Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா போதிப்பது நமது நன்மைக்கே

யெகோவா போதிப்பது நமது நன்மைக்கே

அதிகாரம் ஒன்பது

யெகோவா போதிப்பது நமது நன்மைக்கே

ஏசாயா 48:1-22

ஞானமுள்ளவர்கள் யெகோவா பேசும்போது ஆழ்ந்த மரியாதையோடு செவிகொடுத்து கேட்டு அவற்றிற்கு இசைய நடக்கிறார்கள். யெகோவா சொல்லும் அனைத்தும் நம்முடைய நன்மைக்கானவை, அவர் நம்முடைய நலனில் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார். உதாரணமாக, யெகோவா தம்முடைய பூர்வகால உடன்படிக்கையின் ஜனங்களிடம், “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்” என்று சொன்ன விதத்தை சிந்திப்பதே எவ்வளவாய் புத்துணர்ச்சியளிக்கிறது! (ஏசாயா 48:18) கடவுளுடைய போதனைகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது; இது, அவருக்குச் செவிகொடுத்து அவருடைய வழிநடத்துதலை பின்பற்ற நம்மை உந்துவிக்க வேண்டும். நிறைவேறிய தீர்க்கதரிசனங்களின் பதிவு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் யெகோவாவுக்கு இருக்கும் திடத்தீர்மானத்தை குறித்த எந்தவித சந்தேகத்தையும் அகற்றிவிடுகிறது.

2ஏசாயா 48-⁠ம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகள், பாபிலோனுக்கு நாடுகடத்தப்படவிருக்கும் யூதர்களின் நன்மைக்காகவே எழுதப்பட்டன என அத்தாட்சி காட்டுகிறது. அதோடு, இன்றைய கிறிஸ்தவர்கள் அசட்டை செய்ய முடியாத செய்தி ஒன்றும் இந்த வார்த்தைகளில் அடங்கியுள்ளது. ஏசாயா 47-⁠ம் அதிகாரத்தில் பாபிலோனின் வீழ்ச்சியை பைபிள் முன்னறிவித்தது. அந்நகரத்தில் வாழும் யூத சிறை கைதிகளுக்கு தாம் செய்ய நினைத்திருப்பதை யெகோவா இப்போது விவரிக்கிறார். தம்முடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் பாசாங்குத்தனம் செய்வதையும் தம்முடைய வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுப்பதையும் நினைத்து யெகோவா வருந்துகிறார். இருந்தாலும், அவர்களுடைய நன்மைக்காக போதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். உண்மையுள்ள மீதியானோர் தாயகம் திரும்புவதற்கு வழிவகுக்கும் புடமிடப்படுகிற காலப்பகுதியை அவர் முன்னறிகிறார்.

3தூய வணக்கத்திலிருந்து யெகோவாவின் ஜனங்கள் எந்தளவுக்கு வழிவிலகிச் சென்றிருக்கின்றனர்! ஏசாயாவின் ஆரம்ப வார்த்தைகளே சிந்திக்க வைப்பதாய் இருக்கின்றன: “இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.” (ஏசாயா 48:1, 2) எப்பேர்ப்பட்ட பாசாங்குத்தனம்! ‘யெகோவாவுடைய நாமத்தின்மேல் ஆணையிடுவது’ அவர்கள் கடவுளுடைய நாமத்தை வெறுமனே கடமைக்கென்று பயன்படுத்துவதையே தெளிவாக காட்டுகிறது. (செப்பனியா 1:5) பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு முன்பு வரை யூதர்கள் ‘பரிசுத்த நகரமாகிய’ எருசலேமில்தான் யெகோவாவை வணங்கினர். ஆனால் அவர்களுடைய வணக்கமோ பாசாங்குத்தனமாக இருந்தது. அவர்களுடைய இருதயம் கடவுளிடமிருந்து விலகி இருந்தது, அவர்களுடைய வணக்கத்தில் ‘உண்மையும் நீதியும் இல்லை.’ முற்பிதாக்களுக்கு இருந்த விசுவாசம் இவர்களுக்கு இல்லை.​—மல்கியா 3:7.

4வணக்கம் கடனுக்கு செய்வதாக இருக்கக் கூடாது என்பதை யெகோவாவின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அது உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும். வெறுமனே கடமைக்காக​—⁠ஒருவேளை மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக அல்லது கவருவதற்காக​—⁠சேவிப்பது ‘தேவபக்திக்குரிய செயல்கள்’ ஆவதில்லை. (2 பேதுரு 3:11, NW) கிறிஸ்தவர் என சொல்லிக்கொள்வதால் மட்டுமே ஒருவருடைய வணக்கம் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. (2 தீமோத்தேயு 3:5) யெகோவா இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது அதிக முக்கியம், ஆனால் அது வெறும் துவக்கம் மட்டுமே. ஆழ்ந்த அன்பினாலும் போற்றுதலினாலும் தூண்டப்பட்டு முழு ஆத்துமாவுடன் வணங்குவதையே யெகோவா விரும்புகிறார்.​—கொலோசெயர் 3:24.

புதியவைகளை முன்னறிவித்தல்

5பாபிலோனிலுள்ள யூதர்களுக்கு ஒருவேளை நடந்ததையெல்லாம் மறுபடியும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆகவேதான், யெகோவா தாம் மெய் தீர்க்கதரிசனத்தின் கடவுள் என்பதை மறுபடியுமாக அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். “பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.” (ஏசாயா 48:3) ‘பூர்வகாலத்தில் நடந்தவைகள்’ என்பது, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்களுக்கு சுதந்தரமாக கொடுத்தது போன்ற ஏற்கெனவே கடவுள் நிறைவேற்றிய சம்பவங்களைக் குறிக்கின்றன. (ஆதியாகமம் 13:14, 15; 15:13, 14) இந்த முன்னறிவிப்புகள் கடவுளுடைய வாயிலிருந்து பிறக்கின்றன; தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்து வருகின்றன. தம்முடைய சட்டங்களை மனிதர் கேட்கும்படி கடவுள் செய்கிறார், கேட்ட காரியங்களுக்குக் கீழ்ப்படியும்படி அவை அவர்களைத் தூண்ட வேண்டும். (உபாகமம் 28:15) தாம் முன்னறிவித்திருப்பதை நிறைவேற்றுவதற்கு அவர் திடீரென செயல்படுகிறார். யெகோவாவே சர்வவல்லமையுள்ளவர் என்ற உண்மை, அவருடைய நோக்கங்கள் நிறைவேறுவதை உறுதிப்படுத்துகிறது.​—யோசுவா 21:45; 23:14.

6யெகோவாவின் ஜனங்கள் ‘முரட்டாட்டமும் கலகத்தனமும்’ உள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள். (சங்கீதம் 78:8) ஆகவே, அவர் வெளிப்படையாகவே அவர்களிடம் சொல்கிறார்: “நீ கடினமுள்ளவன், உன் பிடரி இரும்பு நரம்பு; உன் நெற்றி செம்பு.” (ஏசாயா 48:4, தி.மொ.) உலோகங்களைப் போன்று இந்த யூதர்கள் வளைந்து கொடுக்காதவர்களாக, பணிந்து போகாதவர்களாக இருக்கிறார்கள். நடக்கவிருக்கும் சம்பவங்களை யெகோவா ஏன் முன்கூட்டியே அறிவிக்கிறார் என்பதற்கு அதுவே ஒரு காரணம். இல்லையெனில், யெகோவா செய்திருப்பவற்றைக் குறித்து ஜனங்கள் இவ்வாறு சொல்வார்கள்: “என் விக்கிரகம் அவைகளைச் செய்தது, நான் சித்திரவேலையாய்ச் செய்த சுரூபமும் நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டது.” (ஏசாயா 48:5, தி.மொ.) யெகோவா இப்போது சொல்லும் காரியங்களால் இந்த உண்மையற்ற யூதர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? கடவுள் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார்; இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன். அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.”​—ஏசாயா 48:6, 7.

7வெகுகாலத்திற்கு முன்பாகவே பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்த முன்னறிவிப்பை ஏசாயா பதிவு செய்தார். இப்போது, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கையில் அந்த முன்னறிவிப்பின் நிறைவேற்றத்தை யோசித்துப் பார்க்கும்படி தீர்க்கதரிசனமாக கட்டளையிடப்படுகின்றனர். யெகோவா நிறைவேறிய தீர்க்கதரிசனத்தின் கடவுள் என்பதை அவர்கள் மறுக்க முடியுமா? மேலும் யெகோவாவே சத்தியபரர் என்பதை யூதாவின் குடிமக்கள் கண்டும் கேட்டும் இருப்பதால் இந்த சத்தியத்தை மற்றவர்களுக்கும் அவர்கள் அறிவிக்க வேண்டாமா? யெகோவா வெளிப்படுத்தியிருக்கும் வார்த்தை, இன்னும் நிறைவேறாத புதிய காரியங்களை​—⁠பாபிலோனின்மீது கோரேசுவின் வெற்றி, யூதர்களின் விடுதலை போன்ற காரியங்களை​—⁠முன்னறிவிக்கிறது. (ஏசாயா 48:14-16) திகைக்க வைக்கும் இச்சம்பவங்கள் நினையாத நேரத்தில் திடுதிப்பென நடக்கும். வெறுமனே உலக நிலைமைகளின் மாற்றங்களை வைத்து யாருமே இவற்றை முன்னறிந்திருக்க முடியாது. தெளிவான எந்தவித காரணமுமின்றி அவை சம்பவிக்கின்றன. இவற்றை நிகழும்படி செய்பவர் யார்? இச்சம்பவங்களைக் குறித்து சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக அறிவிப்பது யெகோவாவே என்பதால் நிச்சயமாக அவரே அவற்றை நிகழும்படி செய்பவர்.

8மேலுமாக, யெகோவா தம்முடைய கால அட்டவணையின்படி தம் வார்த்தையை நிறைவேற்றுகிறார். நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் யாவும் பூர்வ யூதர்களுக்கு மட்டுமல்ல இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் அவரே மெய்க் கடவுள் என்பதை நிரூபிக்கின்றன. கடந்த காலத்தில் நிறைவேறிய எண்ணற்ற தீர்க்கதரிசனங்களின் பதிவு​—⁠‘பூர்வகாலத்தில் நடந்தவைகள்’​—⁠யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் புதிய காரியங்களும் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதாவது, வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவம்,’ “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” அந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பது, ‘புதிய பூமி’ போன்ற பல காரியங்களும் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15; 21:4, 5; 2 பேதுரு 3:13) இன்று அவரைப் பற்றி முழுமூச்சுடன் அறிவிப்பதற்கு இந்த உறுதியளிக்கும் வார்த்தைகள் நல்மனமுடையோரை தூண்டுகின்றன. அவர்கள் சங்கீதக்காரனின் அதே எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள், “மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன்” என அவர் சொன்னார். —சங்கீதம் 40:9.

யெகோவா தன்னடக்கத்தைக் காட்டுகிறார்

9யூதர்கள் யெகோவாவின் தீர்க்கதரிசனங்களை நம்பாததால் அவருடைய எச்சரிப்புகளுக்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். அதனால்தான் அவர்களிடம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.” (ஏசாயா 48:8) யெகோவாவின் மகிழ்ச்சியான செய்தியை யூத தேசத்தினர் கேட்க மறுத்தனர். (ஏசாயா 29:10) கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் நடந்துகொள்கிற விதம்தானே, அவர்கள் ‘தாயின் கர்ப்பந்தொடங்கி மீறுகிற’ ஜனமென காட்டுகிறது. இஸ்ரவேல் தேசத்தின் பிறப்பு முதற்கொண்டு அதன் முழு சரித்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அது கலகத்தனத்திற்கே பெயர் பெற்றிருக்கிறது. மீறுதலும், நம்பிக்கை துரோகமும் அதன் ஜனங்கள் எப்போதாவது செய்யும் பாவங்கள் அல்ல, ஆனால் அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போன தவறுகள்.​—சங்கீதம் 95:10; மல்கியா 2:11.

10அப்படியானால், எல்லா நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டனவா? இல்லை. யூத தேசத்தினர் கலகத்தனமும் நம்பிக்கை துரோகமும் செய்பவர்களாக இருந்தாலும், யெகோவா எப்போதுமே உண்மையுள்ளவராகவும், நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருக்கிறார். தம்முடைய உன்னத பெயரை மகிமைப்படுத்துவதற்காக, அவர் தம் கோபத்தை கட்டுப்படுத்துவார். அவர் சொல்கிறார்: “என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக் கொள்கின்றேன்; என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.” (ஏசாயா 48:9, பொ.மொ.) என்னே ஒரு முரண்பாடு! யெகோவாவின் ஜனங்களாகிய இஸ்ரவேலும் யூதாவும் அவருக்கு விசுவாசமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும், யெகோவா தம்முடைய பெயருக்கு புகழ்ச்சியையும் மகிமையையும் கொண்டுவரும்படி செயல்பட்டு, அதை பரிசுத்தப்படுத்துவார். இந்தக் காரணத்தின் நிமித்தம் தம்முடைய தெரிந்துகொண்ட ஜனங்களை சங்கரிக்க மாட்டார்.​—யோவேல் 2:13, 14.

11நாடுகடத்தப்பட்ட யூதர்களில் நல்மனமுள்ளவர்கள் யெகோவாவின் கண்டன வார்த்தைகளால் உணர்வடைந்து, அவருடைய போதனைகளுக்குச் செவிசாய்க்க தீர்மானிக்கிறார்கள். இவர்களுக்கு பின்வரும் இந்த அறிவிப்பு அதிக ஊக்கமளிப்பதாக இருக்கிறது: “இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே [“உலையிலே,” NW] உன்னைத் தெரிந்து கொண்டேன். என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங் கொடேன்.” (ஏசாயா 48:10, 11) யெகோவா தம்முடைய ஜனங்கள்மீது வர அனுமதித்திருக்கும், ‘உபத்திரவத்தின் உலையில்’ இருப்பது போன்ற கடும் சோதனைகள், அவர்களை பரீட்சித்து, புடமிட்டு, உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது மோசே அவர்களுடைய முற்பிதாக்களிடம் இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், . . . அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்தி வந்தர். (உபாகமம் 8:2) அப்போதிருந்த தேசத்தார் கலக மனப்பான்மையைக் காட்டியபோதிலும், அவர்களை யெகோவா அழிக்கவில்லை, இப்போதிருக்கும் இந்த தேசத்தாரையும் அவர் முற்றிலுமாக அழிக்க மாட்டார். இவ்வாறு அவருடைய பேரும் புகழும் மேலோங்கும். தம்முடைய ஜனங்கள் பாபிலோனியரின் கைகளில் மாண்டுபோகும் சூழ்நிலை ஏற்பட்டால், அவருடைய உடன்படிக்கை பொய்த்துவிடும், அவருடைய பெயரும் பரிசுத்தக்குலைச்சலாகிவிடும். இஸ்ரவேலின் கடவுளுக்கு தம்முடைய ஜனங்களை காப்பாற்ற திறனில்லை என பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.​—எசேக்கியேல் 20:9.

12நவீன காலங்களிலும்கூட, யெகோவாவின் ஜனங்களை புடமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், சிறு தொகுதியினரான பைபிள் மாணாக்கரில் பலர், கடவுளை பிரியப்படுத்த வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான ஆவலுடன் அவரை சேவித்தனர். ஆனால் சிலருக்கு உயர்ந்த ஸ்தானத்தை பெற வேண்டும் என்பது போன்ற தவறான உள்நோக்கங்கள் இருந்தன. இந்த முடிவு காலத்தின் தீர்க்கதரிசனமாகிய நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிப்பதை இந்த சிறு தொகுதியினர் முன்நின்று செயல்படுத்துவதற்கு முன்பாக, அவர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். (மத்தேயு 24:14) யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு வரும்போது, அந்தப் புடமிடும் வேலை நிறைவேற்றப்படும் என மல்கியா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். (மல்கியா 3:1-4) அவருடைய வார்த்தைகள் 1918-⁠ல் நிறைவேறின. உண்மை கிறிஸ்தவர்கள் முதல் உலகப்போரின் உச்சக்கட்டத்தின்போது அக்கினிப் பரீட்சையை எதிர்ப்பட்டனர். அந்தப் பரீட்சை உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரஸிடென்ட் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்டும் அதன் பொறுப்புள்ள அங்கத்தினர்களில் சிலரும் சிறையிலிடப்படுவதற்கு வழிநடத்தியது. உண்மை கிறிஸ்தவர்கள், அந்தப் புடமிடப்படும் செயலால் நன்மையடைந்தனர். முதல் உலகப் போருக்குப்பின், தங்களுடைய மகத்தான கடவுள் எவ்வழிகளிலெல்லாம் தம்மை சேவிக்க வேண்டுமென வழிகாட்டுகிறாரோ அவ்வழிகளிலெல்லாம் சேவிப்பதற்கு எப்போதையும்விட அதிக தீர்மானமாய் இருந்தனர்.

13அந்நாட்கள் முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் எப்போதுமே மிகக் கொடூரமான துன்புறுத்துதல்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். இது சிருஷ்டிகருடைய வார்த்தையின்பேரில் எவ்வித சந்தேகத்தையும் அவர்களுடைய மனதில் எழுப்பவில்லை. மாறாக, தன்னுடைய நாளில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன வார்த்தைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்: “உங்கள் விசுவாசத்தின் பரீட்சிக்கப்பட்ட தரத்தின் நிமித்தம் நீங்கள் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். . . . இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும் மகிமையும் கனமும் உண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6, 7, NW) கடும் துன்புறுத்துதல் உண்மை கிறிஸ்தவர்களின் உத்தமத்தன்மையை அழித்துவிடுகிறதில்லை. மாறாக, அவர்களுடைய உள்ளத்தூய்மையை வெளிப்படுத்துகிறது. மேலும் அவர்களுடைய விசுவாசத்திற்கு பரீட்சிக்கப்பட்ட தரத்தை சேர்க்கிறது, அவர்களுக்கு எந்தளவுக்கு பக்தியும் அன்பும் இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.​—நீதிமொழிகள் 17:3.

‘நான் முந்தினவரும் பிந்தினவருமாமே’

14யெகோவா இப்போது தம்முடைய உடன்படிக்கையின் ஜனங்களிடம் கனிவுடன் இவ்வாறு கேட்கிறார்: “யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.” (ஏசாயா 48:12, 13) மனிதரைப் போன்று கடவுள் மாறுபவரல்ல, அவர் நித்தியமானவர். (மல்கியா 3:6) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 22:13) யெகோவாவுக்கு முன் எந்த சர்வ வல்லமையுள்ள கடவுளும் இருக்கவில்லை அவருக்குப் பின் யாரும் இருக்கப்போவதுமில்லை. அவரே முதன்மையானவர், நித்தியமானவர், படைப்பாளர். அவருடைய ‘கரம்’​—⁠செயல்படும் வல்லமை⁠—⁠பூமியை ஸ்தாபித்து வானத்தை விரித்தது. (யோபு 38:4; சங்கீதம் 102:25) அவர் தம்முடைய படைப்புகளை அழைக்கும்போது அவை அவருக்கு சேவை செய்ய தயாராக நிற்கின்றன.​—சங்கீதம் 147:4.

15யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் ஒரு முக்கியமான அழைப்பு விடுக்கப்படுகிறது: “நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; யெகோவாதாமே அவனை நேசித்திருக்கிறார். அவன் தனக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?” “நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.” (ஏசாயா 48:14, 15; NW) யெகோவாவுக்கு மட்டுமே எல்லா வல்லமையும் உள்ளது, அவரால் மட்டுமே காரியங்களை திருத்தமாக முன்னறிவிக்க முடியும். “இவர்களில்”​—⁠ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களில்​—⁠எதுவுமே இந்த விஷயங்களை அறிவிக்க முடியாது. எந்த விக்கிரகமுமல்ல, யெகோவா தாமே “அவனை”​—⁠கோரேசுவை “நேசித்திருக்கிறார்”; அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவரை யெகோவா தெரிந்தெடுத்திருக்கிறார். (ஏசாயா 41:2; 44:28; 45:1, 13; 46:11) உலக அரங்கில் கோரேசு வரவிருப்பதை அவர் முன்னறிந்து, பாபிலோனை வெல்லும் அரசராக அவரை நியமித்திருக்கிறார்.

16மனதைக் கவரும் வண்ணம் யெகோவா இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார்: “நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்.” (ஏசாயா 48:16அ) யெகோவா தம்முடைய முன்னறிவிப்புகளை இரகசியமாக வைக்கவில்லை அல்லது சிலருக்கு மட்டுமே அறிவிக்கவில்லை. யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அவருடைய சார்பாக ஒளிவு மறைவில்லாமல் பேசினார்கள். (ஏசாயா 61:1) அவர்கள் கடவுளுடைய சித்தத்தை வெளிப்படையாக அறிவித்தார்கள். உதாரணமாக, கோரேசுவைப் பற்றிய விஷயங்கள் கடவுளுக்கு புதிதல்ல அல்லது அவர் எதிர்பாராத ஒன்றல்ல. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவின் மூலம் கடவுள் அவற்றை வெளிப்படையாக முன்னறிவித்தார்.

17அவ்வாறே இன்றும், யெகோவா தம்முடைய நோக்கங்களை இரகசியமாக வைக்கிறதில்லை. நூற்றுக்கணக்கான தேசங்களிலும், பல தீவுகளிலும் உள்ள லட்சக்கணக்கானோர் வீடுகள்தோறும், தெருக்களிலும் அவர்களால் சென்றெட்ட முடிகிற எல்லா இடங்களிலும், இந்த காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்த எச்சரிப்பின் செய்தியையும், கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைக் குறித்த நற்செய்தியையும் அறிவிக்கிறார்கள். உண்மையில், யெகோவா தம்முடைய நோக்கங்களை அறிவிக்கும் கடவுள்.

“என் கற்பனைகளைக் கவனி”

18யெகோவாவுடைய ஆவியின் உதவியால் தீர்க்கதரிசி இவ்வாறு அறிவிக்கிறார்: “இப்பொழுது யெகோவாவாகிய ஆண்டவர் என்னையும் தமது ஆவியையும் அனுப்புகிறார். இஸ்ரவேலின் பரிசுத்தரும் உன்னை மீட்பவருமான யெகோவா சொல்வதைக் கேள்: உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்ல வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்.” (ஏசாயா 48:16ஆ, 17, தி.மொ.) யெகோவாவுடைய கரிசனையை வெளிப்படுத்தும் இந்தக் கனிவான வார்த்தைகள், கடவுள் தங்களை பாபிலோனிலிருந்து விடுவிக்கப் போகிறார் என்பதை இஸ்ரவேல் தேசத்தாருக்கு உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுடைய மீட்பர் அவரே. (ஏசாயா 54:5) இஸ்ரவேலர் மீண்டுமாக தம்மிடம் நெருங்கி வந்து தம்முடைய கற்பனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டுமென்பதே யெகோவாவின் உள்ளப்பூர்வமான ஆவல். மெய் வணக்கத்திற்கு அடிப்படையே தெய்வீக போதனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். ‘செல்ல வேண்டிய வழியை’ இஸ்ரவேலர்களுக்கு போதிக்கவில்லையெனில் அவர்களால் சரியான பாதையில் நடக்க முடியாது.

19தம்முடைய ஜனங்கள் அழிந்துவிடாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற யெகோவாவின் ஆவல் இங்கு மிக அழகாக வருணிக்கப்பட்டுள்ளது: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:18) சர்வ வல்லமையுள்ள படைப்பாளரிடமிருந்து வரும் என்னே ஒரு உருக்கமான வேண்டுகோள்! (உபாகமம் 5:29; சங்கீதம் 81:13) இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்டு போவதற்கு பதிலாக, நதியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரைப்போல் சமாதானத்தை அனுபவித்து மகிழலாம். (சங்கீதம் 119:165) அவர்களுடைய நீதியின் செயல்கள் கணக்கிலடங்கா கடலலைகளைப்போல் இருக்கும். (ஆமோஸ் 5:24) யெகோவா இஸ்ரவேலர்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருப்பதால், அவர்களிடம் கெஞ்சுகிறார், எந்த வழியில் நடக்க வேண்டும் என்பதையும் அன்புடன் காட்டுகிறார். ஆ, அவர்கள் கவனித்தார்களானால்!

20இஸ்ரவேலர் மனந்திரும்பினால் அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும் உனக்குப் பிறப்பது அதின் தூளத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் என்னை விட்டு அறுபட்டுப் போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.” (ஏசாயா 48:19, தி.மொ.) ஆபிரகாமின் சந்ததி “வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும்” பெருகும் என்ற தம்முடைய வாக்கை ஜனங்களுக்கு யெகோவா நினைப்பூட்டுகிறார். (ஆதியாகமம் 22:17; 32:12) என்றாலும், ஆபிரகாமின் இந்த சந்ததியினர் கலகம் செய்பவர்களாயினர், அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தை பெற்றுக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அவ்வளவு மோசமாக நடந்து வந்திருப்பதால் யெகோவாவுடைய சொந்த சட்டத்தின்படியே, ஒரு தேசமாக அழிந்துபோகும் தீர்ப்பைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். (உபாகமம் 28:45) இருந்தாலும், தம்முடைய ஜனங்கள் அழிந்துவிடுவதை யெகோவா விரும்பவில்லை, அவர்களை முற்றிலும் கைவிடவும் அவருக்கு விருப்பமில்லை.

21வலிமையான வார்த்தைகள் அடங்கிய இந்தப் பகுதியிலுள்ள முக்கிய நியமங்கள் இன்று யெகோவாவை வணங்குபவர்களுக்கும் பொருந்துகின்றன. யெகோவா ஜீவ ஊற்றாக இருப்பதால், நாம் எப்படி வாழ வேண்டும் என்பது மற்றவர்களைக் காட்டிலும் அவருக்கு நன்றாக தெரியும். (சங்கீதம் 36:9) அவர் கொடுத்திருக்கும் வழிமுறைகள் நம்முடைய மகிழ்ச்சியை பறித்துவிடுபவை அல்ல, ஆனால் நம்முடைய நன்மைக்கானவையே. உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவால் போதிக்கப்படுவதை நாடுவதன் மூலம் அவற்றிற்கு கீழ்ப்படிகிறார்கள். (மீகா 4:2) அவருடைய வழிநடத்துதல்கள் நம்முடைய ஆவிக்குரிய தன்மையையும் அவரோடுள்ள நம் உறவையும் பாதுகாக்கின்றன, சாத்தானுடைய கறைப்படுத்தும் செல்வாக்கிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன. கடவுளுடைய சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் நியமங்களுக்கு நாம் போற்றுதலைக் காட்டும்போது, யெகோவா நம்முடைய நன்மைக்காகவே போதிக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறோம். ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல’ என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாம் அழிக்கப்படவும் மாட்டோம்.​—1 யோவான் 2:17; 5:3.

“பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்”

22பாபிலோன் வீழ்ச்சியடைகிறபோது, யூதர்கள் யாரேனும் சரியான மனநிலையைக் காட்டுவார்களா? கடவுள் தரும் விடுதலை தங்களுடைய நன்மைக்கே என கருதி தாயகத்திற்குத் திரும்பிச் சென்று தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவார்களா? நிச்சயமாகவே நிலைநாட்டுவார்கள். இது கண்டிப்பாக நடக்கும் என்பதில் தமக்கிருக்கும் நம்பிக்கையை யெகோவா கூறும் அடுத்த வார்த்தைகள் காட்டுகின்றன. “பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய [“ஊழியனாகிய,” NW] யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீர சத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார். அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.” (ஏசாயா 48:20, 21) பாபிலோனை விட்டு உடனடியாக வெளியேறும்படி யெகோவாவின் ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமாக ஆலோசனை கொடுக்கப்படுகிறது. (எரேமியா 50:8) அவர்களுடைய விடுதலை பூமியின் கடைமுனை மட்டும் அறிவிக்கப்பட வேண்டும். (எரேமியா 31:10) தம்முடைய ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்டு வனாந்தர வழியாக நடந்துவந்த சமயத்தில் அவர்களுடைய தேவைகளை யெகோவா கவனித்துக்கொண்டார். அதுபோலவே, தம்முடைய ஜனங்கள் பாபிலோனை விட்டு தங்கள் தாயகத்திற்குத் திரும்பிச் செல்கையிலும் அவர் கவனித்துக் கொள்வார்.​—உபாகமம் 8:15, 16.

23யெகோவாவின் இரட்சிப்பின் செயல்கள் சம்பந்தமான மற்றொரு முக்கிய நியமத்தையும் யூதர்கள் தங்கள் மனதில் வைக்க வேண்டும். நல்மனமுள்ளவர்களும் தங்களுடைய பாவங்களினிமித்தம் பாதிக்கப்படலாம், ஆனாலும் அவர்கள் அழிக்கப்படுவதில்லை. பொல்லாதவர்களுடைய நிலையோ வேறு. “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 48:22) தம்மை நேசிப்போருக்கு கடவுள் அளிக்கும் சமாதானத்தை மனந்திரும்பாத பாவிகள் அனுபவிப்பதில்லை. இந்த இரட்சிப்பின் செயல்கள், தங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு விலகாதவர்களுக்கு அல்லது நம்பிக்கையற்றவர்களுக்கு உரியதல்ல. இவை, விசுவாசிப்போருக்கு மட்டுமே உரியது. (தீத்து 1:15, 16; வெளிப்படுத்துதல் 22:14, 15) கடவுள் தரும் சமாதானம் பொல்லாதவர்களுக்கு இல்லை.

24பொ.ச.மு. 537-⁠ல் பாபிலோனை விட்டு வெளியேறுவதற்கான அந்த சமயம் உண்மையுள்ள இஸ்ரவேலர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. 1919-⁠ல் கடவுளுடைய ஜனங்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதும் மகிழ்ச்சியைத் தந்தது. (வெளிப்படுத்துதல் 11:11, 12) அவர்கள் நம்பிக்கையால் நிரம்பியவர்களாக, தங்களுடைய ஊழியத்தை விரிவுபடுத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். பகைமை நிறைந்த உலகில் பிரசங்கிப்பதற்கு கிடைத்த புதிய வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள இந்த சிறுபான்மையான கிறிஸ்தவர்களுக்கு உண்மையில் தைரியம் தேவைப்பட்டது. ஆனால் யெகோவாவுடைய துணையுடன் அவர்கள் நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையில் இறங்கினார்கள். யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார் என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன.

25யெகோவா நம்முடைய நன்மைக்காகவே போதிக்கிறார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி வலியுறுத்துகிறது. ஆகவே, கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களுக்குக் கூர்ந்து கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம். (வெளிப்படுத்துதல் 15:2-4) கடவுளுடைய ஞானத்தையும் அன்பையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் யெகோவா சொல்வது சரியானதே என ஏற்றுக்கொள்வோம். அவருடைய எல்லா கட்டளைகளுமே நம்முடைய நன்மைக்கானவை.​—ஏசாயா 48:17, 18.

[கேள்விகள்]

1. ஞானமுள்ளவர்கள் யெகோவாவின் வார்த்தைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்?

2. ஏசாயா 48-⁠ம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகள் யாருக்காக பதிவு செய்யப்பட்டன, அவற்றிலிருந்து யாரும் நன்மையடையலாம்?

3. இஸ்ரவேலருடைய வணக்கத்தில் என்ன தவறு இருந்தது?

4. எப்படிப்பட்ட வணக்கம் யெகோவாவுக்குப் பிரியமானது?

5. யெகோவா முன்னறிவித்த ‘பூர்வகாலத்தில் நடந்தவைகளில்’ சில யாவை?

6. யூதர்கள் எந்தளவுக்கு “முரட்டாட்டமும் கலகமுமுள்ள” ஜனங்களாகிறார்கள்?

7. நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எதை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

8. என்ன புதிய காரியங்களை இன்று கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள், யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையில் அவர்கள் ஏன் முழு நம்பிக்கை வைக்கிறார்கள்?

9. இஸ்ரவேல் தேசம் எவ்வாறு ‘தாயின் கர்ப்பந்தொடங்கி மீறுகிற’ ஜனமாக இருந்திருக்கிறது?

10. யெகோவா தம்மை ஏன் கட்டுப்படுத்துவார்?

11. தம்முடைய ஜனங்களை முற்றிலுமாக அழிக்க கடவுள் ஏன் அனுமதிக்க மாட்டார்?

12. முதல் உலகப் போரின்போது உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி புடமிடப்பட்டனர்?

13. முதல் உலகப்போர் முதற்கொண்டு துன்புறுத்துதலுக்கு யெகோவாவின் ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்திருக்கிறார்கள்?

14. (அ) யெகோவா எவ்விதத்தில் ‘முந்தினவரும் பிந்தினவருமாக’ இருக்கிறார்? (ஆ) யெகோவா தம்முடைய ‘கரத்தால்’ மகத்தான என்ன கிரியைகளை செய்துள்ளார்?

15. எவ்விதத்தில், என்ன நோக்கத்திற்காக கோரேசுவை யெகோவா “நேசித்திருக்கிறார்”?

16, 17. (அ) கடவுள் தம்முடைய முன்னறிவிப்புகளை இரகசியமாக அறிவிக்கவில்லை என எப்படி சொல்ல முடியும்? (ஆ) தம்முடைய நோக்கங்களை யெகோவா இன்று எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்?

18. தம்முடைய ஜனங்களைக் குறித்ததில் யெகோவாவின் ஆவல் என்ன?

19. என்ன உருக்கமான வேண்டுகோளை யெகோவா விடுக்கிறார்?

20. (அ) இஸ்ரவேலர் கலகம் செய்பவர்களாக இருந்தாலும் கடவுளுடைய விருப்பம் என்ன? (ஆ) தம்முடைய ஜனங்களை யெகோவா கையாண்ட விதத்திலிருந்து அவரைப் பற்றி நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? (பக்கம் 133-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.)

21. இன்று நாம் யெகோவாவின் போதனையை நாடினோமென்றால் என்ன ஆசீர்வாதங்களை பெறலாம்?

22. உண்மையுள்ள யூதர்கள் என்ன செய்யும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது, அவர்களுக்கு என்ன நம்பிக்கையான வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன?

23. கடவுள் தரும் சமாதானத்தை யார் அனுபவிப்பதில்லை?

24. நவீன காலங்களில் எது கடவுளுடைய ஜனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது?

25. கடவுளுடைய நீதியான சட்டங்களுக்கு கூர்ந்து கவனம் செலுத்துவது ஏன் முக்கியமானது?

[பக்கம் 133-ன் பெட்டி/படங்கள்]

சர்வவல்லமையுள்ள கடவுள் தம்மை கட்டுப்படுத்துகிறார்

“என் சினத்தை அடக்கிக் கொள்கின்றேன்; . . . கட்டுப்படுத்துகின்றேன்” என விசுவாச துரோக இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னார். (ஏசாயா 48:9, பொ.மொ.) தம்முடைய வல்லமையை ஒருபோதும் துஷ்ப்பிரயோகம் செய்யாதிருப்பதில் கடவுள் தலைசிறந்த மாதிரி வைக்கிறார் என்பதைக் காண இப்படிப்பட்ட கூற்றுகள் நமக்கு உதவுகின்றன. கடவுளைவிட மிஞ்சின வல்லமை யாருக்குமே இல்லை என்பது உண்மையே. ஆகவேதான் நாம் அவரை எல்லாம் வல்லவர், சர்வ சக்தியும் படைத்தவர் என குறிப்பிடுகிறோம். ‘சர்வ வல்லமையுள்ளவர்’ என்ற பட்டப்பெயரை அவர் சரியாகவே தமக்குப் பொருத்துகிறார். (ஆதியாகமம் 17:⁠1) அவர் சர்வலோகத்தையும் படைத்த உன்னத கடவுள் எனும் ஸ்தானத்தில் இருப்பதால் அவருக்கு எல்லையற்ற பலம் மட்டுமல்ல சகல அதிகாரமும் இருக்கிறது. ஆகவே, யாராலும் அவருடைய கையைத் தடுத்து நிறுத்த முடியாது அல்லது அவரிடம் “என்ன செய்கிறீரென்று” கேட்கவும் முடியாது.​—⁠தானியேல் 4:35.

தம்முடைய விரோதிகளிடம் தம் வல்லமையைக் காட்டுவதற்கு அவசியம் ஏற்படுகிறபோதிலும் கடவுள் கோபிக்க தாமதிக்கிறவர். (நாகூம் 1:⁠3, NW) யெகோவாவால் தம்முடைய ‘சினத்தை அடக்கிக் கொள்ள முடியும்.’ மேலும் கோபம் அல்ல அன்பே அவருடைய பிரதான குணமாக இருப்பதால் அவர் “கோபிக்க தாமதிக்கிறவர்” என பொருத்தமாகவே விவரிக்கப்படுகிறார். அவர் கோபத்தை வெளிப்படுத்துகையில் அது எப்போதுமே நீதியாகவும் நியாயமாகவும் கட்டுப்பட்டதாகவுமே இருக்கிறது.​—⁠யாத்திராகமம் 34:6; 1 யோவான் 4:8.

யெகோவா ஏன் இவ்வாறு செயல்படுகிறார்? ஏனென்றால் அவர் தம்முடைய மற்ற மூன்று பிரதான குணங்களாகிய ஞானம், நீதி, அன்பு போன்றவற்றோடு தம்முடைய சர்வவல்லமையின் சக்தியை முற்றிலுமாக சமநிலைப்படுத்துகிறார். அவர் வல்லமையை உபயோகிப்பது இந்த மற்ற குணங்களுடன் எப்போதுமே ஒத்துப்போகிறது.

[பக்கம் 122-ன் படம்]

திரும்ப நிலைநாட்டுவதைப் பற்றிய ஏசாயாவின் செய்தி நாடுகடத்தப்பட்ட உண்மையுள்ள யூதர்களில் ஓரளவு நம்பிக்கை பிறக்கச் செய்கிறது

[பக்கம் 124-ன் படங்கள்]

யூதர்கள், யெகோவாவின் செயல்களை விக்கிரகங்களின் செயலாக கருதினர்

1. இஷ்டார் 2. பாபிலோனின் ஊர்வல பாதையின் சுவற்றில் பளபளக்கும் ஒரு சிற்ப வேலைப்பாடு 3. மார்டுக்கின் டிராகன் சின்னம்

[பக்கம் 127-ன் படம்]

கடவுளை வணங்குவதற்கான நம் உள்நோக்கம் தூய்மையானதா இல்லையா என்பதை “உபத்திரவத்தின் உலை” வெளிப்படுத்தும்

[பக்கம் 128-ன் படங்கள்]

உண்மை கிறிஸ்தவர்கள் கொடூரமான துன்புறுத்துதல்களை அனுபவித்திருக்கின்றனர்