Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதகுலத்திற்கு ஒளிகொண்டு வருகிறார் கடவுளுடைய தீர்க்கதரிசி

மனிதகுலத்திற்கு ஒளிகொண்டு வருகிறார் கடவுளுடைய தீர்க்கதரிசி

அதிகாரம் ஒன்று

மனிதகுலத்திற்கு ஒளிகொண்டு வருகிறார் கடவுளுடைய தீர்க்கதரிசி

மனிதனால் சாதிக்க இயலாதது எதுவுமே இல்லை என தோன்றும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம். விண்வெளி பயணம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், மரபணு பொறியியல், இன்ன பிற அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்தும் மேம்பட்ட வாழ்க்கை​—⁠ஒருவேளை நீடித்த வாழ்க்கை​—⁠வாழும் நம்பிக்கை எனும் புது வாசலை மனிதகுலத்திற்கு திறந்து வைத்திருக்கின்றன.

2இப்படிப்பட்ட முன்னேற்றங்கள் உங்கள் வீட்டுக் கதவை பூட்டி வைக்காமல் வெளியே சென்றுவர வழி செய்திருக்கின்றனவா? போர் பயத்தை போக்கியிருக்கின்றனவா? வியாதியை விரட்டியிருக்கின்றனவா? பாசத்திற்குரியவர்களை பறிகொடுத்தவர்களின் கண்ணீரை துடைத்திருக்கின்றனவா? இல்லவே இல்லை! மனித சாதனைகள் மலைக்க வைத்தாலும் மட்டுப்பட்டதுதான். உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிலவில் கால் பதிக்கவும் ஆற்றல்மிகு சிலிக்கான் சிப்ஸ்களை உருவாக்கவும் மனித ஜீன்களை மாற்றியமைக்கவும் கற்றிருக்கிறோம். ஆனால் இதுவரை நூறு கோடி வாயிற்குக்கூட சுத்தமான நீர் வார்க்க முடியவில்லை, அழிந்துவரும் ஆயிரமாயிரம் உயிரினங்களை காப்பாற்ற முடியவில்லை. வளிமண்டலத்தை வதைக்காமல் நமக்குத் தேவையான ஆற்றலை பெற முடியவில்லை.” ஆகவே, ஆறுதலையும் நம்பிக்கையையும் எங்கே தேடுவது என்ற நிச்சயமின்றி அநேகர் வருங்காலத்தை கவலையோடு நோக்குவது ஆச்சரியமல்லவே.

3இன்று நாம் எதிர்ப்படும் இதே சூழ்நிலையைத்தான் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுளுடைய ஜனங்களும் எதிர்ப்பட்டார்கள். அச்சமயத்தில், யூதாவில் வாழ்ந்துவந்த ஜனங்களுக்கு ஆறுதலின் செய்தியை அள்ளி வழங்க கடவுள் தம்முடைய ஊழியராகிய ஏசாயாவுக்கு பொறுப்பளித்தார்; அந்த ஆறுதல்தான் அவர்களுக்கும் தேவையாக இருந்தது. கொந்தளிக்கும் சம்பவங்கள் அத்தேசத்தையே அதிர வைத்தன. மூர்க்கத்தனமான அசீரிய வல்லரசு விரைவில் தேசத்தை அச்சுறுத்தி அநேகரை கதிகலங்க வைக்கும். இதிலிருந்து தப்பிக்க கடவுளுடைய ஜனங்கள் யாரிடம் தஞ்சம் புக முடியும்? யெகோவாவே எங்கள் தேவன் என அவர்கள் சொல்லிக்கொண்டாலும் மனுஷனையே கோட்டையாக பெரிதும் நம்பினார்கள்.​—2 இராஜாக்கள் 16:7; 18:21.

இருளில் பிரகாசிக்கிற ஒளி

4யூதாவின் கலகத்தனமான போக்கால் எருசலேம் அழியும், யூதாவின் ஜனங்களோ பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவார்கள். ஆம், உண்மையிலேயே இருள் அவர்களை கவ்விக்கொள்ளும். அழிவுக்குரிய இந்தக் காலத்தைப் பற்றி முன்னறிவிக்கும் வேலையை யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவிடம் ஒப்படைத்தார். அதோடு நற்செய்தியை அறிவிக்கவும் அவர் கட்டளையிட்டார். 70 வருட சிறையிருப்பிற்குப் பிறகு யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுதலை பெற்று வருவார்கள்! மகிழ்ச்சி பொங்கும் அந்த மீதியானோர் சீயோனுக்குத் திரும்பிவந்து மெய் வணக்கத்தை திரும்பவும் நிலைநாட்டும் சிலாக்கியத்தைப் பெறுவர். இந்த மகிழ்ச்சியான செய்தியால் யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் இருளில் ஒளியை பிரகாசிக்கச் செய்தார்.

5ஏசாயா தம்முடைய தீர்க்கதரிசனங்களை பதிவுசெய்து ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கடந்த பிறகே யூதா அழிக்கப்பட்டது. அப்படியானால், ஏன் வெகுகாலத்திற்கு முன்பே யெகோவா தம்முடைய நோக்கங்களை வெளிப்படுத்தினார்? ஏசாயாவின் செய்தியை காதில் வாங்கியவர்கள் இத்தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு முன்பே மரண நித்திரையில் ஆழ்ந்திருப்பார்கள் அல்லவா? உண்மைதான். இருந்தாலும், நடக்கப் போகும் சம்பவங்களை ஏசாயா மூலம் யெகோவா வெளிப்படுத்தியதால், பொ.ச.மு. 607-⁠ல் எருசலேம் அழிக்கப்படும் சமயத்தில் வாழ்பவர்கள் கையில் ஏசாயாவின் தீர்க்கதரிசன செய்திகள் அடங்கிய பதிவு இருக்கும். யெகோவா “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கி[றவர்]” என்பதற்கு இது மறுக்க முடியாத சான்றளிக்கும்.​—ஏசாயா 46:10; 55:10, 11.

6நியாயமாகவே, யெகோவாவால் மட்டும்தான் இப்படி சொல்ல முடியும். அரசியல் அல்லது சமுதாய நிலவரங்களைப் பற்றி தன்னுடைய அறிவுக்கு எட்டியதை வைத்து சீக்கிரத்தில் சம்பவிப்பதை மனிதன் முன்னறிவிக்கலாம். ஆனால், பல்லாண்டுகளுக்கு அப்பால் நடப்பதை யெகோவாவால் மட்டுமே எந்த நிமிஷத்திலும் முழு நிச்சயத்துடன் முன்னறிய முடியும். பின்னால் நடக்கப்போகும் சம்பவங்களை நெடுங்காலத்திற்கு முன்பே அறிவிப்பதற்கு தம்முடைய ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கவும் அவரால் முடியும். ஆகவேதான் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”​—ஆமோஸ் 3:⁠7.

எத்தனை “ஏசாயாக்கள்”?

7இப்புத்தகத்தின் எழுத்தாளர் ஏசாயா என்பதைக் குறித்து அநேக வல்லுநர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஒரு காரணம் அதிலுள்ள தீர்க்கதரிசனங்கள் சம்பந்தப்பட்டதே. இப்புத்தகத்தின் பிற்பகுதி பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் பாபிலோனிய சிறையிருப்பின்போது அல்லது அதற்குப்பின் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இந்த விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறுகிறார்கள். யூதாவின் பாழ்க்கடிப்பு பற்றிய தீர்க்கதரிசனங்கள் அவை நிறைவேறிய பின்பே எழுதப்பட்டதாக சொல்கின்றனர். ஆகவே அவை உண்மையிலேயே தீர்க்கதரிசனங்கள் அல்ல என்பதே அவர்களுடைய விவாதம். 40-⁠ம் அதிகாரம் முதல் ஏசாயா புத்தகம், பாபிலோன் உலக வல்லரசாக இருந்தது போலவும் அங்கே இஸ்ரவேலர் அடிமைகளாக இருந்தது போலவும் சொல்கிறது என்றும் இந்த விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே ஏசாயா புத்தகத்தின் பிற்பகுதியை எழுதியவர் யாராக இருந்தாலும்சரி, அது பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த விவாதத்திற்கு பலமான ஆதாரம் உண்டா? இல்லவே இல்லை!

8ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளரைப் பற்றி பொ.ச. 12-⁠ம் நூற்றாண்டு வரை எந்தவித சந்தேகமும் எழவில்லை. இந்த சந்தேகத்தை எழுப்பியவர் யூத உரையாசிரியர் ஆப்ரகாம் இபெனஸ்ரே. “இரண்டாம் பாகம், அதாவது 40-⁠ம் அதிகாரத்திற்குப்பின் உள்ள அதிகாரங்கள், பாபிலோனில் சிறையிருந்த சமயத்திலும் சீயோனுக்குத் திரும்பி வந்த ஆரம்ப காலத்திலும் வாழ்ந்த தீர்க்கதரிசி ஒருவரின் கைவண்ணமே என ஏசாயாவைப் பற்றிய விளக்கவுரையில் [ஆப்ரகாம் இபெனஸ்ரே] குறிப்பிடுகிறார்” என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா கூறுகிறது. ஏசாயாவைப் பற்றிய விளக்கவுரையை 1775-லும் இரண்டாம் பதிப்பை 1789-லும் வெளியிட்ட ஜெர்மானிய இறையியல் வல்லுநர் யோஹான் கிறிஸ்டோஃப் டூடர்லின் உட்பட, 18-⁠ம் 19-⁠ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த எண்ணற்ற வல்லுநர்களும் இபெனஸ்ரேயின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள். த நியூ சென்சுரி பைபிள் கமென்ட்ரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஏசாயா புத்தகத்தில் 40 முதல் 66 வரையான அதிகாரங்களில் அடங்கியுள்ளவை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் அல்ல, ஆனால் அதற்குப்பின் வாழ்ந்தவரால் எழுதப்பட்டவை . . . என்ற டூடர்லினின் கருத்தை தீவிர பழமைவாத வல்லுநர்களைத் தவிர மற்ற எல்லாருமே இப்போது ஏற்றுக்கொள்கிறார்கள்.”

9ஏசாயா புத்தகத்தை யார் எழுதினார் என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் அத்துடன் நின்றுவிடவில்லை. இரண்டாம் ஏசாயாவை பற்றிய கோட்பாடு, மூன்றாவது எழுத்தாளர் ஒருவர் இருக்கலாம் என்ற புதிய கருத்தை தோற்றுவித்தது. a அதன் பிறகு ஏசாயா புத்தகம் மேலுமாக கூறுபோடப்பட்டது; அதன்படி 15, 16-⁠ம் அதிகாரங்களை அறியப்படாத தீர்க்கதரிசி எழுதினார் என ஒரு வல்லுநர் குறிப்பிடுகிறார். அதேசமயத்தில் 23 முதல் 27 வரையுள்ள அதிகாரங்களின் எழுத்தாளரைக் குறித்து மற்றொருவர் கேள்வி எழுப்புகிறார். 34, 35 அதிகாரங்களை ஏசாயா எழுதியிருக்கவே முடியாது என இன்னும் ஒருவர் கூறுகிறார். ஏன்? ஏனென்றால் இதிலுள்ள விஷயங்கள் 40 முதல் 66 வரையுள்ள அதிகாரங்களோடு ஒத்திருக்கின்றன; இந்த அதிகாரங்கள் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏசாயாவால் அல்ல வேறொருவரால் எழுதப்பட்டது என ஏற்கெனவே சொல்லப்பட்டது! பைபிள் உரையாசிரியர் சார்லஸ் சி. டோரி இந்த விவாதத்தின் முடிவை சுருக்கமாக தொகுத்துரைக்கிறார். “ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கிய ‘சிறையிருப்பு கால தீர்க்கதரிசி’ இப்போது அற்பமானவராக ஆகிவிட்டார்; அவரது புத்தகம் கூறுபோட்டு பிரிக்கப்பட்டதால் அதற்கடியில் ஆளே தெரியாமல் புதைந்து விட்டார்” என அவர் கூறுகிறார். இருந்தாலும், ஏசாயா புத்தகத்தை இப்படி கண்டபடி கூறுபோடுவதை எல்லா வல்லுநர்களும் ஒத்துக்கொள்வதில்லை.

ஒரே எழுத்தாளர் என்பதற்கு அத்தாட்சி

10ஏசாயா புத்தகம் ஒரே நபரின் கைவண்ணம் என்பதை நம்புவதற்கு பலமான காரணம் உள்ளது. ஒரேவிதமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது அதற்கு ஓர் அத்தாட்சி. உதாரணமாக, “இஸ்ரவேலின் பரிசுத்தர்” என்ற சொற்றொடர் ஏசாயா 1 முதல் 39 அதிகாரங்களில் 12 தடவையும் 40 முதல் 66 அதிகாரங்களில் 13 தடவையும் வருகிறது. இருந்தாலும், யெகோவாவை பற்றிய இந்த விவரிப்பு மற்ற எபிரெய வேத புத்தகங்களில் 6 தடவை மட்டுமே வருகிறது. மற்றபடி அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சொற்றொடர் இப்புத்தகத்தில் மட்டுமே அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருப்பது, அதை ஒருவரே எழுதினார் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.

11ஏசாயா 1 முதல் 39 அதிகாரங்களுக்கும் 40 முதல் 66 அதிகாரங்களுக்கும் இடையே வேறுசில ஒப்புமைகளும் இருக்கின்றன. பிள்ளை பெறுகிறவளின் வேதனை, “வழி” அல்லது “பெரும்பாதை” போன்ற குறிப்பிடத்தக்க உருவகங்களும் இந்த இரண்டு பகுதிகளிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. b “சீயோன்” என்ற பதமும் 1 முதல் 39 அதிகாரங்களில் 29 தடவையும் 40 முதல் 66 அதிகாரங்களில் 18 தடவையும் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால், சீயோன் என்ற வார்த்தை பைபிளின் மற்ற புத்தகங்களைவிட ஏசாயா புத்தகத்திலேயே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அத்தாட்சிகளே “இப்புத்தகத்தை தனித்தன்மை வாய்ந்ததாக முத்திரை குத்துகின்றன” என தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. இதை இரண்டோ மூன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ எழுதியிருந்தால் அப்படி “சொல்வது கடினம்.”

12ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளர் ஒருவரே என்பதற்கு மிகப் பலமான அத்தாட்சி ஏவப்பட்டு எழுதப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படுகிறது. இப்புத்தகத்தை ஏசாயா மட்டுமே எழுதினார் என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என இது தெளிவாக காட்டுகிறது. உதாரணமாக, எத்தியோப்பிய மந்திரி ஏசாயா 53-⁠ம் அதிகாரத்தில் காணப்படும் விவரத்தை வாசித்துக்கொண்டிருந்ததாக லூக்கா கூறுகிறார். இப்பகுதியைத்தான் இரண்டாம் ஏசாயா எழுதினார் என நவீன நாளைய விமர்சகர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும், அந்த எத்தியோப்பியன், “ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்த”தாக லூக்கா கூறுகிறார்.​—அப்போஸ்தலர் 8:26-28.

13அடுத்ததாக, மத்தேயுவின் சுவிசேஷத்தை எடுத்துக்கொள்ளலாம். ஏசாயா 40:3-⁠ல் காணப்படும் தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு முழுக்காட்டுபவனாகிய யோவானின் ஊழியத்தில் நிறைவேற்றமடைந்தன என்பதை அவர் விளக்குகிறார். இது யாருடைய தீர்க்கதரிசனம் என மத்தேயு சொல்கிறார்? அறியப்படாத ஓர் இரண்டாம் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் என்றா? இல்லை, அவர் அதன் எழுத்தாளரை “ஏசாயா தீர்க்கதரிசி” என்றே அடையாளம் காட்டுகிறார். c (மத்தேயு 3:1-3) மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு ஒரு சுருளிலிருந்து, ஏசாயா 61:1, 2-⁠ல் இன்று நாம் காணும் வார்த்தைகளை வாசித்தார். இதைக் குறித்து பேசுகையில், “ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது” என லூக்கா புத்தகம் குறிப்பிடுகிறது. (லூக்கா 4:17) பவுல் ரோமர்களுக்கு எழுதுகையில், ஏசாயா புத்தகத்தின் முற்பகுதியையும் பிற்பகுதியையும் குறிப்பிடுகிறார். ஆனால் ஏசாயாவுக்குப் பதிலாக வேறு ஒருவர் எழுதியிருக்கலாம் என ஜாடையாகக்கூட அவர் குறிப்பிடவில்லை. (ரோமர் 10:16, 20; 15:12) ஆகவே, இருவர், மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் கைவண்ணமே இந்த ஏசாயா புத்தகம் என முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நம்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

14பூர்வ ஆவணங்களாகிய சவக்கடல் சுருள்களின் அத்தாட்சியையும் கவனிக்கலாம். அவற்றில் பல இயேசுவுடைய காலத்திற்கு முற்பட்டவை. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏசாயா புத்தகத்தின் கையெழுத்துப்பிரதி ஒன்று ஏசாயாவின் சுருள் என அறியப்பட்டது. 40-⁠ம் அதிகாரத்திலிருந்து இரண்டாம் ஏசாயாதான் எழுதினார் என்ற விமர்சகர்களின் கூற்றை இது தவறென நிரூபிக்கிறது. எப்படி? 40-⁠ம் அதிகாரம் என இப்போது அறியப்படுகிற இந்த அதிகாரத்தின் முதல் வரி, பூர்வ ஆவணத்தில் ஒரு பத்தியின் முடிவில் ஆரம்பித்து அடுத்த பத்தியில் முடிவடைகிறது. இந்த இடத்தில் புத்தகம் பிரிக்கப்பட்டதாகவோ எழுத்தாளர் மாறியதாகவோ நகல் எடுத்தவர் அறியவில்லை என தெளிவாகிறது.

15கடைசியாக, முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸின் அத்தாட்சியை கவனிக்கலாம். கோரேசுவைப் பற்றி சொல்லப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் பொ.ச.மு. எட்டாம் நூற்றண்டில் எழுதப்பட்டவை என்று அவர் குறிப்பிடுகிறார். அதோடு கோரேசு இந்தத் தீர்க்கதரிசனங்களை நன்கு அறிந்திருந்தார் என்றும் அவர் கூறுகிறார். “இருநூற்று பத்து வருடங்களுக்கு முன்பு ஏசாயா எழுதி வைத்த தீர்க்கதரிசன புத்தகத்தை கோரேசு வாசித்து இவற்றை அறிந்து கொண்டார்” என ஜொஸிஃபஸ் எழுதுகிறார். கோரேசு இந்தத் தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்ததால்தான் யூதர்களை தங்கள் தாயகத்திற்கு மனப்பூர்வமாக அனுப்பி வைத்திருப்பார் என்பது அவரது கருத்து. ஏனென்றால், “எழுதப்பட்டிருந்தபடியே செய்ய வேண்டும் என்ற பலமான விருப்பமும் ஆவலும் [கோரேசுக்கு] இருந்தது” என்று ஜொஸிஃபஸ் எழுதுகிறார்.​—⁠ஜூயிஷ் ஆன்டிகுவிட்டீஸ், புத்தகம் XI, அதிகாரம் 1, பாரா 2.

16ஏசாயா 40 முதலான அதிகாரங்கள், பாபிலோனே அப்போது வல்லரசாக இருந்ததாகவும் இஸ்ரவேலர் ஏற்கெனவே சிறையிருப்பில் இருந்ததாகவும் விவரிக்கின்றன என விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவதை முதலில் பார்த்தோம். அப்படியானால், அந்த எழுத்தாளர் பொ.ச.மு. 6-⁠ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றுதானே அர்த்தம்? அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை என்னவென்றால் ஏசாயா 40-⁠ம் அதிகாரத்திற்கு முன்னால் உள்ள அதிகாரங்களிலும்கூட பாபிலோன் அப்போதைய உலக வல்லரசாக சில சமயம் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏசாயா 13:19-⁠ல், ‘ராஜ்யங்களுக்குள் அலங்காரம்,’ அல்லது டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் குறிப்பிடுகிறபடி, “ராஜ்யங்களிலேயே மிக அழகானது” என பாபிலோன் அழைக்கப்பட்டுள்ளது. இவை தீர்க்கதரிசன வார்த்தைகள் என்பதில் சந்தேகமில்லை; ஏனென்றால் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே பாபிலோன் உலக வல்லரசாக தலைதூக்கியது. 13-⁠ம் அதிகாரத்தை எழுதியவர் வேறொருவர் என வெறுமனே ஒதுக்கிவிட்டு இப்பிரச்சினையை “சரிக்கட்டிவிடுகிறார்” ஒரு விமர்சகர். நடக்கப்போகும் சம்பவங்கள் ஏற்கெனவே நடந்து முடிந்தவை போல் பைபிள் தீர்க்கதரிசனத்தில் பேசப்படுவது சகஜம். இந்த எழுத்து நடை, தீர்க்கதரிசனம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை திறம்பட வலியுறுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 21:5, 6) உண்மையான தீர்க்கதரிசனத்திற்கு உரிமையாளரான கடவுளால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்: “புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.”​—ஏசாயா 42:⁠9.

நம்பகமான தீர்க்கதரிசன புத்தகம்

17அப்படியானால் அத்தாட்சி என்ன காட்டுகிறது? ஏசாயா புத்தகம் ஏவப்பட்ட ஒரே எழுத்தாளரின் கைவண்ணமே என்பதை காட்டுகிறது. இந்த முழு புத்தகமும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் படைப்பு என்றல்ல ஒரே நபரின் படைப்பு என்றே காலம் காலமாக அறியப்பட்டு வருகிறது. 40-⁠ம் அதிகாரத்திற்கு பிற்பாடு உள்ள அதிகாரங்களில் எழுத்து நடை கொஞ்சம் மாறுபடுகிறது என சிலர் சொல்வது உண்மையே. என்றாலும் 46 வருடங்களுக்கும் மேல் கடவுளுடைய தீர்க்கதரிசியாக ஏசாயா சேவித்து வந்தார் என்பது நினைவிருக்கட்டும். அக்காலப்பகுதியில் அவருடைய செய்தியிலும் அதை அவர் அறிவிக்கும் விதத்திலும் மாறுதல் ஏற்படுவது சாத்தியமே. உண்மையில், ஏசாயாவுக்கு கடவுள் கொடுத்த வேலை கடுமையான நியாயத்தீர்ப்பின் செய்திகளை அறிவிப்பது மட்டுமல்ல. “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்” என்ற யெகோவாவின் வார்த்தைகளையும் அறிவிக்க வேண்டியிருந்தது. (ஏசாயா 40:1) 70 வருட சிறையிருப்பிற்குப் பின் கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களாகிய யூதர்கள் மறுபடியும் தங்கள் தாயகத்திற்கு வர இருந்ததால் அவருடைய வாக்குறுதியால் உண்மையில் ஆறுதலடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

18இப்புத்தகத்தில் கலந்தாராயப்படும் ஏசாயா புத்தகத்திலுள்ள அதிகாரங்கள் பலவற்றின் கருப்பொருளே பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்படுவதுதான். d இதிலுள்ள எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள் நவீன நாளில் நிறைவேறுவதையும் காண்போம். அதோடு, கடவுளுடைய ஒரேபேறான குமாரனுடைய வாழ்விலும் சாவிலும் நிறைவேறிய வியத்தகு தீர்க்கதரிசனங்களையும் ஏசாயா புத்தகத்தில் காண்கிறோம். ஏசாயா புத்தகத்தில் அடங்கியுள்ள முக்கியமான தீர்க்கதரிசனங்களை படிப்பது உலகமெங்குமுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்பது உறுதி. இந்தத் தீர்க்கதரிசனங்கள் உண்மையில் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கே.

[அடிக்குறிப்புகள்]

a 56 முதல் 66 அதிகாரங்களை எழுதியதாக கருதப்படும் மற்றொரு எழுத்தாளரை மூன்றாம் ஏசாயா என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

b பிள்ளை பெறுகிறவளின் வேதனை: ஏசாயா 13:8; 21:3; 26:17, 18; 42:14; 45:10; 54:1; 66:7. “வழி” அல்லது “பெரும்பாதை”: ஏசாயா 11:16; 19:23; 35:8; 40:3; 43:19; 49:11; 57:14; 62:10.

c மாற்கு, லூக்கா, யோவானில் உள்ள இதற்கு இணையான சம்பவங்களில் இதே சொற்றொடர்தான் காணப்படுகிறது.​—⁠மாற்கு 1:3, பொது மொழிபெயர்ப்பு; லூக்கா 3:5; யோவான் 1:23.

d ஏசாயா புத்தகத்தின் முதல் 40 அதிகாரங்கள் த உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I என்ற புத்தகத்தில் கலந்தாராயப்பட்டுள்ளன.

[கேள்விகள்]

1, 2. அநேகரை கவலைக் கடலில் ஆழ்த்தும் தற்கால சூழ்நிலைகள் யாவை?

3. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் யூதாவில் நிலவிய சூழ்நிலை என்ன?

4. எந்த இரண்டு செய்திகளை அறிவிக்கும் பொறுப்பு ஏசாயாவிடம் ஒப்படைக்கப்பட்டது?

5. யெகோவா தம்முடைய நோக்கங்களை ஏன் முன்கூட்டியே வெளிப்படுத்தினார்?

6. எந்தெந்த விதங்களில் மனித முன்னறிவிப்பாளர்கள் எவரையும்விட யெகோவா மேம்பட்டவர்?

7. இப்புத்தகத்தின் எழுத்தாளர் ஏசாயா என்பதைக் குறித்து எவ்வாறு அநேக வல்லுநர்கள் கேள்வி எழுப்பினர், ஏன்?

8. ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளரைப் பற்றிய சந்தேகம் எப்பொழுது எழும்பியது, எப்படி பரவியது?

9. (அ) ஏசாயா புத்தகம் எவ்வாறு கூறுபோடப்பட்டிருக்கிறது? (ஆ) ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளரைப் பற்றிய கருத்து வேறுபாடுகளை ஒரு பைபிள் உரையாசிரியர் எவ்வாறு தொகுத்துரைக்கிறார்?

10. ஏசாயா புத்தகத்தில் ஒரேவிதமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது அதன் எழுத்தாளர் ஒருவரே என அத்தாட்சி அளிப்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.

11. ஏசாயா புத்தகத்தின் 1 முதல் 39 அதிகாரங்களுக்கும் 40 முதல் 66 அதிகாரங்களுக்கும் இடையிலான ஒப்புமைகள் யாவை?

12, 13. ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளர் ஒருவரே என்பதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் எவ்வாறு காட்டுகிறது?

14. ஏசாயா புத்தகத்தின் எழுத்தாளரைக் குறித்து சவக்கடல் சுருள்கள் என்ன காட்டுகின்றன?

15. கோரேசுவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை குறித்து முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ் என்ன கூறுகிறார்?

16. ஏசாயா புத்தகத்தின் பிற்பகுதி பாபிலோனை அப்போதைய வல்லரசாக விவரிப்பதாக விமர்சகர்கள் கூறுவதைக் குறித்து என்ன சொல்லலாம்?

17. ஏசாயா 40-⁠ம் அதிகாரத்திலிருந்து எழுத்து நடை மாறியிருப்பதை எப்படி விளக்குவீர்கள்?

18. இப்பிரசுரத்தில் கலந்தாராயப்படும் ஏசாயா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?

[பக்கம் 9-ன் பெட்டி]

மொழி ஆராய்ச்சியிலிருந்து அத்தாட்சி

மொழி ஆய்வுகள்​—⁠கடந்த பல ஆண்டுகளாக மொழியில் ஏற்பட்ட நுட்ப மாற்றங்களை கண்டுபிடிக்கும் ஆய்வுகள்​—⁠ஏசாயா புத்தகத்தை ஒரேவொரு எழுத்தாளரே எழுதினார் என்பதற்கு கூடுதலான சான்றளிக்கின்றன. ஏசாயா புத்தகத்தின் ஒரு பகுதி பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டிலும் மறுபகுதி 200 வருடங்களுக்கு பிற்பாடும் எழுதப்பட்டிருந்தால் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய மொழி நடையில் வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் தியாலஜிக்கல் ஜர்னல் என்ற பத்திரிகை இந்த ஆய்வை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “மொழி ஆராய்ச்சியிலிருந்து கிடைத்த அத்தாட்சி, ஏசாயா 40 முதல் 66 அதிகாரங்கள் நாடுகடத்தப்பட்டதற்கு முன் உள்ள காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதை பெருமளவில் ஆதரிக்கிறது.” அந்த ஆய்வை நடத்தியவர் இவ்வாறு முடிக்கிறார்: “குறைகண்டுபிடிக்கும் இந்த மேதைகளின் கருத்துக்கு எதிரான அத்தாட்சியை மொழி ஆராய்ச்சி அளித்தாலும், ஏசாயா புத்தகம் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் அல்லது அதற்கு பிற்பாடு எழுதப்பட்டது என்றே இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.”

[பக்கம் 11-ன் படம்]

ஏசாயா புத்தகத்தின் சவக்கடல் சுருளின் ஒரு பகுதி. 39-⁠ம் அதிகாரத்தின் கடைசி வரி அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது

[பக்கம் 1213-ன் படங்கள்]

யூதர்களின் விடுதலையை பற்றி சுமார் 200 வருடங்களுக்கு முன்பே ஏசாயா முன்னறிவிக்கிறார்