Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாய்மாலம் அம்பலமானது!

மாய்மாலம் அம்பலமானது!

அதிகாரம் பத்தொன்பது

மாய்மாலம் அம்பலமானது!

ஏசாயா 58:1-14

‘நீங்கள் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்’ என தம் நாட்களில் இருந்த மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 23:28) மாய்மாலத்தை கண்டிப்பதில், இயேசு தம் பரலோகத் தகப்பனின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறார். யூதாவில் பரவலாக காணப்படும் மாய்மாலத்தைக் குறித்து ஏசாயா 58-⁠ம் அதிகாரம் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது. கடும் பூசல், ஒடுக்குதல், வன்முறை சர்வ சகஜமாக நிலவுகின்றன. ஓய்வுநாளை ஆசரிப்பதும் அர்த்தமற்ற சடங்காக ஆகிவிட்டிருக்கிறது. ஜனங்கள் யெகோவாவை பெயரளவில் சேவிக்கின்றனர். பக்தியை வெளிக்காட்ட பாசாங்குத்தனமாக உபவாசிக்கின்றனர். ஆகவே, அவர்களுடைய மாய்மாலத்தை யெகோவா வெட்டவெளிச்சமாக்குவதில் ஆச்சரியமில்லை!

‘என் மக்களுக்கு அவர்களின் பாவத்தை எடுத்துக்கூறு’

2யூதாவின் நிலையை யெகோவா அருவருக்கிறபோதிலும், மனந்திரும்பும்படி அந்த தேசத்தாரை அவருடைய வார்த்தைகள் மனதுருக அழைக்கின்றன. என்றாலும், தம் கண்டனம் தெளிவற்று இருக்கும்படி யெகோவா விரும்புவதில்லை. எனவேதான், ஏசாயாவிடம் இவ்வாறு கட்டளையிடுகிறார்: “பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.” (ஏசாயா 58:⁠1, பொ.மொ.) யெகோவாவின் வார்த்தைகளை ஏசாயா தைரியமாக அறிவித்தால் ஜனங்கள் அவரை பகைக்கலாம். ஆனால் அவர் பின்வாங்குவதில்லை. “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொன்னபோது காட்டிய தன்னலமற்ற அதே பக்தியைத்தான் அவர் இப்போதும் காட்டுகிறார். (ஏசாயா 6:8) நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளுக்கு, சகிப்புத்தன்மையின் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரியாய் ஏசாயா விளங்குகிறார்! கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்கவும் மத மாய்மாலத்தை அம்பலமாக்கவும் இவர்களும் கட்டளை பெற்றிருக்கின்றனர்.​—சங்கீதம் 118:6; 2 தீமோத்தேயு 4:1-5.

3ஏசாயாவின் நாட்களில், ஜனங்கள் யெகோவாவை மேலோட்டமாக நாடுகின்றனர். அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளில் மகிழ்வது போலவும் காட்டிக்கொள்கின்றனர். எனவே, யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் [“தேசத்தைப்போல்,” NW] அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.” (ஏசாயா 58:⁠2) யெகோவாவின் வழிகளை விரும்புவதாக அவர்கள் சொல்லிக்கொள்வது உண்மையானதா? இல்லை. “நீதியைச் செய்துவருகிற தேசத்தைப்போல்” தோன்றுகின்றனர்; ஆனால் அது மேலோட்டமானதே. உண்மையில், அத்தேசம் ‘தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகியிருக்கிறது.’

4பின்னர் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு வெளிப்படுத்தியது போலவே நிலைமை இருக்கிறது. “கர்த்தரிடத்திலிருந்து [“யெகோவாவிடமிருந்து,” NW] புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள்” என்று யூதர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதாக யெகோவா எசேக்கியேலிடம் சொன்னார். ஆனால், அவர்களுடைய போலித்தனத்தை குறித்து கடவுள் எசேக்கியேலை எச்சரித்தார்: “[அவர்கள்] உன்னிடத்தில் வந்து, . . . உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது. இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற் போகிறார்கள்.” (எசேக்கியேல் 33:30-32) ஏசாயாவின் நாட்களில் வாழ்கிறவர்களும் யெகோவாவை எப்போதும் நாடுவதாக பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்; ஆனால் அவருடைய வார்த்தைகளுக்கோ கீழ்ப்படிகிறதில்லை.

மாய்மாலமான உபவாசம்

5கடவுளுடைய கிருபையை பெறுவதற்காக யூதர்கள் கடமைக்கு உபவாசிக்கின்றனர். ஆனால், அவர்களுடைய பக்தியின் வேஷம் அவர்களை யெகோவாவிடமிருந்து தூர விலக்கவே செய்கிறது. அவர்கள் இப்படி திகைத்து கேட்கின்றனர்: “நாங்கள் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன”? யெகோவா வெளிப்படையாக பதிலளிக்கிறார்: “இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?”​—ஏசாயா 58:3-5.

6ஜனங்கள் உபவாசித்து, நீதிமான்களைப்போல் காட்டிக்கொண்டு, யெகோவாவின் நீதியான நியாயத்தீர்ப்பை வேண்டவும் செய்கின்றனர். ஆனால், அதேசமயம் தங்களுடைய தன்னல இன்பங்களையும் வியாபாரங்களையும் நாடுகின்றனர். கடும் பூசலிலும், ஒடுக்குதலிலும், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். தங்களுடைய மோசமான நடவடிக்கைகளை மறைப்பதற்காக, நாணற்புல்லைப்போல் தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு, இரட்டு உடுத்திக் கொண்டு, சாம்பலில் உட்கார்ந்து தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி துக்கிப்பதுபோல பாசாங்கு செய்கின்றனர். அவர்கள் தொடர்ந்து கலகத்தனம் செய்யும் வரை இவை அனைத்தினாலும் என்ன பயன்? உண்மையான உபவாசத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் கடவுளுக்கேற்ற துக்கத்தையோ மனந்திரும்புதலையோ அவர்கள் காண்பிக்கிறதில்லை. அவர்கள் எவ்வளவு சத்தமாக புலம்பினாலும் அந்த சத்தம் பரலோகத்தை எட்டுவதில்லை.

7இயேசுவின் நாட்களில் வாழ்ந்த யூதர்களும் இதேவிதமாகத்தான் பாசாங்கு செய்தனர். சிலர் பகட்டாக, வாரத்தில் இருமுறை உபவாசம் இருந்தனர்! (மத்தேயு 6:16-18; லூக்கா 18:11, 12) மதத் தலைவர்களில் அநேகர் ஏசாயாவின் நாட்களில் இருந்த ஜனங்களைப் போலவே கொடூரமாகவும் அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்தனர். எனவே, அவர்களுடைய மத மாய்மாலத்தை இயேசு தைரியமாக அம்பலப்படுத்தினார். அவர்களுடைய வணக்கம் வீண் என்பதையும் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 15:7-9) இன்றும், லட்சக்கணக்கானோர் “தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.” (தீத்து 1:16) இப்படிப்பட்டவர்கள் கடவுளுடைய இரக்கத்தை ஒருவேளை எதிர்பார்க்கலாம். ஆனால், அவர்களுடைய நடத்தை அவர்களுடைய மாய்மாலத்தை வெட்டவெளிச்சமாக்குகிறது. யெகோவாவின் சாட்சிகளோ உண்மையான கடவுள் பக்தியையும் சகோதர அன்பையும் வெளிக்காட்டுகின்றனர்.​—யோவான் 13:⁠35.

உண்மையான மனந்திரும்புதல் எதை உட்படுத்துகிறது

8தம்முடைய ஜனங்கள் தங்கள் பாவங்களுக்காக வெறுமனே உபவாசிப்பதை மட்டுமே யெகோவா விரும்புகிறதில்லை. அவர்கள் உண்மையில் மனந்திரும்ப வேண்டுமென்றே விரும்புகிறார். அப்போதுதான் அவருடைய தயவை பெற முடியும். (எசேக்கியேல் 18:23, 32) செய்த பாவங்களைத் திருத்திக்கொண்டு உபவாசிப்பதில்தான் அர்த்தமிருக்கிறது என யெகோவா விளக்குகிறார். இருதயத்தையே துளைக்கும் யெகோவாவின் கேள்விகளை சற்று சிந்தியுங்கள்: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும் [அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்?].”​—ஏசாயா 58:⁠6.

9கட்டுகள், நுகத்தடிகள் ஆகியவை கடுமையான அடிமைத்தனத்திற்கு பொருத்தமான அடையாளங்கள். எனவே உபவாசித்துக் கொண்டு, அதேசமயம் உடன் விசுவாசிகளை ஒடுக்குவதற்கு மாறாக, “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளைக்கு ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டும். (லேவியராகமம் 19:18) இதுவரை அடக்கி ஒடுக்கி, அநியாயமாய் அடிமைகளாக வைத்திருந்தவர்களை எல்லாம் அவர்கள் விடுவிக்க வேண்டும். a உபவாசித்தல் போன்ற பகட்டான மத சடங்குகள், உண்மையான கடவுள் பக்திக்கும் சகோதர அன்பை மெய்ப்பிக்கும் செயல்களுக்கும் ஒருபோதும் ஈடாகா. ஏசாயாவின் காலத்திலே வாழ்ந்த தீர்க்கதரிசியாகிய மீகா எழுதுகிறார்: “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”​—மீகா 6:⁠8.

10நியாயம், இரக்கம், அடக்கம் போன்ற பண்புகள் மற்றவர்களுக்கு நன்மை செய்வதை தேவைப்படுத்துகின்றன; யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின் சாராம்சமும் அதுவே. (மத்தேயு 7:12) தேவையில் இருப்போருடன் தங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுதலே உபவாசத்திலும் அதிக மேலானது. யெகோவா கேட்கிறார்: “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.” (ஏசாயா 58:⁠7) மற்றவர்கள் அறிய உபவாசம் செய்வதைவிட, தேவையிலிருப்போருக்கு உதவுவதே சிறந்தது. பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்போர் தங்கள் மாம்சமானவர்களுக்கு, அதாவது தேவையிலிருக்கும் உடன் யூதர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் தந்து உதவுவதே மேலானது.

11இரக்கம் மற்றும் சகோதர அன்பைக் குறித்து யெகோவா வெளிப்படுத்திய இந்த சிறந்த நியமங்கள் ஏசாயாவின் நாட்களில் வாழ்ந்த யூதர்களுக்கு மட்டுமல்ல, இன்று கிறிஸ்தவர்களுக்கும் வழிகாட்டியாய் அமைகின்றன. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) அன்பிற்கும் சகோதர பாசத்திற்கும் புகலிடமாக கிறிஸ்தவ சபை இருக்க வேண்டும். முக்கியமாக, நாம் வாழும் இந்த மிகக் கொடிய காலங்களைக் கருத்தில் கொள்கையில் அப்படி இருக்க வேண்டும்.​—2 தீமோத்தேயு 3:1; யாக்கோபு 1:⁠27.

கீழ்ப்படிதலினால் வரும் அளவிலா ஆசீர்வாதங்கள்

12யெகோவாவின் அன்பான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் பகுத்துணர்வு அவருடைய ஜனங்களுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! யெகோவா சொல்கிறார்: “அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.” (ஏசாயா 58:​8, 9அ) நெஞ்சைத் தொடும் அன்பான வார்த்தைகள் அல்லவா! பரிவு காட்டவும் நீதியை பின்பற்றவும் பிரியப்படுவோரை யெகோவா ஆசீர்வதித்து பாதுகாக்கிறார். யெகோவாவின் ஜனங்கள் தங்களுடைய கொடூரத்தனத்தையும் மாய்மாலத்தையும் விட்டு மனந்திரும்பி அவருக்கு கீழ்ப்படிந்தால், அவர்களுடைய நிலை பிரகாசிக்க ஆரம்பிக்கும். யெகோவா அவர்களுக்கு ‘சுகவாழ்வை’ அளிப்பார்; ஆவிக்குரிய விதத்திலும் சரீரப் பிரகாரமாகவும் தேசம் குணமடையும். அவர்களுடைய மூதாதையர் எகிப்தைவிட்டு புறப்பட்டபோது யெகோவா எப்படி காத்தாரோ, அப்படியே இவர்களையும் காப்பார். உதவிக்காக அவர்கள் அழுது கூப்பிடும்போது உடனடியாக பதிலளிப்பார்.​—யாத்திராகமம் 14:19, 20, 31.

13யெகோவா ஏற்கெனவே கொடுத்த அறிவுரையைப் போன்றே தொடர்ந்து சொல்கிறார்: “நுகத்தடியையும் [கடுமையான, அநியாயமான அடிமைத்தனம்], விரல் நீட்டுதலையும் [பொய்யாக குற்றம்சாட்டியோ அல்லது பழித்தோ செய்யப்படலாம்], நிபச்சொல்லையும் [“பொல்லாதன பேசுவதையும்,” பொ.மொ.], நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும்.” (ஏசாயா 58:9ஆ, 10) தன்னலமும் கொடூரத்தனமும் அழிவை சம்பாதிக்கும்; அதோடு, யெகோவாவின் கோபத்தையும் கொண்டுவரும். என்றாலும், இரக்கத்தையும் தாராள குணத்தையும் காட்டுவது, முக்கியமாக பசியில் வாடுவோரிடமும் வேதனையில் அவதிப்படுவோரிடமும் அக்குணங்களைக் காட்டுவது கடவுளுடைய அளவிலா ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். இந்த சத்தியங்களை யூதர்கள் தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும்! அப்போது, அவர்களுடைய ஆவிக்குரிய வெளிச்சமும் செழிப்பும், நடுப்பகலில் பிரகாசிக்கும் சூரியனைப்போல மின்னும், அந்தகாரத்தின் சுவடே இல்லாமல் போகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களது மகிமைக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றுமூலராய் விளங்கும் யெகோவாவுக்கு அவர்கள் கனத்தையும் துதியையும் சேர்ப்பர்.​—1 இராஜாக்கள் 8:41-43.

மீண்டும் நிலைநாட்டப்பட்ட தேசம்

14வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், யெகோவாவின் வேண்டுகோளை அந்த தேசம் புறக்கணிக்கிறது; துன்மார்க்கத்தில் இன்னும் அதிகமாக வீழ்கிறது. முடிவில், ஏற்கெனவே எச்சரித்தது போலவே யெகோவா அவர்களை சிறையிருப்பிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. (உபாகமம் 28:15, 36, 37, 64, 65) இருந்தாலும், ஏசாயா மூலமாக யெகோவா கொடுக்கும் அடுத்த வார்த்தைகள் தொடர்ந்து நம்பிக்கை தருகின்றன. தேசம் பாழாய்க் கிடந்தாலும், சிட்சையை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பும் சிலர் மீண்டும் யூதா தேசத்திற்கு மகிழ்ச்சியோடு திரும்புவர் என கடவுள் முன்னறிவிக்கிறார்.

15பொ.ச.மு. 537-⁠ல், தம் ஜனங்கள் மீண்டும் நிலைநாட்டப்படுவதை சுட்டிக்காட்டி, ஏசாயா மூலமாக யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.” (ஏசாயா 58:11) யெகோவா, இஸ்ரவேலர்களின் வறண்ட தேசத்தை மீண்டும் செழிப்புமிக்கதாக ஆக்குவார். மனந்திரும்பிய தம் ஜனங்களை அவர் ஆசீர்வதிப்பார்; அவர்களுடைய ‘எலும்புகளையே’ உயிர்ப்பித்து, ஆவிக்குரிய உயிரற்ற நிலையிலிருந்து புத்துயிரூட்டி முழு பலமளிப்பார். இது எவ்வளவு அருமையான காரியம்! (எசேக்கியேல் 37:1-14) ஜனங்களையும் ஆவிக்குரிய கனிகள் நிறைந்த ‘நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல்’ ஆக்குவார்.

16பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட பட்டணங்களை மீண்டும் கட்டுவதையும் நிலைநாட்டுதல் உட்படுத்தும். “உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.” (ஏசாயா 58:12) நாடு திரும்பும் சிறுபான்மையான யூதர்கள் பாழாய்க் கிடக்கும் யூதாவின் பட்டணங்களை, முக்கியமாக எருசலேமை, மீண்டும் கட்டுவர் என இவ்வசனத்திலுள்ள ஒரேவிதமான இரு வாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்கள்,’ “தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்” (அல்லது, பல தலைமுறைகளுக்கு பாழாய்க் கிடக்கும் அஸ்திபாரங்கள்) என்பவையே அந்த இரு வாக்கியங்கள். (நெகேமியா 2:5; 12:27; ஏசாயா 44:28) ‘திறப்பு’ என்ற பதம், எருசலேமிலும் மற்ற பட்டணங்களிலும் உள்ள மதில்களில் இருக்கும் பிளவுகள் அனைத்தையும் குறிக்கிறது.​—எரேமியா 31:38-40; ஆமோஸ் 9:⁠14.

ஓய்வுநாளை உண்மையாய் அனுசரிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள்

17ஓய்வுநாள் தம்முடைய ஜனங்களின் சரீர மற்றும் ஆவிக்குரிய நலனில் கடவுளுக்கிருந்த ஆழ்ந்த அக்கறையின் வெளிக்காட்டாகவே இருந்தது. “ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” என இயேசு சொன்னார். (மாற்கு 2:27) இது யெகோவாவால் பரிசுத்த நாளாக்கப்பட்டது. கடவுளுக்கான தங்கள் அன்பை வெளிக்காட்ட இது இஸ்ரவேலர்களுக்கு விசேஷ வாய்ப்பளித்தது. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், ஏசாயாவின் நாட்களுக்குள் ஓய்வுநாள் ஆசரிப்பு என்பது வெற்று சடங்குகளுக்கும் தன்னல ஆசைகளை திருப்தியாக்குவதற்குமே உரியதாக தாழ்ந்துவிட்டது. எனவே, மீண்டும் ஒரு முறை யெகோவா தம் ஜனங்களை கண்டிப்பதற்கான தேவை ஏற்படுகிறது. மறுபடியும் அவர்களது நெஞ்சைத் தொட முயன்று, அவர் இப்படி பேசுகிறார்: “என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.”​—ஏசாயா 58:13, 14.

18ஆவிக்குரிய காரியங்களை ஆழ்ந்து சிந்திப்பது, ஜெபம், குடும்பமாக வணக்கத்தில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கான நாளே ஓய்வுநாள். அவர்கள் சார்பாக யெகோவா செய்த அற்புதமான காரியங்களையும், அவருடைய நியாயப்பிரமாணத்தில் வெளிப்படும் நீதி, அன்பு ஆகியவற்றையும் குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஓய்வுநாள் யூதர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு, இந்த பரிசுத்த நாளை உண்மையாய் அனுசரிப்பது ஜனங்கள் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு உதவ வேண்டும். மாறாக, அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாக்குகின்றனர். ஆகவே, யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.​—லேவியராகமம் 26:34; 2 நாளாகமம் 36:⁠21.

19இருந்தாலும், இந்த சிட்சையிலிருந்து யூதர்கள் பாடம் கற்றுக்கொண்டு, ஓய்வுநாள் ஏற்பாட்டை கனம்பண்ண ஆரம்பித்தால், அளவிலா ஆசீர்வாதங்கள் கிடைக்கும். மெய் வணக்கத்தாலும் ஓய்வுநாளுக்கு மரியாதை காட்டுவதாலும் வரும் நன்மைகள் அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நிறைவாக்கும். (உபாகமம் 28:1-13; சங்கீதம் 19:7-11) உதாரணமாக, அவருடைய ஜனங்கள் ‘பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கும்படி’ யெகோவா செய்வார். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும் வெற்றியையும் பெறுவதை இந்த சொற்றொடர் குறிக்கிறது. ஏனெனில், உயர்ந்த இடங்களை, அதாவது குன்றுகளையும் மலைகளையும் ஆளுபவரே தேசத்தையும் ஆளுகிறவர். (உபாகமம் 32:13; 33:29) இஸ்ரவேல் ஒருகாலத்தில் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து இருந்தது; அப்போது தேசம் அவருடைய பாதுகாப்பை அனுபவித்தது. அது மற்ற தேசங்களால் மதிக்கப்பட்டது; பயத்தோடும் நோக்கப்பட்டது. (யோசுவா 2:9-11; 1 இராஜாக்கள் 4:20, 21) யெகோவாவிடம் திரும்பி அவருக்கு கீழ்ப்படிந்தால், முன்பு இருந்த மகிமையில் மீண்டும் ஓரளவு கிட்டும். ‘யாக்கோபின் சுதந்தரத்தை’ யெகோவா தம் ஜனங்களுக்கு முழுமையாய் அருளுவார். அதாவது, அவர்களுடைய முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை மூலமாக வாக்குறுதியளித்த ஆசீர்வாதங்களை, மிக முக்கியமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளும் ஆசீர்வாதத்தை அருளுவார்.​—சங்கீதம் 105:8-11.

20கிறிஸ்தவர்களுக்கு இதில் ஏதாவது பாடம் இருக்கிறதா? ஓய்வுநாள் ஆசரிப்பு உட்பட, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் எல்லா விதிமுறைகளும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தோடு முடிவுற்றது. (கொலோசெயர் 2:16, 17) என்றாலும், ஓய்வுநாள் ஆசரிப்பு எதை செய்யும்படி யூதர்களை தூண்டியிருக்க வேண்டுமோ அது இன்றும் யெகோவாவின் வணக்கத்தாருக்கு முக்கியமானது. அதாவது, ஆவிக்குரிய காரியங்களை முதலில் வைத்து யெகோவாவிடம் நெருங்கி வருவது மிக முக்கியமானது. (மத்தேயு 6:33; யாக்கோபு 4:8) மேலும், பவுல் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில், “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது” என குறிப்பிடுகிறார். யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையிலான நீதியை கடைப்பிடித்தால்தான், கிறிஸ்தவர்கள் இந்த ‘இளைப்பாறுதலின் காலத்தில்’ பிரவேசிக்க முடியும். (எபிரெயர் 3:12, 18, 19; 4:6, 9-11, 14-16) இந்த வகையான ஓய்வுநாள் ஆசரிப்பை கிறிஸ்தவர்கள் வாரத்தில் ஒரேவொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்கின்றனர்.​—கொலோசெயர் 3:23, 24.

‘பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கும்’ ஆவிக்குரிய இஸ்ரவேல்

21அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் 1919-⁠ல் மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; அதுமுதல், ஓய்வுநாள் ஆசரிப்பு எதற்கு முன்நிழலாக இருந்ததோ அதை உண்மையாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன் விளைவாக, யெகோவா அவர்களை ‘பூமியின் உயர்ந்த இடங்களில் ஏற்றியிருக்கிறார்.’ எந்த அர்த்தத்தில்? பொ.ச.மு. 1513-⁠ல், ஆபிரகாமின் சந்ததியாரோடு யெகோவா ஓர் உடன்படிக்கை செய்தார். அந்த உடன்படிக்கையின்படி, அவர்கள் கீழ்ப்படிதலைக் காட்டினால் ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாய் ஆக முடியும். (யாத்திராகமம் 19:5, 6) அவர்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த 40 வருடங்களும் யெகோவா அவர்களை பாதுகாத்து அபரிமிதமாக ஆசீர்வதித்தார். கழுகு தன் குஞ்சுகளை பாதுகாப்பாக சுமந்து செல்வது போல் யெகோவா அவர்களை சுமந்தார். (உபாகமம் 32:10-12) என்றாலும், அவர்கள் விசுவாசம் காண்பிக்கவில்லை; அதனால், தாங்கள் பெறவிருந்த எல்லா நன்மைகளையும் இறுதியில் இழந்தனர். இருந்தபோதிலும், இன்று ஓர் ஆசாரிய ராஜ்யம் யெகோவாவுக்கு இருக்கிறது. அது தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலாகும்.​—கலாத்தியர் 6:16; 1 பேதுரு 2:⁠9.

22பூர்வ இஸ்ரவேல் செய்யத் தவறியதை இந்த ஆவிக்குரிய தேசம் இன்று, அதாவது ‘முடிவு காலத்தில்’ செய்திருக்கிறது. யெகோவாவில் தங்கள் விசுவாசத்தை காண்பித்திருக்கிறது. (தானியேல் 8:17) யெகோவாவின் உயர்ந்த தராதரங்களையும் உன்னதமான வழிகளையும் அதன் உறுப்பினர்கள் தவறாமல் கடைப்பிடிப்பதால், ஆவிக்குரிய அர்த்தத்தில் யெகோவா அவர்களை உயர்ந்த இடங்களில் ஏற்றியிருக்கிறார். (நீதிமொழிகள் 4:4, 5, 8; வெளிப்படுத்துதல் 11:12) தங்களை சுற்றியிருக்கும் அசுத்தமான காரியங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் அவர்கள், உயர்ந்த வாழ்க்கைப் பாணியை பின்பற்றுகின்றனர்; தங்களுக்கு இஷ்டமான போக்கில் செல்வதிலேயே விடாப்பிடியாக இல்லாமல், ‘யெகோவாவிலும்’ அவருடைய வார்த்தையிலும் ‘மனமகிழ்ச்சியாய்’ இருக்கின்றனர். (சங்கீதம் 37:4, NW) உலகமெங்கும் கடும் எதிர்ப்பு இருந்தாலும் ஆவிக்குரிய விதத்தில் பாதுகாப்பான இடத்தில் யெகோவா அவர்களை வைத்திருக்கிறார். 1919 முதல் அவர்களுடைய ஆவிக்குரிய ‘தேசம்’ பிளவுறாமல் இருக்கிறது. (ஏசாயா 66:8) அவருடைய உன்னதமான பெயருக்கான ஜனங்களாக அவர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர்; இதை மகிழ்ச்சியோடு பூமியெங்கும் அறிவிக்கின்றனர். (உபாகமம் 32:3; அப்போஸ்தலர் 15:14) அதோடு, எல்லா தேசங்களிலுமிருந்து வரும் சாந்தகுணமுள்ள ஜனங்கள், யெகோவாவின் வழிகளில் கற்பிக்கப்படும் மிகச் சிறந்த பாக்கியத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்கின்றனர்; எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே போகும் இவர்கள் கடவுளுடைய பாதையில் நடப்பதற்கு உதவியும் பெறுகின்றனர்.

23யெகோவா, அபிஷேகம் பண்ணப்பட்ட தம் ஊழியர்களை ‘யாக்கோபின் சுதந்தரத்தால் போஷித்து வருகிறார்.’ ஏசாவிற்கு பதிலாக யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதித்தபோது, வாக்குக்கொடுக்கப்பட்ட ஆபிரகாமின் வித்துவில் விசுவாசம் வைக்கும் அனைவரும் பெறப்போகும் ஆசீர்வாதத்தை அவரது வார்த்தைகள் முன்னறிவித்தன. (ஆதியாகமம் 27:27-29; கலாத்தியர் 3:16, 17) ஏசாவைப் போல் அல்ல, ஆனால் யாக்கோபைப் போல், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் ‘பரிசுத்த காரியங்களை மதித்து’ போற்றுகிறார்கள். மிக முக்கியமாக, கடவுள் அளவில்லாமல் அள்ளி வழங்கும் ஆவிக்குரிய உணவை மதிக்கின்றனர். (எபிரெயர் 12:16, 17, NW; மத்தேயு 4:4) வாக்குப்பண்ணப்பட்ட வித்து மற்றும் அதன் கூட்டாளிகள் மூலமாக யெகோவா என்னவெல்லாம் நிறைவேற்றி வருகிறார் என அறிந்துகொள்வதை உட்படுத்தும் இந்த ஆவிக்குரிய உணவு அவர்களை பலப்படுத்துகிறது, புத்துயிரூட்டுகிறது, ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்காற்றுகிறது. எனவே, கடவுளுடைய வார்த்தையை படிப்பதாலும் அதை தியானிப்பதாலும் ஆவிக்குரிய போஷாக்கை அவர்கள் தொடர்ந்து பெற வேண்டும். (சங்கீதம் 1:1-3) கிறிஸ்தவ கூட்டங்களில் உடன் விசுவாசிகளோடு கூட்டுறவு கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இந்த போஷாக்கான உணவை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வதோடு, மெய் வணக்கத்தின் உயர்ந்த தராதரங்களையும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

24யெகோவாவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுவதற்காக ஆவலோடு காத்திருக்கும் இந்த சமயத்தில், எல்லா விதமான மாய்மாலத்தையும் உண்மை கிறிஸ்தவர்கள் அறவே ஒதுக்கித் தள்ளுவார்களாக. ‘யாக்கோபின் சுதந்தரத்தால் போஷிக்கப்பட்டு,’ ‘பூமியின் உயர்ந்த இடங்களில்’ ஆவிக்குரிய பாதுகாப்பை தொடர்ந்து அனுபவிப்பார்களாக.

[அடிக்குறிப்பு]

a கடனைத் தீர்ப்பதற்கு தங்களை அடிமைகளாக, முக்கியமாக கூலிக்காரர்களாக விற்கும் ஓர் ஏற்பாட்டை யெகோவா தம் ஜனங்களுக்காக செய்தார். (லேவியராகமம் 25:39-43) என்றாலும், நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி, அடிமைகளை இரக்கத்தோடு நடத்த வேண்டியிருந்தது. கொடூரமாக நடத்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டியிருந்தது.​—⁠யாத்திராகமம் 21:2, 3, 26, 27; உபாகமம் 15:12-15.

[கேள்விகள்]

1. யெகோவாவும் இயேசுவும் மாய்மாலத்தை எப்படி கருதுகின்றனர், ஏசாயாவின் நாட்களில் நிலைமை என்ன?

2. யெகோவாவின் செய்தியை அறிவிக்கையில் ஏசாயா என்ன மனநிலையை காட்டுகிறார், இன்று யார் அவரைப்போல் இருக்கின்றனர்?

3, 4. (அ) ஏசாயாவின் நாட்களில் வாழ்கிற ஜனங்கள் என்ன போலியான தோற்றத்தை அளிக்கின்றனர்? (ஆ) யூதாவின் உண்மையான நிலைமை என்ன?

5. கடவுளுடைய கிருபையைப் பெற யூதர்கள் எப்படி முயற்சிக்கின்றனர், ஆனால் யெகோவாவின் பதில் என்ன?

6. யூதர்களுடைய உபவாசம் பாசாங்குத்தனமானது என்பதை என்ன செயல்கள் காண்பிக்கின்றன?

7. இயேசுவின் நாட்களிலிருந்த யூதர்கள் எப்படி மாய்மாலமாக நடந்துகொண்டனர், அவ்வாறே இன்றும் அநேகர் எப்படி நடந்துகொள்கின்றனர்?

8, 9. உண்மையான மனந்திரும்புதலோடுகூட வேறு என்ன செயல்களும் தேவை?

10, 11. (அ) உபவாசத்தைவிட யூதர்கள் எதை செய்வது மேலானது? (ஆ) யூதர்களுக்கு யெகோவா கொடுத்த ஆலோசனைகளை கிறிஸ்தவர்கள் இன்று எப்படி பின்பற்றலாம்?

12. தம் ஜனங்கள் கீழ்ப்படிந்தால் யெகோவா என்ன செய்வார்?

13. யெகோவாவின் அறிவுரைக்கு செவிசாய்க்கும் யூதர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?

14. (அ) ஏசாயாவின் நாட்களில் வாழ்பவர்கள் அவருடைய வார்த்தையை கேட்டு எப்படி செயல்படுகின்றனர்? (ஆ) யெகோவா தொடர்ந்து எதை தருகிறார்?

15. நிலைநாட்டுதலைக் குறித்த என்ன மகிழ்ச்சியான செய்தியை யெகோவா முன்னறிவிக்கிறார்?

16. தேசம் எப்படி மீண்டும் நிலைநாட்டப்படும்?

17. ஓய்வுநாள் சட்டங்களுக்கு தம் ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டுமென யெகோவா எப்படி வேண்டுகோள் விடுக்கிறார்?

18. ஓய்வுநாளை கனம்பண்ண யூதா தவறுவதால் என்ன ஏற்படும்?

19. கடவுளுடைய ஜனங்கள் ஓய்வுநாளை தொடர்ந்து அனுசரித்தால் என்ன பெரும் ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு கிடைக்கும்?

20. கிறிஸ்தவர்களுக்கு என்ன விதமான ‘இளைப்பாறுதலின் காலம்’ இருக்கிறது?

21, 22. எந்த விதத்தில் தேவனுடைய இஸ்ரவேலை யெகோவா ‘பூமியின் உயர்ந்த இடங்களில் ஏற்றியிருக்கிறார்’?

23. அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் ‘யாக்கோபின் சுதந்தரத்தால் போஷிக்கப்படும்படி’ யெகோவா எப்படி வழிநடத்தி உள்ளார்?

24. உண்மை கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?

[பக்கம் 278-ன் படம்]

யூதர்கள் உபவாசம் செய்து, தங்கள் தலைகளை தொங்கப்போட்டுக் கொண்டு மனந்திரும்பியதுபோல் பாசாங்கு செய்தனர் ​—⁠ஆனால் தங்கள் வழிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை

[பக்கம் 283-ன் படம்]

பொருளாதார ரீதியில் வசதிபடைத்தவர்கள் தேவையிலிருப்போருக்கு உணவு, உடை, உறைவிடம் அளிக்கின்றனர்

[பக்கம் 286-ன் படம்]

யூதா மனந்திரும்பினால், பாழாக்கப்பட்ட அதன் பட்டணங்களை மீண்டும் கட்டும்