Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனமொடிந்த கைதிகளுக்கு நம்பிக்கையின் செய்தி

மனமொடிந்த கைதிகளுக்கு நம்பிக்கையின் செய்தி

அதிகாரம் பதினாறு

மனமொடிந்த கைதிகளுக்கு நம்பிக்கையின் செய்தி

ஏசாயா 55:1-13

யூதாவின் சரித்திரத்திலே மிக இருண்ட காலம் அது. கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு, பாபிலோனிய சிறையிருப்பில் தவித்துக் கொண்டிருந்தனர். அன்றாட வேலைகளில் ஈடுபட ஓரளவு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது உண்மைதான். (எரேமியா 29:4-7) சிலர், தொழில் திறமைகளை வளர்த்துக்கொண்டனர் அல்லது வியாபாரங்களில் ஈடுபட்டனர். a (நெகேமியா 3:8, 31, 32) இருந்தாலும், யூத கைதிகளுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை. சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். எப்படி என்பதை ஆராய்வோம்.

2பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனியர்கள் எருசலேமை தாக்கியபோது அழிந்தது அந்த தேசம் மட்டுமல்ல, மெய் வணக்கமும்தான். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து, அதை அழித்தனர். லேவி கோத்திரத்தை சேர்ந்த சிலரை கைதிகளாக கொண்டுசென்று, மற்றவர்களை கொன்றுபோட்டு, ஆசாரியத்துவ ஏற்பாட்டையே குலைத்துப்போட்டனர். வணக்கத்திற்காக ஓர் ஆலயமோ, பலிபீடமோ, ஒழுங்கமைக்கப்பட்ட ஆசாரியத்துவமோ எதுவுமே இல்லை. எனவே, நியாயப்பிரமாண சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தபடி, மெய் கடவுளுக்கு செலுத்த வேண்டிய பலிகளை யூதர்களால் செலுத்த முடியவில்லை.

3இந்த நிலையிலும், விசுவாசமுள்ள யூதர்கள் தங்களுடைய மதப் பழக்கங்களை விட்டுக்கொடுக்கவில்லை. விருத்தசேதனம் செய்தனர்; அதோடு, நியாயப்பிரமாண சட்டத்தை முடிந்தளவுக்கு பின்பற்றினர். உதாரணமாக, நியாயப்பிரமாண சட்டத்தால் தடைசெய்யப்பட்ட உணவுகளை தவிர்த்தனர்; ஓய்வுநாளை அனுசரித்தனர். ஆனால், இப்படி செய்கையில் தங்களை சிறைபிடித்திருந்தவர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். ஏனென்றால், யூதர்களுடைய மத சடங்குகள் பாபிலோனியர்களுக்கு முட்டாள்தனமாக தோன்றின. யூதக் கைதிகள் மனமொடிந்த நிலையில் இருந்ததை சங்கீதக்காரரின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்: “பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். அதின் நடுவிலிருக்கும் அலரிச் செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.”​—சங்கீதம் 137:1-3.

4அப்படியானால், யூதக் கைதிகள் ஆறுதலுக்காக யாரிடம் திரும்பலாம்? அவர்களுக்கு விடுதலை எங்கிருந்து வரும்? நிச்சயமாக, அவர்களை சுற்றியிருக்கும் நாடுகளிடமிருந்தல்ல! அந்த நாடுகள் அனைத்துமே பாபிலோனின் படைகளை எதிர்த்து நிற்க முடியாதவை. அதுமட்டுமல்ல, அவற்றில் அநேக நாடுகள் யூதர்களுக்கு எதிரிகளாக இருந்தன. ஆனாலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அவர்கள் சுதந்திரமாக இருந்தபோது யாருக்கு எதிராக கலகம் செய்தனரோ அவரே, அதாவது யெகோவாவே அவர்களுக்கு உதவ தயாராக இருந்தார். அவர்கள் சிறையிருப்பில் இருந்தபோதும் தம்மிடம் வரும்படி அவர் இரக்கத்தோடு அழைப்பு விடுத்தார்.

“தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்”

5பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்களிடம் தீர்க்கதரிசன வார்த்தைகளில் ஏசாயா மூலமாக யெகோவா பேசுகிறார்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” (ஏசாயா 55:1) அடையாள அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை. உதாரணமாக, “தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்” என்ற அழைப்பை கவனியுங்கள். தண்ணீர் இல்லையென்றால் ஜீவராசிகளே இல்லை. இந்த அரிய திரவம் இல்லாமல், சுமார் ஒரு வாரத்திற்கு மேல் மனிதன் ஜீவிக்கவே முடியாது. எனவே, கைதிகளாக இருக்கும் யூதர்கள்மேல் தம்முடைய வார்த்தைகள் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்க யெகோவா தண்ணீரை உருவகமாக பயன்படுத்தியிருப்பது வெகு பொருத்தமானது. மிகவும் உஷ்ணமான நாளில் குளிர்ந்த நீர் எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்குமோ அதுபோலவே யெகோவாவின் செய்தியும் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சோர்வுற்ற நிலையிலிருந்து அவர்களுக்கு புத்துயிரளிக்கும். சத்தியத்திற்கும் நீதிக்குமான அவர்களுடைய தாகத்தை தணிக்கும். சிறையிருப்பிலிருந்து விடுதலைக்கான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கும். இருந்தாலும், இந்த நன்மைகளைப் பெற, யூதக் கைதிகள் கடவுளுடைய செய்தியைப் பருக வேண்டும், அதற்கு கவனம் செலுத்த வேண்டும், அதன்படி நடக்க வேண்டும்.

6யெகோவா தண்ணீர் மட்டுமல்ல, “திராட்சரசமும் பாலும்” தருகிறார். பால் இளைஞரின் உடலுக்கு உரமூட்டுகிறது; பிள்ளைகள் வளருவதற்கும் உதவுகிறது. அதுபோலவே, யெகோவாவின் வார்த்தைகள் அவருடைய ஜனங்களுக்கு ஆவிக்குரிய தெம்பளிக்கும்; அவரோடு உள்ள உறவை பலப்படுத்தும். திராட்சரசத்தைப் பற்றியதென்ன? பொதுவாக, பண்டிகை சமயங்களில் திராட்சரசம் பயன்படுத்தப்படும். பைபிளில், இது சந்தோஷத்தோடும் செழிப்போடும் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. (சங்கீதம் 104:15) ‘திராட்சரசம் வாங்கிக்கொள்ளும்படி’ தம் ஜனங்களுக்கு சொல்வதன் மூலம், முழு இருதயத்தோடு மெய் வணக்கத்திடம் திரும்புவது அவர்களுக்கு ‘நிறைவான மகிழ்ச்சி’ தரும் என யெகோவா உறுதி அளிக்கிறார்.​—உபாகமம் 16:15, பொ.மொ.; சங்கீதம் 19:8; நீதிமொழிகள் 10:⁠22.

7கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு இப்படிப்பட்ட ஆவிக்குரிய புத்துணர்ச்சியை அளிக்க யெகோவா முன்வருவது அவரது இரக்கத்தை காட்டுகிறதல்லவா! ஏறுமாறான போக்கும் கலகத்தனமும் நிறைந்த யூதர்களுடைய சரித்திரத்தை யோசித்துப் பார்க்கையில் அவருடைய கருணை மிக மிக பெரிது. அவர்கள் யெகோவாவின் அங்கீகாரத்தை பெறத் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை. என்றபோதிலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் [“யெகோவா,” NW] உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.” (சங்கீதம் 103:8, 9) தம் ஜனங்களோடு உறவை அறவே துண்டித்துக் கொள்வதற்கு மாறாக, சமரசமாவதற்கு யெகோவாவே நடவடிக்கை எடுக்கிறார். அவர் உண்மையிலேயே “கிருபை செய்ய விரும்புகிற” கடவுள்.​—மீகா 7:⁠18.

தவறான இடத்தில் வைக்கப்பட்ட நம்பிக்கை

8அதுவரையிலுங்கூட அநேக யூதர்கள் தங்களுடைய இரட்சிப்புக்காக யெகோவாவை முழுமையாக நம்பவில்லை. உதாரணமாக, எருசலேமின் அழிவுக்கு முன்னர், அதன் தலைவர்கள் பலம் மிக்க அண்டை நாடுகளுடைய ஆதரவை நாடினர்; எகிப்தோடும் பாபிலோனோடும் வேசித்தனம் பண்ணினர் எனலாம். (எசேக்கியேல் 16:26-29; 23:14) எனவேதான், எரேமியா அவர்களை எச்சரித்தார்: “மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்.” (எரேமியா 17:5) இருந்தபோதிலும், அதைத்தான் கடவுளுடைய ஜனங்கள் செய்தனர்!

9அவர்கள் நம்பிக்கை வைத்த நாடுகள் ஒன்றில்தான் இப்போது கைதிகளாக இருக்கின்றனர். இதிலிருந்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனரா? பெரும்பாலானோர் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், யெகோவா கேட்கிறார்: “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (ஏசாயா 55:2அ) கைதிகளாக இருக்கும் யூதர்கள் யெகோவாவைத் தவிர வேறே எவர்மீது நம்பிக்கை வைத்தாலும், ‘அப்பமல்லாததற்காகப் பணத்தை . . . செலவழிக்கின்றனர்.’ பாபிலோனிலிருந்து அவர்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்காது; ஏனென்றால், கைதிகளை மீண்டும் அவர்களுடைய தேசத்திற்கு திருப்பி அனுப்பும் பழக்கமே பாபிலோனுக்கு இல்லை. சொல்லப்போனால், சர்வாதிகார ஆட்சிக்கும் வாணிபத்திற்கும் பொய் வணக்கத்திற்கும் பெயர்பெற்ற பாபிலோனிடம், கைதிகளாக இருந்த யூதர்களுக்கு அளிப்பதற்கு ஒன்றுமே இல்லை.

10“நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என யெகோவா தம் ஜனங்களிடமாக வருந்திக்கேட்கிறார். (ஏசாயா 55:2ஆ, 3) ஆவிக்குரிய பஞ்சத்தில் பரிதவிக்கும் ஜனங்களின் ஒரே நம்பிக்கை யெகோவாவே. அவரே இப்போது அவர்களிடம் ஏசாயா வாயிலாக தீர்க்கதரிசன வார்த்தைகளில் பேசுகிறார். கடவுளுடைய செய்திக்கு செவிகொடுப்பதில்தான் அவர்களுடைய ஜீவன் சார்ந்திருக்கிறது. ஏனென்றால், அப்படிச் செய்தால்தான் அவர்களுடைய “ஆத்துமா பிழைக்கும்” என கடவுள் சொல்கிறார். எனினும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவோரோடு அவர் செய்யப்போகும் “நித்திய உடன்படிக்கை” என்ன? “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை” குறித்ததே அந்த உடன்படிக்கை. தாவீதின் சிங்காசனம் “என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” என பல நூற்றாண்டுகளுக்கு முன் யெகோவா அவருக்கு வாக்குக் கொடுத்தார். (2 சாமுவேல் 7:16) எனவே, இங்கே சொல்லப்பட்டிருக்கும் “நித்திய உடன்படிக்கை” என்பது அரசாட்சியை குறிக்கிறது.

நித்திய ராஜ்யத்திற்கான நிரந்தர உரிமையாளர்

11கைதிகளாக இருந்த அந்த யூதர்களுக்கு, தாவீதின் வம்சாவளியில் ஆட்சியாளர் வருவார் என்பது நடக்கப்போகிற காரியமாக தோன்றியிருக்காது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான தேசத்தையும் ஒரு தேசமாக கருதப்படும் அந்தஸ்தையும் பறிகொடுத்திருக்கிறார்கள். ஆனால், அது தற்காலிகமானதே. தாவீதோடு செய்த உடன்படிக்கையை யெகோவா மறந்துவிடவில்லை. தாவீதின் வழியில் நித்திய ராஜ்யத்தை ஏற்படுத்தும் கடவுளுடைய நோக்கம், மனிதர்களுடைய பார்வையில் நிறைவேற முடியாததாக தோன்றினாலும், நிச்சயம் நிறைவேறும். ஆனால் எப்படி, எப்போது? பொ.ச.மு. 537-⁠ல், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யெகோவா தம் ஜனங்களை விடுவிக்கிறார்; மீண்டும் அவர்களுடைய தாயகத்திற்கு திரும்பிவரச் செய்கிறார். இது, நித்திய ராஜ்யம் நிறுவப்பட வழிவகுக்கிறதா? இல்லை. அவர்கள் மற்றொரு புறமத பேரரசாகிய மேதிய-பெர்சியாவின்கீழ் தொடர்ந்து அடிமைகளாக இருக்கின்றனர். புறதேசங்கள் தங்களுடைய ஆட்சியை நடத்துவதற்கான ‘குறிக்கப்பட்ட காலம்’ இன்னும் முடியவில்லை. (லூக்கா 21:24, NW) இஸ்ரவேலில் ராஜாக்கள் எவரும் இல்லாததால், தாவீதுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நிறைவேறாமல் இருக்கும்.

12பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் தேசம் விடுபட்டு 500-⁠க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ்ய உடன்படிக்கையின் நிறைவேற்றம் சம்பந்தமாக யெகோவா மிக முக்கியமான ஒரு படியை எடுத்தார். தம் சிருஷ்டிப்புக்கெல்லாம் ஆரம்பமாய் விளங்கிய, பரலோக மகிமையில் இருந்த தம் முதற்பேறான குமாரனின் உயிரை யூத கன்னியாகிய மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். (கொலோசெயர் 1:15-17) இதை அறிவிக்கையில், யெகோவாவின் தூதன் மரியாளிடம் சொன்னதாவது: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) எனவே, இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்து, ஆட்சி உரிமையை பெற்றார். அரசராக அரியணையில் அமர்த்தப்பட்டது முதல், அவர் “என்றென்றைக்கும்” அரசாளுவார். (ஏசாயா 9:7; தானியேல் 7:14) இவ்வாறு, ராஜாவாகிய தாவீதுக்கு நித்திய வாரிசைத் தருவதாக பல நூற்றாண்டுகளுக்கு முன் யெகோவா கொடுத்த வாக்குறுதி நிறைவேறுவதற்கான வாய்ப்பு அப்போது திறக்கப்பட்டது.

‘தேசத்தாருக்கு அதிபதி’

13இந்த எதிர்கால ராஜா என்ன செய்வார்? யெகோவாவே சொல்கிறார்: “இதோ, அவரைப் பல தேசத்தாருக்குச் சாட்சியாகவும் பல ஜாதியாருக்குத் [“தேசத்தாருக்கு,” NW] தலைவராகவும் அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.” (ஏசாயா 55:4, தி.மொ.) இயேசு வளர்ந்த பிறகு, யெகோவாவின் பூமிக்குரிய பிரதிநிதியாகவும் தேசங்களுக்கு கடவுளுடைய சாட்சியாகவும் விளங்கினார். மனிதனாக வாழ்ந்த காலத்தில், ‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடமே’ அவருடைய ஊழியம் ஒருமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பரலோகத்திற்கு போவதற்கு சற்று முன்னர், தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் . . . இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.’ (மத்தேயு 10:5, 6; 15:24; 28:19, 20) எனவே, உரிய நேரத்தில், ராஜ்ய செய்தி யூதரல்லாதவர்களுக்கும் சொல்லப்பட்டது. தாவீதோடு செய்த உடன்படிக்கையின் நிறைவேற்றத்தில் அவர்களில் சிலர் பங்குகொண்டனர். (அப்போஸ்தலர் 13:46) இந்த விதத்தில், அவர் மரித்து, உயிர்த்தெழுப்பப்பட்டு, பரலோகத்திற்கு போன பிறகும்கூட, தொடர்ந்து ‘பல தேசத்தாருக்கு [யெகோவாவின்] சாட்சியாக’ விளங்கினார்.

14இயேசு “தலைவராகவும் அதிபதியாகவும்” இருக்க வேண்டும். இந்த தீர்க்கதரிசன விவரிப்புக்கு இசைய, இயேசு பூமியில் இருந்தபோது தம் தலைமை ஸ்தானத்திற்குரிய எல்லா பொறுப்புகளையும் முழுமையாக ஏற்றார். எல்லா விதங்களிலும் முன்நின்று செயல்பட்டார். திரளான ஜனங்களை கவர்ந்தார்; அவர்களுக்கு சத்தியத்தின் வார்த்தைகளை போதித்தார். மேலும், தம் தலைமை ஸ்தானத்தை ஏற்று பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 4:24; 7:28, 29; 11:5) அவர் தம் சீஷர்களை மிக நேர்த்தியாக பயிற்றுவித்தார்; அவர்கள் செய்ய வேண்டிய பிரசங்க வேலைக்கு தயார்படுத்தினார். (லூக்கா 10:1-12; அப்போஸ்தலர் 1:8; கொலோசெயர் 1:23) வெறும் மூன்றரை வருடங்களில், பல தேசத்தாரிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அடங்கிய ஐக்கியப்பட்ட, சர்வதேச சபைக்கு இயேசு அடித்தளம் இட்டார்! உண்மையான ‘தலைவரும் அதிபதியும்தான்’ இப்பேர்ப்பட்ட பிரமாண்டமான பணியை நிறைவேற்றியிருக்க முடியும். b

15முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டவர்கள், கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு உடன் அரசர்களாக ஆளப்போகும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. (வெளிப்படுத்துதல் 14:1) இருந்தாலும், ஏசாயா தீர்க்கதரிசனம் கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திற்கு மட்டுமல்ல, அதற்கு பின்பும் நிறைவேறுகிறது. 1914 வரை, கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு கிறிஸ்து ஆட்சி செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதை அத்தாட்சி காட்டுகிறது. ஆனால் 1914-⁠க்குப் பிறகு சீக்கிரத்திலேயே, பூமியிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட ஒரு சூழ்நிலை, பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் கைதிகளாக இருந்த யூதர்களுடைய சூழ்நிலைக்கு பல விதங்களில் ஒத்திருந்தது. சொல்லப்போனால், அந்தக் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்டது, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றமாக இருந்தது.

நவீன நாளைய சிறையிருப்பும் விடுதலையும்

16இயேசு 1914-⁠ல் ராஜாவாக அமர்த்தப்பட்டபோது, அதுவரை இல்லாத கடுந்துயரை உலகம் சந்தித்தது. ஏன்? ஏனென்றால், இயேசு ராஜாவாகியதும் சாத்தானையும் மற்ற பொல்லாத ஆவி சிருஷ்டிகளையும் பரலோகத்திலிருந்து வெளியேற்றினார். பூமிக்குத் தள்ளப்பட்டதும் சாத்தான் பரிசுத்தவான்களோடு, அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானவர்களோடு யுத்தம் பண்ண ஆரம்பித்தான். (வெளிப்படுத்துதல் 12:7-12, 17) 1918-⁠ல் இது உச்சக்கட்டத்தை எட்டியது. தேசத்துரோகம் எனும் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொறுப்பான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது. இந்த விதத்தில், யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் ஆவிக்குரிய சிறையிருப்பிற்குள் சென்றனர். பூர்வத்தில் யூதர்கள் சொல்லர்த்தமான சிறையிருப்பிற்குள் சென்றதை இது நினைவுபடுத்துகிறது. அவர்கள் மிக மோசமான நிந்தனைக்கு ஆளானார்கள்.

17ஆனால், கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களின் சிறையிருப்பு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. சிறையிலிடப்பட்ட அதிகாரிகள் மார்ச் 26, 1919-⁠ல் விடுவிக்கப்பட்டனர்; அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த எல்லா குற்றச்சாட்டுகளும் பிற்பாடு நீக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட தம் ஜனங்கள்மீது பரிசுத்த ஆவியை யெகோவா பொழிந்தருளினார். அவர்கள் செய்ய வேண்டிய வேலைக்காக அவர்களுக்கு புதுத்தெம்பூட்டினார். “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்ற அழைப்புக்கு அவர்கள் சந்தோஷத்தோடு கீழ்ப்படிந்தார்கள். (வெளிப்படுத்துதல் 22:17) “பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்” அவர்கள் வாங்கினார்கள். வரவிருந்த மகத்தான அதிகரிப்புக்காக அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தப்பட்டார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானவர்களாகிய இவர்கள் எதிர்பார்த்திராத அதிகரிப்பு அது.

கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்டோரிடம் ஓடிவரும் திரள் கூட்டத்தார்

18இயேசுவின் சீஷர்களுக்கு இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. முதலாவது, 1,44,000 பேர் அடங்கிய “சிறுமந்தை” கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ‘தேவனுடைய இஸ்ரவேலாகிய’ இவர்கள், யூத மற்றும் புறஜாதியைச் சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாவர். பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு அரசாளும் நம்பிக்கையை உடையவர்கள். (லூக்கா 12:32; கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 14:1) இரண்டாவதாக, கடைசி நாட்களில் ‘திரள் கூட்டமான,’ ‘வேறே ஆடுகள்’ காட்சியில் தோன்றியிருக்கின்றனர். பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையவர்கள் இவர்கள். மிகுந்த உபத்திரவம் வருவதற்குமுன், எண்ணிக்கை குறிப்பிடப்படாத இந்த திரளான ஜனங்கள், சிறுமந்தையினரோடு சேர்ந்து கடவுளை சேவிக்கின்றனர். இரு சாராரும் ‘ஒரே மேய்ப்பரின்கீழ்,’ ‘ஒரே மந்தையாக’ சேவை புரிகின்றனர்.​—வெளிப்படுத்துதல் 7:9, 10; யோவான் 10:⁠16.

19இந்த திரள் கூட்டத்தாரை கூட்டிச் சேர்க்கும் வேலையை ஏசாயா தீர்க்கதரிசனத்தின் பின்வரும் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம்: “இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை [“தேசத்தை,” NW] வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி [“தேசம்,” NW] உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.” (ஏசாயா 55:⁠5) அர்மகெதோனுக்கு முன், யெகோவாவின் வணக்கத்திற்குள் ஒரு பெரிய “தேசத்தை” கூட்டிச் சேர்ப்பதில் தாங்கள் முக்கியமான கருவிகளாக இருக்கப் போவதை அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானவர்கள் முதலில் புரிந்துகொள்ளவில்லை. அதாவது ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்ற முதல் சில வருடங்களில் இதை அவர்கள் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை. என்றாலும் காலப்போக்கில், பரலோக நம்பிக்கையில்லாத நேர்மை இருதயமுள்ள ஆட்கள் அநேகர் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தனர்; அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் காட்டும் அதே வைராக்கியத்தோடு அவர்களும் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தனர். கடவுளுடைய ஜனங்களின் மேன்மையான நிலையை புதிதாக வந்த இவர்களும் கண்டுகொண்டனர்; யெகோவா அவர்களோடு இருந்ததை உணர்ந்துகொண்டனர். (சகரியா 8:23) 1930-களில், அவர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்த இந்த தொகுதியினரை அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் சரியாக அடையாளம் கண்டுகொண்டனர். மிகப் பெரிய கூட்டிச் சேர்க்கும் வேலை இன்னும் இருக்கிறதென்பதை அவர்கள் உணர்ந்தனர். திரள் கூட்டமான ஜனங்கள் கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களோடு ஓடி வந்து சேர்ந்துகொண்டனர். நியாயமான காரணத்தோடுதான் இதைச் செய்தனர்.

20ஏசாயாவின் நாட்களில், இந்த அழைப்பு கொடுக்கப்பட்டது: “யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்திலேயே அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையிலேயே அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” (ஏசாயா 55:⁠6, தி.மொ.) நம்முடைய நாட்களில், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் அதிகரித்துக் கொண்டே போகும் திரள் கூட்டத்தாருக்கும் இந்த வார்த்தைகள் மிகச் சரியாக பொருந்துகின்றன. யெகோவா தரும் ஆசீர்வாதங்கள் நிபந்தனையற்றவை அல்ல; அவர் விடுக்கும் அழைப்பும் முடிவில்லாததல்ல. எனவே, கடவுளுடைய தயவை நாடும் சமயம் இதுவே. யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்கான நேரம் வரும்போது, காலம் கடந்துவிட்டிருக்கும். எனவேதான் ஏசாயா சொல்கிறார்: “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு யெகோவாவிடத்தில் திரும்பட்டும். அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் திரும்பட்டும்; ஏனெனில் அவர் தாராளமாக மன்னிப்பார்.”​—ஏசாயா 55:⁠7, NW.

21“யெகோவாவிடத்தில் திரும்பட்டும்” என்ற சொற்றொடர், மனந்திரும்ப வேண்டியவர்கள் கடவுளோடு ஒரு சமயம் சுமுகமான உறவுக்குள் இருந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த பகுதியிலுள்ள அநேக அம்சங்கள், பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களில் முதலாவதாக நிறைவேற்றம் அடைந்துள்ளன என்பதை இந்த சொற்றொடர் நினைவுபடுத்துகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த கைதிகளின் முன்னோர்கள், யெகோவாவுக்கு கீழ்ப்படிந்திருக்க தீர்மானித்திருந்ததை இவ்வாறு அறிவித்தனர்: “நாங்கள் யெகோவாவைவிட்டு வேறே தேவர்களை சேவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாதது.” (யோசுவா 24:16, NW) ஆனால், “நினைத்தும் பார்க்க முடியாத” அந்தச் செயல் நிஜத்தில் நடந்தது, அதுவும் மறுபடியும் மறுபடியும் நடந்தது என சரித்திரம் காட்டுகிறது! கடவுளுடைய ஜனங்களின் விசுவாசக்குறைவே அவர்கள் பாபிலோனில் கைதிகளாக இருப்பதற்கான காரணம்.

22அவர்கள் மனந்திரும்பினால் என்ன நடக்கும்? யெகோவா ‘தாராளமாக மன்னிப்பதாக’ ஏசாயா மூலமாக வாக்கு கொடுக்கிறார். மேலும் அவர் சொல்வதாவது: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (ஏசாயா 55:8, 9) யெகோவா பரிபூரணமானவர்; எனவே, அவருடைய நினைவுகளும் வழிகளும் எட்ட முடியாதவை. அவர் காட்டும் இரக்கமும்கூட மனிதர்களால் ஒருபோதும் பெற முடியாத அளவுக்கு உயர்ந்தது. இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: நாம் ஒருவரை மன்னிக்கிறோமெனில், ஒரு பாவி மற்றொரு பாவியை மன்னிப்பதாகத்தான் அர்த்தம். எப்போதாவது நாமும் மற்றவர்களுடைய மன்னிப்பை பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் உணருகிறோம். (மத்தேயு 6:12) ஆனால், யெகோவாவோ எவரிடமிருந்தும் எப்போதும் மன்னிப்பைப் பெற வேண்டிய அவசியமில்லாதபோதும் “தாராளமாக” மன்னிக்கிறார்! உண்மையிலேயே, அவர் மகா இரக்கங்களின் கடவுள். முழு இருதயத்தோடு தம்மிடம் திரும்பி வருபவர்கள்மீது யெகோவா இரக்கங்காட்டி, வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வாதங்களைப் பொழிகிறார்.​—மல்கியா 3:⁠10.

யெகோவாவிடம் திரும்புவோருக்கு ஆசீர்வாதங்கள்

23யெகோவா தம் ஜனங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்: “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:10, 11) யெகோவா சொல்லுகிற எல்லாம் நிச்சயம் நடக்கும். பனியும் மழையும் பூமியை நனைத்து பலனைத் தந்து அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவது எவ்வளவு நிச்சயமோ அப்படியே யெகோவாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறப் போவது நூறு சதவீதம் நிச்சயம். வாக்குறுதி கொடுத்திருக்கும் அனைத்தையும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.​—எண்ணாகமம் 23:⁠19.

24எனவே, ஏசாயா மூலம் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தைகளுக்கு யூதர்கள் செவிசாய்ப்பார்களேயானால், யெகோவா வாக்குக் கொடுத்திருக்கும் இரட்சிப்பை நிச்சயம் பெறுவர். அதன் விளைவாக, பெருமகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பர். யெகோவா சொல்கிறார்: “மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்; அமைதியுடன் நடத்திச் செல்லப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்; காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும். முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்; காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடிதுளிர்த்து வளரும்; இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்; அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.”​—ஏசாயா 55:12, 13, பொ.மொ.

25பொ.ச.மு. 537-⁠ல், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யூதக் கைதிகள் உண்மையிலேயே ஆனந்தக் களிப்போடு வெளியேறுகின்றனர். (சங்கீதம் 126:1, 2) எருசலேமுக்கு வந்த அவர்கள், முட்செடிகளாலும் காஞ்சொறிகளாலும் தேசம் நிறைந்திருப்பதைக் காண்கின்றனர். ஏனென்றால், தேசம் பல பத்தாண்டுகளாக பாழாய்க் கிடந்திருக்கிறது. ஆனால் இப்போதோ, தாயகம் திரும்பிவருகிற கடவுளுடைய ஜனங்கள் அதை அழகாக மாற்றியமைக்க முடியும்! முட்செடிகளுக்கும் காஞ்சொறிகளுக்கும் பதிலாக நெடுநெடுவென வளரும் தேவதாரு மரங்களும் நறுமணச் செடிகளும் தேசத்தை நிரப்பும். யெகோவாவின் ஜனங்கள் அவரை “மகிழ்ந்து” சேவிக்கையில், அவருடைய ஆசீர்வாதத்தை தெளிவாக காண முடியும். இது, அந்த தேசமே களிகூருவதுபோல இருக்கிறது.

26அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானவர்கள் 1919-⁠ல் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். (ஏசாயா 66:8) வேறே ஆடுகளாகிய திரள்கூட்டமான ஜனங்களோடு சேர்ந்து ஆவிக்குரிய பரதீஸில் அவர்கள் கடவுளை சந்தோஷத்தோடு இப்போது சேவித்து வருகின்றனர். பாபிலோனிய பழக்கவழக்கங்களின் எந்தக் கறையுமின்றி, யெகோவாவுடைய தயவை அனுபவிக்கின்றனர்; இப்படியாக, அவருக்கு ‘நற்பெயராக’ இருக்கின்றனர். அவர்களுடைய ஆவிக்குரிய செழிப்பு யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்கிறது. மெய்யான தீர்க்கதரிசனத்தின் கடவுளாக அவரை மேன்மைப்படுத்துகிறது. அவர்களுக்காக யெகோவா செய்திருக்கும் அனைத்தும் அவருடைய தெய்வத்துவத்தை காட்டுகிறது. மேலும், அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிறவர் என்பதற்கும் மனந்திரும்பி வருவோருக்கு இரக்கத்தைப் பொழிகிறவர் என்பதற்கும் நிரூபணமாய் இருக்கிறது. “பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்” தொடர்ந்து வாங்கும் அனைவரும் அவரை என்றென்றும் சேவித்து மகிழ்வார்களாக!

[அடிக்குறிப்புகள்]

a பூர்வ பாபிலோனிய வர்த்தக பதிவுகளில் அநேக யூதர்களுடைய பெயர்கள் காணப்படுகின்றன.

b சீஷராக்கும் வேலையை இயேசு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். (வெளிப்படுத்துதல் 14:14-16) இன்று, கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் இயேசுவை சபையின் தலைவராக கருதுகின்றனர். (1 கொரிந்தியர் 11:⁠3) கடவுளுடைய உரிய நேரத்தில், இன்னொரு விதத்தில் “தலைவராகவும் அதிபதியாகவும்” இயேசு செயல்படுவார். அதாவது, அர்மகெதோன் யுத்தத்தில் கடவுளுடைய எதிரிகளோடு முடிவாக போர் செய்யும்போது இது நிறைவேறும்.​—⁠வெளிப்படுத்துதல் 19:19-21.

[கேள்விகள்]

1. பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களின் நிலையை விவரிக்கவும்.

2, 3. யூதர்கள் யெகோவாவை வணங்குவதை சிறையிருப்பு எப்படி பாதித்தது?

4. யூதர்கள் விடுதலைக்காக மற்ற நாடுகளை எதிர்பார்ப்பது ஏன் வீணான காரியம், ஆனால் உதவிக்காக யாரிடம் அவர்கள் திரும்பலாம்?

5. “தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்” என்ற வார்த்தைகளின் உட்கருத்து என்ன?

6. யூதர்கள் “திராட்சரசமும் பாலும்” வாங்குவதால் எப்படி நன்மையடைவர்?

7. கைதிகளாக இருந்தவர்களிடம் யெகோவா காட்டிய இரக்கம் ஏன் பெரிது, இது அவரைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?

8. என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, அதன் மத்தியிலும் அநேக யூதர்கள் தங்கள் நம்பிக்கையை யார்மேல் வைத்தனர்?

9. யூதர்களில் அநேகர் எப்படி ‘அப்பமல்லாததற்காகப் பணத்தை . . . செலவழிக்கின்றனர்’?

10. (அ) கைதிகளாக இருக்கும் யூதர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தால் அவர் என்ன பலனளிப்பார்? (ஆ) தாவீதோடு என்ன உடன்படிக்கையை யெகோவா செய்திருந்தார்?

11. தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியின் நிறைவேற்றம், பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு ஏன் நடக்கப்போகிற காரியமாக தோன்றவில்லை?

12. தாவீதோடு தாம் செய்திருந்த ராஜ்ய உடன்படிக்கையை நிறைவேற்ற யெகோவா என்ன செய்தார்?

13. தம் ஊழிய காலத்தின்போதும் பரலோகத்திற்கு ஏறி சென்ற பின்னும், இயேசு எப்படி “தேசத்தாருக்குச் சாட்சியாக” விளங்கினார்?

14, 15. (அ) “தலைவராகவும் அதிபதியாகவும்” இயேசு தம்மை எவ்வாறு நிரூபித்தார்? (ஆ) இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருந்தது?

16. இயேசு 1914-⁠ல் ராஜாவாக அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து என்ன கடுந்துயரை உலகம் சந்தித்தது?

17. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய நிலை 1919-⁠ல் எப்படி மாறியது, அப்போது அவர்கள் எப்படி பலப்படுத்தப்பட்டார்கள்?

18. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் என்ன இரு சாராரை காண்கிறோம், இன்று அவர்கள் எப்படி சேவை புரிகின்றனர்?

19. தேவனுடைய இஸ்ரவேலர் அதுவரை அறிந்திராத “தேசம்,” ஆவிக்குரிய தேசம் கொடுத்த அழைப்புக்கு எவ்வாறு செவிகொடுத்தது?

20. (அ) நம் நாட்களில், ‘யெகோவாவைத் தேடுவது’ ஏன் அவசியம், இதை எப்படி செய்வது? (ஆ) யெகோவா தம்மைத் தேடுபவர்களுக்கு எப்படி பலனளிப்பார்?

21. முன்னோர்கள் கொடுத்த உறுதிக்கு இஸ்ரவேல் தேசம் எப்படி உண்மையற்றதாக நிரூபித்தது?

22. மனிதர்களுடைய நினைவுகளையும் வழிகளையும் காட்டிலும் தம்முடையவை உயர்வானவை என ஏன் யெகோவா சொல்கிறார்?

23. தம் வார்த்தைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பதை யெகோவா என்ன உதாரணத்தால் விளக்குகிறார்?

24, 25. ஏசாயா மூலமாக கொடுக்கப்படும் யெகோவாவின் செய்திக்கு செவிசாய்க்கும் யூதக் கைதிகளுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?

26. கடவுளுடைய ஜனங்கள் இன்று என்ன ஆசீர்வாதமான நிலையை அனுபவிக்கின்றனர்?

[பக்கம் 234-ன் படம்]

ஆவிக்குரிய தாகமுள்ள யூதர்கள் ‘தண்ணீர்களண்டைக்கு வரும்படியும்,’ ‘திராட்சரசமும் பாலும் கொள்ளும்படியும்’ அழைக்கப்படுகின்றனர்

[பக்கம் 239-ன் படங்கள்]

இயேசு தேசங்களுக்கு “தலைவராகவும் அதிபதியாகவும்” தம்மை நிரூபித்தார்

[பக்கம் 244245-ன் படங்கள்]

‘துன்மார்க்கன் தன் வழியை விட்டுவிடக்கடவன்’