Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா சிருஷ்டியும் எதிர்ப்படவேண்டிய விவாதம்

எல்லா சிருஷ்டியும் எதிர்ப்படவேண்டிய விவாதம்

அதிகாரம் 6

எல்லா சிருஷ்டியும் எதிர்ப்படவேண்டிய விவாதம்

ஏதேனில் கலகம் உண்டானபோது, எல்லா சிருஷ்டியையும் பாதிக்கிற ஒரு வினைமையான விவாதம் எழுப்பப்பட்டது. சாத்தான் ஏவாளை அணுகி, அவளும் அவளுடைய கணவன் ஆதாமும் மிக மோசமாய் ஏதோ கொடாமல் பறித்து வைக்கப்பட்டிருப்பதாகத் தந்திரமாய்க் குறிப்பிட்டுக் கூறினான். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என்று கேட்டான். ஏவாள் அதற்குப் பதிலுரைத்து ஒரு மரத்தைக் குறித்து மாத்திரமே கடவுள்: “நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம்,” என்று சொன்னார் என்றாள். ஏவாளின் உயிராயினும் ஆதாமின் உயிராயினும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் பேரில் சார்ந்தில்லை என்று கூறி, யெகோவா பொய்ச் சொன்னதாக நேரடியாய் அவர் மேல் குற்றஞ்சாட்டினான். நல்லதொன்றை—அதாவது வாழ்க்கையில் தங்கள் சொந்தத் தராதரங்களை வைத்துக் கொள்ளும் திறமையை—தம்முடைய சிருஷ்டிகளுக்குக் கொடாமல் கடவுள் தடுத்து வைத்துக்கொண்டார் என்று அவன் வாதாடினான். “நீங்கள் சாகவே சாவதில்லை,” என்று சாத்தான் உறுதி கூறினான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும், என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல், [கடவுளைப்போல், NW] இருப்பீர்கள் என்று தேவன் அறிவார்,” என்றான். (ஆதி. 3:1-6) தன் சொந்தத் தீர்மானங்களைச் செய்கையில் மேம்பட்டவளாக இருப்பாள் என்று ஏவாள் நம்பும்படி சாத்தான் வழிநடத்தினான். மறைமுகமாக அவன் அங்கே கடவுளுடைய ஆளும் உரிமையையும் அவருடைய ஆட்சி முறையையும் எதிர்த்து சவால் விட்டான். எழுப்பப்பட்ட விவாதம் உண்மையில் சர்வலோக ஈடற்ற அரசாட்சி உட்பட்டதாயிருந்தது.

2 யெகோவாவின் பேரிலுள்ள அன்பு ஏவாளைப் பாதுகாத்திருக்கலாம். தன் கணவனின் தலைமைவகிப்பை மதிப்பதும் தவறுசெய்வதிலிருந்து அவளைத் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அவள் உடனடியான நன்மையாகத் தோன்றினதைப் பற்றி மாத்திரமே எண்ணினாள். தடை செய்யப்பட்டது அவளுடைய கண்களுக்கு விரும்பத்தக்கதாகியது. சாத்தானுடைய யோசனையால் முற்றிலும் ஏமாற்றப்பட்டு, அவள் கடவுளுடைய சட்டத்தை மீறினாள். பின்பு அவள் ஆதாமை அதில் உட்பட செய்தாள். ஆதாம் சாத்தானுடைய பொய்யால் ஏமாற்றப்படாதபோதிலும், கடவுளுடைய அன்புக்குச் சற்றேனும் நன்றியுணர்வைக் காட்டவில்லை. யெகோவாவின் தலைமைவகிப்பை அவன் அவமதித்து, கலகக்காரியான தன் மனைவியுடன் சேர்ந்து கொள்ள தெரிந்து கொண்டான்.—ஆதி. 3:6; 1 தீமோ. 2:13, 14.

3 யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியின் பேரில் சாத்தானின் தாக்குதல் ஏதேனில் நடந்த அந்தச் சம்பவத்தோடு நின்றுவிடவில்லை. அவன் அங்கே வெற்றியடைந்ததாகத் தோன்றினது, மற்றவர்களும் தங்கள் பங்கில் யெகோவாவுக்கு உண்மை தவறாதிருப்பார்களா என்ற கேள்வியை அவன் எழுப்புவதில் பின்தொடர்ந்தது. அப்பொழுது, இது, நெருங்க சம்பந்தப்பட்ட இரண்டாம்பட்ச விவாதமாயிற்று. அவனுடைய சவால், ஆதாமின் சந்ததியையும் கடவுளுடைய ஆவிகுமாரர்கள் எல்லாரையும், யெகோவாவின் மிகவும் நேசிக்கப்பட்ட முதற்பேறான குமாரனையுங்கூட உட்படுத்தும் அளவுக்கு எட்டியது. யோபின் நாட்களில், சாத்தான், யெகோவாவைச் சேவிக்கிறவர்கள், கடவுளையும் அவர் ஆளும் முறையையும் நேசிப்பதனிமித்தம் அல்ல, தன்னல காரணங்களுக்காகவே அவரைச் சேவிக்கிறார்கள் என்று வாதாடினான். துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகையில், அவர்கள் எல்லாரும் தன்னல விருப்பங்களுக்கு விட்டுக்கொடுத்து விடுவார்கள் என்று அவன் விவாதித்தான். அவன் விவாதம் சரியா?—யோபு 1:6-12; 2:1-6; வெளி. 12:10.

இந்த விவாதத்துக்கு அவர்கள் எப்படி விடையளித்தார்கள்

4 கலகத்தில் மற்றவர்களும் சாத்தானைச் சேர்ந்து கொள்ளக்கூடியதை யெகோவா, மறுக்கவில்லை; உண்மையில் ஏதேனில் தாம் தீர்ப்பளிக்கையில், ‘சர்ப்பத்தின்’ வித்தாகப் போகிறவர்களைக் கடவுள் குறிப்பிட்டார். (ஆதி. 3:15) இயேசுவைக் கொலை செய்ய சதி செய்த பரிசேயர்களும் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்தும் அப்படிப்பட்டவர்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அறியாமல் ஏதோ தவறான நடவடிக்கையில் உட்படவில்லை. இவர்கள் எது சரியென அறிந்திருந்தார்கள், எனினும் வேண்டுமென்றே யெகோவாவுக்கும் அவருடைய ஊழியருக்கும் எதிராக நிலைநிற்கை எடுத்தார்கள். என்றபோதிலும் யெகோவாவின் கட்டளைகளுக்கு ஒத்திசைவாய் நடக்காத எண்ணற்ற மற்றவர்கள் அறியாமையினால் அவ்வாறு நடந்திருக்கிறார்கள்—அப். 17:29, 30.

5 தங்கள் சிருஷ்டிகரைப் பற்றிக் கற்றறிந்து ஈடற்றப் பேரரசராக அவருக்குத் தங்கள் உண்மைத்தவறாமையை நிரூபித்த விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் இந்த எல்லாருக்கும் எதிர்மாறாக இருந்தார்கள். இவர்கள் கடவுளை நம்பினார்கள். அவருக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவதன்பேரிலேயே தங்கள் உயிர் சார்ந்திருந்ததென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நோவா இப்படிப்பட்ட மனிதனாக இருந்தான். ஆகவே, கடவுள் நோவாவிடம்: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; . . . நீ . . . உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு,” என்று சொன்னபோது, நோவா யெகோவாவின் கட்டளைக்குத் தன்னைக் கீழ்ப்படுத்தினான். அந்நாளிலிருந்த மற்ற ஜனங்கள் எச்சரிப்பு கொடுக்கப்பட்டபோதிலும், அசாதரணமாக எதுவும் நடக்கப்போவதில்லை என்பதுபோல் தங்கள் வழக்கமான வாழ்க்கைப் போக்கில் சென்று கொண்டிருந்தனர். என்றாலும் நோவா ஒரு மிகப் பெரிய பேழையைக் கட்டினான் மேலும் யெகோவாவின் நீதியுள்ள வழிகளைப் பற்றி மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் தன்னைச் சுறுசுறுப்பாய் ஈடுபடுத்தி வந்தான். பதிவு சொல்லுகிற பிரகாரம், “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்ட படியெல்லாம் அவன் செய்து முடித்தான்.”—ஆதி. 6:13-22; எபிரெயர் 11:7-ஐயும் 2 பேதுரு 2:5- ஐயும் பாருங்கள்.

6 மேலும், உத்தமத்தைக் காப்பவர்களுக்குள், தலைமைவகிப்பு நியமத்துக்கு உயர்ந்த மதிப்புக்கொடுப்பதும், அதோடு யெகோவாவின் பேரில் தனிப்பட்ட அன்பும் முதன்மையாக இருந்து வந்தது. தன் கணவனுடைய தலைமைவகிப்பை மதியாமற்போன ஏவாளைப் போல் அவர்கள் இல்லை. யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்த ஆதாமைப் போலும் இல்லை. ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் இந்தச் சிறந்த பண்புகளை நடைமுறையில் காட்டினாள். பேச்சில் மட்டுமல்ல அவளுடைய இருதயத்திலுங்கூட ஆபிரகாம் அவளுடைய “ஆண்டவனாக” இருந்தான். மேலும், அவள் தானேயும் யெகோவாவை நேசித்தாள், விசுவாசமுள்ள பெண்ணாக இருந்தாள். ஆபிரகாமோடுகூட அவள், “தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு [கடவுளுடைய ராஜ்யத்துக்கு] . . . காத்திருந்”தாள்—1 பேதுரு 3:5, 6; எபி. 11:10-16.

7 ஆபிரகாம் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஏறக்குறைய 430 ஆண்டுகளுக்குப் பின், மோசே எகிப்தின் பார்வோனை நேருக்கு நேர் எதிர்ப்பட்டு யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியின் சார்பாக உறுதியாய் நின்று போராடினான். மோசே தன்னம்பிக்கை உடையவனாக இல்லை. அதற்குமாறாக, போதியளவு நன்றாய்ப் பேசுவதற்குத் தனக்குத் திறமை இல்லையென்றே அவன் எண்ணினான். என்றாலும் அவன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தான். யெகோவாவின் ஆதரிப்பையும் தன் சகோதரனாகிய ஆரோனின் உதவியையுங்கொண்டு மோசே யெகோவாவின் வார்த்தையைப் பார்வோனுக்குத் திரும்பத் திரும்ப அறிவித்தான். பார்வோன் பிடிவாதமாக இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் சிலருங்கூட மோசேயைக் கடுமையாய்க் குற்றப்படுத்திப் பேசினார்கள். என்றபோதிலும் மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் உண்மைத்தவறாமல் செய்து முடித்தான், அவன் மூலமாய் இஸ்ரவேல் ஜனம் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டது.—யாத். 7:6; 12:50, 51.

8 யெகோவாவுக்கு உண்மைத்தவறாதிருந்தவர்கள், தேவைப்படுவதெல்லாம் சட்டத்தின் எழுத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று, அதாவது கடவுள் எழுத்தில் பதிவு செய்தவற்றிற்கு மாத்திரமே கீழ்ப்படிய வேண்டுமென்று யோசிக்கவில்லை. போத்திபாரின் மனைவி, தன்னுடன் விபசார உறவுகொள்ளும்படி யோசேப்பை கவர்ந்திழுக்க முயன்றபோது, விபச்சாரம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாய்க் கூறும் கடவுள் கொடுத்த எழுதப்பட்ட கட்டளை ஒன்றும் இல்லை. ஆனால் ஏதேனில் யெகோவா தொடங்கி வைத்தத் திருமண ஏற்பாட்டைப் பற்றித் தான் அறிந்திருந்ததை ஆதாரமாகக் கொண்டு மற்றொரு மனிதனின் மனைவியோடு பாலுறவுகள் கொள்வது கடவுளுக்குப் பிரியமில்லாததென்று யோசேப்பு அறிந்திருந்தான். தான் எகிப்தியரைப் போலிருக்க கடவுள் எந்த அளவுகள் வரையாகத் தன்னை அனுமதிப்பார் என்று சோதித்துப் பார்ப்பதில் யோசேப்பு அக்கறை கொண்டில்லை. மனிதவர்க்கத்துடன் கடவுளுடைய செயல்தொடர்புகளின் பேரில் சிந்தனை செய்து, பின்பு கடவுளுடைய சித்தம் என்னவென்று தான் தெளிவாக உணர்ந்ததை மனச்சாட்சியுடன் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் அவன் யெகோவாவின் வழிகளை உறுதியாய்க் கடைப்பிடித்தான்.—ஆதி. 39:7-12; சங்கீதம் 77:11, 12-ஐ ஒத்துப் பாருங்கள்.

9 கடுமையாய்ச் சோதிக்கப்பட்டாலும், யெகோவாவை உண்மையில் அறிந்திருக்கிறவர்கள் அவரை விட்டு விலகுவதில்லை. யோபு தன் உடைமைகளையெல்லாம் இழந்துவிட்டால் அல்லது அவன் உடல்சம்பந்தமாய்க் கெடுதி செய்யப்பட்டால், யெகோவா உயர்வாய்ப் பேசின இவனுங்கூட கடவுளை விட்டு விலகிப்போவான் என்று சாத்தான் குற்றஞ்சாட்டினான். ஆனால் யோபு, பிசாசானவனைப் பொய்யனாக நிரூபித்தான், தன்னைச் சூழ்ந்து அமிழ்த்தின அந்த எல்லா இக்கட்டுக்கும் காரணமென்னவென்று தான் அறியாதபோதிலும் அவ்வாறு நிரூபித்தான். (யோபு 2:3, 9, 10) சாத்தான் தன் குறிப்பை நிரூபிக்க இன்னும் முயன்று, பின்னால் மூன்று இளம் எபிரெயர்களை, அரசன் நிறுத்தி வைத்த சிலைக்கு முன்பாகக் குனிந்து வணங்காவிடில் எரிகிற அக்கினிச்சூளையில் சாகும்படி போடப்படுவார்கள் என்று கோபாவேசங்கொண்ட பாபிலோன் அரசன் பயமுறுத்தும்படி செய்வித்தான். அரசனின் கட்டளையும் விக்கிரகாராதனைக்கு விரோதமான யெகோவாவின் கட்டளையுமாகிய இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்படி வற்புறுத்தப்பட்டபோது, அவர்கள், தாங்கள் யெகோவாவையே சேவிப்பதாகவும் அவரே தங்களுடைய ஈடற்ற உன்னத அரசர் என்றும் உறுதியாய்த் தெரிவித்தார்கள். கடவுளுக்கு உண்மையுடனிருப்பதே அவர்களுக்கு உயிரைப் பார்க்கிலும் அதிக அருமையாயிருந்தது.—தானி. 3:14-18.

10 இதிலிருந்து, யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் நிலைத்திருப்பதற்கு ஒருவன் பரிபூரணனாக இருக்கவேண்டும், ஒரு தவறு செய்துவிட்டால் அவன் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? இல்லவே இல்லை! மோசேதானே தவறின சமயங்களைப் பற்றி பைபிள் திட்டவட்டமாய் நமக்குச் சொல்லுகிறது. யெகோவா கோபமடைந்தார், ஆனால் அவர் மோசேயைத் தள்ளிவிடவில்லை. அப்போஸ்தலர் பல காரியங்களில் முன்மாதிரியாக இருந்தபோதிலும், அவர்களுக்கும் பலவீனங்கள் இருந்தன. உண்மைத் தவறாமை, இருதயத்திலிருந்து நிலையாகத் தொடர்ந்து கீழ்ப்படிவதைக் கேட்கிறது. என்றாலும், நாம் சுதந்தரித்த ஆபூரணத்தைக் கவனத்தில் வைத்து யெகோவா நாம் எந்தக் காரியத்திலும் அவருடைய சித்தத்தை வேண்டுமென்றே புறக்கணியாதிருந்தால் மகிழ்ச்சியடைகிறார். பலவீனத்தின் காரணமாக, நாம் ஏதோ தவறு செய்துவிட்டால் அதைப் பழக்கமாக்கிக் கொள்ளாதபடி நாம் உள்ளப்பூர்வமாய் மனஸ்தாபப்பட்டு திரும்புவது முக்கியம். இவ்வாறு, நன்மை எதுவென்று யெகோவா சொல்வதை நாம் உண்மையாகவே நேசித்து தவறென்று அவர் காட்டுவதை வெறுக்கிறோமென மெய்ப்பித்துக் காட்டுகிறோம். பாவத்தை ஈடுசெய்யும் இயேசுவின் பலியின் விலைமதிப்பில் நாம் விசுவாசம் வைக்கும் இந்த ஆதாரத்தின்பேரில், நாம் கடவுளுக்கு, முன்பாகச் சுத்தமான நிலைநிற்கையை அனுபவித்து மகிழலாம்.—ஆமோஸ் 5:15; அப். 3:19; எபி. 9:14.

11 இருந்தபோதிலும், மனிதர் பரிபூரண தெய்வபக்தியைக் காட்டமுடியாது, என்பதாக இருக்குமா? இதற்கு விடை ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் “பரிசுத்த இரகசியமாக” இருந்தது. (1 தீமோ. 3:16) ஆதாம், பரிபூரணனாகப் படைக்கப்பட்டபோதிலும், தெய்வபக்திக்குரிய பரிபூரண முன்மாதிரியை வைக்கவில்லை. யாரால் முடியும்? நிச்சயமாகவே அவனுடைய பாவமுள்ள சந்ததியாரில் ஒருவராலும் முடியாது. இயேசு கிறிஸ்துவே அப்படிச் செய்த ஒரே மனிதன். அதிக ஆதரவான சூழ்நிலைமைகளைக் கொண்டிருந்த ஆதாம் தான் விரும்பியிருந்தால் பரிபூரண உத்தமத்தைக் காத்திருக்க முடியுமென்று, இயேசு நிறைவேற்றினது நிருபித்தது. குற்றம் கடவுளுடைய படைப்பு வேலையில் இல்லை. ஆகவே தெய்வீக சட்டத்துக்குக் கீழ்ப்படிதலை மட்டுமல்லாமல் சர்வலோக ஈடற்ற அரசராகிய யெகோவாவுக்கு நம் தனிப்பட்ட பக்தியையுங்கூட மெய்ப்பித்துக் காட்டுவதில் நாம் பின்பற்ற நாடும் முன்மாதிரி இயேசு கிறிஸ்துவே.

நம் சொந்த விடை என்ன?

12 இன்று நாம் ஒவ்வொருவரும் இந்தச் சர்வலோக விவாதத்தை எதிர்ப்பட வேண்டும். நாம் இதைத் தப்பிக்கொள்ள முடியாது. யெகோவாவின் சார்பில் இருக்கிறோமென்று நாம் வெளிப்படையாய் அறிவித்திருந்தால் சாத்தான் நம்மைத் தன் தாக்கல் குறியிலக்காக வைக்கிறான். கருதக்கூடிய எல்லா பக்கங்களிலிருந்தும் அவன் நெருக்கடியைக் கொண்டு வருகிறான், மேலும் தன்னுடைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாக அவன் அப்படித் தொடர்ந்து செய்துகொண்டிருப்பான். நாம் நம்முடைய காவலைத் தளர்த்தக் கூடாது. (1 பேதுரு 5:8) இந்த மிகப் பெரிய விவாதத்தின் சம்பந்தமாக நாம் எங்கே நிற்கிறோம் என்பதை நம்முடைய நடத்தை காட்டுகிறது.

13 உண்மையற்ற துரோக நடத்தை இந்த உலகத்தில் சாதாரணமாக இருப்பதால் அதை வெறுமென முக்கியமில்லாததாக நாம் பாவித்து நடத்த முடியாது. உத்தமத்தைக் காத்துவருவதானது நாம் யெகோவாவின் நீதியுள்ள வழிகளை வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும், பொருத்தி பிரயோகிப்பதைத் தேவைப்படுத்துகிறது. இதை விளக்க, பின்வருபவற்றைக் கவனியுங்கள்:

(1) நம்முடைய முதல் பெற்றோரை பாவத்துக்குள் வழிநடத்துவதற்கு சாத்தான் ஒரு பொய்யைப் பயன்படுத்தினான். அவன் “பொய்க்குப் பிதா”வானான். (யோவான் 8:44)

என்ன சூழ்நிலைமைகளின் கீழ், இளைஞர் சிலசமயங்களில் பெற்றோரிடம் உண்மையுடன் நடந்துகொள்ளத் தவறுகிறார்கள்? கிறிஸ்தவ இளைஞர் அதைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்? (நீதி. 6:16-19)

என்ன வியாபார பழக்க வழக்கங்கள் ஒருவனை சத்தியபரராகிய கடவுளுடன் அடையாளங்காட்டுவதற்குப் பதிலாகப் “பொய்க்குப் பிதா”வானவனுடன் அடையாளங் காட்டும்? (மீகா 6:11, 12)

உண்மையில் நாம் இருப்பதைப் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு அபிப்பிராயத்தைக் கொடுக்க நாம் காரியங்களைச் சொன்னால் அது வேறு எவரையும் கெடுதியாய்ப் பாதிக்கிறதில்லையென்றால் தவறாகுமா? (சங். 119:163; அப் 5:1-11-ஐ ஒத்துப் பாருங்கள்.)

ஒருவன் வினைமையான தவறுசெய்வதில் உட்பட்டிருந்தால், பொய்ம்மையான வழிவகையை நாடி அதை மறைத்து மூடிப் போட முயற்சி செய்யாதிருப்பது ஏன் முக்கியம்? (நீதி. 28:13)

(2) நன்மை தீமையைக் குறித்ததில் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்யும்படி சாத்தான் தூண்டினதன் பேரில் ஏவாளும் பின்பு ஆதாமும் செயல்பட்ட போது, அவர்கள் செய்த முதல் காரியம், தங்களுக்குரியதல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டதாகும். அவர்கள் திருடரானார்கள்.

ஒருவன் தேவையிலிருப்பதால் அல்லது அவன் அந்தப் பொருட்களை யாரிடமிருந்து எடுத்தானோ அவருக்கு மிகுதியாய் இருப்பதால் திருடினது சரியாகிவிடுமா? (நீதி. 6:30, 31; 1 பேதுரு 4:15)

நாம் வாழுமிடத்தில் இது சாதாரண பழக்கமாயிருப்பதால் அல்லது எடுத்தது கொஞ்சமாகவே இருப்பதால் அவ்வளவாய்க் கண்டிக்கத்தக்கதல்ல என்பதாகுமா? (ரோமர் 12:2; எபே. 4:28; லூக்கா 16:10)

14 கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, சாத்தானும் அவனுடைய பேய்களும், மனித வர்க்கத்தின்மீது செல்வாக்கு செலுத்தக் கூடாதபடி அபிஸ்ஸில் இருப்பர். அது எப்பேர்ப்பட்ட விடுதலையாயிருக்கும்! ஆனால் அந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் கொஞ்சக்காலம் விடுதலையாக்கப்படுவார்கள். திரும்ப நிலைநாட்டப்பட்ட மனிதவர்க்கத்தினரில் தங்கள் உத்தமத்தைக் காத்துவரும் அந்தப் “பரிசுத்தவான்களின்” மீது சாத்தானும் அவனைப் பின்பற்றுவோரும் நெருக்கடியைக் கொண்டுவருவார்கள். “பிரியமான நகரம்” ஆகிய பரலோகப் புதிய எருசலேம் பூமியில் ஸ்தாபித்திருக்கும் நீதியை முழுவதுமாய் அகற்றிப்போட முயற்சி செய்து சாத்தான் அதற்கு விரோதமாய்ப் போர் செய்ய வருவதுபோல் புறப்படுவான்.—வெளி 20:7-10.

15 கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே, சாத்தான் மனிதரை யெகோவாவுக்கு உண்மைத் தவறச் செய்யும் செயல்களை நடப்பிக்கவைக்கும்படி கவர்ந்து ஏமாற்ற வஞ்சகத்தைப் பயன்படுத்தி அவர்களில் தன்னலத்தையும் பெருமையையும் தூண்டிவிடலாம். அப்பொழுது உயிரோடிருப்பது நம்முடைய சிலாக்கியமானால், நாம் ஒவ்வொருவரும் தனியே எவ்வாறு பிரதிபலிப்போம்? இந்தச் சர்வலோக விவாதத்தைக் குறித்ததில் நம்முடைய இருதயங்கள் எங்கே இருக்கும்? அப்பொழுது மனிதவர்க்கத்தார் யாவரும் பரிபூரணராக இருப்பார்கள், ஆதலால் உண்மையற்ற எந்தச் செயலும் வேண்டுமென்றே செய்ததாயிருக்கும், நித்திய அழிவில் முடிவடையும். அப்பொழுது உண்மைத் தவறாதவர்களாக நாம் நிரூபிக்கக்கூடும்படி, இப்பொழுதே நாம், யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமோ தம்முடைய அமைப்பின் மூலமோ நமக்குக் கொடுக்கிற கட்டளைகள் எதுவாயினும் உடனடியாய்க் கீழ்ப்படிதலுடன் பிரதிபலிக்கும் பழக்கத்தை நம்மில் வளர்ப்பது எவ்வளவு இன்றியமையாதது! நாம் அப்படிச் செய்கையில், சர்வலோக ஈடற்ற அரசராகிய அவருக்கு நம்முடைய உண்மையான தெய்வபத்தியைக் காட்டுகிறோம்.

மறு கலந்தாலோசிப்பு

● எல்லா சிருஷ்டியும் எந்தப் பெரிய விவாதத்தை எதிர்ப்பட வேண்டும்? நாம் அதில் உட்பட்டது எப்படி?

● 49-ம் பக்கத்தில் காட்டியிருக்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் யெகோவாவுக்குத் தன் உண்மைத் தவறாமையை நிரூபித்த வழிவகைகளைப் பற்றியதில் எது முதன்மையாக இருக்கிறது?

● நம்முடைய நடத்தையினால் யெகோவாவைக் கனப்படுத்த நாம் ஒவ்வொரு நாளும் கவனமாயிருப்பது ஏன் இன்றியமையாதது?

[கேள்விகள்]

1. (எ) ஏதேனில் சாத்தான் என்ன விவாதத்தை எழுப்பினான்? (பி) அவன் சொன்னதில் இந்த விவாதம் எப்படி மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது?

2. அந்த முதல் மனித ஜோடியை எது பாதுகாத்திருக்கக்கூடும்?

3. (எ) யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியின்பேரில் சாத்தான் செய்தத் தாக்குதலோடு நெருங்கியதாகச் சம்பந்தப்பட்ட இன்னுமொரு விவாதம் என்ன? (பி) அதால் யார் பாதிக்கப்படுகின்றனர்?

4. மனிதரில் பலர் ஏன் யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியை ஆதரிக்கவில்லை?

5. (எ) ஏவாளைப் போலிராமல், யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் நிலைத்திருந்தவர்கள் அவருடைய வார்த்தையை எப்படிக் கருதினார்கள்? (பி) நோவா தன்னுடைய உண்மைத் தவறாமையை எப்படி நிரூபித்தான், அவனுடைய முன்மாதிரியிலிருந்து நாம் எப்படிப் பயனடையக்கூடும்?

6. (எ) உத்தமத்தைக் காத்தவர்களில் வேறு எந்தப் பண்புகளும் தனிப்பட அமைந்திருந்தன? (பி) சாராள் இந்தப் பண்புகளை எப்படிக் காட்டினாள், அவளுடைய முன்மாதிரியிலிருந்து எவ்வகையில் நாம் பயனடையலாம்?

7. (எ) என்ன சூழ்நிலைமையின் கீழ் மோசே யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியின் சார்பாகப் போராடினான்? (பி) அவனுடைய முன்மாதிரி நமக்கு எப்படி நன்மை பயக்கும்?

8. (எ) யெகோவாவுக்கு உண்மைத் தவறாதிருப்பது, கடவுள் திட்டவட்டமாய்ப் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட செய்திருக்கிறவற்றை செய்வதை மாத்திரமேயல்லாமல் அதிகத்தை உட்படுத்துகிறதென்று எது காட்டுகிறது? (பி) இந்த வகையான உண்மைத்தவறாமையை மதித்துணருவது எப்படி 1 யோவான் 2:15-ஐப் பொருத்திப் பிரயோகிக்கும்படி நமக்கு உதவிசெய்யும்?

9. பிசாசானவன் யோபின் நாளில் எழுப்பின அந்தக் குற்றச்சாட்டில் பொய்யனாக திரும்பத் திரும்ப எப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறான்?

10. நாம் மெய்யாகவே யெகோவாவிடம் உண்மைத் தவறாமல் இருக்கிறோமென்று நிரூபிப்பது அபூரண மனிதராகிய நமக்கு எப்படிச் சாத்தியமாயிருக்கிறது?

11. (எ) மனிதரில், பரிபூரண தெய்வபக்தியைக் காத்தவர் யார், இது எதை நிரூபித்தது? (பி) அவருடைய செயலால் நாம் எப்படி உதவி செய்யப்படுகிறோம்?

12. யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியினிடமாக நாம் கொண்டிருக்கும் மனப்பான்மையைக் குறித்ததில் நாம் ஏன் இடைவிடாமல் விழிப்புடன் இருக்கவேண்டும்?

13. (எ) பொய்ச் சொல்லுதல் திருடுதல் ஆகியவற்றின் தொடக்கத்தைப் பற்றிய என்ன காரியம் நாம் அவற்றை வெறுத்து விலக்கும்படி செய்ய வேண்டும்? (பி) இப்படிப்பட்ட தவறு செய்யும்படி சிலரை மனம் சாய்விக்கும் சூழ்நிலைமைகளைக் குறித்து இந்தப் பத்தியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாகப் பதில் சொல்லுங்கள்.

14, 15. (எ) கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவின்போது மனிதவர்க்கம் முழுவதற்கும் என்ன பரீட்சை வரும்? (பி)  இப்பொழுது நாம் செய்வது எப்படி அப்பொழுது நமக்கு உண்டாகும் விளைவைப் பாதிக்கும்?

[பக்கம் 49-ன் படங்கள்]

இவர்கள் யெகோவாவின் அரசாட்சியை உறுதியாய்க் கடைபிடித்தவர்கள்

நோவா

சாராள்

மோசே

யோசேப்பு

யோபு

இவர்கள் முன்மாதிரியிலிருந்து நாம் எவ்வாறு பயன் அடையலாம்?