Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராகப் போராடுதல்’

‘பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராகப் போராடுதல்’

அதிகாரம் 8

பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராகப் போராடுதல்

பொருள் கொள்கை மனப்பான்மையுடைய ஆட்கள் பொல்லாத ஆவிகளைப் பற்றிய எண்ணத்தை ஏளனஞ் செய்வர். ஆனால் இது சிரிப்புக்குரிய காரியமல்ல. அவர்கள் நம்பினாலும் நம்பாவிடினும், பேய்களின் நடவடிக்கை ஒவ்வொருவர்மீதும் நெருக்கடியைக் கொண்டுவருகிறது. யெகோவாவை வணங்குகிறவர்களும் இதற்கு விதிவிலக்காக இல்லை. உண்மையில், அவர்களே, முக்கிய குறியிலக்காக இருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் போராட்டத்தைக் குறித்து நம்மை எச்சரித்துப் பின்வருமாறு கூறுகிறான்: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, [மாம்சமும் இரத்தமுமுள்ள பகுதியில் இராத] துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12) சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்டு, தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று அறிந்து மிகுந்த கோபாவேசத்துடன் இருப்பதனால் இந்த நெருக்கடி நம்முடைய நாளில் ஒருபோதுமில்லாத உச்சநிலையை எட்டியிருக்கிறது.—வெளி. 12:12.

2 மனித சக்திக்கு மிகமீறிய ஆவி சேனைகளுக்கு எதிரான போராட்டத்தில் நம்மில் எவராவது எப்படி வெற்றிப்பெற முடியும்? யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்திருப்பதன் மூலமே முடியும். நாம் அவருக்குச் செவிகொடுத்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், சாத்தானிய ஆட்சியின் கீழ் இருக்கிறவர்கள் அனுபவிக்கிற உடல்சம்பந்த, ஒழுக்கச் சம்பந்த, உணர்ச்சிவச மற்றும் மனம் சம்பந்த சேதங்களை அனுபவியாதபடி காக்கப்படுவோம்.—எபே. 6:11; யாக். 4:7.

வானமண்டலங்களிலுள்ள லோகாதிபதிகள்

3 யெகோவா கவனிப்பதற்கு அனுகூலமான இடநிலையாகிய பரலோகங்களிலிருந்து தாம் காண்கிற இந்த உலக சூழ்நிலையை உயிர்ப்புள்ள வண்ணமாய் நமக்கு விவரிக்கிறார். அவர் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார், அதில் சாத்தான், “அக்கினிமயமான பெரிய வலுசர்ப்ப”மாக பொ.ச. 1914-ல் கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் பிறப்பிக்கப்பட்டவுடனே, கூடுமானால், அதை விழுங்கிப்போடும்படி தயாராயிருக்கும் நிலையில், படமாகக் குறிக்கப்பட்டுக் காட்டப்பட்டான். இதில் தோல்வியடைந்து, சாத்தான் கடவுளுடைய “ஸ்திரீயின்” வித்தின் துணைப் பகுதியான அந்த ராஜ்யத்தின் காணக்கூடிய பிரதிநிதிகளுக்கு விரோதமாகப் பெரிய வெள்ளம் போன்ற கொடிய எதிர்ப்பை ஏவி விட்டான்.—வெளி 12:3, 4, 13, 17.

4 மனித அரசாங்கங்களின் வல்லமைக்கும் அதிகாரத்துக்கும் ஊற்றுமூலம் யார் என்பதும், யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. 7 தலைகளையும் 10 கொம்புகளையுங்கொண்ட ஒரு கூட்டு மூர்க்க மிருகம் காட்டப்பட்டது, இதற்கு “ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும்” அதிகாரம் இருந்தது. இது ஒரே ஒரு அரசாங்கத்தை அல்ல, முழு பூகோள அரசியல் ஒழுங்குமுறையைக் குறிக்கிறது. “வலுசர்ப்பமானது [பிசாசாகிய சாத்தான்] தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் [மிருகத்துக்கு] கொடுத்தது,” என்று யோவானுக்குத் தெரிவிக்கப்பட்டது. (வெளி. 13:1, 2, 7; லூக்கா 4:5, 6-ஐ ஒத்துப் பாருங்கள்.) அந்த அரசியல் அதிபதிகள் எந்த மதத்தினராகத் தங்களைப் பாராட்டிக் கொண்டாலும் அந்த “மிருகத்தின்” உறுப்பினரான தேசங்களில் ஒருவரும் யெகோவாவின் அரசாட்சிக்கும் அவருடைய நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் தங்களைக் கீழ்ப்படுத்துகிறதில்லை. அவர்கள் எல்லாரும், தங்கள் சொந்த அரசாட்சியை விடாமல் பற்றிக்கொண்டிருக்கப் போராடுகிறார்கள். இன்று, வெளிப்படுத்துதல் காட்டுகிறபடி, “பேய்களால் ஏவப்பட்ட கூற்றுகள்,” அவர்கள் எல்லாரையும் ஹார்-மகெதோனில் “சர்வவல்லமையுள்ள கடவுளுடைய இந்த மகா நாளின் போருக்குக்” கூட்டிச் சேர்க்கின்றன. (வெளி. 16:13, 14, 16) அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினபடி, நிச்சயமாகவே இந்த “லோகாதிபதிகள் [உலக அதிபதிகள்]” வெறும் மனிதரல்ல, “வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளே.” (எபே. 6:12) யெகோவாவின் உண்மையான வணக்கத்தாராகத் தங்களை நிரூபிக்கப்போகிறவர்கள் எல்லாரும் இதன் முழு உட்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

5 மனிதக் குடும்பத்தைப் பிரித்துப்போடும் சண்டை சச்சரவுகள் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையைத் தொடுகின்றன. மக்கள் தாங்கள் ஒரு பாகமாயிருக்கிற அந்தத் தேசத்துடன், கோத்திரத்துடன், மொழி வகுப்புடன் அல்லது சமுதாய வகுப்புடன் வாய்முறையாகவோ மற்றப்படியோ சேர்ந்து ஆதரிப்பது பொதுவாயிருக்கிறது. தற்போது நிகழும் ஏதோ சச்சரவில் தங்களுடைய குறிப்பிட்ட சமுதாயப் பகுதி நேரடியாக உட்பட்டிராத போதிலும், அதில் ஒரு பக்கத்தின் சார்பாக ஆதரவு காட்டுகிறவர்களாய்த் தங்களைக் காண்பார்கள். அவர்களுடைய மனக்குறை அவர்கள் ஆதரிக்கும் ஆள் அல்லது காரணம் யாராக அல்லது என்னவாக இருந்தாலும் சரி, அவர்கள் எதை உண்மையில் ஆதாரிக்கிறார்கள்? “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. (1 யோவான் 5:19) அப்படியானால், மனிதவர்க்கத்தின் மற்ற எல்லாருடனும் மோசம்போக்கப்படுவதை ஒருவன் எப்படித் தவிர்க்கலாம்? கடவுளுடைய ராஜ்யத்துக்குத் தன் முழு ஆதரவையும் கொடுத்து, இந்த உலகத்தின் கட்சி பிரிவுகளுக்கிடையில் உண்டாகும் சண்டை சச்சரவுகளில் முழுநடுநிலை வகிப்பதன் மூலமே தவிர்க்க முடியும்.—யோவான் 17:15, 16.

பொல்லாங்கனுடைய மறைமுக சூழ்ச்சிகள்

6 சரித்திரத்தில் எல்லாக் காலப் பகுதிகளிலும் சாத்தான், தனியாட்களை உண்மையான வணக்கத்திலிருந்து விலகிப்போகச் செய்ய வாய்முறையான மற்றும் உடல் சார்ந்த துன்புறுத்தலைப் பயன்படுத்தியிருக்கிறான். என்றாலும் தந்திரச் செயல்கள், மறைமுக சூழ்ச்சிகள் போன்ற அதிக இரண்டகமான இரகசிய வழிவகைகளையும் அவன் உபயோகித்திருக்கிறான்.

7 மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையரை அவன், பொய் மதத்தின் மூலமாய் இருளில் வைத்திருக்கிறான், அவர்களுக்கு விருப்பமானால், தாங்கள் கடவுளைச் சேவிப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும்படி விட்டிருக்கிறான். சத்தியத்தின்பேரில் உண்மையான அன்பு இல்லாததனால், அவர்கள் புதிர்நிலையான மற்றும் உணர்ச்சிவசமான மத ஆராதனைகளால் கவர்ந்திழுக்கப்படலாம் அல்லது வல்லமைவாய்ந்த செயல்களால் மனங்கவரப்படலாம். (2 தெச. 2:9, 10) எனினும் உண்மையான வணக்கத்தில் பங்குகொண்டவர்களுக்குள்ளிருந்தும், “சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்,” என்று நமக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. (1 தீமோ. 4:1) இது எப்படி நடக்கும்?

8 மறைமுகமாய் பிசாசானவன் ஒருவரின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறான். மனிதருக்குப் பயப்படுகிற பயம் அவனை இன்னும் பற்றியிருக்கிறதா? அப்படியானால், அவன் பொய் மதத்தில் தோன்றியுள்ள பழக்க வழக்கங்களில் பங்குகொள்ளும்படி தூண்டும் உறவினரின் அல்லது அயலகத்தாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிப்போகலாம். அவன் பெருமையுள்ளவனா? அப்படியானால் தனக்கு அறிவுரை கொடுக்கப்படுகையில் அல்லது தான் கொடுக்கிற ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்காத போது அவன் கோபமடைந்து எதிர்த்துத் தாக்கலாம். (நீதி. 29:25; 15:10; 1 தீமோ. 6:3, 4) அவன் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதன் நோக்கம் அன்பால் தூண்டப்பட்டில்லை என்றால் எப்படி? கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு ஒத்திருக்கத் தன் நோக்குநிலையைத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்வதற்குப் பதிலாக, வெறுமென பைபிளை வாசிப்பதும் “நல் வாழ்கை” நடத்துவதும் போதுமானதென்று சொல்லி ‘செவிதினவுண்டாக்குகிற’வர்களிடமாக அவன் மனம்சாயலாம். (2 தீமோ. 4:3) அவன் மற்றொரு மதத் தொகுதியை உண்மையில் சேர்ந்துகொள்கிறானா அல்லது பெயரளவில் தன்னுடைய சொந்த மதத்தை வெறுமென பற்றிக் கொண்டிருக்கிறானா என்பது சாத்தானுக்கு முக்கியமாக இல்லை, கடவுள் தம்முடைய வார்த்தையின் மூலமும் தம்முடைய அமைப்பின் மூலமும் குறிப்பிட்டுக் காட்டுகிற வழி முறையில் அவன் யெகோவாவை வணங்காதிருக்கும் வரையில் சாத்தான் திருப்தியுடனிருக்கிறான்.

9 மேலும் இயல்பான விருப்பங்களைத் தவறான வழிகளில் திருப்தி செய்து கொள்ளவும் சாத்தான் மக்களைத் தந்திரமாய்க் கவர்ச்சியூட்டி சிக்க வைக்கிறான். பாலுறவு சம்பந்தப்பட்ட நெருங்கிய பழக்கங்களுக்கான ஆசையைக் குறித்ததில் அவன் இவ்வாறு செய்திருக்கிறான். பைபிளில் குறிப்பிட்டுள்ள ஒழுக்க நெறியைத் தள்ளிவிட்டு, உலகத்திலுள்ள பலர், திருமணமாகாத ஆட்கள் பாலுறவு கொள்வதை நியாயமான இன்பமாக அல்லது தாங்கள் வயதுவந்தவர்களென நிரூபிப்பதற்கு வழி என்பதாகக் கருதுகின்றனர். மணமாகிய ஆட்களைப் பற்றியதென்ன? மணவாழ்க்கையில் பிரச்னைகளை அனுபவிக்கிற உலகப்பிரகாரமான மக்கள், திருமணவிலக்கு செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வது அல்லது வெறுமென பிரிந்துபோய் மற்றொரு துணையோடு வாழ்வது அசாதாரணமாயில்லை. இந்த வகையான வாழ்க்கையை நாம் கவனிக்கையில், நாம் எதையோ இழந்துவிடுகிறோமென்றும், கிறிஸ்தவ முறை மட்டுக்கு மீறி கண்டிப்பாக இருக்கிறதென்றும் உணருகிறோமா? நன்மையான ஏதோவொன்றை யெகோவா கொடாமல் வைத்துக் கொள்வதாக ஒருவர் எண்ணும்படி செய்வதே சாத்தானுடைய இரண்டகமான அணுகுதலாகும். பின்னால் நமக்கும் மற்றவர்களுக்கும் உண்டாகக் கூடிய நீண்டகால பலனைப் பற்றியல்ல, மேலும் நிச்சயமாகவே யெகோவாவுடனும் அவருடைய குமாரனுடனும் நமக்கிருக்கும் உறவைப் பற்றியுமல்ல—இப்பொழுதே நமக்கு வரக்கூடிய இன்பத்தைப் பற்றிச் சிந்திக்கும்படியே அவன் நம்மைத் துரிதப்படுத்துகிறான்.—கலாத். 6:7, 8; 1 கொரி. 6:9, 10.

10 மற்றொரு இயல்பான விருப்பம் இன்பப் பொழுதுபோக்காகும். இது சுகத்துக்கு உகந்ததாயிருக்கையில் உடலுக்கும் மனதுக்கும் உணர்ச்சிக்கும் புத்துயிரளிக்கலாம். ஆனால் நாம் தளர்ந்து ஓய்ந்திருக்கும் சமயங்களைச் சாத்தான், நம்முடைய சிந்தனையைக் கடவுளிடமிருந்து உறவு தொலைவாக்குவதற்குத் தந்திரமாய்ப் பயன்படுத்த முயலுகையில் நம்முடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறது? உதாரணமாக, வன்முறையை நேசிக்கிறவர்களை யெகோவா வெறுக்கிறாரென்று நமக்குத் தெரியும். (சங். 11:5) ஆனால் டெலிவிஷனில் அல்லது நாடகக் கொட்டகையில் திரைபடங்கள் வன்முறையைக் காட்டுகையில் நாம் சங்கட உணர்ச்சியில்லாமல் உட்கார்ந்து எல்லாவற்றையும் மனதில் உட்கொள்ளுகிறோமா? அல்லது விளையாட்டுப் போட்டியின் பெயரில் அது காட்டப்படுகையில், நாம் அதை ஏற்று, ஒருவேளை பங்குகொள்ளுகிறவர்களுக்கு ஊக்கச் சொற்களைக் கூறி ஆர்ப்பரிக்கிறோமா?.—ஆதியாகமம் 6:13-ஐ ஒத்துப் பாருங்கள்.

11 மேலும், குறிசொல்லுதல், பில்லி சூனியத்தில் ஈடுபடுதல் அல்லது மரித்தோருடன் தொடர்புகொள்ள முயலுதல் ஆகியவற்றைப் போன்ற எவ்வகையான ஆவிக்கொள்கையில் உட்படுகிறவர்களும் ‘யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்’ என்று நாம் தெரிந்திருக்கிறோம். ஆவி மத்தியஸ்தர்களிடம் தகவல் கேட்க நாம் எண்ணமாட்டோம், அவர்களுடைய பேய்த்தன மந்திர வித்தைகளை அப்பியாசிக்க அவர்களை நம்முடைய வீட்டுக்குள் நிச்சயமாகவே வரவழைக்கமாட்டோம். எனினும் அவர்கள் நம்முடைய டெலிவிஷன் திரையில் தோன்றினால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டு, செய்வதைக் கவர்ச்சியுடன் கவனிப்போமா? சூனியக்காரனிடமிருந்து நாம் ஒருபோதும் சிகிச்சைப் பெறமாட்டோமென்றாலும், புதிதாகப் பிறந்த நம்முடைய குழந்தையின் கையில் நாம் ஒரு நூற்கயிறைக் கட்டி, அது ஏதோ ஒரு வகையில் அந்தப் பிள்ளையைத் தீங்கிலிருந்து பாதுகாக்குமென்று எண்ணுவோமா? அல்லது மற்றவர்களுக்கு “சூனியம்” வைப்பதை பைபிள் கண்டனம் செய்கிறதென்று அறிந்தும், சிறிது நேரத்துக்கென்றாலும், அறிதுயிலூட்டுபவன் நம்முடைய மனதை அடக்கியாள நாம் அனுமதிப்போமா?—உபா. 18:10-12, தி.மொ.; கலாத். 5:19-21.

12 தகாத உள்நோக்கத்துடன், “வேசித்தனம் சகலவித அசுத்தம் ஆகிய இவற்றின் பேர் முதலாய் உங்களுக்குள் சொல்லப்படவுங் கூடாது,” என்று வேத எழுத்துக்களில் நாம் வாசித்திருக்கிறோம். (எபே. 5:3-5) ஆனால் இத்தகைய விஷயப் பொருள்கள், இன்னிசையில் விரும்பத்தக்க இராகத்திலும், கவர்ந்திழுக்கும் தாளத்துடனும் அல்லது விடாது அடுத்தடுத்துத் தட்டும் தாளத்துடனும் சேர்ந்திணைந்து வரும்படி திறமையுடன் செய்யப்பட்டிருந்தால் நாம் என்ன செய்வோம்? திருமணமில்லாத பாலுறவையும், இன்பத்துக்காகப் போதை பொருட்களைப் பயன்படுத்துவதையும் இன்னும் பலவற்றையும் போற்றிப் புகழும் கீர்த்தனைகளை நம்மையறியாமலே பாடிக்கொண்டிருக்கத் தொடங்குவோமா? அல்லது, இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிற ஆட்களின் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றக் கூடாதென்று அறிந்திருக்கிற போதிலும், அவர்கள் உடை உடுத்தும் முறையையோ சிகையலங்காரத்தையோ அவர்கள் பேசும் முறையையோ பின்பற்றுவதன் மூலம் நாம் நம்மை அவர்களோடு அடையாளங் கண்டுகொள்ளச் செய்யும், போக்கில் மனம் சாய்கிறோமா? சாத்தான் எவ்வளவு தந்திரமுள்ளவன்! தன்னுடைய சொந்த சீர்கெட்ட மனதுக்கு இசைவாக வரும்படி மனிதரைக் கவர்ச்சியூட்டி இழுக்க அவன் பயன்படுத்தும் முறைகள் எவ்வளவு வஞ்சகமுள்ளவை! (2 கொரி. 4:3, 4) அவனுடைய மறைமுகமான படுசூழ்ச்சிகளுக்கு இரையாகாதபடி நம்மை வைத்துக் கொள்ள இந்த உலகம் போகும் போக்கில் அதோடு சென்றுகொண்டிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும். “இவ்வந்தகாரத்தின் லோகாதிபதிகள்” யார் என்பதை நாம் மனதில் வைத்து அவர்களுடைய செல்வாக்குக் கெதிராக ஊக்கமாய்ப் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.—எபே. 6:12, தி.மொ.; 1 பேதுரு 5:8.

ஜெயிப்பவர்களாக இருக்க போர்க்கலம் தரித்தல்

13 இயேசு, தாம் மரிப்பதற்கு முன்னால் தம்முடைய அப்போஸ்தலரிடம்: “திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்,” என்று கூறினார். அவ்வாறே, அவர்களும் ஜெயிப்பவர்களாக இருப்பார்கள்; 60-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பின்னால் அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுதினான்: “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?” (யோவான் 16:33; 1 யோவான் 5:5) இப்படிப்பட்ட விசுவாசம் நாம் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழப்படிவதன் மூலமும், இயேசு தாமே செய்ததுபோல் கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பதன் மூலமும் காட்டப்படுகிறது. வேறு எதுவும் தேவை? அவர் தலையாயிருக்கிற அந்தச் சபையுடன் நாம் நெருங்கி நிலைத்திருக்கவேண்டும். தவறு செய்கையில், நாம் ஊக்கமாய் மனஸ்தாபப்பட்டுத் திரும்பி இயேசுவின் பலியின் ஆதாரத்தின்பேரில் கடவுளுடைய மன்னிப்பைத் தேட வேண்டும். இவ்வாறு, நம்முடைய அபூரணங்களின் மத்தியிலும், நாமும் ஜெயிக்கிறவர்களாக இருக்கக்கூடும்.

14 வெற்றிபெற, நாம் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ள” வேண்டும், அதன் எந்தப் பாகத்தையும் கவனியாமல் விட்டுவிடக்கூடாது. உங்கள் பைபிளில் எபேசியர் 6:13-18-க்குத் தயவு செய்து திருப்பி இந்தப் போராயுதவர்க்கத்தின் விவரிப்பை வாசியுங்கள். பின்பு, கீழுள்ள கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம், அந்த ஒவ்வொரு போராயுதமும் அளிக்கும் பாதுகாப்பிலிருந்து நீங்கள் எப்படி நன்மையடையலாம் என்பதை ஆழ்ந்து கவனியுங்கள்.

“சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்”

சத்தியம் நமக்கு ஒருவேளை தெரிந்திருந்தாலும், தவறாமல் ஒழுங்காய்ப் படிப்பதும், பைபிள் சத்தியத்தின் பேரில் தியானிப்பதும், கூட்டத்துக்கு வருவதும் நம்மை எப்படிப் பாதுகாக்கின்றன? (பிலிப். 3:1; 4:8, 9; 1 கொரி. 10:12, 13; 2 கொரி. 13:5; 1 பேதுரு 1:13 kingdom Interlinear)

“நீதியென்னும் மார்க்கவசம்”

இந்த நீதியின் தராதரம் யாருடையது? (வெளி. 15:3)

யெகோவாவின் வழிகளை நேசிப்பதைத் தன்னில் வளர்க்கத் தவறுவதனால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற் போவது எப்படி ஒருவனை பெரும் ஆவிக்குரிய தீங்குக்குள்ளாகும் நிலையில் வைக்குமென்பதை உதாரணத்தைக் கொண்டு விளக்குங்கள். (1 சாமுவேல் 15:22, 23; உபாகமம் 7:3, 4பாருங்கள்.)

“சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்”

கடவுளுடைய சமாதான ஏற்பாடுகளைப்பற்றி ஜனங்களிடம் பேசுவதற்கு நம்மைக் கொண்டுசெல்ல நம்முடைய பாதங்களைச் சுறுசுறுப்பாய் வைத்திருப்பது எப்படி நமக்குப் பாதுகாப்பாயிருக்கிறது? (ரோமர் 10:15; சங். 73:2, 3; 1 தீமோ. 5:13)

“விசுவாசமென்னும் [பெரிய, NW] கேடகம்” 

உறுதியாய் ஆதாரங்கொண்ட விசுவாசம் நமக்கு இருந்தால், சந்தேகமோ பயமோ கொள்ளும்படி நம்மைச் செய்விக்கக் கருதப்பட்ட முயற்சிகளுக் கெதிரில் நாம் எப்படிப் பிரதிபலிப்போம்? (ஒத்துப்பாருங்கள் 2 தீமோத்தேயு 1:12; 2 இராஜாக்கள் 6:15-17)

“இரட்சணியமென்னும் தலைச்சீரா”

பொருளுடைமைகளில் மட்டுக்குமீறி கவலைகொள்வதனால் கண்ணியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க இரட்சிப்பின் நம்பிக்கை ஒருவருக்கு எப்படி உதவி செய்கிறது? (1 தீமோ. 6:7-10, 19)

“ஆவியின் பட்டயம்”

நம்முடைய அல்லது மற்றவர்களுடைய ஆவிக்குரிய தன்மைக்கு விரோதமான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகையில் நாம் எப்பொழுதும் எதன் மேல் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்? (சங். 119:98; நீதி. 3:5, 6; மத்தேயு 4:3, 4-ஐ ஒத்துப் பாருங்கள்.)

இதற்குப் பொருந்த எபேசியர் 6:18, 19-ல், ஆவிக்குரிய போரில் வெற்றிபெறுவதற்கு வேறு எதுவும் இன்றியமையாததென்று காட்டியிருக்கிறது? இது எவ்வளவு அடிக்கடி பிரயோகிக்கப்படவேண்டும்? யாருடைய சார்பாக?

15 கிறிஸ்தவ போர்வீரராக நாம், ஆவிக்குரிய போரில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய சேனையின் பாகமாக இருக்கிறோம், நாம் எச்சரிக்கையாய் விழிப்புடனிருந்து கடவுள் கொடுத்திருக்கும் சர்வாயுதவர்க்கத்தை நன்றாய்ப் பயன்படுத்தினால், இந்தப் போரில் நாம் சாவு காயப்படுகிறவர்களாகமாட்டோம். அதற்குப் பதிலாக நம்முடன் உழைக்கும் கடவுளுடைய ஊழியரைப் பலப்படுத்துவதற்கு உதவியாக நாம் இருப்போம். சாத்தான் கடும் மூர்க்காவேசத்துடன் எதிர்க்கும் அரசாங்கமாகிய கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரவச் செய்வதன் மூலம் நாம் முதல் சென்று தாக்க ஆயத்தமாயும் ஆர்வத்துடனும் இருப்போம்.

மறு கலந்தாலோசிப்பு

● இவ்வுலகப் பகுதிகளுக்கிடையில் உண்டாகும் சண்டை சச்சரவுளைக் குறித்ததில், யெகோவாவை வணங்குகிறவர்கள் ஏன் முழு நடுநிலை வகிப்பைக் காத்துவர பிரயாசப்படுகிறார்கள்?

● கிறிஸ்தவர்களை ஆவிக்குரிய அழிவுக்குக் கொண்டுவர சாத்தான் உபயோகிக்கும் மறைமுக சூழ்ச்சிகள் சில யாவை?

●கடவுள் அளித்திருக்கும் போராயுதவர்க்கம் இந்த ஆவிக்குரிய போராட்டத்தின் நெருக்கடியான வழிகளில் நம்மை எப்படிப் பாதுகாக்கிறது?

[கேள்விகள்]

1. பொல்லாத ஆவிகளின் நடவடிக்கை நமக்கு ஏன் முக்கிய கவனத்துக்குரியது?

2. மனித சக்திக்கு மிகமீறிய ஆவிகளுக்கு எதிராக நாம் எப்படி வெற்றிகரமாய்ப் போராட முடியும்?

3. சாத்தான் எதை அல்லது யாரைக் கொடிய பகையுடன் எதிர்க்கிறான்?

4. (எ) மனித அரசாங்கங்களுடைய வல்லமையின் ஊற்றுமூலத்தைப் பற்றிய என்ன விஷயத்தைக் குறித்து பைபிள் நம்மை எச்சரிக்கிறது? (பி) எல்லா அரசியல் அதிபதிகளும் இப்பொழுது எதற்குக் கூட்டப்படுகிறார்கள், யாரால்?

5. சாத்தானிய ஒழுங்கு முறையை ஆதரிப்பதற்குத் தந்திரமாய் ஏமாற்றி வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க ஏன் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது?

6. ஆட்களை உண்மையான வணக்கத்திலிருந்து விலகிப்போகச் செய்ய சாத்தான் உபயோகித்திருக்கிற வழிவகைகளுக்குள் அடங்கியவை எவை?

7. சாத்தான் பொய் மதத்தைப் பயன்படுத்தியிருக்கும் முறையில் அவனுடைய வஞ்சனையான சூழ்ச்சி எப்படித் தெரியவருகிறது?

8. யெகோவாவை வணங்கி வந்த சிலரையுங்கூட சாத்தான் எப்படிப் பொய் மதத்திற்குள் வஞ்சகமாய்க் கவர்ந்திழுத்திருக்கிறான்?

9. சாத்தான் தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எப்படித் தந்திரமாய்ப் பாலுறவைப் பயன்படுத்துகிறான்?

10. எந்த வழிவகைகளைக் கொண்டு வன்முறையினிடம் நம்முடைய மனப்பான்மையை நிலைக்குலைவிக்கச் சாத்தான் முயற்சி செய்கிறான்?

11. ஆவிக்கொள்கை உண்மையில் என்னவென்று தெரிந்திருக்கிற ஆளுங்கூட, எச்சரிக்கையாயிராவிட்டால் என்ன வழிகளில் சிக்க வைக்கப்படலாம்?

12. (எ) தவறு என்று நாம் தெரிந்திருக்கிற எண்ணங்களை நம் மனதில் ஏற்று மகிழ வைக்க இன்னிசை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? (பி) ஒருவருடைய உடை, சிகை அலங்காரம் அல்லது பேச்சு நடை எப்படி யெகோவா கண்டனம்பண்ணுகிற வாழ்க்கை நடை பாணியைப் பின்பற்றுவோரைப் போற்றுவதைச் சுட்டிக் காட்டும்? (சி) சாத்தானின் வஞ்சக படுசூழ்ச்சிகளுக்கு இரையாவதை தவிர்க்க நம் பங்கில் நாம் என்ன செய்ய வேண்டும்?

13. சாத்தான் ஆளுகிற இவ்வுலகத்தை, நம்முடைய அபூரணங்களின் மத்தியிலும் ஜெயிப்பது, நம்மில் எவருக்கும் எப்படிச் சாத்தியமாயிருக்கிறது?

14. (எ)  எபேசியர் 6:13-18-ஐ வாசியுங்கள். (பி) ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் அடையும் பலன்களைக் கலந்தாராய்வதற்கு, ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களையும் கேள்விகளையும் பயன்படுத்துங்கள்.

15. (எ) நாம் எல்லாரும் செய்யும் போர் வெறுமென அவரவரின் அவிக்குரிய போர்தானா? (பி) இந்தப் போரில் நாம் எப்படி முதல் சென்று தாக்கக்கூடும்?