Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்க்கதரிசிகள் யாவரும் சாட்சிபகர்ந்த அவர்

தீர்க்கதரிசிகள் யாவரும் சாட்சிபகர்ந்த அவர்

அதிகாரம் 4

தீர்க்கதரிசிகள் யாவரும் சாட்சிபகர்ந்த அவர்

யெகோவாவுடன் தமக்குள்ள அன்பான உறவை விவரித்து இயேசு: “பிதா குமாரனை நேசித்துத் தாம் செய்கிறவற்றையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்,” என்று சொன்னார். (யோவான் 5:19, 20, தி.மொ.) இந்த உறவின் நெருங்கிய தன்மை மனிதனாக அவர் பிறப்பதற்கு எண்ணற்ற ஆயிர ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் சிருஷ்டிக்கப்பட்ட சமயத்தின்போது தொடங்கினது. அவர் கடவுளுடைய ஒரே பேறான குமாரன், யெகோவாதாமே தனியாகப் படைத்த அந்த ஒரே ஒருவர். வானத்திலும் பூமியிலுமுள்ள மற்ற எல்லாம் அந்த மிக அருமையாய் நேசிக்கப்பட்ட முதற்பேறான குமாரனைக் கொண்டு படைக்கப்பட்டன. மேலும் அவர் கடவுளுடைய வார்த்தையாக அல்லது பிரதிநிதியாக பேசுபவராய் சேவித்தார், அவர் மூலமாய்த் தெய்வீகச் சித்தம் மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இவரே, கடவுள் தனி பாசம் கொண்டிருந்த இந்தக் குமாரனே, மனிதனாகிய கிறிஸ்து ஆனார்.—கொலோ. 1:15, 16; யோவான் 1:14; 12:49, 50.

2 அவர் மனிதனாக அற்புதமாய்ப் பிறப்பதற்கு முன்பாக, அவரைப் பற்றி தேவாவியால் ஏவப்பட்ட பல தீர்க்கதரிசனங்கள் எழுதி பதிவு செய்யப்பட்டன. அப்போஸ்தலனாகிய பேதுரு கொர்நேலியுவுக்குச் சாட்சி பகர்ந்த பிரகாரம், “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள். (அப். 10:43) தூய்மை வணக்கத்தின் சம்பந்தமாக இயேசு வகிக்கும் பாகம் பைபிளில் அவ்வளவு விரிவாக முதன்மைப்படுத்திக் காட்டியிருப்பதால் ஒரு தூதன் அப்போஸ்தலனாகிய யோவானிடம்: “தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது [தீர்க்கதரிசனம் சொல்வதை ஏவுகிறது, NW],” என்று சொன்னான். (வெளி. 19:10) இந்தத் தீர்க்கதரிசனங்கள் அவரைத் தெளிவாக அடையாளங்காட்டி, இன்று நமக்குக் கூர்ந்த அக்கறைக்குரியவையாக இருக்கிற அவரைப் பற்றிய கடவுளுடைய நோக்கங்களின் அம்சங்களுக்குக் கவனத்தை இழுக்கின்றன.

தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்தியுள்ளவை

3 இத்தகைய தீர்க்கதரிசனங்கள் முதல் தீர்க்கதரிசனம் ஏதேனில் நடந்த கலகத்துக்குப் பின் பேசப்பட்டது. அது, சர்ப்பத்தை நோக்கி யெகோவா கூறின தண்டனைத்தீர்ப்பில் அடங்கியிருந்தது. யெகோவா பின்வருமாறு கூறினார்: “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்: அவர் உன் தலையை நசுக்குவார் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதி. 3:14, 15) இதன் கருத்து என்ன? கடவுளுடைய உரிய காலத்தில் மற்றத் தீர்க்கதரிசனங்கள் இதைத் தெளிவாக்கியும் மேலுமாக விரிவாக்கியும் வந்தன. இவ்வாறு சர்ப்பத்தை நோக்கிப் பேசப்பட்ட தீர்க்கதரிசனம் சர்ப்பத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட பிசாசாகிய சாத்தானை நோக்கியே பேசப்பட்டதென்பதை, இதன் பலனாக நாம் அறிகிறோம். அந்த “ஸ்திரீ” யெகோவாவின் சொந்த உண்மைத் தவறாத பரலோக அமைப்பே, அது அவருக்கு உண்மையுள்ள மனைவியைப் போல் இருக்கிறது. ‘சர்ப்பத்தின் வித்து’ பிசாசின் ஆவியை வெளிப்படுத்துகிற தூதர்களும் மனிதரும் உட்பட்டது, இவர்கள் யெகோவாவையும் அவருடைய ஜனங்களையும் எதிர்க்கிறவர்கள். பிசாசானவன் ஏதேனில் சர்ப்பத்தைப் பயன்படுத்தின முறையைக் கவனிக்கையில் சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவது, கடவுளுடைய இந்தக் கலகக்காரக் குமாரனின், அதாவது, யெகோவாவின்மீது பொய்ப் பழி கூறி மனிதவர்க்கத்துக்கு மிகுந்த துக்கத்தைக் கொண்டு வந்தவனின் இறுதி அழிவை குறிப்பிட்டதென்று தீர்க்கதரிசனத்திலிருந்து தெளிந்துணர முடிகிறது. ஆனால் தலையை நசுக்கப்போகிற அந்த வித்து யார் என்பதைப் பற்றியது வெகு காலம் ஒரு பரிசுத்த இரகசியமாகவே நிலைத்திருந்தது.—ரோமர் 16:25, 26.

4 மனித சரித்திரத்தில ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் கடந்த பின்பு யெகோவா மேலுமான நுட்ப விவரங்களை அளித்தார். அந்த வித்து ஆபிரகாமின் குடும்பப் பரம்பரையில் தோன்றுவார் என்று அவர் குறிப்பிட்டார். (ஆதி. 22:15-18) என்றபோதிலும், இந்த வித்துக்கு வழிநடத்துகிற அந்த வழிமரபு வெறும் மாம்ச பரம்பரையைச் சார்ந்திராது, கடவுள் தெரிந்து கொள்வதன் பேரிலேயே சார்ந்திருக்கும். அடிமைப் பெண்ணாகிய ஆகாருக்குப் பிறந்த இஸ்மவேலை ஆபிரகாம் நேசித்தப்போதிலும் யெகோவா: “சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்,” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுச் சொன்னார். (ஆதி. 17:18-21; 21:8-12) பின்னால் இந்த உடன்படிக்கை, ஈசாக்கின் முதற்பேறான குமாரனாகிய ஏசாவுக்கு அல்ல, யாக்கோபுக்கே உறுதிசெய்யப்பட்டது, யாக்கோபிலிருந்தே இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் தோன்றினர். (ஆதி. 28:10-14) காலப்போக்கில், அந்த வித்து யூதா கோத்திரத்திலும், தாவீதின் குடும்பத்திலும் பிறப்பார் என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டது.—ஆதி. 49:10; 1 நாளா. 17:3, 4, 11-14.

5 இந்த வித்து மனிதனாகப் பிறப்பதற்கு 700-க்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் பிறப்பிடம் பெத்லகேம் என்று பைபிள் குறிப்பிட்டது, அதோடுகூட, அவர் ‘தெளிவாகக் குறிக்கப்படாத காலத்தின் நாட்களிலிருந்தே’, அதாவது அவர் பரலோகத்தில் படைக்கப்பட்ட அந்தக் காலம் முகற்கொண்டு, ஏற்கெனவே இருந்தவரென்றும் வெளிப்படுத்தியது. (மீகா 5:2) யெகோவாவின் அபிஷேகஞ் செய்யப்பட்டவராக, மேசியாவாக, பூமியில் தோன்றுவதன் காலம் தீர்க்கதரிசியாகிய தானியேலின் மூலமாய் முன்னறிவிக்கப்பட்டது. (தானி. 9:24-26) அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகஞ் செய்யப்பட்டபோது, பரலோகத்திலிருந்து ஒரு குரல் அவர் யார் என்பதை உறுதிப்படுத்தினது. (மத். 3:16, 17) ஆகவே, பிலிப்பு, இயேசுவைப் பின்பற்றுபவனானபோது திடநம்பிக்கையுடன் பின்வருமாறு சொல்ல முடிந்தது; “தீர்க்கதரிசிகளும் நியாயப்பிரமாணத்தில் மோசேயும் எழுதியிருக்கிறவரைக் கண்டு கொண்டோம். அவர் யோசேப்பின் [வளர்ப்பு] குமாரனாகிய நாசரேத்தூர் இயேசுவே.”—யோவான் 1:45, தி.மொ.

6 அதன் பின்பு, அவரைக் குறிக்கும் மிகப் பல தீர்க்கதரிசனக் குறிப்புகள் தேவாவியால் ஏவப்பட்ட வேத எழுத்துக்களில் பின்னப்பட்டிருப்பதை, இயேசுவைப் பின்பற்றினவர்கள் தெளிவாக உணரலானார்கள் அவர் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, அவர் தாமே நேரில் “வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” (லூக்கா 24:27) ‘சர்ப்பத்தின்’ தலையை நசுக்கப் போகிற, அதாவது, கடைசியாகச் சாத்தான் இல்லாமற்போகும் முறையில் அவ்வாறு நசுக்கப்போகிற அந்த ‘ஸ்திரீயின் வித்து’ முக்கியமாய் இயேசுவே என்பது இப்பொழுது தெளிவாயிருக்கிறது. மனிதவர்க்கத்துக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம், நாம் உள்ளத்தில் ஆவலுடன் நாடும் எல்லாக் காரியங்களும் இயேசுவின் மூலமாய் நிறைவேற்றப்படும்.—2 கொரி. 1:20.

7 இந்தத் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை நீங்கள் முதன் முதல் வாசித்தப் போது, ஒருவேளை, அந்த எத்தியோப்பிய மந்திரியை போல், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்?” என்று நீங்கள் கேட்டிருக்கலாம். இதற்குப் பதிலைப் பெற்றுக்கொண்டபோது அந்த மந்திரி காரியத்தை அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பிலிப்பு கொடுத்த விளக்கத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டபின்பு, அவன், இயேசு அந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினதை தான் நன்றியோடு மதித்துணர்வது தன் சொந்தப்பங்கில் செயல்படுவதை அதாவது முழுக்காட்டப்படுவதை தேவைப்படுத்தினதென்று உணர்ந்தான். (அப். 8:32-38; ஏசா. 53:3-9) நாம் அவ்வாறு பிரதிபலிக்கிறோமா? சிலசமயங்களில் ஒரு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிற முறை நம் உள்ளம் கனிய செய்கிறது, அல்லது அதன் நிறைவேற்றத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகையில் பைபிளில் தானேயும் கொடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் நம் இருதயத்தை ஆழமாய்த் தொடுகின்றன.

8 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பின்வரும் தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்களையும் மாதிரிகளையும் குறித்ததில் இது எப்படி அவ்வாறு இருத்திறதென்பதைக் கவனியுங்கள். அந்தக் கேள்விகள் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்களின் உதவியைக் கொண்டு நீங்கள் பதிலளிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(1) ஆபிரகாம் ஈசாக்கைப் பலிசெலுத்த முயன்றதைப் பற்றிய இந்தப் பதிவு, யெகோவா தம்முடைய குமாரனைக் கொண்டு மீட்கும் கிரயத்தை அருளினதில் அவர் செய்ததை நன்றியோடு மதித்துணர நமக்கு எப்படி உதவி செய்கிறது? (யோவான் 3:16; ஆதி. 22:1-18 [2-ம் வசனத்தில் ஈசாக்கு விவரிக்கப் பட்டிருக்கிற விதத்தைக் கவனியுங்கள்.])

இது நமக்கு என்ன திடநம்பிக்கையை அளிக்கவேண்டும்? (ரோமர் 8:32, 38, 39)

ஆனால், நம்முடைய பங்கில் என்ன தேவைப்படுகிறது? (ஆதி. 22:18; யோவான் 3:36)

(2) மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி என்று இயேசுவை அடையாளங் காட்டுகையில் என்ன பாரமான பொறுப்பைப் பற்றி பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது? (அப். 3:22, 23; உபா. 18:15-19)

இயேசு நமக்குச் சொல்லியிருக்கிற காரியங்களில் சில யாவை, அவை ஏன் இப்பொழுது சமயத்துக்கு உகந்தவையாக இருக்கின்றன? (மத். 28:18-20; 19:4-9; 18:3-6)

(3) ஆரோனின் ஆசாரியத்துவத்தால் முன்குறித்துக் காட்டப்பட்டதை பைபிள் விளக்குகையில், பிரதான ஆசாரியராக இயேசுவுக்கு இருக்கும் மனதைக் கவரும் என்ன பண்புகளுக்குக் கவனம் செலுத்த வைக்கிறது? (எபி. 4:15-5:3; 7:26-28)

ஆகவே, நம்முடைய பலவீனங்களை மேற்கொள்வதற்கு உதவி செய்யும்படி கேட்டு கிறிஸ்துவின் மூலமாய் ஜெபத்தில் கடவுளை அணுகுவதைப் பற்றி நாம் எப்படி உணரவேண்டும்?

(4) (மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் செலுத்தப்பட்ட எல்லா பலிகளுக்கும் பதிலான) இயேசுவின் பலியின் உயர்ந்த மதிப்பைக் கருதுகையில், கடவுளுக்கு பிரியமல்லாததென்று நாம் அறிந்துள்ள எதையாவது செய்யும் பழக்கத்துக்கு உட்படுவதை தவிர்க்க நாம் ஏன் மிக அதிகக் கவனமாயிருக்க வேண்டும்? (எபி. 10:26, 27)

இயேசுவின் பலியின் பலனாகக் கூடியதாக்கப்பட்ட ஜீவனின் நம்பிக்கையை நாம் உண்மையில் நன்றியோடு மதித்தால், என்ன காரியங்களை ஊக்கந்தளராமல் செய்வோம்? (எபி. 10:19-25)

கிறிஸ்துவின் பேரிலுள்ள நம் விசுவாசத்தை நாம் எப்படிக் காட்டலாம்?

9 தீர்க்கதரிசனம் எப்படி இயேசுவில் நிறைவேற்றமடைந்ததென்று எருசலேமிலிருந்த யூத உயர் நீதி சபைக்குக் குறிப்பிட்டுக் காட்டின பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு மிகுந்த ஊக்கத்துடன் பின்வருமாறு கூறி முடித்தான்: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப். 4:11, 12; சங். 118:22) ஆதாமின் சந்ததியார் யாவரும் பாவிகள், ஆகவே பாவத்தின் தண்டனையாக அவர்கள் மரிக்கிறார்கள், அவர்கள் மரணம் எவரையும் மீட்பதற்குப் பிரயோகிக்கப்பட எந்த விலைமதிப்பையும் உடையதாக இல்லை. ஆனால் இயேசு பரிபூரணராக இருந்தார், அவர் தம்முடைய உயிரைக் கொடுத்ததானது பலிக்குரிய விலைமதிப்பை உடையதாயிருந்தது. (சங். 49:6-9; எபி. 2:9) ஆதாம் தன் சந்ததியாருக்கு இழந்துவிட்டதன் விலைமதிப்போடு சரியாய் ஒத்திருந்த மீட்கும் விலைக்கிரயத்தை அவர் கடவுளுக்குச் செலுத்தினார். இது நமக்கு எப்படி நன்மை செய்தது?—1 தீமோ. 2:5, 6.

10 பாவமன்னிப்பின் காரணமாக ஒரு சுத்தமான மனச் சாட்சியை நாம் கொண்டிருப்பதை இது கூடியதாக்கிற்று—இது, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் மிருக பலிகளால் இஸ்ரவேலர் அடைந்த எதையும் பார்க்கிலும் மிக அதிக மேம்பட்டதாகும். (அப். 13:38, 39; எபி. 9:13, 14) இதைக் கொண்டிருப்பதானது, நிச்சயமாகவே, நாம் நம்மைக் குறித்ததில் நேர்மையுடனிருந்து இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசம் வைத்திருக்க வேண்டியதை அவசியப்படுத்துகிறது. கிறிஸ்துவின் பலி நமக்கு எவ்வளவாய்த் தேவை என்பதை நாம் தாமே மதித்துணருகிறோமா? “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”—1 யோவான் 1:8, 9.

11 நிச்சயமாகவே, தாங்கள் பாவிகளென்று அறிந்திருப்பதாகவும் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சொல்லி, இயேசுவைப்போல் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் ஓரளவு பங்கும் கொள்ளுகிற சிலர், இயேசுவில் முழுவிசுவாசம் வைப்பதில் குறைவுபடுகிறார்கள். எவ்வகையில்? பைபிளில் காட்டப்பட்டிருக்கிறபடி, முதல் நூற்றாண்டிலிருந்த ஆட்கள் உண்மையில் விசுவாசிகளானபோது, அதை அவர்கள் யாவரறிய எப்படி மெய்ப்பித்துக் காட்டினார்கள்? அவர்கள் முழுக்காட்டப்பட்டார்கள். ஏன்? ஏனென்றால் சீஷர்கள் முழுக்காட்டப்பட வேண்டுமென்று இயேசு கட்டளையிட்டிருந்தார். (மத். 28:19, 20; அப். 8:12; 18:8) இயேசு கிறிஸ்துவின் மூலமாய் யெகோவா செய்திருந்த அன்புள்ள ஏற்பாடு ஒருவனுடைய இருதயத்தைச் செயல்பட தூண்டுகையில், அவன் பின்வாங்க மாட்டான். தன்னுடைய வாழ்க்கையில் சரிப்படுத்த வேண்டியவற்றை சரிப்படுத்துவான், தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டினால் அதை அடையாளப்படுத்துவான். பைபிள் காட்டுகிறபடி, இம்முறையில் விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டுவதன் மூலம் அவன் ‘நல் மனச்சாட்சிக்காகக் கடவுளிடம் விண்ணப்பம்’ செய்கிறான்.—1 பேதுரு 3:21, NW.

12 நிச்சயமாகவே, அதற்குப் பின்புங்கூட பாவத் தன்மைகள் வெளிப்படக்கூடும். அப்பொழுது என்ன செய்வது? “நீங்கள் பாவஞ்செய்யாதபடி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்,” என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறினான். ஆகவே செயலிலோ, பேச்சிலோ, மனப்பான்மையிலோ வெளிப்படும் நம்மிலுள்ள பாவத்தை நாம் அற்பமாக எண்ணி கவனியாமற் விடக்கூடாது. “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரரான இயேசு கிறிஸ்துவே பிதாவினிடம் நமக்குச் சகாயர். நமது பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தபலி; நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல சர்வலோகத்தின் பாவங்களுக்குமே” (1 யோவான் 2:1, 2, தி.மொ.) இது, நாம் என்ன செய்தாலும் கவலையில்லாமல், ‘எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்’ என்று கடவுளிடம் நாம் ஜெபித்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று பொருள் கொள்ளுகிறதா? இல்லை. மன்னிப்பைப் பெறுவதற்கு முக்கிய காரியமானது மனஸ்தாபப்பட்டுத் திரும்புதலாகும். கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களிடமிருந்து உதவி தேவைப்படலாம். நாம் செய்ததன் தவறான தன்மையை நாம் தெரிந்து கொண்டு அதன் பேரில் உள்ளப்பூர்வமான மனவருத்தத்தை உணரவேண்டும், இது அதைத் திரும்பச் செய்வதைத் தவிர்க்க நாம் ஊக்கமான முயற்சி எடுக்கும்படி நம்மைச் செய்விக்க வேண்டும். (அப். 3:19; யாக். 5:13-16) இப்படிச் செய்வோமானால், இயேசுவின் உதவி நமக்குக் கிடைப்பதைப் பற்றி நிச்சயமாயிருக்கலாம். பாவத்துக்கு ஈடுசெய்யும் விலைமதிப்பையுடைய அவருடைய பலியில் நாம் விசுவாசங்காட்டும் இந்த ஆதாரத்தின்பேரில் யெகோவாவின் தயவுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவது கூடியதாயிருக்கிறது; நம்முடைய வணக்கம் அவருக்கு ஏற்கத்தகுந்ததாயிருக்க வேண்டுமானால் இது இன்றியமையாதது.

13 இயேசுவின் பலி நித்திய ஜீவனுக்கான வாய்ப்பையும் நமக்குத் திறந்திருக்கிறது—“சிறுமந்தை”க்குப் பரலோகத்திலும், மேலுமாகக் கோடிக்கணக்கான மனிதவர்க்கத்துக்குப் பரதீஸான பூமியிலும் (லூக்கா 12:32; வெளி. 20:11, 12; 21:3, 4) இது நாம் சம்பாதிக்கும் ஒருபலன் அல்ல. யெகோவாவின் சேவையில் நாம் எவ்வளவு மிகுதியாகச் செய்தாலும் கடவுள் நமக்கு ஜீவனைக் கொடுக்கக் கடன்படும் மதிப்பளவை நாம் ஒருபோதும் எட்ட முடியாது. நித்திய ஜீவனானது ‘தேவனுடைய கிருபைவரம் . . . நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால்.’ (ரோமர் 6:23; எபே. 2:8-10) இருந்தபோதிலும், அந்த வரத்தில் நாம் விசுவாசம் வைத்து அது கூடியதாக்கப்பட்டமுறைக்கு நன்றி மதித்துணர்ந்தால் இதை நாம் வெளிப்படுத்துவோம். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் யெகோவா இயேசுவை எவ்வளவு அதிசயமாய் உபயோகித்தார் என்பதையும் நாமெல்லாரும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது எவ்வளவு இன்றியமையாததென்பதையும் தெளிந்துணர்ந்து, கிறிஸ்தவ ஊழியத்தை நாம் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காரியங்களில் ஒன்றாக்குவோம். கடவுள் கொடுக்கும் இந்த மிக உயர்வான வரத்தைப் பற்றி நாம் உள்ளத்திலிருந்து உறுதியுடன் மற்றவர்களுக்குச் சொல்வதில் நம்முடைய விசுவாசம் வெளிப்படையாய் நிரூபிக்கப்படும்.—அப்போஸ்தலர் 20:24-ஐ ஒத்துப் பாருங்கள்.

14 இவ்வித விசுவாசம் எப்பேர்பட்ட சிறந்த, ஒற்றுமைப்படுத்தும் பாதிப்பை உடையதாயிருக்கிறது! இதன் மூலம் நாம் யெகோவாவிடமும், அவருடைய குமாரனிடமும், கிறிஸ்தவ சபைக்குள் ஒருவர் மற்றவருடனும் நெருங்க இழுக்கப்படுகிறோம். (1 யோவான் 3:23, 24) யெகோவா தயவாகத் தம்முடைய குமாரனுக்கு, “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய ழுழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளின”தற்காக நாம் களிகூரும்படி செய்கிறது.—பிலிப். 2:9-11.

மறு கலந்தாலோசிப்பு

● மேசியா தோன்றினபோது, கடவுளுடைய வார்த்தையை உண்மையில் நம்பினவர்களுக்கு அவரை அடையாங்கண்டுகொள்வது ஏன் எளிதாயிருந்தது?

● 34-ம் பக்கத்தில் விளக்கிக்காட்டியிருக்கிறபடி இயேசுவில் நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசன மாதிரிகள் நம்மை எப்படிப் பாதிக்க வேண்டும்?

● எந்த வழிவகைகளில் இயேசுவின் பலி ஏற்கெனவே நமக்கு நன்மை பயக்குவித்திருக்கிறது? அதற்கு நம்முடைய நன்றியுணர்வை நாம் எப்படிக் காட்டலாம்?

[கேள்விகள்]

1. இயேசு மனிதனாவதற்கு முன்பு வாழ்க்கையைப் பற்றிய உண்மைகள் யெகோவாவுடன் அவருடைய உறவைப் பற்றி என்ன காட்டுகின்றன?

2. எந்த அளவுக்கு பைபிள் தீர்க்கதரிசனங்கள் இயேசுவைக் குறிப்பிடுகின்றன?

3. (எ) ஆதியாகமம் 3:14, 15-ல் உள்ள தீர்க்கதரிசனத்தில், “சர்ப்பம்” “ஸ்திரீ” ‘சர்ப்பத்தின் வித்து’ ஆகிய இந்த ஒவ்வொன்றும் யாரை அல்லது எதைக் குறிப்பிட்டு நிற்கிறது? (பி) ‘சர்ப்பத்தைத் தலையில் நசுக்குவது’ ஏன் யெகோவாவின் ஊழியருக்கு மிகுந்த அக்கறைக்குரியதாக இருக்கும்?

4. இயேசுவின் வம்ச பரம்பரை அவரை வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக அடையாளங் கண்டுகொள்ள எப்படி உதவி செய்தது?

5. இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் தொடக்கத்திலேயே, அவர் மேசியா என்பதை வேறு எதுவும் தெளிவாக்கிற்று?

6. (எ) இயேசுவின் மரணத்துக்குப் பின்பு, அவரைப் பின்பற்றினவர்கள் எதைத் தெரிந்துணர்ந்தார்கள்? (பி) முக்கியமாய் ‘ஸ்திரீயின் வித்து’ யார், அவர் சர்ப்பத்தின் தலையை நசுக்குவது எதைக் குறித்தது?

7. இந்தத் தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டவரை அடையாளங் கண்டு கொள்வதோடு கூட, வேறு எதையும் கவனிப்பது நன்மை பயக்குவதாயிருக்கிறது?

8. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நான்கு தீர்க்கதரிசன மாதிரிகள் இங்கே கவனிக்கப்படுகின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்கள் நம்மை எப்படிப் பாதிக்கின்றனவென்று காட்டுவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் பேரிலும் வேதவசனங்கள் பேரிலும் சிந்தனை செய்யுங்கள். ஒவ்வொன்றாக ஆலோசியுங்கள்.

9. ஏன் இயேசு கிறிஸ்து அல்லாமல் இரட்சிப்பு இல்லை?

10. இயேசுவின் பலி நமக்கு மிகுந்த நன்மை செய்திருக்கிற ஒரு வழிவகையை விளக்குங்கள்.

11. தண்ணீரில் முழுக்காட்டப்படுதல் ஏன் கடவுளிடமாக நல் மனச்சாட்சியை அடைவதில் முக்கியமான அம்சமாக இருக்கிறது?

12. நாம் ஒரு பாவம் செய்துவிட்டதாக உணர்ந்தால், அதைப் பற்றி என்ன செய்ய வேண்டும், ஏன்?

13. (எ) இயேசுவின் பலி நமக்கு நன்மை செய்திருக்கிற மற்றொரு வழிவகையை விளக்குங்கள். (பி) கடவுளுக்குச் செய்யும் நம்முடைய சேவை ஏன் இந்தப் பலனை சம்பாதிக்காது? (சி) ஆனால் நமக்கு உண்மையில் விசுவாசம் இருந்தால் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?

14. இயேசு கிறிஸ்துவில் இப்படிப்பட்ட விசுவாசம் எப்படி ஒற்றுமைப் படுத்தும் பாதிப்பை உடையதாயிருக்கிறது?

[பக்கம் 34-ன் பெட்டி/படங்கள்]

இயேசுவைக் குறித்தத் தீர்க்கதரிசன மாதிரிகள்—இவை உங்களை எவ்வாறு பாதிக்கவேண்டும்?

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுதல்

மோசே கடவுளுடைய பிரதிநிதி பேச்சாளனாக

ஆரோன் பிரதான ஆசாரியனாக

மிருக பலிகள்