Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அவர்கள் உலகத்தின் பாகமல்ல”

“அவர்கள் உலகத்தின் பாகமல்ல”

அதிகாரம் 21

“அவர்கள் உலகத்தின் பாகமல்ல”

இயேசு, தாம் கழுமரத்தில் அறையப்படுவதற்கு முந்தின இரவில், தம்முடைய சீஷர்களுக்காக ஊக்கமாய் ஜெபித்தார். சாத்தான் அவர்களை மிகக் கடுமையான நெருக்கடியின் கீழ் வைப்பானென்று அறிந்து, அவர் தம்முடைய தகப்பனிடம் பின்வருமாறு கூறினார்: “அவர்களை உலகத்திலிருந்து எடுத்துவிடும்படி அல்ல, ஆனால் பொல்லாங்கனிமித்தம் அவர்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கும்படியே நான் வேண்டிக்கொள்கிறேன். நான் உலகத்தின் பாகமல்லாததுபோல் அவர்களும் உலகத்தின் பாகமல்ல.” (யோவான் 17:15, 16, NW) இவ்வுலகத்துக்கு விலகியிருப்பது ஏன் முக்கியம்? ஏனென்றால் சாத்தான் அதன் அதிபதியாயிருக்கிறான். உலகத்தின் பாகமாக இருக்கிறவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர். (யோவான் 14:30; 1 யோவான் 5:19) இதன் காரணமாக, “உலகத்தின் பாகமல்ல” என்பதன் அர்த்தத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெளிவாக விளங்கிக் கொள்வது மிக முக்கியமாகும். இயேசு எவ்வாறு அப்படியிருந்தார்?

2 இயேசு நிச்சயமாகவே மற்ற ஆட்களிடமிருந்து தன்னைத் தனிமையில் ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவர் “உலகத்தின் பாகமல்லாதது” மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதில் குறைவுபட்டதையும் குறிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர் பட்டணங்கள்தோறும் சென்று கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவந்தார். அவர் நோயுற்றவர்களைச் சுகப்படுத்தினார், குருடருக்குப் பார்வையைத் திரும்ப அளித்தார், மரித்தோரை எழுப்பினார், மனிதவர்க்கத்துக்காகத் தம்முடைய சொந்த உயிரையும் கொடுத்தார். ஆனால் இவ்வுலகத்தின் ஆவியால் நிரம்பியிருந்த ஜனங்களின் தெய்வபக்தியற்ற மனப்பான்மைகளையும் பொல்லாதச் செயல்களையும் அவர் நேசிக்கவில்லை. ஒழுக்கக்கேடான இச்சைகளுக்கும் பொருளாசை கொண்ட வாழ்க்கை முறைக்கும், தனக்கு முதன்மையைத் தேடும் தன்னலநாட்டத்துக்கும் எதிராக அவர் எச்சரித்தார். (மத். 5:27, 28; 6:19-21; லூக்கா 12:15-21; 20:46, 47) கடவுளிடமிருந்து நட்பு பிரிந்த ஜனங்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல், இயேசு யெகோவாவின் வழிகளில் நடந்தார். (யோவான் 8:28, 29) இயேசு யூதராக இருந்தபோதிலும், ரோமப் பேரரசும் யூதர்களும் உட்பட்ட அரசியல் சண்டை சச்சரவுகளில் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்கவில்லை.

“என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமானதல்ல”

3 எனினும், யூதரின் மதத்தலைவர்கள், இயேசு தேசீய அக்கறைகளை கவிழ்ப்பதாக அவர்மேல் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் அவரைக் கைது செய்து, ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடம் கொண்டு சென்றார்கள். இயேசுவின் போதகம் அவர்களுடைய பாசாங்கு தனத்தை வெளிப்படுத்திக் காட்டினதே அவர்களுக்கு உண்மையில் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால் அந்தத் தேசாதிபதியை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கே அவர்கள் பின்வரும் குற்றச்சாட்டைக் கூறினார்கள்: “இவன் எங்கள் ஜனத்துக்குள் கலகம் உண்டாக்குகிறான்; இராயனுக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்கிறான்; தன்னைக் கிறிஸ்து ராஜா என்கிறான்.” (லூக்கா 23:2, தி.மொ.) உண்மையில், ஓர் ஆண்டுக்கு முன்னால் ஜனங்கள் அவரை ராஜாவாக்க விரும்பினபோது, இயேசு மறுத்துவிட்டார். (யோவான் 6:15) தாம் ஒரு பரலோக அரசராக வேண்டுமென்றும், அரசராவதற்குத் தமக்குரிய காலம் இன்னும் வரவில்லையென்றும், தாம் மக்களாட்சியாலோ பொதுமக்கள் விருப்ப நடவடிக்கையாலோ அல்ல, யெகோவா தேவனால் சிங்காசனத்தில் ஏற்றப்பட வேண்டுமென்றும் அவர் அறிந்திருந்தார்.

4 வரிகள் செலுத்துவதைக் குறித்ததில், இயேசு கைது செய்யப்பட்டதற்கு மூன்று நாளுக்கு முன்புதானே, பரிசேயர்கள், இந்தக் காரியத்தின்பேரில் குற்றச்சாட்டில் சிக்கவைக்கும் வண்ணம் அவரை ஏதாவது சொல்ல வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடைய தந்திர கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு திநாரியத்தை [ரோமப் பணம்] எனக்குக் காட்டுங்கள்; இதிலிருக்கும் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது”? என்று கேட்டார். “இராயனுடையது,” என்று அவர்கள் சொன்னபோது, அவர்: “அப்படியானால் இராயனுடையவைகளை இராயனுக்கும் கடவுளுடையவைகளைக் கடவுளுக்குஞ் செலுத்துங்கள்,” என்று பதிலளித்தார்.—லூக்கா 20:20-25.

5 இயேசு கைது செய்யப்பட்ட அந்தச் சமயத்தில்தானே நடந்ததும், அவர் ரோமுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டில்லை என்றும், அவருடைய சீஷர்களும் அப்படிச் செய்ய அவர் விரும்பவில்லை என்றும் மெய்ப்பித்துக் காட்டினது. ரோம போர்ச்சேவகர் யூதரோடுகூட பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு இயேசுவைப் பிடிக்க வந்தார்கள். (யோவான் 18:3, 12; மாற்கு 14:43) இதைக் கண்டு, அப்போஸ்தலனாகிய பேதுரு பட்டயத்தை உருவி அந்த மனிதரில் ஒருவனைத் தாக்கி, அவனுடைய வலது காதை வெட்டிவிட்டான். ஆனால் இயேசு பேதுருவைக் கண்டித்து: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்,” என்று கூறினார். (மத். 26:51, 52) அடுத்த நாள் காலையில், பிலாத்துவுக்கு முன்பாக நின்றபோது, தம்முடைய நடவடிக்கைக்குக் காரணத்தை விளக்கிப் பின்வருமாறு கூறினார்: “என் ராஜ்யம் இந்த உலகத்தின் பாகமானதல்ல. என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாயிருந்தால், நான் யூதர்களிடம் ஒப்புக்கொடுக்கப்படாதபடி என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க, என் ராஜ்யம் இந்தத் தோற்று மூலத்திலிருந்து வருகிறதில்லை.”—யோவான் 18:36, NW.

6 பிலாத்து, அத்தாட்சியைக் கவனித்தாலோசித்தப் பின்பு, இயேசுவுக்கு விரோதமாய்க் கொண்டுவந்தக் “குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை” என்று அறிவித்தான். எனினும், அந்தக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டவற்றிற்கு இணங்கி இயேசுவைக் கழுமரத்தில் அறையச் செய்தான்.—லூக்கா 23:13-15; யோவான் 19:12-16.

சீஷர்கள் எஜமானரின் வழிக்காட்டுதலைப் பின்பற்றினர்

7 பைபிளிலும் மற்றச் சரித்திர புத்தகங்களிலுமுள்ள பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றிய பதிவு, கிறிஸ்தவர்கள் தாங்கள் ‘உலகத்தின் பாகமல்லாதது’ எவ்வாறு நடந்துகொள்ளும்படி தங்களைத் தேவைப்படுத்தியது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்டனரெனக் காட்டுகிறது. இவ்வுலகத்தின் ஆவியைத் தவிர்க்க அவர்கள் பிரயாசப்பட்டனர். ரோம வேடிக்கைக் காட்சியரங்கின் மற்றும் நாடகக் கொட்டகையின் வன்முறையும் ஒழுக்கக்கேடுமான பொழுதுபோக்குக் காட்சிகளை அவர்கள் தவிர்த்து விலகியிருந்ததனால், மனிதகுலத்தை வெறுப்பவர்களென ஏளனஞ்செய்யப்பட்டார்கள். எனினும் தங்கள் உடன்தோழரான மனிதரை வெறுப்பதற்கு மாறாக, மீட்புக்குக் கடவுள் செய்திருக்கும் அன்புள்ள ஏற்பாடுகளிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவர்கள் தங்களை முழுவதும் ஈடுபடுத்தினார்கள்.

8 தங்களுடைய எஜமானர் நடத்தப்பட்டதைப் போலவே இவர்களும் தகவல் திரித்துக் கூறப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் கைகளில் அடிக்கடி கடுமையான துன்புறுத்தலுக்கு இலக்கானார்கள், (யோவான் 15:18-20) ஆனால் சுமார் பொ.ச. 56 போல் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதி, இயேசு கொடுத்திருந்த அறிவுரையை மேலும் உறுதியாய் அறிவுறுத்தினான். “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு [அரசியல் அதிபதிகளுக்கு] அடங்கி நடக்கக்கடவன்; கடவுளாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,” என்று பவுல் அவர்களை ஊக்கப்படுத்தினான். இது, உலகப்பிரகாரமான அரசாங்கங்களை யெகோவா நிலைநாட்டுகிறாரென குறிக்கிறதில்லை, ஆனால் அவர்கள் அவருடைய அனுமதியின் பேரில் ஆளுகிறார்கள் என்றே குறிக்கிறது. அவர்கள் எந்த வரிசையில் அதிகாரத்துக்குவருவார்கள் என்பதைக் கடவுள் முன்கண்டு முன்னறிவித்ததன் காரணமாக, “அவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் வைக்கப்பட்டு நிற்கிறார்கள்” (NW) என்று பவுல் விளக்கினான். ஆகையால் இந்த “மேலான அதிகாரமுள்ளவர்கள்,” இயேசு கிறிஸ்துவின் கைகளில் கடவுளுடைய சொந்த ராஜ்யம், பூமியை ஆளும் ஒரே அரசாங்கமாகும் வரையில், தற்போதைய காலத்துக்கு “கடவுளின் ஏற்பாடாக” அமைகிறார்கள். ஆகவே உலகப்பிரகாரமான அதிகாரிகளுக்குத் தகுந்த மதிப்பைக் காட்டவும் அவர்கள் சுமத்தும் வரிகளைச் செலுத்தவும் பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினான்.—ரோமர் 13:1-7; தீத்து 3:1, 2.

9 என்றாலும், கடவுளுக்கும், கடவுளுடைய வார்த்தைக்கும் தங்கள் கிறிஸ்தவ மனச்சாட்சிக்கும் கவனம் செலுத்தாமல் வரம்பற்றக் கீழ்ப்படிதலைக் கொடுக்கும்படி பவுல் அவர்களுக்குச் சொல்லவில்லை. இயேசு யெகோவாவை மாத்திரமே வணங்கினாரென்றும், ஜனங்கள் தம்மை அரசராக்க இடங்கொடாமல் இயேசு மறுத்துவிட்டாரென்றும், பேதுருவிடம் அவனுடைய பட்டயத்தை உறையில் போடும்படி சொன்னார் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் மனச்சாட்சியுடன் தங்கள் எஜமானரின் முன்மாதிரியைக் கடைப்பிடித்தார்கள். ஆங்கிலத்தில் நாகரிகத்துக்குப் போகும் வழியில்—உலக சரித்திரம் என்ற புத்தகத்தில் (ஹெக்கல், சிக்மன் என்பவர்களாலாகியது 237, 238-ம் பக்கங்களில்) பின்வருமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது: “கிறிஸ்தவர்கள், ரோம குடிமக்களின் சில கடமைகளில் பங்குகொள்ள மறுத்தனர். கிறிஸ்தவர்கள் . . . இராணுவ சேவையில் ஈடுபடுவதைத் தங்கள் விசுவாச மீறுதலாக உணர்ந்தனர். அரசியல் பதவியை அவர்கள் எற்கமாட்டார்கள். பேரரசனை அவர்கள் வணங்கமாட்டார்கள்.”

10 தங்கள் நாளில் நடந்த அரசியல் மற்றும் இராணுவ சண்டை சச்சரவுகளைக் குறித்ததில், இயேசுவின் சீஷர்கள் கண்டிப்பான நடுநிலைவகிப்பைக் காத்துவந்தார்கள். பொ.ச. 66-ம் ஆண்டில், ரோம மாகாணமாகிய யூதேயாவிலிருந்த யூதர்கள் இராயனுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தார்கள். ரோமப் படை விரைவில் எருசலேமைச் சூழ்ந்து கொண்டது. நகரத்திலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தொடர்ந்து நடுநிலைவகித்து, அந்தப் போர்செய்யும் படைகளுக்கிடையிலிருந்து வெளியேறும்படி கூறின இயேசுவின் அறிவுரையை நினைவுகூர்ந்தார்கள். ரோமப்படை தற்காலிகமாகப் பின்வாங்கினபோது, கிறிஸ்தவர்கள் அந்த வாய்ப்பை அனுகூலப்படுத்திக் கொண்டு யோர்தான் நதியைக் கடந்து பெல்லாவின் மலைப்பாங்கான பகுதிக்குள் ஓடிப்போனார்கள். (லூக்கா 21: 20-24) அவர்கள் கடைப்பிடித்த நடுநிலைவகிப்பில், பின்வரும் கிறிஸ்தவர்களுக்கு உண்மையுள்ள மாதிரியாகச் சேவித்தார்கள்.

முடிவு காலத்தில் கிறிஸ்தவ நடுநிலை வகிப்பவர்கள்

11 அந்தப் பூர்வக் கிறிஸ்தவர்களின் மாதிரியைப் பின்பற்றி கிறிஸ்தவ நடுநிலை வகிக்கும் போக்கை, பொ.ச. 1914 முதற்கொண்டு இருந்துவரும் இந்த “முடிவு காலத்தில்” ஏதாவது தொகுதி தொடருவதைச் சரித்திரப் பதிவு காட்டுகிறதா? ஆம், யெகோவாவின் சாட்சிகள் அப்படிச் செய்திருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யமே, பூமியெங்குமுள்ள நீதியை நேசிப்போருக்குச் சமாதானத்தையும், செழிப்பையும், நீடிய சந்தோஷத்தையும் கொண்டுவரக்கூடிய ஒரே வழியென பூமிமுழுவதிலும் பிரசங்கிப்பதில் அவர்கள் தங்களை முழுமையாய் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள். (மத். 24:14) ஆனால் தேசங்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளைக் குறித்ததில், அவர்கள் கண்டிப்பான நடுநிலை வகிப்பைக் காத்துவருகின்றனர்.

12 இதற்கு நேர்மாறாக, கிறிஸ்தவ மண்டல பாதிரிமார் இவ்வுலகத்தின் அரசியல் விவகாரங்களில் வெகு மும்முரமாய் ஈடுபடுகின்றன. சில நாடுகளில் அவர்கள், தேர்தல் நாடுபவர்களுக்கு ஆதரவாக அல்லது எதிராகப் போராடும் செயல்களில் ஈடுபட்டுழைக்கின்றனர். பாதிரிமார்களில் சிலர் தாங்கள்தாமே அரசியல் பதவி வகிக்கின்றனர். மற்றவர்கள், பாதிரிமார் அங்கீகரிக்கும் செயல் திட்டங்களுக்குச் சலுகையளிக்கும்படி அரசியலாளரை வற்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்துகின்றனர். வேறு இடங்களில் “மாறுதல் விரும்பாத” பாதிரிமார், அதிகாரத்திலிருக்கிற ஆட்களின் நெருங்கிய நண்பர்களாக இருக்கையில் “முன்னேற்றத்தை நாடும்” பாதிரிமாரும் மந்திரிமாரும் அவர்களைக் கவிழ்ப்பதற்கு உழைக்கும் சிறுசிறு கும்பல்களாய்ப் போரிடும் இயக்கங்களை ஆதரிக்கக் கூடும். எனினும், யெகோவாவின் சாட்சிகள், தாங்கள் எந்த நாட்டில் வாழ நேரிட்டாலும் அரசியலில் தலையிடுகிறதில்லை. அரசியல் கட்சியைச் சேர்வது, பதவிக்காகப் போட்டியிடுதல், அல்லது தேர்தல்களில் ஓட்டுபோடுதல் போன்ற மற்றவர்கள் செய்யும் காரியங்களில் தாங்கள் இடையிட்டுத் தடுக்கிறதில்லை. தம்முடைய சீஷர்கள் “உலகத்தின் பாகமல்ல”வென்று இயேசு சொன்னதால், யெகோவாவின் சாட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் எந்த வகையான பாகத்தையும் எடுப்பதில்லை.

13 இயேசு முன்னறிவித்தபடி, இந்த “முடிவு காலத்தில்” தேசங்கள் திரும்பத்திரும்பப் போர் தொடுத்தனர், தேசங்களுக்குள்ளிருக்கும் கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிராக போருக்கெழும்பினர். (மத். 24:3, 6, 7) ஆனால் இந்த எல்லாவற்றிற்கும் எதிரில் யெகோவாவின் சாட்சிகள் என்ன நிலைநிற்கையை ஏற்றனர்? இத்தகைய சண்டை சச்சரவுகளைக் குறித்ததில் அவர்களுடைய நடுநிலைவகிப்பு உலகத்தின் எல்லா பாகங்களிலும் நன்றாய் அறியப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து எடுத்த நிலைநிற்கைக்கும் பின்னால் அவருடைய முதல் சீஷர்கள் நடத்தையில் முன்மாதிரி காட்டினதற்கும் ஒத்தவாறு, தி உவாட்ச்டவரின் நவம்பர் 1, 1939-ன் வெளியீட்டில், பின்வருமாறு சொல்லப்பட்டது: “கர்த்தரின் பக்கத்திலுள்ள யாவரும், போரிடும் தேசங்களைக் குறித்ததில் நடுநிலை வகிப்பார்கள், மகா கடவுளரசரின் [யெகோவாவின்] மற்றும் அவர் நியமித்த அரசரின் [இயேசு கிறிஸ்துவின்] சார்பில் பூராகவும் முழுமையாகவும் இருப்பார்கள்.” யெகோவாவின் சாட்சிகள் எல்லா தேசங்களிலும் எல்லா சூழ்நிலைமைகளின் கீழும் இந்த நிலைநிற்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இவ்வுலகத்தின் பிரிவினையான அரசியலும் போர்களும் யெகோவாவை வணங்குகிற தங்கள் சர்வதேச சகோதரத்துவத்தை முறிக்க அவர்கள் இடங்கொடுக்கவில்லை.—ஏசா. 2:3, 4; 2 கொரிந்தியர் 10:3, 4-ஐ ஒத்துப் பாருங்கள்.

14 யெகோவாவின் சாட்சிகள் இராணுவ உடைகளைத் தரிக்கவும் போருக்கெழும்பவும் மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், கடந்த அரை நூற்றாண்டுக்குமேல், நேரில் போரிடாத சேவையை அல்லது இராணுவ சேவைக்குப் பதிலாக மற்றவேலை நியமிப்புகளை ஏற்கவும் மறுத்துவிட்டனரென்று சரித்திர உண்மை நிகழ்ச்சிகளை ஆராய்வது காட்டுகிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைப் படித்தாராய்ந்து பின்பு தங்கள் சொந்த மனச் சாட்சியுடன் தீர்மானித்தார்கள். அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று ஒருவரும் அவர்களுக்குச் சொல்லுவதில்லை. மற்றவர்கள் செய்ய தெரிந்துகொள்வதில் அவர்கள் தலையிடுகிறதுமில்லை. ஆனால் தங்கள் நிலைநிற்கைக்குக் காரணங்கூறும்படி அழைக்கப்படுகையில், யெகோவாவின் சாட்சிகள், ஒப்புக் கொடுத்தலில் கடவுளுக்குத் தங்களை அளித்திருக்கும் ஆட்களாதலால், தங்கள் உடலைக் கடவுளுடைய சேவையில் பயன்படுத்தவே கடமைப் பட்டிருப்பதாகவும், கடவுளுடைய நோக்கத்துக்கு முரணாகச் செயல்படுகிற பூமிக்குரிய எஜமானிடம் அதை இப்பொழுது ஒப்புக் கொடுக்க முடியாதெனவும் தெரிவித்திருக்கிறார்கள்.—ரோமர் 6:12-14; 12:1, 2; மீகா 4:3.

15 இதன் விளைவு இயேசு சொன்ன பிரகாரமே உள்ளது: “நீங்கள் உலகத்தின் பாகமல்லாததனால் . . . உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:19) யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கிறிஸ்தவ நடுநிலைவகிப்பை மீற மறுத்ததால் அவர்களில் பலர் சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் சாகும் நிலையளவாகவும் கொடுமையாய் நடத்தப்பட்டனர். மற்றவர்கள் சிறையிலடைக்கப்பட்ட பல ஆண்டுகளின் போதெல்லாம் தங்கள் நடுநிலைவகிப்பைத் தொடர்ந்து மெய்ப்பித்துக் காட்டினர். ஆஸ்க்விட்ஸில் மதிப்புகளும் வன்முறையும் என்ற ஆங்கில புத்தகத்தில் (அன்னா பாவெல்க்ஸின்ஸ்கா என்பவராலாகியது, பக்கம் 89) பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது: “[கான்சன்ட்ரேஷன் முகாமில்] யெகோவாவின் சாட்சியான ஒருவரும் தன் மத நம்பிக்கைக்கும் விசுவாசங்களுக்கும் முரணான கட்டளையை அல்லது மற்றொரு ஆளுக்கு விரோதமாகக் கட்டளையிடப்படுகிற ஏதாவது செயலை, அந்த ஆள் கொலைபாதகனும் SS அதிகாரியுமாயிருந்தாலும், நிறைவேற்றமாட்டாரென எல்லாரும் அறிந்திருந்தார்கள். மற்றப்படி, வேறு எந்த வேலையையும், மிக அதிக அருவருப்பான வேலையையுங்கூட, அது தனக்கு நேர்மைப்படி நடுநிலையாயிருந்தால், தன் திறமையாலானவரை மிக நன்றாய்ச் செய்துமுடிப்பர்.”

16 சகல தேசங்களும் அர்மகெதோனில் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றனவென்று யெகோவாவின் சாட்சிகள் கண்டுணருகிறார்கள். ஒன்றுபட்ட ஜனமாக, யெகோவாவின் ஊழியர், அவருடைய மேசியானிய ராஜ்யத்தின் சார்பில், தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள். ஆகவே, அந்த ராஜ்யத்துக்கு எதிர்ப்பான ஒரு நிலைக்குள் தாங்கள் ஏமாற்றி நடத்தப்பட இடமளிப்பதைத் தவிர்க்க அவர்கள் கவனமாயிருக்கிறார்கள். (வெளி. 16:14, 16; 19:11-21) தம்மை உண்மையுடன் பின்பற்றுவோர் “உலகத்தின் பாகமல்ல”ரென்று இயேசு சொன்னதன் கருத்தார்ந்தத் தன்மையை அவர்கள் மதித்துணருகிறார்கள். இந்தப் பழைய உலகம் சீக்கிரத்தில் ஒழிந்துபோகும், கடவுளுடைய சித்தத்தை உண்மையாய்ச் செய்பவர்கள் மாத்திரமே என்றென்றும் நிலைத்திருப்பர் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—1 யோவான் 2:15-17.

மறு கலந்தாலோசிப்பு

● “உலகத்தின் பாகமல்ல”வென நடந்து கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறதென்று இயேசு எப்படிக் காட்டினார்?

● பின்வருபவற்றைக் குறித்ததில் பூர்வ கிறிஸ்தவர்களின் மனப்பான்மையை எது உணர்த்திக் காட்டுகிறது: (1) இவ்வுலகத்தின் ஆவி? (2) உலகப்பிரகாரமான அதிபதிகளும் வரிகளைச் செலுத்துவதும்? (3) இராணுவ சேவை?

● தற்காலத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எந்த முறைகளில் தங்கள் கிறிஸ்தவ நடுநிலைவகிப்புக்கு அத்தாட்சியைக் கொடுத்திருக்கின்றனர்?

[கேள்விகள்]

1. (எ) தாம் மரிப்பதற்கு முந்தின இரவில் இயேசு தம்முடைய சீஷருக்காக என்ன விண்ணப்பம் செய்தார்? (பி) “உலகத்தின் பாகமல்ல” என்றபடி நடந்து கொள்வது ஏன் அவவளவு முக்கியம்?

2. என்ன முறைகளில் இயேசு ‘உலகத்தின் பாகமாக இல்லை’?

3. (எ) யூத மதத்தலைவர்கள் இயேசுவைக் குறித்துப் பிலாத்துவினிடம் என்ன குற்றஞ்சாட்டினார்கள், ஏன்? (பி) மனித அரசனாவதில் இயேசுவுக்கு அக்கறையில்லையென எது காட்டுகிறது?

4. ‘இராயனுக்கு வரிகளைச் செலுத்துவதன்’ பேரில் இயேசுவின் மனப்பான்மையைப் பற்றிக் கண்கூடான நிகழ்ச்சிகள் என்ன வெளிப்படுத்துகின்றன?

5. (எ) தாம் கைது செய்யப்பட்ட சமயத்தில் இயேசு தம்முடைய சீஷருக்கு என்ன பாடத்தைக் கற்பித்தார்? (பி) இயேசு, தாம் அப்படிச் செய்ததன் காரணத்தைப் பிலாத்துவினிடம் எப்படி விளக்கினார்?

6. அந்த விசாரணையின் முடிவு என்ன?

7. பூர்வ கிறிஸ்தவர்கள், உலகத்தின் ஆவியைத் தாங்கள் தவிர்த்து ஆனால் ஜனங்களை நேசித்ததை எப்படிக் காட்டினார்கள்?

8. (எ) பூர்வ சீஷர்கள் ‘உலகத்தின் பாகமாக இராததால்’ எதை அனுபவித்தார்கள்? (பி) எனினும் அரசியல் அதிபதிகளையும் வரிகளைச் செலுத்துவதையும் அவர்கள் எவ்வாறு கருதினார்கள், ஏன்?

9. (எ) “மேலான அதிகாரங்களுக்குக்” கீழ்ப்பட்டிருக்கையிலும், எதைக் கவனியாமல் விட்டுவிட முடியாது? (பி) பூர்வக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் முன்மாதிரியைக் கவனமாய்ப் பின்பற்றினதை சரித்திரம் எப்படிக் காட்டுகிறது?

10. (எ) பொ.ச. 66-ல் எருசலேமிலிருந்தக் கிறிஸ்தவர்கள் ஏன் அந்த நடவடிக்கை எடுத்தார்கள்? (பி) எவ்வகையில் அது மதிப்புவாய்ந்த மாதிரியை அளிக்கிறது?

11. எந்த வேலையில் யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாய் ஈடுபட்டு உழைக்கிறார்கள், ஏன்? (பி) எதைக் குறித்ததில் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள்?

12. (எ) சாட்சிகளின் நடுநிலைவகிப்பு பாதிரிமார்களின் பழக்கமான செயல்களுக்கு எப்படி மாறுபடுகிறது? (பி) யெகோவாவின் சாட்சிகள் அரசியலைக் குறித்து நடுநிலை வகிப்பதில் எதுவும் உட்பட்டிருக்கிறது?

13. போரில் பங்குகொள்வதைப் பற்றியதில், யெகோவாவின் சாட்சிகளின் நிலை என்னவென உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன?

14. (எ) தங்கள் நடுநிலை ஸ்தானத்தின் காரணமாக, வேறு எதையும் செய்ய சாட்சிகள் மறுத்துவிட்டிருக்கின்றனர்? (பி) இதற்குக் காரணத்தை அவர்கள் எப்படி விளக்குகிறார்கள்?

15. (எ) இவ்வுலகத்துக்கு விலகியிருப்பதைக் காத்துவருவதனால் யெகோவாவின் சாட்சிகள் எதை அனுபவித்திருக்கின்றனர்? (பி) அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கிறிஸ்தவ நியமங்கள் அவர்களை எப்படி வழிநடத்தின?

16. (எ)  தேசங்கள் எதற்கு அணிவகுத்துச் செல்கின்றன, ஆகவே எதைத் தவிர்க்க யெகோவாவின் சாட்சிகள் கவனமாயிருக்கின்றனர்? (பி) அப்படியானால், உலகத்துக்கு விலகியிருப்பது ஏன் அத்தகைய வினைமையான காரியம்?