Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையின் வல்லமை

உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையின் வல்லமை

அதிகாரம் 9

உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையின் வல்லமை

மரித்த மனிதருக்கு உயிர்த்தெழுதல் இல்லாமல் எதிர்கால வாழ்க்கைக்குரிய நம்பிக்கை எதுவும் இல்லை. யெகோவா, தம்முடைய தகுதியற்றத் தயவினால், கோடிக்கணக்கான மரித்தோருக்கு நித்திய ஜீவனை அனுபவிக்கும் விலைமதியா வாய்ப்பைத் திறந்திருக்கிறார். இதன் பலனாக, மரணத்தில் தூங்குகிற நம்முடைய அன்பானவர்களுடன் திரும்ப ஒன்றுசேருவோம் என்ற, இருதயத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது.—ஒத்துப் பாருங்கள், மாற்கு 5:35, 41, 42; அப்போஸ்தலர் 9:36-41.

2 உயிர்த்தெழுதலின் காரணமாகவே யெகோவா, தம்முடைய உண்மையுள்ள ஊழியருக்கு நிலையான தீங்கு ஏற்படாதபடி, சாத்தானை, அவன் தீய நோக்கத்துடன் சாட்டின குற்றச்சாட்டை, அதாவது: “தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்” என்றதை நிரூபிப்பதற்கு முழு அளவில் செல்லும்படி விடக்கூடும். (யோபு 2:4) இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதனால், தம்முடைய மனித பலியின் விலைமதிப்பை, நமக்கு ஜீவனைக் காப்பாற்றும் நன்மையுண்டாக, தம்முடைய தகப்பனின் பரலோக சிங்காசனத்துக்கு முன்பாகச் செலுத்த முடிந்தது. கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறவர்கள் உயிர்த்தெழுதலின் மூலம் பரலோக ராஜ்யத்தில் அவருடன் இணைக்கப்படுகிறார்கள். விசுவாசமுள்ள நம்மெல்லாருக்கும், மரணத்தை நேருக்குநேர் எதிர்ப்படும் நிலையில் நம்மைக்கொண்டு வருகிற பரீட்சைகளை நாம் அனுபவிக்கையில், உயிர்த்தெழுதலின் நம்பிக்கை இயல்புக்கு மீறிய பலத்தின் ஊற்றுமூலமாயிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசத்துக்கு ஏன் இன்றியமையாதது

3 எபிரெயர் 6:1, 2-ல் சொல்லியிருக்கிறபடி உயிர்த்தெழுதல் ஒரு “மூல உபதேசம்”, விசுவாசத்தின் ஆதாரத்தினுடைய ஒரு பாகம், அதில்லாமல் நாம் ஒருபோதும் முதிர்ந்த கிறிஸ்தவர்களாக முடியாது. ஆனால் பொதுவாய் இவ்வுலகத்தின் சிந்தனைக்கு இது புறம்பாயிருக்கிறது. ஆவிக்குரிய தன்மையற்றவர்களாய் ஜனங்கள் மேலும் மேலும் இன்பத்தை நாடித்தேடுவதிலேயே வாழ்கின்றனர். இந்த வாழ்க்கையே மெய்யென அவர்கள் காண்கிறார்கள். (1 கொரி. 15:32) கிறிஸ்தவ மண்டலத்துக்கு உள்ளேயும் புறம்பேயும், பாரம்பரிய மதங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள் தங்களுக்குச் சாவாமையுடைய ஆத்துமா இருப்பதாக எண்ணுகிறார்கள், இது உயிர்த்தெழுதலை அவசியமற்றதாக்கும் இவ்விரண்டு கருத்துக்களையும் பொருத்துவிக்க முயற்சி செய்கிறவர்கள் அது நம்பிக்கையூட்டுவதைப் பார்க்கிலும் அதிகக் குழப்பமுண்டாக்குவதாகவே காண்கிறார்கள். செவிகொடுக்க மனமுள்ளவர்களுக்கு நாம் எப்படி உதவிசெய்யலாம்?—அப். 17:32.

4 உயிர்த்தெழுதல் எப்பேர்ப்பட்ட அதிசயமான ஏற்பாடென்பதை இத்தகையோர் மதிதுணரக்கூடியதற்கு முன்னால், ஆத்துமா என்பது என்ன, மரித்தோர் என்ன நிலையில் இருக்கிறார்கள், என்பவற்றை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சத்தியத்துக்காகப் பசியுள்ள ஓர் ஆளுக்கு இக்காரியங்களைத் தெளிவாக்க அநேகமாய் ஒருசில வேதவசனங்கள் போதுமானவை. (ஆதி. 2:7; எசேக். 18:4; சங். 146:3, 4) ஆனால் பைபிளின் சில நவீன மொழிபெயர்ப்புகளும் பொழிப்புரை பதிப்புகளும் இந்தச் சத்தியங்களைத் தெளிவற்றதாக்குகின்றன. ஆகவே பைபிளின் மூல மொழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை ஆழ்ந்து கவனிப்பதற்கு அவசியமிருக்கலாம்.

5 புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கில பைபிள்) இவ்வாறு ஆராய்வதற்கு முக்கியமாய் மதிப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில், எபிரெய பதம் நெபஷ்-ம் (ne’phesh) அதற்கு ஒத்த கிரேக்கச் சொல் சைக்கீ-யும் (psy·khe’) அவை வரும் அநேக இடங்களில் நிலையாக “ஆத்துமா” என்று மொழிபெயர்த்திருக்கிறது. மேலும் இதன் பிற்சேர்க்கையில் இந்தப் பதங்கள் காணப்படுகிற எல்லா வசனங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற நவீன மொழிபெயர்ப்புகளில் அதே மூலச் சொற்கள் “ஆத்துமா” என்று மட்டுமல்ல, “ஜீவ ஜந்து,” “பிராணி,” “ஆள்,” “உயிர்” என்றும், “என் நெபஷ்” என்பது “நான்” என்றும் “உன்னுடைய நெபஷ்” என்பது “நீ” என்றும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம். இந்தப் பைபிள்களைப் பழைமையான மொழி பெயர்ப்புகளுடன் அல்லது புதிய உலக மொழிபெயர்ப்புடன் ஒத்துப் பார்ப்பது, “ஆத்துமா” என்று மொழிபெயர்த்துள்ள இந்த மூலமொழி பதங்கள் (1) ஆட்களையும் (2) மிருகங்களையும் (3) அவ்வாறு அவர்கள் அல்லது அவை அனுபவிக்கும் உயிரையும் குறிக்கின்றனவென்று மதித்துணர உண்மையான மாணாக்கனுக்கு உதவிசெய்யும். ஆனால், ஆத்துமா மரணத்தில் உடலைவிட்டு வெளியேறிவேறு எங்கேயோ உணர்வுடன் தொடர்ந்து வாழக்கூடிய காணக்கூடாத, தொட்டறிய முடியாத ஒன்று என்ற எண்ணத்தை இந்தப் பதங்கள் ஒருபோதும் குறிப்பிடுகிறதில்லை.

6இதுபோலவே, புதிய உலக மொழிபெயர்ப்பில், எபிரெய பதம் ஷியோல், அது வரும் இடமெல்லாம் ஷியோல் என்றும், ஹேடீஸ் என்ற கிரேக்க பதம் ஹேடீஸ் என்றும், கீயென்னா என்பது கெஹென்னா, என்றும் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பைபிளின் வேறு சில மொழிபெயர்ப்புகளும் பொழிப்புரைகளும் ஹேடீஸ், கீயென்னா என்ற இவ்விரண்டையுமே “நரகம்” என்று மொழிபெயர்த்து அதோடுகூட ஷீயோல், ஹேடீஸ் என்ற பதங்களுக்கு வேறு மொழிபெயர்புகளாகப் “பிரேதக்குழி” “மரித்தோரின் உலகம்” என்பவற்றைப் பயன்படுத்தி வாசகரைக் குழப்பமடைய செய்திருக்கின்றன. தேவைப்படுகையில் மொழிபெயர்ப்புகளை ஒத்துப் பார்ப்பதன்மூலம், ஷியோல் ஹேடீஸூக்கு சமமானதென்று காட்டலாம். (சங். 16:10; அப். 2:27) மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியாகிய ஷியோல் அல்லது ஹேடீஸ் உயிருடன் அல்ல, சாவுடன் தானே சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறதென்று பைபிள் தெளிவாக்குகிறது. (சங். 89:48; வெளி 20:13) மேலும் உயிர்த்தெழுதலின்மூலம் அங்கிருந்து திரும்பிவரும் எதிர்பார்ப்பையும் அது குறிப்பிடுகிறது. (யோபு 14:13; அப். 2:31) இதற்கு எதிர்மாறாக கெஹென்னாவுக்குச் செல்லுகிறவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்குரிய நம்பிக்கை அளிக்கப்படுகிறதில்லை. மேலும் நிச்சயமாகவே, ஆத்துமா அங்கே உணர்வுடன் உயிர்வாழ்வதாகவும் பேசப்பட்டில்லை.—மத். 18:9; 10:28.

7 இந்தக் காரியங்கள் தெளிவாக்கப்படுகையில் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் உண்மையான அர்த்தத்துடன் விளங்குகின்றன. தனக்கு உயிர்த்தெழுதல் எதைக் குறிக்குமென்பதை விளங்கிக்கொள்ள இப்பொழுது ஒருவருக்கு உதவி செய்ய முடியும். மேலும் இப்பேர்ப்பட்ட அதிசயமான ஏற்பாட்டைச் செய்ததில் யெகோவாவின் அன்பை அவர் நன்றியோடு மதித்துணரவும் தொடங்கக்கூடும். தங்களுக்கு அருமையானவர்களை மரணத்தில் இழந்தவர்கள் உணரும் துக்கம் கடவுளுடைய புதிய ஒழுங்கில் திரும்ப ஒன்றுசேரும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பினால் இப்பொழுது மாற்றப்படும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக்கல் என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் இதைப் பற்றியும் இது உறுதிப்படுத்தின அந்த நம்பிக்கையைப் பற்றியும் ஆர்வத்துடன் மற்றவர்களுக்குச் சாட்சி பகர்ந்தார்கள். அப்படியே, இன்று இதை நன்றியோடு மதித்துணருகிறவர்கள், இந்த அருமையான சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மிக ஆவலாயிருக்கிறார்கள்.—அப். 5:30-32; 10:40-43; 13:32-39; 17:31.

‘ஹேடீஸின் திறவுகோலை’ பயன்படுத்துதல்

8 கிறிஸ்தவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் இணைக்கப்படவிருக்கிற எல்லாரும் கடைசியாக மரணமடைய வேண்டும். ஆனால், அவர் பின்வருமாறு சொன்னபோது அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுத்த உறுதிகூற்றை அவர்கள் நன்றாய் அறிந்திருந்தார்கள்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய [ஹேடீஸூக்குமுரிய, NW] திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளி. 1:18) இதன் அர்த்தமென்ன? அவர் தமது சொந்த அனுபவத்திற்குக் கவனத்தை இழுத்தார். அவர்தாமே மரித்தார். ஆனால் கடவுள் அவரை ஹேடீஸில் விட்டுவிடவில்லை. மூன்றாம் நாளில் யெகோவாதாமே நேராக அவரை ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பி அவருக்குச் சாவாமையை அளித்தார். அது மட்டுமல்ல, மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியிலிருந்தும் ஆதாமின் காரணமாயுண்டான பாவ விளைவுகளிலிருந்தும் மற்றவர்களை விடுவிப்பதற்கும் பயன்படுத்தக் கடவுள் அவருக்கு ‘மரணத்திற்கும் ஹேடீஸூக்குமுரிய திறவுகோல்களைக்’ கொடுத்தார். இந்தத் திறவுகோல்களை உடையவராக இருப்பதால், இயேசு, தம்மை உண்மையுடன் பின்பற்றினவர்களை மரித்தோரிலிருந்து எழுப்பமுடியும். அவர் அப்படி எழுப்புகையில் ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட தம்முடைய சபையின் உறுப்பினருக்கு, தம்முடைய தகப்பன் தமக்கு அளித்ததைப் போலவே, சாவாமைக்குரிய பரலோக வாழ்க்கையின் மிக அருமையான பரிசை அளிக்கிறார்.—ரோமர் 6:5; பிலிப். 3:20, 21.

9 அபிஷேகஞ் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எப்பொழுது அந்த உயிர்த்தெழுதலை அனுபவிப்பார்கள்? அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர்கள் ‘கிறிஸ்து வந்திருக்கையில்’ எழுப்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறான். இந்த வந்திருக்கை பொ.ச. 1914-ல் தொடங்கியது. (1 கொரி. 15: 23, NW) இப்பொழுது, இவர்கள் தங்கள் பூமிக்குரிய ஓட்டத்தை முடிக்கையில் தங்கள் கர்த்தர் திரும்பிவருவதற்காக மரணத்தில் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் மரித்தவுடன் ஆவியில் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். “ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே . . . மறுரூபமாக்கப்படு”கிறார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி ஆ, எப்பேர்ப்பட்டது, ஏனென்றால் “அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்”!—1 கொரி. 15:51, 52; வெளி. 14:13.

10 ஆனால் அவர்களுடையது மாத்திரமே ஒரே உயிர்த்தெழுதல் அல்ல. அது “முதலாம் உயிர்த்தெழுதல்” என்றழைக்கப்பட்டதே மற்றொன்று அதைப் பின்தொடர வேண்டுமென குறிப்பாகத் தெரிவிக்கிறது. (வெளி. 20:6) பின்வரும் இந்த உயிர்த்தெழுதலிலிருந்து பயனடைகிறவர்களுக்குப் பரதீஸான பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இருக்கும். இது எப்பொழுது நடந்தேறும்? தற்போதைய காரியங்களின் பொல்லாத ஒழுங்கு முறையினுடைய “பூமியும் வானமும்” அகற்றப்பட்ட பின்பு இது நடக்குமென்று வெளிப்படுத்தின விசேஷம் காட்டுகிறது. பழைய ஒழுங்குமுறையில் இந்த முடிவு வெகு அருகில் இருக்கிறது. அதன் பின்பு, கடவுள் குறித்தக் காலத்தில் பூமிக்குரிய உயிர்த்தெழுதல் தொடங்கும்.—வெளி. 20:11, 12.

11 இதில் யார் அடங்கியிருப்பார்கள்? பூர்வகால முதற்கொண்டு இருந்து வந்த யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அடங்கியிருப்பார்கள் உயிர்த்தெழுதலில் தங்களுக்கிருந்த உறுதியான விசுவாசத்தின் காரணமாக ‘ஏதோ மீட்பு ஈடு செலுத்துவதன் மூலம்’ அதாவது, வன்முறையான மரணத்துக்குத் தப்பிக்கொள்ள தங்கள் உத்தமத்தை விட்டுக்கொடுத்து ஏதோ முறையில் இணங்கிப் போவதால் “விடுதலை பெறச் சம்மதிக்காத” ஆட்களும் இருப்பர். (எபி. 11:35) அவர்களோடு நேரில் அறிமுகமாவதும், பைபிளில் சுருக்கமாக மாத்திரமே அறிவித்திருக்கிற சம்பவங்களைப் பற்றிய நுட்பவிவரங்களை அவர்களிடமிருந்து நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் எவ்வளவு இன்ப அனுபவமாயிருக்கும்! மற்றவர்களோடு கூட யெகோவாவின் உண்மையுள்ள முதல் சாட்சியாகிய ஆபேல் இருப்பார். ஜலப்பிரளயத்துக்கு முன்னால் கடவுளுடைய எச்சரிக்கைக்குரிய செய்தியைத் தைரியமாய் யாவருக்கும் அறிவித்த ஏனோக்கும் நோவாவும் அங்கிருப்பார்கள். தேவதூதர்களை உபசரித்த ஆபிரகாம் இருப்பார். சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் அவர் மூலமாய்க் கொடுக்கப்பட்ட மோசே இருப்பார். பொ.ச. மு. 607-ல் எருசலேமின் அழிவைக் கண்ட எரேமியாவைப் போன்ற தைரியமுள்ள தீர்க்கதரிசிகள் இருப்பார்கள். கடவுள் தாமே இயேசுவைத் தம்முடைய குமாரனாக அடையாளங் காட்டினதைக் கேட்ட முழுக்காட்டுபவனாகிய யோவானும் இருப்பான். இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களின் போது மரித்த உண்மைத்தவறாதவர்களுங்கூட அங்கிருப்பர்.—எபி. 11:4-38; மத். 11:11.

12 காலப் போக்கில், மற்றவர்களுங்கூட உயிர்த்தெழுப்பப்படுவர். மனிதவர்க்கத்தின் சார்பாக ‘ஹேடீஸின் திறவுகோலை, அந்த அளவுக்கு இயேசு பயன்படுத்துவார் என்பது அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது, அதில் ஹேடீஸ் “அக்கினிக்கடலிலே தள்ளப்பட்ட”தை அவன் கண்டான். இது குறிப்பதென்ன? ஹேடீஸ் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது; அது முற்றிலும், வெறுமையாக்கப்படுவதால் அது இல்லாமற் போகிறது. இவ்வாறாக, உண்மையுள்ளவர்களாயிருந்த யெகோவாவின் வணக்கத்தாரை எழுப்புவதோடுகூட, இயேசு, ஹேடீஸில் அல்லது ஷியோலிலிருந்து அநீதியுள்ள ஆட்களையும் இரக்கமாய்த் திரும்பக் கொண்டுவருவார். இவர்கள் எவரும் வெறுமென மறுபடியும் மரணத்துக்குப் பாத்திரராகத் தீர்க்கப்படும்படி எழுப்பப்படுகிறதில்லை. கடவுளுடைய ராஜ்யத்தின் கீழிருக்கும் அந்த நீதியுள்ள சூழ்நிலைமைகளில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவின் வழிகளுக்குப் பொருத்தமாகக் கொண்டுவரும்படி உதவி செய்யப்படுவர் “ஜீவ புஸ்தகம் [சுருள், NW]” திறக்கப்படுவது அந்தத் தரிசனத்தில் காட்டப்பட்டது, அதில் தங்கள் பெயர்கள் எழுதப்பட செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பிருக்கும். அவர்கள் தங்கள் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு நடப்பிக்கும் “தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைவார்கள்”. (வெளி. 20:12-14; அப். 24:15) இவ்வாறு கடைசி பயனின் நோக்கு நிலையிலிருந்து காண்கையில், இவர்களுடைய உயிர்த்தெழுதல் தவிர்க்க முடியாதபடி “[ஆக்கினைத்] தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலாக” அல்ல, “ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலாக” நிரூபிக்கக்கூடும்.—யோவான் 5:28, 29, NW.

13 நிச்சயமாகவே, உயிர்வாழ்ந்த எல்லாரும் உயிர்த்தெழுப்பப்படுவதில்லை. மன்னிக்கப்பட முடியாத பாவங்களைச் சிலர் செய்தனர். இப்பொழுது வெகு சமீபமாயுள்ள “மிகுந்த உபத்திரவத்தில்” மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறவர்கள், நித்திய அழிவை அனுபவிக்கிறவர்களோடு சேர்க்கப்படுவர். (மத். 12:31, 32; 23:33; 24:21, 22; 25:41, 46; 2 தெச. 1:6-9) இவ்வாறு, ஹேடீஸில் இருக்கிற எல்லாரையும் விடுதலை செய்வதில் அசாதாரணமான இரக்கம் காட்டப்படுகையில், இப்பொழுது நாம் வாழ்க்கை நடத்தும் முறையைப் பற்றி அசட்டையாயிருப்பதற்கு உயிர்த்தெழுதல் எந்த ஆதாரத்தையும் அளிப்பதில்லை. அதற்கு மாறாக, கடவுளுடைய இந்த உண்மையான தகுதியற்றத் தயவுக்காக நம்முடைய மதித்துணருதல் எவ்வளவு ஆழ்ந்ததாக இருக்கிறது என்று காட்டுவதற்கு இது நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்.

உயிர்த்தெழுதலின் நம்பிக்கையால் பலப்படுத்தப்படுதல்

14 உயிர்த்தெழுப்பப்படுவதன் நம்பிக்கையைத் தங்களுடைய சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் அதிலிருந்து மிகுந்த பலத்தைப் பெறக்கூடும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முடிவை நெருங்குகையில், எத்தகைய மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தின போதிலும், மரணத்தை முடிவில்லாமல் தாங்கள் தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாதென்று அறிந்திருக்கிறார்கள். (பிர. 8:8) கர்த்தரின் வேலையில் அவர்கள் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்து அவருடைய அமைப்புடன் உண்மைத்தவறாமல் சேவித்து வந்திருந்தால், முழு உறுதியுடன் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை நோக்க முடியும். தாங்கள் உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலமாய் கடவுளுடைய உரிய காலத்தில் மறுபடியும் உயிரை அனுபவித்து மகிழ்வார்களென அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆ, அது எப்பேர்ப்பட்ட வாழ்க்கையாயிருக்கும்! அப்போஸ்தலனாகிய பவுல் அழைக்கிறபடி அது “உண்மையில் ஜீவன்” ஆகும்.—1 தீமோ. 6:19, தி.மொ.; 1 கொரி. 15:58; எபி. 6:10-12.

15 உயிர்த்தெழுதல் இருக்கிறதென்று அறிவது மட்டுமல்ல, இந்த ஏற்பாட்டின் மூலகாரணரை அறிவதே நாம் உறுதியாயிருப்பதற்கு உதவி செய்கிறது. கொடுமையாய்த் துன்புறுத்துபவர்கள் நம்மைக் கொன்றுபோடுவதாக பயமுறுத்தினாலும் நாம் கடவுளுக்கு உண்மைத்தவறாமல் நிலைத்திருப்பதற்கு இது நம்மை உறுதிப்படுத்துகிறது. ஆட்களை அடிமைத்தனத்துக்குள் பற்றி வைத்திருப்பதற்கு வழிவகையாக அகால மரண பயத்தை சாத்தான் வெகுகாலமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறான். ஆனால் இயேசு இப்படிப்பட்ட பயத்துக்கு இடங்கொடுக்கவில்லை; மரணம் வரையில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக நிரூபித்தார். அவருடைய மரணம் நிறைவேற்றின காரியத்தால் மற்றவர்களை அப்படிப்பட்ட பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிவகையை அவர் அளித்தார். (எபி. 2:14, 15) இந்த ஏற்பாட்டில் தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தின் பலனாக, அவரை உண்மையுடன் பின்பற்றுபவர்கள் உத்தமத்தைக் காத்துக் கொள்கிறவர்களாக முதன்மையான பதிவை உண்டு பண்ணியிருக்கிறார்கள். நெருக்கடியின்கீழ் வைக்கப்படுகையில், யெகோவாவை நேசிப்பதைப் பார்க்கிலும் அதிகமாகத் தங்கள் சொந்த ‘உயிரைப் பொருட்படுத்துவதில்லை’ என்று அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். (வெளி. 12:11, தி.மொ.) கிறிஸ்தவ நியமங்களைக் கைவிடுவதன்மூலம் தங்கள் தற்போதைய உயிரைக் காப்பாற்ற முயன்று, நித்தியஜீவனின் எதிர்பார்ப்பை இழந்து போவதில்லை. (லூக்கா 9:24, 25) இந்த வகையான விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையில் யெகோவாவை நேசித்து உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உங்களுக்குக் குறிப்பதை இருதயத்தில் ஏற்றிருந்தால் உங்களுக்கு இருக்கும்.

மறு கலந்தாலோசிப்பு

● ஒருவர் உயிர்த்தெழுதலை நன்றியோடு மதித்துணருவதற்கு முன்னால் ஆத்துமா என்றால் என்ன, மரித்தோரின் நிலைமை என்ன என்பவற்றை விளங்கிக் கொள்வது ஏன் அவசியம்?

● யார் மரித்தோரிலிருந்து திரும்பி வருவார்கள்? இந்த அறிவு நம்மை எப்படிப் பாதிக்க வேண்டும்?

● உயிர்த்தெழுதலின் நம்பிக்கை நம்மை எப்படிப் பலப்படுத்துகிறது?

[கேள்விகள்]

1. உயிர்த்தெழுதலின் மூலம் என்ன அதிசயமான எதிர்பார்ப்புகள் கூடியவையாக்கப்பட்டிருக்கின்றன?

2. (எ) யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் உயிர்த்தெழுதல் என்ன வழிகளில் முக்கியமானதாக நிரூபித்திருக்கிறது? (பி) தனிப்பட எப்பொழுது இந்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கை நமக்குப் பலனளிக்கும் முக்கிய ஊற்றுமூலமாயிருக்கிறது?

3. (எ) எந்தக் கருத்தில் உயிர்த்தெழுதல் “மூல உபதேசம்” இருக்கிறது? (பி) பொதுவாய் இந்த உலகத்துக்கு, உயிர்த்தெழுதல் எதைக் குறிக்கிறது?

4. (எ) ஒருவர் உயிர்த்தெழுதலை மதித்துணரக் கூடியதற்கு முன்பாக, அவருக்கு எதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியிருக்கும்? (பி) இவற்றை விளக்க எந்த வேதவசனங்களைப் பயன்படுத்துவீர்கள்: ஆத்துமா என்பதென்ன? மரித்தோரின் நிலைமை? (சி) இந்த வசனங்களில் காணப்படுகிற சத்தியங்களைத் தெளிவற்றதாக்கியிருப்பதாகத் தோன்றும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பை எவராவது பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்?

5. இப்படிப்பட்ட ஒருவர் ஆத்துமா என்னவென்று விளங்கிக் கொள்ள எப்படி உதவிசெய்வீர்கள்?

6. (எ) ஏன் சில மொழிபெயர்ப்புகள், ஷியோல், ஹேடீஸ், கெஹென்னா ஆகியவற்றின் அர்த்தத்தைக் குறித்ததில் வாசகரைக் குழப்பத்தில் விடுகின்றன? (பி) பின்வருபவற்றிலுள்ள ஆட்களின் நிலைமையை பைபிளைக் கொண்டு எப்படி விளக்குவீர்கள்: ஷியோல் அல்லது ஹேடீஸில்? கெஹன்னாவில்?

7. சரியானபடி விளங்கிக்கொண்டால், உயிர்த்தெழுதலைப்பற்றிய மதித்துணர்வு ஒருவருடைய மனப்பான்மையையும் செயல்களையும் எப்படிப் பாதிக்கும்?

8. ‘மரணத்துக்கும் ஹேடீஸூக்குமுரிய திறவுகோல்களை’ இயேசு பயன்படுத்துவது, அவரைப் பின்பற்றும், ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களுக்கு எதைக் குறிக்கிறது?

9. அபிஷேகஞ் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுதல் எப்பொழுது நடந்தேறுகிறது?

10. வேறு என்ன உயிர்த்தெழுதல் இருக்கும், இது எப்பொழுது தொடங்கும்?

11. பூமியில் உயிர்வாழ்வதற்கு எழுப்பப்படுகிற உண்மையுள்ளவர்களுக்குள் யார் அடங்கியிருப்பார்கள், அது ஏன் ஆர்வ உணர்ச்சியூட்டும் எதிப்பார்ப்பாக இருக்கிறது?

12. (எ) ஹேடீஸிலுள்ள மரித்தோர் எத்தனைபேர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? (பி) ஆகவே அதில் யாரும் அடங்கியிருப்பர், ஏன்?

13. (எ) யார் உயிர்த்தெழுப்பப்படுவதில்லை? (பி) உயிர்த்தெழுதலைப்பற்றிய சத்தியத்தின் அறிவு நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பாதிக்க வேண்டும்?

14. தன் தற்போதைய வாழ்க்கையின் முடிவை நெருங்குகிற ஒருவருக்கு, உயிர்த்தெழுதல் எப்படி மிகுந்த பலத்தின் ஊற்றுமூலமாயிருக்கும்?

15. கொடுமையாய்த் துன்புறுத்துகிறவர்கள் நம்மைக் கொன்று போடுவதாகப் பயமுறுத்தினால், யெகோவாவிடம் நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவி செய்யும்?