Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசேயின் நியாயப்பிரமாணம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது

மோசேயின் நியாயப்பிரமாணம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது

அதிகாரம் 19

மோசேயின் நியாயப்பிரமாணம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது

புறஜயாதி கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாண கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கடைமைப்பட்டிருந்தார்களா என்பதே அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் மிகக் கடுமையாய்த் தர்க்கிக்கப்பட்ட விவாதமாகும். பொ.ச. 36-ல் விருத்தசேதனஞ் செய்யப்படாத புறஜாதியார்மேல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது உண்மையே. ஆனால், புறஜாதி சீஷர்கள் விருத்தசேதனஞ் செய்யபடவேண்டுமென்றும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்வதற்குக் கற்பிக்கப்பட வேண்டுமென்றும், யூத பிறப்பு வளர்ப்புடைய கிறிஸ்தவர்கள் சிலர் கண்டிப்பாக உணர்ந்தனர். அந்த நியாயப்பிரமாணத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கைக்கொள்வது அவர்களுக்கு உண்மையில் அவசியமாயிருந்ததா? பொ.ச. 49-ல் இந்த விவாதம் எருசலேமிலிருந்த நிர்வாகக் குழுவினிடம் கொண்டுபோகப்பட்டது.—அப். 10:44-48; 15:1, 2, 5.

2 இதன் முடிவு நமக்கு ஆழ்ந்த அக்கறைக்குரியது. ஏன்? ஏனென்றால், கிறிஸ்தவர்கள், ஓய்வு நாள் கைக்கொள்ளுதல் போன்ற நியாயப்பிரமாணத்தின் சில கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று வாதாடும் ஆட்களை நாம் சில சமயங்களில் சந்திக்க நேரிடுவது மட்டுமல்லாமல், “நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது,” என்று பைபிளில் தானேயும் சொல்லப்பட்டிருக்கிறது. (ரோமர் 7:12) மோசே, நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தனாக இருந்ததனால் அது மோசேயின் நியாயப்பிரமாணம் என்று குறிப்பிடப்படுகிற போதிலும், அந்த நியாயாப்பிரமாணத் தொகுப்பு யெகோவா தேவனிடமிருந்தே தோன்றினது.—யாத். 24:3, 8.

நியாயப்பிரமாணம் எதற்கு?

3 இன்று இந்த நியாயப்பிரமாணத்தை நாம் கருதும் முறை, யெகோவா இஸ்ரவேலுக்கு ஒரு சட்டத் தொகுப்பைக் கொடுத்தக் காரணத்தை நாம் விளங்கிக்கொள்வதால் பாதிக்கப்படுகிறது. வேத எழுத்துக்களில் பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்படுகிறது: “வாக்குத்தத்தத்திற்குரிய சந்ததி வருமளவும் அது மீறுதல்கள் நிமித்தமாகக் [மீறுதல்களை வெளிப்படுத்திக்காட்ட, NW] [ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையோடு] கூடச் சேர்க்கப்பட்”டது. “ஆதலால், நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடம் வழிநடத்துகிற உபாத்தியானது.” (கலாத். 3:19, 24, தி.மொ.) நியாயப்பிரமாணம் இதை எப்படிச் செய்தது?

4 வாழ்க்கையின் பற்பல அம்சங்களில் பரிபூரண மாதிரியை நியமிப்பதன் மூலம், யூதர்களைப் பாவிகளென அது வெளிப்படுத்திக் காட்டியது. நல்ல உள்நோக்கங்களும் ஊக்கமான முயற்சிகளும் இருந்தாலும் அதன் தேவைகளை அவர்கள் எட்ட முடியவில்லை என்பது தெளிவாயிற்று. அபூரண மனித குடும்பத்தின் மாதிரியாக யூதர்களைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணம், நம் ஒவ்வொருவரும் உட்பட உலகமுழுவதையும் பாவிகளெனவும், கடவுளுடைய தண்டனைக்குப் பாத்திரரெனவும் வெளிப்படுத்திக் காட்டினது. (ரோமர் 3:19, 20) இவ்வாறு மனிதவர்க்கத்துக்கு ஒரு மீட்பர், தேவையென அறிவுறுத்தி உண்மையுள்ளவர்களை அந்த மீட்பராகிய இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினது. எவ்வகையில்? நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாய்க் கைக்கொண்ட ஒரே ஒருவர் அவரே, இவ்வாறு பாவமில்லாத ஒரே மனிதன் அவரே என்று அது அவரை அடையாளங்காட்டிற்று. நியாயப்பிரமாணத்தின் கீழ் செலுத்தப்பட்ட மிருக பலிகளுக்கு, மட்டுப்பட்ட மதிப்பே இருந்தது; ஆனால் இயேசு, பரிபூரண மனிதனாக, செயலில் விசுவாசங்காட்டுகிற யாவருக்கும் பாவத்தை உண்மையில் நீக்கி நித்திய ஜீவனுக்கு வழியைத் திறந்து வைக்கும் பலியாகத் தம்முடைய உயிரைச் செலுத்த முடிந்தது.—யோவான் 1:29; 3:16; 1 பேதுரு 1:18, 19.

5 இந்தப் பின்சூழலை மனதில் வைத்து, பின்வரும் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிப்பீர்கள்?

மோசேயின் நியாயப்பிரமாணம் மனிதவர்க்கம் முழுவதும் கைக் கொள்ளும்படி எப்பொழுதாவது கருதப்பட்டதா? (சங். 147:19, 20; யாத். 31:12, 13)

ஏதோவொரு நாள் இந்த நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவடையுமென்ற ஏதாவது அறிகுறியை யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுத்தாரா? (எரே. 31:31-33; எபி. 8:13)

நியாயப்பிரமாணத்தின் மீதிபாகமெல்லாம் கிறுக்கி நீக்கப்பட்ட பின்பு வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படியான கட்டளை உட்பட பத்துக் கற்பனைகள் நடப்புநிலையில் தொடர்ந்திருந்தனவா? (கொலோ. 2:13, 14, 16; 2 கொரி. 3:7-11 [யாத்திராகமம் 34:28-30-ல் தெளிவாக்கப்பட்டபடி]; ரோமர் 7:6, 7)

எந்த வழிவகையின் மூலமாய் யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கையை அதன் முடிவுக்குக் கொண்டுவந்தார்? (கொலோ. 2:13-17; மத். 5:17, 18; ரோமர் 10:4)

6 இதன் உதவியைக் கொண்டு பார்க்கையில், மோசேயின் நியாயப்பிரமாணம் இன்னும் நடப்புநிலையில் இருக்கிறதென்று விவாதிப்பது எதைக் குறிப்பாக உணர்த்துகிறது? உண்மையில் இது இயேசு கிறஸ்துவில் விசுவாசத்தை மறுதலிப்பதைக் குறிக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் இப்படிப்பட்ட கருத்து, இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, இவ்வாறு கடவுள் அதை முடிவு செய்வதற்கு வழியுண்டாக்கினார் என்ற உண்மையை உதறித் தள்ளுகிறது. கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டி, ஆனால் நியாயப்பிரமாணத்தை அல்லது அதன் சில பாகத்தைக் கைக்கொள்வதன் சார்பில் தர்க்கிக்கப்பட்ட விவாதங்களால் மனம் ஊசலாட விட்ட ஆட்களுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிப்பான உறுதியுடன் பின்வருமாறு எழுதினான்: “நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று [தகுதியற்றத் தயவிலிருந்து, NW] விழுந்தீர்கள்.”—கலாத். 5:4; ரோமர் 10:2-4-ஐயும் பாருங்கள்.

7 நியாயப்பிரமாணத்தின் சில பகுதிகள் தொடர்ந்திருக்க வேண்டுமென விவாதிக்கிறவர்கள், கடவுளுடன் நீதியுள்ள நிலைநிற்கையை, ஒருவனின் நியாயப்பிரமாணச் செயல்களில் அல்ல, இயேசுவின் பலியின் விலைமதிப்பில் அவன் விசுவாசம் வைப்பதின் பேரிலேயே சார்ந்திருக்கிறதென்பதை முழுமையாய் மதித்துணருகிறதில்லை. (கலாத். 3:11, 12) இத்தகைய செயல்களால் ஒருவன் தன்னை நீதியுள்ளவனாக நிரூபிக்க வேண்டுமென அவர்கள் உணருகின்றனர்—இது பாவமுள்ள மனிதருக்குக் கூடாதக் காரியம். கடவுளும் கிறிஸ்துவும் கொடுக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலாக, கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிற செயல்களைச் செய்வது நிச்சயமாகவே முக்கியம். (யாக். 2:15-17; மத். 28:19, 20) இவை, நம்முடைய அன்பையும் விசுவாசத்தையும் மெய்ப்பித்துக் காட்டும் வழிவகைகள். இவை இல்லாமை நம்முடைய விசுவாசம் செத்ததைக் குறிக்கும். ஆனால் நாம் எவ்வளவு கடினமாய் உழைத்தாலும் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது. இயேசு கிறஸ்துவின் பலி இல்லாமல் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்பு இல்லை. இவ்வாறு நித்திய ஜீவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் கொடுக்கும் ஈவு, அசாதாரண தகுதியற்றத் தயவின் ஒரு வெளிக்காட்டு, நம்முடைய செயல்களுக்குச் சம்பளம் அல்ல.—எபே. 2:8, 9; ரோமர் 3:23, 24; 6:23.

8 புறஜாதி கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமா என்ற விவாதம், எருசலேமிலிருந்த முதல் நூற்றாண்டு நிர்வாகக் குழுவினிடம் கொண்டுவரப்பட்டபோது, அவர்களுடைய தீர்ப்பு இந்த உண்மை விஷயங்களுக்கு ஒத்திருந்தது. புறஜாதி விசுவாசிகளின் மீது பரிசுத்த ஆவியை ஊற்றுவதற்கு முன்பு, அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியும் செயல்களை நடப்பிக்க வேண்டுமென்று யெகோவா கேட்கவில்லை என்பதை அவர்கள் கண்டுணர்ந்தார்கள். நிர்வாகக் குழுவின் தீர்ப்பு விலகியிருக்கும்படி கட்டளையிட்ட “அவசியமான” காரியங்களில் சில நியாயப்பிரமாணத்துக்கு ஒத்திருந்தன, ஆனால் இவை நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதற்கு முந்தின காலத்தில் நடந்த, பைபிளில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் பேரில் ஆதாரங் கொண்டிருந்தன. ஆகவே மோசேயின் நியாயப்பிரமாணத்தை அல்லது அதன் ஏதோ ஒரு பாகத்தைக் கைக்கொள்ளும் படியான பொறுப்பு புறஜாதி கிறிஸ்தவர்களின் பேரில் சுமத்தப்படவில்லை, ஆனால், அதைப் பார்க்கிலும், மோசேயின் காலத்துக்கு முன்னால் ஒப்புக் கொள்ளப்பட்ட தராதரங்களுக்கு ஒத்திருந்த கட்டளைகளே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.—அப். 15:28, 29; ஆதியாகமம் 9:3, 4; 34:2-7; 35:2-5 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.

9 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின், யூதர்கள்தாமேயும் இனிமேலும் மோசேயின் நியாயப்பிரமாண தொகுப்பைக் கைக்கொள்ளும்படி கடவுள் கேட்கவில்லை. விசுவாசங்காட்டின யூதர்கள் இதில் களிகூருவதற்கு விசேஷித்தக் காரணம் தங்களுக்கிருப்பதைக் கண்டார்கள். ஏன்? புறஜாதிகளும் பாவிகளாதலால் மரித்தார்கள், ஆனால் யூதர் மாத்திரமே நியாயப்பிரமாண உடன்படிக்கையை மீறினதன் காரணமாகக் கடவுளுடைய சாபத்துக்குட்பட்டார்கள். கிறஸ்துமரித்த வகையினால்—சபிக்கப்பட்ட குற்றவாளியைப் போல் கழுமரத்தில் அறையப்பட்டதனால்—தம்மில் விசுவாசம் வைக்கும் யூதர்களின் இடத்தைத் தாம் ஏற்று, அவர்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாததன் விளைவாக வருவித்துக்கொண்ட தண்டனையிலிருந்து அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவந்தார். (கலாத். 3:10-13) இவ்வாறு, அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் ஒருபோதும் அடைந்திருக்க முடியாத மன்னிப்பை அவர்களுக்கு ஏற்பாடு செய்தார்.—அப். 13:38, 39.

10 நியாயப்பிரமாணம் உண்மையில், யூதர்களைப் புறஜாதியாரிடமிருந்து விலக்கி வைத்தது. புறஜாதிகளுக்குப் பொருந்தாத கட்டளைகள் யூதருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன, விருத்தசேதனஞ் செய்யப்படாத புறஜாதியார் யூதருடன் அவர்கள் வணக்கத்தில் முழுமையாய்ப் பங்குகொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டனர். (யாத்திராகமம் 12:48; அப்போஸ்தலர் 10:28-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால் நியாயப்பிரமாணம் அதன் நோக்கத்தை நிறைவேற்றி அது விலக்கப்பட்டவுடன், யூதரும் விருத்தசேதனஞ் செய்யப்படாத புறஜாதியாரும் கிறிஸ்துவின் மூலம், ஒரே உண்மையான கடவுளின் வணக்கத்தில் ஒற்றுமைப்படக்கூடியதாயிருந்தது.—எபே. 2:11-18.

நியாயப்பிரமாணத்தைப் பற்றிய அறிவு நமக்கு நன்மை பயக்குகிறது

11 இன்று நாம் நியாயப்பிரமாணத்தின் கீழிராத போதிலும், அதைப் பற்றிய அறிவு நம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த நன்மை பயக்குகிறது. எவ்வகையில்? இயேசு யூதத் தாய்க்குப் பிறந்து மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் வந்தார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். நியாயப்பிரமாணம் கட்டளையிட்டவற்றைப் பற்றி அறிந்திருந்தால் மாத்திரமே, அவர் செய்த சில காரியங்களை நாம் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியும். (கலாத். 4:4; லூக்கா 22:7, 8) மேலும் நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஜனங்களுக்குள்ளே அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆகவே அவருடைய போதகங்கள் அடிக்கடி நியாயப்பிரமாணம் சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகளின் பேரில் அமைக்கப்பட்டன.—மத்தேயு 5:23, 24-ஐ ஒத்துப் பாருங்கள்.

12 தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், இயேசு நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்டிருந்தக் காரியங்களை, மனிதனாக நடத்தின தம்முடைய வாழ்க்கை நிறைவேற்றினதென தம்முடைய சீஷருக்கு நினைப்பூட்டினார். (லூக்கா 24:44) மேலும், அப்போஸ்தலனாகிய பவுல், நியாயப்பிரமாண உடன்படிக்கை சம்பந்தப்பட்ட அம்சங்களை: ‘பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருகின்றன’வென்று குறிப்பிட்டான், இன்னும் “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் . . . நிழலாய்” இருக்கிறதென்றும் அவன் சொன்னான். (எபி. 8:4, 5; 10:1) இயேசு கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்திலும் அவருடைய மனித உயிரைப் பலி செலுத்தினதிலும் நிறைவேற்றமடைந்த ஆச்சரியமூட்டும் நுட்ப விவரங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருக்கின்றன. இவற்றை நாம் விளங்கிக்கொள்வது, நமக்கு இத்தகைய ஏற்பாடுகளின் அர்த்தத்தை மேலும் உயர்த்தும். இன்று, யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் ஏற்கத்தகுந்தமுறையில் யெகோவாவை வணங்குவதற்கான ஏற்பாட்டைக் குறிப்பிட்டுக் காட்டும் நுட்ப விவரங்கள் இந்தத் தீர்க்கதரிசன மாதிரிகளுக்குள் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய நம்முடைய தெளிந்துணர்வு பெருகுகையில், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட சபையையும், நம்முடைய வணக்கம் சம்பந்தப்பட்டதில் இயேசு கிறிஸ்துவின் கீழ் அது நிறைவேற்றும் பாகத்தையும் குறித்த நம்முடைய மதித்துணர்வும் பெருகும்.

13 மோசேயின் நியாயப்பிரமாணம், கடவுளால் ஏவப்பட்டவையும் முழுவதும் “உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை”யுமான வேத எழுத்துக்களின் பாகமாகும். (2 தீமோ. 3:16) நியாயப்பிரமாணம் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்டிருக்கிற நிலையான நியமங்களை நாம் ஆராய்ந்து அவற்றின் பேரில் சிந்தனை செய்வது, கடவுளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்யும்படி இருதயப்பூர்வ ஆவலை நம்மில் வளர்க்க உதவிசெய்யும். நியாயப்பிரமாணம் குறித்துக்காட்டும் ஆவியை நாம் தெளிவாக உணர்ந்து அதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறையில் காட்டினால், அது நமக்கு எவ்வளவு பயன்தரும்!

14 இயேசு, தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இதன் உட்கருத்தை நடைமுறையில் விளக்கிக் காட்டினார். அப்பொழுது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஜனங்களிடம் பேசி, கொலை செய்வதிலிருந்து வெறுமென தவிர்த்திருப்பது மட்டுமல்ல, தொடர்ந்து கோபத்தைத் தங்கள் மனதில் பேணிவைக்கும் மனப்போக்கை அவர்கள் வேரோடு ஒழிக்க வேண்டுமென்றும், தங்கள் சகோதரரைப் பற்றி மதிப்புக் குறைவாய்ப் பேசுவதில் தங்கள் நாவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் அவர் காட்டினார். தாங்கள் ஒருபோதும் விபசாரஞ் செய்ததில்லையென்பதால் மனத்திருப்தியுடன் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கவுங்கூடாது. அவர்கள் செய்ய வேண்டியதைப் போலவே, நாமும் நம்முடைய உடலின் எல்லா உருப்புகளையும் யெகோவாவின் நீதியான வழிகளுக்குப் பொருந்த பயன்படுத்த பிரயாசப்பட்டு உழைக்கவேண்டும். (மத். 5:21, 22, 27-30; ரோமர் 13:8-10-ஐயும் பாருங்கள்.) இவ்வாறு நாம் செய்தால், நியாயப்பிரமாணத்திலுள்ள பின்வரும் மிகப்பெரிய கட்டளையின் உட்கருத்தை நாமும் விளங்கிக்கொண்டோமெனக் காட்டுவோம்: “உன் கடவுளாகிய யெகோவாவை நீ உன் முழு இருதயத்துடனும் உன் முழு ஆத்துமாவுடனும் உன் முழு மனதுடனும் நேசிக்கவேண்டும். (மத். 22:36, 37, NW) நிச்சயமாகவே இது நம்மை யெகோவாவிடம் நெருங்க இழுக்கும். மோசேயின் நியாயப்பிரமாணத் தொகுப்பின் கீழ் நாம் இராதபோதிலும், அது ஆதாரங்கொள்ள செய்யப்பட்டிருக்கும் நியமங்களையும் அதில் அடங்கியுள்ள தீர்க்கதரிசன மாதிரிகளையும் பற்றிய திருத்தமான அறிவு நமக்கு நிச்சயமாக நன்மை பயக்கும்.

மறு கலந்தாலோசிப்பு

● மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமென வற்புறுத்துவோர் ஏன் உண்மையில் கிறிஸ்துவை வேண்டாமென தள்ளுகின்றனர்?

● நியாயப்பிரமாணத்தைப் பற்றிய அறிவு, யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவின் பாகத்தை விளங்கிக் கொள்ள நமக்கு எப்படி உதவி செய்கிறது?

● நாம் நியாயப்பிரமாணத்தின கீழ் இராதபோதிலும், அதைப் படிப்பதிலிருந்து மதிப்புவாய்ந்த என்ன காரியங்களைத் தெளிந்துணரலாம்?

[கேள்விகள்]

1. (எ) பொ.ச. 36 முதற்கொண்டு, விருத்தசேதனஞ் செய்யப்படாத புறஜாதியாரும் கிறிஸ்தவர்களாக யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்தவரானார்கள் என்று எது காட்டினது? (பி) ஆனால் எந்த விவாதத்தின் பேரில் பூர்வ கிறிஸ்தவர்கள் சிலருக்கு வைராக்கியமான உணர்ச்சி இருந்தது?

2. இந்த விவாதம் நமக்கு ஏன் அக்கறைக் கேதுவாயிருக்கிறது?

3. நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு ஏன் கொடுக்கப்பட்டது?

4. (எ) நியாயப்பிரமாணம் எப்படி ‘மீறுதல்களை வெளிப்படுத்திக் காட்டினது’? (பி) மேலும் அது உண்மையுள்ளவர்களைக் கிறிஸ்துவிடம் எப்படி வழிநடத்திற்று?

5. கொடுத்திருக்கும் வேதவசனங்களைப் பயன்படுத்தி, இந்தப் பத்தியோடு சேர்க்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.

6. மோசேயின் நியாயப்பிரமாணம் இன்னும் நடப்பு நிலையில் இருக்கிறதென்று பாராட்டும் விவாதங்கள் குறிப்பாக உணர்த்துவது என்ன?

7. (எ) நியாயப்பிரமாணத்தின் சில அம்சங்கள் தொடர்ந்திருக்க வேண்டுமென விவாதிக்கிறவர்கள் எதை முழுமையாய் மதித்துணருகிறதில்லை? (பி) கிறிஸ்தவ செயல்கள் எவ்வளவு முக்கியமானவை, நாம் நித்திய ஜீவனாகிய பரிசைப் பெறுவதுடன் இவற்றிற்கு என்ன சம்பந்தமிருக்கிறது?

8. புறஜாதி கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமா என்ற விவாதத்தைக் குறித்து முதல் நூற்றாண்டு நிர்வாகக் குழு என்ன தீர்ப்பு செய்தது?

9. (எ) மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியும்படி கடவுள் யூதரை இனிமேலும் கேட்கிறாரா? (பி) கிறிஸ்து மரித்த வகையினால் என்ன தனிப்பட்ட ஏற்பாடு அவர்களுக்குச் செய்யப்பட்டது?

10. நியாயப்பிரமாணம் விலக்கப்பட்டது, எவ்வகையில் வணக்கத்தில் ஒற்றுமைப்படுவதற்குக் காரணமாக நிரூபித்தது?

11. நியாயப்பிரமாணத்தைப் பற்றிய அறிவு கிறிஸ்துவின் போதகங்களை விளங்கிக்கொள்ள நமக்கு எப்படி உதவி செய்கிறது?

12. (எ) தம்முடைய வாழ்க்கைக்கும் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கும் இருந்த என்ன பொருத்தத்தை இயேசு குறிப்பிட்டுக் காட்டினார்? (பி) நியாயப்பிரமாணத்தின் அறிவைக் கொண்டிருப்பதன் மதிப்பை அப்போஸ்தலனாகிய பவுல் எப்படிக் குறிப்பிட்டுக் காட்டினான்? (சி) அதன் தேவைகளின் ஆவிக்குரிய உட்கருத்தை நாம் விளங்கிக் கொள்வதன் பலன் என்ன?

13. நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்திக் காட்டப்படுகிற சிறந்த நியமங்களின்பேரில் சிந்தனை செய்வது ஏன் நன்மை பயக்குகிறது?

14. (எ) நியாயப்பிரமாண கட்டளைகள் குறிப்பிட்டுக்காட்டும் ஆவியை விளங்கிக் கொள்வதன் மதிப்பை இயேசு எப்படி விளக்கினார்? (பி) 152-ம் பக்கத்தில் காட்டியிருக்கிறபடி, நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள கூடுதலான சிறந்த நியமங்களுக்குக் கவனம் செலுத்துங்கள். (சி) இக்காரியங்களை மதித்துணருவது கடவுளுக்கு மேலுமதிகப் பிரியமாய் நடக்க நமக்கு எப்படி உதவிசெய்யும்?

[பக்கம் 152-ன் பெட்டி]

மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள சில அடிப்படை நியமங்கள்

கடவுளிடமுள்ள பொறுப்புகள்

யெகோவாவை மாத்திரமே வணங்கவேண்டும் யாத். 20:3; 22:20

அவருடைய பெயரை மரியாதையுடன் யாத். 20:7

கையாளவேண்டும் லேவி 24:16

முழு இருதயத்துடனும், ஆத்துமாவுடனும், உபா. 6:5; 10:12;

ஜீவசக்கியுடனும் அவரை நேசித்து சேவிக்கவேண்டும் 30:16

கீழ்படியாதிருக்க அஞ்சி, அவருக்குப் உபா. 5:29

பயபக்கியுடனிருக்க வேண்டும். உபா. 6:24

அவர் அங்கிகரிக்கிற வழியில் மாத்திரமே லேவி. 1:1-5; எண்

அவரை அனுகவேண்டும் 16:1-50; உபா.12:5-14

உங்கள் மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுங்கள், யாத். 23:19

அது அவரிடமிருந்தே வந்தது 34:26

வணங்குகிறவர்கள் உடல் சம்பந்தமாய்ச் யாத் 19:10,11

சுத்தமாயிருக்க வேண்டும் 30:20

உலகப்பிரகாரமான முயற்சிகளுக்காகப் பரிசுத்த யாத் 20:8-10; 34:21

அக்கறைகளை ஒதுக்கி வைக்கக்கூடாது எண்.15:32-36

தடைவிதிக்கப்பட்ட மத பழக்கவழக்கங்கள்

விக்கிரகாராதனை யாத். 20:4-6; உபா. 7:25

விசுவாசக் கலப்பு யாத். 23:13; 34:12-15

உபா. 6:14, 15;13:1-5

ஆவிக்கொள்கை, மாந்திரீகம், குறிசொல்லுதல் யாத். 22:18; லேவி.

குறிகேட்டல், மாயவித்தை, சூனியம்வைத்தல் 20:27;

உபா. 18:10-12

திருமணமும் குடும்ப வாழ்க்கையும்

விபசாரஞ் செய்யக் கூடாது யாத். 20:14; லேவி. 20:10

யெகோவாவைச் சேவியாதவரை மணஞ்செய்யக் கூடாது உபா. 7:1-4

முறைதகாப் புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது லேவி 18:6-16; 20:11

பாலுறவு நெறிபிறழ்வைத் தவிர்க்க வேண்டும் லேவி 18:23; 20:13

பிறவாத பிள்ளையின் உயிரை மதிக்க வேண்டும் யாத். 21:22, 23

உங்கள் பெற்றோறைக் கனம்பண்ணுங்கள் யாத். 20:12; 21:15, 17;

உபா. 21:18-21

உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவின் உபா. 6:4-9

வழிகளைக் கற்பியுங்கள் 11:18-21

மற்ற ஆட்கள் உட்படும் கடமைகள்

மனித உயிரைப் பரிசுத்தமாய்க் கருது யாத். 20:13;

எண். 35:9-34

அயலான நேசி; வன்மத்தைதை தவிர் லேவி. 19:17, 18.

முதிர் வயதானவருக்கு கரிசனை காட்டு லேவி. 19:32

ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் லேவி. 25:35-37;

அன்புள்ள அக்கறை காட்டு உபா. 15:7-11; 24:19-21

செவிடரையும் குருடரையும் தவறாக நடத்தக்கூடாது லேவி. 19:14; உபா. 27:18

வியாபார நடவடிக்கைகளில் நேர்மையாயிரு லேவி. 19:35, 36, 25:14;

உடைமை உரிமைகளை மதி யாத். 20:15; 22:1, 6; 23:4

உபா. 22:1-3

மற்றவருக்குரியதை இச்சியாதே யாத். 20:17

மோசமான தவறு செய்பவர்களை வெளிப்படுத்து வெளி. 5:1; உபா. 13:6-11

உண்மையே பேசு; பொய்ச் சாட்சி சொல்லாதே யாத். 20:16; 23:1, 2

பதவியினிமித்தம் பட்சபாதம் காட்டக்கூடாது யாத். 23: 3, 6; லேவி. 19:15