Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனந்திரும்புதல் ஜெபம்

மனந்திரும்புதல் ஜெபம்

அதிகாரம் இருபத்து ஐந்து

மனந்திரும்புதல் ஜெபம்

ஏசாயா 63:15–64:12

யெகோவாவிடமிருந்து கிடைத்த சிட்சையின் பலனாகவே எருசலேமும் அதன் ஆலயமும் பொ.ச.மு. 607-⁠ல் அழிக்கப்பட்டன; அவர் அறவே வெறுத்து ஒதுக்கியதற்கு ஓர் அடையாளமாக அந்த அழிவு இருந்தது. கீழ்ப்படியாத யூதா தேசம் அந்தக் கடுமையான தண்டனைக்குத் தகுதி பெற்றிருந்தது. இருந்தாலும் யூதர்களை பூண்டோடு அழித்துவிட யெகோவா விரும்பவில்லை. யெகோவாவுடைய சிட்சையின் நோக்கத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”​—எபிரெயர் 12:11.

2இந்தக் கடுமையான சிட்சைக்கு யூதர்கள் எப்படி பிரதிபலிப்பார்கள்? யெகோவாவின் சிட்சையை வெறுப்பார்களா? (சங்கீதம் 50:16, 17) அல்லது அதை ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் மனந்திரும்பி குணப்படுவார்களா? (ஏசாயா 57:18; எசேக்கியேல் 18:23) முன்பு யூதாவில் வாழ்ந்த சிலராவது இந்த சிட்சையை ஏற்று மனந்திரும்புவார்கள் என ஏசாயா தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. ஏசாயா 63-⁠ம் அதிகாரத்தின் கடைசி வசனங்கள் துவங்கி 64-⁠ம் அதிகாரம் வரையுள்ள வசனங்கள், யூதா தேசத்தினர் மனந்திரும்பி இருதயப்பூர்வமான வேண்டுதலோடு யெகோவாவை அணுகுவதை காட்டுகின்றன. வருங்காலத்தில் நாடுகடத்தப்படவிருப்பவர்களின் சார்பாக ஏசாயா தீர்க்கதரிசி மனந்திரும்புதல் ஜெபத்தை ஏறெடுக்கிறார். அவர் ஜெபத்தில், வரவிருக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் பேசுகிறார்.

பரிவிரக்கமுள்ள பிதா

3யெகோவாவிடம் ஏசாயா இவ்வாறு ஜெபம் செய்கிறார்: “தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும்.” யெகோவாவும் அவருடைய காணக்கூடாத ஆவி சிருஷ்டிகளும் வாசம் செய்யும் பரலோகங்களைக் குறித்தே தீர்க்கதரிசி இங்கு பேசுகிறார். சிறையிருப்பில் இருக்கும் யூதர்களின் எண்ணங்களை தெரிவிப்பவராக ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?” (ஏசாயா 63:15) யெகோவா தம்முடைய வல்லமையை வெளிக்காட்டாமல் தம் ஜனங்களின் பேரிலான ஆழ்ந்த உணர்ச்சிகளை​—⁠‘உள்ளத்தின் கொதிப்பையும், மன உருக்கத்தையும்’​—⁠கட்டுப்படுத்தியிருக்கிறார். எனினும், யெகோவா யூத தேசத்தின் ‘பிதாவாக’ இருக்கிறார். ஆபிரகாமும், இஸ்ரவேலும் (யாக்கோபு) அவர்களுடைய முற்பிதாக்கள்; இவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தாலும்கூட தங்களின் விசுவாசமற்ற சந்ததியாரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடக்கூடும். ஆனால் யெகோவாவுடைய பரிவிரக்கமோ மிகப் பெரிது. (சங்கீதம் 27:10) ஆகவே, நன்றியுள்ளம் பொங்க ஏசாயா இவ்வாறு கூறுகிறார்: “யெகோவாவே, நீரே எங்கள் பிதா, எங்களை மீட்பவர்; பூர்வகால முதலே இது உமது திருநாமம்.”​—ஏசாயா 63:16, தி.மொ.

4உள்ளப்பூர்வமான வார்த்தைகளுடன் ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளை விட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.” (ஏசாயா 63:17) ஆம், மீண்டுமாக யெகோவா தம் ஊழியக்காரரிடம் கவனத்தைத் திருப்ப வேண்டுமென ஏசாயா ஜெபம் செய்கிறார். இருந்தாலும், என்ன கருத்தில் யூதர்களை தம்முடைய வழிகளை விட்டு விலகிச் செல்லும்படி யெகோவா செய்கிறார்? தமக்கு பயப்படாமல் போகும்படி அவர்களுடைய இருதயம் கடினப்பட்டுப் போவதற்கு யெகோவாவே காரணமா? இல்லை, ஆனால் அவர் அதை அனுமதிக்கிறார்; இதனால் நம்பிக்கை இழந்த யூதர்கள், யெகோவாவே தங்களுக்கு இந்தச் சுயாதீனத்தை அளித்ததாக புலம்புகிறார்கள். (யாத்திராகமம் 4:21; நெகேமியா 9:16) தவறு செய்யாதவாறு யெகோவா தங்களை தடுத்திருக்கலாமே என நினைக்கிறார்கள்.

5உண்மையில், கடவுள் மனிதரிடம் அவ்வாறு நடந்துகொள்கிறதில்லை. நாம் சுயதெரிவு செய்யும் திறன் படைத்தவர்கள்; ஆகவே அவருக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்பதை நாமாகவே தீர்மானிப்பதற்கு யெகோவா நம்மை அனுமதிக்கிறார். (உபாகமம் 30:15-19) உண்மையான அன்பினால் தூண்டப்பட்ட இருதயங்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் வரும் வணக்கத்தையே யெகோவா விரும்புகிறார். ஆகவே, யூதர்கள் தங்கள் சொந்த தெரிவை செய்வதற்கு​—⁠தமக்கு விரோதமாக கலகம் செய்வதற்கும்கூட​—⁠அவர் அனுமதித்திருக்கிறார். இந்தக் கருத்திலேயே அவர் அவர்களுடைய இருதயங்களை கடினப்படுத்தியிருக்கிறார்.​—2 நாளாகமம் 36:14-21.

6அதன் விளைவு என்ன? ஏசாயா தீர்க்கதரிசனமாக இவ்வாறு கூறுகிறார்: “பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப் போட்டார்கள்.” “உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்; உம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம்.” (ஏசாயா 63:18, 19; பொ.மொ.) யெகோவாவின் ஜனங்களிடம் கொஞ்ச காலத்திற்கு அவருடைய பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அதற்குப் பின்பு, அது அழிக்கப்படவும் தம் ஜனம் சிறைபிடிக்கப்படவும் யெகோவா அனுமதித்தார். அது சம்பவித்தபோது அவருக்கும் ஆபிரகாமின் சந்ததியினருக்கும் இடையே எவ்வித உடன்படிக்கையும் இல்லாதது போலவும் அவர்கள் அவருடைய பெயரால் அழைக்கப்படாதது போலவும் இருந்தது. நம்பிக்கை இழந்த நிலையில் இப்போது பாபிலோனில் அடிமைப்பட்டிருக்கும் யூதர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள்: “நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்; வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.” (ஏசாயா 64:1, 2, பொ.மொ.) அவர்களை இரட்சிப்பதற்கான வல்லமை யெகோவாவுக்கு உள்ளது. அவர் உடனடியாக இறங்கிவந்து வானம் போன்ற அரசியல் அமைப்புகளை பிளந்து மலை போன்ற வல்லரசுகளை தகர்த்து தம் ஜனங்கள் சார்பாக போராடி இருக்கலாம். தம் ஜனங்கள் பேரிலான வைராக்கியத்தைக் காட்டுவதன் மூலம் தம் பெயரை விளங்கப் பண்ணியிருக்கலாம்.

7இதுபோன்ற காரியங்களை யெகோவா பூர்வத்தில் நடப்பித்திருந்தார். ஏசாயா அவற்றை மறுபடியுமாக எடுத்துரைக்கிறார்: “நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின.” (ஏசாயா 64:3) அத்தகைய மாபெரும் செயல்கள் யெகோவாவின் வல்லமையையும் அவரே மெய்க் கடவுள் என்பதையும் மெய்ப்பித்துக் காட்டின. இருந்தாலும், தங்களின் நலனைக் கருதி யெகோவா அவ்விதமாக செயல்படும்படி எதிர்பார்ப்பதற்கு ஏசாயாவின் காலத்திலிருந்த விசுவாசமற்ற யூதர்களுக்கு உரிமை இல்லை.

யெகோவாவால் மட்டுமே இரட்சிக்க முடியும்

8பொய்க் கடவுட்கள் தங்களை வணங்குபவர்களை இரட்சிக்க எந்த வல்லமையான செயல்களையும் நடப்பிக்கிறதில்லை. ஏசாயா இவ்வாறு எழுதுகிறார்: “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத் தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்.” (ஏசாயா 64:4, 5அ) ‘தம்மை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ யெகோவா மட்டுமே. (எபிரெயர் 11:6, NW) நீதியை செய்கிறவர்களையும் தம்மை நினைக்கிறவர்களையும் பாதுகாப்பதற்காக அவர் செயல்படுகிறார். (ஏசாயா 30:18) யூதர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்களா? இல்லை. ஏசாயா யெகோவாவிடம் இவ்வாறு கூறுகிறார்: “இதோ, நீர் கோபங்கொண்டீர், நாங்கள் பாவிகளாகவே இருந்தோம், நெடுநாளாக அப்படியே இருந்தோம், நாங்கள் இரட்சிக்கப்படுவோமோ?” (ஏசாயா 64:5ஆ, தி.மொ.) கடவுளுடைய ஜனங்கள் நீண்ட காலமாகவே தொடர்ந்து பாவம் செய்து வந்திருக்கிறபடியால், யெகோவா தம்முடைய கோபத்தை அடக்கி அவர்களை இரட்சிக்க வேண்டிய அவசியமே இல்லை.

9யூதர்கள் தங்கள் கடந்தகால பாவங்களை துடைத்தழிக்க முடியாது. ஆனால், அவர்கள் மனந்திரும்பி தூய வணக்கத்தினிடமாக வந்தால் மன்னிப்பையும் வருங்கால ஆசீர்வாதங்களையும் எதிர்பார்க்கலாம். மனந்திரும்புகிறவர்களை தம்முடைய உரிய காலத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் யெகோவா அவர்களுக்கு பலனளிப்பார். இருந்தாலும், அவர்கள் பொறுமையோடு இருக்க வேண்டும். அவர்களுடைய மனந்திரும்புதலின் நிமித்தம் யெகோவா தம்முடைய கால அட்டவணையை மாற்ற மாட்டார். என்றாலும், விழிப்புடனிருந்து யெகோவாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தால் நாளடைவில் அவர்கள் விடுதலை பெறுவது உறுதி. அவ்வாறே, இன்றும் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்காக பொறுமையோடு காத்திருக்கிறார்கள். (2 பேதுரு 3:11, 12) அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர் இவ்வாறு சொன்னார்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”​—கலாத்தியர் 6:9.

10ஏசாயாவின் தீர்க்கதரிசன ஜெபம், முறைப்படியான பாவ அறிக்கை மட்டுமே அல்ல. தேசத்தார் தங்களையே இரட்சிப்பதற்கு திறனற்றிருப்பதை உள்ளப்பூர்வமாக ஒப்புக்கொள்வதும் இந்த ஜெபத்தில் காட்டப்படுகிறது. தீர்க்கதரிசி இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம்; எங்கள் நீதிகளெல்லாம் கறைப்பட்ட வஸ்திரம்போல் இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகள்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றாய் எங்களை அடித்துக்கொண்டு போகிறது.” (ஏசாயா 64:6, தி.மொ.) சிறையிருப்பின் முடிவிற்குள்ளாக மனந்திரும்பிய யூதர்கள் தங்கள் விசுவாச துரோக செயல்களை விட்டுத் திரும்பியிருக்கலாம். நீதியான காரியங்களை செய்பவர்களாக அவர்கள் யெகோவாவிடம் திரும்பியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அபூரணரே. அவர்களுடைய நற்செயல்கள் புகழத்தக்கவையாக இருந்தாலும், பாவநிவர்த்தி செய்யும் விஷயத்தில் கறைப்பட்ட வஸ்திரங்களைப் போலவே இருக்கின்றன. யெகோவாவின் மன்னிப்பு என்பது அவருடைய இரக்கத்தால் தூண்டப்பட்ட தகுதியற்ற பரிசேயாகும். இது நாமாக சம்பாதிக்கும் ஒன்றல்ல.​—ரோமர் 3:23, 24.

11வரவிருக்கும் காரியங்களை எதிர்நோக்குகையில் ஏசாயா எதைக் காண்கிறார்? தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்: “உமது திருநாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும் உம்மைப் பற்றிக்கொள்ளும்படி ஜாக்கிரதைப்படுகிறவனும் இல்லை; தேவரீர் உமது திருமுகத்தை எங்களை விட்டு மறைத்து எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரைந்துபோகப் பண்ணுகிறீர்.” (ஏசாயா 64:7, தி.மொ.) தேசத்தின் ஆவிக்குரிய நிலை மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய ஜெபத்தில் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதில்லை. விக்கிரகாராதனை என்ற பெரும் பாவத்திற்கு அவர்கள் இனிமேலும் ஆளாகாத போதிலும் வணக்க விஷயத்தில் ஏனோதானோ என்ற நிலையிலேயே இருக்கிறார்கள்; யெகோவாவைப் “பற்றிக்கொள்ளும்படி ஜாக்கிரதைப்படுகிறவனும் இல்லை.” படைப்பாளருடன் அவர்களுக்கு நெருக்கமான உறவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு தகுதியற்றவர்களாக சிலர் உணரலாம். மற்றவர்களோ யெகோவாவைப் பற்றி சிந்திப்பதற்கும்கூட நேரமின்றி தங்களுடைய சொந்த அலுவல்களிலேயே மூழ்கிவிடலாம். ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா, எசேக்கியேல் போன்றவர்கள் விசுவாசத்திற்கு சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். (எபிரெயர் 11:33, 34) 70 வருட சிறையிருப்பின் காலம் முடிவை நெருங்கும் சமயத்தில், ஆகாய், சகரியா, செருபாபேல், பிரதான ஆசாரியனாகிய யோசுவா போன்றவர்கள் யெகோவாவின் நாமத்தை சொல்லிக் கூப்பிடுவதில் ஜனங்களை சிறப்பாக வழிநடத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும், ஏசாயாவின் தீர்க்கதரிசன ஜெபம் சிறைபிடிக்கப்பட்ட பெரும்பாலானோரின் நிலையை விவரிப்பதாக தெரிகிறது.

‘பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்’

12மனந்திரும்பிய யூதர்கள் தங்களை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவம் செய்பவராக ஏசாயா யெகோவாவிடம் இவ்வாறு ஜெபம் செய்கிறார்: “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” (ஏசாயா 64:8) பிதாவாக அல்லது உயிருக்கு ஊற்றுமூலராக யெகோவாவுக்கு இருக்கும் அதிகாரத்தை இந்த வார்த்தைகள் மீண்டும் ஒப்புக்கொள்கின்றன. (யோபு 10:9) மனந்திரும்பும் யூதர்கள் வளைந்துகொடுக்கும் தன்மையுள்ள களிமண்ணிற்கு ஒப்பிடப்படுகிறார்கள். யெகோவாவின் சிட்சைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அடையாள அர்த்தத்தில் கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறார்கள். ஆனால், குயவராகிய யெகோவா மன்னிப்பை அருளும்போது மட்டுமே இவ்வாறு வடிவமைக்கப்பட முடியும். ஆகவே, யூதர்கள் அவருடைய ஜனங்கள் என்பதை நினைவுகூரும்படி ஏசாயா இருமுறை முறையிடுகிறார்: “கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.”​—ஏசாயா 64:9.

13சிறையிருப்பின்போது, அந்நிய தேசத்தில் சிறைப்பட்டிருப்பது மட்டுமல்ல வேறுபல பிரச்சினைகளையும் யூதர்கள் சகிக்கிறார்கள். எருசலேமும் அதன் ஆலயமும் பாழடைந்த நிலையில் இருப்பது அவர்களுக்கும் அவர்கள் கடவுளுக்கும் நிந்தையைக் கொண்டு வருகிறது. ஏசாயாவின் மனந்திரும்புதல் ஜெபத்தில் இந்த நிந்தைக்குக் காரணமான சில விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன: “உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க் கிடக்கிறது. எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.”​—ஏசாயா 64:10, 11.

14உண்மையில், யூத முற்பிதாக்களுடைய தேசத்தின் நிலவரத்தை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். எருசலேமின் அழிவுக்கு சுமார் 420 வருடங்களுக்கு முன்பாகவே அவர் தம் ஜனங்களை எச்சரித்திருந்தார். அவர்கள் தம் கட்டளையை நிராகரித்து வேறே கடவுட்களை சேவித்தால் ‘தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்குவார்’ எனவும் அழகான ஆலயம் “மண்மேடுகளாய்ப்போம்” (NW) எனவும் எச்சரித்திருந்தார். (1 இராஜாக்கள் 9:6-9) ஜனங்களுக்கு தாம் கொடுத்த தேசத்தைக் குறித்தும் தமது மகிமைக்கென கட்டப்பட்ட மேன்மை பொருந்திய ஆலயத்தைக் குறித்தும் அங்கு செலுத்தப்பட்ட பலிகளைக் குறித்தும் யெகோவா பெருமகிழ்ச்சி அடைந்தது உண்மையே. ஆனால் பொருளுடைமைகளைவிட​—⁠பலிகளையும்விட​—⁠உண்மைப்பற்றுறுதியும் கீழ்ப்படிதலுமே அதிக முக்கியமானது. ஆகவேதான் சாமுவேல் தீர்க்கதரிசி அரசனாகிய சவுலிடம் சரியாகவே இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.”​—1 சாமுவேல் 15:22.

15இருந்தாலும், மனந்திரும்பிய தம் ஜனங்கள் துன்பப்படுவதைக் கண்டு, இஸ்ரவேலின் கடவுளால் அவர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருக்க முடியுமா? இக்கேள்வியுடன் ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசன ஜெபத்தை முடிக்கிறார். நாடுகடத்தப்பட்ட யூதர்களின் சார்பாக அவர் இவ்வாறு மன்றாடுகிறார்: “கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக் கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?” (ஏசாயா 64:12) சமயம் வந்தபோதோ, யெகோவா தம் ஜனங்களை மன்னிக்கிறார்; தூய வணக்கத்தை மறுபடியுமாக தொடர பொ.ச.மு. 537-⁠ல் தாயகத்திற்கு மீண்டும் அவர்களை கொண்டு வருகிறார். (யோவேல் 2:13) என்றாலும், நூற்றாண்டுகளுக்குப்பின், எருசலேமும் அதன் ஆலயமும் மீண்டும் அழிக்கப்பட்டது; கடவுள் தம் உடன்படிக்கையின் ஜனங்களையும் கடைசியாக புறக்கணித்துவிட்டார். ஏன்? ஏனென்றால் யெகோவாவின் ஜனங்கள் அவருடைய கட்டளைகளை விட்டு வழிவிலகிச் சென்றனர், மேசியாவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11; 3:19, 20) அதனால், இஸ்ரவேலுக்குப் பதிலாக ஒரு புதிய ஆவிக்குரிய தேசத்தை, அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலை’ யெகோவா தேர்ந்தெடுத்தார்.​—கலாத்தியர் 6:16; 1 பேதுரு 2:9.

யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’

16இஸ்ரவேலருக்கு சம்பவித்தவற்றிலிருந்து நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். யெகோவா ‘நல்லவர், மன்னிக்க தயாராய் இருக்கிறவர்’ என்பதை அறிகிறோம். (சங்கீதம் 86:5, NW) அபூரணராகிய நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் சார்ந்து இருக்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை எல்லாம் நாம் நம்முடைய சொந்த முயற்சியினால் பெற்றுக்கொள்ள முடியாது. மறுபட்சத்தில், யெகோவா கண்மூடித்தனமாக மன்னிக்கிறவரும் அல்ல. பாவங்களை விட்டு மனந்திரும்பி குணப்படுகிறவர்கள் மட்டுமே கடவுளுடைய மன்னிப்பைப் பெற தகுதியுடையவர்கள்.​—அப்போஸ்தலர் 3:19, 20.

17நம்முடைய சிந்தைகளையும் எண்ணங்களையும் கடவுளிடம் ஜெபத்தில் தெரிவிக்கும்போது அதை அவர் அக்கறையோடு செவிகொடுத்துக் கேட்கிறார் என்பதையும் நாம் கற்றுக்கொள்கிறோம். அவர் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2, 3) அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.” (1 பேதுரு 3:12) மேலும், மனந்திரும்புதல் ஜெபத்தில், பாவங்களை தாழ்மையோடு அறிக்கையிட வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்கிறோம். (நீதிமொழிகள் 28:13) ஆனாலும், கடவுளுடைய இரக்கத்தை துச்சமாக கருதுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை. “கடவுளுடைய தகுதியற்ற தயவை ஏற்று அதன் நோக்கத்தை வீணாக்கக் கூடாது” என பைபிள் கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறது.​—2 கொரிந்தியர் 6:⁠1, NW.

18கடைசியாக, பாவிகளான தம் ஜனங்களிடம் கடவுள் பொறுமையாக இருப்பதன் நோக்கத்தையும் நாம் கற்றுக்கொள்கிறோம். ‘ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புவதால்’ யெகோவா பொறுமையை காட்டுகிறார் என அப்போஸ்தலனாகிய பேதுரு விளக்கினார். (2 பேதுரு 3:9) இருந்தாலும், கடவுளுடைய பொறுமையை தொடர்ந்து அசட்டை செய்து வருபவர்கள் முடிவில் தண்டிக்கப்படுவர். இதைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும்.”​—ரோமர் 2:6-8.

19பூர்வ இஸ்ரவேலரிடம் கடவுள் இவ்வாறே நடந்து கொண்டார். இன்று யெகோவாவுடன் உள்ள நம் உறவிலும் இதே நியமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஏனெனில் அவர் ஒருபோதும் மாறாதவர் அல்ல. தக்க தண்டனை அளிக்கிறபோதிலும், யெகோவா எப்போதுமே “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.”​—யாத்திராகமம் 34:6, 7.

[கேள்விகள்]

1, 2. (அ) கடவுள் கொடுக்கும் சிட்சையின் நோக்கம் என்ன? (ஆ) யெகோவாவிடமிருந்து சிட்சை பெற்றபின் யூதர்கள் என்ன தெரிவை எதிர்ப்படுவர்?

3. (அ) ஏசாயாவின் தீர்க்கதரிசன ஜெபம் யெகோவாவை எப்படி மேன்மைப்படுத்துகிறது? (ஆ) பாபிலோனிலுள்ள மனந்திரும்பிய யூதர்களின் எண்ணங்களைத்தான் ஏசாயாவின் தீர்க்கதரிசன ஜெபம் குறிப்பிடுகிறது என்பதை தானியேலின் ஜெபம் எவ்வாறு காட்டுகிறது? (பக்கம் 362-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

4, 5. (அ) என்ன கருத்தில் யெகோவா தம்முடைய ஜனங்கள் தம் வழிகளை விட்டு விலகி போகும்படி செய்கிறார்? (ஆ) எப்படிப்பட்ட வணக்கத்தை யெகோவா விரும்புகிறார்?

6, 7. (அ) யெகோவாவின் வழிகளைவிட்டு யூதர்கள் விலகிச் செல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது? (ஆ) யூதர்களுடைய அற்பத்தனமான ஆசை என்ன, ஆனால் எதை எதிர்பார்க்க அவர்களுக்கு உரிமை இல்லை?

8. (அ) யெகோவாவுக்கும் புறதேசத்தாரின் பொய்க் கடவுட்களுக்கும் இடையிலான ஒரு வித்தியாசம் என்ன? (ஆ) தம் ஜனங்களை இரட்சிக்க வல்லவராயினும் யெகோவா ஏன் அவ்வாறு செய்வதில்லை? (இ) ஏசாயா 64:4-ஐ பவுல் எவ்வாறு மேற்கோள் காட்டி பொருத்துகிறார்? (பக்கம் 366-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

9. மனந்திரும்பிய யூதர்கள் எதை எதிர்பார்க்கலாம், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10. எந்த விஷயத்தில் திறனற்றிருப்பது ஏசாயாவின் ஜெபத்தில் வெளிப்படையாக அறிக்கை செய்யப்படுகிறது?

11. (அ) சிறையிருப்பிலுள்ள யூதர்கள் பெரும்பாலானோரின் ஆவிக்குரிய நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது, அதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? (ஆ) சிறையிருப்பின்போது சிறந்த முன்மாதிரிகளாக இருந்தவர்கள் யார்?

12. மனந்திரும்பும் யூதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஏசாயா எவ்வாறு தெரிவிக்கிறார்?

13. கடவுளுடைய ஜனங்களின் சிறையிருப்பின்போது இஸ்ரவேல் தேசத்தின் நிலை என்ன?

14. (அ) தற்போதைய சூழ்நிலையைக் குறித்து யெகோவா எவ்வாறு எச்சரித்தார்? (ஆ) தம்முடைய ஆலயத்தையும் அங்கு பலி செலுத்தப்படுவதையும் கண்டு யெகோவா பெருமகிழ்ச்சி அடைந்தபோதிலும் எது அதிக முக்கியமானது?

15. (அ) தீர்க்கதரிசனத்தில் யெகோவாவிடம் ஏசாயா மன்றாடுவது என்ன, அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது? (ஆ) இஸ்ரவேல் தேசத்தாரை யெகோவா முற்றிலுமாக புறக்கணிப்பதற்கு வழிவகுத்த சம்பவங்கள் யாவை?

16. யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி பைபிள் என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?

17, 18. (அ) நம்முடைய சிந்தைகளிலும் எண்ணங்களிலும் யெகோவா உண்மையிலேயே அதிக அக்கறையுடையவர் என்பதை நாம் எப்படி அறியலாம்? (ஆ) பாவமுள்ள மனிதரிடம் யெகோவா ஏன் பொறுமையைக் காட்டுகிறார்?

19. எத்தகைய மாறா பண்புகளை யெகோவா எப்போதுமே காட்டுகிறார்?

[பக்கம் 362-ன் பெட்டி/படங்கள்]

தானியேலின் மனந்திரும்புதல் ஜெபம்

யூதர்களின் 70 வருட சிறையிருப்பு காலப்பகுதி முழுவதும் தானியேல் தீர்க்கதரிசி பாபிலோனில் வாழ்ந்து வந்தார். சிறையிருப்பின் 68-⁠ம் வருடத்தின்போது, இஸ்ரவேலரின் சிறையிருப்பு காலத்தின் முடிவு நெருங்கி வருகிறது என்பதை எரேமியாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து தானியேல் அறிந்து கொண்டார். (எரேமியா 25:11; 29:10; தானியேல் 9:1, 2) ஜெபத்தில்​—⁠யூதா தேசம் முழுவதன் சார்பாக ஏறெடுத்த மனந்திரும்புதல் ஜெபத்தில்​—⁠யெகோவாவை தானியேல் அணுகினார். தானியேல் இவ்வாறு சொல்கிறார்: “நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கை செய்[தேன்].”​—⁠தானியேல் 9:3, 4.

ஏசாயா 63 மற்றும் 64 அதிகாரங்களில் காணப்படும் தீர்க்கதரிசன ஜெபத்தை ஏசாயா பதிவு செய்து சுமார் இருநூறு வருடங்களுக்குப் பின்பே தானியேல் தன் ஜெபத்தை செய்தார். உண்மையுள்ள யூதர்கள் பலர் சிறையிருப்பின் கடினமான வருடங்களின்போது யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், விசுவாசமுள்ள அநேக யூதர்களின் மனோபாவத்தை தெளிவாக காட்டும் தானியேலின் ஜெபத்தை பைபிள் சிறப்பித்துக் காட்டுகிறது. ஆகவே, ஏசாயாவின் தீர்க்கதரிசன ஜெபத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் உண்மையில் பாபிலோனிலுள்ள விசுவாசமுள்ள யூதர்களின் உணர்ச்சிகளே என்பதை அவருடைய ஜெபம் காட்டுகிறது.

தானியேலின் ஜெபத்திற்கும் ஏசாயாவின் ஜெபத்திற்கும் இடையிலான சில ஒப்புமைகளைக் கவனியுங்கள்.

ஏசாயா 63:16 தானியேல் 9:15

ஏசாயா 63:18 தானியேல் 9:17

ஏசாயா 64:1-3 தானியேல் 9:15

ஏசாயா 64:4-7 தானியேல் 9:4-7

ஏசாயா 64:6 தானியேல் 9:9, 10

ஏசாயா 64:10, 11 தானியேல் 9:16-18

[பக்கம் 366-ன் பெட்டி]

‘கண் காணவில்லை’

கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயாவின் புத்தகத்திலிருந்து இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” (1 கொரிந்தியர் 2:9) a பவுலின் பதிவோ ஏசாயாவின் வார்த்தைகளோ, யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு பரலோகத்தில் அல்லது வருங்கால பூமிக்குரிய பரதீஸில் ஆயத்தம் செய்திருக்கும் காரியங்களை பற்றி குறிப்பிடுகிறதில்லை. பவுல், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏற்கெனவே அனுபவித்து வந்த ஆசீர்வாதங்களுக்கு ஏசாயாவின் வார்த்தைகளை பொருத்துகிறார். அதாவது, கடவுளைப் பற்றிய ஆழமான விஷயங்களை புரிந்துகொள்ளுதல், யெகோவாவிடமிருந்து ஆன்மீக அறிவொளியைப் பெறுதல் போன்ற ஆசீர்வாதங்களுக்குப் பொருத்துகிறார்.

ஆழமான ஆவிக்குரிய காரியங்களை யெகோவா எப்போது வெளிப்படுத்துவாரோ அப்போதுதான் நாம் அவற்றை அறிந்துகொள்ள முடியும்; அந்த சமயத்திலும் நாம் ஆவிக்குரிய ஜனங்களாக யெகோவாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தால் மட்டுமே அவற்றை புரிந்துகொள்ள முடியும். ஆவிக்குரிய காரியங்களில் ஏனோதானோ என்றிருப்பவர்களுக்கு அல்லது அறவே அக்கறை காட்டாதவர்களுக்கு பவுலின் வார்த்தைகள் பொருந்துகின்றன. அவர்களுடைய கண் ஆவிக்குரிய சத்தியங்களை காண்பதில்லை அல்லது உணர்ந்து கொள்வதில்லை; அவர்களுடைய காது அக்காரியங்களை கேட்பதுமில்லை அல்லது புரிந்துகொள்வதுமில்லை. தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு கடவுள் ஆயத்தம் செய்துள்ள காரியங்களைக் குறித்த அறிவு அப்படிப்பட்ட மனிதரின் இதயங்களை எட்டுவதுமில்லை. ஆனால் பவுலைப் போன்று கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களுக்கு கடவுள் தமது ஆவியின்மூலம் இந்த காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.​—⁠1 கொரிந்தியர் 2:1-16.

[அடிக்குறிப்பு]

a எபிரெய வேதாகமத்தில் உள்ளதை பவுலின் வார்த்தைகள் அப்படியே குறிப்பிடுவதில்லை. ஏசாயா 52:15; 64:4 மற்றும் 65:17-⁠ன் சாராம்சத்தை அவர் குறிப்பிடுவதாக தெரிகிறது.

[பக்கம் 367-ன் படம்]

கடவுளுடைய ஜனங்களிடம் “கொஞ்சக் காலமாத்திரம்” எருசலேமும் அதன் ஆலயமும் இருந்தது