக்காக கீழ்த்தரமான வேலை செய்யும்படி அவளை கட்டாயப்படுத்துவர்.

5இவ்வாறு, பாபிலோன் தன் ‘முக்காட்டையும் மேலாடையையும்’ இழந்துவிடுவாள், அதாவது முன்பு தனக்கிருந்த எல்லா மேன்மையையும் அந்தஸ்தையும் இழந்துவிடுவாள். அவளை வேலை வாங்குபவர்கள் “ஆறுகளைக் கடந்துபோ” என கட்டளையிடுவர். பாபிலோனியர் சிலர் ஒருவேளை வெட்டவெளியில் அடிமையாக வேலை செய்ய கட்டளையிடப்படுவர். அல்லது சிறைபிடித்துக் கொண்டு போகையில் சிலர் சொல்லர்த்தமாகவே ஆறுகள் வழியே இழுத்துச் செல்லப்படுவர் எனவும் இந்தத் தீர்க்கதரிசனம் அர்த்தப்படுத்தலாம். எப்படியாயினும், ஆற்றின் வழியே ஆசனத்திலோ அல்லது பல்லக்கிலோ சுமந்து செல்லப்பட்ட ராணியின் தோரணையில் பாபிலோன் இனி ஒருபோதும் பயணிப்பதில்லை. அதற்குப் பதிலாக, தன் மானமெல்லாம் இழந்து கால்தெரிய மேலாடையைத் தூக்கி ஆற்றைக் கடக்கும் அடிமையைப் போல் இருப்பாள். எப்பேர்ப்பட்ட அவமானம்!

6யெகோவா இகழ்ச்சியாக மேலும் சொல்லும் வார்த்தைகள்: “உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் மானக்கேடு காணப்படும்; நான் பழிவாங்குவேன், நான் எந்த மனிதனையும் தயவோடு சந்திக்க மாட்டேன்.” (ஏசாயா 47:3, NW) c ஆம், பாபிலோன் அவமானத்தையும் அவமதிப்பையும் அடைவாள். கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக அவள் செய்யும் பொல்லாப்பும் கொடுமையும் அம்பலப்படுத்தப்படும். கடவுள் பழிவாங்குவதை யார்தான் தடுப்பர்!

7பாபிலோனில் 70 வருடங்கள் அடிமைகளாக இருந்த கடவுளுடைய ஜனங்கள் இப்பொழுது அவளுடைய வீழ்ச்சியைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைவர். அவர்கள் இவ்வாறு புகழ்ந்து பேசுவார்கள்: “எங்களை மீட்பவரின் திருநாமம் சேனைகளின் யெகோவா, இஸ்ரவேலின் பரிசுத்தர்.” (ஏசாயா 47:4, தி.மொ.) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, கடன்களை அடைப்பதற்காக ஒருவன் தன்னையே அடிமையாக விற்றுவிட்டால், மீட்பவர் (நெருங்கிய உறவினன்) பணம் கொடுத்து அவனை அடிமைத்தனத்திலிருந்து வாங்கலாம் அல்லது மீட்கலாம். (லேவியராகமம் 25:47-54) யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக விற்கப்படவிருந்ததால் அவர்களுக்கு மீட்பு அல்லது விடுதலை தேவைப்படும். அடிமைகளைப் பொருத்தமட்டில் வெற்றி என்பது வெறுமனே எஜமான்கள் மாறுவதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. ஆனால் யூதர்களை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பதற்காக வெற்றிவீரராகிய கோரேசு அரசரை யெகோவா தூண்டுவார். யூதர்களை விடுவிப்பதற்கு, எகிப்தும் எத்தியோப்பியாவும் சேபாவும் ‘மீட்கும் பொருளாக’ கோரேசுக்குக் கொடுக்கப்படும். (ஏசாயா 43:3) ஆகவே, இஸ்ரவேலை மீட்பவர் “சேனைகளின் யெகோவா” என அழைக்கப்படுவது பொருத்தமானதே. யெகோவாவின் காணக்கூடாத தேவதூதரின் சேனையோடு ஒப்பிட பலம்படைத்ததாக தோன்றும் பாபிலோனிய படை வெறும் தூசியே.

கொடுமைக்கு கிடைத்த பலன்

8பாபிலோனை பற்றிய தீர்க்கதரிசன கண்டனத் தீர்ப்பை யெகோவா மீண்டும் தொடர்கிறார்: “கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.” (ஏசாயா 47:5) பாபிலோனுக்கு அந்தகாரமும், மப்பும் மந்தாரமும் தவிர வேறொன்றும் இருக்காது. இவள் கொடூரமான நாயகியாக இனி ஒருபோதும் மற்ற ராஜ்யங்களை அடக்கி ஆளமாட்டாள்.​—ஏசாயா 14:4.

9கடவுளுடைய ஜனங்களுக்கு தீங்கு செய்யும்படி பாபிலோன் ஏன் முதலாவதாக அனுமதிக்கப்படுகிறாள்? அதைப் பற்றி யெகோவா இவ்வாறு விளக்குகிறார்: “நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.” (ஏசாயா 47:6அ) யூதர்கள்மீது யெகோவா கோபம் கொள்வதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. தம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமற்போனால் அவர்கள் தேசத்திலிருந்து வெளியேற்றப்படுவர் என முன்னதாகவே அவர் எச்சரித்தார். (உபாகமம் 28:64) அவர்கள் விக்கிரகாராதனை செய்து, பாலுறவு ஒழுக்கக்கேட்டை நடப்பித்தபோது, மீண்டும் தூய வணக்கத்திடம் திரும்புவதற்கு உதவியாக யெகோவா அன்போடு தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினார். ஆனாலும் “அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.” (2 நாளாகமம் 36:16) ஆகவே, பாபிலோன் இந்த தேசத்தைத் தாக்கி பரிசுத்த ஆலயத்தை தீட்டுப்படுத்துகிறபோது கடவுள் தம் சுதந்தரமாகிய யூதாவை பரிசுத்த குலைச்சலாக்கும்படி அனுமதிக்கிறார்.​—சங்கீதம் 79:1; எசேக்கியேல் 24:21.

10அப்படியானால், யூதர்களை பாபிலோன் அடிமைகளாக்கும்போது அவள் வெறுமனே கடவுளுடைய சித்தத்தைத்தான் நிறைவேற்றுகிறாளா? இல்லை, ஏனெனில் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “நீ அவர்கள்மேல் இரக்கம் வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.” (ஏசாயா 47:6ஆ, 7) ‘முதிர்வயதுள்ளவர்களுக்கும்கூட’ தயவு காட்டாமல் மிகக் கொடூரமாக நடத்தும்படி கடவுள் பாபிலோனுக்குக் கட்டளையிடவில்லை. (புலம்பல் 4:16; 5:12) யூத அடிமைகளை பரிகாசம் பண்ணி கொடுமையில் இன்பம் காணும்படியும் அவர் சொல்லவில்லை.​—சங்கீதம் 137:3, NW.

11யூதர்கள் மீதுள்ள அதிகாரம் தற்காலிகமானது என்பதை பாபிலோன் உணர தவறுகிறாள். சில காலத்திற்குப்பின் யெகோவா தம்முடைய ஜனங்களை விடுவிப்பார் என்ற ஏசாயாவின் எச்சரிப்புகளை அவள் அசட்டை செய்துவிட்டாள். யூதர்களை நிரந்தரமாக ஆளுகை செய்து அடிமை தேசங்கள் மீது என்றென்றைக்கும் நாயகியாக இருக்க உரிமை பெற்றிருப்பது போல் அவள் நடந்துகொள்கிறாள். அவளுடைய கொடுங்கோலாட்சிக்கு ‘முடிவு’ உண்டு என்ற செய்தியை அவள் கவனிக்கத் தவறுகிறாள்!

பாபிலோனின் வீழ்ச்சி முன்னறிவிக்கப்பட்டது

12யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, ‘எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை; நான் கைம்பெண் ஆகமாட்டேன்; பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்.” (ஏசாயா 47:8, பொ.மொ.) பாபிலோன் சுகபோகத்தை நாடுவதில் பேர்போனவள். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திராசிரியர் ஹெரோடொட்டஸ் பாபிலோனியரிடம் இருந்த “மிகக் கேவலமான ஒரு பழக்கத்தைப்” பற்றி கூறுகிறார். எல்லா பெண்களும் காதல் தேவதையைக் கெளரவிப்பதற்காக தங்களையே விலைமகள்களாக அளிக்க வேண்டியிருந்ததே அந்தக் கேவலமான பழக்கம். இதைப் போலவே பூர்வ சரித்திராசிரியர் கர்ட்ஷியஸும் சொன்னார்: “நகரின் ஒழுக்கக்கேடுகளுக்கு அளவே இல்லை; கீழ்த்தரமான, தரங்கெட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதற்கு இதைவிட மோசமான தூண்டுதல்களும் கவர்ச்சிகளும் இருக்கவே முடியாது.”

13பாபிலோன் சுகபோகத்தில் அந்தளவுக்கு நாட்டங்கொள்வதால் அது அவளுடைய வீழ்ச்சியை விரைவுபடுத்தும். அவளுடைய வீழ்ச்சிக்கு சற்று முன்பு ராஜாவும் பிரபுக்களும் புசித்துக் குடித்து மதிமயங்கி இருப்பார்கள். இதனால் மேதிய பெர்சிய சேனைகள் நகரை தாக்குவதை அவர்கள் அறியாதிருப்பார்கள். (தானியேல் 5:1-4) பாபிலோன் ‘பாதுகாப்புடன் வாழ்வதால்,’ தகர்க்க முடியாததாக காட்சியளிக்கும் வலிமையான மதில் சுவர்களும் அகழியும் தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றும் என நினைப்பாள். தன்னுடைய மேன்மையான அதிகாரத்தை கைப்பற்றுவார் “வேறு எவருமில்லை” என அவள் தன் இருதயத்தில் சொல்கிறாள். அவள் தன்னுடைய பேரரசின் ஆட்சியாளரை இழந்து “கைம்பெண்” ஆவாள் என்றும் தன்னுடைய ‘பிள்ளைகளை’ அல்லது மக்களையும் இழப்பாள் என்றும் சற்றும் சிந்திப்பதில்லை. இருப்பினும், யெகோவா தேவனின் பழிவாங்கும் கரத்திலிருந்து எந்த ஒரு சுவரும் அவளை பாதுகாக்க முடியாது! பின்னர் யெகோவா இவ்வாறு சொல்வார்: “பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள்.”​—எரேமியா 51:53.

14பாபிலோனுக்கு என்ன சம்பவிக்கும்? யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: “இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்; பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன்மேல் வந்தே தீரும்.” (ஏசாயா 47:9, பொ.மொ.) ஆம், உலக வல்லரசாக பாபிலோனின் மேன்மை சடுதியில் முடிவுக்கு வரும். பூர்வ கிழக்கத்திய தேசங்களில் ஒரு பெண் விதவையாவதும் பிள்ளைகளை இழப்பதுமே அவள் அனுபவிக்கும் வேதனைகளில் மிகக் கொடுமையானவை. பாபிலோன் வீழ்ச்சியடைந்த அந்த இரவு எத்தனை ‘பிள்ளைகளை’ அவள் இழக்கிறாள் என்று நமக்குத் தெரியாது. d இருந்தாலும், உரிய காலத்தில் அந்நகரம் முற்றிலும் குடியில்லாமல் பாழாக்கப்படும். (எரேமியா 51:29) அவளுடைய ராஜாக்கள் சிங்காசனத்தை இழக்கையில் அவள் விதவையாவாள்.

15என்றாலும், யூதர்களை பாபிலோன் கொடுமைப்படுத்தியது மட்டுமே யெகோவாவின் கோபத்திற்குக் காரணம் அல்ல. பாபிலோனின் ‘பில்லி சூனியங்கள் பலவும்’ அவருடைய கோபத்தைக் கிளறிவிடுகின்றன. இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் ஆவியுலகத் தொடர்பை கண்டனம் செய்கிறது; ஆனால் பாபிலோன் மாயமந்திர பழக்கங்களில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாள். (உபாகமம் 18:10-12; எசேக்கியேல் 21:21) அசீரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் சமூக வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் பாபிலோனியர் “தங்களைச் சுற்றிலும் எண்ணற்ற பேய்கள் இருக்கின்றன என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்டினர்” என கூறுகிறது.

துன்மார்க்கத்தில் நம்பிக்கை

16பாபிலோனின் ஜோதிடர்கள் அவளை காப்பாற்றுவார்களா? இதற்கு யெகோவா இவ்வாறு பதிலளிக்கிறார்: “உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்; ‘என்னைக் காண்பார் யாருமில்லை’ என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் உன்னை நெறிபிறழச் செய்தன; ‘எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை’ என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.” (ஏசாயா 47:10, பொ.மொ.) உலக ஞானத்தாலும், ஆன்மீக ஞானத்தாலும், படை பலத்தாலும், சூழ்ச்சித் திறனாலும், உலக வல்லரசு என்ற தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என பாபிலோன் தப்புக்கணக்கு போடுகிறாள். தன்னை யாரும் ‘காண’ மாட்டார்கள், அதாவது தன்னுடைய தீச்செயல்களுக்கு யாரும் கணக்கு கேட்க மாட்டார்கள் என அவள் நினைக்கிறாள். தன்னுடைய எதிரி வெகு அருகில் இருக்கிறான் என்பதை அவள் நினைத்துப் பார்ப்பதுமில்லை. “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை” என்று அவள் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறாள்.

17இருந்தாலும் மற்றொரு தீர்க்கதரிசி மூலம் யெகோவா இவ்வாறு எச்சரிக்கிறார்: “யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக் கூடுமோ.” (எரேமியா 23:24; எபிரெயர் 4:13) ஆகவே, யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “தீங்கு உன்மேல் வரும், அதை விலக்க மந்திரம் அறியாய்; மோசம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்க முடியாது; நீ அறியாத நேரத்தில் சடுதியாய் அழிவு உன்மேல் வரும்.” (ஏசாயா 47:11, தி.மொ.) பாபிலோனிய கடவுட்களாலோ ஆவியுலக தொடர்புடைய பழக்கவழக்கங்களில் ஈடுபடுகிறவர்களுடைய மாயவித்தை ‘மந்திரத்தாலோ’ வரவிருக்கும் தீங்கை தடுத்து நிறுத்த முடியாது. இப்படியொரு தீங்கை அவள் ஒருபோதும் எதிர்ப்பட்டிருக்க மாட்டாள்!

ஆலோசகர்களுக்கு தோல்வி

18குத்தலான வார்த்தைகளுடன் யெகோவா இவ்வாறு கட்டளையிடுகிறார்: “சிறுவயது முதல் நீ பழகிக் களைத்த உன் மந்திரங்களையும் உன் மிகுதியான பில்லி சூனியங்களையும் கைக்கொண்டு எதிரே நில்; அவற்றால் உனக்கு உதவி வருமோ? பயப்படுத்தி மோசங்களை விலக்குவாயோ, பார்ப்போம்.” (ஏசாயா 47:12, தி.மொ.) “எதிரே நில்” அல்லது மாயவித்தை பழக்கத்தை தொடர்ந்து பற்றியிரு என பாபிலோனிடம் சவால்விடப்படுகிறது. ஒரு தேசமாக அவள் “சிறுவயது முதல்” சூனிய வித்தைகளை முன்னேற்றுவிக்க கடுமையாக உழைத்திருக்கிறாளே.

19ஆனால், யெகோவா அவளிடம் ஏளனமாக இவ்வாறு கூறுகிறார்: “உன் திரளான யோசனைகளினால் [“ஆலோசகர்களால்,” NW] நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும் [“வான்வெளியை வணங்குவோரும்,” NW], நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.” (ஏசாயா 47:13) e பாபிலோனின் ஆலோசகர்கள் படுதோல்வி அடைவதை அவள் காண்பாள். பாபிலோனிய ஜோதிடத்தின் வளர்ச்சிக்கு காரணம், நூற்றாண்டு கால வானவியல் ஆய்வுகள் என்பது உண்மையே. ஆனால் அவள் வீழ்ச்சியடையும் அந்த இரவில் அவளுடைய ஜோதிடர்கள் எதிர்ப்படும் படுதோல்வி, குறிசொல்லுதல் பயனற்றது என்பதை புலப்படுத்திவிடும்.​—தானியேல் 5:7, 8.

20யெகோவா இத்தீர்க்கதரிசன பகுதியை இவ்வாறு கூறி முடிக்கிறார்: “இதோ, அவர்கள் தாளடியைப் போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினி ஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. உன் சிறுவயது முதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம் பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.” (ஏசாயா 47:14, 15) ஆம், இந்தப் பொய் ஆலோசகர்களை நெருப்புபோல் சுட்டெரித்து பொசுக்கும் சமயம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இது, குளிர்காயும் இதமான நெருப்பு அல்ல, ஆனால் அழிவுக்கு ஏதுவான, தகிக்கும் நெருப்பாக இருக்கும்; இந்தப் பொய் ஆலோசகர்கள் பயனற்ற தாளடியைப் போன்றவர்கள் என்பதை அது வெளிப்படுத்தும். அப்படியானால் பாபிலோனிய ஆலோசகர்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்பதில் சற்றும் ஆச்சரியமில்லை. பாபிலோனுக்கு பக்கபலமாக இருந்த கடைசி ஆதரவும் இல்லாமல் போய்விடும். அவளைக் காப்பாற்ற ஒருவரும் இருக்க மாட்டார்கள். எருசலேமை அவள் எப்படி அழிப்பாளோ அப்படியே அவளும் அழிக்கப்படுவாள்.​—எரேமியா 11:⁠12.

21பொ.ச.மு. 539-⁠ல், ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் நிறைவேற ஆரம்பிக்கின்றன. கோரேசுவின் தலைமையில் வந்த மேதிய பெர்சிய சேனை அந்நகரை கைப்பற்றி, அப்போதைய அரசனாகிய பெல்ஷாத்சாரை கொன்றுவிடுகிறது. (தானியேல் 5:1-4, 30) உலக வல்லரசு என்ற சிம்மாசனத்திலிருந்த பாபிலோன் ஒரே இரவில் கவிழ்க்கப்படுகிறாள். இவ்வாறு, நூற்றாண்டுகளாக கொடிகட்டி பறந்த செமிட்டிக் பேரரசு முடிவுற்று ஆரியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது. இப்பொழுது நூற்றாண்டு கணக்கில் பாபிலோன் வீழ்ச்சியுற்ற நிலையில் இருப்பது ஆரம்பமாகிறது. பொ.ச. நான்காம் நூற்றாண்டுக்குள், அது வெறும் ‘கற்குவியல்களாக’ காட்சியளிக்க தொடங்குகிறது. (எரேமியா 51:37, NW) இவ்வாறு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முற்றிலுமாக நிறைவேறுகிறது.

நவீனகால பாபிலோன்

22ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சிந்தனைக்கு ஏராளமான கருத்துக்களை அள்ளித் தருகிறது. ஒரு விஷயமானது, அகந்தையினாலும் மனமேட்டிமையினாலும் வரும் ஆபத்துக்களை இது வலியுறுத்திக் காட்டுகிறது. அகந்தை கொண்ட பாபிலோனின் வீழ்ச்சியை பின்வரும் பைபிள் நீதிமொழி விளக்குகிறது: “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” (நீதிமொழிகள் 16:18) சிலசமயங்களில் நம்முடைய அபூரண தன்மைகளில் அகந்தை மேலோங்குகிறது. ஆனால், ‘இறுமாப்படைவது,’ ‘நிந்தனையிலும் பிசாசின் கண்ணியிலும்’ விழுவதற்கு வழிவகுக்கலாம். (1 தீமோத்தேயு 3:6, 7) ஆகவே, நாம் யாக்கோபின் அறிவுரைக்கு செவிசாய்ப்பதே சிறந்தது: “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”​—யாக்கோபு 4:10.

23தம்முடைய விரோதிகள் அனைவரை காட்டிலும் வல்லமை படைத்த யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கும் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் உதவுகின்றன. (சங்கீதம் 24:8; 34:7; 50:15; 91:14, 15) இந்தக் கடினமான காலங்களில் இது நமக்கு ஓர் ஆறுதலான நினைப்பூட்டுதல். யெகோவாவில் நம்பிக்கை வைப்பது, “[குற்றமற்ற] மனுஷனுடைய முடிவு சமாதானம்,” என்பதை அறிந்து அவருடைய கண்களுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நிலைத்திருக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தை பலப்படுத்துகிறது. (சங்கீதம் 37:37, 38) பிசாசின் ‘தந்திரங்களை’ எதிர்ப்படும்போது நம்முடைய சொந்த பலத்தின் மீதல்ல யெகோவாவில் சார்ந்திருப்பதே எப்போதும் ஞானமானது.​—எபேசியர் 6:10-13.

24ஆவியுலக தொடர்புடைய பழக்கவழக்கங்களை, அதிலும் விசேஷமாக ஜோதிடத்தை குறித்து நாம் எச்சரிக்கப்படுகிறோம். (கலாத்தியர் 5:20, 21) பாபிலோன் வீழ்ச்சியடைந்த பின்னும், ஜோதிடம் ஜனங்களிடமிருந்த அதன் பிடியை தளர்த்தவில்லை. பண்டைய உலகின் பெரிய நகரங்கள் என்ற ஆங்கில புத்தகம், பாபிலோனியரால் வரையப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களின் நிலைகளில் “மாறுதல்” ஏற்பட்டுள்ளது எனவும் அவை ஏற்கெனவே இருந்த ஸ்தானத்திலிருந்து மாறியிருப்பது “[ஜோதிடம்] என்பதையே அர்த்தமற்றதாக்குகிறது” எனவும் குறிப்பிடுகிறது. இருந்தாலும், ஜோதிடம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. வாசகர்கள் தங்கள் ராசிபலனை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக பல செய்தித்தாள்களில் அதற்கென ஒரு தனி பகுதியே ஒதுக்கப்படுகிறது.

25நாள் நட்சத்திரம் பார்க்க அல்லது அர்த்தமற்ற மூடநம்பிக்கை பழக்கவழக்கங்களில் ஈடுபட ஜனங்களை​—⁠நன்கு படித்த மேதைகள் அநேகரைக்கூட​—⁠தூண்டுவது எது? த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “ஜனங்கள் ஒருவரையொருவர் கண்டு பயந்து எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருக்கும் வரையில் மூடநம்பிக்கைகளும் அவர்களுடைய வாழ்க்கையின் பாகமாகவே இருக்கும்.” பயமும் நம்பிக்கையின்மையுமே ஜனங்களை மூடநம்பிக்கைக்குள் சிறை வைத்திருக்கின்றன. கிறிஸ்தவர்களோ மூடநம்பிக்கையை அறவே வெறுத்துத் தள்ளுகிறார்கள். அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதில்லை. யெகோவா அவர்களுக்குத் துணை நிற்கிறார். (சங்கீதம் 6:4-10) மேலும், அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாக இல்லை; அவர்கள் யெகோவாவின் நோக்கங்களை அறிந்திருக்கிறார்கள், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக . . . நிற்கும்” என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. (சங்கீதம் 33:11) யெகோவாவின் ஆலோசனைக்கு ஏற்ப நம் வாழ்க்கையை அமைப்பது, மகிழ்ச்சியான, நீடித்த வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கிறது.

26சமீப வருடங்களில் சிலர் “அறிவியல்” முறைகளில் எதிர்காலத்தை கணிக்க முயற்சி செய்துள்ளனர். எதிர்காலவியல் (futurology) என்ற ஒரு துறையும் இருக்கிறது. “நடப்பிலுள்ள போக்கை அடிப்படையாக வைத்து எதிர்கால சாத்தியங்களை கணிக்கும் ஆராய்ச்சி” என இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1972-⁠ல் கிளப் ஆஃப் ரோம் என அறியப்பட்ட அறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குழு, 1992-⁠க்குள் பூமியின் வளங்களாகிய தங்கம், பாதரசம், துத்தநாகம், பெட்ரோலியம் போன்றவை தீர்ந்துவிட்டிருக்கும் என முன்னறிவித்தது. 1972 முதல் இந்த உலகம் திடுக்கிட வைக்கும் பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த முன்னறிவிப்போ முற்றுமுழுக்க பொய்யாகிவிட்டது. தங்கம், பாதரசம், துத்தநாகம், பெட்ரோலியம் போன்றவை இன்னும் இந்த பூமியில் இருக்கின்றன. உண்மையில், மனிதன் வருங்காலத்தை முன்னறிவிப்பதற்கு உழைத்து உழைத்து களைத்துவிட்டான். ஆனாலும், அவனுடைய ஊகங்கள் நம்ப முடியாதவையாகவே இருக்கின்றன. “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்[பது]” நூற்றுக்கு நூறு உண்மை.​—1 கொரிந்தியர் 3:20.

மகா பாபிலோனுக்கு வரவிருக்கும் முடிவு

27நவீன கால மதங்கள், பூர்வ பாபிலோனிய கோட்பாடுகள் பலவற்றை பின்பற்றி வந்திருக்கின்றன. ஆகவே, பொய் மத உலக பேரரசை மகா பாபிலோன் என அழைப்பது பொருத்தமானது. (வெளிப்படுத்துதல் 17:5) பொ.ச.மு. 539-⁠ல் பூர்வ பாபிலோன் வீழ்ச்சியடைந்ததுபோல், உலகெங்குமுள்ள மதங்களடங்கிய மகா பாபிலோனும் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:8; 18:2) 1919-⁠ல் கிறிஸ்துவின் சகோதரர்களில் மீதியானோர் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்தும், மகா பாபிலோனின் முக்கிய பாகமான கிறிஸ்தவமண்டலத்தின் செல்வாக்கிலிருந்தும் விடுதலை பெற்று வெளியே வந்தனர். அதுமுதற்கொண்டு, அநேக தேசங்களின் மீதிருந்த அதன் செல்வாக்கு பெருமளவில் குறைந்துவிட்டது.

28அந்த வீழ்ச்சி பொய் மதத்தின் முடிவான அழிவுக்கு அறிகுறியாக மட்டுமே இருந்தது. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், மகா பாபிலோனின் அழிவைப் பற்றிய வெளிப்படுத்துதல் புத்தகத்தின் தீர்க்கதரிசனம், ஏசாயா 47:8, 9-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. பூர்வ பாபிலோனைப் போன்றே நவீன நாளைய மகா பாபிலோனும், “நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லை” என கூறுகிறாள். ஆனால், “அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.” ஆகவே, ஏசாயா 47-⁠ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள், பொய் மதத்தோடு இன்னும் தொடர்பு வைத்திருப்பவர்களை எச்சரிக்கின்றன. அவளுக்கு வரும் அழிவிலிருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமென்றால், “அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்ற தெய்வீக கட்டளைக்கு கீழ்ப்படிவார்களாக.​—வெளிப்படுத்துதல் 18:4, 7, 8.

[அடிக்குறிப்புகள்]

a பொய்மத நம்பிக்கைகளின் வளர்ச்சியைப் பற்றி விளக்கமாக அறிந்துகொள்வதற்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட கடவுளைத் தேடி (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைக் காண்க.

b எபிரெயுவில் “பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகை” என்பது ஓர் மரபுச் சொல். இது பாபிலோனை அல்லது அதன் குடிமக்களைக் குறிக்கிறது. பாபிலோன் உலக வல்லரசானது முதற்கொண்டு யாருமே அவளை கொள்ளையடித்து வென்றதில்லை. ஆகவே, அவள் “கன்னிகை” என அழைக்கப்படுகிறாள்.

c “நான் எந்த மனிதனையும் தயவோடு சந்திக்க மாட்டேன்” என்பதற்குரிய எபிரெய சொற்றொடரை மொழிபெயர்ப்பது “மிக மிகக் கடினமானது” என கல்விமான்கள் கூறியுள்ளனர். புறதேசத்தார் எவரும் பாபிலோனைக் காப்பாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக புதிய உலக மொழிபெயர்ப்பு “தயவோடு” என்ற வார்த்தையை புகுத்தியிருக்கிறது. ஜூயிஷ் பப்ளிக்கேஷன் சொஸைட்டி இந்த சொற்றொடரை “நான் . . . எந்த மனிதனையும் தலையிட விடமாட்டேன்” என மொழிபெயர்க்கிறது.

d பாபிலோனின்மீது படையெடுத்தவர்கள் “போர் தொடுக்காமலேயே” உட்புகுந்தனர் என நபோனிடஸ் நாளாகமம் கூறுவதை ரேமண்ட் ஃபிலிப் டௌர்ட்டி எழுதிய நபோனிடஸும் பெல்ஷாத்சாரும் என்ற ஆங்கில நூல் குறிப்பிட்டாலும், அங்கு இரத்த வெள்ளமே பெருக்கெடுத்திருக்கலாம் என கிரேக்க சரித்திராசிரியர் ஸெனோஃபன் குறிப்பிடுகிறார்.

e ‘வான்வெளியை வணங்குவோர்’ என்ற எபிரெய சொற்றொடரை சிலர் “வானங்களைப் பிரிப்பவர்கள்” என மொழிபெயர்க்கிறார்கள். வானங்களை கட்டம் போட்டு பிரித்து ஜாதகம் பார்க்கும் பழக்கத்தை இது குறிக்கும்.

[கேள்விகள்]

1, 2. (அ) இவ்வுலக மதங்களுக்கு விரைவில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது ஏன் சிலருக்கு நம்ப முடியாததாக தோன்றுகிறது? (ஆ) ஏசாயா 47-⁠ம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகளுக்கு எதிர்கால நிறைவேற்றம் உள்ளது என்பதை நாம் எப்படி அறிவோம்? (இ) ‘மகா பாபிலோன்’ என்ற பட்டப்பெயர் ஏன் எல்லா பொய் மதங்களுக்கும் பொருத்தமானது?

3. பாபிலோனிய உலக வல்லரசின் மகத்துவத்தைப் பற்றி விவரியுங்கள்.

4. பாபிலோனுக்கு என்ன நேரிடும்?

5. (அ) பாபிலோன் தன் ‘முக்காட்டையும் மேலாடையையும்’ இழந்து விடுவது எப்படி? (ஆ) “ஆறுகளைக் கடந்துபோ” என்று அவளிடம் சொல்லப்பட்ட கட்டளை எதைக் குறிக்கலாம்?

6. (அ) என்ன கருத்தில் பாபிலோனின் நிர்வாணம் வெளிப்படும்? (ஆ) கடவுள் எவ்வாறு ‘எந்த மனிதனையும் தயவோடு சந்திக்க மாட்டார்’? (அடிக்குறிப்பைக் காண்க.)

7. (அ) பாபிலோனின் வீழ்ச்சியைக் கேள்விப்படும் யூத சிறைக்கைதிகள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? (ஆ) தம்முடைய ஜனங்களை யெகோவா எவ்வாறு மீட்டுக்கொள்வார்?

8. என்ன கருத்தில் பாபிலோன் ‘அந்தகாரத்துக்குள் பிரவேசிக்கிறாள்’?

9. யூதர்கள்மீது யெகோவா ஏன் கடுங்கோபமடைகிறார்?

10, 11. தம்முடைய ஜனங்களை பாபிலோன் கைப்பற்ற வேண்டும் என்பது யெகோவாவின் சித்தமாக இருந்தாலும், ஏன் அவளிடம் அவர் கோபம் கொள்கிறார்?

12. “இன்ப நாட்டம் கொண்டவளே” என பாபிலோன் அழைக்கப்படுவது ஏன்?

13. பாபிலோனின் இன்ப நாட்டம் எவ்வாறு அவளுடைய வீழ்ச்சியை விரைவுபடுத்தும்?

14. எவ்வழிகளில் பாபிலோனுக்கு “பிள்ளை இழப்பும் கைம்மையும்” சம்பவிக்கும்?

15. யூதர்களை பாபிலோன் கொடூரமாக நடத்தியதற்காக மட்டுமல்லாமல் வேறு என்ன காரணத்திற்காகவும் அவள்மீது யெகோவா கோபம் கொள்கிறார்?

16, 17. (அ) எவ்வாறு பாபிலோன் ‘தன் தீச்செயலிலே நம்பிக்கை வைத்திருக்கிறது’? (ஆ) பாபிலோனின் முடிவை ஏன் தடுக்க முடியாது?

18, 19. பாபிலோன் தன் ஆலோசகர்களை நம்புவது எவ்வாறு விபரீதத்தை விளைவிக்கும்?

20. பாபிலோனிய ஆலோசகர்களின் கதி என்னவாகும்?

21. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்போது, எப்படி உண்மையென நிரூபிக்கப்படுகிறது?

22. அகந்தையைக் குறித்து பாபிலோனின் வீழ்ச்சி நமக்கு எதைக் கற்பிக்கிறது?

23. என்ன நம்பிக்கையை கொண்டிருப்பதற்கு ஏசாயா தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது?

24, 25. (அ) ஜோதிடம் ஏன் அர்த்தமற்றது, இருந்தாலும் அநேகர் ஜோதிடம் பார்ப்பது ஏன்? (ஆ) மூடநம்பிக்கையை கிறிஸ்தவர்கள் வெறுத்துத் தள்ளுவதற்கு சில காரணங்கள் யாவை?

26. ‘ஞானிகளுடைய சிந்தனைகள் வீண்’ என்பது எப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது?

27. பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோனுக்கு சம்பவித்ததைப் போன்று மகா பாபிலோனுக்கு எப்போது, எவ்வாறு வீழ்ச்சி ஏற்பட்டது?

28. மகா பாபிலோன் செருக்குடன் என்ன சொல்கிறாள், ஆனால் அவளுக்கு என்ன காத்திருக்கிறது?

[பக்கம் 111-ன் படங்கள்]

சுகபோகத்தை நாடும் பாபிலோன் மண் மட்டும் தாழ்த்தப்படும்

[பக்கம் 114-ன் படம்]

பாபிலோனின் ஜோதிடர்களால் அவளுடைய வீழ்ச்சியை முன்னறிவிக்க முடியாமல் போய்விடும்

[பக்கம் 116-ன் படம்]

பொ.ச.மு. முதலாம் ஆயிரமாண்டில் இருந்த பாபிலோனிய ஜோதிட காலண்டர்

[பக்கம் 119-ன் படங்கள்]

நவீன நாளைய பாபிலோன் விரைவில் அழிந்துவிடும்