Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேசியானிய ஊழியரை யெகோவா உயர்த்துகிறார்

மேசியானிய ஊழியரை யெகோவா உயர்த்துகிறார்

அதிகாரம் பதினான்கு

மேசியானிய ஊழியரை யெகோவா உயர்த்துகிறார்

ஏசாயா 52:13–53:⁠12

முக்கியமான பிரமுகர் ஒருவரை நீங்கள் சந்திக்கப் போவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவரை சந்திக்க வேண்டிய நேரமும் இடமும் ஏற்கெனவே ஏற்பாடாகிவிட்டது. ஆனால் ஒரு பிரச்சினை: நீங்கள் சந்திக்க வேண்டிய நபர் எப்படி இருப்பார் என உங்களுக்கு தெரியாது; அதுமட்டுமல்ல, பகட்டோ ஆரவாரமோ ஏதுமின்றி அவர் மிகவும் எளிமையாக வருவார். அப்படியென்றால், அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வீர்கள்? அவரைப் பற்றிய முழு விவரம் தெரிந்தாலொழிய அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது கடினம்.

2பொ.ச. முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இப்படிப்பட்ட ஒரு நிலைமையைத்தான் அநேக யூதர்கள் எதிர்ப்பட்டனர். பூமியில் வாழப்போகிறவர்களிலேயே மிக முக்கியமான மனிதராகிய மேசியாவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். (தானியேல் 9:24-27; லூக்கா 3:15) ஆனால், விசுவாசமுள்ள யூதர்கள் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? பகுத்தறிவுள்ளவர்கள் மேசியாவை சரியாக அடையாளம் கண்டுகொள்வதற்கு ஏதுவான நிகழ்ச்சிகளையும் விவரங்களையும் எபிரெய தீர்க்கதரிசிகள் வாயிலாக யெகோவா எழுத்துவடிவில் கொடுத்திருந்தார்.

3ஏசாயா 52:13–53:12 மேசியாவைப் பற்றிய விவரமான தகவல்களைத் தருகின்றன. வேறெந்த எபிரெய தீர்க்கதரிசனங்களும் மேசியாவைக் குறித்து இவ்வளவு தெளிவான விவரங்களைத் தருகிறதில்லை. 700-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாகவே, மேசியாவைப் பற்றிய மிக முக்கியமான தகவல்களை ஏசாயா விவரித்தார். அவருடைய சரீர தோற்றத்தைக் குறித்தல்ல; அவருடைய பாடுகளையும் அதற்கான நோக்கத்தையும், மரணம் மற்றும் அடக்கம் சம்பந்தப்பட்ட முக்கிய விவரங்களையும், அவர் உயர்த்தப்படுவதையும் பற்றி ஏசாயா விவரித்தார். இந்த தீர்க்கதரிசனத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் ஆராய்வது நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும்; நம் இருதயத்திற்கு தெம்பூட்டும்.

“என் ஊழியர்”​—⁠அவர் யார்?

4பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் விடுதலையாவதைக் குறித்து ஏசாயா இப்போதுதான் விவரித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக, அதைவிட மிக முக்கியமான நிகழ்ச்சியைக் குறித்த யெகோவாவின் வார்த்தைகளை பதிவு செய்கிறார்: “இதோ! என் ஊழியர் உட்பார்வையோடு நடந்துகொள்வார். அவர் மேலோங்கிய ஸ்தானத்தை பெறுவார், நிச்சயமாகவே மேன்மைப்படுத்தப்பட்டு பெரிதும் உயர்த்தப்படுவார்.” (ஏசாயா 52:13, NW) யார் இந்த “ஊழியர்”? பல நூற்றாண்டுகளாக, யூத வல்லுநர்கள் வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பாபிலோனிய சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேல் தேசம் முழுவதையும் இந்த ஊழியர் அர்த்தப்படுத்தியதாக சிலர் கருதினர். ஆனால் அப்படிப்பட்ட ஒரு விளக்கம் இந்த தீர்க்கதரிசனத்திற்கு சற்றும் பொருந்தாது. ஏனென்றால், கடவுளுடைய ஊழியர் மனமுவந்து பாடுகளை அனுபவிக்கிறார். அவர் பாவமற்றவர் என்றாலும் மற்றவர்களுடைய பாவங்களுக்காக பாடனுபவிக்கிறார். இது யூத தேசத்திற்கு சிறிதும் பொருந்தாது. ஏனென்றால், தன் பாவங்களுக்காகத்தான் அத்தேசம் சிறைப்பட்டது. (2 இராஜாக்கள் 21:11-15; எரேமியா 25:8-11) இஸ்ரவேலில் சுயநீதிமான்களாக இருந்த சிறு தொகுதியினரே ஊழியரை குறித்ததாகவும் பாவம் நிறைந்த இஸ்ரவேலர்களுக்காக இவர்கள் பாடு அனுபவித்தனர் என்றும் மற்றவர்கள் கருதினர். ஆனால் இஸ்ரவேல் அவதியுற்ற காலங்களில், எந்தவொரு குறிப்பிட்ட தொகுதியினரும் மற்றொரு தொகுதியினருக்காக பாடனுபவிக்கவில்லை.

5கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னும், பொது சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளிலும் யூத வல்லுநர்கள் சிலர் இந்த தீர்க்கதரிசனத்தை மேசியாவுக்கு பொருத்தினர். இது சரியே என்பதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் காட்டுகிறது. ஏசாயா தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படும் ஊழியர் யார் என்பது தனக்கு தெரியாது என எத்தியோப்பிய மந்திரி சொன்னபோது, பிலிப்பு “இயேசுவைக் குறித்த நற்செய்தியை பிரசங்கித்தார்” என அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 8:26-40, NW; ஏசாயா 53:7, 8) இதுபோலவே, ஏசாயா தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள மேசியானிய ஊழியர் இயேசு கிறிஸ்துவே என பைபிளின் மற்ற புத்தகங்களும் அடையாளம் காட்டுகின்றன. a இந்த தீர்க்கதரிசனத்தை ஆராய்கையில், “என் ஊழியர்” என யெகோவா அழைத்தவருக்கும் நசரேயனாகிய இயேசுவுக்கும் இருக்கும் பொருத்தங்களை நாம் புரிந்துகொள்ளலாம். இவற்றை யாருமே மறுக்க முடியாது.

6தெய்வீக சித்தத்தை மேசியா வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதைக் குறித்து விவரிப்பதாய் அந்த தீர்க்கதரிசனம் ஆரம்பிக்கிறது. எஜமானின் சித்தத்திற்கு வேலைக்காரன் கீழ்ப்பட்டு நடப்பதுபோல அவர் கடவுளின் சித்தத்திற்கு கீழ்ப்பட்டு நடப்பார் என்பதையே “ஊழியர்” என்ற பதம் சுட்டிக்காட்டுகிறது. அதைச் செய்வதில், அவர் “உட்பார்வையோடு நடந்துகொள்வார்.” உட்பார்வை என்பது ஒரு விஷயத்தை பகுத்தறியும் திறன். உட்பார்வையுடன் செயல்படுதல் என்றால் விவேகமாக நடந்துகொள்ளுதலாகும். இதற்கான எபிரெய வினைச்சொல்லைப் பற்றி ஒரு புத்தகம் விவரிப்பதாவது: “விவேகத்தோடும் ஞானத்தோடும் நடந்துகொள்வதே இதன் முக்கிய அம்சம். ஞானமாக நடந்துகொள்பவர் எவருமே வெற்றி அடைவர்.” மேசியா நிச்சயம் வெற்றி காண்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர் “மேன்மைப்படுத்தப்பட்டு பெரிதும் உயர்த்தப்படுவார்” என அந்த தீர்க்கதரிசனமே சொல்கிறது.

7இயேசு தமக்குப் பொருந்திய பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் பிதாவின் சித்தத்தைச் செய்ததால் நிச்சயமாகவே ‘உட்பார்வையோடு நடந்துகொண்டார்.’ (யோவான் 17:4; 19:30) அதன் விளைவு என்ன? இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு சென்றவுடன், “கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.” (பிலிப்பியர் 2:9, பொ.மொ.; அப்போஸ்தலர் 2:34-36) அதன்பின், மகிமைப்படுத்தப்பட்ட இயேசு 1914-⁠ல் மேலுமாக மேன்மைப்படுத்தப்பட்டார். மேசியானிய ராஜ்யத்தின் ராஜாவாக யெகோவா அவரை உயர்த்தினார். (வெளிப்படுத்துதல் 12:1-5) ஆம், அவர் ‘மேன்மைப்படுத்தப்பட்டு பெரிதும் உயர்த்தப்பட்டார்.’

‘அவரைக் கண்டு திகைப்புற்றனர்’

8மகிமைப்படுத்தப்பட்ட மேசியாவை தேசங்களும் அவற்றின் ஆட்சியாளர்களும் எப்படி பார்ப்பர்? தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சியாக 14-ஆம் வசனத்தின் முற்பகுதியையும் 15-⁠ம் வசனத்தையும் முதலில் வாசிப்போம். பிறகு, 14-⁠ம் வசனத்தின் பிற்பகுதிக்கு வருவோம். “அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; . . . அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.” (ஏசாயா 52:14அ, 15, பொ.மொ.) ஏசாயாவின் இந்த வார்த்தைகள், மேசியா முதலில் தோன்றும் காலத்தை அல்ல, அவர் இறுதியில் பூமியின் ராஜாக்களை நியாயந்தீர்க்க வரும் காலத்தை விவரிக்கின்றன.

9மகிமைப்படுத்தப்பட்ட இயேசு, கடவுள் பக்தியற்ற இந்த ஒழுங்குமுறையின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வருகையில், பூமியின் ராஜாக்கள் ‘அவரைக் கண்டு திகைப்பர்.’ பூமியின் ராஜாக்கள் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை தங்கள் கண்களால் காண மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் யெகோவாவிற்காக போரிடும் பரலோக வீரராக அவர் பெற்றிருக்கும் வல்லமையின் வெளிக்காட்டைத்தான் காண்பார்கள். (மத்தேயு 24:30) மதத்தலைவர்கள் இதுவரை எடுத்துச்சொல்லாத ஒரு விஷயத்திற்கு​—⁠கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுபவர் இயேசுவே என்ற விஷயத்திற்கு​—⁠அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்! அவர்கள் சந்திக்கப்போகும் மகிமைப்படுத்தப்பட்ட ஊழியர், அவர்கள் எதிர்பார்த்திராத விதத்தில் செயல்படப் போகிறார்.

10இப்போது, 14-⁠ம் வசனத்தின் பிற்பகுதிக்கு கவனம் செலுத்துவோம். ஏசாயா சொல்கிறார்: “அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.” (ஏசாயா 52:14ஆ, பொ.மொ.) எந்த வகையிலாவது உருக்குலைந்த தோற்றத்தை உடையவராக இயேசு இருந்தாரா? இல்லை. இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்பதைப் பற்றிய தகவல் ஏதும் பைபிளில் இல்லை என்றாலும், கடவுளுடைய பரிபூரண மகனாக நிச்சயமாகவே இன்முகத்தையும் இனிய தோற்றத்தையும் பெற்றிருந்திருப்பார். ஆகவே, இயேசு அனுபவித்த அவமானத்தைத்தான் ஏசாயாவின் வார்த்தைகள் குறிக்கின்றன. தம் நாளில் இருந்த மதத்தலைவர்களை மாய்மாலக்காரர்கள், பொய்யர், கொலைகாரர்கள் என அவர் தைரியமாக அம்பலப்படுத்தினார். அதனால், அவர்களால் பழிக்கப்பட்டார். (1 பேதுரு 2:22, 23) சட்டத்தை மீறுபவர், தேவ தூஷணம் செய்பவர், வஞ்சிப்பவர், ரோமாபுரிக்கு எதிரான தேசத்துரோகி என அவர்கள் பல பொய்க் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தினர். இப்படியாக, இந்தப் பொய்யர் இயேசுவைப் பற்றி மிகவும் உருக்குலைந்த ஒரு சித்திரத்தை தீட்டினர்.

11இயேசுவை தவறாக பிரதிநிதித்துவம் செய்வது இன்றும் தொடருகிறது. தொழுவத்திலிருக்கும் ஒரு குழந்தையாக இயேசுவை பெரும்பாலானவர்கள் பாவிக்கின்றனர்; அல்லது முள் முடியோடும் வேதனைமிக்க முகத்தோடும் சிலுவையில் அறையப்பட்டவராக கற்பனை செய்கின்றனர். இப்படிப்பட்ட கருத்துக்களை கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் ஊட்டி வளர்த்திருக்கின்றனர். தேசங்களோடு கணக்கு தீர்க்கப்போகும் வல்லமை மிக்க பரலோக ராஜாவாக இயேசுவை சித்தரிக்க அவர்கள் தவறிவிட்டிருக்கின்றனர். மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை பூமியின் ராஜாக்கள் வெகு சீக்கிரத்தில் எதிர்ப்பட வேண்டும். அப்போது, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” கொடுக்கப்பட்டிருக்கும் மேசியாவுக்கு அவர்கள் கணக்குக் கொடுத்தாக வேண்டும்!​—மத்தேயு 28:⁠18.

இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர் யார்?

12‘உருக்குலைந்த தோற்றத்திலிருந்த’ மேசியா ‘பெரிதும் உயர்த்தப்படும்’ அற்புதமான மாற்றத்தை விவரித்த பிறகு ஏசாயா கேட்கிறார்: “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1) சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகளை ஏசாயாவின் இந்த வார்த்தைகள் எழுப்புகின்றன: இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுமா? வல்லமையை வெளிப்படுத்தும் திறனுக்கு அடையாளமான ‘தமது புயத்தை’ வெளிக்காட்டி, யெகோவா இந்த வார்த்தைகளை நிறைவேற்றுவாரா?

13நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதே பதில்! ஏசாயா கேட்டு, பதிவு செய்த இந்த தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறியது என்பதை பவுல் காட்டுகிறார். அவர் ரோமர்களுக்கு எழுதிய தன் கடிதத்தில் ஏசாயாவின் இந்த வார்த்தைகளை மேற்கோளாக குறிப்பிடுகிறார். பூமியில் பாடுகளை அனுபவித்த பிறகு இயேசு மகிமைப்படுத்தப்பட்டார் என்பது நற்செய்தி. என்றாலும் அவிசுவாசிகளான யூதர்களைக் குறித்து பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக் குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய [“கிறிஸ்துவைப் பற்றிய,” பொ.மொ.] வசனத்தினாலே வரும்.” (ரோமர் 10:16, 17) வருத்தகரமாக, பவுலின் நாட்களில் வாழ்ந்தவர்களில் சிலரே கடவுளுடைய ஊழியரைப் பற்றிய நற்செய்தியில் விசுவாசம் வைத்தனர். ஏன்?

14அடுத்தபடியாக, வசனம் 1-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள கேள்விகளுக்கான காரணங்களை இஸ்ரவேலர்களிடம் தீர்க்கதரிசனம் விளக்குகிறது. இதன் மூலம் ஏன் அநேகர் மேசியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் விவரிக்கிறது: “[கவனிப்பவனுக்கு] முன்பாக இளந்தளிரைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் எழும்புகிறார்; அவருக்கு ஆடம்பரமான தோற்றமுமில்லை, பகட்டுமில்லை; நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லை.” (ஏசாயா 53:2, NW) என்ன விதமான பின்னணியில் மேசியா உலக அரங்கில் தோன்றவிருக்கிறார் என்பதை இங்கு வாசிக்கிறோம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் தோன்றுவார்; காண்போருக்கு இவர் எந்த விதத்திலும் சிறப்படையப் போகிறவராக தோன்றார். மேலும், அடிமரத்திலிருந்து அல்லது ஒரு கிளையிலிருந்து முளைக்கும் இளந்தளிரை அல்லது குருத்தைப் போலவே இருப்பார். வறண்ட, தரிசு நிலத்தில் தோன்றும், தண்ணீரை சார்ந்திருக்கும் வேர் போல் இருப்பார். ராஜாவிற்குரிய பகட்டான ஆரவாரத்தோடும் படாடோபத்தோடும் அவர் வரப்போவதில்லை; ராஜ பரம்பரைக்கே உரிய வஸ்திரத்தோடும் ஜொலிக்கும் கிரீடத்தோடும் வரப்போவதில்லை. மாறாக, தாழ்மையான, எளிமையான விதத்தில் தோன்றவிருக்கிறார்.

15மனிதனாக, இயேசுவின் மிக எளிமையான ஆரம்பத்தை அந்த வார்த்தைகள் தெள்ளத்தெளிவாக விவரிக்கின்றன அல்லவா! சிறிய பட்டணமாகிய பெத்லகேமில் ஒரு தொழுவத்தில், யூத கன்னியாகிய மரியாள் அவரைப் பெற்றெடுத்தார். b (லூக்கா 2:7; யோவான் 7:42) மரியாளும் அவருடைய கணவர் யோசேப்பும் ஏழைகள். இயேசு பிறந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, ஏழைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட ‘ஒரு ஜோடு காட்டுப்புறாவை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை’ பாவநிவாரண பலியாக செலுத்த அவர்கள் கொண்டு சென்றார்கள். (லூக்கா 2:24; லேவியராகமம் 12:6-8) காலப்போக்கில், மரியாளும் யோசேப்பும் நாசரேத்தில் குடியேறினர்; அங்குதான் ஒரு பெரிய குடும்பத்தில் எளிமையான சூழ்நிலையில் இயேசு வளர்ந்தார்.​—மத்தேயு 13:55, 56.

16மனிதனாக, சரியான நிலத்திலே ஊன்றப்பட்ட வேரைப்போல இயேசு சரியான ஆரம்பத்தை உடையவராக இல்லை என தோன்றியது. (யோவான் 1:46; 7:41, 52) பரிபூரண மனிதனாகவும் தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்தவராகவும் இருந்தபோதிலும், எளிமையான பின்னணியிலிருந்து வந்ததால், அவருக்கு ‘ஆடம்பரமான தோற்றமும்’ இல்லை ‘பகட்டும்’ இல்லை. அதாவது, மிகவும் படாடோபமான பின்னணியிலிருந்து மேசியா வருவார் என எதிர்பார்த்தவர்களின் கண்களில் அவர் அப்படியில்லை. யூத மதத் தலைவர்களின் தூண்டுதலால், அநேகர் அவரை மதிக்காமல் அசட்டை செய்யவும் இகழவும் செய்தனர். இறுதியில், கடவுளின் பரிபூரண மகனிடம் எந்த விரும்பத்தக்க காரியத்தையும் அவர்கள் காணவில்லை.​—மத்தேயு 27:11-26.

“மனிதரால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்”

17மேசியா எப்படி கருதப்படுவார் என்றும் எவ்விதம் நடத்தப்படுவார் என்றும் ஏசாயா இப்போது விளக்கமாக விவரிக்க ஆரம்பிக்கிறார்: “அவர் மனிதரால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர், வலிகளை அனுபவித்து வியாதிகளை அறிந்துகொள்ளவே நிர்ணயிக்கப்பட்ட மனிதர்; நம்மிடமிருந்து அவருடைய முகம் மறைக்கப்பட்டதுபோல் இருந்தது; அவர் இகழப்பட்டார், அவரை நாம் மதிக்கவில்லை.” (ஏசாயா 53:3, NW) ஏசாயா தன் வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையால், அவை ஏற்கெனவே நிறைவேறியது போல இறந்தகாலத்தில் எழுதுகிறார். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மனுஷரால் இகழப்பட்டு, புறக்கணிக்கப்பட்டாரா? ஆம் நிச்சயமாகவே! சுயநீதிக்காரர்களாகிய மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றியவர்களும், மனிதரிலேயே மிகவும் வெறுக்கத்தக்கவராக அவரை கருதினர். வேசிகளுக்கும் ஆயக்காரர்களுக்கும் சிநேகிதன் என அவரை அழைத்தனர். (லூக்கா 7:34, 37-39) அவர் முகத்திலே காரி துப்பினர்; முஷ்டியால் குத்தினர். அவரை ஏசி, ஏளனம் செய்தனர். (மத்தேயு 26:67) சத்தியத்தின் இந்த எதிரிகளால், இயேசுவுக்கு ‘சொந்தமானவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.’​—யோவான் 1:10, 11.

18பரிபூரண மனிதராக இயேசு வியாதிப்படவே இல்லை. என்றாலும், ‘வலிகளை அனுபவித்து வியாதிகளை அறிந்துகொள்ளவே நிர்ணயிக்கப்பட்ட மனிதராக’ இருந்தார். அப்படிப்பட்ட வலிகளும் வியாதிகளும் அவருடையதல்ல. வியாதிகள் நிறைந்த இந்த உலகத்திற்கு இயேசு பரலோகத்திலிருந்து வந்தார். வேதனை மற்றும் வலியின் மத்தியில் வாழ்ந்தார்; இருந்தாலும், சரீரப்பிரகாரமாகவோ ஆவிக்குரிய விதமாகவோ வியாதிப்பட்டிருந்த ஜனங்களை அவர் வெறுத்து ஒதுக்கவில்லை. பரிவான ஒரு வைத்தியனைப்போல், தம்மைச் சுற்றியிருந்தவர்களின் வேதனையை மிக நன்றாக அறிந்துகொண்டார். மேலும், எந்தவொரு சாதாரண வைத்தியனாலும் செய்ய முடியாததை அவரால் செய்ய முடிந்தது.​—லூக்கா 5:27-32.

19இருந்தபோதிலும், இயேசுவின் எதிரிகள் அவரையே வியாதிப்பட்டவராக கருதினர்; அவரை விருப்பத்தோடு பார்க்க மறுத்தனர். அவருடைய முகம் பார்வையிலிருந்து ‘மறைக்கப்பட்டு’ இருந்தது. ஆனால் மற்றவர்களுடைய பார்வையிலிருந்து தம் முகத்தை அவர் மறைத்துக் கொண்டார் என இது அர்த்தப்படுத்தவில்லை. “காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்” என பொது மொழிபெயர்ப்பு ஏசாயா 53:3-⁠ல் வரும் வாக்கியத்தை மொழிபெயர்க்கிறது. இயேசுவின் எதிரிகள் அவரை கொடூரமானவராக கருதினர்; எனவே, பார்ப்பதற்கு அவ்வளவு அருவருப்பானவர் போல முகத்தைத் திருப்பிக்கொண்டனர். ஒரு அடிமையின் விலைக்கு சமமாகவே அவரை எண்ணினர். (யாத்திராகமம் 21:32; மத்தேயு 26:14-16) கொலைகாரனாகிய பரபாஸைவிட கேவலமாக அவரைக் கருதினர். (லூக்கா 23:18-25) இயேசுவைப் பற்றி தரக்குறைவாக எண்ணியதை காட்டுவதற்கு இதைவிட மோசமான வழி வேறு ஏதேனும் இருந்திருக்க முடியுமா?

20ஏசாயாவின் வார்த்தைகளிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் இன்று அதிக ஆறுதலைப் பெற முடியும். சில சமயங்களில், எதிரிகள் யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாரை ஏளனம் செய்யலாம் அல்லது ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருக்கலாம். இருந்தாலும், இயேசுவின் விஷயத்தைப் போலவே, யெகோவா தேவன் நம்மை எப்படி மதிக்கிறார் என்பதே இப்போதும் முக்கியம். மனிதர்கள் இயேசுவை கொஞ்சமும் ‘மதிக்கவில்லை’ என்றாலும், கடவுளுடைய பார்வையில் அவருக்கு இருந்த அரிய மதிப்பை அது கொஞ்சமும் மாற்றவில்லை!

‘நம் மீறுதல்களினிமித்தம் குத்தப்பட்டார்’

21மேசியா ஏன் பாடு அனுபவித்து சாக வேண்டியிருந்தது? ஏசாயா விளக்குகிறார்: “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை [“வியாதிகளை,” NW] ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் [“வலிகளை,” NW] சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு [“குத்தப்பட்டு,” NW], நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”​—ஏசாயா 53:4-6.

22மற்றவர்களுடைய வியாதிகளையும் வலிகளையும் மேசியா சுமந்தார். அடையாள அர்த்தத்தில், மற்றவர்களுடைய சுமைகளையும் பாரங்களையும் தம் தோள்மீது சுமந்தார். மனிதகுலத்தினுடைய பாவத்தன்மையின் விளைவே வியாதியும் வலியும். எனவே, மற்றவர்களுடைய பாவங்களை மேசியா சுமந்தார். அவருடைய பாடுகளுக்கான காரணத்தை அநேகர் புரிந்து கொள்ளாமல் கடவுள்தான் அவரை தண்டித்தார் என்பதாகவும் அருவருக்கத்தக்க வியாதியைக் கொடுத்து அவரை வாதித்தார் என்பதாகவும் நினைத்தார்கள். c மேசியாவின் பாடுகள் அனைத்தின் உச்சக்கட்டமாக அவர் குத்தப்பட்டு, நொறுக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டார்​—⁠வேதனைமிக்க கொடூரமான மரணத்தை குறித்துக் காட்டும் வலிமையான வார்த்தைகளல்லவா! ஆனால் அவருடைய மரணம் பாவத்தைப் போக்கும் சக்திபெற்றது; குற்றத்திலும் பாவத்திலுமே உழன்று கொண்டிருப்போர் அவற்றிலிருந்து மீள ஓர் அடிப்படையை அளிக்கிறது, அவர்கள் கடவுளோடு சமாதானமாக இருக்கவும் உதவுகிறது.

23மற்றவர்களுடைய பாடுகளை எப்படி மேசியா சுமந்தார்? ஏசாயா 53:4-ஐ மேற்கோள் காண்பித்து, மத்தேயு சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்: அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 8:16, 17) பல வியாதிகளோடு தம்மிடம் வந்தவர்களை இயேசு குணப்படுத்தினார்; இப்படியாக, அவர்களுடைய பாடுகளையெல்லாம் அவர் ஏற்றுக் கொண்டார். அப்படி குணப்படுத்தும்போது அவரிடமிருந்த சக்தி வெளிப்பட்டது. (லூக்கா 8:43-48) எல்லா விதமான​—⁠சரீர மற்றும் ஆன்மீக​—⁠நோய்களையும் அவரால் குணப்படுத்த முடிந்தது. இது, பாவத்திலிருந்து ஜனங்களை மீட்க அவருக்கு வல்லமை இருந்ததை நிரூபித்தது.​—மத்தேயு 9:2-8.

24ஆனால், இயேசு கடவுளால் ‘வாதிக்கப்படுவதாகவே’ அநேகருக்கு தோன்றியது. சமுதாயத்தில் மதிப்புக்குரியவர்களாக இருந்த மதத் தலைவர்களின் தூண்டுதலாலேயே அவர் அந்த பாடுகளை அனுபவித்தார். ஆனால், சொந்த பாவங்களுக்காக அவர் பாடுகளை அனுபவிக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள். “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” என பேதுரு சொல்கிறார். (1 பேதுரு 2:21, 22, 24) நாம் அனைவரும் பாவிகளாக, ஒரு காலத்தில் நம்பிக்கையற்ற நிலையில் ‘சிதறுண்ட ஆடுகளைப் போல்’ இருந்தோம். (1 பேதுரு 2:25) என்றாலும், இயேசு மூலமாக யெகோவா பாவத்திலிருந்து மீட்பை அருளினார். நம் எல்லாருடைய அக்கிரமங்களையும் இயேசுமேல் “விழப்பண்ணினார்,” அதாவது அவர்மேல் தங்கச்செய்தார். நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை பாவமற்ற இயேசு மனமுவந்து அனுபவித்தார். கழுமரத்தில் அவமானத்திற்குரிய மரணத்தை அனுபவிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை; இருந்தாலும், நாம் கடவுளோடு ஒப்புரவாவதற்காக அதை அனுபவித்தார்.

“தம்மை ஒடுக்க அனுமதித்தார்”

25பாடனுபவித்து மரிக்க மேசியா மனமுள்ளவராக இருந்தாரா? ஏசாயா சொல்கிறார்: “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார் [“தம்மை ஒடுக்க அனுமதித்தார்,” NW], ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” (ஏசாயா 53:7) பூமிக்குரிய தம் வாழ்க்கையின் கடைசி இரவில், தம்முடைய உதவிக்காக “பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை” இயேசு அழைத்திருக்க முடியும். ஆனால் “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்”? என கேட்டார். (மத்தேயு 26:53, 54) “தேவ ஆட்டுக்குட்டி” எந்த விதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. (யோவான் 1:29) பிலாத்துவுக்கு முன், பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தியபோது, இயேசு “பதில் ஒன்றும் சொல்லவில்லை.” (மத்தேயு 27:11-14, தி.மொ.) தமக்கான கடவுளுடைய சித்தம் நிறைவேறுவதற்கு தடையாய் இருக்கும் எதையுமே அவர் சொல்ல விரும்பவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை பாவம், நோய், மரணம் ஆகியவற்றிலிருந்து தம் மரணம் விடுவிக்கும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே பலியாட்டைப்போல இறக்க இயேசு தயாராய் இருந்தார்.

26மேசியாவின் பாடுகளையும் அவமானத்தையும் பற்றிய கூடுதலான விவரங்களை இப்போது ஏசாயா கொடுக்கிறார். தீர்க்கதரிசி எழுதுவதாவது: “இடுக்கணிலும் [“கட்டுப்பாட்டிலும்,” NW] நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.” (ஏசாயா 53:8) இறுதியில் இயேசு தம்முடைய எதிரிகளால் கொண்டு செல்லப்பட்டபோது, இந்த மதத் தலைவர்கள் அவரை நடத்திய விதத்தில் ‘கட்டுப்பாட்டை’ காட்டினர். தங்கள் வெறுப்பை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக்கொண்டனர் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை; மாறாக, நீதியைக் கட்டுப்படுத்தினர் அல்லது காட்டாமல் இருந்தனர். கிரேக்க செப்டுவஜின்ட் ஏசாயா 53:8-ஐ மொழிபெயர்க்கையில், ‘கட்டுப்பாடு’ என்பதற்கு பதிலாக “அவமானம்” என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இயேசுவின் எதிரிகள், சாதாரணமான கொலைக் குற்றவாளியை எப்படி நியாயமாக நடத்த வேண்டுமோ அப்படிக்கூட அவரை நடத்தாமல் அவமானப்படுத்தினார்கள். இயேசுவின் விசாரணை நீதியையே புரட்டுவதாக அமைந்தது. எப்படி?

27இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்ற தீவிரத்தில் யூத மதத் தலைவர்கள் தங்கள் சட்டங்களையே மீறினர். யூத பாரம்பரியத்தின்படி, மரண தண்டனைக்குரிய வழக்கை நியாயசங்கம் நடத்தலாம்; ஆனால் அது பிரதான ஆசாரியனின் வீட்டில் அல்ல, ஆலய வளாகத்திலுள்ள வெட்டப்பட்ட கற்களின் அறையில்தான் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட வழக்கு பகல் நேரத்தில்தான் நடத்தப்பட வேண்டும்; சூரிய அஸ்தமனத்திற்கு பிறகல்ல. மரண தண்டனைக்குரிய வழக்கில், விசாரணை நடத்தி முடிந்தபின், அடுத்த நாள்தான் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே, ஓய்வுநாள் அல்லது பண்டிகை நாளுக்கு முந்தைய தினத்தில் வழக்குகள் நடத்தப்படக் கூடாது. ஆனால் இந்த எல்லா விதிகளுமே இயேசுவின் விசாரணையில் புறக்கணிக்கப்பட்டன. (மத்தேயு 26:57-68) இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வழக்கை நடத்தும்போதும் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தை அந்த மதத் தலைவர்கள் பகிரங்கமாக மீறினார்கள். உதாரணமாக, இயேசுவை சிக்க வைப்பதற்காக லஞ்சம் கொடுத்தனர். (உபாகமம் 16:19; லூக்கா 22:2-6) பொய் சாட்சிகளுடைய வாக்கை ஏற்றுக் கொண்டனர். (யாத்திராகமம் 20:16; மாற்கு 14:55, 56) ஒரு கொலைகாரனை விடுவிக்க சதித்திட்டம் தீட்டினர்; இப்படியாக, தங்கள்மீதும் தேசத்தின்மீதும் இரத்தப்பழியை வரவழைத்துக் கொண்டனர். (எண்ணாகமம் 35:31-34; உபாகமம் 19:11-13; லூக்கா 23:16-25) எனவே, ‘நியாயத்தீர்ப்பு’ கொடுக்கப்படவில்லை; அதாவது சரியான, பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்க நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை.

28தாங்கள் விசாரிக்கும் மனிதர் உண்மையிலேயே யார் என்பதை இயேசுவின் எதிரிகள் துருவி ஆராய்ந்தனரா? ஏசாயாவும் இதே விதமான கேள்வியைத்தான் கேட்கிறார்: “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்”? இங்கு ‘வம்சம்’ என்ற பதம் ஒருவருடைய பரம்பரையை அல்லது பின்னணியை குறிக்கலாம். நியாயசங்க உறுப்பினர்கள் இயேசுவை விசாரிக்கும்போது அவருடைய பின்னணியை​—⁠வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவிற்குரிய தகுதிகள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்ததை​—⁠கருத்தில் கொள்ள தவறினர். மாறாக, தேவ தூஷணம் சொன்னார் எனவும் மரண தண்டனைக்கு தகுதியானவர் எனவும் அவர்மீது பழி சுமத்தினர். (மாற்கு 14:64) பின்னர், ரோம அதிபதி பொந்தியு பிலாத்துவும் அவர்களுடைய சதிக்கு உடன்பட்டு, இயேசுவை கழுமரத்தில் அறைய தீர்ப்பு அளித்தான். (லூக்கா 23:13-25) இவ்வாறு, இயேசு 33 1/2 வயதில், தமது வாழ்க்கையின் மத்திபத்தில் “அறுப்புண்டுபோனார்” அல்லது இறந்தார்.

29மேசியா மரிப்பதையும் அடக்கம் பண்ணப்படுவதையும் குறித்து ஏசாயா அடுத்ததாக எழுதுகிறார்: “துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே [“ஐசுவரியவான்களோடு,” NW] இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.” (ஏசாயா 53:9) மரணத்திலும் அடக்கம் பண்ணப்படுவதிலும் இயேசு எப்படி துன்மார்க்கரோடும் ஐசுவரியவான்களோடும் இருந்தார்? பொ.ச. 33, நிசான் 14-⁠ம் தேதி, எருசலேமின் மதிற்சுவர்களுக்கு வெளியே கழுமரத்தில் இறந்தார். இரு கள்ளர்களுக்கு இடையே அறையப்பட்டதால், ஒரு விதத்தில் அவரது பிரேதக்குழி அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடம் துன்மார்க்கரோடே இருந்தது. (லூக்கா 23:33) என்றாலும் இயேசு இறந்த பிறகு, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த ஐசுவரியவானாகிய யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவருடைய உடலை அடக்கம் பண்ணுவதற்காக பிலாத்துவிடம் அனுமதி கோரினார். பிறகு, நிக்கொதேமு என்பவரோடு சேர்ந்து, இயேசுவின் உடலை அடக்கம் பண்ணுவதற்குத் தயார்படுத்தி, தனக்கு சொந்தமான புதிதாக வெட்டப்பட்ட கல்லறையிலே வைத்தார். (மத்தேயு 27:57-60; யோவான் 19:38-42) இவ்வாறு, இயேசுவின் பிரேதக்குழி ஐசுவரியவான்களோடும் இருந்தது.

யெகோவா ‘அவரை நொறுக்குவதில் ஆனந்தப்பட்டார்’

30அடுத்தபடியாக, திகைப்பூட்டும் ஒரு விஷயத்தை ஏசாயா சொல்கிறார்: “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி [“நொறுக்குவதில் ஆனந்தப்பட்டு,” NW] அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய [“ஊழியராகிய,” NW] நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.” (ஏசாயா 53:10, 11) தம் உண்மையுள்ள ஊழியர் நொறுக்கப்படுவதில் யெகோவா எப்படி ஆனந்தப்பட முடியும்? யெகோவாவே தம் அருமை மகன்மீது பாடுகளை சுமத்தவில்லை என்பது உண்மை. இயேசுவுக்கு நேர்ந்த துன்பங்களுக்கெல்லாம் முழு காரணம் அவரது எதிரிகளே. ஆனால் அப்படி கொடூரமாக நடத்த யெகோவா அவர்களை அனுமதித்தார். (யோவான் 19:11) எதற்காக? பரிவும் இரக்கமும் உருவான கடவுள், அப்பாவியான தம் மகன் துன்பப்படுவதைப் பார்த்து நிச்சயமாகவே வேதனையடைந்தார். (ஏசாயா 63:9; லூக்கா 1:77, 78) யெகோவா எந்த விதத்திலுமே இயேசு மீது வெறுப்பு கொள்ளவில்லை. என்றாலும், தம் மகன் பாடு அனுபவிக்க முன்வந்ததில் யெகோவா ஆனந்தப்பட்டார்; ஏனென்றால், அது பல ஆசீர்வாதங்களுக்கு வழிவகுக்கும்.

31இயேசுவின் ஆத்துமாவை “குற்றநிவாரணபலியாக” யெகோவா ஏற்பாடு செய்தது அந்த ஆசீர்வாதங்களில் ஒன்று. எனவே, இயேசு பரலோகத்திற்கு சென்றபோது, குற்றநிவாரணபலியாக தாம் கொடுத்த மனித வாழ்க்கையின் கிரயத்தோடு யெகோவாவின் சந்நிதானத்தில் பிரவேசித்தார். முழு மனிதகுலத்தின் சார்பாக அளிக்கப்பட்ட அந்தப் பலியை யெகோவாவும் பிரியத்தோடு ஏற்றுக்கொண்டார். (எபிரெயர் 9:24; 10:5-14) தாம் அளித்த குற்றநிவாரணபலியின் வாயிலாக, இயேசு ஒரு ‘சந்ததியைப்’ பெற்றார். ‘நித்திய பிதாவாக,’ தாம் சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைப்போருக்கு நித்திய ஜீவனை அவரால் கொடுக்க முடியும். (ஏசாயா 9:6) மனிதனாக இயேசு அனுபவித்த எல்லா பாடுகளும் சொல்லி முடியாதவை. ஆனால் அவையனைத்தும், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீளும் அரிய வாய்ப்பை மனிதகுலத்திற்கு தந்தது அவருக்கு நிச்சயம் திருப்தியளித்திருக்கும் அல்லவா? தாம் உத்தமமாய் நிலைத்திருந்ததால், எதிரியாகிய பிசாசாகிய சாத்தானின் நிந்தனைகள் அனைத்திற்கும் தம் பரலோக தகப்பனால் பதிலளிக்க முடிந்தது என்பது அதைவிட இன்னும் அதிக திருப்தியை அளித்திருக்கும்.​—நீதிமொழிகள் 27:⁠11.

32இப்போதும் ‘அநேகர் நீதிமான்களாக்கப்படுவது’ இயேசுவின் மரணத்தால் விளையும் மற்றொரு ஆசீர்வாதம். இதைத் “தம்மைப்பற்றும் அறிவினால்” அவர் நிறைவேற்றுவதாக ஏசாயா சொல்கிறார். இயேசு மனிதனாக வந்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்ததால் அநியாயமாக அனுபவித்த பாடுகளாலே பெற்ற அறிவே அது. (எபிரெயர் 4:15) மரணம் வரை வேதனையை அனுபவித்ததால், மற்றவர்கள் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தேவைப்படுகிற பலியை அவரால் அளிக்க முடிந்தது. யார் இவ்வாறு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்? முதலாவது, அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள். இயேசுவின் பலியில் அவர்கள் விசுவாசம் வைப்பதால், யெகோவா அவர்களை நீதிமான்களாக அறிவிக்கிறார்; அவர்களை புத்திரர்களாகவும் இயேசுவோடு உடன் சுதந்தரவாளிகளாகவும் ஏற்றுக்கொள்கிறார். (ரோமர் 5:19; 8:16, 17) அவர்களோடுகூட, ‘திரள்கூட்டமாகிய’ “வேறே ஆடுகளும்” நீதிமான்களாக தீர்க்கப்படுகின்றனர்; இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைப்பதால் இவர்களும் கடவுளுடைய நண்பர்களாக இருக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர். அர்மகெதோனை தப்பிப்பிழைக்கும் அரிய எதிர்பார்ப்பும் இவர்களுக்கு காத்திருக்கிறது.⁠—வெளிப்படுத்துதல் 7:9; 16:14, 16; யோவான் 10:16; யாக்கோபு 2:23, 25.

33கடைசியாக, மேசியாவின் வெற்றியை ஏசாயா விவரிக்கிறார்: “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் [“அநேகருள் அவருக்கும் பங்கு,” NW] கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார் [“வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்,” பொ.மொ.].”​—ஏசாயா 53:⁠12.

34ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியில் வரும் முடிவான வார்த்தைகள் யெகோவாவைப் பற்றி நெஞ்சைத் தொடும் ஒரு காரியத்தை கற்பிக்கின்றன: அவருக்கு உத்தமமாய் நிலைப்பவர்களை அவர் பெரிதாய் மதிக்கிறார். அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதி இதை உறுதிப்படுத்துகிறது. “அநேகருள் அவருக்கும் பங்கு கொடுப்பேன்” என மேசியானிய ஊழியருக்கு அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். போரில் கொள்ளைப் பொருட்களை பங்கிட்டுக்கொள்ளும் பழக்கத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள் இவை. நோவா, ஆபிரகாம், யோபு போன்ற பூர்வகால உண்மையுள்ள ‘அநேகரின்’ உத்தமத்தை யெகோவா மதிக்கிறார்; மேலும், வர இருக்கிற அவருடைய புதிய உலகில் அவர்களுக்காக ‘பங்கை’ ஒதுக்கி வைத்திருக்கிறார். (எபிரெயர் 11:13-16) அதுபோலவே, மேசியானிய ஊழியருக்கும் ஒரு பங்கை அளிப்பார். அவருடைய உத்தமத்திற்கு யெகோவா பலனளிக்காமல் இருக்க மாட்டார். யெகோவா, ‘தம் நாமத்திற்காக காண்பிக்கும் அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடமாட்டார்’ என நாமும் உறுதியாக இருக்கலாம்.​—எபிரெயர் 6:⁠10.

35கடவுளுடைய இந்த ஊழியர் தம் எதிரிகளை வென்று, போரின் கொள்ளைப் பொருட்களையும் பெறுவார். இதை “வலியவரோடு” பங்கிட்டுக் கொள்வார். யார் இந்த ‘வலியவர்’? இயேசுவைப் போலவே உலகை வெல்லும் அவரது முதல் சீஷர்களே​—⁠‘தேவனுடைய இஸ்ரவேலாகிய’ 1,44,000 பேரே. (கலாத்தியர் 6:16; யோவான் 16:33; வெளிப்படுத்துதல் 3:21; 14:1) அப்படியானால், அந்த கொள்ளைப் பொருட்கள் என்ன? ‘மனிதரில் வரங்கள்’ இவர்கள். இயேசு இவர்களை சாத்தானுடைய பிடியிலிருந்து வென்று கிறிஸ்தவ சபைக்கு கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8-12, NW) ‘வலியவராகிய’ 1,44,000 பேருக்கு மற்றொரு கொள்ளைப் பொருளிலும் பங்கு கொடுக்கப்படுகிறது. அவர்கள் உலகத்தை வெல்வதால், கடவுளை நிந்திப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் சாத்தானுக்கு கொடுப்பதில்லை. அசைக்க முடியாத அவர்களுடைய பக்தி, யெகோவாவை மகிமைப்படுத்துகிறது, அவருடைய இருதயத்தை மகிழ்விக்கிறது.

36கடவுளுடைய ஊழியரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை தாம் நிறைவேற்றுவதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். அவர் கைது செய்யப்பட்ட அந்த இரவில், ஏசாயா 53:12-⁠ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள் காண்பித்து அவற்றை தமக்கு பொருத்தினார்: “அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேற வேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப் பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது” என்று சொன்னார். (லூக்கா 22:36, 37) அக்கிரமக்காரரில் ஒருவராக இயேசு நடத்தப்பட்டார் என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. சட்டத்தை மீறுபவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, இரு கள்ளர்கள் நடுவே கழுமரத்தில் அறையப்பட்டார். (மாற்கு 15:27) இருந்தாலும், இந்த நிந்தையை அவர் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். நாம் கடவுளோடு ஒப்புரவாவதற்கே அதை ஏற்றுக்கொண்டிருப்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார். பாவிகளுக்கும் பாவத்தின் தண்டனையாகிய மரணம் எனும் அடிக்கும் இடையே அவர் நின்றார்; அந்த அடியை தாமே வாங்கிக் கொண்டார்.

37இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய சரித்திரப்பூர்வ பதிவு, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் மேசியானிய ஊழியர் இயேசு கிறிஸ்துவே என துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது. தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஊழியர் எனும் பாகத்தை தமது அருமையான மகன் நிறைவேற்ற யெகோவா அனுமதித்தார்; அதோடு, நாம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்கப்பட அவர் பாடுகளை அனுபவித்து சாகவும் யெகோவா அனுமதித்தார். இதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! இந்த வகையில், யெகோவா நம்மிடம் அளவுகடந்த அன்பை காட்டியுள்ளார். ரோமர் 5:8 சொல்கிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” இப்போது மகிமையில் உயர்த்தப்பட்டிருக்கும் கடவுளுடைய ஊழியராகிய இயேசு கிறிஸ்து நமக்காக தம் ஜீவனைக் கொடுத்ததற்காகவும் நாம் எந்தளவு கடமைப்பட்டிருக்க வேண்டும்!

[அடிக்குறிப்புகள்]

a ஜே. எஃப். ஸ்டென்னிங் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட, (பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த) ஜோனதன் பென் உஸ்ஸியேலின் டார்கம், ஏசாயா 52:13-ஐ பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இதோ, என் ஊழியர், அபிஷேகம் பண்ணப்பட்டவர் (அல்லது, மேசியா), வெற்றி சிறப்பார்.” அதுபோலவே, (ஏறக்குறைய பொ.ச. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த) பாபிலோனிய டால்மூட் சொல்வதாவது: “மேசியா​—⁠அவருடைய பெயர் என்ன? . . . ரபீக்களின் வீட்டார் [பிணியாளி என்று கூறுகின்றனர்], ஏனெனில் அவர் ‘நம் பிணிகளைச் சுமந்தவர்’ என்று சொல்லப்படுகிறது.”​—⁠சன்ஹெட்ரின் 98ஆ; ஏசாயா 53:⁠4.

b ‘யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியது’ என பெத்லகேமை மீகா தீர்க்கதரிசி குறிப்பிட்டுள்ளார். (மீகா 5:⁠2) என்றாலும், மேசியா பிறந்த பட்டணம் எனும் தனிச்சிறப்பை இந்தச் சிறிய பெத்லகேம் பெற்றது.

c ‘வாதிக்கப்படுதல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய பதம், குஷ்டரோகத்தை குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (2 இராஜாக்கள் 15:⁠5) மேசியா ஒரு குஷ்டரோகியாக இருப்பார் என்ற கருத்தை ஏசாயா 53:4-லிருந்து சில யூதர்கள் பெற்றிருக்கலாம் என வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். “குஷ்டரோகியான வல்லுநர்” என அவரை அழைத்து, பாபிலோனிய டால்மூட் இந்த வசனத்தை மேசியாவுக்கு பொருத்துகிறது. லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பை பின்பற்றி, கத்தோலிக்க டூவே வர்ஷன் இந்த வசனத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ஒரு குஷ்டரோகியாகத்தான் அவரை நாங்கள் நினைத்திருந்தோம்.”

[கேள்விகள்]

1, 2. (அ) பொ.ச. முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அநேக யூதர்கள் எதிர்ப்பட்ட நிலைமையை விவரிக்கவும். (ஆ) மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு உண்மையுள்ள யூதர்களுக்கு உதவ யெகோவா என்ன ஏற்பாட்டை செய்திருந்தார்?

3. ஏசாயா 52:13–53:12-⁠ல் மேசியாவைப் பற்றி என்ன விவரம் கொடுக்கப்பட்டுள்ளது?

4. “ஊழியர்” யாரைக் குறிப்பதாக சில யூத வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர், ஆனால் இவை ஏன் ஏசாயா தீர்க்கதரிசனத்தோடு பொருந்துவதில்லை?

5. (அ) யூத வல்லுநர்கள் சிலர் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை எவ்வாறு பொருத்தியிருக்கின்றனர்? (அடிக்குறிப்பைக் காண்க.) (ஆ) ஊழியரை அடையாளம் கண்டுகொள்வதற்கு என்ன தெளிவான விவரங்கள் பைபிளில் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன?

6. கடவுளுடைய சித்தத்தை மேசியா வெற்றிகரமாக செய்து முடிப்பார் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படி சுட்டிக்காட்டுகிறது?

7. இயேசு கிறிஸ்து எப்படி ‘உட்பார்வையோடு நடந்துகொண்டார்,’ அவர் எப்படி ‘மேன்மைப்படுத்தப்பட்டு பெரிதும் உயர்த்தப்பட்டார்’?

8, 9. மகிமைப்படுத்தப்பட்ட இயேசு நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வருகையில் பூமியின் ராஜாக்கள் என்ன செய்வார்கள், ஏன்?

10, 11. முதல் நூற்றாண்டில் இயேசுவின் தோற்றம் உருக்குலைக்கப்பட்டதாக எவ்வாறு சொல்லலாம், இன்றும் இது எப்படி நடக்கிறது?

12. சிந்தனையைத் தூண்டும் என்ன கேள்விகளை ஏசாயா 53:1-⁠ல் உள்ள வார்த்தைகள் எழுப்புகின்றன?

13. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேறியது என்பதை பவுல் எப்படி காட்டினார், ஆனால் என்ன பிரதிபலிப்பு இருந்தது?

14, 15. என்ன பின்னணியில் மேசியா உலக அரங்கில் தோன்றவிருக்கிறார்?

16. “ஆடம்பரமான” அல்லது ‘பகட்டான’ தோற்றம் இயேசுவுக்கு இல்லை என்பது எந்த விதத்தில் உண்மை?

17. (அ) ஏசாயா எதைக் குறித்து விவரிக்க ஆரம்பிக்கிறார், ஏன் அதை இறந்தகாலத்தில் எழுதுகிறார்? (ஆ) இயேசுவை ‘இகழ்ந்து புறக்கணித்தது’ யார், எவ்வாறு செய்தனர்?

18. இயேசு ஒருபோதும் வியாதிப்படாததால், எப்படி ‘வலிகளை அனுபவித்து வியாதிகளை அறிந்துகொள்ளவே நிர்ணயிக்கப்பட்ட மனிதராக’ இருந்தார்?

19. யாருடைய முகம் ‘மறைக்கப்பட்டு’ இருந்தது, இயேசுவை ‘மதிக்காததை’ அவருடைய எதிரிகள் எப்படி காட்டினர்?

20. ஏசாயாவின் வார்த்தைகள் இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன ஆறுதலைத் தருகின்றன?

21, 22. (அ) மற்றவர்கள் சார்பாக மேசியா எதை சுமந்தார்? (ஆ) அநேகர் மேசியாவை எப்படி கருதினர், அவருடைய பாடுகள் அனைத்தின் உச்சக்கட்டம் என்ன?

23. மற்றவர்களுடைய பாடுகளை இயேசு எந்த விதத்தில் சுமந்தார்?

24. (அ) கடவுளால் இயேசு ‘வாதிக்கப்பட்டதாக’ ஏன் அநேகருக்கு தோன்றியது? (ஆ) இயேசு ஏன் பாடுகளை அனுபவித்து மரித்தார்?

25. மேசியா மனமுவந்து பாடுகளை அனுபவித்து மரித்தார் என்பது நமக்கு எப்படி தெரியும்?

26. இயேசுவின் எதிரிகள் என்ன விதத்தில் ‘கட்டுப்பாட்டை’ காட்டினர்?

27. இயேசுவை விசாரிக்கையில் யூத மதத் தலைவர்கள் என்ன விதிகளை புறக்கணித்தனர், எந்த விதத்தில் கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டத்தை மீறினர்?

28. இயேசுவின் எதிரிகள் எதை கருத்தில் கொள்ள தவறினர்?

29. இயேசுவின் பிரேதக்குழி எப்படி ‘துன்மார்க்கரோடும்,’ ‘ஐசுவரியவான்களோடும்’ இருந்தது?

30. இயேசு நொறுக்கப்படும்போது யெகோவா எந்த அர்த்தத்தில் ஆனந்தப்பட்டார்?

31. (அ) இயேசுவின் சரீரத்தை “குற்றநிவாரணபலியாக” எந்த விதத்தில் யெகோவா தயார்படுத்தினார்? (ஆ) மனிதனாக இயேசு அனுபவித்த எல்லா பாடுகளுக்கும்பின், குறிப்பாக எது அவருக்கு திருப்தியளித்திருக்கும்?

32. எந்த “அறிவினால்” இயேசு ‘அநேகரை நீதிமான்களாக்குகிறார்,’ இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறது?

33, 34. (அ) யெகோவாவைப் பற்றி நெஞ்சைத் தொடும் என்ன விஷயத்தை நாம் கற்கிறோம்? (ஆ) மேசியானிய ஊழியரோடுகூட ‘பங்கைப்’ பெறப் போகும் ‘அநேகர்’ யார்?

35. இயேசுவோடு கொள்ளைப் பொருட்களை பங்கிட்டுக் கொள்ளும் ‘வலியவர்’ யார், கொள்ளைப் பொருட்கள் யாவை?

36. கடவுளுடைய ஊழியரைக் குறித்த தீர்க்கதரிசனத்தை தாம் நிறைவேற்றுவதை இயேசு அறிந்திருந்தாரா? விளக்கவும்.

37. (அ) இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய சரித்திரப்பூர்வ பதிவு யாரை அடையாளம் காண உதவுகிறது? (ஆ) யெகோவா தேவனுக்கும் மகிமையில் உயர்த்தப்பட்டிருக்கும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

[பக்கம் 212-ன் அட்டவணை]

யெகோவாவின் ஊழியராக

இயேசு விளங்கியது எப்படி

தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்

ஏசா. 52:13, NW உயர்த்தப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டார் அப். 2:34-36; பிலி. 2:8-11;

1 பே. 3:⁠22

ஏசா. 52:14, NW தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு மத். 11:19; 27:39-44, 63, 64;

அவமதிக்கப்பட்டார் யோவா. 8:48; 10:⁠20

ஏசா. 52:15, NW அநேக தேசங்களை மத். 24:30; 2 தெ. 1:6-10;

அதிர்ச்சிக்குள்ளாக்கினார் வெளி. 1:7

ஏசா. 53:1 விசுவாசிக்கப்படவில்லை யோவா. 12:37, 38; ரோ. 10:11, 16, 17

ஏசா. 53:2 மனிதனாக தாழ்மையான, லூக். 2:7; யோவா. 1:⁠46

எளிய ஆரம்பம்

ஏசா. 53:3 இகழப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார் மத். 26:67; லூக். 23: 18-25;

யோவா. 1:10, 11

ஏசா. 53:4 நம் வியாதிகளை சுமந்தார் மத். 8:16, 17; லூக். 8:43-48

ஏசா. 53:5, NW குத்தப்பட்டார் யோவா. 19:⁠34

ஏசா. 53:6 மற்றவர்களுடைய பாவங்களுக்காக 1 பே. 2:21-25

பாடனுபவித்தார்

ஏசா. 53:7 பழி சுமத்துவோர் முன் அமைதியாகவும் மத். 27:11-14; மாற். 14:60, 61;

குறைகூறாமலும் இருந்தார் அப். 8:32, 35

ஏசா. 53:8 அநியாயமாக விசாரிக்கப்பட்டு மத். 26:57-68; 27:1, 2, 11-26;

தீர்ப்பளிக்கப்பட்டார் யோவா. 18:12-14, 19-24, 28-40

ஏசா. 53:9 ஐசுவரியவான்களோடே மத். 27:57-60; யோவா. 19:38-42

அடக்கம் பண்ணப்பட்டார்

ஏசா. 53:10 குற்றநிவாரண பலியாக அவரது எபி. 9:24; 10:5-14

ஆத்துமா ஆயத்தப்படுத்தப்பட்டது

ஏசா. 53:11 அநேகர் நீதிமான்களாக்கப்படுவதற்கு ரோ. 5:18, 19; 1 பே. 2:24;

வாய்ப்பை திறந்தார் வெளி. 7:⁠14

ஏசா. 53:12 பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் மத். 26:55, 56; 27:38; லூக். 22:36, 37

[பக்கம் 203-ன் படம்]

‘அவர் மனிதரால் இகழப்பட்டார்’

[பக்கம் 206-ன் படம்]

‘அவர் தம் வாயைத் திறக்கவில்லை’

[படத்திற்கான நன்றி]

ஆன்டோன்யோ சீஸரீ என்பவரின் “எக்க ஹோமோ” என்ற புத்தகத்திலிருந்து

[பக்கம் 211-ன் படம்]

‘அவர் தம் ஆத்துமாவை மரணத்திலூற்றினார்’