Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிவுரைக்குச் செவிகொடு, சிட்சையை ஏற்றுக்கொள்

அறிவுரைக்குச் செவிகொடு, சிட்சையை ஏற்றுக்கொள்

அதிகாரம் 16

அறிவுரைக்குச் செவிகொடு, சிட்சையை ஏற்றுக்கொள்

நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” என்று வேதவசனத்தில் சொல்லியிருப்பதை நம்மில் பலர் தடையின்றி ஒப்புக்கொள்கிறோம். (யாக். 3:2) நாமிருக்க விரும்புகிற, மேலும் கடவுளுடைய வார்த்தையில் நம்மைத் தூண்டி ஊக்குவிக்கிற வகையான ஆட்களாக இருக்க நாம் தவறியிருக்கும் சந்தர்ப்பங்கள் பல எளிதில் நம் நினைவுக்கு வருகின்றன. ஆகவே பைபிளில் பின்வருமாறு நமக்குச் சொல்லப்பட்டிருப்பது சரியென்று நாம் ஒப்புக்கொள்கிறோம்: “உன் எதிர் காலத்தில் நீ ஞானவானாகும்படி அறிவுரைக்குச் செவிகொடுத்து சிட்சையை ஏற்றுக்கொள்.” (நீதி. 19:20, NW) இப்படிப்பட்ட உதவி நமக்குத் தேவையென நாம் அறிந்திருக்கிறோம். பைபிளிலிருந்து நாம் கற்றறிந்தவற்றிற்கு ஒத்தவாறு நம்முடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்த நிச்சயமாகவே நாம் சரிப்படுத்தல்களைச் செய்திருக்கிறோம். ஆனால் நாம் ஞானமற்று நடந்த ஒரு தனிப்பட்ட காரியத்தில் ஓர் உடன் கிறிஸ்தவன் நமக்குத் தனியே அறிவுரை கொடுத்தால் நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம்? அல்லது ஏதோ ஒரு நடவடிக்கையில் நாம் எப்படி முன்னேறலாமென்று அவர் வெறும் ஆலோசனை கொடுத்தால் என்ன செய்கிறோம்?

2 நம்முடைய அபூரண மனித இயல்பின் காரணமாக உடனடியாக நம் உள்ளத்தில் ஏற்படும் எதிரியக்கம் என்னவாக இருந்தாலும், அந்த அறிவுரைக்காக உள்ளப்பூர்வமான நன்றியறிதலை நாம் வெளிப்படுத்திக் கூறி அதைப் பொருத்திப் பிரயோகிக்க உழைக்க வேண்டும். அப்படி நாம் செய்வதன் விளைவு நன்மை பயக்குவதாயிருக்கும். (எபி. 12:11) ஒருவேளை, நமக்கு அறிவுரை கொடுக்கப்பட்ட போது, அந்த நிலைமையின் வினைமையான தன்மையைக் குறைப்பதற்கு நம்மைச் சரியெனக் காட்ட அல்லது அந்தக் குற்றத்தை வேறு எவர்மீதாவது கடத்த நாம் முயன்றிருக்கலாம். இவ்வகையில் நீங்கள் எப்பொழுதாவது பிரதிபலித்ததுண்டா? அந்தச் சந்தர்ப்பதை நாம் திரும்ப நினைவுபடுத்திக் காண்கையில், அந்த அறிவுரையைக் கொடுத்தவரிடம் நாம் மனக்கசப்பு உணர்ச்சியடைகிறோமா? நமக்கு அறிவுரை கொடுத்தவரின் அல்லது அவர் அறிவுரை கொடுத்த முறையின் குற்றங்குறைபாடுகளை தேடிக்காண நாம் மனம் சாய்கிறோமா? அவ்வாறு செய்வது எவ்வகையிலோ நம்முடைய சொந்தப் பலவீனத்தைக் குறைத்துக் காட்டுவதாக எண்ணுகிறோமா? இத்தகைய மனச் சாய்வுகளைத் தவிர்த்து மேற்கொள்ள பைபிள் ஒருவருக்கு உதவி செய்யக்கூடுமா?

நமக்கு நல்லறிவு புகட்டுவதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள உதாரணங்கள்

3 இந்த விஷயத்தின்பேரில் கடவுளுடைய வார்த்தையில் ஏராளமான நேர்முக அறிவுரை கொடுக்கப்பட்டிருப்பதோடுகூட, அறிவுரை கொடுக்கப்பட்ட தனித்தனியாட்களைப் பற்றிய உண்மையான வாழ்க்கை அனுபவங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. அடிக்கடி அறிவுரை சிட்சையாகவும் இருந்தது, எப்படியெனில் அதைப் பெறுகிறவன் தன் மனப்பான்மையை அல்லது தன் நடத்தையை மாற்ற வேண்டியிருந்தது. இந்த உதாரணங்களில் சிலவற்றை ஆராய்வதற்கு கீழுள்ள கேள்விகளை நீங்கள் பயன்படுத்துகையில், நாமெல்லாரும் பயனடையக்கூடிய அதிகம் அங்கிருப்பதை நீங்கள் காண்பீர்கள்

கீசின் குமாரனாகிய சவுல்: யெகோவாவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிய அவன் தவறினான், அமலேக்குக்கு விரோதமாய்ப் போர் செய்கையில், அவன் அந்த அரசனையும் அவர்களுடைய மிருகங்களில் மிகச் சிறந்தவற்றையும் அழிக்காமல் விட்டுவைத்தான். (1 சாமு. 15:1-11)

சாமுவேல் கண்டித்துக் கூறின அறிவுரைக்குச் சவுல் கொடுத்த பதிலில், அந்தத் தவறை அவன் குறைத்துக்காட்ட முயன்றானென எது காட்டுகிறது? (வச. 20) குற்றத்தை யார் மீது கடத்த அவன் முயன்றான்? (வச. 21) அவன் கடைசியாகத் தவறை ஒப்புக்கொண்டபோது, என்ன சாக்குப்போக்கைக் கொடுத்தான்? (வச. 24) இந்நிலையிலுங்கூட அவன் எதைக் குறித்தே மிக அதிக அக்கறையுடனிருந்ததாகத் தோன்றியது? (வச. 25, 30)

உசியா: யெகோவாவின் ஆலயத்தில் தூபங்காட்டுவது ஆசாரியர்களுக்கு மாத்திரமே அதிகாரங் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், இதைச் செய்ய உசியா ஆலயத்துக்குள் சென்றான். (2 நாளா. 26:16-20)

தலைமை ஆசாரியன் அரசனாகிய உசியாவைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அரசன் ஏன் கோபத்துடன் பிரதிபலித்தான்? (16-ம் வசனத்தை ஒத்துப் பாருங்கள்.) இதன் விளைவு என்ன? (வச. 19-21)

4 இந்த ஒவ்வொரு காரியத்திலும், தனக்கு அறிவுரை தேவை என்பதை எதிர்ப்படுவது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏன் கடினமாயிருந்தது? அடிப்படையான பிரச்னை பெருமையே, தன்னைப் பற்றி உயர்வாக நினைத்ததே. இந்தக் குணத்தின் காரணமாக இன்று பலர் தங்களுக்கு மிகுந்தத் துக்கத்தைக் கொண்டுவருகிறார்கள். ஏதோ உயர்படி நிலை என்று தாங்கள் கருதுவதை, வயதின் அல்லது பொறுப்பு நிலையின் காரணமாகத் தாங்கள் அடைந்திருப்பதனால், அவர்கள் தங்களுக்குத் தனியே கொடுக்கப்படும் அறிவுரையை ஏற்க மனமற்றிருக்கிறார்கள். அது தங்களின் எதோ குறைவை மறைமுகமாகச் சுட்டிக் காடடுகிறதென அல்லது தங்கள் மதிப்பைக் கெடுக்கிறதென அவர்கள் உணருவதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் தெரிவிக்கப்படும் பலவீனம் பெருமையே. இது இந்தக் குற்றம் பொதுவாக யாவருக்குமுள்ள தென்று வெறுமென குற்றப்பொறுப்பை ஏற்காது விடுவதற்குரிய ஒன்றல்ல. இது, யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமும் தம்முடைய காணக்கூடிய அமைப்பின் முலமும் அளிக்கும் அன்புள்ள உதவியை ஏற்க மறுக்கும்படி ஒருவரின் சிந்தனையை மங்கவைக்க சாத்தான் பயன்படுத்துகிற கண்ணியாகும். “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை,” என்று யெகோவா எச்சரிக்கிறார்.—நீதி. 16:18; ரோமர் 12:3; நீதிமொழிகள் 16:5-ஐயும் பாருங்கள்.

5 மறுபட்சத்தில், அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்களைப் பற்றிய சிறந்த உதாரணங்களும் வேத எழுத்துக்களில் அடங்கியிருக்கின்றன. இவற்றிலிருந்தும் மதிப்புள்ள பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். கவனியுங்கள்:

மோசே: அவனுடைய கடும் உழைப்புக்குரிய பாரத்தைத் தன் உடலாரோக்கியத்தைக் கெடுக்காமல் கையாளும் முறையின் பேரில் அவனுடைய மாமன் அவனுக்கு நடைமுறையான ஆலோசனையைக் கொடுத்தான். மோசே அதற்குச் செவிகொடுத்து உடனடியாகப் பொருத்திப் பிரயோகித்தான். (யாத். 18:13-24)

மோசேக்கு மிகுந்த அதிகாரம் இருந்தபோதிலும், ஆரோக்கியமான அறிவுரையை அவன் ஏன் அவ்வளவு மனமுவந்து ஏற்றான்? (எண்ணாகமம் 12:3-ஐ ஒத்துப் பாருங்கள்.) இந்தப் பண்பு நமக்கு எவ்வளவு முக்கியமானது? (செப். 2:3)

தாவீது: இவன் விபசாரக் குற்றஞ்செய்தான், பின்பு தான் அவளை மணஞ்செய்துகொண்டு அந்த விபசாரக் குற்றத்தை மூடிப்போடும்படி அந்தப் பெண்ணின் கணவனைக் கொல்வதற்குச் சதிசெய்தான். தாவீதைக் கண்டனஞ்செய்ய யெகோவா நாத்தானை அனுப்புவதற்கு முன்பு பல மாதங்கள் கடந்து சென்றன. (2 சாமு. 11:2-12:12)

கண்டனம் செய்யப்பட்டபோது தாவீது கோபமடைந்து, தவறை குறைத்துக் காட்ட அல்லது குற்றத்தை மற்றொருவர் மீது கடத்த முயற்சி செய்தானா? (2 சாமு. 12:13; சங். 51: தலைப்பிலுள்ளதும் 1-3-வசனங்களும்) தாவீது மனந்திரும்பினதைக் கடவுள் ஏற்றுக் கொண்ட இந்தக் காரியம், தாவீதும் அவனுடைய வீட்டாரும் அவனுடைய தவறான நடத்தையின் கெட்ட விளைவுகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டார்களென அர்த்தங்கொண்டதா? (2 சாமு. 12:10, 11, 14; யாத். 34:6, 7)

6ஆரோக்கியமான அறிவுரைக்குச் செவிகொடுப்பதனால் வரும் நன்மையை அரசனாகிய தாவீது நன்றாய் அறிந்திருந்தான், ஒருசில சந்தர்ப்பத்தில் அந்த அறிவுரை எவர் மூலமாக வந்ததோ அந்த நபருக்காகவும் அவன் கடவுளுக்கு நன்றி செலுத்தினான். (1 சாமு. 25:32-35; நீதிமொழிகள் 9:8-ஐயும் பாருங்கள்.) நாம் அவ்வாறு இருக்கிறோமா? அப்படியானால், நாம் பின்னால் வருந்த செய்யும் பல காரியங்களைச் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம். ஆனால் தாவீது, பத்சேபாளோடு செய்தத் தன் பாவத்தின் சம்பந்தமாகச் சிட்சிக்கப்பட்டதைப் போல், நாம் கடுமையாய்ச் சிட்சிக்கப்படுவதற்கு வழிநடத்தும் சூழ்நிலைமைகளுக்கு உட்பட்டிருந்தால், அந்தச் சிட்சை, நம்முடைய நித்திய சுகநலத்தை நோக்கில் கொண்டுள்ள யெகோவாவின் அன்பின் அத்தாட்சி என்ற உண்மையை நாம் மறந்துவிடாதிருப்போமாக.—நீதி. 3:11, 12; 4:13;

நம்மில் வளர்ப்பதற்கு விலைமதியா பண்புகள்

7 யெகோவாவுடனும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரருடனும் நல்ல உறவைக் கொண்டிருக்க நாம் தனிப்பட்ட பண்புகள் சிலவற்றை நம்மில் வளர்க்க வேண்டும். இயேசு தம்முடைய சீஷர்களின் மத்தியில் ஓர் இளம் பிள்ளையை நிறத்தி பின்வருமாறு சொன்னபோது இவற்றில் ஒன்றை விளக்கமாக எடுத்துக் காட்டினார்: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள், . . . ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.” (மத். 18:3, 4) அந்தச் சீஷர்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் பெருமையை விலக்கிப்போட்டு மனத்தாழ்மையைத் தங்களில் வளர்க்க வேண்டியிருந்தது.

8 பின்னால் அப்போஸ்தலனாகிய பேதுரு உடன் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) நாம் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருக்கவேண்டுமென அறிந்திருக்கிறோம், ஆனால் நம்முடைய உடன் விசுவாசிகளோடு இருக்கும் நம்முடைய உறவுகளிலும் நாம் மனத்தாழ்மையுடன் அல்லது மனதில் பணிவுடன் இருக்கவேண்டுமென இந்த வேத வசனத்தில் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் அவ்வாறிருந்தால், அவர்கள் நமக்கு ஆலோசனைகள் கொடுக்கையில் முட்டாள்தனமாகக் கோபங்கொள்ளமாட்டோம். ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாயிருப்போம். (நீதி. 12:15) கண்டித்துத் திருத்தும் அறிவுரை நமக்குக் கொடுக்க வேண்டியதாக நம்முடைய சகோதரர் கண்டால், அப்பொழுது நம்மைச் சீர்ப்படுத்தி சரியாக்க யெகோவா அன்புடன் இந்த வழிவகையைப் பயன்படுத்துகிறாரென்று நாம் மதித்துணர்ந்து, அதை எற்க மறுக்கமாட்டோம்.—சங். 141:5.

9 மனத்தாழ்மையோடு நெருங்க சேர்ந்துள்ள மற்றொரு பண்பு, மற்றவர்களுடைய சுகநலத்துக்கு உண்மையான அக்கறை கொண்டிருப்பதாகும். நாம் செய்யும் காரியம் மற்ற ஆட்களைப் பாதிக்கிறதென்ற இந்த உண்மையிலிருந்து நாம் விலகிக்கொள்ள முடியாது. மற்றவர்களுடைய மனச்சாட்சிக்கு அக்கறை காட்டும்படி கொரிந்துவிலும் ரோமிலுமிருந்த பூர்வ கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறினான். அவரவர் தனிப்பட்டு விரும்பும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டுமென அவன் சொல்லவில்லை, ஆனால் மற்றொருவன் தவறென்று தன் மனச்சாட்சி தனக்குச் சொன்னதைச் செய்யும்படி அவனுக்குத் துணிகரமளித்து இவ்வாறு அவனுடைய ஆவிக்குரிய அழிவுக்கு வழிநடத்தும் எதையும் செய்யாதபடி அவர்களை நிச்சயமாகவே எச்சரித்தான். பவுல் பின்வருமாறு எழுதினபோது இந்த எல்லாமடங்கும் நியமத்தைத் தெளிவாக வெளிப்படுத்திக் கூறினான்: “ஒருவனும் தனக்கானதையல்ல பிறனுக்கானதை நாடக்கடவன். . . . ஆகையால், நீங்கள் புசித்தாலுங் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளின் மகிமைக்கென்று செய்யுங்கள். நீங்கள் யூதருக்கும் கிரேக்கருக்கும் கடவுளின் சபைக்கும் இடறலுண்டாக்காதிருங்கள்.”—1 கொரி. 10:24-33; 8:4-13; ரோமர் 14:13-23.

10 உங்களுடைய சொந்த விருப்பத்துக்கு மேலாக மற்றவர்களுடைய சுகநலத்தை முன் வைப்பதைப் பழக்கமாக்குகிற ஆளாக நீங்கள் இருக்கிறீர்களா? இவ்வாறு செய்வதற்குப் பல வழிகள் உண்டு, ஆனால் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். பொதுவாய்ச் சொல்ல வேண்டுமானால், நாம் அடக்கமாயும், ஒழுங்காயும், சுத்தமாயும் இருக்கும் வரையில் உடையும் சிகை அலங்காரமும் அவரவருடைய சொந்த விருப்பத்துக்குரிய எளிய காரியங்கள். ஆனால் உங்கள் சமுதாயத்திலுள்ள ஆட்களின் வளர்ப்பு சூழ்நிலையின் காரணமாக, நீங்கள் உடுத்தும் அல்லது சிகை அலங்காரம் செய்யும் முறை அவர்கள் ராஜ்ய செய்திக்குச் செவிகொடுப்பதற்குத் தடங்கலாக இருக்கிறதென்றால், உங்களைச் சரிப்படுத்தி அமைத்துக் கொள்வீர்களா? உங்களைத்தானே பிரியப்படுத்திக் கொள்வதைப் பார்க்கிலும் மற்றொரு ஆளின் உயிர் உங்களுக்கு அதிக முக்கியமாயிருக்கிறதா?

11 மேலே தர்க்கித்தாராய்ந்த பண்புகள் நம்முடைய சுபாவத்தின் பாகமாகையில், கிறிஸ்துவின் மனதைக் கொண்டிருக்க நாம் தொடங்குகிறோம் என்பதற்கு இது அத்தாட்சியை அளிக்கிறது. மனத்தாழ்மையாய் இருப்பதில் இயேசு பரிபூரண முன்மாதிரியை வைத்தார். (யோவான் 13:12-15; பிலிப். 2:5-8) வெறுமென தம்மைத்தாமே பிரியப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக மற்றவர்கள் பேரில் அக்கறை காட்டுவதில், நாம் பின்பற்றுவதற்கு மாதிரியை அவர் முன் வைத்தார்.—ரோமர் 15:2, 3.

யெகோவா கொடுக்கும் சிட்சையை ஏற்க மறுக்காதேயுங்கள்

12 நாமெல்லாரும் பாவிகளாயிருப்பதனால், நம்முடைய கடவுளின் சுபாவத்தை நம்மில் பிரதிபலிக்க, நம்முடைய மனப்பான்மையிலும், நம்முடைய பேச்சிலும், நம்முடைய நடத்தையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். நாம் “புதிய மனுஷனைத்” தரித்துக் கொள்ள வேண்டும். (கொலோ. 3:5-14; தீத்து 2:11-14) நமக்குச் சரிப்படுத்தல்கள் தேவைப்படுகிற பகுதிகளை நாம் கண்டுகொள்ளவும் பின்பு அவற்றை எப்படிச் செய்வதென்று காணவும், அறிவுரையும் சிட்சையும் நமக்கு உதவிசெய்கின்றன.

13 இந்தப் போதனையின் அடிப்படை ஊற்றுமூலம் பைபிள் தானேயாகும். (2 தீமோ. 3:16, 17) பின்பு அதை எப்படிப் பொருத்திப் பிரயோகிப்பதென்பதை யெகோவா தம்முடைய காணக்கூடிய அமைப்பு ஏற்பாடு செய்கிற பைபிள் புத்தகங்களின் மூலமும் கூட்டங்களின் மூலமும் நாம் காண்பதற்கு உதவி செய்கிறார். நாம் அதை முன்பே கேள்விப்பட்டிருந்தாலும்—அது நமக்குத் தனியே தேவைப்படுகிறதை மனத்தாழ்மையுடன் உணர்ந்து ஒப்புக்கொண்டு, முன்னேறுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்வோமா?

14 நமக்குத் தனிப்பட்ட பிரச்னையாயிருக்கும் காரியங்களில் தன்னந்தனியாகப் போராடிக்கொண்டிருக்க யெகோவா நம்மை விடுகிறதில்லை. அன்புள்ள அக்கறையுடன் அவர், நமக்குத் தனிப்பட்ட உதவி கொடுக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்கிறார். வீட்டு பைபிள் படிப்புகளின் மூலம் கொடுக்கப்படும் இத்தகைய உதவியிலிருந்து இலட்சக்கணக்கான ஆட்கள் நன்மையடைந்திருக்கிறார்கள். பெற்றோர், பின்னால் வாழ்க்கையில் மிகுந்த இருதயவேதனையை உண்டுபண்ணக்கூடிய நடத்தைக் கெதிராகத் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க அவர்களுக்குச் சிட்சை கொடுக்க வேண்டிய விசேஷித்த பொறுப்புடையவர்கள். (நீதி. 6:20-35; 15:5) சபைக்குள்ளும், ஆவிக்குரிய தகுதி பெற்றிருக்கிறவர்கள், திரும்ப சீர்ப்படுத்துவது தேவையென தாங்கள் காணும் மற்றவர்களைச் சீர்பொருந்தப் பண்ணும் பொறுப்பைத் தாங்குகிறார்கள்; ஆனால் இதைச் சாந்தமுள்ள ஆவியோடு செய்ய வேண்டும். (கலாத். 6:1, 2) ஒற்றுமைப்பட்ட ஜனங்களாக நாம் யெகோவாவை வணங்கும்படி இந்த வழிகளில் யெகோவா நமக்கு அறிவுரையும் சிட்சையும் கொடுக்கிறார்.

மறு கலந்தாலோசிப்பு

● நாம் தனியே அவரவர் நம்மில் சரிப்படுத்தல்களைச் செய்யவேண்டுமென்பதைக் காண யெகோவா எப்படி அன்புடன் நமக்கு உதவி செய்கிறார்?

● அறிவுரையை ஏற்பது ஏன் பலருக்கு கடினமாயிருக்கிறது? இது எவ்வளவு வினைமையானது?

● அறிவுரையை ஏற்க எந்த விலைமதியா பண்புகள் நமக்கு உதவி செய்யும்? இவற்றில் இயேசு எப்படி முன்மாதிரியை வைத்தார்?

[கேள்விகள்]

1. (எ) அறிவுரையும் சிட்சையும் தேவைப்படாதவர்கள் நம்மில் எவராவது உண்டா? (பி) என்ன கேள்விகளை நாம் ஆழ்ந்து சிந்திப்பது நல்லது?

2. (எ) நமக்குத் தனிப்பட கொடுக்கப்படும் அறிவுரைக்கு நாம் ஏன் நன்றி மதித்துணர்வைக் காட்ட வேண்டும்? (பி) நாம் எப்படிப் பிரதிபலிக்கக் கூடாது?

3. (எ) அறிவுரையையும் சிட்சையையும் சரியான மனப்பான்மையுடன் கருதும் தன்மையை நம்மில் வளர்க்க, பைபிளில் அடங்கியுள்ள எது நமக்கு உதவி செய்யும்? (பி) அறிவுரைக்கு சவுலும் உசியாவும் பிரதிபலித்த முறைகளைப் பகுத்தாராய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.

4. (எ) அறிவுரையை ஏற்பது ஏன் சவுலுக்கும் உசியாவுக்கும் கடினமாயிருந்தது? (பி) இன்றும் இது ஏன் வினைமையான பிரச்னையாயிருக்கிறது?

5. மோசேயையும் தாவீதையுங் குறித்த விவரப் பதிவுகளிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களைத் தெளிவாய்க் கண்டறிவதற்கு இந்தப் பத்தியின் பாகமாயுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.

6. (எ) தனக்கு ஆரோக்கியமான அறிவுரைகளைக் கொடுத்த ஆட்களைப் பற்றி தாவீது எவ்வாறு உணர்ந்தான்? (பி) இத்தகைய அறிவுரையை நாம் ஆவலோடு ஏற்றால் எப்படி நன்மையடைவோம்? (சி) நாம் கடுமையாய் சிட்சிக்கப்பட்டால் எதை மறந்து விடக்கூடாது?

7. ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க ஆட்களுக்கு என்ன பண்பு இருக்க வேண்டுமென்று இயேசு காட்டினார்?

8. (எ) யார் முன்பாக நாம் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும், ஏன்? (பி) நாம் மனத்தாழ்மையுடனிருந்தால், அறிவுரைக்கு எப்படிப் பிரதிபலிப்போம்?

9. (எ) எந்த முக்கியமான பண்பு மனத்தாழ்மையுடன் நெருங்க சம்பந்தப்பட்டிருக்கிறது? (பி) நம்முடைய நடத்தை மற்றவர்களைப் பாதிக்கும் முறையைக் குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?

10. வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பதை நாம் பழக்கமாக்கிக் கொள்கிறோமாவென எது காட்டக்கூடும்?

11. நாம் உண்மையில் கிறிஸ்தவர்களாயிருக்க விரும்பினால் இந்தப் பண்புகளை நம்மில் வளர்ப்பது முக்கியமென எது காட்டுகிறது?

12. (எ) கடவுளுக்குப் பிரியமான சுபாவத் தன்மையுடனிருக்க என்ன மாற்றங்களை நாமெல்லாரும் செய்ய வேண்டும்? (பி) எது நமக்கு உதவி செய்யும்?

13. (எ) எந்த வழிவகைகளின் மூலமாய் யெகோவா நம்மெல்லாருக்கும் அறிவுரையும் சிட்சையும் ஏற்பாடு செய்திருக்கிறார்? (பி) அதை நாம் என்ன செய்யவேண்டும்?

14. தனித்தனியே ஒவ்வொருவருக்கும் மேலுமாக என்ன உதவியை யெகோவா அளிக்கிறார்?