Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிரும் இரத்தமும்—இவற்றைப் பரிசுத்தமாய்க் கையாளுகிறீர்களா?

உயிரும் இரத்தமும்—இவற்றைப் பரிசுத்தமாய்க் கையாளுகிறீர்களா?

அதிகாரம் 20

உயிரும் இரத்தமும்—இவற்றைப் பரிசுத்தமாய்க் கையாளுகிறீர்களா?

கடவுள் உயிரைக் கருதும் நிலை இவ்வுலகத்தின் நோக்குநிலையிலிருந்து வெகுவாய் வேறுபடுவது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. கடவுளுக்கு மனித உயிர் பரிசுத்தமானது, நீங்கள் அதை இவ்வாறு கருதுகிறீர்களா? “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற” கடவுள் மீதே நாம் முழுமையாய்ச் சார்ந்திருக்கிறோம். (அப். 17:25-28; சங். 36:9) நாம் கடவுள் கருதுகிற பிரகாரம், நம்முடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்வோம். ஆனால் நம்முடைய தற்போதைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியில் தெய்வீகச் சட்டத்தை மீறமாட்டோம். தம்முடைய குமாரனில் உண்மையாய் விசுவாசங் காட்டுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பாரென்ற கடவுளுடைய வாக்கை நாம் அருமையாய் மதிக்கிறோம்.—மத். 16:25, 26; யோவான் 6:40; யூதா 21.

2 இதற்கு எதிர்மாறாக, இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசான சாத்தான், “ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்,” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44; 12:31) அவன் தன் கலகப் போக்கின் தொடக்க முதற்கொண்டே மனிதவர்க்கத்துக்கு மரணத்தைக் கொண்டுவந்தான். இவ்வுலகத்தின் வன்முறை சரித்திரம் அவனுடைய ஆவியைப் பிரதிபலிக்கிறது. ஆனால் வெளித்தோற்றத்துக்கு வேறுபட்ட காட்சியையும் சாத்தான் அளிக்கக்கூடும். இவ்வாறு, அவனுடைய சிந்தனையால் சாத்தான் செல்வாக்குச் செலுத்தப்படுகிற மனிதர், மதபக்கியுடனிருப்பது சரியென்றாலும், உயிர் அபாய நிலையில் இருக்கையில் நீங்கள் பைபிளிலிருந்து, மேற்கோள் எடுத்துக் காட்டுவதற்குப் பதிலாகத் தங்களுடைய “கைதேர்ந்த” ஆலோசனைக்குச் செவிகொடுப்பதன் மூலமே பலனடைவீர்களென விவாதிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:14, 15-ஐ ஒத்துப் பாருங்கள்.) பிழைப்பேனோ இறப்பேனோ என்ற சந்தேக நெருக்கடிக் கட்டத்தை எதிர்ப்படுகையில், உங்கள் இருதயம் எவ்வழியில் சாயும்? நிச்சயமாகவே யெகோவாவைப் பிரியப்படுத்துவதே நம்முடைய ஆவலாயிருக்க வேண்டும்.

3 உயிருக்கும் இரத்தத்துக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் இருப்பது கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தி: “மாம்சத்தின் உயிர் [அல்லது ஆத்துமா] இரத்தத்தில் இருக்கிறது,” என்று, சொல்லியிருக்கிறது. உயிர் பரிசுத்தாமாயிருப்பது போலவே, இரத்தத்தையும் கடவுள் பரிசுத்தமாக்கினார். இது அவருக்குரிய ஒன்று, அவர் அங்கீகரிக்கிற முறையில் மாத்திரம் அதைப் பயன்படுத்த வேண்டும். (லேவி. 17:3, 4, 11; உபா. 12:23) ஆகவே இரத்தத்தைக் குறித்ததில் அவர் நமக்குக் கட்டளையிடுவதைக் கவனமாய் ஆலோசிப்பது நல்லது.

ஆதியாகமம் 9:3-6-ஐ வாசியுங்கள்

நீங்கள் வாழும் இடத்திலுள்ள என்ன பழக்கவழக்கங்கள் மிருக இரத்தத்தை உட்கொண்டுவிடாதபடி விழிப்புடனிருக்க உங்களைத் தேவைப்படுத்துகின்றன?

நான்காம் வசனத்தில் மிருக இரத்தத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கையில், (பண்டைய ரோம காட்சியரங்கு நிகழ்ச்சிகளில் செய்ததைப் போல்) மனித இரத்தம் குடிப்பதைக் குறித்து நீங்கள் எத்தகைய உணர்ச்சியுடன் பிரதிபலிப்பீர்கள்?

5-ம் 6-ம் வசனங்களில் காட்டியிருக்கிறபடி, மனித இரத்தத்தைச் சிந்தினால் முதலாவது யாருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்?

அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்

இந்தக் கட்டளைகள் மட்டுப்பட்ட ஒரு காலத்துக்கு மாத்திரமே பொருந்துவதாக இதில் கூறியிருக்கிறதா?

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மனித இரத்தத்தைச் சேர்க்காமல் விலக்குகிறதா?

நெருக்கடி நிலைமைகளில் விதிவிலக்குகள் செய்து கொள்ளலாமென இந்த வசனம் குறிப்பாகத் தெரிவிக்கிறதா?

4 மனித இரத்தத்தைக் குறித்ததில், கொலை செய்வதை வெறுமென தவிர்த்திருப்பது நம்மைக் குற்றமற்றிருக்க வைக்கிறதென்று நாம் கருதிக் கொள்ள முடியாது. கடவுளுக்கு முன்பாக இரத்தப் பழியுள்ள ஏதாவது அமைப்பின் பாகமாக நாமிருந்தால், அதன் பாவங்களில் பங்குகொள்ள விரும்புகிறதில்லையென்றால் அதோடு நம்முடைய இணைப்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்று வேத எழுத்துக்கள் காட்டுகின்றன. (வெளி. 18:4, 24; மீகா 4:3) இத்தகைய நடவடிக்கை உடனடியான கவனத்துக்குகந்ததாயிருக்கிறது.

5 மிகுந்த உபத்திரவத்தில் வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிக்கும்படி கடவுள் பொறுப்பளித்திருக்கிற அவருடைய ஊழியர்களின் காரியத்தில், இரத்தப்பழிக்கு விலகியிருக்க அவர்கள் இந்தச் செய்தியை உண்மையுடன் யாவருக்கும் அறிவிக்க வேண்டும். (எசேக்கியேல் 3:17-21-ஐ ஒத்துப் பாருங்கள்.) அப்போஸ்தலனாகிய பவுல், தனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தின் காரணமாக, எல்லா வகையான ஜனங்களுக்கும் தன்னைக் கடனாளியாகக் கருதினான். இரட்சிப்புக்காகச் செய்த கடவுளுடைய ஏற்பாட்டைப் பற்றி அவர்களுக்கு முழுமையாய்ச் சாட்சி பகர்ந்த பின்பே அவர்கள் இரத்தப் பொறுப்புக்கு விலகியவனாக உணர்ந்தான். (ரோமர் 1:14, 15; அப். 18:5, 6; 20:26, 27) யெகோவாவின் சாட்சிகள் எல்லார் மீதும் தங்கியிருக்கிற இந்தப் பொறுப்பைப் பற்றி இதைப் போன்ற விழிப்புணர்வு வெளி ஊழியத்தில் உங்கள் ஊக்கமான உழைப்பில் காட்டப்படுகிறதா?

6 உயிரைப் போக்கும் விபத்துகளும் நாம் வினைமையுடன் கருதவேண்டியவை. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், தற்செயலாய்த் தங்கள் உடன் தோழனான மனிதனுக்குச் சாவுண்டாக்கிவிட்ட ஆட்கள் குற்றமற்றவரெனக் கருதப்படவில்லை. அவர்களுக்குத் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. (யாத். 21:29, 30; உபா. 22:8; எண். 35:22-25) இதில் உட்பட்டுள்ள நியமத்தை நாம் இருதயத்தில் ஏற்றால், நாம் ஒரு வண்டியை ஓட்டும் முறையில், முட்டாள்தனமாய்த் துணிந்து காரியங்களில் ஈடுபடுவதால் அல்லது நம்முடைய வீட்டில் அல்லது வேலைசெய்யும் இடத்தில் ஆபத்தான நிலைமைகள் இருந்துவர அனுமதிப்பதால் உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படுவதற்குக் காரணமாயிருப்பதைக் தவிர்க்கக் கவனமாயிருப்போம். இக்காரியங்களைக் குறித்ததில் உங்கள் மனப்பான்மை உயிரின் பரிசுத்த தன்மைக்கு முழு மதித்துணர்வை வெளிப்படுத்திக் காட்டுகிறதா?

இரத்தம் மருத்துவத்தில் பயன்படுத்துவதைப் பற்றியதென்ன?

7 இந்தப் பழக்கம் புதியதல்லவென்றாலும் முக்கியமாய் 20-ம் நூற்றாண்டில், உயிரை நீடிக்கச் செய்யும் நோக்கத்துடன் இரத்தம் உடலில் ஏற்றுவதற்கு வெகு விரிவாய்ப் பயன்படுத்தப்படுகிறது. முழு இரத்தமும் இரத்தத்தின் மூலப் பகுதிகளும் இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. நிச்சயமாகவே, இத்தகைய மருத்துவ முறைகள், நோயாளி சாவதில்லையென்று உத்தரவாதமளிப்பதில்லை. உண்மையில், சில சமயங்களில் இரத்தம் இவ்வாறு பயன்படுத்துவதன் நேரடியான விளைவாக மரணம் ஏற்படுகிறது. ஆனால் அதற்கும் மேலான அக்கறைக்குரியது—நாம் ‘இரத்தத்துக்கு விலகியிருக்கவேண்டும்’ என்று பைபிளில், கொடுக்கப்பட்டுள்ள கட்டளை இந்த மருத்துவ பழக்கத்துக்கும் பொருந்துகிறதா? என்பதே. ஆம்! மனிதன் அல்லது மிருகம் ஆகிய வேறு எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் ஒருவன் தன் உடலுக்குள் ஏற்பது தெய்வீகச் சட்டத்தை மீறுவதாகும். இது இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையை மதியாததைக் காட்டுகிறது. (அப். 15:19, 20) ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற கட்டளையை முதல் நூற்றாண்டில் நடப்பிலிருந்த பழக்கவழக்கங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தி, இவ்வாறு தற்கால மருத்துவ கலைபாணிகளை அதற்கு விலக்கிவைக்க எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் காரியத்தின் பேரில் விவாதித்துப் பாருங்கள்: கொலை செய்யக் கூடாதென்று பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையில், துப்பாக்கியைக் கொண்டு சட்டவிரோதமாய் மனித உயிரைக் கொல்வது அடங்கியில்லை, ஏனென்றால் நாம் அறிந்திருக்கும் துப்பாக்கிகள் பிற்காலத்தில் தானே கண்டுபிடிக்கப்பட்டன என்று யார் வாதாடுவார்? மேலும் குடிவெறி தடைவிதிப்பு முதல் நூற்றாண்டில் அறியப்பட்ட மதுபானங்கள் சம்பந்தமாக மாத்திரமே பொருந்தினது தற்கால வெறியூட்டும் சாராய வகைகளுக்குப் பொருந்தவில்லை என்று விவாதிப்பது நியாயமாயிருக்குமா? கடவுளைப் பிரியப்படுத்த உண்மையில் விரும்புகிற ஆட்களுக்கு, ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற கட்டளை கொடுக்கும் செய்தி தெளிவாயிருக்கிறது.

8 எனினும், சில மருத்துவ கலைகளில் சிக்கலான தன்மை கேள்விகளை எழுப்பக் கூடும். இவற்றை எப்படித் தீர்ப்பது? முதலாவது, உங்கள் மருத்துவர் குறிப்பிடும் மருத்துவ முறையைப் பற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கும்படி அவரைக் கேளுங்கள். பின்பு அதை பைபிள் நியமங்களைக் கொண்டு ஜெபத்துடன் பகுத்தாராய்ந்து பாருங்கள். பின்னால் அறுவை மருத்துவம் செய்யும் போது, அவசியமானால், பயன்படுத்த கொஞ்சம் உங்கள் சொந்த இரத்தத்தை வெளியெடுத்து சேமித்து வைக்கலாமென மருத்துவர் ஆலோசனை கொடுக்கலாம். நீங்கள் சம்மதிப்பீர்களா? மோசேயின் மூலமாய்க் கடவுள் கொடுத்த சட்டத்தின்படி, ஓர் உயிரினத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இரத்தம் தரையின் மீது ஊற்றப்பட வேண்டுமென்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். (உபா. 12:24) நாம் நியாயப்பிரமாண சட்டத்தொகுப்பின்கீழ் இன்று இல்லை, ஆனால் அதன் அடிப்படை செய்தியானது, இரத்தம் பரிசுத்தமானது ஓர் உயிரினத்தின் உடலிலிருந்து இரத்தத்தை நீக்குகையில் அதைக் கடவுளுடைய பாதமணையாகிய இந்தப் பூமியின் மேல் ஊற்றிவிடுவதன் மூலம் அதைக் கடவுளுக்குத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்பதாகும். (மத்தேயு 5:34, 35-ஐ ஒத்துப் பாருங்கள்.) அப்படியானால், (ஓரளவு குருகிய காலத்துக்கே என்றாலும்) உங்கள் இரத்தத்தைச் சேமிப்பில் வைத்து பின்பு அதை உங்கள் உடலுக்குள் திரும்பச் செலுத்துவது எப்படிச் சரியாகும்? ஆனால் அறுவை மருத்துவம் நடக்கையில் மற்றச் சிகிச்சை செய்கையில் உங்கள் இரத்தம் உங்கள் உடலுக்கு வெளியிலுள்ள ஒரு சாதனக் கருவியினூடே செலுத்திப் பின் நேரே உங்கள் உடலுக்குள் செல்ல வைக்கப்படுமென்று மருத்துவர் சொன்னால் என்ன செய்வது? நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? அந்தக் கருவி செயல்படுவதற்கு இரத்தமல்லாத நீர்மம் பயன்படுத்தப்பட்டால், தாங்கள் இதைச் சுத்த மனச்சாட்சியுடன் அனுமதிக்கலாமென சிலர் உணர்ந்திருக்கின்றனர். வெளியிலுள்ள அந்தக் கருவியைத் தங்கள் இரத்த ஓட்ட அமைப்பின் ஒரு விரிவாகக் கருதினர். நிச்சயமாகவே, நிலைமைகள் வேறுபடுகின்றன, மேலும் தீர்மானிக்கவேண்டியவர் நீங்களே. ஆனால் உங்கள் தீர்மானம் உங்களைக் கடவுளுக்கு முன்பாகச் சுத்த மனச் சாட்சியுடன் விட வேண்டும்.—1 பேதுரு 3:16; 1 தீமோ. 1:19.

9 ‘இரத்தத்துக்கு விலகியிருக்கும்படியான’ உங்கள் தீர்மானத்தை உங்கள் மருத்துவர் மதிக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ள, மருத்துவ சிகிச்சைக்குத் திடீர்த்தேவை எதுவும் எழும்பாததற்கு முன்பு அவரிடம் பேசுங்கள். சிகிச்சை பெறுவதற்கு ஒரு மருத்துவ சாலையில் விசாரிக்க வேண்டியதிருந்தால், இரத்தம் பயன்படுத்துவதில்லை என்று எழுத்தில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள், மேலும் உங்களுக்குச் சிகிச்சை செய்யப்போகிற மருத்துவரிடம் நீங்களே நேரடியாக இதைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் எதிர்பாராத திடீர் அவசர நிலை ஏற்பட்டால், என்ன செய்வது? மருத்துவரிடம் மரியாதையுடன் நியாயமானமுறையில் கலந்துபேசி, அவருடைய திறமைகளைப் பயன்படுத்தி உதவி செய்யவும், ஆனால் உங்கள் கிறிஸ்தவ மனச்சாட்சியை மதிக்கவும் அவரை ஊக்கப்படுத்துவதனால் மனச்சங்கடத்தைக் கொடுக்கும் சச்சரவுகளை அநேகமாய்த் தவிர்க்கலாம். (நீதி. 15:1; 16:21, 23) எனினும், நல்ல நோக்கத்தால் தூண்டப்படும் மருத்துவர், நாம் இரத்தம் ஏற்க மறுப்பது நம்முடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்குமென்று பிடிவாதமாக நின்று, ஆகவே அதற்கு உடன்படும்படி நம்மை வற்புறுத்த முயன்றால் அப்பொழுது என்ன செய்வது? யெகோவாவின் வழிகளே சரியானவை என்ற விசுவாசம் நம்மை உறுதியாய் நிலைநிற்கச் செய்ய வேண்டும். யெகோவாவுக்கு உண்மைத்தவறாமை நாம் பின்வாங்காமல் உறுதியுடன் அதை மறுத்துவிட செய்யவேண்டும், ஏனென்றால் மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதையே மேலானதாக நாம் தெரிந்து கொள்கிறோம்.—அப். 5:29; யோபு 2:4; நீதிமொழிகள் 27:11 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.

இந்தக் காரியம் எவ்வளவு வினைமையானது?

10 யெகோவாவை இன்னும் அறிந்திராத ஆட்களுக்கு, இரத்த மேற்றுதலின் சார்பான விவாதங்கள் உயிரின் பரிசுத்தத் தன்மைக்கு உயர்ந்த மதிப்பைக் காட்டுவதாகச் சில சமயங்களில் தோன்றலாம். இவ்வகையில் விவாதிக்கும் பலர் கருச்சிதைவு செய்வதன் மூலம் உயிரை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறதில்லை. எந்த மருத்துவ “நிபுணரையும்” பார்க்கிலும் யெகோவாவே உயிரையும் இரத்தத்தையும் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார். அவருடைய கட்டளைகளெல்லாம் நம்முடைய நன்மைக்கேதுவாகவே நிரூபித்திருக்கின்றன, நம்முடைய தற்போதைய வாழ்க்கையையும் நம் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் பாதுகாக்கின்றன. (ஏசா. 48:17; 1 தீமோ. 4:8) ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்ற’ இந்தக் கட்டளை எவ்வகையிலாவது வேறுபடுகிறதா?

11 இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையை மதிப்பதன் முக்கியத்துவம், இரத்தம் பயன்படுத்தக்கூடிய ஒரே உபயோகத்தைக் குறித்து யெகோவா சொன்னதில் அறிவுறுத்தப்படுகிறது. “மாம்சத்தின் உயிர் [ஆத்துமா, NW] இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், . . . என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.” (லேவி. 17:11, 12) கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக யெகோவாவின் பலிபீடத்தில் ஊற்றப்பட்ட மிருக இரத்தம் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் விலைமதியா இரத்தத்தை நிழலாக முன்குறிப்பிட்டன. (எபி. 9:11, 12; 1 பேதுரு 1:18, 19) இவ்வாறு, இரத்தத்தை வேறு எந்த உபயோகமும் செய்யக்கூடாததென தடைவிதித்துக் கடவுளுடைய சட்டம் இயேசுவின் இரத்தத்தின் பரிசுத்தத்தன்மையை அறிவுறுத்தியது. இரத்தத்தை எவ்வகையிலாவது தகாப் பிரயோகம் செய்வது, மீட்புக்காகத் தம்முடைய குமாரன் மூலமாய் யெகோவா செய்த எற்பாட்டுக்கு மிக மோசமான அவமரியாதைக் காட்டுவதாகுமென்று இதிலிருந்து தெரிகிறது.

12 பிழைப்போமோ சாவோமோ என்ற நிலைமையை எதிர்ப்படுகையில் கடவுளை விட்டுத் திரும்புதல் எவ்வளவு அறிவு குறுகிய தன்மையாகும்! மனச்சாட்சியுடன் செய்கிற மருத்துவரின் சேவைகளை நாம் நன்றியோடு மதிக்கிறபோதிலும், இந்த வாழ்க்கைத்தானே எல்லாமென்பதுபோல், கடவுளுடைய சட்டத்தை மீறுவதன் மூலம், இன்னும் ஒரு சில நாட்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு நம்மை அல்லது நமக்கு அருமையானவர்களை உயிருடன் வைக்கக் கடுமையாய் முயற்சி செய்கிறதில்லை. சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் விலைமதிப்பிலும் அது கிடைக்கக் கூடியதாக்குகிற நித்திய ஜீவனிலும் நமக்கு விசுவாசம் இருக்கிறது. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள்—மரிக்கிறவர்களுங்கூட—நித்திய ஜீவனின் பரிசு அளிக்கப்படுவார்களென்று நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் நம்புகிறோம்.—யோவான் 11:25; 1 தீமோ. 4:10.

மறு கலந்தாலோசிப்பு

● உயிரையும் இரத்தத்தையும் பரிசுத்தமாக்குவது எது? இந்த உலகம் ஏன் வேறுபட்ட கருத்தின் சார்பாக விவாதிக்கிறது?

● மிருகங்களைக் குறித்ததில், அவற்றின் இரத்தத்தின் பரிசுத்தத் தன்மைக்கு நாம் எவ்வாறு மதிப்பு காட்டுகிறோம்?

● மனித உயிரை நாம் பரிசுத்தமாய்ப் பாவித்து நடத்துவதை எந்தப் பற்பல வழிகளில் நாமெல்லாரும் காட்ட வேண்டும்? அப்படிச் செய்வது எவ்வளவு முக்கியம்?

[கேள்விகள்]

1. (எ) கடவுள் உயிரை எவ்வாறு கருதுகிறார்? (பி) கடவுள் கொடுக்கும் வரமாகிய உயிரை நாம் நன்றியோடு மதிப்பதை எப்படி மெய்ப்பித்துக் காட்டலாம்?

2. உயிரினிடம் காட்டும் யாருடைய மனப்பான்மையை இவ்வுலகம் பிரதிபலிக்கிறது, இது என்ன வகையான விவாதத்துக்குச் சில சமயங்களில் வழிநடத்துகிறது?

3. (எ) இரத்தத்தைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதில் ஏன் நாம் முக்கியமாய் அக்கறைக்கொள்ள வேண்டும்? (பி) ஆதியாகமம் 9:3-6-ஐயும் அப்போஸ்தலர் 15:28, 29-ஐயும் வாசித்து, இவ்வசனங்களுடன் மேலே வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் கொடுங்கள்.

4. இங்கே விவாதித்தாராய்ந்தபடி, இரத்தப் பழியில் பங்குகொள்ளாதிருக்க ஒருவன் என்ன நடவடிக்கை எடுப்பது அவசியமென வேத எழுத்துக்களில் காட்டியிருக்கிறது?

5. வெளி ஊழியத்தில் ஊக்கத்துடன் உழைப்பது எப்படி இரத்தப் பழிக்கு விலகியிருப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

6. விபத்து ஏற்படாதபடி தடுத்து வைப்பதற்கும் உயிரின் பரிசுத்தத் தன்மையை மதிப்பதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?

7. (எ) ஒரு மனிதனின் இரத்தத்தை மற்றொருவனின் உடலுக்குள் ஏற்றுவது இரத்தத்தைப் பரிசுத்தமாய்க் கருத வேண்டியதோடு ஒத்திருக்கிறதா? (பி) ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற கட்டளையை, முதல் நூற்றாண்டில் பொதுவாயிருந்த பழக்க வழக்கங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்துவது ஏன் நியாயமாயில்லை?

8. (எ) குறிப்பிட்ட ஒரு மருத்துவமுறை கிறிஸ்தவனுக்குத் தகுந்ததாவென்பதை நீங்கள் எப்படித் தீர்மானிக்கலாம்? (பி) கொஞ்சம் உங்கள் சொந்த இரத்தத்தை வெளியெடுத்து, சேமித்து வைத்து பின்பு அறுவை சிகிச்சை செய்யும்போது அதைத் திரும்ப உங்கள் உடலுக்குள் செலுத்திவிட மருத்துவர் விரும்பினால், சரியான தீர்மானம் செய்ய பைபிளிலுள்ள எந்த நியமங்கள் உங்களுக்கு உதவி செய்யும்? (சி) உடலுக்கு வெளியிலுள்ள ஒரு சாதனக் கருவியினூடே இரத்தம் சுற்றிவரத் தேவைப்படுத்தும் சிகிச்சையைக் குறித்து ஒருவர் எப்படி விவாதிக்கலாம்?

9. (எ) ‘இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற உங்கள் தீர்மானத்தை மதிக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ள என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? (பி) திடீர் அவசர நிலை ஏற்படுகையிலும் மனசங்கடத்தைக் கொடுக்கும் சச்சரவுகளைச் சில சமயங்களில் எப்படித் தவிர்க்கலாம்? (சி) மருத்துவரோ நீதிமன்றமோ கட்டாயப்படுத்தி இரத்தமேற்ற முயற்சி செய்கையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

10. உயிரைக் காப்பாற்ற இரத்தமேற்றுதல் அவசியமென்று பாராட்டும் விவாதம், இந்தக் காரியத்தின் பேரில் நம்முடைய கருத்தை ஏன் மாற்றாது?

11. (எ) இரத்தத்தை எந்த ஒரே உபயோகம் செய்ய யெகோவா இஸ்ரவேலை அனுமதித்தார்? (பி) கிறிஸ்தவர்களான நமக்கு இது ஏன் வெகு முக்கியம்?

12. மரணத்தை எதிர்ப்படுகையில், பிழைத்திருக்க எடுக்கும் முயற்சியில், உண்மையான கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தத்தை எவ்வகையிலும் தகாப்பிரயோகம் செய்ய நாடமாட்டார்கள்?