Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மலடி மகிழ்கிறாள்

மலடி மகிழ்கிறாள்

அதிகாரம் பதினைந்து

மலடி மகிழ்கிறாள்

ஏசாயா 54:1-17

சாராள் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் பாவம், மலடியாக இருந்தாள். அந்தக் கவலையே அவளை மிகவும் வாட்டியது. அவளுடைய நாட்களில், மலட்டுத்தன்மை அவமானமாக கருதப்பட்டது. ஆனால், இதனால் மட்டுமே சாராள் வேதனைப்படவில்லை. தன் கணவனுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுவதைக் காணவே மிகவும் ஆவலாய் இருந்தாள். பூமியின் குடிகளெல்லாம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு ஒரு வித்துவை ஆபிரகாம் பிறப்பிக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 12:1-3) என்றாலும், கடவுள் அந்த வாக்குறுதியைக் கொடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, பிள்ளை பிறக்கவில்லை. சாராள் வயதானவளாகியும் பிள்ளை இல்லாதிருந்தாள். தன் நம்பிக்கை வீண்தானோ என்ற எண்ணம் சில சமயங்களில் அவளுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் ஒருநாள் அவளது துக்கம் சந்தோஷமாக மாறியது!

2சாராளின் மனவேதனை, ஏசாயா 54-⁠ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. அதில் மலடியான எருசலேம், அநேகம் பிள்ளைகளுக்கு தாயாகும் ஆனந்தக் களிப்பை பெறுவதோடு ஒப்பிடப்படுகிறது. யெகோவா தம் ஜனங்களை மனைவியென அழைப்பதன் மூலம் அவர்களிடமாக தமக்கிருக்கும் கனிவான உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார். மேலும், “பரிசுத்த ரகசியம்” என பைபிள் அழைக்கும் மிக முக்கியமான ஒரு அம்சத்தைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ளவும் ஏசாயா புத்தகத்தின் இந்த அதிகாரம் உதவுகிறது. (ரோமர் 16:25, 26, NW) இந்த தீர்க்கதரிசனம் முன்னறிவித்த ‘ஸ்திரீயின்’ அடையாளமும் அவளுடைய அனுபவங்களும் இன்று மெய் வணக்கத்தைப் பற்றிய சில முக்கிய விவரங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

“ஸ்திரீ” அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறாள்

3சந்தோஷமான ஒரு குறிப்போடு அதிகாரம் 54 துவங்குகிறது: “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (ஏசாயா 54:1) இந்த வார்த்தைகளை சொல்லும்போது ஏசாயா எவ்வளவு கிளர்ச்சி அடைவார்! பாபிலோனில் கைதிகளாக இருக்கும் யூதர்களுக்கு இந்த வார்த்தைகளின் நிறைவேற்றம் எவ்வளவு ஆறுதலைத் தரும்! அந்த சமயத்தில், எருசலேம் இன்னும் பாழாய்க் கிடக்கும். மனிதனுடைய நோக்குநிலையிலிருந்து பார்த்தால், எருசலேம் மறுபடியும் குடியேற்றப்படும் என்ற நம்பிக்கையே இல்லாததுபோல் தோன்றும். வயதான காலத்திலே பொதுவாக மலடிக்கு பிள்ளை பெற்றெடுக்கும் நம்பிக்கை இல்லாதது போலத்தான் எருசலேமின் நிலையும் இருக்கும். ஆனால் இந்த ‘ஸ்திரீக்கு’ எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆசீர்வாதம் காத்திருக்கிறது​—⁠அவள் பிள்ளைப்பேறு பெறுவாள். எருசலேம் மிகுந்த களிப்படையும். அவள் மீண்டும் ‘பிள்ளைகளால்’ அல்லது குடிமக்களால் நிறைந்திருப்பாள்.

4ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிறைவேற்றங்கள் இருக்கும்; இதை ஏசாயா ஒருவேளை அறியாது இருக்கலாம். ஏசாயா 54-⁠ம் அதிகாரத்திலிருந்து அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள் காட்டி, பூமிக்குரிய எருசலேம் நகரத்தைவிட மிக முக்கியமான ஒன்றை “ஸ்திரீ” குறிப்பதாக சுட்டிக்காட்டுகிறார். அவர் எழுதுகிறார்: “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.” (கலாத்தியர் 4:26) இந்த ‘மேலான எருசலேம்’ எது? நிச்சயமாகவே, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இருந்த எருசலேம் நகரமல்ல. அது பூமியிலிருந்த நகரம், பரலோகத்திற்குரிய “மேலான” நகரமல்ல. “மேலான எருசலேமோ” கடவுளுடைய பரலோக “ஸ்திரீ.” அதாவது, வல்லமைமிக்க ஆவி சிருஷ்டிகள் அடங்கிய அவருடைய அமைப்பு.

5பூமிக்குரியது, பரலோகத்திற்குரியது என அடையாள அர்த்தமுள்ள இரண்டு ஸ்திரீகளை யெகோவா எப்படி பெற்றிருக்க முடியும்? இது முரண்பாடாக இல்லையா? இல்லவே இல்லை. தீர்க்கதரிசன படமாக விளங்கும் ஆபிரகாமின் குடும்பத்தில் இதற்கான பதில் அடங்கியுள்ளது என அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறார். (கலாத்தியர் 4:22-31; பக்கம் 218-⁠ல் உள்ள “ஆபிரகாமின் குடும்பம்​—⁠ஒரு தீர்க்கதரிசன படம்” என்ற பெட்டியைக் காண்க.) “சுயாதீனமுள்ள” ஸ்திரீயாகிய ஆபிரகாமின் மனைவி சாராள், ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் மனைவி போன்ற அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கிறாள். ஆபிரகாமின் இரண்டாம் மனைவி அல்லது மறுமனையாட்டியாகிய அடிமைப்பெண் ஆகார் பூமிக்குரிய எருசலேமைக் குறிக்கிறாள்.

6இந்த பின்னணியை கருத்தில் கொள்கையில், ஏசாயா 54:1-⁠லுள்ள ஆழமான கருத்தை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். பல ஆண்டுகளாக மலடியாக இருந்த சாராள், 90-வது வயதில் ஈசாக்கை பெற்றெடுத்தாள். அதுபோலவே, யெகோவாவின் பரலோக அமைப்பும் நீண்ட காலமாக மலடாக இருந்தது. இந்த “ஸ்திரீ” ஒரு ‘வித்துவை’ பிறப்பிப்பாள் என யெகோவா ஏதேன் தோட்டத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். (ஆதியாகமம் 3:15) 2,000-⁠த்திற்கும் அதிகமான வருடங்களுக்கு பின், வித்துவைப் பற்றிய வாக்குறுதி சம்பந்தமாக யெகோவா ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால், கடவுளுடைய பரலோக ‘ஸ்திரீயோ’ வித்துவை பிறப்பிப்பதற்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. என்றாலும், ஒரு காலத்தில் ‘மலடியாக’ இருந்தவள் பூமிக்குரிய இஸ்ரவேலைவிட அதிகம் பிள்ளைகளை உடையவளாய் ஆகும் காலம் வந்தது. முன்னறிவிக்கப்பட்ட வித்து வருவதைப் பார்க்க ஏன் தூதர்களும்கூட ஆவலாய் இருந்தனர் என்பதை மலடியின் உதாரணம் நமக்கு உணர்த்துகிறது. (1 பேதுரு 1:12) வித்து வந்தது எப்போது?

7இயேசு பூமியில் குழந்தையாக பிறந்தது பரலோகத்திலிருந்த தூதர்களுக்கு நிச்சயமாகவே களிகூருதலின் நேரம். (லூக்கா 2:9-14) ஆனால், ஏசாயா 54:1-⁠ல் முன்னறிவிக்கப்பட்ட சம்பவம் அதுவல்ல. பொ.ச. 29-⁠ல், இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டபோதுதான், அவர் ‘மேலான எருசலேமின்’ ஆவிக்குரிய குமாரன் ஆனார். மேலும், “நேச குமாரன்” என கடவுளே பகிரங்கமாக சாட்சி பகர்ந்தார். (மாற்கு 1:10, 11; எபிரெயர் 1:5; 5:4, 5) ஏசாயா 54:1-⁠ன் நிறைவேற்றமாக, கடவுளுடைய பரலோக “ஸ்திரீ” அப்போதுதான் மகிழ்ந்து களிகூர்ந்தாள். முடிவாக, வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகிய மேசியாவை அவள் பெற்றெடுத்தாள்! பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த மலட்டுத்தன்மை நீங்கியது. என்றாலும், களிகூருவதற்கு இன்னும் நிறைய காரணங்கள் இருந்தன.

மலடிக்கு ஏராளமான பிள்ளைகள்

8இயேசு மரித்து உயிர்த்தெழுப்பப்பட்ட பின் கடவுளுடைய பரலோக “ஸ்திரீ” இந்த பிரியமான குமாரனை ‘மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவராக’ மிகவும் ஆனந்தத்தோடே வரவேற்றாள். (கொலோசெயர் 1:18) அதன்பிறகு, இன்னும் அநேக ஆவிக்குரிய குமாரர்களை அவள் பெற்றெடுக்க ஆரம்பித்தாள். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தின்போது இயேசுவின் சீஷர்கள் சுமார் 120 பேர் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டனர். இவ்வாறு, கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாளிகளாக அவர்கள் தத்தெடுக்கப்பட்டனர். அதே நாளில் இன்னும் 3,000 பேர் சேர்க்கப்பட்டனர். (யோவான் 1:12; அப்போஸ்தலர் 1:13-15; 2:1-4, 41; ரோமர் 8:14-16) இந்தக் குமாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. கிறிஸ்தவமண்டல விசுவாசதுரோகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்த அதிகரிப்பு மிகவும் குறைந்தது. ஆனாலும், அந்நிலை இருபதாம் நூற்றாண்டில் மாறவிருந்தது.

9குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் காலத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக சொல்கிறார்: “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் [“தேசங்களை,” NW] சுதந்தரித்துக் கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.”​—ஏசாயா 54:2-4.

10சாராளைப் போலவே கூடாரங்களில் வாழும் மனைவியையும் தாயையும் போல் எருசலேம் இங்கு விவரிக்கப்படுகிறாள். குடும்பம் பெரிதாக பெரிதாக, அந்த தாய் தன் வீட்டை விஸ்தரிக்க வேண்டும். கூடாரத்தின் திரையை பெரிதாக்கி, அதன் கயிறுகளை நீளமாக்கி, அதன் முளைகளை அவற்றின் புதிய இடங்களில் ஊன்ற வேண்டும். இது அவளுக்கு மிகவும் சந்தோஷமளிக்கும் வேலை. இந்த வேலையில் அவ்வளவு மும்முரமாக மூழ்கி விடுவதால், தனக்கு பிள்ளை பிறக்குமா, வம்சம் விருத்தியாகுமா என தவித்துக் கொண்டிருந்த காலங்களையே அவள் எளிதில் மறந்துவிடலாம்.

11பாபிலோனிய சிறையிருப்பிற்கு பின், பூமிக்குரிய எருசலேமும் அப்படிப்பட்ட ஆசீர்வாதமான நிலையை மீண்டும் அடைந்தது. “மேலான எருசலேமோ” இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுகிறது. a குறிப்பாக 1919 முதல், அதன் அபிஷேகம் செய்யப்பட்ட “சந்ததியார்,” தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட ஆவிக்குரிய நிலையில் செழித்தோங்கியிருக்கின்றனர். (ஏசாயா 61:4; 66:8) அவர்கள் ‘தேசங்களை சுதந்தரித்துக் கொண்டனர்.’ அதாவது, தங்களுடைய ஆவிக்குரிய குடும்பத்தில் சேரும் அனைவரையும் அநேக தேசங்களுக்கு சென்று தேடிக் கண்டுபிடித்தனர். அதன் விளைவாக, அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்களை கூட்டிச் சேர்ப்பதில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டது. 1930-களின் மத்தியில், 1,44,000 என்ற அவர்களுடைய எண்ணிக்கை முழுமை பெற்றதாக தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 14:3) அந்த சமயம் வரை பிரசங்க வேலையின் முக்கிய நோக்கமாக இருந்த அபிஷேகம் செய்யப்பட்டோரை கூட்டிச் சேர்ப்பது அப்போது முடிவுக்கு வந்தது. ஆனால், அதிகரிப்பு இவர்களோடு நின்றுவிடவில்லை.

12தம்முடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களாகிய ‘சிறு மந்தையைத்’ தவிர, “வேறே ஆடுகளும்” இருப்பார்கள் எனவும், இவர்கள் உண்மை கிறிஸ்தவர்களின் மந்தைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் எனவும் இயேசுவே முன்னறிவித்தார். (லூக்கா 12:32; யோவான் 10:16) அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்களாகிய ‘மேலான எருசலேமின்’ பாகமாக இவர்கள் இல்லை; என்றாலும் அவர்களது உண்மையுள்ள கூட்டாளிகளாகிய இவர்கள், வெகு காலத்திற்கு முன்பு உரைக்கப்பட்ட முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றனர். (சகரியா 8:23) 1930-களிலிருந்து இன்று வரையாக, ‘திரள் கூட்டமான’ ஜனங்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், கிறிஸ்தவ சபையில் இதுவரை இல்லாத மாபெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 7:9, 10) இன்று, அந்த திரள் கூட்டத்தார் பல லட்சக்கணக்கானவர்களாக அதிகரித்திருக்கின்றனர். ராஜ்ய மன்றங்கள், அசெம்பிளி ஹால்கள், கிளை அலுவலகங்கள் போன்றவை இன்னும் அதிகமாக கட்டப்பட வேண்டிய அவசர தேவையை இந்த அதிகரிப்பு ஏற்படுத்தியுள்ளது. என்றுமில்லாத அளவுக்கு இன்று ஏசாயாவின் வார்த்தைகள் வெகுவாக பொருந்துகின்றன. முன்னறிவிக்கப்பட்ட அந்த அதிகரிப்பின் பாகமாக நாம் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!

தன் சந்ததிக்காக இரங்கும் தாய்

13பெரிய நிறைவேற்றத்தில், யெகோவாவின் பரலோக அமைப்பை அந்த “ஸ்திரீ” குறிப்பதாக நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், ஏசாயா 54:4-ஐ படிக்கையில், ஆவி சிருஷ்டிகள் அடங்கிய அந்த அமைப்பு எப்படி அவமானத்தை அல்லது நிந்தையை அனுபவித்தது என்பது ஒருவேளை நமக்கு வியப்பாக இருக்கலாம். கடவுளுடைய அந்த “ஸ்திரீ” ஒதுக்கப்படுவாள், இகழப்படுவாள், தாக்கப்படுவாள் என தொடர்ந்து வரும் வசனங்கள் குறிப்பிடுகின்றன. கடவுளுடைய கோபத்தை அவள் கிளறிவிடுவாள் எனவும் சொல்லப்படுகிறது. பாவமே செய்யாத பரிபூரண ஆவி சிருஷ்டிகள் அடங்கிய ஓர் அமைப்புக்கு இவை எப்படி பொருந்தும்? குடும்பத்தின் இயல்பு இந்த கேள்விக்கு பதிலை அளிக்கிறது.

14கணவன் மனைவி, தாய் பிள்ளைகள் போன்ற குடும்ப உறவுகளை பயன்படுத்தி, ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை யெகோவா வெளிப்படுத்துகிறார். ஏனென்றால், இப்படிப்பட்ட வார்த்தைகள் மனிதர்களுக்கு சுலபத்தில் புரியக் கூடியவை. குடும்பத்தில் நம்முடைய தனிப்பட்ட அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நல்ல மண வாழ்க்கை அல்லது பெற்றோர்-பிள்ளை உறவு எப்படி இருக்க வேண்டுமென நம் அனைவருக்குமே தெரியும். இந்த உதாரணத்தின் வாயிலாக, கோடானுகோடி தூதர்களோடு தமக்கிருக்கும் பாசமிக்க, நெருக்கமான, நம்பிக்கைக்குரிய உறவை எவ்வளவு தத்ரூபமாக யெகோவா விவரிக்கிறார்! பூமியிலிருக்கும் தமது அபிஷேகம் செய்யப்பட்ட சந்ததியை தம்முடைய பரலோக அமைப்பு அக்கறையோடு பராமரிக்கிறது என்பதை மனதைத் தொடும் விதத்தில் எவ்வளவு அழகாக கற்பிக்கிறார்! பூமியிலுள்ள ஊழியர்கள் அவதிப்படுகையில், ‘மேலான எருசலேமாகிய’ உண்மையுள்ள பரலோக ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். இதைத்தான் இயேசுவும் வலியுறுத்தினார்: “மிகவும் சிறியவராகிய என் [அபிஷேகம் செய்யப்பட்ட] சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”​—மத்தேயு 25:⁠40.

15யெகோவாவின் பரலோக ‘ஸ்திரீக்கு’ சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளில் பெரும்பாலானவை, பூமியிலுள்ள அவளுடைய பிள்ளைகளின் அனுபவங்களை படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வார்த்தைகளை கவனியுங்கள்: “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.”​—ஏசாயா 54:5, 6.

16இங்கு சொல்லப்படும் மனைவி யார்? முதலாம் நிறைவேற்றத்தில், கடவுளுடைய ஜனங்களைக் குறிக்கும் எருசலேம். பாபிலோனில் அடிமைகளாக இருக்கும் அந்த 70 வருடமும் யெகோவா தங்களை கைவிட்டுவிட்டார், தள்ளிவிட்டார் என்றே அவர்களுக்குத் தோன்றும். பெரிய நிறைவேற்றத்திலோ, இந்த வார்த்தைகள் ‘மேலான எருசலேமையும்,’ ஆதியாகமம் 3:15-⁠ன் நிறைவேற்றமாக ஒரு ‘வித்துவை’ இறுதியில் பிறப்பிக்கும் அதன் அனுபவத்தையும் குறிக்கின்றன.

இமைப்பொழுது சிட்சை, நித்திய ஆசீர்வாதங்கள்

17தீர்க்கதரிசனம் தொடருகிறது: “இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக் கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் [“பொங்கியெழும் சீற்றத்தால்,” பொ.மொ.] என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.” (ஏசாயா 54:7, 8) பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனின் சேனைகள் தாக்குகையில், கடவுளுடைய “பொங்கியெழும்” சீற்றம் பூமிக்குரிய எருசலேமை சூழ்கிறது. அதனுடைய 70 வருட சிறையிருப்பு நீண்ட காலமாக தோன்றலாம். இருந்தாலும், சிட்சையை ஏற்று நடப்போருக்கு வரும் நித்திய ஆசீர்வாதங்களை ஒப்பிடுகையில் அப்படிப்பட்ட சோதனைகள் “இமைப்பொழுது”தான் நீடிக்கின்றன. அதுபோலவே, மகா பாபிலோனின் தூண்டுதலால் அரசியல் அமைப்புகள் ‘மேலான எருசலேமாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்களை தாக்க யெகோவா அனுமதித்தபோது, கடவுளுடைய கோபம் ‘பொங்கியெழுந்ததாகவே’ அவர்கள் உணர்ந்தனர். ஆனால், 1919 முதற்கொண்டு துவங்கிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் சகாப்தத்தை ஒப்பிடுகையில், அந்த சிட்சிப்பின் காலம் வெகு குறுகியதாகவே தோன்றியது!

18இந்த வசனங்கள் இன்னொரு முக்கியமான சத்தியத்தை விவரிக்கின்றன​—⁠கடவுளுடைய கோபம் குறுகிய காலத்திற்கே, அவருடைய இரக்கமோ என்றென்றைக்கும் உள்ளது. தவறு செய்பவர்களுக்கு எதிராக அவருடைய கோபம் பற்றியெரிகிறது. ஆனால், அது எப்போதும் கட்டுக்கடங்கியது, எப்போதும் நோக்கமுள்ளது. யெகோவாவின் சிட்சையை நாம் ஏற்றுக் கொண்டால், அவருடைய கோபம் ‘இமைப்பொழுதே’ இருக்கும்; பிறகு தணிந்துவிடும். அதற்கு பதிலாக, ‘உருக்கமான இரக்கத்தை’​—⁠மன்னிப்பையும் அன்புள்ள தயவையும்​—⁠காட்டுவார். இவை ‘நித்தியத்திற்கும்’ நீடிக்கும். எனவே, நாம் ஒரு பாவத்தை செய்துவிட்டோமென்றால், மனந்திரும்பி கடவுளோடு ஒப்புரவாவதற்கு ஒருபோதும் தயங்கக் கூடாது. மோசமான பாவத்தை செய்துவிட்டாலோ, சபை மூப்பர்களை உடனடியாக அணுக வேண்டும். (யாக்கோபு 5:14) அந்த சமயத்தில் சிட்சை தேவைப்படலாம், அதை ஏற்றுக்கொள்வதும் கடினமாக தோன்றலாம். (எபிரெயர் 12:11) ஆனால், யெகோவா தேவன் நம்மை மன்னிப்பதால் கிடைக்கும் நித்திய ஆசீர்வாதங்களை ஒப்பிடுகையில் அந்த சிட்சை சொற்ப காலத்திற்கே!

19உறுதியளிக்கும் வார்த்தைகளை சொல்லி யெகோவா தம் ஜனங்களை இப்போது ஆறுதல்படுத்துகிறார்: “இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 54:9, 10) ஜலப்பிரளயத்திற்கு பின், நோவாவுடனும் எல்லா ஜீவராசிகளுடனும் கடவுள் ஓர் உடன்படிக்கையை செய்தார். அது சில சமயங்களில் வானவில் உடன்படிக்கை எனவும் அறியப்படுகிறது. பூமியின் மேல் இனி ஒருபோதும் ஜலப்பிரளயத்தை கொண்டு வருவதில்லை என யெகோவா வாக்குறுதி கொடுத்தார். (ஆதியாகமம் 9:8-17) ஏசாயாவுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அது எதை அர்த்தப்படுத்துகிறது?

20அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனை, அதாவது பாபிலோனிய சிறையிருப்பில் 70 வருடங்கள் இருக்க வேண்டிய தண்டனை ஒரேவொரு முறைதான் ஏற்படும் என்பதை அறிவது ஆறுதல் அளிக்கிறது. அந்த தண்டனை முடிந்த பிறகு, மறுபடியும் அது நடக்காது. அதன்பிறகு, கடவுளுடைய “சமாதானத்தின் உடன்படிக்கை” நிலைக்கும். ‘சமாதானம்’ என்பதைக் குறிக்கும் எபிரெயச் சொல், போரில்லாத நிலைமையை மட்டுமல்ல, எல்லா விதமான நலனையும் குறிக்கும். கடவுளுடைய பங்கில் இந்த உடன்படிக்கை நித்தியத்திற்குரியது. மலைகளோ பர்வதங்களோ நிலைநிற்காது போனாலும், உண்மையுள்ள ஜனங்களிடம் கடவுளுடைய கிருபை நிலைபெயராது. ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், கடவுளுடைய பூமிக்குரிய தேசத்தார் உடன்படிக்கைக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். மேசியாவை நிராகரிப்பதன் மூலமாக தங்கள் சமாதானத்தை தாங்களே கெடுத்துக்கொள்வார்கள். ‘மேலான எருசலேமின்’ குமாரரோ அப்படியல்ல. அவர்களுடைய சிட்சையின் காலம் நிறைவேறி முடிந்ததும், கடவுளுடைய பாதுகாப்பு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

கடவுளுடைய ஜனங்களின் ஆவிக்குரிய பாதுகாப்பு

21உண்மையுள்ள தம் ஜனங்களுக்கு யெகோவா பாதுகாப்பை முன்னறிவிக்கிறார்: “சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீல ரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் [“எல்லைகளையெல்லாம்,” NW] உச்சிதமான கற்களுமாக்குவேன். உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் [“யெகோவாவினால்,” NW] போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய்; அது உன்னை அணுகுவதில்லை. இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.”​—ஏசாயா 54:11-15.

22ஆவிப்பிரதேசத்திலுள்ள யெகோவாவின் “ஸ்திரீ” நேரடியாக ஒருபோதுமே சிறுமைப்படுத்தப்படவில்லை, பெருங்காற்றினால் அடிக்கப்படவும் இல்லை. ஆனால், அவளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட “சந்ததியார்” பூமியில் கஷ்டப்பட்டபோது, முக்கியமாக 1918-19-⁠ல் ஆவிக்குரிய சிறையிருப்பில் கஷ்டப்பட்டபோது அவளும் கஷ்டப்பட்டாள். அதுபோலவே, பரலோக “ஸ்திரீ” மகிமையில் உயர்த்தப்படுவது, அவளுடைய சந்ததியினருக்கும் அதே நிலைமையைக் குறிக்கிறது. ஆக, ‘மேலான எருசலேமின்’ ஜொலிப்பை பற்றிய விவரிப்பை சற்று கவனியுங்கள். வாசல்களில் இருக்கும் மாணிக்கக் கற்களும், விலையுயர்ந்த ‘கல்லுகளும்,’ அஸ்திபாரங்களும், மதில்களும், “அழகு, செளந்தரியம், புனிதம், சக்தி, உறுதி” ஆகியவற்றை குறிப்பதாக ஒரு புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பான, ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடைய எது உதவும்?

23ஏசாயா 54-⁠ம் அதிகாரம் 13-⁠ம் வசனம் இதற்கான பதிலை தருகிறது​—⁠அவர்கள் எல்லாரும் ‘யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.’ அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய சீஷர்களுக்கு இயேசு இந்த வார்த்தைகளை பொருத்தினார். (யோவான் 6:45) ‘முடிவுகாலத்தில்’ அபிஷேகம் செய்யப்பட்டோர் மெய்யறிவையும் ஆவிக்குரிய நுண்ணறிவையும் மிகுதியாக பெற்று ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதை தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். (தானியேல் 12:3, 4) மனித சரித்திரத்திலேயே மிக பிரமாண்டமான கல்வி புகட்டும் வேலையை செய்வதற்கு இந்த நுண்ணறிவு அவர்களுக்கு உதவியிருக்கிறது. பூமி முழுவதிலும் தெய்வீக போதனையை பரப்புவதற்கும் வழிவகுத்திருக்கிறது. (மத்தேயு 24:14) அதே சமயம், உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு கொள்ளவும் அந்த நுண்ணறிவு அவர்களுக்கு உதவியிருக்கிறது. ‘உச்சிதமான கற்களாலான எல்லைகள்’ பற்றி ஏசாயா 54:12 குறிப்பிடுகிறது. 1919 முதல், இந்த எல்லைகளைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலை யெகோவா அபிஷேகம் செய்யப்பட்டோருக்கு அளித்து வருகிறார். இவை, கடவுள் பக்தியற்ற இந்த உலகத்தின் காரியங்களிலிருந்தும் பொய் மதத்திலிருந்தும் அவர்களை பிரிக்கும் ஆவிக்குரிய எல்லைகள் ஆகும். (எசேக்கியேல் 44:23; யோவான் 17:14; யாக்கோபு 1:27) இவ்வாறு, கடவுளுக்கு மட்டுமே சொந்தமான ஜனங்களாக அவர்கள் தனியே பிரிக்கப்பட்டு உள்ளனர்.​—1 பேதுரு 2:⁠9.

24எனவே, ‘நான் யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கிறேனா?’ என நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட போதனை தானாகவே கிடைத்துவிடாது. அதற்காக நாம் முயற்சி எடுக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படித்து, தியானம் செய்ய வேண்டும்; “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளிக்கும் பைபிள் அடிப்படையிலான புத்தகங்களைப் படித்து அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தயார் செய்து, அவற்றில் கலந்துகொள்ள வேண்டும்; இவை அனைத்தையும் செய்தோமானால், நாமும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்போம். (மத்தேயு 24:45-47, NW) நாம் கற்பவற்றை வாழ்க்கையில் பொருத்த முயல வேண்டும்; ஆவிக்குரிய விதத்தில் எப்போதும் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்; அப்படி செய்தோமானால், தெய்வீக போதனை நம்மை கடவுள் பயமற்ற இந்த உலகத்தாரிலிருந்து தனியே பிரித்துக் காட்டும். (1 பேதுரு 5:8, 9) எல்லாவற்றிற்கும் மேலாக, ‘கடவுளிடமாக நெருங்கி செல்வதற்கு’ இது உதவும்.​—யாக்கோபு 1:22-25; 4:⁠8, NW.

25அபிஷேகம் செய்யப்பட்டோர் அபரிமிதமான சமாதானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் ஏசாயா தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அப்படியானால், அவர்கள் எப்போதுமே தாக்கப்பட மாட்டார்கள் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. தாக்குதல்களை ஆணையிடப் போவதுமில்லை அவை அவர்களை மேற்கொள்ள அனுமதிக்கப் போவதுமில்லை என கடவுள் உறுதி அளிக்கிறார். நாம் வாசிக்கிறோம்: “இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”​—ஏசாயா 54:16, 17.

26தாமே படைப்பாளர் என்பதை யெகோவா இந்த அதிகாரத்தில் இரண்டாவது தடவையாக தம் ஊழியர்களுக்கு நினைவுபடுத்துகிறார். முன்பு, தாமே மகத்தான ‘சிருஷ்டிகர்’ என தம் ‘மனைவியிடம்’ சொன்னார். இப்போதோ, மனிதகுலம் அனைத்திற்கும் தாமே சிருஷ்டிகர் என கூறுகிறார். உலைக்களத்தின் நெருப்பை ஊதி, அழிவுக்கான ஆயுதங்களை உண்டுபண்ணும் கொல்லனைப் பற்றியும், “கெடுத்து நிக்கிரகமாக்குகிற” போர் வீரனைப் பற்றியும் 16-⁠ம் வசனம் விவரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு பீதியுண்டாக்கலாம், ஆனால் தங்கள் சொந்த படைப்பாளரை வெல்ல முடியுமென அவர்களால் எப்படித்தான் நினைக்க முடியும்? அதுபோலவே, இன்றும் யெகோவாவின் ஜனங்களை இந்த உலகின் பெரும் சக்திவாய்ந்த அமைப்புகள் தாக்கினாலும் அவற்றால் இறுதியில் வெற்றி பெற முடியாது. அது எப்படி?

27கடவுளுடைய ஜனங்களுக்கும் ஆவியோடும் உண்மையோடும் ஏறெடுக்கப்படும் அவர்களுடைய வணக்கத்திற்கும் எதிரான கொடூர தாக்குதல்களின் காலம் கடந்துவிட்டது. (யோவான் 4:23, 24) மகா பாபிலோன் ஒரு தாக்குதலை நடத்த யெகோவா அனுமதித்தார். அது சிறிது காலத்திற்கே வெற்றி பெற்றது. ‘மேலான எருசலேமின்’ சந்ததியார் பூமியில் செய்து வந்த பிரசங்க வேலை கிட்டத்தட்ட நின்றுவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், இது சொற்ப காலத்திற்கே. இனி ஒருபோதும் இப்படி நடக்கவே நடக்காது! ஆவிக்குரிய விதத்தில் தன் பிள்ளைகள் எல்லாரும் தோல்வியைத் தழுவவே மாட்டார்கள் என்பதால் அவள் களிகூருகிறாள். (யோவான் 16:33; 1 யோவான் 5:4) அவர்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் எழுந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவும் செய்யலாம். (வெளிப்படுத்துதல் 12:17) ஆனால் இவை அனைத்தும் இதுவரை வெற்றி பெறவில்லை, எதிர்காலத்திலும் வெற்றி பெறாது. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளின் விசுவாசத்தையும் பற்றியெரியும் வைராக்கியத்தையும் அழிக்க வல்ல ஆயுதம் சாத்தானிடம் எதுவுமே இல்லை. இந்த ஆவிக்குரிய சமாதானம், ‘யெகோவாவுடைய ஊழியக்காரரின் சுதந்தரம்.’ எனவே, இதை எவருமே அவர்களிடமிருந்து பறிக்க முடியாது.​—சங்கீதம் 118:6; ரோமர் 8:38, 39.

28கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்த ஊழியர்களின் வேலையையும் அவர்களுடைய தூய வணக்கத்தையும் அழிக்க சாத்தானுடைய உலகம் கொண்டு வரும் எந்த தடையும் வெற்றி பெறாது. ‘மேலான எருசலேமின்’ அபிஷேகம் செய்யப்பட்ட சந்ததியார் இந்த உறுதியால் மிகுந்த ஆறுதல் பெற்றிருக்கின்றனர். அவர்களைப் போலவே திரள் கூட்டத்தாரும் இதனால் தேற்றப்படுகின்றனர். கடவுளுடைய பரலோக அமைப்பைக் குறித்தும் பூமியிலுள்ள அவரது வணக்கத்தாரை அது எப்படி அன்புடன் பராமரிக்கிறது என்பதைக் குறித்தும் நாம் அதிகம் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, நம் விசுவாசம் பலப்படும். நம் விசுவாசம் பலமாக இருந்தால், நமக்கு எதிராக வரும் சாத்தானின் எந்த ஆயுதமும் முறிந்துபோம்!

[அடிக்குறிப்பு]

a வெளிப்படுத்துதல் 12:1-17-⁠ன்படி, மிக முக்கியமான ‘சந்ததியை’ பிறப்பிப்பதன் மூலம் கடவுளுடைய “ஸ்திரீ” பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டாள். அந்த சந்ததி, ஓர் ஆவிக்குரிய குமாரன் அல்ல, பரலோகத்திற்குரிய மேசியானிய ராஜ்யம் ஆகும். அது 1914-⁠ல் பிறந்தது. (வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 177-86-ஐக் காண்க.) பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட குமாரர்களை கடவுள் ஆசீர்வதிப்பதால் அவளுக்கு உண்டாகும் ஆனந்தத்தின்பேரில் ஏசாயா தீர்க்கதரிசனம் கவனம் செலுத்துகிறது.

[கேள்விகள்]

1. சாராள் ஏன் பிள்ளைக்காக ஏங்கினாள், இந்த விஷயத்தில் அவளுடைய அனுபவம் என்ன?

2. ஏசாயா 54-⁠ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் ஏன் நம் ஆர்வத்தை தூண்டுகிறது?

3. “மலடி” மகிழ்வதற்கான காரணம் என்ன?

4. (அ) ஏசாயா 54-⁠ம் அதிகாரம், பொ.ச.மு. 537-⁠ல் மட்டுமல்ல அதன் பின்னர் இன்னும் பெரியளவிலும் நிறைவேறும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் எப்படி சுட்டிக்காட்டுகிறார்? (ஆ) ‘மேலான எருசலேம்’ எது?

5. கலாத்தியர் 4:22-31-⁠ல் உள்ள அடையாள அர்த்தமுள்ள நாடகத்தில் பின்வருவோர் யாரை குறிக்கின்றனர்: (அ) ஆபிரகாம், (ஆ) சாராள், (இ) ஈசாக்கு, (ஈ) ஆகார், (உ) இஸ்மவேல்?

6. கடவுளுடைய பரலோக அமைப்பு எந்த அர்த்தத்தில் நீண்ட காலமாக மலடாக இருந்தது?

7. ஏசாயா 54:1-⁠ல் முன்னறிவித்தபடி, ‘மேலான எருசலேம்’ எப்போது மகிழ்ந்து களிகூர்ந்தது, ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?

8. வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் பிறப்பிற்கு பின், கடவுளுடைய பரலோக “ஸ்திரீ” மகிழ்ந்து களிகூருவதற்கு என்ன காரணம் இருந்தது?

9, 10. “கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு” என்ற அறிவுரை, பூர்வ காலங்களில் கூடாரங்களில் வசித்து வந்த ஒரு ஸ்திரீக்கு எதை அர்த்தப்படுத்தியிருக்கும், அப்படிப்பட்ட ஸ்திரீக்கு இது ஏன் சந்தோஷத்தின் காலத்தைக் குறிக்கிறது?

11. (அ) கடவுளுடைய பரலோக “ஸ்திரீ” 1914-⁠ல் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டாள்? (அடிக்குறிப்பைக் காண்க.) (ஆ) 1919 முதல், பூமியிலிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டோர் என்ன ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகின்றனர்?

12. அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு 1930-களிலிருந்து யார் கிறிஸ்தவ சபையில் கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகின்றனர்?

13, 14. (அ) கடவுளுடைய பரலோக “ஸ்திரீ”க்கு சொல்லப்படும் சில குறிப்புகளை புரிந்துகொள்வது ஏன் கடினமானதாக தோன்றுகிறது? (ஆ) குடும்ப உறவுகளை உதாரணமாக கடவுள் பயன்படுத்துவதிலிருந்து என்ன ஆழமான கருத்துக்களை நாம் புரிந்துகொள்ள முடிகிறது?

15, 16. ஏசாயா 54:5, 6-⁠ன் முதல் நிறைவேற்றம் என்ன, பெரிய நிறைவேற்றம் என்ன?

17. (அ) “பொங்கியெழும்” கடவுளுடைய கோபத்தை பூமிக்குரிய எருசலேம் எப்படி அனுபவிக்கும்? (ஆ) ‘மேலான எருசலேமின்’ குமாரர்கள் எவ்வாறு “பொங்கியெழும்” சீற்றத்தை அனுபவித்தனர்?

18. யெகோவா தம் ஜனங்களிடம் காட்டும் கோபத்திலிருந்து என்ன முக்கியமான நியமத்தை கற்றுக் கொள்ளலாம், தனிப்பட்ட விதத்தில் இது நம்மை எப்படி பாதிக்கக்கூடும்?

19, 20. (அ) வானவில் உடன்படிக்கை என்பது என்ன, பாபிலோனிய சிறையிருப்பிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு “சமாதானத்தின் உடன்படிக்கை” இன்று என்ன உறுதியை அளிக்கிறது?

21, 22. (அ) ‘மேலான எருசலேம்’ சிறுமைப்படுத்தப்பட்டு பெருங்காற்றினால் அடிக்கப்பட்டதாக ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? (ஆ) கடவுளுடைய பரலோக ‘ஸ்திரீயின்’ ஆசீர்வதிக்கப்பட்ட நிலைமை அவளுடைய பூமிக்குரிய ‘சந்ததியாருக்கு’ எதைக் குறிக்கிறது?

23. (அ) ‘யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பது’ இந்த முடிவு காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை எப்படி பாதித்திருக்கிறது? (ஆ) ‘உச்சிதமான கற்களாலான எல்லைகளால்’ கடவுளுடைய ஜனங்கள் எந்த விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கின்றனர்?

24. நாம் யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எப்படி உறுதி செய்து கொள்ளலாம்?

25. கடவுளுடைய சமாதான வாக்குறுதி அவருடைய ஜனங்களுக்கு இந்த நவீன காலங்களில் எதைக் குறிக்கிறது?

26. மனிதகுலம் அனைத்திற்கும் யெகோவாவே சிருஷ்டிகர் என்பதை அறிவது ஏன் நம்பிக்கை அளிக்கிறது?

27, 28. இக்கட்டான இந்தக் காலங்களில் நாம் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம், நமக்கு எதிராக சாத்தான் கொண்டு வரும் எல்லா தாக்குதல்களும் பயனற்றுப்போகும் என நமக்கு எப்படி தெரியும்?

[பக்கம் 218219-ன் பெட்டி]

ஆபிரகாமின் குடும்பம்—⁠ஒரு தீர்க்கதரிசன படம்

ஆபிரகாமின் குடும்பம் அடையாள அர்த்தமுள்ள ஒரு நாடகம் என அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார். பரலோக அமைப்போடும் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் வந்த பூமிக்குரிய இஸ்ரவேல் தேசத்தோடும் யெகோவாவுக்குள்ள உறவை விவரிக்கும் தீர்க்கதரிசன படமென விளக்கினார்.​—⁠கலாத்தியர் 4:22-31.

ஆபிரகாம், குடும்பத் தலைவராக, யெகோவா தேவனுக்கு படமாக இருக்கிறார். தன் நேச குமாரனாகிய ஈசாக்கை பலியாக கொடுக்க அவர் முன்வந்தார். இது, மனிதகுலத்தின் பாவங்களுக்காக தம் அருமை குமாரனையே பலியாக கொடுக்க யெகோவா முன்வந்ததற்கு முன்நிழலாக இருக்கிறது.​—⁠ஆதியாகமம் 22:1-13; யோவான் 3:⁠16.

சாராள், ஆவி சிருஷ்டிகள் அடங்கிய அமைப்பை, அதாவது கடவுளுடைய பரலோக ‘மனைவியை’ பிரதிநிதித்துவம் செய்கிறாள். அந்த பரலோக அமைப்பு யெகோவாவின் மனைவி என விவரிக்கப்பட்டிருப்பது வெகு பொருத்தமே. ஏனென்றால், யெகோவாவுடன் மிக நெருக்கமான உறவில் அவள் இருக்கிறாள்; அவருடைய தலைமை ஸ்தானத்திற்கு கீழ்ப்படுகிறாள்; அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் முழு ஒத்துழைப்பு தருகிறாள். ‘மேலான எருசலேம்’ என்றும் அவள் அழைக்கப்படுகிறாள். (கலாத்தியர் 4:26) இதே ‘ஸ்திரீயைப்’ பற்றி ஆதியாகமம் 3:15 குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 12:1-6, 13-17 இந்த ஸ்திரீயை தரிசனத்தில் விவரிக்கிறது.

ஈசாக்கு, கடவுளுடைய ஸ்திரீயின் ஆவிக்குரிய வித்துவிற்கு படம். இதன் பிரதான பாகமாக இருப்பது இயேசு கிறிஸ்து. என்றாலும், ஆவிக்குரிய குமாரர்களாகவும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாகவும் தத்தெடுக்கப்பட்டவர்களாகிய கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களும் இந்த வித்துவில் அடங்குவர்.​—⁠ரோமர் 8:15-17; கலாத்தியர் 3:16, 29.

ஆகார், ஆபிரகாமின் இரண்டாவது மனைவி அல்லது மறுமனையாட்டி, அடிமைப் பெண்ணாக இருந்தாள். மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்கீழ் இருந்த பூமிக்குரிய எருசலேமுக்கு படமாக இருக்கிறாள். பாவத்திற்கும் மரணத்திற்கும் அவர்கள் அனைவரும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை அந்த சட்டம் உணர்த்தியது. “ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய்மலை” என பவுல் குறிப்பிட்டார். ஏனென்றால், அங்குதான் நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்யப்பட்டது.​—⁠கலாத்தியர் 3:10, 13; 4:⁠25.

இஸ்மவேல், ஆகாரின் மகன். இன்னமும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக இருந்த எருசலேமின் குமாரர்களை, அதாவது முதல் நூற்றாண்டு யூதர்களைக் குறிக்கிறான். இஸ்மவேல் ஈசாக்கை துன்புறுத்தினான். அதுபோலவே, ‘மேலான எருசலேமாகிய’ அடையாளப்பூர்வ சாராளின் அபிஷேகம் செய்யப்பட்ட புத்திரர்களாகிய கிறிஸ்தவர்களை யூதர்கள் துன்புறுத்தினர். ஆபிரகாம், ஆகாரையும் இஸ்மவேலையும் அனுப்பிவிட்டார். அது போலவே, யெகோவாவும் கடைசியில் எருசலேமையும் அதன் கலகத்தனமான குமாரர்களையும் தள்ளிவிட்டார்.​—⁠மத்தேயு 23:37, 38.

[பக்கம் 220-ன் படம்]

முழுக்காட்டப்பட்டவுடன் இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார், ஏசாயா 54:1 அதன் மிக முக்கிய நிறைவேற்றத்தை அடைய ஆரம்பித்தது

[பக்கம் 225-ன் படம்]

யெகோவா தம் முகத்தை எருசலேமிலிருந்து ‘இமைப்பொழுதே’ மறைத்தார்

[பக்கம் 231-ன் படங்கள்]

போர்வீரனும் கொல்லனும் தங்கள் படைப்பாளரை வெல்ல முடியுமோ?