Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தமக்கென அழகிய பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்

யெகோவா தமக்கென அழகிய பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்

அதிகாரம் இருபத்து நான்கு

யெகோவா தமக்கென அழகிய பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்

ஏசாயா 63:1-14

சுமார் இரண்டாயிரம் வருடங்களாகவே கிறிஸ்தவர்கள் ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.’ (2 பேதுரு 3:12; தீத்து 2:13) அந்த நாள் வருவதற்காக அவர்கள் ஆவலோடு காத்திருப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஏனெனில், அபூரணத்தின் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதன் ஆரம்பத்தையே அந்த நாள் குறிக்கும். (ரோமர் 8:22) ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ அவர்கள் அனுபவிக்கும் அழுத்தங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதையும் அது குறிக்கும்.​—2 தீமோத்தேயு 3:1, NW.

2இருப்பினும், நீதியுள்ள ஜனங்களுக்கு யெகோவாவின் நாள் மீட்பைக் கொண்டுவரும் அதே சமயத்தில் “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்” அழிவையும் கொண்டுவரும். (2 தெசலோனிக்கேயர் 1:6-8) இது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. தம்முடைய ஜனங்களை வேதனை மிகுந்த சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவா பொல்லாதவர்களுக்கு கடவுள் அழிவைக் கொண்டுவருவார்? அதைவிட உன்னதமான காரணம் இருப்பதை ஏசாயா 63-⁠ம் அதிகாரம் சுட்டிக்காட்டுகிறது. அதுவே, கடவுளுடைய பெயர் மகிமைப்படுத்தப்படுவதாகும்.

வெற்றிவீரரின் பீடுநடை

3பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து யூதர்கள் விடுதலை பெற்று தங்கள் தாயகத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டதை பற்றி ஏசாயா 62-⁠ம் அதிகாரத்தில் நாம் வாசித்தோம். அப்படியானால் இப்படியொரு கேள்வி எழும்புவது இயல்பு: மற்ற எதிரி தேசங்களால் மீண்டும் அழிவு வரும் என தாயகம் திரும்பிய யூதர்கள் பயப்பட வேண்டுமா? ஏசாயாவின் தரிசனம் அவர்களுடைய பயத்தை பெரிதளவு போக்குகிறது. தீர்க்கதரிசனம் இவ்வாறு துவங்குகிறது: “ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற [“பீடுநடைபோடும்,” பொ.மொ.] இவர் யார்?”​—ஏசாயா 63:1அ.

4வலிமையுடனும் வெற்றிக் களிப்புடனும் எருசலேமை நோக்கி பீடுநடை போடும் ஒரு வீரரை ஏசாயா பார்க்கிறார். அவருடைய சிறப்பான உடை, அவர் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர் என்பதை காட்டுகிறது. அவர் ஏதோமின் முக்கிய நகரான போஸ்றாவிலிருந்து வருவது, அந்த எதிரி தேசத்தின்மீது அவர் பெற்ற மகத்தான வெற்றியை சுட்டிக்காட்டுகிறது. அப்படியானால் இந்த வீரர் யார்? சில அறிஞர்கள் இவரை இயேசு கிறிஸ்து என அடையாளம் காட்டுகிறார்கள். மற்றவர்களோ யூத ராணுவ தலைவரான யூதாஸ் மக்கபேயாகத்தான் இவர் இருக்க வேண்டும் என நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில் அந்த வீரரே தம்முடைய அடையாளத்தை குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்: “நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.”​—ஏசாயா 63:1ஆ.

5அந்த வீரர் யெகோவா தேவனைத் தவிர வேறு யாருமல்லர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பைபிளின் பிற இடங்களில், அவர் ‘மகா பெலம்’ பொருந்தியவர் என்றும் ‘நீதியை பேசுபவர்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளார். (ஏசாயா 40:26; 45:19, 23) இந்த வீரரின் மிக நேர்த்தியான ஆடைகள் சங்கீதக்காரனின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.” (சங்கீதம் 104:1) யெகோவா அன்பான கடவுளாக இருந்தாலும், தேவைப்படும்போது அடையாள அர்த்தத்தில் அவர் ஒரு வீரரின் ஸ்தானத்தை ஏற்கிறார் என பைபிள் காட்டுகிறது.​—ஏசாயா 34:2; 1 யோவான் 4:16.

6அப்படியானால், ஏன் ஏதோமுடன் யெகோவா போரிட்டு திரும்புகிறார்? தங்கள் முற்பிதாவாகிய ஏசாவில் ஆரம்பித்த பகைமையை தொடர்ந்து காட்டிவரும் ஏதோமியர்கள், கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களின் தொன்றுதொட்ட எதிரிகள். (ஆதியாகமம் 25:24-34; எண்ணாகமம் 20:14-21) யூதாவிடம் ஏதோம் எந்தளவுக்கு பகை வைத்திருந்தது என்பது குறிப்பாக, எருசலேமின் பாழ்க்கடிப்பின்போது பாபிலோனிய படை வீரர்களை ஏதோமியர்கள் ஊக்குவித்ததிலிருந்து தெளிவானது. (சங்கீதம் 137:7) இப்படிப்பட்ட பகைமையை தமக்கு விரோதமான குற்றமாக யெகோவா கருதுகிறார். ஆகவே, ஏதோமுக்கு விரோதமாக தம்முடைய பழிவாங்கும் பட்டயத்தை அனுப்ப அவர் உறுதிபூண்டதில் எவ்வித வியப்பும் இல்லை.​—ஏசாயா 34:5-15; எரேமியா 49:7-22.

7ஆகவே, எருசலேமுக்குத் திரும்பும் யூதர்களுக்கு ஏசாயாவின் இந்தத் தரிசனம் அதிக உற்சாகத்தை அளிக்கிறது. அவர்கள் தங்களுடைய புதிய வீட்டில் பத்திரமாக வசிப்பார்கள் என்பதை இது அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையில் மல்கியா தீர்க்கதரிசியின் நாட்களுக்குள் கடவுள் ஏதோமின் ‘மலைகளைப் பாழாக்கி, அவன் சுதந்தரத்தை வனாந்தர நரிகளுக்குக் கொடுத்தார்.’ (மல்கியா 1:3, தி.மொ.) அப்படியானால், ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மல்கியாவின் காலத்திற்குள் முற்றிலுமாக நிறைவேறிவிட்டது என இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, ஏனென்றால் அது பாழாய்க்கிடந்த போதிலும் அதைத் திரும்ப எடுத்துக் கட்ட ஏதோம் தீர்மானித்தது. மேலும் ஏதோமை, “துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும்” மல்கியா அழைக்கிறார். a (மல்கியா 1:4, 5) இருந்தாலும், தீர்க்கதரிசனத்தின்படி ஏதோம், ஏசாவின் சந்ததியாரை மட்டுமே குறிப்பதில்லை. யெகோவாவின் வணக்கத்தாருக்கு எதிரிகளாக தங்களை நிரூபிக்கும் எல்லா தேசத்தாருக்கும் அடையாளமாக இது இருக்கிறது. இதில் கிறிஸ்தவமண்டல தேசங்களே முன்னிலையில் இருந்திருக்கின்றன. இந்த நவீன நாளைய ஏதோமுக்கு என்ன சம்பவிக்கும்?

திராட்சை ஆலை

8போரிட்டுத் திரும்பும் வீரரிடம் ஏசாயா இப்படிக் கேட்கிறார்: “உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் [திராட்சை] ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன?” அதற்கு மறுமொழியாக யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் ஒருவனாய் [திராட்சை] ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.”​—ஏசாயா 63:2, 3.

9இந்த தத்ரூபமான வார்த்தைகள் ஒரு கொலைக்களத்தை விவரிக்கின்றன. சொல்லப்போனால், கடவுளுடைய அழகான வஸ்திரங்களே, திராட்சை ஆலையை மிதிக்கிறவனுடைய வஸ்திரங்கள்போல் கறைபடுகின்றன! திராட்சை ஆலை, தப்ப முடியாமல் மாட்டிக்கொண்ட நிலைக்கு பொருத்தமான அடையாளம். எதிரிகளை அழிக்க யெகோவா தேவன் தயாராகையில் இவர்கள் இந்நிலையில் இருக்கிறார்கள். இந்த அடையாளப்பூர்வ திராட்சை ஆலை எப்போது மிதிக்கப்படும்? யோவேல் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவானின் தீர்க்கதரிசனங்களும் அடையாளப்பூர்வ திராட்சை ஆலையைப் பற்றி பேசுகின்றன. அர்மகெதோனில் யெகோவா எதிரிகளை அழிக்கிறபோது அந்தத் தீர்க்கதரிசனங்களிலுள்ள திராட்சை ஆலை மிதிக்கப்படும். (யோவேல் 3:13; வெளிப்படுத்துதல் 14:18-20; 16:16) ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலுள்ள திராட்சை ஆலையும் அதே காலத்தையே சுட்டிக்காட்டுகிறது.

10இருந்தாலும், தாம் ஒருவராகவே இந்த திராட்சை ஆலையை மிதித்தார் என்றும் ஜனங்களில் யாருமே அங்கு இருக்கவில்லை என்றும் யெகோவா ஏன் சொல்கிறார்? திராட்சை ஆலையை மிதிக்கும் வேலையை கடவுளுடைய பிரதிநிதியாக இயேசு கிறிஸ்து முன்நின்று செய்யமாட்டாரா? (வெளிப்படுத்துதல் 19:11-16) நியாயமான கேள்விதான், ஆனால் இங்கு யெகோவா ஆவி சிருஷ்டிகளை அல்ல, மனிதர்களையே குறிப்பிடுகிறார். சாத்தானை பின்பற்றுபவர்களை இந்தப் பூமியிலிருந்து துடைத்தழிப்பதற்கு தகுதியான மனிதர் யாரும் இல்லை என அவர் கூறுகிறார். (ஏசாயா 59:15, 16) அவர்கள் முற்றிலுமாக நசுக்கப்படும் வரையில் தம்முடைய கோபத்தில் அவர்களைத் தொடர்ந்து மிதிக்கும் வேலை சர்வவல்லமையுள்ள கடவுளுக்கே உரியது.

11யெகோவா இந்த வேலையை ஏன் தாம் ஒருவராகவே செய்கிறார் என்பதற்கு மேலுமான விளக்கத்தைக் கொடுக்கிறார்: “பழிவாங்கும் நாள் என் மனதிலிருக்கிறது, என்னுடைய மீட்கப்பட்டவர்களின் வருஷம் வந்தது.” (ஏசாயா 63:4, NW) bதம்முடைய ஜனங்களுக்கு தீங்கு செய்பவர்களை பழிவாங்கும் உரிமை யெகோவாவுக்கு மட்டுமே உரியது. (உபாகமம் 32:35) பூர்வ காலங்களில், இந்த ‘மீட்கப்பட்டவர்கள்’ பாபிலோனியரால் துன்புற்ற யூதர்களாவர். (ஏசாயா 35:10; 43:1; 48:20) நவீன காலங்களில் இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் ஆவர். (வெளிப்படுத்துதல் 12:17) அந்தப் பூர்வ காலத்தினரைப் போலவே இவர்களும் மத அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த யூதர்களைப் போலவே, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாகிய இவர்களும் இவர்களுடைய கூட்டாளிகளாகிய “வேறே ஆடுகளும்” துன்புறுத்துதலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறார்கள். (யோவான் 10:16) தமது குறித்த காலத்தில் தங்கள் சார்பாக கடவுள் நடவடிக்கை எடுப்பார் என்பதையே ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது.

12யெகோவா தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “நான் சுற்றிப் பார்த்தேன், துணைசெய்வார் எவருமில்லை; ஆச்சரியமுற்று நின்றேன், தாங்குவார் எவருமில்லை; என் புயமே எனக்குத் துணைநின்றது, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று. நான் என் கோபத்திலே புறதேசத்தாரை மிதித்துப்போட்டேன், என் உக்கிரத்திலே அவர்களை வெறிக்கச் செய்தேன், அவர்கள் இரத்தம் தரையிலே சிந்தும்படி செய்தேன்.”​—ஏசாயா 63:5, 6, தி.மொ.

13யெகோவாவின் மகத்தான பழிவாங்கும் நாளின்போது எந்த மனிதனும் அவருக்குத் துணை நின்றதாக சொல்ல முடியாது. தம்முடைய சித்தத்தை செய்து முடிப்பதற்கு மனிதனுடைய எந்த ஆதரவும் அவருக்குத் தேவையில்லை. c அந்த வேலைக்கு அவருடைய பலமான கரத்தின் அளவிட முடியாத சக்தியே போதுமானது. (சங்கீதம் 44:3; 98:1; எரேமியா 27:5) அதோடு, அவருடைய சீறியெழும் கோபமும் அவரை தாங்குகிறது. எப்படி? கடவுளுடைய சீற்றம் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியல்ல, ஆனால் அது நியாயமான கோபமே. யெகோவா எப்போதுமே நீதியான நியமங்களுக்கு இசைய செயல்படுவதால், தம்முடைய விரோதிகளுக்கு அவமானமும் தோல்வியும் உண்டாக, அவர்களுடைய ‘இரத்தத்தைத் தரையிலே சிந்துவதற்கு’ இந்தக் கோபம் அவரை தாங்கி, தூண்டுகிறது.​—சங்கீதம் 75:8; ஏசாயா 25:10; 26:5.

கடவுளுடைய பேரன்புச் செயல்கள்

14முற்காலங்களில் யெகோவா தங்களுக்குச் செய்த காரியங்களுக்கு மதிப்புக்காட்ட யூதர்கள் தவறினர். ஆகவே, யெகோவா ஏன் அக்காரியங்களையெல்லாம் செய்தார் என்பதை இப்போது ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டுவது பொருத்தமானதே. ஏசாயா இவ்வாறு அறிவிக்கிறார்: “ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார். ஏனெனில், “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.”​—ஏசாயா 63:7-9, பொ.மொ.

15பேரன்பை அல்லது பற்றுமாறா அன்பை காட்டுவதில் யெகோவா எப்பேர்ப்பட்ட சிறந்த மாதிரியை வைக்கிறார்! (சங்கீதம் 36:7; 62:12) ஆபிரகாமோடு யெகோவா அன்பான பந்தத்தை ஏற்படுத்தினார். (மீகா 7:20) ஆபிரகாமின் வித்து அல்லது சந்ததியின் மூலமாக பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என அவரிடம் சொன்னார். (ஆதியாகமம் 22:17, 18) இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மைகளை செய்வதன் மூலமாக யெகோவா தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆபிரகாமின் சந்ததியாரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததே அவருடைய பேரன்புச் செயல்களில் தலைசிறந்தது.​—யாத்திராகமம் 14:30.

16எகிப்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இஸ்ரவேலரை யெகோவா சீனாய் மலைக்கு கொண்டுவந்து இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; . . . நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) இந்த வாக்கை அளிக்கும்போது யெகோவா அவர்களை வஞ்சிப்பவராக இருந்தாரா? இல்லை, யெகோவா தம்மிடமே இப்படிச் சொல்லிக்கொண்டதாக ஏசாயா தெரிவிக்கிறார்: “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்.” “பேரரசருக்குரிய அதிகாரத்தை பெற்றிருப்பதாலோ அல்லது முன்னறியும் திறமை இருப்பதாலோ ‘மெய்யாகவே’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை: அன்பினால் விளைந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமே அதற்குக் காரணம்” என ஒரு அறிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆம், தம்முடைய ஜனங்கள் முன்னேற வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான விருப்பத்தாலேயே யெகோவா நேர்மையோடு தம் உடன்படிக்கையை செய்தார். அவர்கள் அடிக்கடி தவறுகிறவர்கள் என்பதை அறிந்திருந்தபோதிலும் அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார். தம் வணக்கத்தாரிடம் இப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கும் கடவுளை வணங்குவது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! அதேபோல் இன்று மூப்பர்கள், கடவுளுடைய ஜனங்களுக்கு அடிப்படையில் இருக்கும் நற்குணத்தில் நம்பிக்கை வைக்கும்போது, தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்போரை அதிகம் பலப்படுத்துகின்றனர்.​—2 தெசலோனிக்கேயர் 3:4; எபிரெயர் 6:9, 10.

17இருந்தாலும், இஸ்ரவேலரைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “எகிப்திலே பெரிய கிரியைகளை . . . செய்தவராகிய, தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.” (சங்கீதம் 106:21, 22) கீழ்ப்படியாத, பிடிவாத மனப்பான்மையால் அவர்கள் அடிக்கடி தங்களுக்கே பெரும் இன்னல்களை வருவித்துக்கொண்டார்கள். (உபாகமம் 9:6) யெகோவா அவர்களுக்கு பேரன்பு காட்டுவதை நிறுத்திவிட்டாரா? அதற்கு மாறாக, “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” என ஏசாயா விளக்குகிறார். யெகோவா எவ்வளவு பரிவிரக்கமுள்ளவர்! அன்புள்ள எந்தவொரு தகப்பனை போலவே கடவுளுக்கும் தம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை​—⁠சொந்த முட்டாள்தனத்தால் கஷ்டப்படுவதைக்கூட​—⁠காண்பது வேதனையாக இருந்தது. அவர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்துவதற்காக, முன்னறிவிக்கப்பட்ட விதமாகவும் தம்முடைய அன்புக்கு அத்தாட்சியாகவும் அவர் தம்முடைய ‘தூதனை’​—⁠அநேகமாக மனிதனாக பிறப்பதற்கு முன்பு இருந்த இயேசுவை⁠—⁠அனுப்பினார். (யாத்திராகமம் 23:20) இவ்வாறாக இந்த தேசத்தை யெகோவா “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல” தூக்கி சுமந்தார். (உபாகமம் 1:31; சங்கீதம் 106:10) இன்றும் நம்முடைய கஷ்டங்களை யெகோவா நன்றாக அறிந்திருக்கிறார் என்றும் நாம் கடும் துயரத்தில் தவிக்கும்போது நமக்காக இரங்குகிறார் என்றும் நாம் உறுதியாக நம்பலாம். ‘அவர் நம்மீது கரிசனைக்கொள்கிறார்’ என்பதால் நம்பிக்கையோடு ‘நம் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம்.’​—1 பேதுரு 5:7, NW.

சத்துருவாக மாறுகிறார் கடவுள்

18இருந்தாலும், கடவுளுடைய பேரன்பை நாம் ஒருபோதும் தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது. ஏசாயா தொடர்ந்து சொல்கிறார்: “அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணினார்.” (ஏசாயா 63:10) தாம் இரக்கமும் கிருபையும் உள்ள கடவுள் என்றாலும் ஒருபோதும் “குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்” என யெகோவா எச்சரித்தார். (யாத்திராகமம் 34:6, 7, தி.மொ.) இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கலகத்தனம் செய்வதால், தண்டனைக்கு தகுதி பெறுகிறார்கள். “பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை [“யெகோவாவை,” NW] நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்; அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்” என மோசே நினைப்பூட்டினார். (உபாகமம் 9:7, பொ.மொ.) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் நல்ல செல்வாக்கை எதிர்ப்பதன் மூலம் அவர்கள் அதை விசனப்படுத்தியிருக்கிறார்கள் அல்லது துக்கப்படுத்தியிருக்கிறார்கள். (எபேசியர் 4:30) இதனால் யெகோவா தங்களுடைய சத்துருவாக ஆகும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.​—லேவியராகமம் 26:17; உபாகமம் 28:63.

19கஷ்டத்தின் மத்தியிலும் யூதர்கள் சிலர் கடந்தகால சம்பவங்களை தியானிக்கும்படி தூண்டப்படுகிறார்கள். ஏசாயா இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது அவர் ஜனம் பூர்வ நாட்களையும் மோசேயையும் நினைத்து: நமது முன்னோரையும் தமது மந்தையை மேய்ப்பவர்களையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே? அவர்கள் உள்ளத்தில் தமது பரிசுத்தமான ஆவியை அருளியவர் எங்கே? தமது மகிமையான [“அழகிய,” NW] புயம் மோசேயின் வலதுகரத்தோடு செல்லும்படி செய்து என்றும் நிலைக்கும் பெயரைத் தமக்கு உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிரித்து, ஒரு குதிரை வனாந்தர வெளியிலே நடக்கிறதுபோல அவர்கள் இடறாதபடி அவர்களை ஆழங்களில் நடக்கச் செய்தவர் எங்கே? ஆடுமாடுகள் பள்ளத்தாக்கிலே இறங்கி இளைப்பாறுவதுபோல் யெகோவாவின் ஆவி அவர்களை இளைப்பாறப் பண்ணினது.”​—ஏசாயா 63:11-14அ, தி.மொ. d

20கீழ்ப்படியாமையின் விளைவுகளை அனுபவித்த யூதர்கள், யெகோவா தங்கள் சத்துருவாக அல்லாமல் இரட்சகராக இருந்த நாட்களை எண்ணி ஏங்குகிறார்கள். தங்களுடைய ‘மேய்ப்பர்களாகிய’ மோசேயும் ஆரோனும் சிவந்த சமுத்திரம் வழியாக தங்களை எப்படி பத்திரமாக வழிநடத்தினார்கள் என்பதை அவர்கள் நினைவுகூருகிறார்கள். (சங்கீதம் 77:20; ஏசாயா 51:10) கடவுளுடைய ஆவியை விசனப்படுத்துவதற்கு பதிலாக, மோசேயும் ஆவியால் நியமிக்கப்பட்ட மற்ற மூப்பரும் கொடுத்த ஆலோசனைகளின் மூலம் அந்த ஆவியால் வழிநடத்தப்பட்ட சமயத்தை அவர்கள் நினைக்கிறார்கள். (எண்ணாகமம் 11:16, 17) யெகோவாவுடைய பலமுள்ள “அழகிய புயம்” தங்கள் சார்பாக மோசேயின் மூலம் பயன்படுத்தப்பட்டதையும் நினைவுகூருகிறார்கள். முடிவில் கடவுள் அவர்களை பயங்கரமான பெரிய வனாந்தரத்தை விட்டு வெளியே கொண்டுவந்து பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு​—⁠இளைப்பாறுதலின் தேசத்திற்கு​—⁠வழிநடத்தினார். (உபாகமம் 1:19; யோசுவா 5:6; 22:4) இப்போதோ, கடவுளோடு இருந்த நல்ல உறவை இழந்ததன் காரணமாக இஸ்ரவேலர்கள் கஷ்டப்படுகிறார்கள்!

‘தமக்கென ஓர் அழகிய பெயர்’

21இருந்தாலும் அவர்கள் அலட்சியம் செய்த சிலாக்கியத்தின், அதாவது கடவுளுடைய பெயருக்கு மகிமையைக் கொண்டுவரும் சிலாக்கியத்தின் இழப்போடு ஒப்பிட இஸ்ரவேலர் அனுபவித்த பொருள் சம்பந்தமான இழப்பு ஒன்றுமே இல்லை. இஸ்ரவேலர்களுக்கு மோசே இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். அப்பொழுது கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” (உபாகமம் 28:9, 10) ஆபிரகாமின் சந்ததியாரை யெகோவா எகிப்தின் அடிமைத்தனத்தினின்று மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தபோது, அவர்களுடைய வாழ்க்கை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய நோக்கமாக இல்லை. அதைவிட முக்கியமான ஒன்றின்​—⁠அவருடைய பெயரின்​—⁠நிமித்தமே அவர் அவ்வாறு செயல்பட்டார். ஆம், தம்முடைய பெயர் “பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படி” பார்த்துக்கொண்டார். (யாத்திராகமம் 9:15, 16) வனாந்தரத்தில் இஸ்ரவேலர் கலகம் செய்தபின், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டியது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அல்ல. யெகோவா தாமே இவ்வாறு சொன்னார்: “ஜாதியாரின் பார்வையில் என் நாமம் பரிசுத்தமற்றதுபோலாகாதபடி என் நாமத்தினிமித்தமே செய்தேன்.”​—எசேக்கியேல் 20:8-10, தி.மொ.

22இப்போது இந்த தீர்க்கதரிசனத்திற்கு ஏசாயா என்ன வலிமையான முடிவுரை கொடுக்கிறார் பாருங்கள்! அவர் சொல்​கி​றார்: “இப்படியே உமக்கென ஓர் அழகிய பெயரை ஏற்படுத்தும்படி உம்முடைய மக்களை வழிநடத்தினீர்.” (ஏசாயா 63:14ஆ, NW) தம்முடைய ஜனங்களின் நலனுக்காக யெகோவா ஏன் தீவிரமாக போரிடுகிறார் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. தமக்கென ஓர் அழகிய பெயரை உண்டாக்குவதற்கே அவ்வாறு செய்கிறார். இவ்வாறு, யெகோவாவின் பெயரை தாங்கியிருப்பது மகத்தான சிலாக்கியமும் கனத்த உத்தரவாதமும் ஆகும் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் வலிமையான விதத்தில் நினைப்பூட்டுகிறது. இன்றைய உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவின் பெயரை தங்களுடைய சொந்த உயிருக்கும் மேலாக நேசிக்கிறார்கள். (ஏசாயா 56:6; எபிரெயர் 6:10) அந்தப் பரிசுத்த பெயருக்கு நிந்தனையைக் கொண்டுவரும் எதையும் செய்வதை அவர்கள் வெறுக்கிறார்கள். கடவுளுக்கு பற்றுமாறாதவர்களாக நிலைத்திருப்பதன் மூலம் அவர் காட்டும் பற்றுமாறா அன்புக்கு பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் அழகிய பெயரை நேசிப்பதால் அவர் தமது கோபத்தின் திராட்சை ஆலையில் விரோதிகளை நசுக்கிப்போடும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இது தங்களுக்கு நன்மையைக் கொண்டுவரும் என்பதினால் அல்ல, ஆனால் தங்கள் நேசத்திற்குரிய கடவுளுடைய பெயர் மகிமைப்படுவதற்கு வழிநடத்தும் என்பதாலேயே அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.​—மத்தேயு 6:9.

[அடிக்குறிப்புகள்]

a பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏரோது ராஜாக்கள் ஏதோமியர்கள்.

b “என்னுடைய மீட்கப்பட்டவர்களின் வருஷம்” என்ற சொற்றொடர் “பழிவாங்கும் நாள்” என்ற பதத்தின் அதே காலப்பகுதியை குறிப்பிடலாம். இதைப் போன்ற பதங்கள் ஏசாயா 34:8-⁠ல் இணையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை பாருங்கள்.

c யாருமே துணைபுரிய முன்வரவில்லை என யெகோவா ஆச்சரியப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு ஏறக்குறைய 2,000 வருடங்களுக்குப் பின் இப்போதும் மனிதரில் வல்லமை படைத்தவர்கள் கடவுளுடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம்.​—⁠சங்கீதம் 2:2-12; ஏசாயா 59:16.

d இந்த வசனம் ‘அவர் . . . நினைவுகூர்ந்தார்’ என்றும் ஆரம்பிக்கலாம். (ஏசாயா 63:11) இருந்தாலும், யெகோவாதாமே நினைவுகூருகிறார் என்பதை இது அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்துவரும் வார்த்தைகள் கடவுள் எவ்வாறு நினைக்கிறார் என்பதையல்ல கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு நினைக்கிறார்கள் என்பதையே தெரிவிக்கின்றன. ஆகவேதான் திருத்திய மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளை “அப்பொழுது அவர் ஜனம் பூர்வ நாட்களை . . . நினைத்து” என மொழிபெயர்க்கிறது.

[கேள்விகள்]

1, 2. (அ) வரவிருக்கும் ‘தேவனுடைய நாளைக்’ குறித்ததில் என்ன தனிப்பட்ட அக்கறை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது? (ஆ) தேவனுடைய நாள் வருவதில் என்ன உன்னதமான விஷயம் அடங்கியுள்ளது?

3, 4. (அ) ஏசாயா 63-⁠ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனத்தின் சூழமைவு என்ன? (ஆ) எருசலேமை நோக்கி பீடுநடை போடும் யாரை ஏசாயா பார்க்கிறார், அவர் யாராக இருக்கலாம் என சில அறிஞர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்?

5. ஏசாயா கண்ட அந்த வீரர் யார், நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?

6. ஏதோமியரிடம் யெகோவா போரிட்டு திரும்புவதேன்?

7. (அ) ஏதோமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் முதலில் எவ்வாறு நிறைவேறியது? (ஆ) ஏதோம் எதற்கு அடையாளமாக இருக்கிறது?

8, 9. (அ) ஏசாயா காண்கிற வீரர் என்ன செயலில் ஈடுபட்டிருந்தார்? (ஆ) அடையாளப்பூர்வ திராட்சை ஆலை எப்போது, எவ்வாறு மிதிக்கப்படுகிறது?

10. தாம் ஒருவராகவே திராட்சை ஆலையை மிதித்ததாக யெகோவா ஏன் சொல்கிறார்?

11. (அ) யெகோவா ஏன் ‘பழிவாங்கும் நாளை’ கொண்டுவருகிறார்? (ஆ) பூர்வ காலங்களில் ‘மீட்கப்பட்டவர்கள்’ யார், இன்று அவர்கள் யார்?

12, 13. (அ) என்ன அர்த்தத்தில் யெகோவாவுக்குத் துணை செய்வார் யாருமில்லை என சொல்லலாம்? (ஆ) யெகோவாவின் கரம் எவ்வாறு துணைநிற்கிறது, அவருடைய கோபம் எவ்வாறு அவரை தாங்குகிறது?

14. என்ன பொருத்தமான நினைப்பூட்டுதல்களை ஏசாயா இப்போது கொடுக்கிறார்?

15. எகிப்திலிருந்த ஆபிரகாமின் சந்ததியாருக்கு யெகோவா எப்படி பேரன்பைக் காட்டினார், ஏன்?

16. (அ) என்ன எண்ணத்தோடு இஸ்ரவேலருடன் யெகோவா உடன்படிக்கை செய்தார்? (ஆ) கடவுள் எவ்வாறு தம் ஜனங்களிடம் செயல்படுகிறார்?

17. (அ) இஸ்ரவேலரிடமிருந்த அன்புக்கு யெகோவா என்ன அத்தாட்சி அளித்தார்? (ஆ) இன்று நாம் என்ன நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்?

18. யெகோவா ஏன் தம்முடைய ஜனங்களுக்கு சத்துருவானார்?

19, 20. என்ன காரியங்களை யூதர்கள் நினைவுகூருகிறார்கள், ஏன்?

21. (அ) கடவுளுடைய பெயர் சம்பந்தப்பட்டதில் என்ன பெரும் சிலாக்கியத்தை இஸ்ரவேல் பெற்றிருந்திருக்கலாம்? (ஆ) கடவுள் ஆபிரகாமின் சந்ததியாரை எகிப்திலிருந்து விடுவித்ததன் முக்கிய காரணம் என்ன?

22. (அ) எதிர்காலத்தில் தம்முடைய ஜனங்களுக்காக கடவுள் ஏன் மீண்டும் ஒருமுறை போரிடுவார்? (ஆ) கடவுளுடைய பெயருக்கான நம் அன்பு எவ்வழிகளில் நம் செயல்களை பாதிக்கிறது?

[பக்கம் 359-ன் படம்]

தம்முடைய ஜனங்களிடம் கடவுளுக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகள் இருந்தன