Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்

உண்மையான கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்

அதிகாரம் 2

உண்மையான கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்

கடவுட்கள் என்றழைக்கப்படுகிற பலர் இருந்தாலும் “நமக்கோ பிதாவாகிய ஒரே கடவுள் உண்டு; . . . இயேசு கிறிஸ்து என்னும் ஒரே ஆண்டவரும் நமக்குண்டு,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதினான். (1 கொரி. 8:5, 6, தி.மொ.) பவுல் குறிப்பிட்ட இந்த “ஒரே கடவுள்,” எல்லாவற்றையும் படைத்தவராகிய யெகோவாவே. (உபா. 6:4, தி.மொ.; வெளி. 4:11, NW) அவருடைய பண்புகளையும் மனிதவர்க்கத்துக்கு அவர் செய்திருக்கிற காரியங்களையும் கற்றறிகிற நன்றி மதித்துணரும் ஆட்கள் தடுக்கமுடியாத வண்ணம் தாங்கள் அவரிடம் கவர்ந்திழுக்கப்படுவதைக் காண்கிறார்கள். இதன் பலன் என்ன? தாங்கள் அவ்வளவு ஆழ்ந்தவண்ணம் மனம் கவர்ந்து போற்றுபவரை மகிமைப்படுத்துவது அவர்களுக்கு இயல்பாக இருக்கிறது, அவ்வாறு வார்த்தைகளிலும் செயல்களிலும் அவரை மகிமைப்படுத்துகிறார்கள். கடவுள் மீது அவர்களுடைய அன்பு வளருகையில் அவரைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்படி அவர்கள் தூண்டப்படும் உணர்ச்சியடைகிறார்கள், மேலும், மனிதராகத் தங்களால் கூடியவரையிலும் அவருடைய மாதிரியைப் பின்பற்றி நடக்க அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறே செய்யும்படி நம்மெல்லாரையும் ஊக்கப்படுத்தி பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, . . . அன்பிலே நடந்து கொள்ளுங்கள்.” (எபே. 5:1, 2) இந்த ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிக்க, யெகோவா உண்மையில் இருக்கிறபடி அவரை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

யெகோவா எப்படிப்பட்ட இயல்புள்ளவர்

2 கடவுளின் முதன்மையான பண்புகளை உணர்த்திக் காட்டும் நேர்முகமான மிகப் பல கூற்றுகள் பைபிள் முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றை நீங்கள் வாசிக்கையில், அந்தப் பண்புகள் உண்மையில் யாவை, அவை உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பவற்றைப் பற்றிச் சிந்தனை செய்ய நேரத்தைச் செலவிடுங்கள். உதாரணமாக: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) “அவர் வழிகளெல்லாம் நியாயம்.” (உபா. 32:4) ‘அவரிடத்தில் ஞானம் உண்டு.’ (யோபு 12:13) அவர் “மிகுந்த வல்லமையும் உள்ளவர்.” (ஏசா. 40:26, தி.மொ.) கடவுளுடைய இந்த இயல்பான குணங்களின் பேரில் ஆழ்ந்து சிந்தனை செய்கையில் அவர் மீது உங்கள் உள்ளங்கனிவதால் அவரைத் துதிக்கும்படி தூண்டப்படுகிறீர்களல்லவா?

3 மனதைக் கவரும் அவருடைய தனி சுபாவத்துடன் நாம் மேலும் அறிமுகமாகும்படி பைபிளில் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகாதயையும், சத்தியமுமுள்ள தேவன்.” (யாத். 34:6) யெகோவாவே,“நீர் நல்லவர், மன்னிக்கச் சித்தமாயிருக்கிறவர்.” (சங். 86:5) “முழு இருதயத்தோடும் தம்மோடு இசைந்திருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை விளங்கப்பண்ணும்படி யெகோவாவின் கண்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.” (2 நாளா. 16:9, தி.மொ.) “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல . . . அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியாயினும் அவர் அங்கீகாரத்துக்குரியவன்” (அப். 10:34, 35) யெகோவா “உதாரத்துவமாய்க் கொடுக்கிறவர்,” அவர் “நித்தியானந்த தேவன்.” (யாக். 1:5; 1 தீமோ. 1:11) இந்த ஒப்பற்ற கடவுளைச் சேவிப்பதும் அவருடைய அன்புள்ள கவனிப்பை அனுபவிப்பதும் எவ்வளவு உயிர்ப்பூட்டுவதாய் இருக்கிறது!

4 அவர் “தனிப்பட்ட பக்தியை வற்புறுத்திக் கேட்கிற கடவுள்,” என்ற இந்த உண்மை அவருடைய இயல்பான குணங்களுக்கு ஒத்திருக்கிறது. (யாத். 20:5, NW) அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் அவரைச் சேவிப்பதற்கு நம்முடைய முழு பக்தியை நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் சாத்தான் அதன் கடவுளாயிருக்கிற இந்த உலகத்தையும் நேசிக்க முடியாது. (1 யோவான் 2:15-17; 2 கொரி. 4:3, 4) நேர்மையாய் நடப்பதுபோல் ஏதாவது பாசாங்கு செய்தாலும் யெகோவா அதை ஊடுருவிக் காண்கிறார். நாம் செய்வதை மட்டுமல்ல, அதைப் பற்றி நாம் எவ்வாறு உணருகிறோம், எவ்வகையான ஆட்களாயிருக்க முயற்சி செய்கிறோம் என்பவற்றையும் அவர் முழுவதும் நன்றாய் அறிந்திருக்கிறார். நாம் உண்மையில் நீதியை நேசித்தால், அவர் நமக்கு உதவி செய்கிறார். (எரே. 17:10; நீதி. 15:9) யெகோவா இப்படிப்பட்டவராக இருப்பதனால், பூமியெங்கும் இலட்சக்கணக்கான ஆட்கள், பைபிளில் பின்வருமாறு எழுதின சங்கீதக்காரனின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்: “என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஏகோபித்து அவர் திருநாமத்தை உயர்த்துவோமாக.” (சங். 34:3, தி.மொ.) நீங்கள் இவர்களில் ஒருவரா?

5 கடவுளுடைய உயர்ந்த பண்புகளை நீங்கள் நுட்பமாய் ஆராய்ந்தால், அவரைப் பற்றிப் பேசும்படி உங்கள் ஆவல் பெருகும், அவருடைய மாதிரியை பின்பற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெகுவாய் உதவி செய்யப்படுவீர்கள். (1) நுட்பமாய் ஒவ்வொரு பண்பும் என்ன, ஒருவேளை மற்றப் பண்புகளிலிருந்து அதை எது வேறுபடுத்துகிறது, (2) யெகோவா அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார், யாரிடமாக, மேலும் (3) நீங்கள் அதை எப்படிக் காட்டக்கூடும் அல்லது அது உங்கள் நோக்குநிலையை எப்படிப் பாதிக்க வேண்டும், என்பவற்றைக் கண்டுபிடியுங்கள்.

6 இங்கே ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிளில் சொல்லப்பட்டிருப்பதன் கருத்தென்ன? (1 யோவான் 4:8) நிச்சயமாக, பல வகையான அன்பு உண்டு என்பது உண்மைதான். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்கச் சொல் அ.கா’பே (a.ga’pe) ஆகும், இது, யெகோவா தேவனில் தானே முன்மாதிரியாக அமைந்திருக்கிற மிக உயர்ந்த வகையான அன்பைக் குறிக்கிறது. இத்தகைய அன்பு முற்றிலும் தன்னலமற்ற வெளிக்காட்டாகும். இதை மனதில் வைத்து, பின்வரும் கேள்விகளுக்கு அவற்றோடு கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களைப் பயன்படுத்தி உங்கள் சொந்த பதில்களைக் கண்டுபிடியுங்கள்.

யெகோவாவின் படைப்பு வேலைகளில் இந்தப் பண்பு எப்படி மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது? (அப். 14:16, 17)

மனிதவர்க்கத்தின் பேரில் யெகோவா கொண்டிருக்கும் அன்புக்கு மிக முதன்மையான உதாரணம் என்ன? (யோவான் 3:16) மனிதனின் நல்ல பண்பின் காரணமாகவா யெகோவா இதைச் செய்தார்? (ரோமர் 5:8)

தம்முடைய குமாரனைக் கொண்டு யெகோவா செய்த இது நாம் நம்முடைய வாழ்க்கையை உபயோகிக்கும் முறையை எப்படிப் பாதிக்க வேண்டும்? (2 கொரி. 5:14, 15, 18, 19)

கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம் உடன் கிறிஸ்தவர்கள் பேரில் இதே வகையான அன்பு இருப்பதை எந்த வழிகளில் காட்டலாம்? (1 கொரி. 13:4-7; 1 யோவான் 4:10, 11; 3:16-18)

வேறு யாரிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும், எப்படி? (மத். 5:43-48; 28:19, 20; கலாத். 6:10)

7 யெகோவாவின், மற்றப் பண்புகள் சிலவற்றை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறீர்களா? முதல் தொடக்கமாக “நீதி,” “ஞானம்” பின்பு ஒருவேளை “அன்புள்ள-தயவு,” “இரக்கம்” ஆகியவற்றை உங்கள் தனிப்பட்ட படிப்பில் ஆராய முயற்சி செய்யலாம். உவாட்ச் டவர் பிரசுரங்களுக்குரிய பொருளடக்க அட்டவணைகளையும் (இன்டெக்ஸஸ்) பைபிள் சொல்தொகுதி விளக்கப்பட்டியலையும் (கன்கார்டன்ஸ்) பயன்படுத்தி, அறிவு தெளிவைத்தரும் ஏராளமான விஷயங்களை நீங்கள் கண்டடையலாம்.

கடவுளைப் பற்றி சத்தியத்தைக் கற்றறிய மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்

8 உண்மையான கடவுளுடைய வணக்கத்துக்கு எதிர்ப்பாக சொல்லர்த்தமாய்க் கோடிக்கணக்கான மற்றக் கடவுட்களை மனிதர் வணங்குகிறார்கள். நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மண்டலமானது, அதற்கு முன்பாகப் பாபிலோனியரும், எகிப்தியரும், இந்துக்களும், புத்தமதத்தினரும் கற்பித்த “திரித்துவ” நம்பிக்கையை ஏற்றுக்கொண்டது. கடவுளைப்பற்றிய இந்தக் கருத்தோடு கூட, வல்லமைவாய்ந்த அரசர்களும், முதன்மையான விளையாட்டு வீரர்களும், பாடகர்களும் கடவுட்களாகப் போற்றப்படுகின்றனர். பணம், தான் என்னும் தன்மை, பாலுறவு ஆகியவையும் கடவுட்களாகிவிட்டிருக்கின்றன, இவற்றிற்கு ஆர்வ பக்தி செலுத்தப்படுகிறது. இந்த எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பவன் யார்? “இந்தக் காரிய ஒழுங்கு முறையின் கடவுளாகிய” பிசாசான சாத்தானே. (2 கொரி. 4:4; 1 கொரி. 10:20) ஆட்களை யெகோவாவிடமிருந்து திருப்ப, அல்லது அவர்கள் பக்தியைப் பிரித்தாவது போட அவன் தன் மனதில் கருதத்தக்க எல்லா தந்திர வழிகளையும் கொண்டு முயற்சி செய்கிறான்.

9 இப்படிப்பட்ட ஆட்கள், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டினாலும் அல்லது மற்றவர்களாயினும், கடவுளைப் பற்றிய சத்தியத்தை அறியும்படி நாம் எப்படி இவர்களுக்கு உதவி செய்யலாம்? மிகச் சிறந்த வழிகளில் ஒன்றானது உண்மையான கடவுள் யார், அவர் எவ்வகை இயல்புள்ளவர் என்பதைப் பற்றி பைபிள் தானே சொல்வதை உதவியான முறையில் அவர்களுக்குக் காட்டுவதேயாகும். பின்பு நாம் இதை நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய பண்புகளைப் பிரதிபலிக்கிற நடத்தையால் ஆதரிக்க வேண்டும்.—1 பேதுரு 2:12.

10 ஆனால் கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகளின் உறுப்பினர் சிலர், தங்கள் “திரித்துவ” நம்பிக்கை வேதப்பூர்வமானதென்று உரிமை பாராட்டி உங்களுடன் வாதாடினால் என்ன செய்வது? முதலாவது, “திரித்துவ” கோட்பாட்டைப் பற்றிய அதிகாரப் பூர்வமான விவரிப்புகள் இருக்கிற போதிலும், பலர் அதைப் பற்றி அவரவருக்குரிய சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். அவர்கள் தங்கள் மனதிலுள்ளவற்றை வெளிப்படுத்திக் கூறும்படி அழையுங்கள், பின்பு அவர்களுடைய நம்பிக்கைகளை அவர்களுடைய சொந்த பைபிளில் சொல்லப்பட்டிருப்பதோடு ஒத்துப்பார்க்கும்படி உதவி செய்யுங்கள். காலப் போக்கில், அதிகாரப் பூர்வ சர்ச் போதகத்தையும் கடவுளுடைய வார்த்தையோடு ஒத்துப்பார்க்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

11 நேர்மையான மனமுள்ள ஆட்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற ஆவலை மனதில் கொண்டு, கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள விரிவுரைகளை வேதவசனங்கள் காட்டும் குறிப்புகளோடு ஒப்பிட்டு நியாயப்படி விவாதிக்க நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாமென்பதைக் கவனியுங்கள்:

(1) திரித்துவக் கொள்கையாளர் சிலர், மூன்று தெய்வீக ஆட்கள் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) இருக்கிறார்கள் என்றாலும் ஒரே ஒரு கடவுளே இருக்கிறார் என்ற எண்ணத்தை அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் அப். 2:4, 17, “பரிசுத்த ஆவி” ஓர் ஆள் என்று காட்டுகிறதா?

பின்வரும் வேதவசனங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை ஆட்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்று கவனிப்பது ஏன் உதவியாக இருக்கிறது? (யோவான் 17:20-22; அப். 7:56; வெளி. 7:10)

(2) “திரித்துவத்தில்” அடங்கியுள்ள உறுப்பினர் மூவரும் சம மகிமையை உடையவர்கள், ஒருவர் மற்றவரை விட மேம்படுவதோ குறைவுபடுவதோ இல்லை, அவர்கள் எல்லாரும் சரிசமமானவர்கள் சமநித்தியர் என்று சிலர் நம்புகின்றனர்

வேத எழுத்துக்கள் இதை ஒப்புக்கொள்கின்றனவா? (பதிலுக்கு, யோவான் 14:28; மத்தேயு 24:36; வெளிப்படுத்துதல் 3:14, ஆகியவற்றைப் பாருங்கள்.)

(3) சிலர் “திரித்துவத்தின்” நிரூபணமாக யோவான் 1:1-ஐக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். இங்கே கிரேக்க மூலவாக்கியம் பொதுநிலைச் சுட்டுவை (“ஒரு” என்பதைக்) கொண்டில்லை. ஆகவே இந்த வேதவசனம் “ஒரு கடவுள்” என்பதற்குப் பதிலாக “அந்த வார்த்தை கடவுளாக இருந்தது,” என்பதாகவே வாசிக்கப்பட வேண்டும் என்று விவாதிக்கின்றனர்.

ஆனால் யோவான் 1:1-ல் எத்தனை ஆட்கள் குறிப்பிடப்படுகின்றனர்? மூன்றா? இரண்டா? யோவான் 1:18-ங்கூட எப்படித் “திரித்துவ” கோட்பாட்டுக்கு முரணாக இருக்கிறது?

கிரேக்கில் பொதுநிலைச் சுட்டு இல்லை என்பது உண்மையே, ஆனால் பல மொழிகளில் அது இருக்கிறது, அந்த மொழிகளில் எண்ணங்களைத் திருத்தமாய் வெளிப்படுத்த அது பயன்படுத்தப்படுகிறது. யோவான் 1:1-ஐ மொழிபெயர்க்கையில் பொதுநிலைச் சுட்டுவைப் பயன்படுத்துவது தவரென்று எவராவது உணர்ந்தால், (ஆங்கில) கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளிலும் மற்றவற்றில் இருப்பதுபோல் அப்போஸ்தலர் 28:6-லும் அது விடப்படவேண்டுமென்று விரும்புவாரோ? (அன் அமெரிக்கன் மொழிபெயர்ப்பில் காட்டப்படுகிறபடி, யோவான் 1;1-ஐ மற்றொரு முறையில், “அந்த வார்த்தை தெய்வீகமாயிருந்தது,” என்று மொழிபெயர்க்கலாம், அதாவது, கடவுளுக்கு இருக்கிற அதே தெய்வீகப் பண்புகள் அவருக்கு இருந்தது என்பதாகும்.)

(4) மேலும் ஆதியாகமம் 1:1, 26-ல் “கடவுள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெயச் சொல் எல்.ஓ.ஹிம்’ (El.o.him’) என்றும், இது எபிரெயுவில் பன்மையாக இருக்கிறது. உண்மையில் “கடவுட்கள்” என்று அர்த்தங் கொள்ளுகிறது என்றும் திரித்துவக் கொள்கைக்காரர் விவாதிக்கின்றனர்.

இது ஏன் “ஒரே கடவுளில்” மூன்று தெய்வீக ஆட்கள் என்ற போதகத்தை ஆதரிக்கிறதில்லை?

ஆதியாகமம் 1:1-ல் இது “திரித்துவத்தைக்” குறித்திறதென்றால் “கடவுள்” (god) என்பதற்கு எல்.ஓ.ஹிம்’ (el.o.him’) என்பதைப் பயன்படுத்துகிறதும் தோடு வருகிற எபிரெய வினைச்சொல் பன்மையிலிராமல் ஒருமையில் இருக்கிறதுமான நியாயாதிபதிகள் 16:23-ல் இது எதைக் குறிக்கிறது?

இந்த வசனங்களில் கடவுள் என்ற சொல்லின் பன்மை பதம் ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? இது உயர் மேன்மை நிலை அல்லது மாண்புமிகுந்த நிலை என்ற எண்ணத்தை எபிரெயு மொழியில் தெரிவிக்கும் ஒரு முறையாகும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் கருதப்பட்டிருந்தால் அதோடு சேர்ந்து வரும் வினைச் சொற்கள் பன்மையில் இருக்கும், ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் அப்படியில்லை.

(5) சர்ச்சுகள் இயேசுவின் பேரிலேயே அழுத்தத்தை வைப்பதன் காரணமாக (அதோடுகூட பல பைபிள் மொழி பெயர்ப்புகளிலிருந்து யெகோவாவின் பெயரை நீக்கிவிட்டதன் காரணமாகவும்), கடவுள் என்று குறிப்பிடுகையில் சிலர் இயேசுவைப் பற்றி மாத்திரமே நினைக்கின்றனர்.

ஆனால் நாம் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி நடக்க, வணக்கத்தில் அவர் என்ன முன்மாதிரியை அளித்தார்? (லூக்கா 4:8)

12 வேத எழுத்துக்களில் இயேசு “ஒரு கடவுள்” என்றும் “வல்லமையுள்ள தேவன்” என்றுங்கூட பேசப்பட்டிருக்கிற போதிலும் அவர் தம்முடைய தகப்பனை, “என் கடவுளும் உங்கள் கடவுளும்” என்று குறிப்பிட்டு மகிமைப்படுத்தினார். (யோவான் 1:1; 20:17, தி.மொ.; ஏசா. 9:6) “யெகோவாவே கடவுள்; அவரையன்றி வேறொருவருமில்லை,” என்று மோசே முன்பு சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார். (உபா. 4:35, தி.மொ.) வணக்கப் பொருட்களாகக் கருதப்படுகிற விக்கிரகங்கள், தெய்வங்களாக்கப்படுகிற மனிதர்கள், பிசாசாகிய சாத்தான் ஆகியோருக்கு முற்றிலும் நேர்மாறாக யெகோவா நிற்கிறார். இப்படிப்பட்ட எல்லாவற்றிற்கும் வேறுபட்டவராக, யெகோவா, இயேசு அவரை அழைத்தவண்ணம், “ஒரே உண்மையான கடவுளாக” இருக்கிறார்.—யோவான் 17:3, NW

‘யெகோவாவின் பெயரில் நடவுங்கள்’

13 கடவுள் யார் என்பதைப் பற்றிப் பல ஆண்டுகள் குழப்பத்திலிருந்த பின்பு, பலர், கடவுளுடைய தனிப்பட்ட பெயர் யெகோவா என்பதைத் தங்கள் பைபிளில் முதல் தடவையாகக் காண்கையில் உள்ளக்கிளர்ச்சியூட்டப்படுகிறார்கள். (யாத். 6:3) என்றாலும் அவர்கள் ‘யெகோவாவின் பெயரில் என்றென்றும் நடந்தால்’ மாத்திரமே இந்த அறிவினால் நிரந்தர நன்மையடைவார்கள். (மீகா 4:5, NW) இது யெகோவாவின் பெயரை வெறுமென அறிந்திருப்தைப் பார்க்கிலும் அல்லது தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று உரிமைபாராட்டிக் கொள்வதைப் பார்க்கிலும் மிக அதிகத்தை உட்படுத்துகிறது.

14 கடவுளுடைய பெயரின் உட்கருத்தைக் குறித்து சங்கீதம் 9:10 பின்வருமாறு கூறுகிறது: “கர்த்தாவே [யெகோவாவே] . . . உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” இது எதை உட்படுத்துகிறது? யெகோவாவின் பெயரை வெறுமென தெரிந்திருப்பதுதானே அதில் நம்பிக்கை வைப்பதைக் குறிக்காது, அதைப் பார்க்கிலும் அதிகம் இதில் உட்படுகிறது. இங்கே, கடவுளுடைய பெயரை ‘அறிவதானது’ யெகோவா எவ்வகைப் பண்புள்ள கடவுள் என்பதை மதித்துணருவதையும், அவருடைய அதிகாரத்துக்கு மரியாதை செலுத்துவதையும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும் குறிக்கிறது. இதைப்போலவே ‘யெகோவாவின் பெயரில் நடப்பதானது,’ அவருக்கு ஒப்புக் கொடுத்து அவருடைய வணக்கத்தாரில் ஒருவராக அவரைப் பிரதிநிதித்துவம் செய்வதைக் குறிக்கிறது, மெய்யாகவே கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாகத் தன்னுடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. (லூக்கா 10:27) நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா?

15 நாம் யெகோவாவை நித்தியகாலமாகச் சேவிக்கப்போகிறோமென்றால், கடமை உணர்ச்சியைவிட மேம்பட்டது நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். ஏற்கெனவே பல ஆண்டுகளாக யெகோவாவைச் சேவித்துக் கொண்டிருந்த தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு தூண்டி ஊக்கப்படுத்தினான்: “தெய்வபக்தியை உன் குறிக்கோளாகக் கொண்டு உன்னைப் பயிற்றுவித்துக் கொண்டிரு.” (1 தீமோ. 4:7, NW) பக்தி இருதயத்திலிருந்து வருகிறது; இது, பக்தி செலுத்தப்படுகிற ஆளின் பேரிலுள்ள நன்றி மதித்துணர்வினால் தூண்டப்படுகிறது. “தேவ பக்தியானது” யெகோவாவுக்குத்தாமே வெகு ஆழ்ந்த மரியாதை கொடுப்பதாகும். அவரையும் அவருடைய வழிகளையும் உயர்வாய் மதிப்பதன் காரணமாக அவரிடம் அன்புள்ள பற்றுதலை அது வெளிப்படுத்துகிறது. எல்லாரும் அவருடைய பெயரை மிக உயர்வாய் மதிக்க வேண்டுமென்று நாம் விரும்பும்படி இது செய்கிறது. உண்மையான கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நாம் என்றென்றும் நடக்கப் போகிறோமென்றால், “தெய்வபக்தியை” நம்முடைய வாழ்க்கையின் இலக்காக அல்லது குறிக்கோளாக நம்மில் நாம் வளர்க்க வேண்டும்.—சங். 37:4; 2 பேதுரு 3:11.

மறு கலந்தாலோசிப்பு

யெகோவா எப்படிப்பட்ட இயல்புள்ளவர்? அவருடைய பண்புகள் ஒவ்வொன்றையும் பற்றித் தெளிவாக விளங்கிக்கொள்வதன்மூலம் நாம் எப்படி நன்மையடைகிறோம்?

● கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக் கொள்ளும்படி மற்ற ஆட்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?

● யெகோவாவை ‘அறிவதிலும்’ ‘அவருடைய பெயரில் நடப்பதிலும்’ என்ன உட்பட்டிருக்கிறது?

[கேள்விகள்]

1. (எ) உண்மையான கடவுள் யார்? (பி) அவரைப் பற்றிக் கற்றுவருவது நம்முடைய சொந்த வாழ்க்கையை எப்படிப் பாதிக்கவேண்டும்?

2. கடவுளைத் துதிக்கும்படி நம்மைத் தூண்டுகிற அவருடைய முதன்மையான பண்புகளில் சில யாவை?

3. யெகோவாவின் தனி பண்பியல்பின் வேறு எந்த அம்சங்கள் வெகுவாய் மனதைக் கவருகின்றன?

4. (எ) எப்படிப்பட்ட பக்தியை யெகோவா கேட்கிறார், இது எவ்வளவு முக்கியமானது? (பி) சங்கீதம் 34:3 எதில் பங்குகொள்ளும்படி நம்மை அழைக்கிறது?

5. யெகோவாவின் தனி பண்பியல்பைப் பற்றி நாம் படித்ததிலிருந்து முழுமையாய் நன்மையடைய எது நமக்கு உதவி செய்யும்?

6. அன்பை உதாரணமாகப் பயன்படுத்தி, யெகோவாவின் பண்புகளை நீங்கள் எப்படி ஆராயலாம் என்பதைக் காட்டுங்கள். இந்தப் பத்தியின் முடிவிலுள்ள கேள்விகளுக்கு வேதவசனங்களை உட்படுத்தி பதிலளிப்பதன் மூலம் அதைக் காட்டுங்கள்.

7. உங்களுடைய தனிப்பட்ட படிப்பில், யெகோவாவின் மற்றப் பண்புகளைப் பற்றி இதைப் போன்ற தகவல்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

8. (எ) இந்த உலகத்தின் என்ன கடவுட்களை வணங்குகிறார்கள்? (பி) இந்த எல்லாக் குழப்பத்துக்கும் பின்னாலிருப்பவன் யார், நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

9. கடவுளைப்பற்றிய சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஒருவருக்கு உதவி செய்வதற்கு மிகச் சிறந்த வழி என்ன?

10. திரித்துவக் கொள்கைக்காரருடன் பேசுகையில், அவர் நம்புவதை நாம் திட்டமாக அறிந்திருக்கிறோமென்று கருதிக்கொள்வது ஏன் ஞானமல்ல?

11. இந்த ஐந்து முக்கியக் குறிப்புகளை ஒவ்வொன்றாக ஆலோசியுங்கள், “திரித்துவ” கோட்பாடு வேத எழுத்துக்களுக்கு முரணானதென்பதை விவாதித்துக் காட்ட இந்தப் பத்தியோடு வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளையும் வேதவசனங்களையும் பயன்படுத்துங்கள்.

12. இயேசு தம்முடைய தகப்பனை “ஒரே உண்மையான கடவுள்” என்று ஏன் சரியாகவே அழைத்தார்?

13, 14. யெகோவாவின் பெயரை “அறிவதிலும்” அவருடைய, பெயரில் நடப்பதிலும், என்ன உட்பட்டிருக்கிறது?

15. நாம் யெகோவாவை என்றென்றும் சேவிக்கப்போகிறோமென்றால், கடமை உணர்ச்சியைத் தவிர வேறு என்ன வேண்டும்?